வெள்ளி, 18 மார்ச், 2022

சொந்த பணத்தை செலவழித்த பெரியார்

#எப்பேர்ப்பட்ட_தலைவர்_பெரியார் 

1938 லேயே வருடத்திற்கு ரூ.900 வருமானவரி கட்டியவர் தந்தை பெரியார்...

அவர் மீது வாரி இறைக்கப்படும் புழுதிகளுக்கு அவரே பதில் கூறுகிறார்...

" எனக்கு அரைவயிற்றுக்காவது சோற்றுக்கு மார்க்கமிருக்கிறது.  காங்கிரசுக்கு வரும் போதே பல பதவிகளும் இருந்தன.

ஆதலால் தேசியத் தொண்டினாலோ, அல்லது பொது வாழ்வினாலோ தான் வயிற்றைக் கழுவ வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கோ, என் குடும்பத்துக்கோ எப்போதுமில்லை. 

கவுரவத்தை உத்தேசித்தோமென்றால் அதுவும் காங்கிரசின் பொது வாழ்விற்கு முன்னரே மக்களால் எவை, எவை உயர்ந்த கவுரவமான ஸ்தானங்களாக கருதப்பட்டனவோ, அவைகளிலேயும் ஓரளவு அங்கம் வகித்தும், தலைமை வகித்தும் பதவி பெருமைகள் அனுபவித்து வந்திருக்கிறேன்.

நான் காங்கிரஸ் ஃபாரத்தில் கையெழுத்துப் போடும்போது...

1). எனது இன்கம்டாக்ஸ் வருஷம் 900 ரூபாய். 

2). எனது வீட்டு வரி வருஷம் 2500 ரூபாய்;

எனது பொதுநல கவுரவப் பதவியோ முனிசிபல் சேர்மென் பதவியை ராஜினாமா செய்த பின்பும் சர்க்கார் எனக்கு ஆனரரி இன்கம்டாக்ஸ் கமிஷனர் வேலை கொடுத்தார்கள்.

 அதற்கு தினம் 100 ரூபாய் அலவன்சும் இரட்டை முதல் வகுப்பு ரயிலில் படியும் உண்டு.

இவைகளுக்கு எல்லாம் இப்போதும் சர்க்காரில் ரிகார்டு இருக்கிறது.
இவையெல்லாம் பொய்யாக இருக்க முடியாது. 

ஏன் இவைகளைச் சொல்லுகிறேன் என்றால்...

என்னைப் பற்றிய விஷமத் தனமாக இங்கு விஷயங்கள் விவகாரத்திற்கு வந்ததினால்தான். ஏதோ என்னுடைய வாழ்நாளை வீணாகக் கழிக்காமலிருப் பதற்கே ஒரு பயனுள்ள தொண்டைச் செய்யலாமென்று கருதி இதில் ஈடுபட்டிருக்கின்றேனேயன்றி பதவிக்கோ பணத்துக்கோ எதற்காக வுமல்ல! "

 - தந்தை பெரியார் ( ‘குடிஅரசு’, 23.01.1938 )

செவ்வாய், 1 மார்ச், 2022

தந்தை பெரியாரை பற்றி கவிஞர் கண்ணதாசன் பாடிய வரிகள்


தந்தை பெரியாரை பற்றி கவிஞர் கண்ணதாசன் பாடிய வரிகள் என்றும் வாழ்பவை.
ஊன்றிவரும் தடி சற்று நடுங்கக்கூடும்
உள்ளத்தின் உரத்தினிலே நடுக்கமில்லை;
தோன்றவரும் வடிவினிலே நடுக்கம் தோன்றும்
துவளாத கொள்கையிலே நடுக்கமில்லை!
வான் தவழும் வென்மேகத் தாடி ஆடும்
வளமான சிந்தனைக்கோர் ஆட்டமில்லை
ஆன்றவிந்த பெரியார்க்கும் பெரியார்
எங்கள் அய்யாவிக்கிணை எவரே மற்றோர் இல்லை!
நீதிமன்றின் நீதிக்கும் நீதி சொல்வார்
நெறிகெட்டு வளைந்ததெல்லாம் நிமிர்த்திவைப்பார்
ஜாதி என்னும் நாகத்தைத் தாக்கித் தாக்கி
சாகடித்த பெருமை கைத்தடிக்கே உண்டு!
ஆக்காத நாள் இல்லை ஆய்ந்து தேர்ந்து
அளிக்காத கருத்தில்லை அழுத்தமாக
தாக்காத பழமையில்லை தந்தை நெஞ்சில்
தழைக்காத புதுமை இல்லை தமிழ் நிலத்தில்!
நாதியிலார் நாதிபெற நாப்படைத்தார்-
நாற்பத்தி அய்ங்கோடி மக்களுக்கும்
பேதமிலா வாழ்வுதரப் பிறந்து வந்தார்
பிறக்கையிலே பெரியாராய்த் தான் பிறந்தார்!