திங்கள், 24 அக்டோபர், 2022

ஆண் பெண் சமத்துவத்தாலே முன்னேற்றம் ஏற்படும்

 

பெரியார் பேசுகிறார் : ஆண் பெண் சமத்துவத்தாலே முன்னேற்றம் ஏற்படும்

டிசம்பர் 16-31,2021

தந்தை பெரியார்

இந்தியப் பெண்களுக்கு எத்தகைய கல்வியளிக்க வேண்டும் என்பதைப் பற்றிப் பலர் பலவாறான அபிப்பிராயங்களை வெளியிட்டு வருகிறார்கள். அவைகளில் பிற்போக்குடையவர்-களின் அபிப்பிராயங்களை இப்பொழுது எந்தப் பெண்களும் ஒப்புக்கொள்ளத் தயாரில்லை. முற்போக்குடையவர்களின் அபிப்பிராயங்களையே பெண்கள் வரவேற்கத் தயாராயிருக்கிறார்கள்.

இந்தியப் பெண்கள் இதுவரையிலும் இருந்தது போலவே தங்களுக்கென்று ஒரு வித அபிப்பிராயமும், சுதந்திரமும் இல்லாமல் ‘கல்லென்றாலும் கணவன்; புல்லென்றாலும் புருஷன்’ என்று சொல்லுவது போல கணவனுடைய நன்மையை மாத்திரம் கருதி அடிமையாகவே இருந்து பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டும், அவைகளை வளர்த்துக் கொண்டும் வாழ்வதே சிறந்தது. இதுவே இந்தியப் பெண்களுக்கு வேண்டிய நாகரிகம், இந்நாகரிகத்தை மீறினால் இந்தியப் பெண்களின் சமுதாய வாழ்க்கையின் உயர்வு கெட்டுப்போகும், அவர்களுடைய பதிவிரதாதர்மம் அழிந்து போகும், இதனால் இந்திய நாகரிகமே மூழ்கிவிடும். ஆகையால் பெண்களுக்குக் குடும்பக் கல்வியும், மதக் கல்வியும் மாத்திரம் அளித்தால் போதும் என்று பிற்போக்கான அபிப்பிராயமுடையவர்கள் கூறி வருகின்றனர்.

* * *

உண்மையில் பெண்களும் ஆண்களுக்குச் சமமாக வாழ வேண்டுமானால், அவர்களும் ஆண்களைப் போலவே தாங்கள் விரும்பிய கல்விகளைக் கற்கவும், தங்கள் அறிவுக்கும், ஆற்றலுக்கும், விருப்பத்திற்கும் இசைந்த எத்தொழில்களையும் தடையின்றிச் செய்யவும் உரிமை வேண்டியது அவசியமாகும்.

அல்லாமலும் மதக்கல்வி என்பது அவர்கள் காதில் கூட விழக்கூடாது என்பதே நமதபிப்பிராயம். மதத்தைப் பற்றித் தெரிந்து கொண்டிருக்கிற ஆண் மக்களே இன்று அடிமைப் புத்தியினாலும், மூட நம்பிக்கைகளாலும் கிடந்து சீரழிகின்ற செய்தியைப் பற்றி நாம் அடிக்கடி கூறி வருகின்றோம். மதம் என்பதுதான் மக்களிடத்தில் அடிமைப் புத்தியையும் பயங்கொள்ளித்தனத்தையும், தன்னம்பிக்கையின்மையையும், மூட நம்பிக்கை களையும் உண்டாக்கக் காரணமாயிருக்கிறது. ஆதலால் மதத்தையே அடியோடு ஒழிக்க வேண்டும் என்று பிரச்சாரஞ் செய்து வருகின்றோம். இந்த நிலையில் பெண்களுக்கு மதக் கல்வியளிக்க வேண்டும் என்னும் அபிப்பிராயத்தை நாம் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? சாதாரணமாக மதக்கல்வி கற்காவிட்டாலும், கேள்வி மூலமும், பழக்கவழக்கங்களின் மூலமும் மத விஷயமாகக் கொஞ்சம் தெரிந்து கொண்டிருக்கும் நமது பெண் மக்களின் நிலையை ஆராய்ந்தால் அதன் மோசத்தை அறியலாம். நமது பெண் மக்கள் மனதில் இன்று அடிமைப் புத்தியும், கோழைத்தனமும், மூட நம்பிக்கைகளும் குருட்டுப் பழக்க வழக்கங்களில் விடாப்பிடிவாதமும் நிறைந்திருப்பதற்குக்  காரணம் மதமே என்பதை யார் மறுக்க முடியும்? ஆதலால் பெண்களுக்கு மதக்கல்வி வேண்டும் என்று சொல்லுகின்ற அபிப்பிராயத்தை நாம் ஒரு சிறிதும் ஒப்புக் கொள்ள முடியாது.

பெண்களும் ஆண்களைப் போல் உடல் வலிமையிலும் சிறப்படைய வேண்டும், தேகப் பயிற்சி, ஆயுதப் பயிற்சி முதலிய பழக்கங்களைப் பெற்றிருக்க வேண்டும். தங்களை மானபங்கப்படுத்த நினைக்கும் அறிவற்ற, வெறிகொண்ட ஆண்மக்களை எதிர்த்துத் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளக் கூடிய ஆற்றலையும் பெற்றிருக்க வேண்டும். சமயம் நேரும்போது, படை வீரர்களாகச் சேர்ந்து பகைவர்களை எதிர்க்கக் கூடிய சக்தி பெண்களுக்கும் இருக்க வேண்டும். என்பதே நாகரிகம் பெற்ற மக்களின் அபிப்பிராயம். பெண்மக்களும் இவ்வபிப்பிராயத்தை முழு மனத்தோடு ஆதரிக்கிறார்கள். உலகத்தின் போக்கும் அபிப்பிராயமும் இப்படி இருக்க பெண் மக்களுக்கு உயர்தரக் கல்வி கற்பிப்பதனால் பயனில்லை என்று சொல்வதை யார் ஒப்புக் கொள்ளமுடியும்?

ஆனால், தற்காலத்தில் உள்ள கல்வி முறை மிகவும் மோசமானதென்பதை நாம் ஒப்புக் கொள்ளுகின்றோம். வெறும் குமாஸ்தா வேலைக்குப் பழக்கக் கூடிய கல்விதான் இப்பொழுது கற்பிக்கப்படுகிறதேயொழிய, வாழ்க்கைக்குப் பயன்படும் கல்வி கற்பிக்கப்படவில்லை என்பது உண்மையாகும். ஆகையால் தற்காலத்திலுள்ள கல்விமுறையை மாற்றி வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய முறையிலும், சிறிதும் மதநம்பிக்கைகளும், கோழைத்தனமும், அடிமைப் புத்தியும் உண்டாகாத வகையிலும் உள்ள கல்வித்  திட்டத்தை ஏற்படுத்தி பெண்களுக்கும், ஆண்களுக்கும், சமத்துவமான கல்வியளிக்க ஏற்பாடு செய்வதே மக்கள் முன்னேற்றத்திற்கு ஏற்றதாகும் என்று கூறுகிறோம்.

– 17.07.1932 ‘குடிஅரசு’  தலையங்கத்திலிருந்து…,

‘பெரியாரிடம்’ கண்ட ‘தமிழ்த் தேசியக்’ கூறுகள்: ப.திருமாவேலன், ஊடகவியலாளர்

 

சிந்தனைக் களம்

நவம்பர் 16-30,2021

 ‘பெரியாரிடம்’ கண்ட  ‘தமிழ்த் தேசியக்’ கூறுகள்:

