வியாழன், 29 ஏப்ரல், 2021

மே தினம்

பெரியார் பேசுகிறார் : பகுத்தறிவு வளர்ந்தால்...


சனி, 24 ஏப்ரல், 2021

பெரியார் மேளா சாதனை படைத்தவர் கன்சிராம்


கி.வீரமணி

இந்தியத் தலைநகர் புதுடில்லி, ரஃபி மார்க், மாவ்லங்கர் அரங்கில் தந்தை பெரியாரின் 117ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை 19.9.1995 அன்று திராவிடர் கழகம், சமூகநீதி மய்யம், டில்லி தமிழ்ச்சங்கம், தலித் சேனா, சமதா கட்சி அமைப்புகள் இணைந்து நடத்தியது. நிகழ்வில் கலந்துகொள்ள வரும் சிறப்பு விருந்தினரை பெரியார் சமூகக் காப்பு அணியினர் அணிவகுத்து வரவேற்றனர். விழாவிற்கு சமூகநீதிக் காவலர் வி.பி.சிங், நாடாளுமன்ற சமதா கட்சித் தலைவர் சந்திரஜித் யாதவ் எம்.பி., எழுத்தாளர் டாக்டர் பிரிஜ்லால் வர்மா, லக்னோ நகர முன்னாள் மேயர் தாவுஜி குப்தா, முன்னாள் மத்திய கல்வியமைச்சர் டி.பி.யாதவ், உ.பி. மாநில நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிகேவல் பிரசாத், டாக்டர் அண்ணல், நாடாளுமன்ற உறுப்பினர் மோகன் சிங், சையத் சகாபுதீன் எம்.பி., என பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த சமூகநீதித் தலைவர்கள் கலந்து கொண்டு தந்தை பெரியாரின் இன்றைய தேவைகளையும், தொடர்ந்து செய்ய வேண்டிய சமூகநீதிப் பணிகளையும் குறித்து விரிவாகப் பேசினார்கள்.

அந்த விழாவில் எனது உரையில், “ஈரோட்டுப் பெரியார் என்னும்  மருந்தே இன்றைக்கு   சர்வதேச பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு. லக்னோவில் ‘பெரியார் மேளா’ கொண்டாடியமைக்காக கன்ஷிராம் அவர்களுக்கும், முதல்வர் மாயாவதி அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுடில்லியிலும் தந்தை பெரியார் சிலையை நிறுவ அனைத்துத் தலைவர்களும் முன் முயற்சி எடுக்க வேண்டும். ஆங்கிலத்திலே ஒரு பழமொழி சொல்வார்கள் ‘All roads lead to Rome’’ என்பது போல இன்று எல்லாச் சாலைகளும் பெரியாரை நோக்கியே செல்லத் துவங்கி விட்டன. ‘All roads lead to Periyar’. உலகெங்கும் இப்போது பெரியார் பவனிவந்து கொண்டிருக்கிறார். அண்மையில் ஆங்கிலத்தில் ஒரு நூல் வெளிவந்திருக்கிறது. “Periyar E.V.Ramasamy messiah of the backward classes, invades north India” என்னும் பெயரில் வந்திருக்கிறது. பெரியாரின் நுழைவு என்பது போர் முறை நுழைவல்ல; அமைதியான முறையில் உங்களுக்குள் நுழைகிறார்.

தந்தை பெரியாரின் கொள்கைகளை நிறைவேற்ற உயிர்தான் விலை என்றால் சாவையும் சந்திக்கத் துணிவோம்! எந்தத் தியாகத்தையும் செய்து அய்யா கொள்கையை நிலைநாட்டுவோம், நன்றி’’ என உணர்ச்சி மேலிட பல கருத்துகளை எடுத்துக் கூறினேன்.

நிகழ்வில், நிறைவுரை ஆற்றிய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் தமது உரையில், “தந்தை பெரியாரின் தத்துவம் என்பது மனிதனின் சுயமரியாதையை உணர்த்துவது. ஜாதி முறையை ஒழிக்கவும், மூடநம்பிக்கைகளை அகற்றவுமே பெரியார் புரட்சிகரமான கருத்துகளை முன்வைத்துப் போராடினார். டில்லியில் மட்டுமல்ல; மாபெரும் தலைவரான பெரியாருக்கு இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் சிலைகள் நிறுவப்பட வேண்டும். கட்சிகள் நம்மைப் பிரிக்கும் கட்சிகளை சமூகநீதிக்காக ஒருங்கிணைக்கும் ஆற்றல் நண்பர் திரு.கி.வீரமணி அவர்களுக்கே உண்டு. ஒரு தலைமைக் கொறடா  (Chief Whip) போல் இருந்து ஒருங்கிணைத்து வழிநடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’ என கழகப் பணிகளைப் பாராட்டிப் பேசினேன். அரங்கம் நிரம்பி வழிந்தது. சமதா கட்சி முன்னணிப் பிரமுகர் அசோக் யாதவ் நன்றி கூறினார். விழாவினையொட்டி தந்தை பெரியார் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் புகைப்படக் காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

இந்த விழாவின் மாட்சிமைக்குரிய செய்தி இந்தியாவில் பரவி விடக் கூடாது என்பதற்காகவே ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் கிளப்பி விடப்பட்ட செய்தி “பிள்ளையார் பால் குடித்தார்’’ என்ற புரட்டுச் செய்தி என்பது நினைவு கூரத்தக்கது.

திருச்சி வெல்லமண்டியில் தந்தை பெரியார் 117ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும், உ.பி. மாநில முதல்வர் மாயாவதி, பகுஜன் சமாஜ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் கன்சிராம் ஆகியோருக்குப் பாராட்டு விழாவும் 10.10.1995 அன்று மக்கள் எழுச்சியோடு நடைபெற்றது. முன்னதாக விமானம் மூலம் வருகை தந்த உ.பி. முதல்வர் செல்வி மாயாவதி அவர்களையும், கன்சிராம் அவர்களையும் ஆயிரக்கணக்கான கழகத் தோழர்களோடு விமான நிலையும் சென்று வரவேற்றோம்.

கூட்டம் தொடங்குவதற்கு முன்பு தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஆர்.பி.சாரங்கன் அவர்கள் மறைவுற்ற செய்தியை வருத்தத்துடன் தெரிவித்து, பெருங்கூட்டமும் ஒரு நிமிடம் எழுந்து நின்று இரங்கலைத் தெரிவித்துக்கொண்டோம்.

மற்றொரு நிகழ்வாக சேலம் மாவட்டம், மேட்டூர் பொன்னகர் எம்.பி.இராமசாமி _குஞ்சம்மாள் ஆகியோரின் செல்வன் பாலகிருட்டினன், பெரியார் மாவட்டம் அத்தானியைச் சேர்ந்த ஆறுமுகம்_விஜயா ஆகியோரின் அருமைச் செல்வி கனகவல்லி ஆகியோரின் சுயமரியாதைத் திருமணத்தை பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் கன்சிராம் அவர்கள் தலைமையில், முதல்வர் மாயாவதி அவர்கள் மணமக்களுக்கு மாலை எடுத்துக் கொடுத்து நடத்தி வைத்தார்கள்.

விழாவின் சிறப்பு நிகழ்வாக உ.பி. முதல்வர் மாயாவதி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து, வீரவாள் ஒன்றினை பரிசளித்தோம். வீரவாள் கொடுத்தபோது மக்கள் சமுத்திரம் ஆர்ப்பரித்து பெரு முழக்கம் செய்தது. “அவாளின்’’ ஆதிக்கத்தை வீழ்த்த இவ்“வாள்’’ பயன்படும் என்று நான் கூற, கூடியிருந்த மக்கள் எரிமலையாய் உணர்ச்சியை வெளிப் படுத்தினார்கள்.

உ.பி. மாநில முதல்வர் தமது உரையில், “தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் பார்ப்பனியத்தை எதிர்த்து மிகக் கடுமையாகப் போரிட்டார்கள். இங்கே நடைபெறும் சுயமரியாதைத் திருமணத்தைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். ஒடுக்கப்பட்ட மக்களை வஞ்சிக்கும் எந்த மதத்துக்கும் நாங்கள் கடுமையான எதிரிகள்’’ என கொள்கை விளக்கி உரையாற்றினார்.

தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார் _ மணியம்மை பெண்கள் பொறியியல் கல்லூரிக்கு உ.பி. அரசு சார்பில் ரூ.10 லட்சம் நன்கொடையாக வழங்கினார்.

கன்சிராம் உரையாற்றுகையில், “1956இல் லக்னோவில் பெரியாருக்குக் கறுப்புக் கொடி காட்டினார்கள். எனவேதான் நானும், நண்பர் வீரமணியும் பெரியாரை அவரை எதிர்த்த இடங்களுக்கெல்லாம் கொண்டு செல்ல வேண்டும் என முடிவு செய்தோம்.

லக்னோ விழாவில் நீங்கள் கலந்துகொண்டு நடந்துகொண்ட விதமும் உ.பி. மக்களை பெரிதும் கவர்ந்துவிட்டது. இங்கு நடைபெற்ற சுயமரியாதைத் திருமணத்தைக் கண்டு பெரிதும் மகிழ்கிறேன். நான் காணும், கலந்துகொண்ட முதல் சுயமரியாதைத் திருமணம் இது. இந்தச் சிந்தனை தந்தை பெரியாரின் புரட்சி வடிவம். இதுபோன்ற திருமணங்கள் இந்தியா முழுமைக்குமே தேவை’’ என பல்வேறு கருத்துகளைக் கூறி மக்களை வியப்பில் ஆழ்த்தினார்.

