வியாழன், 27 ஏப்ரல், 2023

பார்ப்பனர்களின் சிந்தனைக்கு!

  - தந்தை பெரியார்

000

கூழுக்குப் போட உப்பு இல்லையே என்பது ஒரு கவலைதான்! குறைதான்! பாலுக்குச் சர்க்கரை இல்லையே என்பதும் ஒரு கவலைதான்! குறைதான்! காலுக்குச் (நடப்பதற்கு) செருப்பு இல்லையே என்பதும் ஒரு கவலைதான்! குறைதான்! பல்லக்குக்கு (உட்காருவதற்கு) பட்டு மெத்தை இல்லையே என்பது ஒரு கவலைதான்! குறைதான்! கூழுக்கு உப்பு, பாலுக்குச் சர்க்கரை இரண்டும் நாக்கு ருசிக்காகத்தான்! காலுக்குச் செருப்பு, பல்லக்குக்குப் பட்டு மெத்தை இரண்டும் அங்கங்களின் நலத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான்! 

ஆனால், கூழுக்கு உப்பு, காலுக்குச் செருப்பு வேண்டுமென்கிற கவலை வேறு! பாலுக்குச் சர்க்கரை, பல்லக்குக்குப் பட்டுமெத்தை வேண்டுமென்கிற கவலைவேறு! முந்தியது, குறைந்த பட்சமான கூழைக்குடித்தாவது உயிர் வாழவேண்டுமே என்கிற முயற்சி; இறக்கும் வரையிலும் இடையறாதுழைக்க எவ்வித இடையூறும் வந்து விடக்கூடாதே என்கிற முன்னெச்சரிக்கை! பிந்தியது, உயர்ந்த பட்சமாய், உணவுக்கு மேற்பட்டதாய், மேனி மினுமினுப்பை வேண்டி மேலான நறுமணத்தோடு தீஞ்சுவையையுடைய பாலுக்கு, மற்றொரு சுவையையும் ஊட்டி மகிழ்ச்சியோடு பருகவேண்டும் என்கிற முயற்சி; தனக்காக நாலுபேர் நடந்து சுமக்க, தான் நடக்காமலே ஏறிச்சவாரி செய்தாலும், உட்கார்ந்து செல்லும் போது உடலுக்கு வாட்டம் வந்து விடுமே என்கிற முன்னெச்சரிக்கை!  

கவலை, எச்சரிக்கை என்கிற பெயரளவில், இரண்டும் ஒன்றாகச் சொல்லப்படுவதாக இருந்தாலும், இந்த இரண்டு வகையாரின் கவலையும், எச்சரிக்கையும் வெவ்வேறு நிலையில் பிறந்தவை! வேறுவேறான போக்கில் வளர்பவை! முந்தியது, ஏமாறியதால். பிந்தியது, ஏமாற்றியதால், அந்த வகையில் ஒன்றுக்கொன்று சம்பந்தமுடையவை! இந்த இருவகையான நிலையும் இப்போதைய நிலைமைகள் அல்ல. 

பழங்காலத் தமிழ் நாட்டில் நெடுங்காலமாகப் பரிகாரஞ் செய்யப்படாமல் வளர்ந்து வந்த நிலைமைகள்! பின்பு இவ்விரண்டு போக்கும், அதனதன் வழியிலே, போதிய வளர்ச்சியடைந்து விட்ட நிலைமைகள்!  அதாவது கூழுக்கு உப்பு இல்லையே என்கிற நிலைமை வளர்ந்து, வளர்ந்து கூழே இல்லையே என்கிற நிலைமை! பாலுக்கு சர்க்கரை இல்லையே என்கிற நிலைமை வளர்ந்து, வளர்ந்து பல சுவை சேர்த்துப் பருகிய பாலுக்குப்பின், அது ஜீரணிக்க முடியவில்லையே என்கிற நிலைமை! ஒரு வகையில் இறக்கம்! மற்றொரு வகையில் ஏற்றம்!

இந்த இறக்கமும் ஏற்றமும் ஏன்? இவ்விரண்டையும் சமநிலைப்படுத்தும் வழி என்ன? என்கிற சிந்தனையில், இந்த ஏற்ற இறக்கத்தை அரசியல் துறையில் உத்தியோக விஷயங்களில் சமனிலைப்படுத்த முயன்ற முயற்சிதான் அந்த நாள் ஜஸ்டிஸ் கட்சி!

பல ஜாதிகள், பல வகுப்புகள் உள்ள இந்த நாட்டில், ஏகபோகமாய் ஒரு வகுப்பாரே உத்தியோகங்களில் ஆதிக்கஞ் செலுத்துவது உதவாது, ஒழிக்கப்பட வேண்டியது - எல்லா வகுப்பினரும் இடம் பெறவேண்டும் என்று இதமாக, நீதியைக் காட்டிக் கேட்டபோது புளியேப்பக்காரர்கள் செய்த புன்முறுவலினால் - பொச்சாப்புரைகளால் - திமிர் வாதத்தினால் விளைந்த வளர்ச்சிதான் இன்றையத் திராவிடர் கழகம்!

அறிவுத் துறையின் அதிபதிகள் என்று கூறிக் கொண்டு, அரசியல் உத்தியோக விஷயங்களில் நூற்றுக்கு நூறு தாங்களே இருப்பது சரியல்ல என்பதை, அந்த நாளில் நம் பார்ப்பனத் தோழர்கள் உணர்ந்து, ஏதோ மற்றவர்களும் இடம் பெறட்டுமே என்றெண்ணி இருப்பார்களே ஆனால் மற்றவர்களின் உரிமையை நாம் வஞ்சித்தாலும் வஞ்சனையில் ஒரு நேர்மையைக் காட்டுவோம் என்று கருதியிருப்பார்களே ஆனால், நிச்சயமான முடிவு நீதிக்கட்சியே தோன்றியிருக்காது! அந்த வஞ்சனையில் வளர்ச்சியில்லாவிட்டால், “உத்தியோகங்களில் ஏதோ ஒரு பங்கு என்று கேட்ட நீதிக்கட்சி ஒழிந்து, உத்தியோகத்தில் மட்டுமல்ல, உலக வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் - ஊராட்சியின் முழுப்பகுதியிலும், எங்களுக்குப் பங்கு அல்ல, உரிமையுண்டு என்று முழங்கும் திராவிடர் கழகம் ஆகியிருக்க முடியாது! இவ்வுண்மையை நமது பார்ப்பனத் தோழர்கள் எண்ணிப் பார்க்கத் தவறுவது - வஞ்சனையை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு போவது நன்மையைத் தரக்கூடியதுதானா? இதை எண்ண வேண்டியவர்கள் அவர்கள்!

அடுத்துக் கெடுப்பது! அணைத்துக் கொல்லுவது! காட்டிக் கொடுப்பது! கழுத்தை அறுப்பது! இதுதான் பார்ப்பனியத்தின் பரம்பரைப் போர் முறை என்பதைச் சுயமரியாதை உணர்ச்சியுடைய ஒவ்வொரு திராவிடரும், ஏன்? வரலாறு அறிந்த ஒவ்வொருவரும் நன்கு அறிவர். இப்போக்கைப் பார்ப்பனியம் இன்னும் கைவிட்டு விடவில்லை என்பதைத்தான் இன்றைக்கும் பார்க்கின்றோம். இந்த நயவஞ்சக நடத்தை இனியும் வேண்டியதுதானா? இதை எண்ண வேண்டியவர்களும் அவர்கள்தான்! “திராவிடர் கழகம் வகுப்புத் துவேஷத்தை வளர்ப்பது; திராவிடர் கழகத்தைத் தீர்த்துக்கட்டுக!!” இது! ஒருபுறம் மத்திய ஏகாதிபத்திய யூனியனுக்குப் பார்ப்பனர்கள் செய்யும் வேண்டுகோள்! மற்றொருபுறம் மாகாணப் பார்ப்பன அடிமை சர்க்காருக்குச் செய்யும் கட்டளை!” எங்கள் மீதுள்ள குறைகளைப் பற்றியே கூறிக்கொண்டிராதீர்கள்! உங்களுடைய பல திட்டங்களும் நாங்கள் உவந்து ஏற்றுக்கொள்ளக் கூடியன! அப்படியிருக்க, நீங்கள் கூறும் நாட்டு நலனுக்கு நாமெல்லோரும் சேர்ந்து ஏன் பாடுபடக் கூடாது! யோசியுங்கள்!” இது, நம் கழகத்திற்கு, கழக தந்தை பெரியாருக்கு பார்ப்பனர்களால் செய்யப்படும் வேண்டுகோள்! இந்த இருவேறு முயற்சி, பார்ப்பனர்களின் நல்லெண்ணத்தை - நன்னடத்தையைக் காட்டுவதா? நயவஞ்சகத்தைப் படம் பிடித்துக் காட்டுவதா? சிந்திக்க வேண்டியவர்கள் அவர்கள்தான்! 

தோளோடு தோளிணைத்து நாட்டுக்குத் தொண்டாற்றுவோம் என்று நமக்குக் கூறும் நம் அருமைப் பார்ப்பனர்கள், இந்தமாதம் 19ஆம் தேதிதான் சேலத்தில் பார்ப்பன மாநாட்டைக் கூட்டியிருக்கிறார்கள். அப்போது பல தீர்மானங்களையும் செய்திருக்கிறார்கள். செய்யப்பட்டிருப்பதாய்ப் பார்ப்பனப் பத்திரிகைகள் கூறும் தீர்மானங்களிலிருந்து, பரம்பரை நரிக்குணத்தை எப்படிப் பாதுகாப்பது என்கிற ஒரு வழியில் தான் அந்தமாநாடு கவலைப்பட்டிருக்கிறது என்று சொல்லலாமே தவிர, நமக்கு அவர்கள் விடுக்கும் வேண்டுகோளுக்கு ஒத்ததாய் - மனிதப் பண்பைக் காட்டுவதாய் - நீதியையோ நேர்மையையோ விரும்புவதாய் இல்லவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. 

நாட்டு மக்களை இழிவு செய்வதாய், நாலாஞ் ஜாதி, அய்ந்தாம் ஜாதி என்று கூறி மனித உரிமையைச் சூறையாடும் வேதம், வளர்ந்து தழைத்தோங்க வேண்டும்! இது ஒரு தீர்மானம். மற்ற வகுப்பு மாணவர்கள் எக்கேடுகெட்டாலும் எங்களுக்கு கவலையில்லை; எங்கள் வகுப்பு மாணவர்கள் எல்லோருமே உயர்ந்த படிப்புப் படித்தாக வேண்டும். இதற்குத் தடையாய் இருப்பதைத் தகர்த்தெறிய வேண்டுமென்று கூறுவது ஒரு தீர்மானம். இப்படி நாங்கள் ஒரு பட்சமாய், எங்கள் நலனுக்கே அஸ்திவாரம் போட்டு வேலை செய்தாலும், எங்களைப் பற்றி யாரும் துவேஷங் கொள்ளக்கூடாது. எங்கள் மீது நாட்டோர் நல்லெண்ணங் கொள்ளச் செய்ய வேண்டியது இன்றைய மாகாண சர்க்காரின் முதல் வேலை என்கிற மற்றொரு தீர்மானம்.

இன்றைய மாகாண சர்க்காரில் பெரும்பாலோர் சூத்திரர்களாய் இருப்பதினால்தான், பார்ப்பனர்களின் தனி வளர்ச்சிக்குப் பாதகமாய் இருக்கிறது. மாகாண சர்க்காரை ஆட்டிவைத்து அவர்களைக் கொண்டே முதலில் நம் எதிரிகளை அழித்தொழித்து, பிறகு அவர்களையும் ஒழித்துக்கட்டி, நமது நலத்தை நாம் பேணுவதென்றால், மத்திய சர்க்காரைப் பலப்படுத்துவதும், மத்திய சர்க்கார் செயலை விளம்பரப்படுத்துவதும், மத்திய சர்க்கார் பிடிப்பில் இந்நாட்டை நிலை நிறுத்துவதும் தான் நாம் செய்ய வேண்டிய “திருப்பணி” என்று கூறுவது இன்னொரு தீர்மானம்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பார்ப்பனோத்தமர்களின் பேச்சுக்கள் என்று, பார்ப்பனப் பத்திரிகைகள் வெளியிட்டிருக்கும் பேச்சுகளைப் பார்த்தாலும், “தாங்கள் வேறானவர்கள்”, “உயர்ந்தவர்கள்” என்கிற திமிரையும், யார் எதனால், எப்படி அழிந்தாலும் இனநலம் செழித்து வளர வேண்டும் என்கிற சுயஜாதி வெறியையும், எவ்வளவு அயோக்கியத்தனம் செய்தாலும் எங்கள் மீது துவேஷம் கொள்ளாதீர்கள் என்கிற இதோபதேசத்தையும், எங்கள் இன நன்மைக்காக இந்த நாட்டை எவனுக்கும் காட்டிக் கொடுக்கத் தயங்கமாட்டோம்” என்கிற கயமைக் குணத்தையும்தான் கண்டுகொள்ள வேண்டியதாயிருக்கிறது.

மாநாட்டுக்குப் பிறகு, அடுத்த படியாக, மாகாணத்திற்கு வந்திருக்கும் ஏகாதிபத்தியப் பட்டேலிடம் இவர்கள் காவடி தூக்கி இருக்கிறார்கள் என்பதைப் “பட்டேல் பிரபு” அவர்கள் பேச்சுகளிலிருந்து தெரிகிறது. பார்ப்பனியத்தின் அழிவு வேலைகளைப் பகிரங்கப்படுத்தி, நச்சுக் கிருமிகளால் நாசமாகாதீர் என்று நாட்டோரை எச்சரிக்கும் ஒரே ஒரு “விடுதலையை” ஒழித்து விடவேண்டுமென்கிற ரூபத்தில், நம்மை அண்டவரும் பார்ப்பனர்களின் காவடி ஆட்டம் நடந்திருக்கிறது. 

சென்னை சத்தியமூர்த்திக்குப் போட்டியாகப் பாம்பே சத்தியமூர்த்தி என்பதாகக் காங்கிரஸ்காரர்களால் புகழப்படுபவர் நம் “பட்டேல் பெருமான்” அவர்கள். இந்தப் “பெருமான்”தான், சுரண்டும் கூட்டத்திற்குப் பாதுகாப்பாக, சுரண்டும் கும்பலின் பிரதிநிதியாக “பவநகரை” நமக்கு அருளியவர். இவரின் இப்போதையக் குணாதிசயங்கள் வேறு என்று கூறப்பட்டாலும், ஒரு ஏகாதிபத்திய வெறியைக்காட்டத் தவறவில்லை இவரின் சென்னைப் பேச்சுக்கள்! இத்தகைய குணாளர் சட்டத்தைக் காற்றில் பறக்கவிட்டு, நியாயத்தை உதறித்தள்ளி, நீதியைக் குழிதோண்டிப் புதைப்பீர்! என்பதாக பார்ப்பனிய அடிமை சர்க்காரான, மாகாண மந்திரிசபையினருக்கு உபதேசம் புரிவாரானால் அது ஆச்சரியப்பட வேண்டியதல்ல. விடிந்தால் தெரிகிறது, வெள்ளை முட்டையா? கருப்பு முட்டையா என்கிற சங்கதி!

