ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

தோழர்களே! சாகத் துணிவு கொள்ளுங்கள்!

 

இந்த திராவிட வாலிபர் சங்க ஆண்டு விழாவுக்குத் தலைமை வகித்து தலைமை முன்னுரை நிகழ்த்துவது என்கின்ற சம்பிரதாய நிகழ்ச்சிப்படி நான் ஏதாவது பேசவேண்டும். அப்படிப் பேசுவதில் திராவிடர் என்பதுபற்றியும், நீங்கள் பெரிதும் இளைஞர்கள் ஆனதால் நானும் முதியோனாய் இருப்பதால் உங்களுக்குச் சிறிது அறிவுரை வழங்குவது என்கின்ற தன்மையிலும் சில வாக்கியங்கள் சொல்வது பொருந்துமெனக் கருதுகிறேன்.
நாம் திராவிடர் -
நாம் நம்மைத் திராவிடர் என்று ஏன் சொல்லுகிறோம்?
இந்தநாடு திராவிட நாடு, நாம் இந்நாட்டு மக்கள், இந்நாட்டுப் பழங்குடி மக்கள், இந்நாட்டில் மேன்மையாய் நாகரிகத்தில் சிறந்து மானிகளாய் வீரர்களாய் வாழ்ந்தவர்கள், வீரத் திராவிடர்கள் என்ற பெயரைச் சரித்திர காலத்திற்கு முன்னிருந்து உடைய்த்தாய் இருந்தவர்கள், ஆதலால் திராவிடர்கள் என்கிறோம், இதை நானாக அல்லது நானே சொல்லவில்லை. இது இன்று மாத்திரம் சொல்லப்படவில்லை. இந்த நாட்டுச் சரித்திரம், ஏன்? உலகச் சரித்திரம் தெரிந்த காலம் முதலாய் ஆராய்ச்சி நிபுணர்களான பல அறிவாளிகளால் கண்டுபிடிக்கப்பட்ட உண்மையும் இன்றும் பள்ளிப் பிள்ளைகளுக்கு வழங்கும் சரித்திர நூல்கள் முதல் புராணங்களில் குறிப்பிட்டு இருக்கும் கற்பனை, பழிச்சொற்கள் என்பவைகள் வரையில் காணப்படும் சேதிகளுமாகும்.
பழைமைகள், பழமை சம்பவங்கள், காட்சி சாலை களுக்கும், நேரப் போக்குப் பரிகாசத்துக்கும் சென்று கொண்டிருக்கும் இந்தப் புத்துலகில் பழங்காலச் சரித்திரத்தையும் பரிகசிக்கும் புராணத்தைப் பற்றியும் கூட ஏன் சொல்லுகிறேன் என்று கேட்பீர்கள். அந்தமாதிரி அதாவது, நம்மைப்பற்றி நம் முன்னைய நிலையைப் பற்றி மேலே நான் சொன்னமாதிரியாய் இருந்து நாம் இன்று எந்தமாதிரியில் இருக்கிறோம்? பழமை நிலைமை யும் இயற்கையும் முற்போக்கில் மாற்றப்பட்டு இருக்கிறதா பிற்போக்கில் பின்னும் மோசமான நிலைமையில் கொண்டுபோய்த் தள்ளி இருக்கிறதா என்பதை சிந்திக்கவும், நாம் அதைவிடச் சிறிதாவது மேன்மையும், மனிதத்தன்மையும் அடைந்திருக் கிறோமா அல்லது கீழ்மையும், இழிநிலையும், மானமற்ற தன்மையும் அடைந்திருக்கிறோமா என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்து மேலால் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்பதற்கும் ஆகவேயாகும்.
நாம் சூத்திரர்களா?
நாம் பிறவியிலோ, தன்மையிலோ, தகுதியிலோ சூத்திரர்களாக இருந்தவர்கள் அல்ல; உண்மையில் அல்ல. பின் நாம் யார்? என்றால் வீரத்திராவிடர்கள் ஆவோம். எப்பொழுது முதல் என்றால் முன் நான் சொன்னபடி உலக சரித்திரம் மனிதநூல் ஆகியவை எட்டியகாலம் முதல் என்பேன். இவை வெறும் வார்த்தையால் மாத்திரம் அல்ல. நாடு, இனம், பண்பு, நடைமுறை ஆகியவைகளால் இயற்கையைத் தழுவி திராவிடர்களானவர்கள். நமது இந்த முடிவு இதுவரை யாராலும் மறுக்கப்படவில்லை, நம் எதிரிகளாலும் மறுக்கப்படவில்லை. இந்த உணர்ச்சி நமக்குக் கூடாது என்று சொல்லும் சுயநல சமயசஞ்சீவிகளாலும் கூட மறுக்கப்படவில்லை. ஆனால் நாம்தான் நாம் திராவிடர் என்று சொல்லிக்கொள்ள, நம்நாடு திராவிடம் என்று சொல்லிக்கொள்ள, நாம் சூத்திரர்கள் அல்ல என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறோம்.
எப்படி மானமும், சுதந்திர உணர்ச்சியும் அற்ற ஒர் பெண் மற்றொரு ஆண்மகனைக் கண்ணால் பார்ப்பதால் கற்புப் போய்விடுமென்று கருதிப் பயப்படுகிறாளோ, பார்க்க வெட்கப்படுகிறாளோ அதுபோல் நாம் திராவிடர் என்று சொல்லிக் கொண்டால் நமது மதம் போய்விடும், தேசியம் போய்விடும், செல்வாக்குப் போய்விடும் என்று பயப்படுகிறோம், வெட்கப்படுகிறோம். எந்தக் காரணத்தாலேயோ நாம் சூத்திரர்கள் என்பதாக ஆக்கப்பட்டிருந்தாலும் இன்றும் சூத்திரர்களாக அதுவும் நாம் மாத்திரமல்லாமல் நம் இன்றைய ராஜாக்களும், மகாராஜாக்களும், பண்டார சன்னதிகளும், ஜமீன்தாரர்களும், ஆயிரக்கணக் கான வேலி நிலமுள்ள மிராசுதாரர்களும், பல கோடி ரூபாய் செல்வமுள்ள ராஜா, சர் முதலியவர்களும் சூத்திரர்களாக இருக்கவும் நடத்தப்படவும் இதுதான் (நாம் திராவிடர் என்று உணராததும், உணர்ந்தாலும் சொல்லிக்கொள்ளப் பயப்படுவதும்) காரணமாகும். ஆனால் இந்த இழிவு அவர்களுக்கு (அப்படிப்பட்ட பெரியவர்களுக்கு) மிக சகஜமாகி விட்டது. எப்படியோ அவர்களை அவர்களது ஆசாபாசம் அவர்களுக்குச் சகிப்புத்தன்மையை உண்டாக்கிவிட்டது. நமக்குப் பட்டம் இல்லை, பதவி இல்லை, செல்வம் இல்லை இவை பற்றிய மானமற்ற பேராசை இல்லை. எனவே நாம் ஏன் திராவிடன் என்பதை மறந்து மறைத்துக்கொண்டு நம்மைச் சூத்திரன் என்பதாகக் காரியத்தில் ஆதாரத்தில் ஒப்புக்கொள்ள வேண்டும்?
சூத்திரன் என்றால் என்ன?
சூத்திரன் என்பது தாசிமகன், ஆரியர்களின் அடிமை; ஆரியநலத்துக்கு ஆக, ஆரியர்களின் மேன்மை வாழ்வுக்காக இருப்பவன், இருக்க வேண் டியவன், இருந்தும் வருகிறவன் என்பதாகும். இதுதான் அந்த வார்த்தையின் அருத்தம். சாஸ்திரம் கடவுள் என்பவற்றின் வாக்குமாகும். ஆனால் உண்மையில் நாம் அப்படிப்பட்டவர்கள் அல்லாதவர்களாக இருக்கும்போது அந்தப் பெயரை ஏன் நமக்கு இருக்க விடவேண்டும்? என்று கேட்கிறேன்.
தோழர்களே, இக்காலத்தில் உண்மையான ஒரு தாசிமகனையே பாருங்கள். தனது தாய் தாசி என்றும், தனது வீடு, வாசல், செல்வம் தாசித்தனத்தால் வந்த தென்றும் தெரிந்தவன்கூட அவனது சுயமரியாதைக் கொதிப்பால் தாசியே உலகில் இருக்கக்கூடாது சட்டத் தில் இருக்கக் கூடாது, தன் தாய் வீட்டிற்குள்ளும் வேறொரு பயல் அவன் ஜமீன்தாரரானாலும், அவன் குருவானாலும், ஆச்சாரியானாலும், கோடீஸ்வரன் ஆனாலும் வரக்கூடாது என்று தன் தாயைச் சகோத ரியைக் கண்டிக்கிறான். வருகிறவனையும், ஏன்? வந்து கொண்டிருக்கிறவனையும் விரட்டி அடிக்கிறான், அநேகமாய் அடித்துத் துரத்தியே விட்டான். இத்த னைக்கும் அவர்களுக்குத் தேவ அடியார்கள், தேவ தாசிகள் என்று பெயர் இருந்தும் கூட. ஆனால் நம் சுயமரியாதை என்ன என்று பாருங்கள், நாம் வேசி மக்கள், அடிமை (சூத்திரர்) என்று அழைக்கப்படுகிறோம். அப்படி நம்மை அழைப்பவர்களைச் சாமி என்கிறோம். அப்படிப்பட்ட வர்களை நம்மிலும் மேலானவர்களாகக் கருதி வைதிகக் கருமங்களை (முட்டாள்தனமான, இழிவு தரும்படியான காரியங்களை) அவர்களைக்கொண்டு செய்வித்துக் கொள்கிறோம்.
அதையே வலியுறுத்தும் மார்க்கத்தை, சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்று நம்மை சொல்லிக் கொள்ளு கிறோம் வாயால் சொல்லிக்கொள்ளுவது மாத்திரமல் லாமல் மற்றவர்களுக்கும் தெரியும் படியான குறி களையும் (ஏதாவது ஒரு அடையாளத் தையும்) அணிந்துகொள்ளுகிறோம். இந்த பேதத்தையும், இழிவையும் மானமற்ற உணர்ச்சியையும் நிலை நிறுத்துவதும், பெருக்கிக் கொள்வது மான காரியங்களை நமது ஆத்மீக, லவுகீக காரியமாய்க் கருதிச் செய்து வருகிறோம். இது நியாயமா? நமக்கு இது தகுதியா? அதுவும் இந்த 20ஆம் நூற்றாண்டில் தகுமா? இதைப் பொறுத்துக் கொண்டு உயிர் வாழலாமா? என்று யோசித்துப் பாருங்கள்.