ப.திருமாவேலன், ஊடகவியலாளர்

1.            தமிழர் இனப்பெருமை

2.            தமிழ்நாட்டுப் பெருமை

3.            தமிழர் கடந்தகாலப் பெருமை

4.            தமிழ்ப்பெருமை

5.            தமிழுக்கு முதன்மை

6.            நாட்டின் பெயர் தமிழ்நாடு

7.            தனித்தமிழ்நாடு

8.            வடமாநிலத்தவர் எதிர்ப்பு

9.            மலையாள, ஆந்திரர், கன்னடர் எதிர்ப்பு

10.         இந்திய அரசு எதிர்ப்பு

11.         தமிழே ஆட்சிமொழி

12.         தமிழே பயிற்றுமொழி

13.         தமிழே வழிபாட்டுமொழி

14.         தமிழ்நாட்டைத் தமிழனே ஆளவேண்டும்

15.         தமிழ்நாட்டில் தமிழனே வாழவேண்டும்

16.         சமஸ்கிருத எதிர்ப்பு

17.         மார்வாடி எதிர்ப்பு

18.         ஈழத்தமிழர் நலன்

19.         இந்தித்திணிப்பு எதிர்ப்பு

20.         மொழிவாரி மாகாண ஆதரவு

21.         தட்சிணப்பிரதேச எதிர்ப்பு

22.         வடவர் சுரண்டல் எதிர்ப்பு

23.         திருக்குறள் பரப்புதல்

24.         தமிழ்நாட்டில் தமிழனுக்கே வேலை     

25.         தமிழ்நாட்டில் மத்திய அரசு தலையிடாமை

26.         இது வடவருக்கான சுதந்திரம்

27.         வட இந்தியத் தலைவர்கள் எதிர்ப்பு

28.         தமிழறிஞரைப் போற்றுதல்

29.         தமிழர் தலைவர்களை அரவணைத்தல்

30.         தமிழிசைக்கு ஆதரவு

31.         தமிழர் கலைக்கு ஆதரவு

32.         தமிழ் மருத்துவம்

33.         தமிழர் பண்பாடு

34.         தமிழர் வாழ்க்கைமுறை

35.         வடவர் பண்டிகைக்கு எதிர்ப்பு

36.         வடவர் பழக்கவழக்கங்களுக்கு எதிர்ப்பு

37.         தமிழர் விழாக்களுக்கு ஆதரவு

38.         பொங்கல் திருநாளே தமிழர் திருநாள்

39.         பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு

40.         பார்ப்பனீயக் கொள்கை எதிர்ப்பு

41.         ஏகாதிபத்திய எதிர்ப்பு

42.         தமிழ்த்தொழிலாளர் நலன்

43.         தமிழ் முதலாளிகள் நலன்

44.         வெளிநாடு வாழ் தமிழர் நலன்

45.         தமிழர்களுக்குள் பிரிவினை இல்லை

46.         ஜாதி எதிர்ப்புப் போராட்டங்கள்

47.         தமிழர் ஒற்றுமையை வலியுறுத்தல்

48.         தமிழர் என்ற சொல்லாடல்

49.         தமிழரே பூசகர்

50.         தமிழர் திருமண முறை

51.         பெண் விடுதலை

52.         கற்பு அனைவர்க்கும் பொது

53.         விதவையர் மறுமணம்

54.         காதல் மணம்

55.         கூட்டுறவு வாழ்வியல்

56.         தனியுடைமை எதிர்ப்பு

57.         பொதுவுடைமை

58.         இதழ்களுக்குத் தமிழில் பெயர்

59.         மனு சாஸ்திர எதிர்ப்பு

60.         பிராமணாள் சொல் எதிர்ப்பு

61.         இது ஒரு நேஷன் அல்ல

62.         இந்து_முஸ்லிம் ஒற்றுமை

63.         வகுப்புவாதம் எதிர்ப்பு

64.         ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு

65.         சுதந்திர நாள் எதிர்ப்பு

66.         ஜனநாயகத்தின் போலித்தன்மை

67.         நாடாளுமன்ற எதிர்ப்பு

68.         தேர்தல் எதிர்ப்பு

69.         தேர்தலில் பங்கெடுக்காமை

70.         இது பணநாயகம் எனல்

71.         பார்ப்பனப் பத்திரிகைகள் எதிர்ப்பு

72.         நீதிமன்றங்கள் எதிர்ப்பு

73.         மதச்சார்புள்ள அரசு எதிர்ப்பு

74.         கிராமச் சீர்திருத்தம்

75.         நாயக்கர் ஆட்சி எதிர்ப்பு

76.         தமிழரல்லாத ஆட்சி எதிர்ப்பு

77.         மலையாளிகளை வெளியேற்ற ஆதரவு

77.         ஆந்திரர்களை வெளியேற்றப் போராட்டம்

78.         தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்

79.         இந்துப் பண்பாட்டு எதிர்ப்பு

80.         சிறுபான்மையரையும் தமிழர் ஆக்கிக் கொள்ளல்

81.         நிலப்பரப்புக்காகப் போராடுதல்

82.         தனித்தமிழ்

83.         தமிழில் கலப்பு மொழிகள் தடுப்பு

84.         இந்து அடையாளங்களை அழித்தல்

85.         தமிழ் இலக்கியங்களில் ஆரியச்சார்பு நீக்குதல்

86.         தமிழ் இலக்கியங்களில் சமஸ்கிருதச் சார்பு நீக்குதல்

87.         இந்தி மொழி எதிர்ப்பு

88.         இந்தி மொழித் திணிப்பு -_ எதிர்ப்புப் போராட்டங்கள்

89.         இயக்கங்களை ஒருங்கிணைத்தல்

90.         தீண்டாமை எதிர்ப்பு

91.         ஒடுக்கப்பட்டோர் நலன்

92.         வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் எனப்படும் சமூகநீதி

93.         இந்திய அரசியலமைப்பு எதிர்ப்பு

94.         இந்தியக் கொடி எதிர்ப்பு

95.         இந்திய எல்லை எதிர்ப்பு

96.         தமிழ்நாடு நீங்கலான இந்திய எதிர்ப்பு

97.         தமிழர் அல்லாதாரைப் பிரிப்பது

98.         தமிழர் இனஇழிவு நீக்கம்

99.         தமிழ்நாடு தமிழருக்கே

100. நான் தமிழன் தான்.

இப்படிப்பட்ட பெரியாரை தமிழரல்லர் என்று சொல்பவர்களும், தமிழ் தேசியத்துக்கு விரோதி என்று சொல்பவர்களும் தான் தமிழுக்கு விரோதி, தமிழருக்கு விரோதி, தமிழ்நாட்டுக்கு விரோதி. எனவே, இன்றைக்குத் தமிழ்த் தேசியம் பேசுபவர்களை நீங்கள் நன்றாக அடையாளம் காணுங்கள்.

தமிழர்களும் தீபாவளியும்

 

பெரியார் பேசுகிறார் : தமிழர்களும் தீபாவளியும்

நவம்பர் 1-15,2021

தந்தை பெரியார்

தீபாவளி பண்டிகை என்பது ஆரியர்களின் புராணக் கதைகளில் வரும் ஒரு குட்டிக் கதை. அக்கதையின் கருத்து தேவர்கள் அசுரனைக் கொன்றதாகவும், அக்கொலையானது உலகத்துக்கு நன்மை பயக்கும் கொலை-யென்பதும், அதற்கு ஆக மக்கள் அந்தக் கொலை தினத்தைக் கொண்டாட வேண்டும் என்பதுமாகும்.

சாதாரணமாக தீபாவளி என்கின்ற வார்த்தைக்கு விளக்கு வரிசை _ அதாவது, வரிசையாக விளக்குகள் வைத்தல் என்பது பொருள். இது கார்த்திகை தீபம் என்னும் பெயருள்ள பண்டிகையில் செய்யப்பட்டு வருகிறது. வடநாட்டில் விளக்கு வரிசை வைத்துத்தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை தினத்தை நரக சதுர்த்தசி என்றும் சொல்லுவதுண்டு. இதற்கு காரணம் நரகாசூரன் என்பவன் விஷ்ணுவால் கொலை செய்யப்பட்ட நாள் என்பதாகும். இந்தக் கதை விளக்கம் என்னவென்றால், அது மிகவும் ஆபாசமானது என்றாலும், ஆரியர்களின் இழி நிலைக்கும், தமிழர்களின் முட்டாள்தனத்துக்கும் ஆதாரத்துக்கு ஆக அதையும் ஆரியர் புராணப்படியே சற்று சுருக்கமாக விளக்குவோம்.

அதாவது, இரண்யாட்சன் என்னும் ராட்சசன் ஒருவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு சமுத்திரத்தினடியில் போய் ஒளிந்து கொண்டானாம்.

மகாவிஷ்ணு என்னும் கடவுள் அவனைச் சமுத்திரத்தில் இருந்து வெளியாக்கிப் பூமியைப் பிடுங்குவதற்கு ஆக பன்றி உருவமெடுத்து போய் ராட்சசனைப் பிடித்து பாய்போல் சுருட்டப்-பட்டிருந்த பூமியைப் பிடுங்கி விரித்து விட்டு விட்டாராம்.

அந்த சமயத்தில் அந்தப் பன்றியைப் பூமாதேவி கலவி செய்ய விரும்பிக் கலந்தாளாம். அக்கலவியில் ஒரு குழந்தை பிறந்ததாம். அக்குழந்தைக்குத்தான் நரகாசூரன் என்று பெயராம்.  இவன் கசேரு என்பவளை யானை உருவத்துடன் சென்று பலவந்தமாய்ப் பிடித்து வந்து மணம் செய்து கொண்டானாம். மற்றும், இவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தானாம். தேவர்கள் விஷ்ணுவிடத்தில் முறையிட்டார்களாம்.

விஷ்ணு கிருஷ்ணாவதாரத்தில் நரகாசூரனைக் கொன்றாராம்.

நரகாசூரன் விஷ்ணுவைத் தனது சாவு நாளை உலகம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டானாம். அதற்கு ஆக விஷ்ணு அந்தத் தினத்தை உலகம் கொண்டாடும்படி செய்தாராம். இதுதான் தீபாவளியாம்.

