புதன், 31 டிசம்பர், 2014

சேலம் ஊர்வலத்தில் செருப்படி சம்பவம்


சேலம் ஊர்வலத்தில் செருப்படி சம்பவம் நிகழ்ந்ததற்குக் காரணம் என்ன?

- தந்தை பெரியார்

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் வெற்றியை எப்படிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எப்படி நிலைக்க வைக்க வேண்டும் என்பதைப் பற்றிச் சிந்திக்கவே இங்கு கூடி உள்ளோம். தற்போது ரொம்பப் பேருக்குப் பார்ப்பானை ஆசை தீர வைய வேண்டும்- அடிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும், என்கின்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.  இத்தேர்தலில் பார்ப்பனர் நடந்து கொண்ட விதம் மற்றவர்களை அப்படி எண்ணும்படியாகச் செய்துள்ளது.
பார்ப்பான் ஒழிய வேண்டுமானால் அவனை விரட்டுவது என்று பெயரா அல்லது அவனைப் பூண்டோடு ஒழிக்க வேண்டும் என்று பெயரா? பார்ப்பான் ஒழிக என்று வாயால் சொல்வதால் மட்டும் பார்ப் பானை ஒழிக்க முடியாது. பார்ப்பானைப் பூண்டற்றுப் போகும்படிச் செய்ய வேண்டு மானால் எதனால் அவன் வாழ்கின்றானோ- பிழைக்கின்றானோ அதனை ஒழிக்க வேண்டும். அதை விட்டு விட்டு வாயால் கத்துவதால் பயனில்லை.
பார்ப்பான் ஒழிய வேண்டியது மிக மிக அவசியமாகும். அவனால் இந்த நாடும் உலகமும் மிக மிகக் கேடடைந்து வருகிறது என்பதோடு, அவனால் நாம் இன்னமும் இழி மக்களாக இருந்து கொண்டிருக்கிறோம். பார்ப்பானை ஒழிக்க வேண்டுமானால் அவனுக்குப் பக்கபலமாக- ஆதரவாக- பாதுகாப்பாக இருக்கிற கடவுளை, - மதத்தை, - சாஸ்திரத்தை, - கோயில்களை எல்லாம் ஒழிக்க வேண்டும்.
ஒரு சமயம் சி.பி. இராமசாமி அய்யர் மதமும், ஒரு விரல் அளவு சாமி உருவம் இருந்தால் போதும்; எவராலும் பார்ப்பனரை ஒழிக்க முடியாது என்று சொன்னார்.
அவர் சொன்னது 100க்கு 100 உண்மை யாகும். மதமும் கடவுளும் இருக்கிறவரை பார்ப்பான் இருந்து தான் தீருவான். ஒருவன் எதனால் பார்ப்பான் என்றால் மதப்படி- கடவுள் அமைப்புப்படி என்று தான் சொல்கின்றான். நாம் ஏன் சூத்திரர்கள் என்றால் கடவுள் அப்படி அமைத்திருக் கிறார். சாஸ்திரத்தில் இருக்கிறது; மதப்படி தான் என்கின்றனர். எனவே நாம் சூத்திரத் தன்மைக்கும் பார்ப்பானின் உயர் சாதித் தன்மைக்கும் காரணமாக இருப்பது கடவுள் - மதம் - சாஸ்திரம் ஆகியவையேயாகும் என்பதால் அவை ஒழிக்கப்பட வேண்டும் என்கிறோம்.
சேலத்தில் நடைபெற்ற சம்பவத்தை எப்படித் திருத்தினான் என்றால், சாமி படத்தை நான் செருப்பால் அடித்தேன் என்பதாகவும், அப்படி அடிப்பதற்குத் தி.மு.கழக அரசு ஆதரவாக இருந்தது என்றும், சாமி படத்தை செருப்பாலடிக்க ஆதரவு கொடுத்த தி.மு.கழகத்திற்கு மக்கள் ஓட்டளிக்கக் கூடாது என்றும் பிரசாரம் செய்தார்கள்.
நான் இராமனையும், முருகனையும் செருப்பால் அடிப்பது போன்று படம் போட்டு ஊரெங்கும், தமிழ்நாடு முழுவதும் ஒட்டினார்கள். இதனை முதலில் செய்ய வில்லை. முதலில் இந்தச் செய்தியை வெளி யிட்டால் எல்லா மக்களும் இப்படிச் செய் தால் என்ன செய்வது என்று பயந்து விட் டனர். முதலில் அவர்கள் மக்களிடையே பிரசாரம் செய்தனர்; என்னவென்றால், சேலம் மாநாட்டில் எவன் மனைவியை எவன் வேண்டுமானாலும் அடித்துக் கொண்டு போகலாம் என்று தீர்மானம் போட்டார்கள். பெண்கள் கற்பிற்கு ஆபத்து வந்து விட்டது என்று பிரசாரம் செய்தனர்.
சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் பெண்கள் சுதந்திரத்திற்காக, விடுதலைக்காக ஒரு தீர்மானம் போடப்பட்டது. ஒருவன் மனைவி (அவனை விரும்பவில்லையா னால்) மற்றவனை விரும்புவது என்பதைக் குற்றமாக்கக் கூடாது என்பதேயாகும். இந்நிலை இன்றைக்கும் சட்டப்படிக் குற்ற மல்ல. பின் ஏன் இத்தீர்மானம் போட்டோம் என்றால், பெண்கள் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆகும்.
