புதன், 22 ஆகஸ்ட், 2018

நாம் இந்து என்றால்...... தந்தை பெரியார் கருத்து

நாம் ஒரு இந்து என்றால், நமக்கு நாம் கண்ணால்கூட பார்க்க முடியாத, காதால்கூட கேட்கமுடியாத வேதம், சாஸ்திரம் ஆகியவைகளையும் - நம்மை இழி மகனாக்கும் தர்மங்களையும் பிர்மா, விஷ்ணு-சிவன் இவர்கள் மனைவிகளாக சரஸ்வதி, லட்சுமி, பார்வதிகளையும் மகான்களையும், அவதாரங்களாகிய கந்தன், கணபதி, இராமன், கிருஷ்ணன்களையும், தேவர்களாகிய இந்திரன் முதலியவர்களையும் இவர்களது நடத்தைகளையும், இவற்றைக் குறிக்கும் புராணங்கள், இதிகாசங்கள், நெற்றிக் குறிகள் முதலியவைகளையும் நம்பியாக வேண்டும்.

இவற்றில் எதை நம்பாவிட்டாலும் நாம் இந்துவாக மாட்டோம். இந்த நிலையில் உள்ள இந்துவும் சூத்திரனாகிய நாம் தீண்டாமை ஒழிய வேண்டுமென்று சொன்னால் அதில் ஜாதியோ, சாத்திர அறிவோ இருக்கிறது என்று எப்படிச் சொல்லமுடியும்?

ஆகவே மானமுள்ள அருமைத் தமிழ்மக்களே! நமக்கு உண்மையில் தீண்டாமையென்றும் ஜாதிக்கேடும், இழிவும் நீங்கவேண்டுமானால் இந்து மதத்தை விட்டு நீங்கியாக வேண்டும். இந்துமதம் என்பதாக ஒருமதம் இல்லை என்பதோடு அதற்கு ஆதாரமும் இல்லை . இந்துமதம் இந்து சட்டம் (இந்து லா) இந்து ஆட்சி (காங்கிரஸ் ஆட்சி) என்பவை எல்லாம் பார்ப்பன மதம், பார்ப்பன சட்டம், பார்ப்பன ஆட்சி ஆகுமே அல்லாமல் - தமிழ்நாட்டில் தமிழுக்கு என்று சூத்திரன், தீண்டப்படாதவன் என்பதைத் தவிர வேறு எந்த உரிமையும் கிடையாது மாற்றமடையவும் முடியாது.

ஆகவே தமிழன் தனக்கு இந்துமதம் வேண்டுமா சூத்திரப் பட்டமும், தீண்டாமையும் ஒழிய வேண்டுமா? என்பதைப் பற்றி அறிவோடு, மானத்தோடு நல்லவண்ணம் சிந்தித்து முடிவெடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
மானம் பெறவும்-இழிவுகள் நீங்கவும் வழி:

மானம் பெறுவதும், ஈன சாதித்தனம் ஒழிவதும் அவசியம் என்று பட்டால் முதலாவது நெற்றிக் குறியினை ஒழித்துத் தள்ளுங்கள். இரண்டாவதாக கோவிலுக்குப் போவதை நிறுத்திக் கொள்ளுங்கள். மூன்றாவதாக எந்த இந்துமதப் பண்டிகையையும் கொண்டாடாதீர்கள். பார்ப்பானை பிராமணன் என்று சொல்லாதீர்கள்!
- ஈ.வெ.ரா. ‘விடுதலை' 11.8.1973

- விடுதலை ஞாயிறு மலர், 11.8.18

திங்கள், 20 ஆகஸ்ட், 2018

இந்தியாவின் பொருள் நஷ்டத்திற்கு காரணம்

தந்தை பெரியார்


இந்திய நாடு எவ்விதமான வளத்திலும் மற்ற நாடுகளை விட இளைத்ததல்ல என்பதும், இந்தியாவில் இராஜாக்கள், ஜமீன்தாரர்கள் முதலிய செல்வவான் களும், மற்றும் அவர்களுக்குச் சமானமான மடாதிபதிகள், ஆச்சாரிய பீடங்கள், கோடீஸ்வரர்கள் ஆகியவர்களும் ஆனபிரபுக்கள் மற்றநாடுகளுக்கு இளைக்காத அளவில் தாராளமாய் இருந்து வரு கின்றார்கள் என்பதும் யாவரும் அறிந்த உண்மை யாகும். அதுபோலவே, வியாபாரிகளும், வியாபாரப் பொருள்களும் கூட மற்ற நாடுகளைப் போலவேதான் இங்கு இருந்துவருகின்றன.