ஆனால், பார்ப்பனர்கள் பரம்பரையாகவே “நாம் இப்படித்தான் நடந்து கொள்ளவேண்டும்” என்று துணிந்து திட்டம் போட்டுச் செயல் செய்கிறார்களே, இதைக் கண்டு நாம் உண்மையாகவே பச்சாதாபப் படுகிறோம்! பார்ப்பனர்களின் திட்டத்தால் - சூழ்ச்சியால் இன்று அவர்களின் எண்ணம் - திராவிடர் கழகம் ஒழிய வேண்டுமென்கிற விருப்பம் நிறைவேறலாம்; நிறைவேற்றியும் விடலாம்.

ஆனால், பின் விளைவு என்ன? அரசாங்க உத்தியோகத்தில் பங்குகேட்ட நீதிக்கட்சியை, அய்ம்பதாயிரம் அடிகீழ் புதைக்கப்பட்டதாக அகமகிழ்ந்தனர் முன்பு! அந்தப் புதைகுழியிலிருந்து பெரும்பூதம் தோன்றிவிட்டதே; பங்கல்ல, உரிமை என்கிறதே! உத்தியோகத்திலல்ல, ஊராளும் ஆட்சியில் என்கிறதே! என்று இப்போது ஓலமிடுகின்றனர்! இதை ஒழித்துக் கட்டுவது எப்படி? இதற்குச் சமாதி எழுப்புவது எப்படி? என்று சதித்திட்டமிடுகின்றனர் இன்று! திட்டத்தின் வெற்றிக்குப் பின் சிந்தை பூரிக்கலாம், உண்மைதான்! ஆனால் சமாதியிலிருந்து மற்றொன்று தோன்றுமே; அது அன்பை அடிப்படையாகக் கொண்டு திராவிடர் கழகத்தைப்போல அகிம்சை வழியில் நில்லா திருக்குமானால், அதைத்தாங்கி நிற்கும் பார்ப்பனர்களின் எதிர்காலம் என்னவாகும்? இதை எண்ண வேண்டியவர்களும் அவர்கள்தான்!

குடிஅரசு - தலையங்கம் - 26.02.1949


கண் திறக்குமா?

 தந்தை பெரியார்

2

உலகில் யார் யார் அடாத வழியில் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம், மற்றவர்கள், அந்த வழியை, அக்கிரமமான அடாதவழி என்று உணர்ந்து கொண்டு, அந்த வழி கூடாது! என்று உரத்த குரலிலே ஓங்கிக் கூறுவது கேட்டுப் பெருங்கஷ்டமாக - சகிக்க முடியாததாக இருக்கலாம். ஆனால், விழிப்புணர்ச்சி வினையாற்றத் தொடங்கிவிட்டால், விபரீத நடத்தையாளர்கள் அவற்றை விட்டுவிடவேண்டும்; இன்றேல் விரைவாகவே ஒழிந்துபட வேண்டும் என்பது, வெகு வெகு நீண்ட காலமாகவே சரிதம் கூறிவரும் உண்மை. உழைக்காமலிருந்து கொண்டே, உல்லாச வாழ்வு வாழ வேண்டும் என்றெண்ணுகிறவர்கள் அல்லது அந்த முறையில் பழகியவர்கள் அல்லது அப்படிப் பழக்கப்படுத்தப்பட்டவர்கள் ஆகிய இந்த ஒருவகையார்தான் சமுதாய ஒழுங்குக்கு - சமாதானத்திற்கு வைரிகள், அவற்றை விரட்டியடிக்கும் விஷக் கிருமிகள் என்பதை உலக முழுவதுமே உணரத் தலைப்பட்டு விட்டது; அதுமட்டுமல்ல ஒழிக்கவும் தலைப்பட்டுவிட்டது.

இந்த உல்லாசபுரியினருக்கு அன்று தொட்டு இன்றுவரை, அவர்களின் உல்லாசபுரி ஒழிந்து விடாவண்ணம் பாதுகாத்துவரும் அரண்கள் பலவுண்டு என்றாலும், முக்கியமாக - அழிப்பதற்கு அரும்பாடுபட வேண்டியதாக இருந்து வருவது மதம், அதையொட்டிய பழக்க வழக்கம். இந்தப் பழக்க வழக்கங்களில் ஒரு சிறு மாற்றம் என்றால்கூட இவர்களால் சகிக்க முடியாது. சீறிப்பாயத்தான் செய்வர். பின், மதத்தில் ஏதேனும் மாறுதல் என்றால், மதம் மடிய வேண்டும் என்றால் இவர்களின் கொடூரச் செயல்களுக்கு ஒரு எல்லைகட்ட முடியுமா?

இவ்வளவு கொடுமைகளுக்கும் பலி கொடுத்து கொடுமையைக் குழிதோண்டிப் புதைத்து விட்டோம் - குழி தோண்டிக் கொண்டிருக்கிறோம் - குழி பறிக்கவில்லை என்றாலும் நடைப் பிணமாக்கிவிட்டோம் என்று கூறுகிறது மேலை நாடு. 

ஆனால், கீழ் நாட்டின் நிலை என்ன? குறிப்பாக நம் நாட்டின் நிலை என்ன? மடமையில் பிறந்து வளரும் மதம், காலத்திற்குக் காலம் மெருகிடப்பட்டு வருகிறது என்று சொல்லக்கூடிய நிலையில், மிருகவுணர்ச்சியில் பிறந்து வெறியைத் துணையாகக் கொண்டிருக்கும் மதத்தினால் விளைந்து வந்திருக்கும் கேடுகளைப் பற்றி, நம்மைப்போல் எந்தவகைக் கேடுகளையும் சமாளித்துச் சிலர் கூறிவரும்போது நமக்குக் கிடைக்கும் பரிசென்ன? மதத் துவேஷி! வகுப்புத் துவேஷி! பார்ப்பனத் துவேஷி! என்கிற இவைகள்தான்.

மதத்துவேஷி என்று மதத்தினால் லாபம் அடைகிறவன் சொல்லுவதையோ, வகுப்புத் துவேஷி என்று வகுப்பினால் தனி நன்மை அடைகிறவன் சொல்லுவதையோ, பார்ப்பனத் துவேஷி என்று பார்ப்பனியமே மூலதனமாகக் கருதி வாழும் பார்ப்பனர்கள் சொல் வதையோ நாம் குறைகூறவில்லை. அவர்கள் அப்படித் தான் சொல்லியாக வேண்டும். மேலும், அதை எவரும் எதிர்பார்க்கத்தான் வேண்டும். ஆனால் நடப்பு எப்படி? 

மதத்தால் வாழ்வை இழந்து, வகுப்பால் வளப்பத்தைப் பறிகொடுத்து, பார்ப்பனியத்தால் பஞ்சைகளாகி விட்ட கூட்டத்திலிருந்தும் நமக்கு மேற்கண்ட பரிசுகள் தரப்படுகின்றன. இதற்குக் காரணமென்ன?

வெறும் “அடிமை மோகம்” என்பதோ, “கழுத்தில் நுகத்தடி ஏறினால் நடந்த தடம் தவிர வேறு தடம் இல்லையென்று நம்பும் செக்குமாடுகள்” என்கிற பேச்சோ முற்றிலும் பொருந்தாது. அடிமைகள் அடிமைகளே அல்ல, அவர்களுக்கும், ஆளும் உரிமையுமுண்டு என்று முழக்கப்படுகிற காலமிது. இந்தக்காலத்தில் அடிமை மோகம் “செக்கு மாடுகள்” என்றே சொல்லிவிட முடியுமா? “அடிமை மோகம்” உடையவர்களாகப் பெருங்கூட்டத்தினரை அழுத்தி வைப்பதினால்தான், செக்கு மாடுகளாகப் பிறரைச் சுற்றச் செய்வதினால்தான், தங்களின் நியாயமான விகிதாச்சாரத்தைக் காட்டிலும் அதிகப் பங்கு அடைய முடியும் என்று நம்புகிற மற்றொரு சிறுகூட்டம் அடிமை உலகிலிருந்து முளைத்து விடுகிறது என்கிற உண்மையை நாம் எடுத்துக்காட்ட வேண்டியதாயிருக்கிறது.

ஒடுக்கப்பட்டுச் சுரண்டப்படும் பெருங்கூட்டத்தினரை - அக்கிரமத்திற்கு ஆளானோரைக் குப்பை கூளங்களாகப் பெருக்கித் தள்ளுவதற்குக் கூட்டுமாறாகப் பயன்படுகிறது இச்சிறுகூட்டம். விளக்க மாற்றுக்குப் (கிழிந்த) பட்டுக்குஞ்சம் கட்டினதுபோல, 

இந்தச் சிறுகூட்டமும் சமுதாய உழைப்பை உறிஞ்சும் சழக்கர்களால், தனக்கடங்கிய அதிகாரம் என்கிற பட்டுக் குஞ்சம் கட்டப்பட்டுவிடுகிறது. இதனால், ஒடுக்கப்பட்ட கூட்டம் உரிமை உணர்வு பீறிட்டெழச் செயலாற்றும்போது, ஒடுக்கப்பட்ட கூட்டத்திலிருந்தே எதிர்ப்பும், ஒழிப்புவேலையும் தொடங்கப்படுகின்றன. இதை நாம் எப்படித்தான் எடுத்துக் கூறினாலும், உணராதவர்கள் போல நடித்து வருகிறார்கள் நம் திராவிட தேசியத் தோழர்கள்; நடிப்பைக் கைவிட்டு, நடப்பில் கவனத்தைச் செலுத்தட்டும் என்பதே நம் ஆசை! அந்த ஆசையின் மீது இன்று ஒரு நடப்பை எடுத்துக்காட்டுகிறோம்.

இந்து மத - மட நிர்வாகம் பற்றிய மசோதா, இன்று ஆளவந்தவர்களான காங்கிரஸ் மந்திரிகளால் கொண்டுவரப்பட்டிருக்கிறது. உண்மையைக் கூற வேண்டுமானால், பார்ப்பனர்களின் பேரெதிர்ப்புக் கிடையே முன்பு பனகல் அரசர் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கும் மதஸ்தாபனப் பாதுகாப்புச் சட்டத்தில், ஒரு திருத்தம் என்றுதான் இதைக் கூறவேண்டும். இதனைக் கொண்டு வந்திருப்பவர்கள், பொதுவாகக் காங்கிரஸ் மந்திரிகள் என்று சொல்வதைக் காட்டிலும், முதன் மந்திரி ஓமந்தூரார் என்று கூறுவதே பொருத்தமாகும்.

விரதானுஷ்டங்களைப் பின்பற்றி மேனியை வாட்டி வதக்கி வருபவர் நம் ஓமந்தூரார். குருவிலும் உத்தமோத்தமமான குரு, பார்ப்பனக் குருவே என்பதைக் கண்டுபிடித்து அவர் பாத பூஜை பண்ணும் பக்த சிரோன்மணியாய் விளங்குபவர் நம் ஓமந்தூரார். “ஆண்டவர்கள்” திருவுருவுகளை அவர் அடியவர்கள் வேஷம் போட்டு நடிப்பதைக் கண்டு, அடுக்காது! அடுக்காது!! என்று கூவிஅலறித் துடிதுடிக்கும் அரும்பெரும் குணத்தினரவர். இவருடைய மதபக்திக்கு முன்பு, வேறு எவருடைய பக்தியாயிருந்தாலும், அது கால்மாத்து அரைமாத்துக் குறைச்சலாகத்தான் இருக்க வேண்டும் என்பது, பக்தி வியாபாரிகளால் தேய்த்துப் பார்த்துச் சொல்லப்பட்டிருக்கும் தீர்ப்பு! இப்பேர்ப்பட்ட ஆஸ்திக சிரோன்மணியால் கொண்டுவரப்பட்டிருக்கும் இதனைக் கண்டுதான், இன்று பார்ப்பனர்கள், மதத்திற்கு ஆபத்து, இது அக்கிரமக் குறுக்கீடு என்றெல்லாம் கதறுகிறார்கள்.

நாட்டிலுள்ள கோவில்கள், மடங்கள், மற்றும் மத வளர்ச்சிக்கான பிரசாரக் கழகங்கள் போன்றவைகள் மதஸ்தாபனங்கள். இந்த மதஸ்தாபனங்களில், லட்சக் கணக்கில் கோவில் களிருந்தாலும், நூற்றுக்கணக்கான கோவில்களையும், விரல்விட்டு எண்ணக்கூடிய சில மடங்களையும் பற்றியதுதான் இந்த மசோதா.

இன்னும் சொல்லப்போனால் இந்த நூற்றுக்கணக்கான கோவில்களுக்கு வந்து கொண்டிருக்கும் வருமானத் தையும், சில மடங்களுக்கு வந்து கொண்டிருக்கும் வருமானத்தையும், எப்படி நிர்வகிக்க வேண்டும்? அந்தப் பொருள் எப்படிச் செலவழிக்கப்பட வேண்டும்? என்கிற விஷயத்தில் அரசாங்கத்திற்கு முழு உரிமையுண்டு என்பதை நிலைநாட்டுவதுதான் இந்த மசோதா. மேலும், இந்த மதஸ்தாபனங்கள் நூற்றுக்கணக்கான வருஷங்களாகச், சிலரின் ஏகபோக மிராசுஆகிக் கேள்வி கேட்பாடு இல்லாத நிலையில், மரகதக் கிண்ணத்தில் மது அருந்துவதற்கும், விதவிதமான மாதர் ரகங்களோடு குலாவுவதற்கும், வயிற்றுப் பெருச்சாளிகளின் தொந்தி வாடாமலிருப்பதற்காகவுமே பயன்பட்டு வந்திருக்கிறது என்கிற மக்களின் அழுகையும் ஆத்திரமுமே இந்த மசோதா!

இதைக்கண்டா இந்தக் கதறல்? இதுவா மதத்திற்கு ஆபத்து? அக்கிரமக்குறுக்கீடு? எண்ணிப் பார்க்கட்டும் நம் திராவிட தேசியத் தோழர்கள்! மடங்களுக்கும் சில கோவில்களுக்கும், வரையறையில்லாத செல்வம் வளர வழி ஏற்பட்டிருக்கின்ற தென்றால், அதற்குக் காரணமென்ன? உழைப்பின் உருமாற்றமான செல்வம், உழைப்பே இல்லாத இந்த ஸ்தாபனங்களுக்கு எப்படி வந்து குவிகின்றன? ஆதிக்கக்காரர்களின் ஆஷாட பூதிவேஷங்களும், தந்திரமிக்க சாகசப் பேச்சுகளும் கருவிகளாக நிற்க, உழைக்கும் மக்களின் பேதைமை - உளுத்துப்போன மனத்தின் அச்சம் ஆகிய இவைகளல்லவா இந்த ஸ்தாபனங்களுக்குச் செல்வத்தைச் சேர்ப்பிக்கும் வாய்க்கால்கள்.

