புதன், 1 மார்ச், 2017

பசுப் பாதுகாப்பு அயோக்கியத்தனம்



- தந்தை பெரியார்
இன்று காங்கிரஸ் விரோதிகளுக்கு, சமதர்ம விரோதிகளுக்கு, ஜாதிப் பெருமையால் பிழைக்கும் அயோக்கி யர்களுக்கு; காங்கிரசையும் சமதர்மக் கொள்கையையும் எதிர்த்துக் குறை கூறவோ, தடுத்துப் பேசவோ, ஆதாரம் எதுவும் இல்லாததால் மதக் குறிப்பு களைச் சாக்காக வைத்து அதுவும் யோக்கியமான முறையில் அல்லாமல்; அயோக்கியத் தனமான முறையில் பாமர மக்களின் முட்டாள்தனத்தை மூல தனமாகக் கொண்டு நாட்டில் கொலை பாதக புரட்சிகளைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நம் நாட்டுப் பார்ப்பன அயோக்கியர்கள். மதக்குறிப்பு என்று எதைக் கூறுகிறேன் என்றால் பசுவதையைத் தடுக்க சட்டமியற்ற வேண்டும் என்ற பிரச்சனையைக் காரணமாகக் கொண்டு காலித்தனம் செய்வதைத்தான் கூறுகிறேன்.
ஜீவஇம்சை செய்யக்கூடாதபடி சட்டம் இயற்ற வேண்டும் என்றால் அதற்கு அர்த்தம் உண்டு. இதற்கு ஒரு சட்டம் முன்னமே 50, 60 வருடங்களுக்கு மேலாகவே நமது நாட்டில் இருந்து வருகிறது. இந்தச் சட்டம் கோழிகளை தலைகீழாகத் தொங்கும்படி பிடித்துக் கொண்டு போவது முதல் புண்பட்ட கழுத்துள்ள மாட்டை வண்டியில், ஏரில் பூட்டி ஓட்டுவது வரை குற்றமாகக் கரு தும்படியான சட்டம் இருந்து வருகிறது.
ஜீவஇம்சை ஆகவே ஜீவஇம்சை தடுப்பு என்பது மதச்சார்பற்ற பொதுப் பிரச்னையாக ஆக்கி பாதுகாப்பளிக்கப் பட்டிருக்கிறது. மற்றும் கோயில் முதலிய இடங்களில் பலியின் பேரால் ஆடு, மாடு, எருமை முதலிய ஜீவன்களை வெட்டிப் பலி கொடுக்கப்படுவதையும் அரசாங்கம் உத்தரவு போட்டுத் தடுத்து வருகிறது. ஜீவ இம்சையை முன்னிட்டு மற்றும் சில காரியங்களையும் அரசாங்கம் செய்து வருகிறது. இப்படி இருக்க, முட்டாள் தனமாகவும், அரசாங்கத்திற்குத் தொல்லை கொடுத்து ஆட்சியைக் கவிழ்க்க வேண் டும் என்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டும், மத உணர்ச்சியை ஆதார மாகக் கொண்டு, பசுவதையை சட்டத் தின் மூலம் தடுக்க வேண்டுமென்று நாட்டில் யோக்கியமற்ற சுயநல உணர்ச் சியுள்ள சிலர் அதே தரமுள்ள பத்திரி கைக்காரர்களின் உதவி கொண்டு பெருத்த கலவரம் ஆரம்பித்து விட் டார்கள்.
