பெரியார் உலகம்

தந்தை பெரியாரை பற்றியும்,அவர் தொடங்கிய இயக்கம்,கொள்கை,கருத்துகள் மற்றும் கட்டுரைகள் இடம்பெறும்.

பக்கங்கள்

▼

பக்கங்கள்

▼

சனி, 11 டிசம்பர், 2021

எங்கும் சுயமரியாதை சத்தியாக்கிரகம் (1)



   December 11, 2021 • Viduthalai

06.11.1927- குடிஅரசிலிருந்து...

தென்னாட்டில் மாத்திரமல்லாமல் இந்திய நாடு முழுவதிலுமே இதுசமயம் சுயமரியாதை உணர்ச்சி பெருகி வருகின்றதைப் பார்க்க ஒரு சிறு கூட்டத்தாரான பார்ப்பனர்களைத் தவிர, மற்ற எல்லோருக்கும் ஆனந்தத்தை விளைவிக்கும் என்றே எண்ணுகிறோம். கொஞ்ச நாளைக்கு முன்பு, வடதேசத்தில் உள்ள படகு ஓட்டும் கூட்டத்தாரான செம்படவர்கள் ஒன்று சேர்ந்து, தங்களைத் தீண்டுவதில்லை என்கின்ற வகுப்பாருக்கு படகு ஓட்டுவதில்லை என்று கட்டுப்பாடு செய்து கொண்டது யாவருக்கும் ஞாபகமிருக்கலாம். மறுபடியும், திருவாங்கூர் ராஜ்ஜியத்தில் சத்தியாக்கிரகம் ஆரம்பித்ததும், அதற்கு சிறீமான் காந்தி மத்தியஸ்தராயிருந்து அரசாங்கத்தார் சீக்கிரம் அனுகூலம் செய்வார்கள் என்று ஒப்புக் கொண்டு இருப்பதும், புராணம், சாஸ்திரம் முதலிய குப்பைகளை எரிப்பதுடன், மத ஆச்சாரியார்கள் என்பவர்களையும் பகிஷ்கரிக்க வேண்டுமென்று பம்பாய் மாணவர்கள் ஒன்று கூடி தீர்மானித்ததும், சென்னையிலும் அதுபோலவே பார்ப்பனரல்லாத வாலிப மகாநாட்டில், மனிதனின் சுயமரியா தைக்கு விரோதமான மனுதர்ம சாஸ்திரம், புராணம் இவைகளைச் சர்க்கார் பறிமுதல் செய்யவேண்டுமென்று தீர்மானம் செய்ததும், தாழ்ந்த ஜாதி, தீண்டத்தகாத ஜாதி, சூத்திரன் ஆகிய வார்த்தைகளை உபயோகித்தால் அவர்களைக் கிரிமினல் சட்டப்படி தண்டிக்கச் சட்டமேற்படுத்த வேண்டும் என்று சொன்னதும், ஆதி திராவிடர்கள் என்கிற கூட்டத்தார் மகாநாட்டிலும் வருணாசிரம தர்மத்தைப் போதிக்கும் ஆதாரங்களையெல்லாம் பறிமுதல் செய்யவேண்டுமென்று பேசியதும், தீர்மானித்ததும் மற்றும் பார்ப்பனரல்லாத வாலிபர் மகாநாட்டிலும், கும்பகோணம் நாடார் சமுக மகாநாட்டிலும் சுயமரியாதை சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவளித்ததும், பம்பாயிலுள்ள பல மக்களும் கோவிலுக்குள் போக சத்தியாக் கிரகம் ஆரம்பித்திருப்பதும், மற்றும் அங்குள்ள தமிழ் மக்கள் பம்பாயிலுள்ள சென்னைப் பார்ப்பனர்கள் ஓட்டல்களில் உள்ள வித்தியாசத்தை ஒழிக்க ஜாதி சம்ஹார சங்கிர சங்கத்தார் சத்தியாக்கிரகம் செய்ய முன் வந்திருப்பதும், மற்றும் பம்பாயில் உள்ள பனஸ்வதி என்கின்ற ஆலயத்தில் தரிசனம் செய்ய ஆவலுள்ள யாரையும் உள்ளே விடாததற்காக அக்கோவிலையே பகிஷ்கரிக்க வேண்டுமென்று, முடிவுசெய்ததும், மகத் என்கின்ற இடத்தில் உள்ள பொதுக் குளத்தில் ஒரு கூட்டத்தாரை ஸ்நானம் செய்யவொட்டாமல் தடுப்பதை ஒழிக்க டிசம்பர் மாதம் 25ஆம் தேதி முதல் சத்தியாக்கிரகம் செய்யப் போவதாய் ஏற்பாடு செய்து 500 ரூ. வசூலாயிருப்பதாயும் பல தொண்டர்களும் சேர்ந்திருப்பதாகவும் தினப்படி பத்திரிகைகளில் காணப்படுகின்றன. இது மாத்திரமல்லாமல், சமூகங்களில் உள்ள சில கொடுமைகளையும் விலக்குவதற்காக பெண்களைத் தயாரிப்பதான பொட்டுக் கட்டும் வழக்கத்தை ஒழிக்க செங்குந்த சங்கங்களும், சட்டசபை மசோதாக்களும் பறந்து கொண்டுமிருக்கின்றன. மது விலக்குக்கும் எங்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. ஆகவே, நாட்டின் சுயமரியாதைக்கும், ஒழுக்கத்திற்கும் ஆன வேலைகள் தீவிரமாய் நடை பெறுவதுடன், இன்னமும் ஒவ்வொருவருடைய கவனமும், உணர்ச்சியும் இதிலேயே செல்லும் குறிகளும் காணப்படுகின்றன.