இத்தீர்மானத்தைத் திரித்துப் பிரசாரம் செய்தார்கள். நாம் மறுப்பு எழுதியதை அவர்கள் வெளியிடவில்லை. அதன் பின்தான் கோர்ட்டில் நாம் போட்ட தீர்மானத்தை மாற்றி வெளியிட்டு தம்மைத் தாழ்மைப்படுத்தப் பார்க்கிறார்கள், இதனைத் தடுக்க வேண்டும் என்று வழக்குப் போட் டோம். அந்த வழக்குப்  போட்ட பின்தான் அதை விட்டுவிட்டு இராமன் படத்தை செருப்பாலடித்ததைப் பெரிதுபடுத்திப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர்.
இந்தச் செருப்பாலடித்த செயல் எப்படி ஏற்பட்டது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். செருப்பினால் அடித் தது எனக்குத் தெரியாது. நம் திட்டத்திலும் அது இல்லை. முதலில் யாரும் செருப் பினால் அடிக்கவில்லை.
பின் அந்த நிகழ்ச்சி எப்படி ஆரம்பித் தது என்றால், சேலத்தில் தேவாலயப் பாதுகாப்பு மாநாடு என்று ஒன்று கூட்டி, அதில் என்னை மிகவும் கண்டித்துப் பேசி னார்கள். அந்த மாநாட்டிற்கு மக்கள் கூட்டம் இல்லை. அந்த மாநாடு நடக்கிற போது நான் சேலத்தில் இருந்தேன். அப்போது நம் தோழர்கள் வந்து அந்த மாநாட்டைக் கண்டித்து ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டார்கள். பின் அக்கூட்டத்தின் சார்பில் ஓர் ஊர்வலம் நடத்த வேண்டும் என்றார்கள். பிறகு கூட்டமும் ஊர்வலமும் நடத்துவதானால் ஒரு சிறு மாநாடே நடத்தி விடலாம் என்று சொன்னார்கள். நானும் ஒத்துக் கொண் டேன்.
அந்த ஊர்வலத்தில் நம் மக்கள் கடவுள் களாகக் கருதிக் கொண்டிருக்கிற சில கடவுள்களின் பிறப்புகளைப் படமாகப் போட்டு கொண்டு ஊர்வலம் போவதாக ஏற்பாடு செய்தார்கள். இது எப்படியோ தெரிந்து பார்ப்பனர்கள் கலெக்டரிடம் சென்று ஊர்வலத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.
அவர் பார்ப்பனர் ஆனதால், போலீஸ் சூப்பிரன்டிடம் சொல்லி ஊர்வலத்தைத் தடை செய்யச் சொல்லி இருக்கிறார். சூப் பிரன்ட் ஊர்வலத்தை நிறுத்தும்படியாகச் சொல்வதாக வந்து சொன்னார்கள். நான் அதற்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது தான் அவர்கள் வேலையே தவிர, நிறுத்து வதற்கு வேண்டுமானால் தடை போடட்டும் என்று சொன்னேன். தடைபோட்டாலும் கேட்க மாட்டார்கள் மீறி நடத்துவார்கள் என்று தெரிந்து ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டார்கள்.
ஊர்வலம் வந்து கொண்டிருக்கும்போது ஓரிடத்தில் 30, 40 பேர் கருப்புக் கொடியை வைத்துக் கொண்டு கத்திக் கொண்டிருந் தார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பாக 500 க்கு மேற்பட்ட போலீசார் வளைத்து நின்று கொண்டிருந்தனர். போலீஸ் பாதுகாப்பு இருக்கிறது என்கின்ற தைரியத்தில் கருப்புக் கொடி பிடித்துக் கொண்டிருந்த ஒருவன் ஒரு செருப்பை எடுத்து ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது வீசினான். ஊர்வலத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சென்று கொண்டிருக் கின்றனர். நான் கண்டிக்கா விட்டால் பெரிய கலகம் ஏற்பட்டிருக்கும். அவன் வீசிய அந்தச் செருப்பை எடுத்து ஒரு தோழர் ஊர்வலத்தில் வந்த இராமன் உருவத்தை அடித்தார். அதைப் பார்த்து மற்ற தோழர் களும் தங்கள் தங்கள் செருப்பாலடிக்க ஆரம்பித்தனர். இதுதான் நடந்த உண்மை யாகும்.
இதை அவர்கள் தி.மு.க அரசு உத்தரவு கொடுத்தார்கள். அந்த உத்தரவின் பெய ராலேயே அடித்தோம் என்று பிரசாரம் செய்தான்; பத்திரிகைகளில் எல்லாம் எழுதினான். நான் அதை மறுக்கவில்லை; காரணம் மறுத்தால் நம் தோழர்கள் செருப்பால் அடிப்பது தவறு என்று கருதி விடுவார்களே என்று மறுக்கவில்லை. அதன் பலனாக இச்சம்பவம் இந்தியா பூராவும் விளம்பரம் ஆகும்படியாக ஆயிற்று. நாம் எவ்வளவு பாடுபட்டாலும், செலவு செய்தாலும் இவ்வளவு விளம்பரம் செய்ய முடியாது. அந்த அளவிற்கு விளம்பரம் நடைபெற்றிருக்கிறது. அதற்காக நன்றி தெரிவிக்க வேண்டும்.
28.03.1971 அன்று மதுரையில் தந்தை  பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு
(விடுதலை, 11.05.1971)