நிகழ்வில் தலைமை உரையாற்றுகையில், “பெரியார் மேளா என்ற ஏ.கே.47 துப்பாக்கியை ஆரியத்துக்கு எதிராகத் தாங்கிக் காட்டியவர் கன்சிராம். 1956இல் தந்தை பெரியார் லக்னோ வந்தபோது கறுப்புக்கொடி பிடித்தவர்கள் அதே லக்னோவில் இந்தியாவே குலுங்க பெரியாருக்கு விழா எடுத்தீர்களே! அதற்கான நன்றித் திருவிழா இது. முதல்வரின் நன்கொடையை விட வடக்கு தெற்குக்கு அளித்துள்ள அங்கீகாரம். சகோதரத்துவத்தின் சங்கநாதம்! எங்கள் அன்பின் அடையாளம்!’’ என நன்றி உணர்வுடன் உரையாற்றினேன். திருச்சியே குலுங்குமளவுக்கு பல்வேறு கட்சி அமைப்பினரும், பொதுமக்களும், கழகத் தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நன்றி பாராட்டும் விழாவினையடுத்து, 11.10.1995 அன்று உ.பி. முதல்வரும், கன்சிராம் அவர்களும் வல்லம் _ பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரிக்கு வருகை தந்தனர். மாணவியர்கள் இருமருங்கிலும் வரிசையாக நின்று விருந்தினர் பெருமக்களை மகிழ்ச்சியோடு கைதட்டி வரவேற்றனர். கல்லூரி முதல்வர் பேராசிரியர் ச.ராஜசேகரன் விருந்தினருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். தந்தை பெரியார் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்படக் காட்சியை கன்சிராம் திறந்து வைத்தார்.

முதல்வர் செல்வி மாயாவதி அவர்கள், நாகம்மையார் விடுதியின் இரண்டாம் பகுதியை பலத்த கர ஒலிக்கிடையே திறந்துவைத்து வாழ்த்தினார். சமூகநீதிக்காகப் பாடுபட்ட தலைவர்களின் பெயர் சூட்டப்பட்டிருப்பது குறித்து அவர்கள் பெரிதும் மகிழ்ச்சியோடு உரையாற்றுகையில், “தென்னிந்தியாவில் இரண்டு மாமனிதர்கள் _ தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் ஆவார்கள். அவர்களின் பெயரால் பெண்களுக்குத் தொழில்நுட்பக் கல்லூரி நடத்துவது சரியானது _ சிறப்பானது! உங்களது சமூகநீதி வளர்ச்சிக்கான நிறுவனங்கள் மேலும் மேலும் வளர வேண்டும் என்று விரும்புகிறேன்’’ என பாராட்டி உரையாற்றினார்.

கட்டட எழிற்கலை பட்டப்படிப்புப் பிரிவை (B.Arch.,) துவக்கி வைத்து பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் கன்சிராம் அவர்கள் உரையாற்றுகையில், “தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை சகோதரர் கி.வீரமணி சிறப்பாகச் செய்து வருகிறார். இந்தியா முழுவதும் இந்தப் பணியினை எடுத்துச் செல்ல வேண்டும்’’ என வாழ்த்தி உரையாற்றினார். 10 லட்சம் ரூபாய்  உ.பி. அரசு சார்பில் வழங்கினார்.

இவ்விழாவினையொட்டி, “பெரியார் டெக்மேக் 95’’ என முதல் மலரை கல்லூரி தலைவராக நான் வெளியிட, கல்லூரி தாளாளர்கள் கோ.சாமிதுரை, வீகேயென் கண்ணப்பன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். விழாவினையொட்டி ஏராளமான பேராசிரியர்களும், கழகப் பொறுப்பாளர்களும் பெரும் அளவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

-உண்மை இதழ் மார்ச் 16-31.21

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

பெரியாரின் இறுதி ஊர்வலம் ..







1973, டிசம்பர் 24_ந்தேதி மரணம் அடைந்த பெரியாரின் உடல், பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தது.   லட்சக்கணக்கான மக்கள், "கியூ" வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். `கியூ' வரிசை வளைந்து, வளைந்து அண்ணா நினைவிடம் வரை (சுமார் 2 மைல் தூரம்) நீண்டிருந்தது.
 
முதல்_அமைச்சர் கலைஞர் கருணாநிதியும், அமைச்சர்களும், காலையிலேயே ராஜாஜி மண்டபத்துக்கு வந்து, பெரியார் உடல் அருகே அமர்ந்து இருந்தனர். பெரியாரின் மனைவி மணியம்மை சோகமே உருவாக இருந்தார். சிறு வயது முதல் பெரியாருடன் இருந்தவரான வீரமணி, கண்ணீர் வடித்தவாறு பெரியார் உடல் அருகே இருந்தார்.
 
குன்றக்குடி அடிகளார், ராஜாஜி மண்டபத்துக்கு வந்து பெரியார் உடல் மீது பொன்னாடை போர்த்தினார். மற்றும் தலைவர்கள், அமைச்சர்கள், பிரமுகர்கள், கலை உலகத்தினர் வந்து இறுதி மரியாதை செலுத்தினர்.   பெரியார் இறுதி ஊர்வலத்தை அரசு மரியாதையுடன் நடத்த முதல்_அமைச்சர் கலைஞர் கருணாநிதி விரும்பினார்.
 
ஆனால், "பெரியார் அரசுப் பொறுப்பு எதிலும் இல்லாத காரணத்தால், அரசு மரியாதையுடன் இறுதி ஊர்வலம் நடத்த விதிமுறைகளில் வழி இல்லை" என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள். உடனே கலைஞர் கருணாநிதி, "காந்தியடிகள் எந்த அரசுப் பொறுப்பில் இருந்தார்? தந்தை பெரியாருக்கு அரசு மரியாதை தரப்பட்டே ஆகவேண்டும்.
 
அதனால், அரசாங்கமே கலைக்கப்படக்கூடிய நிலை ஏற்படுமானால், அதைவிட பெரியபேறு எனக்கு வேறு இருக்க முடியாது. எனவே, விளைவுகளைப்பற்றி கவலைப்படாமல், நடக்க வேண்டியதை கவனியுங்கள்" என்றார். அதன்படி, அரசு மரியாதையுடன் இறுதி ஊர்வலம் நடந்தது. 3 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட "டிரக்" வண்டியில் பெரியார் உடல் வைக்கப்பட்டது.
 
வண்டியில் ஏற்றுவதற்காக பெரியார் உடலை எடுத்தபோது, பெரியாரின் காலைப் பிடித்தபடி மணியம்மை கதறி அழுதார். திராவிடர் கழக பொதுச்செயலாளரும், மாணவப்பருவம் முதல் பெரியாரின் நிழலில் வளர்ந்தவருமான கி.வீரமணி, பெரியார் உடல் மீது விழுந்து கண்ணீர் விட்டு அழுதார். "இனி எங்களுக்கு கட்டளையிடுவதற்கு யார் இருக்கிறார்கள்அய்யா! இந்த அடிமையை விட்டு பிரிந்துவிட்டீர்களே அய்யா!" என்று அவர் கதறினார்.
 
பெரியார் உடல், டிரக் வண்டியில் ஏற்றப்படுவதற்கு முன், முதல்_அமைச்சர் கலைஞர் கருணாநிதி மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அமைச்சர்கள், திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீரமணி, ஈ.வெ.கி.சம்பத், காமராஜர், வி.ராமையா ஆகியோர் மலர் வளையம் வைத்தனர்.
 
நடிகர் சிவாஜிகணேசன் பெரியார் உடல் மீது மலர் வளையம் வைத்து விட்டு கதறி அழுதார். சிலர் வந்து அவரை அழைத்துச் சென்றனர். கவர்னர் கே.கே.ஷா சார்பில் அதிகாரி ராமசாமி மலர் வளையம் வைத்தார். பெரியார் உடல் வைக்கப்பட்டிருந்த டிரக் வண்டியில் கலைஞர் கருணாநிதி, மணியம்மை, சம்பத், வீரமணி, அமைச்சர்கள் நெடுஞ்செழியன், என்.வி.நடராசன் ஆகியோரும் இருந்தனர். 
 
3.10 மணிக்கு பெரியாரின் இறுதி ஊர்வலம் ராஜாஜி மண்டபத்தில் இருந்து புறப்பட்டது. வண்டி நகர்ந்தபோது கூடியிருந்த பெரும் கூட்டம், "அய்யா அய்யா, பெரியார் வாழ்க" என்று குரல் எழுப்பினார்கள். சுற்றி இருந்த மரங்கள், கட்டிடங்கள் முழுவதிலும் ஏராளமானவர்கள் ஏறி நின்று பார்த்தார்கள். பெரியாரின் உடலைப்பார்த்து கதறிய சிலர் மயங்கி விழுந்தார்கள்.
 
ஊர்வலத்தின் முன் பகுதியில் போலீஸ் ஜீப் கார் வந்தது. இதைத்தொடர்ந்து குதிரைப் படை அணிவகுத்து வந்தது. அமைச்சர்கள் நடந்தார்கள் அமைச்சர்கள் அன்பழகன், ப.உ.சண்முகம், மாதவன், சாதிக் பாட்சா, சி.பா.ஆதித்தனார், அன்பில் தர்மலிங்கம், ராசாராம், ஓ.பி.ராமன், ராமச்சந்திரன், கண்ணப்பன் மற்றும் பிரமுகர்கள், சட்டமன்ற _ பாராளுமன்ற உறுப்பினர்கள் நடந்து சென்றார்கள்.
 
