செவ்வாய், 28 ஜனவரி, 2020

மூடர்களே! மூடர்களே!!

04.01.1931, குடிஅரசிலிருந்து.... -

மூடர்களே! மூடர்களே! ஒரு சின்ன சங்கதி.  கோவிலின் மீதிருக்கும், கலசங்கள் திருட்டு போகின்றன. அம்மன்கள் விக்ரகங் களின் கழுத்திலிருக்கும் தாலிகள் திருட்டுப் போகின்றன.  விஷ்ணு விக்ரகத்தின் நெற்றியிலிருக்கும் நடு நாமம் (தங்கத்தில் வைத்தது) திருட்டுப் போகின்றது, சிவன் விக்ரகத்திலிருக்கும் நெற்றிப்பட்டை மற்ற விக்ரகங் களை கீழே தள்ளி அதிலிருக்கும் தங்கம், முத்து, ரத்தினம் திருட்டுப் போகின்றது.  இவைகளின் வாகனத்தில் தேரில் நெருப்பு பிடிக்கின்றது.  அச்சு ஒடிகின்றது.  இவை களின் பயனாய் பலர் சாகின்றார்கள்.  மூடர்களே!  இவற்றைப் பார்த்தும் கேட்டும் கூடவா அந்த இடங்களில், அந்த விக்ர கங்களில், அந்தத் தேர் வாகனங்களில் புனிதத்தன்மை, தெய்வத்தன்மை, அருள் தன்மை, ஆண்டவனை ஞாபகப்படுத்தும் தன்மை முதலியவைகள் இருக் கின்றதாக நினைக்கின்றீர்கள்?  உங்களிலும் மூடர்கள் இனியும் எங்காகிலும் உண்டா? தயவு செய்து சொல்லுங்கள்.

இன்னும் ஒரே குட்டி சங்கதி, வட்டி வாங்குகிறவர்கள் கோடீசுவரனாகிறான், வட்டி கொடுப்பவன் நாசமாய்ப் பாப்ப ராய்ப் போகிறான் என்பதைப் பார்த்தும், கேட்டும் இன்னமுமா பாழாய்ப் போன கடவுள் இருக்கிறார் என்று கருது கின் றீர்கள்?  இன்னும் ஒன்றுதான், அப்புறம் ஒன்றுமில்லை. துளியுண்டு சங்கதி... காவடி எடுத்துக்கொண்டு போனவன் காலராவில் செத்தபிறகு கூடவா நாசமாய்ப் போன சாமி இருக்குதுன்னு நினைக்கின்றீர்கள்..

மூடர் : சும்மா இப்படியெல்லாம் பேசிவிட்டால் போதுமா? இந்த உலத்தைப் படைத்ததற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டாமோ? அதுதான், கடவுள்.

பதில் : சரி, அப்படியானால் அந்தக் காரணத்தைக் கடவுளை உண்டாக்கினதற்கு மற்றொரு காரணம் வேண்டாமா? அது தான் சுயமரியாதை இயக்கம் (பகுத்தறிவு)

மூடர் : கடவுளைப் படைப்பதற்கு ஒரு காரணம் கேட்பது, முட்டாள் தனமாகும்.

பதில் : அப்படியானால், உலகப்படைப்புக் குக் காரணம் தேடிக் கொண்டிருப்பது அதைவிட இரட்டிப்பு முட்டாள்தனமாகும்.

மூடர் : உங்களோடு யார் பேசுவார்கள்?

பதில் : சரி நல்ல காரியமாச்சுது. சனியன் தொலைந்தது.  ஆனால், காணாத இடத்தில் குலைக்காதே.

- சித்திரபுத்திரன்

-  விடுதலை நாளேடு 18 1 20

ஞாயிறு, 26 ஜனவரி, 2020

இந்தியாவில் எப்படி பார்ப்பனீயம் நிலைத்திருக்கிறது?

