வியாழன், 24 ஆகஸ்ட், 2023

ஹிந்தி நுழைகிறது - தந்தை பெரியார்


3

செகண்டரிக் கல்விமுறையில் திருத்தம் என்ற பெயரில் 49, 50ஆம் ஆண்டுக்காக என்று சென்னை சர்க்கார் சென்றமாதம் 30ஆம் நாள் வெளியிட்டிருக்கும் திட்டத்தின் வழியாக மீண்டும் சென்னை மாகாணத்தில் இந்தியை நுழைக்கின்றார்கள்.

சென்னை சர்க்கார் செய்திருக்கும் கல்வி மாறுதல்களில் குறிப்பிடக் கூடியவை.

(1) முதல் பாரத்திலிருந்து 3ஆம் பாரம் வரை கைத்தொழிலை அடிப்படையாக வைத்துப் பாடத்திட்டம் வகுத்திருப்பது.

(2) ஆந்திரம், கன்னடம், மலையாளம் ஆகிய மண்ட லங்களில் இந்துஸ்தானி, சமஸ்கிருதம், அரபு, பாரசீக மொழி அல்லது உருது ஆகியவைகளில் ஏதேனும் ஒன்று 2ஆவது மொழியாக கட்டாயமாகப் படிக்க வேண்டிய தாகும். தமிழ் மண்டலத்தில் மட்டும் மாணவர் விரும் பினால் படிக்கக் கூடிய விருப்பப்பாடமாக இருக்கும்.

(3) ஆங்கிலம் 2 ஆம் பாரத்திலிருந்து 6ஆம் பாரம் வரை கற்பிக்கப்படும். இது 3 ஆவது மொழியாக இருக்கும்.

குறிப்பிடத்தகுந்த இந்த மூன்று மாறுதல்களைப் பற்றியும் நம் கருத்து என்ன? என்பதை விளக்க வேண்டு மென்றாலும், இப்போது 2 ஆவது மாறுதலைப்பற்றி மட்டும் அதாவது தமிழ் நாட்டில் விரும்பினால் இந்தி படிக்கலாம், விரும்பாவிட்டால் கட்டாயம் இல்லை; ஆனால் தமிழ்நாடு தவிர்த்த மற்ற பகுதிகளில் கட்டாய மாகப் படிக்க வேண்டும். என்கிற இரட்டை முறை (சின்ன வருணாசிரம முறை)யைப் பற்றி மட்டும் குறிப்பிடுகிறோம்.

ஆச்சாரியாரின் மந்திரிசபை, வடநாட்டில் யாருக்கோ ஒருவருக்கு வாக்குக் கொடுத்தேன் என்ற சாக்கைக் கூறிச் சென்னை மாகாணத்தில் இந்தியைக் கட்டாய இந்தியாகத் திணித்து ஆயிரக்கணக்கான தாய்மார்களையும், கட்டிளங் காளைகளையும் வெஞ்சிறை (காங்கிரஸ்காரர் புகுந்த சொகுசான சிறையல்ல) புகச் செய்தும், ஈவு இரக்கம் என்பதைச் சுட்டுப் பொசுக்கி விட்ட ஆட்சியாளர்களால், திராவிடத்தின் தனிப் பெருந்தந்தை வெப்பமிகுந்த பெல்லாரிச் சிறையில் தள்ளப்பட்டு, உடல் வாடவும் தாளமுத்து-நடராஜர்களின் பிணங்களைக் கண்டும் வெறி தணியாமல் அற்பாயுளில் ஓடிவிட, அதன்பின் வந்த ஆலோசகர் சர்க்கார் அந்தக் கட்டாய இந்தியை ரத்துச் செய்ததை நாங்கள் மறக்கவில்லை என்பதை இப் போதையச் சென்னைச் சர்க்கார் - ஓமந்தூரார் மந்திரிசபை இந்த உத்தரவால் காட்டிக் கொண்டிருக்கிறது.

எதிர்ப்பிருப்பதை மறக்காத இந்த மந்திரிசபையார், எதிர்கால விஞ்ஞான வாழ்வுக்குக் கொஞ்சமும் பயன் படக்கூடிய நிலையில் இல்லாத, மனிதப் பண்பை விளக் கும் இலக்கியப் பெருமையையுடையது என்றுகூட சொல் லும்படியான நிலையில் இல்லாத, மிகுந்த பிற்போக்குடைய இந்தியை மீண்டும் சென்னை மாகாணத்தில் திணிக்க முன்வந்து விட்டார்கள்.

தமிழ், தெலுங்கு போன்ற தொன்மையும், பண்பாடும் நிறைந்த மொழி மண்டலங்களில், அவ்விரண்டும் அற்ற இந்தியைப் புகுத்த நினைப்பது தவறு! புகுத்துவதற்காகச் செய்யப்படும் முயற்சி எவ்வளவு பெரியதாயிருந்தாலும், நீண்ட காலம் தொடர்ந்து அந்த முயற்சி நடந்தாலும் திராவிட மண்டலத்தில் அது நிறைவேறாது! கருதுகிற பலன் கைகூடாது என்ற அறிஞரின் வாக்கியத்தை ஆள வந்தார்களுக்கு நாம் நினைப்பூட்டுகிறோம். இக்கருத்தைச் சொல்லுகிறவர் பெரியார் இராமசாமி அல்ல! சர்.கே.வி ரெட்டி நாயுடும் அல்ல! பசுமலைப் பாரதியாரும் அல்ல! ஒரு சென்னை மாகாணத்தவரே அல்ல! வடநாட்டுக்காரர், ஒரு பல்கலைக் கழகத் துணைவேந்தர், அமர்நாத்ஷா என்பதையும் அறிய வேண்டுகிறோம்.

மக்களின் அறிவு வளர்ச்சிக்குத் துணை செய்ய முடியாத இந்த இந்தியை, இந்தியாவின் பெரும் பகுதியில் பேசினால் புரிந்து கொள்ள முடியும் என்ற காரணத்தையும், வடநாட்டு வியாபாரத்துக்கு வசதியாயிருக்க முடியும் என்ற காரணத்தையும், வடநாட்டுத் தலைவர்களோடு அரசியல் குறித்து அளவளாவ அமைப்புடையது என்ற காரணத்தையும், வேளைக்கு ஒன்றாகக் கூறி வந்த காங்கிரஸ்காரர்களின் உண்மையான நோக்கம், திராவிட நாகரிகம், கலாச்சாரம் ஆகியவைகளைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, திராவிடர்கள் ஆரிய நாகரிகத்தை ஏற்று மானமிழந்து வாழ்வதுடன், வடநாட்டாருக்கு என்றைக் கும் மீளா அடிமைகளாகவே விளங்க வேண்டும் என்பது தான் என்கிற உண்மையைப் பலமுறை நாம் விளக்கி வந்திருக்கின்றோம். இதை நாம் முன்பு கூறியபோது ஒப்புக் கொள்ளாத காங்கிரஸ் மந்திரிகள், இப்பொழுது வெளிப்படையாகவே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அரசாங்க உத்தியோகங்களுக்கு இந்திப்படிப்பும் ஒரு தகுதி என்கிற அமைச்சர்களின் உண்மையான நோக்கம் என்ன?