(விடுதலை, 28.12.2014)

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

மக்கள் ஒன்றுபட வேண்டும்சித்திரபுத்திரன்-4 இது சொன்னது சுயமரியாதைக்காரரா?

-சித்திரபுத்திரன்-
பர்த்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டானால் எத்தாலும் கடைத் தேறலாம் - சற்றேனும் ஏறுமாறாய் இருப்பாளே யாமாகில் கூறாமல் சன்னியாசம் கொள்
என்று நீதி நூல்கள் முறையிடுகின்றன. இதைச் சொன்னது சுய மரியாதைக்காரர்களல்லவே. இப்பொழுது சுயமரியாதைக்காரர்கள் ஏறுமாறாய் இருக்கும் விரதைகளை விட்டுவிட்டு சன்யாசம் கொள்ளு என்பதற்குப் பதிலாக வேறு ஒரு பெண்ணை கொள்ளு.
சன்னியாசம் கொள் ளாதே என்கிறார்கள். இதனால் புருஷனின் சன்யாசம் மாறிற்றேயொழிய பெண்ணின் விரதத்திற்கு யாதொரு மாறுதலும் ஏற்படவில்லை. இதற்காக ஏன் சிவநேயர்கள் வேப்ப எண்ணை குடிக்க வேண்டும்?
குடிஅரசு - விமர்சனம் - 14.12.1930

தந்தை பெரியார் பொன்மொழிகள்
இவ்வுலகில் பல மதக் கொடுமைகளுக்கும் ஜாதி வித்தியாச இழிவுக்கும் உட்பட்டுக் கேவலமான மிருகத்திலும் இழிவாகக் கருதப்பட்டுப் பின்னால் மோட்சம் அடைவதைவிடச் சமத்துவம் பெறுவதுதான் பிரதானம்.
சமதர்மக் கொள்கையைப் பரப்ப வேண்டு மானால் நாத்திகத்தினால்தான் முடியும். நாத்திகம் என்பதே சமதர்மம் தான்.
சமதர்மம் என்று வந்துவிட்டால் மனிதச் சமுதாயத்துக்குக்  கவலை, குறைபாடு, தொல்லை எல்லாம் அடியோடு போய்விடும். கவலை, குறைபாடுகள் நீக்கப்பட வேண்டுமானால் சமதர்மம் தான் மருந்து.
-விடுதலை,13.9.14