விவசாயத் துறையிலும்  ஏராளமான பூமிகள் இருப்பதும், அவற்றுக்கு அனுகூலமான இயற்கைநீர் பாசன வசதிகள் இருப்பதும், ஒவ்வொரு மிராசுதாரர்கள் 1000 ஏக்ரா, பதினாயிரம் ஏக்ரா,  சிலர் லட்சம் ஏக்ரா-பூமிகளையும் உடையவர்களாக இருப்பதும், விவசாயம் செய்யப்பட வேண்டிய பூமிகள் இன்னும் எவ்வளவோ இருப்பதுமான நாடாகவும் இருப்பதின் மூலம் விவசாயத் துறையிலும் இந்தியா மற்றநாடுகளுக்கு இளைக்காததாகவே இருந்து வருகின்றது.


இப்படிப்பட்ட  பல்வளமும் பொருந்திய இந்தியநாடு ஏன் தரித்திரமான நாடு என்றும், அடிமையான நாடு என்றும், ஏழைகள் பெருத்த நாடு என்றும் சொல்லப் பட்டு வருகின்றது என்பதைத் தேச முற்போக்கில் கவலை கொண்டவர்கள் யோசிக்கத்தக்கதேயாகும்.


முதலாவது, இந்தியாவின் மேல்கண்ட வளமுள்ள செல்வம் எல்லாமக்களும் அடையத்தக்க மாதிரியான சமுக அமைப்பு இல்லாமல் செல்வங்கள் சில வகுப்பு மக்களுக்கே உரியதாகவும் அனுபவிக்கத் தக்கதாக வுமான சமுக அமைப்பு முக்கியமான காரணமாகும். அதாவது, வருணாச்சிரம தருமப்படி இன்ன இன்ன வகுப்புக்கு இன்ன இன்ன தொழில் இன்ன இன்ன உரிமை என்பதான திட்டமே நாட்டின் செல்வம் எல்லோருக்கும் பரவுவதற்கில்லாமல் தடைப்படுத்திக் கொண்டிருக்கிறது.


இரண்டாவது, ஒரு வகுப்பு மக்கள் அதாவது 100க்கு 90 பேர்களுக்கு மேலாகக்கொண்ட சமுக மக்கள் அவர்களது வயிற்றுக்குப் போதுமான அளவுக்கு மேல் பெற முடியாத நிபந்தனைக்குள்ளாக்கி வைக்கப் பட்டதுடன், அவர்கள் கையில் தங்கள் வயிற்றுக்கு வேண்டிய ஆகாரத்தின் அளவுக்கு மேற்பட்ட எந்தப் பொருளையும் வைத்திருக்க உரிமையில்லாதவர் களாக்கப்பட்டிருக்கின்றது என்பது இரண்டாவது காரணமாகும். இந்த உண்மைக்கு ஆதாரம் மனுதர்ம சாதிரத்தில் நன்றாய்க் காணலாம். அதாவது, "சூத்திரன் பொருள் சேர்த்து வைத்திருந்தால் பிராம ணனுக்கு ஆபத்தாக முடியும்;" "சூத்திரன் பொருள் வைத்திருந்தால் பிராமணன் பலாத்கார மாகப் பிடுங்கிக் கொள்ளலாம். சூத்திரன் பொருளைப் பிராமணன் எப்படிவேண்டு மானாலும் கொள்ளை அடிக்கலாம்."


"அடிமையான சூத்திரன் பொருள் வைத்திருக்க உரிமை உடையவனல்ல" என்கின்ற அநேக ஆதாரம் இந்து மத தரும சாத்திரங்களில் இருக்கின்றன. (இங்கு சூத்திரன் என்பதற்கு பொருள் தொழிலாளிகள் என்பதேயாகும்.)


இந்த மாதிரியான திட்டங்களை ஏற் படுத்த ஆதாரமாயிருந்தது வருணாசிரம தருமமேயாகும்.