பசுவைக் கொல்லுபவர்கள் எதற் காகக் கொல்லுகிறார்கள்? யாருடைய மனதையாவது புண்படுத்தவா? அல்லது அநாவசியமாகவா? அல்லது பயனற்ற முட்டாள்தனமான மத உணர்ச்சி காரணமாகவா? அல்லது மற்ற யாருக்காவது கெடுதி செய்ய வேண்டும் என்பதற்காகவா? எதற்காக பசுவைக் கொல்லுகிறார்கள்? உலக மக்கள் தங்கள் உணவுக்காக ஆடு, கோழி, பன்றி, மீன், பறவை, முயல், காட்டு மிருகங்கள் முதலியவற்றை உணவுக்காக கொல்லுவதைப் போல் மாட்டையும் கொன்று தின்கின்றார்கள். இது இன்றல்ல; நேற்றல்ல, 5000 வருடங்களுக்கு முன் னிட்ட காலம் முதல் பார்ப்பனர்கள் அவர்கள் முன்னோர்களாக கூறப்படுகிற ரிஷிகள், தேவர்கள் பல கடவுள்கள் உள்பட ஆகாரமாக, உணவாகப் பயன்படுத்தி வந்த ஒரு காரியத்தை - பசுவைக் கொன்று தின்று வந்ததை இன்றைய தினம் அதுவும் வேறு காரணத்தை முன்னிட்டு தகாத காலத்தில், தகாத முறையில் கிளர்ச்சி ரூபமாய் துவக்கி அதன் பேரால் தீவைத்தல், கொலை செய்தல், நாசவேலைகள் செய்து கோடிக் கணக்கான ரூபாய் பெறுமான பொருள் களை நாசமாக்குதல் முதலிய காரியங்கள் செய்யத் துணிந்து காரியத்தில் ஈடுபட்டால் இதற்கு என்ன பெயரிடுவது?
பசுவைக் காப்பது என்ற பேரால் பார்ப்பன ஜாதியைக் காப்பதே
பசுவதை செய்வதைத் தடுத்து பசுவைக் காப்பாற்றவேண்டும் என்பதற்கும், சமுதாய சமதர்மத்தைத் தடுத்து பார்ப்பன ஜாதி உயர்வைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லுவதற்கும் என்ன வித்தியாசம் சொல்ல முடியும்? பசுவதைத் தடுப்புக்கு எந்த ஆதாரங்களைக் காட்டுகிறார்களோ அதே ஆதாரங்களின் கீழ்தான் பார்ப்பான் (பிராமணன்) மேலான ஜாதி, கடவுளால் மேல் ஜாதியாக பிறப்பிக்கப்பட்ட ஜாதி என்று இருக்கின்றது, ஏன்? அதை விட மேலான ஆதாரங்கள் தர்மமாக, சாத்திய மாக கடவுள்கள் வாக்காக 1000, 2000, 3000 ஆண்டு அனுபவமாக இருந்து வருகிறது!
இதுபோல்தான் ஜாதித்தொழில்களும் இருந்து வருகின்றன.
இதுபோல்தான் செல்வவானுக்கும் (குபேரனுக்கும்) அதே ஆதாரங்களில் உரிமை இருந்து வருகிறது. மற்றும் அநேக காரியங்களுக்கும், மத, சாத்திர, கடவுள் கட்டளை ஆதாரங்கள ஏராளமாக இருக் கின்றன. இவற்றில் பசுவதைத் தடுப்புக்கு சட்டம் கொண்டுவந்து தடுக்க வேண்டியது அவசியமாகத்தானே முடியும்? நாமும் ஒப்புக் கொண்டதாகத்தானே அர்த்தம்?
மத ஆட்சி ஆதிக்கமெனில் அரசியல் ஏன்?
பிறகு சட்டசபை எதற்கு? பார்லி மெண்ட் எதற்கு? அரசியல் சட்டம் எதற்கு? மனுதர்ம சாத்திரத்தையும் இராமாயண, பாரத, புராணங்களையும் அரசியல் சட்டங்களாக வைத்து சங்கராச்சாரிகளை - வருணாச்சிரம தர்ம பாதுகாவலர்களையும், மந்திரிகளாக இருக்கச் செய்துவிட்டால், உலகம் தர்மப்படி ஆட்சி நடந்து வருமே. மற்றபடி ஜனநாயகம் எதற்கு? மந்திரிசபை எதற்கு? சட்டசபை, பார்லிமெண்ட் சபை எதற்கு? என்றுதானே பிரச் சினைகள் முடியும். இந்த லட்சியத்தில் தானே இன்றைய போராட்டம் துவக்கப்பட்டி ருக்கிறது? புராணங்களில் வீட்டுக்கு வந்த விருந்தாளிகளுக்குப் பசுவைக்கொன்று, நல்ல பசுங்கன்றுகளைக் கொன்று சபைக்கு விருந்தளிக்கப் பட்டிருக்கிறது.
