திங்கள், 30 டிசம்பர், 2019

தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை (மரண சாசனம்)

தந்தை பெரியார்

அருமைத் தோழர்களே,  இப்போது நமக்கு வேண்டிய தெல்லாம் மான உணர்ச்சி வேணும்; நமக்கு இருக்கிற இழிவு நீங்கணும். அப்புறம் மேலே போகலாம்; போகணும். மனுஷனுக்கு இருக்கிற உரிமை என்ன தெரியுமா? மனுஷ னுக்கு இருக்கிற சக்தி, உரிமை. ஒவ்வொரு மனுஷனும் குறைந்தது 500 வருஷம் இருக்கலாம் - 500 வருஷம் இருக் கலாம் (அழுத்திச் சொல்கிறார்); இப்போ இல்லையே, இப்போ 52 வயசுதான் இருக்கிறோம் - சராசரி. எனக்கு இப்போ 95; இன்னும் எவனாவது ஒரு பத்துப் பேர் இருப்பான் 100 வயசானவன். இருக்க முடியலையே, வெள்ளைக்காரன் வந்ததனாலே இந்த அளவாவது இருக்கிறோம். வெள்ளைக்காரன் வருவதற்கு முன்னே, அவன் வந்த அன்றைக்குக்கூட நமக்கு 10 வயது இல்லை - 7 வயது - வெள்ளக்காரன் வர்ற போது இந்த நாட்டுக்குச் சராசரி. அவன் வந்ததற்கப்புறம், அவன் வைத்தியம், அவன் ஆஸ்பத்திரி, அவனுடைய முயற்சி, அவனுடைய சுகாதாரம் இதெல்லாம் நமக்கு ஏற்றதற்கு அப்புறம், இப்போது நாம் சராசரி 50 வருஷம் இருக்கிறோம். மேல்நாட்டிலே 75 வயசு இருக்கிறான்; ரஷ்யாவிலே கிட்டத்தட்ட 100 வயசு இருக்கிறான். நாமும் இன்னும் 10, 20 வருஷத்திலே 75 வருஷத்துக்கு வந்துவிடுவோம்; வெள்ளைக்காரன் 120 வருஷத்துக்கு போய்விடுவான். இப்படியே நாளாக, நாளாக 500 வருஷம் வரைக்கும் இருப்போம். அதற்கு மேலே வேற என்ன வரணும்? இருக்கிறது ஒரு கஷ்டமல்ல - சாகிறதுதான் கஷ்டம். அவ்வளவு வசதிகளை எல்லாம் பண்ணியிருக் கிறான் நாட்டிலே. அவ்வளவு அற்புத அதிசயங்களை யெல்லாம் கண்டுபிடித்திருக்கிறான். நமக்கு ஒன்றும் இல்லாததற்குக் காரணம், நாம் தேவடியாள் மக்களாய் இருந்ததினாலே.

நாங்கள் வராதிருந்தால் படிப்பு ஏது? சொல்லுங்கள், சுயமரியாதை இயக்கம் ஆரம்பிக்கிறபோது, நாம் 10 பேருகூட படிக்கவில்லையே, 100-க்கு!   அது வந்ததற்கு அப்புறம், ஆரம்பித்தோம், அறிவைப்பற்றி. சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தபோது அதற்கு என்ன கொள்கை தெரியுமோ? அய்ந்து கொள்கை.

என்ன கொள்கை?

1. கடவுள் ஒழியணும்

2. மதம் ஒழியணும்

3. காந்தி ஒழியணும்

4. காங்கிரசு ஒழியணும்

5. பார்ப்பான் ஒழியணும்.

அன்றைய முதற்கொண்டு இன்றைய வரைக்கும் இந்த அய்ந்து கொள்கைகள்தான் நடக்கின்றன. காந்தியை ஒழித்தான், ஒழித்துவிட்டான். நாம் ஒழிக்கிறதற்கு முன்னே பார்ப்பானே ஒழிச்சு போட்டான். காந்தி நம்ம பேச்சைக் கேட்டு நம்ம பக்கம் திரும்பினார். 'இன்னமும் கடவுள்னு சொல்றியே முட்டாள்'ன்னான். உடனே காந்தி, 'கடவுளுக்கும், காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லைடா' என்றார்; 'காங்கிரசு காரன் கடவுளை இப்போது சேர்க்க வேண்டியதில்லை' என்று சொல்லிவிட்டார். சொன்ன 30 நாளில் கொன்று போட்டானுங்கய்யா அவரை! 'ஓ, இவன் ராமசாமி ஆகி விட்டான்! அவனுக்காவது நாதி இல்லை; இவன் காந்தின்னா இந்தியாவிற்கே பெரியவன். எல்லாரும் நம்பிடுவாங்க'ன்னு சட்டென்று கொன்று போட்டுட்டான் அவரை.

அடுத்தாற்போல ஒழியவேண்டியவன் காங்கிரசு. காங்கிரசு ஒழிந்தது; அது ஒன்றும் உருப்படியாகாது - உருப்படியாகாது; இப்பொழுதே இரண்டு பேர் தொங்குறாங்களே - இரண்டாகப் பிரிந்தது - ஒன்றுக்கொன்று மானங்கெட்டு திரியுது. இப்போது ஒருவருக்கொருவர் சேர்ந்து பார்க்கலாம் என்று. சேர்ந்தால் இனிமே என்ன மரியாதை இருக்கப் போகிறது? என்ன ஆகப் போகுது. இனிமேல் எவன் காங்கிரசை ஆதரிப்பான், பொறுக்கித் தின்கிறவனைத் தவிர? காங்கிரசுக்கு என்ன கொள்கை இருக்கிறதென்று, ஒருத்தன் கேட்பான். இன்றைக்கு இருக்கிற நம்முடைய காமராசர் வாயிலே 'ஜாதி ஒழிக' என்று ஒரு வார்த்தை வருமா? சொல்ல முடியுமா? சொன்னால், அவர் காங்கிரசிலே இருக்கக்கூடாதே! காங்கிரசு வேலையே ஜாதியைக் காப்பாற்றுவதுதானே முதலில் எடுத்ததும். பார்ப்பானாலே உண்டாயிற்று; அவன் நன்மைக்கு அவன் பண்ணிக்கிட்டான். போகிறவன் அதை ஒத்துக்கிட்டுத்தானே ஆகணும்? காமராசர் நம்மோடு சேர்ந்ததால், கொஞ்சம் காரியம் செய்தார். பக்தவத்சலம் வாயிலே வருமா 'ஜாதி ஒழிக' என்று. இல்லை, சுப்பிரமணியம் வாயிலே வருமா 'ஜாதி ஒழிக' என்று. சொன்னால் அவர் காங்கிரசில் இருக்க முடியாதே! அந்த மாதிரித் திட்டத்தோடு இருக்கிறானுங்க; அது இனிமேல் உருப்படியாகுமா?

முன்னேற்றக் கழகம் ஒழிந்தாலும், 'காங்கிரசு ஒழிக'ங்கிற, 'ஜாதி ஒழிக'ங்கிற ஒரு சீர்திருத்த உணர்ச்சி உள்ளவர்கள்தான் இனி வருவாங்க; அதனாலே, இனி வந்துட முடியாது. காந்தியும் போய்ட்டான்; காங்கிரசும் ஒழிந்து போச்சு; கடவுளும் தெருவிலே சிரிப்பாய் சிரிக்குது. அதுதான் வீரமணி சொன்னாரு, செருப்பாலே அடிச்சாங்களே கடவுளை, என்ன ஆயிப்போச்சு? 'கடவுளை செருப்பாலே அடித்தான்; அதனாலே ஓட்டுப் பண்ணவேண்டாம்' என்று காமராசர் முதற்கொண்டு தப்பட்டை அடிச்சாங்க. ஆனால், என்றைக்கும் வராத அளவுக்கு 200 பேருக்கு மேலே வந்துட்டாங்களே! முன்னேற்றக் கழகத்துக்காரன் 185 பேர்; அவர்களை ஆதரிக்கிறவர்கள் 20 பேர். காங்கிரசு, காந்தி, கடவுள், வெங்காயம் எல்லாம் சேர்ந்து 20 பேர்கூட வரவில்லையே! சாமியைத் திட்டுறான் என்று சொல்லு கிறீர்களே - புத்தி இல்லாமல் சொல்றானே தவிர, சாமியைச் செருப்பாலே அடித்த பிரச்சினை மேலே 200 பேர் வந்துட்டாங்களே. ஆனதினாலே மக்கள் அறிவு பெற்றுக் கிட்டு வருகிறார்கள். பயன்படுத்திக்க வேணும். அவங் களுக்கு விஷயங்களை எடுத்துச் சொல்லணும் - தெரியாது வெகு பேருக்கு.

எனவேதான், இப்போது நாம் முன்னேற்றம் அடை யணும்; மேலே வருவதற்குள்ளே பள்ளத்திலே இருந்து நிலத்துக்கு வரணும்; மேட்டுக்கு வரணும்; அப்புறம் மேலே ஏறணும்.  இப்போது நாம் பள்ளத்திலே கிடக்கிறோம். என்ன? நாலாவது ஜாதி, அய்ந்தாவது ஜாதி, தீண்டப்படாத ஜாதி, பார்ப்பானுடைய வைப்பாட்டி மக்கள் இப்படியல்லவா இருக்கிறோம் நாம். இது மாறவேணும், அப்புறம் மேலே போகணும்; மாறாது மேலே போக முடியுமோ? யாரும் கவனிக்கலே... கவனிக்காமல் போனால், நாங்கள் சும்மா இருக்கலே; ஒன்று போனால் ஒன்று செய்துகிட்டே இருக்கிறோம். நாளுக்கு நாள் கொஞ்சம் மாறிக்கிட்டேதான் வந்தது. இன்னும் மாறணும். எங்களால்தான் முடியும்னு இருக்கிறது நிலைமை. வேற எந்தக் கட்சிக்காரனுக்கும் இதிலே கவலை இல்லை. 'இவங்களோடு சேர்ந்தால் ஓட்டுப் போய்விடுமே' என்று பார்க்கிறான்; மானம் போறதைப்பத்தி அவனுக்கு வெட்கமில்லை. ஆகவே, நாம் மகாநாடு போட்டோம். இந்த மகாநாடு போட்டதற்குக்கூட காரணம் சொன்னாரே! 'தீண்டாமை இல்லை'ன்னு சட்டத்திலே எழுதிப் போட்டான்; 'எந்த விதத்திலேயும் தீண்டாமை இல்லை'ன்னுட்டான். ஆனால், 'மதத்திற்கு மாத்திரம் உண்டு'ன்னு ஓர் அடையாளம் வைத்துவிட்டான் - நிபந்தனை. இல்லாதிருந்தால், நாம் அந்தத் தீர்மானத்தின் மேலேயே எல்லாக் காரியத்தையும் நடத்தி இருப்போம். அதுதான் சொன்னேனே, எல்லோரும் கோவிலுக்குப் போகலாம் என்று சட்டமே பண்ணினால், அந்தச் சட்டம் செல்லாதுன்னு ஆயிப்போச்சே! அதேமாதிரிதானே சாஸ்திரத்திற்கு விரோதமாய் இருக்கிற எந்தக் காரியமும் இனிமேல் செல்லாது. இனிமேல் நாம் இழிமகன். எனவே தான், மாத்திக்க வேண்டிய அவசியத்திற்கு வந்துட்டோம்; அவைகளையெல்லாம் பார்த்தோம், மாத்தி ஆகணும். சட்டத்திலேயும், சாஸ்திரத்திலேயும் இருக்கிறதினாலே, முதலிலே அதைக் கேட்டோம். சட்டத்திலே இருக்கிறது ஒழியவேணும் என்றால், சட்டம் ஒழிந்தால் உண்டு. சட்டத் திலே ஒழிக்கவில்லையானால், ஆட்சியை ஒழித்தால்தான் உண்டு. அவ்வளவுக்கு இப்போ நாம் பக்குவமாகணும். ஆட்சியை ஒழியும்படியாக இல்லாமல் பாதுகாத்துக்கிட்டான். 'தனியாக இருந்தால், எவனும் ஒன்னும் பண்ணமாட்டான்; கூட்டாக இருந்தால் எல்லாம் ஒன்று சேர்ந்துக்குவாங்க'ன்னு 15, 16 நாடுகளாகப் பிரித்தான். அந்தந்த நாட்டை, அந்தந்த நாட்டோட வச்சு, மற்ற நாட்டோடு சம்பந்தமில்லை என்று சொல்லிட்டான். அவனைப்பற்றி இவன் கவனிக்கக் கூடாது; இவனைப்பற்றி அவன் கவனிக்கக் கூடாதுன்னுட்டான். 16 மாகாணங்களில் ஜனங்கள் இருக்கிறாங்க, ஒருத்தருக்கு ஒருத்தர் சம்பந்தம் இல்லையே! அவனும், நானும் தாராளமாகப் பேசிக் கொள்ள முடியாதே! அவன் மொழி வேறு - இந்தப் பக்கம் இருக்கிறவன் வந்தால் மலையாளம் பேசுவான்; இந்தப் பக்கம் இருக்கிறவன் வந்தால் தெலுங்கு பேசுவான்; இந்தப் பக்கம் இருக்கிறவன் வந்தால் கன்னடம் பேசுவான்; இன்னும் கொஞ்சம் தாண்டினால் மராட்டி; இன்னும் கொஞ்சம் தாண்டினால் குஜராத்தி; இன்னும் கொஞ்சம் தாண்டினால் இந்தி; அப்புறம் வங்காளி. அந்தந்த பாஷை ஒன்று சேராமல் இருப்பதற்கு என்ன பண்ணணுமோ அதையெல்லாம் பண்ணிட்டான்.

தனித்தனியாக இருந்தால் ஒன்று சேர்ந்துவிடுவான் என்று 15ம், 1 ம் 16 என்று சொல்லிட்டான். வேறு நாதி இல்லையே! இப்போது நாம் ஏற்பாடு பண்ணினோம். 'சூத்திரன் என்கிறதை ஒழிக்கணும்' என்று. நாம் மாத்திரமா சூத்திரன்? இந்தியாவில் உள்ள மக்களிலே (தமிழ்நாட்டிலே உள்ள) நாலரை கோடி மக்களில், ஏறக்குறைய மூன்று கோடி மக்கள் சூத்திரர்கள்தானே - துலுக்கன், கிறிஸ்தவன் தவிர; அவர்கள் இரண்டு பேரையும் சேர்த்தால் இன்னும் ஒரு 50 லட்சம் கூட இருக்காதே; கிறிஸ்தவன் ஒரு 3 லட்சம் இருக்கலாம்; முஸ்லிம் ஒரு 6 லட்சம் இருக்கலாம்; இரண்டும் சேர்த்தால் 10 லட்சமாகும். மற்றவன் எல்லாம் சூத்திரன். பார்ப்பான் ஒரு இரண்டு, மூணு லட்சம்தான் இருப்பான். அவ்வளவு பெரிய சமுதாயம் இந்த மாதிரி இருக்கிறதையே சிந்திக்க முடியவில்லையே.

ஆகவே, இதை மாற்றியாகணும். பெரிய விஷயம்தான்; பெரிய முயற்சி பண்ணணும். பெரிய முயற்சி பண்ணனும். என்ன அவசியம்? அரசியல் சட்டம், அரசாங்கம் நடத்துவதற்கு வேணும்; ஒரு அரசாங்கம் நடக்கவேணும் என்றால், ஒரு சட்டம் இருக்கணும், ஒத்துக்கிறேன். அரசாங்கம் நடத்துவதற்கு சூத்திரன் இருக்கணுமோ? அரசாங்கம் நடக்கணும்னா பார்ப்பான் இருக்கணுமோ - மனுஷன்தானே இருக்கணும்? அமெரிக்காவிலே அரசாங்கம் நடக்குது. அங்கே மனுஷன் தவிர வேற எவன் இருக்கிறான்? பார்ப்பான் இருக்கிறானா? சூத்திரன் இருக்கிறானா? பறையன் இருக்கிறானா? யார் இருக்கிறான் அங்கே?

ஆனதினாலே, அவன் வைத்திருக்கிற பாதுகாப் பெல்லாம்... 'ஒன்று சேரக்கூடாது. அவர்களை உள்ளே கட்டிப் போட்டு வைத்திருக்கிற கயிற்றை அவுத்துவிடக் கூடாது. அடிமையாகவே இருக்கணும். அப்படி அடிமையாய் இருந்தால், நூற்றுக்குத் தொண்ணூறு பேரை 3 பேர் ஆளலாம்.' அதற்குத் தகுந்தபடி செய்துகிட்ட ஏற்பாடு. இப்போது நாம்தான் அதைப்பற்றி கவலைப்படுகிறோம். 'மாற்றியாகணும்'ங்கிறோம்.

நேற்று நடந்த மகாநாட்டுக்கு வேற கட்சிக்காரங்க ஆதரவு ஒன்னும் வரவில்லையே, வரலாம் அல்ல? அவனவன் சக்திக்கு, அனுசரணையா எங்களுக்கு வந்து உதவி பண்ணலாமல்ல. ஒருத்தரும் வரவேயில்லை. எங்க ஆளுங்கதான். அவன் - டில்லிக்காரன் சி.அய்.டி.யைப் போட்டுவிட்டான் - வேற கட்சிக்காரன் எவனாவது உள்ளே போறானா பார் என்று. அதைப் பார்த்து ஒருத்தனுமே வரவில்லை. மந்திரிகளோ, அவனோ, மற்ற கட்சிக்காரனோ, மற்றவனா... ஊம்! இழிவு ஒழிய வேணும்னு சொன்னால், இழிவுக்கு ஆளானவன் எல்லாம் வரணுமே, வந்து உதவி செய்யணுமே. (இல்லை) நாங்கள்தான். ஆனதினாலே, விஷயம் ரொம்ப முக்கியமானது; மாறியே ஆகணும், மாறாவிட்டால் சாகணும்; அந்த உணர்ச்சி உள்ளவன்தான் மிஞ்சுவான். மாறியாகவில்லை என்றாலும் சோறு தின்கணும், என்ன பண்ணியாவது வயிறு ரொப்பணும் அப்படி என்றால், அவனாலே என்னாகும்? நினையுங்க நீங்க! நம்மை அப்படி பண்ணி விட்டான்.

(19.12.1973 அன்று சென்னை தியாகராயர் நகரில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய

இறுதிப் பேருரையிலிருந்து....)

- விடுதலை நாளேடு, 22.12.19

திங்கள், 16 டிசம்பர், 2019

மக்களின் நன்மைக்காக பாடுபடும் முஸ்லிம் தலைவர்கள்

தந்தை பெரியார்

தோழர்களே!

நேரம் அதிகமாகி விட்டது. நமது ஊருக்கு இந்த மாதிரி இரவு 12 மணிவரை கூட்டம் கூட்டிப் பேசியது இதுவே முதல் தடவை என நினைக்கிறேன்.

இந்த நடு இரவில் இத்தனை ஆயிரம் மக்கள் மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத் துடனும் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தால் மிகுந்த ஆச்சரியமாகவே இருக்கிறது. வெளி யூர்களிலிருந்து பல தலைவர்கள் வந்திருப்பதை அறிந்து அவர்கள் பேச்சு களைக் கேட்கவே இவ்வளவு பேர்கள் வந்திருக்கிறார்கள். எனக்கு முன் பேசிய தலைவர்கள் மிகவும் அருமையாகப் பேசினார்கள்.

முன் பேசிய சைபுல் இஸ்லாம் ஆசிரியர் மவுல்வி அகமது சயித் சாயபு, தோழர் மலங்கு அகமது பாஷா சாயபு அவர் களும், மவுலானா சாபுடீன் சாயபு அவர் களும் நாட்டு மக்களின் நன்மைக்காகவும், இந்து முஸ்லிம் ஒற்றுமைக் காகவும் மிகவும் பாடுபட்டு வருகிறார்கள். இதுசமயம் எது எது அவசியமாகப் பேச வேண்டுமோ அவைகளையெல்லாம் எனக்கு முன் பேசியவர்கள் பேசிவிட்டார்கள். இருந்தா லும் நான் சிறிது பேச விரும்புகிறேன்.

இங்கு நபிகள் நாயகம் அவர்கள் பிறப்பைப் பற்றியும், அவர் சேவையைப் பற்றியும் மிக அருமையாகப் பேசப் பட்டது. எனக்கு முன் பேசியவர்கள் முஸ்லிம் மதம் கத்திமுனையால் பரப்பப்பட்டது என்று எதிரிகள் கூறி வருவது தப்பு என்ப தற்குப் பல சமாதானங்கள் கூறினார்கள். மகமதிய மதம் கத்தி முனையால் பரப்பப்பட்டதா, இல்லையா என்பது பற்றி எனக்குத் தெரியாது.

மற்ற மதங்கள் அன்பினால் பரப்பப்பட்டதா?

இன்று ஒவ்வொரு மார்க்கத்தினுடைய சரித்திரமும் அந்தந்த மதங்கள் வாளாயுதம் இல்லாமல் வளர்ந்ததாகக் கூறவில்லை. ஏன் அதிக தூரம் போகவேண்டும்? இந்து மதத்தை எடுத்துக் கொள்வோம். அது அன்பினால் பரப்பப் பட்டதா? சன்மார்க்கத்தால் பரப்பப்பட்டதா? ஜீவகாருண் யத்தால் பரப்பப்பட்டதா?

அதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமானால் மதுரையில் வருடா வருடம் நடைபெற்றுவரும் திரு விழாவைப் பாருங்கள். அங்கு 8,000 சமணர்களைக் கழுவேற்றியதையே காட்டப்படுகிறது. இது எதைக் காட்டுகிறது? அன்பையா? ஜீவ காருண்யத்தையா? சன்மார்க்கத்தையா?

இனி வைணவ மதத்தை எடுத்துக் கொள்வோம். அந்த மதக்காரர்கள் மற்ற கோயில்களை இடித்துக் கொள்ளை அடித்தே அவர்கள் கோயில்களைக் கட்டினார்கள் எனப் பெருமையாகப் பேசிக் கொள்கிறார்கள். அதற்குச் சீரங்கம் கோவிலே உதாரணமாகும்.

இப்படியெல்லாம் இருக்க ஒரு மதத்தினர் மற்ற மதத்தினரை ஏன் பரிகசிக்க வேண்டும்?

இன்று அகராதிகளைப் புரட்டிப் பாருங்கள்.

துலுக்கர் என்றால் மிலேச்சர் என்றும், துலுக்க பாஷை என்றால் மிலேச்ச பாஷை என்றும், துருக்கி என்றால் முரடர் என்றும் எழுதி இருக்கிறது. இதுவெல்லாம் மகமதியரை இழிவு செய்ததாகாதா?

தோழர் மலங்கு அகமது சாயபு அவர்கள் கூறியதுபோல் இன்று நாட்டில் மக்களை எத்தனை பிரிவுகள் செய்து இழிவுபடுத்தி இருக்கிறார்கள்?

பிராமணன் பிரம்மாவின் முகத்தில் பிறந்தவனென்றும், சத்திரியன் புஜத்தில் பிறந்தவனென்றும், வைசியன் தொடை யில் பிறந்தவனென்றும், சூத்திரன் பாதத்தில் பிறந்தவனென் றும், அவன் மேலே கூறப்பட்ட ஜாதியார்களுக்கு அடிமை வேலை செய்யவே பிறந்திருக்கிறான் என்றும் இழிவுபடுத்தி இருக்கிறார்கள். இந்த இழிவைப் பற்றிப் பிரசாரம் செய்தால் 153ஆம் செக்ஷனை பிரயோகம் செய்து பிரசாரத்தைத் தடுக்க முயற்சி செய்கிறார்கள்.

இதுவுமில்லாமல் நமது பிரசாரத்தை ஒழிக்க ஒரு புதுமார்க்கம் தேடி இருக் கிறார்கள். அது என்னவென்றால், சென்ற வாரம் சிம்லாவில் கூடிய உள்நாட்டு மந்திரிகள் கூட்டத்தில் வகுப்பு துவேஷமாகப் பேசுவதையும், எழுது வதையும் தடுக்கக் கடுமையான முறைகளைக் கையாள வேண்டுமென்பதாகும்.