தோழர்களே! ஆரியரின் கதை ஜோடிக்கும் சின்னப் புத்தியைப் பாருங்கள். அதை நம்பி விழாக் கொண்டாடும் உங்கள் மடப் புத்தியை  எண்ணி வெட்கப்படுங்கள். ஏனெனில், பூமியை ஒரு ராட்சசன் பாயாகச் சுருட்டினான் என்றால் அப்போது எங்கிருந்து கொண்டு சுருட்டி இருப்பான்?

சமுத்திரத்திற்குள் போய் ஒளிந்து கொண்டான் என்றால் அப்போது சமுத்திரம் எதன்மேல் இருந்திருக்கும்?

கடவுளுக்குச் சக்தி இருந்தால் பூமியையும், நரகாசூரனையும் வா என்று அழைத்தவுடன் வந்திருக்காதா?

அப்படித் தான் வரவில்லையானாலும் நல்ல ஆகாரம் சாப்பிடும் ஜீவ உருவெடுக்காமல் மலம் சாப்பிடும் ஜீவ உரு எடுப்பானேன்?

அந்த அழகைப் பார்த்து பூமிதேவி அவனைக் கலவி செய்ய ஆசைப்பட்டா ளென்றால் பூமி தேவியாகிய பாரதத் தாயின் யோக்கியதை எவ்வளவு இழிவானது. நம் பாரதத் தாயின் கற்புக்கும், காமத்திற்கும் எதை உதாரணமாகச் சொல்லிக் கொள்ளுவது? அவளுடைய புத்திரர்கள் பரிசுத்த ஆவியினுடைய புத்திரர்-களைக் காட்டிலும் எவ்வளவு மோசமானவர்-களாய் இருந்திருக்க வேண்டும்? பூமாதேவியும் சமுத்திரமும் என்றால் இந்தியாவில் உள்ள இந்துக்களின் பாரத தேவியும் அரபிக் கடலும் வங்களாக் குடாக்கடலும் தானா? இதை அந்நியர்கள் கேட்டால் என்ன சொல்லு-வார்கள்? நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?

இப்படிக் கொலை செய்யப்பட்ட நரகாசூரன் என்பவன் நமது தோழர்கள் முத்துரங்கம், ராமநாதன் முதலியவர்கள் போன்றோர்களாய் இருந்திருந்தால் தானே கொலை செய்யப்பட்ட அவமானத்தை உலகம் கொண்டாட வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருப்பான்? இவற்றையெல்லாம் தமிழர்கள் _ பண்டிதர்கள் முதல் பாமரர்கள் வரை உணர்ந்திருந்தும் தீபாவளி பண்டிகை கொண்டாடினால் ஆரியர்கள் தமிழர்களை, தாசிமக்கள், மடையர்கள், கண்டதைப் புசிப்பவர்கள், புறமுதுகிட்டு ஓடியவர்கள், சண்டையில் சிறை பிடித்த கைதிகள், அடிமைகள் என்றெல்லாம் இன்னும் என்ன என்னமோ சொல்லுவதில் உண்மை இருக்கிறது என்று தானே அர்த்தமாகும்? அப்படித்தானே அந்நிய மக்கள் நினைப்பார்கள்?

ஆகவே, பாமர மக்களுக்குப் புத்தி இல்லாவிட்டாலும், பார்ப்பன அடிமைகளான பல பார்ப்பனரல்லாத காங்கிரஸ்காரர்களுக்குச் சுரணை இல்லாவிட்டாலும், மற்ற தமிழ்ப் பண்டிதர்களும், தங்களை உண்மைத் தமிழ் மக்கள் என்று கருதிக் கொண்டு இருப்பவர்-களுமாவது இவற்றை நன்றாய் கவனித்துப் பார்த்து பண்டிகை கொண்டாடாமல் இருந்து மற்ற பாமர மக்களுக்கு வழிகாட்ட வேண்டாமா என்று கேட்கின்றோம்.

இந்தி ஆரிய பாஷை என்றும், ஆரியப் புராணங்களை தமிழர்களுக்குப் படிப்பித்து ஆரியக் கதைகளைப் புகுத்தி ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டவே இந்தியைக் கட்டாயமாய் ஆரியர்கள் புகுத்துகிறார்கள் என்றும், சொல்லிக் கொள்ளுவது உண்மையானால் _- அதற்கு ஆக தமிழ் மக்கள் அதிருப்தியும், மனவேதனையும் படுவது உண்மையானால் _- தமிழ் மக்கள் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ளும் பண்டிதர்கள் தீபாவளி கொண்டாடுவார்களா?

 (‘குடிஅரசு’ – கட்டுரை – 31.10.1937)

திங்கள், 17 அக்டோபர், 2022

சரஸ்வதி பூஜை அறிவுக்கொவ்வாமுறை

 

பெரியார் பேசுகிறார் : சரஸ்வதி பூஜை அறிவுக்கொவ்வாமுறை

அக்டோபர் 16-31,2021

தந்தை பெரியார்

சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை. கல்வியையும், தொழிலையும், ஒரு பெண் தெய்வமாக்கி அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்விவரும், வித்தை வரும் என்றும் சொல்லி நம்மை நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி, கல்வி கற்க சொந்த முயற்சி இல்லாமல் சாமியையே நம்பிக் கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு நாம் அந்த சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்துப் பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு நம்மை படிப்பு வரமுடியாத மக்குகள் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். முதலாவது சரஸ்வதி என்னும் சாமியின் சொந்த யோக்கியதையை கவனித்தால் அது பார்ப்பனர்கள் புராணக் கதைகளின் படியே மிக்க ஆபாசமானதாகும்.

அதாவது சரஸ்வதி என்கிற ஒரு பெண் பிரம்ம னுடைய சரீரத்தில் இருந்து உண்டாக்கப்பட்ட பிறகு அவளுடைய அழகைக் கண்டு அந்த பிரம்மாவாலேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில், அவள் பிரம்மாவைத் தகப்பன் என்று கருதி, அதற்கு உடன்படாமல் பெண்மான் உரு எடுத்து ஓடவும், பிரம்மன் தானும் ஒரு ஆண் மான் உருவெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும், சிவன் வேட உருவெடுத்து ஆண் மானைக் கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் உயிர்ப்பிக்கச் செய்து, பிரம்மாவுக்கு மனைவியாக சம்மதித்ததாக சரஸ்வதி உற்பவக்கதை சொல்லுகிறது.

அதாவது தன்னைப் பெற்றெடுத்த தன் தகப்பனையே மணந்து கொண்டவள் என்று ஆகிறது; மற்றொரு விதத்தில் பிரம்மாவுக்குப் பேத்தி என்று சொல்லப் படுகின்றது. அதாவது, பிரம்மா ஒரு காலத்தில் ஊர்வசியின் மீது ஆசைபட்டபோது, வெளியான இந்திரியத்தை ஒரு குடத்தில் விட்டுவைக்க அக்குடத்திலிருந்து அகத்தியன் வெளியாக அவ்வகத்தியன் சரஸ்வதியைப் பெற்றான் என்று சொல்லப்படுகின்றது. இதனால் பிரம்மாவுக்குச் சரஸ்வதி மகன் வயிற்று பேத்தி ஆகிறாள். எனவே, சரஸ்வதியின் பிறப்பும் வளர்ப்பும் நடவடிக்கையும் கூடி பார்ப்பனப் புராணப்படி மொத்த ஆபாசமும் ஒழுக்க ஈனமுமானதாகும்.

கடன் வாங்கி செலவு செய்து விளையும் நன்மை என்ன?

நிற்க, இந்த யோக்கியதையுடைய அம்மாளை எதற்காக மக்கள் பூஜை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயமாகும். அதாவது சரஸ்வதி வித்தைக்கு அதிபதியான தெய்வமாதலால் வித்தையின் பயன் தொழி-லென்றும், தொழிலுக்கு ஆதாரமானது ஆயுதங்கள் என்றும் கருதிக் கொண்டு, சரஸ்வதி பூஜை என்றும், ஆயுத பூஜை என்றும் ஒரு நாளைக் குறித்துக் கொண்டு அந்த நாளை விடுமுறையாக்கி புஸ்தகங்களையும் ஆயுதங்களையும் வைத்து பூஜை செய்கிறார்கள். இந்தப் பூஜையில் அரசன் தனது ஆயுதங்களையும், வியாபாரி தனது கணக்குப் புத்தகங்கள், தராசு, படிக்கல், அளவு மரக்கால்படி, உழக்கு, பெட்டி முதலியவைகளையும் தொழிலாளி-கள் தங்கள் தொழில் ஆயுதங்களையும் இயந்திரச் சாலைக்காரர்கள் இயந்திரங்களையும், மாணாக்கர்கள் புத்தகங்களையும், குழந்தைகள் பொம்மைகளையும், தாசிகள் தங்கள் ரவிக்கை-களையும், சீலைகளையும், நகைகளையும், வாத்தியக்காரர்கள் வாத்தியக் கருவிகளையும் மற்றும் இதுபோலவே ஒவ்வொருவரும் அவரவர்கள் லட்சியத்திற்கு ஆதாரமாக வைத்திருக்கும் சாமான்களை வைத்து பூஜை செய்கின்றார்கள்.