* தந்தை பெரியார்
உலகம் முழுவதும் விழிப்படைந்து முன்னேறிக் கொண்டிருக்கிற காலத்தில் குறிப்பாக எல்லா சமுகத்தை விட மத சம்பந்தமான பிடிவாதத்தில் இணையற்ற மகமதிய அரசர்கள் ஆட்சி செய்யும் நாடுகளும் கூட அரசுரிமையை இழந்தாவது சீர்திருத்தத்தைப் பரப்ப வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கும் அரசர் களுக்கும் கட்டுப்பட்டு நடந்து வரும் இக்காலத்தில், இந்தியா மாத்திரம் ஒரு கடுகளவுகூட தன் நிலையைவிட்டு அசையாமல் இருக்கக் காரணம் என்னவென்பதை மக்கள் யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது.
நிற்க. பொதுவாக உலக மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து சகோதரபாவம் கொள்ளுவதற்கு உலகத்தில் முதல் தடையாயிருந்தது, இருப்பது மதங்கள் என்று சொல்லப்படுபவைகளேயாகும். இரண்டாவது, அதன் உட்பிரிவுகள் ஆகும். மூன்றாவது பாஷைகள் ஆகும். இதை அனுசரித்து இடவித்தியாசங்களும் ஆகும். உதாரணமாக பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள், மகமதியர்கள், இந்துக்கள் என்பன போன்ற மதப்பிரிவுகள் உலகத் தில் இல்லாமலிருந்தால் மக்கள் சமுகத்தைப் பெரும் பெரும் பிரிவுகளாகப் பிரித்துக்காட்டவும் ஒரு நாட் டாருடைய சுகதுக்கங்கள் மற்ற நாட்டார்களுக்கு சம் பந்தமில்லாமலிருக்கவுமுள்ளதான நிலை உலகத்தில் இருக்கவே முடியாது என்னலாம்.
வேண்டுமானால் ஒரு சமயம் தேசத்தின் பேரால் மக்களையும் பிரித்துக்காட்ட வேண்டியதாக ஏதாவது ஏற்பட்டால் ஏற்படலாம். அப்படிக்கு இருந்தாலும் துருக்கி யருக்கும் ஆப்கானிஸ்தானத்திற்கும் உள்ள பிரிவுகள் போன்ற பிரிவுகளும் அமெரிக்காவுக்கும் அய்ரோப்பா வுக்கும் உள்ள வித்தியாசம் போன்ற பிரிவுகளும் போல இருக்குமே ஒழிய, எந்தக்காரணத்தைக் கொண்டும் ஒற்றுமைப்பட முடியாததும் ஒரு தேசத்தையோ ஒரு சமூகத்தையோ அடியோடு கொன்று ஒரு தேசத்தார் வாழத்துணியும் படியான பிரிவுகளாகவும், மற்றவர்களைப் பற்றி ஒரு சிறிதும் கவலை கொள்ளாமல் தங்கள் தங்கள் சமூக நன்மையை மாத்திரம் கவனிக்கக் கூடிய பிரிவுகளாகவும் ஒருவருக்கொருவர் நடை, உடை, பாவனை, பழக்க வழக்கம் முதலியவைகளால் வெறுப்புக் கொள்ளும் பிரிவுகளாகவும் பிரிந்திருக்க முடியவே முடியாது என்பது நமது உறுதியாகும். கிறிஸ்தவர்களுக்குள் இருந்த போதிலும் மதம் என்கின்ற ஒரு காரணத்தால் ஒன்றுபட்டு உலகத்தில் உள்ள எல்லாக் கிறிஸ்தவர்களும் இந்தியாவின் ஆதிக்கம் முதலிய விஷயங்களில் எதிரி களாகவே இருந்து இந்தியாவை உறிஞ்சி வருகின்றார்கள் என்பதைத் தினமும் உணருகின்றோம். அது போலவே உலகத்தில் உள்ள எல்லா மகமதியர்களும் தங்கள் மதத்தின் பேராலும் சமுகத்தின் பேராலும் தங்களது நன்மையைக் குறிக்கொள்ளும்போது இந்துக்கள் என்பவர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிரிடையாய் இருக்க நேர்ந்தாலும் சிறிதும் அபிப்பிராய பேதமில்லாமல் ஒன்று சேருகின்றார்கள்.
அதுபோலவே இந்துக்கள் என்பவர்களும் மத விஷயங்கள் என்பவைகளில் மகமதியர்கள் கிறிஸ்த வர்கள் என்பவர்களுக்கு எதிராக ஒன்று சேர முடியாத வர்களாயிருந்தாலும்கூட ஒன்று சேர வேண்டும் என்கின்ற உணர்ச்சிகளை எளிதில் அடைவதன் மூலம் எதிரிகளாக கருதத்தக்கவர்களாகி விடுகின்றார்கள்.
இது சரியா? தப்பா? அல்லது இதற்கு ஏதாவது பொருள் உண்டா? என்பவைகள் ஒருபுறமிருந்தாலும் முக்கியமாய் மதத்தின் பலனாய் வேற்றுமை உணர்ச் சிகள் தோன்றியே தீருகின்றன என்பதை எவரும் மறுக்க முடியாது. இப்படியெல்லாம் இருந்தாலும் கூட மேல்நாட்டில் உள்ள ஒவ்வொரு மதக்காரர்களும் சமீபகாலமாய் தங்கள் பிடிவாத குணங்களை விட்டு முதலில் தங்களுக்குள் ஒன்றுபடுவதற்கு முயற்சி எடுத்துக் கொண்டு அம்முயற்சிக்கு எதிரிகளாய் இருப்பவைகளைத் தகர்த்தெறிந்து ஒரே சமுகமாக ஆவதற்கு மிக முனைந்து வருகின்றார்கள். இம்முயற்சிக்கு விரோதமாக மதத்தின் பேராலும் தெய்வத்தின் பேராலும் இருக்கும் தடைகளைக் கூட வெகு சுலபத்தில் தகர்த்தெறியத் துணிந்து வருகின்றார்கள்.
உதாரணமாக இம்முயற்சியில் சிறிதளவானாலும் முதலில் வழிகாட்டிய பெருமை மேல்நாட்டுக் கிறிஸ்தவர் களுக்கே உண்டு என்று சொல்ல வேண்டும். ஏனெனில், அவர்கள்தான் முதன் முதலாக நிலைமைக்குத் தக்கபடி தங்களைச் சரிப்படுத்தி கொள்ள முன்வந்தவர்கள். உதாரணமாக அவர்கள் வேதம் என்று சொல்லப்படும் பைபிளைக் கூட திருத்த முயன்று பழைய ஏற்பாட்டிற்கு விரோதமாய் புதிய ஏற்பாட்டை உண்டாக்கி நடை உடை முதலியவைகளையும் மாற்றிக் கொண்டார்கள். அதுபோலவே, இரண்டாவதாக மகமதியர்களையும் சொல்லலாம். ஏனெனில் அவர்களிலும் இந்துக்கள் என்பவர்களை போல பிறவியில் உயர்வு தாழ்வு என்பது போன்ற சில கடுமையான பிரிவினை வித்தியாசங்கள் இல்லாவிட்டாலும் வாழ்க்கையில் மகமதியர்களையும் மதம் என்பது இந்துக்கள் என்பவர்களைப்போலவே அநேக விதங்களில் கட்டுப்படுத்தி வந்திருக்கின்றது என்று சொல்லலாம். உதாரணமாக நடை உடை பாவனை முதலாகிய பலவற்றுள் மதங்களின் பேரால் கட்டுப்பட்டுக் கிடந்தாலும் இப்போது தைரியமாய் அக்கட்டுபாடுகளில் சிலவற்றையாவது தளர்த்திவிட ஆரம்பித்து விட்டார்கள். அது மாத்திரமல்லாமல் வெகு துரிதமாகவும் தைரியமாகவும் சிலர் மாற்றிக் கொள்ளவும் ஆரம்பித்துவிட்டார்கள். அந்தப் படிக்கு மாற்றிய மகமதிய வீரஅரசர்களான அமீருக்கும், பாஷாவுக்கும் ஆதரவு கொடுக்கவும் முந்துகின்றார்கள்.
மற்றும் வெளிநாடுகளில் அந்தந்த தேசகுடி ஜனங்கள் பெரும்பாலோர் அத்திருத்தங் களுக்குத் தாராளமாய் ஆதரவளித்துப் பின் பற்றி வருவதில் யாதொரு தடையும் காண முடியவில்லை. ஆனால் புரோகிதக் கூட்டத்தின் தொல்லைகள் மாத்திரம் எந்த மதத்திலும் சிறிதளவாவது இல்லாமலிருக்கும் என்று சொல்லிவிட முடியாது என்றாலும் அவர்களிலும் சிலர் தம் சுயநலத்திற்கு வலி யுறுத்துவதை தவிர வேறு காரணங்கள் சொல்லவோ ஆதாரங்கள் காட்டவோ முடியாதபடி மக்கள் அறிவு பெற்று விட்டார்கள். இந்தியாவில் உள்ள மகமதிய சமூகமும் இந்தியர்களுடன் பழகுவதால் கமால் பாட்சாவுக்கும், அமீருக்கும் விரோதமாக அதிருப்தியும் ஆத்திரமும் காட்டுவதன் மூலம் ஒரு புறத்தில் தங்கள் மதப்பற்றை காட்டிக் கொண்டாலும் மற்றொரு புறம் தங்கள் சமூக நன்மையை உத்தேசித்து அவர்களுக்கு ஆதரவளித்தே வருகின்றார்கள். உதாரணமாக அமீரையும் அவரது மனைவியரையும் இந்திய மகமதியர்களில் சிலர் குறைகூறி இருந்தாலும் அமீரினது ஆட்சிக்கு ஆபத்து வந்துவிட்டது என்று தெரிந்தவுடன் அவருக்கு இந்தியாவில் உள்ள மவுலானாக்கள் முதல் கொண்டு அனுதாபப்படுவதுடன் ஆதரவளிக்கவும் முந்துகின்றார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இதன் காரணம் என்னவென்று பார்ப்போமானால் கூடுமானவரை அந்த சமூக நன்மை சம்பந்தமான கவலையும் ஒற்றுமையுமேயாகும். ஆனால் இந்துக்கள் என்பவர்களுக்குள் அம்மாதிரியான சமூக ஒற்றுமை இல்லாமல் எவ்வித திருத்தங்களுக்கும் எதிர்ப்புகள் இருந்து வருவதற்குக் காரணம் என்ன என்று பார்ப்போமானால் இதிலுள்ள மதப் பிரிவுகளோடு அவைகளிலுள்ள உட்பிரிவுகளும் ஜாதிப்பிரிவுகளும் அவற்றில் உள்ள உயர்வு தாழ்வுகளும் அதனால் சிலருக்கு ஏற்படும் நிரந்தர நலமுமே காரணமாகும். இந்த உள்பிரிவுகளும் ஜாதிப் பிரிவுகளும் நிலைத்து குருட்டுப் பிடிவாதமாய் இருப்பதற்குக் காரணம் என்னவென்று பார்ப்போமானால் மற்ற மதங்களை விட இந்துக்கள் இந்துமதம் என்பவற்றில் அதிகமான நிர்ப்பந்தங்கள் இருந்து வருகின்றன என்பதேயாகும். அவையாவன, முதலாவது இந்துக்களுடைய மதக்கொள்கைகளின் படி மக்கள் படிக்கக்கூடாது. ஆனால் ஒரு சிறு வகுப்பினர் - பார்ப்பனர்கள் என்பவர்கள் மாத்திரம்தான் படிக்க உரிமையுள்ளவர்கள். மத ஆதாரம் என்பதைப் பற்றி இந்து மதத்தைச் சேர்ந்த மக்களே தெரிந்து கொள்ளக்கூடாது. மத சம்பந்தமான எந்த விஷயங்களிலும் பிறவியிலேயே தாங்கள் உயர்ந்தவர்கள் என்று ஏற்பாடு செய்து கொண்ட ஒரு சிறு வகுப்பார் அதாவது 100க்கு 2 பேர்களான பார்ப்பனர்கள் - தவிர மற்றவர்களுக்குச் சொந்த அறிவை உபயோகிக்கவோ ஆராய்ச்சி செய்யவோ நன்மை தீமை எவை? அவசியமானவை எவை? அவசியமில்லாதவை எவை? என்று தெரியவோ சற்றும் உரிமை கிடையாது.
படிப்பு, மத சம்பந்தம் ஆகியவைகளில் இம்மாதிரி யான நிர்பந்தம் இருப்பதோடு மாத்திரமல்லாமல், மனித வாழ்க்கையிலும் மக்களைத் தனித்தனி ஜாதி களாகப் பிரித்த தோடல்லாமல், அவற்றில் உயர்வு தாழ்வும் ஒருவரை ஒருவர் தொடாமல் நெருங்காமல் காணமுடியாமல் செய்வித்து ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு பிறவித் தொழிலையும் ஏற்படுத்தி அவை களையேதான் அவ்வகுப்பைச் சேர்ந்தவன் செய்து தீர வேண்டும் என்றும் அந்தப்படி அரசன் சட்டம், தண்டனை, கண்டனம் ஆகியவைகள் மூலம் செய்விக்க வேண்டும் என்றும் அரசர்களாலும் நிர்ப்பந்தப்படுத்தப் பட்டுவிட்டது.
ஒரு சிறு கூட்டத்தார் தங்கள் ஜனத் தொகைக்குதக்கபடி, தங்கள் வாழ்வுக்குத் தேவையானபடி நிரந்தரமாய் பொருள் வருவாய் இருக்கத்தக்கதாக பதினாயிரக்கணக் கான கடவுள்களை சிருஷ்டித்து ஆயிரக்கணக்கான சடங்குகளையும் சிருஷ்டித்து அவற்றிற்கு தினப்படி பூஜை, உற்சவம், கல்யாணம், அவைகளின் திருப்திக்கு என்று அச்சிறு கூட்டத் தாருக்கு வேண்டியவைகளையெல்லாம் அவசிய மாக்கி அவர்கள் கேட்டதையெல்லாம் கொடுக்க வேண்டும் என்றும் அச்சிறு கூட்டத்தாரின் திருப்தியே கடவுள் திருப்தி என்றும் மற்ற மக்கள் பிறந்ததே, அச்சிறு கூட்டத்திற்கு தொண்டு செய்வதற்கென்றும் பலவாறாகக் கற்பித்து, அக்கட்டுப்பாடுகளிலிருந்து யாராவது விலகவோ அல்லது அக்கட்டுப்பாடுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யவோ புறப்பட்டால் அவ்வாராய்ச்சி செய்வது மகாபாதகமானதென்றும் நாத்திகமென்றும் அப்படிப் பட்ட நாத்திகனை அரசன் தண்டிக்க வேண்டுமென்றும் மற்றும் இது போன்ற பல நிர்பந்தங்களையும் உண்டாக்கி வைத்திருக்கின்றார்கள்.
இது மாத்திரமல்லாமல் யாராவது துணிந்து இக் கட்டுப்பாட்டையும் கொடுமையையும் உடைக்கப் புறப்பட்டால் அவர்களை அசுரர்கள், ராட்சதர்கள், துஷ் டர்கள், தேவர்களுக்கு விரோதி, கடவுளுக்கு விரோதி, உலகத்திற்கு ஆபத்தை விளைவிப்பவன் என்பதான விஷமப் பிரச்சாரத்தால் அவனை அடியோடு அழித்து வந்திருக்கின்றார்கள். இன்றைய தினமும் மேல் கண்ட கொள்கைகளே மதக் கொள்கைகளாகவும், அவைகளைக் கொண்ட புத்தகங்களே மத ஆதாரங்களாகவும் அவை களை நிலைநிறுத்தச் செய்வதே சீர்திருத்தங்களாகவும் இருந்து வருகின்றன.
உதாரணமாக, இது சமயம் நாட்டில் ஏற்பட்ட ஒரு புது உணர்ச்சியும் கிளர்ச்சியுமானது மக்களை எவ்வளவோ தூரம் நடைஉடை ஆச்சாரம் போகப் போக்கியம் முதலி யவை களில் பழைய கொள்கைகளையும் பழைய அனு பவங்களையும் மாற்றிக் கொள்ள அவசியமும் இடமும் ஏற்படுத்தி கொடுத்து அனுபவத்திலும் தலை சிறந்து விளங்கிக் கொண்டிருந்தும், தனது சொந்த சுயநலம் மாத்திரம் எவ்வளவு அறிவீனமும் ஆணவமும் இழிவும் பொருந்தியதாக இருந்த போதிலும் அதிலிருந்து சற்றாவது மாறுபடுவதோ தளர்த்தப்படுவதோ என்பது சிறிதும் முடியாததாகவே இருக்கின்றது.
உதாரணமாக, மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் ஜாதி வித்தியாசத்தை நமது இந்திய நாட்டில் உள்ள அறிவாளிகள், பிரமுகர்கள், தலைவர்கள் பெரி யோர்கள் இந்திய நாட்டில் உள்ள பொது இயக்கங்கள் சமய தத்துவங்கள் என்பவைகள் எல்லாம் அநேகமாய் ஒரே முகமாக விலக்க வேண்டும் என்றும் ஒழிக்க வேண்டும் என்றும் அந்தப்படி ஒழிக்காவிட்டால் நாட்டிற்கு சுதந்திரமில்லை, தேசத்திற்கு சுயமரியாதை இல்லை சமயத்திற்கு மதிப்பு இல்லை என்று பலவாறாக அபிப்பிராயம் கொடுத்தும் தர்மத்தின் பேராலும் மதத்தின் பேராலும் கூட்டங்கள் கூடித் தங்களுக்கும் தங்கள் ஆதிக்கத்திற்கும் தகுந்தபடியே தீர்மானங்கள் செய்து வருகின்றார்கள்.
உதாரணமாக, சமீபத்தில் பல இடங்களில் பார்ப் பனர்கள் ஒன்று கூடி வருணாசிரமத்தை உறுதிப்படுத்தி பார்ப்பனர் தவிர மற்றவர்கள் பார்ப்பனர்கள் வைப் பாட்டி மக்கள் பார்ப்பன சேவைக்காக கடவுளால் உண்டாக்கப்பட்டவர்கள் என்கின்ற கருத்துக்களடங்கிய சூத்திரர்கள் என்பதை நிலை நிறுத்த முயற்சித்திருப்பதும் சைவர்கள் என்பவர்கள் ஒன்று கூடி தீண்டாமை என்பதை நிலை நிறுத்தத்தக்க வண்ணமாக தீண்டாதவர்கள் என்பவர்களுக்கு தனிக் கோவில் கட்டிக் கொடுக்க என்று தீர்மானத்திருப்பதும் போதுமான உதாரணமாகும்.
எனவே இந்த மாதிரி வருணாசிரம தர்மங்களும் இந்தமாதிரி சைவர்களும் நமது நாட்டில் உள்ளவரை எந்த விதத்தில் பார்ப்பனீயம் ஒழிய முடியும்? எந்த விதத்தில் சமத்துவம் உண்டாகும்?
எந்தவிதத்தில் மக்கள் ஒற்றுமைப்பட்டு மானத்துடன் வாழ முடியும்? என்பதை யோசித்தால் இந்தியாவில் எப்படி பார்ப்பனீயம் நிலைத்து எந்தெந்த வழியில் நாட்டைப் பாழாக்கி வருகின்றது என்பது புலனாகும்.
எனவே, இந்தியாவில் பார்ப்பனீயமற்ற மதமே இல்லை என்றும் இந்துமதமென்னும் தலைப்பின் கீழ் எந்தமதமானாலும் சமயமானாலும் அகச் சமயமானாலும் அவற்றை எல்லாம் அடியோடு அழித்தாலல்லது மக்கள் கடவுள் நிலை என்பதையோ அன்பு நிலை என்பதையோ ஒருக்காலமும் அடைய முடியாததென்றே சொல்லுவோம்.
'குடிஅரசு' -  துணைத் தலையங்கம் - 14-04-1929
- விடுதலை நாளேடு, 26.1.20

