வியாழன், 29 நவம்பர், 2018

உரிமைக் கிளர்ச்சியை ஒடுக்க அடக்குமுறையா?

***தந்தை பெரியார்***
கொடி எரிக்க வேண்டியகாலம் வரும்; அப்போது எல்லோரும் முன்வந்து கொளுத்தத் தயாராக இருக்க வேண்டும். கட்டாய நிலை ஏற்படுகையில் எல்லோரும் முன் வந்து கொளுத்த வேண்டும் என்றேன்.

ஆச்சாரியார் (முதலமைச்சராக ஆண்ட) காலத்தி லிருந்தே "கத்தி வைத்துக் கொள்ளுங்கள்;" "பெட்ரோல் வைத்துக் கொள்ளுங்கள்" என்று  சொல்லி வருகிறேன். ராஜாஜி (ஆச்சாரியார்) முதன் மந்திரியாக இருந்த போதுதான் ஆத்தூர் மாநாட்டில் 1958-ல் கத்திவைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் போட்டோம். அவர் காலத்திலேயே ஈரோட்டில் நடந்த மாநாட்டில் கத்தி, நெருப்பு வைத்துக் கொளுத்தத் தயாராக இருங்கள் என்றேன்; இதே மந்திரி எட்டு நாளைக்கு முன்பு இது ஒன்றும் சட்டத்தை மீறியதல்ல என்று சொல்லியிருக்கிறார்.

அப்படியெல்லாம் சொன்னவர்கள் இன்று பார்ப்பான் பலமாகக் கூப்பாடு போட ஆரம்பித்ததும் வழக்குப் போடுகிறார்கள்.

யாராவது ஏதாவது ஒரு சமாதானம் சொல்ல வேண்டுமே! யார் சொன்னார்கள்? சட்டத்தைக் கொளுத் துவது தவறு என்றால் வேறு என்ன செய்யலாம்? அதைச் சொல்ல வேண்டாமா? சட்டத்தைக் கொளுத்துவதால் யாருக்கு என்ன நஷ்டம் (இழப்பு)? நமக்கு  இன்னும் ஆத்திரம் வருகிறமாதிரிதானே காரியம் செய்துகொண்டு போகிறார்கள்?

கட்டாயம் இதற்கு எல்லை கண்டே தீர வேண்டும்! இந்நிலை உண்டான தன்மைப்பற்றிச் சிந்திக்காமல் அடக்கு முறைதான் வழி என்றால் 2000 வருடமாக இருந்துவரும் கீழ் நிலைமை அப்படியே இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள் என்பதைத் தவிர வேறு என்ன? ஒரு உணர்ச்சி வளர்ந்திருக்கிறது; அந்த வளர்ச்சிக்கு ஏற்ப தயாராகவேண்டும் என்ற எண்ணம் வேண்டாமா?

ஜாதிப்பெயராலேயே ஓர் இனம் உயர்வது; மற்றோர் இனம் கேவலம், இழிவு இவைகளுடன், படிப்பில்லாமல் வாழ்வது என்ன நியாயம்? ஜாதிபற்றி பேசவே கூடாது என்கிறார்களே?

ஜாதியினால் எவ்வளவோ கேடு பாருங்கள்! எந்த உத்தியோகமாக இருந்தாலும் சிபாரிசுதான்! மக்கள் நிலையை உத்தேசித்துச் சிபார்சுக்குத் தக்கபடி அயோக் கியனைத் தூக்கி உயர்த்துகிறார்கள். இவற்றையெல்லாம் யார் கவனிக்கிறார்கள்?

தோழர்களே! சட்டத்தைக் கொளுத்துவது என்பது ஜாதிப்பிரச்சினையை மட்டும் வைத்துத்தான் என்பது அல்ல; உத்தியோகம், மத்திய அரசாங்கம் எந்தத் தகுதியும் நியாயமும் இல்லாமல் அரசமைப்புச் சட்டத்தின் பெயரால் நடத்தும் கொடுமையான அநீதிகள், அத்தனையும் வைத்தே அதைக் கொளுத்தவேண்டும் என்கிறோம்.

இந்த மந்திரிகள் (அமைச்சர்கள்) தான் என்ன யோக்கியர்கள்? நாம் நாட்டு நலம் முக்கியம் என்று கருதிக் கொள்கையைக் கூட தளர்த்தி ஆதரித் தோம்! சாதாரணமாகச் சொல்கிறேன்; டி.டி. கிருஷ்ணமாச்சாரி பக்கா (சரியான) பார்ப்பனர்; ஏன் ஆதரித்தோம்? நம் நாட்டுக்கு என்று மத்திய அரசாங்கத்தில் ஒரு மந்திரிகூட இல்லையானால் என்ன ஆவது? எல்லோரும் வடநாட் டுக்காரனாக உட்கார்ந்து கொண்டால் என்ன ஆகும்? தமிழ்நாட்டிலிருந்து சென்றவர் என்ற முறையில் தமிழ் நாட்டுக்கு ஏதாவது அனுகூலம்  (நன்மை) நடக்கும் என்று கருதினோம்; அந்த  எண்ணத்தில்தான் நம்மைவிட நாட்டு நலம்  முக்கியமென்று பார்ப் பானாக இருந்தும்கூட உதவி செய் கிறோம்.

மத்திய சர்க்கார் (அரசு) பெயரால் அரசமைப்புச் சட்டத்தின் பெயரைச் சொல்லி எவ்வளவு கொள்ளைகள்? தபால் (அஞ்சல்), சுங்கம் முதலிய வருமானமுள்ள சங்கதி பூராவும் அங்கு! இந்த ஆதிக்கத்திற்கு அரசமைப்புச் சட்டம் தானே இடம் தருகிறது? நீங்கள் சரியாகப் படித்துப் பார்த்தால் ஏன் கொளுத்த வேண்டும் என்பது விளங்கும்.

நாம் எவ்வளவு கீழ்மக்களாக ஆக்கப் பட்டிருந்தாலும் அதுபற்றி யாருக்கும் கவலையில்லை. எதிர்த்துப்பேசி மத்திய சர்க்காரின் (அரசின்) கொடுமைகளைக் கூறவும் ஆளில்லை. கம்யூனிஸ்ட், சோஷலிஸ்ட் எவராக இருந்தாலும் அரசமைப்புச் சட்டத்தைப்பற்றிப் பேசவே கூடாது என்பார். எல்லோரும் இந்தக் கொடுமையான சட்டத்தை ஒப்புக்கொண்டு அதன்படி சட்டசபையில் போய் உட்காருகிறவர். நாம்தான் இதைச் (சட்ட எரிப்பை) செய்ய முடியும்.

ஆகவே, காலணாவுக்கு அரசமைப்புச் சட்டத்தின் தொகுப்புக் கிடைக்கும். அதை வாங்கி வைத்து நெருப் புக்குச்சியைக் கிழித்து வைத்துக் கொளுத்த வேண்டும். 3 வருடமோ 6 வருடமோ நீங்கள் தண்டனையைப் பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்? இது கடமை; செய்ய வேண் டியது. அவ்வளவு தான்; தாய்மார்களும் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும்; ஜோடி ஜோடியாக (இணை இணையாகக்)  கொளுத்துங்கள்; அங்கே போய் குடும்பம் நடத்தினால் போகிறது; 26 ஆம் தேதிவரை வெளியில் இருந்தால் என் பங்குக்கு நானும் கொளுத்துவேன்.

நாம் வெளியில் இருக்கிறோமோ, இல்லையோ; ஆகவே இன்றே கொளுத்திவிடலாம் என்றே கருதிக் கொண்டு வந்தேன். நாம் சர்க்காருக்கு (அரசுக்கு)  15 நாள் வாய்தா கொடுத்துள்ளோம். அதற்குள் கொளுத் துவது மரியாதை இல்லை என்று நினைத்து இப்போது கொளுத்தவில்லை. 15ஆம் தேதியே என்னை (சிறை யின்) உள்ளே போட்டாலும் போடலாம். ஏனென்றால் எனக்குப் போட்டிருக்கும் செக்ஷன்களுக்கு (சட்டப் பரிவுகள்) என்னை ஜாமீனில் (பிணையில்) கூட விட முடியாது. ஆகவே அன்றே கைது செய்து வழக்குக்குக் கொண்டு போய் ஆஜர் (வருகைப்) படுத்தலாம்.

ஆனதால் போராட்டத்தில் கலந்துகொள்பவர்கள் போலீஸ்காரரிடமோ (காவல்துறையினரிடமோ), அதி காரிகளிடமோ முரண்பட்டு நடந்து கொள்ளாமல் காரியம் செய்யவேண்டும். கட்டுப்பாடாக நடந்து கொள்ள வேண்டும். அதுதான் நமக்குப் பெருமை.

குத்துவதாக இருந்தால் கூட, எப்படிக் குத்துவோம், எங்குக் குத்துவோம் என்று சொல்லிவிட்டுத்தான் செய்வோமே தவிர திடீரென செய்து விட மாட்டோம்.