பிறகு, தலைவர்கள், பிரமுகர்களின் கார்கள் சென்றன. தொடர்ந்து, பெரியார் உடல் வைக்கப்பட்ட "வேன்" சென்றது.   அண்ணா சாலையில், "ரவுண்டாணா" அருகில், கூட்டம் அலை மோதியது. கூட்டத்தை ஒழுங்குபடுத்த போலீசார் மிகவும் சிரமப்பட்டனர். ஊர்வலத்தில் சென்றவர்கள், சாலைகளின் இருபுறமும் நின்றவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.
 
பாடிகார்டு ரோடு, பூந்தமல்லி ஐரோடு (தற்போதைய ஈ.வெ.ரா.பெரியார் சாலை) வழியாக வேப்பேரி ரண்டல் ரோட்டில் (தற்போதைய ஈ.வெ.கி.சம்பத் சாலை) உள்ள பெரியார் திடலை மாலை 4_45 மணிக்கு ஊர்வலம் அடைந்தது. பெரியார் உடல் வைக்கப்பட்டு இருந்த டிரக் வண்டி, திடலுக்குள் நுழைந்தபோது, கூடி இருந்தவர்கள் "அய்யா" என்று கதறிய படி கண்ணீர் வடித்தனர்.
 
பெரியாரின் உடல் டிரக் வண்டியில் இருந்து இறக்கப்பட்டு, அழகிய வேலைப்பாடுகள் செய்யப்பட்ட தேக்கு மரப்பெட்டிக்குள் வைக்கப்பட்டது. அந்த பெட்டியின் மீது, "பெரியார் ஈ.வெ.ராமசாமி" என்று எழுதப்பட்டு அவர் பிறந்த தேதி, இறந்த தேதி ஆகியவை எழுதப்பட்டு இருந்தன. பெரியார் உடல், பெட்டிக்குள் வைக்கப்பட்டதும், தலைவர்களும், அமைச்சர்களும் வாசனை தைலத்தை தெளித்தனர். 
 
4_57 மணிக்கு, போலீசார் துப்பாக்கியை தலைகீழாகப் பிடித்தபடி இறுதி மரியாதை செலுத்தினார்கள். பிறகு, 36 குண்டுகளை வானத்தை நோக்கி சுட்டு, அஞ்சலி செய்தனர். அப்போது போலீஸ் பாண்டு வாத்தியக் குழுவினர் சோக இசை முழங்கினர். இந்த நிகழ்ச்சி முடிந்ததும், பெட்டி மூடப்பட்டது. பிறகு தயாராக வெட்டி வைக்கப்பட்டிருந்த குழிக்குள், பெட்டி இறக்கப்பட்டது.   பெட்டி இறக்கப்பட்டதும் குழி மூடப்பட்டது.
 
அப்போது கலைஞர் கருணாநிதி வாய் விட்டு கதறி அழுதார். அவருக்கு காமராஜர் ஆறுதல் கூறினார். அடக்கம் நடந்தபோது பெரியாரின் மனைவி மணியம்மை துயரம் தாங்காமல் குமுறி அழுதார். தொண்டர்கள் ஆறுதல் கூறி அவரை அழைத்துச் சென்றனர். கலைஞர் கருணாநிதி துயரத்தை அடக்கிக் கொண்டு "பெரியார்" என்று குரல் எழுப்ப, கூடி இருந்தவர்கள் "வாழ்க" என்று முழக்கமிட்டார்கள். இந்த வாழ்த்தொலி முழக்கத்துடன், பெரியார் உடல் அடக்க நிகழ்ச்சி முடிவுற்றது.
 
முன்னதாக, இறுதி ஊர்வலம் சென்னை மாநகராட்சி அருகே வந்தபோது, கூட்டம் கட்டுக்கடங்காமல் போயிற்று. பலர் நெரிசலில் சிக்கித் தவித்தனர். போலீசார் அமைதியை நிலை நாட்ட முயன்றபோது, அவர்களை நோக்கி கற்கள் வீசப்பட்டன. இதனால், கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். பெரியார் திடலை ஊர்வலம் நெருங்கிக் கொண்டிருந்தபோது, பூந்தமல்லி ஐரோட்டில் கிறிஸ்தவ தேவாலயம் அருகே, கூட்டம் அலை மோதியதால், பலர் நெரிசலில் சிக்கினர்.
 
அமைதியை நிலைநாட்ட முயன்ற போலீசார் மீது கற்களும், செருப்புகளும் வீசப்பட்டன. எனவே, அங்கும் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். கூட்டத்தினர் சிதறி ஓடினர்.   கல் வீச்சு, நெரிசல் காரணமாக 16 போலீசார் உள்பட 30 பேர் காயம் அடைந்தனர். போலீசாரில் 2 பேர் அதிகாரிகள்.
 
நெரிசலில் சிக்கி நசுங்கி, ஆஸ்பத்திரிக்கு படுகாயத்துடன் கொண்டு போகப்பட்ட ஒருவர் வழியிலேயே மரணம் அடைந்தார். அவர் பெயர் மருதமுத்து (வயது 53). திருச்சி வரகனேரியைச் சேர்ந்தவர். பெரியார் இறுதி ஊர்வலத்தைக்காண அவர் குடும்பத்துடன் சென்னை வந்திருந்தார்.     மறைந்த சுதந்திரா கட்சித் தலைவர் ராஜாஜியும், ஈ.வெ.ரா.பெரியாரும் அரசியலில் இரு துருவங்களாக இருந்தவர்கள்.
 
ஆயினும் நெருங்கிய நண்பர்கள். பெரியாரைவிட ராஜாஜி ஒரு ஆண்டு மூத்தவர். அவர் தனது 95_வது வயதில் 1972 டிசம்பர் மாதம் 25_ந்தேதி மரணம் அடைந்தார். சரியாக ஒரு ஆண்டு கழித்து பெரியார் 1973 டிசம்பர் 24_ல் மரணம்😢 அடைந்தார். ராஜாஜி 94 ஆண்டுகளும் 14 நாட்களும் வாழ்ந்தார். பெரியார் 94 ஆண்டுகளும் 96 😢 நாட்களும் வாழ்ந்தார்.  வாழ்க  👍                        அவர் தம் கொள்கை 💐 🎂 G.k
  கோ. கோட்டைக்கருப்பன் பதிவு


புதன், 21 ஏப்ரல், 2021

செங்கற்பட்டில் தமிழ்நாட்டுச் சுயமரியாதை மகாநாடு!


16.12.1928- குடிஅரசிலிருந்து....

தமிழ்நாடு சுயமரியாதை மகாநாட்டை செங்கல்பட்டு ஜில்லாவில் கூட்ட வேண்டுமென்று செங்கல்பட்டு ஜில்லா பிரமுகர்கள் முடிவு செய்திருப்பதாக பத்திரிகைகளில் காண நாம் மிகுதியும் மகிழ்ச்சியுடன் அவ்வபிப்ராயத்தை வரவேற்கின்றோம்.

தற்காலம் அரசியல் புரட்டாலும், மதவியற் புரட்டாலும் கஷ்டப்பட்டும், பார்ப்பனர்களாலும் அவர்களது கூலிகளாலும் வஞ்சிக்கப்பட்டும், பகுத்தறிவும் தன்மதிப்பும் இழந்து தவிக்கும் நாட்டிற்கும் பாமர மக்களுக்கும் சுயமரியாதை இயக்கமே ஒருவாறு புத்துயிரளித்து வருகின்றது என்பது நடு நிலைமை கொண்ட அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயமேயாகும். அப் பேர்பட்ட இயக்கத்தை நாடு முழுவதும் பரவச் செய்வதன் மூலம், மக்களுக்கு உண்மையை உணர்த்தி தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பி ஊக்கமூட்டி நிலைத்த உணர்ச்சியை உண்டாக் கவும் அடிக்கடி ஆங்காங்கு மகாநாடுகள் கூட்டி, குறைகளை வெளிப்படுத்தியும் பல அறிஞர்களின் உபதேசத்தைக் கேட்கச் செய்தும் நாட்டில் தீவிர பிரச்சாரம் செய்யவும் வேண்டியது மிகவும் அவசியமானது என்பதும், இது ஆங்காங்குள்ள தலைவர்களுடையவும், பிரமுகர்களுடையவும் கடமையானது மான காரியம் என்பதும் நாம் சொல்லாமலே விளங்கும்.

இதுவரை பல ஜில்லாக்களிலும், தாலூக்காக் களிலும் ஜில்லா, தாலூகா மகாநாடுகள் கூட்டப் பட்டிருக் கின்றதானாலும், தமிழ் நாட்டுக்கே தமிழ் மாகாண பொதுவான மகாநாடு கூட்டப்பட வில்லை. இதற்காக சுமார் 4,5 மாதமாய் சில ஜில்லாக்காரர்கள் முயற்சி செய்து வருவதாகத் தெரிந்தாலும் நமது செங்கல்பட்டு ஜில்லாவில் தீவிர முயற்சி செய்து ரூபாய் 5000 -க்கு மேல் - வசூல் செய்யப்பட்டு வரவேற்பு சபை முதலியவைகளும் ஏற்படுத்தி வரவேற்பு சபை அக்கிராசனரை யும் தெரிந்தெடுத்த விட்டதாகத் தெரிய வருகின்றது.

