புதன், 30 ஜூலை, 2025

கடவுளும் மனிதனும்- தந்தை பெரியார்

 உண்மை இதழ் மாதமிருமுறை >> ஜூலை 16-30,> 2025 > 

உலகில் மனிதனுக்குத்தான் கடவுள் கற்பிக்கப்பட்டிருக்கிறதே ஒழிய, மற்ற ஜீவராசிகளுக்கும், புல், பூண்டு தாவரங்களுக்கும் கடவுள் என்கிற உணர்ச்சியே கிடையாது. ஆனால், அவையெல்லாம் மனிதர்களைப் போலவே தோன்றி வாழ்ந்து செயல்பட்டு அழிந்து மாய்ந்து போகின்றன.

தோன்றி, வாழ்ந்து, அழிந்து, மாய்ந்து போவதில் மனிதர்களுக்கும் மற்ற ஜீவராசி, புல் பூண்டு தாவரங்களுக்கும் மற்ற பொருள்
களுக்கும் எவ்வித மாறுதலும் காண முடிவதில்லை .

பிறவியில் இயற்கையாய் உள்ள பேதங்
களால் சில மாறுதல்களைக் காண்கிறோம். அம்மாறுதல்களின் அடிப்படையில் பேதம் எதுவும் காண்பதற்கில்லை.

ஜீவநூல் ஜீவ ஆராய்ச்சி வல்லுநர்கள் ஆதியில் அதாவது உலகம் ஏற்பட்ட – தோன்றிய காலத்தில் மனிதனும் மற்ற மிருகாதி ஜீவப்பிராணிகளும் ஒன்று போலவேதான் நடந்து வாழ்ந்து வந்தன என்று குறிப்பிடுகிறார்கள்.

மனிதனுக்கு மற்ற ஜீவராசிகளைவிட அறிவுத் துறையில் சிறிது மாற்றம் இயற்கையில் இருந்துவருகிற காரணத்தால், மனிதனுக்கு ஆசை பெருக்கெடுத்து, வாழ்க்கையில் பெரும் கவலைக்கு ஆளாகி, அதனால் துக்க சுகத்திற்கு ஆளாகி உழலுகின்றான். ஆசையும் மடமையும் சேர்ந்தே மனிதனுக்குக் கடவுள் கற்பிக்கப்பட்டு புகுத்தப்பட்டு அறிவின் பயனைக் கொடுத்துக்கொண்டு கவலைக்கும் துக்க சுகத்திற்கும் ஆளாகி அழிகிறான்.

மனித சமுதாயத்தில் கடவுள் கற்பனை புகுத்தப்படாமல் இருந்தால், மனிதர் நிலையே இன்று வேறாக இருக்கும்.

அதாவது கவலையற்ற, துக்கமற்ற வாழ்வு வாழும்படியான நிலையை எய்தியிருப்பான்.

இன்று கவலையும் துக்கமும் இல்லாத மனிதனைக் காண்பதே அரிதாயிருக்கிறது. எந்த உயர்நிலையில் இருப்பவனுக்கும் கவலையும் துக்கமும் குடி கொண்டிருக்கிறது. கடவுள் எண்ணத்தை ஒழித்தவர்களுக்குக் கடவுள் இல்லை. எல்லாம் இயற்கை என்று எண்ணி இருப்பவர்களுக்குத் துக்கம் – கவலை இல்லாமல் இருக்கலாம். அப்படிப்பட்டவர்களைத்தான் ஞானிகள் – முற்றும் துறந்த மெய்ஞ்ஞானிகள் என்று சொல்லுவார்கள். அந்த நிலையை மனிதன் எய்துவதும் எளிதன்று! ஞானம் தோன்றும், துறவு தோன்றும். தோன்றியவன் உலகில் மக்களிடையில் வாழ்வதால், அடிக்கடி சறுக்கி விழுந்து கவலைக்கும் துக்கத்திற்கும் ஆளாகிவிடுகிறான் என்றாலும், நாம் அறியாமல் நமக்குத் தெரியாமல் யாராவது இருந்தாலும் இருக்கலாம்.

மோட்சம் என்ற சொல்லுக்கும், முக்தி என்ற சொல்லுக்கும் உண்மையான கருத்து (அர்த்தம்) கவலையற்ற தன்மை – துக்கமற்ற தன்மை என்றுதான் பொருள். மோட்சம் (அல்லது முக்தி) – துக்க நாசம்; இந்த நிலை கடவுள் (ஒருவர் அல்லது பலர்) இருக்கிறார் என்கின்ற எண்ணமுடையவனுக்கு என்றுமே தோன்றாது.

எவ்வளவுக்கெவ்வளவு கடவுள் கருத்து ஆழமாகப் படிகிறதோ – உடைத்தானவனாய் இருக்கிறானோ அவன் ஆயுள் பரியந்தம் துக்கமும் கவலையும் கொண்டவனாகத்தான் இருப்பான். பேராசைக்காரனாகத்தான் இருப்பான். பொதுவாக இன்று பார்ப்போம் – கடவுள் பக்தன், கடவுளை வணங்குகிறவன் அவன் முட்டாளானாலும் “அறிவாளி” ஆனாலும் வணங்குகிறான்? என்ன எண்ணத்தில் வணங்குகிறான்? ஏதோ வேண்டுகோளின் மீதுதானே! எதையோ எதிர்பார்த்து ஆசைப்பட்டுத்தானே வணங்குகிறான்?

“எனக்கு ஒன்றுமே வேண்டாம்” என்று சொல்பவனாய் இருந்தாலும், “பாதாரவிந்தம் வேண்டும்” என்றாவது சொல்லித்தானே கும்பிடுவான்? அவன் யாருக்குச் சமம் என்றால், எனக்குப் பின்புறம் பிடரியில் ஒரு கண் இருக்கவேண்டும் என்று கடவுளை வணங்குகிறவனுக்குச் சமமானவன் தானே!

ஏதாவது ஒன்றை வேண்டித்தானே பக்தி,
வணக்கம், பூசை, தொழுகை, பிரார்த்தனை முதலியவையெல்லாம்? ஒன்றும் வேண்டாத
வனுக்குக் கடவுளிடம் என்ன வேலை?

அதிலும் தவறு செய்தவன், மோசடி செய்தவன் – செய்கிறவன், பேராசைக்காரன் ஆகியவர்களுக்குத்தான் கடவுள், பக்தி, பூசை முதலியவை அதிகமாக இருப்பதைக் காண்கிறோம்.

எனக்குச் சுமார் பத்து ஜெயில்களில் இருந்த அனுபவம் உண்டு. கொலைக் கைதி முதல் ஒவ்வொரு கைதிகளும் அவனவன் அறைகளில் ஏதாவது ஒரு சாமிபடம்; சிலர் ஏதாவது ஒரு புராணம், பக்தி நூல் வைத்துப் பூசை – பிரார்த்தனை செய்துகொண்டு இருப்பதைத்தான் பார்த்தேன். ராஜமுந்திரி (கோதாவரி) ஜெயிலில் ஒரு கைதி – கொலை செய்தவன் – ஆயுள் தண்டனை அடைந்தவன். அவன் காலை 10:00 மணிக்குக் குளித்து விட்டு அரைமணி நேரம் ஒற்றைக்காலில் நின்றுகொண்டு கைகளைத் தலைக்குமேல் தூக்கிக் கூப்பிக் கும்பிட்டுக்கொண்டு எதையாவது சொல்லிக்கொண்டே நிற்பான். அவன் படித்தவன், கொஞ்சம் பணக்காரனும் கூட! எதற்காக இவ்வளவு பக்தி, பூஜை என்று கேட்டதற்குச் “சீக்கிரம் விடுதலையாவதற்கு” என்று சொன்னான். இப்படி எத்தனையோ கைதிகள் குளித்தவுடன் சாம்பலைப் பூசிக்கொண்டு சாமி கும்பிடுவதைப் பார்த்தேன்.

லஞ்சம் வாங்கும் சைவன்; லஞ்சம் வாங்கும் வைணவன், லஞ்சம் வாங்கும் முஸ்லிம், லஞ்சம் வாங்கும் கிறித்துவன் முக்கியமாய் இவர்கள் பெரிதும் பூசை, வணக்கம், தொழுகை, பிரார்த்தனை இவைகளில் மிகக் கண்டிப்பாக – தவறாமல் நடந்துகொள்கிறார்கள்.

அதிக பக்தி, பூசை, தானம், தர்மம், உபயம், கட்டளை உள்ள வியாபாரிகளைப்பற்றிக் கேட்கவே வேண்டாம். ஆகவே, மனிதனிடம் கடவுள் நம்பிக்கை, கடவுள் பக்தி இருப்பதெல்லாம் ஆசை காரணந்தானே ஒழிய, மனிதனை ஒழுக்கமுடையவனாக்கவோ, மற்றவர்களுக்குப் பயன்படும்படி செய்யவோ அல்ல என்பதை ஒவ்வொருவரும் நம்ப வேண்டுமாய் வேண்டுகிறேன். l

ஞாயிறு, 27 ஜூலை, 2025

கடவுள் உணர்ச்சி நம்மைவிட்டு நீங்க வேண்டுமானால் பூரணஅறிவும், ஆராய்ச்சி முடிவுகளும் வேண்டும்

July 27, 2025
தலையங்கம்

தந்தை பெரியார்

இவ்வாரத்திய தலையங்கம் கடவுளும்  மதமும் என்று தலைப் பெயர் கொடுத்து எழுதப் புகுந்ததன் முக்கிய நோக்கம் என்னவெனில், சுயமரியாதை இயக்கம் நாட்டில் பரவ ஆரம்பித்தபிறகு அதிலும் அவ்வியக்கம் நாட்டில் சற்றுச் சொல்வாக்குப் பெறத் தொடங்கிய பின்பு மக்களுக்குத் தானாகவே ஒருவித குழப்ப உணர்ச்சி தோன்றியிருப்பதை உணர்கின்றோ மாதலினாலேயாம். அதோடுகூட பார்ப் பனர்களும் பார்ப்பனரல்லாதார்களில் அரசியல், தேசியம் ஆகி யவைகளின் பேரால் பிழைக்கும் பிழைப்புக்காரர் களும், சமயம் புராணப் பிரசங்கம் ஆகியவைகளின் பேரால் பிழைக்கும் பிழைப் புக்காரர்களும், இவ்வி யக்கத்தை எதிர்க்கக் கடவுளையும் மதத்தையும் பற்றிய பொதுமக்களின் குழப்பத்தைத் தங்களுக்கு ஆதாரமாய் வைத்துக் கொண்டும், மற்றும் திரித்துக் கூறிக் கொண்டும் விஷமப் பிரச்சாரம் செய்து வருவதானாலும், நமது இயக்கத்தில் உண்மையான பற்றுக் கொண்ட உண்மை நண்பர்களில் சிலர் இவ்விஷமப் பிரச்சாரத்தைக் கண்டு பயப்படுவதாகத் தெரிவதாலும், மற்றும் சிலர் பெரியோர்களும், சமய சம்பந்தமாக மனத் துடிப்புக் கொள்வதாலும் நமது நிலையையும், கடவுள் மதம் என்பது பற்றி நாம் கொண்டுள்ள கருத்தின் நிலையையும் சற்று விளக்கி விட வேண்டுமென்பதாகக் கருதி இத்தலைப்புக் கொடுத்து எழுதப் புகுந்தோம். இவைகளைப் பற்றி இதற்கு முன்னும் பலதடவை எழுதியுள்ளோம் ஆயினும் அவை களையும்விட இது சற்றுத் தெளிவாக இருக்கலாம் என்கின்ற எண்ணத்தின் மீதே இதை எழுதுகின்றோம். வாசகர்கள் தயவு செய்து இதைச் சற்று நிதானமாகவும் கவனமாகவும் படித்துப்பார்க்கும் படி வேண்டுகின்றோம். இக் கட்டுரை யானது இதே தலைப்பின் கீழ் திருநெல்வேலி ஜில்லா இரண்டாவது சுயமரியாதை மகாநாட்டின் முடிவுரை யின்போது நம்மால் எடுத்துச் சொல்லப் பட்டதை அனு சரித்தும் சில நண்பர்கள் அதை விளக்கித் தலையங்கமாக எழுதும் படி சொன்னதை அனுசரித்தும் எழுதப்பட்டதாகும்.

