புதன், 27 மே, 2015

பெரியாரைத் தோற்கடிக்க முடியாது-நேர்காணல்


தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுக்களத்தில், பேராசிரியர் தொ.பரமசிவன் தவிர்க்க முடியாத பெயர். வெகுமக்கள் வழக்காறுகள் மற்றும் நம்பிக்கைகள், சடங்குகள் சார்ந்தவை இவரது ஆய்வுகள். அழகர் கோயில், பண்பாட்டு அசைவுகள் போன்ற இவரது நூல்கள் பரவலான கவனத்தைப் பெற்றவை. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர். அவரிடம் உரையாடியதிலிருந்து...
உங்களுடைய ஆய்வுகளைக் கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகளைத் தாண்டி நாட்டார் வழக்காறுகள் வழி அமைத்துக் கொண்டிருக்கிறீர்கள், அதைப் பற்றிக் கூறவும்.

நாட்டார் என்கிற சொல்லால் நம்மை மாதிரி நகர்ப் புறத்துக்காரங்க யாரை அர்த்தப்படுத்துகிறோம்? பெரும் பாலும் அவுட்காஸ்ட் எனப்படும் ஊருக்கு வெளியே இருக்கிறவர்கள், கல்வியறிவு இல்லாதவர்கள், ஏழை மக்கள் இவர்களைத்தான் நினைக்கிறோம். நாட்டார் என்று சொன்னவுடன், ஏதோ வேடிக்கைப் பொருள் மாதிரி, பெரிய மீசை வைத்துக்கொண்டு, தலையில் துண்டு போட்டுக் கொண்டு சாமி ஆடுகிற கூட்டம் மாதிரிதான் நாம் நினைக்கிறோம்.
ஆனால், அப்படியில்லை. அவர்களைப் படிக்கிறதுதான் உண்மையாகவே தேசத்தைப் படிப்பதாகும். அவர்களுடைய வாழ்க்கை அசைவுகள் அர்த்த முடையவை. இன்னும் சொல்லப்போனால், நாட்டார் என்று நாம் அடையாளங்காட்டும் ஒவ்வொருவரும் படிக்கப்பட வேண்டிய புத்தகங்கள் எனறு சொல்லலாம். அந்தப் புத்தகங்களைத்தான் நான் ரொம்ப விரும்பிப் படிக்கிறேன். அவர்களிடம் இருக்கும் இயல்பான ஞானம். நம்ம நகர்ப்புறத்துக்காரங்ககிட்ட இல்லைங்கிறதுதான் சோகமான விஷயம்.
நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் பண்பாடு குறித்த ஆய்வுகளுக்கு ஒரு சித்தாந்தம் சார்ந்த அணுகுமுறை அவசியமா?
என்னுடைய ஆய்வுகள் மற்றவர்களைக் கவர்கிற இடமே, பெரியாரியத்தையும், நாட்டாரியலையும் நான் இணைத்துப் பார்ப்பதால்தான். இந்த வியப்பு, மார்க்சிய வாதிகளிடமும் இருந்தது. சாதாரணமாகச் சொன்னால், நாட்டார் வழக்காற்றியல் மீது நமது கவனத்க் குவித்தது இடதுசாரிகள்தான். எங்கள் ஊரைச் சேர்ந்த என் பக்கத்துத் தெருவைச் சேர்ந்த நா.வானமாமலை போன்றவர்கள்தான் இந்தத் துறையின் முன்னோடிகள். மார்க்சிய வெளிச்சத்தில் நாட்டார் மரபை அணுகுகிற போக்கு இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் தலைப்படத் தொடங்கியது.
உங்களுக்கு முன்னர் நா.வானமாமலை, பேராசிரி யர் லூர்து போன்றவர்களும் சமகாலத்தில் நீங்கள், நா.முத்துமோகன் போன்றவர்கள் இத்தகைய ஆய்வு களில் கவனம் செலுத்தி வருகிறீர்கள். இன்று இத் துறையில் நம்பிக்கையளிக்கும் ஆய்வுகளை யார் செய்து வருகிறார்கள்?
அப்படி நம்பிக்கையளிக்கக் கூடியவர்கள் யாரும் இல்லை. நாங்கள் நம்பிக்கையிழந்து போயிருக்கிறோம் என்பதுதான் இப்போதைய சோகம். நீங்கள் சொல்வது போல், வானமாமலை, லூர்து போன்றவர்கள் முதல் தலை முறையினர். எங்களைப் போன்றவர்கள் அவர்களுக்கு அடுத்த தலைமுறை. மூன்றாவது தலைமுறை இப்போது ஆள் இல்லையென்பதுதான் உண்மை.
என்னைவிட, முத்துமோகனுக்கு சித்தாந்தத் தெளிவு நிறைய இருக்கிறது. அவருடைய ஏகம், அநேகம், சாதியம் என்ற புத்தகத்துக்கு நான் முன்னுரை எழுதியிருக்கிறேன். என்னுடைய தெய்வங்களும் சமூக மரபுகளும் என்ற புத்தகத்துக்கு அவர் முன்னுரை கொடுத்திருக்கிறார். நாங்கள் இருவரும் ஒரே படகில் பயணிப்பவர்கள்.

