சனி, 29 பிப்ரவரி, 2020

சிவராத்திரியின் யோக்கியதையைப் பாரீர்!

தந்தை பெரியார்

சிவராத்திரி என்பது ஒரு பட்டினித் துக்கநாள் ஆகும். வைஷ்ணவர்கள் சுவர்க்கம் வேண்டி, பட்டினி கிடக்கும் வைகுண்ட ஏகாதசியைப் போல், சைவர்கள் என்று கருதக் கூடியவர்களின் சிவன் ராத்திரியும் (கைலாச யாத்திரை, சமாதி) பட்டினி விரத விழா. தை, மாசி போன்ற காலங் களில் குளிர் நிறைந்துள்ளபடியால், உடல் அங்கங்கள் இயக்கம் தடுமாறும்; உண்ணும் உணவு போன்றவை சரியானபடி ஜீரணம் ஆகாமல் இருக்கும்; வயிற்று இரைச்சல் போன்ற வயிற்றுக் கோளாறு உண்டாகும்.

ஆனால், இந்தச் சிவராத்திரி விரத மகிமை பற்றிக் கூறப்படும் புராணக் கதைகளோ அறிவுக்கும், இயற் கைக்கும், மக்கள் நடப்பு - பண்பாடுகளுக்கும் பொருந் தாதவை ஆகும். இந்த விரதம் பற்றிக் கூறப்படும் புராணக் கதையைப் பாருங்கள்!

முன்னொரு சமயம் ஊரும் பேரும் இல்லாத ஒரு வேடன் வேட்டைக்குச் சென்றானாம். காலை முதல் இரவு வரை காட்டில் அலைந்தும் எந்த விலங்கும் அவனுக்குத் தென்படவில்லையாம். இரவு நெருங்கும் நேரமானதால் விலங்குகள் நடமாட்டம் ஆரம்பித்தன. ஒரு புலி இந்த வேடனைக் கண்டு விட்டது. இவனைப் பின்தொடர்ந்து வந்தபடியால், அவன் உயிர் தப்ப ஓடி, ஒரு பெரிய வில்வ மரத்தின் மேல் ஏறிக் கொண்டானாம்.  அப்போது மழையும் பெய்தது. அந்தப் புலியும் விடாமல் துரத்தி வந்து அவன் ஏறியிருந்த மரத்தின்கீழ் படுத்துக் கொண்டது. புலியும் அவன் இறங்குகிறானா என்று பார்த்துக் கொண்டே கீழே படுத்து இருந்தது. வேடன் பசி மயக் கத்தில் அதிகக் களைப்பு அடைந்து, வீடு செல்ல எண் ணியபடியால், அந்தப் புலியை விரட்ட, அந்த வில்வ மர இலைகளைக் கொத்துக் கொத்தாய் பறித்து அந்தப் புலியின் மேல் வீசினான். மழையின் காரணத்தால் அந்த இலைகளில் உள்ள ஈரப் பசையால் புலிக்குப் பக்கத்தில் உள்ள குத்துக் கல் மீது அந்த இலைகள் விழுந்தன. அது ஒரு சிவலிங் கமாம். அன்று இரவு வேட்டை கிடைக் காததால் அந்த வேடன் பகல் முழுதும் பட்டினி.

(வேடர்கள் பொதுவாக காலையில் பழைய உணவு சாப்பிட்டு விட்டு வேட்டைக்கு வந்து வேட்டையாடிய விலங்கைக் கொண்டு சென்று, இரவு சமைத்துச் சாப்பிடுவது வாடிக்கையாதலால், பகல் முழுதும் பட்டினி என்பது சாதாரணம்தான்).

அவன் மாலை மழையில் நனைந்து குளித்ததுபோல் ஆயிற்றாம்; அவன் புலியை விரட்ட மரத்திலிருந்து கீழே போட்ட வில்வ இலைகள் மழையின் நீரால் நனைந்து, அவனை அறியாமல், அவன் அறியாத லிங்கத்தின்மீது விழுந்தனவாம். எனவேதான் அன்று சிவராத்திரி, இரவில் லிங்கபூசை செய்ததுபோல் ஆயிற் றாம். அவன் இவ்விதம் செய்தது சிவனைக் கும்பிட வேண்டும் என்ற எண்ண மில்லாமல் போனாலும், சந்தர்ப்ப வசத்தால் பகல் முழுதும் பட்டினி கிடந்தது, சிவராத்திரி - பகல் உபவாசம் இருந்தது போல் ஆயிற் றாம். புலியை விரட்ட, மழைத் தண்ணீரால் நனைந்த வில்வ இலைகள் லிங்கத்தின்மீது தற்செயலாய் விழுந்த படியால், அதைக் குளிப்பாட்டி, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ததுபோல் ஆயிற்றாம். இதனால் அவன் வான்உலகை அடைந்தானாம்.

அடுத்த கதை -

ஒரு பார்ப்பன வாலிபனைப் பற்றியது. இவன் ஒரு சுத்த அயோக்கியனும் ஒழுக்கக்கேடனும் ஆவானாம். இதனால் ஊரைவிட்டுத் துரத்தப்பட்டானாம். காலை முதல் இரவு முடிய உண்ண உணவு இல்லாமல், பசியால் வாடிய அவன் இரவு வந்ததும் ஒரு சிவன் கோவிலை அடைந்தானாம். அப்போது அந்தக் கோயில் அர்ச்சகன் பொங்கல் படையலை அந்த ஈசுரவன் சிலை முன் வைத்துவிட்டு வெளியில் சென்று இருந்தான். இந்தப் பார்ப்பன வாலிபன் யாரும் இல்லாத சமயம் அங்குச் சென்றபடியால் அவற்றை எடுத்து உண்ண ஆசைப்பட்டு, என்னென்ன பலகாரங்கள் இருக்கின்றன என்பது தெரியாதபடியால்,  கோயிலில் இருந்த விளக்கின் திரியை தூண்டி விட்டானாம். அப் போது திரும்பி வந்த அர்ச்சகன், பார்ப்பன இளைஞன் பல காரங்களை மூட்டை கட்டுவதைக் கண்டு, ஆத்திரத்தில் அவனை அடித் துக் கொன்றான். அன்று மகா சிவராத்திரியாம்.

ஒழுக்கங்கெட்ட அந்தப் பார்ப்பான், காலை முதல் இரவு வரை பட்டினி இருந்தது மகாசிவராத்திரி விரத பகல் உபவாசம் ஆனதாம். திருட எண்ணி, பிரசாதங்களைப் பார்ப்பதற்கு விளக்கு வெளிச்சத்தைத் தூண்டியது சிவராத்திரியில் ஈஸ்வரலிங்க சிலைக்கு தீப ஆராதனை செய்தது போலவும் பிரசாத நிவேதனம் செய்தது போலவும் ஆனதாம். இதனால் பார்ப்பனப் பூசாரியால் கொல்லப் பட்டதும் நேராக சிவலோகம் சென்றானாம். சிவராத்திரியில் மனிதக் கொலை; இவன் கொலை செய்தது எந்தப் புண்ணியத்தைச் சேர்ந் ததோ? கொலை செய்த அர்ச்ச கனுக்கு எந்த லோகம் அளிப்பதோ? என்பது எல்லாம் அதில் கூறப்பட வில்லை. மனிதனுக்குப் பிறப்பு அடுத்து இறப்பு வரு வது இயற்கைத் தத்துவம் என்பது உண்மை. உலகில் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இயல்பாய் தெரிந்த உண்மையாகும். ஆனால், இந்தச் சிவராத்திரி கள் விரதங்களின் முக்கிய அடிப்படை, பகலை அடுத்து இரவு வருவதுபோல, மனிதருக்குப் பிறப்பை அடுத்து இறப்பு வருவது என்பதுதானாம். இதைத் தெரிந்து கொள்ள பூசையும் விரதமும் வேண்டுமா? என்றுதான் நாம் கேட்கின்றோம்.

இந்தப் பாழும் அர்த்தமற்ற - பொய்யான - ஒரு காசுக்கும் உதவாத, நமக்கு இழிவையும் அவமானத்தை யும் தருவதான பண்டி கைக்கும், உற்சவத்திற்கும், பூசைக்கும், சடங்குக்குமாகப் பொருளையும், பணத் தையும் விரயப்படுத் துவது மக்களின் அறியாமையும், சுயநலக்காரர்களின் சூழ்ச்சியும், புரோகிதர்களின் ஆதிக்கமும் தந்திரமுமே ஆகும். இவைகளை உட னடியாக ஒழிக்க வேண்டும்.

-  விடுதலை நாளேடு 19 2 20

தொடையையுங் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுதல்! (2)

20.12.1931 - குடிஅரசிலிருந்து....

சென்ற வாரத் தொடர்ச்சி

புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் பெரும் பாலும் வாலிபர்கள். வாலிபர்கள் எந்தக் காரியத்தையும் முன் பின் யோசனையில்லாமல் உடனே செய்து முடித்து விட வேண்டுமென்னும் எண்ணமுடையவர்கள். அதற்காகத் தமது உயிரையும் பொருட் படுத்தாமல் தியாகஞ்செய்ய முன்வரும் குணமுடையவர்கள். இத்தகைய குணமுடைய வர்கள் துவேஷத்தை மூட்டும் அரசியல் கிளர்ச்சியின் பலனாக அந்நியர்கள் மீது வெறி கொண்டு கொலை களும், சதிகளும் தாராளமாகச் செய்ய முன்வந்து விட்டனர் என்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. இச் செய்கைகளே தேசாபிமான முடைய தென்றும், சுயராஜ்யம் அளிக்கக் கூடிய தென்றும் அவர்கள் கருதக்கூடிய நிலைமையை நமது அரசியல் கிளர்ச்சி ஏற்படுத்தி விட்டதென்று கூடக் கூறலாம். இவர்களுடைய இக்கலகச் செயல்களைத் தேசாபி மானமாகவும் தியாகமாகவும் ஆரம் பத்தில் நமது நாட்டுத் தேசியப் பத்திரிகைகள் என்பன பாராட் டவும் தொடங்கின. தேசிய வாதிகள் மேடைகளில் புகழவும் தொடங் கினர். இவர்களுடைய படங்களை வைத்துக் கொண்டாடவும், இவர்களுக்காக விழாக் கள் நடத்தவும் ஆரம்பித்தனர்; ஆனால், அப்பொழுதே சில பொறுப்புள்ள தலை வர்கள் இச்செயல் களைக் கண்டித்தனர். நாணயமும், பெறுப்பும் உள்ள எவரும் இச்செயல்களை ஆதரித்து, மேலும் மேலும் வாலிபர்களுக்கு இத்தகைய விஷயங்களில் ஊக்கம் உண்டாக்க முன்வர மாட்டார் களென்பது நிச்சய மாகும்.

தேசாபிமானம் என்னும் பெயரால் வெறிகொண்டு, நிரபராதிகளையும், உத்தி யோகஸ்தர்களையும் இரக்க மின்றிக் கொலை செய்யும் இந்தப்புரட்சி ஒழிய வேண்டுமானால், பொறுப்புள்ள தேசப்பிர முகர்கள் அனைவரும் இதனைக் கண்டிக்க வேண்டும். இதனால் வரும் தீமையை வாலிபர்கள் உணரும் படிசெய்ய வேண்டும். அப்படியில்லாமல் ஒருபக்கத் தில், அந்நி யர்கள் மீது துவேஷத்தைக் கிளப்பி விடும் அஹிம்சா தர்மப் பிரசாரமும், ஒரு புறத்தில் புரட்சியைக் கண்டிப்பதான அறிக்கைகளும் செய்து கொண்டிருந்தால் எப்படி புரட்சி அடங்கும் என்று கேட்கின்றோம். இது, குழந்தையின் தொடையையும் கிள்ளி விட்டுத் தொட்டி யை யும் ஆட்டிவிடுவது போலத்தானே ஆகும்?

சில தேசியயப் பத்திரிகைகள் பொறுப் பின்றிக் கொலைக் குற்றங்களையும், கொலை செய்தவர் களையும் தேசாபிமானமாக வும், தேசாபிமானி களாகவும் போற்றி உற்சாகப் படுத்தும் முறையில் நடந்து கொண்ட காரணத்தால்தானே அச்சுச் சட்டம் ஏற் பட்டது? இவ்வாறு தேசீயப் பத்திரிகைகள் என்பன பொறுப்பற்றதனமாக நடந்து கொண்டிராவிட்டால் அச்சுச் சட்டம் பிறந்திருக்க முடியாது என்பது உண்மை அல்லவா? அடுத்தபடியாக, துவேஷத்தைப் பெருக்கி விடும் முறையில் அஹிம்சைப் பிரசாரம் பண்ணியதன் பலனால் வங்காளத் தில் புரட்சி இயக்கமும் தலைவிரித்தாடத் தொடங்கவும், அதை அடக்க அரசாங்கத் தார் வங்காள அவசரச்சட்டத்தை ஏற் படுத்தும் படியான நிலையும் ஏற்பட்டு விட்டது அல்லவா?

இப்பொழுது அய்க்கிய மாகாணத்தில் வரிகொ டாமை இயக்கம் ஆரம்பித்தவுடன் அரசாங்கத்தாரும் அவசரச்சட்டம் ஒன்றை ஏற்படுத்தி விட்டனர்.

இந்த அவசரச் சட்டங்களை அரசாங்கத் தார் வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் எனப் பெரும் கிளர்ச்சி செய்கின்றனர். புரட்சி இயக்கத் தையும், வரிகொடா இயக்கத் தையும் நிறுத்து வதற்கு ஒரு முயற்சியும் செய்யாமல், அவற்றை அடக்க ஏற்பட்ட சட்டங்களின் மேல் மாத்திரம் பழிபோட்டுக் கிளர்ச்சி செய்வதில் என்ன பலனிருக்கிறது? அவசரச் சட்டங் களுக்கு நிரபராதிகளும் ஆளாகிக் கஷ்டப் பட நேரும் என்பதை நாமும் ஒப்புக்கொள்ளு கிறோம். அவசரச் சட்டங்களால் இன்னும் அக்கிளர்ச்சிகள் கொஞ்சம் அதிகப்படும் என்பதிலும் உண் மை இல்லாமல் இல்லை. ஆனால், அவசரச் சட்டம் உண்டானதற்கான காரணங் களையும் ஒழிப்பதற்கு முயற்சி செய்து கொண்டு அவசரச் சட்டங்களையும் வாப வாங்கிக் கொள்ளுமாறு கிளர்ச்சி செய்வதே நியாயமும். ஒழுங்குமாகும்.

இவையல்லாமல் மீண்டும் நாட்டில் வரிகொடா இயக்கமும், பகிஷ்கார இயக்கமும் பலமாகஆரம்பிக்க வேண்டு மெனப் பிரசாரஞ் செய்யப்பட்டும் வருகிறது. திரு. காந்தியும், சத்தியாக்கிரகச் சண்டை ஆரம்பிப் பதாகச் சொல்லிக்கொண்டு வரு கிறார். காந்தி-இர்வின் ஒப்பந்தம் முடிந்தது முதல், மறுபடியும் சத்தியாக்கிரகப் போர் ஆரம்பிப் பதற்குத் தயாராய் இருங்கள் என்றே பொறுப்புள்ள காங்கிரஸ்காரர் களெல்லாம் சொல்லிக் கொண்டு வந்தனர், வருகின் றனர். தேசத்தின் அமைதியையும், சட்டத்தையும், நிரபராதி களையும் காப்பாற் றுவது அரசாங்கத்தின் பொறுப்பு, ஆகை யால், அரசாங்கம் சட்டத் தையும், அமைதி யையும் நிலைநிறுத்தப் பின்வாங் காது என மேன்மை தங்கிய வைசிராய் தாம் பேசும் இடங்களில் கர்ஜித்துக்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் தேசத்தில் மறுபடியும் கலகம் ஏற்படுமாயின் பாமர ஜனங்களுக்குத் தான் அதிக மான கஷ்டமும், நஷ்டமும் உண்டாகுமென்பதில் ஆட்சேபணை யுண் டா? சுயராஜ்யம் காங்கிரஸ் காந்தி அஹிம்சை தேசாபி மானம் என்னும் பெயர்களால் காலிகளும், நாணய மற்றவர்களும், பிழைப் பற்றவர்களும் மறுபடியும் ஏமாற்றப் புறப் பட்டு விடுவார்கள், இப்பெயர்களைச் சொல்லி பாமர மக்களிடம் பொருள் பறிக்கத் தொடங்கி விடுவார்கள். இவர்கள் செய்யும் ஆர்ப் பாட்டங்களினால் மறு படியும், புரட்சியும், அடிதடிகளும் துவேஷங் களும் அதிகப்படக்கூடும், ஆகவே அரசாங் கத்தார் இவற்றை அடக்க சென்ற உப்புச் சத்தியாக் கிரகத்தின் போது அவசரச் சட் டங்கள் பிறப்பித்து போல இன்னும்  பல அவசரச் சட்டங் களைப் பிறப்பிக்கவும் கூடும், இவ்வாறு காங்கிரசுகாரர்கள் செய்து கொண்டு வரும் பிரசாரங்கள் ஒரு புறமும், புரட்சிக்காரர்கள் நடத்திக்கொண்டு வரும் அக்கிரமங்கள் ஒரு புறமும், அரசாங்கத்தார் இவைகளை அடக்க வெளியிடும் அவசரச் சட்டங்களும், தடையுத்தரவுகளும் ஒரு புறமும் சேர்ந்து நாட்டு மக்களைச் சமாதான மின்றிக் கஷ்ட நிலையில் வாழும்படி செய் வதைத் தவிர வேறு ஒரு பலனையும் ஏழைமக்கள் காணப் போவதில்லை, அடையப் போவதில்லை யென்பது தான் நமது அபிப்பிராயம். இதனால், தற்போது உள்ளதைவிட இன்னும்,, நமது நாட்டின் வியாபார நிலையும், செல்வ நிலைமையும் கஷ்டநிலைமைக்கு வந்து சேருமென்பதும் நிச்சயம். மற்றபடி இந்த மாதிரியான வீண் கலகங்களால் ஓர் கடுகளவும் பிரயோஜனம் உண்டாகப் போவதில்லை.  நமது நாட்டுச் சாதி மத வேற்றுமைகளுக்கு அழிவுவராமல் இன்னும் கெட்டியாக ஆணி யடித்துக் கொண்டு சுயராஜ்யம் வேண்டும் என்று கேட்பது கையாலாகாத்தனம் என்று தான் கூறுவோம்.

சுயராஜ்யத்திற்காகச் செய்யப்படும் கிளர்ச் சியில் ஒருபாகத்தை சாதி, மதங்களை ஒழிப்பதில் செலவு செய்திருந்தால் இது போது நாம் எவ்வளவோ மேலான நிலையில் போய் இருந்திருக்கலாம்.  போதிய சுதந்தி ரமும் கூடப் பெற்றி ருக்கலாம். ஆனால் தேசத்தைக் காட்டிலும், வருணா சிரம தருமத்தையும், மதத்தையும் உயிரினுஞ்சிறந்ததாக எண்ணிக் கொண் டிருக்கின்ற தேசத் தலைவர்களால், நமது நாடு சாதி, மத வேற்றுமை ஒழியப்போவது ஏது? இவைகள் ஒழியாதவரையில் பூரண சுதந்திரம் கிடைப்பது எங்கே? ஒரு சமயம் கிடைத் தாலும் அதை வைத்து ஆளுந்திறமை தான் இருக்க முடியுமா? என்று தான் கேட்கிறோம்.

ஆகையால் இனியும் உண்மையான சமுக சகோதரத்துவ ஆசையும், உண்மையான தேச முன்னேற்ற ஆவலும் உள்ளவர்கள் அனை வரும் தேசத்தின் அமைதிக்காக உழைக்க முன் வர வேண்டும்.

புரட்சிச் செயல்களும், கலகங்களும் நடைபெற வொட்டாமல் எல்லா மக்களுக் குள்ளும் சகோதரத்துவமும், சுயமரியா தையும் தாண்டவ மாடக்கூடிய பிரசாரஞ் செய்ய வேண்டும். குற்றமற்ற மனமுள்ள வாலிபர்கள் மனத்தில் வெறியை உண்டாக்க மல் அன் பையும், சமதர்ம எண்ணத்தையும் உண்டாக்கா வேண்டும்.  இவ்விஷயங்களைப் பொறுப்புள்ள தலைவர்களும், தொண்டர் களும் மேற் கொள்ள வேண்டுகிறோம்.

- விடுதலை நாளேடு 15 2 20

மூடர்களே! மூடர்களே!!

சித்திரபுத்திரன் -

04.01.1931 - குடிஅரசிலிருந்து..-

மூடர்களே! மூடர்களே! ஒரு சின்ன சங்கதி.  கோவிலின் மீதிருக்கும், கலசம் திருட்டு போகின்றது. அம்மன்கள் விக்ரகங்களின் கழுத்திலிருக்கும் தாலிகள் திருட்டுப் போகின்றன.  விஷ்ணு விக்ரகத்தின் நெற்றியிலிருக்கும் நடு நாமம் (தங்கத்தில் வைத்தது) திருட்டுப் போகின்றது, சிவன் விக்ரகத்திலிருக்கும் நெற்றிப்பட்டை மற்ற விக்ரகங்களை கீழே தள்ளி அதிலிருக்கும் தங்கம், முத்து, ரத்தினம் திருட்டுப் போகின்றது.  இவைகளின் வாகனத்தில் தேரில் நெருப்பு பிடிக்கின்றது.  அச்சு ஒடிகின்றது.  இவைகளின் பயனாய் பலர் சாகின்றார்கள்.  மூடர்களே!  இவற்றைப் பார்த்தும் கேட்டும் கூடவா அந்த இடங்களில், அந்த விக்ரகங்களில், அந்தத் தேர் வாகனங்களில் புனிதத்தன்மை, தெய்வத்தன்மை, அருள்தன்மை, ஆண்டவனை ஞாபகப்படுத்தும் தன்மை முதலியவைகள் இருக் கின்றதாக நினைக்கின்றீர்கள்?  உங்களிலும் மூடர்கள் இனியும் எங்காகிலும் உண்டா? தயவு செய்து சொல்லுங்கள்.

இன்னும் ஒரே குட்டி சங்கதி, வட்டி வாங்குகிறவன் கோடீசுவரனாகிறான், வட்டி கொடுப்பவன் நாசமாய்ப் பாப்பராய்ப் போகிறான் என்பதைப் பார்த்தும், கேட்டும் இன்னமுமா பாழாய்ப் போன கடவுள் இருக்கிறார் என்று கருது கின்றீர்கள்?  இன்னும் ஒன்றுதான், அப்புறம் ஒன்றுமில்லை. துளியுண்டு சங்கதி... காவடி எடுத்துக்கொண்டு போனவன் காலராவில் செத்தபிறகு கூடவா நாசமாய்ப் போன சாமி இருக்குதுன்னு நினைக்கின்றீர்கள்..

மூடர் : சும்மா இப்படியெல்லாம் பேசிவிட்டால் போதுமா? இந்த உலகத்தைப் படைத்ததற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டாமோ? அதுதான், கடவுள்.

பதில் : சரி, அப்படியானால் அந்தக் காரணத்தைக் கடவுளை உண்டாக்கினதற்கு மற்றொரு காரணம் வேண்டாமா? அதுதான் சுயமரியாதை இயக்கம் (பகுத்தறிவு)

மூடர் : கடவுளைப் படைப்பதற்கு ஒரு காரணம் கேட்பது, முட்டாள் தனமாகும்.

பதில் : அப்படியானால், உலகப்படைப்புக்குக் காரணம் தேடிக் கொண்டிருப்பது அதைவிட இரட்டிப்பு முட்டாள் தனமாகும்.

மூடர் : உங்களோடு யார் பேசுவார்கள்?

பதில் : சரி நல்ல காரியமாச்சுது. சனியன் தொலைந்தது.  ஆனால், காணாத இடத்தில் குலைக்காதே.

 - விடுதலை நாளேடு 14 .2.20

மேல்நாட்டின் ஜோதியும் கீழ்நாட்டின் பீதியும் -1

01.02.1931 - குடிஅரசிலிருந்து..

தலைவரவர்களே! நண்பர்களே!! மேல்நாட்டின் ஜோதியும், கீழ்நாட்டின் பீதியும் என்னும் விஷயமாய் இன்று மறுபடியும் நான் பேச வேண்டுமென்று குறிப்பிட்டிருக் கின்றீர்கள்.  இந்தத்  தலைப்பைக் குறிப்பிட்டவர்கள் என்ன கருத்தைக் கொண்டு நான் இத்தலைப்பில் என்ன பேசவேண்டுமென்று கருதி ஏற்பாடு செய்தார்களென்பது எனக்குத் தெரியாது.  ஒரு சமயம் மேல் நாட்டின் பெருமையையும், கீழ் நாட்டின் சிறுமையையும் பற்றி நான் பேச வேண்டுமென்று கருதினார்களோ என்னமோ தெரியவில்லை.  ஆனபோதிலும் இத்தலைப்பை நான் காலையில் பார்த்தவுடன் சில விஷயங்கள் சொல்லலாமென்பதற்காக கருதி சில குறிப்பு வைத்திருந்தேன்.  ஆனால்,  இப்போது எனக்கு முன் பேசிய மன்னார்குடி ஜனாப் யூசுப் பாவலர் அவர்கள். சமாதி வணக்கம், கொடி பஞ்சா முதலிய உற்சவங்கள் இஸ்லாம்மார்க்க ஆதாரங்களில் கிடையாதென்றும், அவையெல்லாம் புரோகிதக் கூட்டத்தாரால் புகுத்தப்பட்ட மக்கள் மூடநம்பிக்கையால் பின் பற்றுவதாகு மென்றும் சொன்னபோது இங்கு கூட் டத்திலுருந்த இரண்டொருவர் ஏதோ பிரமாதமாய் முழுகிப் போய்விட்டது  போல் கருதி கூக்குரலிட் டதையும், கோபத்துடன் ஆட்சேபிப்பதையும் பார்த்தவுடன் நான் முன் குறிப்பிட்டு வைத்தவைகளை யெல்லாம்  தூர தள்ளிவிட்டு அவருக்காகப் பீதியையும் இன்னும் அதுபோலவே இந்துக்கள் என்பவர்களுக்கு ஏற்பட்ட பீதியையும் பற்றியே பேச வேண்டியது அவசியம் என்று கருதி விட்டேன்.  அதாவது இம்மாதிரி கீழ் நாட்டின் பீதியை ஒழிக்க வேண்டியது நமது முதற் கடமையென்பதைப் பற்றியே பேசுகிறேன்.

நண்பர்களே, ஏதாவதொரு விஷயத்திற்கு ஆதாரமில்லையென்றோ, அது அறிவுக்குப் பொருத்தமில்லையென்றோ, அதனால் பயனில்லை என்றோ, அல்லது அதனால் இன்னின்ன கெடுதி என்றோ யாராவதொருவர் எடுத்துச்சொன்னால் அதற்கு மாறுபட்டவர்கள் அறிவுள்ளவர்களாயிருந்தால் அல்லது தங்கள் கருத்தில் உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாய் இருந்தால் அப்படிப் பட்டவர்கள் செய்ய வேண்டிய யோக்கியமான வேலை என்ன வென்றால் தைரியமாக தக்க சமா தானம் சொல்லி தங்கள் கொள்கைகளை தாங்கள் நடந்து வருவதற்கேற்ற ஆதாரங்களைக் காட்டி அறிவு அனுபவம் ஆகியவைகளுக்குப் பொருத்தி மெய்ப்பித்துக் காட்ட வேண்டியது யோக்கியமான கடமையாகும்.  அந்தப்படியான காரியம் ஒன்றும் செய்யாமல் எடுத்தற்கெல்லாம் கடவுள்போச்சு, மதம் போச்சு, மார்க்கம்போச்சு, ஆண்டவனின் நம்பிக்கை போச்சு, ஆண்டவன் வார்த்தைக்கு விரோதமாச்சு என்று வெறும் கூப்பாடுபோடுவதனால் என்ன பயன் விளையக்கூடும்.  மக்கள் மூடர்களாயிருக்கும் வரை இம்மாதிரி கூப்பாடுகளை மதித்து அவர்களும் ஏதோ முழுகிப்போய்விட்டது போல் ஆத்திரப்படக் கூடும்.  பிறகு அவர்களுக்கு விவரம் தெரிந்து விட்டால் இந்த மாதிரி கூப்பாடு போட்டவர்களை வட்டியோடு அவமானம் செய்துவிடுவார்கள்.

விஷமப் பிரச்சாரமும், சுயநலப் பிரச்சாரமும் வெகு நாளைக்கு இருக்க முடியாது.  எந்த மக்களுக்கும் பகுத்தறிவு செல்வாக்குப் பெறும் போது ஏமாற்றினவர்கள் மீதுதான் முதலில் அவர்களது ஆத்திரமெல்லாம் திரும்பும்.  பிறகுதான் தங்கள் தங்கள் முட்டாள் தனத்தைப் பற்றி வருந்து வார்கள்.  ஆகையால்தான் விஷமப் பிரச்சாரங்களைப் பற்றி நான் எப்போதுமே பயப்படுவதில்லை.  ஆனால், சொல்லுபவர்கள் சொன்னால் கேட்பவர் களுக்கு மதி வேண்டாமா? என்பதுதான் என் கேள்வி.

நண்பர்களே! என்னைப் போல ஒரு சாதாரண மனிதன் பேசுவதினாலோ, தனக்குத் தோன்றியதை எழுவதுதினாலோ, கடவுள்போய் விடும் ? மார்க்கம் போய்விடும் ? சமயம் போய் விடும் என்று நீங்கள் பீதி அடைவீர்களேயானால், உங்கள் கடவுளுக்கும். மார்க்கத்திற்கும் உள்ள யோக்கியதை எவ்வளவு என்பதை யோசித்துப் பாருங்கள்.  நீங்கள் உங்கள் கடவுளை உறுதியானவரல்ல.   உண்மையானது அல்ல என்றும் உங்கள் சமயம் உறுதியானது அல்ல, உண்மையானதல்ல என்றும் நீங்களே கருதியிருக் கின்றீர் களாகிறீர்கள். நாங்கள் உங்கள் கடவுளையோ, சமயத்தையோ இல்லை யென்று சொல்லுவதற்காக இங்கு வரவில்லை என்பதை உறுதியாய் நம்புங்கள்.  அவைகளைப் பற்றி உண்டு இல்லை என்று சொல்லிக்கொண்டு திரிவதல்ல எனது வேலை.

நீங்கள் சொல்லுவதற்கு நீங்கள் பின்பற்றுவதற்கு ஆதாரமென்ன ? அது உங்கள் பகுத்தறிவுக்கும் பொருத்தமானதாயிருக்கின்றதா? அனுபவத்திற்கு ஒத்து வருகின்றதா? என்று யோசித்துப் பாருங்கள் என்று உங்களைக் கேட்டுக்கொள்வது தான் எனது வேலையாகும். அவைகளுக்கு இடம் கொடுப்பதா லேயே உங்கள் கடவுளோ, மதமோ, ஆதாரமோ, போய்விடுமென்று நினைத்தீர்களானால் அவை களைப் பற்றி மறுபடியும் வெறியில் பேசுவது வெட்கக்கேடான காரியமல்லவாவென்று கேட் கிறேன்.

இந்தப்படி ஆராய்ச்சி செய்து பார்ப்பதாலேயே மறைந்து போகும் மார்க்கமும், ஆண்டவனும் பிறகு என்ன காரியத்திற்குத் தான் பயன்படக் கூடுமென்பதை நீங்கள் ஆத்திரப்படாமல் யோசித்துப் பாருங்கள்.  எங்கள் கடவுள் சர்வசக்தி, சர்வ வியாபகமாயிருக்கக் கூடியவர் என்று கருதிக் கொண்டு அவரால் ஏற்பட்டது எங்கள் மார்க்கம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற நீங்கள் அப்படியானால் சற்று ஆராய்ச்சி செய்து அறிவிற்கு பொருத்தமாயிருக்கின்றதா என்று பார்க்கலாமா? என யாராவது கேட்டால் உடனே இந்த மாதிரி பயந்தால்

அப்பொழுது இந்தப் பயப்படுகின்ற ஆட்களுக்குக் கடவுள் சர்வசக்தி உள்ளவர்கள் என்கின்ற விஷயத் திலும், அவர் சர்வவியாபகமுள்ளவர் என்கின்ற விஷயத்திலும் தங்கள் மார்க்கம் அவரால்தான் ஏற்பட்டது என்பதிலும் நம்பிக்கை யிருக் கின்றதா வென்பதை யோசித்துப் பாருங்கள். மனிதனுடைய அறிவிற்குப் பயப்படும் கடவுளும், அவனது ஆராய்ச்சிக்கு சற்று பயப்படும் மார்க்கமும், உலகத்தில் யாருக்கு என்ன பயனை அளிக்கக் கூடும்? அறிவையும், ஆராய்ச்சியையும் கண்டால் ஏன் இப்படி பயந்து ஓடுகிறீர்கள்?

ஆராய்ச்சிக்கும் மதிப்பு கொடுக்காத காரணமே  இன்று இந்தியா உலகிலுள்ள நாடுகளிலெல்லாம் அடிமையான நாடாகவும், இந்தியா உலகிலுள்ள மக்களிலெல்லாம் இழிவான   மக்களாகவுமிருக்க வேண்டியதாகிவிட்டது. கடவுள் என்றால் குருட்டு நம்பிக்கை,  மதம் என்றால் மூட நம்பிக்கையென்கின்ற தீர்மானம் ஏற்பட்டு  விட்டது. இந்த நிலையைத் தவிர, கடவுளுக்கும் மதத்திற்கும் வேறு அவமானம் வேண்டியதில்லை.

இந்த மாதிரி அறிவிற்கும்  ஆராய்ச்சிக்கும் பயந்த கூட கடவுளையும் மதத்தையும் வைத்திருக்கின்றவனை விட கடவு ளையும், மதத்தையும் பற்றி கவலைப் படா தவனே, இல்லையென்று கருதிக் கொண்டிருக்கின்ற வனே வீரன் என்று நான் சொல்லுவேன்.

ஏனெனில், கவலைப்பட்டு கொண்டு உண்டு என்று சொல்லிக் கொண்டு மெய்ப்பிக்க திண்டாடிக் கொண்டும், நடுங்கிக் கொண்டும் திரிவதும் பயங்காளித் தனமென்றே சொல்லுவேன்.

சகோதரர்களே! நாங்கள் வேலை இல்லாவெட்டி  ஆள்களா? அல்லது ஏதாவது பூசாரி புரோகிதர் கூட்டத்தைச் சேர்ந்தவர்களா? அல்லது ஏதாவது பண்டிதபுராண காலட்சேபக் கூட்டத்தார்களா? எங்களுக்கு இந்த வேலையில்  ஏதாவது ஜீவனத்

திற்கோ, பெருமைக்கோ சிறிதாவது இதில் வழியுண்டோ ?

- தொடரும்-

 - விடுதலை நாளேடு 14 .2.20

இரண்டு சந்தேகம்?

- சித்திரபுத்திரன் -

15.11.1931  - குடிஅரசிலிருந்து...

போக்கிரி:- திருமதி லேட்டர் அம் மாளை மீராபாயம்மாளாக்கி, முக்காடு போட்டு ஆபாசமாக்கி சீமைக்கு அழைத்துப் போய் இந்திய நாகரிகத்தைப் பாருங்கள் என்று வெள்ளைக்காரர்களுக்குக் காட்டு கிறாரே. அது ஏன்? முக்காடு என்ன அவ்வளவு அழகா? அல்லது, தன்னை ஒரு சனாதன இந்து என்பதற்காகவா?

யோக்கியன்:- அதைப்பற்றிய கவலை உனக்கு எதற்கு? அது அவரவர்கள் இஷ்டத்தைப் பொறுத்தது.

போக்கிரி:- சரோஜனி அம்மாள் அப்படியில்லையே?

யோக்கியன்:- மறுபடியும் பேசுகிறாயே?

போக்கிரி:- சரி, அதைப்பற்றி பின்னால் பேசிக்கொள்ளலாம், திரு. காந்திக்கு திரு. ஏ.ரங்கசாமி அய்யங்கார் அவர்களின் யோக்கியதை தெரியுமா? தெரியாதா?

யோக்கியன்:- தெரியும் ஏன்?

போக்கிரி:- அவர் காந்தியை மீறித்தானே வட்டமேஜைக்குப் போனார்?

யோக்கியன் :- ஆம்,

போக்கிரி:- அப்படி இருக்க, திரு. காந்தி அவரை எதற்காகத் தனக்கு அரசியல் ஆலோசனை சொல்லும் அமைச்சராக வைத்துக்கொண்டார்.

யோக்கியன்:- இது வேண்டுமானால் நல்ல கேள்வி, ஏன் வைத்துக்கொண்டார் என் றால், திரு. ஏ.ரங்கசாமி அய்யங்கார் இந்து சுதேசமித்திரன் பத்திரிகைகளின் ஆசிரிய ராய் இருக்கின்றார் என்பதற்காகத் தான். அன்றியும் திரு. ரங்கசாமி அய்யங்காரிடம் திரு. காந்தியின் கைவரிசை ஒன்றும் செல் லாது. ஏனெனில் இந்து பத்திரிகையென் றாலே திரு. காந்திக்கு எப்போதும் நெஞ்சில் கொஞ்சம் நெருப்பு உண்டு.

போக்கிரி:- அதெப்படி?

யோக்கியன்:- காலஞ்சென்ற ஒத்துழையா மையின்போது கூட இந்து பத்திரிகை ஒத்துழையாமைக்கு விரோதமாய் விஷமப் பிரசாரம் செய்தும் திரு. காந்தி அடிக்கடி அதன் ஆசிரியருக்குக் கடிதம் எழுதி அவரைக் கைக்குள் போட்டு, ஒத்துழை யாமையைத் தயவுசெய்து கவனித்துக் கொள்ளுங்கள் என்று கடிதமெழுதி இருக் கிறார். அன்றியும் இந்துவும், சுதேசமித் திரனும் சேர்ந்துதான் திரு. தாசுக்கு விளம்பரம் கொடுத்து அவரை தேசபந்து வாக்கி மகாத்மாவை தோற்கடித்து ஒத்து ழையாமையைக் புதைத்து விட்டதுகள். ஆதலால் அதுபோலவே இப்போதும் செய்துவிடுமோ என்கின்ற பயத்தால்தான் திரு. ரங்கசாமி அய்யங்காரை திரு. காந்தி தனது மந்திரியாக்கிக் கொண்டார்.

போக்கிரி:- மற்றவர்களையெல்லாம்விட திரு. ஏ. ரங்கசாமி அய்யங்காரிடம் மாத்திரம் என்ன அவ்வளவு பயம்?

யோக்கியன்:- இந்து, சுதேச மித்திரன் என்றால் பார்ப்பனர்கள் என்று அர்த்தம். அதுவும் தென்னாட்டு அய்யங்கார் பார்ப் பனர்கள் என்ற அர்த்தம். திரு. காந்தியைப் போல் ஆயிரம் காந்தியை அய்யங்கார்ப் பார்ப்பனர்கள் ஆக்கவும் கூடும். அழிக்கவும் கூடும், திரு. காந்தி இவையெல்லாம் தெரியாதவரல்ல. யார் யாரைப் பிடித்து எப்படி எப்படி சரி பண்ணலாம், எப்படி எப்படி விளம்பரம் செய்யலாம் என்பதில் அவருக்கு அனுபோகமுண்டு. லார்டு இர்வினை மகாத்மா இர்வின் என்று காந்தி கூப்பிட்டாரே எதற்கு? என்பது உமக்குத் தெரியுமா?

போக்கிரி:- சரி விளங்கிற்று இனி ஒன்றும் தெரியவேண்டாம்.

புதிய தொண்டரும் பழைய தொண்டரும்

புதுத் தொண்டர்:- வட்ட மேஜை முறிந்து போனால் என்ன செய்வது? ஜனங்கள் மிகவும் கஷ்டப்பட வேண்டி வரும் என்று காந்தி சொல்லுகின்றாரோ,

பழைய தொண்டர்:- அடபயித்தியக்காரா! வட்டமேஜை மகாநாடு முறிந்தால்தான் நமக்கு நல்லது.

பு.தொ:- அதென்ன அப்படி?

ப.தொ:- வட்டமேஜை மகாநாடு முறிந்து போனால், திரு. காந்தி இந்தியாவுக்கு வந்து, மறுபடியும் ஏதாவது சத்தியாக்கிரகம் - சட்டமறுப்பு - என்பதாக, எதையாவது ஒன்றைச் செய்யச் சொல்லுவார்.

பு.தொ:- அதனால் நமக்குகென்ன லாபம்? ஜனங்களுக்குக் கஷ்டம்தானே?

ப.தொ:- அட முட்டாளே! ஜனங்கள் எக்கேடு கெட்டேனும் தொலையட்டும்  அதைப்பற்றி நமக்கென்ன கவலை? நமக்கு எப்படியும் ஒரு வேலை  இருக்குமல்லவா? அதனால் உண்டி வசூலிக்கவோ, பணம் வசூல் செய்யவோ, தேசாபிமானியாகவோ, சவுகரியம் இருக்கும். அப்படியில்லாவிட்டால் நம்மை எவன் சட்டை பண்ணுவான்?

பு.தொ:- நமக்கு வேலை வேண்டிய தற்காகவா தேசியத் தொண்டு செய்வது?

ப.தொ:- சரி! சரி! உனக்கு ஒன்றும் தெரியாது. உங்கள் வீட்டில் ஏதோ சோற்றுக்குக் கொஞ்சம் வகை இருக்கின்றது போலத் தெரிகிறது. அதனால் உனக்கு வட்டமேஜை முறிய வேண்டிய அவசிய மில்லையென்று தோன்றுகின்றது.

பு. தொ:- அதென்ன அப்படி சொல்லு கின்றாய்?

ப.தொ:- வட்டமேஜை ஏதாவது ஒரு வழியில் வெற்றி பெற்று விட்டால், இந்தி யாவில் வேலையில்லாக் கஷ்டம் எவ்வளவு அதிகரிக்கும் தெரியுமா? முக்கால்வாசிப் பத்திரிகைகள் ஒழிந்து போகும். முன் பெல்லாம் பாமரமக்களை ஏமாற்ற மதம் ஒன்று தான் இருந்தது. இப்போது நமது பிராமணப் பெரியோர்கள் தயவினால் தேசியம் என்பதாக ஒன்று ஏற்பட்டு, இதில் அனேகம் பேருக்கு ஜீவனோபாயம் உண்டாயிற்று, மகாத்மா காந்தி அதற்குத் தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகின்றார். அதனால் இப்போது நம்போலிருப்பவர்க் கெல்லாம் சோற்றுக்குச் சோறு, துணிக்குத்துணி, கைச்செலவுக்குத் தாராள மாகக் காசு இவ்வளவும் தவிர, போகிற பக்கம், வருகின்ற பக்கம் எல்லாம் திருப்பதி குடை யாத்திரைக்காரருக்கு காலில் தண் ணீர் விட்டு, விழுந்து கும்பிட்டு, தட்டத்தில் காசு போடுகின்ற மாதிரியான மரியாதை- இவ்வளவெல்லாம் இருக்கின்றபோது, இவை அத்தனையும் ஒழிந்து போகின்ற மாதிரியில் வட்ட மேஜை வெற்றி பெற்றால் என்று கேட்கின்றாயே, பாவி!

இதைக் கேட்டதும் எனக்குத் திகீர் என்கிறது.

பு-தொ:- கோபித்துக் கொள்ளாதீர்கள்! எனக்கு அனுபோகம் இல்லாததினால் இப்படிக் கேட்டேனே ஒழிய, உங்கள் பிழைப்பில்நான் கைவைக்கவில்லை.

- விடுதலை நாளேடு 29.2.20

வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

புரட்டு! சுத்தப்புரட்டு!!

25.10.1931, குடிஅரசிலிருந்து... -

நமது செல்வத்தை அந்நிய நாட்டார்  கொள்ளையடிப்பதாகச் சொல்லுவது சுத்தப்புரட்டு,

நமது செல்வத்தைக் கொள்ளையடித்து நம்மைப்பட்டினி போட்டு வதைப்பவர்கள் நமது கடவுள்களும், நமது பார்ப்பனர்களும், நமது முதலாளி, ஜமீன்தாரர், மிராசுதாரர் வட்டிக்கடைக்காரர் ஆகியவர்களுமேயாவார்கள்.

அந்நிய நாட்டார் கொள்ளையடிக்கும் செல்வமெல்லாம் நம்முடையதல்ல. நம்மைக் கொள்ளை அடித்து பட்டினி போடும் பாதகர் களாகிய மேற்கண்ட முதலாளி, ஜமீன்தாரன், மிராசுதாரன், வட்டிக்கடைக்காரன் முதலியவர்கள் செல்வமேயாகும்.

ஆகையால் அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டிய தில்லை.

மேலே சொல்லப்பட்ட இந்தக்கூட்டங்களை ஒழித்தால் தான் நமது செல்வம் நமக்குக்கிடைக்கும்.

அப்போது நாம் வயிறார உண்ணலாம். கஷ்டப்படும் நாடுகளுக்குத் தருமமும் செய்யலாம்.

இப்படிக்கு 100க்கு 90 மக்களாகிய, தொழிலாளிகள் வேலையாளர்கள் கூலியாட்கள் பண்ணையாட்கள்.

 - விடுதலை நாளேடு 28 .2.20

மேல்நாட்டின் ஜோதியும் கீழ்நாட்டின் பீதியும்- 3

01.02.1931 - குடிஅரசிலிருந்து..

சென்ற வாரத் தொடர்ச்சி

மனிதனின் நன் மைக்கும், சவுகரியத் திற்கும்,  மார்க்கம் ஏற்பட்டதென்று கருதி தற்கால அறிவுக்கும், நிலைமைக்கும் ஒத் திட்டுப் பாருங்கள்.  எக்காலத் திற்கும் ஏற்ற மதமென்றால் காலத்திற்கு ஏற்றப்படி தானாகவே, மாறவோ, மாற்றிக் கொள் ளவோ சவுகரியமிருக்கும் என்பதில் பயமோ, அவநம்பிக் கையோ  கொள்ளாதீர்கள்.  இருட்டானால் விளக்கைப்பற்ற வைத்துக் கொள்ளுங்கள்.  பகலா னால் விளக்கை அணைத்து விடுங்கள் என்றுதான் பகுத்தறிவுள்ள மார்க்கம் சொல்லி இருக்கும். எப்போதும் விளக்கு வைத்திருங்கள் என்றோ, எப்போதும் விளக்கை வைக்காதிருங்கள் என்றோ சொல்லி இருக்க முடியாது.

ஆகவே காலப் போக்குடன் கலந்துகொள்ளப் பயப்படாதீர்கள்.  இந்தியாவிற்கு இரண்டு மதம் சொந்தமாகிவிட்டது.  அதாவது இந்து மதம், இஸ்லாமிய மதம், இரண்டும் ஒன்றுபட்டாலொழிய இந்தியாவிற்கு விடுதலை இல்லை.  ஒருவர் மதத்திற்கு ஒருவர் வர வேண்டுமென்றால் ஒரு நாளும் முடிவு பெறாது.  இருவரும் பகுத்தறிவுபடியே நடந்துக் கொள்ளலாம் என்றால், யாருக்கும் ஆட்சேபணை இருக்க வழியிருக்காது.

தங்கள் மதம் பகுத்தறிவுக்கு ஏற்றதாய் இருக்கும் என்ற நம்பிக்கையுள்ளவர்கள் கண்டிப்பாய் இந்த ராஜிக்கு ஒப்புக் கொள்ளலாம்.  அப்படிக்கு நம்பிக்கை இல்லாதவர்கள் எடக்குப் பேசித்தான் தீருவார்கள்.  அவர்கள் அதன் பயனை அடைந்து தான் தீருவார்கள்.

இந்த நிலையில் என்ன சுயராஜ்யம் வந்தாலும் பூரண விடுதலை வந்தாலும் அவை நமக்குள் உதை போட்டுக் கொள்ளத்தான் உதவும்,  இதுவரை பொதுவாகப் பேசினேன்.

கடைசியாக இந்துக்களுக்கென்றே சில வார்த்தை பேசுகின்றேன். ஏனெனில், நானும் சில நண்பர்களும் சாப்பிட்ட தற்குப் பிறகு ஒரு நண்பர் இந்த ஊர் கோயில் தேரையும், கோபுரத்தையும், வந்து பார்க்கும் படி கூப்பிட்டார்கள்.  நாங்கள் பார்ப்பதற்காக அங்குச் சென்றோம்.

பிறகு அங்குப் பார்த்த ஆபாசங்களை அப்படியே சொல்ல வெட்கப்பட வேண்டிய தாகவே இருக்கிறது.  காட்டுமிராண்டிகள் காலத்தில்தான் சாமிகளும், கோயில்களும் ஏற்பட்டதென்று சொன்னால் யாராலும் மறுக்க முடியாதபடி அவைகள் அமைக்கப் பட்டிக்கின்றன.

முதலாவது நாங்கள் இந்த ஊர்த் தேரைப் பார்த்தோம்.  அதில் சித்திரம் வைக்கப்பட்டிருக்கும். உருவங்கள் மிக மிக ஆபாசமானவையாய் காணப்பட்டன.  அவைகளுக்கு என்ன தான் தத்துவார்த்தம் சொன்னாலும், மனிதப் பெண்ணை கழுதை சம்போகம் பண்ணுவது போலவும் போன்ற மற்றும் பல உருவங்களைச் சித்தரித்து வைத்திருப்பதை எப்படி ஒத்துக்கொள்வது என்பது எனக்கு விளங்கவில்லை.

கோபுரங்களை பார்த்ததைப்பற்றி சொல்லலாம் என்றாலோ அதைப்பற்றி இன்னும் ஒரு தடவை நினைப்பதற்குகூட கஷ்டமாய் இருக்கின்றது.  பெண்களை அதில் படுத்துகின்றபாடும்,  காம விகாரங்களை அதில் எடுத்துக் காட்டி இருக்கும்,  முறையும் அநியாயம் அநியாயம்.

இவைகளையெல்லாம் நெருப்பை வைத்து கொளுத்தி இடித்து எரித்து, இவற்றிற்கு ஆதாரமான சாத்திரங்களையெல்லாம் பொசுக்கி சமுத்திரத்தில் கரைத்து விட்டாலொழிய இதைச் சார்ந்த மனிதர்கள் மனிதர்களாகக் கருதப்பட முடியவே முடியாது.

சுயமரியாதைக்காரர்கள் புராணக் குப்பைகளைக் கிளறிக்கிளறி வெறும் ஆபாசங்களைப் பேசுகின் றார்கள் எழுதுகின்றார்கள் என்று பேசுகின்றீர்கள். எங்கள் மீது சில சமயத்தில் வெறுப்பும் கொள்ளு கின்றீர்கள்.

ஆனால், இந்தக் கோயில்களுக்குப் போய், தேங்காய் பழம் உடைத்து வைத்து, காசும் கொடுத்தும் இந்த உருவங்களைப் பார்க்க வந்து கொண் டிருப்பவர்கள் மனிதர்களா? என்பதைப் பற்றி நீங்கள் சிறிது கூட சிந்திப்பதில்லை.

நாங்கள் எழுதுவதையும், பேசுவதையும் பார்த்து வெறுப்புக்கொண்டு என்ன செய்வது? இவ்வளவு பேசியும், எழுதியும் இந்த நடவடிக்கைகள் நின்றனவா? நிறுத்த யாராவது பாடுபட்டீர்களா?  காரமடைத் தேரில் இதைவிட அசிங்கமாய் பார்த்தேன்.  திருவொற்றியூரில் வெகு ஆபாசமாய்ப் பார்த்தேன்.

மதுரை  முதலிய இடம் சொல்லவேண்டிய தில்லை.  ஆனால், இந்த ஊர்கோபுரம் எல்லாவறையும் மீறி விட்டது.  இதுவரை நாங்கள் எழுதாத, பேசாத நினைக்கவே முடியாத விஷயங்கள் எல்லாம் இதில் இருக்கின்றன.

எல்லாம் சாமிகளாகவும், ரிஷிகளாகவும், முனிவர்களாகவுமே காணப்படுவது இன்னும் மோசமாய் இருக்கின்றன.

இதையெல்லாம் பற்றி அந்நிய மதக்காரர்கள் பரிகாசம் பண்ணமாட் டார்களா?  கேவலமாய் நினைக்க மாட்டார்களா? என்கின்ற மான அவமானமே இல்லாமல் போய்விட்டது.

இதை நிறுத்த வேண்டுமா, வேண்டாமா? நிறுத்த வேண்டுமானால், என்ன செய்வது இதுவரை சமயத் திருக்காரரும் சமுக திருக்காரரும் இந்த ஆபாசங்களின் பக்கம் திரும்பியாவது பார்த்தார்களா? போதாக் குறைக்கு பணம் படைத்த மூடர்களும் யோக்கியப் பொறுப்பற்றவர்களும், இந்த சித்திரங்களுக்குச் சாயம் அடித்து ரிப்பேர் செய்கின்றார்களே, அவர்களை என்னவென்றுதான் சொல்லுவது என்பது விளங்கவில்லை.  சிறிதும் ஈவுஇரக்கமில்லாமல் ஊரார் பணத்தை, ஏழைகள் பணத்தைக் கொள்ளை அடித்து அவர்களை பட்டினிபோட்டுவிட்டு இந்த மாதிரி மிருக மனிதப் புணர்ச்சிகளுக்குப் பொம் மைகள் செய்து சாயம் அடித்து பூசை செய்வது என்பது எவ்வளவு இழிவானதும், திமிர் பிடித்ததுமான காரியமாகும்  என்பதை யோசித்துப் பாருங்கள்.

இந்த லட்சணத்தில் நாங்கள் இந்தக் கோவிலுக்குள் புகுந்துவிடுவோமென்று இப்போது போலீசு காவல் போடப்பட்டிருக்கின்றதாம்.  நாங்கள் எந்த ஊருக்குப் போனாலும் அங்குள்ள கோயில்காரர் களெல்லாம் இப்படியேதான் செய்கின்றார்கள்.  ஆகவே இந்துக்கள், சமயவாதிகள், சைவர்கள், வைணவர்கள் என்பவர்கள் இவற்றிற்கெல்லாம் என்ன பதில் சொல்லுகின்றார்கள் என்று கேட்கின் றேன்.  இந்த இந்து மதத்தை இன்னமும் எத்தனை நாளைக்குத்தான் காப்பாற்ற போகின்றீர்கள்? என்று கேட்கின்றேன்.  மதம், சாமி, கோயில் என்றால் முட்டாள்தனம், அயோக்கியத்தனம், ஆபாசம் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது.  வருத்தப்பட்டு பயனில்லை.  வெட்கப்படவேண்டும்.  அப்போது தான் அறிவு, ஒழுக்கம், நாகரிகம் விளங்கும்.

ஆகவே சகோதரர்களே!  இவ்விஷயங்களை நன்றாய் ஆலோசித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள். பொருளில்லா கூப்பாடு போடு

வதால் பயன் விளையாது.  இனியும் இந்த மாதிரி குஷ்டவியாதி வந்த சரீரம் மாதிரி இந்தச் சமுகம்

நாறி அழுந்திக் கொண்டிருப்பதில் பயனில்லை என்பதை வணக்கமாய் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

(திருநெல்வேலி ஜில்லா களக்காடு அய்க்கிய முஸ்லீம் சங்க ஆண்டு விழாவில் திரு. ஈ.வெ. ராமசாமியின் 2ஆவது நாள் உபன்யாசம்).

- விடுதலை நாளேடு, 28.2.20

வியாழன், 27 பிப்ரவரி, 2020

சுயமரியாதை இயக்கத்தை ஒழிக்க பார்ப்பனர்களின் சூழ்ச்சி

ஆரியர்கள் என்னும் பார்ப்பனர்கள் தமிழ் மக்களுக்கு இழைத்துள்ள கொடுமைகளையும் வஞ்சகங்களையும் ஒழிப்பதற்கு நமது நாட்டில் ஆயிரக்கணக்கான வருஷங்களாக பல பெரியார்களும் பல இயக்கங்களும் அவ்வப்போது தோன்றி மக்களுக்கு உணர்ச்சி அளித்து வந்த சமயங்களிலெல்லாம் பார்ப்பன சூழ்ச்சிகளால் அவைகள் ஒழிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் வந்திருப்பதற்கு எத்தனையோ கதைகளும் சரித்திரக் குறிப்புகளுமிருக்கின்றன. அது போலவே தற்காலம் நமது நாட்டில் தோன்றியிருக்கும் சுயமரியாதை உணர்ச்சியையும் அழிப்பதற்கு பார்ப்பனர்கள் பல சூழ்ச்சிகள் செய்து வருகிறார்கள். அச்சூழ்ச்சிகளில் சர். சிவசாமி அய்யர் என்கிற ஒரு வக்கீல் பார்ப்பனர் கண்டுபிடித்து இருக்கிற சூழ்ச்சி மிகப்பெரிய சூழ்ச்சியாகும். இந்த மாதிரி சூழ்ச்சிகளேதான் இப்பார்ப்பனர்களின் பெரியோர்களான வேதகாலம், மனுதர்ம சாஸ்திர காலம் முதலிய காலத்துப் பார்ப்பனர்களும் செய்து வந்திருக்கிறதாக அந்த வேதங்களும், சாஸ்திரங்களுமே நிரூபிக்கின்றன. இது போலவே தற்கால மனுக்களில் ஒரு பழம் பெருச்சாளி மனுவாகிய மேல்கண்ட சர்.பி. சிவசாமி அய்யர் என்பவர் ஒரு மனுதர்ம சாஸ்திரத்தை உண்டாக்க சர்க்காரை வேண்டிக்கொள்ளுகிறார். அதாவது இந்தியன் பீனல் கோடில் மத சம்மந்தமான குற்றம் செய்பவர்களை தண்டிப்பதற்கு என்று ஏற்படுத்தப்பட்ட 295, 297, 298 - வது பிரிவுகளில் மத ஸ்தாபகரை தூஷிப்பவர்களை தண்டிக்க இடமில்லை. ஆதலால் 203 -வது பிரிவுக்குப் பிறகு புதிதாக ஒரு பிரிவைச் சேர்க்க வேண்டும் என்றும், அதாவது, எந்த வகுப்பாரின் மனதையாவது புண்படுத்தும் வண்ணம் ஒரு மத ஸ்தாபகரையோ தெய்வத்தையோ குருமார்களையோ அவதார புருஷர்களையோ தூஷித்தாலும் அல்லது பத்திரிகையில் எழுதினாலும் அப்படிப்பட்டவருக்கு 2 வருஷ தண்டனை விதிக்க வேண்டும் என்பதாக ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று யோசனை சொல்லுகிறார். இம்மாதிரி ஒரு சட்டம் ஏற்பட்டு விட்டால் மதத்தின் பேரால் பார்ப்பனர்கள் செய்யும் அக்கிரமங்களை யாரும் அசைக்க முடியாது என்பது அவர்களது சூழ்ச்சியின் கருத்து என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்தக் கருத்தை சுதேசமித்திரன் பத்திரிகையும் ஜாடையாக அநேக தடவை எழுதி வந்திருக்கிறது. ஆனாலும் இப்போதுதான் ஒரு சட்ட ஞானமுள்ள பொறுப்பான மனிதரால் சட்டம் செய்ய வேண்டிய வாசகங்களுடன் வெளியாயிருக்கிறது. சர். சிவசாமி அய்யர் சட்டம் கற்று, சுமார் 35 வருஷம் ஆகியும், சட்டத்திற்கு வியாக்யானம் செய்து ஜீவிப்பதிலேயே காலங்கடத்தி வந்தும், இதுவரை இக்குறையைப் பற்றி ஞாபகம் வராமல், இப்போது சுயமரியாதைக் கிளர்ச்சி ஏற்பட்ட பிறகு இவை ஞாபகத்திற்கு வந்திருப்பதின் பொருள் என்ன என்பது இவை வாசிப்பவர்களுக்கு விளங்காமல் போகாது.

இதே சர். சிவசாமி அய்யரின் கருத்தைத்தான் சென்ற வருடம் சிறீமான். எஸ். சீனிவாசய்யங்கார் தெரிவித்தார். அதாவது:- வகுப்புத் துவேஷத்தைக் கிளப்பும் ஈ.வெ. ராமசாமி நாயக்கரை இன்னும் ஜெயிலில் போடாமல் வெளியில் விட்டுக்கொண்டிருப்பதற்கு சர்க்காருக்கு கண்ணில்லையா? அட்வொகெட் ஜெனரல் இதை கவனியாமல் என்ன செய்கிறார் என்று கேட்டார். இதே கருத்தைத் தான் சிறீமான் சத்தியமூர்த்தி மற்றொரு வழியில் வெளியிட்டார். அதாவது:- பம்பாய் மாகாணத்து கல்வி மந்திரி சிறீமான் யாதவர் சென்னை மாகாணத்திற்கு வந்து வகுப்பு துவேஷத்தை உண்டாக்கி விட்டு போவதை சட்ட மெம்பர் சர்.சி.பி. ராமசாமி அய்யர் எப்படி பார்த்துக் கொண்டிருந்தார். தனக்கு யாதவரை தண்டிக்க தைரியமில்லாவிட்டால் தான் ராஜீனாமா கொடுத்து விட்டு வேறு ஒருவரைக் கொண்டாவது ஏன் செய்திருக்கக்கூடாது என்று கேட்டார். சுயராஜ்ஜியா, சுதேசமித்திரன், பிராமணன் முதலிய பார்ப்பனப் பத்திரிகைகளும் கேள்வி முறை இல்லையா? இப்படி அக்கிரமங்களை சகித்துக் கொண்டிருக்கலாமா? பிராமணத் தலைவர்கள் இதைப் பற்றி கவனிப்பதில்லையா என்று மாரடித்துக்கொண்டன. இவைகள் எல்லாம் கவனிக்கப்படாவிட்டாலும் சர். சிவசாமி அய்யரின் அழுகை கட்டாயம் கவனிக்கப்பட்டு அந்தப்படி ஒரு சட்டம் ஏற்பட்டாலும் ஏற்படலாம். நமக்கு அதைப்பற்றி கவலை இல்லை.

நாம் அவைகளுக்குப் பயந்து கொண்டு அயோக்கியர்களின் செய்கைகளையும், சூழ்ச்சிகளையும், அக்கிரமங்களையும், மனிதப் பிறப்புரிமைக்கும், மனிதத் தத்துவத்திற்கும், சுயமரியாதைக்கும் இடையூறு விளைவிக்கும் காரியங்களையும் வெளிப் படுத்தாமலிருக்கப் போவதில்லை. பிறப்புரிமையான சுயமரியாதையானது சூழ்ச்சிக்காரர்களால்,

வஞ்சகர்களால் செய்யப்படும் சட்டங்களுக்கு அடங்கிவிடும் என்று எதிர்ப்பார்ப்பது மடமையேயாகும்.

சாதாரணமாக, இந்து மதம் என்பது ஒரு குறிப்பிட்ட கொள்கையுடையது அல்ல என்பதையும், அது ஒரு பழமையான மதம் அல்ல என்பதையும், பல பெரி யோர்களும் அறிஞர்களும், ஆராய்ச்சிக்காரர்களும் ஒப்புக்கொண்டாய் விட்டது. இனி சட்டம் என்ன செய்து விட முடியும்?

எவ்வளவோ பிரத்தியட்ச ஆதாரங்களுடனும் அநேக நன்மையான கொள்கையுடனும் விளங்கும் கிருஸ்தவ மதத்தைப் பற்றியே பேசும்போது, கிருஸ்துநாதர் என்பதாக ஒருவர் பிறக்கவே இல்லையென்று ஒருவர் புஸ்தகமே எழுதியிருப்பது குற்றமில்லாமல் இருக்கும்போது, அஸ்திவாரத்திலிருந்தே அண்டப்புளுகையுடையதான இந்து மதத்தைப் பற்றி பேசுவதும், கள்ளு, சாராயம், மாம்சம், பெண் கூத்தி முதலியவைகளை வைத்துப் படைக்க வேண்டிய தெய்வங்களையும், தன்னைத் தவிர வேறு தெய்வமில்லை என்கிற மத ஸ்தாபகரையும், ஊரைக் கொள்ளைடித்து ஒரு கூட்டத்தாருக்கே வயிறு புடைக்கத் தின்னும்படி பொங்கிப் போட்டுவிட்டு தான் பஞ்சு மெத்தையில் உறங்கிக்கொண்டும், தங்கப் பல்லக்கில் உலவிக் கொண்டும், தன்னை சன்னியாசி என்றும் துறவி என்றும் சொல்லிக் கொண்டும் திரியும் போலி குருமார்கள் என்போர்களையும் வெளிப்படுத்தினால் அது எப்படி குற்றமாகுமென்பது நமக்கு விளங்கவில்லை. இந்த மாதிரி ஆசாமிகளை வெளிப்படுத்துவதன் மூலம் இவர்களால் வயிறு வளர்க்கும் ஆசாமிகளுக்கு மனம் புண்ணாவதோடு வயிறு கூட பட்டினியால் வருந்த நேரிடலாம். அதற்கு யார் என்ன செய்யக்கூடும்? சோம்பேறித்தனத்தையும் ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பதையும் விட்டு விட்டு யோக்கியமாய் பாடுபட்டு சம்பாதித்து தின்னும் படி மக்களை பழக்குவதுதான் இதற்கு பரிகாரமாகுமே தவிர சட்டத்தின் மூலம் இதை வெளிப்படுத்துகிறவரை   தண்டிக்க வேண்டும் என்பது ஒருக்காலும் பரிகாரமாகாது.

வேதம் கூட கடவுளால் சொல்லப்பட்டதென்று தான் சொல்லப்படுகிறது. வேதத்தைக் கண்டிப்பது தெய்வதூஷணை என்றுதான் சொல்லப்படுகிறது. இதற்காக அதன் அக்கிரமங்களை ஒரு சுயமரியாதை உள்ள மனிதன் வெளியிடாமலிருக்க முடியுமா? உதாரணமாக அதர்வண வேதத்தில் ஒரு கிராமத்தில் ஒரு பிராமணன் ஒரு இரவு பெண் இல்லாமல் தனியாய் படுத்திருப்பானானால் அந்த கிராமத்திற்கே கேடு என்பதாக எழுதப்பட்டிருக்கிறதாம். இதற்காக பயந்து கொண்டு எந்த திண்ணையில் எந்தப் பிராமணன் பக்கத்தில் பெண் இல்லாமல் தனியாய்ப் படுத்திருக்கிறான் என்று தேடிப் பார்த்து அவனிடம் ஒரு பெண்ணைக் கொண்டுபோய் படுக்க வைப்பதா? அல்லது சட்டத்திற்குப் பயப்படாமல் இது சுயநலக்கார வஞ்சகர்களால் எழுதி வைத்துக் கொள்ளப்பட்டது என்பதை வெளிப்படுத்துவதா என்பதை யோசித்தால் இச்சட்டத்தின் கதி என்ன ஆகும் என்பது விளங்காமல் போகாது. எந்த மதஸ்தனானாலும் யாரானாலும் ஏதாவது ஒன்று தனக்கு மாத்திரம் தெய்வம் தனக்கு மாத்திரம் குரு என்று ஒன்றைச் சொல்லிக் கொள்வானானால் அதைப் பற்றி நமக்கு கவலை இல்லை. அவன் முட்டாள்தனத்துக்கு பரிதாபப்படுவதோடு அவ்விஷயம் தீர்ந்துவிடும். அப்படிக்கில்லாமல் தங்கள் நன்மைக்கு மாத்திரம் என்று ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு அதை மற்றவர்கள் பிடரியின் பேரில் ஏற்றுவதானால் அதை கண்டிக்காமலும் ஒழிக்காமலும் இருக்க முடியவே முடியாது என்பதை சிறீமான் சர்.சிவசாமி அய்யருக்கும் இதை வாசிப்பவருக்கும் சத்தியமூர்த்தி அய்யருக்கும் மித்திரன் கூட்டத்திற்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

('குடிஅரசு' - கட்டுரை - 07.08.1927)

- விடுதலை நாளேடு 23 2 20

புதன், 26 பிப்ரவரி, 2020

எழுத்துச் சீர்திருத்தம்!


தமிழ் எழுத்துகளில் ஒரு சில மாற்றம் செய்தேன். அநேக பண்டிதர்கள் நன்றி சொன்னார்கள். ஆனால் முயற்சிக்கு ஆதரவு அளிக்கவில்லை. இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்ய நான் தகுதியற்றவன் தான். ஆனால் தகுதி உள்ளவர்கள் எவரும் வெளிவராவிட்டால் நான் என்ன செய்வது? என்னைக் குறை கூறவோ, திருத்தவோ முயற்சிப்பதன் மூலமாவது இதற்கு ஒரு வழி பிறக்காதா என்று தான் துணிந்தேன். இதுவரை யாரும் அதை இலட்சியம் செய்யவில்லை. 

(பெரியார், குடி அரசு - 26.01.1936)

மேல்நாட்டின் ஜோதியும் கீழ்நாட்டின் பீதியும் - 2

01.02.1931 - குடிஅரசிலிருந்து..

சென்ற வாரத் தொடர்ச்சி

நாங்கள் ஏன் எங்கள் சொந்தக்  காசையும்,   நேரத்தையும் செலவு செய்து கொண்டு இந்த மாதிரி  ஊர் ஊராய் சுற்றிக்கொண்டு, காசுக்குதவாத வெறும் ஆட்கள் எல்லாம் வையும் படியாகவும் சாபம் கொடுக்கும்படியாகவும் வெட்டுகிறேன், குத்துகிறேன் என்று மிரட்டவும், அவ்வளவையும் இலட்சியம் செய்யாமலும், வந்தது வரட்டும் நாம் செத்துப் போனால் நமக்குத் தானாகட்டும்  மற்றும் யாருக்குத்தானாகட்டும் என்ன முழுகிப்போகும் என்கின்ற துணிவின் பேரில் வீட்டில் உள்ளவர்களிடம் கடைசிப்பயணம் சொல்லிக்கொண்டு வந்து இந்த மாதிரி அலைவதற்குக் காரணம் என்ன? என்பதை யோசித்துப்பாருங்கள்.  இக்கூட்டத்திற்குத் தலைமை வகித்திருக்கும் தலைவர் ஜனாப் தாவுத் ஷா பி.ஏ. அவர்கள் இஸ்லாம் மதத்திற்கு எவ்வளவோ பாடுபடு கின்றவர். அவர் சப்மாஜிஸ்திரேட் உத்தியோகத் தையும் ராஜிநாமா கொடுத்தவர். ராஜிநாமாக் கொடுக்காமல் இப்போதும் அவர் உத்தியோகத் திலேயே உட்கார்ந்திருப்பாரேயானல் இன்றைய தினம் ஏதாவதொரு பெரிய பதவியில் இருப்பார்.   மாதம் 4000, 5000 சம்பளமுள்ள உத்தியோகத்தில் இல்லாவிட்டாலும் மாதம் 900, 1000 ரூபாய் உத்தியோகத்திலாவது இருப்பார்.  அப்படிப்பட்டவர் ஏன் இந்த மாதிரி பாடுபடுகின்றார் என்று யோசித்துப் பாருங்கள். இன்று உலகம் போகின்ற போக்கில் உலக மக்கள் அடைந்திருக்கின்ற முற்போக்கில்  நாகரி கத்தில் நாம் எந்த நிலையில் இருக்கின்றோம் என்பதை யோசித்துப் பாருங்கள்.

நம் அறிவாளிகள் இன்று சாமி போச்சு, சமயம் போச்சு, சைவம் போச்சு, சாமியும், சமயமும் நெருக்கடியான நிலையில் இருக்கின்றன என்பதாக சிறிதும் வெட்கமில்லாமல் பேசிக் கொண்டிருக் கிறார்கள்.  நம்மைக் காப்பாற்ற ஏற்பட்டுள்ள சர்வ சக்தியுள்ள கடவுளை, நம்மை வாழ்விக்க ஏற்பட்ட பரிசுத்த சமயத்தை, நாம் காப்பாற்ற வேண்டிய அளவு நெருக்கடியான சமயம் ஏற்பட்டுவிட்டது என்று சொல்ல ஆரம்பித்தால் அது கடவுளுடையவும், சமயத்தினுடையவும் பலக்குறைவா? அல்லது அந்த மாதிரி சொல்கின்ற மக்களின் அறிவுக்குறைவா என்பதை நீங்களே யோசித்து பாருங்கள்.  மனிதனுக்கு எப்படி சுயமரியாதை பிரதானமோ, அப்படியே கடவுளுக்கும், மார்க்கத் திற்கும் கூட சுயமரியாதை அவசியம் என்பதை நீங்கள் உணருங்கள்.  அப்படி யானால் தங்களைக் காப்பாற்ற இந்த மாதிரி இத் தனை வக்காலத்து கொடுத்திருக்கும் அவைகளுக்குச் சுயமரியாதை இருக்கின்றதா என்று யோசித்துப் பாருங்கள்.

சகோதரர்களே! அய்ரோப்பாவின் நோயாளி யான துருக்கியானது ஆண்டவ னுக்கும் மார்க்கத் திற்கும் வந்த நெருக்கடியை காப்பாற்றுகின்ற வேலையில் ஈடுபட்டிருக்குமானால் இன்று இது இன்றைய மாதிரியில் இருந்திருக்க முடியுமா என்பதை யோசித்துப் பாருங்கள். கொடுங்கோல் மன்னன் ஆட்சியில் இருந்த ருஷ்யா இன்று ஆண்ட வனையும், மார்க்கத்தையும், ஆதாரத்தையும் காப்பாற்றுகின்ற வேலையில் ஈடுபட்டி ருந்தால் அது இன்றைய நிலையை எந்தக் காலத்திலாவது அடைய முடிவுமாவென்பதை யோசித்துப் பாருங்கள்.

அதுபோலவே சீனாவையும், ஜப்பானையும், பிரஞ்சையும், இங்கிலாந்தையும், அமெரிக்காவையும், நினைத்துப்பாருங்கள். எந்த நாட்டுக்காரானாவது அவனுடைய வாழ்நாளையும், சொத்தையும், நேரத் தையும், இந்த மாதிரிக் கடவுளையும், மதத்தையும் காப்பாற்றுகின்ற முட்டாள் தனமானதும், பயனற்றதும், நாச வேலையானதுமான வேலையின் ஈடுபடுத்தியிருக்கின்றார்களா என்பதை நடுநிலையில் இருந்துயோசித்துப் பாருங்கள்.

கடவுள் போய் விடும் என்று பயந்த மக்களால் வேறு என்ன வேலையாகும் என்று நினைக்கிறீர்கள்.  அவர்களை விட பயங்காளிகள், அறிவிலிகள் வேறு யார் இருக்கக்கூடும்? என்று எண்ணுகிறீர்கள்.  கடவுளுக்கும், சமயத்திற்கும், அடிமையான நாடு ஒரு நாளும் சுதந்திரத்திற்கு அருகதையுடையதாகவே ஆகாது. ஆகவே, நீங்கள் முதலில் அந்தப் பயத்தை ஒழியுங்கள். சமயத்தை வணங்க வேண்டாம் அதற்குப் பூசை செய்ய வேண்டாம் என்றால், உங்கள் மார்க்கம் போய்விடுமா? அப்படியானால் இந்து மதத்திற்கும், இஸ்லாம் மதத்திற்கும் வித்தியாசமென்ன? இந்து மதச் சம்பந்தமான கோவில்களெல்லாம் பெரிதும் சமாதிதான்.  அந்தக் கடவுளெல்லாம் அநேகமாய் அந்தச் செத்துப்போன ஆண்களைதான் என்பதே எங்கள் ஆராய்ச்சிக்காரர்கள் துணிவு.   அதனால்தான் பல புண்ணியஸ்தலங்களும், பல கடவுள்களும் ஏற்பட வேண்டியதாயிற்று.  அதையொழிப்பதற்குத் தோன்றியதுதான் இஸ்லாம் மார்க்கம் ஆகும். இஸ்லாம் மார்க்கத்தில்தான் ஒரே ஒரு கடவுள் என்பதும், அதற்கும் உருவமில்லை என்பதும்.  அதைத் தவிர வேறொன்றையும் வணங்கக் கூடா தென்பதுமான கொள்கைகள் சொல்லப்படுகிறது. அதற்கு நேர்விரோதமான நீங்கள் சமாதிகளை யெல்லாம்  வணங்கவும், பூசிக்கவும், ஆரம்பித்து விட்டீர்களானால் நீங்கள் எப்படி மற்றவர்களைக் குற்றம்சொல்ல யோக்கியதையுடையவர்களாவீர்கள்? அது மாத்திரமல்லாமல், அல்லா சாமி பண்டி கையிலும், கூண்டு முதலிய திருவிழாக்களிலும் இஸ் லாமானவர்கள் சிலர் நடந்துகொள்வதும் மிகவும் வெறுக்கத்தக்கதாகும் .  இப்படிப்பட்டவர்களைக் கொண்ட மார்க்கம் எப்படி பகுத்தறிவு மார்க்க மென்றும், இயற்கை மார்க்க மென்றும் சொல்லிக் கொள்ளக்கூடும்?  என்பதை யோசித்துப் பாருங்கள்.  இவைகளையெல்லாம் ஒரு மார்க்கக் கட்டளை என்று சொல்லுவதானால் இந்த மார்க்கம் ஒரு நாளும் அறிவு மார்க்கமாகவோ உண்மையில் நன்மை பயக்கும் மார்க்கமாகவோ இருக்க முடியவே முடியாது.  அதோடு மாத்திரமல்லாமல் மார்க்கத் தலைவருக்கும், மார்க்க வழிகாட்டி யார்க்கும் கூட இது அவமானமும் வசைச் சொல்லுமாகும் என்றே சொல்லுவேன். இன்று இந்துவும், கிறிஸ்தவரும், பகுத்தறிவைக் கண்டால் பயப்படுகின்றார்கள்.  இஸ்லாம் மார்க்கத்தில்தான் தங்கள் மார்க்கம் பகுத்தறிவுக்கு ஏற்றது என்று நிரூபிக்க பந்தயம் கட்டி வருகிறார்கள்.  ஆனால், இப்படிப்பட்ட  சமாதான வணக்கமும், பஞ்சா வணக்கமும், கொடி வணக்கமும் கூண்டு உற்சவம், அல்லா சாமி பண்டிகையை யும்  கொண்ட மக்களை ஏராளமாய் வைத்துக்கொண்டு அவற்றையும் மார்க்கக் கொள்கையோடு சேர்த்துக் கொண்டிருக்கின்றவர்களையும் வைத்துக்கொண்டு இஸ்லாம்மார்க்கம், பகுத்தறிவு மார்க்கமென்று எப்படி சொல்லிக்கொள்வது என்பது எனக்குத் தெரியவில்லை.  நீங்களே சொல்லுங்கள் இவைகளைக் கொண்ட இஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு மார்க்க மாகுமா? கோபிப்பதில் பயனில்லை? இந்து மதம் என்பதை விட, கிறிஸ்தவ மதம் என்பதை விட, இஸ்லாம் மதம் என்பது மேலானது என்பது எனதபிப்பிராயம் என்று எங்கும் சொல்வேன்.  ஆனால், இனி சிறிது கூட சீர்திருத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பவர்களுடன் நான்சிறிது பலமாக முரண்பட்டவனேயாவேன். ஏனெனில், என் கண்களில் பார்ப்பதைக் கொண்டு தான் சொல்லுகிறேன்.  அதுவும் இன்று இஸ்லாம் மார்க்கத்தார் என்பவர்களில் பெரும் பான்மையான மக்கள் அனுஷ்டித்து வரும்,  நடந்து வரும் கொள் கைகள் இஸ்லாம் மார்க்கம் கொள்கை என்றால் ஆண் பெண் இருதுறையிலும் சீர்திருத்தம் செய்ய வேண்டிய சங்கதி பல இருக்கின்றதென்றும் தைரியமாய்ச் சொல்லுவேன்.  நீங்களும் அவற்றைச் சீர்திருத்த வழி தேடுங்கள், அவற்றை நிலைக்க வைக்க ஆதாரத்தைத் தேடாதேயுங்கள்.

தொடரும்...

 -  விடுதலை நாளேடு 21.2. 20

காசில்லாமல் நடத்தலாம் சித்திரபுத்திரன்

20.09.1931 - குடிஅரசிலிருந்து...

அய்யா! உங்கள் கலியாணத்திற்கு மந்திரம் வேண்டுமா? பார்ப்பான் வேண்டுமா? மந்திரம் பிரதானமானால் மந்தி ரத்தை ஒரு கிராமபோன் ரிகார்டில் பிடித்து வைத்துக் கொண்டால் தாலிகட்டுகின்றபோது கிராமபோன் வைத்து தாலிகட்டி விடலாம். பார்ப்பான் வேண்டுமானால் ஏதாவது ஒரு பார்ப்பானை போட்டோகிராப் பிடித்து அதை மணவறையில் வைத்து தாலிகட்டிவிடலாம். இரண்டும் வேண்டுமானால் இரண்டையும் வைத்து தாலிகட்டிவிடலாம். வாத்தியம் வேண்டுமானாலும் கிராமபோனிலேயே மதுரை பொன்னுச்சாமி வாத்தியம் வைக்கலாம். ஒன்றும் வேண்டாம், பெண்டாட்டியும் புருஷனும் ஆனால் போதும் என்றால் விரலில் மோதிரத்தை மாட்டி கழுத்தில் மாலைபோட்டு கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு போகலாம்.

- விடுதலை நாளேடு 21.2. 20

சனி, 22 பிப்ரவரி, 2020

நாஸ்திகம்

* தந்தை பெரியார்

உலகத்திலேயே நாஸ்திகம் என்று சொல்லப்படும் வார்த்தையானது அநேகமாய் பெரும்பான்மையான மக்களால் வெறுக்கப்படக் கூடியதாக இருந்து வரு கின்றது. காரணம் என்னவென்று பார்ப்போமானால் அவ் வார்த் தையில் கடவுள் என்பது இல்லை என்கின்ற பொருள் அடங்கியிருப்பதாகக் கொள்வதேயாகும். மக்கள் கடவுள் இல்லை என்று சொல்லப்படுவதைப்பற்றி மாத்திரமே ஆத்திரப்படவும் வெறுப்புக் கொள்ளவும் புரோகிதர்கள், பாதிரிகள், மௌல்விகள், பண்டிதர்கள் என்பவர்களால் கற்பிக்கப்பட்டு விட்டார்களே தவிர கடவுள் என்பதைப் பற்றிய விளக்கம் யாவருக்கும் தெளிவாக்கப்படாமல் இருப்பதோடு அது (கடவுள் என்பது) மனதிற்கும் புத்திக்கும் எட்டாதது என்பதாகவும் அப்படிப்பட்ட ஒன்றை நம்பித் தானாகவேண்டும் என்று நிர்பந்தப்படுத்தப்பட்டு விட்டது. இப்படியிருந்த போதிலும் என்றையதினம் கடவுள் என் கின்ற ஒரு வஸ்த்து உண்டு என்று கற்பிக்கப்பட்டதோ அன்று முதலே கடவுள் இல்லை என்கின்ற வாதமும் ஏற்பட்டு வெகுகாலமாகவே இவ்வாதம் பிரதிவாதம் நடந்து வருவதோடு நாளது வரை முடிவுபெற முடியாமலே இருந்து வருகின்றது.

உதாரணமாக, கடவுள் இல்லை என்று சொல்லும்படி யான பல மதங்களும் கூட உதாரணமாக சூனிய மதம், நிரீவர மதம், உலகாயுத மதம், நாஸ்திக மதம் என்பது போன்ற பல உண்டு; என்றாலும் கடவுள் என்பதாக ஒன்று இல்லை என்கின்ற ஒரு கிளர்ச்சி வலுத்து அதை அமலுக்குக் கொண்டு வந்து மற்றும் உலகமெங்கும் அக்கொள்கையைப் பரப்ப, பிரச் சாரமும் செய்ய ஏற்பாடுகள் சாதாரணமாக இந்த இருபதாவது நூற்றாண்டில்தான் தைரியமாகவும், பலமாகவும் செய்யமுடிந்து வருகின்றதென்பதாகவும் தெரியவருகின்றது.

ஏனெனில் இதுவரையில் உலகத்தில் எந்த நாடும் பெரிதும் புரோகிதக் கூட்டத்தாரின் ஆதிக்கத்திலும், கடவுள் பிரச்சாரத்தின் பேரால் கவுரவமும், வயிற்றுப் பிழைப்பும் நடத்தி வந்தவர்களின் ஆதிக் கத்திலும் இருந்து வந்தாலும், உலகத்திலுள்ள அரசாங்கங் களும் மதத்துடனும், கடவுளுடனும் பிணைக்கப் பட்டே இருந்த தாலும் கடவுளை மறுக்கும் அபிப் பிராயத்திற்கோ கூட்டத்திற்கோ நாட்டில் ஆதரவு இல்லாமல் போனதோடு அவர் கள் மீது தோஷமும் கற்பிக்கப்பட்டு அந்த அபிப்பிராயம் வலுக்க முடியா மலும், பரவ முடியாமலும் போய்விட்டது. ஆனால் இந்த நூற்றாண்டில் கடவுள் மறுப்பு என்பது பாமர மக்களுக்குள் ஒருவித வெறுப்பும், அதிருப்தியும் தரக் கூடியதாயிருந்தாலும் மற்றும் கடவுள் பேரால் அல்லது கடவுள் சம்பந்தமான மோட்சம், சாஸ்திரம், கதை, புராணம், பிரச்சாரம் ஆகியவைகளின் பேரால் வாழ்வை ஏற்படுத்திக் கொண்டவர்களுக்கு மிகுதியும் ஆத்திரத்தைக்கொடுக்கக்கூடியதாயிருந்தாலும் நடுவு நிலையுள்ள அறிஞர்களால் இவ்விஷயம் ஆராய்ச்சி செய்யத் தொடங்கி ஆலோசிக்கப்பட்டு வருவதும் அவ்வித அபிப்பிராயக்காரர்களைப் பெரிதும் அறிவாளிகள் என்றும், ஞானவான்கள் என்றும் சொல்லுவதும் மதிப்பதுமாய் இருந்து வருகின்றன. மேல்நாட்டு அறிவாளிகள் என்று சொல்லப்படுபவர் களுக்குள் இன்றும் அநேகர்கள் நாஸ்திகர்களாகத் தான் இருந்து வருகிறார்கள். அது மாத்திரமல்லாமல் இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, ருஷியா, சைனா முதலாகிய இடங்களின் முக்கிய பட்டணங்களில் கடவுளை நிலைப்படுத்தும் மதங்களை எதிர்க்கவும், நாஸ்திகத்தைப் பரப்பவும் என்றே பல ஸ்தாபனங்கள் ஏற்படுத்தப்பட்டு அவற்றிற்காக பத்திரிகைகள் துண்டுப் பிரசுரங்கள் முதலிய வைகள் செய்யப்பட்டும் வரு கின்றன.

குறிப்பாக அமெரிக்காவில் நியூயார்க் என்கின்ற பட்டணத்தில் நாஸ்திகத்தை உலகமெங்கும் வியாபிக்கச் செய்வதற்கான சங்கம் என்னும் பெயரால் ஒரு ஸ்தாப னத்தை ஏற்பாடு செய்து அதன் மூலம் 3, 4 வருஷங் களாக நல்ல வேலைகள் மும்முரமாய் செய்யப்பட்டு வருகின்றன. அங்கிருந்து நமக்கு அனுப்பப்பட்டிருக்கும் அறிக்கையின் படி அச்சங்கமானது பிரசாரத்திற்காகவும் துண்டு பிரசுர வினியோகத் திற்காகவும் வருஷம் ஒன்றுக்கு அய்ம்பது ஆயிரம் ரூபாய்க்கு மேலாகவே செலவு செய்து வந்திருக்கின்றது. இப்போது இந்த வருஷத்தில் கிறித்தவ மதம் வெடிப்புக் கண்டுவிட்டது என்கின்ற பேராலும் மதம் என்றால் என்ன? கடவுள் என்றால் என்ன? கடவுள் இல்லாத முற்போக்கு ஆகிய இவை போன்ற தலைப்புகளால் பல லட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் அச்சிட்டு வெளியாக்கப்பட்டிருப்பதாகக் காணப்படுகின்றது. சங்க அங்கத்தினர்கள் வருஷத்திற்கு வருஷம் 100-க்கு 50 வீதம் உயர்ந்து கொண்டு வருவதுடன் பல இடங்களில் கிளை ஸ்தாபனங்கள் ஏற்பட்டு வெளிநாடுகளிலும் கூட பிரசாரங்கள் செய்யப்பட்டு வருவதாய்க் காணப்படுகின்றது. வேறு பாஷைகள் மூலமும் சைனா முதலிய இடங்களுக்கு ஆட்களை அனுப்பி இது போன்ற பிரச்சாரமும் துண்டுப் பிரசுரங்களும் நடைபெற்று வந்திருப்பதாகவும் காணப்படுவதோடு ஒவ்வொரு கனவான் ஒவ்வொரு வேலையை ஏற்றுக் கொண்டு திருப்தி தரத்தக்க அளவு பிரச்சாரம்செய்திருப்பதாயும்காணப்படுகின்றது.இதன் தலைமை காரியஸ்தலம் அமெரிக்க நியூயார்க் பட்டணத்தில் 14 வது வீதி 307 நெம்பர் கட்டடத்தில் நிறு வப்பட்டிருக்கின்றது. இதில் சேர விரும்பும் அங்கத்தினர்க்கு வருட சந்தா ஒரு டாலர் அல்லது மூன்று ரூபாயாகும் என்பதாகவும் காணப்படுகிறது.

இப்படியே லண்டன் பட்டணத்தில் சில ஸ்தா பனங்கள் அதாவது தாராள நினைப்புக்காரர்கள் சங்கம் என்றும், அறிவாளிகள் சங்கம் என்றும், உண்மை நாடுவோர் சங்கம் என்றும் பல சங்கங்கள் ஏற்படுத்தி அது போலவே பிரச்சாரமும் செய்யப்பட்டு வருகின்றன. இச்சங்கங்களில் சிலருக்கு வயது 40, 50-க்கு மேல் ஆகியிருந்தபோதிலும் அவைகள் இப்போதுதான் மிக்க பிரபலமாயும், செல்வாக்காயும் நடைபெற்று வருகின்றதாக அறிவிக்கப்படுகின்றன.

இவற்றில் கலந்துள்ள நபர்களில் உலகத்திலே மிக்க அறிவாளிகள் ராஜதந்திரிகள் என்று சொல்லப்பட்ட பெரியார்களே அதிகமாயிருக்கின்றார்கள். ஆகவே நாஸ் திகப் பிரச்சாரம் உலகில் சகஜமாகவும் செல்வாக்காகவும் நடைபெறுகின்றனஎன்பதைதெரிவிக்கவேஇவற்றை மேற்கோள்களாக குறிப்பிட்டோம். இனி அதனால் ஏற்படும் கெடுதி என்ன? நன்மை என்ன? என்ப வைகளைப் பற்றி யோசிப்போம். சாதாரணமாக மனிதன் நாஸ்தி கனாயிருந்தால் அதாவது கடவுள் நம்பிக்கை இல்லாத வனாயிருந்தால் ஒரு கட்டுப்பாட்டிற்கு அடங்கி நடக்கமாட்டான் என்றும் திருட்டு, பொய், மோசம். ஒருவன் சொத்தை ஒருவன் அபகரித்தல், முறை தவறி கலத்தல் மக்களை இம்சித்தல் முதலாகிய காரியங்கள் செய்யப்படமாட்டார்கள் என்றும் சொல்லப்படுகின்றது. இதைப்பற்றி கவனிக்குமுன்பு உண்மையான கருத் தில் இந்த கடவுள் நம்பிக்கை உள்ள மனிதன் எவ னாவது உலகில் இருக்கின்றானா என்பதை முதலில் யோசிப்போம்.

சாதாணமாக கடவுள் என்கின்ற பதத்திற்கு மக்களில் பெரும்பான்மையோர்கள் கருதிக் கொண்டிருக்கும் கருத்து என்ன வெனில் சர்வசக்தியும் அதாவது உலகம் உலகத்திலுள்ள ஜீவராசிகள், புல் பூண்டு தாவரங்கள் முதலிய யாவும் தனது இச்சையால் உண்டாக்கப்பட்டு தனது சக்தியால் இயங்கச் செய்யப்படுகின்றதானதும் எங்கும் வியாபித்திருப்பதானதும் சர்வ ஜீவராசிகளையும் ரட்சிக்கும் தன்மையுடையதானதும் எல்லாவற்றையும் சமமாய்ப் பார்ப்பதானதும் சுருக்கமாய் சொல்வதனால் அவனன்றி (அக்கடவுள் சித்தம் அன்றியில்) ஓர் அணு வும் அசையாததான சக்தியுடைய தானது என்பதாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இக் கருத்து சரியா, தப்பா என்று யோசிப்பதற்கு முன்னும் இப்படி ஒரு வஸ்த்து இருக்கின்றதா இல்லையா என்று முடிவு செய்வதற்கு முன்னும் இப்படி மக்கள் எண்ணிக் கொண்டிருப்பதானது உலகத்திற்கு நன்மையா? தீமையா? என்று முடிவு செய்வதற்கு முன்னும் இந்தப்படி உலகத்தில் எந்த மனிதனாவது உண்மையில் நம்பி இருக்கின்றானா? அந்தப்படி நம்பி இருப்பதற்குத் தகுந்தபடி அவனது மனம், மெய், மொழி ஆகியவைகளால் ஏற்படும் நடவடிக்கைகள் காணப்படுகின்றனவா? அதாவது எந்த மனிதனுடைய நடவடிக்கையில் இருந் தாவது மேல்கண்ட சக்தியும், குணமும் கொண்ட ஒரு வஸ்துவை நம்பி நடக்கின்ற மனிதனின் நடவடிக்கைகள் இவை என்று கருதும்படியாக இருக்கின்றனவா? என்பதை யோசிப்போமானால் இதுவரை ஒரு மனிதனையாவது அம்மாதிரி நம்பிக்கையின் மீது நடக்கின்றான் என்பதாகக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அந்தப்படி ஒரு கடவுள் இருப்பதாக ஒரு மனிதன் கூட தனது வாழ்க்கையில் எண்ணி இருக்க முடிவதில்லை என்றும்தான் சொல்ல வேண்டி இருக்கின்றதே தவிர வேறில்லை என்று உறுதியாகச் சொல்லலாம்.

இது அதாவது இப்படிச் சொல்லுவதானது சாதாரண மக்களிடையே மாத்திரமல்லாமல் கடவுள் பிரச்சாரம் செய்பவர்களிலாவது கடவுளைக் கண்டவர்களாக சொல்லப்பட்டவர்களிலாவது கடவுளுக்குச் சமமாகக் கருதும் சமயாச்சாரிகள், மதத்தைக் காப்பாற்றும் ஸ்தாபனத் தலைவர்கள் முதலாகியவர்களுக்குள்ளாவது நாஸ் திகத்தைக் கண்டு பயந்து நடு நடுங்கித் துயரப்பட்டு கண்ணீர் வடிக்கும் ஆத்திகப் பண்டிதர்கள், சாஸ்திரிகள், வைதீகர்கள் முதலாகியவர்களுக்குள்ளாவது மற்றும் மகாத்மாக்கள், வேதாந்திகள், பெரியோர்கள் முதலியவர்களுக்குள்ளாவது இதுவரை ஒருவராவது இருந்த தாகவோ, இருப்பதாகவோ சொல்லுவதற்கில்லையே.

ஒவ்வொரு மனிதனும் தன்னை ஒரு தனி மனித னென்றும் தனக்காகத் தான் செய்யவேண்டிய காரியம் பல உண்டு என்றும் அவற்றைத் தினமும் செய்வதாகவும், அவனவன் இஷ்டப்பட்டபடி செய்து கொண்டும் அதனதன் பலனை அடைந்து கொண்டும், அது போலவே மற்றவர்களையும் செய்யும் படி தூண்டிக்கொண்டும் மற்றவர்கள் செய்வதில் குண தோஷம் கற்பித்துச் சொல்லிக் கொண்டும், அதற்காக விருப்பு வெறுப்புக் காட்டிக் கொண்டும், மகிழ்ச்சி துக்கமடைந்து கொண்டும் தான் இருக்கிறானே ஒழிய கடவுளின் சர்வ சக்தியைப் பற்றியோ, சர்வ வியா பகத்தைப் பற்றியோ, சர்வ தயாபரத்தைப் பற்றியோ, சர்வ சமத்துவத்தைப் பற்றியோ நம்பிஇருப்பவன் ஒருவனும் இல்லை யென்று தான் சொல்ல வேண்டும்.

ஆகவே இதிலிருந்து அப்படிப்பட்ட ஒரு வஸ்த்து இல்லை என்றும் இருப்பதாகவும் யாரும் நம்பி இருக்க வில்லை என்றும்தான் முடிவு கட்ட வேண்டியிருக்கின்ற தென்பது ஒரு பக்கமிருந்தாலும் அப்படி ஒன்று இருப்பதாக கற்பித்து நம்பச் செய்வதினாலாகிலும் காரியத்தில் ஏதாவது, அதாவது கடவுள் நம்பிக்கையினால் ஏற்படக் கூடும் என்று கருதுகின்ற, முன் சொன்ன காரியங்களாவது நடக் கின்றதா என்று பார்த்தால் திருடாதவன், பொய் சொல்லாதவன், பிறர் பொருளை வஞ்சிக்காதவன் முறை தவறி கலவி செய்யாதவன், பிறருக்கு இம்சை கொடுக்காதவன் முதலான காரியங்கள் செய்யாதவன் என்பவன் ஒருவனைக்கூட காணமுடிவதில்லை என்று தான் சொல்ல வேண்டியிருக்கின்றது. அன்றியும் திருட்டு, வஞ்சகம், பொய், முறை தவறி கலத்தல் முத லாகிய காரியங்கள் எவை என்று தீர்மானிப்பதே கஷ்டமான காரியமாயிருக்கின்றது என்றாலும் மக்கள் எதை எதை மேல் கண்ட மாதிரிகுணங்கள் என்று கருதுகின்றார்களோ அதைச் செய்யாமல் இருக்க இந்த எண்ணத்தையும் நம்பிக்கையும் உண்டாக்குவதாலோ நிலை நிறுத்துவதாலோ முடிகின்றதா? என்பதுதான் இங்கு யோசிக்கத் தக்கதாகும்.

இது ஒரு புறமிருக்க, மேல்கண்ட அதாவது கடவுள் என்பதற்குக் கற்பிக்கப்பட்ட குணங்கள் உடையதான ஒரு கடவுள் என்பது இல்லை என்றும், அல்லது இருக்கமுடியாது என்றும் கருது கின்றவர்களிடத்திலாவது அந்தப்படி கருதிக் கொண்டிருக்கின்றார்கள் என்று பிறரால் கருதப் படுகின்றவர்களிடத்திலாவது முன் சொல்லப்பட்ட திருட்டுப் பொய் வஞ்சகம் பிறரை இம்சிப்பது முதலிய குணங்கள் கடவுள் நம்பிக்கைக்காரர்களைவிட (ஆத்திகர்களைவிட) அதிகமாய் இருப்பதாகவாவது, அல்லது பிற மக்களுக்கு ஆத்திகர்களைப் போன்ற நன்மை செய்யவில்லை என்றாவது சொல்ல முடியுமா என்று பார்த்தால் அதுவும் முடியாத காரியமாய்த்தான் காணப்படுகின்றதே ஒழிய வேறில்லை.

மக்களில் பலருக்கு ஆராய்ச்சி முயற்சியும், பகுத்தறிவும் இல்லாத காரணத்தால் கடவுள் என்னும் விஷயத்தில் மேல்கண்ட விதமான காரியங்களைப் பற்றியெல்லாம் யோசனை செய்து பார்ப்பதை விட்டு விட்டு தனக்கே புரியாத படி ஒன்றை நினைத்துக் கொண்டு கடவுள் உண்டா? இல்லையா? என்று கேட்பதும்,

கடவுளை ஒப்புக் கொள்ளுகிறாயா இல்லையா என்று கேட்பதும்,

கடவுள் இல்லாமலிருந்தால் மக்களில் ஒருவருக் கொருவர் ஏன் வித்தியாசமாயிருக்க வேண்டும்?

ஒருவர் பணக்காரனாகவும் ஒருவர் ஏழையாகவும் ஏன் இருக்க வேண்டும்?

ஒருவர் கூன், குருடு, நொண்டி, குஷ்டரோகி முதலிய வனாயும், ஒருவன் நல்ல திட சரீரியாகவும் ஏன் இருக்க வேண்டும்?

ஒருவனுக்கு ஏன் பத்துப் பிள்ளை? ஒருவனுக்கு ஏன் நாலு பிள்ளை? ஒருவனுக்கு ஏன் பிள்ளை இல்லை? என்றும் இருவர் ஒரே காலத்தில் தனித்தனியாக வியாபாரம் ஆரம்பித்தால் ஒருவர் நஷ்டமும், ஒருவர் லாபமும் ஏன் அடையவேண்டும்? என்பது போன்ற கேள்விகள் கேட்டு அதன் மூலம் மேல்கண்ட குணங்கள் கொண்ட கடவுள் என்பதாக ஒன்று உண்டு என்று மெய்ப்பிக்க முயற்சி செய்கிறார்கள். இம்மாதிரி கேள்விக்காரர்களைப் பகுத்தறிவு இல்லாதவர்கள் ஆராய்ச்சி சக்தி இல்லாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டுமே தவிர வேறு ஒன்றும் சொல்லமுடியவில்லை.

இப்படிப்பட்ட கேள்வி கேட்பவர்களை ஒரே ஒரு பதிலால் வாயை அடைக்க வேண்டுமானால் இம்மாதிரியாக தோற்றங்களில் ஒன்றுக்கொன்று வித்தியாசங்கள் காணப்படுவதாலேயே (மேல் கண்ட குணமுடைய) கடவுள் என்பதாக ஒன்று இல்லையென்று சொல்லி விடலாம்.

எப்படியெனில் சர்வசக்தியுடைய கடவுள் ஒருவர் இருந்து சர்வத்திலும் புகுந்து சர்வத்தையும் ஒன்று போலப் பார்ப்பவராயிருந்தால் சர்வத்தையும் ஒன்று போலவே சிருஷ்டித்திருக்கலாமல்லவா? வேறு வேறாகக் காணப்படுவதாலேயே சர்வசக்தியும் சர்வ வியாபகமும், சமத்துவமும் கொண்ட கடவுள் என்பதாக ஒன்று இல்லை என்பதுதான் பதிலாகும்.

ஏனெனில், நொண்டிக்கும், முடவனுக்கும், நல்ல வனுக்கும், கஷ்டப்படுபவனுக்கும், கஷ்டப்படுத்துகிற வனுக்கும் கடவுளே காரணதனாயிருந்தால் கடவுளை சர்வதயாபரத்துவமுடையவனென்றும் பாரபட்ச மில்லாத சர்வசமத்துவ குணமுடையவனென்றும் எப்படிச் சொல்லமுடியும்? இந்தப்படி பகுத்தறிவைக் கொண்டு சொல்லக்கூடிய சமாதானங்கள் ஒருபுற மிருக்க ஆராய்ச்சியைக் கொண்டு அறியக்கூடிய சமாதானங்களைப் பற்றி சற்று கவனிப்போம். ஒரே கையால் கை நிறைய அரிசியை அள்ளி அள்ளி வேறாய் வைத்து ஒவ்வொரு தடவை அள்ளி அரிசியைத் தனித்தனியாய் எண்ணிப்பார்த்தால் அவற்றுள் ஒன்றுக்கொன்று எண்ணிக்கை வித்தியாசமிருப்பானேன்? அதே மனிதன் அதே கையால் அதே நிமிஷத்தில் அதே குவியலிலிருந்து அள்ளினவைகள் ஏன் வித்தியாசப்படுகின்றது? ஒரே பூமியில், ஒரே வினாடியில் விதைக்கும் ஒரே மாதிரி விதைகள் சில முளைத்தும், சில முளைக்காமலும் முளைத்தனவைகளில் சில வளராமல் கூளையாகவும், சில அதிக உயரமாகவும், சில அதிகமான மணிகள் கொண்ட கதிராகவும் சில குறைவான மணிகள் (தானியங்கள்) கொண்ட கதிராகவும், சில முளைத்து நன்றாய் தளைத்தும் ஒரு மணி கூட இல்லாத வெறும் கதிராகவும் இருக்கக் காரணம் என்ன? ஒருவினாடியில் ஒருபூமியில் நட்ட செடிகள் ஒன்று பல கிளைகளுடனும், ஒன்று சுவல்ப்ப கிளைகளுடன் வளருவதும் ஒன்று பதினாயிரக்கணக்காக காய்ப்பதும், ஒன்று நூற்றுக்கணக்காக காய்ப்பதும், ஒன்று பூ விட்டு எல்லாம் கருகி உதிர்ந்து விடுவதும், ஒன்று பூ விடாமலும் பிஞ்சு விடாமலும் வறடாயிருப்பதும் என்ன காரணம்? கடவுள் ஒருவர் இருந்தால் இவைகள் எல்லாம் அதனதன் இனத்தில் ஏன் ஒன்றுபோல் இருக்கக் கூடாது?

ஒரு சமயம் கடவுளே இந்தப்படி செய்திருப்பார் என்று சொல்வதானால் அம்மரம் செடி தானியம் முதலியனவைகள் இப்படி பலன் அடைவதற்குக் காரணம் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு என்ன சமாதானமோ அதுதான் மனிதர்களைப் பற்றிய சம்பந்தமான கேள்விகளுக்கும் சமாதானம் என்பது தானாகவே புலப்படும்.

- ‘குடிஅரசு‘ -  தலையங்கம் - 28.09.1930

- விடுதலை நாளேடு 2.2.20

புதன், 19 பிப்ரவரி, 2020

புத்த மதமும், சுயமரியாதையும் (2)

29.03.1931 - குடி அரசிலிருந்து....

சென்றவாரத் தொடர்ச்சி

ஆதலால் புத்த மதந்தான் சுயமரியாதை இயக்கமென்று யாரும் சொல்லக்கூடாது என்று சொல்லுகிறேன்.

ஏன் என்றால் உதாரணமாக புத்த மதத்திற்குக் கடவுள் இல்லை, ஆத்மா இல்லை, நித்யமொன்று மில்லை என்கின்ற கொள்கை இருக்கின்றது என்று சொல்லுகின்றார்கள்.

இது புத்தரால் சொல்லப்பட்டது என்றும் சொல்லுகின்றார்கள்.  இதை உண்மை என்றே வைத்துக் கொள்ளுவோம்.  இந்தக் கொள் ளைகள் புத்தர் சொன்னார் என்பதற்காக தங்கள் புத்திக்குப் பட்டாலும், படாவிட்டாலும் பவுத்தர்கள் என்கின்றவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டியவர் களாகின் றார்கள்.

இப்படியேதான் மற்ற மதக்காரர்களும் இந்துக்களோ, மகமதியர்களோ, கிறிஸ்தவர் களோ கடவுள் உண்டு.

ஆத்மா உண்டு நித்தியப் பொருள் உண்டு மனிதன் இறந்த பிறகு கடவுளால் விசாரிக்கப் பட்டு அதன் செய்கைக்குத் தகுந்தபடி மோட்சம், நரகம், சன்மானம், தண்டனை ஆகியவைகள் கடவுளால் கொடுக் கப்படுவது உண்டு என்பன போன்ற பல விஷயங்களை நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.  இந்த நம்பிக்கைகளுக்குக் காரணம் தங்களுக்கு முன்னேயே யாரோ ஒருவர் சொன்னதாக ஏதோ ஒன்றில் இருப்பதைப் பார்த்து நம்பிக் கொண்டு இருக்கின்றார்கள்.  இவை உண்மை என்றே வைத்துக் கொள்ளுவோம்.  இந்த இரண்டு கூட்டத்தார்களும் தங்கள் தங்கள் அபிப்பிராயங்களைத் தங்கள் தங்கள் பகுத்தறிவு, ஆராய்ச்சி, யுக்தி, அனுபவம், ஆகியவைகள் காரணமாகக் கொண்டிருக்கின் றார்கள் என்று ஏற்படுவதனால் இருதிறத் தாரும் சுயமரியாதை இயக்கக்காரர்களேயா வார்கள்.

ஏனெனில் கண் மூடித்தனமாய் முன்னோர் வாக்கு என்பதாக அல்லாமல் தங்கள் தங்கள் அறிவு ஆராய்ச்சியின் பயனாய் ஏற்பட்ட அபிப்பிராயம் என்று சொல்லுகின்றவர் களாய் இருக்கின்றார்கள்.  ஆதலால் அவர்கள் சுயமரியாதைக்காரர்கள் ஆகின்றார்கள்.

உதாரணமாக புத்த மதஸ்தன் என்று சொல்லிக் கொள்ளுகின்ற ஒருவன் தனக்குக் கடவுள் இல்லை  என்றும், ஆத்மா இல்லை என்றும். வாயால் சொல்லிக்கொண்டு காரண காரியங்களுக்கு ஆதாரம் என்ன என்பதை அறியாமல் சந்தேகப்பட்டுக் கொண்டு இருப்பானானால் அவன் தன்னை புத்த மதஸ்தன் என்று சொல்லிக் கொள்ள முடியவே முடியாது.  அதுபோலவே ஒரு இந்துவோ, இஸ்லாமானவரோ, கிறிஸ்தவரோ கடவுள் உண்டு என்கின்ற மதக்காரராக இருந்து கொண்டு நடப்பில் தங்கள் காரியங்களுக்கும், அதன் பயனுக்கும் தங்களைப் பொறுப்பாக்கிக்கொண்டு தங்கள் காரியங் களுக்குப் பின்னால் பயன் உண்டு என்கின்ற கொள்கையையும் நம்பிக்கொண்டு அதற்குச் சிறிதும் கட்டுப்படாமல் நடந்து கொண்டும் இருக்கின்ற ஒருவன் தன்னை கடவுள் நம்பிக்கைகாரன் என்றும், தனது ஆத்மா தண்டனையும், சன்மானத்தையும் அடையக் கூடியது என்றும் நம்பிக்கொண்டு இருக்கின் றவர்களாக மாட்டார்கள்.  ஆதலால் இந்த இரண்டு கூட்டத்தார்களும் சுயமரியாதைக் காரர்கள் அல்லர் என்று தான் சொல்லுவேன்.

ஏனெனில் அவர்களுடைய அறிவுக்கும், அனுபவத்திற்கும், விரோதமான நம்பிக்கையை உடையவர்களாக இருக்கின்றார்கள்.  ஆத லால், இவ்விரு கூட்டத்தாரிலும் சுயமரி யாதைக் காரர்கள் என்பவர்கள் தங்களுக்குத் தோன்றியவைகளும்.  தாங்கள் கண்ட உண் மைகளும் முன்னோர் கூற்றுக்கு ஒத்திருந்தால் மாத்திரம் முன்னோர் கூற்றும் ஆதரவாக எடுத்துக்கொள்ள பாத்திரமுடைய வர்களா வார்கள்.

அப்படிக்கில்லாமல் முன்னோர் கூற்றுக்குத் தான்கூட உண்மையை பொருத் துகின்றவர்களும் அல்லது அதற்கு ஆதரவாகத் தங்களது உண்மை இருக்கின்றது என்று கருதுகின்றவர்களும் சுயம ரியாதைக் காரராக மாட்டார்கள்.

ஆகையால் நீங்கள் எப்படிப்பட்ட கொள் கையை உடையவர்களாக இருந்தாலும் அதில் எவ்வளவு உண்மை இருப்பதாகயிருந்தாலும் அதை நீங்கள் பிரத்தியட்சத்தில் தெளிவுப் படுத்திக் கொண்டீர்களா? அனுபவத்தில் சரிப்பட்டு வருகின்றதா? என்பதைப் பூரண மாய் அறிந்து கொண்டவர்கள் என்பதை பொறுத்தும், அவை உங்களுடைய சொந்த அபிப்பிராயத்தின் மீது நம்புகின்றீர்களா? அல்லது அந்தந்த கொள்கையுடைய மதத் தலைவர்கள் சொன்னதற்காக நம்பிக்கொண் டிருக்கிறீர்களா? என்பதைப் பொறுத் துமேதான் உங்கள் மதத்திற்கோ, கொள்கைக் கோ மதிப்பு கிடைக்கும். அப்படியில்லாமல் ஒருவன் தன்னை இந்து என்றோ, கிறிஸ்தவர் என்றோ, மகமதியர் என்றோ, பௌத்தர் என்றோ சொல்லிக்கொள்ளுகின்றவர் ஒரு நாளும் சுயமரியாதைக் காரராக மாட்டார்.

ஏனெனில், ஒரு குறிப்பிட்ட மதத்துக்காக ஒரு கொள்கையை ஏற்றுக் கொண்டி ருக் கிறார். என்பதோடு அது தன்னுடைய நடைமுறைக்குப் பிரத்தியட்ச அனுபவத்திற்கு ஒத்து வராதிருந்தும் அக்கொள்கைக்காரன் காரணக்காரியங்கள் அறிய முடியாமல் இருந்தும் அவற்றையுடைய ஒரு மதத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டிருப்பது என் பது சிறிதும் ஒப்புக் கொள்ள முடியாததாகும்.

(சென்னை மவுண்ட்ரோட்டில் உள்ள தென் இந்திய புத்தமத சங்கத்தில் 22.03.1931 அன்று ஆற்றிய சொற் பொழிவு)

-  விடுதலை நாளேடு, 31.1.20

இந்து மதம்

07.06.1931 குடிஅரசிலிருந்து...

இந்து மதம், இஸ்லாமானவர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் கொள்கையில் எவ்வளவு கெடுதியோ அதைவிடப் பல மடங்கான கெடுதிகளை பார்ப்பனரல்லாத மக்களுக்கு  காரியத்தில் விளைவிக்கின்றது.  அதைவிடப் பன்மடங்கே தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் விளைவிக்கின்றது. இஸ்லாம் ஆனவர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இந்து மதத்தால் யாதொரு கெடுதியும் இல்லை என்று சொல்லலாம்.