மகாநாட்டு தலைவரைத் தெரிந்தெடுப்பதில் தக்க கவலை செலுத்தி சுயமரியாதையியக் கத்தில் மிகுதியும் கவலையும் உறுதியும் கொண்ட கனவான் களாகவும் சுயமரியாதை எல்லோருக்கும் மிக அவசியமானதெனக் கருதும் கனவான்களாகவும் பார்த்துத் தெரிந்தெடுக்க வேண்டும் என்றே விரும்பு கின்றோம்.

திருவாளர்கள் சவுந்தரபாண்டிய நாடார், எம். கிருஷ்ண நாயர், பி.சுப்பராயன், சர். கே. வி.ரெட்டி நாயுடு, எம்.கே.ரெட்டி, பன்னீர் செல்வம், குமாரசாமி செட்டியார், ராஜன், சண்முகம் செட்டியார், முதலியவர்களைப் போன்றவர்களையே தெரிந்தெடுத்தால் மிகுதியும் பொருத்தமானதாக இருக்கும் என்பதை நாம் சொல்ல வேண்டியதே இல்லை.

நிற்க, தஞ்சாவூரும் மாகாண சுயமரியாதை மகாநாட்டை நடத்த முயற்சிப்ப தாய்த் தெரி கின்றது. தமிழ் நாட்டிலுள்ள ஜில்லா போர்டுகளில் செங்கல்பட்டும் தஞ்சாவூரும் உறுதியானதும் பயமற்றதுமான தன்மையுடன் பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு அனுகூலமாயுமிருக்கிறது. அதற்குக் காரணம், இந்த இரண்டு ஜில்லா போர்டு தலைவர்களையும் எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் தலைகீழாகப் பாடுபடுவதே போதியதாகும். பார்ப்பனப் பத்திரிகைகளும் அவர்கள் கூலிகளும் இவர் களைப் பற்றி தூற்றாத - விஷமப் பிரச்சாரம் செய்யாத நாட்களைக் காண்பது மிகவும் அரிதாகும். சென்னை மாகாணம் முழுவதற்கும் பார்ப்பனர்கள் கண்களுக்கு நமது பனகால் அரசர் எப்படி ஒரு பெரிய இராட்சதராக காணப்படுகின்றாரோ அதுபோல் தஞ்சை செங்கல்பட்டு ஜில்லாப் பார்ப்பனர்களுக்கு நமது திருவாளர்கள் டி. பன்னீர் செல்வம் அவர்களும், திரு. எம்.கே. ரெட்டி அவர்களும் இராட்சதர்கள் என்றால் பார்ப்பன ஆதிக்கத்தை அழிக்கத் தோன்றியவர்கள் என்பது தத்துவார்த்தம். இந்த நிலையில் அவர்கள் சுயமரியாதை மகாநாடு கூட்ட முன்வந்தது யாருக்கும் அதிசயமாய்த் தோன்றாது.

தஞ்சை ஜில்லாவில் பார்ப்பனரல்லாதார் மாகாண மகாநாடு கூட்டும் முயற்சி யில் மாத்திரம் இருந்து கொண்டு சுயமரியாதை மகாநாட்டைச் செங்கல்பட்டு ஜில்லாவிற்கு விட்டு விட வேண்டுகிறோம். செங்கல்பட்டு ஜில்லா பிரமுகர்கள் இந்த முயற்சிக்குத் தாராளமாய் வெளியில் வந்து வேண்டிய உதவி செய்யக் கோருகின்றோம்.

செவ்வாய், 20 ஏப்ரல், 2021

புரட்சி என்றால் என்ன?


* தந்தை பெரியார்

சுயமரியாதை உணர்ச்சிக் கொண்ட வாலிபத் தோழர் களே! இன்று நீங்கள் எனக்கு வாசித்துக் கொடுத்த உபசார பத்திரத்திற்கு நான் உண்மையாகவே மகிழ்ச்சி அடை கிறேன். ஏனெனில் இந்த உபசாரப் பத்திரம் உங் களுக்குள் தோன்றித் ததும்பும் சுயமரியாதை உணர்ச்சியை முன் னிட்டே (நீங்கள் இதை) வாசித்துக் கொடுத்திருக்கிறீர்கள் என்று உங்கள் உபசாரப் பத்திர வாக்கியங்களில் இருந்தே உணருகிறேன்.

தோழர்களே! உங்கள் உபசாரப் பத்திரத்தின் தலைப்பில் புரட்சி வாழ்க! பொதுவுடமை ஓங்குக! என்று குறிப்பிட்டி ருக்கும் வார்த்தையைக் கண்ட அநேகர் எருதுக்கு முன் னால் சிகப்புத் துணியை விசிறினால் மிரண்டு மிரண்டு துள்ளுவது போல் பயப்படுவதாகத் தெரிகிறது. ஆனால் இவ்வளவு பயப்படத் தகுந்த காரண காரியங்கள் ஏதுவும் அவ்வார்த்தையில் அடங்கியிருப்பதாய் நான் கருதவில்லை.

ஆனால், அவ்வார்த்தையானது, பயப்படத்தக்க முறையில் கற்பிக்கப்பட்டு விட்டது. எது போலென்றால் "பூச்சாண்டி" என்றால் அதற்கு அர்த்தம் இன்னதுதான் என்று தெரியாமலேயே குழந்தைகளைப் பயப்படுத்தி வைத்திருப் பதைப் போல் உங்களில் அநேகரைப் புரட்சி என்றால் அதன் அர்த்தம் என்ன? பயன் என்ன? என்கின்ற விஷயம் உணராமல் பயப்படும் படி செய்யப்பட்டாய் விட்டது.

புரட்சி

புரட்சி என்றால் என்ன? அது பயப்பட வேண்டிய விஷயமா? என்பதைப் பற்றி சற்றுயோசித்துப் பார்ப்போம்.

சாதாரணமாக ஒரு மனிதன் ஒரு இடம் விட்டு மற்றொரு இடத்திற்குப் போவதற்குத் தரையில் ஒரு மணிக்கு 3 -மைல் வீதம் நடந்து கொண்டிருந்த நிலைமை மாறி, ஒரு மணிக்கு 400 மைல் ஆகாயத்தில் பறக்கும் படியான நிலையை அடைய யோசிப்பானேயானால் நடக்கும் விஷயத்தில் அது ஒரு, பெரிய பிரம்மாண்டமான புரட்சியேயாகும். இந்தப் படியான புரட்சியில் வெற்றி பெற்ற ஒருவன் ஆகாயத்தில் 1 மணிக்கு 400 மைல் பறக்கும் போது 3 மைல் வீதம் நடை யிலேயே இருக்கிற ஒருவன் அதிசயப் பட வேண்டியதுதான்.

ஆனால் பயப்படுவதற்கு இதில் ஒன்றும் இல்லை. இதனால் யாருக்கும் எவ்விதக் கெடுதியும் இல்லை. எந்த ஒரு காரியத்தையும் மனிதன் அவனுடைய வெகுநாளைய பழக்கம், வழக்கம், நம்பிக்கை ஆகியவைகளுக்கு விரோத மாக ஆக்க முயற்சித்தால் அதைப் புரட்சி என்று தான் சொல்லுவார்கள். ஆனால், அதனால் அனுகூலம் அடைக் கின்ற வர்கள் காரியம் என்று சொல்லிப் புகழவும், அதனால் தீமையடைகின்றவர்கள் அதைக் கெட்ட காரியம் என்று சொல்லி இகழவும், சரியான முறையில் எதிர்க்க சக்தி இல்லாதவர்கள் தப்பர்த்தம் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி அதன் மூலம் எதிர்ப்பு ஏற்படச்  செய்வார்கள். ஆனால், மனித சமுகத்தில் புரட்சி என்பது மிகச் சாதாரணமாய் இருந்து காரியத்தில் நடைபெற்று தான் வருகின்றது. மனி தனுக்கு முற்போக்கு அறிவும், அக்கறையும். ஏற்பட ஏற்பட புதிய புதிய உணர்ச்சிகள் தோன்றத் தோன்ற மாறுதல்கள் என்கின்ற புரட்சிகள் உண்டாக்கிக் கொண்டேதான் இருக்கும். புரட்சிகள் என்றால் என்ன? ஒரு விஷயம் அதன் பழக்க வழக்க நிலையில் இருந்து மாற்றம் அடைவதும் அதிலும் அது அடியோடு தலை கீழ் நிலை அடையும் படி மாற்றமடைவதுமேதான் புரட்சி என்று சொல்லப்படுவ தாகும். அந்தப்படி  இப்போது நம் கண்முன்னாலேயே எவ்வளவோ புரட்சிகளைக் காதால் கேட்டு விட்டோம் கண்ணால் பார்த்து விட்டோம். ஒவ்வொரு  புரட்சியிலும் எந்தெந்த  தேசம் பூமிக்குள் போய் விட்டது? எந்த சமுகம் பூண்டற்றுப் போய் விட்டது மாறுதலேற்படும்போது சற்று தடபுட லாய் மக்கள் மிரளுவதும் சிறிது நாளானவுடன் அது இயற்கையாய் ஆகிவிடுவதும், பிறகு அதிலிருந்து மற்றொரு புரட்சி ஆரம்பிப்பதும் சகஜந் தானே.

