ஞாயிறு, 3 ஜூலை, 2016

ஆதிதிராவிடர் வாலிபர்கள் வரவேற்பு


- தந்தை பெரியார்
தோழர்களே! நீங்கள் இங்கு எனக்கு உபசாரப் பத்திரம் வாசித்துக் கொடுக்கப் பட்டதைப் பற்றியும், தலைவர் புகழ்ந்து பேசியதைப் பற்றியும், நான் சிறிதும் பெருமையாகக் கொள்ளவில்லை. ஏனெனில் நான் பிறந்து வளர்ந்ததும் இந்த ஊர். நீங்கள் பிறந்து வளர்ந்ததும் இந்த ஊர். அன்றியும் சுமார் 10 வருஷத் திற்கு முந்தியவரையில் உங்களுக்கும் எனக்கும் வெகு நெருங்கிய சம்பந்தம் இருந்து வந்திருக்கிறது. ஆதலால் உள்ளூர்க்காரர்கள் நெருங்கிய சம்பந்தம் இருந்து வந்தவர்கள் ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொள்வது என்பது பரிசிக்கத் தக்கது என்றே கருதுகிறேன்.
உங்கள் பத்திரத்தில் உள்ளூரிலிருக்கிற உங்களை நான் முன்போல் கவனிக்கவில்லை என்று கண்டு இருக்கிறீர்கள். முன்போல் உங்களுக்குப் பலவித நன்மைகள் செய்யவில்லை என்று சொல்லுகிறீர்கள் இவைகள் வாதவமாயிருக்கலாம். ஏனெ னில் நான் இந்த ஊர் முனிசிபல் சேர் மனாய் இருந்த காலத்தில் உங்கள் தெரு விற்கு என்ற அதிக சலுகை காட்டினது போல் இப்போது நான் ஈடுபட்டிருக்கும் காரியத்தில் தனி சலுகை என்றும், பொருள் சம்மந்தமாயும் நான் எதைச் செய்யமுடியும்? என் சொந்தத்திலும் எனக்கு முன்பு இருந்த மாதிரியான பொருள் வருவாய் கிடையாது. பொதுக் காரியங்களின் உண்மையாய் உழைப்ப வர்களுக்கு வரும்படி இல்லாமல் போவதோடு கைபொருளும் சிதைந்து போய் விடும். ஆதலால் பொருள் மூலமாய் செய்யும் நன்மைகள் செய்வது கஷ்டமான காரியம்.
மற்றபடி நீங்கள் குறிப்பிட்டப்படியே உங்கள் சமூக விஷயத்தில் பொதுவாக ஒரு புரட்சிப் போன்ற காரியத்தை சுயமரியாதை இயக்கம் செய்திருக்கிறது என்று சொல்லவதைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் காங்கிரசில்  இருக்கும் போதும் தீண் டாதார் விஷயத்தைப் பற்றியே. அதிகம் உழைத்திருக்கிறேன். வைக்கம் சத்தி யாகிரகம் என்பதும் தீண்டாமை விலக் குக்காகத் தான் ஏற்பட்டதே தவிர வேறில்லை. 3 வருடத்திற்கு முன் நடந்த ஈரோடு கோயில் பிரவேசம் என்பதும் அது சம்பந்தமான வழக்கும் தீண்டாமை விலக்கு சம்பந்தமாக ஏற்பட்டதே தவிர வேறில்லை.