மக்களால் சேரும் பணத்தைப் பின் மக்களுக்காகச் செலவிடப் படவேண்டிய நேரத்தில், மக்கள் ஆட்சி அதில் தலையிடுவதா அக்கிரமக்குறுக்கீடு? மதச்சார்பற்ற ஆட்சி என்று கூறுவது உண்மையென்றால், மக்களை ஆளும் சர்க்கார், மக்களுக்காக என்று சொல்லப்படும் மதநிர்வாகத்தில், பூரணமாகத் தலையிட வேண்டியதே நியாயம். மத நிர்வாகம் என்கிற பெயரால், தேவையில்லாத வழிகளால் செலவழிக்கப்படும் செல்வத் திற்குத் தேவையையும், பயனையும் கண்டே செலவு செய்யவேண்டும் என்று வரையறை செய்வதே நியாயம். அரசமரத்தடிப் பிள்ளையாரும் தெய்வம்தான், ஆயிரங்கால் மண்டபங்களோடு பெரிய கோட்டை கொத்தளங்களை எழுப்பி அவற்றில் குடி வாழ்வதும் தெய்வம்தான் என்கிற உறுதி வழிபாடு செய்பவர்களுக்குள் இருந்தால், இந்த இரண்டு தெய்வங்களுக்குள் ஏன் இந்த வித்தியாசம்? என்றுதான் கேட்கப்படும் மதமற்ற சர்க்காரால். 

அரசமரத்தடிப் பிள்ளையார் அரைக்காசு, ஒரு காசு செலவு செய்வதோடு, அது தெய்வத் தன்மையைக் காப்பாற்றிக் கொண்டு விடுகிறதென்றால், ஆயிரங்கால் மண்டபத்தானுக்கு மட்டும் அதன் தெய்வத்தன்மையைக் காப்பாற்ற ஆயிரம் ஆயிரமாக ஏன் செலவு செய்யப்பட வேண்டும்? என்று கேட்பதுதான் மதச்சார்பற்ற மக்களாட்சியின் கடன். இன்னும் ஒருபடி மேல்சென்று கூறவேண்டுமென்றால், ஒவ்வொரு ஊரிலும் எத்தனை மக்கள் கோவிலுக்குப் போகிறார்கள்? அந்தக்கோவில் எந்த அளவு விஸ்தீரணமாயிருக்க வேண்டும்? கோவிலில் குடியேறியிருக்கும் தெய்வங்களுக்கு எது எது அத்தியாவசியமான செலவுகள்? இந்த ஏற்பாட்டில் அதற்கு வருகின்ற வருமானம் எவ்வளவு? என்பவைகளையெல்லாம் கணக்கிட்டு, அந்தக் கணக்குப்படி செய்வதுதான் மதச்சார்பற்ற மக்களாட்சி என்று சொல்வதற்கு அழகு!

மசோதாவைக் கொண்டு வந்திருப்போர், தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், சொல்லிக் கொள்வதற்கேற்றபடி மசோதா இல்லை. தானினைத்த மூப்பாக ஒவ்வொரு காரியத்தையும் செய்யாமல், தம்மையும் கலந்து கொண்டு செய்ய வேண்டும்மென்று ஆதிக்கவாதிகளை வேண்டுவதுதான் இந்த மசோதா. அப்படியிருந்தும், நாம் இந்த மசோதாவை வரவேற்கிறோம், இதைச் சட்டமாக்க வேண்டுமென்ற காங்கிரஸ் தோழர்களைப் பாராட்டுகிறோம். ஏன்? தேசியத் தோழர்கள் சிந்திக்கட்டும்!

காந்தியார் பெயரைக் கூறிக் காசு பறிக்கப் புதுவழி கண்டுபிடித்திருக்கும் தேசியப் பார்ப்பனர்கள், எதற்கெடுத்தாலும், “காந்தியார் அப்படிக் கூறினார், இப்படிக் கூறினார்” என்று கூறுவதுதான் வழக்கம். அப்படிக் கூறிவரும் பார்ப்பனர்கள், இந்த விஷயத்தில் மட்டும் காந்தியாரைக் கீழே போட்டு விடுவதற்குக் காரணமென்ன? தென்னாட்டுக் கோவில்களை விபசார விடுதி என்றார் காந்தியார்!

அவர் மடங்களைப் பார்க்கவுமில்லை, தென்னாட்டு மடங்களைப் பற்றித் தனியாக அபிப்பிராயம் கூறவுமில்லை. கோவில்கள் விபசார விடுதிகள் என்றால், மடங்கள் விபசாரப் பண்ணைகள் என்பதும், வன்னெஞ்சர்களின் கொலைக்களம் என்பதுதான், அவர் அபிப்பிராயம் கூறியிருந்தால் கூறியிருக்க முடியும் என்பது நமது கருத்து. அன்று அவர் கூறியபோது இருந்த கோவில்களின் நிலைமைக்கும், இன்றைய நிலைக்கும் என்ன வித்தியாசம்? என்பதைக் கேட்கவேண்டும் நம் திராவிடத் தேசியர்கள்!

ஒரு துண்டுக் கறிக்காக, ஓங்கி ஓங்கிக் குரைக்கும் பிராணியைப் போல, அவ்வளவு நன்றி விசுவாசத்துடன் இல்லாவிட்டாலும், இந்தப் பிரச்சினையில், வாங்குகிற கூலிக்காகவேனும் வரட்டுக்கூச்சல் போடவேண்டியதுதான் வக்கீல் களின் வேலை என்பதை ஒப்புக் கொள்ளலாம். ஆனால், காந்திய வழி என்று கூறும் தேசியப் பார்ப்பனர்கள் இதைக் கண்டு ஏன் சீறி விழவேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும் திராவிடத் தேசியர்கள்!

மத வளர்ச்சிக்குப் பாதகமாகவோ, மதக் கொள்கை களுக்கு முரணாகவோ இல்லாமல், மத நிலையங்களுக்கு வரும் வருமானத்தைச் செலவை நிர்வகிக்கச் சர்க்கார் முன்வரும் இந்தச் செயல், மதத்தையொட்டி நடந்துவந்த மதஆதிக்கக்காரர்களின் பழக்க வழக்கங்களை ஓரளவு மாற்றுவதென்பதுதான் கருத்தாக இருக்கும் போது, மதத்துக்கு ஆபத்து! என்று பார்ப்பனர்கள் கூச்சல்போடுவதில் ஏதேனும் அர்த்தமிருக்கிறதா? என்பதை எண்ணிப்பார்க்கட்டும் நம் தேசியத் திராவிடர்கள்!

இப்படியாக, மதப் பெயரால் அவர்கள் வாழ்ந்து வந்த வாழ்வுக்கு, ஏதோ ஒரு சிறு வகையில் மாறுதல் என்றால்கூட, வைதீகப் பார்ப்பனரிலிருந்து வக்கீல் பார்ப்பனர்கள் வரை, கல்லைச் சுரண்டும் பார்ப்பனரிலிருந்து காபிகிளப் பார்ப்பனர்கள் வரை, எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு ஓலமிட வந்து விடுகிற உண்மையை, உணர மறுக்கலாமா? என்று தான் நாம் காங்கிரஸ் திராவிடத் தோழர்களைக் கேட்கிறோம்.

அக்கிரமமான நடத்தையால் வாழ்ந்து வரும் மத ஆதிக்கக்காரர்கள், தங்கள் ஆதிக்கத்திற்குச் சற்று அசைவு ஏற்பட்டால்கூட, மதத்துவேஷம்! மதத்திற்கு ஆபத்து! என்றெல்லாம் கூச்சல் போட்டு விடுகிறார்கள் என்பதை உணர்ந்தால்,பின்னும், இந்தப் பார்ப்பனர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு நம்மைப் பார்ப்பனத் துவேஷி என்றோ, வகுப்புத் துவேஷி என்றோ, மதத்துவேஷி என்றோ கூறுவதில் ஏதேனும் நாணயமோ - யோக்கியதையோ இருக்கிறதா என்றுதான் நாம் தேசியத் திராவிடர்களைக் கேட்கிறோம். இந்தத் திருத்த மசோதாவினால், மத ஸ்தாபனச் சொத்துக்களினால் மக்கள் அடையவேண்டிய நன்மை எவையோ, அவ்வெல்லாமுமே விளைந்து விடாது என்பதுறுதி. ஏதோ மிக மிகச் சிறிய ஒரு பகுதியாவது, மக்கள் நன்மைக்கான வழியிலும் செலவு செய்யப்படலாம் என்று எதிர்பார்ப்பதினால் தான் நாம் இதை வரவேற்கிறோம். 

உண்மையாய், நாளைக்கு நடக்கப் போவதுமிதுதான். இந்த அளவுக்குக்கூட இந்நாட்டு மதஆதிபத்தியக்காரர்கள் விட்டுக்கொடுக்க முன்வரவில்லை என்றால், இவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு, இவர்களின் புத்திமதிப்படி நடக்கலாமா நம் தேசியத் தோழர்கள் என்பதுதான் நம் கேள்வி! 

இன்றைய மந்திரி சபையினர், “சூத்திரர்களே” நிறைந்தது. இவர்களுக்கு இவ்வளவு திமிரா? என்பதுதான் பார்ப்பனர்களின் குமுறல். இந்தக் குமுறலைச் சுதேசமித்திரன் எப்படிப் பிரதிபலிக்கிறது என்பதையும் இங்கு எடுத்துக்காட்டுகிறோம்.

மத ஸ்தாபனங்களில் ஊழல் இல்லை என்று சொல்ல முடியாதாம். ஊழல் இருக்கத்தான் செய்கிறதாம். அவற்றை ஒழிக்க வேண்டியதுதானாம். ஆனால் யார் ஒழிப்பது? என்று கேட்கும் மித்திரன் “இந்து மத வளர்ச்சியில் அந்தரங்கமான அக்கறையும், அதற்கான அறிவாற்றலும் கொண்ட இந்துமதப் பிரமுகர்கள் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ள வேண்டிய வேலை இது” என்று கூறுகிறது!

இதற்கு என்ன அர்த்தம் என்று நாம் தேசியத் தோழர்களைக் கேட்கிறோம். மத வளர்ச்சியில் அந்தரங்கமான அக்கறை என்பதற்கு என்ன அருத்தம்? அதற்கான அறிவு எது? ஆற்றல் எது? அதைச் செய்யவல்ல இந்துப் பிரமுகர்கள் என்பவர்கள் யார்? இக்காரியத்தை ஏன் தனிப்பட்ட முறையில் செய்யவேண்டும்?

மத வளர்ச்சியில் பார்ப்பனர்களைத் தவிர, வேறு யாருக்கும் அக்கறை இருக்க முடியாது, அக்கறை காணப்பட்டாலும் அது அந்தரங்கமானதாய் இருக்க முடியாது என்பதுதானே இதன் கருத்து! மத வளர்ச்சிக்கான அறிவு, வேத அறிவுதான் என்பதும் வேதியர்களின் ஆற்றல் ஒன்றுதான் இதை வினைப்படுத்த முடியும் என்பதுதானே இதன் கருத்து! இல்லாவிட்டால் இந்துப் பிரமுகர்கள் என்பதற்கும், இதனைத் தனிப்பட்ட முறையில் செய்ய வேண்டும் என்பதற்கும் வேறு என்ன கருத்துச் சொல்லிவிட முடியும்?

இந்த மசோதாவை நிறைவேற்றுவதாய் இருந்தால், மறுதேர்தல் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறுகிறது மித்திரன். ஏனெனில், ஆட்சியைக் கைப்பற்றும் முன்பு, இப்போது அதிகாரத்தில் உள்ளவர்கள், இப்படியெல்லாம் செய்வதற்கு வாக்காளர்களிடமிருந்து அனுமதி பெறவில்லையா?அடடா என்ன ஜனநாயகம்!

இந்த ஜனநாயகத்தை ஏன் மற்ற செயல்களில் காட்ட முன்வரவில்லை மித்திரன் கும்பல்? முக்கியமாக, எது எக்கேடுகெட்டாலும் நான் போய்த்தான் தீருவேன் என்று வெள்ளையன் கூறுவான் என்பதை எதிர்பாராத காங்கிரஸ் தோழர்கள், அவன் வெளியேறிய பின்பு, இந்த நாட்டின் தலையெழுத்தை எழுதுவது மாற்றப்பட்ட சட்டசபையிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட அதன் அங்கத்தினர்கள் என்று கூறி, அதற்கு அரசியல் நிர்ணயசபை என்று பெயர் கூறியபோது, இந்த ஜனநாயக உணர்ச்சி எங்கே பறந்துபோய்விட்டது? 

எதேச்சாதிகாரமாய்ச் செய்யப்பட்ட இந்த அரசியல் நிர்ணய சபையினர், எதேச்சாதிகாரிகளுக்கு ஏவலாளர்களாயிருந்து நிறைவேற்றியிருக்கும் பிரகடனத்தை எடுத்துக்காட்டி, அதற்கு விரோதம் இந்த மசோதா என்கிறது மித்திரன். “கொள் என்றால் வாயைத் திறப்பதும், கடிவாளம் என்றால் வாயை மூடுவதும் தானே” இந்தப்போக்கு.

பார்ப்பனர்களின் கூச்சல், இன்னும் எந்தெந்த இடங்களில் ஒலிக்கும்? இனாம் ஒழிப்பை நிறுத்தி, வெற்றிக்கொடி நாட்டிக் காங்கிரஸ் கட்சியினர் பெரும் மெஜாரிட்டியினராய் நிறைவேற்றியிருந்தும் அதை ஒழித்துக்கட்டிய தர்ப்பாசூரர்கள், இதில் எப்படியெல்லாம் நடந்து கொள்ளுவார்கள் என்று, யார்தான் எதிர்பார்த்து வரையறை காட்டமுடியும்?

அக்கிரகாரத்தின் கட்டுப்பாடான இந்தப் போக்கு, நம் தேசியத் திராவிடத் தோழர்களின் கண்களைத் திறந்து விடுமானால் அது போதும்! அதற்காகவே நாம் இவ்வளவு தூரம் இதை விளக்கிக் கூறினோம்! ஆனால் கண்திறக்குமா?

குடிஅரசு - தலையங்கம் - 29.01.1949

(குறிப்பு : ‘மித்திரன்’ என்று குறிப்பிடுவது ‘சுதேசமித்திரன்’ நாளேடு)

தமிழர் சமுதாய இழிவை ஒழித்திட அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும்”

- தந்தை பெரியாரின் வரலாற்று புகழ் படைத்த தீர்மானங்கள்!

1

சரித்திரச் சிறப்பு வாய்ந்த “தமிழர் சமுதாய ஒழிப்பு மாநாட்டில்", இந்திய அரசியல் சட்டமே பேதத்திற்கு வித்திடுகிறது என்றும், நம் இன இழிவை போக்கிக்கொள்ள தந்தை பெரியார் அவர்கள் உள்ளம் குமுறி எழுந்து தமிழர் இனத்தைக் காக்க கொண்டுவந்த தீர்மானங்கள். இன்றைக்கும் எப்படி பொருந்துகிறது என்பதனை அறிந்துகொள்ள இங்கே எடுத்துக்காட்டப்படுகிறது.