நீங்கள் பாண்டியர்களுடைய வரலாற்றில் கவனம் செலுத்தப் போவதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இன்னும் செய்ய வேண்டியவை எவை?
களம் திறந்து கிடக்கிறது. ஆய்வாளர்களைத்தான் காணவில்லை. செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. ஆட்களும், கருவிகளும், நிறுவன வசதியும் தான் இல்லை. மீனாட்சியம்மன், பாண்டியர்களோடு நெருங்கிய தொடர்புடைய தெய்வம் என்பதோடு பழைய வரலாற்றாசிரியர்கள் நிறுத்திக்கொள்வார்கள்.
நான் கூடுதலாக ஒரு தகவலைத் தருகிறேன். அந்தத் தகவலை அவர்கள் கண்டுகொள்ளவும் இல்லை. கணக்கில் எடுத்துக் கொள்ளவும் இல்லை.
மதுரை மீனாட்சியம்மனுக்கு நவராத்திரி திருவிழாவில் ஒரு நாள் வேப்பம்பூ மாலை அணிவிக்கப்படுகிறது. பாண்டியர்களை அடையாளப் படுத்துகிற ஒரு மாலையை ஒரு தெய்வம் அணிகிறது. அதைப் பற்றி எந்த வரலாற்றாசிரியர்களும் இதுவரை ஆய்வு செய்யவில்லை.
அதிகரித்து வரும் வைதீக மரபின் தாக்கத்தினால் சிறு தெய்வ மரபுகள் அழிந்துவிடுமா?
உக்கிரம் பொருந்திய கையில் ஆயுதமேந்திய, அக்னி மகுடம் சூடிய தாய்த்தெய்வங்களை வைதீக மரபால் ஏற்றுக் கொள்ள முடியாது. மீனாட்சியம்மனைப் போல சாந்த சொரூபியாய் இருக்கும் தெய்வங்களைத்தான் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியும்.
இதை ஒரு மைக்ரோ பாலிடிக்ஸ் என்று கூடச் சொல்லலாம். எல்லாப் பெருந்தெய்வங்களின் கோயில்களிலும் சிறு தெய்வங்களைக் கொண்டு வந்து குடியமர்த்துவதனாலேயே சிறு தெய்வங்களை பெருந் தெய்வங்கள் தின்று விடும் என்று அச்சப்படத் தேவை யில்லை.

சமீபகாலமாக, தமிழகத்தில் சாதி அமைப்புகள் வலுவடைந்து வருகின்றன. மதவாத சக்திகளும் இவற்றை ஊக்கப்படுத்தி வருகின்றன. இந்த நிலை யில், அரை நூற்றாண்டுக்கு மேலாக சாதி ஒழிப்பு போராட்டத்தை முன்னெடுத்த பெரியாரின் முயற்சி கள் தோல்வியடைந்து விட்டதாக விமர்சனங்கள் எழுகின்றனவே?

பெரியார் தோற்றுப்போகவில்லை என்பது மட்டுமல்ல, பெரியாரைத் தோற்கடிக்க முடியாது. ஏனென்றால், அவர் வாக்கு வங்கி அரசியலோடு துளிக்கூட தொடர்பு இல்லா தவர். அவர் மனிதகுலத்தின் விடுதலைக்கு இந்தியாவின் தென்பகுதியில் முதல் நிபந்தனையாக முன்வைத்தது சாதி ஒழிப்பு என்பதைத்தான்.
எனவே, அவரை மனித குலத்தின் விடுதலையைத் தேடியவர் என்று சொல்ல முடியுமே தவிர, தமிழர்களின் விடுதலையைத் தேடியவர் என்றுகூட சொல்ல முடியாது. அந்த விடுதலைக்கான வழியாக அவர் சாதி ஒழிப்பை முன்வைத்தார்.
கடவுள் ஒழிப்பு, மத ஒழிப்பு அல்ல, சாதி ஒழிப்புதான். சாதி புகல்கிற கோயில்கள், சாதி புகல்கிற இலக்கியங்கள், சாதி புகல்கிற மொழி என்று அவர் அதை முன்வைத்தார்.
சாதிக்கு அங்கீகாரம் தருகிற எல்லாவற்றுக்கும் அவர் அங்கீகாரம் தர மறுத்தார். பெரியாரைப் பற்றி எதிர்மறை விமர்சனங்கள் வருவதற்குக் காரணம் நம் கல்வியறிவின் வக்கிரங்கள்தான். நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுக் கொண்டதால்தான் பெரியாரை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. ஊழல், அரசியல் ஒழுக்கமின்மை காரணமாக, பெரியாரை திராவிடக் கட்சிகளால் முன் வைக்க முடியவில்லை. பெரியாரை, சமூகத்திடம் கொண்டு செல்வதற்கான திறனை அவர்கள் இழந்து விட்டார்கள்.