சாதாரணமாக அரசியல் துறையில் ஏற்பட்ட புரட்சியை எடுத்துக் கொள்ளுங்கள். நமது நாட்டில் அரசர்களெல்லாம் கடவுள் அவதாரங் களல்லவா, கடவுள் அம்சங்களல்லவா? கடவுள் அருள் பெற்றவர்களல்லவா?  கடவுள் கடாட்சம் பெற்றவர்களல்லவா? இது தானே அரசனைப் பற்றிய நமது சாஸ்திரங்கள் என்பவைகளிலும், புராணங்கள் என்பன வகையிலும் சொல்லப்பட்ட சத்திய வாக்கு? சமீப காலம் வரை நாம் அரசரை விஷ்ணு அம்சம் என்று சொல்லிக் கொண்டிருக்கவில்லையா? அரசன் கடவுள் அவதார அம்சம் என்பதாகக் கூறிக் கொண்டும் புராணங்கள் படித்துக் கொண்டும் இருக்கவில்லையா? இன்றும் பலர் அம்மாதிரி படித்துக் கொண்டிருக் கிறார்களா? இல்லையா? ஆனால் நாம் இப்போது என்ன சொல்லுகிறோம்? மனித சமுகத்திற்கு அரசன் எதற்கு? என்று கேட்கும் நிலைமைக்கு வந்து விடவில்லையா? எங்களுக்கு ஒரு சக்கரவர்த்தியோ அரசனோ இருப்பது எங்கள் சுயமரியாதைக்கு குறைவு என்று சொல்ல வந்து விட்டோமா? இல் லையா? ராஜபக்தி ராஜ வாழ்த்து அடிமைத் தனம் என்று சொல்ல வந்து விட்டோமா? இல்லையா? அந்தப் படியே பல தேசங்களில் அரசர்கள் ஒழிந்தும் விட்டார்களா? இல் லையா? ஆகவே, அரசியல் துறையில் இது ஒரு பெரிய புரட்சியா? இல்லையா? என்று உங்களைக் கேட்கின்றேன்.

இந்த புரட்சியில் என்ன ஆபத்து வந்து விட்டது? எந்த தேசம் மண்ணில் புதைந்து விட்டது யார் வாய்வெந்து போய் விட்டது? யார் தலைபோய் விட்டது, அரசர்கள் ஒழிக் கப்பட்ட தேசம் நெருப்புப் பற்றி எரிந்து விட்டதா? அல்லது பாலைவனமாகி விட்டதா? சுமார் 40, 50 வருஷங்களுக்குமுன் அரசாங்கத்தைக் குறை கூறவோ மாற்றவோ நம் நாட்டில் யாராவது கருதியிருப்பார்களா என்று யோசித்துப் பாருங்கள். எந்தப் புராணத்திலாவது, சாத்திரத்திலாவது அரசன் வேண்டாம் என்று சொன்னதாகப் பார்த்திருக்கிறோமா? இன்று எப்படி தைரியமாய்ச் சொல்ல வந்து விட்டோம்? இது ஒரு பெரிய புரட்சியா அல்லவா என்று யோசித்துப் பாருங்கள்.

இது போலவே மக்களில் ஒரு சாராரை "பூதேவர்கள்" (இந்த உலகக் கடவுள்கள்) என்றும் மற்றொரு சாராரை கண் ணினாலும் பார்க்க முடியாதவர்கள் என்றும், சண்டாளர்கள் என்றும் கருதியிருந்தோமா? இல்லையா? இதற்கு வேத சாத்திர புராண ஆதாரங் கள் கடவுள் வாக்குகள் இருக் கின்றது என்று சொல்லி "பூதேவர்கள்" காலில் விழுந்து கும்பிட்டும் "சண்டாளர்களை" தெருவில் நடக்க விடாமல் துரத்தி அடித்தும் வந்தோமா இல்லையா? ஆனால் இன்று அவர்களைத் தெருவில் மாத்திரம் அல்லாமல் கோவிலுக் குள் கூட்டிக் கொண்டு போக வேண்டும் என்று சொல்லு கின்றோமா? இல்லையா? இப்படிச் சொல்லுகின்றவர்கள் "மகாத்மா" என்று அழைக்கப்படுகிறார்களா இல்லையா?

"மற்றும் இம்மாதிரி சண்டாளர்கள்" கண்ணுக்கே தென் படக் கூடாது, கிட்டவே வரக் கூடாது என்று இருந்த தெல்லாம் போய் இப்போது அவர்கள் பக்கத்தில் போய் உட்கார ஆள் மேல் ஆள்கள் போட்டிப் போட்டு அய்யங்கார், சாத்திரிகள், ராவ்ஜீக்கள், பண்டார சன்னதிகள், பட்டக்காரர்கள் ஆளுக்கு 10 ஆயிரம் 15 ஆயிரம் ரூபாய்கள் (தேர்தல்களில்) செலவு செய்து அந்த தானங் களை அடைய முயற்சிக்கிறார்களா இல்லையா? சமுக வழக்கங்களில் 10 வயது பெண்ணை கட்டிக் கொடுக்கா விட்டால் பெற்றோர்கள் "நரகத்துக்குப்" போய் விடுவார்கள். பெண்ணும் விபசார தோஷத்திற்கு ஆளாய் விடும் என்று கூறிய வேத சாத்திரங்களையும் "ரிஷிகள்" வாக்கியங்களை யும் பழக்க வழக்கங்களையும், குப்பையில் தள்ளிவிட்டு 14 வயதான பிறகு பெண் ருதுவான பிறகு தான் கல்யாணம் செய்ய வேண்டும் இல்லா விட்டால் தண்டனை அடைய வேண்டும் என்று சொல்லி சட்டம் செய்து விட்டோமா இல்லையா?

எனவே, இவைகள் எல்லாம் சமுகப் புரட்சியேயாகும். இதனால் யாருக்கு என்ன ஆபத்து வந்து விட்டது? யார் என்ன கஷ்டப்படுகிறார்கள்?

ஆகவே அரசியல் துறையிலும் சமுகத் துறையிலும் எவ்வளவு புரட்சிகள் செய்ய முன் வந்து விட்டோம். செய்து விட்டோம். இவைகள் எவ்வளவு சர்வ சாதாரணமான விஷயமாகவும் மிகவும் ஞாயமானதாகவும், அறிவுடைமை யாகவும், மக்கள் சமுகத்திற்கு நன்மை பயக்கக் கூடியதாகவும் கருதப் படுகின்றது என்பதைக் கவனித்துப் பாருங்கள்.

மற்றும் "உலகத்தையே படைத்துக் காக்கும் கடவுள் விஷயம்" இன்று உலகில், நம் நாட்டில் என்ன பாடு படுகின்றது? அக்கடவுளையடையும் மார்க்கமாகிய மத விஷயம் இன்று என்ன பாடுபடுகின்றது? இவைகள் கடவுள் புரட்சி மதப் புரட்சியல்லவா? இதனால் மக்களுக்கு என்ன ஆபத்து வந்து விட்டது? ஆகவே இவ்விஷயங்களில் ஆபத்து, ஆபத்து என்று சொல்லப் படுவதெல்லாம் நன்றாய் யோசித்துப் பார்த்தால் அவற்றால் யார் யார் நன்மை அடைந்து வந்தார்களோ அவர்களுக்குத் தான் சிறிது ஆபத்தாய்க் காணப்படுகின்றதே அல்லாமல் வேறு என்ன? இவர்கள் யார்? இவர்கள் மக்கள் சமுகத்தில் 100க்கு எத்தனை பேர்கள்? என்று பார்த்தால் லட்சியம் செய்யக் கூடிய அளவா என்பது விளங்கும். ஆகவே அரசியல், சமுக இயல் அறிவியல் ஆகியவற்றில் பெருத்த புரட்சிகள் ஏற்பட்டு அதை சாதாரணமாய் நடந்து வருகின்றதை நீங்கள் பார்க்கிறீர்கள். எனவே, மேற்கண்ட புரட்சிகள் போல் அதாவது அரசன் ஏன்? உயர்ந்த ஜாதி ஏன்? தாழ்ந்த ஜாதி ஏன்? கடவுள் ஏன்? மதம் ஏன்? என்று சொல்லுவது போலவே இப்போது பணக்காரன் ஏன்? பிரபு ஏன்? முதலாளி ஏன்? ஏழை ஏன், அடிமை ஏன் என்று கேட்கிறோம். இந்தப்படி ஏன் கேட்கிறோம்? முதன் முதலில் ஏதோ ஒரு விஷயத்தில் மாறுதலையடைய துணிந்து விட்டோம். அதற்கு ஏற்பட்டிருந்த கட்டுப்பாடு காவல் ஆகியவைகளை அலட்சியம் செய்து விட்டோம். அதே தைரியமும், அதே அறிவும், அதே அவசியமும், அதே முற்போக்கு உணர்ச்சியும் அதற்கு அடுத்த நிலைமைக்கு மக்களைத் தானாகவே கொண்டு போகின்றது.