உன் நாட்டில் உனக்கு உத்தியோகம் வேண்டுமானால் இந்தியைப் படி! என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டு, மாகாணத்தின் மற்ற மண்டலங்களில் இந்தியை, 2 ஆவது மொழியை கட்டாயப்படுத்தி விட்டு, தமிழ் மண்டலத்தில் மட்டும் விரும்பினால் படியுங்கள்! விரும்பாவிட்டால் உங்கள் இஷ்டம்! என்கிற இந்தத் திட்டத்தைக் கண்டு திராவிடர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்று மந்திரி சபை எதிர்பார்க்க மாட்டாது என்று நம்புகிறோம். ஏன் என்றால் இந்தி இந்த நாட்டில் பரவக்கூடாது என்று கருதுபவர்களின் உண்மையான நோக்கம் என்ன? என்பதை இந்த மந்திரிசபை அறிந்தே இருக்க வேண்டும். இந்தி என்பது வேற்று மொழி - வடநாட்டு மொழி என்கிற துவேஷத் திற்காக இந்நாட்டில் எதிர்ப்பு உண்டாகவில்லை. இந்தியைப் பரப்புவதால் இறந்துபட்ட சமஸ்கிருதத்திற்கு - இந்த நாட்டு மக்களைச் சூத்திரர்களாகவும், தீண்டப் படாதவர்களாகவும், வேசி மக்களாகவும் ஆக்கி வைத்த சமஸ்கிருதத்திற்கு - புத்துயிர் கொடுக்கப்பட்டு, பார்ப்பான் காலைக் கழுவிக் குடிப்பதே மோட்சம் என்று கருதும்படி செய்த பழைய நிலைமை மாறி, பார்ப்பானுக்குப் பிறந்த வர்கள் நாங்கள் என்று சொல்லும்படியான கேவலமான புதிய நிலைமை உண்டாகத்தான் பயன்படுவதாயிருக்க முடியும் என்பதையும், இந்த அனுமானம் காட்சிப் பிரமாணத்தினால் கண்டது என்பதையும், இதுதான் இந்தி பரவக் கூடாது என்பவர்களின் உண்மையான நோக்கம் என்பதையும் அறிந்து கொண்டிருக்கிற மந்திரி சபை - மேலும் இந்தியை எதிர்ப்பவர்களின் நோக்கம் தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல், சென்னை மாகாணம் முழுவதுமே இந்தி பரவக்கூடாது என்பதுதான் என்பதை அறிந்து கொண்டிருக்கிற மந்திரி சபை - இந்த இரட்டை ஆட்சி முறையை ஏன் கைக் கொள்ள வேண்டும்? மந்திரிகளின் பொறுப்பற்ற தன்மையை, வஞ்சகமாய்த் தன்னினத்தைக் கழுத்தறுக்கும் கொடுமையை இந் நடவடிக்கை காட்டவில்லையா? என்பதோடு இம்மந்திரி களின் யோக்கியதையைப் பற்றியும் எவருக்கும் சந்தே கத்தைக் கொடுக்காதா? என்றும் கேட்கின்றோம்.

ஆந்திரம், கன்னடம், மலையாளம் ஆகிய மண்டலங் களில் இந்தி அல்லது இரண்டாவது மொழி, கட்டாயம் என்று மந்திரிசபை சொல்வதிலிருந்து, அந்த மண்டலங் களில் உள்ள மக்களைச் சர்க்கார் எப்படிக் கருதுகிறது? சமஸ்கிருத அடிமைகளான அவர்கள் கட்டாய இந்தியை எதிர்க்க மாட்டார்கள் என்கிற நினைப்போ, கையாலாகாத கயவர்கள் என்கிற கருத்தோதானே இந்த வருணா சிரமத்திற்குக் காரணமாய் இருக்க முடியும்! 

ஒரே இனமான திராவிடர்களை, பிரித்தாளும் சூழ்ச்சியே வெற்றிதரும் என்று கண்ட பார்ப்பனர்களின் பழைய வருணாசிரம முறையை இப்போதும் கைக் கொள்வதுதான் வெற்றியைத் தரும் என்ற வஞ்சகமல்லவா இந்த இரட்டை ஆட்சிக்குக் காரணமாகும்? என்றும் கேட்கின்றோம்.

தமிழ்நாட்டுக்கு இந்தி இஷ்ட பாடம் என்றாலும்கூட இதனுடைய பலன் எப்படியாகும்? இன்றைக்கு ஹைஸ்கூல் களில் தலைமை ஆசிரியர்களாய் இருப்பவர்கள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனர்களாகவும், காங்கிரஸ்காரர் களாகவும், காங்கிரஸ் ஆட்சிக்கு அடிபணிந்துதானே ஆகவேண்டும் என்கிற நிலையிலிருப்பவர்களாகவுமே இருக்கின்றார்கள். இப்பேர்ப்பட்ட தலைமை ஆசிரியர்கள் இந்தச் சட்டத்தை எப்படிப் பயன்படுத்திக் கொள்வார்கள்?

படிக்கிற மாணவர்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் வளர்ந்து கொண்டு வருகிறது! படிப்புச் சொல்லிக் கொடுக்கும் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கையோ அன்றிருந்த மேனிக்கு அழிவில்லாமல் இருக்கிறது! இந்த நிலைமையில் மாணவனுக்கு இடமில்லை என்பதையே பல்லவியாகத் தலைமையாசிரியர்கள் பாடிக் கொண்டு வருகிறார்கள் என்பதைக் கழிந்த பல ஆண்டுகளாகப் பார்த்துக் கொண்டு வருகிறோம். பள்ளிக்கூடத்தில் இடமில்லை, படிப்பவன் விரும்பினால் இந்தி படிக்கலாம் என்கிற இந்த நிலைமையைத் தலைமை ஆசிரியர்கள் எப்படிப் பயன்படுத்துவார்கள்? மாணவனைப் பள்ளிக் கூடத்தில் சேர்க்க வந்திருக்கும் கார்டியன், இந்த நெருக்கடியான கட்டத்தில், எப்படியாவது பையன் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து விட வேண்டுமென்று விரும் புவானா? அல்லது இந்தியை வெறுப்பதினால் தன் பையன் படிக்காமலே போகட்டும் என்பதை விரும்புவானா?

100க்கு 90 தற்குறிகளாக இருக்கும் திராவிட மக்களைக் கார்டியனாகப் பெற்றிருக்கும் மாணவர்கள், தலைமை ஆசிரியர் வழியாகக் கட்டாயப்படுத்தப்பட்டு, இந்தி படித்தேயாக வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டு தான், பெயரளவில் இந்தி இஷ்ட பாடம் என்று இன்றைய மந்திரிசபை இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

ஆகவே, தமிழ் மண்டலத்தில் இந்தி இஷ்ட பாடம் என்றாலும், உண்மையாய்க் கட்டாய பாடமாகவே ஆகிறது என்பதைத் தமிழ் மக்களும் தெரியாதவர்களல்லர்.

இப்போது தமிழறிஞர்கள் என்று பெயர் படைத் திருக்கிற தமிழ்ப் பெரியார்கள் என்ன செய்யப் போகின்றார்கள்? மற்ற திராவிட மொழிகளின் அறிஞர்கள் என்ன செய்யப் போகின்றார்கள்? 

இந்தியை வரவேற்றுச் சிந்து பாடமாட்டார்கள் என்பதுறுதி என்றாலும், ஆட்சியின் கொடுங்கோன்மைக்கு அஞ்சி வாய்மூடி மவுனிகளாக விளங்குவார்களா? அல்லது திராவிடத்தின் சிதைவுக்குத் திட்டமிட்டுச் செய்யப்படும் இந்தத் தீச் செயலை தீரத்துடன் எதிர்த்து, சென்னை மாகாணத் திலேயே இந்தி நுழையாதபடி எதிர்ப்பு முன்னணியில் நிற்கப் போகிறார்களா?

திராவிடத்தின் மொழியறிஞர்கள்தான் திராவிடத்தின் சீர்கேட்டிற்குக் காரணம் என்றிருக்கும் பழி மறைவதற்கு, அந்த அறிஞர்களுக்குத் தரப்பட்டிருக்கும் கடைசிச் சந்தர்ப்பம் என்றே நாம் உண்மையாய், உறுதியாய் இந்தத் திட்டத்தைக் குறித்து எண்ணுகிறோம்.

திராவிடப் பெருங்குடி மக்களே! உங்கள் நாட்டை ஆளப்போவது இந்தி மொழி! ஆளுகிறவர்கள் வட நாட்டுக் கையாட்கள்! 

ஆட்டி வைப்பவர்கள் வடநாட்டுப் பனியாக் கும்பல்! சுரண்டும் கும்பல் தயாரித்த, உங்கள் சுகவாழ்க்கைக்கு வழிகாணாத, உங்களை மனிதர் களென்றே மதியாத அரசியல் நிர்ணயத்திட்டமே உங் களுக்கிடப்படும் விலங்கு! இருந்து வரும் கொஞ்சநஞ்சம் உரிமைகளுக்கும் வேட்டு வைக்கிறது, எடுத்துவிடப் போகும் வகுப்பு வாரித்திட்டம்! இதனுடைய பொருள் என்ன? 

திராவிடன் வாழ்வதற்குத் திராவிடத்தில் உரிமையில்லை! உரிமையற்ற, ஒடுக்கப்பட்ட மக்களாக, விலங்கு களிலும் கேடாக வாழ்ந்தால் வாழவேண்டும். இன்றேல் வாழ்வா-சாவா என்ற இரண்டிலொன்றை முன் நிறுத்தி எதிர்த்து நிற்க வேண்டும். இந்த இரண்டில் ஒன்றுதானே இந்தத் திட்டங்களின் பயனாய் இருக்க முடியும். நீங்கள் என்ன முடிவு கட்டுகிறீர்கள்? எதை விரும்புகிறீர்கள்?