வெள்ளைக்கார அரசாங்கத்தின் பயனாய் இந்த தர்மங்கள் சிறிது சிறிது மாற்றமடைந்து ஏதோ 100ல் ஒருவர், ஆயிரத்தில் ஒருவர் செல்வவான்கள் ஆகவும் வருண முறை வரி பணம் சம்பாதிக்க உரிமை உடையவர்களா னாலும் கூட அந்தப் பணமானது மனுதரும சாத்திரத் தில் குறிப்பிட்டுள்ளது போல் அதாவது, 'சூத்திரன்' செல்வத்தை பிராமணன் எந்த விதத்திலானாலும் கொள்ளை கொள்ளலாம் என்கின்ற தருமப்படி சூத்திரன் செல்வத்தை கொள்ளை கொள்ளவே தலம், கோவில், குளம், புண்ணியம், பாவம், சடங்கு முதலிய காரியங்களின் மூலம் கொள்ளை அடிக்கப்பட்டு விடுகின்றன.


இந்தக்காரணத்தாலேயே 'சூத்திரர்கள்' என்கிற வகுப்பினரில் 100-க்கு 75 பேர்கள் கடன்காரர்களாவே இருக்க நேரிட்டு இருக்கின்றது.


இவை ஒருபுறமிருந்தாலும், இன்று பொருளாதாரக் கஷ்டத்தையே பெரும்பாலும் எடுத்துச் சொல்லி அதை நிவர்த்திப்பதற்காக இந்தியாவுக்குச் சுயராஜ் ஜியம் வாங்கித் தருகின்றதாய்ச் சொல்லும் அரசியல் தலைவர் திரு. காந்தி அவர்களும் இந்த வருணாசிரம முறையை அடிப்படையாக கொண்ட சுயராஜ்ஜிய மேதான் வேண்டும் என்று சொல்லி அதற்காகவே பாடுபட்டு வருகின்றார்.


இதற்கு உதாரணம் வேண்டுமானால், அவர் அவ்வப்போது பேசியிருக்கும் பேச்சுகளும், வெளியிட் டிருக்கும் அபிப்பிராயங்களுமே போதுமானதாகும்.


முதலாவது திரு.காந்தி அவர்கள் தன்னை ஒரு வருணாசிரம தர்மி என்றும், இந்தியாவில் வருணாசிரம தருமம் குறைந்ததாலேயே அந்நிய ஆட்சி ஏற்பட்டதென்றும், அதனால் வருணாசிரம தரும ஆட்சியை ஏற்படுத்தவே தான் பாடுபடுவதாகவும் பல தடவைகளில் தாராளமாய், வெளிப்படையாய் எடுத்துச்சொல்லி இருக்கிறார். அந்தப்படியே சொல்லி யும் வருகின்றார்.


ஆனால், இந்த இடத்தில் வாசகர்களுக்கு ஒரு மயக்கம்  ஏற்படலாம், அது என்னவென்றால், திரு. காந்தியவர்கள் வருணாசிரம தருமத்தைப்பற்றிப் பேசும்போது, தனது 'வருணாசிரம தருமம் வேறு' என்று சொல்லி வருகின்றதால் அது வேறாயிருக்கலாம் என்று கருதி இருக்கலாம். அது எப்படியிருந்த போதிலும் அதாவது, ஜாதி உயர்வு, தாழ்வு சம்பந்தமான காரியம் எப்படியிருந்தபோதிலும், வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதிலும், அவனவனுடைய பரம்பரைத் தொழிலையே அவனவன் செய்ய வேண்டுமென்ப திலும், அவர் சந்தேகத்திற்கு இடம் இருக்கும்படியாகக் கூடப் பேசாமல் தெளிவாகவே ஜாதி பாகுபாடுகளும், சுதர்மமும் அதாவது அவனவன் குலத்தொழிலும்) கண்டிப்பாய் அனுஷ்டிக்கப்படவேண்டும் என்றே சொல்லு கின்றார். (இது அவர் எழுதியிருக்கும் பகவத்கீதை மொழி பெயர்ப்பில்கூட இருக்கின்றது. 18ம் அத்தியாயம் 41 முதல் 48 வரை உள்ள சுலோகங்கள்.)


இவை ஒருபக்கம் இருந்த போதிலும். சமீபத்தில் அவர் பரோடா சமதானத் தில்பேசிய போதும் இந்தக் கருத்தையே வற்புறுத்திப் பேசிக் காட்டியிருக்கின்றார்.


