திங்கள், 24 ஜூன், 2019

ஒரே நாடு ஒரே மொழி?



* தந்தை பெரியார்


மத்திய சட்டசபையில் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லும் போது மவுலானா ஆசாத் இந்துஸ்தானியில் சொன்னதாகவும், அவர் சொன்னது இன்னது என்று தெரியாமல் தென்னாட்டுப் பொறுக்கு மணிகள் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்துக் கொண்டிருந்து விட்டுப் பின் ஒவ்வொருவராக எழுந்து, இந்துஸ்தானியில் சொன்னது புரியவில்லை என்றும், இந்துஸ்தானி தெரிந்த வர்களுக்குக் கூட மவுலானா (பண்டித) இந்துஸ்தானி புரியவில்லை என்றும் கூறியதாகவும், இதைக் கேட்டுச் சாந்த மூர்த்தியின் பிரதிநிதி என்று மதிக்கப்படும் முதல் மந்திரி தோழர் நேரு அவர்கள், இனி மேல் நான் பேசுவதெல்லாம் இந்துஸ்தானியில் தான் பேசப் போகிறேன்; இருப்பதற்குப் பிடித்தமாயிருந்தால் வாயை மூடிக்கொண்டு கப், சிப் என்று பேசாமலிருங்கள்; இல்லாவிட்டால் வெளியே போய்விடுங்கள் என்று மிகவும் சாந்தமான முறையில் சொன்னதாகவும், நேரு அவர்கள் இவ்வாறு சொல்வது பிரச்சினையைத் தீர்த்து விடுவதாகுமா? என்று தோழர் பட்டாபி அவர்கள் எடுத்துக்காட்டியதாகவும் ஒரு செய்தியும், இந்துஸ்தானி யில் ஒருவர் கேள்வி கேட்க அதற்குத் தோழர் ஜான் மத்தாய் அவர்கள் மலையாளத்தில் பதில் சொன்ன தாகவும், அதை வரவேற்றுப் பலரும் சிரித்தார்கள் என மற்றொரு செய்தியும், சமீபத்தில் வெளிவந்ததைத் தோழர்கள் பார்த்திருக்கலாம்.

இந்திய யூனியனின் பாராளுமன்றம் என்று சொல் லப்படும் மத்திய சட்டசபை இப்போதைய நிலையில் திராவிடர்களுக்குக் கொஞ்சமும் பயன்படமாட்டாது என்றும், திராவிடர்களை அவமதிப்பதற்கும், சிறுமைப் படுத்தவதற்கும், அடக்குவதற்கும், ஒடுக்குவதற்குமே அந்த சபை கருவியாக இருக்க முடியுமென்றும், நாம் நெடுநாளாய்க் கூறி வந்ததையே இந்தச் சம்பவம் வற்புறுத்துகின்றதென்றாலும், நமது கருத்தை முன்பு ஏற்றுக் கொள்ளாதவர்களும் கூட நேரிடையாக இந்த உணர்ச்சியை - ஆணவத்திற்கு அடங்கி அடிமைகளாக இருக்க வேண்டிய பரிதாப நிலையை - உணர்ந்து அனுப விப்பதற்கும் இந்தச் சந்தர்ப்பம் பயன்பட்டிருக்கிறது என்பதை எண்ணி வரவேற்கிறோம். முதன் மந்திரி நேரு அவர்கள் நான் இனிமேல் பேசுவதெல்லாம் இந்துஸ்தானி யில்தான் பேசப்போகிறேன் என்று முரட்டுத்தனமாகப் பதில் கூறிய பிறகு, தோழர் ஜான்மத்தாய் மலையாளத்தில் பதில் கூறினாரென்றால், அந்தச் சம்பவம் நமது தேசியத் தாள்கள் சொல்வது போல தமாஷுக்கு உரிய சம்பவ மாகத்தான் இருக்க முடியுமா? என்றும், உன்னுடைய உரிமைக்கு என்னுடைய உரிமை குறைந்ததில்லை என்கிற உரிமை உணர்ச்சியைப் பிரதிபலிக்கவில்லையா? என்றும் கேட்கின்றோம். மேலும், தோழர் ஜவஹர் அவர்களுக்கு இந்துஸ்தானியில் பேசுவதற்கு எவ்வளவு உரிமையும், நியாயமும், இருக்கிறதோ அந்த உரிமையும், நியாயமும், ஏன் மற்றவர்களுக்கு இல்லாமல் போகு மென்றும், அதை எப்படி தோழர் ஜவஹர் அவர்கள் மறுக்க முடியும்? எனவும் எண்ணிய அடிப்படையின் மீதுதான், முதலாளிகளின் பாதுகாவலரான தோழர் ஜான்மத்தாய் மலையாளத்தில் பதில் சொல்லியிருக்க வேண்டுமென்று எவருமே எண்ண வேண்டும். இந்த உரிமை உணர்ச்சியை எவரும் குறை சொல்ல முடியாது.

ஆனால், நாட்டின் பல சிக்கல்களை அறுத்து, முடிவு கட்டுவதற்காகக் கூடியிருக்கும் இவ்வளவு பெரிய அறிவாளிகள், ஒருவர் கருத்தை மற்றவருக்கு அறிவித்துக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்கிற நியாயத்தைப் பின்பற்றாமல், தான் தோன்றித்தனமாய் ஒவ்வொருவரும் அவரவர்கள் மொழிகளில் பேசினார்கள் என்றால், இது எந்த நியாயத்திற்கு ஒத்ததாக இருக்க முடியும் எனவும், வாத்தியாராய் இருக்கும் தோழர் ஜவஹர் அவர்களே இப்படி வழி காட்டுவார்களேயானால், மாணவர்கள் தானங்களிலே இருக்கும் மற்ற மெம்பர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் எனவும், அங்கேயே ஒருவர் சொல்லியது போல இது ஏகாதிபத்திய மனப்பான் மையைக் காட்டவில்லையா? எனவும், இந்தப் போக்குத் தானே நாட்டின் எல்லாப் பிரச்சினைகளிலும் கையாளப் படும் எனவும், நம் திராவிடத் தேசியத் தோழர்களைக் கேட்க ஆசைப்படுகின்றோம்.

பலமொழி பேசப்படும் ஒரு துணைக் கண்டத்திலுள்ள சட்டசபையில், இதுபோல மொழித்தகராறு வருவது ஆச்சரியப்படத்தக்கதல்ல என்றாலும், இந்த நிலை மையை வளர விடாமல் இருப்பதற்கு என்ன வழி? என் றால், சபைத்தலைவர் தோழர் மாவ்லங்கர் சொன்னது போல் எல்லோரும் இந்துஸ்தானியைக் கற்றுக் கொண்டு விடுவதுதான் தகராறு தீரும்வழி என்று தேசியத் தலை வர்களால், தொண்டர்களால் கூறப்பட்டு வருகின்றது.

இந்தி அல்லது இந்துஸ்தானி அல்லது பல மொழி களையும் கலந்து பேசப்படும் புதுக்கலவை மொழி என்கிற முறையில் ஏதேனும் ஒரு மொழி இந்தியா என்கிற துணைக் கண்டத்திற்குப் பொது மொழியாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதையும், பலவேறு மொழிகளும், நாகரிகப் பழக்க வழக்க மாறுபாடுகளும் நிறைந்து, குணச் செயல்களாலும் வேறுபட்டு விளங்கும் இந்தியாவை, ஒரே கலாச்சாரம் நிரம்பிய ஒரு நாடு என்று கொள்வது எல்லாப் பிரச் சினைகளையும் சிக்கலாக்கக் கூடிய ஒரு பெரிய தவறு என்பதையும், பல முறை விளக்கி வந்திருக்கிறோம். கனம் ஆச்சாரியாரவர்கள் இந்தியைக் கட்டாயமாக இத்திராவிடர் நாட்டில் புகுத்திய நேரத்தில் அதை எதிர்த்து நமது திராவிடத் தந்தை பெரியாரவர்களும், ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் குழந்தை களுடன் சிறை புகுந்து, இருவரை உயிர்ப்பலி கொடுத்து, உலகத்திலேயே இம்மாதிரியான ஒரு போராட்டம் நடந்ததில்லை என்று பேசும்படியாகச் செய்து, அதை வெறுத்து ஒழித்திருப்பது உலகமே மறந்துவிட முடியாத சம்பவமாகும்.

திராவிடர்கள் இந்தி, இந்துஸ்தானி வேண்டாமென்று எதிர்ப்பதற்கு காரணம் என்ன? இந்துஸ்தானியை வைத்தே இவ்விந்தியத் துணைக் கண்டத்தை ஆள வேண்டுமென்று நினைப்பவர்கள் இதனை எண்ணிப் பார்க்க வேண்டும்.

திராவிட நாட்டில் கட்டாய இந்தி பரவக் கூடாது என்று கிளர்ச்சி செய்து வெற்றி பெற்றவர்கள், பகுத்தறிவு வாதிகள். இந்தி என்ற மொழியின் மீது ஏன் அவர்களுக்கு வெறுப்பு? மனதிலுள்ளதை வெளிப்படுத்தும் கருவிதான் எந்த மொழியுமே தவிர, எந்த ஒரு மொழிக்கும் தனிப்பட்ட தெய்விக சக்தியோ, வேறு மகாத்தியமோ இருக்கிறது என்பதை நம்பாதவர்கள் - ஒப்புக் கொள் ளாதவர்கள் - பகுத்தறிவுவாதிகள். அப்படியிருக்க, அவர்கள் ஏன் கட்டாய இந்தியை எதிர்த்தார்கள்?

இதனை எண்ணிப் பார்க்க வேண்டிய ஒவ்வொரு நேரத்திலும், எண்ணுவதற்கே மறுத்துவரும் தேசியத் திராவிடர்கள் தயவு செய்து இப்போதாவது நினைத்துப் பார்க்க வேண்டுகிறோம்.

இந்தியத் துணைக் கண்டத்தை ஒரு நாடு என்றும், ஒரே கலாச்சாரம் நிரம்பியதென்றும், வடநாட்டுத் தேசியத் தலைவர்கள் எல்லாம் சொல்லி வருவதையே, இந்த நாட்டுத் தேசிய வீரர்கள் என்று பட்டங்கட்டிக் கொண்டிருக்கும் மற்றவர்களும் சொல்லி வருகிறார்கள். ஒரே கலாச்சாரம் என்பதன் உண்மையான யோக்கியதை என்ன?

"எத்தனையோ நாடுகளின் கலாச்சாரங்கள் இந்த நாட்டில் வந்து கலந்தன. அவைகளையெல்லாம் தன்னுள் அடக்கித் தனது தனித்த உயர்வான கலாச்சாரம் விளங்க நிற்கிறது இந்தியா. இதைக் கண்டு நான் பெருமையடைகிறேன்"  என்கிறார் தோழர் ஜவஹர்லால். அவர் எந்தக் கலாச்சாரத்தை உயர்வானது என்று பாராட்டுகிறாரோ அந்தக் கலாச்சாரம் தான் திராவிடர் களைச் சூத்திரர்களாக்கி, தேவடியாள் பிள்ளைகளாகச் செய்து, சமுதாயத்தில் தாழ்வுறச் செய்து, ஒட்ட முடியாத பல ஜாதிகளாக்கி, கல்லையும் மண்ணையும் கடவுள்களாகக் கும்பிடச் செய்து, பார்ப்பனியம் மட்டும் உறிஞ்சிப் பிழைப்பதற்கும், மற்ற மக்கள் வாழ்வு எல்லாம் உறிஞ்சப்பட்டு வருவதற்குமாக ஆகிவிட்டது என்பதை யும், அந்த ஒரு கலாச்சாரத்திற்கு இந்த நாடு இடங் கொடுத்ததால்தான் நெஞ்சு உறுதியும் நேர்மைத் திறமு மின்றி, வஞ்சகத்தை வீரம் என்றும், தந்திரத்தை அறி வுடைமை என்றும் கருதச் செய்து, காரண காரியத்தைக் கண்டறியும் சக்தியை, இழக்க செய்துவிட்டது என்ப தையும்; அந்த ஒரு கலாச்சாரம் இன்னும் புனிதமானது என்று மதிக்கப்படுகிற நிலைமையினால் தான் இந்த  நாடு முற்போக்குத் தன்மையை இழந்திருக்கின்றது என்பதையும், அந்த ஒரு கலாச்சாரம் தான் பார்ப்பனிய இந்துமதக் கலாச்சாரம் என்பதாகும் என்பதையும் நாம் பலமுறை எடுத்துக்காட்டி வந்திருக்கின்றோம்.

இந்தியா ஒரு நாடு என்பதையும்,  அதற்கு ஒரு பொது மொழி தேவை என்பதையும் திராவிடர்கள் - பகுத்தறிவு வாதிகள் - ஒப்புக் கொள்ளாததை, எந்த அறிவுடைய வனும் மறுக்க முடியாத விதத்தில் திராவிடர் கழகம் விளக்கி வந்திருக்கின்றது. விளங்கிக் கொள்ள மறுப்பவர் களுக்கு விளங்காமலிருக்க முடியுமே தவிர, மற்றபடி அவ்விளக்கங்கள் எந்த மனிதனுக்கும் விளங்காமலிருக்க முடியாது.

ஒட்டி வாழ முடியாத - வாழுவதற்கான இயல்பில்லாத - ஒன்றையொன்று வஞ்சித்தே வாழும்படியான இயல்பினையூட்டி வருகிற வருணாசிரம இந்து மதக் கலாச்சாரம், என்றைக்கு இந்த நாட்டை விட்டு ஒழிகிறதோ, ஒழிப்பதற்கு எப்பொழுது துணிவு பிறக்கிறதோ, அப்பொழுது தான் இந்தியாவை ஒரு நாடு என்று சொல்ல முடியும் என்பதையும், அதற்கு உபாயமாக எமது பெரியாரவர்கள் கூறியிருக்கும், காந்தி நாடு, காந்தி மதம் என்பதைக் கைகொண்டு அரசாங்கத் தின் மூலமாகப் பரப்பினால்தான், ஒரு நாடு என்கிற சித்தாந்தம் நிலைக்க முடியும்; பிரயோஜனத்தையும் கொடுக்குமென்பதையும், அந்த நிலையில் இந்த நாட்டிற்கு எந்த ஒரு மொழியையும், பொது மொழி யாக்குவது தான் எளிது என்பதையும், உண்மையிலேயே நாட்டு முன்னேற்றத்தில் அக்கறையுடைய தேசிய வாதிகள் என்பார்கள், விரைந்து தெளிவடைய வேண்டியனவாகும்.

ஜாதி பேதமற்ற - மத உணர்ச்சிக்கும் இடமில்லாத - சமதர்மக் குடியரசைக் காண்பதற்கான முயற்சி சிறிதும் இல்லை என்பதையும், மேலும் மேலும் இந்து மத சாம்ராஜ்ய ஆட்சியை நிலை நாட்டுவதற்குதான், சமதர்ம வீரர் ஜவஹர், ஜெயப்பிரகாசத்திலிருந்து சனாதனச் சாக்கடைச் சங்கராச்சாரி வரை முயற்சிக்கப் பட்டு வருகிறது என்பதையும், காந்தியவர் படுகொலை கூட இந்துமத பெருமையோடு அய்க்கியப்பட்டு விட்டதென்பதையும் பார்க்கும்போது, இந்தியாவை ஒரு நாடு என்பதும், இதற்கு இந்துஸ்தானியோ, இன்னொரு மொழியோ பொது மொழியாக இருக்க வேண்டும் என்பதும் வடிகட்டின வடநாட்டு ஏகாதிபத்தியத்தையும், வருணாசிரம ஆட்சியையும் புகுத்துகிற முயற்சியே யாகும். இம்முயற்சி, திராவிட உணர்ச்சியுடைய ஒருவன் உயிரோடு இருக்கும் வரையிலும் வெற்றிதராது என் பதை, இப்பொழுதும் வற்புறுத்திக் கூறுகிறோம்.

'குடிஅரசு' - தலையங்கம் - 28.02.1948

- விடுதலை நாளேடு, 23.6.19

புதன், 19 ஜூன், 2019

சுயராஜ்யம் (முதல் அத்தியாயம்) - சித்திரபுத்திரன்

3.4.1948  - குடிஅரசிலிருந்து

சென்ற வாரத் தொடர்ச்சி

என்ன கண்டு பிடித்தார் என்றால் இவ் வளவு அக்கிரமத்துக்கும், அநீதிக்கும், கொலைக்கும், கொள்ளைக்கும், நாசத்துக்கும், கற்பழிப்புக்கும், கொலை பாதகத்துக்கும் காந்தியார்தான் காரணம் என்று கண்டு பிடித்தார். சரியான கண்டுபிடிப்புத்தானே இது? சரியோ தப்போ ஆண்டவன் கண்டு பிடித்த முடிவு என்றால் அப்புறம் அப்பீல் ஏது?

தீர்ப்பு

முடிவுக்கு ஏற்ற தண்டனை வேண்டாமா? வேண்டும். யோசித்தார் யோசித்தார். நிரம்பவும் குறைந்த தண்டனை கொடுக்க வேண்டுமென்று கருதி ஒரு சிறு தண்டனை கொடுத்தார். எப்படிக் கொடுத்தார்? தன்னடிச் சோதிக்கு அழைத்துக் கொள்வது என்ற மோட்சப் பிராப்த (மரண) தண்டனை கொடுத்தார். அதை எப்படி நிறைவேற்றினார் என்று கேட்பீர்கள். தானே கொலையாளியாய் இருந்து கொல்லுகிற மரண தண்டனை கொடுத்தார். கடவுள் பார்ப்பன ரூபம் தானே, ஆதலால் பார்ப்பனனாக, கோட்சேயாக, பி.ஏ.படித்த பார்ப்பனனாக வந்தார். ஒன், டூ, திரி என்று மூன்று வேட்டுகள் போட்டார். சரி காந்தி முடிந்தார். மோட்சமடைந்தார்.

இந்தப் பிராதை கடவுளே அல்லாமல் ஒரு சர்வதேச சங்கம் விசாரித்தாலும் இந்தத் தண்டனைதானே கொடுக்கும். இதற்குக் கடவுள் எதற்கு? என்று சிலர் கேட்கலாம்.

அதற்கும் இதற்கும் வெகு வித்தியாசம் உண்டு.

சர்வதேச சங்கம் தண்டனை கொடுத்தால் காந்தியாருக்கு அது தெரியும். தண்டனை நிறைவேற்றப்படும்வரை அவர் மனம் பதறும். அப்பீல் அல்லது கருணை மனு போடச் சொல்லும். பிறகு என்ன ஆகுமோ? கடைசி காலத்தில் அவர் மனம் வருந்தலாமா? ஆகை யால் ஆண்டவன் அந்தப் பிராதைத் தன் பைலிலேயே வைத்துக் கொண்டு காந்தியா ருக்கும் மனம் நோகாமல் பிராதுக்காரருக்கும் திருப்தி ஏற்படும்படி பார்ப்பனனாகவே ஆண்டவன் வந்து கேசையும் தண்டனை யையும் முடித்துத் தள்ளிவிட்டார்.

கடவுளே கொலைகாரனாக வந்து காந்தியைக் கொன்று விட்டதால், கொலை செய்யப்பட்ட விஷயமும் கிணற்றில் விழுந்த கல்லுப்போல் அடியில் போய் அமர்ந்து விட்டது.

அடுத்தபடி நேரு கேஸ் விசாரணையில் இருக்கிறது. பிரசாரத்துக்கு வாரண்டு வந்து தேடுகிறது. அகிம்சா தர்ம சுயராஜ்யத்தின் முதல் அத்தியாயம் முடிந்தது.

-  விடுதலை நாளேடு, 14.6.19

நாகரிகமும் நமது கடமையும் (2)



10.01.1948 - குடிஅரசிலிருந்து...

25.5.2019 -இன் தொடர்ச்சி

ஒரு காலத்தில் தனித் தனி தத்துவம் நாகரிகமாகக் கருதப் பட்டது. உதாரணமாக, ஒரு தனித்தனி ஜாதி நன்மையும் - தேச நன்மையும் சிலாக் கியமாகக் கருதப்பட்டது. ஆனால் ஒரு ஜாதியின் அனுகூலம் பிற ஜாதி யானுக்குப் பாதகம் என்பதையும், ஒரு தேச நன்மை மற்றொரு தேசத்திற்குப் பொல்லாங்கு என்பதையும், நாம் இன்று நன்கு உணர ஆரம்பித்து விட்டோம்.

அனுபவம், அறிவு, ஆராய்ச்சியால் முற்போக்கு

தோழர்களே! நான் குறிப்பாக ஒரு விஷயத்தைப்பற்றி வற்புறுத்தி இங்கு கூற விரும்புகிறேன். அதாவது நாம் அனுபவ முதிர்ச்சியால், அறிவு ஆராய்ச்சியால், நாம் முற்போக்காகிக் கொண்டு வருகிறோம் என்பதேயாம். நாம் எல்லா மனிதர்களையும் அறி வின் உணர்ச்சியால் ஆழ்ந்து கவனிக் கிறோம். உதாரணமாக, வியாபாரி களை-மக்கள் சமுகத்தின் நலனைக் கெடுத்து லாபமடையும் கோஷ்டியைச் சேர்ந்தவ ர்களென்றும், லேவாதேவிக்காரர்களை - மனித சமுக நாச கர்த்தாக்களென்றும், மத ஆதிக்கங்கொண்ட வர்க்கத்தினர்களை-மனித சமுக விரோதிகளென்றும் கண்டிக் கின்றோம்.

நாகரிகம் என்பது பிடிபடாத ஒரு விஷயமென்று முன்பே கூறினேன். நம் நாட்டுப் பெண்கள் எப்படி பெல்ட் கட்டாமல் சேலை கட்டு கிறார்களென்றும் அது இடுப்பில் எவ்வாறு தங்கி இருக்கிறதென்றும், தலைக்கு ஊசி இல்லாமல் பெண்கள் எவ்வாறு மயிர்களைச் சேர்த்து முடிந்து கொள்ளுகிறார்களென்றும், நாம் சாப் பாட்டுக்கு தினம் ஒரு இலை எப்படிச் செலவு செய்கின்றோம், என்ன மகத்தான நஷ்டமென்றும், மேனாட்டார் ஆச்சரியப் பட்டு நம்மவர்களைக் கேட்பதையும் கேட்டி ருக்கிறோம்.

ஒவ்வொருவரும் அவர்களின் செய் கையைச் சரியாக உணராத தினால் சிலவற்றை ஆச்சரியமாகக் கருத நேரிடுகிறது.

நம்மிடையேயுள்ள சாதி அபி மானம், சொந்தக்கார அபிமானம், பாஷா அபிமானம், தேசாபிமானம் எல்லாம் தொலைய வேண்டும். இல்லாவிட்டால் எந்த நல்ல விஷயத் திலும் நாம் முடிவு காணுவது சரியாக ஆகிவிடாது.

காந்தியார் மேனாட்டில் முழுங் கால் துண்டோடு-போதிய ஆடையின்றிப் போன பெருமையைப்பற்றி ஒரு நண்பர் குறிப்பிட்டார்.

இது எவ்வளவு தூரம் புத்திசாலித்தனமான தாகும். சவுகரியத்திற்காகவும்-நன் மைக்கா கவும் அங்கு அதிக ஆடைகளைப் பந்தோ பஸ்துக்காக அணிந்து கொள்ளாமல், பிடிவாதத்தோடு-கேவலம் இந்திய தர்மம் என்ற வெறும் எண்ணத்திற்காக, குளிரில் விரைத்துப் போக இங்கிலாந்து வாசம் செய்தது எவ்வளவு தூரம் நியாயமான செய்கையாகும்?

பகுத்தறிவுகொண்டு பாடுபட வாரீர்!

புதிய எண்ணங்களும், புதிய எழுச்சிகளும்-புதிய காரியங்களும் நிகழுகின்றன. நீங்களும் காலப் போக்கின் உயரியபலனை வீணாக் காது பகுத்தறிவை மேற்போட்டுக் கொண்டு ஜனசமுதாய நன்மையைத் தேடி பாடுபட முன் வாருங்கள். உங்களுடைய முயற்சிக்கு எல்லாம் வெற்றியே உண்டு.

வெறும் கடவுள் நம்பிக்கை கொண்டி ருந்தவர்களும் கூட, தங்களுடைய போக்கை மாற்றிக் கொண்டு முயற்சி மெய்வருத்தக் கூலி தரும் என்று சொல்லி வருகிறார்கள்.

ஆகவே தோழர்களே! நீங்கள் தன் னம்பிக்கை கொண்டு-மக்களின் விடுதலைக்குச் சரியான வழிகளில் பகுத்தறிவை அடிப் படையாகக் கொண்டு போராட வாருங்கள்.

- விடுதலை நாளேடு, 8. 6 .19

ஞாயிறு, 16 ஜூன், 2019

இந்தி நுழைகிறது

தந்தை பெரியார்




செகண்டரிக் கல்விமுறையில் திருத்தம் என்ற பெயரில் 49, 50ஆம் ஆண்டுக்காக என்று சென்னை சர்க்கார் சென்றமாதம் 30ஆம் நாள் வெளியிட்டிருக்கும் திட்டத்தின் வழியாக மீண்டும் சென்னை மாகாணத்தில் இந்தியை நுழைக்கின்றார்கள்.

சென்னை சர்க்கார் செய்திருக்கும் கல்வி மாறுதல்களில் குறிப்பிடக் கூடியவை.

(1) முதல் பாரத்திலிருந்து 3ஆம் பாரம் வரை கைத்தொழிலை அடிப்படையாக வைத்துப் பாடத்திட்டம் வகுத்திருப்பது.

(2) ஆந்திரம், கன்னடம், மலையாளம் ஆகிய மண்ட லங்களில் இந்துஸ்தானி, சமஸ்கிருதம், அரபு, பாரசீக மொழி அல்லது உருது ஆகியவைகளில் ஏதேனும் ஒன்று 2ஆவது மொழியாக கட்டாயமாகப் படிக்க வேண்டிய தாகும். தமிழ் மண்டலத்தில் மட்டும் மாணவர் விரும் பினால் படிக்கக் கூடிய விருப்பப்பாடமாக இருக்கும்.

(3) ஆங்கிலம் 2 ஆம் பாரத்திலிருந்து 6ஆம் பாரம் வரை கற்பிக்கப்படும். இது 3 ஆவது மொழியாக இருக்கும்.

குறிப்பிடத்தகுந்த இந்த மூன்று மாறுதல்களைப் பற்றியும் நம் கருத்து என்ன? என்பதை விளக்க வேண்டு மென்றாலும், இப்போது 2 ஆவது மாறுதலைப்பற்றி மட்டும் அதாவது தமிழ் நாட்டில் விரும்பினால் இந்தி படிக்கலாம், விரும்பாவிட்டால் கட்டாயம் இல்லை; ஆனால் தமிழ்நாடு தவிர்த்த மற்ற பகுதிகளில் கட்டாய மாகப் படிக்க வேண்டும். என்கிற இரட்டை முறை (சின்ன வருணாசிரம முறை)யைப் பற்றி மட்டும் குறிப்பிடுகிறோம்.

ஆச்சாரியாரின் மந்திரிசபை, வடநாட்டில் யாருக்கோ ஒருவருக்கு வாக்குக் கொடுத்தேன் என்ற சாக்கைக் கூறிச் சென்னை மாகாணத்தில் இந்தியைக் கட்டாய இந்தியாகத் திணித்து ஆயிரக்கணக்கான தாய்மார்களையும், கட்டிளங் காளைகளையும் வெஞ்சிறை (காங்கிரஸ்காரர் புகுந்த சொகுசான சிறையல்ல) புகச் செய்தும், ஈவு இரக்கம் என்பதைச் சுட்டுப் பொசுக்கி விட்ட ஆட்சியாளர்களால், திராவிடத்தின் தனிப் பெருந்தந்தை வெப்பமிகுந்த பெல்லாரிச் சிறையில் தள்ளப்பட்டு, உடல் வாடவும் தாளமுத்து-நடராஜர்களின் பிணங்களைக் கண்டும் வெறி தணியாமல் அற்பாயுளில் ஓடிவிட, அதன்பின் வந்த ஆலோசகர் சர்க்கார் அந்தக் கட்டாய இந்தியை ரத்துச் செய்ததை நாங்கள் மறக்கவில்லை என்பதை இப் போதையச் சென்னைச் சர்க்கார் - ஓமந்தூரார் மந்திரிசபை இந்த உத்தரவால் காட்டிக் கொண்டிருக்கிறது.

எதிர்ப்பிருப்பதை மறக்காத இந்த மந்திரிசபையார், எதிர்கால விஞ்ஞான வாழ்வுக்குக் கொஞ்சமும் பயன் படக்கூடிய நிலையில் இல்லாத, மனிதப் பண்பை விளக் கும் இலக்கியப் பெருமையையுடையது என்றுகூட சொல் லும்படியான நிலையில் இல்லாத, மிகுந்த பிற்போக்குடைய இந்தியை மீண்டும் சென்னை மாகாணத்தில் திணிக்க முன்வந்து விட்டார்கள்.

தமிழ், தெலுங்கு போன்ற தொன்மையும், பண்பாடும் நிறைந்த மொழி மண்டலங்களில், அவ்விரண்டும் அற்ற இந்தியைப் புகுத்த நினைப்பது தவறு! புகுத்துவதற்காகச் செய்யப்படும் முயற்சி எவ்வளவு பெரியதாயிருந்தாலும், நீண்ட காலம் தொடர்ந்து அந்த முயற்சி நடந்தாலும் திராவிட மண்டலத்தில் அது நிறைவேறாது! கருதுகிற பலன் கைகூடாது என்ற அறிஞரின் வாக்கியத்தை ஆள வந்தார்களுக்கு நாம் நினைப்பூட்டுகிறோம். இக்கருத்தைச் சொல்லுகிறவர் பெரியார் இராமசாமி அல்ல! சர்.கே.வி ரெட்டி நாயுடும் அல்ல! பசுமலைப் பாரதியாரும் அல்ல! ஒரு சென்னை மாகாணத்தவரே அல்ல! வடநாட்டுக்காரர், ஒரு பல்கலைக் கழகத் துணைவேந்தர், அமர்நாத்ஷா என்பதையும் அறிய வேண்டுகிறோம்.

மக்களின் அறிவு வளர்ச்சிக்குத் துணை செய்ய முடியாத இந்த இந்தியை, இந்தியாவின் பெரும் பகுதியில் பேசினால் புரிந்து கொள்ள முடியும் என்ற காரணத்தையும், வடநாட்டு வியாபாரத்துக்கு வசதியாயிருக்க முடியும் என்ற காரணத்தையும், வடநாட்டுத் தலைவர்களோடு அரசியல் குறித்து அளவளாவ அமைப்புடையது என்ற காரணத்தையும், வேளைக்கு ஒன்றாகக் கூறி வந்த காங்கிரஸ்காரர்களின் உண்மையான நோக்கம், திராவிட நாகரிகம், கலாச்சாரம் ஆகியவைகளைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, திராவிடர்கள் ஆரிய நாகரிகத்தை ஏற்று மானமிழந்து வாழ்வதுடன், வடநாட்டாருக்கு என்றைக் கும் மீளா அடிமைகளாகவே விளங்க வேண்டும் என்பது தான் என்கிற உண்மையைப் பலமுறை நாம் விளக்கி வந்திருக்கின்றோம். இதை நாம் முன்பு கூறியபோது ஒப்புக் கொள்ளாத காங்கிரஸ் மந்திரிகள், இப்பொழுது வெளிப்படையாகவே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அரசாங்க உத்தியோகங்களுக்கு இந்திப்படிப்பும் ஒரு தகுதி என்கிற அமைச்சர்களின் உண்மையான நோக்கம் என்ன?

உன் நாட்டில் உனக்கு உத்தியோகம் வேண்டுமானால் இந்தியைப் படி! என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டு, மாகாணத்தின் மற்ற மண்டலங்களில் இந்தியை, 2 ஆவது மொழியை கட்டாயப்படுத்தி விட்டு, தமிழ் மண்டலத்தில் மட்டும் விரும்பினால் படியுங்கள்! விரும்பாவிட்டால் உங்கள் இஷ்டம்! என்கிற இந்தத் திட்டத்தைக் கண்டு திராவிடர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்று மந்திரி சபை எதிர்பார்க்க மாட்டாது என்று நம்புகிறோம். ஏன் என்றால் இந்தி இந்த நாட்டில் பரவக்கூடாது என்று கருதுபவர்களின் உண்மையான நோக்கம் என்ன? என்பதை இந்த மந்திரிசபை அறிந்தே இருக்க வேண்டும். இந்தி என்பது வேற்று மொழி - வடநாட்டு மொழி என்கிற துவேஷத் திற்காக இந்நாட்டில் எதிர்ப்பு உண்டாகவில்லை. இந்தியைப் பரப்புவதால் இறந்துபட்ட சமஸ்கிருதத்திற்கு - இந்த நாட்டு மக்களைச் சூத்திரர்களாகவும், தீண்டப் படாதவர்களாகவும், வேசி மக்களாகவும் ஆக்கி வைத்த சமஸ்கிருதத்திற்கு - புத்துயிர் கொடுக்கப்பட்டு, பார்ப்பான் காலைக் கழுவிக் குடிப்பதே மோட்சம் என்று கருதும்படி செய்த பழைய நிலைமை மாறி, பார்ப்பானுக்குப் பிறந்த வர்கள் நாங்கள் என்று சொல்லும்படியான கேவலமான புதிய நிலைமை உண்டாகத்தான் பயன்படுவதாயிருக்க முடியும் என்பதையும், இந்த அனுமானம் காட்சிப் பிரமாணத்தினால் கண்டது என்பதையும், இதுதான் இந்தி பரவக் கூடாது என்பவர்களின் உண்மையான நோக்கம் என்பதையும் அறிந்து கொண்டிருக்கிற மந்திரி சபை - மேலும் இந்தியை எதிர்ப்பவர்களின் நோக்கம் தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல், சென்னை மாகாணம் முழுவதுமே இந்தி பரவக்கூடாது என்பதுதான் என்பதை அறிந்து கொண்டிருக்கிற மந்திரி சபை - இந்த இரட்டை ஆட்சி முறையை ஏன் கைக் கொள்ள வேண்டும்? மந்திரிகளின் பொறுப்பற்ற தன்மையை, வஞ்சகமாய்த் தன்னினத்தைக் கழுத்தறுக்கும் கொடுமையை இந் நடவடிக்கை காட்டவில்லையா? என்பதோடு இம்மந்திரி களின் யோக்கியதையைப் பற்றியும் எவருக்கும் சந்தே கத்தைக் கொடுக்காதா? என்றும் கேட்கின்றோம்.

ஆந்திரம், கன்னடம், மலையாளம் ஆகிய மண்டலங் களில் இந்தி அல்லது இரண்டாவது மொழி, கட்டாயம் என்று மந்திரிசபை சொல்வதிலிருந்து, அந்த மண்டலங் களில் உள்ள மக்களைச் சர்க்கார் எப்படிக் கருதுகிறது? சமஸ்கிருத அடிமைகளான அவர்கள் கட்டாய இந்தியை எதிர்க்க மாட்டார்கள் என்கிற நினைப்போ, கையாலாகாத கயவர்கள் என்கிற கருத்தோதானே இந்த வருணா சிரமத்திற்குக் காரணமாய் இருக்க முடியும்!

ஒரே இனமான திராவிடர்களை, பிரித்தாளும் சூழ்ச்சியே வெற்றிதரும் என்று கண்ட பார்ப்பனர்களின் பழைய வருணாசிரம முறையை இப்போதும் கைக் கொள்வதுதான் வெற்றியைத் தரும் என்ற வஞ்சகமல்லவா இந்த இரட்டை ஆட்சிக்குக் காரணமாகும்? என்றும் கேட்கின்றோம்.

தமிழ்நாட்டுக்கு இந்தி இஷ்ட பாடம் என்றாலும்கூட இதனுடைய பலன் எப்படியாகும்? இன்றைக்கு ஹைஸ்கூல் களில் தலைமை ஆசிரியர்களாய் இருப்பவர்கள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனர்களாகவும், காங்கிரஸ்காரர் களாகவும், காங்கிரஸ் ஆட்சிக்கு அடிபணிந்துதானே ஆகவேண்டும் என்கிற நிலையிலிருப்பவர்களாகவுமே இருக்கின்றார்கள். இப்பேர்ப்பட்ட தலைமை ஆசிரியர்கள் இந்தச் சட்டத்தை எப்படிப் பயன்படுத்திக் கொள்வார்கள்?