தீர்மானம் 1:

நமது ஆட்சி கடவுள், மத நடவடிக்கைகள் சம்பந்தமற்ற மதச்சார்பற்ற (Secular State) ஆட்சி என்று பிரகடனம் படுத்தப்பட்டுள்ளது. என்றபோதிலும், மக்கள் எல்லோரும் மதப்படியும் ஜாதிப்படியும் பிரிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் முஸ்லீம், கிறிஸ்தவர், பார்சி, யூதர் தவிர்த்த மற்றவர்கள் யாவரும் பவுத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், பகுத்தறிவாளர்கள், நாத்திகர்கள் உள்பட ஹிந்து மதஸ்தர்கள் என்று ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஹிந்துக்களில் இரண்டு ஜாதி உண்டென்றும், அவைகளில் ஒன்று பார்ப்பனர் (பிராமணர்) மற்றொன்று பார்ப்பனர் தவிர்த்த மற்ற எல்££ மக்களும் சூத்திரர்கள் ஆவார்கள் என்றும் பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள். மற்றும், ‘சூத்திரன்’ என்றால் நாலாவது ஜாதி ஆவான் என்பதோடு, அவன் பார்ப்பானுடைய (‘பிராமண’னுடைய) தாசிமகனாவான் என்று ‘இந்து லா’ என்னும் கட்டத்திலேயே விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்திய அரசியல் சட்டத்தின் 372ஆவது விதி ‘இந்து லா’வை அங்கீகரிப்பதோடு, மதச் சதந்திர உரிமை என்னும் பேரால், அரசியல் சட்டத்தில் உள்ள 25, 26ஆவது ஷரத்துக்களைக் காட்டி உச்சநீதிமன்றம் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக முடியாது என்றும், மத விஷயங்களில் அரசு தலையிட்டு ஜாதி ஒழிப்புப் போன்ற சீர்திருத்தங்களை செய்ய இயலாது என்றும் திட்டவட்டமாக அண்மையில ஒரு தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருப்பது பார்ப்பனரல்லாத ‘சூத்திர’ மக்களாகிய நம் மக்களின் இழிவினை என்றும் நிலை நிறுத்தும் தன்மையில் இருப்பதால்,அதனை மாற்றி நம்மை மனிதர்கள், சமத்துவம் வாய்ந்த மனிதர்கள் என்பதைச் சட்டம் அங்கீகரிக்க வேண்டும் என்பதால் கீழ்க்காணும் வகையில் அரசியல் சட்டம் திருத்தப்பட்டாக வேண்டும் என்று அரசியல் காரணங்களின்றி, சமுதாயக் கண்ணோட்டத்தோடு தமிழர் சமுதாயத்தின் சார்பாக மத்திய அரசாங்கத்தை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

(1) மதச் சுதந்திர உரிமை பிரிவுகள் என்றுள்ள 26ஆவது அரசியல் சட்ட ஷரத்துக்கள் நீக்கப்பட வேண்டும்; ஜாதி ஒழிப்புக்கு வழிவகை செய்ய ‘மதச்சார்பின்மை'யை உண்மையாக்கும் வகையிலும் அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும்.

சோஷலிசத்தைக் கொள்கையாகக் கொண்ட கட்சி என்று சொல்லிக் கொள்ளும்படியான கட்சியானபடியால், மதச் சுதந்திரம் என்ற பெயரால் மனித சமத்துவம், சுதந்திரம் பறிபோகக் கூடாது என்று இம்மாநாடு உறுதியான கருத்துக் கொண்டு இருக்கிறது.

(2) இந்திய அரசியல் சட்டத்தின் 44ஆவது விதியாகிய எல்லா மக்களுக்கும் பெருந்தக்கூடிய ஒரே சீர்மையான சிவில் சட்டத்தை (Uniform Civil Code) ஏற்படுத்தி, அந்தந்த மதத்தின் பேரால் தனித்தனிச் சட்டங்கள் உள்ள நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

பிரிட்டிஷ்காரர்கள் தந்த கிரிமினல் சட்டம் எப்படி எல்லா ஜாதி எல்லா மதத்தினருக்கும் ஒரே சட்டமோ அதுபோலவே சிவில் சட்டமும் அமைவதன் மூலம்தான் உண்மையான ஒருமைப்பாட்டினை உருவாக்க முடியும் என்று இம்மாநாடு கருதுகிறது.

டில்லி அரசு இதற்கேற்ற வகையில் அரசியல் சட்டத் திருத்தம் ஒன்றினைக் கொண்டுவர வேண்டும்.

(3) ஜாதி என்பது எந்த இடத்திலும் இல்லாது செய்யப்பட வேண்டும்; நடப்பிலும் இல்லாது பார்த்துக் கொள்ளப்பட வேண்டும்; ஜாதி உணர்ச்சி அறவே மறையும்படிச் செய்ய வேண்டும். இதனை வெறும் மனமாற்றத்தால் மட்டுமே செய்ய முடியுமென்று தத்துவார்த்தம் பேசி காலங்கடத்தாமல், “தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது; அனை எந்த ரூபத்தில கடைப்பிடித்தாலும் அது சட்ட விரோதம்“ என்று அரசியல் சட்டத்தின் 17ஆவது விதி கூறுகிறதே, அவ்விதியில் உள்ள “தீண்டாமை” (“Untouchability”) என்பதற்குப் பதிலாக “ஜாதி” (“Caste”) என்ற சொல்லை மாற்றி ஜாதி ஒழிப்பை அரசியல் சட்டமே பிரகடனப்படுத்துவதாக அமைய வேண்டும்.

சமுதாய இழிவினை மாற்றுகின்ற இக்கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் டில்லி அரசாங்கம் மறுக்குமானால், எங்களைச் சூத்திரர்களாக, இழிபிறவிகளாக ஆக்கும் இப்படிப்பட்ட ஆட்சியின் கீழ் நாங்கள் குடிமக்களாக இருக்க சம்மதம் இல்லை என்பதை அறிவிப்பதோடு, அதற்கான கிளர்ச்சிகள் நடத்துவதென முடிவு செய்யப்படுகிறது.

தலைவர் தந்தை பெரியார் அவர்கள் இது குறித்து மத்திய அரசுக்கு ஒரு ‘காலக்கெடு’ கொடுப்பதுடன், அக்காலக் கெடுவுக்குள் நமக்கு சரியான சமாதானம் தந்து உரிய நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கத் தவறுமேயானால்,

மாபெரும் கிளர்ச்சித் திட்டங்களைக் கீழ்க்காணும் வகையில் சாந்தமும் சமாதானமும் ஆன வழிமுறைகளில் எவ்வித பலாத்காரமான செய்கைகளுக்கும் இடம் இல்லாமல் இதற்கு முன்னால் உள்ள ஆட்சியில் நாம் செய்தது போலவே மேற்கொள்வது என முடிவெடுக்கப்படுகிறது.

1. அரசியல் சட்ட எரிப்பு

2. பகிஷ்காரங்கள்

3. தடை வேலைகள் (தடுப்புப் பணிகள்)

முதலிய காரியங்கள் மூலம் கிளர்ச்சிகள் செய்யப்படும்.

இதற்கான கிளர்ச்சித் தேதி குறிப்பிடுவதையும் மேற்கொண்டு காரியங்கள் செய்வதையும் தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கு இம்மாநாடு பொறுப்பு அளிக்கிறது.

தீர்மானம் 2:

தமிழர்களை நாலாம் ஜாதியாக்குகிற கடவுள்களையும் அதனை உறுதிப்படுத்தும் மதத்தினையும்; பிரச்சாரம் செய்கின்ற பத்திரிகைகளையும் தமிழ்ப் பெருமக்கள் பகிஷ்கரிக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 3:

நம்மை “சூத்திரர்கள்”, பார்ப்பானின் தாசிப் புத்திரர்கள் என்று இழிவுபடுத்தும் தன்மையில் கோயில்களில் நாம் கிட்டே நெருங்கினால் தீட்டாகி விடும்; அசிங்கப்பட்டு விடும் என்று கூறப்படுபவன நமக்குக் கடவுள்கள் ஆக மாட்டா என்பதை மக்களிடையே தீவிரமான வகையில் பிரச்சாரம் செய்வதுடன், நமது இழிவினைப் போக்கிக் கொள்ள அவைகளின் தன்மையை ஆதாரங்களில் உள்ளபடி, மக்களுக்கு எடுத்துக்காட்டி பிரச்சாரம் செய்ய வேண்டியது அவசியம் என்று இம்மாநாடு கருதுகிறது. அதற்காக ஒரு கமிட்டியை ஏற்படுத்தி வேலை தொடங்க வேண்டுமென தலைவர் தந்தை பெரியார் அவர்களை இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது.

தீர்மானம் 4:

கடவுள் வழிபாடு என்பதில் விக்கிரக ஆராதனை என்ற சிலைகளைக் கும்பிடுவதால், ஜாதியைப் பாதுகாக்கும் தன்மையும், நமது பிறவி இழிவும் அதனால் நிலைநிறுத்தப்படுவதால், கடவுள் வணக்கம் என்பதில் விக்கிரக ஆராதனை என்பது தடுக்கப்பட வேண்டும்.

தீர்மானம் 5:

இந்து அறநிலைய பாதுகாப்பு இலாகா என்ற ஒரு இலாகாவை நீதிக்கட்சி ஆட்சி உருவாக்கியதே. கோயில் சாமிகளின் வருமானம்  துஷ்பிரயோகம் ஆவதை தடுத்து, ஒழுங்குபடுத்தவும், பல பொதுநலக் காரியங்களுக்குப் பணம் பயன்படுத்தவுமேயாகும். ஆனால், தற்போதைய தமிழக அரசு, கோயில்களைப் புதுப்பித்தல், உற்சவங்கள் பெரும் அளவில் நடத்துதல் போன்ற காரியங்களில் பல கோடி ரூபாய்கள் செலவு செய்வதும், சதா கோயில் பழுது பார்க்கும் வேலையில் ஈடுபடுவதும் கண்டு இம்மாநாடு மிகவும் வேதனை அடைவதுடன், அம்முயற்சிக்குத் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவ்வேலைகளில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என்றும் தமிழக அரசை, குறிப்பாக, இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையினரைக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 6:

இந்தியா சுதந்திரம், சுயராஜ்யம் அடைந்ததாகச் சொல்லிக் கொள்ளப்பட்ட நாள்முதல் இன்றுவரை குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள் போன்ற ஆட்சித் தலைவர்கள் ஒன்று பார்ப்பனர்களாகவும் அன்றி வடநாட்டார்களாகவுமே இருந்து வந்து இருக்கிறார்கள்.

தற்போதுள்ள பார்லிமெண்டு அமைப்பில் வடநாட்டு உத்தரப் பிரதேச ஹிந்தியாளர்கள்தான் பிரதமர்களாக வரவாய்ப்பு இருக்கிறது. 

இதனை மாற்றி தேச நிர்வாகத் தலைமை ஒவ்வொரு மாநிலத்தவருக்கும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.அதற்கேற்ப அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

சனி, 22 ஏப்ரல், 2023

இந்தியாவில் எப்படி பார்ப்பனீயம் நிலைத்திருக்கிறது?
தந்தை பெரியார் 

20

உலகம் முழுவதும் விழிப்படைந்து முன்னேறிக் கொண்டிருக்கிற காலத்தில் குறிப்பாக எல்லா சமுகத்தை விட மத சம்பந்தமான பிடிவாதத்தில் இணையற்ற மகமதிய அரசர்கள் ஆட்சி செய்யும் நாடுகளும் கூட அரசுரிமையை இழந்தாவது சீர்திருத்தத்தைப் பரப்ப வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கும் அரசர் களுக்கும் கட்டுப்பட்டு நடந்து வரும் இக்காலத்தில், இந்தியா மாத்திரம் ஒரு கடுகளவுகூட தன் நிலையைவிட்டு அசையாமல் இருக்கக் காரணம் என்னவென்பதை மக்கள் யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது.

நிற்க. பொதுவாக உலக மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து சகோதரபாவம் கொள்ளுவதற்கு உலகத்தில் முதல் தடையாயிருந்தது, இருப்பது மதங்கள் என்று சொல்லப்படுபவைகளேயாகும். இரண்டாவது, அதன் உட்பிரிவுகள் ஆகும். மூன்றாவது பாஷைகள் ஆகும். இதை அனுசரித்து இடவித்தியாசங்களும் ஆகும். உதாரணமாக பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள், மகமதியர்கள், இந்துக்கள் என்பன போன்ற மதப்பிரிவுகள் உலகத் தில் இல்லாமலிருந்தால் மக்கள் சமுகத்தைப் பெரும் பெரும் பிரிவுகளாகப் பிரித்துக்காட்டவும் ஒரு நாட் டாருடைய சுகதுக்கங்கள் மற்ற நாட்டார்களுக்கு சம் பந்தமில்லாமலிருக்கவுமுள்ளதான நிலை உலகத்தில் இருக்கவே முடியாது என்னலாம்.

வேண்டுமானால் ஒரு சமயம் தேசத்தின் பேரால் மக்களையும் பிரித்துக்காட்ட வேண்டியதாக ஏதாவது ஏற்பட்டால் ஏற்படலாம். அப்படிக்கு இருந்தாலும் துருக்கி யருக்கும் ஆப்கானிஸ்தானத்திற்கும் உள்ள பிரிவுகள் போன்ற பிரிவுகளும் அமெரிக்காவுக்கும் அய்ரோப்பா வுக்கும் உள்ள வித்தியாசம் போன்ற பிரிவுகளும் போல இருக்குமே ஒழிய, எந்தக்காரணத்தைக் கொண்டும் ஒற்றுமைப்பட முடியாததும் ஒரு தேசத்தையோ ஒரு சமூகத்தையோ அடியோடு கொன்று ஒரு தேசத்தார் வாழத்துணியும் படியான பிரிவுகளாகவும், மற்றவர்களைப் பற்றி ஒரு சிறிதும் கவலை கொள்ளாமல் தங்கள் தங்கள் சமூக நன்மையை மாத்திரம் கவனிக்கக் கூடிய பிரிவுகளாகவும் ஒருவருக்கொருவர் நடை, உடை, பாவனை, பழக்க வழக்கம் முதலியவைகளால் வெறுப்புக் கொள்ளும் பிரிவுகளாகவும் பிரிந்திருக்க முடியவே முடியாது என்பது நமது உறுதியாகும். கிறிஸ்தவர்களுக்குள் இருந்த போதிலும் மதம் என்கின்ற ஒரு காரணத்தால் ஒன்றுபட்டு உலகத்தில் உள்ள எல்லாக் கிறிஸ்தவர்களும் இந்தியாவின் ஆதிக்கம் முதலிய விஷயங்களில் எதிரி களாகவே இருந்து இந்தியாவை உறிஞ்சி வருகின்றார்கள் என்பதைத் தினமும் உணருகின்றோம். அது போலவே உலகத்தில் உள்ள எல்லா மகமதியர்களும் தங்கள் மதத்தின் பேராலும் சமுகத்தின் பேராலும் தங்களது நன்மையைக் குறிக்கொள்ளும்போது இந்துக்கள் என்பவர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிரிடையாய் இருக்க நேர்ந்தாலும் சிறிதும் அபிப்பிராய பேதமில்லாமல் ஒன்று சேருகின்றார்கள்.