இதனால் அந்த தினத்தில் தொழில் நின்று அதனால் வரும் வரும்படிகளும் போய் பூஜை ஓய்வு முதலிய ஆடம்பரங்களுக்காக தங்கள் கையில் இருக்கும் பணத்திலும் ஒரு பாகத்தைச் செலவு செய்தும் போதா விட்டால் கடன் வாங்கியும் செலவு செய்வதைவிட யாதொரு நன்மையும் ஏற்படுவதாக சொல்லுவதற்கே இல்லாமல் இருக்கின்றது. ஆயுதத்தை வைத்து பூஜை செய்து வந்த, வருகின்ற அரசர்கள் எல்லாம் இன்றைய தினம் நமது நாட்டில் ஆயுதத்தை வைத்து பூஜை செய்யாத வெள்ளைக்கார அரசனுடைய துப்பாக்கி முனையில் மண்டி போட்டு சலாம் செய்து கொண்டு இஸ்பேட் ராஜாக்களாக இருந்து வருகின்றார்களே ஒழிய, ஒரு அரசனாவது சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ஆகிய பூஜைகள் பலத்தால் தன் காலால் தான் தைரியமாய் நிற்பவர்களைக் காணோம்.

நாணயமாய் நடந்து கொள்கின்றார்களா?

சரஸ்வதி பூஜை செய்யும் வியாபாரிகளில் ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக்குப் பயந்து பொய்க்கணக்கு எழுதாமலோ, தப்பு நிறை நிறுக்காமலோ குறை அளவு அளக்காமலோ இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அதுபோலவே கைத்தொழிலாளிகளும் தங்கள் ஆயுதங்களிடத்தில் வெகு பக்தியாய் அவைகளைக் கழுவி விபூதி, சந்தனம், குங்குமப் பொட்டு முதலியவைகள் போட்டு விழுந்து கும்பிடுவார்களே தவிர, ஒருவராவது நாணயமாய் நடந்து கொள்-கின்றார்கள் என்றாவது அல்லது அவர்களுக்குத் தாராளமாய் தொழில் கிடைக்கின்றது என்றாவது சொல்லுவதற்கு இல்லாமலே இருக்கிறார்கள். அது போலவே புஸ்தகங்களையும் பென்சிலையும் கிழிந்த காகிதக் குப்பைகளையும் சந்தனப் பொட்டுப் போட்டு பூஜை செய்கின்றார்களே அல்லாமல் காலோ கையோ பட்டுவிட்டால் தொட்டுக் கண்ணில் ஒத்திக் கும்பிடுகின்றார்களே அல்லாமல் நமது நாட்டில் படித்த மக்கள் 100-க்கு 5 பேர்களுக் குள்ளாகவே இருந்து வருகின்றார்கள். இவ்வளவு ஆயுத பூஜை செய்தும், சரஸ்வதி பூஜை செய்தும் இவ்வளவு விரதங்கள் இருந்தும், நமது அரசர்கள் அடிமைகளாக இருக்கின்றார்கள். நமது வியாபாரிகள் நஷ்டமடைந்து கொண்டு வரு கிறார்கள். நமது தொழிலாளர்கள் தொழிலில்லாமல் பிழைப்பைக் கருதி வேறு நாட்டிற்கு குடிபோகின்றார்கள். நமது மக்கள் நூற்றுக்கு அய்ந்து பேரே படித்திருக்கின்றார்கள். சரஸ்வதியின் ஜாதியைச் சேர்ந்த பெண்கள் ஆயிரத்திற்கு ஒன்பது பேரே படித்திருக்கிறார்கள்.

முட்டாள்தனமான கொள்கையே….!

இதன் காரணம் என்ன?

நாம் செய்யும் பூஜைகளைச் சரஸ்வதி தெய்வம் அங்கீகரிக்கவில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் இந்த விஷயங்களுக்கும் ஒன்றும் சம்பந்தமில்லையா? அல்லது சரஸ்வதி என்கின்ற ஒரு தெய்வமே பொய்க் கற்பனையா? என்பவை-யாகிய இம்மூன்றில் ஒரு காரணமாகத்தான் இருக்கவேண்டும். என்னைப் பொறுத்தவரையில் இவைகள் சுத்த முட்டாள்தனமான கொள்கை என்பதே எனது அபிப்பிராயம். வெள்ளைக்கார தேசத்தில் சரஸ்வதி என்கின்ற பேச்சோ கல்வி தெய்வம் என்கின்ற எண்ணமோ சுத்தமாய்க் கிடையாது. அன்றியும் நாம் காகிதத்தையும் புஸ்தகத்தையும் சரஸ்வதியாய்க் கருதித் தொட்டு கண்ணில் ஒத்திக் கொண்ட, நமக்குக் கல்வி இல்லை. ஆனால் வெள்ளைக்காரன் மல உபாதைக்குப் போனால் சரஸ்வதியைக் கொண்டே மலம் துடைத்தும், அவர்களில் நூற்றுக்கு நூறு ஆண்களும் நூற்றுக்கு அறுபது பெண்களும் படித்திருக்கிறார்கள். உண்மையிலேயே சரஸ்வதி என்ற ஒரு தெய்வமிருக்குமானால் பூஜை செய்ப வர்களை தற்குறிகளாகவும், தன்னைக் கொண்டு மலம் துடைப்பவர்களை அபார சக்தி வாய்ந்த அறிவாளிகளாகவும். கல்விவான்களாகவும் செய்யுமா? என்பதை தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.

பாழாக்கப்படும் பொருளாதாரம்

உண்மையிலேயே யுத்த ஆயுதம், கைத் தொழில் ஆயுதம், வியாபார ஆயுதம் ஆகி யவைகள் உண்மையிலேயே சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாயிருக்குமானால் அதை பூஜை செய்யும் இந்த நாடு அடிமைப் பட்டும் தொழிலற்றும் வியாபாரமற்றும், கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கவும், சரஸ்வதியை கனவிலும் கருதாததும் சரஸ்வதி பூஜை செய்கின்றவர்களைப் பார்த்து முட்டாள்கள், அறிவிலிகள், காட்டுமிராண்டிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாடு சுதந்திரத்துடனும், வியாபாரிகள் அரசாட்சியுடனும் தொழிலாளர் ஆதிக்கத்துடனும் இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப் பாருங்கள்! இந்த பூஜையின் மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகின்றது பாருங்கள்!

ராஜாக்கள் கொலுவிருப்பது, பொம்மைகள் கொலுவிருப்பது, சாமிகள் கொலுவிருப்பது. இதற்காக ஜனங்கள் பணம் செலவு செய்வது, நேரம் செலவு செய்வது, அறிவு செலவு செய்வது, பத்து லட்சக் கணக்கான ரூபாய்களுக்கு பொம்மைகள் சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி, கடலை பொரி, சுண்டல் வடை, மேளவாத்தியம், வாழைக் கம்பம், பார்ப்பனர்களுக்குத் தட்சணை, சமாராதனை, ஊர் விட்டு ஊர் போக ரயில் சார்ஜு ஆகிய இவைகள் எவ்வளவு செலவாகின்றது என்பதை எண்ணிப் பாருங்கள். இவைகள் எல்லாம் யார் வீட்டுப் பணம்? தேசத்தின் செல்வ மல்லவா என்று தான் கேட்கின்றோம். ஒரு வருஷத்தில் இந்த ஒரு பூஜையில் இந்த நாட்டில் செலவாகும் பணமும் நேரமும் எத்தனை கோடி ரூபாய் பெறுமானது என்று கணக்குப் பார்த்தால் மற்ற பண்டிகை, உற்சவம், புண்ணியதினம், அர்த்தமற்ற சடங்கு என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை சுலபத்தில் விளங்கிவிடும். இதை எந்த பொருளாதார, இந்திய தேசிய நிபுணர்களும் கணக்குப் பார்ப்பதே இல்லை.

(‘குடிஅரசு’ – சொற்பொழிவு – 20.10.1929)

கர்ப்பக்கிருகத்திற்க்குள் மட்டும் பேதம் எதற்க்காக ?

 

பெரியார் பேசுகிறார் : கர்ப்பக்கிருகத்திற்க்குள் மட்டும் பேதம் எதற்க்காக ?

அக்டோபர் 1-15,2021

தந்தை பெரியார்

இப்போது நாம் எடுத்துக் கொண்டிருக்கிற முயற்சி, கோயிலில் கர்ப்பக்கிருகம் இருக்கிற இடத்திலே நீ சூத்திரன்,- இழிஜாதிக்காரன், நீ உள்ளே நுழையக்கூடாது என்று பார்ப்பான் நம்மை இழிவுபடுத்தி வைத்திருக்கின்றதை மாற்ற வேண்டும் என்று போராட இருக்கிறோம். இதற்கு முன் தெருவிலே மனிதனை நடக்கக் கூடாது புனிதம் கெட்டுவிடும் என்று சொன்னான்; குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது என்று வைத்திருந்தான்; ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு ஜாதியார் கோயிலுக்கும் போகக்கூடாது என்று வைத்திருந்தான்; அதுபோல, சாப்பிடும் பொது இடங்களில் பார்ப்பனருக்கு வேறு இடம், நமக்கு வேறு இடம் என்று வைத்திருந்தான். இதையெல்லாம் மாற்றி விட்டோம்.

