பெரியார் உலகம்

தந்தை பெரியாரை பற்றியும்,அவர் தொடங்கிய இயக்கம்,கொள்கை,கருத்துகள் மற்றும் கட்டுரைகள் இடம்பெறும்.

பக்கங்கள்

▼

பக்கங்கள்

▼

சனி, 11 டிசம்பர், 2021

ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா?

ஒரு சந்தேகம்
   December 11, 2021 • Viduthalai

 27.11.1927 - குடிஅரசிலிருந்து...

ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா?

ஆதிதிராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா? மகமதியருக்கும், இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தைகள் கோவிலுக்குள் போகலாம், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், கிறிஸ்தவர்களுக்கும், இந்து விபசாரிகளுக்கும் பிறந்த குழந்தைகளும் கோவிலுக்குப் போகலாம், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், வெள்ளைக்காரனுக்கும், இந்து விபசாரிகளுக்கும்  பிறந்த குழந்தை கோவிலுக்குப் போகலாம். பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், தமிழ்நாடு அல்லாத அன்னிய நாட்டு தீண்டாதார் என்போருக்கும் இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தை கோவிலுக்குள் போகலாம், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், மலையாள தீண்டாதார் என்போர்கள். இக்கோவிலுக்குள் போகலாம் என்றும், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும் பச்சையப்பன் கல்லூரியில்  இத்தனை பேர்களும் உபாத்யாயராக இருக்கலாம் என்றும் பழக்கமும், வழக்கமும் இருக்கின்றது, ஆனால், தமிழ்நாட்டின் பூர்வீகமான குடியாய் இருந்து, தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ் நாட்டில் வளர்ந்து, இந்துக்கள் என்று மதிக்கப்பட்டு வாழ்ந்துவரும் ஆதிதிராவிடர்கள் என்னும் தமிழ் மக்கள் மாத்திரம் இந்து கோவிலுக்குள் போகக்கூடாது என்றும் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கக்கூடாதென்றும் சொல்லுவது யோக்கியமாகுமா? இம்மாதிரி கோவில்களையும் (டைனமெட்டு) வெடிகுண்டு போட்டு உடைத் தெறிந்தால் மனிதனால் உண்டாக்கப்பட்ட சட்டப்படி குற்றம் என்பதாக சொல்லப் பட்டாலும், கடவுளால் உண்டாக்கப்பட்ட சட்டப்படி குற்றமாகுமா? என்று கேட்பதுடன், நம் நாட்டு ஆதிதிராவிடர்கள் என்போர்கள் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா? என்று அறிய விரும்புகின்றோம்.

parthasarathy r நேரம் 4:39 AM கருத்துகள் இல்லை:
பகிர்

எங்கும் சுயமரியாதை சத்தியாக்கிரகம் (1)



   December 11, 2021 • Viduthalai

06.11.1927- குடிஅரசிலிருந்து...