அதாவது, "கிராமவாசிகள் செருப்பு தைத்தல், ஆடு, மாடு மேய்த்தல் முதலிய தொழில்களைச் செய்ய வேண்டும், அவர்கள் பெட்டிகளில் அதிகப் பணம் வைத்திருக்கக் கூடாது. அவர்கள் பம்பாய் வியாபாரி களைப்போல் (வைசியர்களைப்போல்) பணக்காரர் களாக இருக்க நினைக்கக் கூடாது" என்று பேசி இருக்கின்றார். ஆகவே, இப்போது திரு காந்தியவர் களால் கேட்கப்படும் சுயராஜ்ஜியம் என்பது இந்திய மக்களின் பொரு ளாதார நிலைமையை எப்படி முன்னுக்கு கொண்டு வரக்கூடியதாகும்? என்பது யோசிக்கத்தக்கது. நிற்க, நமது நாட்டு மக்களின் பொருளாதார நிலைமை மோசமா யிருப்பதற்கு மற்றும் சில காரணங்களும் உண்டு.


அதாவது நமது ஜனங்களின் மதத் தத்துவமே இவ்வுலகவாழ்க்கை 'பொய்' என்பதும் 'மாய்கை' என்பதும் செல்வத்தை மோட்சத்தில் இடம் பிடித்து வைக்கவும், அடுத்த ஜன்மத்தில் நல்ல பிறவியாய் பிறக்க ஏற்பாடு செய்து கொள்ளவும் செலவழிக்க வேண்டும் என்கின்றதான எண்ணங்கள் செல்வங் களைப் பாழாக்கி விடுகின்றன. அன்றியும் பாடு படுகின்ற மக்களுக்குத் தங்கள் மதக் கடமை, ஜாதிக் கடமை என்பது மாத்திர மல்லாமல் முன் 'ஜன்ம கர்மத்தின்' பயன் என்றும் எண்ணும் எண்ணங் களையே புகுத்தப்பட்டு தங்கள் கஷ்டங்களையும் தரித்திர நிலைமையையும் உணராமல் இருந்து வருகின்ற குணமும்தகுந்த பயனை அடையமுடியாமல் செய்துவிடுகின்றன. இவை தவிர நமது நாட்டு தர்மதாபனங்கள் ஏராளமான செல்வங்களைத் தன்னுடைய தாக்கிக்கொண்டு அவைகள் மக்களுக்குப் பயன்படாமல் வீணாக்கப்படுகின்றன.


சாதாரணமாக, சென்னை மாகாணத்தின் சர்க்காரார் வரி எவ்வளவு ரூபாய் இருக்குமோ, அதில் 4-ல் ஒரு பங்குக்குக் குறையாமல் இம்மாகாணத்தில் வரும்படி வரத்தக்க சொத்துக்கள் தர்ம தாபனங்களாய் இருக்கின்றன. அவற்றின் மற்ற செலவு களுக்கு என்று நமது மக்களால் செய் யப்படும் செலவுகளின் மொத்தம் நாம் செலுத்தும் வரித் தொகைக்குக் குறையாத தென்றே சொல்லலாம். இவை இந்த நாட்டு மக்களுக்குப் பயன்படாததோடுவீண் செலவினமாகவே ஏற்பட்டு விடுகின்றன.


அன்றியும் தர்ம தாபனங்களில் வரும்படி இல்லாமல் வெறும் முடக்கமாய் இருக்கும் சொத்துக்கள் தங்கம், வெள்ளி, கல் நகைள், இடங்கள் முதலியன கோடிக்கணக்கான ரூபாய் வரும் படி வரக்கூடிய அளவு உள்ள சொத்துக்கள் யாதொரு பிரயோஜனமும் இல்லாமல் முடங்கிக் கிடக்கின்றன.


இவை ஒருபுறமிருக்க இராஜாக்கள் என்றும் ஜமீன்தாரர்கள் என்றும் ஏற்பட்டக் கூட்டங்கள் அனுபவிக்கும் பொருள்கள், மற்றும் அவர்கள் நகை, பொக்கிஷம், புதைத்து வைத்திருப்பது முதலிய செல்வங்களின் அளவு நூற்றுக்கணக்கான கோடி என்றே சொல்லலாம்.