படிக்கிற மாணவர்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் வளர்ந்து கொண்டு வருகிறது! படிப்புச் சொல்லிக் கொடுக்கும் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கையோ அன்றிருந்த மேனிக்கு அழிவில்லாமல் இருக்கிறது! இந்த நிலைமையில் மாணவனுக்கு இடமில்லை என்பதையே பல்லவியாகத் தலைமையாசிரியர்கள் பாடிக் கொண்டு வருகிறார்கள் என்பதைக் கழிந்த பல ஆண்டுகளாகப் பார்த்துக் கொண்டு வருகிறோம். பள்ளிக்கூடத்தில் இடமில்லை, படிப்பவன் விரும்பினால் இந்தி படிக்கலாம் என்கிற இந்த நிலைமையைத் தலைமை ஆசிரியர்கள் எப்படிப் பயன்படுத்துவார்கள்? மாணவனைப் பள்ளிக் கூடத்தில் சேர்க்க வந்திருக்கும் கார்டியன், இந்த நெருக்கடியான கட்டத்தில், எப்படியாவது பையன் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து விட வேண்டுமென்று விரும் புவானா? அல்லது இந்தியை வெறுப்பதினால் தன் பையன் படிக்காமலே போகட்டும் என்பதை விரும்புவானா?

100க்கு 90 தற்குறிகளாக இருக்கும் திராவிட மக்களைக் கார்டியனாகப் பெற்றிருக்கும் மாணவர்கள், தலைமை ஆசிரியர் வழியாகக் கட்டாயப்படுத்தப்பட்டு, இந்தி படித்தேயாக வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டு தான், பெயரளவில் இந்தி இஷ்ட பாடம் என்று இன்றைய மந்திரிசபை இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

ஆகவே, தமிழ் மண்டலத்தில் இந்தி இஷ்ட பாடம் என்றாலும், உண்மையாய்க் கட்டாய பாடமாகவே ஆகிறது என்பதைத் தமிழ் மக்களும் தெரியாதவர்களல்லர்.

இப்போது தமிழறிஞர்கள் என்று பெயர் படைத் திருக்கிற தமிழ்ப் பெரியார்கள் என்ன செய்யப் போகின்றார்கள்? மற்ற திராவிட மொழிகளின் அறிஞர்கள் என்ன செய்யப் போகின்றார்கள்?

இந்தியை வரவேற்றுச் சிந்து பாடமாட்டார்கள் என்பதுறுதி என்றாலும், ஆட்சியின் கொடுங்கோன்மைக்கு அஞ்சி வாய்மூடி மவுனிகளாக விளங்குவார்களா? அல்லது திராவிடத்தின் சிதைவுக்குத் திட்டமிட்டுச் செய்யப்படும் இந்தத் தீச் செயலை தீரத்துடன் எதிர்த்து, சென்னை மாகாணத் திலேயே இந்தி நுழையாதபடி எதிர்ப்பு முன்னணியில் நிற்கப் போகிறார்களா?

திராவிடத்தின் மொழியறிஞர்கள்தான் திராவிடத்தின் சீர்கேட்டிற்குக் காரணம் என்றிருக்கும் பழி மறைவதற்கு, அந்த அறிஞர்களுக்குத் தரப்பட்டிருக்கும் கடைசிச் சந்தர்ப்பம் என்றே நாம் உண்மையாய், உறுதியாய் இந்தத் திட்டத்தைக் குறித்து எண்ணுகிறோம்.

திராவிடப் பெருங்குடி மக்களே! உங்கள் நாட்டை ஆளப்போவது இந்தி மொழி! ஆளுகிறவர்கள் வட நாட்டுக் கையாட்கள்!

ஆட்டி வைப்பவர்கள் வடநாட்டுப் பனியாக் கும்பல்! சுரண்டும் கும்பல் தயாரித்த, உங்கள் சுகவாழ்க்கைக்கு வழிகாணாத, உங்களை மனிதர் களென்றே மதியாத அரசியல் நிர்ணயத்திட்டமே உங் களுக்கிடப்படும் விலங்கு! இருந்து வரும் கொஞ்சநஞ்சம் உரிமைகளுக்கும் வேட்டு வைக்கிறது, எடுத்துவிடப் போகும் வகுப்பு வாரித்திட்டம்! இதனுடைய பொருள் என்ன?

திராவிடன் வாழ்வதற்குத் திராவிடத்தில் உரிமையில்லை! உரிமையற்ற, ஒடுக்கப்பட்ட மக்களாக, விலங்கு களிலும் கேடாக வாழ்ந்தால் வாழவேண்டும். இன்றேல் வாழ்வா-சாவா என்ற இரண்டிலொன்றை முன் நிறுத்தி எதிர்த்து நிற்க வேண்டும். இந்த இரண்டில் ஒன்றுதானே இந்தத் திட்டங்களின் பயனாய் இருக்க முடியும். நீங்கள் என்ன முடிவு கட்டுகிறீர்கள்? எதை விரும்புகிறீர்கள்?

'குடிஅரசு' -  துணை தலையங்கம் - 05.06.1948
-  விடுதலை நாளேடு, 16.6.19