இஸ்லாமியரையும், கிறிஸ்தவரையும். இந்துக்கள் வேறாகக் கருதுகின்றார்கள்.  தங்கள் சமுகத்திற்கு எதிராய் கருதுகின்றார்கள் என்பதைத் தவிர வேறில்லை.  பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பயனாய் அவர்கள் பார்ப்பனரொழிந்த இந்துக்களைவிட சற்று அதிகமாக நிலையில் லாபமே அடைந்திருக்கிறார்கள்.

ஆனால், இந்துமதம் காரணமாக பார்ப்பனரல்லாதாரும் தீண்டாதாரும் இழிவாய் நடத்தப்படுவதுடன் சுயமரியாதை இல்லாத முறையிலும், சுதந்திரமில்லாமலும் நடத்தப் படுகிறார்கள்.

மேலும் இவர்களைப் பார்ப்பனர்கள் அடிமையாக்கிக் கொண்டும், இவர்களது கஷ்டத்தின் பயன்களை அனுபவித்துக் கொண்டும் இவர்களைத் (பார்ப்பனரல்லாதாரையும், தீண்டாதாரையும்) தலையெடுக்கச் செய்யாமலும் செய்து வருகிறார்கள்.

இந்து மதம் என்பதாக ஒன்று இருப்பது இஸ்லாமானவர்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் மற்றொரு விதத்தில் லாபகரமான தென்றே சொல்லலாம். எப்படியெனில் மேற்கண்ட இரண்டு மதமும் இரண்டு சமுக எண்ணிக்கையிலும் பெருக்க மேற்படுவதற்கு இந்து மதமே காரணமாயிருக்கின்றது.  இந்தியாவில் இந்து மதமில்லாமல் வேறு புத்த மதம், கிறிஸ்து மதம் ஆகியவை இருந்திருந்தால் இஸ்லாம் மதம் சமுக எண்ணிக்கை இவ்வளவு பெருகி இருக்காது.

அதுபோலவே, வேறு மதங்கள் இருந்திருந்தால் கிறிஸ்து மத சமுக எண்ணிகையும் இவ்வளவு பெருகி இருக்காது.  ஆகவே அவ்விஷயத்தில் இந்து மதம்  இருப்பது முஸ்லீம், கிறிஸ்தவ மதங்களுக்கு லாபமேயாகும்.

ஆகையால், இந்து மதத்தை ஒழிக்க வேண்டியதென்பது இந்திய பார்ப்பனரல்லாத மக்களுக்கும், அவர்களில் தீண்டப்படாதார் என்கின்ற மக்களுக்கும் தான் மிகவும் அவசியமானது என்று சொல்லுவோம்.

இதோடு ஏழைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் கூட சமத்துவமும், பொது உடைமை தத்துவமும் ஏற்பட வேண்டுமானால் முதலில் இந்து மதம் ஒழிய வேண்டியது மிகவும் அவசியமாகும்.

-  விடுதலை நாளேடு, 31.1.20

'பெரியார்' தெலுங்கு திரைப்படம்

https://www.facebook.com/groups/1746811402246167/permalink/2530947517165881/

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

கடவுள் - மத குழப்பம்

23.01.1938 அன்று ஆய்க்கவுண்டன் பாளையத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மதம், கடவுள் என்னும் தலைப்பில் தந்தை பெரியார் ஆற்றிய உரை

சிறிய பட்டிக்காடாகிய இங்கு நாலாயிரத்துக்கு மேற்பட்டவர் கூடியுள்ள இப்பொதுக்கூட்டத்தைக் காணும் போது நான் உண்மையிலேயே சந்தோஷமடைகிறேன்.  பெரிய பட்டணங்களில் சாதாரணமாக கூடும் அளவைவிட இது இரண்டு மூன்று பங்கு அதிகமாகவே இருக்கிறது.  நானோ விஷமிகளால் எவ்வளவோ தூற்றப்பட்டு-ஜாதி இழந்தவனெனவும், தேசத்துரோகியெனவும், நாஸ்திகனெனவும், அரசியலில் பிற்போக்கானவன் என்று தூற்றப்பட்டு வந்தும், அப்படிப்பட்ட என் பிரசங்கத்தைக் கேட்க இந்த 100 வீடுள்ள கிராமத்தில் 10, 20 மைல் தூரத்திலிருந்து 4000 பேர்கள் இவ்வளவு திரளான மக்கள் கூடியிருக்கும் இக்காட்சியை என் எதிரிகள் வந்து காண வேண்டுமென ஆசைப்படுகிறேன்,  விஷமப் பத்திரிகை ஆசிரியர்கள் பார்த்தால் அவர்கள் நெஞ்சு வெடித்துப் போகும் என்றே எண்ணுகிறேன்.

இந்த பிரமாண்டமான கூட்டத்தைப் பார்க்கும் போது, உண்மையிலேயே என்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் என் தொண்டை விரும்புபவர்களும், ஆதரிப்பவரும், ஏற்றுக்கொள்பவரும் இருக்கிறார்கள் என்பதும், என் தொண்டிற்கு நாட்டிலே இடமிருக்கிறது என்பதும், அந்தத் தொண்டை தொடர்ந்து செய்யும்படி மக்கள் எனக்குக் கட்டளை இடுகிறார்களென்றுமே எண்ணுகிறேன்.  உங்கள் வரவேற்புப் பத்திரத்துக்கு நன்றி செலுத்துகிறேன்.

வீண் விவாதத்தைக் கிளப்புகிறார்

இப்போது என்னை பேசும்படி கேட்டுக்கொண்டிருக்கும் விஷயம், கடவுள், மதம் என்பதாகும்.  வேறு எந்த விதமான பிரச்சாரகர் வந்தபோதிலும், எவ்வளவு பித்தலாட்டம் பேசும் பேர்வழிகள் வந்த போதிலும் இந்த விஷயங்களைபற்றி அவர்களை கேட்பதில்லை.  ஆனால் நாங்கள் செல்லுமிடங்களில் எங்களை கேட்கிறார்கள்.  நான் மதப்பிரசாரத்தை ஒரு தொழிலாகவே சீவன மார்க்கராகவோ கொண்டவனுமல்ல அல்லது கடவுளைப் பற்றிய விவாதத்தைப் பற்றியே பேசிக் காலந்தள்ளி வருபவனுமல்ல.  எங்களுடைய வேறு முக்கியமான-நாட்டிற்கும் மனித சமூகத்துக்கும் தேவையான தொண்டுகளைச் செய்து வரும் போது, அதனால் பாதகமடையும் எங்கள் எதிரிகள் பாமர மக்களிடையில் இந்த இரு விஷயங்களையும் கிளப்பி விட்டு அவர்களைக் கொண்டு கேள்விகள் கேட்கச் செய்து இவைகளைப் பற்றிப் பேச வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு எங்களை கொண்டு வந்து விடுகிறார்கள்.  எப்படி இருந்தபோதிலும் எங்கள் அபிப்பிராயத்தைச் சொல்லத் தடையில்லை.

கடவுள் - மத கற்பனை

மனித சமூகத்திலே எங்கு பார்த்தாலும் கடவுள், மத உணர்ச்சி இருந்து வருவதை நான் ஒப்புக் கொள்கிறேன்.  ஆனால் சமூக வாழ்விற்கு இந்தக் கடவுள் மதங்கள் அல்லாமல்- தேவை இல்லாமல் இயற்கையே பெரிதும் படிப்பினையாகவும் மனிதனை நடத்துவதாகவும் இருந்து வருகிறது.  காலதேச வர்த்தமானத்திற்கு ஏற்றபடியும், அவனது அனுபவம் அவசியம் ஆகியவைகட்கு ஏற்றபடியும் சமூக வாழ்வின் சவுகரியங்களை மனிதன் அமைத்துக் கொள்கிறான்.  இக்காரியங்களுக்குக் கடவுள் மத தத்துவங்களைப்பற்றியோ அவைகளைப் பற்றிய கற்பனைகளைப் பற்றியோ மனிதன் சிந்திப்பதில்லை, சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதுமில்லை. ஆனால், பயமும் சந்தேகமும் பேராசையும் பழக்க வழக்கங்களும் மற்றவர்களின் படிப்பினைகளும் சுற்றுப்புறமும் மனிதனுக்கு கடவுள் மத உணர்ச்சியை உண்டாக்கிவிடுகின்றன. அவை எப்படி இருந்த போதிலும் எங்களுக்கு அவைகளைப் பற்றி கவலை இல்லை, அந்த ஆராய்ச்சியிலும் நாங்கள் சிறிதும் காலத்தையோ புத்தியையோ செலவழிப்பதில்லை. ஆனால், மனித சமூகத்துக்கு தேவையான தொண்டு என்று நாங்கள் கருதிவரும் தொண்டுகளைச் செய்து வரும் போது மனித சமூக சுதந்திர-சுகவாழ்வுக்கு பிறவியிலேயே எதிரிகளாக உள்ள புரோகிதக் கூட்டத்தார்-மதத்தின் பேரால் கடவுள் பேரால் தங்கள் வாழ்க்கையை நிச்சயித்துக் கொண்ட சோம்பேறி மக்கள் எங்கள் தொண்டிற்கு-கொள்கைகளுக்கு சமாதானம் சொல்லி எதிர்த்து நிற்க சக்தியற்ற கோழைகள் கடவுளையும் மதத்தையும் பற்றிக் குழப்பமாய் பேசி அவைகளைக் குறுக்கேகொண்டு வந்து போட்டு விடுகிறார்கள்.

மதம்

உதாரணமாக, மனித சமூகத்தில் பிறவியில் உயர்வு தாழ்வு, ஜாதி பேதம் ஒழிந்து, ஆண்டான் அடிமை தன்மைமாறி ஆணும்பெண்ணும் சகல துறைகளிலும் சம சுதந்திரத்துடன் வாழவேண்டுமென்று நாங்கள் சொன்னால், தீண்டாமையும் ஜாதிபேதமும் ஒழித்தால் தமது உயர்வும் தமது பிழைப்பும் கெடுமென்றெண்ணி, பாடுபடாது, உழைக்காது வாழ்ந்து வரும் பார்ப்பனர்கள் மதம், வேதம், சாஸ்திரம், புராணமாகியவைகளை கொண்டுவந்து குறுக்கேபோட்டு, எங்களைத் தடைப்படுத்தும் போது அவை எவையாயினும் மனித சமூக ஒற்றுமைக்கும் சமத்துவத்துக்கும் சுதந்தர வாழ்வுக்கும் கேடு செய்வதாக இருந்தால் அவற்றைக் கொளுத்தி ஒழிக்கவேண்டுமெனக் கூறுகிறோம். தீண்டாமையை மேல்ஜாதிக்காரர்கள் என்னும் பார்ப்பனர்கள் மதத்துடன் சேர்த்துக் கட்டிப் பிணைத்து இருப்பதாலேயே தான் நாங்கள், தீண்டாமை ஒழிய வேண்டுமென்றால் அந்த மதம் ஒழிந்துதான் ஆகவேண்டும் என்கிறோம்.  தீண்டாமையை அசைக்கும் போது அதோடு பிணைத்த மதமும் ஆடுகிறது.  அப்போது, மதம், நரகம், மோட்சம் முதலிய பல கற்பனைகளை வெகு நாட்களாக ஊட்டிவந்த பாமர மக்களிடம் உடனே, பார்ப்பனர்கள் சென்று, 'மதம் போச்சுது மதம் போச்சுது' என்று விஷமப் பிரச்சாரம் செய்து, எங்களை மதத் துரோகி என தூற்றிட அவர்களால் சுலபமாக முடிகிறது.

"கடவுளைப்பற்றிய தத்துவங்களையே எடுத்துக் கொண்டு பார்ப்போம். அதுவும் இப்படித்தான்.  அதாவது கடவுளைப் பற்றி விளக்க இதுவரை, எத்தனையோ ஆத்ம ஞானிகள் சித்தர்கள், முத்தர்கள் என்போரும் நாயன்மார்கள், ஆழ்வார்கள் அவதாரங்கள், கடவுள்களால் அனுப்பப்பட்டவர்கள் என்பவர்கள் எவ்வளவோ அரும்பாடுபட்டிருக்கின்றனர்,  ஆனால் முடிந்ததா? முடிவு  இதுதான் எனச் சொல்லப்பட்டதா? அல்லது இவர்களைப் பின்பற்றியவர்களுக்கு ஆவது புரிந்ததா? புரியவைக்க முடிந்ததா?

"கடவுள் ஆதி இல்லாதது, அந்தமில்லாதது, உருவமில்லாதது, அது இல்லாதது, இது இல்லாதது, புரியப்பட்ட அறியப்பட்ட சங்கதி எதுவும் இல்லாதது" என அடுக்கிகொண்டே போய் அப்படிப்பட்ட ஒன்று இருப்பதாக அல்லது இருக்கும் என்பதாக அல்லது இருந்துதானே தீரவேண்டும் என்பதாக அல்லது இருக்கிறதாக எண்ணிக் கொண்டுதான் ஆக வேண்டும் என்பதாக சொல்லிவிடுகிறார்கள்.

இன்று இந்நாட்டினரால் மனித 'ஆத்மாவுக்கு' மீறிய ஒரு ஆத்மா உடையவர் என்று கருதி 'மகாத்மா' என்று சொல்லப்படுபவராகிய தோழர் காந்தியார் 'சத்தியம் தான் கடவுள்' என்கிறார்!

சைவசமயிகள் (அன்பே சிவம்) 'அன்பு தான் கடவுள்' என்கின்றனர்.

இராமலிங்க சுவாமிகள் என்று சொல்லப்பட்ட வள்ளலார் பெரிய அறிவுதான் கடவுள் (அறிவே தெய்வமே) எனக்கூறினதுடனன்றி, ஜாதி, சமயம், மோட்சம், நரகம், மோட்ச நரகங்களைக் கொடுக்கும் கடவுள் ஆகியவைகள் எல்லாம் வெறும் பித்தலாட்டங்களென பச்சையாகச் சொல்லிவிட்டார். தோழர்களே! உங்களை ஆஸ்திகர்களை நான் கேட்கிறேன் இவர்கள் எல்லாம் நாஸ்திகர்களா?

ஒரு மனிதன் கடவுள் உண்டா இல்லையா என்ற விஷயத்திலே கவலை செலுத்தாது, அதை அறிவதற்கு மெனக்கெட்டு குழப்பமடையாது இருப்பதற்கு ஆகவே மனித வாழ்வுக்கு நன்மையும் அவசியமுமான காரியங்கள் குணங்கள் எவை எவையோ அவைகளைத்தான் கடவுள் எனப் பெரியார்கள் சொன்னார்கள்.  இதை பார்த்தாவது மனிதனுக்கு அறிவு உண்மையுணர்ந்து பேசாமல் இருக்க வேண்டாமா? என்கிறேன். ஒரு மனிதன் அறிவுடையவனாகி உண்மையுடையவனாகி எவரிடம் அன்பு காட்டி மனம் வாக்கு காயங்களால் அவைகளைக் கொண்டு தொண்டு செய்து அவைகளின் படி நடப்பானேயானால் அவன் கடவுள் துரோகியாக கருதப்படுவானா ? என இங்கு ஆஸ்திகர்கள் யாரிருப்பினும் சொல்லட்டுமே என்று தான் கேட்கின்றேன்.  அன்பு அறிவு உண்மை தவிர வேறு கடவுள் ஒன்று இருந்தாலும் கூட அக்கடவுள் தன்னை இல்லை என்று சொன்ன தன்னை விழுந்து கும்பிடாததற்கும் அப்படிப்பட்டவனை  தண்டிப்பாரா என்று கேட்கிறேன். உண்மையில் யாரும் அறிய முடியாத ஒரு கடவுள் இருந்தால் அவரை அறிந்து அவருக்கே பக்தி செய்து வணங்கி வந்தவனைவிட கடவுளைப் பற்றி கவலைப்படாமல் கடவுளுக்குப் பக்தி செய்யாமல் அன்பு அறிவு உண்மை ஆகியவைகளுடன் நடந்து வந்தவனுக்கே தன் கருணை காட்டுவார் என்று உறுதி கூறுவேன்.  இந்த உணர்ச்சியினாலேயேதான் கடவுளைப் பற்றிய விவாதத்தில் இறங்கிக் காலங்கழிக்காமல் நான் மனித சமுதாயத்திற்கு என்னாலான தொண்டை  அறிவு, உண்மை, அன்பு ஆகியவைகளைக் கொண்டு செய்து வருகிறேன்.    நான் கூறின மேல்கண்ட தத்துவங்கள் மதத்தலைவர்கள், அதிலே நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் ஆகியவர்கள் வாக்கு ஆகும்.

மற்றும் சித்தர்களும், வேதாந்திகளும் உலகமும் தோற்றமும் எண்ணங்களும் மனிதனுட்பட எல்லாம் மாயை என்று சொல்லிவிட்டனர்.  ஆகவே ஒரு மனிதன் தன்னை நிஜ உரு என்று கருதி கடவுள் உண்டு என்று கண்டுபிடித்தாலும் முடிவு கொண்டாலும் அதுவும் மாய்கைதானே ஒழிய உண்மையாய் இருக்கஇடமில்லையே!

மகா அறிவாளியான சங்கராச்சாரியார் "அஹம் பிரம்மாம்சி  நானே கடவுள்" என்று கூறினார்.  அதற்காக சைவர்கள் அவரைத் தானே "கடவுளெனும் பாதகத்தவர்" என்று தண்டிப்பதுமுண்டு.

இதைப்போன்றே சுமார் 10 வருடங்களுக்கு முன்பு சைவர்களிடம் விவாதம் வந்த காலையில் சைவர்களுக்காக வக்காலத்து வாங்கிய சென்னை திரு.வி.கலியாண சுந்தர முதலியார் அவர்கள் கட்சியில் "இயற்கையே கடவுள்" எனக் கூறி விவாதத்தை முடித்துக் கொண்டார்.  அது கண்ட சைவர்கள் அவர்களைச் சீறவே பிறகு அவர், அழகே கடவுள் அழகு என்றால் முருகு; தமிழர் தெய்வம் முருகன் ஆதலால் கடவுள் என்றால் அழகுதான் வேறு கிடையாது. என்று சொல்லிவிட்டார். அதற்கேற்றாற் போல் அவர் அடிக்கடி "என் இயற்கை அன்னை என் இயற்கை கடவுள்" என்று பிரசங்கத்திலும் சொல்லுவார்.

இவை இப்படியிருக்க சிலர் உலக நடத்தையைப் பார்த்து அதற்கு விவரம் புரியாமல் "இதற்கு ஏதோ ஒரு சக்தி இருக்க வேண்டாமா" என்று கேட்கின்றனர்.  ஏதோ ஒரு சக்தி இருக்கட்டும்.  இருக்க வேண்டியவைகளை யெல்லாம் நாம் கண்டு விட்டோமா? இல்லாதவைகளையெல்லாம் உணர்ந்து முடிவு செய்து விட்டோமா? அதைப் பற்றிய விவாதமேன் நமக்கு? என்று தான் நான் கேட்கிறேன்.  மேலும் மனித சமுதாயம் ஒற்றுமையாக, ஒழுக்கத்துடன், சமத்துவத்துடன் வாழ சாந்தியாய் இருக்க ஏதாவது ஒருவிதமான கடவுள் உணர்ச்சி மனிதனுக்கு வேண்டாமா? என்று கேட்கிறார்கள்.  வேண்டுமென்றே வைத்துக் கொள்வதானால் அப்படிப்பட்ட உணர்ச்சியானது மக்கள் சமூகத்தில் ஒழுக்கம், ஒற்றுமை, சமத்துவம் சாந்தி அளிக்கிறதா என்பதை முதலில் கவனிக்க வேண்டாமா? ஏனெனில், எந்த உணர்ச்சி காரணமாகவே, மனிதனின் வாழ்க்கையில் ஒழுக்கம் ஏற்படுமெனச் சொல்லப்படுகிறதோ, வாழ்க்கையில் நீதி அன்பு நிலவ மேற்படி உணர்ச்சி தூண்டுகோலாய் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறதோ, அந்த கடவுள் உணர்ச்சிக்கும் அந்த உணர்ச்சி கொண்ட மனிதனுடைய நடத்தைக்கும் ஒருவித சம்பந்தமுமின்றிச் செய்து விட்டனர் மற்றும் நமது கடவுளைக் கண்ட பெரியார்கள் என்பவர்கள் உலகத்திலே கேடு, கூடா ஒழுக்கம், வஞ்சனை, பொய் முதலியன செய்பவர்களை இந்த மாதிரியான ஒரு கடவுள் உணர்ச்சியை தங்களின் மேல் கண்ட காரியத்துக்கு உபயோகப்படுத்திக்கொள்ளும்படி செய்து விட்டார்கள்.

உதாரணமாக, ஆயிரத்தில் பத்தாயிரத்தில் ஒருவரை யாவது கடவுள் உணர்ச்சியின் அவசியத்திற்கேற்றபடி அவர்களது வாழ்க்கையிலே நீதி, நேர்மை ஒற்றுமை அன்பு நிலவும்படி நடப்பதை நாம் பார்க்கிறோமோ? பெரும்பான்மையோருக்கு அவ்வுணர்ச்சி அப்படி பயன்பட்டிருந்தால், உலகிலே துன்பத்துக்கு வஞ்சனைக்கு இடமேது? எவ்வளவு அக்ரமம் செய்தபோதிலும் பிரார்த்தனை, கடவுள் பெயர் உச்சரிப்பு, புண்ணிய ஸ்தலயாத்திரையை புண்ணிய ஸ்தல ஸ்பரிசம் செய்த மாத்திரத்தில் மன்னிப்பும் பாப விமோசனமும் கிடைக்கும் - ஏற்பட்டு விடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு அதனால் மக்களுக்கு அக்ரமம் செய்யவே தைரியம் தருகிறதேயல்லாமல் யோக்கியனாக, அன்பனாக நடக்க கட்டாயப்படுத்துகிறதா?

இன்று சிறையிலுள்ள 2 லட்சம் கைதிகளில் சம்சய வாதிகளோ, (கடவுள் பற்றி கவலைப் படாதவர்கள்) நாஸ்திகர்களோ, விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே இருப்பார்கள்.  மற்றையோர் யாவரும் கடவுள் உணர்ச்சியிலே ஒருவித அசந்தேகமும் கொள்ளாத ஆஸ்திகர்களேயாகும்.  ஆகவே அவர்கள் சொல்லும் கடவுள் உணர்ச்சியை மனிதனுடைய நடத்தையுடன் ஒப்பிட்டுப்பார்த்து வரவு செலவு கணக்கு போட்டு லாபநஷ்டப்படி இறக்கிப் பார்க்கும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

- 'குடிஅரசு', 30.01.1938

- விடுதலை நாளேடு 9 2 20

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

ஆஸ்திகர்களின் சிந்தனைக்கு!