தென்னாட்டில் மாத்திரமல்லாமல் இந்திய நாடு முழுவதிலுமே இதுசமயம் சுயமரியாதை உணர்ச்சி பெருகி வருகின்றதைப் பார்க்க ஒரு சிறு கூட்டத்தாரான பார்ப்பனர்களைத் தவிர, மற்ற எல்லோருக்கும் ஆனந்தத்தை விளைவிக்கும் என்றே எண்ணுகிறோம். கொஞ்ச நாளைக்கு முன்பு, வடதேசத்தில் உள்ள படகு ஓட்டும் கூட்டத்தாரான செம்படவர்கள் ஒன்று சேர்ந்து, தங்களைத் தீண்டுவதில்லை என்கின்ற வகுப்பாருக்கு படகு ஓட்டுவதில்லை என்று கட்டுப்பாடு செய்து கொண்டது யாவருக்கும் ஞாபகமிருக்கலாம். மறுபடியும், திருவாங்கூர் ராஜ்ஜியத்தில் சத்தியாக்கிரகம் ஆரம்பித்ததும், அதற்கு சிறீமான் காந்தி மத்தியஸ்தராயிருந்து அரசாங்கத்தார் சீக்கிரம் அனுகூலம் செய்வார்கள் என்று ஒப்புக் கொண்டு இருப்பதும், புராணம், சாஸ்திரம் முதலிய குப்பைகளை எரிப்பதுடன், மத ஆச்சாரியார்கள் என்பவர்களையும் பகிஷ்கரிக்க வேண்டுமென்று பம்பாய் மாணவர்கள் ஒன்று கூடி தீர்மானித்ததும், சென்னையிலும் அதுபோலவே பார்ப்பனரல்லாத வாலிப மகாநாட்டில், மனிதனின் சுயமரியா தைக்கு விரோதமான மனுதர்ம சாஸ்திரம், புராணம் இவைகளைச் சர்க்கார் பறிமுதல் செய்யவேண்டுமென்று தீர்மானம் செய்ததும், தாழ்ந்த ஜாதி, தீண்டத்தகாத ஜாதி, சூத்திரன் ஆகிய வார்த்தைகளை உபயோகித்தால் அவர்களைக் கிரிமினல் சட்டப்படி தண்டிக்கச் சட்டமேற்படுத்த வேண்டும் என்று சொன்னதும், ஆதி திராவிடர்கள் என்கிற கூட்டத்தார் மகாநாட்டிலும் வருணாசிரம தர்மத்தைப் போதிக்கும் ஆதாரங்களையெல்லாம் பறிமுதல் செய்யவேண்டுமென்று பேசியதும், தீர்மானித்ததும் மற்றும் பார்ப்பனரல்லாத வாலிபர் மகாநாட்டிலும், கும்பகோணம் நாடார் சமுக மகாநாட்டிலும் சுயமரியாதை சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவளித்ததும், பம்பாயிலுள்ள பல மக்களும் கோவிலுக்குள் போக சத்தியாக் கிரகம் ஆரம்பித்திருப்பதும், மற்றும் அங்குள்ள தமிழ் மக்கள் பம்பாயிலுள்ள சென்னைப் பார்ப்பனர்கள் ஓட்டல்களில் உள்ள வித்தியாசத்தை ஒழிக்க ஜாதி சம்ஹார சங்கிர சங்கத்தார் சத்தியாக்கிரகம் செய்ய முன் வந்திருப்பதும், மற்றும் பம்பாயில் உள்ள பனஸ்வதி என்கின்ற ஆலயத்தில் தரிசனம் செய்ய ஆவலுள்ள யாரையும் உள்ளே விடாததற்காக அக்கோவிலையே பகிஷ்கரிக்க வேண்டுமென்று, முடிவுசெய்ததும், மகத் என்கின்ற இடத்தில் உள்ள பொதுக் குளத்தில் ஒரு கூட்டத்தாரை ஸ்நானம் செய்யவொட்டாமல் தடுப்பதை ஒழிக்க டிசம்பர் மாதம் 25ஆம் தேதி முதல் சத்தியாக்கிரகம் செய்யப் போவதாய் ஏற்பாடு செய்து 500 ரூ. வசூலாயிருப்பதாயும் பல தொண்டர்களும் சேர்ந்திருப்பதாகவும் தினப்படி பத்திரிகைகளில் காணப்படுகின்றன. இது மாத்திரமல்லாமல், சமூகங்களில் உள்ள சில கொடுமைகளையும் விலக்குவதற்காக பெண்களைத் தயாரிப்பதான பொட்டுக் கட்டும் வழக்கத்தை ஒழிக்க செங்குந்த சங்கங்களும், சட்டசபை மசோதாக்களும் பறந்து கொண்டுமிருக்கின்றன. மது விலக்குக்கும் எங்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. ஆகவே, நாட்டின் சுயமரியாதைக்கும், ஒழுக்கத்திற்கும் ஆன வேலைகள் தீவிரமாய் நடை பெறுவதுடன், இன்னமும் ஒவ்வொருவருடைய கவனமும், உணர்ச்சியும் இதிலேயே செல்லும் குறிகளும் காணப்படுகின்றன.