இப்படி உலகம் முன்னேறிக்கொண்டிருக்கும் நாளையில், நம் நாட்டுப் பார்ப்பனர்களின் யோக்கியதை எப்படி இருக்கின்றது என்று பார்ப்போமானால், இவைகள் ஒவ்வொன்றுக்கும் முட்டுக்கட்டையாய் இருந்து கொண்டு மதம் போச்சு, கடவுள் போச்சு, கோவில் போச்சு, குளம் போச்சு, நாஸ்திக மாச்சுது என்பதாக ஓலமிட்டுக் கொண்டு மக்களை ஏமாற்றிப் பிழைக்கப் பார்க்கின்றார்கள்.  மக்களின் சுயமரியாதைக்கும், ஒழுக்கத்திற்கும் ஏற்படுத்துகிற இயக்கங்களை வைத்துக் கொண்டு, அதை அழிப்பதற்கும் முயற்சி செய்து கொண்டு, முட்டாள்களையும், அயோக்கியர்களையும், வயிற்றுச்சோற்றுக் கூலிகளையும் பொறுக்கி எடுத்துத் தங்களுடன் சேர்த்துக்கொண்டு, அவர்களுக்குக் காசு, பணம், பட்டம், பதவி மற்றும் என்னென்னவோ முதலியவைகளை உதவி, இவற்றின் மீது ஏவிவிட்டு நாட்டில் கலகம் விளைவிப்பதும், மக்களுடைய கவனத்தைத் தப்பு வழியில் இழுத்து விடுவதுமான கொடுமைகள் ஒருபக்கம் செய்து கொண்டு, மற்றொரு பக்கம் காங்கிரசு என்றும், சுயராஜ்யம் என்றும் பித்தலாட்டப் பெயர்களை வைத்துக் கொண்டு, திருட்டுத்தனமாய்ச் சர்க்காருக்கு உள் ஆளாய் இருந்து உத்தி யோகங்கள் பெற்று, மாதம் 1000, 2000, 5000 சம்பளம் பெறுவதில் கவனம் செலுத்திக்கொண்டு ஈனவாழ்வு வாழ்வதையே பொதுநல சேவையாய் காட்டிக்கொண்டுமிருக் கிறார்கள். அத்தோடு அவர்கள் இழிதொழில் நிற்கின்றதா என்று பார்த்தால் இல்லவே இல்லை.

இவ்வளவு அக்கிரமங்களையும் செய்து கொண்டு இருப்பதல்லாமல், இதை யாராவது வெளியில் எடுத்துச்சொன்னால், அவர்களை வகுப்புத்துவேஷக் காரர்கள் என்றும், அசுரனென்றும், ராக்கதனென்றும் சொல்லி விஷமப் பிரசாரம் செய்வதுமாயிருக்கின்றார்கள். இந்த விஷயங்களை உணருவதற்கு நமது நாட்டு மக்களுக்கு புத்தி இல்லாமல், இனியும் அப்பார்ப்பனர்களை நத்திக் கொண்டு பிழைக்கவே ஆசைப்படுகின்றார்கள். இந்த மக்களைப் பார்க்கும்போது, ஒரு வேசி வீட்டில் உள்ள வாலிபன் ஒருவன், வேசியான தன் தாயாருக்கோ, தமக்கைக்கோ ஆள்களைக் கூட்டிக்கொண்டு போவதையும், தூதுக்கடிதங்கள் கொண்டு போய் கொடுத்துப் பதில் வாங்கி வருவதையும் பார்ப்பது நமக்கு ஆச்சரியமாய்த் தோன்றவில்லை.


parthasarathy r நேரம் 4:36 AM
பகிர்

1 கருத்து:

  1. wallylabarbera5 மார்ச், 2022 அன்று 1:37 AM

    TATON TAN CERRY IN MUR FACILITY
    TATON babyliss pro nano titanium hair dryer TAN CERRY titanium eyeglasses IN titanium hair trimmer as seen on tv MUR titanium pipe FACILITY. titanium trim hair cutter The Tatin-Cry-Cry-Cry-Cry-Cry-Cry-Cry-Cry-Cry-Cry-Cry-Cry-Cry-Cry-Cry-Cry-Cry-Cry-Cry-Cry-Cry-Cry-Cry-Cry-Cry-Cry-Cry-Cry-Cry-Cry-Cry-Cry-Cry-Cry-Cry-Cry

    பதிலளிநீக்கு
    பதில்கள்
      பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...

‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.