ஒரு புது மார்க்கம்

இதுபற்றித் தோழர் அ. பொன்னம்பலனார் அவர்கள் மிக விளக்கமாகப் பேசினார்கள். வங்காளத்தைச் சேர்ந்த பங்கிம் சந்திரசட்டர்ஜி எழுதிய ஆனந்த மடம் என்ற புத்தகத்தினால் வகுப்பு துவேஷம் ஏற்படவில்லையா?  வந்தேமாத ரத்தால் வகுப்பு துவேஷம் ஏற்பட வில்லையா? இந்தியை கட்டாயப் பாடமாகச் செய்வது வகுப்பு துவேஷமாகாதா?

இந்த மாதிரி வகுப்புத் துவேஷங்கள் வரும்படி காரியங்கள் செய்வதும், அதைத் தடுக்கப் புறப்படுபவர்களை வகுப்புத் துவேஷிகள் என்றும், அவர்களை அடக்க வேண்டுமென்றும், அவர்கள் பத்திரிகைகளை முடக்க வேண்டுமென்றும் சட்டம் செய்தால் வகுப்புத் துவேஷம் இன்னும் அதிகமாக வளருமா? நீங்குமா என்று யோசித்துப் பாருங்கள்.

தங்களுக்குப் பிரியமில்லாத இந்தியை கட்டாயப் பாடமாக வைப்பதால் தாங்கள் படிக்க முடியாது என்று கூறியதற்காகச் சுமார் 1001 பேர்களை சிறையில் அடைத்து வைத்துக் கஷ்டப்படுத்துவது எதைக் காட்டுகிறது? இது வகுப்புத் துவேஷத்தைக் கிளப்புவதாகாதா?

கஷ்டப்படும் மக்கள் யோசிப்பதென்ன?

இந்த நாட்டிலுள்ள 35 கோடி மக்களில் 9 கோடி மக்களை முஸ்லிம்களென்றும், 6 கோடிப் பேர்களை தீண்டாதாரர் களாகவும், 20 கோடிப் பேர்களை சூத்திரர்களாகவும் பிரித்து அடிமையாக்கி அவர்களைக் கஷ்டப்படுத்துவதை எடுத்துக் கூறினால் இது வகுப்பு துவேஷமா? இப்படியெல்லாம் வகுப்புத் துவேஷம் என்ற பேரால் ஒரு சாராரின் பிரசாரத்தை அடக்க முயல்வதைப் பார்த்தால்  இது மனிதத்தன்மை ராஜ்ஜியமா? கொடுங்கோன்மை ராஜ்ஜியமா என்று கஷ்டப்படும் வகுப்பினர் யோசிக்கின்றனர். சுயராஜ்ஜியம் என்ற பெயரால் ஒரு கூட்டத்தார் மக்களை ஏமாற்றிப் பிழைத்து வருவதை மக்களிடம் எடுத்துக் கூறினால் இது வகுப்புத் துவேஷம், இதை ஒழிக்க வேண்டுமென்று கூறும் இந்த மந்திரிசபையை ஒழிக்க மக்கள் ஒன்று சேர மாட் டார்களா என்று கேட்கிறேன். மற்றும் வகுப்புவாதமாக எழுதும் பத்திரிகைகளை அடக்கவும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இதுபற்றி 'விடுதலை' பத்திரிகையில் எழுதியிருப் பதைப் பார்த் தால் நன்கு விளங்கும்.

பத்திரிகைகளை அடக்கினால்....?

வகுப்புத் துவேஷம் என்ற பேரால் வகுப்புத் துவே ஷத்தை அடக்கிச் சமாதானம் நிலவப் பாடுபடும் பத்திரிகையை அடக்க முயன்றால் நாட்டில் வகுப்புக் கலவரங்கள் அதிகமாகி பனங் காய்கள் உருளுவது போல் மக்கள் தலைகள் உருளும் எனப் பயப்படுகிறேன்.

இம்மாதிரி சம்பவங்கள் நிகழ வேண்டுமென்று மந்திரி சபையார் விரும்புகிறார்களா? மற்றும், முஸ்லிம்களின் ஒப்பற்ற தலைவர்களான ஜனாப் ஜின்னா அவர்களையும், ஜனாப் கலிபுல்லா சாயபு அவர்களையும், மற்ற தலை வர்களையும் வகுப்புவாதிகளென்றும், தேசத் துரோகி களென்றும், உத்தியோக வேட்டைக்காரர்களென்றும், தாழ்த்தப்பட்டோர்களின் தலைவர்களான தோழர்கள் டாக்டர் அம்பேத்கர், எம்.சி.ராஜா, என். சிவராஜ், ஆர். சீனிவாசன் முதலாகிய தலைவர்களையும் இழிவாகவும், கேவலமாகப் பேசுவதும், பார்ப்பனரல்லாப் பெருங்குடி மக்களின் தலைவர்களையும் கேவலமாகப் பேசுவதும் இழிவாகப் பேசுவதுமான காரியங்களை ஒரு கூட்டத்தார் செய்து வந்தால் அந்தந்த வகுப்பார்களுக்கு ஆத்திர முண்டாகுமா - உண்டாகாதா என்று கேட்கிறேன். இந்த மாதிரி விஷ யங்கள் ஒழிய வேண்டுமென்று கூறினால் இது வகுப்புத் துவேஷமா?

(31.05.1939 அன்று ஈரோடு பொதுக்கூட்டத்தில்

தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு)

'குடிஅரசு' - சொற்பொழிவு - 11.06.1939

- விடுதலை நாளேடு 15 12 19

வியாழன், 12 டிசம்பர், 2019

பெரியார் பேசுகிறார் : திராவிடர் கழகம் செய்து வரும் புரட்சி

தந்தை பெரியார்

ஜாதி முறைகள் எல்லாம் ஆரிய மதமாகிய இந்து மதத்தின் சிருஷ்டியேயாகும் _ இந்து மதத்துக்கு ஆதாரம் ஜாதிதான். அது புராணங்களில் தேவர் _ அசுரர்களாகவும், சாஸ்திரங்களில் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்களென்று  ஆரியர்களைக் குறிப்பிடுவதும், சூத்திரர்கள், சண்டாளர்கள் என்று திராவிடர்களைக் குறிப்பிடுவதாகவும் அமைக்கப்பட்டிருப்பவைகளே யாகும்.

தேவாசுரர்களும் பிராமணாதி சூத்திரர்களும் இல்லாவிட்டால் புராணங்களுக்கும் சாஸ்திரங்களுக்கும் வேலை இல்லை என்பதோடு, இந்து மதத்திற்கும் இடம் இல்லை.

ஜாதிப் பாகுபாடுகளுக்கு ஒரு காரணமுமே சொல்லாமல் கடவுள் அந்தப்படி தனது 4 அவயங்களிலிருந்து 4 ஜாதிகளை உண்டாக்கினார் என்பதோடு முடிந்து விடுகிறது.

ஜாதிகளை உற்பத்தி செய்த பிறகுதான் ஜாதிகளுக்குக் கர்மங்கள் (கடமைகள்) வேலைகள் பகிர்ந்து கொடுக்கப் பட்டிருக்கின்றன. இதை மனுதர்மம், பாராசர ஸ்மிருதி முதலியவைகளைக் கொண்டு அறியலாம்.

ஜாதிகள் பிரிந்தாலும் _ ஜாதிகளுக்கு வேலை பிரித்துக் கொடுத்திருப்பதிலும் மேல் ஜாதி கீழ் ஜாதி  என்கின்ற  உயர்வு _ தாழ்வு பேதமும் , மேன்மையான சுகமான வேலை, இழிவான வேலை என்பதாகவும், பாடு படாமல்  சுகமடையும் வேலை _ பாடுபட்டு கஷ்டமும், இழிவும் அடையும்படியான  வேலை என்றும் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

அதிலும் ஜாதிப் பாகுபாடு பற்றிய சாஸ்திர கருத்துகளைப் பார்த்தால் மேல் ஜாதியாருக்கே கல்வியும், செல்வமும் அடையும் உரிமையும், கீழ் ஜாதியாருக்கு, அடியோடு கல்வியும், செல்வமும்  இல்லாமையும்,  கீழ் ஜாதியார் கல்வி கற்றால் தண்டிக்கும்படியும் கீழ் ஜாதியார் செல்வம் வைத்திருந்தால் பலாத்காரமாகப் பிடுங்கிக் கொள்ள வேண்டுமென்பதாகவும் திட்டம். வகுத்திருப்பதோடு இந்தத் திட்டங்கள்  கட்டாயமாக அனுஷ்டிக்கப்பட வேண்டியவைகள் என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த சாஸ்திர விதிகளுக்கு ஏற்பவேதான் இன்றும்  கீழ் ஜாதியார் இழி தொழில் புரிவோராயிருப்பதும், கீழ் ஜாதியார்  கல்வி அற்றவர்களாயிருப்பதும், மேல் ஜாதியார் மேன்மையான சுக தொழில் புரிவோராயிருப்பதும் யாவருமே கல்வி கற்றிருப்பதுமேயாகும். ஒரு சிலர் நம்மில் இதற்கு மாற்றமாய்  இருக்கிறோம். என்றால் அது புராண காலத்திலும் அப்படிச் சிலர் இருப்பதை அனுசரித்து அதாவது விபீஷணன், பிரகலாதன், அனுமார், சுக்ரீவன், அங்கதன் போன்ற கற்பனைகளை எடுத்துக்காட்டாகக் கொண்டு அவசியமும் முடியாமையும் ஆன காரணத்தால் அனுமதிக்கப்பட்டவையே யாகும்.

இன்று இந்த நாட்டில் நடந்து வரும் பார்ப்பனர் _ பார்ப்பனரல்லாதார் என்னும், பிராமண _ சூத்திரப் போராட்டமும், அந்நியர் _ இந்நாட்டவர் என்னும் ஆரிய திராவிடர் என்னும் ஆரிய திராவிடப் போராட்டமும் இதையே காரணமாகக் கொண்டதே தவிர வேறு காரணம் எதுவுமே கிடையாது.

ஜாதிமுறை காரணமாகவேதான் நம் நாட்டில் தொழில் பேதமும், கல்வி பேதமும், பொருளாதார பேதமும், உத்தியோக பேதமும் இருந்து வருகின்றன.

ஜாதி முறையை அழிப்பதென்றால் அதற்கு இருக்கும் அஸ்திவார பலமும், ஆதரவு தாங்கிகளும் அதாவது சாயாமல் முட்டுக் கொடுத்து வைத்திருக்கும் உதவித் தூண்களும் மிக மிக பலமானவைகள். ஆதலால், அவைகளைப் புரட்சி என்னும் டைனமேட் வெடி வைத்து உடைக்க வேண்டியதாக இருந்து வருகிறது. அந்த வேலையைத்தான் திராவிடர்கழகம் அதுவும் திராவிடர் கழகமே தான் செய்து வருகிறது.

இந்த வேலையில் ஈடுபட்டு அனுபவம் பெற்ற எவருக்குமே எதிரிகளிடம் இருந்து நல்ல அழைப்புகளும் நல்ல ஆதரவுகளும் தாராளமாகக் கிடைக்கும். அதன் காரணமாகவே திராவிடர் கழகத்தில் அதாவது ஜஸ்டிஸ் - சுயமரியாதை இயக்கப் பணியில் அனுபவமும் செல்வாக்கும் பெற்ற எவரும் இக்கழகத்தில் நிரந்தரமாக இருக்க முடியாது.

முதலாவதாக இந்த ஜாதி முறை ஒழிப்புக் கருத்துக்கு மாறாக அல்லது ஜாதி முறை ஒழிப்புக்கு எதிரிகளாய்  இருக்கிறவர்களுக்கு அனுகூலமாக இருக்கிற பண்டிதர், கலைவாணர், புலவர், ஆசிரியர், செல்வர், உத்தியோகஸ்தர்கள் முதலியவர்கள் எவ்வளவு அயோக்கியர்களாக, நாணயக் குறைவு உள்ளவர்களாக, இனத் துரோகிகளாக இருந்தாலும் அவர்களுக்குப் பார்ப்பனர் ஆதரவு, விளம்பரம், உதவி, உத்தியோகம், பெருமை முதலியவைகள் தாராளமாகக் கிடைக்கும்.

உதாரணமாக, இன்று பார்ப்பன உலகில் பாராட்டுதலும் புகழும் பெற்ற திராவிட  இனத்துக்காரர்களும், புலவர்களும், வித்துவான்களும், மற்றும் அதிகாரிகளும், செல்வர்களும் ஆகியவர்களைப் பார்த்தால் அந்த பட்டியிலில் உள்ள 100-க்கு 99.3/4 பேர்கள் நம் திராவிட இனத்துக்குத் துரோகிகளாகவே, நம்மைக் காட்டிக் கொடுத்து பிழைப்பவர்களாகவே தான் இருப்பார்கள்.

ஒன்று சொல்லமுடியும். அநேகமாக சூத்திரனுக்கு பஞ்சமனுக்கு இன உணர்ச்சி இருக்க முடியாது. இருக்க வேண்டுமானால் அவனுக்கு இனம் இன்னது என்ற தெளிவு ஏற்படாமல் இருக்கும்படி பல ஜாதியாய்ப் பிரிக்கப்பட்டு, பல கலைகள் புகுத்தப்பட்டு, சுயமரியாதை உணர்ச்சி ஏற்படுவதற்கு இல்லாமலும், சுயநலமே ஜீவனாக, அதாவது ஜீவப் பிராணி போன்ற  உணர்ச்சியையே வாழ்க்கை வழியாகச் செய்யப்பட்டிருக்கிறது.

- ‘விடுதலை’ - 7.8.1950

- உண்மை இதழ், 16- 31. 8.19

செவ்வாய், 10 டிசம்பர், 2019

மற்றொரு 'சனியன்' "கார்த்திகைத் தீபம்"

தந்தை பெரியார்

மதத்தின் பெயரால் ஏற்பட்ட பண்டிகைகளின் மூலமாகவே நமது நாட்டுச் செல்வங்களும், மக்களின் உழைப்பும் பெரிதும் வீணாகிக்கொண்டு வருகின்றன என்பதை நாம் பலதடவை எடுத்துக்காட்டிப்பேசியும், எழுதியும் வருகிறோம். எவ்வளவு பேசினாலும், எவ்வளவு எழுதினாலும் நமது மக்களுக்கு இன்னும் அப்பண்டி கைகளில் உள்ள அபிமானமும், மூடநம்பிக்கையும் ஒழிந்த பாடில்லை. "அடிமேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும்" என்பதைப்போல, அடிக்கடி அவற்றின் புரட்டுக் களை வெளிப்படுத்தி வருவதனால் நமது மக்களுக்கு அவைகளின் உண்மை விளங்கக்கூடும் என்று கருதியே நாமும் இடைவிடாமல் எழுதிக்கொண்டு வருகிறோம்.

சென்றமாதத்தில் தான் நமது நாட்டின் செல்வத்தைக் கொள்ளை கொண்டு பாழாக்கிச் சென்ற தீபாவளிப் பண்டிகையைப் பற்றி எழுதியிருந்தோம். அப்பண்டி கையால் நமக்குக் கிடைத்த பலன் என்ன? தீபாவளியின் பெயரால் ஏறக்குறைய 20கோடி மக்களாவது பண்டிகை கொண்டாடி இருப்பார்கள் இவர்கள் பண்டிகை கொண் டாடியதன் பயனாய் சுமார் 10 கோடி ரூபாய்க்குக் குறையாமல் பாழ்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தப் பத்துகோடி ரூபாயும், அனாவசியமாய் துணிவாங்கிய வகையிலும், பலகாரங்கள் செய்த வகை யிலும், பட்டாசு வாங்கிப் பொசுக்கிப் புகையும், கரியுமாக ஆக்கிய வகையிலும் செலவாயிருக்கும் என்பது மட்டும் அல்ல; பண்டிகை நாளில் வருத்தமின்றிக் களித்திருக்க வேண்டும் என்பதைக் கருதி ஏழைமக்கள், கள், சாராயம், பிராந்தி, விகி, ஜின், வொயின், பீர், ராமரசம் முதலிய வெறிதரும் பானங்களை குடித்துக் கூத்தாடிய வகையிலும் ஏராளமான பணம் செலவழிந்திருக்கும் என்பதை யாரும் மறுக்கமுடியாது. இந்தப் பண்டிகையினால் வெற்று நாளில் மறந்து போயிருந்த சாமிக்குப் படையல் போடத் தூண்டும் புராணக் கதை, மூட நம்பிக்கை மக்கள் மனத்தில் மறுபடியும் வந்து குடிபுகுந்ததோடு, அவர்களுடைய செல்வமும் கொள்ளை போகும் நிலை ஏற்பட்டது. இவ்வளவு மாத்திரம் அல்ல; தீபாவளிப் பண்டிகைக்கு விடுமுறை விட்டதன் பயனாய், தினக்கூலிக்கு வேலை செய்யும் ஏழை மக்கள் கூலியை இழந்ததோடல்லாமல், கடன்வாங்கி நஷ்டமடைந்தது எவ்வளவு! வேலை நடக்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு அதனால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு! தீபாவளிக்கு முன் சில நாட்களும், தீபாவளிக்குப்பின் சில நாட்களும், தீபாவளியைக்கருதி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல், விளையாட்டுக்களிலும், வேடிக்கைகளிலும் கவனம் செலுத்திய காரணத்தால் அவர்களுடைய படிப்புக்கு நேர்ந்த கெடுதி எவ்வளவு! அரசியல் காரியங்கள் நடைபெறுவதில் இந்த ஓய்வால் தடைபட்ட காரியங்கள் எவ்வளவு?

இவ்வளவு தொல்லைகளையும் உண்டாக்கிச்சென்ற தீபாவளிப் பண்டிகையின் ஆர்ப்பாட்டம் மறைந்து இன்னும் ஒரு மாதங்கூட ஆகவில்லை, சரியாய் 15 நாட்களுக்குள்ளாகவே மற்றொரு "சனியன்" தொடர்ந்து வந்து விட்டது. இவ்வாறு தவறாமல் ஒவ்வொரு மாதமும் நமது நாட்டுச் செல்வத்திற்குச் சனியன் பிடிப்பது வழக்க மாகவும், அவ்வழக்கம் "தெய்வீகம்" என்று சொல்லப்படுவ தாகவும் "மதத்தின் முக்கிய பகுதி" என்று சொல்லப்படுவ தாகவும் இருந்து வருகிறது. இப்பொழுது வரும் சனி யனாகிய பண்டிகை "கார்த்திகைத் தீபம்" என்பது தான்.

இந்த "கார்த்திகைத் தீபப்பண்டிகை"யை ஒரு பெரிய தெய்வீகம் பொருந்திய சிறந்த நாளாகக் கருதி இந்தியா முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை இந்து மதத்தில் உள்ள சைவர், வைணவர் வீரசைவர், ஸ்மர்த்தர் முதலிய எல்லாப் பிரிவினரும் கொண்டாடுகின்றனர்.

சாதாரணமாகக் கார்த்திகை நட்சத்திர தினத்தைச் "சுப்பிரமணியன்" என்னும் சாமிக்கு உகந்த சிறந்த நாளாகக் கருதியே "பக்தர்கள்"  என்பவர்கள் விரதங்களும், பூஜைகளும் நடத்தி வருகின்றனர். சாதாரண காலத்தில் வரும் கார்த்திகைகளைவிட, கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகையே மிகவும் சிறந்த பண்டிகையாகக் கொண் டாடப்பட்டு வருகிறது. இதன் பொருட்டுத் திருவண்ணா மலை முதலிய பல ஊர்களுக்கு யாத்திரை போய்ப் பணத்தைச் செலவு செய்து விட்டுத் திரும்பும்போது அங்கிருந்து வாந்தி பேதியைக் கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் கார்த்திகைக்காக, வைத்தீஸ்வரன் கோயில், குன்றக்குடி, திருப்பாங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை முதலிய ஊர்களுக்கு மக்கள் சென்று செலவு செய்யும் செல்வங்களே பதினாயிரக்கணக்காகவும், இலட்சக்கணக்காகவும், ஆகும்போது "பெரிய கார்த்திகை" என்று பெயர் பெற்ற கார்த்திகை மாதப் பண்டிகை நாளில் செலவாகும் பொருள் கோடிக்கணக்கில் குறைவுபடுமா? இதில் எவ்வாறு பொருள் வீணக்கப்படுகிறதென்பதை நினைத்துப் பாருங்கள்! தீபாவளிக்காக வரவழைத்து விற்பனையாகாமல் கடைகளில் தங்கிக்கிடக்கும் பட்டாசு களுக்குச் செலவு வந்து இந்தப் பட்டாசுகளின் மூலம் பணம் படபடவென்று சத்தமிட்டு வீணாக்கப்படும்.

வீடுகளுக்குள்ளும், வெளிப்புறங்களிலும், காடு களிலும். மேடுகளிலும், குப்பைகளிலும், குளங்களிலும்,   எண்ணற்ற 100, 1000, 10000,1000000 கணக்கான விளக்கு களைக் கொளுத்தி வைப்பதன் மூலம் செலவாகும் நெய் எண்ணெய்ச் செலவு எவ்வளவு! கோயில்கள் என்பவை களுக்குச் சொக்கப்பனை கட்டி நெருப்பு வைப்பதற்காகச் செலவு செய்யும் நெய், எண்ணெய், விறகு முதலிய வைகளுக்காகும் செலவு எவ்வளவு! கார்த்திகைப் பண்டிகைக்காக திருவண்ணாமலை முதலிய ஊர் களுக்குப் பிரயாணஞ் செய்வதன் மூலமாகும் ரொக்கப் பணச் செலவு எவ்வளவு! அங்கு கூம்புக்கு (சொக்கப் பனை) செலவாகும் விறகு, கற்பூரம், வெண்ணெய், நெய் ஆகியவற் றிற்காகும் செலவு எவ்வளவு? இவ்வாறு பல வகையில் செலவு செய்யப்படும் கோடிக்கணக்கான பணங்களால் நமது நாட்டிற்குக் கடுகளவாவது பயனுண்டா என்று  ஆலோசித்துப் பாருங்கள்.

இன்னும் இப்பண்டிகையினால் மக்களுக்குண்டாகும் மூடநம்பிக்கையையும், அதனால் உண்டாகும் மூடப் பழக்க வழக்கங்களையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! கார்த்திகையைப் பற்றி வழங்கும் புராணக்கதை இரண்டு. அவைகளில் ஒன்று:-

ஒரு சமயம் "அக்னி தேவன்" (நெருப்பு) என்னும் "கடவுள்" சப்தரிஷிகளின் மனைவிமார்களைப் பார்த்து மோகங் கொண்டானாம். அதை அறிந்து  அவன் மனைவி "சுவாகாதேவி" என்பவள் அந்த ரிஷிகளின் மனைவிகளைத் தொந்தரவு செய்தால் அவர்களால் தன் கணவன் சபிக்கப்படுவான் என்று  என்று எண்ணினாளாம் அதனால் அவள் வசிஷ்டரின் மனைவியாகிய அருந்ததி உருவத்தை மாத்திரம் விட்டு விட்டு, மற்ற ஆறு ரிஷிகளின் மனைவிமார்களை போல் உருவங்கொண்டு தன் கணவன் ஆசையை நிறைவேற்றினாளாம்.  இவ்வாறு சுவாகாதேவி கொண்ட ஆறு உருவத்திற்கும் கார்த்திகை என்று பெயராம்.  இவைகள் தான் கார்த்திகை நட்சத்திரமாகக் காணப்படுவதாம்.  இந்த நட்சத்திர பெண்கள் தான் 'சுப்பிரமணியன்' என்னுஞ்சாமி குழந்தையாக இருக்கும்போது அதையெடுத்து வளர்த்தார்களாம்! என்பது ஒருகதை.