அதுபோலவே இந்துக்கள் என்பவர்களும் மத விஷயங்கள் என்பவைகளில் மகமதியர்கள் கிறிஸ்த வர்கள் என்பவர்களுக்கு எதிராக ஒன்று சேர முடியாத வர்களாயிருந்தாலும்கூட ஒன்று சேர வேண்டும் என்கின்ற உணர்ச்சிகளை எளிதில் அடைவதன் மூலம் எதிரிகளாக கருதத்தக்கவர்களாகி விடுகின்றார்கள்.

இது சரியா? தப்பா? அல்லது இதற்கு ஏதாவது பொருள் உண்டா? என்பவைகள் ஒருபுறமிருந்தாலும் முக்கியமாய் மதத்தின் பலனாய் வேற்றுமை உணர்ச் சிகள் தோன்றியே தீருகின்றன என்பதை எவரும் மறுக்க முடியாது. இப்படியெல்லாம் இருந்தாலும் கூட மேல்நாட்டில் உள்ள ஒவ்வொரு மதக்காரர்களும் சமீபகாலமாய் தங்கள் பிடிவாத குணங்களை விட்டு முதலில் தங்களுக்குள் ஒன்றுபடுவதற்கு முயற்சி எடுத்துக் கொண்டு அம்முயற்சிக்கு எதிரிகளாய் இருப்பவைகளைத் தகர்த்தெறிந்து ஒரே சமுகமாக ஆவதற்கு மிக முனைந்து வருகின்றார்கள். இம்முயற்சிக்கு விரோதமாக மதத்தின் பேராலும் தெய்வத்தின் பேராலும் இருக்கும் தடைகளைக் கூட வெகு சுலபத்தில் தகர்த்தெறியத் துணிந்து வருகின்றார்கள்.

உதாரணமாக இம்முயற்சியில் சிறிதளவானாலும் முதலில் வழிகாட்டிய பெருமை மேல்நாட்டுக் கிறிஸ்தவர் களுக்கே உண்டு என்று சொல்ல வேண்டும். ஏனெனில், அவர்கள்தான் முதன் முதலாக நிலைமைக்குத் தக்கபடி தங்களைச் சரிப்படுத்தி கொள்ள முன்வந்தவர்கள். உதாரணமாக அவர்கள் வேதம் என்று சொல்லப்படும் பைபிளைக் கூட திருத்த முயன்று பழைய ஏற்பாட்டிற்கு விரோதமாய் புதிய ஏற்பாட்டை உண்டாக்கி நடை உடை முதலியவைகளையும் மாற்றிக் கொண்டார்கள். அதுபோலவே, இரண்டாவதாக மகமதியர்களையும் சொல்லலாம். ஏனெனில் அவர்களிலும் இந்துக்கள் என்பவர்களை போல பிறவியில் உயர்வு தாழ்வு என்பது போன்ற சில கடுமையான பிரிவினை வித்தியாசங்கள் இல்லாவிட்டாலும் வாழ்க்கையில் மகமதியர்களையும் மதம் என்பது இந்துக்கள் என்பவர்களைப்போலவே அநேக விதங்களில் கட்டுப்படுத்தி வந்திருக்கின்றது என்று சொல்லலாம். உதாரணமாக நடை உடை பாவனை முதலாகிய பலவற்றுள் மதங்களின் பேரால் கட்டுப்பட்டுக் கிடந்தாலும் இப்போது தைரியமாய் அக்கட்டுபாடுகளில் சிலவற்றையாவது தளர்த்திவிட ஆரம்பித்து விட்டார்கள். அது மாத்திரமல்லாமல் வெகு துரிதமாகவும் தைரியமாகவும் சிலர் மாற்றிக் கொள்ளவும் ஆரம்பித்துவிட்டார்கள். அந்தப் படிக்கு மாற்றிய மகமதிய வீரஅரசர்களான அமீருக்கும், பாஷாவுக்கும் ஆதரவு கொடுக்கவும் முந்துகின்றார்கள்.

மற்றும் வெளிநாடுகளில் அந்தந்த தேசகுடி ஜனங்கள் பெரும்பாலோர் அத்திருத்தங் களுக்குத் தாராளமாய் ஆதரவளித்துப் பின் பற்றி வருவதில் யாதொரு தடையும் காண முடியவில்லை. ஆனால் புரோகிதக் கூட்டத்தின் தொல்லைகள் மாத்திரம் எந்த மதத்திலும் சிறிதளவாவது இல்லாமலிருக்கும் என்று சொல்லிவிட முடியாது என்றாலும் அவர்களிலும் சிலர் தம் சுயநலத்திற்கு வலி யுறுத்துவதை தவிர வேறு காரணங்கள் சொல்லவோ ஆதாரங்கள் காட்டவோ முடியாதபடி மக்கள் அறிவு பெற்று விட்டார்கள். இந்தியாவில் உள்ள மகமதிய சமூகமும் இந்தியர்களுடன் பழகுவதால் கமால் பாட்சாவுக்கும், அமீருக்கும் விரோதமாக அதிருப்தியும் ஆத்திரமும் காட்டுவதன் மூலம் ஒரு புறத்தில் தங்கள் மதப்பற்றை காட்டிக் கொண்டாலும் மற்றொரு புறம் தங்கள் சமூக நன்மையை உத்தேசித்து அவர்களுக்கு ஆதரவளித்தே வருகின்றார்கள். உதாரணமாக அமீரையும் அவரது மனைவியரையும் இந்திய மகமதியர்களில் சிலர் குறைகூறி இருந்தாலும் அமீரினது ஆட்சிக்கு ஆபத்து வந்துவிட்டது என்று தெரிந்தவுடன் அவருக்கு இந்தியாவில் உள்ள மவுலானாக்கள் முதல் கொண்டு அனுதாபப்படுவதுடன் ஆதரவளிக்கவும் முந்துகின்றார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இதன் காரணம் என்னவென்று பார்ப்போமானால் கூடுமானவரை அந்த சமூக நன்மை சம்பந்தமான கவலையும் ஒற்றுமையுமேயாகும். ஆனால் இந்துக்கள் என்பவர்களுக்குள் அம்மாதிரியான சமூக ஒற்றுமை இல்லாமல் எவ்வித திருத்தங்களுக்கும் எதிர்ப்புகள் இருந்து வருவதற்குக் காரணம் என்ன என்று பார்ப்போமானால் இதிலுள்ள மதப் பிரிவுகளோடு அவைகளிலுள்ள உட்பிரிவுகளும் ஜாதிப்பிரிவுகளும் அவற்றில் உள்ள உயர்வு தாழ்வுகளும் அதனால் சிலருக்கு ஏற்படும் நிரந்தர நலமுமே காரணமாகும். இந்த உள்பிரிவுகளும் ஜாதிப் பிரிவுகளும் நிலைத்து குருட்டுப் பிடிவாதமாய் இருப்பதற்குக் காரணம் என்னவென்று பார்ப்போமானால் மற்ற மதங்களை விட இந்துக்கள் இந்துமதம் என்பவற்றில் அதிகமான நிர்ப்பந்தங்கள் இருந்து வருகின்றன என்பதேயாகும். அவையாவன, முதலாவது இந்துக்களுடைய மதக்கொள்கைகளின் படி மக்கள் படிக்கக்கூடாது. ஆனால் ஒரு சிறு வகுப்பினர் - பார்ப்பனர்கள் என்பவர்கள் மாத்திரம்தான் படிக்க உரிமையுள்ளவர்கள். மத ஆதாரம் என்பதைப் பற்றி இந்து மதத்தைச் சேர்ந்த மக்களே தெரிந்து கொள்ளக்கூடாது. மத சம்பந்தமான எந்த விஷயங்களிலும் பிறவியிலேயே தாங்கள் உயர்ந்தவர்கள் என்று ஏற்பாடு செய்து கொண்ட ஒரு சிறு வகுப்பார் அதாவது 100க்கு 2 பேர்களான பார்ப்பனர்கள் - தவிர மற்றவர்களுக்குச் சொந்த அறிவை உபயோகிக்கவோ ஆராய்ச்சி செய்யவோ நன்மை தீமை எவை? அவசியமானவை எவை? அவசியமில்லாதவை எவை? என்று தெரியவோ சற்றும் உரிமை கிடையாது.

படிப்பு, மத சம்பந்தம் ஆகியவைகளில் இம்மாதிரி யான நிர்பந்தம் இருப்பதோடு மாத்திரமல்லாமல், மனித வாழ்க்கையிலும் மக்களைத் தனித்தனி ஜாதி களாகப் பிரித்த தோடல்லாமல், அவற்றில் உயர்வு தாழ்வும் ஒருவரை ஒருவர் தொடாமல் நெருங்காமல் காணமுடியாமல் செய்வித்து ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு பிறவித் தொழிலையும் ஏற்படுத்தி அவை களையேதான் அவ்வகுப்பைச் சேர்ந்தவன் செய்து தீர வேண்டும் என்றும் அந்தப்படி அரசன் சட்டம், தண்டனை, கண்டனம் ஆகியவைகள் மூலம் செய்விக்க வேண்டும் என்றும் அரசர்களாலும் நிர்ப்பந்தப்படுத்தப் பட்டுவிட்டது.

ஒரு சிறு கூட்டத்தார் தங்கள் ஜனத் தொகைக்குதக்கபடி, தங்கள் வாழ்வுக்குத் தேவையானபடி நிரந்தரமாய் பொருள் வருவாய் இருக்கத்தக்கதாக பதினாயிரக்கணக் கான கடவுள்களை சிருஷ்டித்து ஆயிரக்கணக்கான சடங்குகளையும் சிருஷ்டித்து அவற்றிற்கு தினப்படி பூஜை, உற்சவம், கல்யாணம், அவைகளின் திருப்திக்கு என்று அச்சிறு கூட்டத் தாருக்கு வேண்டியவைகளையெல்லாம் அவசிய மாக்கி அவர்கள் கேட்டதையெல்லாம் கொடுக்க வேண்டும் என்றும் அச்சிறு கூட்டத்தாரின் திருப்தியே கடவுள் திருப்தி என்றும் மற்ற மக்கள் பிறந்ததே, அச்சிறு கூட்டத்திற்கு தொண்டு செய்வதற்கென்றும் பலவாறாகக் கற்பித்து, அக்கட்டுப்பாடுகளிலிருந்து யாராவது விலகவோ அல்லது அக்கட்டுப்பாடுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யவோ புறப்பட்டால் அவ்வாராய்ச்சி செய்வது மகாபாதகமானதென்றும் நாத்திகமென்றும் அப்படிப் பட்ட நாத்திகனை அரசன் தண்டிக்க வேண்டுமென்றும் மற்றும் இது போன்ற பல நிர்பந்தங்களையும் உண்டாக்கி வைத்திருக்கின்றார்கள்.

இது மாத்திரமல்லாமல் யாராவது துணிந்து இக் கட்டுப்பாட்டையும் கொடுமையையும் உடைக்கப் புறப்பட்டால் அவர்களை அசுரர்கள், ராட்சதர்கள், துஷ் டர்கள், தேவர்களுக்கு விரோதி, கடவுளுக்கு விரோதி, உலகத்திற்கு ஆபத்தை விளைவிப்பவன் என்பதான விஷமப் பிரச்சாரத்தால் அவனை அடியோடு அழித்து வந்திருக்கின்றார்கள். இன்றைய தினமும் மேல் கண்ட கொள்கைகளே மதக் கொள்கைகளாகவும், அவைகளைக் கொண்ட புத்தகங்களே மத ஆதாரங்களாகவும் அவை களை நிலைநிறுத்தச் செய்வதே சீர்திருத்தங்களாகவும் இருந்து வருகின்றன.

உதாரணமாக, இது சமயம் நாட்டில் ஏற்பட்ட ஒரு புது உணர்ச்சியும் கிளர்ச்சியுமானது மக்களை எவ்வளவோ தூரம் நடைஉடை ஆச்சாரம் போகப் போக்கியம் முதலி யவை களில் பழைய கொள்கைகளையும் பழைய அனு பவங்களையும் மாற்றிக் கொள்ள அவசியமும் இடமும் ஏற்படுத்தி கொடுத்து அனுபவத்திலும் தலை சிறந்து விளங்கிக் கொண்டிருந்தும், தனது சொந்த சுயநலம் மாத்திரம் எவ்வளவு அறிவீனமும் ஆணவமும் இழிவும் பொருந்தியதாக இருந்த போதிலும் அதிலிருந்து சற்றாவது மாறுபடுவதோ தளர்த்தப்படுவதோ என்பது சிறிதும் முடியாததாகவே இருக்கின்றது.

உதாரணமாக, மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் ஜாதி வித்தியாசத்தை நமது இந்திய நாட்டில் உள்ள அறிவாளிகள், பிரமுகர்கள், தலைவர்கள் பெரி யோர்கள் இந்திய நாட்டில் உள்ள பொது இயக்கங்கள் சமய தத்துவங்கள் என்பவைகள் எல்லாம் அநேகமாய் ஒரே முகமாக விலக்க வேண்டும் என்றும் ஒழிக்க வேண்டும் என்றும் அந்தப்படி ஒழிக்காவிட்டால் நாட்டிற்கு சுதந்திரமில்லை, தேசத்திற்கு சுயமரியாதை இல்லை சமயத்திற்கு மதிப்பு இல்லை என்று பலவாறாக அபிப்பிராயம் கொடுத்தும் தர்மத்தின் பேராலும் மதத்தின் பேராலும் கூட்டங்கள் கூடித் தங்களுக்கும் தங்கள் ஆதிக்கத்திற்கும் தகுந்தபடியே தீர்மானங்கள் செய்து வருகின்றார்கள்.

உதாரணமாக, சமீபத்தில் பல இடங்களில் பார்ப் பனர்கள் ஒன்று கூடி வருணாசிரமத்தை உறுதிப்படுத்தி பார்ப்பனர் தவிர மற்றவர்கள் பார்ப்பனர்கள் வைப் பாட்டி மக்கள் பார்ப்பன சேவைக்காக கடவுளால் உண்டாக்கப்பட்டவர்கள் என்கின்ற கருத்துக்களடங்கிய சூத்திரர்கள் என்பதை நிலை நிறுத்த முயற்சித்திருப்பதும் சைவர்கள் என்பவர்கள் ஒன்று கூடி தீண்டாமை என்பதை நிலை நிறுத்தத்தக்க வண்ணமாக தீண்டாதவர்கள் என்பவர்களுக்கு தனிக் கோவில் கட்டிக் கொடுக்க என்று தீர்மானத்திருப்பதும் போதுமான உதாரணமாகும்.

எனவே இந்த மாதிரி வருணாசிரம தர்மங்களும் இந்தமாதிரி சைவர்களும் நமது நாட்டில் உள்ளவரை எந்த விதத்தில் பார்ப்பனீயம் ஒழிய முடியும்? எந்த விதத்தில் சமத்துவம் உண்டாகும்?