இன்னும் சுயமரியாதை இயக்கத் திலும் தீண்டாமை விலக்குத் தத்துவம் தான் முக்கிய இடம் பெற்றிருக்கிறது. அது விஷயமாய் சமபந்தி போஜனம், கலப்பு மணம் முதலியவைகள் கூட ஜாதி வித்தி யாசம் என்பது சிறிதும் பாராமல் அநேக காரியங்கள் நடைபெற்று வருவதை நீங்கள் உணர்ந்தே இருக்கிறீர்கள். இங்கு சற்று முன் பேசிய தோழர் அன்ன பூரணியம்மாள் ஒரு பறப்பெண் அவரை மணம் செய்து கொண்ட இங்கிருக்கும் தோழர் ரத்தின சபாபதி ஒரு திருநெல் வேலி சைவர் ஒன்றுக்கொன்று எவ்வளவு வித்தியாச பாவிக்கப் படுவது மாறி இன்று சதிபதிகளாய் உங்கள் முன் விளங்கு வதைப் பாருங்கள். உங்கள் சமுகத்துக்கு சகலதுறைகளிலும் சர்க்கார் உத்தி யோகத்திலும் தனி பிரதிநிதித்துவம் எப்படி வந்தது? ஓர் காலத்தில் சுய மரியாதை இயக்க மந்திரிகளாய் இருந்த டாக்டர் சுப்பராயன், தோழர் முத்தையா முதலியார் ஆகியவர்கள் காலத்தில் தான் இது ஏற்பட்டது. அது போலவே சட்டசபை முதலிய தாபனங்களிலும்கூட உங்களுக்குத் தனி பிரதிநிதித்துவம் எப்படிக் கிடைத்தது. உலகமே வெறுத்து தள்ளிய சைமன் கமிஷனை சுயமரியாதை இயக்கம் தான் உங்கள் நன்மைக்காக வரவேற்று, உங்கள் குறைபாடுகளைச் சொல்லி கொள்ளும்படி வேண்டிக் கொண்டதுடன் உங்கள் குறைபாடுகளையும் அது அறியும்படி செய்தது. அதன் பயன் தான்  இப்போது எத்தனையோ பேர் தடுத்தும் சூழ்ச்சி செய்தும் ஒரு அளவாவது நீங்கள் அவைகளிலும் தானம் பெற முடிந்தது. உங்களுக்குத் தனி கிணறும், தனிக் கோயிலும் கட்ட வேண்டு என்று சொன்ன தேசியங்களும், மாளவியாக்களும் உங்களுக்கு பொது கிணற்றில் உரிமையும், பொதுக் கோயில்களில் அனுமதியும் கொடுக்கிறோம் என்று வாயளவிலாவது சொல்லக் கூடிய நிலைமை எப்படி ஏற்பட்டது? சுய மரியாதை இயக்கம் உங்கள் நிலைமையை உத்தேசித்தும், தேசியத்தின் வண்டவாளத்தை வெளிப்படுத்தியும் தீண்டாமை விலக்கின் சூழ்ச்சியை வெளியாக்கியும் செய்த பிரசாரமல்லவா என்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள் இந்த காரியங்களுக்காக சுயமரியாதை இயக்கமும், தோழர்களும் பொது சனங் களிடத்தில் எவ்வளவு கெட்டப் பெயர் வாங்கினார்கள், எவ்வளவு பழிப்புக் கும் தூஷணைக்கும் ஆளானார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா?
இவற்றை யெல்லாம் யோசித்துப் பார்த்தால் உங்களுக்கு ஏதாவது நன்மை ஏற்பட்டதா? இல்லையா என்பது நன்றாய் விளங்கும். இனிமேல் நீங்கள் ஒன்றுக்கும் கவலைப் பட வேண்டியதில்லை. இனியும் 10 வருஷக்காலத்திற்குள்  தீண்டாமை இந்திய நாட்டை விட்டு பறந்தே ஓடிவிடும். தேசிய சூழ்ச்சி குறுக்கிடாமலிருந்தால் இன்னும் உங்களுக்கு எவ்வளவோ நன்மை ஏற்பட மார்க்கமுண்டு. எப்படியெனில் உலகம் ஒரு  பெரும் புரட்சிக்கு தயாராகிக் கொண்டு வருகிறன்றது. அப்புரட்சி வெற்றி பெற்றாலும், தோல்வி, அடைந்தாலும் தீண்டாமையும், தாழ்த்தப்பட்ட தன்மையும் சமீபத்தில் அழிந்துதான் தீரும். இந்த நாட்டில் பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்பட்டு 160 வருஷ காலமாகியும் தீண்டாமை ஒழிக்கப் படாமல் இருப்பது பிரிட்டீசாருக்குப் பெருத்த அவமானகரமான காரியமாகும். அவர்கள் இனி ஆட்சி செய்ய தகுதி யுடையவர்கள் அல்ல என்பதற்கு இந்த ஒரு காரணமே போதும். பிரிட்டிஷார் இந்திய பொது ஜனங்கள் மீது, பார்ப்பனர் மீது, இந்து மதத்தின் மீது பழி போடலாமானாலும், இவர்களுக்கு அறிவும் யோக்கிய பொறுப் பும் எங்கு போயிற்று? என்ற கேள்விக்கு இவர்கள் என்ன பதில் சொல்லு வார்கள்.