ஆகவே கலவரமில்லாமல் இராமன் படம் எரித்தமாதிரி அவ்வளவு கட்டுப்பாடாக நடந்து கொள்ள வேண்டும்

ஆண்பெண் எல்லோரும் கொளுத்த வேண்டும். போலீஸ்காரர்கள் (காவல்துறையினர்) முன்கூட்டியே மிரட்டுவார்கள். நடக்காமல் செய்யத் தந்திரம் செய் வார்கள். ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டும். தப்பித்துக் கொள்வோம் என்று எதிர்பார்த்து எதையும் செய்யக்கூடாது. வீட்டிலிருந்து  கொளுத்தினாலும் போதும். கொளுத்திக் கையில் பிடித்துக் கொண்டு போலீஸின் எதிரில் நில்லுங்கள். கைது செய்திருக்கிறேன் என்றதும் பேசாமல் போய்விடுங்கள். முன்கூட்டியே கைது செய்தாலும் செய்வார்கள். கூப்பிட்டால் போய்விடுங்கள். அரசமைப்புச் சட்டம் கொளுத்தும் காரியத்திற்காக இத்தனை பேர் கைதாகி இருக்கிறார்கள் என்ற கணக்கேபோதும். மூன்று வருடம் போடட்டும். குடும்பத்தோடு இருக்கலாம்.

கொளுத்தவேண்டாம் என்பவர்கள் இன்னவழி - இன்ன பரிகாரம் என்று சொல்லட்டும்; கேட்டுக் கொள்கிறேன். இதற்குப் பரிகாரம் சொன்னால் மரியாதை குறைந்துவிடும்; சட்டம் செய்கிறோம்; செக்ஷன் (சட்டப்பிரிவு) இருக்கிறது என்று கருதி அடக்கப் பார்க்கிறார்களே தவிர எங்களுக்கும் உரிமை இருக்கிறது என்பதைக்கூட யோசிப்பதில்லை. நான் ஏன் தாழ்ந்த ஜாதி என்று கேட்க  உரிமையில்லை யென்றால் இது என்ன சுயராஜ்ஜியம் (விடுதலை)?

இந்த உணர்ச்சியை உரிமையை மதிக்கவேண்டும் என்ற எண்ணமே வரவில்லையே! நாங்களும் மனிதர்கள்; இந்த நாட்டு மக்கள் - எங்களுக்கும் உரிமையுண்டு என்பதைக்கூட கருதாமல் அடக்கு முறைதான் பதில் என்றால் என்ன நியாயம்? உள்ளபடியே ஆத்திரப்பட்டே கேட்கிறோம். நாங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு, விளம் பரத்திற்காகவா இந்தக் காரியம் செய்கிறோம்? இல்லை தொல்லை கொடுக்க வேண்டும் என்பதற்காக (கலவரம்) ரகளை செய்கிறோமா? ஆட்சியில் இருப்பவர்களுக்குக் கஷ்டம் (துன்பம்) தரக்கூடாது என்பதற்காகத் தானே கவலை!

இன்று காமராசரும், பக்தவத்சலமும் இருக்கும் இடத்தில் 2 பார்ப்பான் இருந்தால் என்ன ஆகியிருக்கும்? தொல்லை தரக்கூடாது. என்பதைத் தவிர வேறு எங்க ளுக்கு என்ன பயமா? செய்ய முடியாதா? ஏமாற்றுகிற மாதிரி செய்யலாம், பிரயோசனப்படாத (பயன்படாத) மாதிரி பலகாரியம் செய்து கொண்டேயிருக்கலாம்.

பார்ப்பான் சட்டம் போடு என்றதும் போடுவதா? இந்த நாட்டு மக்கள் உணர்ச்சி இப்படியிருக்கிறது! ஏன் இந்த மந்திரிகள் அங்கு (மத்திய அரசில்) போய்ச் சொல்லிக் கேட்கக்கூடாது? ஏதாவது பதில் சொல்லித்தான் தீரவேண்டும் என்று ஏன் சொல்லக்கூடாது?

கேரளாவில் கம்யூனிஸ்ட்காரன் இங்கு உள்ள உணர்ச்சியைப் பார்த்து அவன் நாட்டில் மரியாதையாக ஜாதிப் பெயரை எடுத்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டானே! யோக்கியமாக நடந்து கொள்ள வேண்டு மென்று கருதுவதற்கு இடமில்லையென்றால் என்ன நியாயம்? நாமும் வியாபாரி ஆகிவிட்டால் என்ன ஆவது?

ஆகவே, தோழர்களே! குத்துவெட்டு என்கிற பேச்சுக்கு இப்போது இடமில்லை. அவசியம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம், அவசியம் வந்து விட்டால் கட்டாயம் நடக்கும். ஆகவே 26ஆம் தேதி கட்டுப்பாட்டுடன் தஞ்சை மாநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்ற ஆணும் பெண் ணும் பெயர் கொடுத்துக் காரியம் செய்ய வேண்டும்.