உன் சொந்த இழிவை, ஈனத்தை நீக்கிக்கொள்ளாத நீ நாட்டுக்குச் சுதந்திரம், மனித சமுதாயத்திற்கு விடுதலை ஏழைகளுக்குச் செல்வம், உண்டாக்கப் பாடுபடுகிறேன் என்றால் உன்னைவிட மடையனோ அல்லாவிட்டால் அயோக்கியனோ அல்லாவிட்டால் பித்தலாட்டக்காரனோ வேறு யார் இருக்கமுடியும். திராவிடனுடைய சரித்திரத்தில் இந்த இழி தன்மை என்றும் இருந்ததாகக் காணப்படவில்லையே!
எது தேசியம்? எது விடுதலை?
ஆயிரக்கணக்கான எச்சிலிலை கழியும் ஓட்டலுக்குள் சென்று சமமாய் இருக்க அனுமதி யில்லை. நீ பத்து லட்சக்கணக்காக செலவழித்துக் கட்டி வருஷம் லட்சக் கணக்கான செலவு செய்து பூஜை உற்சவம் செய்துவரும் கோவிலுக்குள் சென்று பிச்சை எடுத்துப் பிழைக்கும் உச்சிக்குடுமி மக்களுடன் சரிசமமாய் நின்று பிரார்த்திக்க உரிமை இல்லை என்பதாக இருந்துவரும், நடத்தப்பட்டு வரும் மக்களுக்கு தேசியமா? சுயராஜ்ஜியமா?
உண்மைத் திராவிடன் இப்படிப்பட்ட எச்சிலிலை மண்டபங்களையும், கோவில்களையும் நிர்துளியாக்கு வதையல்லவா தேசியம் சுயராஜ்ஜியம் என்று எண்ண வேண்டும்?
இன்றைய தினம் இந்த நிலையைப் பொறுத்துக் கொண்டு, இதை மாற்ற வேலை செய்பவர்களையும் எதிர்த்துத் தொல்லை விளைவித்துக்கொண்டு தேசியம், சுயராஜ்ஜியம், விடுதலை, சுதந்திரம் பேசும் திராவிடன் எவனானாலும், தம்மைச் சிறிதாவது திராவிட ரத்தம் ஊசலாடும் திராவிடன் என்று கருதுகிற எவனானாலும் அவன் எல்லாம் நம் எதிரிகளின் அதாவது வெள்ளை ஆரியர், தவிட்டு நிற ஆரியர் ஆகிய இரு கூட்டத்தினரின் லைசென்சு பெற்ற அடிமைகள் அல்லது நம்மைக் காட்டிக்கொடுக்கும் ஒற்றர்கள் என்று தூக்குமேடையில் இருந்துகொண்டு கூறுவேன்.
எது பொதுவுடைமை, இன்றைய பொது உடைமைக் காரர்கள் என்பவர்களின் யோக்கியதைதான் என்ன? வெங்கடா சலபதிக்கு (ஒரு கருங்கல் பொம்மைக்கு) பத்து லட்ச (10,00,000) ரூபாயில் கிரீடமா? மற்றும் பல குழவிக்கல், தாமிர பொம்மை ஆகியவைகளின் பேரால் நடக்கும் அட்டூழியங்களைப் பாருங்கள். ஊர்தோறும் கோவில், மணிதோறும் பூஜை, மாதந்தோறும் உற்சவம், வருஷந்தோறும் சாமி திருமணமா? இவைகளுக்குப் பண்டு எவ்வளவு? பண்டம் எவ்வளவு? பூசாரி பண்டார சன்னதி எவ்வளவு? எனவே நம் நாட்டு, இனத்தின் அறிவு, செல்வம், முயற்சி எதில் மண்டிக் கிடக்கின்றன? நம்மவர்களே ஆன கிருபானந்த வாரிகள், திருநாவுக்கரசுகள் ஆகியவர்கள் காலட் சேபமும், இசை அரசுகள் சங்கீதங்களும், நாடக மணிகள் நாடகங்களும், சினிமாக்களும், பண்டித மணிகள் வித்துவத் தன்மைகளும் இன்று எதற்காகப் பயன்படுகின்றன? இவைகள் பொதுவுடைமையின் எதிரிகள் அல்லவா? இவர்கள் எல்லோரும் தனி உடைமைக்காரர்களின் நிபந்தனை இல்லாத அடிமைகள் அல்லவா? இவைகளை அச்சுக் குலை யாமல் அசைய விடாமல் காப்பாற்ற இடம் கொடுத் துக்கொண்டு பணக்காரனைப் பார்த்து ஆத்திரப் பட்டால், குரைத்தால், பாமரத் தொழிலாளிகளை ஏமாற்றினால் பொது உடைமை ஆகிவிடுமா?
காங்கிரஸ்
காங்கிரஸ், தேசிய விடுதலைக்காரன் யோக்கி யதைதான் என்ன இதைவிட மேலானதாகிவிட்டது. எந்தத் தேசியவாதி இந்தப் பக்கம் திரும்பினான், எந்தப் பொதுஉடைமை மாநாட்டில் எந்த தேசிய மாநாட்டில் இந்த தன்மைகளை பொசுக்கிப் பொங்கல் வைக்கவேண்டுமென்று பேசப்பட்டது? தீர்மானங்கள் செய்யப்பட்டது? நினைக்கப்பட்டது? இந்த மகா உத்தமர்கள் எங்களை குறை சொல்லுவதெதற்கு? அரசாங்கத்தைத்தான் குறை சொல்லுவதெதற்கு? அரசாங்கம் இப்படியெல்லாம் செய்யச் சொல் லுகிறதா? அல்லது இவைகளைப் பற்றிப் பேசுவது ராஜத்துரோகமா? காப்பிக் கடைக்குள், கோவிலுக் குள் முன் மண்டபத்தில் பறையனை, சூத்திரனை விடக்கூடாது என்று எந்த அந்நிய ஆட்சி சட்டம் செலுத்தியது? கோவிலுக்குக் கூத்தியை வைக்கச் சொல்லி, கடவுளைத் தாசிவீட்டுக்கு அழைத்துப் போகச் சொல்லி, கல்லுக்குத் தங்கத்தில் கவசம் போட்டு வைரத்தில் கிரீடம் வைக்கச் சொல்லி எந்த அடக்குமுறை, சுரண்டல் அந்நிய ஆட்சி சொல்லிற்று?
எங்கள் கோபம்
இன்று எது ஒழிய வேண்டும்,யார் வெளியேற வேண்டும், எது மாற வேண்டும்? இவை அறியாத மக்களும், சுயநலவாதிகளும், சமயசஞ்சீவிகளும், வயிற்றுப்பிழைப்பு, பொதுஉடைமை, தேசபக்தர் குழாங்களும் எங்களை ஏன் கடிய வேண்டும். எங்களுக்கு எந்தப் பார்ப்பான் மீது கோபம்? எந்தக் கடவுள் மீது கோபம்? எந்தத் தலைவன் மீது கோபம்? எந்த ஜாதி மீது கோபம்? எந்த வெள்ளை யனிடம் அன்பு? தோழர்களே! பித்தலாட்டத்தின் மீது கோபம், முட்டாள்தனத்தின் மீது கோபம், ஏமாற்றுகிறதன்மை மீது கோபம், எங்களை இழிவுபடுத்தியும், முன்னேற வொட்டாமலும் செய்து வைத்து இருக்கும் சகலத்தின் மீதும் கோபம், இவைகளுக்கு ஆதரவளிப்பதால் வெள்ளையன் மீதும் கோபம்.
ஆகவே, எங்களை காங்கிரஸ்காரர்களும், பொது உடைமைக்காரர்களும் மற்றவர்களும் ஏன் கோபிக்க வேண்டும். ஏன் தொல்லை கொடுக்க வேண்டும்?
எங்களைத் தொல்லை கொடுப்பவர்கள் சுரண் டல்கார எங்கள் எதிரிகள் அல்லது அவர்களது நிபந்தனை அற்ற அடிமைகள் என்பவர்கள் அல்லாமல் வேறு யாராய் இருக்க முடியும்?
இளைஞர்களே! நடப்பது நடக்கட்டும் என்று நீங்கள் எதற்கும் துணிவு பெற்றுத் தொண்டாற்றவேண்டிய காலம் இது. நீங்கள் அடிபடவேண்டும். காயப்பட வேண்டும். கும்பல் கும்பலாகச் சிறைப்பட நேரிட்டாலும் மனம் கலங்காமல் நிற்கும் துணிவு பெறவேண்டும். இதற்குத் தான் திராவிட இளைஞர் கழகம் இருக்க வேண்டும்.
நாடானது விடுதலை, சமதர்மம், முன்னேற்றம், சீர்திருத்தம், கலை, கல்வி, தேசியம் என்னும் பேர்களால் மிக்க அடிமைத்தனத்திற்கும், காட்டு மிராண்டிதனத்துக்கும் போய்க்கொண்டு இருக்கிறது. வேசிக்கும் விபசாரிக்கும் தேவர் அடியாள் என்று பெயர் இருப்பதுபோல் நாட்டின் மனித சமுதாயத்தின் இழிவுக்கும், கீழ்மைக்கும், ஏழ்மைக்கும், அடிமைக்கும் அயோக்கியர்கள் ஆதிக்கத்திற்கும் மேற்கண்ட விடுதலை முதலிய பெயர்கள், ஸ்தாபனங்கள் இருந்து வருகின்றன.
தோழர்களே! துணிவு கொள்ளுங்கள், சாகத் துணிவு கொள்ளுங்கள். உங்கள் சொந்த வாழ்வு நலத்தையும், மானத்தையும் விட்டுத் தொண்டாற்றத் துணிவு கொள்ளுங்கள். இதுதான் இன்றைய திராவிட வாலிபர் கழக ஆண்டு விழாவில், இனி வெகுகாலம் வாழப்போகும் மக்களாகிய உங்களுக்குச் சாகப்போகும் கிழவனாகிய நான் வைத்துவிட்டு போகும் செல்வமாகும்.
உன் சொந்த மானத்தை விட்டாகிலும், உன் இன ஈனத்தை ஒழிப்பதற்குத் தொண்டு ஆற்று. உன் இனத்தின் இழிவை, ஈனத்தைப் போக்க உன் சொந்த மானத்தையும் பலிகொடு. இனத்தின் மானத்தைக் காக்க எவ்வகைத் துன்பத்தையும் பொறுத்துக் கொண்டு தொண்டாற் றத்தக்க குடிமகன் இல்லாத இனம் வேர்ப்பற் றில்லாத மரம்போல்,  கோடரிகொண்டு வெட்ட வேண்டிய அவசியம் இல்லாத மரம்போல்  தானாகவே விழுந்துவிடும்
தன் இனத்திற்கு உண்மையான தொண்டாற்று பவனுக்கு அடையாளம் என்னவென்றால் அத் தொண்டால் ஏற்படும் இன்னலுக்கும், துன்பத்திற் குமே அவனது வாழ்வையும், உடலையும் ஒப்பு வித்துவிட்டவனாக இருக்க வேண்டும். இது நான் சொல்வதல்ல, குறள் வாக்கியமாகும்.
(23.08.1945 அன்று திருச்சி டவுன் ஹாலில், திராவிட வாலிபர்கள் சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தலைமை ஏற்று பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு)
குடிஅரசு - சொற்பொழிவு - 01.09.1945