மனுதர்ம சாத்திரத்தில் இன்ன மிருகங்களைக் கொன்று சமைத்து திதி செய்தால் பிதிர்கள் இத்தனை, இத்தனை நாட்களுக்கு மோட் சத்தில் இருப்பார்கள் என்று பல சுலோ கங்கள் இருக்கின்றன! மற்றும் யாகங்களில் பசுயாகம், அஜ (ஆடு) யாகம், குதிரையாகம் முதலிய பல மிருக ஜந்துகள் யாகங்கள் இருக்கின்றன. இவ்வளவையும் வைத்துக் கொண்டு இந்த சாத்திரங்கள் புராணங்கள் ஆகியவைகளின் தர்மங்கள்தான் எங் களுடைய தர்மம் என்று ஒரு புறம் சொல்லிக் கொண்டு மற்றொரு புறம் பசுவதைத்தடை செய்வதுதான் எங்கள் தர்மம் என்று சொல்லிக்கொண்டு இப்படிப் பட்ட மக்களைத் தூண்டுவதுமான காரி யங்கள் செய்வதானால் வேறு இராஜ்ய மாயிருந்தால் இந்நேரம் இவர்கள் கதி என்ன ஆகி இருக்கும்?
நமது அரசாங்கம் பலவீனமான அர சாங்கம்; மெத்த பலவீனமான அரசாங்கம். நவம்பர் 6-ஆம் தேதி டில்லியில் கலவரச் செய்தி எட்டியவுடன் அல்லது கலவரக் குறி தோன்றியவுடன் 3 மணி நேர நோட் டீஸ் கொடுத்து விட்டு இராணுவத்திடம் இராஜ் யத்தை ஒப்புவித்து இருந்தால் இன்றைய கொடுமையான அயோக்கிய மான அக்கிரமமான இந்தக் காரியங்கள் நடைபெற்று இருக்குமா? இராணுவம் என்றால் அவர்கள் யார்? நாட்டின் ஆட்சியின், மக்களின் பாதுகாப்புக்காக நாட்டு மக்களின் வரிப் பணத்தில் நாட்டு மக்களின் ஜனநாயக ஆட்சியால் நியமிக் கப்பட்ட பாதுகாப்பு ஸ்தாபனம்தானே? அதை அரசாங்கம் சரியானபடி பயன் படுத்தி இருந்தால் இந்த இரண்டு வருஷ காலமாக சென்னை முதல் பல மாநிலங் களிலும் நடந்த அட்டூழியங்கள் நாச வேலைகள் உயிர்ச்சேதங்கள் முதலிய 10-20 கோடி ரூபாய் பெருமான நட் டங்கள் நேர்ந்திருக்காது என்று சொல்வேன்.
எனவே, டில்லிக் கலவரத்திற்கு காரணம் - பார்ப்பனர்களையும், சங்க ராச்சாரியும் சாது சன்னியாசிக் குண்டர் களையும் மாத்திரம் குற்றம் சொன்னால் போதாது. இவர்களுக் குள் ஆட்களாய் இருந்த மந்திரிமார்களும் எதிரிக்கூட்டங் களைச் சேர்ந்த துரோகிகளான அதி காரிகள், போலீசு இலாகாத் தலைவர்கள், சிப்பந்திகள் ஆகியவர்களும் பெருங் காரணம் என்று சொல்வேன்.
இனி வரப்போகிற அரசாங்கம் எப்படி அமையுமோ? இந்த அளவுக்குப் பார்த் தாலும் காமராசர் ஆதரவற்றவராக இருக் கிறார். அதுமாத்திரமல்லாமல் துரோகிகள் மத்தியில்தான் இருக்கிறார் என்றுதான் நினைத்து வேதனைப்பட வேண்டி இருக் கிறது.
நூல்: காமராசர் கொலை முயற்சி சரித்திரம்.
-விடுதலை,5.4.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக