சனி, 23 செப்டம்பர், 2023

ஆத்மா உண்டென்பதும் மறுஉலகவாழ்வுப் பேச்சும் பார்ப்பனரின் பித்தலாட்டமே (மனித வாழ்வின் பெருமை எது?)


ஆத்மா உண்டென்பதும் மறுஉலகவாழ்வுப் பேச்சும் பார்ப்பனரின் பித்தலாட்டமே

மனிதப் பிறவி என்பதில் புகழைத் தேடுவதுதான் மற்ற ஜீவனுக் குள்ளதைவிட மேலான தன்மை என்று கூறப்படும். ஆனால் மனிதனும் புகழைத் தேடவில்லை என்றால் மற்ற ஜீவன்களின் வாழ்க்கைக்கும் இவனுக்கும் வித்தியாசமே இல்லாது போவதும் அன்றி மனித வாழ்க்கை மேலானது என்றோ உயர்வென்றோ கூறுவதற்கில்லை.

மற்றும் மனிதன் இறந்து போதல் என்பதிலும் மற்ற ஜீவன்களைப் போன்றே இவனும் இறந்து விடுகிறான் என்றேன்.

மனிதன் சாதல் என்பது மனிதனுக்குக் கருவி கரணாதிகள் - இயங்கும் சக்தி நின்று போன பின் செத்துப் போதல் என்றாகிறது; அதாவது மனிதனுடைய சகல அவயங்களும் நகரும் (இயங்கும்) சக்தியை இழந்துவிட்ட பின்பு செத்துப் போகிறான். (சத்துப் போய்விட்டது) என்றாகிவிடுகிறான்.

மரம் பட்டுப் போய்விட்டது என்கிறோம். அதாவது மரத்திற்கு இதுவரை இருந்த வளர்ச்சிக்குள்ள சத்தானது போய்விட்டது. சத்துப் போனதைத் தான் செத்துப் போய் விட்டது என்று கூறுகிறோம். இப்படி மிருக இனங்களும், பறவை இனங்கள், ஊர்வன, நீர்வாழ்வன போன்ற எல்லா வற்றுக்கும் நகரும் சக்தியும் வளரும் சக்தியும் போய்விட்ட பின் செத்து விடுகிறது என்கிறோம். மரம், செடி, கொடி, புல்பூண்டு இவைகளுக்கு வளர்ச்சியைக் கொடுக்கும் சத்து அதாவது காற்றையும் நீரையும் இழுக்கும் சக்தி போனதும் செத்துப்போகிறது. அத்துடன் இவைகளின் வாழ்க்கை முடிந்தது என்று பொருள்.

அவைகளைப் போன்றே மனிதனும் செத்துப்போனபின் அதனுடன் அவன் வாழ்வு முடிந்தது. அத்தோடு சரியாகி விடுகிறது.

ஆனால் வைதீகர்கள் கூறுவதோ அப்படி இல்லை. மனிதன் செத்துப் போனவுடன், அவனுடைய உடலிலிருந்து ஆத்மா என்று ஒன்று பிரிந்து சென்று மேல் லோகம் அடைகிறது. என்கிறார்கள். அத்துடன் கூட விடவில்லை. பிரிந்து சென்ற ஆத்மா, தான் செய்த பாவபுண்ணியங் களுக்குத் தக்கவாறு, நரகமோ, மோட்சமோ அடைகிறதாம். அங்கு இன்பதுன்பங்கள் அனுபவிக்கிறதாம்! அவ்வளவோடும் விடுவதில்லை. ஒரு சரீரத்தில் இருந்து பிரியும் ஆத்மா வேறு ஒரு சரீரத்தைப்பற்றிக் கொண்டுதான் நீங்குகிறதாம். அதாவது ஒட்டுப்புழுப்போல்.

எப்படியோ ஆத்மா என்பதை பற்றிப் புளுகிவிட்டு; அதைநிலை நாட்டுவதற்கென்று ஒன்றன்பின் ஒன்றாகப் பாவ புண்ணியம், மோட்சம், நரகம், மறு ஜன்மம், பிதிர்லோகவாசம், கடவுள், என்றெல்லாம் புளுகிக் கொண்டேபோகும் அவசியம் ஏற்பட்டுவிட்டது. ஒரு புளுகை மறைக்க எண்ணற்ற அபாண்ட, அ°திவார மற்றதுமானப் புளுகுகள் அதுவும் கண்ணை மூடிக்கொண்டு எப்படி எப்படி புளுகவேண்டும் என்றுகூட சிந்தித்துப் புளுகாமல் மலைபோன்ற புளுகும்படி ஆகிவிட்டது. அப்படிக் கூறினால்தான் மனிதன் ஓரளவு நம்புவான் என்பதற்கே ஆகும்.

மனிதன் செத்தான் என்றவுடன் அவனுடைய சக்திக் குறைந்து போய் அசையும் தன்மையற்று மனிதனின் உள் அவயவங்களான சுவாச உறுப்புகளும், காற்றை இழுத்து வெளியிடும் இயங்கும் சக்தியை இழந்துபோனபின் மூச்சும் நின்றுவிடுகிறது மூச்சு நின்றுவிட்டபின், உடல் அழுகி நாற்றமடைகின்றது. அப்படி செத்துப்போன உடலை பூமியில் புதைத்துவிடுகிறோம். புதைத்தால் மக்கிப் போய் மண்ணோடு மண்ணாய்ப் போய் விடுகிறது. எரித்துவிட்டால் சாம்பலாகிப் போய்விடுகிறது. ஒரு ஆட்டை, ஒரு கோழியை, ஒரு மீனை அறுத்துச் சாப்பிட்டு விடுவது போல் ஒரு மரத்தை வெட்டி எறிந்து விடுவதுபோல் மனிதன் எரிக்கப்படுவதை புதைக்கப்படுவதை நாம் கண்ணால் நேரில் பார்க்கிறோம்.

ஆனால் கண்ணுக்குத் தெரியாமல் ஆத்மா என்று ஒன்று பிரிந்து செல்லுகிறது என்றால் இதைப் பெரும் பித்தலாட்டம் என்றுதான் கூறவேண்டும். இத்தன்மை மனிதனுக்கு மட்டும் உண்டு! மற்ற ஜீவன்களுக்கு ஈ, எறும்பு, பூச்சி, புழு அணுக் கிருமிகளுக்கு ஆத்மா என்றொன்று கிடையாது என்றும் கூறுவது கொஞ்சமேனும் மனிதப்பண்புக்கு ஏற்றதென்று கூறமுடியாது. விவகாரத்திற்கு ஆக அவற்றிற்கும் ஆத்மா உண்டு என்றால் அந்த ஆத்மாக்கள் எங்கே போய் என்ன மோட்சநரகத்தை எதற்கு ஆக அனுபவிக்கக் கூடும்?
மனிதனுக்கு மட்டும் ஆத்மா உண்டு. இதன் மேன்மைக்கு ஆக அதன் சந்ததிகள் பார்ப்பனனுக்குத்தான் தர்மம் செய்ய வேண்டும்! “அதாவது ஆத்மா சுகமடைய பார்ப்பனனுக்குச் சுகமுண்டாக்க வேண்டும்” என்றால் இவை பார்ப்பனர்களால் - புரோகிதர்களால் அவர்களது நன்மைக்கென்று ஏற்படுத்தப்பட்டதென்பதற்கு வேறு ஆதாரங்கள் தேவையில்லை.