ஞாயிறு, 19 ஜனவரி, 2020

இது என்ன நியாயம்?

தந்தை பெரியார்

தோழர் ஆச்சாரியார் அவர்கள் முதன் மந்திரியாக ஆனவுடன் மக்களுக்கு நீண்ட காலமாய்ப் பெருந் தொல்லையாக இருந்து வந்த உணவு கண்ட்ரோலை (கட்டுப்பாட்டை) எடுத்தார். நம்மைப் போன்றவர்களும் இது நல்ல காரியம் என்று ஆதரித்தோம். மக்கள் தங்களுக்கான கண்ட்ரோல்களை ஒழித்ததால் மகிழ்ச்சியடைந்தார்கள். நெசவாளிகளுக்குச் சில நன்மை செய்தார். தக்கப்படி செய்து  கொஞ்சம் பெயர் கிடைத்தவுடன் அவருடைய பதவியும் நிலைத்துக் கொண்டது என்று தெரிந்ததும் என்ன செய்தார்?

இந்த நாட்டை மனுதர்மத்திற்குக் கொண்டு செல்லும் ஆச்சாரியார் அவர்கள்  மனதில் முடிவு கொண்டு அந்த மனுதர்மத்திற்கு என்ன பூர்வாங்க ஏற்பாடுகள் முதல் வேலைகள் செய்ய வேண்டுமோ அவைகளையெல்லாம் செய்யும் முறையில் உத்தியோகத்துறைகள் யாவும் பார்ப்பன மயமாக்கி விட்டார். அதுவும் நம் திராவிட ஆள்கள் உத்தியோகத்துறைப் பக்கம் திரும்ப முடியாதபடி கொஞ்சம் கூட நீதி நேர்மையில்லாத பார்ப்பனர்களையே எல்லாவற்றிற்கும் நியமித்தார். இந்த உத்தியோகத்துறை பார்ப்பனர்களின்  மயமானதோடு மாத்திரமல்ல; படித்தால் தான் இந்தச் சூத்திரர்கள் உத்தியோகம் வேண்டும்; பதவி வேண்டும் என்று கேட்பார்கள். சூத்திரர்கள் படிக்கக் கூடாது என்று முடிவு  செய்து, கல்வித்திட்டம் என்கிற பெயரால் வர்ணாசிரம புனர்நிருமாண முயற்சித் திட்டத்தைக் கொண்டு வந்துவிட்டார்.

இந்தக் கல்வித் திட்டத்திற்கு எவ்வளவு பெரிய எதிர்ப்பு இருக்கிறது? ஆனால் இத்தகைய  எதிர்ப்புகளைப் பற்றி தோழர் ஆச்சாரியார் அவர்கள் - ஜன நாயகத்தின் பேரால் ஆட்சி புரிகிறவர்கள் - கொஞ்சமாவது கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா?

கல்வித் திட்டத்தைத் தோழர் ஆச்சாரியார் அவர்கள் கொண்டு வந்தவுடன் முதன் முதலாக  நான்தான் இந்தக் கல்வித் திட்டம் வருணாசிரமக் கல்வித்திட்டம்; இதை எதிர்த்து ஒழித்து ஆகவேண்டும் என்று  எதிர்த்தேன். மக்களும் என்னை ஆதரித்தார்கள்; பல மாற்றுக் கட்சிக்காரர்களும், ஏன் - காங்கிரசிலே உள்ள பலரும் இந்தத் திட்டத்தை எதிர்த்தார்கள். அதோடு மட்டுமல்ல 10, 15 ஜில்லா போர்டு, சேம்பர்ஸ் முதலியவைகளும் பல, நகரத்து முனிசிபாலிட்டிகளும் கிராமப் பஞ்சாயத்துக் களும், ஆசிரியர்களும், கல்வித் துறையில் நிபுணர்கள் என்று பெயர் பெற்றவர்களும் ஆக இப்படிப் பலரும், பலதரப்பட்டவர்களும், மாறுபாடு கொண்டவர்களும் எல்லோரும் ஒரு சேர இந்த வருணாசிரம புனர் நிருமாணக் கல்வித் திட்டத்தை எதிர்த்தனர். உள்ளபடியே ஜனநாயகத்தின். பேரால் ஆட்சியிலே இருக்கிறவர்கள் என்ன செய்ய வேண் டும்? ஆனால் இத்தகைய எதிர்ப்புகள் எதைப் பற்றியும் சிறிதுகூட லட்சியம் செய்யாமல், யார் என்ன சொன்னாலும் இதைக் கொண்டு வரவேண்டும் என்று எனக்குத் தோன்றியது, கொண்டு வந்துதான் தீருவேன்.  இந்த வருடம் கிராமத்தில்தான் இந்தக் கல்வித் திட்டம் அமலிலிருக்கும். அடுத்த வருடம் நகரத்துக்கும் சேர்த்து இந்தக் கல்வித் திட்டம் விரிவாக்கப்படும் என்பது போலெல்லாம் பேசி வருகிறார். இது தான் நியாயமா? அல்லது இதற்குப் பெயர்தான் ஜனநாயக ஆட்சியா?

என்னய்யா இவ்வளவு அக்கிரமம் செய்கிறாரே! என்று மேலே சொன்னால், அவர்கள் சொல்லுகிறவர்களைப் பார்த்து, உங்களுக்கு நன்றியே இல்லை, அவர்மீது குறை சொல்லுகிறீர்களே என்கிறார்கள். இப்படி இருக்கிறது.

இந்தக் கல்வித் திட்டம் என்பது என்ன? இந்தத் திட்டத்தினுடைய அடிப்படை  என்ன என்று நீங்கள் கருதுகிறீர்கள்? இந்தக் கல்வித் திட்டம் என்பது வருணாசிரம புனர் நிருமாணப் பாதுகாப்புத்  திட்டமா அல்லவா? அதாவது  இந்தக் கல்வித் திட்டத்தின்படி ஒவ்வொரு  வகுப்புப் பிள்ளைகளும் நாளைக்கு ஒரு வேளை படித்துவிட்டு, மீதி நேரத்தில் அவரவர்களின் வருண ஜாதித் தொழிலைப் பழகவேண்டும் - செய்யவேண்டும் என்பதாகச் சொல்லுகிறது. ஜாதியின் பேரால் உடலுழைப்பு, அடிமை வேலை செய்கிறவர்கள் யார்? சூத்திரர்கள் என்று சொல்லப்படுகிற நாம்தானே! ஆகவே நாம் எல்லோரும் செய்ய வேண்டியது, அதாவது நாவிதர் மகன் சிரைப்பது, வண்ணார் மகன் வெளுப்பது, குயவர் மகன் சட்டிப்பானை செய்வது, வேளாளன் மகன் மாடுமேய்ப்பது, பள்ளியாண்டியன் மகன் பன்றி மேய்ப்பது  ஆகிய வேலைகளாகும். இப்படி நம் ஜாதி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தொழில், வேலை இருப்பது போலவே பார்ப்பன ஜாதிக்கும் ஒரு தொழில் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறவர்கள் - அப்படியே அவர்களும்  செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் செய்வதில்லை; நம்மைச் செய்யச்சொல்லுகிறார்கள். தங்கள் ஜாதித்தொழில் தங்களுக்கு வேண்டாம்; எங் களுக்கு உத்தியோகம்தான் வேண்டும் என்கிறார்கள்.

என்னய்யா! நாங்கள் மட்டும் ஜாதித் தொழிலைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். பார்ப்பனர்கள் மட்டும் எல்லாப் பதவி, உத்தியோகங்கள், அதிகாரங்கள் பெற்று மேலுக்குமேல் போய்க்கொண்டே இருக்க வேண்டுமா? இது என்ன நியாயம்? என்று கேட்டால், சே! சே! நீ பேசுவது  வகுப்புவாதம் என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிடுகிறார்கள். இதுதான் ஆட்சியாக, அரசாங்க மாக, சுதந்திரமாக, ஜனநாயகமாக, குடி அரசாக, கீதையாக, பாரதமாக, ராமாயணமாக, கடவுள் பக்தியாக, ஆஸ்திகமாக, மதமாக இருக்கிறது. இந்த அக்கிரமமான, அநியாயமான நிலைமை கூடாது என்றால், அது வகுப்புத் துவேஷமாக, தேசத்துரோகமாக, நாஸ்திகமாக இருக்கிறது. அதாவது அப்படிச் சொல்லப்படுகிறது. இதுவா முறை? மக்கள்  யோசித்துப் பார்க்க வேண்டும்; எவ்வளவு வேதனை தரும்படியான நிலைமையில் இன்றைய ஆட்சியும் அரசாங்கமும் அதனுடைய  ஆட்சியும்! தோழர்களே! மறுபடியும் சொல்ல ஆசைப்படுகிறேன்; எனக்கும் தோழர் இராசகோபால ஆச்சாரியார் அவர்களுக்கும் சொந்த முறையில் ஏதும் பகைமையோ, விரோதமோ, பொறாமை உணர்ச்சி கொண்டோ நான் சொல்லவில்லை; மற்றவர்கள் வேண்டுமானால் அத்தகைய உணர்ச்சி கொண்டவர்களோ என்னவோ! என்னைப் பொறுத்தவரையில் இன்னும் அவர் தனிப்பட்ட முறையில் என் நண்பர்தான். நாளைக்கு வேலை போய்விட்டால் அவர் என் வீட்டுக்கு வருவார். நானும் மாலை போட்டு வரவேற்பேன். ஆதலால் ஆச்சாரியாரிடத்தில் நான் ஏதோ கசப்போ, காழ்ப்போ வைத்துக்கொண்டு பேசவில்லை.