'குடிஅரசு' -  துணை தலையங்கம் - 05.06.1948


ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

பெண்களுக்கு கல்வியறிவு கிடைத்தால் சுயமரியாதை உணர்ச்சி தானாகவே வந்துவிடும் - தந்தை பெரியார்


3

தலைவரவர்களே! சகோதரிகளே!! சகோதரர்களே!!!

சுயமரியாதை இயக்கம் என்பதைப் பற்றி பேச வேண்டுமென்பதாக நண்பர் பெருமாள் அவர்களால் இக்கூட்டம் கூட்டப்பட்டிருக்கின்றது. நாங்கள் திரு. பெருமாளின் குமாரத்தியின் திருமணத்திற்கு என்று அழைக்கப்பட்டு இங்கு வந்தோம், இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த ஊரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசவேண்டுமென்ற ஆசை அநேக நண்பர்களுக்கு இருந்ததால் நானும் இந்த சந்தர்ப்பத்தை வீணாக்காமல் சிறிது பேசலாமென்றே  கருதுகின்றேன். சுயமரியாதை இயக்கத்தின் தீவிரமான கொள்கைகளையெல்லாம் இப்போது உங்களுக்கு எடுத்துச் சொல்வது என்பது சற்று கஷ்டமானாதா யிருக்குமென்றே கருதுகின்றேன்.

ஏனென்றால் இதற்கு முன் இங்கு இந்தப்பிரசாரம் நடத்தப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. அதன் தீவிரக் கொள்கைகளை நீங்கள் முதல் முதலாக கேட்கும்போது. அது உங்களைத் திடுக்கிடச் செய்யும். அவற்றின் உண்மையை அறிவது என்பது இன்றே சுலபத்தில் புலப் படக் கூடியதாகாது. ஆதலால் உங்களுக்குச் சிறிது நிதானமான முறையில் தான் பேச வேண்டியவனா யிருக்கிறேன். அதாவது இந்த நான்கு, அய்ந்து வருஷங் களுக்கு முன் கிராம ஜனங்களின் முன் நான் எந்த நிலையில் பேசினேனோ அது போல் முதல் பாடத்திலிருந்து பேச வேண்டியவனாயிருக்கிறேன். ஏன் இந்தப்படி சொல்லு கிறேன் என்றால் திரு. பெருமாள் வீட்டுக் கல்யாணத்திற்குப் பார்ப்பான் வரவழைக்கப்படாததாலேயே இவ்வூரார் அவர்மீது மிகுந்த கோபமாய் இருப்பதாகவும், நான் கோவில் குளங்களைப்பற்றி குற்றம் சொல்லுகின்றவன் என்பதாகவும், ஜாதிகளையெல்லாம் ஒன்றாக்க வந்திருக்கின்றேன் என்பதாகவும், குற்றம் சொல்லி இந்தக் கூட்டத்திற்கு யாரும் போகக்கூடாதென்று சிலர் பிரசாரம் செய்தார்களாம். இப்படிப்பட்ட முயற்சிக்காரர்கள் முன்னால் பார்ப்பனர் களின் நடத்தையையும் கோவில் குளங்களினுடைய தொல்லையையும் எடுத்துச் சொன்னால் எப்படி அது உங்களால் நடு நிலையில் கிரகிக்கப்படும் என்பதை நீங்களே நினைத்துப்பாருங்கள். புதிய சங்கதி எதுவானாலும் காதை மூடிக்கொள்ளவே நமது மக்கள் கற்பிக்கப்பட்டிருக் கின்றார்கள். சிறு குழந்தைப்பருவத்தில் நமக்குப் புகுத்தப்பட்ட விஷயங்களையே ஆராய்ச்சியின் மூலம், அறிவின் மூலம் கண்ட, முடிவென்று கருதி அதற்குத் தலை கொடுத்துக்கொண்டு இருக்கின்றோம். நமது உள்ளத்தில் எது எது பதிக்கப்பட்டு விட்டதோ அதெல்லாம் தேர்ந்த ஞானிகளாலும், தெய்வத்தன்மை பொருந்திய அவதார புருஷர்களாலும் சொல்லப்பட்ட உண்மைகள் என்ற உறுதியுடனே புகுந்தப்பட்டிருக்கிறோம். ஆகையால் புதிய நோக்கங்களையும் தோற்றங்களையும் காண சகிக்காத வர்களாக இருக்கின்றோம். உலகப் போக்கை நாம் தெரிய நேர்ந்தாலும், பார்க்க நேர்ந்தாலும் அதன் அனுபவத்தின் மேன்மையை அடையவும் பாராட்டிப்பேசவும், தயாராய் இருக்கின்றோமே அல்லாமல் அதை நமது வாழ்க்கையுடன், நமது நாட்டு எண்ணங் களுடன் பொருத்திப் பார்ப்பதற்குச் சிறிதும் எண்ணுவதே கிடையாது. நமது மக்களின் இந்த மாதிரியான நிலையைப் பார்த்துப் பார்த்து, மனம் கஷ்டப்பட்டதால் தான் நாங்கள் இந்த துறையில் இறங்கித் தொண்டு செய்ய வேண்டியவர்களானோம்.

சுயமரியாதை

சுயமரியாதை இயக்கம் என்பதின் முக்கிய கொள்கைகள் என்பவை ஒன்றும் புதி தானதோ, அல்லது ஏதாவது அதிசயமானதோ என்று நீங்கள் மலைக்க வேண்டிய தில்லை. அது மனிதன் அறிவுபெறவும், சமத்துவம் அடையவும், சுதந்திரம் பெறவும் பாடு படுகின்றது. அறிவுக்கும், சமத்துவத்திற்கும் சுதந்திரத்திற்கும் எதிராயும் தடையாயும் இருக்கும் எதையும் அடியோடு ஒழிக்க தைரியம் கொள்ளுகின்றது. இந்த நிலையில் மக்களின் மூடத்தனத்தினாலும் தாழ்வினா லும், அடிமைத்தனத்தினாலும் பயனடைந்து வாழ் கின்றவர்களுக்குச் சுயமரியாதை இயக்கம் ஒரு கோடாலியாய் காணப்படுவதானால் அதிசய மொன்று மில்லை. எங்களைக் கண்டால் துவேஷமும், வெறுப்பும் ஏற்படத்தான் செய்யும், எங்களை வையவும் தொல்லைப் படுத்தவும் அவரவர்கள் மனம் தூண்டத்தான் செய்யும், இவ்வியக்கத்தைக் கையாளுகிறவர்களுக்கு  அவற்றை யெல்லாம் சமாளிக்க சக்தி இருந்தால்தான் இவ்வியக்கத்தால் ஏதாவது பலன் ஏற்படமுடியும். எதிர்ப்புக்கும் தொல் லைக்கும் பயந்தால் ஒரு காரியமும் நடவாமல் போவதோடு பிற்போக்கும் ஏற்பட்டுவிடும்.

சாதாரணமாக நாங்கள் இந்த ஊர் பொது ஜனங்களின் பாராட்டுதலையும், வணக்கத்தையும் மரியாதையும் பெற்று கொஞ்சம் பணமும் சம்பாதித்துக் கொண்டு போக வேண்டுமானால் எங்களால் சுலபத்தில் முடிந்துவிடும். நமது ஜனங்களின் முட்டாள்தனம் எங்கு, எங்கு இருக்கின்றது என்பது எங்களுக்குத் நன்றாய்த் தெரியும்.

உதாரணமாக, நாங்கள் தேசபக்தர்களைப் போல கதர் வேஷம் போட்டு கையில் கொடியைப் பிடித்துக்கொண்டு பாரதமாதாவுக்கு ஜே! சுயராஜ்யத்திற்கு ஜே! மகாத்மாவுக்கு ஜே! என்று கூறிக்கொண்டோ, அல்லது பெரிய கடவுள் பக்தர் போல் வேஷம் போட்டுக் கொண்டு மஞ்சள் உடையோ, காவி உடையோ கட்டிக் கொண்டு பட்டைநாமம் போட்டுடக் கொண்டு குடை, தேசகண்டி இவைகளுடன் நாராயண மூர்த்தி கோவிந்தா கோவிந்தா என்றோ சொல்லிக்கொண்டு பஜனை கோஷ்டியுடனோ கூட்டமாய் வந்தோமானால் நீங்கள்கும்பிட்டு காசு கொடுத்துவிட்டுப் போவீர்கள் என்பது எங்களுக்கு நன்றாய்த் தெரியும். இதற்காக ஒரு துரும்பைக் கிள்ளிப் போடவேண்டிய அவ்வளவு சிறிய கஷ்டம்கூடநாங்கள் படவேண்டியதில்லை.