கண்ணுக்குத் தெரியாததும், சூட்சமமாகவும் யாருக்கும் தெரியா மலும் மேலே செல்லுகிறது என்கிறார்கள்! இப்படிக் கூறுகிறவர்கள் கண்ணுக்குமட்டும் இந்த ஆத்மா எப்படித் தெரிந்ததோ தெரியவில்லை. கேட்டால் “வேதம் சொல்லுகிறது, சா°திர புராணம், கருடபுராணம் சொல்லுகிறது, என்பார்கள்! இவைகள் எப்போது யாரால் ஏற்படுத்தப் பட்டன? என்றால் ரிஷிகள், முனிவர்கள், கடவுள் அவதாரங்கள், கடவுள்கள் வெங்காயங்கள், கருவேப்பிலைகள் கூறியவைகள் என்பார்கள். காலம் எப்போது என்றால் பல யுகங்களாயிற்று என்பார்கள். இவர்கள் யார்? இவர்களின் யோக்கியதை என்ன? இந்த நபர்களுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? யாரோ உளறியவைகளை வைத்துக் கொண்டு இந்த விஞ்ஞானக் காலத்திலும் நாம்கட்டி அழுவது பொருத்தமாகுமா? என்று கேட்டால், “அப்படிக்கேட்காதே நா°திகம் பேசாதே. நீ பாவி, உன்னைக் கடவுள் நரகத்தில்தான் தள்ளுவார்” என்றுதான் கூறமுடியுமே தவிர ஒன்றுக்கும் சரியான பதில் கூறமுடியாது.

இப்படியே எதையும் பார்ப்பனர்கள் கடவுளின் பெயரையும், மதம் சா°திரபுராணங்கள் பெயரையும், கண்ணுக்குத் தெரியாத சூட்சுமங்கள் நம்புத்திக்கு எட்டாத தத்துவங்கள் என்பதையும் கூறி நம்மை மிருகத்தினும் கேடானவர்களாக்கிவிட்டனர். மனிதன் என்று கூறப்படுவது ஒரு குறிப்பிட்ட தனிப்பட்ட பொருளின் பெயரில்லை. மன்மத சிந்தாமணி லேகியம் என்கிறார்கள். அந்த லேகியம் பல பொருள்களைக் கூட்டமாகக் கொண்டது. தாது விருத்தியை உண்டாக்கும் சத்துள்ள பொருள்கள் பலவற்றையும் அளவுடன் சேர்த்துப் பக்குவப்படுத்தப்பட்ட கூட்டுப் பொருள் தான் அந்த லேகியம். அதன்பிறகுதான் அதற்கு மன்மத சிந்தாமணி லேகியம் என்று பெயர் வந்தது. அதற்கு முன் சேர்க்கப்பட்ட பல பொருள்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே பெயர் உண்டு.

மேஜை என்பதை எடுத்துக் கொண்டால் மேஜை என்ற சாமான் அப்படியே விளையக்கூடியது இல்லை. பல சாமான்களைச் சேர்த்துச் செய்யப்பட்டது மேஜை மரத்தால் செய்த கால்கள், மரப்பலகை, மர ஆய்ப்புகள் இவைகளைப் பிணைக்கும் இரும்பு ஆணிகள், இரும்புப் பட்டைகள் இவைகளை எல்லாம் பொருந்தும்படி ஒன்று சேர்த்து உண்டாக்கப்பட்டதற்கு மேஜை என்று பெயர். மேஜை என்ற உருவம் வருமுன்பாக அதில் உள்ள கூட்டுப் பொருள்கள் யாவற்றிற்கும் தனித்தனியே ஒவ்வொரு பெயர் இருந்தது. மேஜை பயனற்றுப் போய் விட்டபின் அதன்கூட்டுப் பொருள்களை தனித்தனியே பிரித்து விட்டால் சட்டம் பலகை ஆணிகள் இவை தனித்தனியே இருக்கும். மரப்பலகையும் சட்டமும் பிறகு அடுப்பெரிக்கத்தான் உபயோகப்படும். எரித்தவுடன் கரியாக சாம்பலாக போய்விடுகிறது.

அதைப்போன்றே மனிதன் என்பது கற்பனைப் பெயர் கொண்ட கூட்டுப் பொருள்களை கொண்ட ஒரு உருவத்தோற்றமாகும். மனிதனைத் தொட்டுக் காட்டு என்றால் நீங்கள் எதைத் தொட்டு காட்டுவீர்கள்? கையை, காலை, தலை முதலியனவற்றைத் தொட்டு காட்டினால் அதற்குத் தனித்தனிப் பெயர்தான் கூறலாம். தொடுவதை எல்லாம் மனிதன் என்று கூறமுடியாது. ஏன் எனில் காலையோ, மார்பையோ, வயிற்றையோ, தலையையோ ஏதாவது ஒன்றைத் தொட்டுக் காட்டினாலும் அதனதற்குத் தனித்தனிப் பெயரிருக் கிறது. மனிதன் என்பது தனிப்பட்ட ஒன்றின் பெயராக இருக்குமானால் அதைத் தொட்டுக் காட்டலாம்.

ஆனால் இத்தனைப் பெயர்களையும் கொண்ட உறுப்புக்களை ஒன்று சேர்ந்திருப்பது மனிதன் என்றிருக்க எப்படி மனிதனைத் தொட்டு காட்ட முடியும்?

மேலும் இந்த அவயவங்களில் ஏதாவது ஒன்று அல்லது சில இல்லை என்றாலும் அவனை மனிதன் என்றுதான் கூறுகிறோம். ஒருவனுக்குக் கை இல்லை என்றால் அவனும் மனிதன்தான். ஒருவனுக்குக் கால் இல்லை என்றாலும் அவனும் மனிதன்தான். ஆனால் மனிதன் என்ற பெயர் எப்போது மறைகிறதென்றால் ஒருவன் மூச்சு வாங்கி விடுவது நின்றுவிட்டதானால் மனிதன் என்ற பெயர் மாறி பிணம் என்ற பெயர் வருகிறது.

அதன் பிறகும் அதைச் சுடும்வரை பிணம், சுட்ட பின் சாம்பல் என்ற பெயர் வருகிறது. மீதியுள்ளவை எலும்புகள். அவைகளும் மண்ணுடன் மக்கிப்போன பின் எலும்பு மண்ணாகிவிடுகிறது.

மற்றும் மனிதனின் சுபாவம் என்ன என்று பார்த்தால் மற்ற ஜீவன்களுக்கில்லாத சுபாவம் கொண்டவனாக இருக்கிறான். நாய்க்கு ஆகிலும் நன்றி விசுவாசம் என்பது மிகுதியும் உண்டு. நன்றியைக்
கொஞ்சம் கூட மறக்காமல் நாய் தன் எஜமானனிடம் விசுவாசத்துடன் இருக்கும். தன் எஜமான் தன்னைவிட்டு வெளியில் சென்று விட்டு பிறகு வந்ததும் தன் நன்றியின் அறிகுறியாக எட்டித்தாவி, வாலை ஆட்டிக்கொண்டு துள்ளிக் குதித்து மேலே விழுந்து விளையாடுவதற்கு முயற்சிக்கும். மனிதனோ நாயைப் போல் நன்றி இயல்பு உடையவனல்ல. நாயைத் தன் எஜமான் எவ்வளவு அடித்தாலும், உதைத்தாலும், மறு நிமிடத்தில் அதே நாய் தன் எஜமானனிடம் அன்பு காட்டுவதைப் பார்க்கலாம். சோறு போடாவிட்டாலும் வி°வாசம் காட்டும். ஆனால் மனிதன் அப்படி அல்ல. என்ன நன்மை அடைந்தாலும் ஒருதீமை நேர்ந்துவிட்டால் முன்பு அடைந்த நன்மைகளை மறந்து தீமையை மட்டும் எடுத்துக் கொள்வான். இது மனித ஜீவனின் சுபாவம் ஆகும். மனிதனுக்குச் சகலமும் சுயநலம்-வியாபாரமுறை-மனிதனுக்குத் துரோகம் என்பது இயல்பு.

இப்படி மற்ற ஜீவன்களில் பூனையை எடுத்துக்கொண்டால் அதன் சுபாவப்படி, மனிதன் எப்பொழுது ஏமாறுவான் அல்லது எப்போது இருட்டு ஆகும். அடுக்கில் அறையில் உள்ள பால் தயிர்ப் பானையை உருட்டிவிட்டு ருசி பார்க்கலாம் என்று காத்துக் கொண்டு இருக்கும். மற்றவரை ஏமாற்றும் சுபாவத்திலேயே கருத்துடன் இருக்கிறது. அது போல் மாத்திரமல்லாமல் மனிதனை மனிதன் குரோதக் கருத்திலும், துரோகக் கருத்திலும் கொல்வான்! விஷமிடுவான்! சாகத்தவம் கிடப்பான். இது மனித இயல்பு.

பூமிக்கு மேல் மைல் கணக்கில் தூரத்தில் பறக்கும் பருந்து பூமியில் கிடக்கும் சிறிய வ°துக்களைக் கண்டு பிடித்து விடுகிறது. நம்முடைய கண் பருந்தின் கண்ணை விடப்பெரியது. நம் கண் உருவத்தில் பெரிதே தவிர, பறவைக்குள்ள கண்ணின் சக்தியைப் போன்று சக்தி அதிகம் கொண்டதில்லை. பருந்தின் கண்களுக்குத் தனி சக்தி இருக்கிறது. மனிதன் கரும்பை உற்பத்தி செய்கிறான். ஆனால் யானைக்குக் கரும்பை தின்னுவதற்குத் தான் தெரியும். கரும்பை பயிர் செய்யத் தெரியாது. மனிதன் பெரிதும் பிறருக்குத் தொண்டு செய்து வாழ்வதையே குறியாய்க் கொண்டுள்ளான். ஆனால், இந்தக் குறிக்கோள் மற்ற ஜீவனுக்கு இல்லை.


நூல் - மனித வாழ்வின் பெருமை எது?
(நீத்தார் நினைவுநாள் சிந்தனைகள்)
ஆசிரியர் : தந்தை பெரியார்

செவ்வாய், 19 செப்டம்பர், 2023

பிள்ளையார் பிறப்புக்கு நான்கு வகைக் காரணம்: எது உண்மை? எல்லாமே பித்தலாட்டம்!


- தந்தை பெரியார் விளக்குகிறார்

1

ஹிந்துக் கடவுள்களில் முதன்மைப் பெற்றதும், மக்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்றதும், இந்துக்கள் என்போர்களில் ஏறக்குறைய எல்லோராலும் ஒப்புக் கொண்டு வணங்கப்படுவதுமான கடவுள் பிள்ளையார் என்பது இதனை கணபதி என்றும், விநாயகர் என்றும், விக்கினேஸ்வரன் என்றும் இன்னும் இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான பெயர்களைச் சொல்லி அழைப்பதும் உண்டு.

நிற்க, இந்த பிள்ளையார் என்னும் கடவுளை இந் துக்கள் என்பவர்கள் தங்களுடைய எந்தக் காரியத்திற்கும் முதன்மையாய் வைத்து வணங்குவதும், கடவுள்களுக் கெல்லாம் முதல் கடவுளாக வணங்குவதுமாக இப் போது அமலில் இருக்கும் வழக்கத்தை எந்த இந்து என்பவ னாலும் மறுக்க முடியாது.

ஆகவே, இப்படிப்பட்டதான யாவராலும் ஒப்புக் கொள்ளக்கூடியதும், அதி செல்வாக்குள்ளதும், முதற் கடவுள் என்பதுமான பிள்ளையாரின் சங்கதியைச் சற்று கவனிப்போம்.

1. ஒருநாள் சிவனின் பெண் சாதியான பார்வதி தேவி, தான் குளிக்கப் போகையில் குளிக்குமிடத்திற்கு வேறு ஒருவரும் வராமல் இருக்கும்படியான ஒரு காவல் ஏற் படுத்துவதற்காக தனது சரீரத்தில் உள்ள அழுக்குகளைத் திரட்டி உருட்டி அதை ஒரு ஆண் பிள்ளையாகும்படி கீழே போட்டதாகவும், அது உடனே ஒரு ஆண் குழந்தை ஆகி விட்டதாகவும், அந்த ஆண் குழந்தை யைப் பார்த்து - “நான் குளித்துவிட்டு வெளியில் வரும்வரை வேறு யாரையும் உள்ளே விடாதே!” என்று சொல்லி அதை வீட்டு வாயிற்படியில் உட்கார வைத்திருந்ததாகவும், அந்த சமயத்தில் பார்வதியின் புருஷனான பரமசிவன் வீட்டிற்குள் புகுந்ததாகவும், அழுக்குருண்டையான வாயில் காக்கும் பிள்ளையார் அந்த பரம சிவனைப் பார்த்து, “பார்வதி குளித்துக் கொண்டிருப்பதால், உள்ளே போகக் கூடாது” என்று தடுத்ததாகவும், அதனால், பரம சிவக் கடவுளுக்கு கோபம் ஏற்பட்டு தன் கையிலிருந்த வாளாயுதத்தால் ஒரே வீச்சாக அந்தப் பிள்ளையார் தலையை வெட்டிக் கீழே தள்ளிவிட்டு குளிக்குமிடத்திற் குள் போனதாகவும், பார்வதி சிவனைப் பார்த்து, “காவல் வைத்திருந் தும் எப்படி உள்ளே வந்தாய்?’’ என்று கேட்டதாகவும், அதற்கு சிவன், “காவற்காரன் தலையை வெட்டி உருட்டி விட்டு வந்தேன்” என்று சொன்னதாகவும், இது கேட்ட பார்வதி, தான் உண்டாக்கின குழந்தை வெட்டுண்டதற்காகப் புரண்டு புரண்டு அழுததாகவும், சிவன் பார்வதியின் துக்கத்தைத் தணிக்க வேண்டி, வெட்டுண்டு கீழே விழுந்த தலையை எடுத்து மறுபடியும் ஒட்ட வைத்து உயிர் கொடுக்கலாம் எனக் கருதி உடனே வெளியில் வந்து பார்க்க, வெட்டுண்ட தலை காணாமல் போனதால் அருகிலிருந்த ஒரு யானை யின் தலையை வெட்டி, முண்டமாகக் கிடந்த குழந் தையின் கழுத்தில் ஒட்ட வைத்து, அதற்கு உயிரைக் கொடுத்து, பார்வதியைத் திருப்தி செய்ததாகவும் கதை சொல்லப்படுகின்றது. இக் கதைக்கு சிவ புராணத்திலும், கந்தபுராணத்திலும் ஆதா ரங்களும் இருக்கின்றனவாம்.

2. ஒரு காட்டில் ஆண் - பெண் யானைகள் கலவி செய்யும்போது சிவனும் - பார்வதியும் கண்டு, கலவி ஞாபகம் ஏற்பட்டுக் கலந்த தால், யானை முகத்துடன் குழந்தை பிறந்தது என்றும் பிள்ளையார் கதையில் கூறுகின்றதாம்.

3. பார்வதி கர்ப்பத்தில்  கருவுற்றிருக் கையில் ஓர் அசுரன் அக்கருப்பைக்குள் காற்று வடிவமாகச் சென்று அக் கருச் சிசுவின் தலையை வெட்டி விட்டு வந்த தாகவும், அதற்குப் பரிகாரமாக பார்வதி யானையின் தலையை வைத்து உயிர் உண்டாக்கி குழந்தையாகப் பெற்றுக் கொண்டதாகவும் விநாயகர் புராணம் கூறுகின்றதாம்.

4. தக்கனுடைய யாகத்தை அழிப்ப தற்காக சிவன் தனது மூத்த குமாரனாகிய கணபதியை அனுப்பியதாகவும், தக்கன் அக்கணபதி தலையை வெட்டி விட்ட தாகவும், சிவன் தனது இரண்டாவது பிள்ளையாகிய சுப்பிர மணியனை அனுப் பினதாகவும், அவன் போய்ப் பார்த்ததில் தலை காணப்படாமல் வெறும் முண்டமாய் கிடந்ததாகவும், உடனே ஒரு யானையின் தலையை வெட்டிவைத்து உயிர்ப்பித்த தாகவும் மற்றொரு கதை சொல்லப் படுகின்றது. இது தக்கயாக பரணி என்னும் புத்தகத்தில் இருக்கின்றதாம்.

22

எனவே, பிள்ளையார் என்னும் கடவுள் சிவனுக்கோ, பார்வதிக்கோ மகனாகப் பாவிக்கப்பட்டவர் என்பதும், அந்தப் பிள்ளையாருக்கு யானைத் தலை செயற் கையால் ஏற்பட்டதென்பதும் ஒப்புக் கொள்ள வேண்டிய விஷய மாகும்.

கடவுள் கூட்டத்தில் முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படிப் பல விதமாகச் சொல்லப்படுவதும், அவைகளிலும் எல்லா விதத்திலும் அவர் பிறரால் உண் டாக்கப்பட்டதாகவும், பிறப்பு, வளர்ப்பு உடையவராகவும் ஏற்படுவதுமானதாயிருந்தால், மற்றக் கடவுள்கள் சங்கதியைப் பற்றி யோசிக்கவும் வேண்டுமா? நிற்க; ஒரு கடவுளுக்குத் தாய் - தகப்பன் ஏற்பட்டால், அந்தத் தாய் தகப்பன்களான கடவுள்களுக்கும் தாய் - தகப்பன்கள் ஏற்பட்டுத்தானே தீரும்? (இவைகளைப் பார்க்கும் போது, கட வுள்கள் தாமாக ஏற்பட்டவர்கள் என்றால் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? ஆகவே, இந்தக் கடவுள்களும், உலகமும் ஏற்பட்ட தற்கு வேறு ஆதாரங்களைக் கண்டு பிடிக்க வேண்டியதாயிருக்கிறது).

கடவுளைப்பற்றிய விவகாரங்களோ, சந்தேகங்களோ ஏற்படும்போது மாத்திரம் “கடவுள் ஒருவர் தான் ; அவர் நாம, ரூப, குணமற்றவர்; ஆதி அந்த மற்றவர்; பிறப்பு இறப்பு அற்றவர்; தானாயுண்டானவர்” என்று சொல்லுவதும், மற்றும் “அது ஒரு சக்தி” என்றும், “ஒரு தன்மை அல்லது குணம்” என்றும் பேசி அந்தச் சமயத்தில் மாத்திரம் தப்பித்துக்கொண்டு பிறகு இம்மாதிரி கட வுள்களைக் கோடி கோடியாய் உண்டாக்கி அவைகளுக்கு இது போன்ற பல ஆபாசக் கதைகளை வண்டி வண்டி யாய்க் கற்பித்து, அவற்றை யெல்லாம் மக்களை நம்பவும், வணங்கவும், பூசை செய்யவும், உற்சவம் முதலியன செய்யவும் செய்வதில் எவ்வளவு அறியாமையும், புரட்டும், கஷ்டமும், நஷ்டமும் இருக்கின்றது என்பதை வாசகர்கள்தான் உணர வேண்டும்.

உதாரணமாக, ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகின்றோம்; சிதம்பரம் கோயிலில் யானை முகங் கொண்ட ஒரு பிள்ளையார் சிலை (வல்லப கணபதி) செய்து, அதன் தும்பிக்கையை மற்றொரு பெண் சிலையின் பெண் குறிக்குள் புகவிட்டு, இக் காட்சியை யாவருக்கும் தெரியும் படியாகச் செய்திருப்பதுடன், இந்தக் காட்சிக்குத் தினமும் முறைப் படி பூஜையும் நடந்து வருகிறது. பல ஆண் - பெண் பக்தர்கள் அதைத் தரிசித்து கும்பிட்டும் வருகின் றார்கள்.

சில தேர்களிலும், ஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக்கையை ஒரு பெண் உருவத்தின் பெண் குறியில் புகுத்தி அப்பெண்ணைத் தூக்கிக் கொண்டிருப்பது போலவும், அந்தப் பெண் இரண்டு காலையும் அட்டிக் கொண்டு அந்தரத்தில் நிற்பது போலவும் செதுக்கப்பட் டிருக்கின்றது.

இவைகளைப் பார்த்து யாராவது இது என்ன ஆபாசம் என்று கேட்டால், இவைகளுக்கு ஒரு கதையும் புராணமும் இருப்பதாகவும் சொல்லப் படுகின்றது.

அதாவது, ஏதோ ஒரு அசுரனுடன் மற்றொரு கடவுள் யுத்தம் செய்ததாகவும், அந்த யுத்தத்தில் தோன்றிய அசுரர்களை யெல்லாம் அந்தக் கடவுள் கொன்று கொண்டே வந்ததும், தன்னால் முடியாத அளவு அசுரர்கள் ஒரு அசுர ஸ்திரீயின் பெண் குறியிலிருந்து, ஈசல் புறப்படுவது போல் பல லட்சக்கணக்காய் வந்து கொண்டே இருந்ததாகவும், தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டே இருந்தார்கள்.  இதையறிந்த அந்தக் கடவுள் பிள்ளை யார் கடவுளின் உதவியை வேண்டியதாகவும், உடனே பிள்ளையாரானவர், ஈசல் புற்றிலிருந்து கரடி ஈசல்களை உறிஞ்சுவதுபோல், தனது தும்பிக்கையை அந்த ஸ்திரீயின் பெண் குறிக்குள் விட்டு அங்கிருந்து அசுரர்களையெல்லாம் ஒரே உறிஞ்சாக உறிஞ்சிவிட்டதாகச் சொல்லப்படுகின்றது. எனவே, இம் மாதிரியான காட்டுமிராண்டித் தன்மையான ஆபாசங் களுக்கு கண்ட வைகளையெல்லாம் கடவுள் என்று சொல்லும் “ஆஸ்திகர்கள்” என்ன பதில் சொல்லக் கூடும் என்று கேட்கின்றோம்.

“எவனோ ஒருவன் ஒரு காலத்தில் இப்படி எழுதி விட்டான்” என்று பொறுப்பில்லாமல் சொல்லிவிட்டால் போதுமா? இன்றைய தினமும் அவ்வெழுத்துக்கொண்ட ஆதாரங்கள் போற்றப்படவில்லையா? அன்றி யும், பல கோயில்களில் உருவாரங்களாகத் தோன்றவில்லையா? இதை “எவனோ ஒருவன் செய்து விட்டான்” என்று சொல்வதானால், இவைகளுக்குத் தினமும் பெண் பிள்ளை வாகனம் முதலியவைகளுடன் பூஜைகள் நடக்க வில்லையா? என்பது போன்றவைகளைச் சற்று யோசித் துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்ளு கின்றோம்.

சீர்திருத்தக்காரர்கள், “அப்படி இருக்கவேண்டும்”, “இப்படி இருக்க வேண்டும்” என்றும், “மதத்திற்கு ஆபத்து; சமயத்திற்கு ஆபத்து”, "கடவுளுக்கு ஆபத்து" என்றும் கூப்பாடு போட்டு மதத்தையும், கடவுளையும் காப்பாற்ற வென்று அவைகளிடம் “வக்காலத்து” பெற்று மற்ற மக்கள் துணையைக் கோரும் வீரர்கள் யாராவது இதுவரை இந்த ஆபாசங்களை விலக்க முன் வந்தார்களா? என்றும் கேட்கின்றோம்.

இவற்றையெல்லாம்பற்றி எந்த ஆஸ்திக சிகாமணி களுக்கும் ஒரு சிறிதும் கவலையில்லாவிட்டாலும், பிள்ளையார் சதுர்த்தி என்கின்ற உற்சவம் என்றைக்கு என்பதில் மாத்திரம் வாதத்திற்கும், ஆராய்ச்சிக்கும், குறைவில்லை என்று சொல்வதோடு, இந்த ஆபாசங்களை யெல்லாம் ஒழிக்க முயற்சிக்காமல், சும்மா இருந்து கொண்டும், இவ்வாபாசங்களைப் பிரசங்கம் பண்ணிக் கொண்டும் இருந்து விட்டு, இதை எடுத்துச் சொல் பவர்களை நாஸ்திகர்கள் என்று சொல்லிவிடுவதாலேயே எந்தக் கடவுளையும், எந்தச் சமயத்தையும் காப்பாற்றிவிட முடியாது என்று சொல்லுவோம்.

(சித்திரபுத்திரன் என்ற புனைப்பெயரில் தந்தை பெரியார் அவர்கள் 26.8.1928 “குடிஅரசு’ இதழில் எழுதியது)


ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

உங்கள் சூழ்ச்சித் திட்டம் ஒரு போதும் பலியாது - தந்தை பெரியார்


 உடலுழைப்பில்லாத சமூகம் மேல் தரமா? உழைக்கும் திராவிட பாட்டாளிக்கு உயர்வில்லையா?

31

இந்திய உபகண்டத்தில், சென்னை மாகாணம் மற்ற மாகாணங்களிலிருந்தும் எல்லா வகையிலும் வேறுபட்டது என்பதைப் பல வகையாலும் நாம் எடுத்துக்காட்டி வந் திருக்கிறோம். உண்ணும் உணவு, உடுக்கும் உடையிலும், சென்னை மாகாணத்தவர் வேறு! மற்ற மாகாணத்தவர் வேறு! வாழும் நிலம், ஆளும் தட்ப வெப்பங்கூட இயற்கையிலேயே வெவ்வேறானவை! வாழுகின்ற மக்களின் மனப்போக்கும், பழக்க, வழக்கங்களும் மாறானவை - எதிரானவை!

நாட்டுப் பிரிவினைக்கு நாம் கூறும் பல உண்மைகளில் இவையும் சில. பிரிவினையால் பிழைப்புக்கெடும் என்றெண் ணுகிற நிலையிலுள்ளவர்கள் கூட தென்னாடு - வடநாடு என்கிற தலைப்பில், தலையைக் கொடுத்துவிட்டோமே என்ன செய்வது என்கிற மாமியார் - மருமகள் உறவில், இந்த வேறுபாடுகளின் உண்மையை ஒவ்வொரு சந்தர்ப் பத்திலும் வெளியிட்டுக் கொண்டு வருவதையும் நாம் கேட்கிறோம்.

வடநாடு என்று சொல்லப்படும் பெரும்பகுதியான ஆரியவர்த்தம் இன்று கொலைக்களமாக, கொள்ளையர் ஆளுகைக்குட்பட்டு, மனித நாகரிகத்தைப் பலிபீடத்திலேற்றி, மதிகெட்ட செயல் செய்கிறதென்றால் அதற்குக் காரணம் மத உணர்ச்சியின் தடிப்பு - வெறி. இதற்குரிய பரிகாரம் வேறு.

தென்னாடு என்று பேசப்படும் திராவிடம், பார்ப்பனிய மதமான இந்துமத வலையில் சிக்கி, பார்ப்பனியர் ஆளுகைக்குட்பட்டு, மனிதப் பண்பை இழந்து, மானமிழந்து வாழும் நிலையில், இன்று சிறு அளவுக்கு இன உணர்ச்சி தலையெடுத்து அதன் காரணமாகப் பார்ப்பனர் - திராவிடர் என்கிற உணர்ச்சி வலுத்து வருகிறதென்றால் இதற்குக் காரணம் திராவிடர்களிடையே புதிதாக ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்ச்சி. இதற்குரிய பரிகாரம் வேறு.

வட நாட்டில் இந்து - முஸ்லிம் வேற்றுமை. இது மத அடிப்படையில் வளர்ந்தது. எப்பொழுது - முஸ்லிம் மதம் வந்ததோ அப்பொழுதிலிருந்தே அதாவது, தனக்கு முற்றிலும் விரோதமானது - ஏமாந்தால் தன்னழிவுக்கு வழிகோலுவது என்கிற நிலை இந்து மதத்திற்கு ஏற்பட்டதிலிருந்தே பரம்பரை விரோதமாக வளர்ந்தது.

 திராவிட நாட்டில் திராவிடர் - ஆரியர் வேற்றுமை. இது இன அடிப்படையில் ஒவ்வொரு காலத்தில் தோன்றி, பிறந்த வீட்டில் செத்த குழந்தை போல, தோன்றிய காலத்திலேயே மறைத்து இருள் சூழ்ந்தது. உலகப் பொது அறிவின் உத்வேக மான ஆற்றலால் - விஞ்ஞான அறிவின் துணையினால் இன்று அந்த கார் இருள் தணிய அதனால் ஆரியப் பார்ப்பனரின் நயவஞ்சகமும், தந்திரமுமான ஏற்பாடுகள் துலங்க, அவ்வேற்பாட்டினால் உழைப்பு அவமதிக்கப்பட்டு உன்மத்தர்கள் உயர்வடையும் உண்மை நிலை புரியவே, உண்மைக் காட்சியால் - உரிமை வேட்கையால் சேர்ந்தே யறியாத திராவிடர்கள் சிறு அளவுக்காவது சேர்ந்து நிற்க, இச் சேர்க்கை தனது ஏகபோக ஆட்சிக்கு ஆட்டங் கொடுக்குமே என்ற தன்னல விருப்பினால், பார்ப்பனர் மானமழிந்த செயல் பல செய்து எதிர்க்க, அவ்வெதிர்ப்பினால் வலுத்தது இவ்வேற்றுமை.