கவலை இல்லை

முதலாவதாக, நமக்குக் கடவுளைப் பற்றியாவது மதத்தைப் பற்றியாவது சிறிதும் கவலை இல்லை என்பதாகவும், கஷ்டப்படும் மக்களின் துன்பம் நீங்க அவர்களுக்கு அறிவு, ஆற்றல் இன்பம் ஆகியவைகளில் உள்ள கட்டுப்பாட்டை உடைத்து, விடுதலையை உண்டாக்க வேண்டும் என்பதே முக்கிய கவலை என்பதாகவும் அநேக தடவைகளில் வெளியிட்டிருக்கின்றோம். அதுவும் பலர் நம்முடைய இம்முயற்சியில் கடவுளையும் மதத்தையும் கொண்டுவந்து குறுக்கே போட்டுவிட்டதால் தான் நாம் அதைப் பற்றி கவலையில்லை என்று சொல்ல வேண்டிய தாயிற்றே யொழிய உண்மையில் கடவுளை யும் மதத்தையும் பற்றி பேச வேண்டும் என்கின்ற அவசியத்தையோ ஆசையையோ கொண்டு நாம் அதில் பிரவேசிக்கவில்லை. அதுபோலவேதான் சைவ சமயத்தைப் பற்றியும் நாம் பேசவேண்டிய அவசியம் ஏற்பட்டதும் என்போம். எப்படி எனில், திரு.வி. கலியாணசுந்தர முதலியார் நமக்கு எதிராக தம்மால் கூடிய சூழ்ச்சிகள் எல்லாம் செய்து பார்த்தும் ஒன்றிலும் பயன் பெறாததால் கடைசியாகச் சமயமென்றும், சமயப் பெரியார் என்றும் கூறிக் கொண்டு அவ்வார்த் தைகளையே தமது ஆயுதமாகவும், சமய சம்பந்தமான சில பைத்தியக்காரர்களைத் தமக்குப் படையாகவும் வைத்துக் கொண்டு அவர்களைத் தெருவில் இழுத்து நம்மீது உசுப்படுத்திவிட்டுச் சூழ்ச்சிப் போர் தொடுக்க ஆரம்பித்ததன் பலனாய் சைவசமயம் என்பதும் சமயாச்சாரியார்கள் என்பவர்களும் சந்திக்கு வரவேண்டியவர்களானதோடு சைவப் பெரியார்கள் என்பவர்களின் சாயமும் வெளுக்க வேண்டியதாய் விட்டது. எனவே இன்றைய தினம் பெரியபுராணம், திருவிளையாடல் புராணம், ராமாயணம், பாரதம் ஆகியவைகளிலுள்ள கதைகளை நம்பி முக்கிய கதாநாயகர்களைக் கடவுள்களாக மதித்து வணக்கம், பூஜை, உற்சவம் செய்ய எவனெவன் சம்மதிக்கின்றானோ அவன் மாத்திரமே கடவுள் நம்பிக்கையும் சமயப் பற்றும் கொண்டவன் என்றும் மற்றவர்கள் நாத்திகர்கள், சமயத் துரோகிகளெனவும் தீர்மானிக்கப்பட்டு அதுவே முடிந்த முடிவாகவும் சொல்லப்பட்டுவிட்டது. இது எப்படி இருந்தபோதிலும், கடவுள் மதம் என்பது என்னவென்பது பற்றியும், இவை எப்படி உண்டாயிற்று என்பது பற்றியும் இவற்றை உண்டாக்கியவர்கள் கெட்ட எண்ணத்தோடு உண்டாக்கினார்களா? அல்லது நல்ல எண்ணத்தோடு உண்டாக்கினார்களா? அல்லது அறியாமையினா லுண்டாக்கினார்களா? என்பவைகளைப் பற்றியும் இவற்றில் நமது அதாவது மக்கள் கடமை என்ன என்பது பற்றியும் சற்று ஆலோசித்து பார்க்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

நிலை நிறுத்தவில்லை

முதலாவதாக, இங்கு, குணம், உருவம் பெயரற்ற தன்மையுடைய கடவுள் என்பதைப் பற்றியும் மக்களின் வாழ்க்கை நலத்திற்காக ஏற்படுத்தப்பட்ட கொள்கைகள்தான் மதம் என்று சொல்லப்படும் மதத்தைப் பற்றியுமே, இங்கு விவரிக்கக் கருதியுள்ளோமே தவிர மற்றப்படி பல கடவுள்களின் தன்மையையும், மதப்பிரிவுகளான கிறிஸ்து, மகமதியம், ஜைனம், பௌத்த சீக்கிய, சைவ, வைணவ, நிரீச் சுரவாத, உலகாயுத, சாக்கிய, வாம முதலிய பல உள் மதங் களைப் பற்றியும் நாம் இங்கு தனித்தனியாக பிரஸ்தாபிக்க உத்தேசமில்லை ஏனெனில் அவற்றிற்கு ஏற்கனவே மறுப்புகள் தாராளமாய் வெளிப்பட்டு ஒருவருக் கொருவர் பதில் சொல்ல முடியாமல் தத்துவார்த்தம் என்கின்றதற்குள் அடைக்கலம் புகுந்ததும் நம்பித்தான் ஆகவேண்டும் என்கின்ற நிர்பந்தத்திற்குள் புகுந்துமே தான் ஒவ்வொரு வர்களும் அவரவர்கள் கடவுளையோ, கடவுள் தூதர்களையோ, அவதாரங்களையோ, சமயங்களையோ சமயாச் சாரியார்களையோ காப்பாற்றிக் கொள்ள முடிந்ததே ஒழிய அறிவின் மீதோ ஆராய்ச்சியின் மீதோ, நியாயத்தின் மீதோ, நிலை நிறுத்த முடியாமல் போய்விட்ட விஷயம் உலக மறிந்ததாகும். ஆதலால் இத்தலையங்கத்தில் நாம் அவற்றில் பிரவேசிக்கவில்லை.

கடவுள் நினைப்பு

முதலாவது மக்களுக்குக் கடவுள் எப்பொழுது எப்படி ஏற்பட்டது என்பதைப் பற்றி ஆராய்வோம். மனிதன் பிறந்து வளர்ந்து நினைக்கப்பட்ட பிறகுதான் கடவுள் என்கின்ற ஒரு வஸ்து நிச்சயம் ஏற்பட்டு இருக்க வேண்டும். இதை யாரும் மறுக்கமுடியாது. ஏனெனில் இப்போது கூட மக்களுக்குப் பிறர் சொல்லிக் கொடுத்த பிறகுதான் கடவுள் என்கின்ற பேச்சும் நினைப்பும் ஏற்படுகின்றதே தவிர தானாக ஏற்படுவ தில்லை. எப்படி எனில் சிறு குழந்தைகளை நாம் கட்கத்தில் இறுக்கிக் கொண்டு ஒரு உருவத்தையோ வஸ்துவையோ காட்டி, சாமி! என்றும் அதைக் கைக்கூப்பி கும்பிடு என்றும் சொல்லிக் கொடுத்த பிறகே குழந்தை சாமியையும் கும்பிடவும் அறிகின்றது. அதுபோல ஆதியிலும் மனிதன் பிறந்த பிறகுதான் அவன் மனத்திற்குக் கடவுள் நினைப்பு தோன்றியிருக்கவேண்டும். அது எப்படி என்றும் எப்போ தென்றும் பார்ப்போமானால் சாதாரணமாக மனிதனுக்கு அறிவு வளர்ச்சியும் ஆராய்ச்சி வளர்ச்சியும் இல்லாதக் காலத்தில் தான் கடவுள் நினைப்பு தோன்றி இருக்கவேண்டும். கடவுள் என்பது கடவுள், தெய்வம், அல்லா, காட், என்ற தமிழ் சமஸ்கிருதம், துலுக்கு, ஆங்கிலம் முதலிய பல பாஷைகளில் பல சொற்களாக இருந்தாலும் குறியில் அர்த்தத்தில் உலகத் தோற்றத்திற்கும் நடப்பிற்கும் அழிவிற்கும் காரணமாகிய ஒரு சக்தியையே குறிப்பிடுவதாகவும் அதாவது சிலரால் இயற்கை என்று சொல்லப்படுமானால் அவ்வியற்கையின் இயங்குதலுக்கும், பஞ்சபூதக் கூட்டு என்று சொல்லப்படுமானால் அக்கூட்டின் சேர்க்கைக்கும் ஏதாவது ஒரு சக்தி இருந்து தானே ஆக வேண்டும் என்பதுவும், அந்த சக்திதான் கடவுள், எல்லாம் வல்ல ஆண்டவன் – அல்லா, காட் என்று சொல்லப்படு கின்றதென்று சொல்வதானாலும் அந்த சக்தி என்னும் கடவுளே எப்படி மக்கள் மனத்திற்கு வந்தார் என்பதுதான் இங்கு விசாரிக்கத்தக்கதாயிருக் கின்றது.

இப்போதும் மனிதன் தன்னால் முடிந்தவைகள் போக முடியாதவைகளுக்கே கடவுள் சக்தி என்று சொல்லிவிடுகின்றான். உதாரணமாக சிறு குழந்தைகள் ஒரு ஜால வேடிக்கைக் காரனுடைய செய்கையை மந்திர சக்தி என்றும், தெய்வசக்தி என்றும், உபாசனாச் சக்தி என்றும் குட்டிச் சாத்தான் சக்தி என்றும் கருதுகிறார்கள். அப்பையனாயிருந்து அப்படியே கருதியிருந்த நாம் இப்போது அறிவு வளர்ச்சி பெற்றபின் அந்த ஜால வேடிக்கைகளை மந்திர சக்தி என்று எண்ணாமல் தந்திரம், கைத்திறம் என்றும் சொல்லுகின்றோம் மற்றும் அந்த ஜாலவேடிக்கைக்காரன் செய்யும் ஜாலத்தின் வழி இன்னதென்று நமக்குத் தெரியாவிட்டாலும் கூட நாம் அவற்றை ஒரு காலமும் மந்திர சக்தி என்றோ தெய்வ சக்தி என்றோ சொல்லாமல் இது ஏதோ தந்திரம் தானே ஒழிய வேறில்லை. ஆனால் அது இன்னது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லி விடுகின்றோம்.