ஆனால், நாங்களோ இன்று அப்படி சொல்லி வயிறு வளர்ப்பதனுடைய புரட்டுகளை எடுத்துச்சொல்லுகின்ற வேலையை மேற்போட்டுக் கொண்டிருக்கின்றோமாதலால் சோம்பேறிப் பிழைப்புக்காரர்களுடைய கோபத்திற்கும் பழிதீர்த்துக்கொள்ளும் வஞ்சகத்திற்கும் ஆளாக வேண் டியவர்களாக இருக்கின்றோம். இந்திய நாடு சூழ்ச்சிக் காரருடைய ஆட்சிக்கு உட்பட்டகாலம் முதலே எங் களைப்போல் ஒரு கூட்டம் பல தடவை தோன்றி சூழ்ச்சிகளை வெளிப்படுத்தி வந்திருக்கின்றதானாலும் சூழ்ச்சிக்காரர்களின் சாமாத்தியமானது, அவற்றை லட்சி யப்படுத்தக் கூட முடியாமல் செய்துகொண்டே வந்திருக் கின்றது. இன்றைய தினம் அறிவு வளர்ச்சிக்கும், சமத்துவத் திற்கும், சுதந்திரத்திற்கும் விரோதமான காரியங்கள் என்று எதை எதை நாங்கள் கருதுகின்றோமோ அவற்றையெல்லாம் எங்களுக்கு முன்னும் அநேக பெரியார்கள் கருதி வெகுகடினமாக கண்டித்து பேசி இருக்கிறார்கள்.

உதாரணமாக ஜாதி மதத்தை கண்டித்தும், வேத சாஸ்திரங்களைக் கண்டித்தும், கோவில், குளம், கல்லுருவம் தாம்பர உருவம் ஆகியவைகளைக் கண்டித்தும், பூஜை,  உற்சவம், சடங்கு ஆகியவைகளைக் கண்டித்தும், எத்த னையோ பெரியோர்கள் பேசியிருக்கின்றார்கள். சாஸ்திரத் தைச்சுட்டு சதுர் மறையைப் பொய்யாக்கி சூத்திரத்தைக் கொண்டு சுகம் பெறுவதெக்காலம் என்று ஒருவர் சொல்லி யிருக்கிறார். ஒரு பெரியவர் கல்லையும் செம்பையும் வணங்கும் கசடர்காள் என்று சொல்லியிருக்கின்றார். ஜாதி, மத பேதமெல்லாம் சூழ்ச்சியால் ஏற்படுத்தப்பட்டது என்று சொல்லியிருக்கின்றார்.   இன்னும் எவ்வளவோ சொல்லி இருக்கின்றார்கள். ஆனால், நம் மக்களோ அப்பெரி யோர்களை யெல்லாம் தெய்வீகத் தன்மை கொண்டவர்கள் என்றும், ஞானிகள் என்றும் சித்தர்கள் என்றும் கருதி இன்றும் வணங்குகின்றார்கள்.  ஆனால், அப்பெரியோர் சொன்னவை களைக் கவனித்துப் பார்க்கும்படி யாராவது சொன்னால் மாத்திரம் அவர்கள் மீது மிருகப் பாய்ச்சல் பாய்கின்றார்கள்.  இது ஒன்றே போதாதா நம் மக்களின் அறிவின் திறத்தை அளந்து பார்ப்பதற்கு என்று யோசித்துப் பாருங்கள். இந்த மாதிரியான பாமர உணர்ச்சியும் பயங்காளித்தனமும், வைத்ததைச் சுமக்கும் மிருக சுபாவமும் இன்னாட்டு மக்களின் உயர்குணங்களாகப் பாவிக்கப்பட்டு வருவதாலேயே உலகத்தில்  இந்திய நாடு மாத்திரம் வெகுகாலமாகவே அடிமை நாடாகவே, கூலி நாடாகவே சுயமரியாதையும் அறிவும் ஞானமும் அற்ற நாடாகவே இருந்து வருகின்றது. இதற்குக் காரணம் இன்னதுதான் என்பதைக் கண்டுபிடிக்க நம்மவர்களுக்கு இன்னமும் அறிவு ஏற்படவில்லை. ஒரு நாய் வளர்த்து கின்றவன் தன் நாயை மற்றவன்மேல் ஏவிவிடுவது போல் நம்மை யார் சூழ்ச்சி செய்து இக்கெதிக்கு ஆளாக் கினார்களோ, அவர்களேதான் அச்சூழ்ச்சியை ஒழிக்க வரும் ஆட்கள் மேல் நம்மை உசுபடுத்தி விடுவதால் உண்மையை உணர கவலை கொள்ளாமல் அவர்கள் கைகாட்டின பக்கம் திரும்பிக் கொண்டு கத்துகின்றோம்.

நமது நாட்டு அடிமைத்தனம் எத்தனை காலமாய் இருந்து வருகின்றது என்பதை நினைத்துப் பாருங்கள். தர்மராஜ்யம், இராமராஜ்யம், சத்திய கீர்த்தி அரிச்சந்திர ராஜ்யம் முதலிய அவதார ராஜ்யம்  முதல் தெய்வீகத்தன்மை பொருந்திய மூவேந்தர் முதலிய சரித்திர ராஜ்யம் வரை இந்திய மக்கள் நிலைமையைச் சற்று ஞாபகப்படுத்தி ஆராய்ச்சி செய்து உண்மையை கண்டு பாருங்கள். அந்த நிலைக்கு இந்த நிலைமேலானதா? கீழானதா? என்று சுயமரியாதைக்கண்ணாடி மூலம் பாருங்கள். ஞானக் கண்ணாடி மூலம் பாருங்கள். சுதந்திரம், சமத்துவம் என்கின்ற கண்ணாடிகள் மூலம் பாருங்கள்.

நீங்கள் எந்த பார்ப்பனர்களையும் கேட்டுப்பாருங்கள். தங்கள் நிலை இன்றையை நிலையைவிட அன்று அதாவது அவதார ஆட்சியிலும் மூவேந்தர் ஆட்சியிலும் மேலாயிருந்தது. ஆனால், இன்று கீழாயிருக்கின்றது என்றுதான் சொல்லுகின்றார்கள்.  ஆனால், அவர்கள் தவிர மற்ற மக்களாகிய சூத்திரர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்ட ஜாதியர்கள் என்று இழிவுபடுத்தி இருக்கிற நம்மில் 100க்கு 99 ஜனங்களைக் கேட்டுப் பாருங்கள். நெஞ்சில் கையை வைத்து நினைத்துப் பாருங்கள். அன்றுக்கு இன்று எவ்வளவு மேலான நிலையில் இருக்கின்றோம் என்பதை ஒவ்வொரு துறையாய் ஆராயுங்கள் உண்மை காண்பீர்கள். இதோடு நின்று விடாமல் இந்த நிலையோடு திருப்தி அடையாமல், இன்னும் மேலே போகவேண்டும் என்று சொல்லுங்கள். எவ்வளவு மேலே போகவேண்டுமானாலும் நானும் கூடவே வர பாடுபடுகின்றேன். ஆனால் பழைய நிலையே மேல் அதற்கே போக வேண்டும் என்றுசொன்னால் அதைச் சகிக்க முடியவில்லை. அரைநிமிஷம்கூட அதை ஆதரிக்க முடியாது. உலகம் அறிவு பொருள் முதலிய அகத்திலும் புறத்திலும் சமத்துவத்தையும் பூரண சுயேச்சையையும் அடைய தீர்மானித்து விட்டது. இந்தியா மாத்திரம் மூடர்களாய், அடிமைகளாய் இழிமக்களாய் இருக்கும் அவதார ராஜ்ஜியத் திற்குப் போகவேண்டுமென்றால் இந்நாடு அடியோடு அழிந்து போவதே மேலான காரியமல்லவா?