10-11-1957 அன்று சென்னை எழும்பூர்

ட்ராம்ஷெட் கூட்டத்தில் தந்தை பெரியார்

சொற்பொழிவு: ('விடுதலை' 13-11-1957)

-  விடுதலை நாளேடு, 26.11.18

புதன், 28 நவம்பர், 2018

இந்திய அரசமைப்புச் சட்டம் ஏன் எரிக்கப்பட வேண்டும்?

ஜாதி ஒழிப்புப் போராட்டம் : தந்தை பெரியார் அன்று சொன்னது


இந்திய அரசமைப்புச் சட்டம் ஏன் எரிக்கப்பட வேண்டும்?


***தந்தை பெரியார்***
இந்திய அரசமைப்புச்  சட்டக்குழு உறுப்பினர்கள்!


1. அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் (பார்ப்பனர்)


2. டி.டி. கிருஷ்ணமாச்சாரி (பார்ப்பனர்)


3. என். கோபாலசாமி  அய்யங்கார் (பார்ப்பனர்)


4.  கே. எம். முன்ஷி  (பார்ப்பனர்)


5.  டாக்டர் அம்பேத்கர் (ஆதி திராவிடர்)


6.     முகமது சாலுல்லா (முஸ்லிம்)


1077 நாள் செலவு செய்து உருவாக்கிய இந்த அரசமைப் புச்  சட்டத்தில் வெகு எச்சரிக்கையாகப் பார்ப்பனர் (ஆரிய பிராமணர்) உயர்வும், பார்ப்பனரல்லாத மக்கள் (திராவிடர் - சூத்திரர்) இழிவும் சாஸ்திரப்படிக்குக் கொண்ட இந்து மதத்தைக் காப்பது, உரிமை அளிப்பது, என்கிற தன்மையில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்தத் தகுந்தபடி பாதுகாப்புச் செய்து கொண்டார்கள்.

2. மேலும், சூத்திரர் என்று கூறப்படுகின்ற மக்களின் பிரதிநிதிகள் அறவே இல்லாமல், 6 பேர்களில் 4 பேர் பார்ப்பனர் களாகவே கொண்டு மற்றும்  இரு இனத்தின் பிரதிநிதிகளுக்கும் கூட விலை கொடுத்துவிட்டு செய்து கொண்டதுதான் இந்திய அரசமைப்புச் சட்டம் என்ற இந்த அரசியலமைப்பாகும்.

3.     இந்த நாட்டு வாக்காளர்களின் உண்மையான பிரதிநிதிகளைக் கொண்டல்ல, இந்தச் சட்டம் செய்யப் பட்டது. எவ்வாறெனில், 1946 இல் நடைபெற்ற தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண  சட்டசபை அங்கத் தினர்களால் ஓட் (வாக்களிப்பு) செய்யப் பெற்று, அரசியல் நிருணயசபை அங்கத்தினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள், பிரிட்டிஷார் அளித்த இந்திய சுதந்திரச் சட்டமே (Independence Act) 1947 ல் தான் நமக்குக்கிடைத்தது! நாடு இரண்டாகப் பிரிந்த பிற்பாடு எஞ்சியிருந்த உறுப்பினர்களால், மாகாணங்களிலிருந்து 235 பேர்களும். சமஸ்தானங்களி லிருந்து 72 பேர்களுமாக மொத்தம் 397 பேர்கள்தான் அப்போது இருந்தார்கள். அப்போது ஓட்டு (வாக்கு) உரிமை பெற்றிருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை இன்றைய வாக்காளர்களின் எண்ணிக்கையில் பன்னிரண்டு சதவிகிதத் தினரேயாவர். எனவே, இது எப்படி மக்கள் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்டதாகும்? நாடு சுதந்திர மடையாத காலத்தில் நடந்த எலெக்ஷன் (தேர்தல்) பிரதிநிதிகளால்-உருவாக்கப் பட்டதாகும்? நாடு சுதந்திர மடையாத காலத்தில் நடந்த எலெக்ஷன் பிரதிநிதிகளால் - காங்கிரஸ் பார்ப்பன பிரதிநிதிகளால் - ஏற்படுத்தப்பட்ட இந்தச் சட்டம் நம்மை அதாவது பார்ப்பன ஆதிக்கத்தினின்று விடுதலை பெறுவதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கின்ற நம்மை எப்படிக் கட்டுப்படுத்தும்?