-விடுதலை,26.2.17
-

வியாழன், 23 பிப்ரவரி, 2017

மதம் எதற்கு?

தந்தை பெரியார்மதம் என்றாலே பழைய கொள்கை என்றுதான் பொருள். நமது நாட்டில் இந்து மதம், கிறிஸ்து மதம், முகம்மதிய (இஸ்லாம்) மதம் என்பதாக மூன்று மதங்கள் இருக்கின்றன.

இவற்றுள் இந்து மதம் என்பது அடியோடு இல்லாத மதம். பார்ப்பன ஆதிக்கத்தால் பார்ப்பனர் உயர் ஜாதி என்பதற்கு ஏற்பச் சைவம், வைணவம், சாக்தம், கணாதம் என்பன போன்ற பல மதங்கள் (பிரிவுகள்), பல கடவுள்கள், அவற்றிற்காக உண்டாக்கப்பட்ட பல கதைகள் புராணங்கள், இதிகாசங்கள், அவற்றிற்கு ஏற்பட்ட நடப்புகள் இருந்து வருகின்றன. இவற்றின் தத்துவம் என்ன வென்றால், ஒன்றுகூட உண்மை அல்லாதது, நடக்காதது என்பதோடு, எல்லாமுமே கற்பனை களாகவும் முட்டாள் தன்மையனவாகவும், பல ஒன்றுக் கொன்று முரண் பட்டனவாகவும், மாறுபட்டனவாகவும், எதிர்ப்பானவையாகவும், பார்ப்பனரின் சுயநலத்திற்கு - சுயவசதிக்கு ஏற்றனவாகவும், இந்து மதத்தில் இருந்து வரும் பார்ப்பனரல்லாதாருக்குப் பெரும் இழிவும் தொல்லையு முடையனவாகவுமே கற்பிக்கப் பட்டவையாகும் என்பதே.