நண்பர்களே, உலகத்தை ஒருகண்ணில் பார்த்து இந்தியாவை ஒரு கண்ணில் பார்த்து, இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உண ருங்கள். நம் கல்வி, செல்வம், வாழ்வு, விவசாயம் வீரம், மானம், அறிவு ஆராய்ச்சி, முற்போக்கு ஆகியவைகள் எல்லாம் எப்படி இருந்தது, இருக்கிறது. மற்ற நாடுகள் எப்படி இருந்தன, இருக்கின்றது என்பவைகளை சிந்தித்துப் பாருங்கள் என்று சொல்லி, ஒவ் வொன்றிலும் வெளிதேசத்தையும் இந்தியாவை யும் ஒப்பிட்டு பார்க்கும்படி விளக்கிக் காண் பித்து விட்டு உட்கார்ந்தார்.

"உபசாரப்பத்திரம்"

இந்த சமயத்தில் ஒரு வாலிபர் கடலூர் வாலிபர்கள் சார்பாக திரு இராமசாமிப் பெரியாருக்கு உபசாரப்பத்திரம் படிக்க வேண்டும் என்று சொல்லி அதன் பிரதி ஒன்றை தலைவரிடம்  கொடுத்தார். தலைவர் அதை வாங்கித் தானே வாசித்துப் பார்த்தார் அவ்வுபசாரப் பத்திரத்தில் முதல் இரண்டு மூன்று வாக்கியங்களில் திரு.இராமசாமியை பாராட்டும் பாவனையாகவும் பின் இரண்டு வாக்கியத்தில் கதரைப்பற்றிய அபிப்பிராயத்தை விளக்க வேண்டுமென்றும், தாலி கட்டுவது அடிமைத்தனத்திற்கு அறிகுறி என்று சொல்லும் தங்கள் மனைவியார் ஏன் தாலி கட்டி இருக்கிறார் என்றும் கேள்வி கேட்கும் பாவனையாக எழுதப்பட்டிருந்தது. 

பின்னர் திரு. இராமசாமி எழுந்து பதில் சொல்லும் முறையில் தாலி கட்டிக்கொண்டிருப்பது அடிமைத் தனத்திற்கு அறிகுறி என்று அநேக பெண்கள் இன்னமும் உணரவில்லையென்றும், உணர்ந்த பல பெண்களும் தாங்கள் அடிமைகளாய் இருப் பதைப்பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறார்கள் என்றும், சிலர் சமுகத் துறைக்குப் பயந்து கட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் எந்த எண்ணத்தின் மீது தனது மனைவி யார் கட்டிக் கொண்டிருந் தாலும் அவர்களது இஷ்டத்திற்கு விரோ தமாய் பலவந்தம் செய்யத் தான் துணியவில்லை என்றும் சொன்னார். ஒருவர் மத்தியில் எழுந்து உங்கள் குடும்ப மனை வியையே நீங்கள் அடக்கி ஆள முடியவில்லையானால் மற்றவர் களை எப்படி திருத்தமுடியும் என்றார். இதற்கு திரு. இராமசாமி சமாதானம் சொல்லுகையில் மனை வியை அடக்கி ஆளவில்லை என்று சொன்ன நண்பர் மனைவி என்றால் அடிமை என்கின்ற நமது பழைய கொள்கையை மனதில் வைத்துக் கொண்டு பேசுகின் றாரேயொழிய, அவர்கள் இஷ்டப் படி நடக்க அவர்களுக்கு உரிமை உண்டு என்றும் சிறிதும் கவனியா மல் சொல்லுகிறார் என்றே கருது கின்றேன்  பெண்களுக்கு கல்வி யறிவும், சுதந்திர உணர்ச்சியும், சுயமரியாதையும் ஏற்பட் டால் தானாகவே தாலியை அறுத்தெறிந்து விடுவார்கள் சுதந்திர உணர்ச்சி உள்ள பெண்கள் இனி தாலி கட்ட கழுத்தைக் கொடுக்க மாட்டார்கள் என்றும், இவ்விஷயங் களில் மற்ற வெளிஜனங்கள் என்பவர்களுக்கும் குடும்பத் தார் என்பவர்களுக்கும் பிரமாத வித்தியாசம் இல்லை யென்றும், சொல்லிவிட்டு கடைசியாக இந்தக் கூட்டத்தில் அரசியல் சம்பந்தமான பேச்சை தான் வேண்டுமென்றே பேசாமல் விட்டு விட்டதாகவும் ஏனெனில் இதுவே முதல் கூட்டமானதால் அதிகமான விஷயங்களை ஜீரணம் செய்விக்க முடியாதென்று கருதியே அப்படிச் செய்ததாகவும் ஆனபோதிலும் காங்கிரசுக்காரர்கள் என்கின்ற முறையில் சிலர் அவர்களாகவே நம்மை பேசும்படி செய்ததால்தான் அதற்கு நன்றி செலுத்துவதாகவும் கூறி கதரைப்பற்றியும் அதற்கும் அரசியலிற்கும் பொருளாதாரத்திற்கும் உள்ள சம்பந்தத்தைப் பற்றியும் அது எவ்வளவுதூரம் தொழில் முறையிலோ பொருளாதாரத் துறையிலோ உதவி இருக்கின்றதென்றும் அது சமதர்ம கொள்கைக்கும் மனிதனின் இயற்கையான ஆசாபாசங்களுக்கும் முன்னேற் றத்திற்கும் எவ்வளவு இடையூறென்றும் எடுத்துக் காட்டியதுடன் திரு.காந்தியே மில்லை ஆதரிக்க வந்து விட்டதுடன் புதிய யந்திரம் கண்டுபிடிக்க ஆசைப்பட்டு கண்டுபிடிப்பவருக்கு ரூ.1,00,000 சன்மானம் கொடுக்க முன்வந்துவிட்டார் என்றும் கதர் தற்கால சாந்திதான் என்பதாக திரு. ராஜகோபாலாச் சாரியார் சொல்லியிருக்கும் அபிப்பிராயங்களையும் எடுத்துச் சொல்லிவிட்டு கதரை ஒரு தர்ம கைங்கரியமாக வைத்துக் கொண்டாலும்கூட ஏழைகள் பிழைக்கவென்று மக்களிடம் கதரின் பேரால் 4அணா வசூலித்து அவர்களுக்கு ஒரு அணா போய்ச் சேரும்படியிருப்பது தர்ம கைங்கரியம் ஆகாதென்றும் எப்படியெனில் ஒரு நாளைக்கு கால்ராத்தல் நூல் நூற்று ஒரு அணா கூலி அல்லது ஒன்ணேகாலணா கூலி பெரு கின்றார்கள் என்றால் அந்த கால் ராத்தல் நூலால் நெய்யப்பட்ட கதரை வாங்க வேண்டியவர் 6  அணா கொடுக்கிறார்.  இந்த நீளமுள்ள துணியை மில் துணியாக வாங்கினால் 0-2-6 அணாவுக்கு வாங்கலாம், ஆகவே ஒரு அணா தர்மம் செய்யமற்றவனிடம் 3-6 தட்டிப்பறிக்கவேண்டி இருக்கின்றது என்று புள்ளி விபரத்துடன் எடுத்துக் காட்டினார். 

மற்றொரு வாலிபர் ஒரு சந்தேகம். 1. கடவுள் உண்டா இல்லையா? 2. கடவுளை அடையும் மார்க்கம் என்ன? 3. மனிதன் கடமை என்ன? என்று கேட்டார்.

இதற்கு திரு. இராமசாமி, கடவுள் என்பதை தான் ஒரு அர்த்தமற்ற வார்த்தை என்று கருதியிருப்பதாகவும், ஆனால், கடவுளைப் பற்றி பேசுபவர்கள் அதற்குத் தனித்தனி அர்த்தம் கற்பித்துக் கொள்ளுகிறார்கள் என்றும், கேள்வி கேட்பவர் கடவுளுக்கு இன்ன விதமான அர்த்தம் கொண்டு இருக்கிறார் என்று தெரிந்தால் அது உண்டு இல்லை என்றும் எப்படி அடைவதென்றும் ஒரு வார்த்தையில் முடித்து விடலாம் என்று சொன்னார். இதற்குக் கேள்வி கேட்டவர் ஒன்றும் பதில் சொல்லவில்லை.