இருவகை வேற்றுமையும் அழியத்தான் வேண்டும். அழிக்கத்தான் வேண்டும். அதற்குப் பரிகாரம் என்ன? டைஃபாய்டு காய்ச்சலையும், மலேரியா காய்ச்சலையும் போக்கடிக்க வேண்டுமானால், அதற்குப் பரிகாரம் என்ன? காய்ச்சல் என்ற ஒற்றுமையால் பரிகாரமும், ஒற்றுமையாய் இருக்குமா? பரிகாரம் ஒன்றானால், விபரீத மல்லவா விளையும்? வடநாட்டுப் பிரச்சி னையைத் தீர்த்துவிடும் என்று கருதக்கூடிய மருந்து, திராவிட நாட்டுப் பிரச்சினையையும் போக்கிவிடும் என்று கருதினால், அது மருந்தின் கோளாறு அல்ல! மருத்துவனின் முட்டாள்தனம்! மருந்து தர முன்வருவோர் இதை உணரவேண்டும்! 

திராவிடத்தின் செழிப்புக்கு, பெருமைக்குக் காரணமாய் இருப்பவர்கள் திராவிட நாட் டிலுள்ள பாட்டாளிகள், தொழிலாளிகள். இப் பேர்ப்பட்டவர்கள் நேரடியாகப் பொருளைக் குவித்துப் பெருக்காமல் இருக்கலாம்! பெருக் காததினால் நேரடியாகச் சர்க்காருக்கு வரியும் கொடுக்காமல் இருக்கலாம்! ஆனால், உண்மை யில் வரி கொடுப்பவர்கள் இவர்கள்தான். இவர்களின் உழைப்புத்தான், பொருளாக, வெள்ளி ரூபாயாக, தங்க நகை களாக, மாட மாளிகைகளாக, மகிழ்ச்சிக்குரிய வாகனாதிகளாக, ஏன் உயிர் வாழ்க்கைக்கே அடிப்படையான உணவுப் பொருள்களாகப் பல்வேறு உருவங்களாகின்றன. இதை அப்பாவியான  அவர்கள் உணர வேண்டும்.

 உழைப்பிலேயே பிறந்து உழைப்பிலேயே மடியும் பாட்டாளித்தோழர்கள் நிலை உயர்வடைய வேண்டு மென்பதை, மறுத்தால் தம் வாழ்வும் மக்கி மடிய வேண்டும் என்பதை யார்தான் மறுக்க முடியும்? ஒவ்வொருவரும் இன்று தொழிலாளிகளின் பெயரைச் சொல்லித்தானே தங்களுடைய சொந்தக் காரியாதிகளை நடத்திக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது! இந்தப் பாட்டாளித் தோழர்கள் விசித்திரமான பார்ப்பனிய அமைப்பினால் சூத்திர ஜாதியாய், தீண்டப்படாத ஜாதியாய் மழையிலும், வெயிலிலும், உழைத்துழைத்து உடல் கருகி, மேனி வாடி, உழைத்த பயனடையாமலிருப்பதுடன் இல்லாமல், உழைத் தோம் என்கிற பெருமையைக் கூட எண்ண முடியாமல் உழைப்பதும், அதன் பயனைப் பிறருக்குக் கொடுத்துவிட்டு, அவர்கள் தயவால் நாம் வாழுகின்றோம் என்கிற கேவல மான எண்ணத்துடன் வாழும்படியான நிலையுமல்லவா இந்த நாட்டில் காண்கிறோம்.

100க்கு 97 பேரான திராவிடப் பாட்டாளி மக்கள் இந்த அவல வாழ்வு ஏன் வாழ வேண்டும்? இவர்களில் 100க்கு 90 பேர் தங்களுடைய பெயரை எழுதுவதற்குக் கூட வகையற்றவர்களாக ஏன் இருக்க வேண்டும்? ஏமாற்றி வாழும் சிறு கும்பல் பார்ப்பான், சைவன் என்கிற பெயர் தாங்கி முதல் ஜாதியாய், உயர்ந்த ஜாதியாய், பெருமையுடன் வாழ மற்ற 90 பேர்கள் 4 ஆம் ஜாதியாய், 5 ஆம் ஜாதியாய் ‘தேவடியாள் பிள்ளைகளாக’ ஏன் திரிய வேண்டும்? இந்த இழி நிலைக்கு இவர்களின் உழைப்பு சுரண்டப்படுவதற்கு, இவர்கள் மடமையில் அழுந்தியிருப்பதற்கு, இவர்கள் தலை நிமிர முடியாத அடிமைகளாகவே இருப்பதற்குக் காரணம் உண்மைப் பார்ப்பன மதமான இல்லாத இந்து மதமும், இந்து மத அடிப்படையில் புகட்டப்படும் கல்வி, கலைகளும். பார்ப்பனர்களின் படுமோசத்தால் பிரிந்து வாழும் பல ஜாதி ஏற்பாடுகளுமல்லவா? 

“நாம் இப்பொழுது சுயராஜ்யம் பெற்றுவிட்டோம் என்று சொல்லிக் கொள்கிறோம். சுயராஜ்யம் பெற்ற பிறகும் உழைப்பவன் இழிந்த ஜாதியாய் இருக்கலாமா? அவனை இழி ஜாதியாய் வைத்திருக்கும் மதம் எதுவோ அந்த மதத்தை வாழவிடலாமா? உழைப்பவன் அறிவுபெற அதற்காக ஆரம்பப் பாடசாலைகள் சுயராஜ்யத்தில் பெருக வேண்டாமா? ஆரம்பப் பாடசாலைகள் பெருகுவதற்கு வசதியில்லாத போது, மேல் படிப்புக் கல்லூரிகள் ஏன் சுயராஜ்யத்தில் இருக்க வேண்டும்? இதை சுயராஜ்ய அரசாங்கம் கருத வேண்டாமா?’’