மற்றப்படியான கிறிஸ்து மதம், முகம்மதிய மதம் என்பவை இந்து மதம் என்பதைக் கண்டிக்கும் தன்மையில், மதத்திற்கு ஒரே கடவுள், அதுவும் உருவமற்ற சர்வ சக்தி உள்ள ஒரே கடவுள் என்கின்ற தன்மையில் மனிதராலேயே உண்டாக்கப் பட்ட மதங்களாகும். இவற்றிற்குக் காலம், தலைவர், ஆதாரம் (வேதம்) உண்டு; சரித்திரத்திற்குட் பட்டனவுமாகும்; எண்ணிக்கையிலும் ஏராளமான மக்களைக் கொண்டனவாகும்.

இந்து மதம் என்பதற்குக் கிறிஸ்து மதம், முகம்மதிய மதம் என்பவற்றிற்கு உள்ளவைபோல் காலம், தலைவர், ஆதாரம், சரித்திரம் எதுவுமே இல்லை. காலம் என்றால், கோடி கோடி வருடங்கள் வரை சொல்லப்படுகிறது. தலைவர் என்றால் மனிதர்கள் அல்லாதவர்-களாகவே சொல்லப்படுகிறார்கள். ஆதாரங்கள் ஒன்றல்ல; பத்து - நூறு அல்லாமல் ஆயிரக்கணக்கான மத ஆதாரங்கள். அவைகளை உண்டாக்கியவர்கள் பல கோடி பேர்கள் -ரிஷிகள், முனிவர்கள், தேவர்கள், அவதார புருஷர்கள் என்பதாகப் பல பிரிவினர்கள்.

கிறிஸ்தவர்களும், முகமதியர்களும் மதத்தைத் தங்கள் சமுதாயத்தை ஒன்றுபடுத்தவே பயன்படுத்துகிறார்கள். இந்துக்கள் என்பவர்கள் தங்கள் சமுதாயத்தை வேறுபடுத்தவும் உயர்வு தாழ்வு கற்பித்துப் பிரிவினை செய்யவுமே பயன்படுத்துகிறார்கள். பொதுவாகச் சொல்லப் போனால், இந்துமதம் என்பது மனிதர்களில் ஜாதிப் பிரிவு - உயர்வு தாழ்வுத் தன்மையை ஏற்படுத்தவும் நிலைக்கச் செய்யவுமே தான் பயன்படுத்தப்-படுகிறது; இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட இந்த மதங்களால் அந்தந்த மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு ஏதாவது பயன் உண்டா என்றால், எந்த மதத்தைச் சேர்ந்த மக்களுக்கும் யாதொரு பயனும் ஏற்படுவதற்கு இடமில்லை. எந்தத் தனிப்பட்ட மனிதனுக்காவது ஏதாவது பலன் உண்டா என்றால், அதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
-_ ‘உண்மை’, 14.11.1971

-_ ‘உண்மை’, 16-28.2.17

திங்கள், 20 பிப்ரவரி, 2017

சிவராத்திரியின் யோக்கியதை - தந்தை பெரியார்


சிவராத்திரி என்பது ஒரு பட்டினித் துக்கநாள் ஆகும். வைஷ்ணவர்கள் சுவர்க்கம் வேண்டி, பட்டினி கிடக்கும் வைகுண்ட ஏகாதசியைப்போல சைவர்கள் என்று கருதக்கூடியவர்கள் சிவன் ராத்திரியும் (கைலாச யாத்திரை, சமாதி) பட்டினி விரத விழா. தை, மாசி போன்ற காலங்களில் குளிர் நிறைந்துள்ள படியால், உடல் அங்கங்கள் இயக்கம் தடுமாறும்; உண்ணும் உணவு போன் றவை சரியானபடி ஜீரணம் ஆகாமல் இருக்கும்; வயிற்று இரைச்சல் போன்ற வயிற்றுக்கோளாறு உண்டாகும்.

ஆனால், இந்தச் சிவராத்திரி விரத மகிமைப்பற்றிக் கூறப்படும் புராணக் கதைகளோ அறிவுக்கும், இயற்கைக்கும், மக்கள் நடப்பு-பண்பாடுகளுக்கும் பொருந்தாதவை ஆகும். இந்த விரதம் பற்றிக் கூறப்படும் புராணக் கதையைப் பாருங்கள்!

முன்னொரு சமயம் ஊரும் பேரும் இல்லாத ஒரு வேடன் வேட்டைக்குச் சென்றானாம். அவனுக்குக் காலைமுதல் இரவு வரை காட்டில் அலைந்தும் எந்த விலங்கும் அவனுக்குத் தென்படவில்லையாம். இரவு நெருங்கும் நேரமானதால் விலங்குகள் நடமாட்டம் ஆரம்பித்தது. ஒரு புலி இந்த வேடனைக் கண்டுவிட்டது. இவனைப் பின் தொடர்ந்து வந்தபடியால், அவன் உயிர் தப்ப ஓடி, ஒரு பெரிய வில்வமரத்தின் மேல் ஏறிக்கொண்டானாம். அப்போது மழையும் பெய்தது. அந்தப் புலியும் விடாமல் துரத்தி வந்து அவன் ஏறியிருந்த மரத்தின் கீழ் தங்கல் போட்டது. புலியும் அவன் இறங்கு கிறானா என்று பார்த்துகொண்டே கீழே படுத்து இருந்தது. வேடன் பசி மயக்கத்தில் அதிகக்களைப்பு அடைந்து, வீடு செல்ல எண்ணியபடியால், அந்தப் புலியை விரட்ட, அந்த வில்வமர இலைகளைக் கொத்து கொத்தாய் பறித்து அந்தப் புலியின் மேல் வீசினான். மழை யின் காரணத்தால் அந்த இலைகளில் உள்ள ஈரப்பசையால் புலிக்குப் பக்கத்தில் உள்ள குத்துக்கல் மீது அந்த இலைகள் விழுந்தன. அது ஒரு சிவலிங்கமாம்; அன்று இரவு வேட்டை கிடைக்காததால் அந்த வேடன் பகல் முழுதும் பட்டினி.

(வேடர்கள் பொதுவாக காலையில் பழைய உணவு சாப்பிட்டு விட்டு வேட்டைக்கு வந்து வேட்டையாடிய விலங்கைக் கொண்டுசென்று, இரவு சமைத்துச் சாப்பிடுவது வாடிக்கையாதலால், பகல் முழுதும் பட்டினி என்பது சாதாரணம் தான்)

அவன் மாலை மழையில் நனைந்து குளித்தது போல் ஆயிற்றாம்; அவன் புலியை விரட்ட மரத்திலிருந்து கீழே போட்ட வில்வ இலைகள் மழையின் நீரால் நனைந்து, அவனை அறியாமல் , அவன் அறியாத லிங்கத்தின் மீது விழுந்தனவாம். எனவேதான் அன்று சிவராத்திரி, இரவில் லிங்கபூசை செய்தது போல் ஆயிற்றாம். அவன் இவ்விதம் செய்தது சிவனைக் கும்பிடவேண்டும் என்ற எண்ணமில்லாமல் போனாலும், சந்தர்ப்ப வசத்தால் பகல் முழுதும் பட்டினி கிடந்தது, சிவராத்திரி - பகல் உபவாசம் இருந்தது போல் ஆயிற்றாம். புலியை விரட்ட மழைத் தண்ணீரால் நனைந்த வில்வ இலைகள் லிங்கத்தின் மீது தற்செயலாய் விழுந்தபடியால், அதைக் குளிப்பாட்டி, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ததுபோல் ஆயிற்றாம். இதனால் அவன் வான் உலகை அடைந்தானாம்.