இப்படி உலகம் முன்னேறிக்கொண்டிருக்கும் நாளையில், நம் நாட்டுப் பார்ப்பனர்களின் யோக்கியதை எப்படி இருக்கின்றது என்று பார்ப்போமானால், இவைகள் ஒவ்வொன்றுக்கும் முட்டுக்கட்டையாய் இருந்து கொண்டு மதம் போச்சு, கடவுள் போச்சு, கோவில் போச்சு, குளம் போச்சு, நாஸ்திக மாச்சுது என்பதாக ஓலமிட்டுக் கொண்டு மக்களை ஏமாற்றிப் பிழைக்கப் பார்க்கின்றார்கள்.  மக்களின் சுயமரியாதைக்கும், ஒழுக்கத்திற்கும் ஏற்படுத்துகிற இயக்கங்களை வைத்துக் கொண்டு, அதை அழிப்பதற்கும் முயற்சி செய்து கொண்டு, முட்டாள்களையும், அயோக்கியர்களையும், வயிற்றுச்சோற்றுக் கூலிகளையும் பொறுக்கி எடுத்துத் தங்களுடன் சேர்த்துக்கொண்டு, அவர்களுக்குக் காசு, பணம், பட்டம், பதவி மற்றும் என்னென்னவோ முதலியவைகளை உதவி, இவற்றின் மீது ஏவிவிட்டு நாட்டில் கலகம் விளைவிப்பதும், மக்களுடைய கவனத்தைத் தப்பு வழியில் இழுத்து விடுவதுமான கொடுமைகள் ஒருபக்கம் செய்து கொண்டு, மற்றொரு பக்கம் காங்கிரசு என்றும், சுயராஜ்யம் என்றும் பித்தலாட்டப் பெயர்களை வைத்துக் கொண்டு, திருட்டுத்தனமாய்ச் சர்க்காருக்கு உள் ஆளாய் இருந்து உத்தி யோகங்கள் பெற்று, மாதம் 1000, 2000, 5000 சம்பளம் பெறுவதில் கவனம் செலுத்திக்கொண்டு ஈனவாழ்வு வாழ்வதையே பொதுநல சேவையாய் காட்டிக்கொண்டுமிருக் கிறார்கள். அத்தோடு அவர்கள் இழிதொழில் நிற்கின்றதா என்று பார்த்தால் இல்லவே இல்லை.

இவ்வளவு அக்கிரமங்களையும் செய்து கொண்டு இருப்பதல்லாமல், இதை யாராவது வெளியில் எடுத்துச்சொன்னால், அவர்களை வகுப்புத்துவேஷக் காரர்கள் என்றும், அசுரனென்றும், ராக்கதனென்றும் சொல்லி விஷமப் பிரசாரம் செய்வதுமாயிருக்கின்றார்கள். இந்த விஷயங்களை உணருவதற்கு நமது நாட்டு மக்களுக்கு புத்தி இல்லாமல், இனியும் அப்பார்ப்பனர்களை நத்திக் கொண்டு பிழைக்கவே ஆசைப்படுகின்றார்கள். இந்த மக்களைப் பார்க்கும்போது, ஒரு வேசி வீட்டில் உள்ள வாலிபன் ஒருவன், வேசியான தன் தாயாருக்கோ, தமக்கைக்கோ ஆள்களைக் கூட்டிக்கொண்டு போவதையும், தூதுக்கடிதங்கள் கொண்டு போய் கொடுத்துப் பதில் வாங்கி வருவதையும் பார்ப்பது நமக்கு ஆச்சரியமாய்த் தோன்றவில்லை.


parthasarathy r நேரம் 4:36 AM 1 கருத்து:
பகிர்

வெள்ளி, 3 டிசம்பர், 2021

பெரியார் பேசுகிறார்: கார்த்திகை தீபம்


தந்தை பெரியார்

கார்த்திகை தீபம் என்ற பண்டிகை வரப் போகின்றது. இதற்காக அருணாசலமென்னும் திருவண்ணாமலை முதலிய பல ஊர்களில் பெரும் பெரும் உற்சவங்கள் நடைபெறும். அதற்காக பதினாயிரக்கணக்கான மக்கள் யாத்திரை போவார்கள்.

இது மாத்திரமல்லாமல் பல பல குடங்கள் நெய்களை டின் டின்னாய் கற்பூரத்தைக் கலந்து நெருப்பில் கொட்டி எறிப்பார்கள். சில இடங்களில் கட்டைகளை அடுக்கி அல்லது தட்டுகளைப் போராகப் போட்டு நெருப்பு வைத்து சட்டிசட்டியாக வெண்ணைகளை அந்த நெருப்பில் கொட்டுவார்கள்.

இவைகள் தவிர வீடுகளிலும், கோவில்-களிலும் 10, 50, 100, 1000, 10000, 100000 என்கின்ற கணக்கில் விளக்குகள் போட்டு நெய், தேங்காய் எண்ணெய், நல்ல எண்ணெய், இலுப்பை எண்ணெய் முதலியவைகளை ஊற்றியும், எள்ளு பொட்டணம், பருத்தி விதை பொட்டணம் ஆகியவைகளை கட்டியும், பெரும் பெரும் திரிகள் போட்டும் விளக்குகள் எரிப்பார்கள். இந்தச் சடங்குகள் செய்வதே மேற்படி பண்டிகையின் முக்கிய சடங்காகும். ஆகவே, இந்தச் சடங்குகளுக்கு எத்தனை லட்சம் ரூபாய் செலவு என்பதையும் இதற்காக செல்லும் மக்களின் ரயில் செலவு, மற்ற வீண் செலவு, நேரச்செலவு ஆகியவைகளால் எத்தனை லட்சம் ரூபாய் செலவாகும் என்பதையும் கவனித்துப் பார்த்து பிறகு இப்படிப்பட்ட இந்தப் பெருந்தொகைச் செலவில் நாட்டுக்கோ, மக்களுக்கோ, அல்லது மதத்திற்கோ, மக்களின் அறிவிற்கோ சுகாதாரத்திற்கோ அல்லது வேறு எதற்காவது ஒரு அம்மன் காசு பெறுமான பிரயோஜன-மாவது-முண்டா என்பதையும் யோசித்துப் பார்த்தால் நமது மக்களின் பாரம்பரியமான முட்டாள்தனம் விளங்காமற் போகாது. அர்த்தமற்ற தன்மையில் நமது செல்வம், கொள்ளை போகின்றதே, கொள்ளை போகின்றதே என்று கூச்சல் போடுகின்றோம். ஜவுளிக்கடையில் போய் மறியல் செய்து ஜெயிலுக்குப் போவதைப் பெரிய தேச-பக்தியாய்க் கருதுகிறோம். ஆனால் இந்த மாதிரி நமது செல்வம் நாசம் போவதைப் பற்றி நமக்கு சிறிதும் கவலையில்லை. அதைப் பற்றி நினைப்பதுமில்லை. அதைப் பற்றிப் பேசுவதே மதத் துரோகமாகவும், நாத்திகமாகவும் சொல்லப்படுகின்றது. இம்மதிரி செல்வம் நாசமாவதை விட்டுக் கொண்டு வருவதால் எத்தனை பத்து லட்சக்கணக்கான மக்கள் தலைமுறை தலைமுறையாக முட்டாள்களாகிக் கொண்டு வருகின்றார்கள் என்பதை நாம் கவனிப்பதில்லை.

ஆகவே ஆங்காங்குள்ள சுயமரியாதைத் தொண்டர்கள் இதை கவனித்து இம்மாதிரி-யான மூடத்தனங்களும், நாசகார வேலைகளும் சிறிதாவது குறையும்படியாக வேலை செய்வார்களானால் அது மற்ற எல்லா முயற்சி களையும்விட எத்தனையோ மடங்கு பயன்தரக் கூடியதும் பல வழிகளிலும் அவசியமானதுமான முயற்சிகளாகும் என்பதை ஞாபகமூட்டுகின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 30.11.1930

* * *

ஜாதியை ஒழிக்க எண்ணுகிறவர்களுக்கு பகுத்தறிவு வேண்டும்

எனக்குத் தெரிய எனது 14 வயது முதல் ஜாதிக்கு எதிரியாகவே இருந்து வந்து உள்ளேன். எனக்கு நினைவு தெரியாத காலமாகிய 7 வயது முதலே ஜாதிக்கு எதிர்ப்பாகவே இருந்து வருகின்றேன் என்றுதான் கூறவேண்டும்.

நான் பள்ளிக்குப் போகும் போது குறவர் முதலிய கீழ்ஜாதிக்காரர்கள் என்பவர்கள் வீட்டில் எல்லாம் சோறு தின்று உள்ளேன். இது காரணமாகவே எங்கள் வீட்டில் என்னை வெளியில் வைத்து சாப்பாடு போட்டு இருக்கின்றார்கள். இம்மாதிரி செய்கையே என்னை ஜாதி ஒழிப்பு முயற்சியில் சிந்திக்கத் தூண்டியது.

தோழர்களே! ஜாதியை ஒழிக்க எண்ணுகிறவர்களுக்கு கொஞ்சம் தத்துவ ஞானம் வேண்டும். தத்துவ ஞானம் என்றால் ஜனாதிபதி இராதாகிருஷ்ணன் கூறுகின்றாரே குப்பைத் தொட்டி தத்துவ ஞானம் அது அல்ல. தத்துவ ஞானம் பகுத்தறிவு வேண்டும் என்றுதான் குறிப்பிடுகின்றேன்.

ஜாதியை ஒழிக்கின்றவன் முன்னோர்கள் நடந்தது, சொன்னது, எழுதி வைத்தது என்பன போன்றவற்றை எல்லாம் ஒழித்துக் கட்ட வேண்டும்.

நமக்கு எவனும் முன்னோர்கள் அல்லர். நாம்தான் வருங்காலத்தவர்களுக்கு முன்னோர்-கள் என்று கருதி காரியம் ஆற்ற வேண்டும். நமக்கு யார் முன்னோர்கள்? எதில் முன்னோர்கள்? எது முதல் முன்னோர்கள்?

தோழர்களே! தமிழர்களுடைய சரித்திரத்துக்கு கால வரையறையே இல்லையே! நமக்கே என்றால் பார்ப்பனப் புராணங்களைப் பற்றிக் கூறவும் வேண்டுமா?

திரேதா யுகம், கிரேதா யுகம் என்று எல்லாம் கூறி யுகத்துக்கு 1,00,000, 10,00,000 வருஷங்கள் என்று கணக்குப் போட்டுப் புளுகுவான்!

புத்தருக்குப் பிறகுதான் இந்த இராமாயண _ பாரதங்களும், புராணங்களும் ஏற்பட்டன. இராமாயணத்தில் பல இடங்களில் புத்தரைப் பற்றி பேசப்படுகின்றது. பாரதம், விஷ்ணு புராணம், தேவி பாகவதம் முதலியவற்றிலும் பேசப்படுகின்றது. ஏன் இப்படி என்றால் சங்கராச்சாரியார் கூறுகின்றார். இது ஒன்றும் முரண் அல்ல _ நாட்டின் ஒவ்வொரு யுகத்தின் போதும் ஒவ்வொரு புத்தர் தோன்றுவது உண்டு. இராமாயணத்தில் உள்ள புத்தர் அந்த யுகத்துப் புத்தர், பாரதத்தில் உள்ள புத்தர் பாரதகால யுகத்துப் புத்தர் என்று கூறுகின்றார்.

அப்படியே அந்த யுகங்கள் எல்லாம் உண்டு என்று வைத்துக் கொண்டு பார்த்தாலும், அந்தக் காலத்து மனிதர்களுக்கு எப்படி அறிவு மேலாக இருக்க முடியும்? இவன் குறிப்பிடும் யுககாலத்தில் மனிதன் புல்லாய் புழுவாய் இருந்தானோ? அல்லது குரங்காக இருந்தானோ?

நமக்கு வரும் எதிர்ப்பு எல்லாம் முன்னோர்கள் சங்கதி பற்றித்தான் வருகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சுயமரியாதைக் கலியாணம் செல்லாது என்று அய்க்கோர்ட்டில் தீர்ப்புக் கூறினான். இது செல்லாது என்பதற்கு எதை ஆதாரம் காட்டினான் தெரியுமா? நாரதர் இப்படிச் சொல்லி இருக்கின்றார். பராசரர் இப்படிச் சொல்லி இருக்கின்றார். ஆபத்ஸ்தம்பர், யாக்ஞவல்கியர் அப்படிச் சொல்லி இருக்கின்றார்கள். இவர்களுடைய முறைக்கு இந்தத் திருமணம் மாறாக இருப்பதால் இது செல்லாது என்று கூறியிருக்கின்றார்!

இது எவ்வளவு முட்டாள் தனம்! இவர்கள் எல்லாம் யார்? இவர்கள் எந்தக் காலத்துப் பசங்கள்? இவர்களில் அனேகர் மனிதனுக்கே பிறக்கவில்லையே! கழுதைக்கும், கோட்டானுக்கும், மாட்டுக்கும், கிளிக்கும், மற்ற மற்றதுகளுக்கும் பிறந்த பசங்களா நம்முடைய முன்னோர்கள்? இவர்கள் காலத்தில் மனிதனுக்கு எவ்வளவு அறிவு இருந்து இருக்க முடியும்? மக்கள் சிந்திக்க வேண்டும்.

பாவம், புண்ணியம், முன் பின் பிறவிகள் என்பன எல்லாம் கடைந்தெடுத்த முட்டாள் தனமானது _ ஒழிக்கத்தக்கது என்று உணர வேண்டும். இவை பற்றி மக்களுக்குத் தெளிவு உண்டாக்கும், பணியில் தீவிரமாக ஈடுபட்டு பிரச்சாரம் செய்ய வேண்டும். இதுகள் சம்பந்தமான அறிவு நூல்களைப் படித்து உணர வேண்டும்.

இன்றைக்கு உள்ள புரட்டுகள் எல்லா-வற்றையும்விட பெரிய புரட்டு இந்த 20ஆம் நூற்றாண்டிலும் ஜாதிக்கு ஆதாரமாக கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பான் இவற்றை வைத்துக் கொண்டு ஜாதியை ஒழிக்க முடியும் என்று நம்புவதாகும்.

15.12.1962 அன்று திருச்சி மாவட்டத்தில் கரூர் ஜாதி ஒழிப்பு மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு - விடுதலை, 23.12.1962

- உண்மை இதழ், 16-30 நவம்பர் 2021

parthasarathy r நேரம் 10:48 PM கருத்துகள் இல்லை:
பகிர்
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.