பாளையங்கோட்டை வரலாற்றைப் பற்றி எழுதி வருவதாகத் தெரிவித்திருக்கிறீர்கள். அந்தப் பணி முடிந்து விட்டதா?
அந்தப் புத்தகப் பணி கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டது. பாளையங்கோட்டை, கிறிஸ்தவ சமய மரபுகளை உள்வாங்கிக்கொண்ட ஊர். சமய சகிப்புத்தன்மை என்பது அநத் ஊரைப் பொறுத்தவரை கெட்டவார்த்தை. ஏனென் றால், அது அங்கே இயல்பாகவே இருக்கிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே பார்வையில்லாதவர்களுக்கும் செவித்திறனில்லாதவர்களுக்கும் பள்ளிக்கூடங்களைக் கட்டிய ஊர் அது. அந்த முயற்சியில் நிறைய அய்ரோப் பியர்களும் இருந்தார்கள்.
அதனால்தான், கால்டுவெல் போன்ற அறிஞர்கள் நெல்லை மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள். ஹென்றி பவர் என்று ஒருவர் இருந்தார். கால்டுவெல்லுக்கு சமகாலத்தவர். பெரியார் எல்லாம் பிறப்பதற்கு முன்னாலேயே அய்ரோப்பிய சமூகம் அவரை திராவிட இயல் அறிஞர் என்றுதான் அடையாளப்படுத்தி யிருக்கிறது. அவருடைய கல்லறையில் எமினென்ட் டிராவிடியன் ஸ்காலர் (Eminent Dravidian Scholar) என்றுதான எழுதி வைத்திருக்கின்றனர். பாளையங் கோட்டை தேவாலயங்களில் இப்போது கேட்டாலும் ஹென்றி பவரின் வேதாகம மொழிபெயர்ப்பைத்தான் வாசிக்கிறோம் என்று சொல்வார்கள்.
முதல் அறிவியல் தமிழ் நூல் என்று சொல்லப்படுகின்ற பூமிசாஸ்திரத்தை எழுதிய சார்லஸ் தியோபலஸ் இரேனியஸ் என்ற அறிஞரும் பத்தொன்பது ஆண்டுகள் பாளையங்கோட்டையில் வாழ்ந்திருக்கிறார்.
பாளையங்கோட்டையைப் பற்றிய இதுபோன்ற நிறைய நுணுக்கமான சான்றுகள் அழிந்துவிட்டன. அதற்குப் பிறகு தான் நான் என் ஆய்வுகளைத் தொடங்கினேன். ஹென்றி பவரின் நூல்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஒரு வியப்பான செய்தி என்னவென்றால், ஹென்றி பவர் சீவக சிந்தா மணிக்கு ஒரு உரை எழுதியிருக்கிறார்.
சீவக சிந்தாமணி யைப் பாடம் சொல்வதற்கு தமிழ் ஆசிரியர்கள் இப்போதும் பயப் படுவார்கள். ஆனால், ஹென்றி பவர் 1865லேயே நாமகள் இலம்பகம் பகுதிக்கு உ.வே.சாவிற்கு முன்னர் உரை எழுதி யிருக்கிறார். ஆனால், உ.வே.சா. அதைச் சொல்லவே யில்லை.

-
சந்திப்பு: என். கவுரி
- நன்றி: தி இந்து (தமிழ்), 17.5.2015
குறிப்பு: இந்நேர்காணலில் பேராசிரியர் தொ.பரமசிவன் தெரிவித்துள்ள முழுமையான சுதந்திரமான அவரின் கருத்துக்கள் ஆகும்.
-
ஆசிரியர்
-விடுதலை,17.5.15