தோழர் ஆச்சாரியார் அவர்கள் அவருடைய இனத்துக்கு ஆக, பிறந்த பார்ப்பன இனத்துக்காகப் பாடுபடுகிறார். அவருக்குத் தெரியும், இன்று நாட்டிலே வளர்ந்து வருகிற உணர்ச்சி தம்முடைய சமுதாயமான பார்ப்பன சமுதாயத்துக்கு  விரோதமானது; ஆதலால் இந்த உணர்ச்சியை - இலட்சியத்தை - ஒழித்துக்கட்டித் தம்முடைய  இனத்தைக் காப்பாற்றுவதற்கு ஆக அவர் தீவிரமாக  முயற்சி செய்கிறார்.  நமக்குத் தோழர் ஆச்சாரியார் அவர்கள் எதிரியாய் இருந்தாலும், பார்ப்பனர்களுக்கு - அந்தச் சமுதாயத்துக்கு அவர் ஒரு அவதாரபுருஷர் என்று கருதுகிறார்கள். அப்படி அவர், அவருடைய  இனத்துக்கு ஆகப் பாடுபடுகிறார். நாம் நம் இனத்துக்காகப் பாடுபடுகிறோம். அவருடைய  பார்ப்பன இனத்தின் வளர்ச்சியும், வாழ்வும், நம் இனத்தினுடைய தாழ்விலும் அடிமையிலுந்தான்  ஏற்பட முடியும். அதனால் தான் அவர் இந்தப்படி செய்கிறார். ஆனால், அதே நேரத்தில் நம்முடைய திராவிட இனத்தின் வளர்ச்சியும் வாழ்வும் பார்ப்பானை நீக்கினால் தான் நம் அடிமைத்தனமும், தாழ்வும் ஒழியும். ஆதலால்தான் நாம் அடிமையும், தாழ்வும் ஒழிய வேண்டும் என்பதற்கு ஆகத்தான் நாம் பார்ப்பன துவேஷிகளாக, பார்ப்பானே வெளியேறு என்று முழங்குபவர்களாக  இருக்கிறோம்.

(15.11.1953இல் சென்னை வண்ணை நகரில் திராவிடர்கழகப் பொதுக்கூட்டத்தில்

தந்தை பெரியார் சொற்பொழிவு)

- விடுதலை, 17.11.1953

பார்ப்பனர்களின் ஆயுதம்

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இப்போது நடக்கிற போராட்டம் தேவ-அசுரப் போராட்டம்தான். வேதப்படி, சாஸ்திரப்படி, புராணப்படி, அகராதிப்படி பார்த்தாலும் இது விளங்கும். அசுரர்கள் என்றால் நாம்தான். தேவர்கள் என்றால் பார்ப்பனர்கள். இந்த இரண்டு இனத்தாரிடையே நீண்ட காலப் போர் அதாவது, இராமாயண காலம் முதல் இந்த ஆச்சாரியார் காலம்வரை நடந்து கொண்டுதான் வருகிறது. இராவணன், இரணியன், சூரன், சூரபத்மன் எல்லாரும் ஒழிந்ததற்கு மூலகாரணம் தேவ - அசுரப் போராட்டம்தான். தேவர்கள் என்றால் மேலான சக்தியுள்ளவர்கள் கடவுள்கள். - தேவர்கள் என்றால், பார்ப்பான் என்று பொருள். பார்ப்பானும், கடவுளும் ஒன்று. அசுரர்களை அழிக்க அடிக்கடி அவதாரம் எடுத்து  வந்துள்ளார், மகாவிஷ்ணு என்னும் கடவுள். எதற்காக வந்தார் என்றால், அசுரர்களாகிய தமிழர்கள், தேவர்களாகிய பார்ப்பனரை நாட்டை விட்டு விரட்டியதற்குத் தமிழர்களை ஒழித்துக் கட்ட மகா விஷ்ணுவே அவதாரம் எடுத்து வந்து, தமிழனுடைய தலையைச் சீவி அழித்தார். அந்த மகாவிஷ்ணு அவதாரம்தான் இராமன், கிருஷ்ணன், எல்லாம்!

அந்த இராமனும், கிருஷ்ணனும் நான்தான் என்கிறார் இராஜாஜி! மிகத் துணிவோடு, மனுதருமம் நிலைக்கவேண்டும் என்று சொல்லுகிறார். அவருக்கு ஆதரவாக மதச் சம்பந்தமான சங்கங்கள், ஜாதி சம்பந்தமான கட்சிகள் இருக்கின்றன. மேலும், நம்முடைய மக்களுக்கு உழைக்கும்படியான கட்சிகள் என்று சொல்லப்படுவது எல்லாம் பார்ப்பானுடைய நன்மைக்கே உழைக்கின்றன. இவற்றை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு தைரியமாகச் சொல்லுகிறார், நான் தான் வேதகால இராமன்; மனுதர்மத்தை இந்த நாட்டில் நிலைக்கச் செய்வதே தன் கடமை என்று! அவருடைய ஜாதிக்காரர்கள் அவருடைய முயற்சிக்குக் கட்டுப்பாட்டுடன் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அங்குப்போனால் ஏதாவது கிடைக்காதா என்று பொறுக்கித் தின்பதே புத்தியாகக் கொண்டு நம்மவனும் ஓடுகிறான் என்றால், நம் மக்களுக்கு என்று உழைக்க யார் இருக்கிறார்கள்?

இராமாயணக் காலத்தை மனதில் வைத்துப் பார்த்தால் இப்போதுள்ள நிலைமை தெள்ளென விளங்கும். அந்தப் பக்கம் ராஜாஜி; இந்தப் பக்கம் திராவிடர் கழகம் இராமசாமி. அவர் எங்கு போனாலும் போகிற பக்கமெல்லாம், என்னை நினைத்துக் கொண்டே பேசுகிறார். நானும் அதைப் பற்றித்தான் பேசுகிறேன். என்னுடைய கருத்து, நம்முடைய மக்கள் எல்லோரும் மனிதத் தன்மையாக ஆக வேண்டும் என்பது. ராஜாஜி அவர்களுடைய கருத்து, மனுதரும முறைப்படி ஆட்சியை ஆக்கவேண்டும் என்பது. இதைப் பார்த்தால் புரியாதா, ராஜாஜி அவர்கள் யாருக்காக இருக்கிறார், யாருக்காகப் பாடுபடுகிறார், யாருடைய முன்னேற்றத்தை விரும்புகிறார் என்பது?

நம்முடைய மக்கள் சமுதாயத் துறையிலும், அறிவுத் துறையிலும் மட்டுமல்லாது, மதத் துறையிலும், கடவுள் துறையிலும் மனிதத் தன்மை பெறவேண்டும். இந்த சி.ஆர். (ராஜாஜி) மட்டுமல்ல, பெரிய பெரிய மனிதர்கள், அறிவாளிகள், மகான்கள், மகாத்மாக்கள், இன்னும் அவர்களைவிடப் பெரிய தெய்வீக சக்தி படைத்தவர்கள் என்று கூறப்படுபவர்கள் ஆக யாராய் இருந்தாலும், அவர்கள் எல்லோரும் இந்தப் பார்ப்பானுக்குப் பாடுபட்டவர்கள் அல்லது பாடுபடுபவர்கள் ஆகத்தான் இருப்பார்கள் - இருந்து வந்திருக்கிறார்கள். என்னுடைய   காலத்திற்கு முன்னால் யாரும் முட்டாள்தனம் ஒழியவேண்டும், அடிமைத்தன்மை ஒழிய வேண்டும், கடவுள் ஒழியவேண்டும், ஜாதி ஒழியவேண்டும், பார்ப்பான் ஒழியவேண்டும் என்று சொல்லவில்லை. இன்னும் அரசியல்மூலம் பார்ப்பானுக்கு அடிமையாக இருக்க ஆசைப்படுகிறானே தவிர, மான உணர்ச்சிக்குப் பாடுபடுபவன் யார்? எவ்வளவு பெரிய படிப்பாளியாக இருந்தாலும், பார்ப்பானுக்குப் பயந்து கொண்டு இருக்கிறானே தவிர, துணிந்து காரியம் செய்யவில்லையே? மேலும் நம் நாட்டில் படித்தவன், மேல் படிப்புக்காரன், புலவன் என்று இருக்கின்றனர் என்றால், அவர்களால் நமக்கு - நம் சமுதாய மக்களுக்கு என்ன நன்மை? அவனவன் பிழைப்புக்காகப் படித்திருக்கிறானே தவிர, ஊருக்கு உழைக்கவேண்டும் என்று எவன் படித்திருக்கிறான்? நான் தெரிந்தவரையில் நண்பர் இராஜாஜி அவர்கள் மனுவாகவே விளங்குகிறார்! வருணாச்சிரம முறையை இந்த நாட்டில் ஏற்படுத்தி தன்னுடைய இனம் வாழ வேண்டும் என்பதற்காகவே பாடுபட்டுக் கொண்டு வருகிறார். அதன் காரணமாகத்தான் நாங்கள் இரண்டு பேரும் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒட்ட முடியவில்லை! அவர் இனத்தைக் காப்பாற்ற அவருக்கு இருக்கும் கடமையைப்போல், நம்  இனத்தைக் காப்பாற்ற வேண்டுமென்ற கடமை நமக்கும் இருக்கிறது.  ஆனால், எடுத்தக் காரியத்தை முடித்துக் கொள்ளும் தன்மைக்கு மானத்தைப் பற்றிக் கவலைப்படவேண்டாம் என்ற ஓர் ஆயுதம் அவர்களிடம் இருக்கிறது. நமக்கு மானத்தைப்பற்றி கவலை இருப்பதால் நமக்கு வெற்றி தோன்றுவது கஷ்டம்தான். மானம், ஈனம் என்பதைப்பற்றி கவலைப்படாததற்குக் காரணம் அவர்களுடைய கடவுள்களும் அதன் தருமமும் ஆகும்.