அதனால் ஒன்றும் புனிதம் கெட்டுவிடவில்லை. எந்த மனிதனின் மனமும் புண்படவில்லை. மதம், சம்பிரதாயம் அழிந்து பாழாகி விடவில்லை. மிகப் பெரிய புண்ணிய ஸ்தலங்களாகக் கருதப்படும் காசி, ஜெகந்நாத், பண்டரிபுரம் ஆகிய இடங்களிலிருக்கிற கோயில்களில் உள்ள சாமி சிலைகளை யார் வேண்டுமானாலும் தொட்டு வணங்கலாம் என்றிருக்கிறது. அதுபோல இங்கேயும் கர்ப்பக்கிரகத்திற்கு வெளியே இருக்கிற உருபரிவாரங்களை யார் வேண்டுமானாலும் தொடலாம். அதே சிலை கர்ப்பக்கிரகத்தில் இல்லாமல் வெளியே இருந்தால் நாய்கூட நக்கிவிட்டுச் செல்லலாம். அதனால் அந்தச் சிலையின் புனிதம் ஒன்றும் கெட்டு விடுவதில்லை. கர்ப்பக்கிரகத்திற்குள் இருப்பதைத் தொட்டால் மட்டும் எப்படிப் புனிதம் கெட்டுவிடும்? வெளியே இருக்கிற சிலைக்கு இல்லாத புனிதம் அதற்கு மட்டும் எப்படி வந்தது என்று கேட்கின்றேன்? பார்ப்பான் ஆக்கிய சோற்றை நம் கண்ணால் பார்த்தால் அதைக் கீழே கொட்டிவிடுவான். இன்று நம்முடன் வந்து உட்கார்ந்தே சாப்பிடுகின்றான்,- நாம் சமைப்பதைச் சாப்பிடுகின்றான்.

இப்படி உண்பதில்- பழகுவதில் எல்லாம் ஒன்றான பின் எல்லோருக்கும் பொதுவான கர்ப்பக்கிருகத்திற்குள் மட்டும் இந்தப் பேதம் எதற்காக என்று கேட்கின்றேன்? ஜாதி இழிவை, சூத்திரத் தன்மையை நிலைநிறுத்த அல்லாமல் வேறு எதற்காக? வேறு என்ன அவசியத்திற்காக இங்கு மட்டும் நாம்  போகக் கூடாது என்பது? என்று நம் மக்கள் நன்கு சிந்திக்க வேண்டும். சிலர் நகை இருக்கிறது, அதனால்தான் எல்லோரும் வரக்கூடாது என்று சமாதானம் சொல்கிறார்கள். உன் சாமிக்கு  நகை போட்டிருக்கிறாய் என்பதற்காக நான் சூத்திரன் என்பதை ஒப்புக் கொள்வதா? இடம் சிறிதாக இருக்கிறது, அதிகம் பேர் உள்ளே போக முடியாது என்றால், ஒவ்வொருவராகச் சென்று தொட்டுக் கும்பிட்டு வருகிறார்கள். நகை இருக்கிறது என்றால் இரண்டு போலீசைப் போட்டுப் பாதுகாத்துக் கொள். இவற்றிற்காக நாங்கள் எங்கள் மானத்தை இழக்கத் தயாராக இல்லை.

மொழிக்காகப் போராட்டம் என்கின்றார்கள். இன்றைக்கும் அநேகக் கோயிலில் பார்ப்பான் சமஸ்கிருதம் சொல்லிக்கொண்டு பூசை செய்கிறான். எதற்காகத் தமிழ்நாட்டில் இப்படி நடக்க வேண்டும்? என்று இதுவரை எவனுமே கேட்க வில்லை. இந்த அரசாங்கம்- நம் அரசாங்கம். சும்மா விட்டுவிடும் என்று கருதவில்லை. அவர்கள் கடமையை அவர்கள் செய்வார்கள். அதுபற்றி நாம் அரசாங்கத்தைக் குறை கூறப் போவதில்லை.

காந்தி தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் தனிக் கிணறு, தனிக்கோயில், தனிப் பள்ளிக்கூடம், தனிக் குளம் வெட்டுவது என்று அதற்காக ஒரு இலட்சத்திற்கும் மேல் பணம் ஒதுக்கி அந்தப் பணத்தை என்னிடம் கொடுத்தார்கள். நான் ஆதிதிராவிடர் மக்களுக்குத் தனியாகப்  பள்ளிக்கூடம் கிணறு கட்டுவதை விரும்பவில்லை. அதை அப்படியே திருப்பிக் கொடுத்து விட்டேன்.

நாம் கர்ப்பக்கிருகத்திற்குள் போக வேண்டுமென்பது கடவுள் நம்பிக்கைக்காக, பக்திக்காக, புண்ணியம் சேர்ப்பதற்காகப் போக வில்லை. அதில் உள்ள அவமானத்தை நீக்க வேண்டும் என்பதற்காகப் போகிறோம். திறந்து விட்டுவிட்டால் அதனால் என்ன பலன் என்று கேட்பீர்கள். சாமிக்கு இருக்கிற யோக்கியதையே போய் விடும். பார்ப்பானுக்கிருக்கிற உயர்ஜாதித் தன்மையும் போய் விடும். பார்ப்பானே வெளியே வந்து அங்குக் கடவுள் இல்லை, கல்தான் இருக்கிறது என்று சொல்வான்.

உனக்குத்தான் சாமி இல்லையே,- நீ ஏன் அங்குப் போகிறாய் என்று கேட்கிறான். மானம் இருப்பதால் போகிறேன். மானம் இல்லாத தால், அறிவு இல்லாததால், இழிவைப்பற்றிச் சிந்திக்காததால் நீ வெளியே நிற்கிறாய்-  என்று சொல்வேன். நாம் போவதற்கு உரிமை வந்துவிட்டால், பிறகு பூசை செய்கிற உரிமை நமக்குத் தானாகவே வந்து விடும்.

மொழிக்காகச் சத்தம் போடுகிறாய்; கோயிலிலே சமஸ்கிருதத்திலே மந்திரம் சொல்கின்றான். அதுபற்றி எவனுமே சிந்திப்பது கிடையாது. தமிழில் சொல்லக் கூடாது என்கின்ற ஏற்பாடு பார்ப்பானாகச் செய்து கொண்டதே தவிர, சாஸ்திரத்தில் கிடையாது.

இதெல்லாம் வளர்ந்தால் மனிதனுக்கு இருக்கிற மூடநம்பிக்கை போய்விடும்; பூச்சாண்டி போய்விடும்.

சமுதாயத் துறைக்காக இந்த நாட்டிலே என்னைத் தவிர எவனய்யா பாடுபட்டான்? பந்தயம் கட்டிக் கேட்கிறேன், எவன் பாடுபட்டான்?

நீங்களெல்லாம் மதம் போச்சு, கடவுள் போச்சு என்று பயப்படாதீர்கள். கடவுள் உண்மையில் இருந்தால் அதை ஒழிக்க யாராலும் முடியாது. அது போன்றுதான் இந்து மதம் என்பதும், இல்லாத ஒரு கற்பனையாகும். என்று தெளிவாக எடுத்துவிளக்கி இழிவு நீக்கக் கிளர்ச்சியில் எல்லா மக்களும் பங்கேற்க முன்வர வேண்டும்.

(26.10.1969 அன்று வேலாயுதம்பாளையம் நாகம்மையார் திடலில் ஈ.வெ.ரா.பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு)

– ‘விடுதலை’, 7.11.1969

சமூக நீதி நாள் மாட்சியும் காட்சியும்

 

முகப்புக் கட்டுரை : சமூக நீதி நாள் மாட்சியும் காட்சியும்

அக்டோபர் 1-15,2021

மஞ்சை வசந்தன்

தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் நாளை ஆண்டுதோறும் ‘சமூகநீதி நாள்’ ஆகக் கடைப்பிடிப்பது, உறுதிமொழி மேற்கொள்வது என ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு, 13.9.2021 அன்று தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டது.

அதனையொட்டி சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் காலை 10:00 மணியளவில் வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவித்தும், பின்னர் பெரியார் திடலில் உள்ள 20 அடி உயர முழு உருவ தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும், தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் ஆகியோர் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தப்பட்டது.

தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை

தந்தை பெரியார் நினைவிடத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய பின்,

தமிழர் தலைவர் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழியான:-

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் –

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும்

எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்!

சுயமரியாதை ஆளுமைத் திறனும்-பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!

சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்!

மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்!

சமூகநீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்!”

என கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சொல்ல கழகத் தோழர்கள் உறுதி மொழி ஏற்றனர்.