அறிவு வளர்ச்சி

எனவே ஒரே காரியம் நமக்கே ஒரு காலத்தில் மந்திரமாகவும் தெய்வ சக்தியாகவும் தோன்றியது. பிறகு அது தந்திரம் என்று தோன்றக் காரணம் என்னவென்றால் அது அறிவு வளர்ச்சியும் ஆராய்ச்சிப் பலனுமேயாகும். அதுபோலவே நமக்கு இப்போது தெய்வசக்தி கடவுள் சக்தி என்று தோன்றுகின்ற காரியமெல்லாம் மேல் நாட்டாருக்குக் கடவுள் சக்தியாகத் தோன்றுவதில்லை.  இப்போது வானசாஸ்திரம் தெரிந்தவர்கள் பூமி, சூரியன் இவற்றின் இயங்குதல் அதன் கால அளவு ஆகியவைகளைக் கண்டு பிடித்த பின் சூரியனைப் பாம்பு கடிப்பதில்லை என்பதையும் ஒருவாறு நன்றாய் உணருகின்றோம்; அது போலவே எங் கிருந்து எப்படி தண்ணீர் வருகின்ற தென்பது தெரிந்தவுடன் நதிக் கடவுளும் மேகக் கடவுளும் வர்ண பகவானும் சிறிது சிறிதாக நம்மனதில் மறையத் தொடங்கி விட்டன. அது போலவே வியாதிகள் எப்படி வருகின்றன என்கின்றதான சுகாதார, உடற்கூறு ஆராய்ச்சியும் நமக்கு தெரியப் புறப்பட்ட பின்பு பேதி, மாரி அம்மை முதலிய தெய்வங்களின் உணர்ச்சியும் மதிப்பும் சிறிது சிறிதாக மறையத் தலைப்பட்டன. இதுபோலவே காற்று, கருப்பு, பேய் முதலியவைகளும் மறைந்து வருகின்றன. இந்த முறையில் இனியும் நமக்குள் மீதி இருக்கும் கடவுள் உணர்ச்சிகள் எவை என்று பார்ப்போமானால் காரண காரியம் முதலிய விவரங்களை கண்டு பிடிக்க முடியாதவைகளையே கடவுள் செயலென் றும், கடவுள் சக்தி என்றும் சொல்லி வருகின்றோம்.

பக்குவம் தேவை

இப்போது நம் மனத்திற்கு எட்டாத, காரியங்களை மேனாட்டார் செய்யும் போது நாம் அதிசயப்பட்டாலும் அதை மந்திர சக்தி என்று நாம் சொல்லத் துணிவதில்லை. இந்த அளவுக்கு நாம் தைரியமாக வந்து விட்டோமென்றாலும் நமக்குப் பூரண அறிவும் ஆராய்ச்சி முடிவும் ஏற்படும் வரை கடவுள் உணர்ச்சி நம்மை விட்டு விலக முடியாது. அன்றியும், வாழ்க்கையின் பக்குவமடையாதவர்களுக்குக் கடவுள் உணர்ச்சி இருந்தே தீர வேண்டியதாயுமிருக்கின்றது. அதாவது கஷ்டப்பட்டு ஏமாற்றமடைந்தவனுக்கும் ஈடு செய்ய முடியாத நஷ்டமடைந்தவனுக்கும், கடவுள் செயல் என்பதைச் சொல்லித்தான். ஆறுதலையும் திருப்தியையும் அடையச் செய்ய வேண்டியிருக்கின்றது. நல்ல அறிவும் ஆராய்ச்சியும் உடையவர்களும் தங்களுக்கு காரண காரியம் எட்டாத இடத்திலும், ஈடு செய்ய முடியாத இடத் திலும் கடவுள் செயல் என்பதைக் கொண்டு, தான் திருப்தி அடைகின்றார்கள். அப்போது தங்கள் அறிவுக்கு மேல் ஒன்று இருப்பதை எண்ணித் தீர வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் உறுதியான பக்குவமடைந்தவர்கள் எந்த விஷயத்திற்கும் தங்களுக்குத் தெரிந்த காரணத்தைக் கொண்டு சமாதானமடைவதும் தெரியாததாயிருந்தால் நமக்கு எட்டவில்லை என்றோ, அல்லது இதுதான் இயற்கை என்றோ கருதி திருப்தியடைவதுமாய் இருக்கின்றார்கள். எனவே சாதாரண மக்கள் கடவுளுக்கும் சற்று அறிவுடைய மக்கள் கடவுளுக்கும் ஆராய்ச்சிக்காரர்கள் கடவுளுக்கும் பக்குவமடைந்தவர்கள் எண்ணத்திற்கும் அநேக வித்தியாசமுண்டு. ஒருவொருக்கொருவர்  கடவுள் வணக்கத்திலும், கடவுள்மீது சுமத்தும் பொறுப்பிலும் அநேக வித்தியாச முண்டு.

– ‘குடிஅரசு’ – தலையங்கம் – 28.07.1929

புதன், 23 ஜூலை, 2025

மக்களுக்கு அறிவுணர்ச்சியூட்ட எங்களைத் தவிர யாரும் தோன்றவில்லையே!- தந்தை பெரியார்

 


தோழர்களே! இந்தக் காலம் ஒரு பெரிய மாறுதலான காலம்; மாறுதலிலேயும் ஒரு பெரிய புரட்சிகரமான கொள்கையைக் கொண்ட மாறுதலான காலமாகும். இங்குள்ள அய்ந்து (5000) ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களில் 10 பேர்களுக்குக்கூட குடுமியில்லை. எல்லோரும் தலையைக் கத்தரித்துக் கொண்டு இருக்கிறார்கள். 60, 70 வயதுள்ளவர்கள் கூட 91 வயதான நான் கூடக் கத்தரித்துக் கொண்டிருக்கிறேன். மதப்படி, சாஸ்திரப்படி குடுமி வைத்திருக்க வேண்டும். ஆனால், யாரும் சொல்லாமல், சட்டம் போடாமல் மக்கள் மதத்திற்கு, சாஸ்திரத்திற்கு விரோதமாக முடியைக் கத்தரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், காலத்தின் மாறுதலான வேகத்தாலேயே ஆகும். அது போன்று தான் – நெற்றியில் சாம்பலில்லா விட்டால் நீறில்லா நெற்றி பாழ் என்பான்; நாமம் இல்லா நெற்றி நாசமென்பான். இன்று ஒரு சில ஏமாற்றுக்காரர்களைத் தவிர வேறு யார் நெற்றியிலும் சாம்பலுமில்லை – நாமமுமில்லை. யார் போட வேண்டாம் என்றார்கள்? அதற்கு முன் ஆதிதிராவிடர் மக்களைப் பக்கத்தில் அழைத்தால் அவர்கள் வரமாட்டார்கள். தூரவே நின்று கையைக் கட்டிக் கொண்டு பேசுவார்கள். இன்று நாம் அழைக்காமலே நம் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொள்கிறான். நான் மட்டும் என்ன தாழ்ந்தவன்? உன் இரத்தத்தையும், என் இரத்தத்தையும் பார்? இரண்டும் ஒன்றாகத் தானே இருக்கிறது என்கின்றார்கள்.

இதற்கெல்லாம் ஒன்றும் சட்டம் செய்யவில்லை. காலம் நம்மைத் தள்ளிக் கொண்டு போகிறது. முதன் முதல் சுயமரியாதை இயக்கம் 1925இல் ஆரம்பித்த போது கடவுள் ஒழிக, மதம் ஒழிக, காந்தி ஒழிக, காங்கிரஸ் ஒழிக, பார்ப்பான் ஒழிக, ஜாதி ஒழிக என்று கொள்கை வைத்து ஆரம்பித்தது. பல பேர் இது ஒன்றும் ஆகாது என்று சொன்னார்கள். இதெல்லாம் முடியுமா என்று கேலி செய்தார்கள். ஆனால், இன்று ஒவ்வொன்றாக ஒழிந்து கொண்டு வருவதைக் காண்கின்றோம். கடவுள் ஒழிக என்றோம் இன்று ஒழிந்து விட்டது. இந்தக் கூட்டத்தில் எவன் கடவுளை நம்புகின்றான். கடவுள் செயல் என்று எவன் தன் காரியத்தைச் செய்யாமலிருக்கின்றான், அவனவன் காரியத்தை அவனவன் செய்கின்றானே தவிர, எவனும் கடவுளை நம்பிக் கொண்டு தன் காரியத்தைக் கடவுளிடம் ஒப்புவிப்பது கிடையாது. முட்டாள்தனத்திற்குத் தான் கடவுள் என்கின்றானே தவிர, எவனும் கடவுளை உண்மையில் நம்புவது கிடையாது.

காங்கிரஸ் ஒழிக என்றோம்! எப்போது என்றால், காங்கிரஸ் பூராவும் பார்ப்பானாக இருந்த போது! இப்போது அந்தக் காங்கிரஸ் ஒழிந்துவிட்டது. இப்போது காங்கிரசில் நம்மவர்கள் தான் இருக்கிறார்கள். பார்ப்பான் ஒழிக என்றோம்! இன்று அரசியல், பதவி, உத்தியோகங்களில் பெரும்பாலும் பார்ப்பான் ஒழிந்து விட்டான். பொதுவாழ்விலும் பார்ப்பானுக்குச் செல்வாக்கு இல்லாமல் போய் விட்டது.

பணக்காரன் ஒழிக என்கிறோம்; இன்று பணக்காரன் ஒழிந்து விட்டானே! பணம் இருக்கலாம், ஆனால் திருட்டுத்தனமாகத் தான் வைத்துக் கொண்டிருக்கலாம்; என் யோக்கியதைக்கு 30 ஆயிரம் வைத்துக் கொண்டு நான் வியாபாரியாக இருந்த போது – நான் எங்கள் ஊரில் ஒரு பணக்காரனாக இருந்த போது – நான் தெருவில் சென்றால் யாவரும் எழுந்து நின்று எனக்கு மரியாதை  செய்வார்கள். என்னைப் போன்று இன்றைக்குப் பல மடங்கு இலட்சக்கணக்கான பணமுள்ள பணக்காரர்கள் எங்கள் ஊரில் இருக்கிறார்கள் என்றாலும், அவர்களை இப்போது மக்கள் முன்போல் மதிப்பது கிடையாது!

கடவுள் அடியோடு ஒழிந்தால், நீ என்னடா பணக்காரன் – நான் ஏன் ஏழை என்று பணக்காரனிடம் சென்று அடித்துப் பறித்து விடுவானே என்பதால் தான், பணக்காரன் இன்று கடவுளைக் காப்பாற்றுகிற முயற்சியில் ஈடுபட்டுள்ளான். பார்ப்பான் தான் சாமியைப் பூசை பண்ண வேண்டும் என்று வைத்திருந்தான். இன்று தாழ்த்தப்பட்ட மக்களும் பூசை செய்யலாம் என்று சொல்லிவிட்டார்கள். அடுத்த சட்டசபையில் சட்டமாக்கி விடுவார்கள்.

(15.5.1970 அன்று கண்கொடுத்தவனிதம் பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு)  – ‘விடுதலை’, 23.5.1970

••

ஜாதியில் ஈனஜாதி என்பதோடு படிக்கக் கூடாதவன், புழங்கக் கூடாதவன், நல்ல துணி உடுத்தக் கூடாதவன் என்றெல்லாம் இருந்ததே!

நம் பிரச்சாரத்தின் காரணமாகத்தானே அவை அழிந்து கொண்டு வருகின்றன? இந்த நாட்டு மக்களுக்கு அறிவு உணர்ச்சியூட்ட எங்களைத் தவிர யாரும் தோன்றவே இல்லையே!