(08.02.1961 அன்று ஈரோட்டில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு) - விடுதலை, 16.01.1961

பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான்

ஜாதி ஒழிப்பு என்பதும் ஆச்சாரியார் கல்வித்திட்ட ஒழிப்பு என்பதும்  வேறு அல்ல. ஆச்சாரியார் கல்வித்திட்டம் ஒழியவேண்டும் என்று ஏன் கூறுகிறோம்? அவர் கல்வித்திட்டமே தன் சுயஜாதி பாதுகாப்புத் திட்டமாகும். அதாவது வருணாசிரம பாதுகாப்புத் திட்டம். ஆகையால் அதை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறோம். ஜாதி என்பது வருணாசிரமத்தின்படி ஏற்பட்டதாகும். ஜாதிகளை எடுத்துக் கொண்டால் அவை அத்தனையும் 3 ஜாதிக்குள் அடங்கிவிடும். இன்று செட்டியார், நாயுடு, முதலியார், கவுண்டர், ரெட்டியார், படையாச்சி, பறையன், சக்கிலி என்று சொல்லப்படும் அத்தனை ஜாதிகளும் அந்த 3 ஜாதிக்குள்ளேயேதான் அடங்கிவிடுகின்றன. என்ன அந்த 3 ஜாதி? 1. பார்ப்பான் அதாவது பிராமண ஜாதி என்று ஒருவன் சொல்லிக்கொள்வது; 2. சூத்திரஜாதி நம்மவர்களை - திராவிடர்களைக் காட்டுவது 3. அடுத்தாற்போல் ஆதாரம் இல்லாமல் தந்திரமான முறையில் புகுத்திய பஞ்சம ஜாதி அல்லது சண்டாள ஜாதியாகும். இன்றைய தினம் நாட்டிலே வருணாசிரம  முறைப்படிதான். இந்தப் பார்ப்பனனும், நம்மவர்களான சூத்திரர்களும், பஞ்சமர்களும் இருக்கின்றனர்.

நம்மவர்களில் சிலபேர் அவனை பிராமணன்  என்றே கூப்பிடுகிறார்கள்.

சில பார்ப்பன அடிமைகள் திராவிடர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? என்று தெரிந்தோ தெரியாமலோ கேட்கிறார்கள். பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்களெல்லாரும் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள் தான். இதை அவர்கள்  பின்பற்றுகிற கலாசாரப்படி கூறுகிறோம். உதாரணமாக, முஸ்லிம் ஒருவரை இரத்தப் பரீட்சை செய்து பார்த்தால், நமக்கும் அவருக்கும் பேதம் இருக்காது. அவன் முன்பு நம்மவனாக இருக்கலாம். ஆனால் கலாசாரப்படி முஸ்லிம் என்கிறான். பார்ப்பானை ஏன் ஆரியன் என்கிறோம்? ஆரிய கலாசாரம் வேறு; அவன் பூணூல் போட்டுக் கொள்கிறான். ஆரியர்கள், மற்றும் ஆரியர் கடவுள்கள், இதிகாசங்கள், சாஸ்திர புராணங்கள் வேறு. ஆனால் இவற்றையெல்லாம் நம் தலைமையில் கட்டினான். அவன் வேறு ஜாதி, பிறப்பு; நாம் வேறு ஜாதி, பிறப்பு என்ற முறையைப் புகுத்தினான்.

ஆச்சாரியார் புதுக் கல்வித்திட்டத்தைக் கொண்டு வந்ததன் நோக்கமென்ன? அந்தக் கல்வித்திட்டத்தின் அடிப்படை என்ன? நீங்கள் கவனிக்க வேண்டும். சூத்திரர்கள் படிக்கக்கூடாது. இதுதான் ரகசியம். வேறு ஒன்றுமில்லை. பாதிநேரம் படிக்கச்சொல்லுகிறார். அந்தந்த ஜாதித் தொழில் சரிவர செய்யும் அளவுக்குப் படிக்கவேண்டும். ஆரியரின் ஜாதிமுறை, வருணாசிரம முறை. வருணாசிரம முறைப்படி, நாம் படிக்கவே கூடாது. ஏதோ வெள்ளைக்காரன் காலத்தில் நாம் 100க்கு 10 பேர் படித்துவிட்டோம். அந்தப்படிப்பைப் படித்ததால் இன்று நாம் பார்ப்பனர்களை மதிப்பது கிடையாது. அவர்கள் என்ன உசத்தி, நாம் என்ன தாழ்வு என்கிறோம். இன்று நகரங்களில் யாரும் பார்ப்பானை சாமி என்று கூப்பிடுவது கிடையாது.

(24.2.1954 அன்று சேலம் மாவட்டம் பள்ளிப்பட்டியை அடுத்த அதிகாரப்பட்டியில் தந்தை பெரியார் சொற்பொழிவு)