பட்டாளம் பீரங்கி ஆகாயக் கப்பல், வெடிகுண்டு, 20 மைல் பீரங்கி விஷப்புகை, வெடி முதலிய பலமும் 'கடவுள் அவதாரமும்' உள்ள அரசனே, நீ வேண்டாம் மூட்டை கட்டிக் கொள், என்று சொல்லக் கூடிய நிலை ஏற்பட்டு அது நியாயமும் அவசியமும் என்று தோன்றிப் பல அரசர்கள் ஒழிக்கப் பட்டும் போன பிறகு, அதை விட கஷ்டமானதும் நினைக்க முடியாததுமான காரியமா இந்த பணக்காரன் ஏன்? ஏழை ஏன்? என்று கேட்கும் விஷயம் என்று தான் கேட்கிறேன். முன்னையதைவிட இதற்கு என்ன அதிக தைரியம் வேண்டும்? என்ன அதிக பலம் வேண்டும்? அல்லது இது என்ன ஒரு பெரிய பாவமான காரியமாகும்? அரசன், ஜாதி, கடவுள், மதம் பழக்க வழக்கம் ஆகியவை யெல்லாம் பணக்காரனையும், பார்ப்பானையும், காப்பாற்ற ஏற்பாடு செய்து கற்பித்து வைத்த சாதனங்களே யொழிய இவர்கள் இயற்கையா? காற்றைப் போன்று இன்றிய மையாததா? எப்பொழுது அவைகளுக்கே ஆபத்து வந்து விட்டதோ அப்பொழுதே பணக்காரர்கள் நிலை காவலில்லா சொத்து காணாமல் போவது போல், மறைவுபட வேண்டியது தானே? இதனால் யாருக்கு என்ன நஷ்டம்? உண்மையான நடு நிலைமையும் அறிவும் இருக்கிறவன் இதை எப்படி குற்றம் என்று சொல்ல முடியும்? இது சாதாரணமாய் அறிவும் முற்போக்கு உணர்ச்சியும் உள்ள எவனுக்கும் தோன்றக் கூடிய காரியம் தானே? இதை வெளியில் சொல்லுவது  தப்பு சட்ட விரோதம் என்று மிரட்டினால் சிலர் வேண்டுமானால் வாயில் சொல்ல பயப்படுவார்கள். ஆனால் இது அவர்கள் மனதில் உதிக்கக் கூடாது என்று சொல்ல முடியுமா? ஒரு சமயம் சிலர் இது சாத்தியப்படுமா? என்று கேட்கலாம். இப்படி கேட்பது வேறு விஷயம். ஒரு விஷயம் சரியா தப்பா என்று கவனித்த பிறகு தான் அது சாத்தியப்படுமா என்கின்றதை பற்றி யோசிக்க வேண்டும்.

சாத்தியப்படுமா?

அரசன் வேண்டாம் என்கின்ற விஷயத்தை நாம் அசாத்திய விஷயம் என்றா கருதுகின்றோம்? அரசனுக்கு  உள்ள படை, பட்டாளம், வெடிகுண்டு, பீரங்கிகளை யெல்லாம் விட, இந்த பணக்காரனுக்கும் முதலாளிக்கும் என்ன அவ்வளவு பலமான காவல் இருக்கின்றது? அரசனை விட பணக்காரனுக்கு என்ன அவ்வளவு அதிகமான வேத, சாத்திர, புராணப் பாதுகாப்புகள் இருக் கிறது? அவர்கள் நிலைமையே  இப்போது காற்றாய்ப் பறக்கின்றது. பணக்காரர்கள் நிலைமைக்கு என்ன பளுவு இருக்கிறது? வரிசைக்கிரமத்தில் இவர்கள் நிலைமையும் மாற்றமடைய வேண்டியது தானே? சும்மா சமய சந்தர்ப்பம் இல்லாமல் அரசனையும் பார்ப்பானையும் திட்டி, ஊரார் மெச்சும்படி பேசி, கடவுளையும் மதத்தையும் பரிகாசம் பண்ணிக் கொண்டு இருப்பது தான் சுயமரியாதைக் கட்சியின் லட்சியமா? என்று யோசித்துப் பாருங்கள்.

ஒரு மனிதனின் சுயமரியாதை உணர்ச்சிக்கு எது எது பாதகமாய் காணப் படுகின்றதோ அவைகளை யெல்லாம் மாற்றுவது தான் உண்மையான சுய மரியாதை இயக்கத்தின் நோக்கமாகுமே தவிர அரசனுக்குப் பதிலாகப் பார்ப் பானை ஏற்றி வைப்பதும் பார்ப்பானுக்குப் பதிலாக பணக்காரனை பட்டத்தில் வைப்பதும், ஒரு நாளும் சுயமரியாதையாகாது இவையெல் லாம் சுயநல மரியாதையேயாகும்.

அன்றியும், அரசன் வேண்டாம் என் றாலும் பார்ப்பான் வேண்டாம் என்றாலும் பணக்காரன் வேண்டாம் என்றாலும் இதனால் கஷ்டப்படும் மக்கள் 100க்கு 10 பேர்கள் கூட இருக்க மாட்டார்கள். இவை ஒழிந்தால் சுகப்படும் மக்கள் 100க்கு 90 பேருக்கு மேல் இருப்பார்கள். ஆகவே யாருடைய நன்மைக்கு ஏற்ற காரியம் செய்யப்பட வேண்டியது அறிவாளியின் கடமை? என்பதை சிந்தித்துப் பாருங்கள். உண்மையான ஜீவகாருண்யம் உள்ளவர்கள் வெறும் கோழியைத் தலை கீழாக கொண்டு போகப் படுவதையும், மாட்டின் கழுத்தில் ஒரு சிறு புண் இருப்பதையும், ஜீவகாருண்யம் என்று எண்ண மாட்டார்கள். பெரும் பான்மையான மக்கள் வெகு சிறுபான்மையோரின் சுய நலத்தால் எவ்வளவு கஷ்டப் படுகின்றார்கள் என்பதைத் தான் கவனிப்பார்கள்.

"அய்யோ இந்த புரட்சியால் பணக்காரர்களின் மனம் பதறுமே" என்று ஒரு அறிவாளியும் கருத மாட்டான் எப்படியெனில் ஒரு திருடனுக்காகப் பயந்து 100 பேர்கள் தங்கள் வீட்டுக் கதவைத் தாளிட்டுப் படுத்துக் கொண்டால் திருடன் பாடுபட்டினிதான். அதனால் திருடன் மனம் பதறுமே - ஏமாற்றமடைய நேரிடுமே - அவன் பிள்ளைக் குட்டிகள் பதறுவார்களென்று சொல்லி எல்லோரும் கதவை திறந்து போட்டே படுத்துக் கொள்ளுங்கள்" என்று சொன்னால் இதை ஜீவகாருண்ய மென்று நீங்கள் ஒப்பு கொள்ளுவீர்களா? பெரிய மாறுதல்கள் உண்டாக்கபட வேண்டிய அவசியங்கள் ஏற்பட்டால் குறுகிய  நோக்கக்காரர்களும் சுயநல நோக்கக்காரர் களும் சில சமயங்களில் மனக் கஷ்டப்படத் தான் நேரும். அதற்கு யார் என்ன செய்ய முடியும். எலியும், பூனையும், பாம்பும், தேளும் போகின்ற கோவிலுக்குள் மனிதர்கள் போவதனால் எத்தனை  சங்கராச்சாரிகள் மனம் பதறுகிறது? இதில் ஏதாவது நாணயமோ, உண்மையோ இருக்க முடியுமா? இதற்காக எவ்வித பலாத்காரமும் செய்து தான் ஆக வேண்டும் என்பது நமது கருத்தல்ல. ஆனால், பலாத்காரத்துக்குப் பல வந்தமாய் வருபவர் களிடமிருந்து எப்படி மீள வேண்டுமோ அதற்குத் தயாராய்த் தான் இருக்க வேண்டும். இதற்காக எந்த பணக்காரரும் கஷ்டப்பட வேண்டியிருக்காது. யாரும் பட்டினிகிடக்க நேராது. நல்லுணர்வு ஏற்பட்டு விட்டால் இது ஒரு நொடியில் முடியக் கூடிய காரியமேயாகும்.

உலகில் பொருளாதார நெருக்கடியினால் ஏழைகள் தொழிலாளிகள் கஷ்டப்படுகிறார்கள் என்றால் பணக்காரர்களும் முதலாளிகளும் மாத்திரம் சுகப்படு கிறார்கள், சந்தோஷப்படுகிறார்கள் என்று சொல்லி விட முடியுமா? ஒவ்வொரு கருத்துள்ள பணக்காரனுக்கும் இருக்கின்ற கவலை உங்களுக்குத் தெரியாததா? அவன் அதை சம்பாதிக்கும் வழியில் கஷ்டப்படுவதைவிட, கவலைப் படுவதைவிட அதிகமாகவே அதை காப்பாற்றுவ திலும் கவலைப்படுகிறான். லாப நஷ்டம் வரும் காலை யிலும், அதிக லாபம் வர வில்லையே என்றும் நஷ்டம் வந்து விட்டதே என்றும் தான் கஷ்டப் படுகிறான். எவ்வளவு இருந்த போதிலும் இன்னும் பொருள் சேர வேண்டுமென்றே ஆசைப்படுகிறான். கவலையும் பொறாமையும் அவனுக்குச் சமமாகத்தான் இருந்து வருகின்றது. எவ்வளவோ கஷ்டங்களையும் தொல்லைகளையும் சகித்துக் கொண்டும் பெருங் கவலைக்கு ஆளாய்க் கொண்டும் தான் தன்னைப் பணக்காரன் என்று பிறர் மதிக்க வேண்டுமென்று கருதுகிறான். இதனால் உண்மையில் லாபம் ஒன்று மில்லை. ஆனால் உலகத்தில் உள்ள பழக்கப் வழக்கம் பெருமையின் முறை ஆகியவைகளுக்கு அடிமைப் பட்டே பணக்காரனாக ஆசைப்படுகிறான்.  ஆகவே பணக்காரத் தன்மை என்பது போய் விடுவதால் மனித சமுகத்துக்கு ஒரு கஷ்டமும் வந்து விடாது பணக்காரத் தன்மை போய் விட்டால் எல்லா மக்களின் நன்மையை பொருத்த காரியங்களையெல்லாம் கவனிக்க வேண்டிய சமதர்மக் கொள்கை கொண்ட ஆட்சிதான் நடைபெறும்.