இவ்வளவும் தவிர இந்திய மக்களின் வருமானம் என்பதோ அவர்கள் தங்களது தொழில் முறைகளைச் சிறிதும் மாற்றிக் கொள்ளாததால் பிரயாசை அதிகமும், சாமான் யோக்கியதை குறைவும், உற்பத்திக்குறைவும் இதனால் வரும்படிக் குறைந்தது மாக இருப்பதுடன் மனிதனுடைய தேவைக்கும் போக போக்கியங் களுக்கும் வேண்டியவைகளுக்கெல்லாம் ஏழை முதல் செல்வவான், மகாராஜாக்கள் வரை வெளிநாட்டுப் பொருள் களையே உபயோகிக்க வேண்டியவர்களாகி அதன்மூலம் செல்வம் ஏராளமாய் வெளியில் போய் விடுவதால் ஒருவித நஷ்டத்தை அடைய வேண்டிய தாக ஏற்பட்டு விடுகின்றது.


ஆகவே, இத்யாதி காரணங்களால் நாட்டின் பெரும் பாகமான மக்கள் ஏழைகளாக-தரித்திரர்களாக இருக்கக் கடமைப்பட்டவர்களாகவே இருக்கின் றார்கள். பொருளாதாரத் துறையில் இந்திய நாடு முற்போக்கடைய வேண்டுமானால், அதன் அதி வாரமான காரணங்ளையெல்லாம் கவனிக்காமல் மக்களுடைய மதியீனத்தையும், பகுத்தறிவற்ற தன்மை யையும் ஆதரவாய் உபயோகித்துக்கொண்டு வெளி நாட்டுத் துணியை மறியல் செய்வதாலும், கதரை வாங்கிக்கட்டுவதாலும் கள்ளுக் கடைகளை மூடிவிடு வதாலும் பொருளாதாரத் துறையை சரிப்படுத்தி விடலாம் என்று சொல்லுவது ஒருநாளும் நாணய மானதோ, அறிவுடைமையானதோ, காரியத்தில் பயன் கொடுக்கக் கூடியதோ என்பதாகச் சொல்லி விட முடியாது.


இந்தியாவின் பொருளாதாரத் துறை சீர்படுவதற்கு முதலாவது வருணாசிரம முறை ஒழியவேண்டும். இரண்டாவது, மத சம்பந்தமான எண்ணங்கள் அகற்றப் படவேண்டும். மூன்றாவது கோவில், குளம், சடங்கு, சாத்தான், சனிவிலக்கு ஆகிய எண்ணங்கள் அழிக்கப்படவேண்டும். பிறகு, அரசன், ஜமீன்தாரன் முதலிய தத்துவங்கள் அழிக்கப் பட்டாக வேண்டும்.


இவைகளையெல்லாம் மறைத்து வைத்துக்கொண்டு - இந்தத் துறைகளில் எல்லாம் புகுந்து அழிக்க வேலை செய்யாமல் இருந்துகொண்டு இருப்பதுடன், வருணாசிரம தருமத்தையும், புராண மரியாதையையும் பலப்படுத்திக்கொண்டு பொருளாதாரத் துறை சீர்படுத் துவதற்குச் சீமைக்குப்போய் "வெள்ளைக்காரனிடம் வியாபாரம் பேசப் போகின்றேன், என்று சொல்லுவது அடியோடு அர்த்தமற்றும், நாணயமற்றதுமாகுமா? அல்லது இல்லையா? என்று யோசித்துப் பாருங்கள்."


குடிஅரசு - தலையங்கம் - 13.09.1931


- விடுதலை நாளேடு, 19.8.18

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

வாழ்வு என்பது மானத்துக்கு! ஈனத்துக்கு அல்ல!

தந்தை பெரியார்

 


 

ஜாதி ஒழிய வேண்டும் என்பவர்கள் முதலில் நாத்திகர் ஆகுங்கள்.

நாத்திகம் என்பது அறிவு, ஆராய்ச்சி, அனுபவம் கொண்டு தெளிவடைவதுதான். இத்தெளிவு அடைந்த இடத்தில் இம்மூன்றும் (கடவுள், மதம், சாஸ்திரம்) தலைகாட்டாது.

ஆகையால், இப்படிப்பட்ட நீங்கள் நாத்திகர் என்று சொல்லிக் கொண்டாலும் ஒன்றுதான் - பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொண்டாலும் ஒன்றுதான்.