4.     மற்றும் மொழி சம்பந்தமாகவும், வரி சம்பந்த மாகவும், பொருளாதார உரிமை சம்பந்தமாகவும், வெளி நாட்டார் சுரண்டுதல் சம்பந்தமாகவும், அதிகாரங்களைத் தங்களுக்கே வைத்துக்கொண்டு எந்த வகையிலும் மாற்ற முடியாத அளவுக்கு இரும்புக் கூட்டுப் பாதுகாப்பை இந்த சட்டத்தின் மூலம் பார்ப்பனர்களும், வட நாட்டார்களும் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள். அதிலிருந்து விடுபட ஆசைப்படுகிறோம் என்பதைக் காட்டுவதற்காகத்தான் அரசியல் சட்ட எரிப்பு என்பதாகும். இந்தியாவின் மக்களா கிய நாம், இந்தியாவை ஒரு சம்பூர்ண (முழுமையான) அதிகார ஜனநாயகக் குடியரசாக அமைத்து அதன் குடிகள் அனைவருக்கும். சமூகம், பொருளாதாரம், ராஜீயம் - இவற்றில் நீதியும். எண்ணம், வெளியீடு, கோட்பாடு, மதம், வழிபாடு இவற்றில் சுதந்திரம், அந்தஸ்து, வாய்ப்பு - இவற்றில் சமத்துவம் கிடைக்குமாறு செய்யவும், தனியொரு வரின் கண்ணியமும், தேச சமுதாயத்தின் ஒருமைப்பாடும் நிலைபெறும் வண்ணம் அவர்கள் அனைவரிடமும் சகோதரத்துவம் ஓங்குமாறு செய்யவும், மனப்பூர்வமாகச் சங்கற்பம் செய்து கொண்ட மையால், நமது அரசியல் நிர்ணய சபையிலே 1949ஆம் வருஷம் நவம்பர் மாதம் இருப்பத்தோராம் தேதியாகிய இன்று இதனால் இந்த அரசியலமைப்பை  ஏற்றுக்கொண்டு, சட்டம்  இயற்றி நமக்கு நாமே வழங்கி கொள்கிறோம்.

13 (2) இப்பாகத்தால் அளிக்கப்பட்ட உரிமைகளைப் பறிக்கும் அல்லது சுருக்கும் சட்டம் எதையும் ஒரு ராஜ்யம் இயற்றலாகாது. இப்பகுதியை மீறி இயற்றப்படும் சட்டம் எதுவும் அப்படி மீறிய அளவிற்குப் பயனற்றதாகும்.

25 (1) பொது அமைதி, நல்லொழுக்கம், ஆரோக்கியம், இவற்றிற்கும் இந்தப் பாகத்திலுள்ள மற்றைய ஷரத்துக்களும் (விதிப்பிரிவுகளும்) உட்பட்டு, மக்கள் அனைவரும், மனச்சாட்சி சுதந்திரத்திற்கும் தடையின்றி, எம்மதத்தையும் தழுவுதல், கடைப்பிடித்தல், பரவச்செய்தல் இவை பற்றிய உரிமைக்கும் சமமானப் பாத்தியதை உடையவர் ஆவார்.

29 (1) தனிப்பட்ட மொழி லிபி(எழுத்து). அல்லது பண் பாடு இவற்றை  ஏற்கனவே உடையவராய், இந்தியாவின் ஆட்சிப் பரப்பில் அல்லது அதன் ஒரு பாகத்தில் வசிக்கும் குடிகளின் எப்பிரிவினரும், அவற்றைச் சிதையாமல் காக்க உரிமை உள்ளவர் ஆவார்.

(2) மதம், இனம், ஜாதி, மொழி இவை காரணமாக அல்லது இவற்றுள் எவையேனும் காரணமாக ராஜ்ஜியத் தினால் பராமரிக்கப் பட்ட அல்லது ராஜ்ஜிய நிதிகளிலிருந்து உதவி பெறுகின்ற எந்தக் கல்வி நிறுவனத்திலும் சேர்வதற்கு எக்குடியும் மறுக்கப்படலாகாது.

368 இந்த அரசியலமைப்பின் திருத்தம் அதற்கெனப் பார்லிமெண்ட் (நாடாளுமன்றம்) சபை ஒன்றில் ஒரு மசோ தாவைக் கொண்டு வந்தால் மட்டுமே ஆரம்பிக்கப்படலாம். அச்சபை ஒவ்வொன்றிலும் அம்மசோதா அச்சபையின் மொத்த உறுப்பினர் களின் பெரும்பான்மையோராலும் வந்திருந்து  வோட்டு (வாக்களிப்பு) செய்யும் அச்சபையின் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்குக்குக் குறையாத பெரும் பான்மையோராலும் நிறைவேற்றப்பட்டால், அது  குடியரசுத்தலைவரிடம் அவர் அனுமதிக்காகச் சமர்ப்பிக் கப்பட வேண்டும்; அம்மசோதாவிற்கு அவ்வாறு அனுமதி அளிக்கப் பட்டதும், இந்த அரசியலமைப்பு அம் மசோதா ஷரத்துக்களின் (பிரிவுகளின்) படி திருத்தம் பெற்றதாகும். இவைபோன்ற இன்னும் பல அநீதிகள் உள்ளன.