23.01.1938 அன்று ஆய்க்கவுண்டன் பாளையத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மதம், கடவுள் என்னும் தலைப்பில் தந்தை பெரியார் ஆற்றிய உரை
இந்த திருக்கூத்துகள் ஏன்?
இந்து மத ஆள்களின் கடவுள் உணர்ச்சியை சற்று கவனிப்போம்.  இந்து மதக்காரர்கள் இந்த கடவுள் உணர்ச்சியை எப்படி வெளிப்படுத்துகிறார்கள்? மத உணர்ச்சியை எவ்விதம் காட்டிக் கொள்ளுகிறார்கள்? என்று பாருங்கள்.  மக்களைக் காப்பாற்ற இருக்கும் கடவுளை இவர்கள் காப்பாற்ற முற்பட்டு அதற்காக ஒவ்வொரு கடவுளுக்கு இரண்டு மூன்று இலட்சம் ரூபாய்கள் செலவில் கோயில்களும், ஒரு இலட்சம் செலவில் கோபுரமும், கலசமும் வைத்து அரை லட்சத்தில் கும்பாபிஷேகங்கள் செய்து பூசைக்கும் திருவிழாக்களுக்குமாகப் பாடுபடும் மக்களின் கணக்கற்ற பணத்தை பாழாக்கி விடுகிறார்கள். மனிதரில் இலட்சக்கணக்கான பேர் வீடின்றி வாடிவதைபடுவது இவர்களுக்குத் தெரியாதா ? இந்த மனிதர்களைக் கவனியாது இவர்களுக்கு வீடு வாசல் வேண்டாமா என்பதை கவனியாது கடவுள் ஆலயங்களின் திருப்பணி பேரால் எவ்வளவோ பணத்தை விரயம் செய்கிறார்கள்.  பாலின்றி வாடும் பச்சைக் குழந்தைகள் லட்சக்கணக்கில் இருக்க நெய் என்பதைக் கண்ணில் கண்டறியாத குடும்பங்கள் எவ்வளவோ லட்சம் இருக்க, பழனி, திருவண்ணாமலை, சிறீரங்கம் முதலிய இடங்களில் ஆயிரக்கணக்கான குடம் பாலையும் கொட்டி சாக்கடை போய்ச்சேரும்படி பாழாக்குவதும் ஆயிரக்கணக்கான டின் நெய்யை  நெருப்பை எரித்தும் நெருப்பில் கொட்டியும் வீணாக்குவதும் சரியா ?  கடவுள் உணர்ச்சியை இப்படித் தான் காட்டுவதா ? பாலும் நெய்யும் மக்களுக்கு உண்ண ஏற்பட்டதா? கல்லிலும், நெருப்பிலும் கொட்ட ஏற்பட்டதா? ஏ ஆஸ்திகர்களே! உங்களைத்தான் கேட்கின்றேன்.
இந்த முட்டாள் தனத்தையும், கொடுமையையும் ஒழிக்க இதுவரை என்ன செய்தீர்கள்? பச்சைவெண்ணெயை டின் டின்னாக கொண்டுபோய் களிமண் மாதிரி வாரி வாரி நெருப்பில் எறிகிறதைப்பார்த்து ஆனந்தப்படுகிறாயே! கடவுளும் ஆனந்தப்படும் என்று எண்ணுகிறாயே! ஏ ஆஸ்திகனே! நீ உன்னை மனிதன் என்று எண்ணிக் கொண்டு தானே இருக்கிறாய்.
ஒழுக்கத்துக்காக மனிதனின் - நல்வாழ்க்கைக்கு ஆக கற்பிக்கப்பட்ட கடவுளை தாசி வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போகிறாயே.  மற்றொருவன் பெண்ணை தூக்கி கொண்டு வருகிற உற்சவம் நடத்துகிறாயே, குறத்தியையும், துலுக்கச்சியையும் கூட்டி வந்ததாக அதற்கு ஒரு கோவிலும் கட்டி பொம்மை வைத்து விளையாடுகிறாயே இதுவா கடவுள் ஒழுக்கம்?
அஹிம்சை, அன்பு, கருணை ஆகிய குணங்களைக் கொண்டது கடவுள் என்று சொல்லிவிட்டு, கழுவேற்றுவதும், கழுத்தை வெட்டுவதும் வயிற்றை கிழிப்பதும் இப்படிபட்ட கடவுள்கள் கைகளில் கத்தி ஈட்டி சூலாயுதம் வில்லு வேல் தண்டாயுதம் கொடுத்திருப்பது யோக்கியமா? இவற்றிற்கு வேலை கொடுப்பதும் உற்சவம் செய்வதுமான காரியத்தால் மனிதனுக்கு ஒழுக்கம் அஹிம்சை அன்பு ஏற்படுமா ? ஏ ஆஸ்திகர்களே சிந்தித்துப்பாருங்கள்.
கடவுளுக்கு என்று ஒரு காசு தான் ஏன் செலவழிக்க வேண்டும்? செங்கல்பட்டு மாகாண சுயமரியாதை மகாநாட்டில் கடவுளுக்கு ஒரு காசுகூட செலவழிக்கப்படாது என்று சகல ஹிந்துமத ஆஸ்திகர்களும் வந்திருந்து தீர்மானம் செய்தார்கள். அது சிறிதாவது கவனிக்கப் படுகிறதா? கடவுளுக்கு ஆக செலவழிக்கப்படும் பணம், காசு, செலவுகள் யார் வயிற்றை நிரப்புகிறது? பாடுபடாது வயிறு வளர்க்கும் பார்ப்பனர்களுக்கும், ரயில்காரனுக்கும் தான் பெரிதும் இப்பணம் போய்ச் சேருகிறது.  இப்படிச்சேரும் பணம் வருஷம் பலகோடி என்பது உங்களுக்குத் தெரியாதா?
புதுப்பார்ப்பன தந்திரம்
இருக்கும் ஸ்தலங்கள் போதாதென்றும் இருக்கும் புண்ணியஸ்தலங்களும் தீர்த்தங்களும் போதாதென்றும் ஒரு புதிய ஸ்தலத்தை புண்ணிய ஸ்தான கரையை பார்ப்பனரும் ரயில்வேக்காரரும் ஒப்பந்தம் செய்து கொண்டு பிரமாதமாக விளம்பரப்படுத்துகிறார்கள்.  அதாவது கோடியக்கரை என்ற இடத்து, உப்புத் தண்ணீரில் ஒரு முழுக்கு போட்டுவிட்டால் எப்படிப்பட்ட பாபமும், முன்னோர் செய்த பாபமும்.  இனி மேல் செய்யும் பாபமும் போய்விடுமெனவும் அவ்வளவு மகிமை உடையதெனவும் மித்திரன் விளம்பரப்படுத்துகிறது. இதற்கு மஹோதய புண்ணிய கால ஸ்நானம் எனப் பெயராம்.  ரயில்வேக்காரரும் பார்ப்பனரும் சேர்ந்து செய்யும் இச்சூழ்ச்சியில் எத்தனையோ ஆயிரக்கணக்கானவர்கள் சிக்கி அங்குசென்று தங்கள் பணம், மானம், சுகாதாரம் ஆகியவற்றைப் பாழாக்கிக் கொண்டு, திரும்பிவரும் போது கூடவே காலராவையும் அழைத்துக் கொண்டுதான் வீடு திரும்பப் போகிறார்கள்.  இது என்ன நியாயம் என்று கேட்கிறேன். கோடியக்கரை சென்று குளிக்க வேண்டிய அவ்வளவு பாபம் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்கிறேன்.  காலை முதல் மாலை வரை பாடுபட்டு, உழைத்து, பணத்தை முதலாளிக்கும், பார்ப்பானுக்கும் கொடுத்துவிட்டு, கையைத் தலையின்கீழ் வைத்துக்கொண்டு படுக்கிற நீங்கள் கோடியக்கரை செல்ல வேண்டிய அவ்வளவு பாபம் நீங்கள் எப்படிச் செய்தீர்கள்? தொழிலாளியின் வாழ்வே இதனால் பாழாகிறது முதலாளியுடன் போட்டியிட்டு, தன் நிலைமையை உயர்த்திக் கொள்ள வேண்டிய சக்தியை இழந்து இதனால் பணம், நேரம் புத்தி ஆகியவை இழந்து அவன் தவிக்கிறான்.  இதற்குத்தானே இந்த கடவுள் திருவிழாவும் புண்ணிய ஸ்நானங்களும் உதவுகின்றன. இந்து மத ஊழல்களை திருத்தப்பாடு செய்த புதுமதக் கொள்கைகளே இன்று கிறிஸ்துமார்க்கம், முஸ்லீம் மார்க்கம் முதலிய பல புதிய மார்க்கங்களாக தோன்றலாயின.
இந்து மத கொடுமை தாங்கமாட்டாமலேதான் பல கோடிப்பேர்கள் முஸ்லீம்களாகவும், கிறிஸ்துவர்களாகவும் ஆனார்கள்.  இன்றும் இந்துக்கள் தான் பிறமதம் புகுகிறார்கள் என்றாலும் முஸ்லீம் மார்க்கம் தவிர வேறு எந்த மார்க்கத்துக்கு மனிதன் போனாலும் அவன் பின்னாலேயே ஜாதிச் சனியன் தொடர்ந்துகொண்டே போகிறது. உதாரணமாக, ஒருவர் கிறிஸ்துவனான பிறகும், பார்ப்பன கிறிஸ்துவனாகவும், பள்ளக்கிறிஸ்துவன், பறைகிறிஸ்துவன், நாயுடு கிறிஸ்துவன், ஆசாரி கிறிஸ்துவன், நாடார் கிறிஸ்துவன் என்கின்ற பாகுபாடும் சடங்கு ஆச்சார அனுஷ்டானமும் எந்தக் கிறிஸ்துவனையும் விட்டுத் தொலைவதில்லை.  பிரார்த்தனை ஸ்தலங்களிலும் இந்து கோவில்கள் போல் பேதங்கள் பல இருந்து வருகின்றன.
ஆனால் இந்த இழிவு ஆபாசம் முஸ்லீம் மார்க்கத்திலே காண முடிவதில்லை.  ஒரு தீண்டாதான், முஸ்லீம் மதத்தை தழுவிவிட்டால், உடனே தீண்டாமை பறந்து போகிறது.  அவன், அந்த சமுதாயத்தில் மனித சுதந்திரத்தை, சமத்துவத்தைப் பெறுகிறான்,  அங்கு பற முஸ்லீம் என்று யாரேனும் சொல்லி, தங்கள் பற்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது.  ஏன்? அவர்கள் தங்கள் மதத்தினிடை சமத்துவம் நிலவ வேண்டுமென்ற உணர்ச்சியை அவ்வளவு அதிகமாகக் கொண்டுள்ளார்கள்.  அதனாலேயே தீண்டாமையை விலக்கிக் கொள்ள வேண்டுமென்கிறவர்களை முஸ்லீம் மார்க்கத்தை தஞ்சமடையும்படி இந்த 10 வருஷமாய் சொல்லிவருகிறேன்.  இந்த மாபெரும் சனியனான ஜாதிமத பேத தொல்லைகள் மனித சமூகத்தை விட்டு தொலையவேண்டுமானால் மனிதனுக்கு விஞ்ஞான வளர்ச்சியும் தேவை.  தொழில் காரணமாகத்தான் ஜாதிகளோ ஜாதிக் கொடுமைகளோ ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.  தோட்டி என ஒரு ஜாதியும் அவனுக்கு இழிவும் தீண்டாமையும் எப்படி ஏற்பட்டது? மலம் எடுக்கும் தொழிலை நாற்றமுள்ள தொழிலை அவன் ஏற்றுக்கொண்டதால் தான் இப்படியே கஷ்டமானதும் இழிவானதும் வேலை செய்பவர்கள் எல்லாம் கீழ் ஜாதியாகவும், சுகமாகவும் மேன்மையாகவும் உள்ள வேலை செய்கிறவர்கள் மேல் ஜாதியாகவும் ஒரு வேலையும் செய்யாமல் ஊரார் உழையில் வயிறு வளர்த்துக் கொண்டு மக்களை ஏமாற்றி கொண்டு வஞ்சித்துத் திரிகிறவர்கள் மகாமகா மேல் ஜாதியாகவும் ஏற்பட்டதற்குக் காரணம் விஞ்ஞான ஞானமில்லாமையே.  மேனாட்டிலே, இம்மாதிரியான தொல்லை அநேகமாக தீர்ந்து விட்டது.
விஞ்ஞான வளர்ச்சியால்
விமோசனம் ஏற்படும்
விஞ்ஞான வளர்ச்சி காரணமாக, சமத்துவம் அந்த சமூகத்திலே உண்டாக மார்க்கம் ஏற்பட்டுவிட்டது.  நாம் என்ன கூறினாலும், இனிமேல் நமது பின் சந்ததியார்கள், பழைய தொழில் முறை ஜாதிமுறை திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது உறுதி, உலகம் இன்று புதிய பாடத்தைக் கற்பித்துக் கொண்டு வருகிறது.  விஞ்ஞான வளர்ச்சி மூலமாகவே விமோசனம் ஏற்படும் என்ற உறுதி எனக்கு ஏற்பட்டிருக்கிறது, பழமையான சகல முறைகளிலும் மாறி சகலதுறைகளிலும் புதுமை தோன்றியிருக்கிறது.  வெகு சீக்கிரத்தில் புதிய உலகம் காணப்போகிறோம்.
மக்கள் பிறப்பதுகூட இனி அருமையாகத்தான் போய்விடும்.  அதுபோலவே சாவும் இனி குறைந்துவிடும்.  மனிதன் வெகு வெகுசுலபமாக நூறு ஆண்டு வாழ முடியும்: யாரும் சராசரி ஒன்று இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெறமாட்டார்கள்.  ஆண் பெண் புணர்ச்சிக்கும் பிள்ளைப் பேறுக்கும் சம்பந்தமில்லாமலே போய்விடும்.
வேலை செய்கிற குதிரைகள் வேறு, குட்டிபோடுகிற போடச் செய்கிற குதிரை வேறு, என்கிற மாதிரி மனித சமூகத்தில் இருக்கும் பிள்ளை பெறும் தொல்லை, வளர்க்கும் தொல்லை, அதற்கு சொத்து, சுகம் தேடும் தொல்லை ஒழிந்து போகும் என்கின்ற நம்பிக்கை எனக்கு உண்டு.  மனிதன் அறிவு பெற்றதற்கு காரணம் சாமி விளையாட்டும் பிள்ளைகள் உண்டாக்கும் விவசாயப் பண்ணையும் தானா? மனித அறிவின் எல்லையைக் காண வேண்டாமா? செல்வம் தரித்திரம்,  கஷ்டம், கவலை-தொல்லை இதுதானா மனிதனின் கதி மோட்சம்?
பெண்களை ஆண்கள் நடத்துகிற மாதிரியும், படுத்துகிற பாடும் போல் உலகத்தில் வேறு எந்த ஜீவனாவது செய்கிறதா? பெண்களிடம் சக்தி சொரூபத்தையும், தெய்வத்தன்மையும் , காதல் களஞ்சியத்தையும், தாய்மையையும், அன்பையும் கண்ட பெரியார்கள் என்னும் மிருக சிகாமணிகள் பெண்களைப்பற்றி எப்படி நடத்தும்படி எழுதி வைத்திருக்கிறார்கள் என்று பார்த்தால் உலகில் சுயமரியாதை உள்ள பெண்கள், குழந்தைகள்  பெறவே மாட்டார்கள்.  அப்படி பெற நேர்ந்தாலும் பிறந்தது ஆண்குழந்தை என்று கண்டால் கழுத்தை திருகிவிடுவார்கள்.  இது விஷயத்தில் மனிதன் திருத்தப்பட முடியாவிட்டால் எந்த மனிதனும் மனிதத்தன்மைக்கு அருகதையற்றவன் என்றே சொல்லுவேன். பெண்ணுக்கு சொத்து கூடாதாம், காதல் சுதந்திரம் கூடாதாம் அப்படியானால் மனிதன் தன் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளும் ரப்பர் பொம்மையா? அடிமை உருவா? அது என்று கேட்கிறேன்
பெண்களுக்கு விதவைகள் என்று ஒரு நிலைமை ஏன் இருக்க வேண்டும்? கல்யாணம் செய்து கொண்டதால் தானே இந்தக் கொடுமை? கல்யாணம் செய்து கொள்ளாவிட்டால் பெண் எப்படி விதவையாக  முடியும்? கல்யாணம் செய்து கொள்ளாமல் இருப்பதில் பெண்களுக்கு இரண்டுவித லாபம் இருக்கிறது.  குழந்தை பிறக்காது என்பதுடன் விதவையும் ஆகமுடியாது. அடிமை நிலையும், சொத்து வைத்திருக்க உரிமையற்ற நிலையும் இருக்க முடியாது.  உலகில் உள்ள சகல கொடுமைகளிலும் விதவைக் கொடுமையே அதிகமானது மற்றும் விபசாரம் பெருகுவதற்கு விதவைத்தன்மையே காரணம்.  ஒவ்வொரு பெற்றோர்களும் பெரிதும் தங்கள் குழந்தை சகோதரி விதவைகளை இலை மறைவு காய்மறைவாய் கலவி உணர்ச்சியை தீர்த்துக் கொள்ள சம்மதிக்கிறார்களே ஒழிய ஒரு புருஷனுடன் சுதந்திரத்துடன் வாழ இடம் கொடுப்பதில்லை.  இது தானா கடவுள் மதத்தன்மை ஏற்பட்ட பலன் என்று கேட்கின்றேன்.
- 'குடிஅரசு', 30.01.1938
- விடுதலை நாளேடு, 16.2.20

புதன், 12 பிப்ரவரி, 2020

பெரியார் பேசுகிறார் : திராவிடர் கழகம் செய்து வரும் புரட்சி

தந்தை பெரியார்

ஜாதி முறைகள் எல்லாம் ஆரிய மதமாகிய இந்து மதத்தின் சிருஷ்டியேயாகும் _ இந்து மதத்துக்கு ஆதாரம் ஜாதிதான். அது புராணங்களில் தேவர் _ அசுரர்களாகவும், சாஸ்திரங்களில் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்களென்று  ஆரியர்களைக் குறிப்பிடுவதும், சூத்திரர்கள், சண்டாளர்கள் என்று திராவிடர்களைக் குறிப்பிடுவதாகவும் அமைக்கப்பட்டிருப்பவைகளே யாகும்.

தேவாசுரர்களும் பிராமணாதி சூத்திரர்களும் இல்லாவிட்டால் புராணங்களுக்கும் சாஸ்திரங்களுக்கும் வேலை இல்லை என்பதோடு, இந்து மதத்திற்கும் இடம் இல்லை.

ஜாதிப் பாகுபாடுகளுக்கு ஒரு காரணமுமே சொல்லாமல் கடவுள் அந்தப்படி தனது 4 அவயங்களிலிருந்து 4 ஜாதிகளை உண்டாக்கினார் என்பதோடு முடிந்து விடுகிறது.

ஜாதிகளை உற்பத்தி செய்த பிறகுதான் ஜாதிகளுக்குக் கர்மங்கள் (கடமைகள்) வேலைகள் பகிர்ந்து கொடுக்கப் பட்டிருக்கின்றன. இதை மனுதர்மம், பாராசர ஸ்மிருதி முதலியவைகளைக் கொண்டு அறியலாம்.

ஜாதிகள் பிரிந்தாலும் _ ஜாதிகளுக்கு வேலை பிரித்துக் கொடுத்திருப்பதிலும் மேல் ஜாதி கீழ் ஜாதி  என்கின்ற  உயர்வு _ தாழ்வு பேதமும் , மேன்மையான சுகமான வேலை, இழிவான வேலை என்பதாகவும், பாடு படாமல்  சுகமடையும் வேலை _ பாடுபட்டு கஷ்டமும், இழிவும் அடையும்படியான  வேலை என்றும் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

அதிலும் ஜாதிப் பாகுபாடு பற்றிய சாஸ்திர கருத்துகளைப் பார்த்தால் மேல் ஜாதியாருக்கே கல்வியும், செல்வமும் அடையும் உரிமையும், கீழ் ஜாதியாருக்கு, அடியோடு கல்வியும், செல்வமும்  இல்லாமையும்,  கீழ் ஜாதியார் கல்வி கற்றால் தண்டிக்கும்படியும் கீழ் ஜாதியார் செல்வம் வைத்திருந்தால் பலாத்காரமாகப் பிடுங்கிக் கொள்ள வேண்டுமென்பதாகவும் திட்டம். வகுத்திருப்பதோடு இந்தத் திட்டங்கள்  கட்டாயமாக அனுஷ்டிக்கப்பட வேண்டியவைகள் என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த சாஸ்திர விதிகளுக்கு ஏற்பவேதான் இன்றும்  கீழ் ஜாதியார் இழி தொழில் புரிவோராயிருப்பதும், கீழ் ஜாதியார்  கல்வி அற்றவர்களாயிருப்பதும், மேல் ஜாதியார் மேன்மையான சுக தொழில் புரிவோராயிருப்பதும் யாவருமே கல்வி கற்றிருப்பதுமேயாகும். ஒரு சிலர் நம்மில் இதற்கு மாற்றமாய்  இருக்கிறோம். என்றால் அது புராண காலத்திலும் அப்படிச் சிலர் இருப்பதை அனுசரித்து அதாவது விபீஷணன், பிரகலாதன், அனுமார், சுக்ரீவன், அங்கதன் போன்ற கற்பனைகளை எடுத்துக்காட்டாகக் கொண்டு அவசியமும் முடியாமையும் ஆன காரணத்தால் அனுமதிக்கப்பட்டவையே யாகும்.

இன்று இந்த நாட்டில் நடந்து வரும் பார்ப்பனர் _ பார்ப்பனரல்லாதார் என்னும், பிராமண _ சூத்திரப் போராட்டமும், அந்நியர் _ இந்நாட்டவர் என்னும் ஆரிய திராவிடர் என்னும் ஆரிய திராவிடப் போராட்டமும் இதையே காரணமாகக் கொண்டதே தவிர வேறு காரணம் எதுவுமே கிடையாது.

ஜாதிமுறை காரணமாகவேதான் நம் நாட்டில் தொழில் பேதமும், கல்வி பேதமும், பொருளாதார பேதமும், உத்தியோக பேதமும் இருந்து வருகின்றன.

ஜாதி முறையை அழிப்பதென்றால் அதற்கு இருக்கும் அஸ்திவார பலமும், ஆதரவு தாங்கிகளும் அதாவது சாயாமல் முட்டுக் கொடுத்து வைத்திருக்கும் உதவித் தூண்களும் மிக மிக பலமானவைகள். ஆதலால், அவைகளைப் புரட்சி என்னும் டைனமேட் வெடி வைத்து உடைக்க வேண்டியதாக இருந்து வருகிறது. அந்த வேலையைத்தான் திராவிடர்கழகம் அதுவும் திராவிடர் கழகமே தான் செய்து வருகிறது.