- விடுதலை, 27.2.1954

 - விடுதலை நாளேடு 19 1 20

ஞாயிறு, 12 ஜனவரி, 2020

பொங்கல் வாழ்த்தும் - குறள் வாழ்த்தும்

தந்தை பெரியார்
தீபாவளிப் பண்டிகை ஆரியர் உயர்வுக்கும், திரா விடர் இழிவுக்கும் ஆகவே கற்பிக்கப்பட்டது என்றும், அதைத் திராவிடர் கொண்டாடுவது தன்மானமற்ற இழிசெயல் என்றும், சற்றேறக்குறைய 25 ஆண்டுகளாக சுயமரியாதை இயக்கம் மக்களிடையே செய்துவந்த வேண்டுகோளுக்குத் தன்மானத் தமிழர்கள் பலர், தீபாவளியைக் கொண்டாடுவது மானமற்றதும், அறிவற்றது மான செய்கை தான் என்றாலும் மக்கள் இன்பத்துக்குப் பண்டிகை ஒரு சாதனமாக இருப்பதால் தமிழர்கள் அவர்களது குடும்பம் கூடிக்குலாவி இன்பமடைய ஏதாவது ஒரு பண்டிகை வேண்டுமே அதற்கென் செய்வது? என்று கேட்ட காலத்தில், பொங்கல் பண்டி கையைத் தமிழர் பண்டிகையாகக் கொண்டு கொண் டாடலாம் என்று சுயமரியாதை இயக்கம் விடை கூறிற்று. அக் கூற்றுக்கு ஏற்ப இந்த 10 ஆண்டில் பொங்கல் பண்டிகை தமிழர்கள் இடை யில் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து இன்று தீபாவளிப் பண்டிகைக்கு மேலாகத் தமிழ்நாட்டில் மக்கள் கொண்டாட ஆளாகிவிட்டார்கள். தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் தமிழ் இளைஞர்களும், மாணவர்களும் திராவிடர் கழகத்தவர்களும் பெரிதும் தீபாவளிப் பண்டிகையைக் கைவிட்டு விட்டார்கள் என்றும், பொங்கல் பண்டிகைகளைப் போற்றிக் கொண்டாடி வரு கிறார்கள் என்றும் வலிமையாகக் கூறலாம்.
450 பொங்கல் வாழ்த்து
இதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு கூற வேண்டு மானால், இந்த ஆண்டில் எனக்கு வந்த பொங்கல் வாழ்த்துக் கடிதங்கள் என் கைக்குக் கிடைத்தது மாத் திரம் 450-க்கு மேற்பட்டவை களாகும். (இவைகளுக்கு நன்றி செலுத்தி, பதில் எழுத எனக்கு கார்டு, கவர் உட்பட 20 ரூபாய்க்கு மேல் செலவு ஏற்பட்டு இருக்கிறது.)
இவைகளை அனுப்பினவர்கள் திராவிடர் கழகத் தையும் சுயமரியாதை இயக்கத்தையும் சேர்ந்தவர்கள் மாத்திர மல்லாமல் பார்ப்பனர் தவிர்த்த மற்ற எல்லா வகுப்பு மக்களை சேர்ந்தவர் களாகும். இந்த அளவுக்குத் தமிழ் நாட்டில் பொங்கலை மக்கள் உணர்ந்து கொண் டாடியதைப் பற்றி மாத்திரமல்லாமல் இதைக் கொண் டாடிய மக்கள் 100க்கு 90க்கு மேற்பட்டவர்கள் தீபாவளி யையும் மற்றும் பல ஆரியப் பண்டிகைகளையும் வெறுத்து விலக்கி இருப்பது மகிழத் தக்கதாகும்.
தமிழ் மக்கள் இந்தப் பொங்கல் விழாவைக் கொண் டாடி இருப்பது பற்றியும், அவர்கள் எனக்கு வாழ்த்துக் கூறி இருப்பது பற்றியும் நான் மகிழக் கூடியதும் எனக்கு அவர்கள் வாழ்த்தில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் உண்மை யாகவே அவர்களது வாழ்த்துதலால் எனக்கு நல்வாழ்வு ஏற்பட்டது என்று கருதி மகிழ்வதும் நன்றி யறிவித்துக் கொள்ளக் கூடியதும் ஒரு காரியத்திற்கு ஆகவே அவசியம் என்றும், கடமை என்றும் கருதுகிறேன். அது என்ன காரியம் என்றால் அதுதான் தீபாவளி கொண்டாடுவதை விட்டுவிட்டு பொங்கலைக் கொண்டாட முன் வந்ததின் மூலம் ஆரியத்தில் இருந்து பொதுமக்கள் விடுபட்டு தன்மானத் தன்மை அடைந் ததேயாகும். இந்த மகிழ்ச்சிக்கு ஈடாக என் வாழ்வில் எனக்கு வேறு எந்தப் பெரிய நிலை ஏற்பட்டாலும் எனக்கு மகிழ்ச்சி ஏற்படாது  - பொங்கல் பண்டிகை யினால் நமக்கு, நம் தமிழர் சமுதாயத்துக்கு பொதுவில் ஏற்பட்ட பயன், நம்மவர்கள் ஆரியத்தை வெறுக்கும் உணர்ச்சிக்கு ஆகப் பொங்கலை பயன்படுத்திக் கொண்டதுதான் என்பேன்.
ஆதலால் பொங்கல் வாழ்த்துக்கு ஆக எனக்கு வாழ்த்து அனுப்பியவர்களுக்கு நன்றி செலுத்துவதோடு, அவர் களுக்கு நான் திருப்பி மறு வாழ்த்துக் கூறுவது என்னவென்றால் பொங்கலின் பயனாய் உங்களுக்கு வாழ்வு (மான வாழ்வு) ஏற்பட்டது குறித்து எல்லையற்ற மகிழ்ச்சி அடைவதோடு, இந்த ஆண்டில் அதாவது அடுத்த பொங்கல் ஆண்டுக் குள் மற்றும் உங்களைப் பிடித்த ஆரியப் பண்டிகை, கலை, பண்பு காரியங்களும் உணர்ச்சிகளும் அடியோடு ஒழிந்து சுத்தத் தமிழனாக, தன்மானத் தனித் தமி ழனாக விளங்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அந்தப்படியே நீங்கள் அனேகமாய் விளங்குவீர்கள் என்ற நம்பிக்கை கொள் ளுகிறேன் என்பது ஆகும்.
மற்றொரு வாழ்த்து
இந்தப் பொங்கல் வாழ்த்து நான் பெற்றதுபோலவே கூடிய சீக்கிரம் குறள் வாழ்த்துப் பெற்று மகிழும் கால மும் எனக்கு வெகு அண்மையில் இருக்கிறது என்றே இவ்வாண்டுத் தொடக்கத்தில் கருதி எதிர்காலத்தில் நம்பிக்கை வைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.
ஏன் எனில் தீபாவளி முதலாய ஆரி யர்க்கு உயர்வும் திராவிடர்களுக்கு - தமிழர்களுக்கு இழிவும் ஏற்படு வதற்கு ஆக எப்படி ஆரியப் பண்டிகைகள் இருந்து வருகின்றனவோ அதேபோல்தான் ஆரியர்களுக்கு உயர்வும் திராவிடர்களுக்கு இழிவும் கீழ்மையும் மானமற்ற தன்மையும் நிரந்தரமாய் இருந்து வருவதற்கு ஆகவே கற்பிக்கப்பட்டு, நிலை நிறுத்தப்பட்டு வருவ தானவைதான் வேதம், (மனுதர்ம) சாஸ்திரம், புராணம், கீதை, இராமாயணம், பாரதம் முதலியவை கொண்ட கலை, காவியம், இலக்கியம், தர்மநூல், நெறி நூல் என்று சொல்லப்படுபவைகளாகும்.
இந்த ஆதாரங்களை நிலைநிறுத்தவும் பரப்பவும் ஆரியர்கள் தன்மானமற்ற தமிழர் களையும் அறிவற்ற தமிழ் மடையர்களை யும் பல தந்திரங்களால் மானம், அற்ற சூழ்ச்சிகளால் தங்கள் வயப்படுத்தி சமயம், சட்டம், கல்வி, கலை முதலியவை சார்பாகத் தமிழ் மக்கள் எல் லோருடைய இரத்தத்திலும் கலக்கும்படி செய்து விட் டார்கள்.
இராமாயணத்தை, கீதையை ஏற்றுக் கொள்ளாத வனுக்கு ஜட்ஜூ பதவி இல்லை, மந்திரி பதவி இல்லை என்பது மாத்திரமல்லாமல் இராமாயணம், கீதை முதலிய வைகளை ஏற்றுக்கொண்டு பிரசாரம் செய்பவன், பிரசாரம் செய்ய உதவுபவன் எவ்வளவு அயோக்கி யனாக இழிதன்மை உடைய மகனாக இருந்தாலும் அவனே மேல்மகனாக, மகானாக, சிறந்த அறிவாளி யாக, பண்டிதனாக, சிரோன்மணியாகக் கருதப்படுபவன் - கருதப்படுகிறான் என்கின்ற தன்மைக்கு அவை வந்து விட்டபடியால் ஒரு சுயமரியாதைக்காரன் என்ற நிலையில் விழுந்துபட்டு நிலைகுலைந்து கீழ்மைப் பட்டுத் தலையெடுக்க முடியாமல் செய்யப்பட்டுவிட்ட திராவிட சமுதாயத்தை - தமிழர் சமுதாயத்தை இழிவி லிருந்தும் பிறவி அடிமைத் தன்மையிலிருந்தும், முன் னேற்றத் தடையிலிருந்தும் என்ன விலை கொடுத்தாவது விடுதலை செய்து நல்வாழ்வு வாழ்விக்க வேண்டுவது, அதற்காக தொண்டாற்றி மடிவது என் வாழ் நாளினு டையவும் நான் விடும் மூச்சினுடையவும் உள்ளே வாங்கும் மூச்சினுடையவும் லட்சியம் என்று கருதி இருக்கும் நான் அவைகளை அதாவது அந்த ஆரிய நூல்களான சாஸ்திரம், புராணம், இதிகாசம், இராமா யணம், கீதை, பாரதம் ஆகியவை களைத் தமிழர்களு டைய உள்ளத்திலிருந்து, சித்திரத்திலிருந்து, கலையில் இருந்து வேரோடு களைந்து எறிய வேண்டியது முக்கிய, முதலாய, இன்றியமையாத கடமை. ஆனதால் தீபாவளி முதலிய ஆரியப் பண்டிகைகளுக்குப் பதிலாக பொங் கலைக் காட்டியதுபோல் வேதம், சாஸ்திர, புராணம், இராமாயணம், பாரதம், கீதை, முதலியவை களுக்குப் பதிலாக ஒருநெறி, கலை, வழி காட்டுவதற்கு என்று குறளைக் காட்ட வேண்டிய அவசியத்திற்கு ஆளானேன்.
குறள் இல்லாவிட்டால் மனிதன் வாழமாட்டானா? வாழ முடியாதா? என்ற கேள்வி பிறக்கலாம். குறளில்லா விட்டால் மனிதன் வாழலாம்; ஆனால், அறிவும் மானமும் வேண்டும். இவை உள்ளவர்கள் வேறு எது இல்லாவிட்டாலும் மனிதனாக வாழ முடியும். ஆனால் ஆரியமானது நம் நாட்டில் உள்ள தமிழர்களில் 100க்கு 99 பேர்களும் அறிவை அடிமைப்படுத்தி மானத்தை அழித்து இழிமகனாக, கடை மனிதனாக ஆக்கப்பட்டு விட்டதால் ஆக்கப்பட்டது மாத்திரமல்லாமல் அந்தப் படி ஆக்கப்பட்டிருப்பதை ஆசீர்வாதமாகக் கொள் ளும்படி செய்யப்பட்டிருப்பதால் அறிவையும் மான உணர்ச்சியையும் காட்டுவதற்கு ஒரு சாதனம் விளக்கு ஒளி தேவைப்பட்டுவிட்டது. ஆகவே, தமிழனுக்கு இருக்கும் இழிவை - கடைத் தன் மையைக் காட்டவும் மான உணர்ச்சியைத் தூண்டவும்  அறிவு வருவதற்குக் குறளைத் தூண்டுகோலாகக் கொள்ளும்படி செய்ய வேண்டியவனானேன்.
எனது பொங்கல் பரிசு!
நான் கூறுகிறேன் குறள் படிப்பவனுக்கு வேதம் ஏன்? எதற்கு ஆக வேண்டும்? மனுதர்மம் ஏன்? எதற்கு ஆக வேண்டும்?  பாரதம், கீதை, இராமாயணம் ஏன்? எதற்கு ஆக வேண்டும்? என்பதை மனிதன் மானமுள்ள, அறிவுள்ள மனிதன் சிந்திக்கட்டும். எல்லா மனிதனும் சிந்திக்காவிட்டாலும் தமிழன் - திராவிடன் சிந்திக்கட்டும் என்பது தான் எனது வேண்டுகோளும், ஆசையு மாகும். ஆகவே குறள் மனித தர்மத்துக்கு என்று ஆரியர்களால் கற்பிக்கப்பட்ட எல்லா சாதனங் களுக்கும் மாற்றுப் பண்டமாகும்.
ஆகவே இந்த ஆண்டு - பொங்கல் ஆண்டு தொடக்கத்தில் தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்தாகவும் பொங்கல் பரிசாகவும் குறளைக் கொடுக்கிறேன். இக்குறள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழ்ப் பெரி யோர்களால் கொடுத்து வரப்பட்டதேயாகும். அது போல்தான் பொங்கல் விழாவும் பல்லாண்டுகளாகத் தமிழ் மக்களுக்கு தமிழ்ப் பெரியோர்களால் கொடுத்து வரப்பட்டாலும் நான் கொடுப்பதற்கும் அவர்கள் கொடுத்து வந்ததற்கும் பேதம் உண்டு. அதாவது அவர்கள் தீபாவளி, அஷ்டமி, நவமிகளுடன் அவை போல் பொங்கலையும் கருதிக் கொடுத்து வந் தார்கள். அப்படியே பாரதம், கீதை, இராமாயண புராணம், மனுதர்மம்போல் குறளையும் ஒன்றாக கருதிக் கொடுத்து வந்தார்கள். இதன் பயனாய் பன்றியுடன் சேர்ந்த பசுவின் பண்புபோல் பொங்கலும், குறளும் அதனால் ஏற்பட வேண்டிய நலம் கெட்டு கேடு ஏற்படும்படி ஆயிற்று. ஆனால் நான் கொடுப்பது ஆரியப் பண்டிகைகளை ஒழித்து விட்டுவிட்டு அந்த இடத்தில் அதற்கு பதிலாகப் பொங்கலையும், ஆரியக் கலை, தர்ம சாஸ்திரம் ஆகியவைகளான வேத சாஸ்திர புராண இதிகாசங்களை - கீதை, இராமாயணம், பாரதம் ஆகிய வைகளை அடியோடு நீக்கிவிட்டு, மக்கள் உள்ளத்தில் இருந்து ஒழியச்செய்து விட்டு அதற்குப் பதிலாக அவை இருந்த இடத்தில் குறளை - குறள் ஒன்றையே கொடுக் கிறேன். ஆதலால் தமிழர்களுக்கு இப்பொங் கலாண்டில் எனது பொங்கல் பரிசாகக் குறளைக் கொடுக்கிறேன். இதை எப்படிக் கொடுக் கிறேன் என்றால், தமிழ் மக்களுக்கு எனது காணிக் கையாக அவர்கள் என்பால் கொண்டுள்ள அருளுக்கு, அன்புக்கு, நம்பிக்கைக்கு தட்சிணை யாகக் கொடுக்கிறேன்.
பதில் பரிசு தருவீர்களா?
இந்த எனது தட்சிணையை, காணிக்கையை தமிழ் மக்கள் ஏற்று எனக்கு அருள்கூர்ந்தார்கள் என்பதை அவர்கள் காட்டிக்கொள்ள வேண்டுமானால் குறைந்த அளவு என்பால் அருளும் அன்பும் நம்பிக்கையும் கொண்ட தமிழர் ஒரே ஒரு சிறு கருணை காட்ட வேண்டும். அந்தக் கருணை காட்டுவது என்பது அருள்கூர்ந்து - கருணைகூர்ந்து இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு உண்மைத் தமிழனும் பார்ப்பனர்களால் வெளியிடும் பத்திரிகைகளையும், அவர்களால் வெளியாகும் நூல் களையும் கண்டிப்பாக வாங்கக் கூடாது; ஆதரிக்கக் கூடாது என்பதுதான்.
உண்மையும், மானமும் இன உணர்ச்சியும் உள்ள தமிழனையும் காண வேண்டுமானால் அவன் பார்ப் பனப் பத்திரிகையை வாங்காதவன்  -  ஆதரிக்காதவனாக இருக்க வேண்டும். இது தமிழர்களுக்கு, அவர்களது மானத்திற்கும் முன்னேற்றத்திற்கும் மீட்சியின் உயிர்நாடி ஆகும். தமிழர்களாகிய நாம் இந்த ஈன நிலையில் இருப்பதற்கு பாரதம், இராமாயணம், கீதை, மனுநீதியைவிட இந்தப் பார்ப்பனப் பத்திரிகைகளே இன்று முக்கிய காரணமாகும். தமிழர்கள் பலர் இன்று பார்ப்பனர்களுக்கு உண்மையான சூத்திரர்களாய், சூத்திரச்சிகளாய் இருப்ப தற்குக் காரணமும் இந்தப் பார்ப்பனப் பத்திரிகைகளேயாகும்.
ஆதலால் தமிழ் மக்களுக்குப் பொங்கலுக்கு எனது வாழ்த்தும் காணிக்கையும் விண்ணப்பமும் இந்த மூன்றும் தான். அதாவது,
1. ஆரியப் பண்டிகைகளை ஒழித்து, விலக்கி பொங்கல் விழாக் கொண் டாடுவது.
2. பாரதம், இராமாயணம், கீதை, புராணம் முதலிய ஆரிய இலக்கியம், இதிகாசம், தர்ம சாஸ்திரம் முதலி யவைகளை ஒழித்து, விலக்கி, குறளை ஏற்று படித்து உணர்ந்து அதன்படி நடப்பது.
3. இந்து, சுதேசமித்திரன், தினமணி, பாரததேவி, இந்தியன் எக்ஸ்பிரஸ், கல்கி, ஆனந்தவிகடன் முதலிய பார்ப்பனப் பத்திரிகைகளை அடியோடு விலக்கி தமி ழர்கள் திராவிடர்களால் நடத்தப்படும் பத்திரிகைகளை வாங்கிப் படித்து ஆதரிப்பது.
பத்திரிகைக்கு ஆக என்று ஒரு தனித் தலையங்கம் பின்னால் எழுத இருக்கிறேன். அதைப் பார்ப்பனர்களும் அதா வது பத்திரிகைக்காரப் பார்ப்பனர்கள் தவிர்த்து மற்ற பார்ப்பனர்கள் யாவரும் பெரிதும் ஏற்கும் வண்ணம் இருக்கும்.
பொங்குக பொங்கல்!
பொங்குக தமிழ் மக்கள் மானமும் அறிவும்!!
('விடுதலை' 19.01.1949)
- விடுதலை நாளேடு,12.1.20
-

புதன், 1 ஜனவரி, 2020

நான் யார்?