இக்கதையினால் தான் கார்த்திகை நட்சத்திரத்திற்குப் பெருமை. இக்கதை நமது மக்களுக்குக் கற்பிக்கும் மூடநம்பிக்கையை பாருங்கள்; பிறர் மனைவி மேல் ஆசைப்பட்டு விபசாரம் பண்ணுவது குற்றம்  என்பது ஒன்று. மனைவி தன் கணவன் எந்தத்தகாத காரியத்தை விரும்பினாலும் அதை எப்பாடு பட்டாவது பூர்த்தி செய்து கொடுக்கும் அடிமைக் கருவியாக இருக்க வேண்டு மென்பது ஒன்று.  இவைமட்டும் அல்லாமல் இயற்கைப் பொருள்களின் மேல் எல்லாம் "தெய்வீகம்" என்னும் மூட நம்பிக்கையை உண்டாக்கும் துர்போதனை ஒன்று ஆகவே இவற்றை ஆராயும்போது இக்கதையும் இதன் மூலம் ஏற்பட்டவிதம், பண்டிகை முதலியனவும் புரட்டு என்று உணரலாம்

இனி, கார்த்திகையைப் பற்றிய இரண்டாவது கதையாவது:-

ஒரு காலத்தில் பிரம்மா என்னும் கடவுளும், விஷ்ணு என்னும் கடவுளும் தாம் தாமே ஆதி மூலக்கடவுளர் என்று கூறிக்கொண்டதனால் இருவருக்கும் முதலில் வாய்ச் சண்டை உண்டாகி, பிறகு அது கைச்சண்டையாக மூண்டு ஒருவரோடு ஒருவர் அடிபிடி சண்டை செய்தனராம். அவர்களுடைய சண்டை சீக்கிரத்தில் ஒரு முடிவுக்கும் வரவில்லையாம். ஆகையால் அப்பொழுது பரமசிவன் என்னும் "கடவுள்" அவர்கள் மத்தியில் ஒரு பெரிய "ஜோதி" உருவத்தோடு, வானத்திற்கும் பூமிக்குமாக நின்றாராம். உடனே சண்டைக்காரக் கடவுள்கள் இருவரும் ஒன்றும் தெரியாமல் திகைத்து நின்றார்களாம், அப்பொழுது "ஜோதி" உருவாக நின்ற "பரமசிவக் கடவுள்" ஏ பிரம்ம விஷ்ணுகளே! இந்த ஜோதியின் அடி முடிகளை யார் முதலில் கண்டு வருகிறாரோ அவர்தான் உயர்ந்தவர் என்று ஒரு அனாமதேய (அசரீரீ) வார்த்தை சொன்னாராம். உடனே விஷ்ணு பன்றி உருவம்கொண்டு அடியைக் காண பூமியைத் துளைத்துக் கொண்டு வெகுதூரம் சென்றும் காணமுடியாமல் திரும்பி வந்து விட்டாராம்.  பிரம்மன் அன்னப்பறவை உருவம் கொண்டு ஜோதியின் முடியைக் காணப் பறந்து மேலே செல்லும் போது வழியில் ஒரு தாழம்பூ வந்துகொண்டிருந்ததாம். அதைக் கண்டு பிரம்மன் "தாழம்பூவே, எங்கேயிருந்து எவ்வளவு காலமாக  வந்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்க; அது "நான் பரமசிவனுடைய முடியிலிருந்து கோடிக்கணக்கான வருஷங்களாக வந்து கொண்டிருக்கிறேன்" என்று சொல்லிற்றாம். உடனே பிரம்மன் நான் சிவனுடைய முடியைப்பார்த்து விட்டதாக சிவனிடத்தில் எனக்காக சாட்சி சொல்லுகிறாயா என்று கேட்க,அதுவும் சம்மதிக்க, இருவரும், பரமசிவனிடம் வந்து முடியைக் கண்டு வந்ததாகப் பிரம்மன் கூற, தாழம்பூவும் அதை ஆமோதித்ததாம். அதுகண்ட சிவன் கோபங்கொண்டு, இருவரும் பொய் சொன்னதற்காக, "பிரம்மனுக்கு இவ்வுலகில் கோயில் இல்லாமற் போகக் கடவது" என்றும், "தாழம்பூ இனிமேல் தனக்கு உதவாமல் போகக்கடவது" என்றும் சாபம் கொடுத்தாராம். பிறகு பிரம்மாவும் விஷ்ணுவும் தங்கள் கர்வம் ஒழிந்து பரமசிவனே பெரியவர் என்று எண்ணி இருவரும் அவரை வணங்கி, எங்கள் வழக்கைத் தீர்த்து வைத்ததற்கு அடையாளமாக இந்த மலையின் மேல் ஒரு "ஜோதி" உருவாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்களாம், "பரம சிவனும்" அதற்குச் சம்மதித்து "ஒவ்வொரு வருடத்திலும் கார்த்திகை மாதத்தில், கார்த்திகை பண்டிகையில் நான் இந்த மலையின் உச்சியில் ஜோதியாகக் காணப்படுவேன்" என்று சொன்னாராம். இதுதான் திருவண்ணாமலைப் புராணமாகிய அருணாசலப்புராணத்தில் சொல்லப் படும் கார்த்திகைப் பண்டிகைக் கதை.

இந்தக் கதையை ஆதாரமாகக் கொண்டுதான் இன்றும் "சைவப் பெரியார்கள்" என்பவர்கள் சிவன் என்பவரே மற்ற "கடவுள்"களைவிட உயர்ந்தவர் என்று சண்டை போடுகின்றனர். இந்தக் கதையைக்காட்டிச் சிவனை உயர்த்தியும் மற்றவர்களைத் தாழ்த்தியும் பாடாத சைவப்புராணங்களும், தேவாரங்களும், திருவாசகங் களும், தோத்திரங்களும் இல்லை.  இதற்கு எதிராக மற்ற மதத்தினர்கள் எழுதி வைத்திருக்கும் கதைகள் பல இவ்வாறு மதச் சண்டையை உண்டாக்குவதற்கு இக்கதை முதற்காரணமாக இருப்பதை அறியலாம். இந்தக்கதையில் தாழம்பூ பேசுவது ஒரு வேடிக்கை! "கடவுள்"களுக் குள்ளேயே சண்டை வந்தது ஒரு விந்தை! இதுபோலவே ஆராய்ந் தால் பரிகாசத்திற்கும் வேடிக்கைக்கும் இடமாக இக்கதையில் அனேகம் செய்திகள் அமைந்திருப்பதைக் காணலாம்.

இவ்வாறு இரண்டு முரண்பட்ட வேடிக்கைக்கதைகளை ஆதாரமாகக் கொண்ட இந்தக் கார்த்திகைப் பண்டிகையினால் நமது மக்கள் மனத்தில் குருட்டு பக்தியும், மூட நம்பிக்கையும்; முட்டாள் தனமும் அதிகப்படும் என்பதில் சந்தேகம் உண்டா? இது நிற்க மேலே கூறியகதைகளில் இரண்டாவது கதையைச் சைவர்கள்தான் சிவனுக்கு பெருமை கற்பிக்கிறதென்று நம்பி கார்த்திகைப் பண்டிகை கொண்டாடு கிறார்களென்றால், வைணவர்களும் கொண்டாடுவதில் என்ன அர்த்தமிருக்கிறது என்பதுதான் நமக்கு விளங்க வில்லை. வைணவர்களின் "கடவுளை மலந்தின்னும் பன்றி"யாக்கிக் கேவலப்படுத்தியிருப்பதுடன் சிவனுடைய பாதத்தைக்கூட காணமுடியாத அவ்வளவு சக்தியற்ற தெய்வம் என்று இழிவுபடுத்தியிருப்பதை அறிந்தால் அவர்கள் இந்தப் பண்டிகையைப் பெருமையாகக் கொண்டாடச் சம்மதிப்பார்களா? இவர்கள் போகட்டும், ஏதாவது ஒரு கடவுளாவது இருக்கிறார் என்ற நம்பிக்கை யில்லாததுதானே கடவுள் என்னும் கொள்கையுடைய ஸ்மார்த்தர்களும் இக்கதையை நம்பிப்பண்டிகை கொண் டாடுகிறார்களே! இதில்தான் என்ன அர்த்தமிருக்கிறது? இவற்றையெல்லாம் யோசிக்கும்போது இவர்கள் முட்டாள் தனம் காரணமாகவாவது, வீண் ஆடம்பரம் காரண மாகவாவது இப்பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்" என்றுதான் நினைக்க வேண்டியதிருக்கிறது. அல்லது அறிந்தோ அறியாமலோ நமது மக்கள் மனத்தில் "பண்டி கைகள் புண்ணிய நாட்கள், அவற்றைக் கொண்டாடுவதால் புண்ணியம் உண்டு. கொண்டாடாவிட்டால் பாவம்" என்னும் ஒரு குருட்டு எண்ணம் குடி கொண்டிருக்கிறது என்ற முடிவுக்குத் தான் வரவேண்டி யிருக்கிறது,

ஆகவே, இதுபோன்ற பண்டிகைகளால், நமது நாட்டில், பொருட்செலவும், வறுமையும், மூடநம்பிக்கை யும், வீண்காலப்போக்கும், நிறைந்திருப்பதை எடுத்துக் கூறத் தொடங்கிறவர்களுக்கு உடனே பகுத்தறிவற்ற வைதிக மூடர்கள் "தேசத்துரோகி" "மதத்துரோகி" "வகுப்புவாதி" "நாஸ்திகன்" என்ற பட்டங்களைச் சூட்டி விடுகின்றனர் சிறிதேனும் பொறுமைகொண்டு, சொல்லும் விஷயத்தைப் பகுத்தறிவுகொண்டு ஆராய்ந்து பார்க்கின்றவர்களில்லை.

இத்தகைய வீண் காரியங்களை ஒழித்து மக்களைப் பகுத்தறிவுடையவராகச் செய்ய இதுவரையிலும், எந்த தேசியத் தலைவர்களாவது, எந்த தேசியத் தொண்டர்களாவது, எந்த தேசியப் பத்திரிகைகளாவது முயற்சியெடுத்துக் கொண்டார்களா? இன்னும் இது போன்ற மூட நம்பிக்கைக்கான விஷயங்களை, "சுயராஜ்ஜியம்"  "சுதந்திரம்" "காங்கிரஸ்" "பாரதமாதா" "மகாத்மா காந்தி" "காந்தி ஜெயந்தி" என்னும் பெயர்களால் பிரசாரஞ் செய்து மற்றும் பண்டிகைகளையும் உற்சவங் களையும், விக்கிரகங்களையும் கற்பித்து மக்களை ஏமாற்றிக் கொண்டு தானே வருகிறார்கள். இவ்வாறு தேசீய பிழைப்புக்காரர்கள் ஒரு புறமும், பண்டிகையில் நம்பிக்கையுள்ள வைதிக மூடர்கள் ஒரு புறமும், பணம் சேர்க்க ரயில்வே கம்பெனிக்காரர்கள் ஒருபுறமும், புராணப் பிழைப்புக்காரர்களும், குருக்கள்களும், புரோகி தர்களும் மற்றொரு புறமும் பண்டிகைப் பிரசாரம் பண்ணினால் மக்களுக்குப் பகுத்தறிவு விளங்குவது எப்பொழுது?

'குடிஅரசு' - தலையங்கம் - 22.11.1931

 

 - விடுதலை நாளேடு 8 12 19

அறிவுச் சுதந்திரத்துக்கு உழைத்தவர் அம்பேத்கர்


தந்தை பெரியார்

பேரன்புமிக்க கல்லூரித் தலை வர்களே! நிர்வாகப் பேராசிரியர்களே! உறுப்பினர்களே! மாணவர்களே! இன் றைய தினம், பம்பாய் நகருக்கு ஜாதி ஒழிப்புப் பிரசாரம் செய்யும் பொருட்டு வந்திருக்கிற என்னை இங்கு நீங்கள் அழைத்து உங்கள் கல்லூரி ஸ்தாபனங் களை எல்லாம் காட்டி, நூல் நிலையம் போன்ற பல அமைப்புக்களையும் பார்வையிடும் நல்வாய்ப்பை ஏற்படுத்தித் தந்து, எனக்கு இவ்வளவு ஆடம்பரமான முறையில் வரவேற்பு - பெருமையெல் லாம் அளித்தமைக்காக நான் பெரிதும் மகிழ்வதோடு எனது மனமார்ந்த நன்றி யறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

காலஞ்சென்ற நண்பர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் அரிய முயற்சியால் இந்தக் கல்வி ஸ்தாபனங்கள் ஆரம்பிக்கப்பட்டு அவரே இவைகளை தனது ஆயுள் முழுவதும் முன்னின்று நடத்திக்கொண்டு வந்தார் என்பதைக் கேள்விப்பட்டு நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்தி யாவிலேயே தலைசிறந்த அறிவாளிகள் என்று கருதப்படும் சிலரில் ஒருவர் ஆவார். அவர் தனது வாழ்நாள் முழு வதும் மக்களை அறிவைப் பயன்படுத்து கிறவர்களாகவும் அறிவுக்கு முழுச் சுதந்திரம் கொடுப்பவர்களாகவும் ஆக்க வேண்டும் என்பதற்காகவே பாடுபட்ட வரும் ஆவார். அவர் நம்மைப் போலவே சாதாரண மனிதர்களில் ஒருவர் ஆவார். சக்திக்கு மேற்பட்ட எந்தவித தெய்வீக சக்தி என்பதோ தன்மையோ ஏதும் அவரிடத்தில் கிடையாது. அவர் ஒரு மகானோ, மகாத்மாவோ, முனிவரோ, ரிஷியோ, தவசிரேஷ்டரோ, வரப்பிர சாதியோ அல்ல. அவர் சித்தார்த்தர் எப்படி ஒரு சாதாரண மனிதராக இருந்து மனிதசமுதாயத்திற்கு எப்படிப்பட்ட தொண்டு ஆற்றமுடியுமோ அப்படிப் பட்ட தொண்டாற்றி வந்தார்.

தன் முயற்சியால் உயர்ந்த அறிவாளி அம்பேத்கர்

புத்தர் அரச குடும்பத்தினராகப் பிறந் தார். ஆனால் அம்பேத்கர் அவர்களோ அந்த மாதிரி பிறக்கும் போதே வசதி யோடு பிறந்தவர் அல்ல, டாக்டர் மிகவும் வசதியில்லாத நிலையிலிருந்து தன்னு டைய உழைப்பாலும் சுய அறிவினாலும் முயற்சியாலும் உயர்ந்த நிலைக்கு வந்து மக்களுக்கு பயன்படத்தக்க மாதிரியான வகையில் தொண்டாற்றினார்.

இந்தியாவில் எத்தனையோ மகாத் மாக்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ரிஷிகள், தவசிரேஷ்டர்கள், அவதா ரங்கள் எல்லாம் தோன்றியிருக்கிறார்கள். ஏராளமாக ஆனால் அவர்களால் மக்கள் என்ன லாபம் பெற்றார்கள் என்று பார்த் தால், அந்த மகாத்மாக்கள் முதலியவர்கள் மோட்சத்திற்குப் போனார்கள், புகழ் பெற்றார்கள் என்பதைத்தவிர வேறு மக்களுக்கு எந்த வகையிலும் எந்தவித நன்மையும் ஏற்பட்டது கிடையாது. இந்த நாட்டில் மக்களைப் பார்த்து நீங்கள் உங்கள் அறிவுக்கு வேலைகொடுங்கள். அறிவின்படியே நடவுங்கள் என்று சொன்னவர்கள் 2500 வருஷங்களுக்கு முன் புத்தரும் அவருக்குப் பிறகு டாக்டர் அம்பேத்கரும்தான் காணப்படுகிறார்கள். வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம்.

எதிர்ப்பில் வளர்ந்தவர்கள்

இந்த இரண்டு பேர்களும் தங்களது வாழ்நாள் பூராவிலும் பலமான எதிர்ப் பைக் கண்டார்கள். அவர்களது தொண் டிற்குப் பலத்த எதிர்ப்பு இருந்தது என்பது உண்மை என்றாலும் அவர்களது கொள் கைக்கு மக்களிடத்தில் நல்ல மரியா தையும் செல்வாக்கும் வளர ஆரம் பித்தன. இந்த நாட்டில் எந்த முட்டாளும் மகான் ஆகலாம். எந்த மடையனும் மகாத்மா ஆகிவிடலாம். ஆனால் அறி வுப்படி நடவுங்கள் என்று கூறிப் பிரசாரம் செய்ய ரொம்ப துணிவும், எதிர்ப்பைத் தாங்க மாபெரும் அறிவு சக்தியும், உண்மை மக்கள் பற்றும் வேண்டும்.

தொண்டுக்கு அளவுகோல்

இன்றைக்கு இருக்கும் பெருந் தலை வர்கள் எனப்படும் பலரும் விளம்பரத் தாலும் மற்றவர்களுடைய பாராட்டி னாலும் பெரிய ஆட்கள் ஆனார்களே தவிர, தங்களது அறிவினாலோ அனுபவ ஆராய்ச்சி காரணமாகவோ அல்லது மக்களுக்குப் பயன்படும் வகையில் தொண்டாற்றியமை காரணமாகவோ கிடையாது. அப்படி உண்மையான தொண்டு புரிபவர்களுக்கு மக்களிடத்தில் செல்வாக்கும் புகழும் கிடைப்பதற்குப் பதில் எதிர்ப்பும் வசவுகளும்தான் கிடைக்கும். உண்மையான பொதுத் தொண்டுக்குரிய அளவுகோல் அதுதான். புரட்சிவீரனின் தன்மை என்னவென்றால் அவனது வாழ்நாளில் அவனுக்குக் கிடைக்கும் வசவுகளும் எதிர்ப்புகளும் இதற்கு பயந்து கொண்டுதான் பொது வாழ்வில் உள்ள தலைவர்கள் பலர் இந்த மாதிரி எந்தக் காரியத்தையும் சொல்ல மாட்டார்கள்!

புகழ் ஓங்காத காரணம்

அந்த முறையில் சமுதாயத்தில் எதற்காக 100க்கு 97 பேராக இருக்கிற மக்கள் கீழ்ஜாதி மக்களாகவும், அடிமை களாகவும், தற்குறிகளாகவும், உடலு ழைப்புக்கார மக்களாகவும், இருக்க வேண்டும் என்பதாக உணர்ந்து அதற்குக் காரணமானவற்றை ஒழித்து, மனிதத் தன்மையும் அறிவும் உண்டாகும்படி டாக்டர் அம்பேத்கர் அவர்கள் பாடு பட்டார்கள். மனித சமுதாயத்தின் நல் வாழ்வுக்குப் பாடுபட்டதன் காரணமாகத் தான் அவர் புகழ் ஓங்கவேண்டிய அளவுக்கு ஓங்கவில்லை.

- விடுதலை 04.03.1959

 - விடுதலை நாளேடு 6 12 19

திங்கள், 9 டிசம்பர், 2019

தமிழனுக்கு தாய்நாடு எது? தாய்நாடு தமிழ்நாடு தானே?

- நகர தூதன்-

(வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.

இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)

காக்கைக்குத் தன் குஞ்சு பொன்குஞ்சு. இதே சம்பிரதாயந் தான் எல்லாருக்கும், அவரவரைப் பொறுத்த எல்லா விஷ யங்களிலும். பிறந்த மண், பேசும் மொழி அனைத்தும் அவ னவனுக்குச் சொந்தம்.

தாய்நாட்டுப் பற்று

ஸெக்கோஸ்லோவோகியா என்பது ஒரு சிறு நாடு. நம்முடைய மாகாணத்திலுள்ள மூன்றே மூன்று ஜில்லா வைப்போன்ற விஸ்தீரணத்தைப் போன்றது. உயிர் போனா லும் போகலாம் தன் நாட்டின் கை அகல நிலமும் பிறத்தி யான் வசம் போகப்படாது என்கிறது அது.

பாலக்காட்டு மணி 30 வருடங்களுக்கு முன் சென் னைக்கு வரும்போது நித்தியதரித்திரன். சோற்றுக்கடையில் பரிசாரகனாக ஊழியம். இப்போது அவன் சென்னையில் சிறந்த செல்வவந்தன், பாலக்காட்டு மணி என்னும் பெயர் மாறி பாலக்காட்டு அய்யர் என்று உயர்ந்துவிட்டது. அய்யர் வாள் நிலபுலன் எங்கு வாங்குகிறார் தெரியுமா? சென் னையை ஒட்டி அல்ல, செங்கற்பட்டு ஜில்லாவில் அல்ல. மலையாளப் பிராந்தியத்தில் மாடி வீடுகட்டுகிறான். தோட் டந்துரவுகளையும் அங்குதான் சேகரிக்கிறான். அம்மாதிரி தான் சென்னைக்கு வந்து முன்னுக்கு வரும் வட நாட்டான் ஒவ்வொருவனும். காரணம் அவர்களுக்கிருக்கும் மண் வாஞ்சை மட்டுமல்ல சென்னையை அவன் அந்நியர் இடமாகக் கருதும் மனப்பான்மையே.

தெலுங்கர் பிரிவினை

ஆகையால் எவனெவன் எந்தெந்த நாட்டவனோ அந்தந்த நாடுதான் அவனவனுக்குச் சொந்தம். எங்கிருந்தா லும், பிரீதியும் பற்றும் அங்குதான் (சொந்த நாடு) பாயும். தெலுங்கு நாட்டவர் தனி மாகாணம் கோருகின்றனர் என்றால், அது முறை தப்பிய முயற்சியல்ல. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் பேசப்படும் பகுதிகள் ஒரு காலத்தில் தமிழ்மொழி வழங்கிய ஒரே நாடு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பாழான ஆரியம் புகுந்து, பிரித்தா ளும் வேலை செய்து, ஒன்றை நாலாக்கிவிட்டது. இப்போது தமிழ் - தெலுங்கு இரண்டும் வெவ்வேறு. ஆகவே தெலுங்கு பிரிந்து நிற்கப் பிரியப்படுவதில் பிசகொன்றுமில்லை.

கூலிகள் கூற்று

இன்று தமிழரும் விழித்துக் கொண்டனர்; தனி மாகாணம் கோருகின்றனர். 'தமிழ்நாடு தமிழனுக்கே' என்கிற எண்ண மும் உதயமாகிவிட்டது. எரிகிற நெருப்பில் என்ணெய் வார்ப்பது போல சில மார்வாரிகளின் கூலிகள் தமிழர் ரத்தத்தை உறிஞ்சிக் கொழுத்த மூலதானிகளின் குலாம்கள் - 'தமிழ் நாடு தமிழ்னுக்கே' என்னும் கிளர்ச்சியை கேலி செய்கின்றன; நாள் தப்பாமல் நையாண்டி பண்ணுகின்றன. முதன் மந்திரி ஆச்சாரி - இந்தி மொழியைக் கட்டாய பாடமாக நுழைக்கப் போய், காங்கிரஸ் மந்திரிசபை காலில் கோடாரி எடுத்துப் போட்டுக்கொண்ட மாதிரி ஆகிவிட்டது. உறங்கிய தமிழன் துள்ளி எழுந்துவிட்டான். இந்தி என்னும் தீ அவன் உள்ளங்காலைச் சுட்டு விட்டது. இனி அவன் கண்ணை மூடி கவலையற்றுப் படுக்கப் போவதேது?

இந்தியே காரணம்

தமிழ் நாட்டின் விழிப்புக்குக் காரணம் இந்தி நுழைப்பு, இந்தி நுழைப்புக்குக் காரணம் தோழர் ராஜகோபாலாச்சாரி. இந்தி மொழியும் ஆச்சாரியும் காலூன்றி நிற்கும் பீடம் காங்கிரஸ், ஆகவே காங்கிரஸ், ஹிந்தி மொழியை ஏவி தமிழ்நாடு மீது படை எடுக்கத் தூண்டிவிட்டு விட்டதென்று தான் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ஹிந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி தலை நிமிர்ந்து நிற்கிறது. தற்கால 'உஞ்சிவிர்த்தி' ஆட்சி முறையை ரோஷமுள்ள தமிழர் துச்சமாக மதிக்கின் றனர்; ..... ஆட்சி முறையின் உச்சியில் உட் கார்ந்திருக்கும் ஆச்சாரியே, ''எனக்கு வாதம் செய்யத்தான் தெரியுமேயன்றி ஆளத் தெரியாது" என்று சொல்லி விட்டபோது அவரைத் தலைமையாகக் கொண்ட ஆட்சி முறையை எந்த அறிவாளி மதிப்பான்.