மனித சமுகத்தின் கஷ்ட நிலைமைக்கும், இழி தன்மைக்கும், ஒப்பற்ற தன்மைக்கும், சதா கவலைக்கும் காரணமாயிருப்பதே இந்த பணக்காரத் தன்மையும் ஏழ்மைத் தன்மையுமேயாகும். மனிதப் பிறவி உயர்ந்த தென்றும், அருமையான தென்றும், மற்ற ஜீவராசிகளை விட மேம் பட்ட அறிவின் பயனை அனுபவிப்பதென்றும் சொல்லுகிறார்கள். நான் அதை ஒப்புக் கொள்ள முடியாது.

இன்றைய மனித சமுகத் திட்டம் சரியென்று ஒப்புக் கொள்வதனால் "அரிது அரிது மானிடராய்ப் பிறத்தலரிது" என்பது சோம்பேறிகள், பகுத்தறிவற்றவர்கள் ஆகியவர் களின் ஞானம் என்று சொல்ல வேண்டியிருப்பதோடு நான் இழிவு, இழிவு மனிதராய் பிறத்தல் இழிவு என்றுதான் சொல்லுவேன். மனிதப் பிறப்பின் இழிவுக்கும், கஷ்டத் திற்கும் அவனது இன்றைய வாழ்க்கைத் திட்டமே காரண மாய் இருக்கிறது. மனிதனை விட மற்ற ஜீவப் பிராணிகளில் தன் இனத்தை அடிமை கொண்டு வருத்தி வதைத்து வாழ்கின்ற ஜீவன் மிக அபூர்வமேயாகும்.

மனிதனை விட மற்ற ஜீவ  பிராணிகளில்  நாளைக்கு என் கதி என்ன? என் பிள்ளை குட்டி பேத்தி பிதிர் ஆகியவர்களுக்கு என்ன கதி? உலகம் உள்ள நாள் வரை நானும் என் சந்ததியும் உலகிலுள்ளவர்களுக்குக்கெல்லாம் மேலாய் வாழ்வதற்கு என்ன மார்க்கம் என்று கருதி தன் சமுகத்தையோ சகல வித அயோக்கியத்தனங்களாலும் வதைத்து நலம் பெரும் ஜீவன்கள் மிக மிக அருமையாகவே இருக்கும். மனித சமுகத்தாலேயே எதை எதை இழிவான கொடுமையான குணம் என்று கருதுகின்றோமோ அவை யெல்லாம் உலகிலுள்ள எந்த இழிவான ஜீவன் என்று சொல்லப்படுவதை விட மனிதனிடத்திலேயே அதிகமாய் இருக்கின்றது. கழுதை மேல் கழுதை சவாரி செய்கின்றதா? புலிமேல் புலி சவாரி செய்கின்றதா? பாம்பு தேள் ஆகியவை மேல் பாம்பு தேள் சவாரி செய்கின்றதா? ஆனால் மனிதன் மேல் மனிதன் செய்கின்றானா இல்லையா! ஆகவே மனி தனிடம் என்ன உயர்வான  குணங்கள் இருக்கக் காண் கின்றோம்?

அரசன், ஜாதி, மதம், கடவுள், பணக்காரன் ஆகிய தன்மைகள் எல்லாம் மேல் கண்ட இழி தன்மைக்கும் அக்கிரமத் தன்மைக்கும் மனித ஜீவகாருண்ய மற்றத் தன்மைக்கும் அனுகூலமாய் இருக்கிறதா? இல்லையா?

மனிதன் தனது சமுகத்தை வஞ்சித்துப் பொருள் சேர்த்து "பகுத்தறிவுள்ள" தனது பெண்டு பிள்ளைக்குப் பணம் சேர்த்து வைக்க வேண்டுமென்று சொல்லுகிறான். ஆனால் மிருகம், பட்சி ஆகியவைகள் பகுத்தறிவு இல்லாத தனது பெண்டு பிள்ளைகளுக்குச் சொத்து சேர்த்து வைக்க கருதுவதில்லை. தனது குட்டிகளையும் குஞ்சுகளையும் அவை தானாக ஓடியாடும் பருவம் வந்த வுடன், தனித்து வாழ்ந்து கொள்ளும் படி கடித்தும் கொத்தியும் துரத்தி விடுகின்றது. அவற்றைப் பற்றிய கவலையோ ஞாபகமோ கூட அவைகளுக்குக் கிடையாது.

மனிதனின் பிறப்பு கடவுளால் என்கிறோம். இறப்பு கடவுளால் என்கின்றோம். இவ்விரண்டுக்கும் காரணமாய் காணப்படுவது. மனிதன் நடப்பாய் இருப்பதால் அந்த நடப் பும் கடவுளால் தான் என்று சொல்ல வேண்டியதாகின்றது.

ஆகவே, மனிதனின் நடப்பையும் கடவுளால் தான் நடைபெறுகின்றது என்று சொல்லுகிறார்கள். மனிதனுடைய நடப்போ பெரிதும் நான் மேலே சொல்லியது போலவே தான் கவலையும் கொடுமையும் நிறைந்ததாய் இருந்து வருகின்றது. இப்படிப்பட்ட நடப்புக்குக் கடவுளைக் காரண மாக்குகின்றவர்கள், இதன் பயனாகிய பிறப்பு இறப்புக்குக் கடவுளைக் காரணமாக்குகின்றவர்கள் கடவுளை மேன்மை படுத்தினவர்களா? அல்லது கீழ்மைப்படுத்தினவர்களா? என்று யோசித்துப் பாருங்கள்.

செல்வவான் (சோம் பேறியாயிருந்து வாழ உரிமையு டையவன்) என்கின்ற ஒரு நிலைமை உலகில் இல்லை யானால் கடவுளுக்கும், மதத்திற்கும், ஜாதிக்கும் அரசனுக் கும் உலகில் இடம் இருக்குமா? என்று யோசித்துப் பாருங்கள்.

'குடிஅரசு' - சொற்பொழிவு - 18.12.1932

தாடி வந்த கதை!


 “சென்ற முறை 1929இல் நான் மலாயா வந்தபோது தாடியில்லாமலிருந்தேன். மலாயாவிலிருந்து நாகப் பட்டினத்துக்குக் கப்பலேறிச் செல்கை யில் கப்பலில் சவரம் செய்வித்துக் கொள்ள கொடுக்கு பிடித்து நிற்க வேண்டியிருந்தது. இந்தத் தொந்தரவு தாளாமல் கப்பலில் நான் சவரம் செய்வித்துக் கொள்வதையே விட்டு விட்டேன். அதனால் நாகப்பட்டினத்திற்கு தான் 10 நாளைய தாடியுடன் சென்றிறங்கினேன் ; இன்று 25 வருஷத் தாடி என் தாடி!”

(சிங்கப்பூர் புக்கிட் பெந்தாங்கில் மக்கள் மன்றத்தில் தமக்கு அளிக்கப் பட்ட வரவேற்பில் பெரியார் பேசியது.)

- சிங்கப்பூர் ‘தமிழ்முரசு’, 8.1.1955

அட்லி அன்றே சொன்னார்!

‘நியூஸ் கிரானிக்கல்’’ செய்தியாளர் ஃராங்க் பார்பர் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் அட்லி பிரபுவைப் பேட்டி கண்டபோது அட்லி பின் வருமாறு கூறினார்.

“இந்தியா நமது சுதந்திரப் பரம்பரையில் வளர்ந்து வந்தாலும் பார்லிமெண்டரி முறையைப் பின்பற்றி வந்தாலும், இவைகள் படித்த ஒரு சிறு கூட்டத்தாரிடம் தான் இருந்துவருகிறது.

இந்தியாவில் எந்த நேரத்திலும் சர்வாதிகாரம் ஏற்படும் என்ற வாய்ப்பு இருந்துவருகிறது. நாடு மொழி வழி அடிப்படையில் துண்டாகும். தெற்கே இந்தி பேசாத மக்கள் பெரிதும் வாழ்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

(1959 ஏப்ரலில்)

ரஷ்யாவில் தந்தை பெரியார்


பஞ்சாயத்து மூலம் வீடுகள் விநியோகிக்கப்படுகிறது

* ஒருவருக்கு வீடு இத்தனை அளவு நீளம், அகலம் மற்றும் இடவசதி என்று நிர்ணயிக்கப்படும். அந்த வீட்டில் எத்தனைப் பேர் உறுப்பினர்களோ அதற்கேற்றாற்போல் அளவிட்டு வீடுகள் அளிக்கப்படுகின்றன.

* வீட்டிலேயே இருந்து தொழில் செய்பவர்களாக இருந்தால் அதற்கேற்றபடி அவ்வீடுகள் மாற்றி அமைக்கப்படுகின்றன.

* குடியிருப்போராக இருந்தால் வாடகை எப்படி எந்த வழிமுறையில் என்பதும் நிர்ணயிக்கப்படுகிறது.

* தொழிற்சாலைகள் மூலம் கிடைக்கும் இலாபத்தில் ஒரு தனிப்பாகத்தை அத்தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளியின் வீட்டு வசதிக்கு என்றே ஒதுக்கி வைக்கப்படுகிறது.

சுகாதார முறைகள்

* அவசர சிகிச்சைப் பிரிவு வீட்டுக்கு வந்தே சிகிச்சை அளிக்க ஏற்பாடு.