“பல பிரிவுகள் உள்ள இந்த நாட்டில், பிரிவை ஒழித்து ஒற்றுமைக்கான வழி எதுவோ அதைச் செய்யாமல், அல்லது யாவரும் சமவுரிமையடைவதற்கு முறை எதுவோ அதைக் கையாளாமல், 100க்கு 3 பேர்களாக உள்ள மேல் ஜாதிக் காரர்கள் அனுபவித்தது போக, சுரண்டியது போக, மீதியுள்ள எச்சிலுக்குத்தான் மற்ற ஜாதியார்கள் சண்டை போட்டுக் கொண்டு அனுபவிக்க வேண்டுமென்கிற அமைப்பு சுயராஜ்யத்தில் இருக்கலாமா?’’ உத்தியோகங்கள் மதிக்கப் பட்டு அதற்குப் பெருமை கொடுக்கப்படுகிற வரையிலும், பல ஜாதிகள் அமைப்பு இருந்து அவைகளுக்குத் தனித் தனியே உயர்வும், தாழ்வும் கொடுக்கப்படுகிற வரையிலும், வகுப்பு வாரி பிரதிநிதித்துவ முறையை மாற்றாமல், அந்தந்த ஜாதிக்கு அல்லது அந்தந்த வகுப்புக்கு ஏற்ற முறையில் அல்லவா உத்தியோகங்கள் வழங்க வேண்டும்? எப்படியும் 100க்கு 3 வீதத்திற்கு மேல் பார்ப்பனர்களுக்கு உத்தியோகம் கொடுக்கலாமா? இழிவான வேலை என்று கருதப்படுகிற உழவு வேலை, தெருக்கூட்டும் வேலை, கக்கூஸ் எடுக்கும் வேலை, சிரைக்கும் வேலை, வெளுக்கும் வேலை, பியூன் வேலை முதலிய உடலுழைப்பு வேலைகளில், எல்லா ஜாதியாரும் அவரவர் விகிதாச்சாரத்திற்கு ஏற்ற கணக்குப்படி வேலை செய்து ஆக வேண்டும் என்று வற்புறுத்துவதல்லவா?

இந்த உடலுழைப்பு வேலையைச் செய்யாத சமூகத்தினருக்கு “மேல்தரம்” என்று மதிக்கப்படுகின்ற உத்தி யோகங்களைக் கொடுக்காமலிருப்பதல்லவா, உண்மையிலேயே உயர்வு, இழிவு என்கிற வித்தியாசங்களைப் போக்கும் மார்க்கங்களாகும்.

ஜனநாயகம் தழைக்க, கட்டாய ஆரம்பக் கல்வியை அளிப்பதற்கான நடவடிக்கைகளை உடனே அரசாங்கம் எடுத்துக் கொள்ள வேண்டும். இது .

கல்வி நிலையங்களில் வகுப்பு விகிதாச்சாரம் அனுஷ் டிக்காமல் இருப்பது, எல்லோருக்கும் சம சந்தர்ப்பம் வேண் டும் என்ற நியாயமான கொள்கைக்கு விரோதமானதும், அக்கொள்கையை அழிப்ப தானதுமே ஆகும். இது . 

இன்றையத் திராவிடர்களில் 100க்கு 10 பேராவது படித்தவர்களாய் இருக்கின்றார்கள் என்றால் அதற்குக் காரணம் என்ன?

திராவிடர்களில் சிலர் இன்று உயர்தர உத்தியோகங்களிலும் இருக்கின்றார்கள் என்றால் அதற்குக் காரணம் என்ன?

இன்று ஓமந்தூரார் மீண்டும் காங்கிரஇ கட்சித் தலைவராய் வந்திருக்கிறாரென்றால், இன்றையச் சென்னை மாகாண மந்திரி சபையில் பெரும்பாலோர் திராவிடர்களாய் இருக்கிறார்கள் என்றால், அதற்கு உண்மையான காரணம் என்ன?

தோழர் முத்தையா முதலி யாரவர்களின் வகுப்பு வாரி உத்தி யோகச் சட்டம்தான் இவைகளுக்குக் காரணம். இதை இல்லையென்று நாணயமான எந்த காங்கிரஸ் மந்திரிதான் மறுக்க முடியுமென்று கேட்கிறோம்.

கேள்வி கேட்பாரற்ற கேவலமான நிலையில் வாழ்ந்த திராவிடர்கள், முக்கியமாக உத்தியோகத் துறையில் ஓரளவுக்காவது இடம் பெற்றிருக்கின்றார்கள் என்றால், அவர்கள் யாராயிருந்தாலும் நீதிக்கட்சியை நெஞ்சில் நினைக்காத நன்றிகெட்ட பிராணிகளாக இருக்க முடியாது என்பது உறுதி.

வகுப்புவாரி உத்தியோக நியமனம், வகுப்பு வாரி படிப்பு முறை இன்று சிறு அளவுக்காவது பயன் தந்திருக்கிறதென்றால் இனி ஆட்சியாளர்கள் என்ன செய்யவேண்டும்? வகுப்பு வாரி பிரதிநிதித்துவ முறையில் இப்போது என்னென்ன குறைபாடுகள் இருக்கிறதோ அவற்றை நீக்கி, உண்மையிலேயே எல்லா ஜாதிகளுக்கும் அந்தந்த ஜாதிகளின் எண் ணிக்கைக்கு ஏற்றபடி பிரதிநிதித்துவம் அமைய அல்லவா ஏற்பாடு செய்யவேண்டும்? அப்படித் தானே நாட்டின் பொது நலனிலும் நியாயத்திலும் அக்கறையுடைய எவரும் எதிர்பார்க்க முடியும்.

ஆனால், ஓமந்தூரார் மந்திரிசபை ஏற்பட்ட பிறகு, வகுப்புவாரி விநியோக முறையில் பார்ப்பனர்களுக்கு கேடு கொஞ்சமும் இல்லாமல், அவர்கள் நிலைமையைப் பாதுகாத்துத்தர முன் வந்த போக்கைத்தான் நாம் கண்டோம்!

ஆதி திராவிடர்களுக்கு 100க்கு 14. முஸ்லிம்களுக்கு 100க்கு 7. கிறிஸ்தவர்களுக்கு 100க்கு 7. பார்ப்பனர்களுக்கு 100க்கு 14. பார்ப்பனரல்லாத, கிறிஸ்துவரல்லாத, முஸ்லிமல்லாத, ஆதித்திராவிடரல்லாத 100க்கு 85 பேராயிருக்கும் அல்லாத முண்டங்களுக்கு 100க்கு 56. இந்த விகிதாச் சாரம்தான் நியாயம் என்று ஓமந்தூரார் மந்திரிசபை தீர்ப் பளித்தது!

இந்தத் தீர்ப்பின் அநியாயத்தை, அக்கிரமத்தை நாம் அப்போதே வன்மையாய்க் கண்டித்தோம். ஆனால், பார்ப்பனர்களோ இதைக் கண்டு வயிறெரிந்தார்கள் என்பதை நாம் மறக்கவில்லை.

காந்தியாரைக் கொன்று பூரணப் புராண ராஜ்யம் ஏற்பட்டு விட்டது என்று கும்மாளம் கொட்டினோமே! இன்னும் இந்த “சனியன்” தீரவில்லையே! நம் ஏகபோகமான இஷ்ட சித்தியடைவதற்கு இப்போதும் தடைதானா! என்று பார்ப்பனர்கள் அங்கலாய்க்கலானார்கள். இந்த அங்கலாய்ப்பின் எதிரொலிதான் சென்ற மாதம் 21 ஆம் தேதி தோழர் ராகவய்யா அவர்கள் வழியாகச் சட்டசபையில் எதிரொலித்தது.

“பிராமணர், பிராமணரல்லாதார் வேற் றுமையை சர்க்கார் அதிகார பூர்வமாக ஆதரிக் கின்றனரா?” இது கேள்வி.

பிறப்பு முதல் இறப்பு வரை இவ்வேற்றுமை இருக்கும் வரை, அவற்றை சர்க்கார் எப்படி அங்கீகரிக்காமலிருக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. இது பதில். 