'இந்தி' வரப்போய் 'தமிழ்நாடு தமிழனுக்குத் தான்' என்று உரிமை கொண்டாடக் கிளம்பி விட்டனர். இந்தியை எதிர்ப் போரை நாள் தவறாது சிறைக்குள் தள்ளிக்கொண்டிருக்கிறது ஆச்சாரி சர்க்கார். பிழைக்க வந்த வடநாட்டான். கூலிகளை ஏவி இந்திக்கு ஆதரவளிக்க விரும்புகிறான். காரணம் அது அவனது தாய்மொழியின் சாயல்; அல்லது உடன் பிறந்த சகோதர மொழி. ஆகவே இந்தி பெருகினால் அவனுக்குப் பெருமை; கவுரவம்; அவன் தொழிலுக்கு உதவி; இத்தனை யும் உண்டு.

நகரங்களில் மட்டுமல்ல, நாட்டுப்புறங்களிலும் அந்தக் கல்மனம் படைத்த மார்வாரிக் கூட்டம் பரவி விட்டதென் பதை நாம் குறிப்பிட வேண்டியதில்லை. கூடை செங்கலும் பிடாரி' எனக் கேட்டதில்லையா? அந்த மாதிரிதான் அவர்கள். இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஒவ்வொரு மார்வாரியும் தமது பெட்டிக்கு அனர்த்தம் வந்து விட்டதாக, அந்த கிளர்ச்சியைக் கண்டு பயப்படுகிறான். தமிழர் பெரும்படை போகும்போது, பலவி டங்களில், அந்தந்த ஊரில் குடியேறிப் பிழைக்கும் மார்வாரி யின் காசு தான் விஷமம் செய்தது. பாருங்கள், பிழைக்க வந்த ஒரு சிலர் எவ்வளவு ஆணவத்தோடு நடந்து வரு கிறார்கள் என்பதை

வடநாட்டார் உதவி.

விளக்கமாகவும், வெளிப்படையாகவும் சொல்ல வேண்டுமானால் தமிழ்நாட்டில், தமிழர் நலங்கருதி, தமிழர் செய்கின்ற கிளர்ச்சிக்கு ஏற்படும் எதிர்ப்புகளுக்கு முக்கிய கருவியாயிருப்பது, தமிழ்நாட்டில் குடியேறி, தமிழர் நிழலில் ஒண்டி காசு சம்பாதித்த வடக்கத்தியார் அதாவது அந்நியரின் பொக்கிஷமேயாகும். பிர்லா, பஜாஜ் போன்றவர்கள் வடக்கேயிருந்தும் மார்வாரிகள், மூல்தானிகள், பனியாக்கள் போன்றவர்கள் இங்கேயே (சென்னை மாகாணத்தில்) இருந் தும். காங்கிரஸ் துவாராவாகக் கொடுக்கும் பணமே தமிழர் இயக்கத்தை நசுக்க உபயோகப்படுத்தப்படுகிறதென்பதை ஒவ்வொரு தமிழனும் உணரவேண்டும். இந்த உண்மை தெரிந்ததால் தான் தமிழ்நாடு தமிழனுக்கு' என்று அறிஞர்கள் கூற முன் வந்திருக்கிறார்கள்.

ஆங்கிலேயரும் வடக்கத்தியாரும்

இந்தியாவுக்கு வெள்ளைக்காரன் எப்படி அந்நியனா வானோ, அதே மாதிரிதான் வடக்கத்தியான் தமிழ்நாட்டுக்கு அந்தியனாகின்றான். வர்த்தகம், தொழில், உத்தியோகம் முதலியவற்றில் கிடைக்கிற பணத்தை வெள்ளைக்காரன் இந்தியாவிலிருந்து அய்ரோப்பாவுக்கு மூட்டைகட்டிக் கொண்டு போவது போல வியாபாரம், பாங்க், சேவகம் முதலிய தொழில் செய்து சம்பாதிக்கும் அடிக்கிற பணத்தை - எல்லாம் அந்நியன் (மார்வாரி, பாலக்காட்டான், கன்ன டியன், பனியா, பார்ஸி) தமிழ்நாட்டிலிருந்து வட நாட்டுக்கும் மேலைப்பிரதேசத்துக்கும் கட்டி எடுத்துக்கொண்டு போகிறான், பேசும் பாஷை, உடுத்தும் உடை, உண்ணும் உணவு முதலியவற்றில் வெள்ளைக்காரன் இந்தியனுக்கு மாறுபட்டிருப்பது போலவே வடக்கத்தியான் எல்லா வகையிலும் தமிழனுக்கு வேறுபட்டிருக்கிறான். வெள்ளைக் காரனிடமிருக்கும் காசு இந்தியாவின் சுதந்திர உணர்ச்சிக்கு விரோதமாய் உபயோகப்படுத்துவது போலவே வடக்கத்தி யானிடமிருக்கும் பொருள் தமிழரின் சுதந்திர தாகத்துக்கு விரோதமாய் அள்ளிச் செலவு செய்யப்படுகிறது. அதிலும் கொந்தளிப்பு உண்டானால் கப்பலேறி ஓட வேண்டிய நிலையிலிருக்கும் வெள்ளைக்காரனால் இந்தியாவுக்கு உண்டாகும் இடைஞ்சலை விட, கிளர்ச்சி அதிகப்பட்டால் தோளில் மூட்டை கட்டிப் போட்டுக்கொண்டு தன் சொந்த நாட்டுக்குள் ஓடி ஒளிந்து கொள்ளக்கூடிய வடக்கத்தியானால் தமிழ்நாட்டுக்கு உண்டாகும் இடைஞ்சல் அதிகம். "நானும் பாரத அன்னையின் பிள்ளை, இந்தியன், உங்கள் சகோதரன்" என்று சொல்லிக்கொண்டே தமிழனை உறிஞ்சி, உபத்திரவ மும் செய்து கொண்டிருக்க வடக்கத்தியானுக்கு வசதியிருக் கிறது.

- விடுதலை: 15.10.1938

 - விடுதலை நாளேடு 2 12 19

வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.

இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)

- நகர தூதன்-

2.12.2019 அன்றைய தொடர்ச்சி...

தாய்நாட்டுப் பற்றிருந்தால்

உண்மையாகவே, பார்ப்பனர்கள் தமிழ் நாட்டை தாய் நாடாகக் கருதி நடப்பார்களானால், அவர்கள் பிராமண ரல்லாதாருடன் சண்டைக்கு நிற்பதைவிட பிராமணரல்லா தாரை அமுக்க எத்தனிப்பதைவிட வடக்கத்தியான் மீது கண்காணிக்காமலிருக்க முடியாது வடக்கத்தியான் தமிழ் நாட்டில் அடித்துக் கொண்டு போகும் கொள்ளையையும் தமிழ் நாட்டில் பிறந்த தமிழனுக்கும் பார்ப்பானுக்கும் சண்டை போட்டுக் கொள்ளும் விஷயத்தையும் ஒப்பிட் டுப் பார்த்தால் இரண்டாவதாகச் சொன்ன விஷயம் வெறும் காய்ந்த - வாண்ட - எலும்புத் துண்டாக மதிக்கப் பட வேண்டியதேற்படும். பார்ப்பான் தமிழனோடு போட்டி. போடுவதும், தமிழனைத் தட்டி இறக்கிவிட்டு பார்ப்பான் ஏறி உட்கார எத்தனிப்பதும், பார்ப்பான் செய்கிற ஜாதி அபிமானக் கோட்டாலைகளைக்கண்டு தமிழன் கூப்பாடு போடுவதும், கேவலம் மாதம் 200, 300, 500, 1000 வெள்ளிக் காசுக்காகவேயாகும். இவர்கள் இந்த போராட்டத்தில் மும்முரமாய் ஈடுபட்டிருக்கும் போது, இருவருக்கும் தெரியாதபடி, ஓசைப்படாமல், ஆயிரம் பதினாயிரம் என்று இரண்டு பேரிடமிருந்தும் வடக்கத் தியான் தட்டிக்கொண்டு போகிறான். இது சம்பந்தமான புள்ளி விவரத்தைக் கவனித்தால் தமிழன் கும்பி கொதிக் கும்; பார்ப்பானும் தமிழ் நாட்டுக்கு உரியவனாகத் தன் னைக் கருதினால் அவன் வயிறும் எரியும். அதனால் இருவரும் சண்டை சச்சரவுகளை நிறுத்தி வைத்து விட்டு, பொதுவான எதிரியை இருவரும் சேர்ந்து எதிர்க்க முனைந்து நிற்பார்கள் என்பது நிச்சயம்.

எல்லாம் சொந்தம்

சென்னை நகரை எடுத்துக் கொள்ளுங்கள். அதிக லாபம் வரக்கூடிய தொழில்களெல்லாம் தமிழ்நாட்டுக்குப் புறம்பானவர்கள் கையிலிருக்கின்றன. சென்னையிலுள்ள மோட்டார் ஏஜண்டுகளில் 100க்கு 85 பேர் தமிழ் நாட்ட வரல்ல. சில வெள்ளைக்கார கம்பெனிகள் போக, இந்தியர் கம்பெனி எனப்படும் ஒரே ஒரு அய்யங்கார் கம்பெனி நீங்கலாக பாக்கி அத்தனைக்கும் சொந்தக்காரர்கள் பனியாக்களும், பார்ஸிகளுமேயாகும்.

"ஜஸ்" கட்டி செய்யும் "பாக்டரி"களும் பத்தில் எட்டு பார்ஸிகளிடமிருக்கிறது.

சென்னையிலிருக்கும் சினிமா திபேட்டர்கள் 16. இவற் றில் 6-நீங்கலாக 10க்குச் சொந்தக்காரர்கள் பார்ஸிகளும் பனியாக்களுமே. தமிழருக்குச் சொந்தமாகயிருக்கும் 6 தியேட்டர்களில் 2.வடநாட்டார் நிர்வாகத்தில் நடப்பவை

வைரம், பவுன் வியாபாரிகளை எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டு செட்டி, ஒரு நாயுடு நீங்கலாக மற்றவர்க ளெல்லாம் 'மல்' 'லால்' 'சேட்' என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கும் வடக்கத்தியார்களே.

காப்பிக்கடைகளைப் பாருங்கள். பவன்', 'கபே',

'லன்ஞ்ச்', ஹோம்' என்று பெயர் வைத்துக் கொண்டு தினம் ஆயிரம், அய்நூறு என்று வியாபாரமாகக் கூடிய காப்பிக் கடைகளில் ஒன்று கூட தமிழனுக்கோ , தமிழ் நாட்டுப் பார்ப்பானுக்கோ இல்லை. பாலக்காட்டான், கன்னடியன், வடக்கத்தியான் ஆகிய இவர்களே பெரிய ஹோட்டல் களின் சொந்தக்காரர்களாயிருந்து மாதந் தவறாமல் ஆயிரம், இரண்டாயிரம் எனறு பாங்கியில் போட்ட வண்ணமாயிருக்கிறார்கள். தமிழ்நாட்டுப் பார்ப் பானுக்குச் சொந்தமாயிருப்பவையெல்லாம் சிறு சிறு வீடுகளில், தம்பிடிக்கு ஒன்று என்று விற்கும் ஆமவடைக் கடை களும், காலணாவுக்கு இரண்டு என விற்கும் இட் டிலிக் கடைகளும் எண்ணெய் பலகாரக் கடைகளுமே யாகும். போதாக்குறைக்கு காப்பிக்கடை வைக்க பம்பாய் மாகாணத்திலிருந்து பார்ஸிகளும் இப்போது இறக்குமதி யாகியிருக்கிறார்கள். 2-ஹோட்டல்கள் பார்ஸிகள் கையில் இருக்கின்றன.

நூற்றுக்கு இருநூற்றைம்பது லாபங்கிடைக்கும் பெருங்காயம், குங்குமப்பூ முதலிய சில்லரை வியாபாரக் கிடங்கு ஒன்று கூட தமிழனிடமில்லை ,

ஜவுளிக்கடைகளை எட்டிப் பாருங்கள், நன்றாக அலங்கரிக்கப்பட்டு, ஓங்கி உயர்ந்த பெரும் ஜவுளிக் கடைகளெல்லாம் வடக்கத்தியான் கையிலிருக்கின்றன, பட்டுப்பட்டாடைகள் விற்பவர்கள் பனியாக்களாகவும், வடக்கத்தி ஷேட்மார்களாகவுமிருக்கின்றார்களேயன்றி தமிழர் முகத்தை மருந்துக்குப் பார்ப்பதைப் போல் பார்க்க வேண்டியதிருக்கிறது, சந்து பொந்துக்களில் துண்டு வேட்டி விற்கும் அண்ணாத்தைகளும் திரை போட்டுத் துணிவிற்கும் தம்பிமார்களுமே தமிழராயிருக்கிறார்கள்.

கண்ணாடிச் சாமான் விற்கும் கடைகளைல்லாம் வடக் கத்தி சாயபுவர்களாக இருக்கிறார்களேயன்றி, திருஷ்டிப் பரிகாரத்துக்காக தமிழன் கடை ஒன்று கூட இல்லை.

சைக்கிள் ஏஜண்டுகளாயிருக்கும் பெரிய வியாபாரி களில் பாதிக்கு மேல் தமிழ்நாட்டவரல்லாதார்.

பாங்கிகளுக்கும் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளுக்கும் போங்கள். எத்தனை உண்மைத் தமிழர் கையிலிருக் கின்றன -  தமிழர்களுடையவையாயிருக்கின்றன என்று ஊன்றிப்பாருங்க. அவைகளுக்குண்டாகும் லாபம் என்ன வென்று அறிக்கையை வாங்கிப்பாருங்கள். தமிழனாய்ப் பிறந்தவன் அந்த இடத்திலேயே நாக்கைப் பிடிங்கிக் கொள்ள எத்தனிப்பான்.

மண்டையில் பெரும் பெரும் சேலைத் துணியைச் சுற்றிக் கொண்டு சப்பாளம் போட்டு உட்கார்ந்து கொண்டு ரூபாய்க்கு அரை அணா, ஓரணா, ரெண்டணா என்று வட்டி வாங்கிக் கொழுக்கும் மார்வாடி கடைகள் நூற்றுக்கு நூறும் அந்த மூட்டைப்பூச்சிகளுடையவைகளல்லவா?

போதாக்குறைக்குத் தங்க சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு முதலிய ஜார்ஜ் டவுன் வட்டாரத்தில் மார்வாரிகளின் நிர்வாகத்தில் அநேக மளிகைக் கடைகள் பெருகி விட்டன.

சென்னை நகரிலுள்ள வெற்றிலை பாக்குக் கடைகளில் முக்கால் பகுதி மலையாளத்தார்களுடையவை.

இன்னும் என்ன வேண்டும்? மேஜை நாற்காலி விற் போர் வட நாட்டார், காகிதம் விற்கும் பெரும் ஏஜண்டுகள் வடநாட்டார். இப்படியே ஒவ்வொன்றிலும் சென்னை நகரின் பொருளாதாரம் பூராவும் அன்னியர்கள் இரும்புப் பெட்டியில் தங்கி நிற்கிறது. தமிழன் ரிக்ஷா இழுக்கிறான், மோட்டார் ஓட்டுகிறான். டிராம் வண்டி செலுத்துகிறான், வடநாட்டாரின் வர்த்தக ஸ்தலங்களில் காவல் வேலை, எடுபிடி. வேலை பார்க்கிறான்; தெருவில் பெருங்காயம் விற்கிறான். பழைய பேப்பர் வாங்குகிறான். தலையில் பழஞ்சுமந்து விற்கிறான்; மற்றுஞ்சில சில்லறை வியாபார மும் கவுரவமாகவும் செய்கிறான். அவ்வளவு தான். சர்க்கார் கூலி மண்டபத்தில் நான் பிராமணன்' 'நீ சூத்திரன்' என்கின்ற கூச்சல். சென்னையின் அலங்கோலம் இப்படி. நாட்டுப் புறங்களிலும் மார்வாடிக் கடைகள், சப்பாத்திக் கள்ளிகளைப்போல் படர்ந்துவிட்டன.

தமிழ்க் கொடி தலை தூக்கியது

தமிழ்நாடு உறிஞ்சி உண்ணப்படும் வழியைப் பார்த்தீர் களா? நல்லவேளையாக தோழர் ஆச்சாரி இந்தியை நுழைத்தார். தமிழர் விழித்துக்கொண்டனர். தமிழ்நாடு தமிழனுக்கே' என்று கொடி தூக்கவும் கிளம்பி விட்டனர். இனி வடநாட்டான் பிழைக்கவந்த வடக்கத்தியான், மேற் கத்தியான் அத்தனை பேரும் தமிழர் கிளர்ச்சிக்குக் குறுக்கே வராதிருப்பதுதான் மரியாதை, மாறுபட்டு நடந் தால் தமிழனுக்குவழிகாட்ட ஜெர்மனி நாடு இருப்பதை உணரவேண்டும்.

கடைசியாக தமிழனுக்கு ஒரு வேண்டுகோள். தமிழ்நாடு தமிழருக்கே'. இந்த உணர்ச்சி ஒவ்வொரு தமிழனுக்கும் இருந்தால் போதும்.

- விடுதலை: 15.10.1938

- விடுதலை நாளேடு 4 12 19

திங்கள், 2 டிசம்பர், 2019

பெரியார் பேசுகிறார் !: பார்ப்பனர்களின் ஆயுதம்

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இப்போது நடக்கிற போராட்டம் தேவ-அசுரப் போராட்டம்தான். வேதப்படி, சாஸ்திரப்படி, புராணப்படி, அகராதிப்படி பார்த்தாலும் இது விளங்கும். அசுரர்கள் என்றால் நாம்தான். தேவர்கள் என்றால் பார்ப்பனர்கள். இந்த இரண்டு இனத்தாரிடையே நீண்ட காலப் போர் அதாவது, இராமாயண காலம் முதல் இந்த ஆச்சாரியார் காலம்வரை நடந்து கொண்டுதான் வருகிறது. இராவணன், இரணியன், சூரன், சூரபத்மன் எல்லாரும் ஒழிந்ததற்கு மூலகாரணம் தேவ - அசுரப் போராட்டம்தான். தேவர்கள் என்றால் மேலான சக்தியுள்ளவர்கள் கடவுள்கள். - தேவர்கள் என்றால், பார்ப்பான் என்று பொருள். பார்ப்பானும், கடவுளும் ஒன்று. அசுரர்களை அழிக்க அடிக்கடி அவதாரம் எடுத்து  வந்துள்ளார், மகாவிஷ்ணு என்னும் கடவுள். எதற்காக வந்தார் என்றால், அசுரர்களாகிய தமிழர்கள், தேவர்களாகிய பார்ப்பனரை நாட்டை விட்டு விரட்டியதற்குத் தமிழர்களை ஒழித்துக் கட்ட மகா விஷ்ணுவே அவதாரம் எடுத்து வந்து, தமிழனுடைய தலையைச் சீவி அழித்தார். அந்த மகாவிஷ்ணு அவதாரம்தான் இராமன், கிருஷ்ணன், எல்லாம்!

அந்த இராமனும், கிருஷ்ணனும் நான்தான் என்கிறார் இராஜாஜி! மிகத் துணிவோடு, மனுதருமம் நிலைக்கவேண்டும் என்று சொல்லுகிறார். அவருக்கு ஆதரவாக மதச் சம்பந்தமான சங்கங்கள், ஜாதி சம்பந்தமான கட்சிகள் இருக்கின்றன. மேலும், நம்முடைய மக்களுக்கு உழைக்கும்படியான கட்சிகள் என்று சொல்லப்படுவது எல்லாம் பார்ப்பானுடைய நன்மைக்கே உழைக்கின்றன. இவற்றை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு தைரியமாகச் சொல்லுகிறார், இராஜாஜி தான் வேதகால இராமன்; மனுதர்மத்தை இந்த நாட்டில் நிலைக்கச் செய்வதே தன் கடமை என்று! அவருடைய ஜாதிக்காரர்கள் அவருடைய முயற்சிக்குக் கட்டுப்பாட்டுடன் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அங்குப்போனால் ஏதாவது கிடைக்காதா என்று பொறுக்கித் தின்பதே புத்தியாகக் கொண்டு நம்மவனும் ஓடுகிறான் என்றால், நம் மக்களுக்கு என்று உழைக்க யார் இருக்கிறார்கள்?

இராமாயணக் காலத்தை மனதில் வைத்துப் பார்த்தால் இப்போதுள்ள நிலைமை தெள்ளென விளங்கும். அந்தப் பக்கம் ராஜாஜி; இந்தப் பக்கம் திராவிடர் கழகம் இராமசாமி. அவர் எங்கு போனாலும் போகிற பக்கமெல்லாம், என்னை நினைத்துக் கொண்டே பேசுகிறார். நானும் அதைப் பற்றித்தான் பேசுகிறேன். என்னுடைய கருத்து, நம்முடைய மக்கள் எல்லோரும் மனிதத் தன்மையாக ஆக வேண்டும் என்பது. ராஜாஜி அவர்களுடைய கருத்து, மனுதரும முறைப்படி ஆட்சியை ஆக்கவேண்டும் என்பது. இதைப் பார்த்தால் புரியாதா, ராஜாஜி அவர்கள் யாருக்காக இருக்கிறார், யாருக்காகப் பாடுபடுகிறார், யாருடைய முன்னேற்றத்தை விரும்புகிறார் என்பது?

நம்முடைய மக்கள் சமுதாயத் துறையிலும், அறிவுத் துறையிலும் மட்டுமல்லாது, மதத் துறையிலும், கடவுள் துறையிலும் மனிதத் தன்மை பெறவேண்டும். இந்த சி.ஆர். (ராஜாஜி) மட்டுமல்ல, பெரிய பெரிய மனிதர்கள், அறிவாளிகள், மகான்கள், மகாத்மாக்கள், இன்னும் அவர்களைவிடப் பெரிய தெய்வீக சக்தி படைத்தவர்கள் என்று கூறப்படுபவர்கள் ஆக யாராய் இருந்தாலும், அவர்கள் எல்லோரும் இந்தப் பார்ப்பானுக்குப் பாடுபட்டவர்கள் அல்லது பாடுபடுபவர்கள் ஆகத்தான் இருப்பார்கள் - இருந்து வந்திருக்கிறார்கள். என்னுடைய   காலத்திற்கு முன்னால் யாரும் முட்டாள்தனம் ஒழியவேண்டும், அடிமைத்தன்மை ஒழிய வேண்டும், கடவுள் ஒழியவேண்டும், ஜாதி ஒழியவேண்டும், பார்ப்பான் ஒழியவேண்டும் என்று சொல்லவில்லை. இன்னும் அரசியல்மூலம் பார்ப்பானுக்கு அடிமையாக இருக்க ஆசைப்படுகிறானே தவிர, மான உணர்ச்சிக்குப் பாடுபடுபவன் யார்? எவ்வளவு பெரிய படிப்பாளியாக இருந்தாலும், பார்ப்பானுக்குப் பயந்து கொண்டு இருக்கிறானே தவிர, துணிந்து காரியம் செய்யவில்லையே? மேலும் நம் நாட்டில் படித்தவன், மேல் படிப்புக்காரன், புலவன் என்று இருக்கின்றனர் என்றால், அவர்களால் நமக்கு - நம் சமுதாய மக்களுக்கு என்ன நன்மை? அவனவன் பிழைப்புக்காகப் படித்திருக்கிறானே தவிர, ஊருக்கு உழைக்கவேண்டும் என்று எவன் படித்திருக்கிறான்? நான் தெரிந்தவரையில் நண்பர் இராஜாஜி அவர்கள் மனுவாகவே விளங்குகிறார்! வருணாச்சிரம முறையை இந்த நாட்டில் ஏற்படுத்தி தன்னுடைய இனம் வாழ வேண்டும் என்பதற்காகவே பாடுபட்டுக் கொண்டு வருகிறார். அதன் காரணமாகத்தான் நாங்கள் இரண்டு பேரும் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒட்ட முடியவில்லை! அவர் இனத்தைக் காப்பாற்ற அவருக்கு இருக்கும் கடமையைப்போல், நம்  இனத்தைக் காப்பாற்ற வேண்டுமென்ற கடமை நமக்கும் இருக்கிறது.  ஆனால், எடுத்தக் காரியத்தை முடித்துக் கொள்ளும் தன்மைக்கு மானத்தைப் பற்றிக் கவலைப்படவேண்டாம் என்ற ஓர் ஆயுதம் அவர்களிடம் இருக்கிறது. நமக்கு மானத்தைப்பற்றி கவலை இருப்பதால் நமக்கு வெற்றி தோன்றுவது கஷ்டம்தான். மானம், ஈனம் என்பதைப்பற்றி கவலைப்படாததற்குக் காரணம் அவர்களுடைய கடவுள்களும் அதன் தருமமும் ஆகும்.