சித்திரபுத்திரன்-3 தீபாவளிப் பண்டிகை

வருகுதப்பா தீபாவளி - வழமைபோல். நீ என்ன செய்யப் போகிறாய்?
தம்பீ! பழையகால சாஸ்திரம் இன்றைக்கு உதவாது இன்றைக்கு ஏற்றபடி அது மாறவும் மாறாது. அதை ஒருத்தன் எடுத்து வைத்தால்தான் அல்லது அது அசைக்கப்பட்டால்தான் ஓர் இடத்திலிருந்து ஓர் இடத்திற்கு மாறும் அல்லது அதை ஒருவன் எடுத்து நமக்கு வேண்டாததை அடித்து வேண்டியதை எழுதினால்தான் திருந்தும்.
ஏன் அப்படிச் சொல்லுகிறேன்? அதற்கு உயிரில்லை; அது ஏடு; காகிதம் போன்ற அசேதன வஸ்து; சிந்திக்கும் தன்மை அற்றது.
ஆதலால், சாஸ்திரம் சொல்லுகிறது அந்தப்படி செய்கிறேன் என்று நீ சொல்லு வாயானால் நீ சேதன (சிந்திக்கும் சக்தி உள்ள) வஸ்து ஆகிய மனிதனென்றோ, அறிவுள்ளவன் என்றோ சொல்லிக் கொள்ள உனக்கு சிறிதுகூட யோக்கியதை கிடையாது.
சாஸ்திரம் பெரியவாள் எழுதினது என்று சொல்லுவாயானால், நீ யாரு? சிறியவாளா? எந்தப் பெரியவாள்? அந்தப் பெரியவாள் காலத்தைவிட முட்டாள்தன மான காட்டுமிராண்டித்தனமான காலத்திலா நீ பிறந்தாய்?
போக்குவரத்து சாதனமில்லாத, விஷயஞானம் பெற வாய்ப்பும் சாதனமும் இல்லாத கல்லாயுத காலத்திலா இருந்து வாழ்ந்து வருகிறாய்? ஆகவே, அந்தக் காலத்தைவிட  அந்தக் காலத்து பெரியாரை விட நீ எந்த விதத்திலும் தாழ்ந்தவனாக இருக்க முடியாது.
ஆதலால் சாஸ்திரம், பெரியவாள், வெகுகாலத்திற்கு முன் ஏற் பட்டது என்கின்ற முட்டாள் தனத்துக்குத் தாயகமாக இருக்கும் பித்தலாட்டத்தில் இருந்து முதலாவதாக நீ வெளியில் வா!
சாஸ்திரத்தைப் பற்றிக் கவலை இல்லைபெரியவாளைப் பற்றிக் கவலை இல்லை, ஆனால் அந்த சாஸ்திரங்கள் கடவுள் களால் சொல்லப்பட்டது; உண்டாக்கப் பட்டது என்று சொல்லுகிறாயோ? அப்படி யானால் இப்படிச் சொல்லுகிறவனைப் போல் முட்டாள் மனித வர்க்கத்தில் ஒரு வருமே இருக்க முடியாது என்பதோடு இதைக் கேட்டு நம்பி நடக்க ஆரம்பிக் கிறானே அவனைப் போல் அடிமடை யனும் வேறு இருக்க முடியாது என்று சொல் லுவதற்கு தம்பி, நீ மன்னிக்க வேண்டும்.
கடவுள் இருக்கிறார் என்று வைத்துக் கொள். கடவுள் சொன்னார் என்று வைத்துக் கொள். யாருக்குச் சொன்னார்? உனக்கா சொன்னார்? மனிதனுக்குச் சொன்னார் என்பாய். அப்படியானால், கிறிஸ்துவருக் குச் சொன்னாரா? முஸ்லிமுக்குச் சொன் னாரா? பார்சிகளுக்குச் சொன்னாரா? அவற்றை நம்பாத நாஸ்திகனுக்கு சொன்னாரா? யாருக்குச் சொன்னார்? எப்பொழுது சொன்னார்? அந்தக் காலத்தில் நீ இருந்தாயா? நீ பார்த்தாயா? அல்லது யார் பார்த்தது? கடவுள் சொன்னார் என்று இன்று உனக்குச் சொன்னவர்கள் யார்? சொன்னவர்களுக்குச் சொன்னவர்கள் யார்? சாஸ்திரம் கடவுளால் சொல்லப்பட் டது என்பதை சாஸ்திரமே சொன்னால் போதுமா? அதற்கு அடையாளமே வேண்டாமா? அச்சுப் புத்தகமும் அய்யர் பேச்சும், கிருபானந்தவாரி, பண்டிதமணிகள் பிரசங்கங்களுமே போதுமா? இவைகளை யெல்லாம் யோசித்த பிறகல்லவா