அடுத்த கதை - ஒரு பார்ப்பன வாலிபனைப் பற்றியது. இவன் சுத்த அயேக்கியனும் ஒழுக்கக் கேடனும் ஆவானாம். இதனால் ஊரை விட்டுத் துரத்தப்பட்டானாம். காலை முதல் இரவு முடிய உண்ண உணவு இல்லாமல், பசியால் வாடிய அவன் இரவு வந்ததும் ஒரு சிவன் கோயிலை அடைந்தானாம். அப்போது அந்த கோயில் அர்ச்சகன் பொங்கல் படையலை அந்த ஈசுவரன் சிலை முன் வைத்து விட்டு வெளியில் சென்று இருந்தான். இந்தப் பார்ப்பன வாலிபன் யாரும் இல்லாத சமயம் அங்கு சென்றபடியால் அவற்றை எடுத்து உண்ண ஆசைப்பட்டு, என்னென்ன பலகாரங்கள் இருக்கின்றன என்பது தெரியாதபடியால், இருண்ட வெளிச்சமாக இருந்ததைக் கருதி, கோயிலில் இருந்த விளக்கின் திரியை தூண்டிவிட்டானாம். அப்போது திரும்பி வந்த அர்ச்சகன் பார்ப்பன இளைஞன் பலகாரங்களை மூட்டை கட்டுவதைக் கண்டு ஆத்திரத்தில் அவனை அடித்துக் கொன்றான். அன்று மகாசிவராத்திரியாம்.

ஒழுக்கங்கெட்ட அந்தப் பார்ப்பான், காலை முதல் இரவு வரை பட்டினி இருந்தது மகாசிவராத்திரி பகல் உபவாசம் ஆனதாம். திருட எண்ணி, பிரசாதங்களை பார்ப்பதற்கு விளக்கு வெளிச்சத்தைத் தூண்டியது சிவராத்திரியில் ஈசுவரலிங்க சிலைக்கு தீபாராதனை செய்தது போலவும், பிரசாத நிவேதனம் செய்தது போலவும் ஆனதாம். இதனால் பார்ப்பன பூசாரியால் கொல்லப்பட்டதும் நேராக சிவலோகம் சென்றானாம். சிவராத்திரியில் மனிதக்கொலை; அவன் கொலை செய்தது எந்தப் புண்ணியத்தைச் சேர்ந்ததோ? கொலை செய்த அர்ச்சகனுக்கு எந்த லோகம் அளிப்பதோ? என்பது எல்லாம் அதில் கூறப்படவில்லை.

மனிதனுக்குப் பிறப்பு அடுத்து இறப்பு வருவது இயற்கைத் தத்துவம் என்பது உண்மை. உலகில் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வெருவருக்கும் இயல்பாய் தெரிந்த உண்மையாகும். ஆனால், இந்த சிவராத்திரிகள் விரதங்களின் முக்கிய அடிப்படை, பகலை அடுத்து இரவு வருவதுபோல் , மனிதருக்குப் பிறப்பை அடுத்து இறப்பு வருவது என்பதுதானாம். இதைத் தெரிந்து கொள்ள பூசையும் விரதமும் வேண்டுமா? என்று தான் நாம் கேட்கின்றோம்.

இந்த பாழும் அர்த்தமற்ற-பொய்யான - ஒரு காசுக்கும் உதவாத நமக்கு இழிவையும் அவ மானத்தையும் தருவதான பண்டிகைகளுக்கும், உற்சவத்திற்கும், பூசைக்கும், சடங்குக்குமாகப் பொரு ளையும் பணத்தையும் விரயப் படுத்துவது மக்களின் அறியாமையும், சுயநலக்காரர்களின் சூழ்ச்சியும், புரோகி தர்களின் ஆதிக்கமும், தந்திரமுமே ஆகும். இவைகளை உடனடியாக ஒழிக்க வேண்டும்.

-விடுதலை,19.2.17

செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

அறிவைச் சொல்லிக் கொடுக்கும் கல்வி முறையே நமக்குத் தேவை

தந்தை பெரியார்


தலைவர் அவர்கள் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்குவதற்கு தகுதி இல்லை என்று குறிப்பிட்டார்கள். இதற்குத் தனித் தகுதி ஒன்றும் தேவையில்லை. கூட்டத்தில் ஒழுங்கு முறை தவறாமல் அடக்கி ஆள வேண்டும். அது தவிர,  தலைமை தாங்க தகுதி தேவை இல்லை.

தலைவர் அவர்கள் நல்ல ஆராய்ச்சிக் கருத்துகளை எடுத்துரைத்தார்கள். முதலில் நீங்கள் பகுத்தறிவாளர் கழகம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். சிலர் சாமி இல்லாதவன் என்பார்கள். பகுத்தறிவாளர்களில் ஒரு பகுதியினருக்குத்தான் கடவுள் இல்லை. பகுத்தறிவு என்பது மனிதன் ஒருவனுக்குத்தான் உண்டு. பகுத்தறிவு என்றால்  எதையும் சிந்தித்து அறிவைக் கொண்டு ஆராய்ந்து ஏற்பதாகும். அறிவைப் பிரித்தவர்கள் பகுத்தறிவிற்கு ஆறாவது அறிவு என்று பிரித்திருக்கிறார்கள்.

ஒரு கடையில் போய் ஒரு பொருள் வாங்கினால் அதன் தரம், விலை, மதிப்பு யாவற்றையும் சிந்தித்து, அதன் பின்தான் வாங்குகின்றோம். இப்படி ஒவ்வொரு காரியத்தையும் சிந்தித்து செய்கிற மனிதன் சில காரியங்களில் முன்னோர் சாஸ்திரம், புராணம், வழக்கம், கடவுள் என்று சொல்லி சிந்திக்காமல் ஏற்றுக் கொண்டு இருக்கிறான். அதன் காரணமாக மனிதன் தன் அறிவினால் அடைய வேண்டிய அளவு பலன் அடையவில்லை.

மற்ற நாடுகளில் மனிதன் சந்திர மண்டலத்தில் கார் ஓட்டுகிறான் என்றால், அது அவனுடைய அறிவின் பலனாலேயே யாகும். இங்கு நமது மக்கள் அடிப்படையிலேயே அறிவற்று இருக்கிறார்கள். சிந்திக்காமல் எனது மதம், எனது இலக்கியம், எனது சாஸ்திரம், முன்னோர் சொன்னது என்று எதை எதையோ ஏற்றுக் கொண்டிருக்கின்றான்.

பகுத்தறிவாளர் கழகம் என்பது மிருகப் பிராயத்திலிருக்கிற மக்களை மனிதப் பிராயத்திற்குக் கொண்டு வருவதேயாகும். அதற்கு முன் நாம் (சுமார் 100, 150 ஆண்டுகளுக்கு முன்) கட்டை வண்டியில் பிரயாணம் சென்று கொண்டிருந்தோம். இப்போது எங்கள் முன்னோர் சென்றது, கடவுள் சென்றது, நீண்ட காலமாக இருந்து வந்தது என்பதற்காக எவரும் கட்டை வண்டியில் செல்வது கிடையாது.

மற்ற மதக்காரனைவிட்டு நம் மதத்தை எடுத்துக் கொண்டால் உலக மக்களுக்கு அறிமுகமாகிற வகையில் நம்மை அவனுக்கு விளக்க வேண்டுமானால், சுருக்க-மாக திராவிடன் என்று சொன்னாலும் இங்குள்ள முஸ்லிம்கள், கிறித்துவர்கள் யாவரும் திராவிடர்களே ஆவார்கள்.