நான் எதற்காகச் சிறை செல்கிறேன்?


சூதாடிய குற்றத்துக்காகவா?


கள்ளச்சாராயம் காய்ச்சிய குற்றத்துக்காகவா?


கொள்ளைக் குற்றத்துக்காகவா?


கொலைக் குற்றத்துக்காகவா?


மோசடிக் குற்றத்துக்காகவா?


பலவந்தப் புணர்ச்சிக் குற்றத்திற்காகவா?


பதுக்கல் - கலப்படம் குற்றத்துக்காகவா?


ஜாதி வெறியின் கலவரக் குற்றத்துக்காகவா?


என்ன குற்றத்துக்காக நான் சிறை செல்கிறேன்?


ஜாதியை ஒழிப்பதற்காகப் போராடினேன்! மறியல் செய்தேன்! சிறை சென்றேன்! சர்க்கார் கண் விழிக்கவில்லை. ஆகவே, சாதிக்கு ஆதார மான சட்டத்தைக் கிழித்துத் தீயிலிட்டாவது இந்திய சர்க்காரின் (அரசின்) மனதை மாற்றலாமா, என்று கருதி அதைச் செய்தேன்.


இதில் எந்த உயிருக்கேனும் சேதமுண்டா? எந்தப் பொருளுக்கேனும் நாசமுண்டா?


இதற்காக எனக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை என்றால், இதை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டாமா?


ஜாதியை ஒழிப்பதற்காக மூன்றாண்டு சிறை வாசஞ் செய்தான், என்பதை விடப் பெரும் பேறு, முக்கியக்கடமை,  வேறென்ன இருக்கிறது?


- இந்த விதமாக நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.


பெரியார் ஈ.வெ.ரா. அறிக்கை

(விடுதலை 9-11-1957)

குறிப்பு:- இந்த அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கின ஆறுபேரில் நான்கு பேர் பார்ப்பனர்; இதை நிறைவேற்றிய அரசியல் நிர்ணயசபை என்பது வயது வந்தோரின் வாக்குரிமை பெறாதவர்களைப் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களையே கொண்டதாகும்.

இந்தச் சட்டத்தில் இந்து மதத்துக்குப் பாதுகாப்பு அளிக் கப்பட்டிருக்கிறது; இந்து மதத்தில் சாதிக்குப் பாதுகாப்பு இருக்கிறது; சாதியை ஒழிப்பதற்கு இதில் இடமில்லை; சாதியைக் காப்பாற்றத்தான் இடமிருக்கிறது. இதை எளிதில் திருத்தியமைப்பதற்கும் சாதி ஒழிப்புகாரருக்கு வசதியில்லை; வாய்ப்புமில்லை (368வது பிரிவைப் படியுங்கள்.)

ஆதலால் சாதியை ஒழிக்க விரும்புகிறவர்கள், தனித் திராவிட நாடு பெறவிரும்புபவர்கள், தமிழ் நாடு சுரண்டப் படுவதைத் தடுக்க விரும்புபவர்கள், என்ன செய்வது?

இதை எரிப்பதன் மூலம் நம் எதிர்ப்பைக் காட்டிக் கொள்வதைத் தவிர வேறு வழி என்ன?

குறிப்பு: இதே மாதிரி வேண்டியவர்கள் அச்சடித்துக் கொள்ளலாம். இயலாவிடில் கையால் எழுதிக்கொண்டு கொளுத்தலாம்.

பெரியார் ஈ.வெ.ரா. முகவுரை: (விடுதலை 17-11-1957)

-  விடுதலை நாளேடு, 25.11.18

மக்களுக்கு கடவுள் எப்பொழுது எப்படி ஏற்பட்டது?