தோழர்களே! இந்தக் காஞ்சிதான், பகுத்தறிவு மார்க்கமாக – புத்தக் கொள்கைகள் நிறைந்த இடமாக ஒரு காலத்தில் இருந்தது.

அந்த அறிவு மார்க்கத்தைப் பார்ப்பனர் அடியோடு அழித்து விட்டார்கள். பவுத்தர்களை எல்லாம் கொலை செய்து தீர்த்து விட்டார்கள். மடங்களையும், பள்ளிகளையும் இடித்துத் தள்ளி விட்டார்கள். அதன் காரணமாக இன்றைக்கு, இந்தக் காஞ்சி  மூட நம்பிக்கை நிறைந்த நகரமாக, கோயில் குளங்கள் நிறைந்த நகரமாகக் காட்சி அளிக்கின்றது.

கடவுளும், மதமும் காரணமாகத்தானே பார்ப்பான், பறையன், சூத்திரன் ஆக இருக்கின்றோம்.

கடவுளும், மதமும் இல்லாவிட்டால் பறையனாக, சூத்திரனாக நாம் இருப்போமா? பார்ப்பானுக்கும் நமக்கும் வித்தியாசம் இருக்காதே! கடவுளும், மதமும் காரணமாகத்
தானே நாம் படிக்கக் கூடாதவர்கள்? கடவுளும், மதமும் இல்லாவிட்டால் நாமும் பார்ப்பானைப் போல எல்லோருமே படித்து இருப்போமே!

கடவுளும், மதமும் ஒழிந்து கொண்டு வருவது காரணமாகத் தானே இன்றைக்கு ஜாதி ஆணவம் குறைந்து கொண்டு வருகின்றது; எல்லோரும் படிக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது? போலீஸ்காரர்களாகத் தாழ்ந்த உத்தியோகத்தில் இருந்த நாம் இன்றைக்கு பாதிக்கு மேல் எல்லா உத்தியோகங்களிலும், பதவிகளிலும் வந்து விட்டோமே!

முழு அளவுக்கு முன்னேறாவிட்டாலும் இன்றைக்கு வளர்ச்சித் திசையில் இருக்கிறோம்.

(28.5.1972 அன்று காஞ்சி அய்யம்பேட்டையில்  தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு)

– ‘விடுதலை’,  3.6.1972

சமுதாயத்தில் தமிழன் (திராவிடன்) அந்நியனாகிய ஆரியனின் ஆதிக்கத்தினால் 2, 3 ஆயிரம் ஆண்டுகளாக – அதாவது ஆரிய வேதகாலத்தில் இருந்தே, தஸ்யூ, அசுரர், இராக்கதர் என்பவைகளான இழிவு புதைந்த பெயர்களால் அழைக்கப்பட்டு, மனுகாலத்திலிருந்து நாலாம் பிறவி – ஆண்கள் சூத்திரர்கள், பெண்கள் பார்ப்பனருக்குத் தாசிகள் (வைப்பாட்டி மக்கள்) என்றும் பெயர் சூட்டி இழிவாய், தீண்டப்படாதவர்களாய் நடத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். 1922, 1923ஆம் ஆண்டில்கூடப் பார்ப்பனர்கள், சூத்திரர்கள் எனப்படுபவர்களாகிய நம்மிடம் பேசிவிட்டால் குளித்து (ஸ்நானம் செய்த) பிறகுதான் சாப்பிடுவார்கள். ஸ்நானம் செய்தபிறகு எவ்வளவு அவசர, அவசியமான காரியமாயிருந்தாலும் நம்மிடம் (சூத்திரர்களிடம்) பேசமாட்டார்கள். மற்றும், வைதிகப் பார்ப்பனர் வேலைக்காரப் பெண்ணையும், ஆணையும் அக்காலப் பஞ்சமரை நடத்துவது போல்தான் நடத்துவார்கள். பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றிய பிறகும்கூட, காந்தியாரின் இயக்க காலத்தில் தாழ்த்தப்பட்டோருக்குத் தனிப் பள்ளிக்கூடம், தனிக்கிணறு என்பதாக ஏற்படுத்தியதுடன் சமபந்திபோஜனத்தை எதிர்த்து வந்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் தஞ்சை, திருநெல்வேலி ஜில்லாக்களில் பல நகரங்களிலும், கிராமங்களிலும் தாழ்த்தப்பட்டவர்களை (5ஆம் ஜாதியாரை) வீதியில் நடக்கவோ, கக்கூசு எடுக்கவோ, கழுவவோ அனுமதிக்கப்படாமல் 4ஆம் ஜாதியாரைக் கொண்டே பார்ப்பனர் நடத்தி வந்தார்கள்.

1940இல்கூடப் பொது உணவு விடுதிகளில், ஆலயங்களில், இரயில் நிலையங்களில், சத்திரங்களில் சாப்பிட, தங்கியிருக்கப் பார்ப்பனருக்கு வேறு, மற்றவர்களுக்கு வேறு இடம் என்பதாகப் பிரிவினை இருந்து வந்திருக்கிறது. இவை யாவும் இப்போது மறைந்துவிட்டன என்று சொல்லலாம். ஆனாலும், இதற்குக் காந்தியோ, காங்கிரசோ, தேசியத் தலைவர்களோ காரணம் என்று சொல்லமுடியாது. சுயமரியாதை இயக்கம் என்றுதான் சொல்லவேண்டும்.

(‘விடுதலை’ தலையங்கம் – 23.10.1973)

- உண்மை இதழ், 16-30.6.25

பக்தி, கடவுள் நம்பிக்கை என்பவை பார்ப்பனர்களுடையவும், அயோக்கியர்களுடையவும் வஜ்ராயுதங்களே!-தந்தை பெரியார்



மக்களிடையே பக்திப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். எப்போதையும்விட இப்போது அதிகமாகச் செய்து வருகிறார்கள். பேச்சு, பேசும்போதும் “மக்களுக்கு இப்போது வரவர கடவுள் பக்தி குறைந்து வருகிறது என்று பேசி வருகிறார்கள். அதன் கருத்து என்ன என்று சிந்திப்போமானால், மக்களிடம் வரவர காலப் போக்கில் மூட நம்பிக்கைகள் குறைந்து விலகி வருகிறது என்பதுதான் பொருளாகும்.

ஏன் என்றால் அந்தச் சொல்லை உண்டாக்கினவர்களே மக்களிடம் ஒரு முட்டாள்தனமான நம்பிக்கை ஏற்படவேண்டும் என்கின்ற கருத்தில்தான் உண்டாக்கினார்கள் என்று சொல்ல வேண்டும். ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால் அந்தச் சொல், அதாவது பக்தி என்கிற சொல் ஓர் அர்த்தமற்ற பொருளற்ற சொல்லேயாகும்.

விளக்கமாகச் சொல்லவேண்டுமானால் முதலாவது பக்தி என்ற சொல் தமிழ்ச்சொல் அல்ல; வடமொழிச் சொல் ஆகும். அதற்குச் சரியான ஒரு தமிழ்ச் சொல்லே இல்லை. பக்தி என்னும் சொல்லுக்குத் தமிழில் – அகராதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் சொற்கள் அன்பு – வழிபாடு – நம்பிக்கை என்ற சொற்கள்தாம்.

சாதாரணமாக ஒரு மனிதன் ‘பக்திமானாய் இருக்கிறான்,’ ‘அவன் தெய்வநம்பிக்கை உடையவன்’ என்றால் அதற்கு அடையாளம் என்ன?

  1. பட்டை நாமம்
  2. விபூதிப்பட்டை
  3. கழுத்தில் கொட்டை
  4. வாயில் ராமா – ராமா, சிவா – சிவா என்பது.
  5. எதற்கெடுத்தாலும் ஆண்டவன் செயல், பகவான் செயல் என்பது.
  6. கோவில்களுக்குப் போவது
  7. அங்கு போய் கண்ணை மூடிக்கொண்டு கையைக் கூப்பி நிற்பது.
  8. அப்போது வாயால் எதையாவது முணு
    முணுப்பது.
  9. நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து கும்பிடுவது.
  10. மனதில் எதையாவது விரும்புவது.
  11. கோவில் பார்ப்பான் எதையாவது கொடுத்தால் அதை வாங்கித் தலையில் கொட்டுவதும், வாயில் கொஞ்சம் போட்டுக் கொண்டு மீதியை உடலில் கொஞ்சம் தடவிக்கொள்வது.
  12. பிறகு சாமி அறையைச் சுற்றுவது.
  13. தேவாரம், பிரபந்தம், இராமாயணம், பாரதம் முதலிய நூல்களைச் சத்தமாய்ப் படிப்பது.
  14. வீட்டில் பூசை அறை வைத்து பூசை செய்வது.
  15. உற்சவங்களுக்குப் போவது.
  16. ஸ்தல யாத்திரை செய்வது.

இவை முதலியவை மாத்திரமல்லாமல் பார்ப்பனர்களைச் சாமி என்று கூறி கண்டவுடன் கும்பிடுவது, அவனுக்குக் கண்டபடி அள்ளிக் கொடுப்பதுவரை செய்யும் காரியங்கள்தான் இன்று பக்தியாய் இருக்கின்றதே ஒழிய, மற்றபடி மனிதனின் நல்ல எண்ணம், நாணயம், ஒழுக்கம், நேர்மை, இரக்கம், ஈவு முதலிய நல்லவற்றைக் கொண்டிருப்பதோ, மோசடி, துரோகம், பித்தலாட்டம், திருட்டு, புரட்டு, பொய், ஏமாற்றுதல் முதலிய தீர குணங்கள் இல்லாமல் இருப்பதோ ஒருநாளும் ஒருவரிடமும் பக்தியாய், தெய்வ நம்பிக்கையாய் இருப்பவர்களிடம் காண முடிவதில்லை.

எனது 87 ஆண்டு வாழ்வில் மனிதர் என்பவர் எவரிடமும் காண முடியவே இல்லை. அது மாத்திரமல்லாமல், அவை இருக்கவேண்டும் என்கிற கட்டாயமும் அவர்களுக்கு இல்லை. இவற்றுக்கும், பக்திக்கும் சம்பந்தமும் இல்லை என்றுதான் முடிவு செய்யவேண்டும்.

இப்படிப்பட்ட பக்தி மனிதனுக்கு எதற்காக வேண்டும் என்றால், மனிதனை மடையனாக்கவும், அயோக்கியர்கள் எளிதில் அவனைச் சுரண்டவும் பயன்படுவதால் “மனிதனுக்குப் பக்தி அவசியமானது’’ என்று பிரச்சாரம் செய்யவேண்டி ஏற்பட்டுவிட்டது. ஒரு யோக்கியன் பக்தி செய்யவில்லையானால், கடவுளை நம்பவில்லையானால் அவனுக்குத்
தான் என்ன கேடு வரும்? மற்றவர்களுக்குத்தான் என்ன கேடு சம்பவிக்கும்? பொதுவாக மக்களுக்குப் பக்தி இல்லாவிட்டால் பார்ப்பானுக்கும், அயோக்கியர்களுக்கும் பிழைப்பு, வாழ்க்கை நடவாது.