நம்மைத் தனித்துக் காட்டிக் கொள்வதற்கு என்ன இருக்கிறது? இந்து என்று சொன்னால், இந்து மதம் என்று சொன்னால் அதன் ஆதி அடிப்படை என்ன? ஒரு கிறித்துவனையோ, துலுக்கனையோ கேட்டால் அவன் தன் மதத் தலைவனையும், மத நூலையும், மதம் ஏற்பட்ட காலத்தையும் கூறுகின்றான். நீ இந்து என்று சொல்வதற்கு உனக்கு என்ன ஆதாரம் இருக்கிறது? யார் உன் மதத்திற்குத் தலைவன்? உன் மதத்திற்குரிய வேத நூல் என்ன? உன் மதம் தோன்றிய காலம் என்ன? என்பதற்கு எந்தப் பதிலை சொல்ல முடியும்?

இந்து மதம் என்பது ஒரு கற்பனையே தவிர, உண்மையில் அப்படி ஒரு மதம் இல்லை. இதைப் பற்றி காந்தியிடமே சொல்லி இருக்கிறேன். அவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்து மதம் என்று ஒன்று இருந்தது என்பதற்கு நமது இலக்கியங்கள் எதிலும் ஆதாரம் இல்லை. நாம் எந்தக் கடவுளையோ, மதத்தையோ, சாஸ்திரத்தையோ திட்டுகிறோ மென்றால், அதில் நம்மை திட்டுகிற அளவிற்கு நாம் திட்டவில்லையே! இந்து மதப்படி எடுத்துக் கொண்டால், நீ நாலாம் ஜாதி, இழிஜாதி, சூத்திரன்தானே! பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிற முட்டாள்தானே! நீ முட்டாளாக இருப்பதால்தானே கோயிலுக்குப் போகிறாய், முட்டாளாக இருப்பதால் தானே சாம்பலையும், மண்ணையும் பூசிக் கொள்கின்றாய். அறிவு இருந்தால் இதனைச் செய்வாயா?

கோயிலுக்குப் போகிறவன் முட்டாள் என்று சொல்கிறேன். நீயே சிந்தித்துப் பாரேன். நீ மிக சுத்தமாக குளித்து முழுகிவிட்டு பயபக்தியோடு கோயிலுக்குப் போகிறாய். அங்கு பார்ப்பான் இருந்து கொண்டு கர்ப்பக்கிரகம் இருக்கிற இடத்திற்கு நீ வரக்கூடாது, நீ சூத்திரன். வெளியே நில் என்கின்றான். அதைக் கேட்டு நீ வெளியே நின்று கன்னத்திலடித்துக் கொள்கின்றாயே தவிர, நான் ஏன் உள்ளே வரக்கூடாது என்று எவனும் கேட்பதில்லையே. இப்படி செய்கிறவன் முட்டாள் இல்லாமல் அறிவாளியா என்று சிந்தியுங்கள். கோபப்படாமல் சிந்தியுங்கள். இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒரு இனம் சூத்திரனாக, பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனாக இருந்து கொண்டிருக்கிறதென்றால் அறிவும், சிந்தனையும் இல்லாததால்தானே!

மாறுதல் முன் இருந்ததை விட வசதியளித்துள்ளது, சிறப்புடையதாக இருக்கிறது. வளர்ச்சிக்குரியதாக இருக்கிறது, அதனால் ஏற்றுக் கொண்டிருக்கின்றோம்.

பகுத்தறிவுக்காரனுக்குக் கடவுள் - மதம் - சாஸ்திரம் - புராணம் - தலைவன் எதுவும் தேவையில்லை. அறிவு இருக்கும்போது இன்னொருவன் தயவு எதற்கு? முட்டாளுக்கு வேண்டும் வேதமும் சாஸ்திரமும்! அறிவாளிக்கு எதற்கு? வேதம் உண்டாக்கினவன், புராணம், இதிகாசங்களை உண்டாக்கினவன் யார்? அவன் அறிவு எவ்வளவு? அவன் வாழ்ந்த காலம் என்ன?

குறைந்தது 2,000, 3,000 வருடங்களுக்கு முன் இருந்தவன் எழுதியதுதானே வேதமும், சாஸ்திரமும், புராணமும். அப்போது அவன் அறிவு எப்படி இருந்திருக்கும் என்பதைச் சிந்தித்துப் பாருங்களேன்.

உலகில் கடவுள் இல்லாத காலம் இருந்தது. பின் ஒரு சிலர் தங்கள் சுயநலத்திற்காகக் கடவுளை ஏற்படுத்தினார்கள். மனிதர்களை மடையர்களாக்குவதற்காக உண்டாக்கப்பட்டது தான் கடவுளாகும். மக்களிடம் பயமிருந்தால் தான் அரசனுக்கு அடங்கி நடப்பார்கள். மக்களிடம் பயம் ஏற்படுத்துவதற்காக உண்டாக்கப்பட்டதுதான் புராணம், இதிகாசங்களும், சாஸ்திரங்களுமாகும். எந்தக் கடவுளும் - எந்த மதமும் - எந்த மத சாஸ்திரங்களும் மனிதனை வளரச் செய்யவில்லை, உருப்பட விடவில்லை.

மதவாதிகளின் வேலை என்ன? மதத்தையும், கடவுளையும் காப்பாற்றுவதுதானே! அவர்கள் கடவுள் இப்படிச் சொன்னார், இதைச் சொன்னார் என்று சொல்லி மக்களை நம்பும்படிச் செய்து மடையர்களாக்கு கின்றார்கள். இந்த மதத் தலைவர்களிடம் சொல்லி மக்களிடையே பரப்பும்படியாகச் சொன்ன கடவுள் ஏன் நேரிடையாக மக்களிடம் சொல்லவில்லை. கடவுள்தான் சர்வ வல்லமையுள்ளவராயிற்றே. மதத் தலைவர்கள் சொல்கிற கருத்தினை எல்லா மக்கள் மனத்திலும் ஏற்படும்படிச் செய்ய அவரால் முடியுமே. பின் எதற்காக மதத் தலைவரிடம் மட்டும் சொல்ல வேண்டும் என்று சிந்திக்க வேண்டுகின்றேன்.

கடவுள் இருக்கிறார், நம்பு என்று சொல்கின்ற எந்த மனிதனாவது உண்மையில் கடவுளின் சக்தியை, கடவுளை நம்புகின்றானா என்று பார்த்தால் எந்த ஒரு மனிதனும் நம்புவது கிடையாது. எந்தக் கடவுள் பக்தனும், நம்பிக்கைக்காரனும் தனக்கு நோவு வந்தால் கடவுளிடம் முறையிடுவது கிடையாது. கடவுளால்தான் நமக்கு நோவு கொடுக்கப்பட்டது, அதனை அவரே தீர்த்து வைப்பார்  என்று கருதிக் கொண்டு எந்தக் கடவுள் நம்பிக்கைக்காரரும் தன் நோவிற்குச்  சிகிச்சை செய்து கொள்ளாமலிருப்பது கிடையாது. கடவுள் சர்வசக்தியுள்ளவர், அவர் கவனித்துக் கொள்வார் என்று கருதி எந்தக் காரியத்தையும் அவருக்காக ஒதுக்கி வைப்பது கிடையாது. இதிலிருந்து என்ன தெரிகிற-தென்றால், மனிதன் சடங்கிற்காக கடவுளை நம்புகின்றானே தவிர, உண்மையில் நம்புவதில்லை என்பது விளங்குகின்றது.

அந்தக் காலத்தில் எவனெவன் வளர்ந்தானோ, அவனெல்லாம் மற்றவன் வளராமல் தடுக்க ஏற்பாடு செய்ததுதான் கடவுள், மதம், சாஸ்திரம், புராணம் என்பவைகள் யாவுமாகும். இன்று இந்த 1970-ஆம் ஆண்டில் நாமெல்லாம் சாஸ்திரப்படி, சம்பிரதாயப்படி, சட்டப்படி சூத்திரர்கள்; நாலாம் ஜாதி மக்கள் தானே!