இந்தப் பதிலை தந்தவர் மதி மந்திரி தோழர் அவினாசிலிங்கம் அவர்கள். இது அவருடைய சொந்தக் கருத்தாக இருக்க முடியாதென் பதையும், மந்திரிசபையின் பொதுக்கருத் தைத்தான் அவர் தெரிவித்திருக்க வேண்டும் என்பதையும்தான் எவரும் எண்ண வேண்டும். 

இந்த நிலைமையில், நாம் நம்முடைய கோரிக்கையை மாநாட்டில் வற்புறுத்தியதைக் கண்ட இந்திய யூனியன், 15 நாட்களுக்குப் பிறகு அதாவது இந்த மாதம் 24 ஆம் தேதி தன்னுடைய திட்டம் என்ன என்பதை விளக்கி மாகாண மந்திரி சபைகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. 

“இனிமேல் உத்தியோக நியமனங்களில், இந்துக்களிடையே வகுப்புவாரி நியமனம் கூடாது, இப்படிச் செய்வது புதிய வித்தியாசங்களைச் சிருஷ்டிப்பதாகும். இது இப்போதைய சர்க்காரின் கொள்கைக்கு உகந்ததாக இல்லை. இவ்வேற்றுமைகளை மாகாண சர்க்கார்கள் அங்கீகரித்திருந் தாலும், இல்லாவிட்டாலும் இதுதான் இந்திய சர்க்காரின் கொள்கை” என்று பார்ப்பனிய - ராமராஜ்ய சர்க்கார் அறி வித்து விட்டது.

இந்த அறிவிப்பைக் கேட்டுப் பார்ப்பனர் மனம் குளிர்ந்திருக்கும்! காந்தியாரைக் கொன்ற போது அடைந்த திருப்தியைக் காட்டிலும் பெருந்திருப்திப்பட்டிருப்பார்கள்! தேசியப் போர்வையைப் போர்த்தி நிற்கும் பார்ப்பனர்களின் தினசரிகளும், தூதுவேலை செய்தாவது பிழைக்கவேண்டும் என்று எண்ணும் பார்ப்பனப் பாதந்தாங்கிகளான நம் விபீஷணர்களின் தினசரிகளும் இதை வரவேற்றுப் பூரிப் படையலாம்! சோஸியலிஇட் என்ற புதிய பட்டுப் போர் வையில் மறைந்து நிற்கும் சுகவாசிகளான பார்ப்பனர்கள் இதைக் கேட்டுத் துந்துபி முழங்கலாம்! ஆனால் திராவிடர்களின் நிலை என்ன? 

 நம்மைப் பொறுத்தவரையில் நாம் இந்த அநீதமான போக்கை எதிர்பாராதவர்கள் அல்ல! “ஆகஇட் 15 திராவிடர்களின் துக்க நாள்” என்பதை, அப்பொழுதே திராவிடர் கழகம் திராவிடர்களுக்குக் கூறியது! இந்தச் சுயராஜ்யம் பார்ப்பனர்களின் ராஜ்யந்தான் என்பதை இன்னும் ஒவ்வொரு செயல்களிலும் வற்புறுத்தப்படுவதைப் பார்க்கலாம்! திராவிடன், திராவிட உணர்ச்சி பெற்று இந்து மதச் சாக்கடையிலிருந்து எப்பொழுது வெளிவருகிறானோ, அது வரையிலும் அவனுக்கு விமோசனமில்லை!  திராவிட இன உணர்ச்சியற்று திராவிடன் இந்து மதச் சேற்றை எவ் வளவு காலம் பூசிக் கொண்டிருக்கின்றானோ அது வரை யிலும் அதன் பயனை அனுபவிக்கத்தானே வேண்டும்! மத்திய சர்க்காரின் கையில் குடுமியைக் கொடுத்து விட்டு, மானங்கெட்டு வாழும் நம் மந்திரிசபை, இந்தக் காரியத்திலும் ஒத்துப் பாடலாம்! அல்லது மவுனம் சாதிக்கலாம்! எப்படியானாலும் திராவிடன் உண்மை நிலையை உணர வேண்டும்! வெளிப்படையாகவே துப்பாக்கியேந்த வேண்டுமா? என்று பார்ப்பனர்கள் ஒரு புறம் கேட்கின்றனர். பார்ப்பனர்களுக்குத்தான் உத்தியோகமும், உயர்வாழ்வும் என்று முழக்குகிறது மற்றொரு புறம். மத்திய சர்க்கார். “யானைவரும் பின்னே, மணியோசை வரும் முன்னே” என்பது போல ஆச்சாரியார் வைஸ்ராயாக வருவதற்கு முன்னாலேயே, அவருடைய ஆட்சி இன்னும் எப்படி எப்படியிருக்கும்? ஆட்சியில் எந்தெந்த மாதிரியெல்லாம் நடக்கலாம்? என்று காட்டுகின்ற அடையாளங்கள் தாம் இந்த நிகழ்ச்சிகள் சுருக்கமாக ஆரியம் போருக்கழைத்து விட்டது என்ற அடையாளம்தான் இது.  மானங்கெட்ட திராவிட சமுதாயம் ஒன்று வாழவேண்டும்! இல்லாவிட்டால் மண்ணோடு மண்ணாய் மக்கி மடிய வேண்டும்!

“மத்திய சர்க்காரின் திட்டத்தை மாகாண சர்க்காரும் பின்பற்றட்டும்! எந்த உத்தியோகத்திலும், எந்த படிப்பிலும் பார்ப்பானே இடம் பெறட்டும்! இழி ஜாதி மக்களாகவே இந்நாட்டுப் பெருங்குடி மக்கள் விளங்கட்டும்! எதற்கும் பார்ப்பானை எதிர்பார்த்தே, அவன் கட்டளைக்குக் கீழ்ப் படிந்தே, அடிமையிலும் அடிமையாக, அவஸ்தையறியாத எருமைகளாக வாழ்ந்தொழியட்டும்!” இப்படிக் கனவுகண்டு திருப்திப்படுகிறார்கள் பார்ப்பனர்கள். 

முடிவு என்ன?

திருப்திப்படுகின்ற பார்ப்பனர்களே! சிந்தித்துப் பாருங்கள். இன உணர்ச்சி பெற்ற ஒரு திராவிடன் இந்த நாட்டில் இருக்கும் வரையிலும் உங்கள் கனவு, உங்கள் சூழ்ச்சித் திட்டம் ஒரு நாளும் பலியாது. ஆச்சாரியார் ஆசீர்வாதத்தைப் பெற்றிருந்தாலும், அகம்பாவ நேரு பார்ப்பனரின் ஆலோசனையால் விளைந்ததென்றாலும், பார்ப்பான் பார்ப்பானாகவே வாழும் நிலை இருக்கும் வரையிலும் இந்தத் திட்டமோ இதைப் போன்ற வேறு திட்டங்களோ ஆக்குவது, அவற்றை அமலுக்குக் கொண்டு வருவது எல்லாம் கருதுகிற பயனைக் கைகூடச் செய்யாது. வகுப்புவாரி விபரீத வெடி உண்மையிலேயே விபரீத வெடிதான். ஆம்! அது ஆரியத்தின் அழிவுக்கு விபரீதமான வெடியாகத்தான் முடியும். பார்ப்பனியத்தின் ஆசை, பார்ப் பனியத்தின் முடிவு அதுதான் என்றால் நடக்கட்டும்! நமக்குக் கவலையில்லை.

'குடிஅரசு' -  தலையங்கம் - 29.05.1948