மகளிரணி சார்பில் ச.இன்பக்கனி, அ.அருள்மொழி தலைமையிலும், திராவிடர் கழக வழக்குரைஞரணி சார்பில் த.வீரசேகரன் தலைமையிலும், திராவிடன் நல நிதி சார்பில் அருள்செல்வன் தலைமையிலும், திராவிட தொழிலாளரணி சார்பில் திருச்சி சேகர் தலைமையிலும், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து,

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதன் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் மலர் வளையம் வைத்தும் உறுதிமொழி கூறியும் மரியாதை செலுத்தினர். அதன் பின்னரும் பல்வேறு அமைப்பினரும், பெரியார்  பற்றாளர்களும், பொதுமக்களும் என அன்றைய தினம் முழுவதும் பெரியார் திடலுக்கு வந்து தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்திய வண்ணமிருந்தனர்.

நூல் வெளியீடு

காலை 11:00 மணியளவில் பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், தந்தைபெரியார் வாழ்க்கைக் குறிப்புகள் மற்றும் வைக்கம் போராட்டம் தலைப்பில் ஜப்பானிய மொழியில் இரண்டு புத்தகங்கள் வெளியீட்டு விழா தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நூல்களை வெளியிட்டு உரையாற்றினார். ஜப்பானியத் தூதரக கலாச்சார மற்றும் தகவல் பிரிவு ஆராய்ச்சியாளர், ஆய்வாளர் செல்வி மியூகி இனோஉவே சான் நூல்களைப் பெற்றுக்கொண்டு உரையாற்றினார்.

அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மியூகி இனோஉவே சான் ஆகியோருக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி வரவேற்றார்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நோக்கவுரை ஆற்றினார். சமூக நீதி நாள் உறுதி மொழியை கழகத் துணைத் தலைவர் கூற பார்வையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று அரங்கம் அதிர உறுதிகூறினர்.

திராவிடர் கழக தொழில் நுட்பப்பிரிவு வி.சி.வில்வம், ÔவரலாறுÕ இணைய இதழாசிரியர்  ச.கமலக்கண்ணன் ஆகியோரின் உரையைத் தொடர்ந்து ஜப்பானியர் கோரோ ஒசிதா உரையாற்றினர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ‘கற்போம் பெரியாரியம்‘ நூல் வெளியீடு

திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் நூலை வெளியிட்டு உரையாற்றினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் நா.சுலோசனா நூலைப் பெற்றுக்கொண்டார்.

தந்தைபெரியார் 143ஆம் ஆண்டு பிறந்த நாள் ‘விடுதலை’ மலர் வெளியீடு

கரூர் மக்களவை உறுப்பினர் செ.ஜோதிமணி மலரை வெளியிட்டு உரையாற்றினார்.

சிறப்புவிருந்தினர்கள் அனைவருக் கும் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

விழாவுக்குத் தலைமை ஏற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அய்ந்து தீர்மானங்கள் என்ற ஓர் அறிவிப்பைத் தந்தார்.

(1) தந்தை பெரியார் பிறந்த நாளை “சமூகநீதி நாளாக” அறிவித்து அரசுப் பணியாளர்களை உறுதிமொழி எடுக்கச் செய்த தமிழ்நாடு அரசுக்கு _ சிறப்பாக மானமிகு மாண்புமிகு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டுத் தெரிவிப்பதோடு இடஒதுக்கீடு சரிவரப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணித்திட கண்காணிப்புக் குழு அமைக்கப் பட்டதை வரவேற்கிறது. ஒன்றிய அரசும் இது போன்ற கண்காணிப்புக் குழுவை ஏற்படுத்த வேண்டும் என்பதும் அத்தீர்மானத்தின் முக்கிய பகுதியாகும்.

(2) அடல்பிஹாரி வாஜ்பேயி பிரதமராக இருந்து பொதுத்துறையை விற்பதற்கென்றே

(Disinvestment)  ஒரு தனித்துறை உருவாக்கப் பட்டது (அருண்ஷோரி என்பவர் அத்துறைக்கான அமைச்சராகவும் இருந்தார்).

வாஜ்பேயி அரசு சொத்துகளை விற்றது என்றால் தற்போதைய நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு (NDA) அரசு சொத்துகளை அடமானம் வைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.

அரசுத்துறை தனியார் கைக்கு மாற்றப்படும்போது இட ஒதுக்கீடு முற்றிலும் ஒழிக்கப்படுகிறது. ஏன் எனில் தனியார் துறையில் இடஒதுக்கீடு இல்லை. இந்நிலையில் தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு தேவை என்பதை வற்புறுத்துகிறோம்.

3) சமூகநீதி என்று சொல்லும் பொழுது – அது பாலியல் நீதியையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

4) நீதித்துறையில் தற்போது மாவட்ட நீதிபதிகள் வரை இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. ஆனால் உயர்நீதி மன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. இந்த நிலையில் உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதி மன்றத்திலும் நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு அவசியம்பின்பற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

5) ‘நீட்’ தேர்வு என்பது சமூகநீதிக்கு எதிரானது என்றும், ‘நீட்’ ஒன்றும் தகுதிக்கு அளவுகோல் இல்லை என்றும், ‘நீட்’ கேள்வித்தாள்

34 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுவதும் – இது யாருக்குப் பயன்படக்கூடியது என்பதும் விளங்கக் கூடியதாகும். முறைகேடுக்கு அப்பாற்பட்ட முறையே ‘நீட்’ என்பது சுத்தப் புரட்டு என்பதும் அம்பலமாகிவிட்டது. மாணவர்கள் மத்தியில் தற்கொலை எண்ணிக்கையும் அதிகரித்து வருவதைச் சுட்டிக் காட்டி இது தொடர்பாக மக்கள் கருத்தைப் பெரும் அளவில் உருவாக்கிட சமூகநீதியில் ஒத்த கருத்துள்ளவர்களை ஒருங்கிணைத்து முடிவு செய்யும் வகையில் வரும் 21ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் சென்னையில் பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அய்ந்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஜப்பானிலிருந்து கோரா ஒசிதா

இந்நிகழ்வில் காணொலி மூலம் ஜப்பானில் இருந்து வாழ்த்துரை வழங்கிய கோரா ஒசிதா தம் உரையில், “நான் நாற்பத்தி நான்கு ஆண்டுகள் டோக்கியோவில் துப்புரவுப் பணியில் இருந்துள்ளேன். இப்போது ஜப்பானில் நிகழும் மனித உரிமைப் பிரச்சினை களுக்கான தீர்வுகளுக்காக இயங்கி வருகிறேன். இந்தியாவிற்கு குறிப்பாக சென்னைக்கு அய்ந்து முறை என் பணி சார்ந்து பயணம் செய்துள்ளேன்.

சென்னையில் இயங்கும் தாழ்த்தப்பட்டோர் இயக்கங்களுடன் இணைந்து, குழந்தைகளுக்கான கல்வி உதவி பெற்றுத் தருவதில் பணி புரிந்திருக்கிறேன். ‘Sanitation Workers Soceity For Human Rights’ என்கிற அமைப்பின் தலைவராகவும் இருந்து வருகிறேன்.

இந்தியாவில் ஜாதிய அடக்குமுறைக்கு ஆளான பெரும் சமூகமாக, அதிலும் தாழ்த்தப்பட்ட மக்களிடையிலும்கூட ஒடுக்கப்பட்ட சமூகமாகத் துப்புரவுப் பணி யாளர்கள் இருப்பதையும் நான் பார்த்திருக்கிறேன்.

ஜப்பானிலுள்ள துப்புரவுப் பணியாளர்களின் உரிமைக்காக பாடுபடும் இயக்கத்தை சார்ந்தவன் என்கிற முறையில், இந்தியாவிலுள்ள சக தோழர்களின் உரிமைகளுக்கு எப்படியெல்லாம் உதவலாம் என்று தொடர்ந்து இயங்கி வருகிறேன்.

மனித உரிமைக்காக ஜப்பானில் தொடர்ந்து இயங்குவதோடு, உலகின் எந்த மூலையில் இவ்வகைப் பிரச்சினை இல்லாது ஒழிக்கும் வகையில் பாடுபடுவேன் என்று உறுதி கூறுகிறேன்’’ என கோரா ஒசிதா பேசினார்.

பெரியார் உலகமயம்!

தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிய ஜப்பானியர் ஜூன்இச்சி ஹூக்காவோ, “நான் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆய்வுப் படிப்புப் படித்தேன். அங்கு இருக்கும் போது பெரியார் குறித்துப் படித் திருக்கிறேன். பெரியார் மற்றும் பொதுவுடைமைத் தோழர்களுடன் நட்பில் இருந்தேன். உலகம் முழுக்க சமநீதி என்பது கண்டிப்பாகத் தேவை! பெரியார் கொள்கைகளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும்’’ என்றார்!