இந்த வேலையில் ஈடுபட்டு அனுபவம் பெற்ற எவருக்குமே எதிரிகளிடம் இருந்து நல்ல அழைப்புகளும் நல்ல ஆதரவுகளும் தாராளமாகக் கிடைக்கும். அதன் காரணமாகவே திராவிடர் கழகத்தில் அதாவது ஜஸ்டிஸ் - சுயமரியாதை இயக்கப் பணியில் அனுபவமும் செல்வாக்கும் பெற்ற எவரும் இக்கழகத்தில் நிரந்தரமாக இருக்க முடியாது.

முதலாவதாக இந்த ஜாதி முறை ஒழிப்புக் கருத்துக்கு மாறாக அல்லது ஜாதி முறை ஒழிப்புக்கு எதிரிகளாய்  இருக்கிறவர்களுக்கு அனுகூலமாக இருக்கிற பண்டிதர், கலைவாணர், புலவர், ஆசிரியர், செல்வர், உத்தியோகஸ்தர்கள் முதலியவர்கள் எவ்வளவு அயோக்கியர்களாக, நாணயக் குறைவு உள்ளவர்களாக, இனத் துரோகிகளாக இருந்தாலும் அவர்களுக்குப் பார்ப்பனர் ஆதரவு, விளம்பரம், உதவி, உத்தியோகம், பெருமை முதலியவைகள் தாராளமாகக் கிடைக்கும்.

உதாரணமாக, இன்று பார்ப்பன உலகில் பாராட்டுதலும் புகழும் பெற்ற திராவிட  இனத்துக்காரர்களும், புலவர்களும், வித்துவான்களும், மற்றும் அதிகாரிகளும், செல்வர்களும் ஆகியவர்களைப் பார்த்தால் அந்த பட்டியிலில் உள்ள 100-க்கு 99.3/4 பேர்கள் நம் திராவிட இனத்துக்குத் துரோகிகளாகவே, நம்மைக் காட்டிக் கொடுத்து பிழைப்பவர்களாகவே தான் இருப்பார்கள்.

ஒன்று சொல்லமுடியும். அநேகமாக சூத்திரனுக்கு பஞ்சமனுக்கு இன உணர்ச்சி இருக்க முடியாது. இருக்க வேண்டுமானால் அவனுக்கு இனம் இன்னது என்ற தெளிவு ஏற்படாமல் இருக்கும்படி பல ஜாதியாய்ப் பிரிக்கப்பட்டு, பல கலைகள் புகுத்தப்பட்டு, சுயமரியாதை உணர்ச்சி ஏற்படுவதற்கு இல்லாமலும், சுயநலமே ஜீவனாக, அதாவது ஜீவப் பிராணி போன்ற  உணர்ச்சியையே வாழ்க்கை வழியாகச் செய்யப்பட்டிருக்கிறது.

- ‘விடுதலை’ - 7.8.1950

 உண்மை இதழ், 16-31.8.19

சனி, 8 பிப்ரவரி, 2020

இந்தியாவில் எப்படி பார்ப்பனீயம் நிலைத்திருக்கிறது?

* தந்தை பெரியார்

உலகம் முழுவதும் விழிப்படைந்து முன்னேறிக் கொண்டிருக்கிற காலத்தில் குறிப்பாக எல்லா சமுகத்தை விட மத சம்பந்தமான பிடிவாதத்தில் இணையற்ற மகமதிய அரசர்கள் ஆட்சி செய்யும் நாடுகளும் கூட அரசுரிமையை இழந்தாவது சீர்திருத்தத்தைப் பரப்ப வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கும் அரசர் களுக்கும் கட்டுப்பட்டு நடந்து வரும் இக்காலத்தில், இந்தியா மாத்திரம் ஒரு கடுகளவுகூட தன் நிலையைவிட்டு அசையாமல் இருக்கக் காரணம் என்னவென்பதை மக்கள் யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது.

நிற்க. பொதுவாக உலக மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து சகோதரபாவம் கொள்ளுவதற்கு உலகத்தில் முதல் தடையாயிருந்தது, இருப்பது மதங்கள் என்று சொல்லப்படுபவைகளேயாகும். இரண்டாவது, அதன் உட்பிரிவுகள் ஆகும். மூன்றாவது பாஷைகள் ஆகும். இதை அனுசரித்து இடவித்தியாசங்களும் ஆகும். உதாரணமாக பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள், மகமதியர்கள், இந்துக்கள் என்பன போன்ற மதப்பிரிவுகள் உலகத் தில் இல்லாமலிருந்தால் மக்கள் சமுகத்தைப் பெரும் பெரும் பிரிவுகளாகப் பிரித்துக்காட்டவும் ஒரு நாட் டாருடைய சுகதுக்கங்கள் மற்ற நாட்டார்களுக்கு சம் பந்தமில்லாமலிருக்கவுமுள்ளதான நிலை உலகத்தில் இருக்கவே முடியாது என்னலாம்.

வேண்டுமானால் ஒரு சமயம் தேசத்தின் பேரால் மக்களையும் பிரித்துக்காட்ட வேண்டியதாக ஏதாவது ஏற்பட்டால் ஏற்படலாம். அப்படிக்கு இருந்தாலும் துருக்கி யருக்கும் ஆப்கானிஸ்தானத்திற்கும் உள்ள பிரிவுகள் போன்ற பிரிவுகளும் அமெரிக்காவுக்கும் அய்ரோப்பா வுக்கும் உள்ள வித்தியாசம் போன்ற பிரிவுகளும் போல இருக்குமே ஒழிய, எந்தக்காரணத்தைக் கொண்டும் ஒற்றுமைப்பட முடியாததும் ஒரு தேசத்தையோ ஒரு சமூகத்தையோ அடியோடு கொன்று ஒரு தேசத்தார் வாழத்துணியும் படியான பிரிவுகளாகவும், மற்றவர்களைப் பற்றி ஒரு சிறிதும் கவலை கொள்ளாமல் தங்கள் தங்கள் சமூக நன்மையை மாத்திரம் கவனிக்கக் கூடிய பிரிவுகளாகவும் ஒருவருக்கொருவர் நடை, உடை, பாவனை, பழக்க வழக்கம் முதலியவைகளால் வெறுப்புக் கொள்ளும் பிரிவுகளாகவும் பிரிந்திருக்க முடியவே முடியாது என்பது நமது உறுதியாகும். கிறிஸ்தவர்களுக்குள் இருந்த போதிலும் மதம் என்கின்ற ஒரு காரணத்தால் ஒன்றுபட்டு உலகத்தில் உள்ள எல்லாக் கிறிஸ்தவர்களும் இந்தியாவின் ஆதிக்கம் முதலிய விஷயங்களில் எதிரி களாகவே இருந்து இந்தியாவை உறிஞ்சி வருகின்றார்கள் என்பதைத் தினமும் உணருகின்றோம். அது போலவே உலகத்தில் உள்ள எல்லா மகமதியர்களும் தங்கள் மதத்தின் பேராலும் சமுகத்தின் பேராலும் தங்களது நன்மையைக் குறிக்கொள்ளும்போது இந்துக்கள் என்பவர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிரிடையாய் இருக்க நேர்ந்தாலும் சிறிதும் அபிப்பிராய பேதமில்லாமல் ஒன்று சேருகின்றார்கள்.

அதுபோலவே இந்துக்கள் என்பவர்களும் மத விஷயங்கள் என்பவைகளில் மகமதியர்கள் கிறிஸ்த வர்கள் என்பவர்களுக்கு எதிராக ஒன்று சேர முடியாத வர்களாயிருந்தாலும்கூட ஒன்று சேர வேண்டும் என்கின்ற உணர்ச்சிகளை எளிதில் அடைவதன் மூலம் எதிரிகளாக கருதத்தக்கவர்களாகி விடுகின்றார்கள்.

இது சரியா? தப்பா? அல்லது இதற்கு ஏதாவது பொருள் உண்டா? என்பவைகள் ஒருபுறமிருந்தாலும் முக்கியமாய் மதத்தின் பலனாய் வேற்றுமை உணர்ச் சிகள் தோன்றியே தீருகின்றன என்பதை எவரும் மறுக்க முடியாது. இப்படியெல்லாம் இருந்தாலும் கூட மேல்நாட்டில் உள்ள ஒவ்வொரு மதக்காரர்களும் சமீபகாலமாய் தங்கள் பிடிவாத குணங்களை விட்டு முதலில் தங்களுக்குள் ஒன்றுபடுவதற்கு முயற்சி எடுத்துக் கொண்டு அம்முயற்சிக்கு எதிரிகளாய் இருப்பவைகளைத் தகர்த்தெறிந்து ஒரே சமுகமாக ஆவதற்கு மிக முனைந்து வருகின்றார்கள். இம்முயற்சிக்கு விரோதமாக மதத்தின் பேராலும் தெய்வத்தின் பேராலும் இருக்கும் தடைகளைக் கூட வெகு சுலபத்தில் தகர்த்தெறியத் துணிந்து வருகின்றார்கள்.

உதாரணமாக இம்முயற்சியில் சிறிதளவானாலும் முதலில் வழிகாட்டிய பெருமை மேல்நாட்டுக் கிறிஸ்தவர் களுக்கே உண்டு என்று சொல்ல வேண்டும். ஏனெனில், அவர்கள்தான் முதன் முதலாக நிலைமைக்குத் தக்கபடி தங்களைச் சரிப்படுத்தி கொள்ள முன்வந்தவர்கள். உதாரணமாக அவர்கள் வேதம் என்று சொல்லப்படும் பைபிளைக் கூட திருத்த முயன்று பழைய ஏற்பாட்டிற்கு விரோதமாய் புதிய ஏற்பாட்டை உண்டாக்கி நடை உடை முதலியவைகளையும் மாற்றிக் கொண்டார்கள். அதுபோலவே, இரண்டாவதாக மகமதியர்களையும் சொல்லலாம். ஏனெனில் அவர்களிலும் இந்துக்கள் என்பவர்களை போல பிறவியில் உயர்வு தாழ்வு என்பது போன்ற சில கடுமையான பிரிவினை வித்தியாசங்கள் இல்லாவிட்டாலும் வாழ்க்கையில் மகமதியர்களையும் மதம் என்பது இந்துக்கள் என்பவர்களைப்போலவே அநேக விதங்களில் கட்டுப்படுத்தி வந்திருக்கின்றது என்று சொல்லலாம். உதாரணமாக நடை உடை பாவனை முதலாகிய பலவற்றுள் மதங்களின் பேரால் கட்டுப்பட்டுக் கிடந்தாலும் இப்போது தைரியமாய் அக்கட்டுபாடுகளில் சிலவற்றையாவது தளர்த்திவிட ஆரம்பித்து விட்டார்கள். அது மாத்திரமல்லாமல் வெகு துரிதமாகவும் தைரியமாகவும் சிலர் மாற்றிக் கொள்ளவும் ஆரம்பித்துவிட்டார்கள். அந்தப் படிக்கு மாற்றிய மகமதிய வீரஅரசர்களான அமீருக்கும், பாஷாவுக்கும் ஆதரவு கொடுக்கவும் முந்துகின்றார்கள்.

மற்றும் வெளிநாடுகளில் அந்தந்த தேசகுடி ஜனங்கள் பெரும்பாலோர் அத்திருத்தங் களுக்குத் தாராளமாய் ஆதரவளித்துப் பின் பற்றி வருவதில் யாதொரு தடையும் காண முடியவில்லை. ஆனால் புரோகிதக் கூட்டத்தின் தொல்லைகள் மாத்திரம் எந்த மதத்திலும் சிறிதளவாவது இல்லாமலிருக்கும் என்று சொல்லிவிட முடியாது என்றாலும் அவர்களிலும் சிலர் தம் சுயநலத்திற்கு வலி யுறுத்துவதை தவிர வேறு காரணங்கள் சொல்லவோ ஆதாரங்கள் காட்டவோ முடியாதபடி மக்கள் அறிவு பெற்று விட்டார்கள். இந்தியாவில் உள்ள மகமதிய சமூகமும் இந்தியர்களுடன் பழகுவதால் கமால் பாட்சாவுக்கும், அமீருக்கும் விரோதமாக அதிருப்தியும் ஆத்திரமும் காட்டுவதன் மூலம் ஒரு புறத்தில் தங்கள் மதப்பற்றை காட்டிக் கொண்டாலும் மற்றொரு புறம் தங்கள் சமூக நன்மையை உத்தேசித்து அவர்களுக்கு ஆதரவளித்தே வருகின்றார்கள். உதாரணமாக அமீரையும் அவரது மனைவியரையும் இந்திய மகமதியர்களில் சிலர் குறைகூறி இருந்தாலும் அமீரினது ஆட்சிக்கு ஆபத்து வந்துவிட்டது என்று தெரிந்தவுடன் அவருக்கு இந்தியாவில் உள்ள மவுலானாக்கள் முதல் கொண்டு அனுதாபப்படுவதுடன் ஆதரவளிக்கவும் முந்துகின்றார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இதன் காரணம் என்னவென்று பார்ப்போமானால் கூடுமானவரை அந்த சமூக நன்மை சம்பந்தமான கவலையும் ஒற்றுமையுமேயாகும். ஆனால் இந்துக்கள் என்பவர்களுக்குள் அம்மாதிரியான சமூக ஒற்றுமை இல்லாமல் எவ்வித திருத்தங்களுக்கும் எதிர்ப்புகள் இருந்து வருவதற்குக் காரணம் என்ன என்று பார்ப்போமானால் இதிலுள்ள மதப் பிரிவுகளோடு அவைகளிலுள்ள உட்பிரிவுகளும் ஜாதிப்பிரிவுகளும் அவற்றில் உள்ள உயர்வு தாழ்வுகளும் அதனால் சிலருக்கு ஏற்படும் நிரந்தர நலமுமே காரணமாகும். இந்த உள்பிரிவுகளும் ஜாதிப் பிரிவுகளும் நிலைத்து குருட்டுப் பிடிவாதமாய் இருப்பதற்குக் காரணம் என்னவென்று பார்ப்போமானால் மற்ற மதங்களை விட இந்துக்கள் இந்துமதம் என்பவற்றில் அதிகமான நிர்ப்பந்தங்கள் இருந்து வருகின்றன என்பதேயாகும். அவையாவன, முதலாவது இந்துக்களுடைய மதக்கொள்கைகளின் படி மக்கள் படிக்கக்கூடாது. ஆனால் ஒரு சிறு வகுப்பினர் - பார்ப்பனர்கள் என்பவர்கள் மாத்திரம்தான் படிக்க உரிமையுள்ளவர்கள். மத ஆதாரம் என்பதைப் பற்றி இந்து மதத்தைச் சேர்ந்த மக்களே தெரிந்து கொள்ளக்கூடாது. மத சம்பந்தமான எந்த விஷயங்களிலும் பிறவியிலேயே தாங்கள் உயர்ந்தவர்கள் என்று ஏற்பாடு செய்து கொண்ட ஒரு சிறு வகுப்பார் அதாவது 100க்கு 2 பேர்களான பார்ப்பனர்கள் - தவிர மற்றவர்களுக்குச் சொந்த அறிவை உபயோகிக்கவோ ஆராய்ச்சி செய்யவோ நன்மை தீமை எவை? அவசியமானவை எவை? அவசியமில்லாதவை எவை? என்று தெரியவோ சற்றும் உரிமை கிடையாது.

படிப்பு, மத சம்பந்தம் ஆகியவைகளில் இம்மாதிரி யான நிர்பந்தம் இருப்பதோடு மாத்திரமல்லாமல், மனித வாழ்க்கையிலும் மக்களைத் தனித்தனி ஜாதி களாகப் பிரித்த தோடல்லாமல், அவற்றில் உயர்வு தாழ்வும் ஒருவரை ஒருவர் தொடாமல் நெருங்காமல் காணமுடியாமல் செய்வித்து ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு பிறவித் தொழிலையும் ஏற்படுத்தி அவை களையேதான் அவ்வகுப்பைச் சேர்ந்தவன் செய்து தீர வேண்டும் என்றும் அந்தப்படி அரசன் சட்டம், தண்டனை, கண்டனம் ஆகியவைகள் மூலம் செய்விக்க வேண்டும் என்றும் அரசர்களாலும் நிர்ப்பந்தப்படுத்தப் பட்டுவிட்டது.

ஒரு சிறு கூட்டத்தார் தங்கள் ஜனத் தொகைக்குதக்கபடி, தங்கள் வாழ்வுக்குத் தேவையானபடி நிரந்தரமாய் பொருள் வருவாய் இருக்கத்தக்கதாக பதினாயிரக்கணக் கான கடவுள்களை சிருஷ்டித்து ஆயிரக்கணக்கான சடங்குகளையும் சிருஷ்டித்து அவற்றிற்கு தினப்படி பூஜை, உற்சவம், கல்யாணம், அவைகளின் திருப்திக்கு என்று அச்சிறு கூட்டத் தாருக்கு வேண்டியவைகளையெல்லாம் அவசிய மாக்கி அவர்கள் கேட்டதையெல்லாம் கொடுக்க வேண்டும் என்றும் அச்சிறு கூட்டத்தாரின் திருப்தியே கடவுள் திருப்தி என்றும் மற்ற மக்கள் பிறந்ததே, அச்சிறு கூட்டத்திற்கு தொண்டு செய்வதற்கென்றும் பலவாறாகக் கற்பித்து, அக்கட்டுப்பாடுகளிலிருந்து யாராவது விலகவோ அல்லது அக்கட்டுப்பாடுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யவோ புறப்பட்டால் அவ்வாராய்ச்சி செய்வது மகாபாதகமானதென்றும் நாத்திகமென்றும் அப்படிப் பட்ட நாத்திகனை அரசன் தண்டிக்க வேண்டுமென்றும் மற்றும் இது போன்ற பல நிர்பந்தங்களையும் உண்டாக்கி வைத்திருக்கின்றார்கள்.

இது மாத்திரமல்லாமல் யாராவது துணிந்து இக் கட்டுப்பாட்டையும் கொடுமையையும் உடைக்கப் புறப்பட்டால் அவர்களை அசுரர்கள், ராட்சதர்கள், துஷ் டர்கள், தேவர்களுக்கு விரோதி, கடவுளுக்கு விரோதி, உலகத்திற்கு ஆபத்தை விளைவிப்பவன் என்பதான விஷமப் பிரச்சாரத்தால் அவனை அடியோடு அழித்து வந்திருக்கின்றார்கள். இன்றைய தினமும் மேல் கண்ட கொள்கைகளே மதக் கொள்கைகளாகவும், அவைகளைக் கொண்ட புத்தகங்களே மத ஆதாரங்களாகவும் அவை களை நிலைநிறுத்தச் செய்வதே சீர்திருத்தங்களாகவும் இருந்து வருகின்றன.

உதாரணமாக, இது சமயம் நாட்டில் ஏற்பட்ட ஒரு புது உணர்ச்சியும் கிளர்ச்சியுமானது மக்களை எவ்வளவோ தூரம் நடைஉடை ஆச்சாரம் போகப் போக்கியம் முதலி யவை களில் பழைய கொள்கைகளையும் பழைய அனு பவங்களையும் மாற்றிக் கொள்ள அவசியமும் இடமும் ஏற்படுத்தி கொடுத்து அனுபவத்திலும் தலை சிறந்து விளங்கிக் கொண்டிருந்தும், தனது சொந்த சுயநலம் மாத்திரம் எவ்வளவு அறிவீனமும் ஆணவமும் இழிவும் பொருந்தியதாக இருந்த போதிலும் அதிலிருந்து சற்றாவது மாறுபடுவதோ தளர்த்தப்படுவதோ என்பது சிறிதும் முடியாததாகவே இருக்கின்றது.

உதாரணமாக, மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் ஜாதி வித்தியாசத்தை நமது இந்திய நாட்டில் உள்ள அறிவாளிகள், பிரமுகர்கள், தலைவர்கள் பெரி யோர்கள் இந்திய நாட்டில் உள்ள பொது இயக்கங்கள் சமய தத்துவங்கள் என்பவைகள் எல்லாம் அநேகமாய் ஒரே முகமாக விலக்க வேண்டும் என்றும் ஒழிக்க வேண்டும் என்றும் அந்தப்படி ஒழிக்காவிட்டால் நாட்டிற்கு சுதந்திரமில்லை, தேசத்திற்கு சுயமரியாதை இல்லை சமயத்திற்கு மதிப்பு இல்லை என்று பலவாறாக அபிப்பிராயம் கொடுத்தும் தர்மத்தின் பேராலும் மதத்தின் பேராலும் கூட்டங்கள் கூடித் தங்களுக்கும் தங்கள் ஆதிக்கத்திற்கும் தகுந்தபடியே தீர்மானங்கள் செய்து வருகின்றார்கள்.

உதாரணமாக, சமீபத்தில் பல இடங்களில் பார்ப் பனர்கள் ஒன்று கூடி வருணாசிரமத்தை உறுதிப்படுத்தி பார்ப்பனர் தவிர மற்றவர்கள் பார்ப்பனர்கள் வைப் பாட்டி மக்கள் பார்ப்பன சேவைக்காக கடவுளால் உண்டாக்கப்பட்டவர்கள் என்கின்ற கருத்துக்களடங்கிய சூத்திரர்கள் என்பதை நிலை நிறுத்த முயற்சித்திருப்பதும் சைவர்கள் என்பவர்கள் ஒன்று கூடி தீண்டாமை என்பதை நிலை நிறுத்தத்தக்க வண்ணமாக தீண்டாதவர்கள் என்பவர்களுக்கு தனிக் கோவில் கட்டிக் கொடுக்க என்று தீர்மானத்திருப்பதும் போதுமான உதாரணமாகும்.

எனவே இந்த மாதிரி வருணாசிரம தர்மங்களும் இந்தமாதிரி சைவர்களும் நமது நாட்டில் உள்ளவரை எந்த விதத்தில் பார்ப்பனீயம் ஒழிய முடியும்? எந்த விதத்தில் சமத்துவம் உண்டாகும்?

எந்தவிதத்தில் மக்கள் ஒற்றுமைப்பட்டு மானத்துடன் வாழ முடியும்? என்பதை யோசித்தால் இந்தியாவில் எப்படி பார்ப்பனீயம் நிலைத்து எந்தெந்த வழியில் நாட்டைப் பாழாக்கி வருகின்றது என்பது புலனாகும்.

எனவே, இந்தியாவில் பார்ப்பனீயமற்ற மதமே இல்லை என்றும் இந்துமதமென்னும் தலைப்பின் கீழ் எந்தமதமானாலும் சமயமானாலும் அகச் சமயமானாலும் அவற்றை எல்லாம் அடியோடு அழித்தாலல்லது மக்கள் கடவுள் நிலை என்பதையோ அன்பு நிலை என்பதையோ ஒருக்காலமும் அடைய முடியாததென்றே சொல்லுவோம்.

'குடிஅரசு' -  துணைத் தலையங்கம் - 14-04-1929

- விடுதலை நாளேடு 26. 1.20