எந்தவிதத்தில் மக்கள் ஒற்றுமைப்பட்டு மானத்துடன் வாழ முடியும்? என்பதை யோசித்தால் இந்தியாவில் எப்படி பார்ப்பனீயம் நிலைத்து எந்தெந்த வழியில் நாட்டைப் பாழாக்கி வருகின்றது என்பது புலனாகும்.

எனவே, இந்தியாவில் பார்ப்பனீயமற்ற மதமே இல்லை என்றும் இந்துமதமென்னும் தலைப்பின் கீழ் எந்தமதமானாலும் சமயமானாலும் அகச் சமயமானாலும் அவற்றை எல்லாம் அடியோடு அழித்தாலல்லது மக்கள் கடவுள் நிலை என்பதையோ அன்பு நிலை என்பதையோ ஒருக்காலமும் அடைய முடியாததென்றே சொல்லுவோம்.

'குடிஅரசு' -  துணைத் தலையங்கம் - 14-04-1929


திங்கள், 17 ஏப்ரல், 2023

மாரியம்மன் திருவிழா

 

பெரியார் பேசுகிறார்மாரியம்மன் திருவிழா

2022 பெரியார் பேசுகிறார் ஜுலை 16-31 2022

தந்தை பெரியார்

கோடை காலங்களில் தமிழ்நாட்டில் எங்கும் மாரியம்மன் திருவிழா என்று ஒன்று நடந்து வருகிறது. இந்த மாரியம்மன் கடவுள் கிராம தேவதை என்று பெயர் இருந்தாலும், அது ஆரியக் கதைப்படி ஜமதக்கினி முனிவரின் மனைவி ரேணுகாதேவி மாரி ஆகிவிட்டாள் என்பதாகும். இந்த மாரி இல்லாத கிராமமே கிடையாது. ஆகவே, இவள் கிராம தேவதை ஆகி கிராம மக்கள் எல்லோருக்கும் கடவுள் ஆகிவிட்டாள்.
இந்த ரேணுகை என்னும் மாரியம்மனின் சரித்திரம் மிகவும் இழிவாகக் கருதத்தக்கதாகும்.

இந்த ரேணுகை எனும் மாரி ஜமதக்கினி முனிவரின் மனைவி. அவள் ஒரு அந்நிய புருஷன் மீது இச்சைப்பட்டு, அதாவது, அவள் நீராடக் கங்கைக்குச் சென்றபோது எதிர்ப்பட்ட சித்ரசேனனைக் கண்டு மோகித்துக் கற்புக் கெட்டாள். அதனை அறிந்த அவளது கணவன் ஜமதக்கினி அவளைக் கொன்றுவிடும் படியாகத் தனது மகன் பரசுராமனிடம் கட்டளை யிட்டார். பரசுராமன், ரேணுகையை யார் தடுத்தும் கேளாமல் கொன்று விட்டான். கொன்றுவிட்டு வந்து, தாயைக் கொன்று விட்டோமே என்று துக்கப்பட்டுக் கொண்டு இருக்கும்போது தகப்பன் ஜமதக்கினி அதை அறிந்து, மகனுக்காக மாரியை பிழைப்பிக்கச் செய்து இசைந்து, மந்திர நீர் தந்து எழுப்பி வரும்படி மகனை அனுப்பினான்.
தாயைப் பிழைப்பிக்கச் சென்ற பரசுராமன் கொலைக் களத்துக்குச் சென்று, தாயின் தலையை எடுத்து முண்டத்துடன் ஒட்டவைக்கையில், கொலைக் களத்தில் பல முண்டங்கள் வெட்டப்பட்டு இருந்ததால் அடையாளம் சரிவரத் தெரிந்து கொள்ளாமல் ஏதோ ஒரு முண்டமாகக் கிடந்த உடலை எடுத்து தலையுடன் ஒட்டவைத்து, அழைத்து வந்து தகப்பனிடம் விட்டான். கணவன் அவளைப் பார்த்து, நீ இங்கு இருக்க வேண்டாம். கிராமங்களுக்குச் சென்று நீ அங்கேயே போய் அங்கு வாசம் செய்து கிராம மக்களுக்கு நோய் வந்தால் பரிகாரம் செய்து கொண்டு இரு எனக் கூறி அனுப்பினான். அது முதல் மாரி கிராமங்களில் வசிக்கத் தொடங்கினாள். கிராமவாசிகள் இந்த விஷயம் அறிந்து, தலையை மாத்திரம் வணங்கிப் பயன் அடைய முன் வந்து, தங்கள் ஊர்களில் மாரிக்குக் கோயில் கட்டி, மாரியின் தலையை வைத்து வணங்கி வருகின்றார்கள். இது ஒரு புராணம்.
சிவபுராணத்தில், மாரியானவள் கார்த்தவீரியனை மோகித்துச் சாபமடைந்தாள் என்று காணப்படுகிறது.

மற்றொரு புராணத்தில், –
அவள் கணவன் ஜமதக்கினி கொல்லப்-பட்டதால் அவள் அவனுடன் உடன்கட்டை ஏறினாள். இதை இந்திரன் ஒப்புக் கொள்ளாமல் மழை பெய்யச் செய்ததும், அவளது உடல் அரைவேக்காட்டுடன் நின்று விட்டது. அதனால் அவள் எழுந்து பக்கத்தில் உள்ள பஞ்சமத் தெருவில் நிர்வாணத்தோடு வேப்பிலையால் மானத்தை மறைத்துக் கொண்டு ஓடினாள்.
அதைக் கண்ட பஞ்சமர்கள், பச்சை மாவும், பழமும், இளநீரும் கொடுத்து உபசரித்தார்கள்; ஒரு வண்ணாத்தி சேலை கொடுத்து ஆதரித்தாள். இந்த அய்தீகம்தான் இன்று மாரியம்மன் பூசையாக நடத்தப்படுகின்றது. பூசை உருவம், உணவு முதலியவை எப்படி இருந்தாலும் இந்த மாரியம்மன் மீது இரண்டு விபசாரக் குற்றங்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன.
(1) சித்திரசேனனை மோகித்துக் கற்பு இழந்தது.
(2) கார்த்தவீரியனை மோகித்துக் கற்பு இழந்தது.
இரண்டிலும் அவளது கணவன் ஜமதக்கினியால் கண்டுபிடிக்கப்பட்டு, அவள் தண்டிக்கப்பட்டு இருக்கிறாள். இதற்குப் புராண ஆதாரங்கள் இருக்கின்றன.
நமது கடவுள் நம்பிக்கையிலும், கடவுளை வணங்குவதிலும் நமக்குள் எவ்வளவு மடமை இருந்தாலும், நாம் வணங்கும் கடவுள்களை இவ்வளவு மோசமான, நாணயம், ஒழுக்கம், நாகரிகம் என்பவை இல்லாமல் இவை யாவும் காட்டுமிராண்டித்தனமாக இருப்பது பற்றிக் கவலைப்பட வேண்டாமா? என்றுதான் கவலைப்படுகின்றேன்.
(‘இந்துமதப் பண்டிகைகள்’ நூலிலிருந்து…)

«««

பகுத்தறிவை நற்செயல்களுக்குப் பயன்படுத்துங்கள்!
உலகத்திலே மனிதர்களைத்தான் ஆறறிவு கொண்டவர்கள் -_ பகுத்தறிவு உடையவர்கள் என்று சொல்லுகிறார்கள். பிராணிகளைவிட மனிதன் ஓர் அளவில்தான் மேம்பட்டவன். அதனால்தான் அவனுக்குத் தனிச் சிறப்பு. இந்த அறிவை மனிதன் மனிதனிடம் நடந்து கொள்ளும் அன்புக்கும், உதவிக்கும் பயன்-படுத்தாமல், இன்னொருவனுக்குக் கேடு செய்வதிலும், திருடுவதிலும், வஞ்சிப்பதிலும் செலுத்தக் கூடாது என்றுதான் சொல்லு-கிறோம். ஏன், மேலும் மேலும் வற்புறுத்து-கிறோம் என்றால் மனிதன் இந்தக் கேவலமான நிலைமையிலிருந்து மீண்டு, மனித சமுதாயத்திலே மனிதனாக மனிதனுக்கு மனிதன் தோழனாக வாழவேண்டுமென்றே ஆசைப்படு-கிறதனால்தான். ஆகையால் நாங்கள் சொல்வது எல்லாம் பழைய மூடப் பழக்க வழக்கங்களை-யெல்லாம் விட்டொழியுங்கள். தங்கள் தங்கள் புத்தியைக் கொண்டு, அறிவைக் கொண்டு சுதந்திரமாய் ஆராய்ந்து பார்க்க வேண்டு-மென்று கூறுகிறோம். எந்தக் கடவுளாலும், எந்த சாஸ்திரத்தினாலும், எந்த மதத்தினாலும், எந்த அரசாங்கத்தாலும் ஒரு மனிதனுக்கு ஒழுக்கமும், நேர்மையும் தானாக வந்துவிடாது. நான் அவற்றைக் குறை கூறுகிறேன் என்று நினைக்க வேண்டாம். உண்மையிலேயே அவற்றை எல்லாம் நம் சமுதாயத்திற்கோ, நம் மக்களுக்கோ உகந்ததில்லை. அவ்வளவும் புரட்டும், பித்தலாட்டங்களும் நிறைந்திருக்-கின்றன. அதைப் பின்பற்றக் கூடியவர்கள் எப்படி ஒழுங்காக வாழ முடியும்?
இதைப்போல்தான் இன்றைய அரசாங்கமும் இருக்கிறது. சும்மா சொல்லவில்லை. எனக்கு வயது 72 என்னுடைய 60 வருட அனுபவத்தைக் கொண்டு தான் சொல்லுகிறேன். ஆகவே, இன்றைய நிலைமையில் எந்த மனிதனும் யோக்கியமாக நடந்து கொள்ள முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது. எந்த ஸ்தானத்திலும், எந்தப் பதவியிலும் எவன் இருந்தாலும் லஞ்சம் வாங்கித்தான் தீரவேண்டுமென்ற மனப்பான்மை பரவி விட்டது.

இன்றைய நிலையில் நான் கூட ஒரு பதவியில் இருந்தால் வாங்கித்தான் ஆக வேண்டும். என் வரைக்கும் 100, 1,000 கணக்குக்கு ஆசையிருக்காது. காரணம்? இது எனக்கு மட்டமானது. ஆனால், லட்சக்கணக்கில் ரூபாய் வருமானால் நானும் ஒரு கை பார்க்கத்தான் செய்வேன். ஏன்? இதுதான் இன்றைய தின மக்கள் இயற்கை நிலைமை, மூடக் கொள்கை. ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும், சர்க்காருக்காக, பாவ புண்ணியத்துக்காக நடந்து கொள்ள வேண்டும், சமுதாயத்திற்காக நடந்து கொள்ள வேண்டுமென்பதும் இனிமேல் முடியாத காரியம். நாம், இன்னொருவனுக்கு மோசம் செய்தால் அவனுடைய வயிறு எரிகிற மாதிரிதான் நமக்கும் இன்னொருவன் மோசம் செய்தால் வயிறு எரியும் என்று நினைக்க வேண்டும். ஆகவே, நாளுக்கு நாள் திருந்தி ஒரு நல்ல நிலைமையை அடைய வேண்டுமானால் நாம் நல்ல காரியங்கள் செய்யாவிட்டாலும், கெட்ட காரியங்கள் செய்யாமல் இருக்க வேண்டுமென்ற தன்மை ஏற்படத்தக்க காரியங்கள் கண்டுபிடித்து அதற்கேற்ற காரியம் செய்ய வேண்டும். அதுதான் இனி மனிதத் தொண்டாக மாற வேண்டும். ஆகவே, இனியும் மக்கள் தொட்டதற்கெல்லாம் சட்டம் மீறுவதோ, இல்லாமல் அதிகாரிகளையும் சர்க்காரையும் எதற்கும் மீறும் உணர்ச்சி இல்லாமல், வரவேண்டுமென்று சொல்லு-கிறேன். எதற்கும் பயந்து அல்ல! இதுதான் ஒரு நாட்டின், ஒரு சமுதாயத்தின் அமைதிக்கும், நல்லாட்சிக்கும் பயனளிப்பதாகும்.
(24.8.1951 அன்று கள்ளக்குறிச்சி அருகே கிராமம் என்னும் ஊரில் வடநாட்டுச் சுரண்டல் தடுப்பு மறியல் போர் தோழர்களுக்கு பாராட்டுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை)

‘விடுதலை’ 31.8.1951

ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

அறிவுக்கு ஒவ்வாத சடங்குகள் விலக்கப்பட வேண்டும்!

 