28.07.1929 - குடிஅரசிலிருந்து... மனிதன் பிறந்து வளர்ந்து நினைக்கப்பட்ட பிறகுதான் கடவுள் என்கின்ற ஒரு வஸ்து நிச்சயம் ஏற்பட்டு இருக்க வேண்டும். இதை யாரும் மறுக்கமுடியாது. ஏனெனில் இப்போது கூட மக்களுக்குப் பிறர் சொல்லிக் கொடுத்த பிறகுதான் கடவுள் என்கின்ற பேச்சும் நினைப்பும் ஏற்படுகின்றதே தவிர தானாக ஏற்படுவதில்லை. எப்படி எனில் சிறு குழந்தை களை நாம் கட்கத்தில் இறுக்கிக் கொண்டு ஒரு உருவத் தையோ வஸ்துவையோ காட்டி, சாமி! என்றும் அதைக் கைக்கூப்பி கும்பிடு என்றும் சொல்லிக் கொடுத்த பிறகே குழந்தை சாமியையும் கும் பிடவும் அறிகின்றது. அதுபோல ஆதியிலும் மனிதன் பிறந்த பிறகுதான் அவன் மனத்திற்குக் கடவுள் நினைப்பு தோன்றியிருக்க வேண்டும். அது எப்படி என்றும் எப்போதென்றும் பார்ப்போமானால் சாதாரணமாக மனிதனுக்கு அறிவு வளர்ச்சியும் ஆராய்ச்சி வளர்ச்சியும் இல்லாதக் காலத்தில் தான் கடவுள் நினைப்பு தோன்றி இருக்கவேண்டும். கடவுள் என்பது கடவுள், தெய்வம், அல்லா, காட், என்ற தமிழ் சமஸ்கிருதம், துலுக்கு, ஆங்கிலம் முதலிய பல பாஷைகளில் பல சொற்களாக இருந்தாலும் குறியில் அர்த்தத்தில் உலகத் தோற்றத்திற்கும் நடப்பிற்கும் அழிவிற்கும் காரணமாகிய ஒரு சக்தியையே குறிப்பிடுவதாகவும் அதாவது சிலரால் இயற்கை என்று சொல்லப்படுமானால் அவ் வியற்கையின் இயங்குதலுக்கும், பஞ்சபூதக் கூட்டு என்று சொல்லப்படு மானால் அக்கூட்டின் சேர்க்கைக்கும் ஏதாவது ஒரு சக்தி இருந்து தானே ஆக வேண்டும் என்பதுவும், அந்த சக்திதான் கடவுள், எல்லாம் வல்ல ஆண்டவன் - அல்லா, காட் என்று சொல்லப்படு கின்றதென்று சொல்வதானா லும் அந்த சக்தி என்னும் கடவுளே எப்படி மக்கள் மனத்திற்கு வந்தார் என்பதுதான் இங்கு விசாரிக்கத்தக்க தாயிருக்கின்றது. ஆகவே அந்த சக்தி மனிதனுக்குத் தோன்றிய காலம் எது என்பதாகவும் அது நம் நாட்டைப் பொறுத்தவரை எப்படியிருந்தது என்பதாகவும் பார்க்க வேண்டுமா னால், நம் நாட்டிலுள்ள கடவுள்களைக் கொண்டுதான் அதைத் தாராளமாய் உணர முடியும். அதாவது இப்போது நமது நாட்டிலுள்ள கடவுள்கள் எவை யென்றால் பூமி, மலை, காற்று, நெருப்பு, நதி, சூரியன், சந்திரன், நட்சத்திரம், மழை, இடி, மின்னல், மேகம், நோய்கள், அவை தீர்க்க வேண்டியவைகள் முதலிய அநேக விஷயங்கள் கடவுளாகக் கருதப்படுகின்றது, இவைகளெல் லாம் இவற்றின் உண்மையை அறிய ஆற்றல் இல்லாத காலத்தில் கடவுளென்று ஒப்புக் கொள் ளப்பட்டவைகள், அதிலும் இமயமலையே கைலையங்கிரியாகவும் அதுவும் வெள்ளிமலை யாகவும் அங்கு கடவுள் இருப்பதாகவும் அங்கி ருந்து வரும் நீர் அம் மலையி லுள்ள கடவுளின் தலையிருந்து வருவதாகவும் கருதப்பட்டு இமயமலைக்கு அப்பால் ஒரு நாடும் கண்டு பிடிக்க முடியாதிருந்ததும், மேல் நாட்டை மேல்லோகமென்றும், கீழ்நாட்டை பாதாள லோகம், நரகலோகம் என்றும் இப்படி பலவா றாகக் கடவுள் தன்மையைச் சொன்னதற்குக் காரணமென்னவென்று பார்க்கும்போது அவற்றின் உண்மையை அறிய முடியாத தாலேயே அவை கடவுளென்றும் அவற்றின் இயங்குதல் கடவுள் சக்தி என்றும் சொல்ல வேண்டிய அவசியம் தானாக ஏற்பட்டது. இப்போதும் மனிதன் தன்னால் முடிந்தவைகள் போக முடியாதவை களுக்கே கடவுள் சக்தி என்று சொல்லி விடுகின்றான். உதாரணமாக சிறு குழந்தைகள் ஒரு ஜால வேடிக்கைக்காரனுடைய செய்கையை மந்திர சக்தி என்றும், தெய்வசக்தி என்றும், உபாசனாச் சக்தி என்றும் குட்டிச் சாத்தான் சக்தி என்றும் கருதுகிறார்கள். அப்பையனாயிருந்து அப்படியே கருதியிருந்த நாம் இப்போது அறிவு வளர்ச்சி பெற்றபின் அந்த ஜால வேடிக்கைகளை மந்திர சக்தி என்று எண்ணாமல் தந்திரம், கைத்திறம் என்றும் சொல்லுகின்றோம் மற்றும் அந்த ஜாலவேடிக் கைக்காரன் செய்யும் ஜாலத்தின் வழி இன்னதென்று நமக்குத் தெரியாவிட்டாலும் கூட நாம் அவற்றை ஒரு காலமும் மந்திர சக்தி என்றோ தெய்வ சக்தி என்றோ சொல்லாமல் இது ஏதோ தந்திரம் தானே ஒழிய வேறில்லை. ஆனால் அது இன்னது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லி விடுகின்றோம்.