பிறகு மனிதனுடைய கடமை என்பது தனியாக ஒன்று இல்லை என்றும் அவரவர் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் அனுபவத்திற்கும் சரி என்று பட்ட விஷயங்களின்படி அவரவர் நடந்து கொள்ளுவதைத் தான் கடமையாகக் கொள்ள வேண்டுமென்று சொன்னார்.  

'குடிஅரசு' - சொற்பொழிவு - 20.09.1931

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

சீர்திருத்தம் சுலபமானதா?


4

தந்தை பெரியார்

தலைவர் அவர்களே!  சகோதரிகளே!! சகோதரர்களே!!!

இன்று இந்து சமூகம் என்பதற்கென்று ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற ஒரு பண்டிகை நாளைக்கொண்டு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்.  ஆனால் வேறு இந்துக்கள் இம்மாதிரி கூட்டம் கூடினால் பண்டிகையின் புராணத்தைப் பற்றியும், அதைக் கொண்டாடினால் மோட்சம் அடையலாம் என்றும், பிரசங்கம் செய்யக் கூட்டு வார்கள்.  ஆனால் நீங்கள் இம்மாதிரி பண்டிகையை இனி வெறுக்கும்படி எடுத்துச் சொல்லும் உணர்ச்சி உள்ளவனை கூப்பிட்டிருப்பது மிகவும் போற்றத்தக்கதேயாகும்.

இக்கூட்டத்திற்கு நீங்கள் ஒரு அருமையான தலை வரைக்கண்டுபிடித்தது மிகவும் போற்றத்தக்கதேயாகும்.  தலைவர் திரு.வி.எஸ்.செங்கோட்டையார் அவர்கள் பெரும்செல்வவான், பொது ஜனங்களுக்குப் பெரிதும் உபகாரியாய் இருந்து வருபவர். அநேக நல்ல பொதுக் காரியங்களில் ஈடுபட்டிருப்பார்கள். அதுபோலவே மத விஷயங்களிலும் பெரிதும் ஈடுபட்டு மத சம்பந்தமான விஷயங்களில் அநேக காரியங்கள் செய்து வருபவர்.  ஆதலால் அவரை இக்கூட்டத்திற்குத் தலைமை வகிக்க ஏற்பாடு செய்த உங்களைப் பாராட்ட வேண்டியதே.  எனது உபன்யாசம் பயன்படுமானால் சீர்திருத்தத் துறைக்குத் தலைவரால் அநேக லாபம் ஏற்படும்.  அவர்கள் என்னை குருவென்றும் மற்றும் பிரமாதமாய் புகழ்ந்து பேசினார்.  நான் அதை ஒப்புக்கொள்ளவே இல்லை.  நானும் அவரும் மற்றும் இந்த ஊர்க்காரர்களும் ஒன்றேயாவோம்.  30,40 ஆண்டுகளாகவே தாய்பிள்ளைகள்போல் நெருங்கி பழ கினவர்கள்.  ஒரே துறையில் வியாபாரம் செய்துவந்தவர்கள்.  அநேகர் எனக்கு வரவு செலவுகாரர்களாய் இருந்தவர்கள்.  அக்கிராசனர் வியாபாரத்துறையில் மேலோங்கிவிட்டார்.  நான்  வேறு துறையில்  இறங்கிவிட்டேன்.  இவ்வளவு தான் வித்தியாசம்.  தலைவரும் இந்தத் துறையில் இறங்கி இருந்தால் அபாரமான காரியங்களைச் சாதித்து இருப்பார்.  ஆதலால் அவரை விட நான் ஒன்றும் சிறந்தவனல்ல.  அவர் போன்றவர்கள் இவ்வித உபன்யாசங்களுக்குத் தலைவராகக்கிடைத்துமனமாறுதல் அடைந்தால் நாட்டில் எவ்வளவோ திருத்துப்பாடு ஏற்படும். தவிரவும் வயதில் மூத்தவன் என்கின்ற காரணத்திற்காக மரியாதை செய்வது என்கின்ற மூடப்பழக்க வழக்கத்தை ஒழிப்பது சீர்திருத் தத்தில் பட்டது என்று தலைவர் திரு. செங்கோட்டையா அவர்கள் கருதாததால் தன்னை வயதில் சிறியவன் என்று பல தடவை சொல்லி விட்டார்.  அது சரியல்ல.  அறிவுள்ள வர்களும் , அரும் பெரும் காரியங்களைத் தன்னலமற்று தியாகபுத்தியுடன் செய்கின்றவர்களும்தான் பெரியவர்களே யொழிய, வெறும் வயதைப்பார்த்து, நரையைப்பார்த்து, நடுக்கத்தைப்பார்த்து பெரியவர்கள் என்று மயங்குவது தவறுதலாகும்.  ஆகையால் இன்று நமக்குக்கிடைத்த தலைவர் சரியானதலைவரேயாவர்.  பெரியவரேயாவர். மற்றும் எனக்குப் பல வரவேற்புப் பத்திரங்கள் கொடுத் தீர்கள்.  அதில் நீங்கள் எனது கொள்கைகளை நன்றாய் ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள் என்றும் அந்தக் கொள்கை களுக்கு என்னை ஊக்கமாய் உழைக்கும்படி எதிர்பார்க் கீன்றீர்கள். தூண்டுகின்றீர்கள் என்றுமேதான் கருதி அவற்றை நன்றியறிதலுடன் ஏற்றுக்கொள்ளுகின்றேன்.

சீர்திருத்தம்

தவிர 'சீர்திருத்தம்' என்பதைப்பற்றிப் பேசுவதில் யாருக் குச் சீர்திருத்தம்?  எப்படிப்பட்ட சீர்திருத்தம்?  எதற்காகச் சீர்திருத்தம்?  எது சீர்திருத்தம்?  அவற்றை எப்படி நிர்ண யிப்பது?  அதற்கு முட்டுக்கட்டை எது?  பிறகு அவற்றை எப்படி அமலுக்கு கொண்டு வருவது?  என்பவைபோன்ற விஷயங்கள் சீர்திருத்தத்தலைப்பில் பேச வேண்டிய முக்கிய விஷயங்களாகும்.  அப்படிப்பார்த்தால் சீர்திருத்தம் இப்போது பேசுவது இந்திய மக்களுக்குத்தான் என்றும் அறிவுக்குட்பட்ட சீர்திருத்தம் என்றும், மனிதத் தன்மையும் சுதந்திரமும் அடைவதற்கு என்றும், உலக அக்கம் பக்கங்களை நோக்கி பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுத்து உறுதியான மனதுடன் பழைமையுடன் போராடி சீர் திருத்தமடைய வேண்டுமென்றும்தான் சொல்லக்கூடும்.  எவ்வித சீர்திருத்தத்திற்கும் பலவிரோதிகள் உண்டு.  அவை பழைமை, முன்னோர்வாக்கு, மகான்வாக்கு, வேதத்தின் கட்டளை, சாஸ்திரசம்மதம், வெகுநாளாய் நடந்துவரும் பழக்கவழக்கம், நம்பியே ஒப்புக்கொண்டாக வேண்டியது என்பவைபோன்ற நிர்ப்பந்தம் முதலியவைகள் எல்லாம் சீர்திருத்தத்திற்கு முட்டுக்கட்டையும் விரோதமானவை களுமாகும்.

தன்னைச் சீர்திருத்தக்காரன் என்று சொல்லிக் கொள் ளுகின்றவர்கள் மேற்கண்ட அவ்வளவையும் தங்கள் அறிவால் பிரதிட்சயக் கண்களால் அலசிப் பார்க்க உரிமையும் தைரியமும் உடையவர்களாக இருக்கவேண்டும்.  அதைவிட்டு விட்டு 'மற்றதெல்லாம் சரி' ஆனால் 'மதத்தைப் பற்றி பேசலாமா?  கடவுளைப்பற்றி பேசலாமா?  தேசியத் தைப்பற்றி பேசலாமா?  புராணங்களைப்பற்றி பேசலாமா?  மகான்களைப்பற்றி பேசலாமா?  மகான்கள் அபிப்பிரா யத்தைப்பற்றி பேசலாமா?  நமக்கு அவ்வளவு யோக்கியதை உண்டா' என்பது போன்ற பிடிவாதகுணங்களும், தன்னம் பிக்கையற்ற குணங்களும், 'ஆனால்'களும் உடைய வர்களால் ஒரு நாளும் எவ்வித சீர்திருத்தமும் கைகூடாது.  ஆதலால் சீர்திருத்தக்காரருக்கு உரமும், தனது அறிவில் நம்பிக்கையும், பரீட்சிக்கும் தாராள தன்மையும் வேண்டும்.  இது சமயம் உலகமெல்லாம் சீர்திருத்த மடைந்துவிட்டது.  நாம் மாத்திரம் யாரைத் தொடலாம்?  யார் வீட்டில் சாப் பிடலாம்?  எதைச் சாப்பிடலாம்?  என்பது போன்றவைகளில் இப்பொழுது , இந்த இருபதாவது நூற்றாண்டில் கவனித்து வருகின்றோம்.