(08.02.1961 அன்று ஈரோட்டில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு)

- விடுதலை, 16.01.1961

- உண்மை இதழ் 16- 31 .3 .19

பெரியார் பேசுகிறார்... : பெண்ணுரிமைப் பற்றி பெரியாரின் சிந்தனைகள்

உலக மகளிர் நாள் மார்ச் 8

தந்தை பெரியார்

மனிதன் பெண்களைத் தனக்குரிய ஒரு சொத்தாகக் கருதுகிறானேயொழிய தன்னைப் போன்ற உணர்ச்சிக்கு அருகதையுள்ள ஓர் உயிர் என்று மதிப்பதில்லை.

(‘குடிஅரசு’ - 3.11.1929)

பெண்களைப் படிக்கக்கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்தினார்கள்? அவர்களுக்கு அறிவு இல்லை, ஆற்றல் இல்லை என்று சொல்லிச் சுதந்திரம் கொடாமல் அடிமையாக்குவதற்கா.

(‘குடிஅரசு’ - 16.11.1930)

பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது மேல்ஜாதிக்காரன் கீழ்ஜாதிக்காரனை நடத்துவதைவிட, ஆண்டான் அடிமையை நடத்துவதைவிட மோசமானதாகும்.

அவர்கள் எல்லாம் இருவருக்கும் சம்பந்தமேற்படும் சமயங்களில் மாத்திரம்தான் தாழ்மையாய் நடத்துகிறார்கள். ஆனால் ஆண்களோ பெண்களைப் பிறவிமுதல் சாவு வரை அடிமையாகவும் கொடுமையாகவும் நடத்துகிறார்கள்.

(‘குடிஅரசு’ - 8.2.1931)

பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சிபெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகின்றது.

(‘குடிஅரசு’ - 16.6.1935)

ஒவ்வொரு பெண்ணும் தானும் ஏதாவது சம்பாதிக்கும் தகுதிபெறத் தக்கபடி ஒரு தொழில் கற்றிருக்க வேண்டும். குறைந்தது தன் வயிற்றுக்குப் போதுமான அளவாவது சம்பாதிக்கத் தகுந்த திறமை இருந்தால் எந்தக் கணவனும் அடிமையாய் நடத்தமாட்டான்.

(‘விடுதலை’ - 24.6.1940)

ஓர் ஆணுக்கு ஒரு சமையல்காரி-ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி-ஓர் ஆணின் குடும்பப் பெருக்கிற்கு ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணை-ஓர் ஆணின் கண் அழகிற்கு ஓர் அழகிய அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள், பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

(‘குடிஅரசு’ - 21.7.1946)

சாதாரணமாக, ஆரம்ப ஆசிரியர்கள் என்ற பெயரையே யாருக்கு உபயோகப்படுத்தலா மென்றால் முதலில் நமது பெண் மக்களுக்குத்தான் உபயோகப்படுத்தலாம். ஏனெனில், நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள் அவர்களுடைய தாய்மார்களே. அக் குழந்தைகளுக்கு 6. 7 வயதுவரையில் தாய்மார்களேதான் ஆசிரியர்களாக இருக்கிறார்கள்.

                                (‘குடிஅரசு’ - 1.5.1927)

பெண்களுக்குப் பகுத்தறிவுக் கல்வியும், உலக நடப்புக் கல்வியும், தாராளமாகக் கொடுத்து, மூடநம்பிக்கை, பயம் ஆகியவற்றை ஊட்டக்கூடிய கதைகளையோ, சாத்திரங்களையோ, இலக்கியங்களையோ, காணவும் கேட்கவும் சிறிதும் இடமில்லாமல் செய்யவேண்டும்.              

                                (‘விடுதலை’ - 22.3.1943)

பெண்ணடிமை என்பதற்குள்ள காரணங்கள் பலவற்றுள்ளும் சொத்துரிமை இல்லாதது ஒன்றே மிகவும் முக்கியமானதாகும்.

(பெரியார் சிந்தனை மி: 170)

பெண்களுக்குத்தான் கற்பு; ஆண்களுக்கு வலியுறுத்தக் கூடாது என்கின்ற தத்துவமே தனிஉடைமைத் தத்துவத்தைப் பொறுத்தது. ஏன் என்றால், பெண் ஆணுடைய சொத்து என்பதுதான் இன்றைய மனைவி என்பவளின் நிலைமை.

                                (‘குடிஅரசு’ - 1.3.1936)

-  உண்மை இதழ், 1-15.3.19

சனி, 30 நவம்பர், 2019

பெரியார் பேசுகிறார் : பிரச்சாரமும் விளம்பரமும்

தந்தை பெரியார்

ஒருவனைப் பார்த்து, “நீ ஏன் சூத்திரன், கீழ்ஜாதி, நாலாஞ்ஜாதி’’ என்று கேட்டால் அதற்கு அவன் என்ன பதில் சொல்கிறானென்றால், மதப்படி _ சாஸ்திரப்படி, கடவுள் அமைப்புப்படி என்கின்றான். நீ ஏண்டா பார்ப்பான் உயர்ந்த ஜாதி என்றால், அதற்கு அவன் மதப்படி, சாஸ்திரப்படி கடவுள் அமைப்புப்படி என்றுதான் பதில் சொல்லுகின்றான். அது போலத்தான் பணக்காரனும் கடவுள் கடாட்சத்தால்தான் பணக்காரனாக இருக்கிறேன் என்கிறான். நாள் பூராவும் உழைக்கின்ற நீ ஏண்டா ஏழையாக இருக்கிறாய் என்றால் அது கடவுள் செயல், கடவுள் கஷ்டப்படுவதற்காக என்னை அப்படிப் படைத்துவிட்டார் என்கிறான். இப்படிச் சமுதாயத்தில் உள்ள குறைகளுக்குக் காரணமாக இருப்பது நம் மதம், சாஸ்திரம், கடவுள் இவையே. நம் மக்களின் இழிவிற்கும், பேதத்திற்கும், கவலைக்கும், மானமற்ற தன்மைக்கும் காரணமாக இருப்பதால், இவற்றை ஒழித்தால்தான் நமது சமுதாயமானது அறிவு பெற்று நல்வாழ்வு வாழமுடியும் என்பதால் இவற்றை எல்லாம் ஒழிக்க வேண்டியது அவசியமாகிறது.

40 ஆண்டுகளாக இவற்றை ஒழிக்கப் பாடுபட்டும் முடியவில்லை என்றால், அதற்குக் காரணம், நம்மைவிட நம் எதிரிகளிடம் பத்திரிகை பலமும், பணமும், பிரச்சார பலமும் நிறைய இருக்கின்றன. சாதாரண அனாமதேயங்களை எல்லாம் பிரச்சாரத்தின் பலத்தாலும் பெரிய மகானாக்கிக் காட்டுகிறார்கள். நம் மக்களுக்குப் போதிய அறிவில்லாத காரணத்தால் அதனை நம்புகின்றனர். நம் பிரச்சாரத்தால் மக்கள் சிறிதளவு அறிவு பெறுகின்றனர். என்றால், அதைவிடப் பல மடங்கு பிரச்சாரத்தாலும், விளம்பரத்தாலும் மக்கள் தங்கள் சிந்தனாசக்தியையும், அறிவையும் இழக்கின்றனர். பத்திரிகைகள் யாவும் கட்டுப்பாடாக மூடநம்பிக்கை _ முட்டாள் தனமான பிரச்சாரங்களையே கருதி விளம்பரம் செய்து வருகின்றன. நம்மிடமும் ஒரு கோடி ரூபாயிருந்து, ஒரு 100, 150 பத்திரிகைகள் இருந்து, 500 பிரச்சாரகர்கள் இருந்தால் அறிவுத்துறையில் கழுதையைக்கூட மகானாக்கிவிட முடியும். விளம்பரத்தால் சாதித்து விட முடியும்.

நம் நாட்டின் பெரிய கேடு _ இதுவரை அறிவுத்துறையில் மக்களைத் திருப்ப ஒருவர் கூட தோன்றாததேயாகும். ஓரிருவர் தோன்றியிருந்தாலும் கூட அவர்களும், அவர்களின் கருத்துகளும் மறைக்கப்பட்டு விட்டன. 2000 ஆண்டுகளுக்கு முன் புத்தர் தோன்றினார். அதன்பின் அறிவுப் பிரச்சாரத்திற்கு ஆளே இல்லாமல் போனதோடு, மக்களிடம் மடமையை வளர்க்கும் பிரச்சாரங்களும், சாதனங்களும் மிக அதிகமாகி மக்களை அறிவற்ற மடையர்களாக்கி விட்டன. ரஷ்யாவிலே அவர் தோன்றினார், துருக்கியிலே அவர் தோன்றினார், லண்டனிலே ஒருவர் தோன்றினார், அமெரிக்காவிலே ஒருவர் தோன்றினார் என்றெல்லாம் சொல்கிறார்கள். அதுபோல ஓர் ஆள் _ அறிவில் சிறந்த ஓர் _ ஆள் நம் நாட்டில் தோன்றினார் என்று சொல்ல முடியாதே!

நம் நாடு புண்ணிய பூமி, ஜீவபூமி என்றெல்லாம் அழைக்கப்பட்டாலும், நம் நாட்டில் பெரிய மகான்கள், மகாத்மாக்கள், ரிஷிகள், தெய்வசக்தி பொருந்தியவர்கள், கடவுள் அருள்பெற்றவர்கள், என்றெல்லாம் தோன்றினாலும் கூட, இவர்கள் அனைவருமே மக்களின் முட்டாள்தனம், மூடநம்பிக்கை, அறிவற்ற தன்மை ஆகியவற்றை வளர்க்கவே பாடுபட்டார்களே ஒழிய, ஒருவர்கூட மக்கள் அறிவைப் பற்றியோ, இழிவைப் பற்றியோ, மானமற்ற தன்மை பற்றியோ சிறிதும் சிந்தித்தவர்கள் கிடையாது. நம் இலக்கியங்கள், மத நூல்கள் சாஸ்திரங்கள் எல்லாம் மடமையை வளர்க்கத் தக்கனவாக அமைந்தனவே தவிர, அவற்றால் மக்கள் சிந்தனை அறிவு பெற வழியே இல்லாமல் போய் விட்டது என்பதோடு நமக்கிருக்கிற நூல்களில் அறிவிற்கு மாறான, சிந்தனைக்கு மாறான மூடநம்பிக்கைக்கு ஆதாரமான பல ஆதாரங்கள் இருக்கின்றன. ஆகையினாலே நம் மக்கள் அறிவு பெறவோ, சிந்தனை பெறவோ வழியின்றி அந்த ஆதாரங்களை நம்பி மூடநம்பிக்கைக்காரர்களாக, பகுத்தறிவற்ற ஜீவன்களாக வாழ வேண்டியவர்களாகி விட்டார்கள்.

உண்மையாக எவன் பெரியவனோ _ உண்மையாக எவன் மக்களுக்குத் தொண்டு செய்கிறானோ அவனுக்கு மதிப்பில்லாமல் போய், பொதுவாழ்க்கையின் மூலம் எவன் பிழைக்கிறானோ, பொறுக்கித் தின்கின்றானோ அவனுக்குத்தான் மதிப்பும், விளம்பரமும் அதிகமிருக்கிறது என்பதோடு, தங்கள் இனத்திற்கு ஆதரவாக இருக்கிற அனாமதேயங்களை எல்லாம் பார்ப்பான் பார்த்து மகான் என்கிறான், ரிஷி என்கிறான், மகாத்மா என்கிறான். பத்திரிகைகளும் அதற்கு ஆதரவாக இருந்து விளம்பரப்படுத்துகின்றன. தற்போது பத்திரிகைகள் யாவும் பார்ப்பானிடமும், பணக்காரனிடமும், பார்ப்பானின் அடிமைகளிடமும், சிக்கிவிட்டதால், புரட்டு _ பித்தலாட்டங்கள் மூலம் மனிதனை மடையர்கள் ஆக்கவே முயற்சிக்கின்றன; பாடுபடுகின்றன. அவற்றிற்கு முட்டாள்களுடைய  மூடநம்பிக்கைக் காரர்களுடைய ஆதரவு அதிகமிருப்பதால், அவைதாம் அதிகம் விற்பனையாகின்றன. பாமர மக்களிடையே பரவுகின்றன. மனிதன் அறிவையும், சிந்தனையையும் வளர்க்கக் கூடிய பத்திரிகைகள் ஒன்றிரண்டு இருக்கின்றன என்றாலும், மக்கள் அவற்றை விரும்புவது இல்லை, வாங்கிப் படிப்பதும் கிடையாது. எனவே, மக்களுக்கு உண்மையான அறிவு வளர்வதற்கு இடமில்லாமல் போய் விட்டதோடு, மூடநம்பிக்கை _ முட்டாள் தனமான கருத்துக்களுக்குத்தான் மக்களிடம் செல்வாக்கு அதிகமாகி விட்டது.

மக்களுக்கு அறிவைப் புகுத்த முதலில் அவர்களிடம் இருக்கும் மடமையை அகற்ற வேண்டும். அந்த மடமைக்கு அஸ்திவாரமாக இருக்கும் முட்டாள்தனத்திற்கும், மூடநம்பிக்கைக்கும் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையை ஒழித்து, முதலில் அவர்கள் மூளையில் படிந்திருக்கும் மடமையினை ஒழித்தாக வேண்டும். பிறகுதான் அறிவைச் செலுத்த முடியும். அவர்களைச் சிந்திக்கத் தூண்டமுடியும் என்பதால்தான், முதலில் கடவுளை ஒழிக்க வேண்டுமென்று சொல்கிறோம்.

9.6.1968 அன்று புதுவையில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு

- ‘விடுதலை’ - 24.6.1968

- உண்மை இதழ், 1-15.10.19

வெள்ளி, 29 நவம்பர், 2019

அயோக்கியத்தனம் எது?

28.10.1944  - குடிஅரசிலிருந்து....

நன்றாய் கொழுக்கட்டை போலும், மணலில் பிடுங்கிய கிழங்கு போலும் இருந்துகொண்டு, அய்யா, மூன்று நாளாக கஞ்சியே காணவில்லை; காலணா தருமம் கொடுங்கோ என்று கேட்பது அயோக்கியத்தனம். ஆனால், அது போலவே இருந்துகொண்டு யாதொரு விதமான பாடும் படாமல் தன் பெரியோர்கள் சம்பாதித்து வைத்துவிட்டுப் போனார்கள் என்றோ, பரம்பரை சொத்து பத்தியத்தில் கிடைத்தது என்றோ பெரும் செல்வத்தைவைத்துக் கொண்டு சுகபோகமாய் இருப்பதாக கருதிக் கொண்டு சோம்பேறியாய் இருந்து வாழ்ந்து கொண்டு இருப்பது அதைவிட அயோக்கியத்தனம்.

பிந்தியவன் பாடுபடாமல் ஏராளமான சொத்தை வைத்துக்கொண்டு அனுபவித்துக் கொண்டு இருக்கும் போது, முந்தியவன் பாடுபடாமல் பிச்சை கேட்பதில் தப்பு என்ன இருக்கிறது?

தொல்லை எது?

பிச்சைக்காரன் பிச்சை கேட்பது பெரும் தொல்லையாகவும், மனதிற்குச் சங்கடமாகவும் இருக்கிறது. அதுபோலவேதான் பணக்காரன் (தனது தேவைக்கு மேல் வைத்திருப்பவன்) பணத்தை வைத்துக்கொண்டு கோவில், மடம்  கட்டிக்கொண்டு கும்பாபிஷேகம், உற்சவம், பிராமண சமார்த்தனை முதலிய செய்துகொண்டு இருப்பதும் பெரும் தொல்லையாகவும் மன திற்குச் சங்கடமாகவும் நாட்டுக்குக் கேடாகவும் இருக்கிறது.

கடவுள்

பணக்காரனுக்குப் பணம் கடவுள் கொடுத்தார்; ஏழைக்குத் தரித்திரம் கடவுள் கொடுத்தார். அப்படி இருக்க இது இரண்டையும் சமமாக்க வேண்டும் என்று சொல்லுகிறவன் நாஸ்திகனாகத்தானே இருக்க முடியும்? அல்லது அவன் நாஸ்திகனாக இருந்தால்தானே கடவுள் செயலுக்கு விரோதமாக சமமாக்க முடியும்? ஆதலால் மக்களை எல்லாம் நாஸ்திகர்களாக ஆக்கிவிட்டால் பணக்காரனும் தரித்திரனும் தானாகவே மறைந்து போவார்களா - மாட் டார்களா?

- விடுதலை நாளேடு 29 11 19

பகுத்தறிவு திருமணம்

22.07.1944  - குடிஅரசிலிருந்து...

தோழர்களே! இப்போது நடைபெறும் திருமணத்தில் நாம் ஒன்றும் பெரிய மாறுதலைக் காணவில்லை. தலைகீழாக ஒன்றும் நடைபெறப் போவதில்லை. ஒரு சிறிய மாறுதல் மட்டும் உண்டு. மாறுதல்கள் இயற்கையாகவே பல இனங்களாலே, பல இடங்களிலே இன்று கையாளப் பட்டுத் தான் வருகிறது.

இங்கே நாம் என்ன மாறுதலைக் காண்கிறோம்? சடங்கில்லை. வேறு இனத்தவன் எவனும் மணத்தை நடத்துவ தில்லை. சுயமரியாதைக்கும், பகுத்தறிவிற்கும், இயற்கைக்கும் பொருந்திய மணம் வேண்டுகிறோம். அப்படிப்பட்ட இந்தத் திருமணத்தை நாஸ்திகத் திருமணம் என்று பலர் சொல்லக்கூடும். மற்றும் நமது தாய்மார்கள் கலிகாலம் அய்யர் இல்லை யென்றாலும், அம்மியாவது இருக்கக் கூடாதா? நெருப்பாவது (ஓமம்) இருக்கக் கூடாதா? விளக்காவது இருக்கக் கூடாதா? என்றெல்லாம் சொல்லு வார்கள். நமக்குப் பார்ப்பனர் மீதோ, அம்மி மீதோ, நெருப்பின் மீதோ, குத்து விளக்கின் மீதோ, தனிப்பட்ட வெறுப்பு ஒன்றுமில்லை. நெருப்பு அடுப்பில் இருக்க வேண்டியதுதான். அம்மி அரைக் கப் பயன்படட்டும். இரவில் விளக்கு இருக்கட்டும். ஒவ்வொன்றும் பயன்பட வேண்டிய இடத்தில் இருக்கட்டும். பகுத் தறிவிற்கும், நம் தன்மானத்திற்கும் முரண்பட்ட எதையும் நீக்க வேண்டும் என்றுதான் சொல்லுகிறோம்.

ஒவ்வொன்றிற்கும் ஏன் என்ற கேள் வியைப் போட்டு ஆராய்ச்சி நடத்தும் காலம் இது. மனிதருக்கு எவ்வளவு தூரம் பயன்படுகின்றது என்பதைப் பொறுத்துத் தான் ஒரு பொருளுக்கு மதிப்பு வருகின்றது. இதற்காகத்தான் நாம் உழைக்கிறோம். இந்தத் திருமணத்தின் முதல் வெற்றி, பார்ப்பனன் இல்லாதது. ஆதலால் இதை சுயமரியாதைத் திருமணம் என அழைக் கிறோம். தான்தான் உயர்ந்த ஜாதி என்ற ஆணவங் கொண்டு, நம்மைத் தொடாதே, கூட உட்கார்ந்து சாப்பிடாதே என்று சொல்லும் ஒருவனை மணையில் உட்கார வைத்து காரியம் நடத்தினால் தமிழனுக்கு மானமுண்டு என்று சொல்ல முடியுமா?

இரண்டாவது வெற்றி என்னவென் றால், இது பகுத்தறிவுத் திருமணம். பகுத் தறிவு என்று சொல்லுவதும் மாறி மாறி வருவதாகும். இன்று நாம் எவைகளை அறிவுக்குப் பொருத்தமானவை என எண் ணுகிறோமோ, அவை நாளைக்கு மூடப் பழக்கவழக்கங்கள் என தள்ளப்படும். நாம்கூட பல பொருள்களை ஏன் மகான்கள் என்று புகழப்படுபவர்கள் சொன்னவற் றையே, பழைய கருத்துக் களெனத் தள்ளி விடவில்லையா? அது போலத்தான், நமது பின்னோர்கள் என்னைக் குறித்துக்கூட ஓர் காலத்தில் இராமசாமி என்ற மூடக்கொள் கைக்காரன் இருந்தான் என்று சொல்லு வார்கள். அது இயற்கை; மாற்றத்தின் அறிகுறி; காலத் தின் சின்னம். எனவே பழைய காலத்தைச் சேர்ந்தவை என்பதற்காக நாம் குறை கூறவில்லை. அவர்கள் காலத் துக்கு அவர்கள் செய்தது சரி என்பதா னாலும், அப்போது அவ்வளவுதான் முடிந் தது என்பதானாலும், இன்று மாறித்தான் ஆகவேண்டும், சக்கிமுக்கிக் கல்லினால் முதலில் நெருப்பை உண்டாக்கியவன் அந்தக் காலத்து எடிசன் அப்புறம் படிப் படியாக முன்னேற்றமாகி இப்போது மின்சாரத்தில் நெருப்பைக் காண்கிறோம். எனவே மாற்றம் இயற்கையானது அதைத் தடுக்க யாராலும் முடியாது. எத்தகைய வைதிகமும் மாற்றத்திற்குள்ளாகித்தான் தீரவேண்டும். இப்போது நாம் எவ்வளவு மாறியிருக்கிறோம்? அய்ம்பது வருடங் களுக்கு முன்பிருந்ததைவிட கடவுளைப் பற்றி எண்ணம் தெய்வீக சக்தி படைத் தவர்கள், பெரிய மனிதர்கள் என்பவர் களைப் பற்றிய எண்ணம், வீடுவாசல், உடை, உணவு, தெருக்கள், வண்டி, குடுமி வைத்தல் ஆகிய எவ்வளவோ எண் ணங்களில் பொருள்களில் பெரிய மாற்றத் தைக் காண் கிறோம். பெண்களின் புடவை, இரவிக்கை, நகைகள், புருஷன், பெண் ஜாதி முறை ஆகியவற்றில் ஏற்பட்ட மாறுதல்களைப் பாருங்கள்.

அடுத்தபடியாக, இங்கு பொருட் செலவு அதிகமில்லை, நேரமும் பாழாவ தில்லை. முன்பெல்லாம் பல நாட்கள் திருமணம் நடைபெற்றது. இப்போது பார்ப்பனர்கள் கூட டிநே னயல டிடேல அதாவது ஒரு நாள் திருமணம் என்பதாக அழைப்பிலேயே குறிப்பிடுகிறார்கள்.

மற்றும், இந்தத் திருமணத்தில் ஆணுக் கும், பெண்ணுக்கும் சம உரிமை இருக் கின்றது. ஆரியரின் எட்டுவகைத் திருமண முறைகளில் ஒன்றில்கூட பெண் ஓர் உயி ருள்ள பொருளாகக் கூட மதிக்கப் படுவ தில்லை.