* சுகாதார குறைவான வேலைகளில் ஈடுபடுவோருக்கு அதற்கேற்ற ஏற்பாடுகள்.

* குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் பட்டியலிடப்பட்டு, குறிப்பிட்ட காலங்களில் அந்த வீடுகளுக்குச் சென்று மருத்துவ உதவிகள் செய்தல், அவசியம் ஏற்பட்டால் வீட்டின் நிலையையும் வேலையின் முறையையும் சீர்படுத்துதல்.

* கருவுற்ற தாய்மாருக்கான தனி ஏற்பாடுகள் ஆலோசனை மய்யங்கள்

* பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கான சிறப்பு வைத்திய முறைகள்

* தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை முழு மருத்துவப் பரிசோதனை.

ரஷ்ய பெண்களின் நிலை

* அடுப்பூதும் பெண்கள் அந்த வேலையை விட்டு தொழிற்சாலைக்குச் செல்லும்படி தூண்டுவதற்கான முயற்சிகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. சுரங்கங்களிலும்கூட அவர்கள் பணியாற்றுகிறார்கள். ஒரு கால்வாய் வெட்டும் வேலையில் பெண்கள் ஈடுபட்டது ஆனந்தத்தை அளிக்கிறது என்கிறார் தந்தை பெரியார்.

* சட்டத்தின் முன் ஆண் - பெண் சமம். 18 வயது அடைந்த பெண் தன் விருப்பத்துக்கு ஏற்ப நாயகனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்; விருப்பம் போல் விவாகரத்தும் செய்து கொள்ளலாம். ரஷ்ய பெண்கள் விடுதலைக்கு லெனின் மூலகாரணம் என்று பெண்கள் கூறுகிறார்கள்.

* மக்களில் ஒரு பகுதியினர் சமையல் அறையில் அடிமைப்பட்டு வாழ்ந்தால் சுதந்திரத்தை எட்ட முடியாதென்று தோழர் லெனின் கூறுவதுண்டு. ஆகையினால், பெண்ணொருத்தி சாப்பாடு சமைத்து, துணிகளை துவைத்து, குழந்தைகளைப் பராமரித்து கஷ்டப்படுவதைக் காட்டிலும் மக்களுக்கு உணவளிக்கவும், உடுக்கவும், குழந்தைகளைப் பாலூட்டி வளர்க்கவும் சமுதாயம் பொறுப்பேற்றுக் கொண்டால், நிர்வாகம் ஒழுங்கு பெறுமென்று எண்ண ப்படுகிறது. (‘குடிஅரசு’ - 30.7.1933)

* திருமணத்திற்குத் தனி பதிவாளர் அலுவலகம். 10 நிமிடங்களுக்குள் திருமணம் நடந்துவிடுகிறது. மோதிரங்கள் மாற்றும் சடங்கு கூட இல்லை. குறிப்பிட்ட தொகையை பதிவாளரிடம் கொடுத்து விட வேண்டியது தான். அதோடு எளிதாக முடிந்துவிடுகிறது.

* சட்டப்படி பிறந்த குழந்தை இல்லை என்றெல்லாம் கூறி உதறித் தள்ளப்படுவதில்லை.

* விவாகரத்தும் எளிதில் முடிந்துவிடுகிறது. கணவன் துன்புறுத்த முடியாது. கணவனுடன் ஒன்று கூடி வாழ முடியாது என்றால் விவாகரத்து செய்து அவனை விட்டு விலகிவிடலாம். பிள்ளைகள் இருந்தால், அவர்களை அரசு காப்பாற்றும்.

தந்தை பெரியார் கூறும் ஒரு தகவல் சுவையானது

* ரஷ்ய பெண்கள் தங்களை சிங்காரித்துக் கொள்வதில்லை. உதடுகளுக்கும், புருவங்களுக்கும் மை பூசுவதைப் பார்ப்பதற்காக தெருக்களில் நான் வெகு நேரம் நின்றேன். மை பூசிய முகங்களை நான் காணவில்லை. எளிய ஆடைகளையே பெண்கள் உடுத்துகின்றனர். தங்களுக்குத் தேவையான ஆடைகளை பெண்களே தயாரித்துக் கொள்கின்றனர்.

* மனிதனுக்கு வயது 150 என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இறந்த பின்னும் உயிர்ப்பிக்க வைக்கும் முயற்சி

* ஓர் ஆராய்ச்சி நிலையத்தில் உயிரற்றுப் போன ஒரு உடலில் இருந்து இதயம் கொண்டு வரப்பட்டு செயற்கை ரத்தம் கொண்டு ஒரு கண்ணாடித் தொட்டியில் வைக்கப்பட்டது. பூதக் கண்ணாடியைக் கொண்டு பார்த்தபோது அந்த இதயம் உயிர் பெற்று ஒழுங்காக வேலை செய்யத் தொடங்கியது. அந்த இதயத்தை ஒவ்வொரு நாளும் புதிய செயற்கை ரத்தத்தில் வைத்துக் கொண்டு வந்ததன் பயனாக அது 61 நாள்கள் வரை வேலை செய்ததாம்.

* காந்த சக்தியால் காய்கறி உற்பத்தி

* கண் பார்வையற்றவர்களுக்கு அறுவைச் சிகிச்சை மூலம் பார்வை பெறச் செய்தல்.

* ரஷ்யாவில் ஒவ்வொரு தொழிற்சாலையும் பொதுச் சமையல், பொதுப் பள்ளிக்கூடம், பொதுத் தோட்டம், பொது நாடக மேடை அமைக்கப்படுகிறது. மாஸ்கோவில் சிறுவர்களுக்கென்று ஒரு நாடக சாலை அமைக்கப்பட்டுள்ளது.

நீதி முறை - வழக்குரைஞர்கள்

வழக்குரைஞர்கள் தங்களைப் பதிவு செய்த பின்னர், வழக்குரைஞர் சங்கத்தில் சேர்ந்து கொள்ள வேண்டும். இந்த சங்கத்தின் சார்பில் விசாரணை அலுவலகம் ஒன்றுண்டு. எவருக்காவது வழக்குரைஞர் தேவைப்பட்டால் ஒரு வழக்குரைஞரை இந்த விசாரணை அலுவலகம் அனுப்பிவைக்கும். வழக்கிற்கான பணத்தை வழக்குரைஞரிடம் கொடுக்கக் கூடாது - சங்கத்திடம் அளிக்க வேண்டும். அந்த சங்கம்தான் வழக்குரைஞருக்கு திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் கொடுப்பார்கள். வழக்குரைஞர்கள், நீதிபதிகள் நடவடிக்கைகளைக் கண்காணிக்க மாகாண நீதிமன்றம் மற்றும் ஒழுக்க இலாகாவுக்கு அதிகாரம் உண்டு.

பக்தி - ஒழுக்கம் - தந்தை பெரியார்


-24.11.1964, பச்சையப்பன் கல்லூரிப் பேருரையிலிருந்து....

கடவுளாகட்டும், மதமாகட்டும், பக்தியா கட்டும், மோட்சமாகட்டும் வைத்துக் கொள். எதுவானாலும் அது தனிப்பட்ட மனிதனுடைய தனிச் சொத்து. உலகத்துக்கு பொதுச் சொத்தல்ல. ஒழுக்கம், நாணயம் - பொதுச் சொத்து. நான் பக்தியில்லாமல் நரகத்திற்குப் போகிறேன் என்றால் உங்களுக்கு என்ன? நான் போய் விட்டுப் போகிறேன். நான் கடவுளை நம்ப வில்லை, அதைக் கொழுக்கட்டை என்று சொல்லு கிறேன்; நஷ்டமில்லை பாருங்கள். அதனாலே எனக்குப் பக்தி இல்லை என்பதனாலே, உங்களுக்கென்ன நஷ்டம்?

ஆனால் ஒழுக்கமில்லையென்றால் என்ன வாகும் பாருங்கள்? நாணயமில்லை என்றால் என்னவாகும்? உண்மை உணர்வு இல்லை என்றால் என்னவாகும்? இது மூன்றும் இல்லாதது இன்னொரு மனிதனுக்குச் செய்கிற கெடுதிக்கு பேர்தானே?

ஒழுக்கமாக இல்லை என்றால், எங்கெங் கேயோ ஒழுக்கக் கேடாக நடந்து இல்லை தொல்லை பண்ணிக் கொண்டிருக்கின்றான்; நாணயமாக இல்லையெனில், யாரையோ ஏமாற்றி வேதனையை உண்டாக்கி இருக்கின்றான்; உண் மையாக இல்லையென்றால் என்னத்தையோ எவனையோ ஏமாற்றிப் பொய் பேசித் தப்பிக்க இன்னொரு தவறைக் கொண்டிருக்கிறான் என்றுதானே பொருள்? ஆகவே ஒழுக்கம், நாணயம், உண்மை என்ற உயர்ந்த குணங் களெல்லாம் பொதுச் சொத்து.

மனித சமுதாயத் திலே இது கேடாக இருந்தால் சமுதாயத்துக்குக் கேடு. ஒரு மனிதன் இந்தக் காரியங்களில் குற்றவாளியாக இருந்தானானால் கண்டிப்பாக இன்னொரு மனிதனுக்குக் கேடு விளைந்திருக்கும். இது முக்கியமில்லை.

பக்தி, கடவுள் நம்பிக்கை மதக் கோட் பாட்டின்படி நடக்கிறது. இவைதான் முக்கிய மென்றால், மக்களுக்கு என்ன பிரயோஜனம் அதனாலே?