உலக மக்கள் ஆகாயத்தில் பறக்கின்றார்கள்.  நம் மகான்கள் பிணங்கள்போல் மக்கள் தோள்களின் மீது சுமந்து செல்லப்படு கின்றார்கள்.  மற்ற நாட்டு மக்கள் புதிய, புதிய இயந்திரங்களை உற்பத்தி செய்து சீர்திருத்தமடை கின்றார்கள்.  நமது நாட்டு மக்கள் நம்பாட்டன் காலத்தில் இருந்த சாதனத்தைத் தேடிப் பிடித்து அட்டாலியில் இருந்து இறக்கி அமலுக்குக் கொண்டு வருகின்றார்கள்.

முன்னேற்றம், சீர்திருத்தம் என்கின்ற துறையே நமது நாட்டு மக்களுக்குத் தடைப்படுத்தப்பட்டு விட்டது.  அந்தப்பக்கம் திரும்புவதென்றால் "உயிரை விடுகின்றேன்" என்கின்றார்கள்.  ஏனெனில் இன்றைய இந்திய நிலைமை நமது பாட்டன் காலத்து நிலைமை.  ஆகிய எல்லாம் சோம்பேறிகள் வயிற்றுப் பிழைப் புக்கும் ஒருவர் பிழைக்க ஒருவர் உழைக்கும் முறைமைக்கும் அனுகூலமாய் கற்பிக் கப்பட்டிருப்பதால் அதிலிருந்து மாறுவதற்கு சோம்பேறி களும், ஊரார் உழைப்பில் சாப்பிடுகின்றவர்களும் ஒரு நாளும் ஒப்பமாட்டார்கள் ஆதலால் நம் நாட்டுமக்களே நம் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கின் றார்கள்.  இந்தக் கூட்டம் ஒரு நாளும் இந்தியாவை - இந்து மக்களை முன்னேற விடவே விடாது.  சுதந்திரமாய் வாழவும் சம்மதிக்க மாட்டார்கள்.  அதனாலேயேதான் அவர்கள் பாமர மக்கள் கல்வி இல்லாமல் இருக்கும்படிக்கும், அவர்களுக்குச் செல்வம் சேராமல் இருக்கும் படிக்கும் பல தடைகளை மதத்தின் பெயரால், கடவுள் பெயரால் தேசியத்தின் பெயரால் ஏற்படுத்தி 100-க்கு 90-மக்களை 100-க்கு 10 மக்கள் ஏமாற்றி வருகின்றார்கள்.  இந்த சூழ்ச்சி மாறுதலடைய வேண்டுமானால் கடவுள், மதம், தெய்வீகம், தேசியம் முதலாகிய எல்லா புரட்டுகளையும் வெளியாக்கி உடைத்தெரிய வேண்டும் அதற்கு மக்கள் சம்மதிப்ப தென்பது மிகக் கஷ்டமான காரியமாகும். ஏனெனில் இவை சம்பந்தமான மூட நம்பிக்கையும், பிடிவாதமும் நம் மக்களது இரத்தத்தில் ஊறிப்போய்விட்டது.  அதுமாத்திரமல்லாமல் இந்த மூன்று துறைகளின் பிரசாரத்தையும், வயிற்றுப் பிழைப்பாய்க்கொண்ட மக்கள் நாளுக்கு நாள் வளர்த்து கொண்டுவருகின்றார்கள்.  அவர்களது தொல்லை அடி யோடு ஒழிந்தாலல்லாது சீர்திருத்தமோ, முன்னேற்றமோ சுலபமான காரியமல்ல.

உதாரணமாக, மதம் என்கின்ற சாக்கின் பெயரால் அரைக்காசு அசலாகும் ஒரு இட்டலியை 6 காசுக்கு விற்கும் ஒரு பார்ப்பானிடம் சென்று ஜாதிவித்தியாசம் தப்பு, பழக்கம் வழக்கம் தப்பு என்றால் ஒப்புக் கொள் ளுவானா?  என்று பாருங்கள்.  அன்றியும் அவனது மதம், ஜாதி, உயர்வு தாழ்வு பாகுபாடு ஒழிவதற்கு முட்டுக்கட்டை யாக இருப்பானா?  அல்லது இருக்கமாட்டானா?  என்று பாருங்கள், அன்றியும் மதப் பிரசாரம் செய்யவும் வெளி கிளம்பமாட்டானா?  என்றும் பாருங்கள்.  இதுபோலவே கடவுள், தேசியம் என்பதின் பயனாய் வயிறுவளர்க்கும் சோம்பேறிகள் அப்புரட்டை வெளியாக்க சம்மதிப்பார்களா?  என்றும் பார்ப்பதோடு அவர்கள் கடவுள் பிரசாரம், தேசிய பிரசாரம் செய்ய மாட்டார்களா?  என்றும் யோசித்துப் பாருங்கள்.

இந்த முட்டுக்கட்டையும் எதிர்பிரசாரக்கூட்டமும் இயற்கையே யானாலும் அவை யொழிந்தாகவேண்டும்.  நமது மக்கள் படித்தவர்கள் என்றாலும், பாமர மக்கள் என்றாலும் இவ்விஷயங்களில் ஒரே மாதிரி மூடர்களாகவே இருக்கின்றார்கள்.

உதாரணமாக, ஒரு 'வடுகனோ' ஒரு 'கைக்கோளனோ', 'ஒரு செட்டியோ',  எவ்வளவு தான் சுத்தமாய் இருந்து கொண்டு ஒருபடி அரிசிக்கு 30 இட்லி போட்டு இட்லி 1-க்கு கால் அணாவுக்கு விற்றாலும் நமது அறிவாளிகள் என்பவர்கள் வாங்குவதில்லை.  ஆனால் பார்ப்பனன் என்கின்ற ஒருவன் எவ்வளவு அழுக்குத்துணியுடனும், சொறிசிரங்குடனும், வேர்வை நாற்றத்துடனும், வெள்ளைப் படையுடனுமிருந்தாலும் ஒரு படிக்கு 60 இட்லி வீதம் போட்டாலும், இட்லி ஒன்று 0-0-6 பை வீதம் முன் பணம் கொடுத்து 'சாமி, சாமி' என்று 'சொர்க்கவாசல் பிரசாதம்' போல் கேட்டு வாங்கிச் சாப் பிடத் தயாராயிருக்கின்றோம்.  இது பாமர மக்களிடம் மாத்திரம் இருப்பதாக நான் சொல்ல வரவில்லை.  பண்டிதர்களிட மும், நாகரிக செல்வவான்களிட முமே இந்தக் குணத்தை பார்க்கின்றேன்.

ஆகவே சீர்திருத்தத்திற்கு யார் முட்டுக்கட்டை என்று பாருங்கள்.  இதுபோலவே கடவுள் விஷயத்திலும், கடவுள் என்பதை மனிதன் தனது அக்கிரமங்களுக்குப் பரிகாரம் என்று நினைத்துக் கொண்டு, மற்றவர்களை இம்சித்துத் தப்பித்துக் கொள்வதற்கும், ஏமாற்றுவதற்கும், தான் மற்றமக்களை  விட அதிக லாபம் சம்பாதிப்பதற்கும் பயன் படுத்தி அதனால் அடைந்த பயனை நிலை நிறுத்திக்கொள்ள கடவுளை ஒரு சாக்காய் வைத்து அதற்குக் கோவில் கட்டவும், கும்பாபிஷேகம் செய்யவும், விளக்குப்போடவும், அதன் தலையில் பால், நெய், தயிர், பஞ்சாமிர்தம், தேன் ஆகிய வஸ்துக்களைக் கொட்டிப் பாழாக்கவும், அதை ஆதாரமாய்க் கொண்டு இந்தக்காரியம் செய்து வயிறு பிழைப்பதையே ஒரு தொழிலாய்க் கொண்டு அநேக சோம்பேறிகள் பிழைக் கவுமான காரியத்தில் அமர்ந் திருக்கும் கூட்டத்தார், கடவுள் புரட்டை வெளியாக்க சம் மதிப்பார்களா?  மேலும் முட்டுக் கட்டையாய் இருக்க மாட்டார்களா? மற்றும் கடவுள் பிரசாரமும் செய்ய மாட்டார்களா?  என்று யோசித்துப் பாருங்கள்.