ஒத்த அன்பும், காதலும் ஏற்பட வேண்டுமென விரும்பினால், அந்த முறையில் நாம் மக்களை வளர்ப்பதில்லை. பக்குவம் வந்தவுடன் பெண்ணை அடைக் கிறோம், பெண்களுக்குத் தக்க கல்வி அனுபவம் தருவதில்லை. இப்படிப்பட்ட இப்பெண்களைத் தங்களுக்கு வேண்டிய வைகளைத் தெரிந்தெடுத்துக் கொள்ளும் படி சொன்னால் டிராமா (நாடக) கார னைத்தான் தெரிந்தெடுப்பார்கள். அவர் களுக்குக் குழந்தை வளர்ப்பு முறையைக் கற்றுக் கொடுப்பதில்லை. மேல் நாடுகளில் சிறு குழந்தைகளுக்குக் கூட குசநளா யசை அதாவது நல்ல காற்று முதலியவற்றின் அருமை தெரிகின்றது.

ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் தேர்ந்தெடுக்கும் உரிமை இந்த நாட்டில் அறவே இல்லை. யாரோ தெருவில் போகும் பார்ப்பானைக் கூப்பிட்டு பொருத்தம் பார்க்கச் சொன்னால், அவனுக்கு மண மக்களைப் பற்றி என்ன தெரியும். அண்ணன் தங்கை ஆகிய இருவர் சாதகங்களை கொடுத்தால், ஒரு வருக்கொருவர் கணவன் மனைவி ஆவதற்குப் பொருத்தம் சொல்லு வான். மனிதனுக்கும் நாய்க் குட்டிக்கும்கூட ஜாதகத்தில் பொருத்தம் காணலாம். ஜாதகம் இல்லையென்றால், பெயரைச் சொல்லச் சொல்லிப் பொருத்தம் பார்ப் பான். அதற்கு மேல் பல்லி, கருடன் ஆகிய வைகளின் ஒப்புதல் வேண்டும்.

வாழ்க்கை யையே பிணைக்கக் கூடிய திருமணத்தில், இவ்வளவு பேதமை அநேக நல்ல பொருத்தங்கள் என்பவை பெண் ணின் முதுகுக்கும் கணவனின் கைத் தடிக்கும் ஓயாத பொருத்தமாக முடி கின்றது. வரும் காலத்தில் வாலிபர்களுக்கும் பெண் களுக்கும் உரிமை தரவேண்டும். இல்லை யென்றால் உரிமையுடன் இருக்கப் போகும் அவர்கள் நம் தடை களை விலக்கி முன் னேறுவார்கள். எனவே முதலிலேயே உரி மையளித்து விடுவது நல்லது. தங்களனை வருக்கும் வணக்கம்.

(12.07.1944 அன்று பேரளத்தில்  என்.மகாதேவன் அவர்கள் புதல்விகளுக்கு நடைபெற்ற திருமணத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு)

-  விடுதலை நாளேடு 29 11 19

தேவாரப் பெருமை இதுதானா? -சித்திரபுத்திரன்-

12.08.1944 - குடிஅரசிலிருந்து..

மூன்றாம் திருமுறை திருஞான சம்பந்தர் தேவாரப் பதிகங்களின் திருவாலவாய்ப்பண் - கவுசிகம் என்னும் தலைப்பில், 3ஆம் பாட்டு

மண்ணகத்திலும் வானிலும் எங்குமாம்

திண்ணகத் திருவாலவா யாயருள்

பெண்ணகத்தெழிற் சாக்கியப் பேயமண்

டெண்ணற் கற்பழிக்கத் திருஉள் ளமே

என்பதாகும்.

இதன் கருத்து என்ன?

திருஞானசம்பந்தர் தமிழ்நாட்டில் ஆரி யப் பிரசாரம் செய்வதற்கு முன்பு, தமிழ் நாட்டில் இருந்த மக்கள் யார்? திராவி டர்கள்தானா - அல்லவா?

அந்தத் திராவிட மக்கள்தானே இந்தச் சம் பந்தர் முதலிய பார்ப்பனர்கள் பிரசாரத் தாலும், ஜாலவித்தைகளாலும் பலாத்கார கொடுமைச் செயல்களாலும் சைவர்களாக ஆனார்கள்.

இந்தத் திராவிடர்களின் (பெண்களை) மனைவிகளைத்தானே கற்பழிக்கத்திரு உளமே என்று சம்பந்தர் பாடினது? அல்லது வேறு யாரையாவதா? அல்லது இதற்கு வேறு பொருளா? என்கின்ற விபரத்தைப் பண்டிதர்கள், சைவப் பண்டிதர்கள் அல்லது கிருபானந்த வாரியார், திரு.வி.கலியாண சுந்தர முதலியார் போன்ற சைவ அன்பர்கள் விளக்கினால் கட்டுப்பாடுடையவனாக இருப்பேன்.

-  விடுதலை நாளேடு 29 11 19

வியாழன், 28 நவம்பர், 2019

மக்களினம் மாண்புற வள்ளுவர் தந்த குறள்! - 2

* தந்தை பெரியார்

திராவிடன் அன்றே எதிர்த்தான்!

அன்பர் கலியாண சுந்தரனார் திராவிட நாடு வேறு, ஆரிய நாடு வேறு, திராவிடப் பண்பு வேறு, ஆரியப் பண்பு வேறு என்று இன்று காலை தெரிவித்தது போல், திராவிட நூல் வேறு, ஆரிய நூல் வேறுதான், திராவிடர்கள் எப்போதுமே ஆரியர்களை ஆரிய கலாசாரத்தை வெறுத்தே வந்திருக்கிறார்கள். திராவிட நாட்டை ஆரியர்களின் படையெடுப்பிலிருந்து காப்பாற்றப் பெரிதும் முயற்சி எடுத்திருக்கிறார்கள். இதனுண்மையைக் கந்த புராண ஆரம்பத்தில் காணலாம்.

சிவபெருமானுடைய கல்யாணத்தின் போது தேவர்களும், ரிஷிகளும் வந்து தென்னாடு உயர்ந்து விட்டதென்றும், வடநாடு தாழ்ந்துவிட்டதென்றும் அதற்குப் பரிகாரம் உடனடியாகச் செய்யப்பட வேண்டு மென்றும் விண்ணப்பம் செய்து கொள்கிறார்கள். இதி லிருந்து தென்னாட்டினர் உயர்வு ஆரியர்களால் எவ் வளவு வெறுக்கப்பட்டது என்பது இனிது புலனாகிறது. சிவன் யார் கெட்டிக்காரன் என்று ஆலோசித்துப் பார்த்து அகத்தியனை அனுப்பியிருக்கிறார். பரிகாரம் செய்ய மிகமட்டமான அதாவது சூழ்ச்சியில், தந்திரத்தில், வஞ்சகத்தில் கைதேர்ந்த ஒருவனை அனுப்பி வைக்கிறார். அவன் விந்திய மலையருகில் வரவும் அங்கு காவல் செய்துவந்த வாதாபியும், வில்லவனும் அவனைத் தடுத்து விடுகிறார்கள். இவர்கள் கந்தபுராணத்தில் சித்திரிக்கப் படுகிற சூரனுடைய தங்கச்சியின் மக்கள் ஆவார்கள். இவர்கள் வட நாட்டிலிருந்து யார் வந்தாலும் அவர்களைக் கொன்று தின்று விடுகிறதாகக் கூறப்படுகிறது. அதே மாதிரியே அகத்தியனையும் தின்று விட்டதாகவும் ஆனால், அவனை ஜீரணம் செய்ய முடியவில்லை என்றும், அவனுடைய வயிற்றைக் கிழித்துக் கொண்டு அகத்தியன் வெளிப்பட்டுச் சென்றான் என்றும், சென்று தமிழ் வளர்த்தான் என்றும் காணப்படுகிறது.

மடப்புலவர்களின் மதித்திறமை!

இந்தத் தமிழ்ப் புலவர்களும் ஆராய்ந்தறியாமல் இதையொட்டி 'அகத்தியன் வளர்த்த தமிழ்' என்று புகழ் பாடி விட்டனர். அகத்தியன் இங்கு வந்து பாதிரிகள் போல் தமிழ் கற்று நமது தர்மங்களை. ஒழுக்கங்களை மாற்றி யமைத்து இருக்கக்கூடும். இதற்காக அவனுக்கு நன்றி காட்டும் அவ்வளவு நன்றியுடையவர்கள் நமது மடப் புலவர்கள். 'நாய் நன்றி காட்டுவதெல்லாம் அன்னியனிடத் துத்தான்' என்பதுபோல், பழங்கால இப்பண்டிதர்களும் அன்னிய அகத்தியனுக்கே மரியாதை செய்துவிட்டனர். அந்த அகத்தியன் முடிவில் தமிழ் நாட்டிலிருந்து ராவணனைத் துரத்தி விட்டதாக வேறு காணப்படுகிறது. இதற்கும், ராவணனுடைய தம்பிக்கும், ராமன் பட்டம் வாங்கிக் கொடுப்பதற்கும் ஏதேனும் பொருத்தம் இருக் கிறதா என்பதும் தெரியவில்லை. இக்கதைகள் எல்லாம் அபிதான சிந்தாமணியில் கொடுத்துக் கொடுக்கப்பட்டி ருக்கிறது அவற்றைப் படித்துப் பாருங்கள் தெரியும். ஆரியர் திராவிடம் போராட்டம் எப்போது ஏன் துவங்கியது என்று.

காட்டிக் கொடுக்கும் கயவர்களின் முன்னோன் விபீஷணன். இப்போது எப்படி சில திராவிடர்கள் அறி விழந்து ஆரிய வடவர்களையே தமது அரசியல் தலை வர்கள் என்றுகொண்டு, தாம் பணியாற்றும் வகையில், ஏனைய திராவிடர்களையும் எப்படி அவர்களுக்கு நிரந்தர அடிமைகளாக வைத்திருக்க முயற்சிக்கின்றனரோ அதுபோல், வால்மீகி காலத்திலும் சில திராவிடர்கள் இருந்திருப்பதை நாம் அவரது ராமாயணத்தைப் படிப்பதன் மூலம் நன்கு அறியலாம். வாலி கொல்லப்பட்ட பிறகு விபீஷணனைக் கொண்டு வந்து அனுமார் சேர்க் கிறார். அப்போது சுக்ரீவன் கேட்கிறான், அண்ணனுக்கே துரோகம் செய்யும் இவன் நாளை உனக்கு மட்டும் துரோகம் செய்யமாட்டான் என்று எப்படி நம்புவது என்று - அதற்கு ராமன் என்ன  சொல்லுகிறான் பாருங்கள்.

"என் லட்சியத்திற்கு அதைப்பற்றி யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. ராவணன் தோல்விதானே, அவனது முடிவுதானே எனக்கு வேண்டியது அதற்கு உதவி செய்யத் தகுந்தவன் யாராக இருந்தால், எப்படிப்பட்டவனாயிருந்தால் என்ன? அவனை, நண்பனாக கொள்ள வேண் டியது தானே! மேலும் அவன் எப்படி எனக்குத் துரோகம் செய்ய முடியும்? அவனுக்கு வேண்டுவது அண்ணனுடைய ராஜ்யமன்றோ, அண்ணன் செத்தால்தானே அவனுக்கு ராஜ்யம் வரும். ஆதலால், தனது அண்ணனை ஒழிக்க வழி நமக்குக் கூறி உதவி செய்துதானே தீருவான். இந்த விஷயத்தில் அவன் நமக்குத் துரோகம் செய்ய முடியாதே. அதன் பிறகு என்ன துரோகம் அவனால் நமக்கு செய்ய முடியும். இவனை விட்டால் ராவணனை எனக்குக் காட்டிக் கொடுக்கக் கூடிய வேறு ஆள் ஏது?" என்று சொல்லி விபீஷணனை ஏற்றுக் கொள்கிறான்.

ஆச்சாரியார் ராமநாதர்களை அறிமுகப்படுத்திய முறை

இதே மாதிரிதான், தம்முடைய லட்சியத்தையே குறிக்கோளாகக் கொண்டு இன்றையப் பார்ப்பனர்களும் மானாபிமானம் அற்று தம் கட்சிக்கு ஆள் தேடித் திரி கிறார்கள். நமக்கு எவன் துரோகம் செய்கிறானோ அவன்தான் பார்ப்பனர்க்கு ரொம்பவும் வேண்டியவன். மகாதேசபக்தன். அவர்களுடைய போற் றுதலுக்கு உரியவர்கள். புகழ்பெறுபவர்கள். நம்முடைய துரோகி களின் மூலம்தான், அன்றுதொட்டு இன்றுவரையும் அவர்கள் சுகமாக வாழ்ந்து வருகிறார்கள். இதை, இந்த நாசமாய் போன துரோகம் செய்பவர்கள் உணர்ந்தால் தானே. தோழர்கள் ராமநாதனும் கே. வெங்கடசாமி நாயுடுவும் நமது கட்சியினின்று நீங்கி சென்றபோது, இவர்களைக் காந்தியாருக்கு அறிமுகம் செய்தபோது ராஜகோபாலாச்சாரியார், அன்று அனுமார் ராமனிடம் விபீஷணனை அறிமுகம் செய்து வைத்தது போன்றே செய்தாரே. "ராமநாதன் வந்துவிட்டார். பழையபடி அந்த சரணாகதிக்கு நீங்கள் மனமிரங்கி இடம் அளிக்க வேண்டும். ராமர் எப்படி விபீஷணனுக்கு அபயம் அளித்தாரோ அதேபோன்று இவருக்கும் தாங்கள் அபயம் அளித்தருள வேண்டும்" என்று.

ராவணனை விட்டு விபீஷணன் நீங்கியதற்கும், சுயமரியாதை கட்சியை விட்டு ராமநாதன் நீங்கியதற்கும் ஒப்புதல் காட்டிவிட்டாரே ராஜகோபாலாச்சாரியார். இது போலவே வெங்கிடசாமி நாயுடு விஷயத்திலும் சொன் னார். இந்த ராமாயண சம்பிரதாயந்தானே அன்று முதல் இன்று வரைக்கும் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

கீதையை ஆரியர்கள் போற்றுவதேன்?

நீங்களே சிந்தித்துப் பாருங்கள், பார்ப்பனர்கள் குறளுக்கு எவ்வளவு மரியாதை செய்கிறார்கள். கீதைக்கு எவ்வளவு மரியாதை செய்கிறார்கள். அவர்கள் பகவத் கீதையை அச்சுப் போட்டு இனாமாக வழங்கி வருவதும் அதைப்பற்றிப் பெருமையோடு எங்கும் பேசிவருவதும் உங்களுக்குத் தெரியாததல்லவே! இது ஏன் என்று நீங்கள் சிந்தித்ததுண்டா? கிருஷ்ணன் கீதையின் மூலம் 4 ஜாதிமுறை உண்டென்பதையும், அதில் பார்ப்பனர்களே முதல் ஜாதியினர் என்பதையும் - கடவுளுக்கும் பெரிய வர்கள் பார்ப்பனர்கள் என்ற தத்துவம் இருப்பதோடு, எப்படியும் அதர்மம் செய்தவர்களுக்கு மன்னிப்பு உண்டு, வர்ண அதர்மம் செய்பவர்களுக்கு மன்னிப்பு இல்லை என்று ஒப்புக் கொண்டிருப்பதுதான் அதற்குக் காரணம் என்பதை உணருக! வேதாந்திகளுக்கும், பார்ப்பனர் களுக்கும் கீதையில் 1000 வரி தெரிந்திருப்பது ஏன்? குறளிள் 2 வரி கூடத் தெரியாதது ஏன்? என்பதையும் சிலர் காவி வேட்டி கட்டிக்கொண்டு திராவிடர் கூடக் கீதைப் பிரசாரம் செய்துவருவது ஏன்? என்பதையும் யோசித்துப் பாருங்கள். கீதை எவ்வளவு அக்கிரமத்துக்கும் முக்காடுபோட்டுவிடும் காவி உடையைப் போல் ஏன்? கீதைக்குத் தலைவனான கிருஷ்ணனே அக்கிரமத்தின் தலைவனான காரணத்தால்.

பித்தலாட்ட போர்வை கீதை!

அதற்கு பெரிய நெருப்பு குறள்!

தோழர்களே! நாம் எதிர்க்கும் நான்கு ஜாதிமுறையைக் கடவுளின் பேரால் வலியுறுத்தத்தான் கீதையும் கிருஷ்ண பஜனையும் என்பது உங்களுக்கு நினைவிருக்கட்டும்.

கீதை படிப்பவர்கள் எத்தகைய தர்மத்தையும், ஒழுக் கத்தையும் கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் பகவானே இதைச் செய்துள்ளபோது சாதாரண மனிதனான நான் எம்மாத்திரம் என்றோ, எல்லாம் பகவான் செயல் என்றோ, நான் ஏன் பார்ப்பான் என்பதைக் கிருஷ்ணனிடம் கேட்டுத் தெரிந்துக் கொள் என்றோ சுலபமாகப் பதில் கூறிவிடலாம். ஆனால் குறளைப் படித் தாலோ தர்மத்தின்படி நடக்க வேண்டும். பித்தலாட்டம் செய்ய முடியாது. பித்தலாட்டம் செய்பவரைக் கண்டாலும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.

குறளிலும் இன்றைய நிலைக்குப் புறம்பான கருத் துக்கள் சில இருக்கலாம். அவற்றை மாற்றிவிட வேண்டியது தான். அத்தகைய மாற்றத்திற்கு இடம் தருவதுதான் குறள்.

மனித சமுதாயத்திற்கே வழிகாட்டி குறள்!

குறளை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உட்பட யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். மாமிசம் சாப்பிடுவது மறுக்கப் பட்டிருக்கிறது என்னலாம். காய்கனி தானியம் இவை அபரிமிதமாகக் கிடைக்குமானால், மாமிசம் தின்ன வேண்டிய அவசியம்தான் என்ன இருக்கிறது?

முகம்மது நபியவர்களால் கூறப்பட்டுள்ள பல கருத்துக்களைக் குறளில் அப்படியே காணலாம். முஸ்லிம்களுக்கு எதிராக அதில் ஒன்றுமே காணமுடியாது. அது மனுதர்மத்துக்கு உண்மையான விரோதி நூல் என்று திடமாகவே சொல்லலாம். மனுதர்ம சூத்திரங்களுக்கு நேர்மாறான கருத்துக்களைக் கொண்ட குறள் அடிகளை ஏராளமாகத் திருக்குறளிலிருந்து எடுத்துக்காட்டலாம்.

மனித சமுதாயத்திற்கே நல்வழிகாட்டி, நன்னெறியூட்டி, நற்பண்புகளையும் ஒழுக்கங்களையும் கற்பிக்கும் வகையில் எழுதப்பட்ட நூல்தான் திருக்குறள். எனவே தான், எல்லா மக்களும் எல்லா மதத்தவரும் எங்கள் குறள், எங்கள் மதக்கருத்தை ஒப்புக் கொள்ளும் குறள் என்றெல்லாம் அதைப் போற்றி வருகிறார்கள்.

எனவேதான், அதன் ஆசிரியரைக் கூட சில மதத்தினர் தம்மவர் என்று உரிமைப் பாராட்டிக் கொள்கிறார்கள். ஜைனர் தம்மவர் என்று கூறி அவரை மொட்டைத் தலையராகக் காட்டுகிறார்கள். சைவர்கள் அவரை தம்மவர் என்று கூறி ஜடாமுடியுடன் விபூதிப் பட்டையுடன் காட்டுகிறார்கள். அவரோ எம்மதமும் இல்லாதவராகவே தோற்றுகிறார். ஒரு இடத்தில் "மயிரும் வைத்துக்கொள்ள வேண்டியதில்லை. மொட்டையும் அடித்துக்கொள்ள வேண்டியதில்லை. யோக்கியனாய் இருக்க வேண்டுமானால்" என்று கூறியிருக்கிறார். அப்படியான பெரியாரை வைணவர்கள் தம்மவர்தான் என்று கூறிக்கொண்டு வடகலை நாமம் போட்டுக் காட்டுகிறார்கள். அவரை ஆழ்வாரில் ஒருவராகவும் ஆக்கிவிடுகிறார்கள். அவருக்கு வடகலை நாமம் போட்டது மகாமகாக் கொலைபாதகத்தனமாகும்.

இராமாயணக் கூத்து ஏன்?

திருவள்ளுவர் தவிர்த்த வேறு யாரையும் மற்ற மதத்தவர்கள் இம்மாதிரி மதிப்பதில்லையே. இதிலிருந்தே தெரியவில்லையா, குறளில் காணப்படும் திராவிடப் பண்பு எத்தகையது என்று? இப்படிப்பட்ட திருக்குறளை விரும்புவதை விட்டு நம் நாட்டவர்கள் இராமாயணத்தை வைத்துக் கொண்டு கூத்தடிக்கிறார்களே அது நியாயமா?

எவளோ ஒருத்தி சொன்னாளாம் "பன்னாடைக்குப் பிறந்ததெல்லாம் பந்தம் பிடிக்குது. பண்டாரத்துக்கு பிறந்ததெல்லாம் மணியம் பார்க்குது" என்று. அதாவது மதிக்கப்பட வேண்டியது மதிக்கப்படாமல், மதிக்கப்படக் கூடாதன மதிக்கப்படுகின்றன என்று அர்த்தம். மேற்படி பழமொழி எப்படி வந்ததென்றால், முன்பெல்லாம் மிராசுதாரர்கள் கூத்திகளை வைத்துக் கொள்வார்கள். அவர்கள் கூத்தியோடு இருந்தால் அவர்கள் மனைவிமார் ஊர் பண்டாரத்தைத் துணைக்கு வைத்துக் கொள்வார்கள். தாசி வீட்டில் மிராசுதாரர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் தாசி மக்கள் தொழிலையொட்டி கோயிலில் பந்தம் பிடிக்கும். ஆனால் மிராசுதாரர் பேரால் பண்டாரத்திற்கு அவர் வீட்டில் பிறந்த குழந்தைகள் மிராசு பார்க்கும் என்று கற்பனைக் கதை சொல்லுவார்கள், இதைக் குறிப்பதுதான் அப்பழமொழி. அதுபோல் உண்மைத் திராவிடன் தீட்டிய திருக்குறள் குப்பையிலே கிடக்க, திராவிடர் துரோகி தீட்டிய ராமாயணமும் ஆரியர் தீட்டிய கீதையும் அதி காரத்தில் இருந்து வருகிறது.

ஏன் இந்தத் திறப்பு விழா?

இந்த இழிதன்மையை, மானமற்ற தன்மையை, கவலையற்ற தன்மையை உங்களிடம் முறையிட்டுக் கொள்ள வேண்டித்தான் வள்ளுவர் படத்தைத் திறந்து வைக்க ஒப்புக் கொண்டேன். குறளுக்குள் நான் இன்று புகவில்லை. மற்றொரு சமயம் எடுத்துக்காட்டுகிறேன்.

இந்து மதத்தில்தான் 'தாழ்த்தப்பட்ட' கிளை!

'தாழ்த்தப்பட்ட' வகுப்பார் உணரவேண்டும், இந்துக் களாக இருப்பதால்தான் தாழ்த்தப்பட்ட வகுப்பாரென் கிறவர்களும் இருக்கிறார்கள் என்பதை. குறள் இந்து மதக் கண்டன புத்தகம் என்பதையும், அது சர்வமதத்திலுள்ள சத்துக்களையெல்லாம் சேர்த்து எழுதப்பட்டுள்ள மனித தர்ம நூல் என்பதையும் எல்லோரும் உணர வேண்டும்.

விரும்பிப்படித்து அதன்படி நடக்கவேண்டும். ஒவ்வொருவனும் தான் இந்து அல்ல திராவிடனே - 'திருக் குறளானே' என்று கூறிக் கொள்வதில் பெருமையடைய வேண்டும். விபூதியையும் நாமத்தையும் விட்டொழிக்க வேண்டும். புராணங்களைப் படிக்கக் கூடாது. என்னமதம் என்றால் குறள் மதம், மனிததர்ம மதம் என்று சொல்லப் பழகவேண்டும். யார் எதைச் சொல்லியபோதிலும், எது எத்தன்மை யுடையதாய் இருப்பினும், ஒவ்வொருவரும் நன்கு சிந்தித்துப் பார்த்து ஆராய்ச்சி செய்து பார்த்துப் பிறகே எது உண்மை என்பதை முடிவு செய்யவேண்டும். சுய அறிவே பிரதானம் என்ற, 'வாலறிவன் நற்றாள்' என்ற வள்ளுவர் கருத்துப்படி அனைவரும் நடக்க வேண்டும். உருவ வழிபாட்டை ஒதுக்கிவிட வேண்டும்.