எனவே ஒரே காரியம் நமக்கே ஒரு காலத்தில் மந்திரமாகவும் தெய்வ சக்தியாகவும் தோன்றியது. பிறகு அது தந்திரம் என்று தோன்றக் காரணம் என்னவென்றால் அது அறிவு வளர்ச்சியும் ஆராய்ச்சிப் பலனு மேயாகும். அதுபோலவே நமக்கு இப்போது தெய்வசக்தி கடவுள் சக்தி என்று தோன்றுகின்ற காரியமெல்லாம் மேல் நாட்டாருக்குக் கடவுள் சக்தியாகத் தோன்றுவதில்லை. உதாரணமாக சூரிய, சந்திரகிரணம் இன்னது என்று கண்டு பிடிக்க முடியாத காலத்தில் நாம் அவைகளுக்கு ஒரு தெய்வ சக்தியைக் கண்டுபிடித்து  சூரியன் என்கின்ற தெய்வத்தை ராகு என்கின்ற பாம்பு பிடிப்பதாகவும், அது சூரியன் என்கின்ற கடவு ளுக்கு ஏற்பட்ட சாபம் என்றும் சொல்லி அச் சாபம் தீர நாம் மந்திரங்கள் ஜெபித்து அத் தோஷம் தீர ஸ்நானமும் செய்து வருகின்றோம். இது வானசாஸ்திரம் தெரியாத காலத்தில் ஏற்படுத்திக் கொண்ட கருத்தாகும். இப்போது வானசாஸ்திரம் தெரிந்தவர்கள் பூமி, சூரியன் இவற்றின் இயங்குதல் அதன் கால அளவு ஆகியவைகளைக் கண்டுபிடித்த பின் சூரியனைப் பாம்பு கடிப்பதில்லை என்பதையும் ஒருவாறு நன்றாய் உணருகின்றோம்; அது போலவே எங்கிருந்து எப்படி தண்ணீர் வருகின்றதென்பது தெரிந்தவுடன் நதிக் கடவுளும் மேகக் கடவுளும் வர்ண பகவானும் சிறிது சிறிதாக நம்மனதில் மறையத் தொடங்கி விட்டன.  அது போலவே வியாதிகள் எப்படி வருகின்றன என்கின்றதான சுகாதார, உடற்கூறு ஆராய்ச்சியும் நமக்கு தெரியப் புறப்பட்ட பின்பு பேதி, மாரி அம்மை முதலிய தெய்வங்களின் உணர்ச்சியும் மதிப்பும் சிறிது சிறிதாக மறையத் தலைப்பட்டன. இதுபோலவே காற்று, கருப்பு, பேய் முதலியவைகளும் மறைந்து வருகின்றன. இந்த முறையில் இனியும் நமக்குள் மீதி இருக்கும் கடவுள் உணர்ச்சிகள் எவை என்று பார்ப்போமானால் காரண காரியம் முதலிய விவரங்களை கண்டுபிடிக்க முடியாதவை களையே கடவுள் செயலென்றும், கடவுள் சக்தி என்றும் சொல்லி வருகின்றோம். இவைகளும் நாளுக்கு நாள் மனிதன் அறிவு வளர்ச்சியும் ஆராய்ச்சியும் முதிர முதிர மறைந்து கொண்டே தான் வரும்.

-  விடுதலை நாளேடு, 23.11.18