இந்த நாலாம் ஜாதி சூத்திரத் தன்மைக்குக் காரணம் கடவுள் தானே, மதம், சாஸ்திரம் தானே. நீ உன் அறிவைக் கொண்டு கடவுள், மதம் ஆகியவைகளைப் பற்றியெல்லாம் சிந்தித்தால் தானே உன் சூத்திரத் தன்மையை விட்டுவிலக முடியும். உலகம் மாற வேண்டும், மாற்றியாக வேண்டும், அதற்குத் துணிவு வேண்டும். பார்ப்பான் 100-க்கு 3 பேர், நாம் 100க்கு 97 பேர் இருக்கிறோம். பார்ப்பான் நம்மில் மூன்று பேரை அழித்து, நாம் பார்ப்பான் மூன்று பேரை அழித்தோமானால், நம்மில் 94 பேர் மிச்சம் இருப்போம். பார்ப்பான் ஒருவன்கூட மிஞ்சமாட்டானே.

கடவுள் இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், பரப்பினவன் அயோக்கியன், வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று நாங்கள் சொல்கிறோமென்றால் உயிருக்குத் துணிந்துதான் இருக்கின்றோம்.

கடவுளுக்குக் கருணையோ, அன்போ இருந்தால் இன்னொரு ஜீவனை இன்னொரு ஜீவன் அடித்துத் தின்கின்றபடி எதற்காக உண்டாக்கப்பட வேண்டும்?

சாஸ்திரங்கள், புராணங்கள் என்பவை என்ன? நம்மைவிட கேவலமான - இழிவான குணங்-களைக் கடவுளுக்குக் கற்பித்து எழுதப்பட்டவைகள்தானே? வெள்ளைக்காரன் வந்து பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் வைத்து படிப்பு சொல்லிக் கொடுத்தான் என்றாலும் எம்.ஏ., பி.ஏ., படித்த முட்டாளெல்லாம் சாம்பலையும், மண்ணையும் பூசிக் கொண்டிருக்-கின்றான் என்றால் அவன் அறிவைச் சொல்லிக் கொடுக்காததாலே யேயாகும்.

நமது நாட்டுக் கல்வி முறை அறிவைச் சொல்லிக் கொடுப்பதாக இல்லை. மூட நம்பிக்கையை, முட்டாள்தனத்தை வளர்ப்ப தாகவே உள்ளது. இந்தக் கல்வி முறையானது மாற்றப்பட வேண்டும். அறிவிற்கேற்ற முறையில் பகுத்தறிவை வளர்க்கக் கூடியதாக அமைய வேண்டும். இப்போது படிப்பிற்கும், அறிவிற்கும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது.

பகுத்தறிவு என்றால் - மடமை, இழிவு, மானமற்ற தன்மை ஒழிய வேண்டுமென்பதற் காகத்தான். பகுத்தறிவுவாதியென்றால் அவன் உள்ளம் துய்மையானதாக இருக்க வேண்டும். எந்தப் பற்றுக்கும் மனதில் இடம் இருக்கக் கூடாது. எதையும் தன் அறிவைக் கொண்டு சிந்தித்து ஏற்க வேண்டும். அறிவிற்கு பொருந்தாதது எதுவாக இருந்தாலும் அதனைத் தள்ளிவிட வேண்டும்.

ஒருவன் கடவுளைக் கும்பிடுகிறானென்றால் உருவத்தோடு கும்பிட்டால் என்ன? உருவமில்லாமல் கும்பிட்டால் என்ன? கும்பிடுகிறவன் முட்டாள்தானே? இந்த இயக்கத்தில் மத சம்பந்தமான உணர்ச்சியோ, சின்னமோ உள்ளவர்கள் சேரக் கூடாது. எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சேரலாம். ஆனால், கட்சிக் கொள்கையை இதில் வலியுறுத்தக் கூடாது. அரசாங்க உத்தியோகஸ்தர்கள் யாவரும் சேரலாம். அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தமே கிடையாது.

(6.12.1970 அன்று கும்பகோணம் போர்ட்டர் டவுன் ஹாலில் பகுத்தறிவாளர் மன்ற நிகழ்ச்சியில்  தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை.)

- ‘விடுதலை’ 23, 28.1.1971

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

கல்யாண விடுதலை17.08.1930- குடிஅரசிலிருந்து..

ஆண் பெண் கல்யாண விஷயத்தில் அதாவது புருஷன் பெண்ஜாதி என்ற வாழ்க்கையானது நமது நாட்டிலுள்ள கொடுமையைப் போல் வேறு எந்த நாட்டிலும் கிடையவே கிடையாது என்று சொல்லலாம். நமது கல்யாண தத்துவம் எல்லாம் சுருக்கமாகப் பார்த்தால் பெண்களை ஆண்கள் அடிமையாகக் கொள்வது என்பதைத் தவிர வேறு ஒன்றுமே அதில் இல்லை. அவ் வடிமைத் தனத்தை மறைத்து பெண்களை ஏமாற்றுவதற்கே சடங்கு முதலியவைகள் செய்யப்படுவதோடு அவ்வித கல்யாணத்திற்குத் தெய்வீக கல்யாணம் என்பதாக ஒரு அர்த்தமற்றப் போலிப் பெயரையும் கொடுத்து பெண்களை வஞ்சிக்கின்றோம்.

பொதுவாக கவனித்தால், நமது நாடு மாத்திரமல்லாமல் உலகத்திலேயே அநேகமாய் கல்யாண விஷயத்தில் பெண்கள் மிக்கக் கொடுமையும், இயற்கைக்கு விரோத மான நிர்பந்தமும் படுத்தப்படுகிறார்கள் என்பதை நடு நிலைமையுள்ள எவரும் மறுக்க முடியாது. ஆனால் நமது நாடோ இவ்விஷயத்தில் மற்ற எல்லா நாட்டையும் விட மிக்க மோசமாகவே இருந்து வருகிறது.

இக்கொடுமைகள் இனியும் இப்படியே நிலைபெற்று வருமானால் சமீப காலத்திற்குள்ளாக அதாவது ஒரு அரை நூற்றாண்டுகளுக்குள்ளாக கல்யாணச் சடங்கும், சொந்தமும் உலகத்தில் அனேகமாய் மறைந்தே போகும் என்பதை உறுதியாய்ச் சொல்லலாம். இதை அறிந்தே மற்ற நாடுகளில் அறிஞர்கள் பெண்கள் கொடுமையை நாளுக்கு நாள் தளர்த்திக் கொண்டு வருகின்றார்கள். நம் நாடு மாத்திரம் குரங்குப் பிடியாய் பழைய கருப்பனாகவே இருந்து வருகின்றது. ஆதலால் தலைகீழ் முறையான பெண்கள் கிளர்ச்சி ஒன்று நமது நாட்டில் தான் அவசரமாய் ஏற்பட வேண்டியிருக்கின்றது.