முஸ்லிம்களுக்கு விண்ணப்பம்!

முஸ்லிம் தோழர்களுக்கு ஒரு விண்ணப்பம். உங்களை ஏனோ எங்களுடன் நன்கு சேர ஒட்டாமல் உங்கள் தலைவர்கள் தடுத்து வருகிறார்கள். ஜின்னாசாகிப் ஒரு காலத்தில் முஸ்லிம்கள் யாரும் வேறு கட்சியில் சேரக் கூடாது என்று கூறினார் என்றால், அதற்கு அர்த்தம் இருந்தது. முஸ்லிம்களின் லட்சியமான பாகிஸ்தானை அடைய எல்லா முஸ்லிம்களும் ஒரே கட்சியின் கீழிருந்து வேலை செய்ய வேண்டும் என்பதற்காக அவர் அவ்விதம் சொல்லியிருந்தார். அப்பொழுது நானும் முஸ்லிம் கட்சியிலிருந்தேன். பாகிஸ்தான் பெற்றாகிவிட்டது. எனவே அவர் கூறியது காலாவதியாகிவிட்டது. (லிமிடேஷன் பார் ஆகிவிட்டது) இனி முஸ்லிம்கள் தங்களின் பாதுகாப்புக்காக ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து கொள்வது தான் நல்லது. இன்றுள்ள இம்மாகாண முஸ்லிம் தலைவர்கள் சொற்ப சலுகைகளுக்காகவும், பயத்துக்காகவும், சுயநலத்திற்காகவும் காங்கிரஸ் காரர்களின் காலடியில் இருந்துக் கொண்டு வருகின்றனர். தமக்குக் கிடைக்கும் சலுகைக்காக முஸ்லிம் இனத்தையே காட்டிக் கொடுக்கத் துணிந்து அவர்களைக் கோழை களாக்கி விட்டனர் இதை முஸ்லிம் பாமரமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். காங்கிரசுடன் சேர்ந்து கொள்வதா யிருந்தால் தாராளமாகச் சேர்ந்து கொள்ளுங்கள் நாம் வேண்டாமென்று கூறவில்லை. 100க்கு 90-பேராயுள்ள எங்களையே ஏமாற்றிக் கொண்டிருக்கும் பார்ப்பனர்களா 100க்கு 7பேரான உங்களுக்கு வளைந்து கொடுக்கப் போகிறார்களா? எங்களைப் பொறுத்த வரை, இன்னும் நாங்கள் உங்களை எங்கள் உடன் பிறந்த வர்களாகத் தான் கருதி வருகிறோம். நீங்களும் குறள் மதக்காரர்கள் என்றே கருதுகிறோம். நாங்களும் உங்களைப் போல், இந்து மதத்தை வெறுக்கிறோம் என்பதோடு; குறளை ஒரு போதும் வெறுப்பவர்கள் அல்ல; ஒன்றும் முடியாது போனால் உங்களைப் போன்ற குல்லாயாவது போட்டுக் கொள்ளலாம் என்று தான் நாங்கள் கருதியிருக்கிறோம்.

எங்கள் இனத்தவர் நீங்கள் என்பதற்காக, உங்களை இந்த அளவுக்கு அளவளாவும், ஆதரிக்கும் எங்கள் கழகத்தில் வேண்டுமானாலும் சேருங்கள் அல்லது வட நாட்டானால் பல கோடி செலவிட்டு பத்திரிகைகளைக் கொண்டு தீவிர பிரசாரம் செய்து இந்துக்களைத் தூண்டி விட்டு உங்களைக் கொள்ளையடிக்க நினைக்கும் பார்ப் பனர்களோடாவது சேர்ந்துக் கொள்ளுங்கள். சேருமுன் கொஞ்சம் தீர்க்கமாக யோசித்து விட்டு மட்டும் சேருங்கள். திருவண்ணாமலையும், ஈரோடும், திருநெல்வேலியும் உங்களுக்கு ஞாபகமிருக்கட்டும்.

கிறிஸ்தவர்களே! நீங்களும் சிந்தியுங்கள்!

முஸ்லிம்களை விடக் குறைவான எண்ணிக்கையுடைய கிறிஸ்தவர்களுக்குச் சொல்லுகிறேன். கிறிஸ்தவர்களாகி விட்ட தாலேயே நீங்கள் உயர்ந்தவர்கள் என்று கருதிக் கொண்டு விடாதீர்கள். நீங்களும் குறள் மதக்காரர்கள். பைபிளுக்கு விரோதமாக குறளில் ஒன்றும் கிடையாது. பார்ப்பனர்களின் தயவுக்காக வேண்டி சுயமரியாதையை இழந்துவிடாதீர்கள். உங்கள் நன்மையை பாதுகாத்துக் கொள்வதாயிருந்தால் ஜாதி, சமய, பேதமின்றி பாடுபடும் திராவிடர் கழகத்தில் சேருங்கள். திராவிடர் கழகம் திருவள்ளுவர் குறளை பின்பற்றி நடந்து வரும் கழகம். இந்நாட்டில் மனுதர்மம் ஒழிந்து மனிதத் தன்மையேற்படப் பாடுபட்டு வரும் கழகம். அதற்குக் குறள்தான் வழிகாட்டி. எந்த முன்னேற்றத்திற்கும் விரோதமில்லாமல் பணியாற்றி வரும் கழகம் என்பதை நீங்கள் உணர்ந்து ஆன எல்லா உதவியையும் அதற்கு அளித்து ஆதரியுங்கள்.

(24.10.1948 அன்று ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழக 19ஆவது மாகாண (ஸ்பெஷல்) மாநாட்டில் திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைத்து பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு.)

'குடி அரசு' - சொற்பொழிவு - 13.11.1948

 - விடுதலை நாளேடு, 24.11.19

கடவுள் கருணை!

09.06.1935,  குடிஅரசிலிருந்து...

பீகாரில் நடந்த பூகம்பத்தின் அதிர்ச்சி இன்னும் நமது மனதைத் திடுக்கிடச் செய்து கொண்டி ருக்கிறது; அதனால் ஏற்பட்ட கஷ்டங் களினின்றும் மக்கள் இன்னும் விடுபட வில்லை; நஷ்டங்கள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை.

இதற்குள் திடீரென்று சென்ற 31.05.1935 காலை நாலு மணிக்கு மக்கள் அயர்ந்து உறங்குகிற சமயத்தில் பலுஜிஸ்தானத்தைச் சேர்ந்த குவெட்டா நகரத்திலும், அதைத் சுற்றியுள்ள கிராமங்களிலும் பூமி அதிர்ச்சி உண் டாகி ஆயிரக்கணக்கான மக்களை அவர்கள் பெண்டு, பிள்ளை, தாய், தந்தை, சகோதர, சகோதரி, உறவினர், வீடு, சேர்த்து வைத்திருந்த சொத்து முதலியவைகளுடன் விழுங்கி விட்டது.

பூகம்பத்தின் போதும், அதன் பின்னும் மக்கள் பட்ட அவதிகளை நினைக்கும் போதும் எத்தகைய கல் மனதும் உருகாமற் போகாது.

சென்ற ஆண்டில் ஏற்பட்ட பூகம்பத்தைக் கடவுள் சித்தம் என்று தோழர் காந்தியாருள்ளிட்ட சிலர் கூறினார்கள். வைதிக பிண்டங்களும் தலையசைத்தார்கள். இவ்வாண்டு ஏற்பட்ட இந்த பூகம்பத்தை யாருடைய சித்தம் என்று சொல்லுவார்களோ தெரியவில்லை.

கடவுள் சித்தத்தால் உண்டான இந்தப் பூகம்பத்தில் மக்கள் மாத்திரம் மடிந்து போக இல்லை; அவர்கள் சொத்துச் சுதந்திரங்கள் மாத்திரம் அழியவில்லை; அந்த கடவுளின் இருப் பிடம் என்று கருதப்படுகின்ற கோயில்கள் இடிந்தன; சர்ச்சுகள் தகர்ந்தன; மசூதிகள் விழுந்தன; ஆதலால் எந்தக் கடவுளின் கோபத்தால் இந்த பூகம்பம் நிகழ்ந்ததென்று தெரியவில்லை; இந்துக்கள் மடிந்தனர்; முஸ்லிம்கள் மடிந்தனர்; கிறிஸ்தவர்கள் மடிந்தனர்; வெள்ளையர்கள் மடிந்தனர்; பார்சிகள் மடிந்தனர். இன்னும் எந்தெந்த மதத் தினர் அங்கு இருந்தார்களோ அவர்கள் எல்லோரும் மடிந்தனர். ஆயிரக் கணக்கான மக்கள் காயம் பட்டனர்; காலொடிந்தனர்; கையிழந்தனர்; கண்ணிழந்தனர்; மூளை சிதறினர் - இவ்வாறாக எல்லா மதத்தைச் சேர்ந்த மக்களுக்கும், எல்லா மதக் கடவுளும் சேர்ந்து துன்பத்தைக் கொடுத்தார்களா? ஏன் அந்தக் கடவுள்களுக்கு இவ்வளவு கோபம்? அங்கிருந்த மக்கள் எல் லோரும் நம்மைப் போல கடவுள்களுக்கு விரோதமான சுயமரியாதைக் காரர்களா? இல்லையே!

ஆனால், பூகம்பம் எப்படி ஏற் படுகிறது என்பதை அறிந்தவர்கள் இந்தக் கடவுள் சித்தம் என்று சொல்லி மக்களை மூடர்களாக ஆக்க இதையும் ஒரு சந்தர்ப்பமாக உபயோகப்படுத்திக் கொள்வதை ஒப்புக் கொள்ள மாட் டார்கள். பூகம்பத்தைப் பற்றி விஞ்ஞானிகள் கூறுவதை கவனிப்போம்.

பூமியின் அடியில் நெருப்புக் குழம்பு இருந்து கொண்டிருக்கின்றது. அதில் குளிர்ச்சி பட்டால் உடனே கொதிப்பு உண்டாகிறது. சாதாரணமாக எரியும் விளக்கில் சிறிது தண்ணீர்த் துளி தெறித்தால் அவ்விளக்கின் ஜூவாலை எப்படி குதிக்கிறதோ அது போலவே இக்கொதிப்பும் உண்டாகிறது. இவ் வாறு கொதிப்பு உண்டானவுடன், அதனால் பூமியின் மேலுள்ள மலைகள் அசைய ஆரம்பிக்கின்றன. இந்த அசைவி னாலேயே பூகம்பம் உண்டா கிறது. பூமியின் அடியில் நெருப்புக் குழம்பின் கொதிப்பு அதிகப்பட்டால், பூமி வெடித்து அதன் வழியே நெருப்புக் குழம்பு மேலே வருவதும் உண்டு. இதுதான் எரிமலை என்று சொல்லப் படுவது.

ஆகவே பூகம்பம், எரிமலை முதலி யவைகள் தோன்றுவதற்கு உண்மைக் காரணங்கள் இதுவேயாகும். இந்த இயற்கை நிகழ்ச்சி யாருடைய சித்தத்தி னாலும் உண்டாவதல்ல, யாருடைய கருணை யினாலும் நிறுத்தப்படுவதல்ல.

இயற்கையின் வேறுபாடே பூகம்பம் போன்ற தீமைகள் நேருவ தற்குக் காரணமாக இருக்கின்றது. இப்படிப் பட்ட இயற்கையின் கோளாறினா லேயே சென்ற ஆண்டில் பீகார் பூகம்பம் நிகழ்ந்தது. இப்பொழுதும் குவெட்டாவில் நடந்திருக்கின்றது. அதனால் உண்டான முழுச் சேதத் தையும், பற்றி வேறு ஓரிடத்தில் பிரசுரித்திருப்பதை படித்தால் உண்மை விளங்கும்.

ஆதலால் இயற்கையில் நிகழ்ந்த இந்தப் பூகம்பத்தை யாரும் கடவுள் என்ற அர்த்தமற்ற சொல்லின் மேல் பழி போட்டுச் சும்மாவிருக்க வேண் டாம் என்று கேட்டுக் கொள்ளுகிறோம். கடவுளால் நிகழ்ந்ததென்றால், அதனால் உண்டான கஷ்ட நஷ்டங் களை நிவர்த்திப் பதற்கு நமக்கு எப்படி முடியும்? அந்தக் கடவுள் தானே நிவர்த்திக்க முன்வர வேண்டும்? கடவுள் கஷ்டத்தை நிவர்த்தி செய்து விடுவா ரென்று நாம் சும்மாவிருந்தால் ஒன்றும் நடக்கப் போவதில்லை. மக்கள் இன்னும் கஷ்டப்பட்டுத்தான் ஆக வேண்டும். ஆதலால் இந்த முட்டாள் தனத்தைக் கொஞ்சம் மூட்டைக் கட்டி வைத்துவிட்டுக் கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்து காப்பாற்று வதற்கு முன் வருவது மனிதாபிமான முள்ள மக்களின் கடமையாகும்.

இறந்து போனவர்களைப் பற்றி நாம் கவலைப்படுவதில் பயனில்லை. 35 கோடி மக்களில் - அதுவும் அடிமை களாகவும், தரித்திரர்களாகவும், சதா கஷ்டத்தையே அனுபவிப்பவர் களாகவும் மனதிருப்தியற்ற வாழ்க்கை நடத்துபவர்களாகவும் இருக்கின்ற மக்களில் ஒரு அறுபதினாயிரம் மக்கள் இறந்தார்களென்றால் - அறுபதினாயிரம் மக்கள் விடுதலைப் பெற்றுக் கஷ்டத்தினின்றும் நீங்கினார்கள் என்றுதான் நாம் நினைத்துச் சந்தோஷப்பட வேண்டுமேயொழிய துக்கப்பட வேண்டுமென்று நமக்குத் தோன்றவில்லை. இவ்வாறு கஷ்டப் படுகின்ற மக்கள் எவ்வளவுக் கெவ் வளவு இறக்கின்றார்களோ அவ் வளவுக்கவ்வளவு லாபந்தான். நமது வருத்தமெல்லாம், இப்பொழுது குவெட்டாவில் இறந்து போகாமல் உயிருடன் இருப்பவர்களைப் பற்றியது தான். அவர்கள் உடுக்க உடையின்றி, உண்ண உணவின்றி, தங்க இடமின்றி அங்கஹீணர் களாய், உதவியற்ற வர்களாய்ப் பரிதவிக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்வதே நமது கடமையாகும்.

நமது அரசாங்கம் முழு மனது வைக்குமாயின், வறுமைப்பட்டுத் தவிக்கும் மக்களை இன்னும் வறுமைப் பட விடாமல் தாங்களே முன் வந்து இக்கஷ்டத்தை நிவர்த்தி செய்து விட முடிமாயினும், அவர்கள் அவ்வாறு உதவி செய்யப் போவதில்லை. அத்த கைய முறையிலும் நமது அரசாங்க அமைப்பு இல்லை. ஆதலால் ஓரள வாவது அரசாங்கத்தார் செய்வதற்கு முன்வரும் உதவியைப் பாராட்டிப் பொது ஜனங்களுக்கும் குவெட்டாவில் உள்ள மக்களின் கஷ்டத்தை நீக்கு வதற்கு உதவி செய்யுமாறு வேண்டிக் கொள்கிறோம்.

தந்தை பெரியார் பொன்மொழிகள்

மனிதன் பகுத்தறிவுவாதி; வளர்ச் சிக்கு உரியவன். அவன், வாழ்க்கையைச் சுமையாக, அமைத்துக் கொள்ளக் கூடாது. மனிதச் சுதந்திரத்திற்கும் கவலையற்று வாழ்வதற்கும் ஏற்ற முறை யில் அமைத்துக் கொள்ள வேண்டும்... எனவே, மனித வாழ்வு பெண்டாட்டி கட்டிக் கொண்டு குட்டி போட்டுக் கொண்டு, காப்பாற்ற மட்டும் என்று எண்ணாமல், மனிதச் சமுதாய வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் பாடுபடு வதுதான் என் பதை உணர்ந்து அதன்படி நடக்க வேண்டும்.

- விடுதலை நாளேடு 22 11 19

முட்டாள்களுக்கு வரி (சித்திரபுத்திரன்)

27.01.1935 - குடிஅரசிலிருந்து...

முட்டாள்களுக்கு வரி விதிக்க வேண்டும் என்கின்ற ஆசையின் மீதே நமது அரசாங்கத்தார் லாட்டரிச் சீட்டுகளையும், போட்டிப் பரிசுகளையும், குதிரைப் பந்தயங்களையும் அனு மதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தரும தேவதை சொப்பனம் அருளுகிறது. இதை மிகவும் சரி என்றே சொல்ல வேண்டும்.

உதாரணமாக, ஒரு தாசி தன் தாயாரை நோக்கி எனக்கு இன்பம் கொடுக்கும் ஆடவர்கள் எனக்குப் பணத்தையும் கொடுத்து என்னை வணங்குவதும் ஏன் என்று கேட்டபோது அந்த தாசியின் தாயாரானவள் மகளைப் பார்த்து, நல்ல காரியத்துக்கு தங்கள் பணத்தை செலவு செய்யாத அயோக்கியர்கள் பணம் செலவாவதற்காக வேசிகளாகிய நம்மையும், கள்ளுச் சாராயத் தையும், சூது ஆட்டங்களையும் கடவுள் அனுமதித்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னாளாம்.

அதற்கு ஒரு பாட்டும் உண்டு.

அன்னையே அனையதோழி

அறந்தனை வளர்க்கும்மாதே,

உன்னையோர் உண்மை

கேட்பேன், உரை

தெரிந்துரைத்தல் வேண்டும்,

என்னையே வேண்டுவோர்கள்

எனக்கும் ஓர்இன்பம் நல்கி,

பொன்னையும் தந்து

பாதப் போதினில்

வீழ்வதேனோ? (அம்மா) பொம்மெனப் புடைத்து விம்மி

போர்மதன் மயங்கி வீழும்,

கொம்மை சேர்முலையினாளே

கூறுவேன் ஒன்று கேளாய்,

செம்மையில் அறஞ்செய்யாதார்

திரவியம் சிதற வேண்டி,

நம்மையும் கள்ளும் சூதும்

நான்முகன் படைத்த வாறே.

அதுபோல் பகுத்தறிவில்லாத முட்டாள்களுக்கு வரிப் போடுவதற்காக அரசாங்கத்தார் கருதி போட்டிப் பரிசு பத்திரிகைகள், லாட்டரிச் சீட்டுகள், குதிரைப் பந்தயங்கள், எலக் ஷன்கள், சர்வீஸ் கமிஷனுக்கு உத்தியோகத்துக்காக விண்ணப் பங்கள், 1 ரூ 15 அணாவுக்கு கடிகாரமும், 125 சாமான்களும் என்கின்ற விளம்பரங்கள் மூன்று வேளை மருந்தில் முப்பது ஸ்திரீகளை கொஞ்சும்படி செய்யத்தக்க மன்மத சிந்தாமணி, வீரியவிர்த்தி, தாதுபுஷ்டி லேகிய விளம்பரங்கள், தாயத்து விளம்பரங்கள் ஆகியவைகளை அரசாங்கத்தார் அனுமதித்து வருகிறார்கள். இதனால் போட்டிப் பத்திரிகை மீதாவது, விளம்பரக் காரர்கள் மீதாவது சத்தியமாய் நாம் சிறிதுகூட குற்றம் சொல்ல வரவில்லை. ஏனென்றால் நம் நாட்டு முட்டாள்கள் எத்தனை பேர்கள் என்று கணக்கெடுக்க இது ஒரு பதிவு (ரிஜிஸ்ட்டர்) புஸ்த்தகமாகும். ஆதலால் இது நடக்க வேண்டி யது தான். இதுபோலவே அறிவாளிகளுக்கு வரி போடவும், அறிவாளிகளைக் கணக்கெடுக்கவும் சில காரி யங்கள் இருக்கின்றன. அவற்றைப் பின்னால் தெரிவிக்கலாம். இப்போது ஒன்றும் அவசரமில்லை.

- விடுதலை நாளேடு 22 11 19

செவ்வாய், 26 நவம்பர், 2019

கடவுள் பற்றி கவலை இல்லை; அதன் பெயரால் நடக்கும் முட்டாள்தனம் பற்றியே கவலை அறிவோடு கடவுளை நம்பினால் பரவாயில்லை - முட்டாள்தனத்தையும் நம்புவதா?

தந்தை பெரியார்

கடவுள் பற்றி கவலை இல்லை; கடவுள் இருக்கிறதா இல்லையா என்பதைவிட அதன் பெயரால் நடக்கிற முட்டாள் தனங்களைப்பற்றித் தான் நாம் கவலைப் படுகிறோம், அறிவோடு கடவுளை நம்பினால் பரவாயில்லை, முட்டாள்தனத்தோடு கடவுளை நம்பி தான் மடையனாவதோடு தனது மனைவி மக்களெல்லாம் அல்லவா மடையர்களாகும் படி ஏற்படுகிறது. இந்த நிலையை மாற்ற பகுத்தறிவாளர்கள் பாடுபட வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் சென்னையில் பகுத்தறி வாளர் கழகத் துவக்கவிழாவில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

6-9-1970-இல் சென்னை பாலர் அரங்கத்தில் தந்தை பெரியாரவர்கள் பகுத்தறிவாளர் கழகத்தினைத் துவக்கி வைத்து அறிவுரையாற்றுகையில் கூறியதாவது:

அண்ணாவின் அடுக்கு

நாவலர் புள்ளி விவரம்

இன்றைய தினம் இங்கு பகுத்தறிவாளர் கழகம் என்னும் பெயரால் ஆரம்பிக்கப்பட்டிருக்கிற இக் கழகத் தினைத் துவக்கும் வகையில் இப்பெரும்கூட்டமானது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பல அறிஞர்கள் சிறந்த கருத்துரைகளை எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். இன்றைக்கு 30, 40 வருடங்களுக்கு முன்பே உயர்ந்த பேச்சாளர்களாகவும் மக்களுக்கேற்ப கருத்துக்களை எடுத்துச் சொல்வதில் தேர்ந்தவர்களாகவும் இருந்தவர்கள் இருவர். ஒருவர் அண்ணா அவர்கள், அடுத்து நாவல ரவர்கள். அண்ணா அவர்கள் நகைச்சுவையோடு, அடுக் குத்தொடரோடு எடுத்துச் சொல்வார்கள். நாவலரவர்கள் புள்ளி விபரங்களோடு மக்களுக்கு புரியும் தன்மையில் பேசக்கூடியவராவார்கள். இவர்கள் இருவரது பேச்சுக் களைக் கேட்பதற்காகவென்று மக்கள் அதிகமாகக் கூடுவார்கள்.

மனிதனா-மிருகமா?

அமெரிக்காக்காரன் சந்திரமண்டலத்திற்கு சென்று வர சாதனம் கண்டுபிடித்ததைப்போல நாம் சிறந்த காரியமாக பகுத்தறிவாளர் கழகம் என்கின்ற இதனைக் கண்டுபிடித்திருக்கிறோம்; மக்களுக்கு அறிவை எடுத்துச் சொல்கிற- மிருகமாக இருக்கிற மக்களை மனிதர் களாக்குகிற இயக்கம் என்பது தான் இதற்குப் பொருள். பகுத்தறிவு- சிந்தனை - தாராள சுதந்திர நோக்குள்ளவன் தான் மனிதன். இவை இல்லாத மற்றவை மிருகங்கள். நாம் ஏறக்குறைய அப்படித்தான் இருந்து வருகின்றோம். இப்போது தான் மனிதராகின்றோம். இந்த நாட்டில் இத்துறையில் பாடுபட யாருமே தோன்றவில்லை.