ஆகவே இனி யாருடைய தயவும் தேவை யில்லாமலேயே காரியங்கள் நடந்து விடும். உலகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சுயமரியாதை உதயம் ஆகி விட்டது. அதன் முன் எந்த மதமும், எந்தக் கடவுளும், எந்த மகாத்மாக்களும், எந்த தேசிய மும், எந்த அரசாங்கமும் இனி தடையாய் நிற்க முடியாது. இவைகள் இத்தனையும் அதன் வேகத்தில் கலந்து கொண்டு உங்களுக்கு நாங்கள் தான் நன்மை செய்தோம் என்று சொல்லி போலி உரிமை கொண்டாடி மக்களை ஏய்க்கவே அவைகள் இப்போது பாடுபடுகின்றன. இந்த ஏய்ப்பில் நீங்கள் சிக்கி விடாதீர்கள். உங்களுக்கு விடுதலை வேண்டுமானால், சமத்துவம் வேண்டுமா னால் எந்த மதத்தையும், எந்த கடவுளையும், எந்த தேசியத்தையும், எந்த மகாத்மாவையும் எந்த அரசாங்கத்தையும் எதிர்பாராதீர்கள். இவைகள் ஒன்றினாலும் உங்களுடைய தீண்டாமையை  ஒழித்து சமதர்மம் கொடுக்க முடியாது. உங்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி ஏற்பட வேண்டும். அவ்வுணர்ச்சி உண்மையாக உங்களுக்கு ஏற்பட்டால் உங்களை அறியாமலே பெரியதொரு புரட்சி ஏற்பட்டு விடும். அதில் நீங்கள் மாத் திரம் சமத்துவமைடந்து உலக சுகபோகங் களில் சம சுதந்திரம் பெறுவதோடு நில் லாமல் உலகிற்கே சமதர்மம் வழங்கக் கூடியவர்களாகி விடுவீர்கள். ஆனால் நீங்கள் உண்மை சுயமரியாதை வீரர்களாக வேண்டும் மதத்திற்கு ஆளாவதோ, கடவு ளுக்கு அடிமையாவதோ, தேசியத்திற்கும், அரசாங்கத்திற் கும் அடிமையாவதோ ஆன காரியங்களில் எதில் கட்டுப்பட்டு விட்டாலும் உங்கள் புரட்சி அடங்கிவிடும், வலுவற்றதாகி விடும். பிறகு பழைய கருப்பன்தான் ஆய்விடுவீர்கள்.
நான் ஏன் இப்படி சொல்லுகிறேன்? எனக்கு மதமும் கடவுளும் இருந்திருக்க வில்லையா? இந்த ஊர் கோவில்களைப் போய் பாருங்கள் எங்கள் குடும்பப் பெயர் அங்கெல்லாம் இருக்கின்றதா இல்லையா? நாமம் பூசிக் கொண்டோ சாம்பல் அடித்துக் கொண்டோ இந்த ஊருக்கு வந்த பாகவதர் அடியார் என்பவர்களான சோம்பேறி களுக்கெல்லாம் சத்திரம் போல் சாப்பாடு போட்டு வந்ததை நீங்கள் அறிவீர்களா? சர்க்காரோடு தோளோடு தோள் போட்டு அதிகாரிகளுடன் உரைத்தது நீங்கள் அறிவீர்களா? தேசியத்தில் முன்னனியில் நின்று குடும்பத்துடன் அலைந்ததும் பல தடவை சிறை சென்றதும், நீங்கள் அறி வீர்களா? நீங்கள் உள்ளூர்க்காரர்கள். ஆனால் சகலமும் நேரில் பார்த்தவர்களான தால் இதை உங்களிடம் சொல்லுகிறேன். அயலூர்க்காரர்களுக்கு வேண்டுமானால் இது மயக்கத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கலாம். அப்படி