சென்ற வருஷம் செங்கல்பட்டு மகாநாட்டில் பெண் களுக்கும், ஆண்களுக்கும் தங்கள் தங்கள் கல்யாண விடுதலை செய்து கொள்ள உரிமை இருக்க வேண்டும் என்பதாக ஒரு தீர்மானம் செய்யப் பட்டவுடனும் சமீபத்தில் சென்னையில் கூடிய பெண்கள் மகாநாட்டில் கல்யாண ரத்துக்கு ஒரு சட்டம் வேண்டும் என்று தீர்மானித்த உடனும் உலகமே முழுகிவிட்டதாக சீர்திருத்தவாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் உட்பட பலர் கூக்குரலிட்டார்கள். ஆனால் செங்கல்பட்டுத் தீர்மானத் திற்குப் பிறகு வெளி நாட்டிலும், இந்தியாவிலும் பல விடங்களில் கல்யாண ரத்துச் சட்டங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. ருஷியாவில் கல்யாணமே தினசரி ஒப்பந்தம் போல் பாவிக்கப்பட்டு வருகிறது. ஜெர்மனியில் புருஷனுக்கும் பெண் ஜாதிக்கும் இஷ்டமில்லையா னால் உடனே காரணம் சொல் லாமலே கல்யாணத்தை ரத்து செய்து கொள்ளலாம் என்ப தாக சட்டம் கொண்டு வரப் பட்டது யாவருக்கும் தெரிந்த விஷயமாகும். சமீபத்தில் பரோடா அரசாங்கத்தாரும் கல்யாண ரத்துக்குச் சட்டசபையில் சட்டம் நிறை வேற்றிவிட்டார்கள். மற்ற மேல் நாடுகளிலும் இவ்விதச் சட்டங்கள் இருந்து வருகின்றது. நமது நாட்டில் மாத்திரம் இவ்விஷயம் சட்டம் செய்வதில் கவனிக்கப்படாமலிருந்து வருகின்ற தானது மிகவும் அறிவீனமான காரியம் என்றே சொல்ல வேண்டும். சாதாரணமாக தென்னாட்டில் பத்திரிக்கைகள் மூலம் அனேக புருஷர்கள் தங்களது பெண் ஜாதிகளின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டு என்பதாய் கொலைகள் செய்ததாக தினம் தினமும் செய்திகள் வெளி யாவதை பார்த்து வருகின்றோம்.

சில சமயங்களில் ஒரு பெண்ஜாதியின் நடவடிக்கை சந்தேகத்திற்குப் பல கொலைகள் நடந்ததாகவும் பார்க் கின்றோம். தெய்வீக சம்பந்தமான கல்யாணங்கள் இப்படி முடிவடைவானேன் என்பதைப் பற்றி தெய்வீகத்தில் பிடிவாதமுள்ள எவருக்குமே யோசிக்கப் புத்தியில்லை. பெண்கள் உலகம் முன்னேற்ற மடைய வேண்டுமானால் அவர்களுக்கும் மனிதத்தன்மை ஏற்பட வேண்டுமானால் ஆண்களுக்கும் திருப்தியும், இன்பமும், உண்மையான காதலும், ஒழுக்கமும் ஏற்பட வேண்டுமானால் கல்யாண ரத்துக்கு இடமளிக்கப்பட வேண்டியது முக்கியமான காரியமாகும். அப்படிக்கில்லாத வரை ஆண், பெண் இருவருக்கும் சுதந்திர வாழ்க்கைக்கு இடமே இல்லாமல் போய்விடும்.

நமது சீர்திருத்தவாதிகள் பலர், ஒரு மனிதன் இரண்டு பெண்டாட்டி களைக் கட்டிக் கொள்வதை பற்றி மாத்திரம் குடி முழுகிப் போய் விட்டதாகக் கூச்சல் போடுகின்றார்கள். இவர்கள் எதை உத்தேசித்து இப்படி கூச்சல் போடு கின்றார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை.

மதத்தை உத்தேசித்தா? அல்லது பகுத்தறிவை உத்தேசித்தா? அல்லது பெண்கள் நலத்தை உத்தேசித்தா? அல்லது மனித சுதந்திரத்தை உத்தேசித்தா? என்பது நமக்குச் சிறிதும் விளங்கவில்லை. அல்லது மனித ஒழுக்கத்தை உத்தேசித்து இப்படி பேசுகின்றார்களா என்பதும் விளங்கவில்லை. இதைப் பற்றி மற்றொரு சமயம் விவரிப்போம்.

நிற்க ஒரு பெண்ஜாதிக்கு மேல் மனிதன் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்று சொல்லுபவர்களை நாம் ஒன்று கேட்கிறோம் அதென்னவெனில் கல்யாணம் என்பது மனிதன் இன்பத்திற்கும் திருப்திக்குமா? அல்லது சடங்குக்காகவா? என்று கேட்பதோடு இஷ்டமில்லாத ஒற்றுமைக்கு இசையாத கலவிக்கு உதவாத ஒரு பெண் எந்த காரணத்தினாலோ ஒருவனுக்குப் பெண்ஜாதியாக நேர்ந்து விட்டால் அப்போது புருஷனுடையக் கடமை என்ன என்று கேட்கின்றோம்.

அதுபோலவே ஒரு பெண்ணுக்கும் அப்படிபட்ட ஒரு புருஷன் அமைந்து விட்டால் அப்பெண்ணின் கதி என்ன என்று தான் கேட்கின்றோம். கல்யாணம் என்பது தெய்வீக மாகவோ, பிரிக்க முடியாததாகவோ உண்மையில் இருக்குமாயின் அதில் இவ்வித குணங்கள் ஏற்பட முடியுமா என்பதை யோசித்தாலே தெய்வீகம் என்பது முழுப் புரட்டு என்பது எப்படிப்பட்ட மனிதனுக்கும் புரியாமல் போகாது.

ஆகவே நமது நாட்டிலும் மற்ற நாடுகளில் இருப்பது போன்ற கல்யாண ரத்துக்குச் சட்டம் சமீபத்தில் ஏற்படாமல் போகுமாயின் கல்யாண மறுப்புப் பிரசாரமும் கல்யாணம் ஆன புருஷர்களுக்கும், பெண்களுக்கும் பலதாரப் பிரசாரமும் தான் செய்ய வேண்டிவரும், அன்றியும் இது சமயம் ஒற்று மைக்கும் திருப்திக்கும் இன்பத்திற்கும் உதவாத பெண்களை உடைய புருஷர்கள் கண்டிப்பாக தைரியமாக முன் வந்து தங்களுக்கு இஷ்டமான பெண் களை திரும்பவும் மணம் செய்து கொள்ளத் துணிய வேண்டும் என்றும் தூண்டுகின்றோம். ஏனெனில் அப்படி ஏற்பட்டால் தான் தெய்வீகம் என்கின்ற பெயரைச் சொல்லி கொண்டு புருஷர்களுக்கும் பெண்களுக்கும் சம்மதமும் முன்பின் அறிமுகமில்லாமல் செய்யப்பட்டுவரும் கல்யாணங்களில் மக்கள் அடையும் துன்பம் ஒழிபட முடியும். மனிதன் ஏன் பிறந்தானோ ஏன் சாகிறானோ என்பது வேறு விஷயம். ஆதலால் அது ஒரு புறமிருந் தாலும் மனிதன் இருக்கும் வரை அனுபவிக்க வேண்டியது இன்பமும் திருப்தியு மாகும். இதற்கு ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் முக்கிய சாதனம். அப்படிபட்ட சாதனத்தில் இப்படிப்பட்ட துன்பத்திற்கிடமான இடையூறு இருக்குமானால் அதை முதலில் களைந்தெறிய வேண் டியது ஞானமுள்ள மனிதனின் கடமையாகும்.

மனித ஜீவகோடிகளின் திருப்திக்கும் இன்பத்திற்கும் வேலை செய்பவர்கள் இதையே செய்ய வேண்டும். அப்படிக்கில்லாமல் ஏதோ கல்யாணம் என்பதாக செய்து கொண்டோமே, செய்தாய் விட்டதே, எப்படி இருந்தாலும் சகித்துக் கொண்டுதானே இருக்க வேண்டும் என்று கருதி துன்பத்தையும் அதிருப்தியையும் அனுபவித்துக் கொண்டி ருப்பதும், அனுபவித்துக் கொண்டிருக்கச் செய்வதும் மனிதத் தன்மையும் சுயமரியாதையும் அற்ற தன்மையு மேயாகும் என்பதே நமதபிப்பிராயமாகும்.

-விடுதலை,10.2.17