நான் எனக்குத் தோன்றிய, எனக்குச் சரியென்றுபடுகிற கருத்துக்களை மறைக்காமல் அப்படியே சொல்லுகின்றேன். இது சிலருக்குச் சங்கடமாகக்கூட இருக்கலாம். சிலருக்கு அரு வருப்பாக இருக்கலாம். சிலருக்குக் கோபத்தையும் உண்டாக்கலாம் என்றாலும் நான் சொல்வது அத்தனையும் ஆதாரத்தோடு கூடிய உண்மைக் கருத்துக்களே தவிர பொய்யல்ல.

(விடுதலை, 15.7.1968)

எந்தக் காரியம் எப்படி இருந்தாலும் அரசியலில், பொது வாழ்க்கையில் கண்டிப்பாக மனித தர்மம் தவிர வேறு எந்தக் கால தர்மமோ, சமய தர்மமோ புகுத்தப்படக்கூடாது என்பதுதான் எனது ஆசையே ஒழிய, உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் என் விருப்பம்போல்தான் நடக்க வேண்டும் என்பதல்ல.

(விடுதலை, 8.9.1939)

மக்களின் மூடநம்பிக்கைகளை ஒழிக்க வேண்டுமென்பதிலும் மக்களைப் பகுத்தறிவு வாதிகளாக ஆக்கவேண்டுமென்பதிலும் எனக்கு 1925-ஆம் ஆண்டு முதலே உறுதியான எண் ணமும் ஆசையும் உண்டு.

(விடுதலை, 12.10.1967)

நான் மறைந்துநின்று சிலரைத் தூண்டி விட்டு எந்தக் காரியத்தையும் செய்யச் சம்மதிக்க மாட்டேன். ஒருசமயம் எனக்கு அப்படிச் செய்ய ஆசையிருந்தாலும் எனக்கு அந்தச் சக்தி கிடையாது. மறைவாய் இருந்து காரியம் செய்ய, சக்தியும் சில சவுகரியமும் வேண்டும். அந்தச் சக்தியும் சவுகரியமும் எனக்கில்லாததாலேயேதான், நான் என் வாழ்நாள் முழுவதும் தொண்டனாகவே இருந்து தீர வேண்டியதாய் இருக்கிறது என்பதோடு, எதையும் எனக்குத் தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்தித் தாட்சண்யம் இல்லாமல் கண்டிக்க  வேண்டியவனாகவும் இருக்க வேண்டி யிருக்கிறது.

(குடிஅரசு 24.11.1940)

என்னைப் பொறுத்தவரையிலும் நான் என்றும் கட்சிக்காரனாக இல்லவே இல்லை. எப்பொழுதும் நான் கொள்கைக்காரனாகவே இருந்தேன்.

(விடுதலை, 1.6.1954)

எனது பொதுவாழ்வில் நான் அறிவு பெற்ற பிறகு, பார்ப்பனரல்லாதார் ஆட்சி என்றால் வலியப்போய் ஆதரித்தே வந்திருக்கிறேன். இதில் நான் மானம் அவமானம் பார்ப்பதில்லை

(விடுதலை, 2.10.1967)

நான் என் ஆயுள்வரை யாரிடமும் ஓட்டுக் கேட்க மாட்டேன். எனக்காக இரண்டு நல்ல (புகழ்) வார்த்தைகள் சொல்லும்படி யாரிடமும் எதிர் பார்க்கமாட்டேன்.

(விடுதலை, 15.10.1967)

நமது மக்களும், சமுதாயமும் மற்ற நாட்டு மக்களைப் போன்று முன்னேற்றமடைய வேண்டு மென்றுதான் நான் தொண்டாற்றுகிறேன். ஆன தாலே நம் மக்களுக்கு நன்மை செய்யக் கூடியவர் களையும், நம் சமுதாய முன்னேற்றத்திற்காகக் காரியங்கள் செய்யக்கூடிய ஆட்சியாளரையும் சமுதாயத்தின் நலனைக் கருதியே ஆதரிக்கிறேன்.

(விடுதலை, 18.7.1968)

நான் அரசியல், மதத்துறையின்பேரால் யோக் கியமற்ற - மூட- சுயநல மக்களால் வெறுக்கப்பட் டவன்; துன்பப்பட்டவன்; நட்டப்பட்டவன்; மானத் தையும் பறி கொடுத்தவன்; மந்திரிப் பதவியை உதறித் தள்ளியவன்.

(விடுதலை, 14.11.1967)

இன்றையச் சுதந்திரத்திற்கு, முதன் முதல் நானாகவே சிறைக்குப் போகிறேன் என்று இந்த நாட்டில்,  ஏன் இந்தியாவிலேயே சிறைக்குப் போனது  நானும் என் குடும்பமும் தானே.

(விடுதலை, 29.1.1968)

எனது சமுதாய மக்களுக்கு நன்மை செய்கிற கட்சி எதுவாக இருந்தாலும் அதனை ஆதரித்தும், என் சமுதாய மக்களுக்குக் கேடாகக் காரியம் செய்யும் கட்சிகளை எதிர்த்துமே வந்திருக்கின் றேன். ஆட்சியில் இருக்கிறது என்பதற்காக எந்தக் கட்சியையும் நான் ஆதரித்தது கிடையாது.

(விடுதலை, 4.3.1968)

ஒரு சமயம் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்தும் படி சமாதான மாநாடு கூட்டி, காந்தியாரிடம் சங்கர நாயர், கள்ளுக்கடை மறியலை நிறுத்திவிட்டுப் பிறகு சமாதானம் பேசலாம் என்று கேட்டபோது, காந்தியார் சொன்னார்: கள்ளுக்கடை மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை, அது தமிழ் நாட்டிலே ஈ.வெ.ராமசாமி அவர்களின் மனைவி, தங்கை ஆகியவர்கள் கையில் உள்ளது என்று. அந்த அளவுக்கு நானும் எங்கள் குடும்பமும் காந்தியாரின் லட்சியங்களுக்காகச் சிறை சென்றவர்கள்.

(விடுதலை, 28.10.1968)

என்னுடைய சக்தி சிறிது என்பது எனக்குத் தெரியும். ஆனால் என்னுடைய (மனிதாபிமான) ஆசை அளவிட முடியாததாய் இருக்கிறது. அத னாலேயே சக்திக்கும் தகுதிக்கும் மீறிய காரியங் களைச் சொல்லவும் செய்யவும் தூண்டப்படு கிறேன்.

(குடிஅரசு 25.8.1940)

நான் நிரந்தரமாக ஒருத்தனை ஆதரித்து வயிறு வளர்க்க வேண்டுமென்கின்ற அவசியமில் லாதவன். எவன் நமக்கு நன்மை செய்கின்றானோ, நமது சமுதாய இழிவு  நீங்கப் பாடுபடுகின்றானோ அவன் அயல்நாட்டுக்காரனாக இருந்தாலும் சரி, அவனை ஆதரிப்பதில் எந்தக் குற்றமும் இல்லை என்று கருதுபவன் நான்.

(விடுதலை, 20.1.1969)

நரக வாழ்வு வாழ்வதாயிருந்தாலும், அங்கு நான் மனிதனாக மதிக்கப்படுவேனாகில் அவ் வாழ்வே இப்பூலோக வாழ்வைவிட மேலென்று கருதுவேன். நரக வாழ்வு மட்டுமல்ல, அதைவிடப் பல கொடிய துன்பங்களை அனுபவிக்க நேரும் இடமானாலும் அவ்விடத்தில் நான் மனிதனாக மதிக்கப்படுவேன் என்றால் அவ்வாழ்வே இந்த இழிசாதி வாழ்வைவிடச் சுகமான வாழ்வு என்று கருதுவேன்.

(குடிஅரசு 1.5.1948)

தீண்டப்படாதவர்களைக் கிணற்றில் தண்ணீர் எடுக்கவிடாவிட்டால் வேறு தனிக்கிணறு கட்டிக் கொடு; கோயிலுக்குள் விடாவிட்டால் வேறு தனிக் கோயில் கட்டிக்கொடு என்றார் காந்தியார். அப்போதுநான், கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாதென்று இழிவுப்படுத்தும் இழிவுக்குப் பரிகார மில்லாவிட்டால், அவன் தண்ணீரில்லாமலேயே சாகட்டும். அவனுக்கு இழிவு நீங்க வேண்டுமென் பது முக்கியமே தவிர, தண்ணீரல்ல என்றேன்.

(விடுதலை, 9.10.1957)

இன்னும் எத்தனைக் காலத்துக்கு நாம் இந்த உலகத்தில் சூத்திரர்களாக இருப்பது? நம் பின் சந்ததிகளையும் சூத்திரர்களாக இருக்க விடுவது? இந்தத் தலைமுறையிலாவது, இந்த விஞ்ஞான சுதந்திர காலத்திலாவது நமது இழிவு நீங்கி, நாம் மனிதத் தன்மை பெற ஏதாவது செய்ய வேண் டாமா? இதைவிட மேலான காரியம் நமக்கு இருக்க முடியுமா? அதனால்தான் எனது வாழ்நாள் முழுவதையும் இதற்கென்றே நான் அர்ப்பணித்து வந்திருக்கிறேனே ஒழிய முட்டாள் தனமல்ல; துவேசமுமல்ல.