பொதுவாக நாட்டில் பக்தி கொண்ட முட்டாள்களால்தான் இவ்விரு கூட்டம் வாழ்வதுடன், எல்லாவித கெட்ட குணங்களும் மக்களைப் பீடிக்க வசதி ஏற்படுகிறது. இதனால்தான் சங்கராச்சாரி, ராஜகோபாலாச்சாரி, கதாகாலட்சேப ஆச்சாரிகள் முதல் எந்தப் பார்ப்பனரும் எந்த சமயநூல் புராணங்களும் “பக்தியினால் அல்லாமல் வேறு எந்தக் காரணத்தாலும் மனிதன் மோட்சமடைய முடியாது’’ என்று தினமும் பேச்சுக்குப் பேச்சு மற்ற மக்களுக்கு உபதேசம் செய்து வருகிறார்கள்.

மற்றும் பக்தியினால் பாவம் தீரும் என்கின்ற சொல்லே மிக அயோக்கியத்தனமும், பித்தலாட்டமும் பெரும் கேடும் நிறைந்த சொல்லாகும். மற்றும் பக்தியும் வழிபாடும் பூசையும் வணக்கமும் பிரார்த்தனையும் “மனிதன் செய்த எப்படிப்பட்ட பாவத்தையும் தீர்க்குமே என்று கூறப்படுகிறதே ஒழிய, இவை பாவம் செய்யாமலிருக்கச் செய்யும் சக்தி, தன்மை அற்றதாகவே இருந்து வருகின்றன. நாட்டில் “மக்களுக்குக் கடவுள் நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்ற கருத்தைச் சொல்லிக் கொண்டு செய்த எந்தக் காரியத்தாலும், எந்தக் கோவிலினாலும், எந்தக் குளம் தீர்த்தங்களாலும் மனிதனை “பாவ காரியங்கள் செய்யாமல் தடுக்கவே முடியவில்லையே!

ஆகையால் பக்தி, கடவுள் நம்பிக்கை என்பவை எல்லாம் பார்ப்பனர்களுடையவும், அயோக்கியர்களுடையவும் வஜ்ராயுதங்களே
யாகும்.

– தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம் “விடுதலை“, 29.12.1965

- உண்மை இதழ், 16-31.5.25

செவ்வாய், 22 ஜூலை, 2025

சமூக மாற்றம் இளைஞர்களின் வேகத்தில் விவேகம் வேண்டும்

 


தந்தை பெரியார்

நாட்டில் எந்தச் சீர்திருத்தம் நடைபெற வேண்டுமானாலும், அவை வாலிபர்களா லேயேதான் முடியுமென்று யாரும் சொல்லுவது வழக்கம்.  இம்முடிவு இன்று உலகில் சகலரும் அபிப்பிராய பேதமின்றி ஒப்புக்கொண்ட முடிவு மாகும். இது வெறும் வார்த்தைகளல்ல.  இதில் உண்மையில்லாமலுமில்லை.

ஏனெனில், வாலிபர்களினுள்ளம் களங்க மற்றது.  உலகப்பற்று, சுயநலம், பேராசை, மனோ ராஜியமாகிய களிம்பும், துருப்பும் பிடியாமல் மூளையுடன் சுத்தமாயிருப்பதாகும்.  “இளங்கன்று பயமறியா”தென்ற பழமொழிக்கொப்ப அவர் களுக்கெந்தக் காரியத்திலும் பயமென்கிற தடை யானது கிடையாது.  அன்றியும் வாலிபர்களின் உள்ளமானது பக்கத்தில் தோன்று வதைப் பயமின்றி சடுதியில் பற்றுவதாகும், பற்றி விட்டாலோ தங்குதடைகளின்றி படரக்கூடிய வேகமுடையதாகும்.  இந்தக் காரணங்களால் வாலி பர்களே புதிய புதிய காரியங்களால் பயனேற்பட உதவக்கூடியவர்களென்று சொல்லப்பட்டு வருகின்றது.

பெரியவர்களிடம் காண முடியாது

எந்தக் காரியத்தைச் சாதிக்க வேண்டுமானாலும், சுய நலமற்ற தன்மையும், பயமற்ற தன்மையும், எதையும் தியாகம் செய்யும் உள்ளமும் வேண்டியதவசியமாகும்.  இந்தக் குணங்கள் வாலிபர்களிடமே தான் பெரிதும் காண முடியுமேயொழிய உலக வாழ்க்கையிலீடுபட்ட பெரியவர்களென்பவர்களிடத்தில் காணமுடியாது.

“நான் செத்தால் என் பெண்டு, பிள்ளைகளென்ன வாவது?” எண்கிற யெண்ணமாகிய ஒரு பெரும் விஷமே நமது மக்களின் பொதுநல உணர்ச்சியைக் கொன்று கொண்டு வருகின்றது.  பொதுநல எண்ணம் ஏற்படாமல் செய்து வருகின்றது.  நமது பெண்களும், அவர்களது ஆடவர்களை எவ்வித பொதுநல வேலைக்கும் லாயக்கில்லாமல் செய்து விடுகின்றார்கள்.  எப்படியென்றால் ‘அய்யோ!  என்கணவா!! என்தெய்வமே!!! நீ செத்துப் போனால் நான் எப்படிப் பிழைப்பேன்?  இந்தப் பிள்ளை, குட்டிகளை எப்படிக் காப் பாற்றுவேன்?’ என்று சதா ஜபித்துவரும் மந்திரமே, ஆண் சமுகத்தைக் கோழைகளாக்கி, சுயநலப்பித்தர்களாக்கி, நாணயமும், யோக்கியப் பொறுப்பற்ற தன்மையையுடையவர்களாக ஆக்கி வருகின்றது.

பொது நலத்திற்கு ஏற்றவர்கள்

நமது பெண்களுக்குச் சுதந்திரமோ, அறிவோ மற்றவர்களுதவியின்றி தானாக வாழக்கூடிய சக்தியோ மற்றும் ஆண்கள் “இந்தப் பெண்ஜாதி போனால், வேறு, ஒருத்தியைக் கொண்டு வாழ்க்கையை நடத்தலாம்.  இதற்காக அழவேண்டுமா?” என்று யெண்ணுகின்ற யெண்ணம்போல் “இந்தப் புருஷன்போனால், வேறொரு புருஷனைக் கொண்டு வாழ்க்கை நடத்தலாம்” மென்கின்ற தன்நம்பிக்கையுமிருந்தால், கண்டிப்பாக இன்று நமது நாட்டிலுள்ள ஆண் மக்களெல்லாம் உண்மையான ஆண் மகனாக யிருக்கமுடியும், சுதந்திரபுருஷனாக, மானமுள்ளவனாக இருக்க முடியும்.  ஆகவே, இந்தப் படியில்லாமல் போனதற்குக் காரணம், ஆண்மக்கள் தங்களுக்கு ஏற்படுத்திக் கொண்ட வாழ்க்கைத் துணையானது பயங்காளியாகவும், தன் நம்பிக்கையற்றதாகவு மிருக்கும்படியான நிலையில் உள்ள பெண்களை வாழ்க்கைத் துணையாகக் கொண்டதால்தானே தவிர, வேறில்லை.

ஆனால், வாலிபர்களெப்படிப் பொது நலத்திற் கேற்றவர்களென்கின்ற மகிழ்ச்சியும், பெருமையும் மக்கள் அடைவதற்கு லாயக்குடையவர்களாயிருக்கின்றார்களோ.  அது போலவே அதற்கு நேரிடையாக அவர்கள் விஷயத்தில் நாம் பயப்படும்படி, அவர்கள் அந்த வாலிபப்பருவ பயனை முன் பின் யோசியாமலெதிலும் செலுத்தி பொது நலத்திற்குக் கெடுதியை விளைவித்து விடக்கூடிய அபாயகரமான வஸ்துவாக ஆகிவிடுவார்களென்றும் சில சமயங்களில் கருதவேண்டியதாகவும் இருக்கின்றது.ஏனெனில், அவர்களது பரிசுத்தமான உள்ளம் எதில் பற்றுகொண்டாலும் துணிந்து, நன்மை தீமை யின்னதென்று கூட யோசிக்காமல் திடீரென்று பிரவே சித்து விடக்கூடிய சுபாவமுடையதாகி விடுகின்றது.

வாலிபர்களெப்படிப் பொது நலத்திற் கேற்றவர்களென்கின்ற மகிழ்ச்சியும், பெருமையும் மக்கள் அடைவதற்கு லாயக்குடையவர்களாயிருக்கின்றார்களோ. அது போலவே அதற்கு நேரிடையாக அவர்கள் விஷயத்தில் நாம் பயப்படும்படி, அவர்கள் அந்த வாலிபப்பருவ பயனை முன் பின் யோசியாமலெதிலும் செலுத்தி பொது நலத்திற்குக் கெடுதியை விளைவித்து விடக்கூடிய அபாயகரமான வஸ்துவாக ஆகிவிடுவார்களென்றும் சில சமயங்களில் கருதவேண்டியதாகவும் இருக்கின்றது.ஏனெனில், அவர்களது பரிசுத்தமான உள்ளம் எதில் பற்றுகொண்டாலும் துணிந்து, நன்மை தீமை யின்னதென்று கூட யோசிக்காமல் திடீரென்று பிரவே சித்து விடக்கூடிய சுபாவமுடையதாகி விடுகின்றது.

எழுச்சியும்  – வேகமும்

வாலிப வயதிலுள்ள எழுச்சியும், வேகமும், பயமற்ற தன்மையும் பொறுப்பெதுவென்றுணர்வதற்குப் போதிய அவகாசமும், சவுகரியமும், அனுபவ முமில்லாத காலபலனும் அவர்களை யேதாவது கண்மூடித் தனமான காரியங்களிலிழுத்துவிட்டு, அருங்குணங்களை வீணாக்குவதோடு, பின்னாலும் அவர்களது வாழ்வில் கஷ்டப்படவும் செய்து விடுகின்றன.  ஆதலாலேயே சிற்சில சமயங்களில் நான் வாலிபர்கள் “ஜாக்கிரதையாகவே” யிருக்க வேண்டுமென்று அவர்களுக்குச் சொல்வதுடன், அவர் களது வேகம் பொருந்திய ஊக்கம் சிற்சில சமயங்களில் பாயகரமாய் நாட்டுக்குப் பயனற்றதாய் சில சமயங்களில் கெடுதியையும், ஆபத்தையுமுண்டாக்கக் கூடியதாகயேற்பட்டு விடக்கூடுமென்று சொல்லுவது முண்டு.  அவர்களது எழுச்சியின் வேகத்தினால் செய்யப்பட்டக் காரியங்கள் அவர்களுக்கு பலன் கொடுக்காததாலோ அல்லது அக்கம் பக்கத்திய சார்பால் வேறுவித எண்ணங்கள் தோன்றிவிடுவதாலோ, அதாவது தாங்கள் சகவாசம் செய்தவர்களுடைய சகவாச தோஷத்தால் மற்றும் சுயநலமோ, பெருமையோ யேற்படுத்திக் கொள்ள வேண்டுமென்கின்ற ஆசை யேற்பட்டு விடுகின்ற காரணத்தால், அவர்களது முன்னைய வேகத்தின் பலனானது கெடுதியை (Reaction) யும் சில சமயங்களில் உண்டாக்கி விடு கின்றது.  அதாவது, வேகமாய்ப் போகும் எழுச்சியென்னும் வண்டியானது அனுபோக மின்மை, அறியாமை சுயநலமென்னும் சுவரில் முட்டினால், வேகத்தின் மிகுதியினால் சுவரும் கெட்டு, வண்டியும் பழுதாகி, அக்கம்பக்கத்தவர்களுக்குத் தொல்லையையும் விளைவித்து விடுகின்றது.

எச்சரிக்கை

இத்தியாதி காரணங்களால் வாலிபர்கள் மிக்க ஜாக்கிரதையாக, பொறுமையாக யோசித்தே ஒவ்வொரு காரியத்திலும் தங்களருங்குணங்களைப் பயன்படுத்த வேண்டும்.  வாலிபர் உள்ளம்.  பெட் ரோலுக்குச் சமமானது.  உலக இயக்கத்தோற்றங்கள் நெருப்புக்குச் சமமானது.  வகையற்றமுறையில் பக்கத்தில் வந்தால் நெருப்புப் பிடித்து எண்ணெயை வீணாக்கி மற்றவர்களுக்குத் தொல்லையை விளைவித்து விடும்.  ஆகவே “வாலிபர் களே! ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!!! ”யென்று நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய வனாகயிருக்கின்றேன்.

வாலிப பருவத்தின் கோலத்தையும், அதனது பலனையும் நான் சிறிது அறிந்தவனேயாவேன்.  வெகுகாலம் நான் வாலிபனாக விருந்தவன்.  வாலிபனாகவேயிருந்து சாகவேண்டுமென்ற ஆசையையுடையவன்.  அப்பருவத்தின் சக்தியையும் மேன்மையையு மனுபவித்தவன்.  அந்த அனுபவம் தப்பான வழியிலுமிருக்கலாம்.  சரியான வழியிலுமிருக்கலாம்.  ஆனால், நான் வாலிபப் பருவத்தை அனாவசியமாய் விட்டுவிடாமல், அதைப்பல வழிகளில் கசக்கிப் பிழிந்தவன், இந்த உண்மை மற்றவர்களைக்காட்டிலும் நீங்களும், உங்கள் பெரியோர்களும் நன்றாயுணர்ந்தவர்களாவீர்கள்.  ஏனெனில், நான் உங்களிலொருவனாகவும், உங்கள் குடும்பஸ்தர்களிலொருவனாகவும் இருந்து வந்தவன், ஆகவே, இங்கு இவ்வளவு தைரியமாய் எனது சகோதரர்களுக்கும், குழந்தைகளுக்கும் சொல்லுவதுபோல் இவ்விஷயத்தில் உங்களுக்கு இவ்வளவு எச்சரிக்கை செய்கின்றேன்.

சுயநலப்போக்கு

மேலும் சகோதரர்களே!  நமது நாடு இன்று இருக்கும் நிலைமையிலிருந்து சிறிது மாற்றமடையவேண்டுமானாலும், மதசம்பந்த மாகவும், அரசியல் சம்பந்தமாகவும் இந்நாட்டில் சுயநலக்காரரும், சோம்பேறிகளும், மற்றவர்கள் உழைப்பில் வாழ முடிவு செய்து கொண்டு தங்கள் வாழ்க்கையை நடத்தி வருபவர்களும் இரண்டுவித உணர்ச்சியால் மக்களைக் கட்டுப்படுத்தி மூடர்களாக்கி, அடிமைகளாக்கி வைத்துப் பயன் பெற்று வருகின்றார்கள்.  அவை எவை எனில், மத இயல் அரசியல் என்பவைகளாகும். மதத்தின் பெயரால் மோட்ச லட்சியமும் அரசியலின் பெயரால் சுயராஜ்ஜிய லட்சியமுமே மனிதனின் வாழ் நாளில் முக்கியமானது என்று மக்களுக்குள் புகுத்தப்பட்டுவிட்டது.  இரண்டு விஷயத்திலும் பிரவேசித்து இருக்கும் மக்களில் 100க்கு 90 பேர் இரண்டுக்கும் அர்த்தம் தெரியாதவர்களாகவே அதில் உழன்றுகொண்டு இருக்கின்றார்கள்.  பொருள் தெரிந்த சில பெயர்கள் தங்கள் சுயநலத்தை உத்தேசித்து அவற்றை வியாபாரமாய் நடத்தி வருகின்றார்கள்.

மக்களின் சுபாவம் பொருள் தெரிந்தகாரியத்திற்குப் பயப்படு வதைவிட பொருள் தெரியாத காரியத்திற்குத் தான் அதிகம் பயப்படும்.  ஏனெனில், பொருள் தெரிந்த காரியங்களுக்குப் பரிகாரம் செய்து கொள்ளக் கூடுமானதினால் அதற்குப் பயப்பட மாட்டான்.  பரிகாரம் செய்துகொள்ள முடியாததற்கே அதிகம் பயப்படுவான்.

இந்த மனப்பான்மையிலேயே தான் மனிதன் வாழ்க்கையை நடத்துகின்றான்.  இதனாலேயேதான் பாமர மக்கள் சிறிதும் தலைதூக்க முடி யாமல் மிருகப்பிராயத்தில் இருந்து வருகின்றார்கள்.  ‘பகுத்தறிவைப் பயன் படுத்துவதே பாவம்’ என்று சொல் லப்பட்ட ஒரு ஆயுதமே மக்களை அழுத்தி வைத்துக் கொண்டிருக் கின்றது.  அர்த்தமற்ற உண்மையற்ற சொற்களுக்கு நடுங்கச் செய்கிறது.

மூடத்தனம்

உதாரணமாகப் பாருங்கள்.  மனிதனுடைய மூடத்தனத்துக்கு ஒரு உதாரணம் காட்டுகின்றேன். மனிதன் திருடுவான், நம்பிக்கைத் துரோகம் செய்வான், மோசம் செய்வான், கொலையும் செய்வான்.  ஆனால் ‘‘ஒரு பறையன்’’ கொண்டுவந்த தண்ணீரைத் தொட்டுக்குடி என்றால் நடுங்குவான்.

பாவம் என்று ஒன்று இருந்தால் மோசம் செய்வதைவிட, நம்பிக்கைத் துரோகம் செய்வதைவிட, பதறப் பதற கொலைசெய்வதைவிட, வேறு ஒன்றும் அதிகபாவம் இருக்கமுடியாது.  ஆனால் இவற்றையெல்லாம் பஞ்சாமிர்தம் சாப்பிடுவதுபோல் செய்துவிட்டு, பறையனை திண்ணையில் உட்காரவைப்பது என்றால் நடுங்குகின்றான் என்றால் மனித சமூகத்தை எவ்வளவு சுயநலமாக இருக்கும்படியாகவும், முட்டாள் தனமாக இருக்கும்படியாகவும் வாழ்க்கை முறைகள், மத முறைகள், மோட்ச நரக முறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றது என்று பாருங்கள்.  இதுபோலவே அரசியலிலும் அரசாங்கத்தாருக்கு அனுகூலமாக இருக்கின்றவர்கள் யார்?  யாருடைய துரோகத்தால், சுயநலத்தால் இந்நாட்டில் அக்கிரமமான அரசாங்கம் இருந்து வருகின்றது?  என்பவைகளை முக்கிய காரணமாய் உணர்ந்து அந்தத் துறையில் ஒரு சிறுவேலையும் செய்யாமல் பாமர மக்களிடம் சுயராஜ்ய வியாபாரம் நடத்துவது என்பதை மக்கள் உணர முடியாமல் இருப்பதோடு, உணர்ந்து சொல்லுகிறவர்களையும் மக்கள் வெறுக்கும்படி செய்யப்பட்டிருக்கின்றதென்றால் அரசியலின் பேரால் மக்கள் எவ்வளவு முட்டாள்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கவனித்துப் பாருங்கள்.

கிராமங்களின் பழைய நிலைமைகளை மறுபடியும் புதுப்பிப்பது என்கின்ற அர்த்தத்தில் வேலை செய்வதானால் இனி இந்த தேசத்தில் கிராமம் என்பதே இல்லாமல் போய்விடும்.  அந்தப் படி இல்லாமற்போவதே மேல்.  இருக்கும்படி செய்யவேண்டுமானால் கிராமத்திற்குள் புதிய தன்மைகளைப் புகுத்தவேண்டும்.  நமது கிராமங்களைப் பற்றி மேயோ சொல்லி இருக்கும் முறைகள்தான் நமது பழைய கிராம நிலையாகும்.  நமது அரசியல் துறையில் பாடுபடும் பெரியார் ஒருவர் சமீபத்தில் ஒரு கிராமத்தைப்பார்த்து ‘இந்த கிராமத்தைப் பார்த்ததும் எனக்குப் பழைய கால கிராம காட்சி தென்படுகின்றது.  நானும் ஒரு கிராமவாசியானதால் பழைய கிராமக் காட்சியைக் கண்டு மகிழ்ச்சி அடைகின்றேன்’ என்பதாகப் பேசினாராம்.

நகர மயமாகட்டும்

பழைய மாதிரி கிராமம் இருப்பதானால் கிராமங்கள் ஒழிந்தே போய்விடும்.  யாரும் கிராமத்தில் இல்லாமல் எல்லோரும் பட்டணங்களுக்கே குடியோடிப் போவார்கள்.

கிராமங்களைப் பட்டணமாக்க வேண்டும்.  பட்டணவாசிகளின் வாழ்வு முழுவதும் கிராமவாசி களின் உழைப்பேயானதால் கிராமவாசிகளேதான் உலகபோக போக்கியங்களை அடைய உரியவர்களாவார்கள்.

கிராம வாழ்க்கை ஒருவிதம், நகர வாழ்க்கை ஒருவிதம் என்பது பித்தலாட்டக் காரியமே யாகும்.  கிராமவாசிகளைப் பார்த்து கண்ணீர் வடிக்கும் பட்டணவாசியான முதலாளியும், வக்கீலும், உத்தியோகஸ்தனும், பார்ப்பனனும் பித்தலாட்டக்காரர்க ளேயாவார்கள்.  அவர்களது வஞ்சகமும், கெட்ட எண்ணமும்தான் கிராம வாசிகளான பெரும்பான்மை மக்களை கால் நடைகளாக வைத்திருக்கின்றது.  ஆகவே, ஒவ்வொரு விஷயத்திலும் கவலைகொண்டு பகுத் தறிவைப் பயன்படுத்தி தக்க முறையில் சேவை செய்யவேண்டுமென்று விரும்புகிறேன்.

(28.06.1931-ஆம் தேதி யுவர் சங்க ஆண்டு விழாவில் ஆற்றிய சொற்பொழிவு)

குடிஅரசு சொற்பொழிவு – 05-07-1931

- விடுதலை நாளேடு, 8.6.25

திங்கள், 21 ஜூலை, 2025

எந்தப் பார்ப்பானாவது உங்களைப் பல்லக்கில் வைத்து சுமக்கிறானா?

 


தந்தை பெரியார்

என்னையோ அல்லது திராவிடர் கழகத்தாரையோ இன்று ஆரியம் தூற்றுகிறதென்றால் அதற்குக் காரணம் நாங்கள் கடவுளைப் பழிக்கிறோம் என்பதற்காகவே அல்ல. கடவுளுக்கேன் கோயில்கள், பூஜைகள், தேவடியாள்கள் என்று கேட்கிறோம் என்பதற்காகவோ அல்லது “நாங்கள் ஏன் சூத்திரர்கள் ? எங்கள் தாய்மார்கள் ஏன் சூத்திரச்சிகள்? எங்கள் தோழர்கள் ஏன் சண்டாளர்கள்? நீங்கள் மட்டுமேன் பிராமணர்கள்?” என்று வர்ணாஸ்ரம தர்மத்தை எதிர்த்துக் கேட்பதால்தான். இதை அறியாமல் எங்களை நாஸ்திகர்கள் என்று நீங்களும் சேர்ந்து தூற்றுவீர்களானால் நான் என்ன கூற முடியும்? அந்த அளவுக்கு நமக்குள்ளாகவே அவன் உண்மைச் சூத்திரர்களை உண்டாக்கி நம்மை மானங்கெட்ட சமுதாயமாக்கி விட்டான் பார்ப்பான் என்றுதானே கூறமுடியும்?

மானமிருந்தால்

என்னதான் மதத்திலோ கடவுளிடத்திலோ பக்தியிருந்தாலும் கூட, ஒருவனுக்கு மானமிருந்தால், தன் மகளை, தன் சகோதரியைக் கடவுளுக்கு என்று பொட்டுக் கட்டி, ஊருக்கு உபகாரத்திற்கு விடுவானா? எந்தப் பார்ப்பானாவது தன் மகளைக் கடவுளுக்குப் பொட்டுக் கட்டிக் கொள்ள அனுமதித்திருக்கின்றானா? எந்தப்பார்ப்பானாவது தன் மகளைத் “தேவடியாளாக்கிக்” கடவுள் முன்னிலையில் சதிராட விட்டிருக்கிறானா? எந்தப் பார்ப்பானாவது உங்களைப் பல்லக்கில் வைத்து அவன் சுமக்கிறானா? எந்தப் பார்ப்பானாவது உங்களைப் புரோகிதத்துக்கு வைத்து சடங்கு செய்து பார்த்ததுண்டா? மானமிருந்தால், அவன் உங்களை இவ்வளவு இழிவு படுத்தியிருக்கும்போதும், இழிவுபடுத்தி வரும்போதும், இன்னும் உங்கள் அறிவை அவனுக்கு அடிமைப் படுத்திவிட்டு அவன் உங்கள்மீது சவாரி செய்யப் பார்த்துக் கொண்டிருப்பீர்களா? இதைத்தானே நாங்கள் கேட்கிறோம்? இஷ்டப்பட்டால் நீங்கள் கோயிலுக்குப் போங்கள்.. வேண்டாமென்று கூறவில்லை. பக்தி பரவசமாகி, ஆனந்தக் கூத்தாடுங்கள். அதையும் வேண்டாமென்று கூறவில்லை. ஆனால், அந்த அழுக்குப் பிடித்த பார்ப்பானுக்கு ஏன் தலை வணங்குகிறீர்கள்? அவன் மொழிக்கு ஏன் அடிமையாகிறீர்கள்? என்றுதானே உங்களைக் கேட்கிறோம். இதுவா நாஸ்திகம்? இதுவா துவேஷம்?

அவர்கள் ஏன் உயர்வு?

நீங்களே சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் ஏன் அவர்கள் பாடுபடாமல் வாழக் கொடுத்து கும்பிட்டு, அவர்களின் “தாசிகளாக, தாசி மக்களாக” வாழவேண்டும்? அவர்கள் ஏன் உங்கள் காசை ஏமாற்றிப் பறித்துக்கொண்டும், பிராமணர்களாக _ உங்கள் கடவுளுக்கு அடுத்தபடியாக _ இருக்கவேண்டும் என்று தானே நாங்கள் கேட்கிறோம்? இந்த ஆரியக் கொடுமை ஏமாற்றம் என்றோ அழிந்திருக்காதா? ஆரியத்தை வளர்க்க உதவிய இக்கோயில்களும், இக்குழவிக்கல் சாமிகளும் சாஸ்திரங்களும் மத சம்பிரதாயங்களும் என்றோ இடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுத் தரைமட்டமாகி இருக்காதா? நீங்கள் ஏன் ஈனமாய் மானமற்று வாழவேண்டும் என்று கேட்டால் அதற்கா என்மீது நீங்கள் பாய்வது? நீங்கள் ஏன் சூத்திரர்கள்? அவர்கள் ஏன் பிராமணர்கள் என்று கேட்டால் அதற்கா நீங்கள் என்மீது காய்வது?

மூச்சற்ற கல்

அந்தப் பார்ப்பனர் ஒரு பெரிய சமுதாயத்தையே மதம் என்ற பேரால் கடவுள் என்ற பேரால் மானங்கெட்ட மடையர்களாக்கி. அவர்களில் தப்பித் தவறி ஓரிருவர் அறிவு கொண்டு சிந்திப்பார்களானால், அவர்கள் மீதும் அம்மடையர்களையே ஏவிவிட்டுக் கெடுத்து வருவானாகில், அதை நீங்களும் ஆதரித்து வருவதா? சற்றேனும் மான உணர்ச்சி இருந்தால், சிறிதாவது பகுத்தறிவு கொண்டு, பொறுமையோடு சிந்தித்துப் பாருங்களேன். உங்கள் மகான்களும் உங்கள் ரிஷிகளும் உங்களின் இந்த மானங்கெட்ட தன்மையைக் கண்டித்திருக்கிறார்களா? நீங்கள் அன்றாடம் தொழும் தெய்வங்களாவது இதைப் பற்றிக் கவலைப்பட்டதுண்டா? உங்கள் அரிசி பருப்பையெல்லாம் உண்டு வாழும் அத்தனை சாமிகளும் இன்று வரைக்கும் அந்த நாற்றம் பிடித்த பார்ப்பானைத்தானே தமக்குப் பூசாரியாக வைத்துக் கொண்டிருக்கின்றன? அய்யோ, பாவம்! வெறுங் கூழாங்கல்லைக் கடவுளென்று நம்பி நீங்கள் போனால் அதற்கு அந்த உயிரற்ற, பேச்சு மூச்சற்ற கல்லென்ன செய்தல் கூடும்?

ஆரியத்தை எதிர்த்த கபிலரை உங்களுக்குத் தெரியுமா? பிறப்பொக்கும் எல்லா உயிர்களுக்கும் என்று கூறி ஆரியத்தை எதிர்த்த திருவள்ளுவரை உங்களில் எத்தனைபேர் அறிவீர்கள்? அவர்கள் இயற்றிய அகவலை குறளைத்தான் உங்களில் எத்தனை பேர் படித்திருக்கிறீர்கள்? ஜாதியிரண்டொழிய வேறில்லை என்று நாலுஜாதி முறையை எதிர்த்த அவ்வையை உங்களுக்குத் தெரியுமா? இதற்கு மாறுபட்டு, ஆரியத்தை ஆதரித்த, அன்னக் காவடிப் பார்ப்பானைப் பிராமணன் என்று உயர்த்தி மதித்த, ஒரு “ராமனை”யோ ஒரு “கிருஷ்ணனையோ” உங்கள் வீட்டு மாட்டுக்காரப் பையனுக்குக்கூடத் தெரியுமே! 

ஆரியப் புல்லுருவிக் கூட்டம்

அன்றைய ரிஷிகள், மகாத்மாக்கள்தான் தொலைந்து போகட்டுமென்றால், இன்றைய மகாத்மாக்கள், ரிஷிகள் மட்டுமென்ன, அவர்களை மிஞ்சிவிட்டனர்?
இந்த வர்ணாஸ்ரம தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று இவர்கள் ஒரு வார்த்தை கூறியிருப்பார்களா இந்தக் காந்தியார், இந்த இராஜகோபாலாச்சாரியார்? அவர்கள்தான் போகட்டுமென்றால், இந்த முனிசாமிப் பிள்ளையாவது, சிவஷண்முகம் பிள்ளையாவது கேட்டிருப்பார்களா, தான் ஏன் பஞ்சமன் என்று? இவர்கள் வர்ணாஸ்ரம தர்மத்தை எதிர்த்து ஒரே ஒரு வார்த்தை கூறியிருந்தால்கூட, இவர்கள் இன்றிருக்கும் நிலைக்கு வந்திருக்க முடியாதே! இன்றுதான் என்ன? ஒருவார்த்தை எதிர்ப்பாகக் கூறி விட்டால்கூட, அன்றே பழிக்க ஆரம்பித்த விடுமே அவர்களை இந்த ஆரியப் புல்லுருவிக் கூட்டம்.! எதிர்த்தவர்கள் என்ன ஆனார்கள்? ஆதரித்தவர்கள் என்ன ஆனார்கள்? என்று கூறுகிறேன், கேளுங்கள்.

உங்களுக்குத் தெரியுமா?

ஆரியத்தை எதிர்த்த கபிலரை உங்களுக்குத் தெரியுமா? பிறப்பொக்கும் எல்லா உயிர்களுக்கும் என்று கூறி ஆரியத்தை எதிர்த்த திருவள்ளுவரை உங்களில் எத்தனைபேர் அறிவீர்கள்? அவர்கள் இயற்றிய அகவலை குறளைத்தான் உங்களில் எத்தனை பேர் படித்திருக்கிறீர்கள்? ஜாதியிரண்டொழிய வேறில்லை என்று நாலுஜாதி முறையை எதிர்த்த அவ்வையை உங்களுக்குத் தெரியுமா? இதற்கு மாறுபட்டு, ஆரியத்தை ஆதரித்த, அன்னக் காவடிப் பார்ப்பானைப் பிராமணன் என்று உயர்த்தி மதித்த, ஒரு “ராமனை”யோ ஒரு “கிருஷ்ணனையோ” உங்கள் வீட்டு மாட்டுக்காரப் பையனுக்குக்கூடத் தெரியுமே! திருடிய கிருஷ்ணனுடைய கீதை, ஒழுக்க ஈனமாக நடந்த கிருஷ்ணனுடைய கீதை, உங்களை “நான்தான் சூத்திரனாகப் படைத்தேன், நாலு வர்ணங்கள் உண்டு’’ என்ற கீதை, உங்களுக்குப் பிரார்த்தனைப் புத்தகம்! அவன் உங்கள் கலியுக தெய்வம்! ஆனால், அருள் கபிலனும் தெய்வப் புலவனாம் திருவள்ளுவரும் கலைப்பிறவி அவ்வையும் உங்களுக்குப் பறச்சி வயிற்றில் பிறந்தவர்கள் என்பதோடு அவர்களுடைய பாடல் உங்களுக்குத் தெரியாது.

மனிதத் தன்மை பெற

அதாவது திருவள்ளுவர், கபிலர், அவ்வை ஆகியவர்கள் ஆதி என்ற சூத்திரச்சிக்கும் பகவன் என்ற பார்ப்பானுக்கும் பிறந்தவர்களாம். நீங்கள் போற்றும் தொல்காப்பியரும் ஆரியனுக்குப் பிறந்தவராம். அப்படிக் கெட்டிக்காரத்தனமாக எல்லா உயர்வுகளையும் தன் இனத்தவரே அடையவேண்டும் என்றும் அவன் பாடுபட்டு வரும் போது, அதைக் கண்டும் நீங்கள் வாளாவிருப்பீர்கள் ஆனால், உங்களை மானமுள்ள மக்களாக எப்படி மற்ற மக்கள் கருத முடியும்? மானமிருந்தால் தோழர்களே! நீங்கள் மனிதத்தன்மை பெற எங்களோடு ஒத்துழையுங்கள். இன்றேல் சற்று ஒதுங்கியாவது நில்லுங்கள். ஆரியத்திற்குக் கையாளாக விபீஷணர்களாகவோ, அநுமார்களாகவோ ஆகாதீர்கள்!
நீங்கள் ஏன் சூத்திரர்கள்? என்பதை சிந்தித்துப் பாருங்கள். சூத்திரர் என்றொரு வர்க்கம் இருப்பானேன் _ அதுவும் இந்த ஞானபூமியில்? இந்த புண்ணிய பூமியில் மட்டும் இந்த இழிவர்க்கம் இருப்பானேன்? வேறெந்த நாட்டிலாவது சூத்திரர்கள், பிராமணர்கள் உண்டா? நாகரிகமில்லாத முரட்டு மக்களான நீக்கிரோக்களில் கூட பிராமணன் – சூத்திரன் இல்லையே? இருளடைந்த பனிக்கட்டியினூடே பச்சையாக மக்களைத் தின்று வாழும் எஸ்கிமோக்களில்கூட இல்லையே இந்த உயர்வு தாழ்வு?

ஏன் இந்த பித்தலாட்டம்?

பாரதமாதா புத்திரன் என்று கூறிக்கொள்ளும் அன்பனே! பாரத மாதவுக்கு ஜே போடும் வீரனே! உன் பாரத மாதாவுக்கு மட்டும் எப்படி நாலு அய்ந்து ஜாதிப் புத்திரர்கள் பிறந்திருக்க முடியும்? அப்படியானால் பாரதமாதா புத்திரர் களுக்கு நாலு தகப்பன்மார்களா? ஒரே ஒரு ஜாதியா? எப்படி இருக்க முடியும்? இதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா? ஏன் இப்படிப் பித்தலாட்டம் செய்து ஒரு தாய்க்கு நாலு ஜாதிப் பிள்ளைகள் என்று மானமற்று எங்களை ஏய்க்கப் பார்க்கிறீர்கள்?
உங்களைச் சூத்திரர்கள் என்ற கூறுவது எது? இந்து மதம்தானே உங்களைச் சூத்திரர்களாக்கி வைத்திருக்கிறது? நீ உன்னை இந்துவென்று கூறிக் கொள்வதால்தானேஅதன் வர்ணாஸ்ரம தர்மத்திற்குக் கட்டுப்பட்டாக வேண்டியிருக்கிறது? இந்து மதக் கடவுளை ஒப்புக் கொள்வதால்தானே நீ சூத்திரனாக்கப்பட்டிருக்கிறாய்? அதைக் கும்பிடப் போவதால் தானே கடவுள் அறைக்கு வெளியில் நின்று குனிந்து தாடையில் அடித்துக் கொள்ளுகிறாய் தம்பி!

அக்கிரமம்

பித்தலாட்ட முட்டாள் தனமான கதையை நீ யோசித்துப் பார்! உன்னை உற்பத்தி செய்தவர் பிரம்மாவாம்! அந்தப் பிரம்மாவின் முகத்தில் தோன்றியவர்கள் பிராமணர்களாம். அவரின் தோளிலிருந்து வெளிப்பட்டவர்கள் சத்திரியர்களாம். அவரின் இடுப்பிலிருந்து வெளிப்பட்டவர்கள்தான் வைசியர்களாம். அவரின் காலிலிருந்து வெளிப்பட்டதால் தான் (நீ) சூத்திரனாம். பிரம்மாவிற்குப் பெண்டாட்டி ஒருத்தி இருக்கும்போது, புருஷனுக்கு இந்த வேலை எதற்கு? அது முடியுமா? பிரம்மா ஆணா பெண்ணா?அதுதான் போகட்டுமென்றாலும், பிறப்புவிக்கும் வசதி பல இடங்களில் ஏன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்? கீதையில் கிருஷ்ணன், தான் 4 ஜாதிகளைப் பிறப்பித்ததாகச் சொல்லுகிறானாம். 4 பேரையும் பிரம்மா பிறப்பித்து இருந்தால் பிராமணனுக்கு மாத்திரம் பிரம்ம புத்திரன், பிரம்ம குலத்தன் என்கின்ற பெயர் ஏன்? கீழ் பாகத்தில் பிறந்தால் மட்ட ஜாதியா? பலா மரம் அடியிலும் காய்க்கிறது. மேலும் காய்க்கிறது. தன்மையில் ருசியில் பேதமுண்டா? முட்டாள் தனத்துக்கும் அக்கிரமத்திற்கும் ஓர் எல்லை வேண்டாமா? பாடுபட்டு உழைத்துக் கோவில் கட்டிப் படியளக்கும் நம்மையா இந்தத் தெய்வங்கள் காலிலிருந்து பிறந்த மக்களாக ஆக்கவேண்டும்? பாடு உழைப்பு என்பதையே கண்டறியாத ஒரு காசுகூட தெய்வத்திற்கு என்று கொடுத்தறியாத, சாமியையும் ஏமாற்றி சாமிக்கு ஆக நாம் கொடுப்பதில் வயிறு வளர்க்கும் அவனையா தன் முகத்தில் இருந்து பிறந்த பிராமணனாக ஆக்கவேண்டும்? இதைச் செய்யும் அல்லது அனுமதிக்கும் ஒரு கடவுளும் நமக்குக் கடவுளாக இருக்கக்கூடுமா? நாம் தொட்டால் தன் உயிர் போய்விடும் என்று கூறும் கடவுளும் நமக்குக் கடவுளா?

சூத்திரர்களாக்கியது யார்?

என் வண்ணாரத் தோழனும் என் சக்கிலித் தோழனும்கூட இன்று தந்தி கொடுக்கலாம்; தொலை பேசியில் பேசலாம். அவர்களும்கூட ஆகாயக் கப்பலேறி உங்கள் தலை மீதும் உங்கள் சாமி தலை மீதும் உங்க சாமி கோயில் கோபுரங்களுக்கும் மேலே கூட பறக்கலாமே, 1 மணிக்கு ஆயிரம் மைல் வேகத்தில், இவற்றை எல்லாம் அநுபவிக்க அவர்களுக்கு உரிமை அளிக்கப்பட்டிருக்கும் போது இந்த அசையாத குழவிக்கல் கடவுளை மட்டும் இந்த அழுக்குப் படிந்த பார்ப்பான் மட்டுமேவா தொடவேண்டும்? சூரத்திற்கும் வீரத்திற்கும், ஆற்றலுக்கும் அறிவுக்கும், ஆண்மைக்கும், அன்புக்கும், அழகுக்கும், அரசுக்கும் ஆகிய அத்தனைச் சிறப்புகளுக்கும் காரண பூதர் களாயிருந்த இருக்கிற மக்களின் சந்ததியார் களாகிய நாம் சூத்திரர்களாக்கப்பட்டது எந்தக் காலத்தில்? நம்மைச் சூத்திரர்களாக்கியது யார்? ஆரியரா? கடவுளா?

பிழைக்க வந்த கூட்டம்

ஆரியர் இந்நாட்டில் குடியேறிய பின்னர் தானே அவர்கள் நம்மை வேசி மக்கள் என்று ஏசியிருக்கவேண்டும்? அதற்கு பின்புதானே நாம் சூத்திரர்கள் ஆனோம்? அதற்கு முன்பே நாம் சூத்திரர்களானால் நம்மை நம் கடவுளேவா வேசி மக்கள் என்று அழைத்திருக்கும்? அப்படி இருந்தாலும் அதை நாம் கடவுளென்றுதான் ஒப்புக்கொண்டிருப்போமா? ஆகவே, 3000 ஆண்டுகளுக்கு முன் எங்கேயோ மத்திய ஆசியாவிலிருந்து ஆடுமாடுகளை ஓட்டிக் கொண்டு புல் தரைதேடி பிச்சை எடுத்துப் பிழைக்க வந்த ஆரிய மலைவாசிக் கூட்டம்
தான், அவர்களின் யாகத்தையும் சோம சுராபானத் தையும் வெறுத்தமைக்காக நம் முன்னோர்களை வேசி மக்களென்று – சூத்திரர்களென்று பழித்தது.

உனக்கு ஏன் கோபம்?

அதை இந்தப் பகுத்தறிவு விஞ்ஞான காலத்திலும் மானமின்றி ஒப்புகொண்டு அவர்களுக்குத் தாசானுதாசர்களாய் இருந்து வருவதால் தான் இன்னும் அவர்கள் நம்மை ஏய்த்து வருகிறார்கள்? நீங்களும் ஏன் என்று கேளாது ஏமாந்த சோணகிரிகளாய் இருந்து வருகிறீர்கள். இதுவரை யார் சிந்தித்தார்கள், இவ்விழிவு பற்றி? ஏதோ நான் பலரைச் சேர்த்துக்கொண்டு இவ்விழிவு நீக்க வேலையையே முக்கியமாகக் கொண்டு பணியாற்றி வருவதால், சிலர் இவ்விழிவை உணர்ந்து பணியாற்ற வந்திருக்கிறீர்கள். இதைக் கண்ட ஆரியக் கூட்டம் தன்செல்வாக்கு அழிகிறதே என்று என்னைத் தூற்றுமானால், என் அன்பனே! நீயுமா அத்துடன் சேர்ந்து கூப்பாடு போடுவது? அவனுக்குத்தான் வருவாய் போய் விடுகிறதே, தன் உயர்வு போய்விடுகிறதே என்று வருந்தி வாய்குன்றி ஏதோ பிதற்றுகிறான். அவனுடைய தவற்றை நாங்கள் எடுத்துக் கூறினால், திராவிடனே உனக்கு என்னத்துக்குக் கோபம் பொத்துக்கொண்டு வரவேண்டும்? நீ ஏனப்பா வேதனைப்படுகிறாய்? உனக்கு வேதனையாயிருந்தால் அவனுக்குப் போய் நியாயம் சொல்லி அவனை மாற்றிக்கொள்ளும் படி செய்யேன். அதை விட்டு விட்டு என்

உயிரை ஏனப்பா வாங்குகிறாய்?
ஒதுங்கியிரு

எனக்கு மட்டுமா பாடுபடுகிறேன்? உனக்கும் உன் குடும்பத்துக்கும் உன் சந்ததியாருக்கும் சேர்த்துத் தானப்பா நான் சூத்திரப்பட்டம் போகவேண்டுமென்று பாடுபடுகிறேன். ஜாதிப் பிரிவினை கூறும் இந்து மதத்தையும் அதற்கு ஆதாரமாயுள்ள சாஸ்திரங்களையும் புராணங்களையும் இவற்றை ஒப்புக்கொள்ளும் கடவுளையும் நான் குறைகூறினால் திராவிட காங்கிரஸ் தோழனே! உனக்கேன் தம்பி கோபம் வருகிறது? என்னைச் சூத்திரன் என்று இவை கூறுவது எனக்கு அவமானமாயிருந்து வருவதால் இவற்றிலுள்ள குறையை எடுத்துச் சொல்கிறேன். உனக்கு மானமில்லை யென்றால் உன்னை வேசி மகன் என்று இவை கூறுவதை நீ ஒப்புக்கொள்வதாயிருந்தால், ஒதுங்கியிரேன் ஒரு புறத்தில்!
14.12.1947 அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற வட ஆர்க்காடு மாவட்ட திராவிட நாடு பிரிவினை மாநாட்டில் தந்தை பெரியார்சொற்பொழிவு) – ‘விடுதலை’, 23.12.1947

- விடுதலை’, 06.04.2025