5 பேரை ஒழிப்பதே நம் கொள்கை

நான் காங்கிரசில் சேர்ந்து அதன் பித்தலாட்டங் களையெல்லாம் உணர்ந்து அதைவிட்டு வெளியேறி நம்மனிதனுக்கு அறிவைவிட மானம் முக்கியம் எனக் கருதி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தேன். அதன் கொள்கைகள் அய்ந்து; கடவுள் ஒழிக்கப்பட வேண்டும்; மதம் ஒழிக்கப்படவேண்டும்; காங்கிரஸ் ஒழிக்கப்பட வேண்டும், காந்தியார் ஒழிக்கப்படவேண்டும், பார்ப்பனர் ஒடுக்கப்படவேண்டும் இக் கொள்கைகளோடு கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் செய்து பல இன்னல்களை, கல்லடிகளை, சாணி மலம் முதலிய அடிகளைப் பட்டிருக்கிறேன். மிக இழிவான சொற்களால் பலர் என்னை திட்டி இருக்கிறார்கள். அதையெல்லாம் இலட் சியம் செய்யாது தொண்டாற்றியதால் நமது கொள்கை படித்த கூட்டத் தாரிடத்தில் பெரிய மனிதர்களிடத்தில் பரவியது என்றாலும் அவர்களை ஈர்க்கவில்லை மதம் - அரசியல், இலக்கியம் ஆகிய துறைகளிலும் பாடுபட் டோம் என்றாலும் நாம் கருதிய அளவு வெற்றி கிடைக்க வில்லை .

மனைவிமாரையும் சேர்க்க வேண்டும்

இது நல்ல வாய்ப்பு. இந்த இயக்கம் வளருமேயானால் மே நாட்டுகாரர்களை விட அதிகமாக நாம் வளருவோம். அறிவில் மட்டுமல்ல, பல அதிசய அற்புதங்களையும் காணுவோம். நமது நாட்டில் அறிவுள்ள மனிதன் என்று சொல்ல ஒரு ஆளில்லை. படித்தவர்கள் பணம் படைத் தவர்கள் பெருமை பெற்றவர்கள் இருக்கலாம். அறிவாளி என்று சொல்லும்படியாக ஒரு ஆள் கிடையாது. நம் சமுதாய மக்களிடையில் இன உணர்வு நட்பு இல்லாமல் போய் விட்டது. பொது உணர்ச்சி இல்லாமல் போய்விட்டது. இந்த ஸ்தாபனத்தை நல்ல வண்ணம் வளர்க்க வேண்டும். தமிழர்கள் எல்லோரும் அங்கத்தினர்களாக வேண்டும். தங்கள் மனைவி மார்களையும் இதில் சேர்க்கவேண்டும். பிரசார ஸ்தாபனம் ஒன்று இதற்காகத் துவக்க வேண்டும். பத்திரிகைகள் ஆரம்பிக்கவேண்டும். நிறைய புத்தகங்கள் போடவேண்டும். தாங்களாகவும் மற்றவர்களை அழைத் தும் பிரசாரம் செய்து மக்களை பகுத்தறிவாளர்களாக்க வேண்டும்.

ஒழுக்கம் நாணயம் வேண்டும்

இதற்கு மரியாதை வேண்டுமானால் இதில் ஈடுபட் டுள்ளவர்களுக்கு ஒழுக்கம், நாணயம் வேண் டும். நாம் தீவிரமான கருத்துக்களை எடுத்துச் சொல்லி இருக்கிறோம். நம்மிடம் ஒழுக்கம் நாணயம் இல்லையென்றால் மதிப் பிருக்காது. இப்போது நாங்கள் "கடவுள் இல்லை- கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளை பரப்பியவன் அயோக்கியன் கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி" என்கின்றோம்.

முட்டாளை முட்டாள் என்று சொல்வதில், திருடனை திருடன் என்று சொல்வதில் என்ன தவறு என்று கேட்கிறேன். யாராவது நீங்கள் தான் சொல்லுங் களேன்? கடவுளை நம்புகிறவன் முட்டாளாக இல்லா விட்டால் சாம்பலையும், மண்ணையும் பூசிக்கொள்வானா?

ஆன்மா சாப்பிட அரிசி, உப்பு, புளி

அடுத்த ஜன்மத்கில் நாயாக கழுதையாக பிறப்பாய் என்கிறான். பிறகு பிதிர்லோகத்தில் ஆத்மா தங்கி இருக்கிறது, அதற்கு உணவுக்கு அரிசி உப்பு புளி அனுப்ப வேண்டுமென்கின்றான். பெரிய எம்.ஏ., பி.ஏ., டாக்டர் படித்தவனெல்லாம் இதை நம்பித்தானே தெவசம் கொடுக்கின்றான். கருமாதி செய்கின்றான். நாமிங்கு கடவுள் மறுப்பு சொல்வது போன்று ஒவ்வொரு நாட்டிலும் இது போல் செய்கிறார்கள்.

பாரிஸ் நகர அனுபவம்

நானும் காலம் சென்ற இராமநாதன் அவர்களும் பாரிசுக்கு ஒரு நாத்திக சங்கத்திற்கு சென்றிருந்தோம். அவர்கள் ஒரு பத்திரிகை நடத்துகிறார்கள். அந்த பத்திரிகையில் தலைப்பில் ஒரு சிலுவையைப் போட்டு அதை ஒரு மனிதன் இரண்டாக பிளந்து ஒரு பகுதியைக் காலால் மிதித்துக் கொண்டு மறுபகுதியை கையால் பிடித்து இழுப்பது போல படம் போட்டிருக்கிறார்கள். அப்படம்தான் அந்த பத்திரிகையின் "எம்பிள"மாகும். அப்போதே அப் பத்திரிகை 50, 60 ஆயிரம் போகிறது என்றார்கள். அது போன்று இங்கும் நிறைய பத்தி ரிகைகள் தோன்றவேண்டும்.

கடவுள் பற்றி கவலை இல்லை

இப்படி ஒவ்வொருகாரியமும் தீவிரமாகச் செய்ய வேண்டும். பயப் படவேண்டியத்தேவை இல்லை. மக்கள் சிறிது சிறிதாக பக்குவப்பட்டுக் கொண்டு வருகிறார்கள். நாமாக புதிதாக எதுவும் சொல்ல வேண்டிய தில்லை. நம் பிரத்தியட்ச அனுப வத்தைக் கொண்டும் ஆதாரத்திலுள் ளவைகளைக் கொண்டும் எடுத்துச் சொன்னால் அதுவே போதும்.

சாமி இருக்கிறதா - இல்லையா? அதைப் பற்றி கவலை இல்லை. அதன் பெயரால் நடக்கிற முட்டாள் தனங்களைப் பற்றித் தான் நாம் கவலைப்படுகிறோம்.

அறிவோடு நம்பினால்....

இருந்துவிட்டுப் போகட்டும். அதற்கு சாமி இருக்கிற தானால் எதற்காக மனிதன் சாம்பலை அடித்துக் கொள்ள வேண்டும்? நாமத்தைப் போட்டுக் கொள்ள வேண்டும்? இது முட்டாள் தனமல்லாமல் அறிவுள்ள செயலா? இதிலிருந்தே சாமியை நம்புவதாலே மனிதனின் அறிவு எவ்வளவு: கீழாகப் போகிறது என்பதை உணரலாமே!

மனிதன் - அறிவோடு சாமியை நம்பினால் பரவா யில்லை, முட்டாள்தனத்தோடு நம்புகின்றான். அதனால் இவன் மடையனாவதோடு இவன் மனைவி மக்க ளெல்லாம் அல்லவா மடையர்களாகிறார்கள். சாமி இருக்கிறது என்று நம்புகிறானே தவிர அது சர்வசக்தி யுள்ளது என்று சொல்கிறானே தவிர அதன்படி எவனாவது ஒருவன் நடந்து கொள்கிறானா என்று கேட்கிறேன்...

சங்கராச்சாரியை சொன்னாலும் சரி, மடாதிபதியா னாலும் சரி, பெரிய பக்தனானாலும் சரி ஒருவனைச் சொல்லுங்கள் -எவன் கடவுள் சர்வ சக்தி யுள்ளது என்று நம்புகின்றான், ஒருவன் கூட இல்லையே!

அடிமையாக நாமிருக்கிறோம்

தீவிரமான காரியங்களில் ஈடுபடுகிற நம்மீது சிறு குற்றம்கூட இருக்கக் கூடாது. நமது சமுதாயம் ஒன்றுபட வேண்டும். அதற்காக பாடுபடவேண்டும்.

நமக்கு ஒரு குறிப்பு மோனோகிராம் (பேட்ஜ்) இருக்க வேண்டும். மேல் நாடுகளில் இதுபோன்ற இயக்கங்களை சார்ந்தவர்கள் தங்கள் சட்டையின் ஒரு பகுதியில் அணிந்திருப்பார்கள். அதுபோன்று இந்த கழகத்தினைச் சார்ந்த அங்கத்தினர்கள் அணிந்து கொள்ள வேண்டும்.

இப்போது நாம் நம்நாட்டுக்காரனாக இல்லை, அடிமையாக இருக்கிறோம். இந்நாட்டிற்குரிய 100-க்கு 97 பேராக இருக்கிற நாம் தானே சூத்திரர்களாக, கீழ் ஜாதிக்காரர்களாக, 4-ஆம் ஜாதி மக்களாக இருக்கிறோம். இதைப்பற்றி இது வரை யாரும் சிந்திக்கவில்லையே, காரணம் கடவுள் மதத்தோடு இதை ஒட்ட வைத்து விட் டான். நாம் மனிதத்தன்மையடைய ரொம்ப தூரமிருக்கிறது.

அண்ணன்-தம்பி போல பழகவேண்டும்

ரஷ்யாவில் அந்தரங்க நட்பு பேட்ஜ் அதைக் குத்தி இருக்கிறவன் இன்னொருவனிடம் எதை கேட்டாலும் அதை எடுத்து கொடுத்து விடுவான். அவ்வளவு ஒற்று மைஅவர்களிடம் இருக்கும்.

அதுபோன்று இக்கழகத்தைச் சார்ந்தவர்கள் ஒற்றுமை யாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் அண்ணன் தம்பிபோல் பழகவேண்டும்

நமது நிலை என்ன? நமது நாட்டின் பெயர் இந்தியா; நமது மதத்தின் பெயர் இந்து. இதற்கு எந்த ஆதாரமும் இருக்கிறதா என்றால் இல்லை. இந்நாட்டிற்குரிய நமக் கென்று எதுவுமே இல்லை. அனாமதேயமாக இருக்கி றோம். அரசியலிலும் அனாமதேயமாக இருக்கிறோம். நமக்கென்று நாம் எதையும் செய்து கொள்ள முடியாத வர்களாக இருக்கிறோம். இந்த நிலை மாற்றமடைய வேண்டும்.

நடித்தால் போதும்

நாமெல்லாம் சகோதரர்கள் என்கின்ற உணர்ச்சி வர வேண்டும். இதனால் சிலருக்கு தொல்லை வரலாம், தியாகம் செய்தாக வேண்டும். நம்மவன் என்றால் அன்பாய்  நடந்து கொள்ள வேண்டும் தம்மாலான உதவியைச் செய்ய வேண்டும். பகுத்தறிவின் பெயரால் நாடகங்கள் நடத்த வேண்டும். சுயமரியாதை இயக்கத்தின் மூலம் நடத்துவதில் அண்ணா முக்கியமான பாகத்தில் நடிப்பார் 3,4 ஆயிரம் வசூலாகும். நமது கடவுள் கதை களை - உள்ளபடி நடித்தால் போதும் - அறிவோடு பார்ப் பவன் நிச்சயம் திருந்துவான். இதற்கு ஒரு நிதி திரட்ட வேண்டும். பத்திரிகை சம்பந்தமாக நண்பர் திரு. வீரமணி அவர்கள் உதவி செய்வார்கள்.

- 'விடுதலை' 23.9.1970

- விடுதலை' 17.11.19

சனி, 23 நவம்பர், 2019

சொர்க்கம் - சித்திரபுத்திரன்

12.05.1935  - குடிஅரசிலிருந்து... -

கேள்வி :  சொர்க்க லோகத்தில் கடவுள் இருக்கிறார் என்பதை ஒப்புக் கொள்ளுகின்றாயா? இல்லையா? இரண்டில் ஒன்று சொல்லு.

பதில் : இவ்வளவு அவசரப்பட்டால் நம்மால் பதில் சொல்ல முடியாது. பந்தியில் உட்காரவே அனுமதி இல்லை என்றால் ஓட்டை இலை என்று சொல்லுவதில் பயன் என்ன?

சொர்க்க லோகம் என்பது எந்தப் பூகோளத்தில் இருக்கிறது? கீழே ஆயிரக்கணக்கான மைல்களுக்கும் மேலே பதினாயிரக்கணக்கான லட்சக்கணக்கான மைல்களுக்கும் வான சாஸ்திரிகள் விவரம் கண்டுபிடித்து விட்டார்கள். எங்கும் சொர்க்க லோகம் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்படவில்லை. ஆகவே, சொர்க்கலோகமே சந்தேகத்தில் இருக்கும்போது சொர்க்க லோகத்தில் கடவுள் இருக்கிறாரா என்றால் என்ன பதில் சொல்லுவது?

கே: அப்படியானால் மேல் லோகம், வைகுந்தம், கைலாயம், பரமண்டலம் முதலிய எதுவுமே இல்லை என்கின்றாயா?

பதில் : நான் இவைகளையெல்லாம் தேடித் தேடிப் பார்த்து இல்லை என்று சொல்ல வரவில்லை. பூகோள சாஸ்திரம், வான சாஸ்திரம், விஞ்ஞான சாஸ்திரம் ஆகிய எதற்கும் இந்த லோகங்களில் எதுவுமே தென்படவில்லையே என்றுதான் மயங்குகிறேன்.

கே.: அப்படியானால் அண்ட, பிண்ட, சராசரம் அதள, சுதள, பாதாளம் முதலிய கீழேழுலோகம், மேலேழுலோகம் என்பவைகளைக்கூட நீ ஒப்புக் கொள்ளவில்லை என்று தானே அர்த்தம்.

பதில்: இதுவும் முன்னைய கேள்வி போல் தானிருக்கிறது. மேலே ஒரு லோகத்தைப் பற்றியே சந்தேகத்தில் இருக்கும்போது மேலும், கீழும் பதினாலு லோகத்தை ஒப்புக் கொள்ளுகின்றாயா? இல்லையா? என்றால் இதற்கு என்ன பதில் சொல்லுவது?

கேள்வி: மேலோகங்களை நம்பாத நீ கடவுளை நம்புகின்றது என்பது முடியாத காரியம் தான். ஆகவே நீ நாஸ்திகன் தானே?

பதில்: என்னமோ சொல்லிக் கொள்ளப்பா, நமக்குத் தெரியாத சங்கதியைப் பற்றி தெரியும் என்று சொல்லிவிட்டு அப்புறம் உன்னிடம் விழிக்க நம்மால் ஆகாது.

கே.: விழிக்கிறதென்ன இருக்கிறது?

பதில்: சொர்க்கலோகம் ஒன்று இருக்கிறது, என்றே சொல்லி விட்டேன் என்று வைத்துக் கொள். அப்புறம், அது எப்படி இருக்கிறது அது உனக்கு எப்படித் தெரியும் நீ பார்த்தாயா? அங்கு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்றெல்லாம் கேட்பாய். அப்புறம் அங்கு கடவுள் இருக்கிறாரா என்பாய் - இருக்கிறார் என்று சொன்னால் அது உனக்கு எப்படித் தெரியும், அவர் எப்படி இருக்கிறார். உட்கார்ந்து கொண்டா, படுத்துக் கொண்டா, நின்று கொண்டா இருக்கிறார்? என்பாய். அவருக்கு கைகால் உண்டா, கண் மூக்கு உண்டா, ஜல உபாதை, மல உபாதை உண்டா என்பாய். இன்னும் என்னென்னவோ கேட்பாய். இந்த எழவுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. நீ நாஸ்திகன் என்றாலும் சரி, வேறென்ன சொன்னாலும் சரி. அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. நமக்குத் தெரியாததைச் சொல்லிவிட்டு உம்மிடம் சிக்கிக் கொண்டு விழிப்பதை விட நாஸ்திகன் என்கின்ற பெயரே மிகவும் யோக்கியமானதும், நாணயமானதும் ஆகும் என்று கருதுகிறேன்.

கே.: நாஸ்திகனைக் கடவுள் எப்படித் தண்டிப்பார் தெரியுமா?

பதில்: தெரியும் தெரியும். அப்புறம் நான் அந்தக் கடவுளை சும்மா விட்டுவிடுவேனாக்கும்.

கே.: என்ன செய்வாய்?

பதில்: அந்தக் கடவுளுடைய சிண்டைப் பிடித்துக் கொண்டு நன்றாய் கேட்பேன். அதாவது நீ இருப்பதை என் கண்ணுக்கும் தெரிவிக்கவில்லை. மனதுக்கும் தெரிவிக்கவில்லை. உன்னுடைய லோகத்தையும் நமக்குக் காட்டவில்லை. பூகோள படத்திலுமில்லை. எந்த சர்வேயிலும், எந்த ஆராய்ச்சியிலும் கிடைக்கவும் இல்லை. இந்த மாதிரி நான் அறிய முடியாத காரியத்தை நீயே செய்துவிட்டு என்னைத் தண்டிப்பது என்றால் அப்புறம் தெரியுமா என்று கேட்டுவிடுவேன்.

கே.: இப்படியெல்லாம் பேசாதே மகாதோஷ மாக்கும். கடவுள் எதை மன்னித்தாலும் மன்னிப்பார். திருடினாலும், கொலை செய்தாலும், நம்பிக்கைத் துரோகம் செய்தாலும், ஊரான் உழைப்பில் சோம்பேறியாய் இருந்து தொப்பைப் போட்டாலும் சரி, இன்னமும் பண்ணாத காரியம் எது செய்தாலும் சரி கடவுள் மன்னித்து விடுவார். ஆனாலும் அவர் விஷயத்தில் கொஞ்சமாவது நம்பிக்கைக் குறைவோ சந்தேகமோ அடைந்தால் அதற்கு மன்னிப்பே கிடையாது. நன்றாய் ஞாபகத்தில் வைத்துக் கொள். பதில்: சரி சரி. ரொம்ப யோக்கியம்தான். கடவுள் ஒரு யோக்கியன். நீ ஒரு மகா யோக்கியன் நான் நாஸ் திகன்தான். உங்களாலானதைப் பாருங்கள்.

கடவுள் கருணை

30.06.1935 - குடிஅரசிலிருந்து...

1934இல் பீகார் பூகம்பத்தால் ஏற்பட்ட சொத்து நஷ்டமும், உயிர் நஷ்டமும் ஒருபுறமிருக்க, இவ்வருஷம் குவெட்டா பூகம்பத்தால் அதைவிடப் பல மடங்கு அதிகமான அய்ம்பது அறுபது ஆயிரம் மக்கள் உயிர் நஷ்டமும், பலகோடி ரூ. பொருள் நஷ்டமும் நடந்தது.

மற்றொருபுறமிருக்க, இம்மாதத்தில் பெஷா வரில் தீ விபத்து ஏற்பட்டு 2500 வீடுகளும், கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறும்படியான பொருள்களும் சாம்பலாயினவாம். உயிர்ச் சேதமும் தாராளமாய் இருக்கலாம்.

எனவே, கடவுள் நன்மையையே குணமாய்க் கொண்டு அன்பையும், ஜீவகாருண்யத்தையும், கருணை யையுமே ஆபரணமாய்க் கொண்டவர் என்பதற்கு இதைவிட வேறு என்ன உதார ணத்தை ஆஸ் திகர்கள் காட்டுவார்களோ தெரியவில்லை.

யார் கெட்டிக்காரர்கள்?

30.06.1935 - குடிஅரசிலிருந்து....

சந்திரலோகத்தைக் கண்டுவிட முடியும்

இந்தப் பூலோகத்துக்கும், சந்திரலோகத்துக்கும் 2,50,000 இரண்டு லட்சத்து அய்ம்பது ஆயிரம் மைல் தூரம் இருக்கிறது.

இதை மணி ஒன்றுக்கு 2500 இரண்டாயிரத்து அய்ந்நூறு மைல் வேகம் போகக் கூடிய ஒரு பறக்கும் யந்திரத்தின் மூலம் 100 நிமிஷ நேரத்தில் பூலோகத்தில் இருந்து சந்திர மண்டலத்துக்குப் போய் விடலாம் என்று அமெரிக்க சங்கத்தார் உத்தேச திட்டம் போட்டிருக் கிறார்கள்.

இந்தத் திட்டத்தை நமது இந்திய மகாத்மாக்களும், சங்கராச் சாரிகளும், பண்டார சன்னதிகளும் ஆகிய ஞானிகள் ஆகாயக் கோட்டையென்றோ, வீண் கனவென்றோ தான் சொல்லுவார்கள்.

ஆனால், மணி ஒன்றுக்கு 700 மைல் வேகம் போகக் கூடிய ஆகாய விமானம் செய்து பார்த்தாய் விட்டது.

இனியும் இதிலிருந்து பல அபிவிர்த்திகள் நடந்து வேகத்தைப் பெருக்க வசதி இருக்கிறது என்பதைக் கண்டு வருகிறார்கள். ஆகவே மேல்நாட்டு மக்களுடைய ஆசையும், முயற்சியும் இந்த மாதிரியான துறைகளில் சென்று கொண்டிருக்கின்றன.

நம்முடைய முயற்சிகள் கிருஷ்ணன் மனிதனா - கடவுளா?

ராமாவதாரம் முந்தியா - கிருஷ்ணாவதாரம் முந்தியா?

பூமியை ஆதிசேஷன் தாங்கினால் ஆதிசேஷனை யார் தாங்குகிறார்?

உலகத்தை இரணியாட்சதன் பாயாய்ச் சுருட்டிக் கொண்டு சமுத்திரத்துக்குள் புகுந்து கொண்டான் என்றால், அப்போது சமுத்திரம் எங்கு? எதன் மேல் இருந்தது?

மகாவிஷ்ணு பன்றி அவதாரமெடுத்தபோது என்ன ஆகாரம் சாப்பிட்டார்?

சிவனும் விஷ்ணுவும் (ஆணும் ஆணும்) சேர்ந்தால் பிள்ளை எப்படிப் பிறந்திருக்கும். இந்திரியத்தை வாய் வழி உட்கொண்டால் பிள்ளை பிறக்குமா?

அப்படியானால், இப்போது ஏன் அப்படிப்பட்ட எவருக்கும் பிள்ளை பிறப்பதில்லை?  என்பது போன்ற முட்டாள்தனமானதும், போக்கிரித்தன மானது மானப் பிரச்சினையில் நமது சாஸ்திரிகளுடைய ஆராய்ச்சிகள் சென்று கொண்டிருக்கின்றன.

இவ்வளவோடு நின்று விடுகின்றோமா?

சந்திர லோகத்தைப் பார்க்க இப்போதுதான் நமது வெள்ளைக்காரர்கள் நினைத்து இருக் கிறார்கள். நம்முடைய பெரியவர்கள் எத்தனையோ காலத்துக்கு முன் சந்திரனைப் பார்த்தாகி விட்டதென்றும், நம்முடைய குருவின்மார் மனைவிகள் சந்திரனைப் புணர்ந்து புதனைப் பெற்று இருக்கிறார்கள் என்றும், அதற்காகப் புருஷர்கள் அந்தச் சந்திரன் மீது கோபித்து அவனை மாதத்திற்கு ஒரு முறை தேயவும், வளரவும் செய்து விட்டார்கள் என்றும், அது மாத்திரமல்லாமல் சந்திரனையும் அவனுக்கு வெகுதூரத்தில் இருக்கும் சூரியனையும், சராசரி வருஷத்துக்கு ஒரு முறையாவது (ராகு) கடிக்கச் செய்து அந்த விஷமிறங்க நமது சாஸ்திரிகள் ஜபம் செய்கிறார்கள் என்றும் சொல்லி விடுகிறோம்.

ஆகவே வெள்ளைக்காரர்களுடைய அறிவிற்கும், நம் சாஸ்திரிகளுடைய அறிவுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்பதையும், யார் கெட்டிக்காரர்கள், புத்திசாலிகள் என்பதையும் நீங்களே கண்டுபிடியுங்கள்.

 - விடுதலை நாளேடு 15 11 19