(விடுதலை, 17.11.1957)

ஜாதியை ஒழிக்கிறேன் என்றால் அது மேல் ஜாதிக்காரன் மேல் துவேசம் என்றும், வகுப்புவாதம் என்றும் சொல்கிறான். நாங்கள் ஏன் வகுப்புவாதி? எந்த ஒரு அக்கிரகாரத்துக்காவது தீ வைத்து, எந்த ஒரு பார்ப்பனருக்காவது தீங்கு விளைத்திருக் கிறோமா? ஜாதி இருக்கக்கூடாது என்று கூறினால் வகுப்புத் துவேசமா?

(விடுதலை, 25.10.1961)

இந்த நாட்டில் ஜாதி இழிவைப் போக்கப் பாடுபட்டவர் எல்லாம் மலேரியாவுக்கு மருந்து கொடுப்பவர்கள் போன்றவர்கள். மற்றவனுக்கு வராமல் தடுக்கக் கூடியவர்கள் இவர்கள் அல்ல. நானோ மலேரியாவுக்குக் காரணமான கொசு வசிக்கின்ற தண்ணீர்த் தேக்கத்தைக் கண்டு கொசுவை அழித்துத் தடுக்கும் வைத்தியன் போன்றவன்.

(விடுதலை, 4.11.1961)

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிருகங்கள் போல் நடத்தப்படுகிற பாட்டாளி, கூலி, ஏழை மக்கள்தான் எனக்குக் கண்வலியாய் இருப்ப வர்கள், அவர்களைச் சம மனிதர்களாக ஆக்குவது தான் எனது கண்ணோய்க்குப் பரிகாரம்.

(விடுதலை, 15.10.1967)

எனது சீர்திருத்தம் என்பதெல்லாம் பகுத் தறிவைக் கொண்டு ஆராய்ச்சி செய்து சரி என்று பட்டபடி நடவுங்கள் என்பதேயாகும்.

(குடிஅரசு 24.11.1940)

எனக்கு 60 வயதுக்குமேல் ஆகியும் இளைஞர் சகவாசத்தாலேயே எனது உணர்ச்சி முதுமையை அடையவில்லை. ஏதாவது ஒரு காரியம் செய்யாமலிருக்க, எப்பொழுதும் மனம் வருவதில்லை. ஓய்வு, சலிப்பு என்பவற்றைத் தற்கொலை என்றே நான் கருதுகிறேன்.

(குடிஅரசு 19.1.1936)

மக்கள் உலகம் முழுவதும் ஒன்றுபட வேண்டும். மற்ற உயிர்களுக்குத் தன்னால் கெடுதி இல்லாத வாழ்வு பெற வேண்டும். மனிதனிடத்திலே பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாத சாந்தி வாழ்வுக்கு வகை தேடவேண்டும். இதுதான் எனது ஆசை.

(குடிஅரசு 7.8.1938)

என் தொண்டெல்லாம் நம் மக்கள் உலக மக் களைப் போல் சரிசமமாக வாழவேண்டும்-அறி விலே முன்னேற வேண்டும் என்பதற்குத் தான்.

(விடுதலை, 24.7.1968)

எனக்குச் சுயநலமில்லை என்று கருதாதீர்கள். நான் மகா பேராசைக்காரன். என்னுடைய ஆசையும் சுயநலமும் எல்லையற்றன. திராவிடர் சமுதாய நலனையே என் சொந்த நலமாக எண்ணி இருக்கி றேன். அந்தச் சுயநலத்திற்காகவே நான் உழைக்கிறேன்.

(விடுதலை, 15.1.1955)

நீதிதான் சாட்சி; எனக்கு வேறு சாட்சி இல்லை.

(விடுதலை, 20.11.1957)

யாவரும் கடைசியில் சாகத்தான் செய்வார்கள். சாவதற்காக ஒருவன் வாழ்வை வீணாக்குவதா? எனக்கு உயிர் வாழ்வதற்குச் சிறிதளவு பொருளி ருந்தால் போதும். மற்றப் பொருளையெல்லாம் பிறர்க்குப் பயன்படுத்தவே செய்கிறேன்.

(விடுதலை, 27.7.1958)

என் கருத்துக்கள் பாராட்டப்படுகிறதா? அல்லது புறக்கணிக்கப்படுகிறதா? உயர்வாகக் கருதப்படுகிறதா? அல்லது இழிதாகக் கருதப்படு கிறதா? என்பதைக் குறித்து நான் கவலைப்படாமல், என் கருத்துக்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு கசப்பாயிருந்தாலும் உண்மையை எடுத்துரைப்பது தான் என் வாழ்க்கையின் இலட்சியம்.

(விடுதலை, 28.9.1958)

நான் (எனக்கு ஞாபகமிருக்கிற வரையில்) என்னுடைய  10-ஆவது வயதிலிருந்தே நாத்திகன். ஜாதி, சமயச் சடங்கு முதலியவற்றில் நம்பிக்கையில் லாதவன். ஒழுக்க சம்பந்தமான காரியங்களில்கூட மற்றவர்களுக்குத் துன்பமோ, தொல்லையோ தரப்படாது என்பதைத் தவிர, மற்றபடி வேறு காரியங்களில் ஒழுக்கத்துக்கு மதிப்புக் கொடுத்த வனும் அல்ல. பணம், காசு, பண்டம் முதலியவை களில் எனக்குப் பேராசை இருக்கிறது என்றாலும், அவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியத்தை யாவது காட்டியிருப்பேனேயொழிய, நாணயக் குறைவையோ, நம்பிக்கைத் துரோகத்தையோ காட்டியிருக்கமாட்டேன். யாரையும் ஏமாற்றலாம் என்பதில் நான் சிறிதுகூட முற்பட்டிருக்க மாட் டேன். வியாபாரத் துறையில் பொய் பேசியிருந் தாலும் பொதுவாழ்வுத் துறையில் பொய்யையோ, மனமறிந்து மாற்றுக் கருத்தையோ வெளியிட்டி ருக்கமாட்டேன். இப்படிப்பட்ட நான், எதற்காக ஒரு சமுதாயத்தாரிடம் விரோதமோ, குரோதமோ கொள்ளவேண்டும். நான் நமது நாட்டையும், சமுதாயத்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும், நாகரிகத்திற்கும் கொண்டுவரவேண்டும் என் கின்ற ஆசையுடையவன். இதற்கு முட்டுக்கட்டை யாகப் பார்ப்பனச் சமுதாயம் இருக்கிறது என்று சரியாகவோ, தப்பாகவோ கருதுகிறேன்.

அப்படி இல்லை என்பதைப் பார்ப்பனர்கள் காட்டிக்கொள்ள வேண்டாமா? உண்மையிலேயே எனக்கு மாத்திரம் பார்ப்பனர்களுடைய ஆதரவு இருந்திருக்குமானால், நம் நாட்டை எவ்வளவோ முன்னுக்குக் கொண்டுவர என்னால் முடிந்திருக்கும்.

(விடுதலை, 1.1.1962)

நான் உலகமே நாத்திக (பகுத்தறிவு) மயமாக வேண்டும் என்பதற்காகவே உயிர் வாழ்பவன்.

(விடுதலை, 2.9.1967)

எனக்கு மக்கள் நலம்தான் இலட்சியம்.

(விடுதலை, 15.10.1967)

நான் பதவிவேட்டை உணர்ச்சிக்காரன் அல்ல. சமுதாய வெறி உணர்ச்சி கொண்டவன் ஆவேன்; நாளைக்கும் சமுதாய நலத்தை முன்னிட்டு எதை யும் துறக்கவும், எதையும் செய்யவும் காத்திருக் கிறேன்.

(விடுதலை, 2.5.1968)

எப்போதும் என்னிடம் என் பணம் என்று ஒன்றுமில்லை. நான் பொதுப் பணிக்கு வந்தபோது என்னிடமிருந்த பணத்தை-சொத்தையெல்லாம் இயக்கத்தின் பெயருக்கே எழுதி வைத்து விட்ட தால், இயக்கப் பணத்தில்தான் நான் சாப்பிடுவது முதல் எல்லாமாகும். நீங்கள் கொடுத்த பணத் தைத்தான் கல்லூரிக்கும்-மருத்துவமனைக்கும் வழங்கினேனே தவிர, என் பணம் எதுவும் இல்லை. எது பொது நன்மைக்கானது என்று பார்த்து, (பொது) இயக்கப் பணத்தை அதற்காகச் செலவிட்டேன்.

(விடுதலை, 8.8.1968)

என்னைப் பொறுத்தவரையில், ஒரு மனிதர் யாராக இருந்தாலும் தமிழர்பற்று உடையவர் என்று கருதினால், நான் அவருக்கு அடிமையே ஆவேன். குணம் குடிகொண்டால் உயிர்க்கு உயிர்தான். இல்லாவிடில் அவர் யாரோ என்று கருதுகிறவனாவேன்.

(விடுதலை, 15.9.1968)

பழைமையைப் பாராட்டுவது நமது மக்களுக்கு ஒரு பெருமையாகக் காணப்படுகிறது. நானோ பழமைப் பித்தை வெறுக்கிறவனாக இருக்கிறேன். அதனாலேயே நான் வெகுபேர்களால் வெறுக்கப் படுகிறேன். ஆனாலும் அறிவாளிகள் சீக்கிரம் என் பக்கம் திரும்பிவிடுவார்கள் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

(குடிஅரசு 2.8.1936)

நான் ஒரு பகுத்தறிவுவாதி என்று கருதிக் கொண்டிருக்கிறேன். பகுத்தறிவுக்கு ஒத்த எதுவும் எனக்கு விரோதம் அல்ல. பகுத்தறிவுக்கு ஒவ்வாத எதுவும் எனக்கு நட்பும் அல்ல.  இதுதான் எனது நிலை.

(குடிஅரசு 25.3.1944)

என்னைப் பொறுத்தமட்டிலும் நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒளிக்காமல் எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால் அதற்குத் தனிச்சக்தி உண்டு என்று நம்புகிறவன்.

(விடுதலை, 9.3.1956)

நான் எனது கொள்கைக்கு-பேச்சுக்கு எந்த மேற்கோளையும் காட்டி விளக்குபவன் அல்ல. அப்படி அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று தேடித் திரிபவர்களின் செயல் அறிவுடைமை யாகாது. ஆனால், நான் கூறிய கருத்துக்கு ஆதர வாக இன்ன இன்னாரும் கூறியுள்ளார் என்று எடுத்துக்காட்ட வேண்டுமே அல்லாது இன்ன இன் னார் இன்ன இன்ன கூறியுள்ளார். ஆகவே நானும் கூறுகிறேன் என்று எடுத்துக்காட்டக் கூடாது.

(விடுதலை, 26.2.1961)

ஒரு பகுத்தறிவுவாதி என்கின்ற எனக்கு மதப்பற்றோ, கடவுள் பற்றோ, இலக்கியப் பற்றோ, மொழிப் பற்றோ எதுவும் கிடையாது. அறிவிற்கு ஏற்றது, மக்களுக்கு நன்மை பயப்பது, மக்களின் அறிவை வளர்ச்சியடையச் செய்வது எதுவோ அதைப் பற்றியே பேசுவேன்.

(விடுதலை, 20.4.1965)

விடுதலை நாளேடு, 24.12.19