இருக்க இப்போது ஏன் இவைகள் அவ்வளவும் புரட்டு என்றும் உங்களுக்கு பயன்படாதது என்றும், பணக்காரர்களுடையவும் சோம்பேறி வயிற்றுப் பிழைப்புக் காரர்களுடையவும் நன்மைக்கு ஏற்ற ஆயுதங்கள் என்றும் ஏன் சொல்லுகிறேன். எல்லாவற்றையும் நான் அனுபவித்து பார்த்து விட்டேன். என்னு டைய 40, 50 வருஷ உலக அனுபவமும் இவைகளை சந்தேகமற விளக்கி விட்டது. ஆகவே, நீங்கள் துணிவு கொண்ட புரட்சிக் குத் தயாராகுங்கள். நீங்கள் ஏன் கீழ் ஜாதி என்று உங்களையே கேள்வி கேளுங்கள். கடவுள் காரணம் என்று தோன்றினால் உடனே அந்த கடவுளைத் தூள்தூளாக்கி உடைத்தெரியுங்கள். மதக் கட்டளை என்று தோன்றினால். அம்மதத்தைச் சின்னாபின்ன மாக்குங்கள் அல்லது அரசாட்சி முறை என்று கண்டால் அதை அழித்திடுங்கள் அல்லது மனிதர்களு டைய சூழ்ச்சி  சுயநலப் பித்து என்று தோன்றினால் தைரியமாய் அவர்களிடம் இனிமேல் இந்தப் புரட்டு நடக்காது என்று சொல்லுங்கள் உங்கள் புரட்டு களை உணர்ந்து விட்டோம் நல்ல தனத்தில் யோக்கியமாய் நடக்கிறீர்களா? அல்லது இதற்காக எங்கள் உயிரை இழக்க வேண்டியதுதானா? என்று கேளுங்கள்.
இதில் ஒன்றும் தப்பிதமில்லை. ஏனெ னில் பாடுபட்ட நீங்கள் பட்டினி கிடக் கவும், கீழ் ஜாதியாய் இருக்கவும், சோம் பேறியாய் இருந்தவர் செல்வனாய் இருக்கவும், மேல் ஜாதியாய் இருக்கவும் ஏற்பட்ட முறைகள் எதுவானாலும் அதை ஒழிப்பது எவ்விதத்திலும் குற்ற மாகாது அவை புரட்டின் பேரிலும் சூழ்ச்சியின் பேரிலும் சுயநலத்தின் பேரிலுமே கட்டப்பட்ட கட்டடமாகும். உங்களுக்கு உண்மையான சுயமரி யாதை உணர்ச்சி வந்து விட்டால் அது மணலால் கட்டிய வீடு சரிந்து விழுவது போல் அதுதானே சரிந்து விழுந்து விடும். ஆதலால் நீங்கள் உங்கள் பங்கை அடைய எதன் பேராலும் பின் வாங்கா தீர்கள். உங்களுக்கு எந்த கோவிலுக்குள் போய் எந்த கடவுளை வணங்க அனுமதி கிடைத்துவிட்டாலும் இதனால் எல்லாம் இன்று நீங்கள் படும் அரை பட்டினி அவதையையும், அரை நிர்வாண அவ தையையும், கல்வி இல்லாமல் தற்குறி களாய் மடையர்களாய் ஆக்கி வைத் திருக்கும் பகுத்தறிவற்ற அவதையும் ஒரு காலமும் நீங்கிவிடப் போவதில்லை. அதற்கு ஏற்ற முயற்சிகளே செய்ய வேண்டும் அதிலே வெற்றிபெற வேண் டும் அதற்காத்தான் சுயமரியாதை உணர்ச்சி வேண்டுமென்கிறோம் என்பது வாகப் பேசி முடித்தார்.
(வெளிநாடு சென்று திரும்பியபின் ஈரோட்டில் 27.11.1932ந் தேதி ஆதிதிராவிட வாலிபர்கள் கொடுத்த வரவேற்பில் ஆற்றிய சொற்பொழிவு).
குடிஅரசு - சொற்பொழிவு - 04.12.1932
விடுதலை,8.2.15