ஜப்பான் மொழியில் பெரியார்

பெரியார் நூல்களை ஜப்பானிய மொழியில் மொழி பெயர்த்த ஜப்பான் வாழ் தமிழர் ச.கமலக்கண்ணன் பேசும் பொழுது, “சமூகநீதி நன்னாளில் சுயமரியாதைச் சுடரொளியைப் போற்றும் இத்திராவிடத் திருவிழாவிற்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் அவையத்து ஆன்றோர் அனைவரையும் வரலாறு.காம் சார்பில் வணங்கி மகிழ்கிறேன்.

2004ஆம் ஆண்டு நண்பர்களுடன் இணைந்து துவங்கிய வரலாறு.காம் மின்னிதழில் சோழர் காலக் கட்டடக்கலை மற்றும் வரலாறு தொடர்பாகப் பல கட்டுரைகளை எழுதியிருந்தாலும், பெரியார் டென்கி மற்றும் வைக்கம் நோ ஹெய்ஷி ஆகிய இந்நூல்கள் தான் என் உழைப்பைத் தாங்கி அச்சில் வரும் முதல் நூல்கள்.

இதற்கான வாய்ப்பை வழங்கிய திராவிடர் கழகத்திற்கு நன்றி கூறும் இவ்வேளையில், என் சிந்தனைக்கும் எழுத்துக்கும் உரமிட்ட இரு நல்ல உள்ளங்களை நினைவு கூர வேண்டிய கடமையும் எனக்கு உள்ளது.

சிறு வயது முதலே எதற்கும் யாருடைய தயவையும் எதிர்பார்த்து இருக்காதே, யாரிடமும் உதவியைப் பெற தன்மானத்தை விட்டுக் கொண்டிருக்காதே எனத் தற்சார்பையும், சுயமரியாதையையும் என்னுள் விதைத்த என் தந்தையார் என் முதல் நூலைக் காண இப்போது இல்லை என்ற வருத்தம் மேலிடுகிறது.

இரண்டாமவர் திருச்சிராப்பள்ளி டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மய்ய இயக்குநர் முனைவர் இரா. கலைக்கோவன் அவர்கள். வரலாற்று ஆய்வையும், ஆய்வு நெறிமுறைகளையும் எனக்குக் கற்றுக் கொடுத்தவர். என் எழுத்துகள் மேம்பட உதவிய அவருக்கு இந்நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொள்ள இயலாத வருத்தத்துடன் நன்றி கூறி என் உழைப்பை இருவருக்கும் சமர்ப்பிக்கிறேன்.

இந்தியத் துணைக் கண்டத்தில் இருந்தாலும், தமிழ்நாடு தனித்தன்மை யுடையது. வள்ளலார் போன்றோர் இத்தமிழ் மண்ணில் சமநீதியைப் பேசி இருந்தாலும், பெரியாரின் சிந்தனை ஓட்டமும், சமூகநீதிக் கண்ணோட்டமும் முற்றிலும் வேறானது.

முற்றிலும் வேறான பின்புலம் கொண்ட மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்ற பணி மிகப்பெரிய சவாலாக இருந்தது.  உதாரணமாக ஆலய நுழைவு என்பது ஒரே சொல்லில் இன்று தமிழ்நாட்டில் எளிதாகப் புரிந்து கொள்ளப்படக் கூடியது. ஆனால், இப்பிரச்சினை இல்லாத ஜப்பானியர்களுக்கு இதன் பின்புலத்தை விளக்க வேண்டியது அவசியமாகிறது. இம் மூலநூலில் இத்தகைய பின்புல விளக்கங்கள் எளிதான நடையில் எழுதப்பட்டிருந்தது எங்களுக்கு உதவியாக இருந்தது.

இதற்கு எதிர்மாறானதும் உண்டு. சுயமரியாதைத் திருமணம் என்பது இயல்பான ஒன்றாக மாற பெரியார் பட்டபாடுகள் தமிழ்நாட்டில் வாழும் இன்றைய தலைமுறைக்கே புரிந்து கொள்ளக் கடினமானது. கடந்த அரை நூற்றாண்டில் இத்தகைய திருமணம் ஜப்பானில் நடைமுறையாகி விட்டது. திருமணம் செய்வதும், குழந்தை பெற்றுக் கொள்வதும் பெண்கள் முடிவெடுக்க வேண்டிய விசயங்கள் எனப் பெரியார் சொன்னது போல இன்றைய ஜப்பானியப் பெண்கள் பொருளாதாரத் தற்சார்பு பெற்று அதே சிந்தனையைக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அவர்களால் இவற்றை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

இந்த வாய்ப்பிற்குத் திராவிடர் கழகத்திற்கும் இம்முயற்சிக்குப் பாலமாகவும், உறுதுணையாகவும் நின்ற திரு. வி.சி.வில்வம் அவர்களுக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்!’’ என்றார்.

மொழிபெயர்ப்பாளர் ரா.செந்தில்குமார்

இந்நூல்களை மொழி பெயர்த்த ஜப்பான் வாழ் தமிழர் ரா.செந்தில்குமார் பேசும்போது, பெருமைக்குரிய இந்த அவையில் கூடியிருக்கும் அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும் தந்தை பெரியார் பிறந்த நாளான செப் 17 ஆம் தேதியான இன்று உங்களை எல்லாம் இணையம் வழி சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.

சிறு வயதிலேயே குடும்பத்தின் திராவிடப் பின்னணி காரணமாகப் பெரியார் ஒரு பிம்பமாக உள்ளேறியிருந்தார். பிறகு வாசிக்கும் வழக்கத்தினால், பெரியார் பற்றி படித்தவையெல்லாம் அவரைப் பற்றிய பெரும் வியப்பைத் தான் ஏற்படுத்தியது. 2002 ஆம் ஆண்டு டோக்கியோவிற்கு பணி நிமித்தம் வந்தடைந்தேன்.

அந்த காலக் கட்டத்தில் ஜப்பானி யர்களிடம் இந்தியா பற்றி பேசும் போதெல்லாம் பெரும்பாலானோருக்கு காந்தியார் அவர்களைத் தெரிந்திருந்தது. அவர்களுடைய பள்ளிப் பாடங்களிலேயே  காந்தியாரைப் பற்றிய ஓர் அறிமுகம் கிடைத்திருக்கிறது என்பதைக் கண்டேன். ஆனால், காந்தியாரை விடுத்து மற்ற தலைவர்கள் குறித்துப் பெரிய அறிமுகம் இல்லை.

காந்தியாரைப் போலவே அண்ணல் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் இந்த மண்ணில் தோன்றிய மிக முக்கியமான வரலாற்று நாயகர்கள். தந்தை பெரியாரும்,  காந்தியாரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்றே நான் கருதுகிறேன். இவர்கள் இருவரும், ஒருவரை ஒருவர் நிரப்புபவர்கள். ‘விஹ் றீவீயீமீ வீs னீஹ் னீமீssணீரீமீ’ என்று இந்த மண்ணில் முழங்கியவர் காந்தி. அப்படியே வாழ்ந்தவர்தான் பெரியார்!

மாபெரும் புரட்சியாளரான பெரியார், எதை முன்னிட்டும் மனிதன் அடிமைப்படவோ, அச்சப் படவோ கூடாது என்கிற மாபெரும் நம்பிக்கையைத் தமிழ் மண்ணில் விதைத்தவர். ஜாதியத்தின் வேரான பிராமணியத்தை எதிர்க்கின்ற மன நிலையை இந்த மண்ணில் எழுப்பியவர்.  எவையெல்லாம் சக மனிதனை இழிவுபடுத்துகிறதோ, அவையெல்லாம் தூக்கி எறியப்பட வேண்டியவை என்கிற கலகக் குரலுக்குச் சொந்தகாரர். அதே சமயத்தில் நான் சொல்கிறேன் என்பதற்காக எதையும் ஏற்க வேண்டியதில்லை, உன்னுடைய அறிவுக்கு உட்படுத்தி அதை பரீசிலனை செய், சரி என்றால் ஏற்றுக் கொள், இல்லையென்றால் நிராகரி என்று சொன்ன மாபெரும் ஜனநாயகவாதி.

இன்றைக்குக் “கிச்சன்லெஸ் சொசைட்டி” பற்றி பேசுகிறோம். நூறாண்டுகளுக்கு முன்பே பெரியார் ”பெண்களை அடிமைப்படுத்தும் அடுப்பங்கரைகள் இடித்துத் தள்ளப்பட வேண்டியவை’’ என்றார்.

தன்னுடைய வீட்டுப் பெண்களை தான் நம்பிய, வழி நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் ஈடுபடுத்தியவர். காலங்காலமாக இந்த மண்ணில் வேரூன்றிய ஆணாதிக்கத்தின் சொச்சம், எப்போதெல்லாம் என்னையும் மீறி என்னுள் எழுகிறதோ, அப்போதெல்லாம் அதன் மீது விழும் அடி பெரியாரின் கைத்தடி யினுடையது. அவ்வகையில் பெரியாருக்கு நான் நன்றிக் கடன்பட்டவன்.