இந்தப்புரட்டில் ஏமாறுகின்றவர்களும், இதற்கு அனு கூலமாய் இருப்பவர்களும் எல்லோரும் முழு மூடமக்கள் என்றே சொல்லிவிடலாமா?  என்றும் பாருங்கள்.

அப்படியும் இல்லையே, நல்ல சாமர்த்தியக்காரர்கள், வெகு தந்திரமாய்ப் பணம் சம்பாதிப்பவர்கள், ஜால வித்தைபோல் கெட்டிக்காரத்தனம் செய்து மற்ற மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கும் யுக்தி சாலிகள் ஆகிய மக்களே இவ்வளவு புத்தி நுட்பத்துடனும், தந்திரத்துடனும், கஷ்டத்துடனும் எத்தனையோ மக்கள் வயிறெரிய-எரிய அதைக் கொஞ்சமும் சட்டை செய்யாமல் கல்மனதுடனும், பசியுடன் குழந்தைகளும்.  பெண்களும், மொண்டி முடங் களும், கிழடுகளும் பசியால் பதறப் பதற அதைச் சற்றும் லட்சியம் செய்யாத உலுத்த சிகாமணிகளும் ஆயிரம் ஆயிரமாய், லட்சம் லட்சமாய் இம்மாதிரி கடவுள் புரட்டு காரியங்களில்செலவு செய்து பாழாக்குவதென்றால் இதை முட்டாள்தனமென்றும், அறியாத்தனமென்றும், சுலபத்தில் அசட்டுத்தனம் என்றும் சொல்லிவிட முடியுமா?  என்று யோசித்துப்பாருங்கள்.  ஆகவே இந்த மக்கள் கடவுள் புரட்டை வெளியாக்க முட்டுக்கட்டையாயிருக்க மாட் டார்களா?  என்று யோசித்துப் பாருங்கள்.

மற்றும் இந்த மாதிரி ஆட்களின் காரியங்களால் பிழைக்க விருக்கும் கோயிலைக்காத்துப்பிழைக்கும் மக்கள் கடவுள் பிரசாரம் செய்யமாட்டார்களா?  என்று யோசித்துப் பாருங்கள்.

இதுபோலவே தேசியமென்பதும், ஏழைகளுக்குத் துன்பம் விளைவித்து வருவதும் குடியானவர்களுக்குத் தொல்லை விளைவித்துவருவதும், தொழிலாளிகளுக்கும், சரீரத்தால் பாடுபடுகின்றவர்களுக்கும் அரைபட்டினியையே அளித்து வருவதும் சோம்பேறிகள் மூன்றுவேஷ்டியுடன் வாழவும் சரீரத்தில் வேர்வை ஏற்படாமல் மேலுக்காக வெள்ளைவேஷ்டியுடன் திரியவும், பதவி, ஓட்டுக்கும், உத்தியோகத்திற்கும் அலையும் கூட்டத்தார் இத் தேசி யத்தை நம்பியே முன்னுக்கு வர வேண்டுமென்று கருதி யிருக்கும் கூட்டத்தார், கண்மூடித்தனமாய் வியாபாரத்திற்கு முன்முதல் போடுவதுபோல் தேசிய அர்ச்சகர் களுக்கு - தரகர்களுக்கு அள்ளி அளித்துக் கொண்டிருக்கும் போது தேசியப்புரட்டை வெளியாக்குவது சுலபமா?  அல்லது சாத்தியமா?  என்றும் யோசித்துப்பாருங்கள், இவர்கள் முட்டுக் கட்டையாயிருக்க மாட்டார்களா?  என்றும் யோசித் துப் பாருங்கள்.  அதுமாத்திரமல்லாமல் ஒரு கூட்டம் சீர்திருத்தத்திற்கு எதிர்ப் பிரசாரமும் செய்யமாட்டார்களா?  என்றும் கருதிப் பாருங்கள். ஆகவே, எந்தப் புரட்டை யொழிக்க வேண்டுமானாலும் அதனால் லாபமடை கின்றவர்கள் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டார்கள்.  பேசிப் பேசி, எழுதியெழுதி இந்தக் கூட்டத் தார்களால் வசவும் தொல்லையும் பட்டுப்பட்டு பிறகு ஏதாவது சிறிது கண் விழிப்பை உண்டாக்க முடியுமே யொழிய மற்றபடி உண்மை சீர்திருத்தம் என்பது திடீரென்றாகக்கூடிய சுலபமான காரியமல்ல.

ஆனபோதிலும் விடாமுயற்சியுடன் சுயநலப்பற்றற்ற வாலிபர்களும்.  நம்பிக்கையுள்ள பெரியவர்களும் பாடு பட்டால் சீர்திருத்தம் சீக்கிரம் அடைய முடியும் என்பதில் சந்தேகமில்லை உலகம் சீர்திருத்தப் பக்கம் திரும்பி விட்டது.  இந்தியாவைப் பார்த்து உலகத்தில் எல்லா நாடும் பரிகாசம் செய்கின்றது.  ஆதலால் தானாகவே சீர்திருத் தத்திற்குப் பல நற்குறிகள் காணப்படுகின்றன, நான் உங்களைக் கேட்பதெல்லாம் அதைத் தடுக்கவராதீர்கள் என்பதேயாகும்.  சீர்திருத்தக்காரியங்களில் வேறு காரி யத்தைப் போட்டு குழப்பாதீர்கள்.  சீர்திருத்தவாதிகள் முதலில் ஜாதிப் பிரிவை அழிக்க முன்வாருங்கள். பெண் களுக்கும் ஆண்களுக்கும் சிறிதும் வித்தியாசமில்லாமல் ஒன்று போலாக்குங்கள்.  பிறகு உங்களால் என்ன காரிய மாகாது என்று நினைக்கிறீர்கள்?  சுயராஜ்யம் பரராஜ்யம் என்பதெல்லாம் உங்கள் காலடியில் தானாகவே வந்துவிடும்.  அதில்லாமல் வெறும் கூப்பாடு உண்மைப்பயனளிக்காது.  இந்த ஊரில் சுயராஜ்யக்காரர் 100க்கு 75 பேர்கள் இருப்ப தாகக் கத்தலாம், கதர் கட்டலாம், கொடி பிடிக்கலாம், காந்திக்குல்லாய் போடலாம், தீண்டாமை விலக்குவதுதான் சுயராஜ்யத்தின் முதல் கொள்கை என்றுசொல்லலாம், மகாத்மாவுக்கு ஜே! என்றுகத்தலாம்.  சுயமரியாதை இயக்கம் தேசியத்திற்கு விரோதம் என்றும் சொல்லலாம்.  ஆனால் இந்த ஊர் தண்ணீர் கிணற்றில் ஒரு பறையன் வெள்ளிப் பாத்திரத்தில் தண்ணீர் மெள்ள ஒரு நான்கு பெயர்கள் சம்மதிப்பார்களா?  தண்ணீர் மொண்டவனை உதைக்காமல் இருப்பார்களா?  பாருங்கள்.  சுயராஜ்யம் என்பது வந்தால் மாத்திரம் இந்த ஊர் ஜனங்களுக்குப் புத்தி மாறிவிடுமா?  யோசித்துப்பாருங்கள்.

ஆகவே ஒருவன் "கங்காதரா மாண்டாயோ" வென்றால் எல்லாரும் விபரம் தெரியாமல் அழுகாதீர்கள்.  இந்தப் பலக் குறைவேதான் சீர்திருத்தத்திற்கு முட்டுக் கட்டை, ஆகை யால் கவனித்து உங்களுக்குக் தோன்றுகிறபடி நடவுங்கள்.  நான் சொன்னதை யோசித்து ஆராய்ந்து பார்க்காமல் நம்பிவிடாதீர்கள். 

(02-08-1931-ஆம் தேதி மாலை 5 மணிக்கு செங்குந்தர் சாவடியில் கூடிய கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவு)

'குடிஅரசு' - சொற்பொழிவு - 09.08.1931