தோழர்களே! ஜாதி ஒழிப்புக்காரர்கள் வீட்டில் கடவுள் உருவச் சின்னங்களோ, மதக்குறியோ, சாத்திர சம்பிரதாய நடப்போ இருக்கக் கூடாது. கண்டிப்பாய் இருக்கக் கூடாது.

இவ்விஷயங்களில் ஒருவன் ‘நம்பிக்கையுடைவனாகவும்’, ‘அறிவுவாதியாகவும்’ இருப்பது என்பது 4ம் 4ம் பத்து என்பது போன்ற முட்டாள்தனம். தோழர்களே! நாம் 100க்கு 97 பேர்கள் இருக்கிறோம். பார்ப்பனர் 100க்கு 3பேர் இருக்கிறார்கள். 97 பேர் சூத்திரர்கள் - கீழ்மக்கள் - அடிமைகள்! 3 பேர் பிராமணர்கள், மேன்மக்கள் எஜமானர்கள் ஆளுகிறவர்கள்! எதனால் அஹிம்சா தர்மத்தாலா? அன்பினாலா? இல்லவே இல்லை.

சட்டத்தால் - ஜெயிலினால் - தடியினால் - துப்பாக்கியினால் இது அஹிம்சையா? அன்பா?

இது அஹிம்சையும் அன்புமென்றால், அது நமக்கு மட்டும் ஏன் பொருந்தாது? ஆட்சி, சட்டம், துப்பாக்கி அவன் கையிலிருப்பதால் தானே? இதை நீங்கள் ஏன் சிந்தித்துப் பார்க்கக் கூடாது?

ஆகவே, நாம் நியாயமான வழியில் அவசியமான முறையைக் கையாண்டு நமது மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

அன்பு வேண்டும் என்பது, இம்சை கூடாது என்பது, சட்டமல்ல, நீதியல்ல, தர்மமுமல்ல. எந்த எந்தச் சந்தர்ப்பத்தில் எந்த எந்தக் காரியத்திற்கு எதை எதைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் நீதியும் தருமமுமாகும்.

என்னுடைய நண்பர் இராஜாஜி ஒருகாலத்தில் சொன்னார் - என்ன? கையில் கிடைத்த ஆயுதத்தை எடுத்து அடித்து காரியம் சாதித்துக் கொண்டேன் என்று, அவசரத்திற்கு ஆயுதத்தைத் தேடிக் கொண்டிருப்பது மடமை என்றும் சொன்னார்.

இது அகிம்சையானால் நமக்கு ஏன் பொருந்தாது?

தவிர ஜாதி ஒழிப்புத் தொண்டு இம்சையைக் கொண்டதாக இருக்கக் கூடாது என்பதும் அறிவுடைமை ஆகாது. ஏன்? நான் இம்சை என்று சொல்லுவது விஷம் சாப்பிட வேண்டும் என்று சொல்லுவதற்கு ஒப்பானது. கத்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லுவதற்கு ஒப்பாகும். மனிதனது வியாதி சவுக்கியமடைய விஷத்தைக் கொடுப்பது இல்லையா? மனிதனின் புண், நோய் சவுக்கியமாவதற்கு கத்தி சிகிச்சை செய்வது இல்லையா? அதுபோல் நோய்க்கு மற்ற வைத்தியம் (முயற்சிகள்) பயன்படாவிட்டால் இரண்டில் ஒன்றை எதிர்பார்த்து விஷப் பிரயோகம், கத்திப் பிரயோகம் நோயாளிக்குப் பயன்படுத்துவதில் பின்வாங்குகிறோமா? அதுபோல் இந்த ஜாதி நோயைத் தீர்க்க மற்ற வழிகளில் தோல்வி அடைந்து அதைத் தவிர வேறு வழி இல்லை என்று கண்டால் அதைப் பயன்படுத்தாதவன் மக்கள் துரோகியே ஆவான் என்று தோன்றுகிறது. இது சட்ட விரோதமாகலாமே ஒழிய சத்தியமான விரோதமோ பாவ (கெட்ட) காரியமோ ஆகாது.

உதாரணமாகச் சமணக் கொள்கைகளையும், புத்த கொள்கைகளையும் அழிக்க நம் முன்னோர்களை என்ன என்னமோ செய்து பார்த்தார்கள். ஒன்றிலும் பலன் காண முடியவில்லை என்று கருதியவர்கள் பார்ப்பனர் அரிவாள், கொடுவாள், கழுமரம், நெருப்பு வைத்துக் கொல்லுதல், நெருப்பில் போட்டுக் கொளுத்துதல். அவர்கள் பெண்களை மானபங்கப்படுத்துதல் முதலிய காரியத்தைச் செய்து வெற்றி பெறவில்லையா? இவை வரலாற்றில் நடந்த காரியங்கள்தானே.