கி.வீரமணி அவர்கள் பெரியார் பற்றிய நூலை ஜப்பானிய மொழியில் கொண்டு வர இயலுமா என்று வினவிய போது மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். ஆசிரியர் வினவியது ஜூன் மாத இறுதியில். அதற்குப் பிறகும், சீரான கால இடைவெளியில் அக்கறையுடன் நூலைப் பற்றிக் கேட்டுக் கொண்டே இருந்தார். எங்களுடைய மொழி பெயர்ப்பைச் சரி பார்த்துப் பிழை திருத்திய ஆசிரியர் யுதாகோ நகனோ சான் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நூல் ஆக்கத்திற்குக் காரணமாக இருந்த ஆசிரியர் கி.வீரமணி அய்யா அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

சிறந்த யூ டியூபர் (You Tuber)

சமூக ஊடகத்தளமான யூடியூபில் (You Tube) மக்களுக்குத் தேவையான பகுத்தறிவுக் கருத்துகளையும், பெரியார் சிந்தனை களையும், நகைச்சுவை நையாண்டிகளை எளிய வடிவில் புரியும் வகையில் கொண்டு சேர்ப்பதில் சிறந்து விளங்கும் நபருக்கு சிறந்த‘You Tube brochure’ என்னும் இவ்விருது இந்த ஆண்டு முதல், அமெரிக்க பன்னாட்டு பெரியார் அமைப்பின் உதவியுடன் விருதும், ரூ.25,000க்கான பரிசுத் தொகையையும் அறிவித்தது. அதனை முதல் சமூகநீதி நாளான இன்று அறிமுகப்படுத்தி சிறந்த You Tuber ஆக மைனர் வீரமணி தேர்வு செய்யப்பட்டு விருது கொடுக்கப்பட்டது.

கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்களின் உரை

மாண்புமிகு அமைச்சர் பி.கே.சேகர் பாபு

“தந்தை பெரியாரின் கனவை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள். நம்முடைய முதலமைச்சர் அவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருப்பவர் தமிழர் தலைவர் ஆசிரியர்தான் என்றும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு குறிப்பிட்டார். ஆசிரியர் அவர்கள் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டு கண்டு நலமுடன் வாழ வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்’’ என்று தன் உள்ளத்தின் உணர்வை வெளிப்படுத்தினார்.

பேராசிரியர் சுலோச்சனா

“எங்களைப் போன்றவர்கள் படித்து ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக வளர்வதற்குக் காரணம் தந்தை பெரியாரே _- அவர்களின் சமூகநீதிக் கொள்கையே என்று நன்றி உணர்வுடன் வெளிப்படுத்தினார்.

கொசுவை ஒழிக்க அதன்மூலமான சாக்கடையை ஒழிப்பதுபோல, ஜாதி சமூக அமைப்பை ஒழிக்க அதன் மூலத்தோடு போர் புரிந்தவர் தந்தை பெரியார் என்றும் பெருமைப்படக் கூறினார்.

பார்ப்பனர் அல்லாதாரைக் குறிக்க திராவிடர் என்பதைத் தந்தை பெரியார் பயன்படுத்தியதன் காரணத்தை  இந்நூலில் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

தந்தை பெரியார் ஒரு தொலைநோக்காளர் – சமூக விஞ்ஞானி என்பதற்கு 1938-களில் சோதனைக் குழாய்க் குழந்தை குறித்து தந்தை பெரியார் கூறிய கருத்தும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.

தந்தை பெரியார் தன்னைப்பற்றி சுய விமர்சனம் செய்து கொள்ளும்போது, “தான் ஓர் எழுத்தாளனோ, பேச்சாளனோ அல்ல;  கருத்தாளன்’’ என்று குறிப்பிட்டதை வியந்து பாராட்டினார் சுலோச்சனா அம்மையார். ஆசிரியர் அவர்களால் எழுதப்பட்ட இந்நூல் பள்ளிகளில் பாட நூலாக வைக்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் உறுதி படக் கூறினார்.

ஜோதிமணி எம்.பி.

தந்தை பெரியார் 143 ஆம் ஆண்டு பிறந்த நாள் ‘விடுதலை’ மலரை வெளியிட்ட கரூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஜோதிமணி அவர்கள் தன் உரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:

“தந்தை பெரியார் ஒரு கலகக்காரரே தவிர, கலவரக்காரர் அல்ல. பெண்கள் விடுதலை என்று வரும்போது, பெண்களிடத்திலேகூட மனத்தடை உண்டு. அதற்கு மரபணுக்கள் நம்முள் பரம்பரையாக இருந்து வருகின்றன. அந்தத் தடைகளை உடைத்தது தந்தை பெரியாரின் கைத்தடி என்றார்.

ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பதில் கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம் இம்மூன்றும் முக்கியமானவை. ஆர்.எஸ்.எஸ். இந்த மூன்றையும் குறி வைத்துத் தாக்கி அழித்து வருகிறது என்ற நுட்பமான கருத்தினை அவர் பதிவு செய்தார்.

தங்கள் கலாச்சாரத்தைத் தவிர, வேறு கலாச்சாரம் தலைதூக்கக் கூடாது என்பதிலே பாசிச சக்திகள் கவனமாக இருக்கின்றன. கீழடி ஆய்வு தடைபட்டதற்கும், அதன் அதிகாரி அந்த இடத்திலிருந்து வெகுதூரத்திற்கு மாற்றப் பட்டதற்கும் இதுதான் அடிப்படை என்றார்.

தந்தை பெரியாரின் பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி இம்மூன்றும்தான் தமிழ்நாட்டைக் காப்பாற்றி வருகிறது என்று மிகவும் சரியாகக் கணித்துச் சொன்னார்.

ஆசிரியர் அய்யா அவர்களும், கருஞ்சட்டைத் தோழர்களும் வலிமையுடன் கருத்துகளை விதைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகிவிட்டது.

ஆசிரியர் அவர்கள் எனக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்கள். வெற்றிக்குப் பிறகு இப்பொழுதுதான் அவர்களைச் சந்திக்கின்றேன்.

எனக்கு நான்கு இலட்சத்திற்குமேல் வாக்குகள் கிடைத்ததற்கு ஆசிரியர் அய்யா அவர்களின் பங்கும் உண்டு – அதற்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.

பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களால் எழுதப்பட்ட ‘’கற்போம் பெரியாரியம்’’ எனும் நூலை திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வெளியிட்டு உரையாற்றுகையில்,

“தந்தை பெரியார் அவர்களை வேறு வழியில் குறை சொல்ல முடியாதவர்கள், பெரியாருக்கு இவ்வளவு உயரத்தில் சிலை தேவையா என்று சில குள்ள மனிதர்கள் சொல்லுகிறார்கள்.

நமது சமுதாயம் நமது தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மிகவும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது. தந்தை பெரியாரின் கருத்துகளை உலகம் முழுவதும் கொண்டு செல்கிறார்.

நமது ஆசிரியர் அவர்களால் எழுதப்பட்ட ‘’கற்போம் பெரியாரியம்’’ எனும் நூல் ஆய்வு நூல் அல்ல; அறிவு நூல்! ஒவ்வொருவரும் படிக்க வேண்டும். நமக்குப் பாடங்களைக் கற்றுத் தரும் நூல். அவரை ஆசிரியர் என்று சொல்லுவது ஏன் என்பது இப்பொழுது புரிகிறதா?

உலகில் மதத்தின் பெயரால் – ஜாதியின் பெயரால் கட்சிகள் உண்டு. சுயமரியாதை என்னும் பெயரில் கட்சி உண்டா _- அமைப்பு உண்டா என்ற ஆழமிகுந்த வினாவை பேராசிரியர் சுப.வீ. அவர்கள் எழுப்பியபோது அரங்கமே அதிர்ந்தது.

சிலர் இப்பொழுது கிளம்பி இருக்கிறார்கள். பெங்களூரு அய்யங்கார் பேக்கரி என்றால், பெங்களூரை எடுக்க வேண்டும் என்கிறார்கள் – ஆனால், அய்யங்கார் பேக்கரி அப்படியே இருக்கட்டும் என்கிறார்கள்.

இதுதான் இவர்களின் பிரச்சினை என்று குழப்ப வாதிகளை அம்பலப்படுத்தினார் பேராசிரியர் சுப.வீ.

உலகெங்கும் சமூகநீதி நாள்

தமிழ்நாட்டில் அனைத்து ஊர்களிலும், இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களிலும் தந்தை பெரியார் பிறந்த நாள் எழுச்சியுடன் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதேபோல் உலகம் முழுவதும் உள்ள பெரியார் பற்றாளர்கள் மற்றும் திராவிடர் கழகத்தினர், தமிழ் மக்கள் என அனைவரும் தமிழ்நாடு அரசு அறிவித்த சமூகநீதி நாளை முழுமையாக ஏற்று இன உணர்வோடு தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூகநீதி நாளாகக் கொண்டாடி உறுதிமொழி ஏற்றுச் சிறப்பித்தனர்.

(குறிப்பு: ஆசிரியர், சிறப்பு அழைப்பாளர்களின் உரை அடுத்தடுத்த இதழில்)