2022 பெரியார் மே 16-31 2022

தந்தை பெரியார்
“பேரன்புமிக்க தாய்மார்களே, தோழர்களே, நண்பர் நட்சத்திரம் அவர்களே!
நாம் இங்கு கூடி இருப்பது நண்பர் திரு. நட்சத்திரம் அவர்களின் புதுமனை புகுவிழாவின் பொருட்டு குழுமி இருக்கின்-றோம். இப்படி புதுமனை புகுவது எல்லோரும் செய்கின்றார்கள். மற்றவர்கள் செய்வதற்கும் நண்பர் நட்சத்திரம் செய்வதற்கும் ரொம்ப வித்தியாசம் உள்ளது.
சாதாரணமாக ஒரு புதுமனையில் வாசம் செய்ய முற்படுபவர்கள் இது மற்றவர்களுக்குத் தெரியும்படி செய்ய வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட நிகழ்ச்சி இல்லாமல் இருந்தால் ஜனங்கள், இவர் பழைய வீட்டில் இருப்பதாகத்-தான் எண்ணுவார்கள். திருமணம் கூட இப்படித்தான். இன்னார் இதுவரை தனியாக இருந்தார்கள். இதுமுதல் இருவரும் சேர்ந்து வசிக்கின்றார்கள் என்பதை மற்றவருக்கு உணர்த்தவேயாகும். ஒருவர் புதுக்கடை வைத்தால்கூட விளம்பரப்படுத்தி அனை-வருக்கும் அழைப்புக் கொடுத்து திறப்பது விளம்பரத்துக்காகவேதான். இது மிகவும் அவசியமாகும்.
இம்மாதிரி காரியங்களுக்கு ஏராளமாக செலவு செய்வதைக் கூட நான் கண்டித்து வருகின்றேன். இப்படிப்பட்ட நிகழ்ச்சியைக் கூட மதத்தோடு புகுத்திப் பிணைத்து விட்டார்கள். இப்படி வீடு அமைக்க நிலை இப்படி இருக்க வேண்டும், மனை இப்படி இருக்க வேண்டும், ஜன்னல் இப்படி இருக்க வேண்டும் என்று கூறி இதற்காக மனை சாஸ்திரம் என்ற ஒன்றை ஏற்படுத்தி உள்ளார்கள். நம்முடைய சாஸ்திரம் கிறிஸ்துவனுக்கு, முஸ்லிமுக்குப் பொருந்தாது; அவன் சாஸ்திரம் நமக்குப் பொருந்தாது என்பார்கள். எல்லோருக்கும் வாழக் கூடியதாக ஒன்றை நிர்ணயிக்கும் போது ஏன் இப்படிப்-பட்ட முட்டாள்தனம்?
நாள், நட்சத்திரம் பார்த்து அஸ்திவாரம் போடுவது, முகூர்த்தம் பார்த்து நிலை வைப்பது இப்படி எல்லாம் செய்கின்றனர். நான் 40, 50க்கு மேல் வீடுகள், கட்டடங்கள் கட்டி இருப்பேன். இன்னும் கட்டடம் கட்டிக் கொண்டுதான் இருக்கின்றேன். ஒன்றுகூட நாள், நட்சத்திரம், முகூர்த்தம் பார்த்துக் கட்டவே இல்லை. எல்லா வீடுகளும் எல்லாமும் நல்ல நிலையில்தான் உள்ளன. ஆனால், நாள், நட்சத்திரம் பார்த்து கட்டிய எங்கள் சொந்தக்காரர்கள் வீடுகள் இன்று கடனுக்குப் போனதையும் காண்-கின்றேன். எனவே, இப்படிப்பட்ட செய்கைகள் எல்லாம் மிக மிக முட்டாள்தனமானதாகும்.
எங்கள் இயக்கம் சொல்லுவது எல்லாம் மனிதன் பகுத்தறிவுப்படி நடக்கணும். முட்டாள்தனமாக அர்த்தமற்ற சடங்குகள் செய்யக் கூடாது என்பது தான். இப்படிப்பட்ட சடங்குகள் செய்து முட்டாளாக, ஓட்டாண்டி-யாக ஆனவர்கள் எல்லாம் நாம்தான். இதனால் பலன் அடைந்து வருபவன் எல்லாம் பார்ப்பானேயாகும். அரசாங்கம் கூட முட்டாள்-தனமாக கப்பல் கட்டிவிட வேண்டு-மானால் கூட நாள், நட்சத்திரம் பார்த்து தேங்காய் உடைத்து விடுகின்றான். பார்ப்பான் ஆதிக்கம் இருப்பதால் இப்படிச் செய்கின்றார்கள்.
தோழர்களே, இப்படி பகுத்தறிவுப்படி இந்த விழாவை ஏற்படுத்திய நண்பர் நட்சத்திரம் அவர்களை நாம் பாராட்டியாக வேண்டும். இந்தப் புதுமனையில் திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைத்துள்ளார். இது மிகவும் புத்திசாலித்தனமான செய்கையாகும். இல்வாழ்க்கையைப் பற்றி திருவள்ளுவர் சிறப்பித்துக் கூறியுள்ளார். இப்படிப்பட்ட படம் இல்லாமல் சிவன் படம், விஷ்ணு படம், காளி படம் போன்றவைகளை வைத்தால் என்ன பிரயோசனம்? வீடுகளை அலங்கரிக்க படங்கள் வைக்க வேண்டும் என்று கருதினால் அறிவுக்குப் பொருத்தமான இதுபோன்ற படங்களை வைக்க வேண்டும்.
எங்களுக்கு வாழ்த்தில் நம்பிக்கையில்லை. வாழ்த்தில் நம்பிக்கை வைத்து, வாழ்த்து கண்டு சந்தோஷப்பட்டால், வசவு கண்டு, விசனப்-படவும் வேண்டுமே? நாங்கள் ஆசைப்படுவ-தெல்லாம், நண்பர் நட்சத்திரம் அவர்கள் எப்படி மூட நம்பிக்கையை ஒழித்து இப்படி அறிவுக்குப் பொருத்தமான காரியத்தைச் செய்துள்ளாரோ, அதுபோலவே மேலும் மேலும் நடந்து பொதுத் தொண்டுக்கும் உதவ வேண்டும்’’ என்பதே என்று கூறி முடித்தார்.
18.7.1962 அன்று வள்ளியூர் ஸ்டார் இல்லத் திறப்பு விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய பேருரை – “விடுதலை” – 28.7.1962
«««
சிந்தித்து அறிவின்படி எக்காரியமும் செய்ய வேண்டும்!
“பேரன்புமிக்க தாய்மார்களே, தோழர்களே, மணமக்களே!
உலகில் மக்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று, நம்பிக்கைவாதிகள். முன்னோர்கள் சொன்னது என்ன? சாஸ்திரம் என்ன சொல்கிறது? புராணம் என்ன சொல்கின்றது? முன்னோர் நடப்பு என்ன என்று பார்த்து அதன்படி நடப்பவர்கள். இரண்டாவது சாரார், அறிவுவாதிகள். மேலே சொன்னவற்றில் நம்பிக்கை வைக்காது, அறிவு கொண்டு அலசிப் பார்த்து அறிவுக்குச் சரி என்று படுகின்ற வழியில் நடப்பவர்கள்.
நான் வெறும் அறிவை ஆதாரமாகக் கொண்டே பேசுகின்றேன். எனது அறிவுக்குச் சரி என்று எது படுகின்றதோ, அதனையே பேசுகின்றேன். அதைச் சரியா? தப்பா? என்று சிந்தித்துப் பார்க்கக் கூடிய அறிவும் உங்களிடம் இருக்கின்றது. ‘சம்சாரம், துன்பசாகரம்’ என்று ஒருவர் குறிப்பிட்டார். அது சுத்த முட்டாள்-தனமான கூற்றாகும்.
மனிதனுக்கு அறிவு இருக்கின்றது. நன்மை தீமையை உணரும் சக்தியுள்ளது. இப்படிப்பட்ட மனிதன் தம் வாழ்க்கையை ஏன் துன்ப சாகரம் என்று கூற வேண்டும்? நல்ல முறையில் திருத்திக் கொள்ள சக்தி அற்ற சோம்பேறிகளின் கூற்றாகும்.
«««
மக்களை எந்தக் காரியத்தையும் அறிவின்படி நடக்க வேண்டும். இம்மாதிரியான நிகழ்ச்சி-களில் அர்த்தமற்ற மூடச் சடங்கு-களோடு முட்டாள்தனமான செலவுகளும் செய்வதுதான் கவுரவம் என்று கருதும் நிலை மக்கள் மத்தியில் வேரூன்றி விட்டது. ஆடம்பரமான கச்சேரி வைப்பது இதனால் எவருக்கு லாபம்? 3 மணி நேரம் 3,000 பேரை வேலை மெனக்கெட்டு உட்கார வைப்பது எவனுக்கு பாட்டின் பொருள் புரியும்? சங்கீத ஞானம் எத்தனை பேர்களுக்கு இருக்கும்? நான்கு சோம்பேறிகள் முன்னாடி உட்கார்ந்து தலையை ஆட்டுவது கண்டு மற்றவர்களும் தலை ஆட்டுவதைத் தவிர, இதைப் பற்றி என்ன தெரியும்?
பணம் 2,000 அல்லவா நஷ்டம் ஆகின்றது. எனவே, எந்தக் காரியமும் பகுத்தறிவுப்படி சிக்கனமாகத்தான் நடத்த வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றோம்.
மணமகன் நாகராஜன் நமது கழகத் தோழர். நமது கொள்கையில் தீவிரமானவர். முதலாவது இவரைப் பாராட்ட வேண்டும். சம்பிரதாயப் பாராட்டு அல்ல, இப்படி பல்லாயிரக்கணக்கான பிரமுகர்களையும், பொதுமக்களையும் கூட்டி இப்படி அறிவு சம்பந்தமான பிரச்சாரம் நிகழ்த்தச் செய்த பயனுள்ள காரியத்துக்காகவே பாராட்ட வேண்டும் என்கின்றேன். செலவு சிக்கனமாகச் செய்து இருக்கலாம். அது அவரால் தவிர்க்க முடியவில்லை. மற்றவர்களைப் போல இதற்கு விலக்காக முடியவில்லை.
இப்படிப்பட்ட காரியங்களுக்கு எதற்காக ஆடம்பரமான செலவு? பெரிய விருந்து போடுவது இதனால் திருமண வீட்டாருக்கோ, சாப்பிட்டவர்களுக்கோ கால்துட்டாவது பலன் உண்டா? திருமணத்துக்கு வந்துள்ளவர்கள் தங்கள் வேலை வெட்டிகளை விட்டு மானங்கெட்டு வந்து உள்ளார்கள்.
இவர்கள் சாப்பாட்டுக்காக இங்கு காத்துக் கிடப்பதில் எவ்வளவு அவர்களுக்கு அசவுகரியம்? அவர்கள் வீட்டில் ஆகும் சாப்பாட்டுச் செலவு அவர்கள் இங்கு சாப்பிடுவதினால் குறைந்து விடவா போகின்றது? இல்லை, ஏழைகளுக்கு என்பீர்கள். சோம்பேறிகள் ஆக்குகின்றீர் என்பதுதான் பொருள்.
பிச்சைக்காரர்களுக்கு உதவி என்று கூறினால் சோம்பேறிகளை நாட்டில் வளர்க்கின்றீர்கள் என்பதுதானே அர்த்தம்? திருமண வீட்டாரும், மற்றவர் தம்மை பெருமையாக நினைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, கடனை வாங்கிச் செலவு செய்தால், கடனை, பிறகு யார் கட்ட வேண்டும்?
இதனால்தான் நான் எங்கள் தோழர்-களுக்குக் கூறுவதுண்டு. திருமணத்தை மாலையில் 5:00 மணிக்கு மேல் வைத்துக் கொள்ளுங்கள். சிக்கனமாகும். சாப்பாட்டுச் செலவு ஆகாது. திருமணம் முடிந்து வெத்திலை, பாக்கு எடுத்துக் கொண்டதுடன் போய் விடுவார்கள்.
அர்த்தமற்ற சடங்குகளால் நாம் மடையர்களாக ஆவதோடு, நாமே இழிந்த ஜாதி மக்கள் என்கின்ற தன்மையை ஒத்துக் கொள்ளுவதாகவும் ஆகும். மணமக்கள் சிக்கனமாகவும், பகுத்தறிவுடனும், மக்கள் பேற்றிலும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைக் கடைப்பிடித்து நடக்க வேண்டும்.’’
22.7.1962 அன்று பாபநாசத்தில் நடைபெற்ற திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை – ‘விடுதலை’ 1.8.1962.

தொழிலாளர்களின் சிந்தனைக்கு…!

 

பெரியார் பேசுகிறார் : தொழிலாளர்களின் சிந்தனைக்கு…!

மே 1-15,2022

தந்தை பெரியார்

சுயமரியாதை இயக்கமோ அல்லது திராவிடர் கழகமோ ஆற்றும் பொதுத் தொண்டுக்கு ஏதாவது முக்கியமிருப்பின், அது பாடுபட்டுழைத்துப் பலனறியாது தவிக்கும் ஏமாந்து வாழும் தொழிலாளிகளுக்கும் தாழ்த்தப்பட்ட  சமுதாயத்தினருக்கும் நல்வாழ்வை ஏற்படுத்துவதைத் தவிர வேறொன்றுமில்லை என்பதை எடுத்துக்காட்ட-வேயாகும்.
இதைத் தவிர, எங்களுக்குப் பட்டம், பதவி, தேர்தல், ஓட்டு முதலியவைகளில் கவலையும் கருத்தும் வைத்து அதற்காகத் தொழிலாளர் தயவைப் பெற அவர்களிடத்திலே வீண் படாடோப வார்த்தைகளைக் கூறி ஏமாற்றி, கட்சியின் அரசியல் ஆதிக்கத்துக்காக அவர்களது சக்தியைப் பயன்படுத்திக் கொள்ளும் சூதோ, சூழ்ச்சியோ எங்களிடத்தில் கிடையாது.

பொதுவாக தொழிலாளர்களும் அவ்வித ஏமாற்று வலைகளில் சிக்கி மயங்கி தம் வாழ்வைக் கெடுத்துக் கொள்பவர்களாக இருக்கிறார்களேயன்றி, சிறிதாவது அறிவு வளர்ச்சி பெற்றவர்களாக ஆவதற்கு முயற்சி செய்வது கிடையாது. தொழிலாளர் அவ்வித அறிவு பெற்றுவிட்டால், எந்த அரசியல் கட்சிக்காரர்தான் அவர்களை ஏமாற்ற முடியுமென்று கேட்கிறேன். உங்களது ஒன்றுபட்ட சக்தியை நீங்கள் உணர்ந்து விட்டால் உங்களை எதிர்க்க யாரால் முடியும்? ஆனால் இன்று தொழிலாளர்களாகிய நீங்கள் அரசியலின்பேரால் பலவிதப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒற்றுமையின்றி வாழ்கின்றீர்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சோசியலிஸ்ட், தீவிரவாதி என்று இவ்வாறாகப் பிரிக்கப்பட்டு உங்களுக்குள்ளாகவே ஒருவரோடு ஒருவர் பகைத்துக் கொள்வதும், அடிதடிகளில் இறங்குவதும், போட்டிச் சங்கங்கள் அமைப்பதும், காட்டிக்கொடுப்பதும் ஆன காரியங்கள்தான் இன்றைய தொழிலாளர் இயக்கமாக இருந்துவருகிறது.

இன்றைய தொழிலாளர் தலைவர்கள் எனப்படுவோரின் தொண்டும், இப்படியாகக் கட்சிப் பிரிவினைகளை உண்டாக்கித், தமது சுயநலத்துக்காகப் பயன்படுத்திக் கொள்வதாக இருக்கிறதேயன்றி, இதுவரை இவ்விதக் கட்சிப் போட்டிகளால் தொழிலாளர்களுக்கு இம்மியளவாவது பயனேற்பட்டதென்று எவராவது கூற முடியுமா? என்று கேட்கிறேன். இவ்வளவுக்கும் காரணம் தொழிலாளர்கள் அறிவு வளர்ச்சி பெறாததேயாகும். எனவேதான் திராவிடர் கழகத்தாராகிய நாங்கள், அரசியலில் வீணாகக் காலங்கழிப்பதைவிட மக்களுக்கு வேண்டிய அறிவுத் துறையிலே பாடுபட்டு வருவதன் கருத்தாகும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பாடுபட்டுழைத்தும் பலனறியாத பாட்டாளி மக்களுக்கும் பொதுவாக நம் நாட்டு மக்களுக்கு அறிவு, மானம், ரோஷம், உண்டாக்கும் ஸ்தாபனந்தான் திராவிடர் கழகமென்பதும், அதன் வேலைத் திட்டங்-களுமாகும்.

சமுதாயத்திலே புகுத்தப்பட்டு வேரூன்றியுள்ள பார்ப்பனிய மூடப்பழக்க வழக்கங்களுக்கு நீங்கள் பாடுபட்டுச் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியைப் பாழாக்குகின்றீர்களே? இதிலிருந்து நீங்கள் விடுபட வேண்டாமா? இதைத்தான் திராவிடர் கழகம் கூறுகிறது. சமுதாய அமைப்பிலே புதியதோர் மாற்றம் வேண்டும். அந்த மாறுதலை அடிப்படையாகக் கொண்ட நல்லாட்சி வகுக்க வேண்டும்.
சமுதாய அமைப்புப் பற்றி நம் மக்களுக்குச் சற்றாவது தெளிவு உண்டா? பாமர மக்களை நான் கூறவில்லை. பெரிய பெரிய பண்டிதர்கள், புலவர்கள், ராஜ தந்திரிகள் முதல் பண்டார சன்னதிகள் வரைதான் தெரியுமா? _ சமுதாய அமைப்பு எப்படியிருக்க வேண்டுமென்று.