மற்றும் இராமாயணம், பாரதம், கந்தபுராணம் முதலியன என்ன சொல்லுகின்றன? சூது, சூழ்ச்சி, கொலை, பெண்களை விட்டு மயக்கி ஒழித்துக் கட்டுதல் முதலிய காரியங்களைத் தானே காரிய சித்திக்கு கையாளப்பட்டிருக்கிறதாகக் காண்கிறோம். இராமனும், கிருஷ்ணனும், கந்தனும் நரகத்திற்குப் போக வில்லையே? அவர்களால் பயன் பெற்ற மக்களுக்கு, மானமற்ற முட்டாள்களும் இன்றும் அவர்களைக் கடவுள்களாகத்தானே கொண்டாடுகிறார்கள்? ஆனதால் நான் அதனைச் செய்ய நேரிட்டால் மாத்திரம் நாம் எப்படி பாவி ஆவோம்? சாவு நேரிடலாம், அந்தச் சாவு யாருக்கு நேரிடும்? என்றாவது ஒரு நாளைக்கு சாக வேண்டியவனுக்குத்தானே சாவு நேரிடும். சிரஞ்சீவிக்கு ஒருக்காலும் சாவு நேராதே? அவனை யார் என்ன பண்ணினாலும் சாவு நேராதே. ஆதலால் மனிதன் நல்ல காரியம் செய்வதில் ஏன் சாவுக்குப் பயப்பட வேண்டும். அப்படி பயந்த காரணந்தானே இன்னும் ஜாதியும், மடமையும், மானங்கெட்ட தன்மையும் நம்மிடம் இருந்து வருகிறது?

நீங்கள் சாகத் துணியாமல் இந்த உங்கள் ஜாதியையும் முட்டாள்தனத்தையும், மானங்கெட்ட ஈனத்தன்மையையும் ஒழிக்க வேறு வழி இருக்குமானால் சொல்லுங்கள். நான் உங்கள் அடியார்க்கடியனாய் இருந்து தொண்டு செய்யக் காத்திருக்கிறேன்.

உயிர் என்ன மாணிக்கமா? வெறும் காற்றுத்தானே? அட மட ஜன்மமே! அதை விட்டுவிடப் பயந்தா? இவ்வளவு பெரிய முட்டாளாய் - ஈனப்பிறவியாய் வாழ்வது?  வாழ்வு என்பது மானத்துக்கு ஈனத்துக்கு அல்ல! வாழ்வு அறிவுக்கு!! மடமைக்கு அல்ல!

இவை என் கருத்து நீங்கள் அப்படியே ஒப்புக் கொள்ளாதீர்கள். சிந்தித்து உங்களுக்கு நேர்மை என்று பட்டால், கேடு இல்லாதது என்று தெரிந்தால் அருள் கூர்ந்து ஆலோசியுங்கள்! என்று வேண்டிக் கொள்கிறேன்.

(12.08.1962 அன்று புதுவையில் நடைபெற்ற ‘ஜாதி ஒழிப்பு மாநாட்டில்’ தந்தை பெரியார் சொற்பொழிவு)

- ‘விடுதலை’, 17.08.1962   

 - உண்மை இதழ், 1-15.8.18

நமது வீரம்

28-06-1931 - குடிஅரசிலிருந்து...


நாம் இங்குதான் பாரத வீரர்கள் பீமன் சந்ததிகள்  என்று மேடையேறிப் பேசிக்கொள்ளுகின்றோமே யொழிய, ஓர் அராபிதேசத்தவனை நடுத்தடத்தில் கண்ணில் பார்த்து விட்டால் நமது மக்கள் ஆண் பெண் அடங்கனும் நடுங்குகின்றன. காலுடன் மூத்திரம் பெய்ந்து கொள்ளுகின்றன. வெளிதேசத்திலிருந்து எவன் வந்தாலும்  அவனைக்கண்டால் இப்படித்தான் நடுங்குகின்றோம்.

வெளிநாட்டுக்காரன்  இங்கு வந்து சம்பாதித்துப் போவதற்குக் காரணமே நமக்கு வீரமும்  நாணயமும் அற்றத்தன்மையேயாகும்.

நமது கிராமங்களில் ஒரு அராபி தேசத்துக்காரன்  4 ரூபாய்  பெறும்படியான ஒரு சால்வையை 8 ரூபாய்க்கு கொடுத்து விட்டு 6 மாதம் பொறுத்து வந்து பணம் கேட்டால்  வெற்றிலை, பாக்கு தட்டில் வைத்து சங்கராச்சாரிக்கு காணிக்கை கொடுப்பது போல் பயபக்தியுடன் கொடுத்து விடுகிறோம், அவனைக் கண்டால் நடுங்குகின்றோம்,

உள்ளூர்வாசியிடம்  கடன்பட்டிருந்தாலோ, அவனுடைய கடனைக்கொடுக்க  மறுப்பதுமல்லாமல் பண்ணுவதைப்பண்ணு என்றும் சொல்கிறோம். அயலூரானென்றால் நடுங்குகின்றோம். இதற்குக் காரணமென்ன? ஏனெனில் நமது தைரியம் அவ்வளவில் தானிருக்கின்றது மற்றும்  ஓர் உதா ரணம்  என்னவென்றால் ஒரு ரயில் வண்டியில் ஆப்கன் தேசத்தான் ஒருவன்  இருந்து அவ்வண்டி முழுமையும் காலியாகயிருந்தாலும்  கூட  நாம் அவ்வண்டியில் ஏறமாட்டோம்.

நாம்  பத்து பெயர்கள் வரை  ஒரு அறையி லுட்கார்ந்து  அவ்வண்டியில் இடமில்லாதிருந்த போதிலும்கூட  வடதேசத்தானொருவன் தைரியமாக அங்கு வந்து உட்காருவான். நாமும் உடனே வண்டியைக் காலிசெய்துவிடுவோம். ஆனால் நாம், காளி, வீரன், கருப்பன், முனியன், சடையாண்டி முதலியவீரம் பொருந்திய தெய்வங்களை கும்பிடு கிறவர்களாகவுமிருக்கிறோம்.  எதற்காகக் கும்பிடு கிறோம் என்றால் அத்தெய்வங்களுக்குள்ள தைரி யம் நமக்கும் வரவேண்டுமெனவேதான் என் கிறோம்.

ஆனால், நாம் அதனால் தைரியமுடையவர்களாக வாழ்ந்திருகின்றோமா என்று பார்த்தாலோ, அப்படி யுமில்லை, நமது தைரியமெல்லாம் முதலில் அடி பார்க்கலாம் என்பதிலும் அடிவிழுந்தால் ஓடுவ தற்குள் என்ன அவசரம் என்பதிலேயே தானிருக் கின்றது. யார் அடித்தாலும், திருப்பி யடிக்கக்கூடிய நிலைமையில் நாமின்று  இல்லை.

(மதுரை ஜில்லா, திண்டுக்கல் அடுத்த சித்தயங் கோட்டையில் 22.06.1931ஆம் தேதி மக்கள் விடு தலை சங்கம் திறப்பு விழாவில் ஈ.வெ. ராமசாமியின் சொற்பொழிவு)

தந்தை பெரியாரின் பொன்மொழிகள்

திராவிடரின் தன்மானம், அறிவு, மனிதத் தன்மை இன்று நேற்றல்லாமல் 2000, 3000 ஆண்டுகளுக்கு முன் பறிக்கப்பட்டவை களாகும்.  திராவிட அரசர்கள் மூவேந்தர்கள், நான்கு வேந்தர்கள், அய்வேந்தர்கள் காலத்திலேயே இந்த வேந்தர்கள் ஆரிய அடிமைகளாக இருந்தவர்கள். அவர்களது ஆரிய அடிமை ஆட்சியில் நாம் இருந்தவர்கள் என்பது மாத்திரமல்லாமல் அவர்கள் சந்ததியார்கள் என்றும் பெருமை பேசிக்கொள்ளுபவர்களாய் இருக்கிறோம். இதன் இழிவை நம்மில் வயது வந்த வாழ்க்கையில் ஈடுபட்டவர்கள் சிறிதும் உணரார்கள். ஆகவே, நமது வேலை அடியோடு புதிய வேலையாக இருக்கிறது.

- விடுதலை நாளேடு, 17.8.18