ஒருவன் பறையனாகவும், ஒருவன் சூத்திரனாகவும், ஒருவன் பார்ப்பனனாகவும் இருக்க வேண்டுவதும், இதன் காரணமாய் ஒரு கூட்டம் மட்டும் பாடுபடாமல் உல்லாச வாழ்வு வாழ்வதும் சரியான சமுதாய அமைப்பு என்று எவராவது கூறமுடியுமா? கூறமுடிய-வில்லை என்றால், அந்த அமைப்பை மாற்றியமைக்க வேண்டுவதுதானே இன்றைய முக்கியப் பொதுப் பணியாகும்? அதிலே நாம் கவலை செலுத்தாமல், பதவி, -பட்டம், ஓட்டுகளில் மட்டும் பாடுபடுவது மானரோஷமுள்ள காரியமாகுமா?
சமுதாயம் வேறு; அரசியல் வேறு என்று கூறுவது தவறாகும். சமுதாய அமைப்பைச் சரிவர நடத்துவதுதானே அரசாங்கத்தின் கடமையாகும். சமுதாய அமைப்புக்கு வழிவகை அமைப்பதே மதத்தின் தத்துவமாகும். முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும் தங்களது மதத்தை அவ்விதமே கையாண்டு வருகின்றனர். ஆனால், நமது மதமிருக்கிறதே, அது நமது சமுதாய அமைப்பின் முன்னேற்றத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாயிருக்கிறது. நம் அரசாங்கம் என்பதோ மக்களுக்காக அல்லாமல், அரசாங்கத்தாருக்காக மக்கள் வாழவேண்டிய தலைகீழ் தத்துவத்தில் நாம் உழன்று வருகிறோம். எனவே, நாமும் நமது நாடும் முன்னேற வேண்டுமானால் சமுதாயத் துறையிலே பெரும் மாறுதலை உண்டாக்க வேண்டும். அதன் பின்னரே நல்ல ஆட்சியும் ஏற்படுத்த முடியும். அவ்வாறில்லாது இன்றைய சமுதாய அமைப்பைக் கொண்டே, யார் ஆட்சிசெய்தாலும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தொல்லைகள் ஒரு சிறிதும் நீங்குவதற்கு வழிவகையிருக்க முடியாது.

இவ்வித சமுதாயப் புரட்சியை உண்டாக்கு வதில் தீவிரப் பங்கு கொள்ள வேண்டியவர்கள் வாலிபர்களேயாகும். அவ்விதத் தன்மையில் பொன்மலை திராவிடர் வாலிபர் கழகத்தார் மேலும் தமது தொண்டினை ஆற்ற வேண்டும். அதற்கு இங்குள்ள தொழிலாளர்கள் பெரிதும் ஆதரவு தரவேண்டும். கம்யூனிஸ்ட்களும், சோஷியலிஸ்ட்களும் மறைமுகமாகப் பார்ப்பனியத்துக்கு ஆதரவு தரும் சூழ்ச்சியை விட்டொழிக்க வேண்டும். கழகக் கொள்கைக் கிணங்க அதாவது பார்ப்பனியத்தை, மூடப் பழக்க வழக்கங்களை தொழிலாளர் இடையேயிருந்து அகற்றுதல் என்பதை விட்டுவிட்டு, வேறு என்னதான் தலைகீழாக நின்றாலும் அவர்களுக்கு நிரந்தர உரிமை ஏற்படாது. வேண்டுமானால் தொழிலாளர் பேரால் சுயநல வேட்டையும் அல்லது தத்தமது அரசியல் ஆதிக்க வேட்கையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியுமேயல்லாது பயன் ஒன்றும் காணமுடியாது. இதை இனியாவது கம்யூனிஸ்ட்களும், சோசியலிஸ்ட்களும், தீவிரவாதிகள் எனப்படுவோரும் உணர வேண்டும்.

தொழிலாளரும் இவர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். அரசியல் கட்சிக்காரர்களுக்குத் தொழிலாளர்கள் தங்கள் சக்தியை வீணாக்குவதிலும், குறிப்பாகத் தேசியத்தின்பேரால் ஏமாறுவதிலும் நீங்கள் உஷாராயிருக்க வேண்டும். இல்லையேல் தொழிலாளத் தோழர்களே! எதிர்காலத்தில் மேலும் மேலும் நீங்கள் பலவிதத் தொல்லைகளுக்கு உள்ளாக நேரிடும். தவிர, இனிப் பொதுத் தொண்டில் கூட நமக்குள் கட்சி பிரதிகட்சி, வீண் எதிர்ப்புகள் இருத்தல் கூடாது. சகோதரத்துவ முறையிலேயே தொண்டாற்ற வேண்டும். என்னைக் கேட்டால் ஒரே மேடையில் ஒரு ராமாயணக்காரரும், ஒரு பெரிய புராணக்காரரும், காங்கிரஸ்காரரும், நாமும் கலந்து பேசவேண்டும். பார்ப்பனரும் நம் மேடையில் பேசவேண்டும் அவரவர்கள் கருத்தை எடுத்துக் கூறவேண்டும். மக்கள் அதைக் கேட்கவேண்டும். சிந்தித்து அவரவர்களின் முடிவுக்குச் செயலாற்ற வேண்டும். அந்த அளவுக்கு மக்களிடத்திலே மனமாறுதல் ஏற்பட வேண்டுமென்பதே எனது எண்ணம்.
(22.5.1949ஆம் நாளில் பொன்மலை திராவிடர் கழக 8ஆம் ஆண்டு விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய பேருரையிலிருந்து…)

சனி, 15 ஏப்ரல், 2023

இந்தி ஏன் வேண்டாம்? ஆங்கிலம் ஏன் வேண்டும்?

 

 

ஏப்ரல் 16-31,2022

தந்தை பெரியார்

மாகாணங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்-பட்டு, மாகாண சுயாட்சி முறையும் ஏற்படுவது நிச்சயமாயிருக்கும்போது, இந்தியாவுக்குப் பொதுமொழி ஒன்று அவசியந்தான் என்பதே விவாதத்திற்குரிய விஷயம். தென்னிந்தியாவுக்கு வியாபாரத்திற்கும், வேறு வேலைகளுக்கும் வருகின்ற வடநாட்டார் எவ்வாறு தென்னிந்திய மொழிகளைக் கற்றுக் கொள்கிறார்களோ அதேபோல், வட நாட்டுடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டிய திராவிடர்களும், அங்கே வேலைக்குச் செல்லவேண்டியவர்களும் இந்தியைக் கற்றுக்கொண்டாலே போதும். இதைத் தவிர, உலகமொழியாகிய ஆங்கிலத்தை அறவே ஒழிப்பதென்பது முடியவே முடியாது. அப்படி ஒழித்தால், நாம் உலகிலேயே மிகப் பிற்போக்கான மனித சமுதாயமாகி விடுவோம் என்பது முக்காலும் உறுதி.

ஏனெனில், உலகில் சுமார் 26 கோடி மக்கள், அதாவது உலக மக்களில் எட்டில் ஒரு பங்குப்பேர் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கின்றனர்; உலகிலுள்ள பத்திரிகை-களில் சரிபாதிக்கு மேற்பட்டவை ஆங்கிலத்தில் வெளிவருகின்றன; உலகிலுள்ள ரேடியோ நிலையங்களில் 5இல் 3 பங்குக்குமேல் ஆங்கிலத்தில் செய்திகள் ஒலிபரப்பப்-படுகின்றன. இதைத்தவிர, ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டிராத பல இலட்சக்கணக்கான மக்கள் அறிவு, ஆராய்ச்சி, இலக்கியம், விஞ்ஞானம் ஆகிய துறைகளில் விரைவில் முன்னேறுவதற்காக ஆங்கிலத்தைப் பயின்று வருகின்றனர்.

எனவே, ஆங்கிலத்தை அறவே புறக்கணிக்க முடியாதென்பது நிச்சயம். உலக மொழியாகிய ஆங்கிலத்துடன் இந்தியப் பொதுமொழி என்று கூறப்படும் இந்தியையும் கற்றுக்கொண்டு, அவர்கள் தாய்மொழியையும் கற்கவேண்டு-மென்றால், மொழிகளைத் தவிர்த்த, இதர கலை நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்து வாழ்க்கைக்குப் பயன்படுத்துவது முடியக்கூடிய காரியமா? யோசித்துப் பாருங்கள்

– தந்தை பெரியார், விடுதலை, 20.9.1946

«««

இந்தியாவுக்கு பொது மொழி ஆங்கிலம்!

இந்தியாவுக்கு ஒரு பொதுமொழி வேண்டு-மானாலும், அல்லது வியாபாரத்திற்கு ஒரு பொது மொழி வேண்டுமானாலும், ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்து, அதை எல்லா மக்களிடையிலும் பரப்ப முயற்சிக்க வேண்டு-மேயல்லாமல், வேறு மொழியைப் பற்றி யோசிப்பது முட்டாள்தனமோ அல்லது சூழ்ச்சியோதான் ஆகும்.

ஆங்கிலம் உலக மொழி; உலக வர்த்தக விஞ்ஞான மொழி; இந்திய அரசாங்க மொழி; அதுமாத்திரமல்லாமல் மூடப்பழக்க வழக்கமும், பார்ப்பனியமும் இல்லாமல் அவ்வளவும் அடிப்படையான கலைகளை வாசகமாகப் பெற்ற மொழியாகும்.

– தந்தை பெரியார், குடிஅரசு, 20.1.1929

«««

ஆரிய கலாச்சாரத்தைப்

புகுத்தவே சமஸ்கிருதம்!

சமஸ்கிருதத்தைப் புகுத்தவே கட்டாய இந்தி!!

ஆரியர்கள் நம்மை முதலில் எப்படி அடிமைகொண்டார்கள்? பலத்தில் யுத்தம் நடத்தி வெற்றிபெற்றதன் மூலம் அல்லவே! தந்திரமாக தமது புராண இதிகாசங்களைக் கலைகளாக்கி, அவற்றை நம் மக்களிடையே புகுத்தினார்கள். அவற்றின் தத்துவத்தை _- அத் தத்துவக் கடவுள், அவற்றின் தர்மங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒப்புக் கொள்ளும்படிச் செய்தனர். அதில் அவர்கள் வெற்றிபெற்று, அதற்கேற்ப மனுநீதிச் சட்டம் வகுத்து, நம்மைக் கீழ்மக்கள் – ஈனப்பிறவி ஆக்கினர். அதாவது, மதத்தை முதலில் நம்மை ஒப்புக்கொள்ளச் செய்த பிறகு நம்மைக் கீழ்மக்கள் என்று கூறும் சட்டம் செய்துகொண்டனர். இதை உணர்ந்து மதத்தைக் கண்டிக்க நாம் ஆரம்பித்ததும், வேறு வழியில் அதாவது, தேசியத்தின் பேரால் இந்தியைப் புகுத்தி அதன்மூலம் ஆரியர் கருத்துகளைப் புகுத்தி – அதன் வழி நம் அறிவைப் பாழாக்க நினைக்கின்றனர். நமது பிரச்சாரத்தின்மூலம் மக்கள் ஓர் அளவுக்கு ஆரியக் கலாச்சாரத்திலிருந்து விடுதலை பெறவும், அதை வெறுக்கவும் முற்பட்டிருக்-கிறார்கள். ஆதலால், குழந்தைப் பருவத்திலேயே ஆரியக் கலாச்சாரத்தைப் புகுத்த வேண்டி இந்தியை ஆரம்பப் படிப்பிலேயே புகுத்த முயற்சிக்கிறார்கள். மதத்தினால் புகுத்த முடியாமல்போன பித்தலாட்டக் கருத்துகளை மொழியின் மூலம் புகுத்தச் சூழ்ச்சி செய்யப்படுகிறது. இந்திக்கும் சமஸ்கிருதத்-திற்கும் அதிக பேதமில்லை என்பதை இந்தி ஆதரவாளர்களே ஒப்புக்கொள்கிறார்கள். மதம் செல்வாக்குடன் இருந்த சமயத்தில் நாம் சமஸ்கிருதம் படிக்கக்கூடாதென்றும் கூறிவந்தார்கள். திருப்பதி, இராமேசுவரம் முதலிய இடங்களிலுள்ள சமஸ்கிருதக் கல்லூரிகளில், அதுவும் சர்க்கார் மானியத்தைக் கொண்டு நடைபெற்று வரும் இக்கல்லூரிகளில் கூட சமீபகாலம் வரை நம் மக்களுக்கு சமஸ்கிருதம் படிக்க வசதியளிக்கவில்லை.

நம் மக்களைக் கல்லூரிகளில் சேர்த்துக்-கொள்வதேயில்லை. சர்க்கார் மானியம் அளிப்பதை நிறுத்திவிடுவதாகப் பயமுறுத்திய பிறகுதான் நம் பிள்ளைகளையும் அக்கல்லூரி-களில் சேர்க்க முற்பட்டார்கள். எல்லோருக்கும் சம உரிமை இருக்க வேண்டும் என்பதற்காக நாம் போராடினோமே ஒழிய, சமஸ்கிருதம் படிப்பதால் அறிவு விசாலம் அடையும் என்பதற்காகப் போராடவில்லை. நாம் இன்று சமஸ்கிருதம் ஆரிய மொழி என்றும், அது நம் திராவிடக் கலாச்சாரத்தை அடியோடு பாழ்படுத்தி நிற்கும்மொழி என்றும், அதைப் படிப்பதால் மூட நம்பிக்கைக் கருத்துகள்தாம் வளர்ச்சியடையுமேயொழிய, ஆபாச அறிவுதான் வளர்ச்சியடையுமேயொழிய. பகுத்தறிவு வளராது என்றும் பிரச்சாரம் செய்வதன் பயனாக, சமஸ்கிருதத்தைக் கட்டாயப் படுத்தும் வாய்ப்பற்றவர்களாய்ப் போய் விட்டார்கள். மேலும், அது பேசும் பழக்கத்தில்.  உரையாடும் பழக்கத்தில் இல்லாது போய் விட்டதால் அதைக் கற்கும்படி வற்புறுத்த இயலாமல் போய்விட்டது.

எனவே, சமஸ்கிருதத்தின் மூலம் புகுத்த முடியாமற்போன பித்தலாட்டக் கருத்துகளை அதன் வழிமொழியான இந்தியின் மூலம் புகுத்த முற்பட்டிருக்கிறார்கள். அரசியல் ஆதிக்கத்தின் உதவியால் இந்தியைப் புகுத்துவதில் வெற்றி காணலாம் என்று நினைத்திருக்கிறார்கள்.

(தந்தை பெரியார், சென்னையில் 10.1.1950இல் சொற்பொழிவு) – ‘விடுதலை’, 16.1.1950