சாஸ்திரம் சொல்லுகிறது என்பதையும், சாஸ்திரத்தை கடவுள் சொன்னார் என்பதை யும் நீ மனிதனாய் இருந்தால் நம்ப வேண் டும். மாடாயிருந்தால் அல்லவா யோசி யாமல் ஆம் என்று தலையாட்ட வேண் டும்? இந்த இருபதாம் நூற்றாண்டில் உனக்கு இதுகூடவா  தம்பி தெரியவில்லை? சாஸ்திர காலத்தைவிட இன்று கட வுள்கள் அருமை என்று நினைக்கிறாயா? எண்ணி முடியாத கடவுள்கள் தோன்றி இருப்பதோடு, தோன்றிய வண்ணம்தானே இருக்கின்றன கடவுள்களுடைய அற் புதங்கள் இக்காலத்தில் நடக்காத நாள் ஏது? மனிதர்களிடத்தில் கடவுள்கள் பேசாத நாள் ஏது? பெசண்டம்மை இடம் பேசினார்; காந்தியாரிடம் பேசுகிறார்.
அசரீரியும், சோதனைகளும் நடக்காத நாள் ஏது? இப்படி எல்லாம் இருக்கும்போது இக்காலத்தில் கடவுள் நேரில் வந்து உன் னையோ அல்லது என்னையோ கூப்பிட்டு நேரில் அடே, மக்களா! நான்தாண்டா சாஸ்திரம் சொன்னேன்; சந்தேகப்படா தீர்கள்! என்று சொல்லித் தொலைத்தால் பிறகு உலகில் ஏதாவது கலவரம் இருக்க முடியுமா?
அல்லது ரமணரிஷிகள் என்ன, சாயி பாபாக்கள் என்ன, மகாத்மாக்கள் என்ன, மற்றும் தெய்வீக சக்தி பெற்றவர்கள் என்று சொல்லப்படும் மகான்கள் என்ன - இத் தனை பேர்களில் யாரிடமாவது ஒரு வார்த்தை சொல்லித் தொலைக்கக் கூடாதா?
இவ்வளவு தகராறு, வர்க்கம், கலகம் கடந்து ஒருத்தன்மேல் ஒருத்தன் கல்லு, சாணி, செருப்பு எறிந்து, அடிதடி நடந்து, போலிஸ் வந்து மக்கள் சீரழிகின்ற காலத்தில் தைரியமாய் அல்லது கருணை வைத்து வெளிவந்து நிலைமையை விளக்க முடியாத சுவாமிகள் இனி வேறு எந்தக் காலத்திற்குப் பயன்படப் போகிறார்கள்?
ஆகையால், கடவுள் சொன்னது - சாஸ்திரம் என்பதை கட்டி வைத்து விட்டு உன் அனுபவத்தையும் அறிவை யும் பயன்படுத்தி தீபாவளியைப் பற்றி யோசித்துப்பார் அப்பா - தயவு செய்து கோபியாதே தம்பீ!
கோபம் செய்தாலெமன் கொண் டோடிப் போவான் என்று சொன்னது சரியல்ல; கோபம் செய்தால் நீ ஏமாந்து போவாய் என்று நான் கூறுகிறேன். ஆகவே அறிவுக் கண்ணுடன் நாடு, இனம், மானம் ஆகியவைகளின்மீது பற்று வைத்து தீபாவளிபற்றி சிறிது சிந்தித்துப் பார்!
தீபாவளி கதை
தீபாவளி கதை பற்றி சுமார் 10 வருடங் களுக்கு மேலாக எழுதியும் பேசியும் வருகிறோம். ஆதலால் விரித்து எழுத வேண்டியதில்லை. என்றாலும் குறிப்பு கொடுக்கின்றோம்.
இது தீபாவளி கதை. மிகவும் அதிசய மானதும், ஆபாசமானதும், இழிவும், ஈனத் தன்மையும் பொருந்தியதுமாகும்.
மகாவிஷ்ணுக்கு வாயில் காப்பாளராக இருந்த இரு காவலர்கள் உத்தரவின்றி உள்ளேவிட மறுக்கப்பட்ட இரண்டு பிரா மணர்கள் சாபத்தால் இரணியன், இரணி யாட்சன் என்று இரண்டு ராட்சதர்களாகப் பிறந்து விஷ்ணுவால் கொல்லப்பட்டு சீக்கிரம் மோட்சமடைய வேண்டுமென்று ஏற்பட்டு விட்டதற்கிணங்க மூத்தவன் தேவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்தான். இளையவன் பூமியை பாயாகச் சுருட்டி எடுத்துக் கொண்டு ஓடி சமுத்திரத் திற்குள் நுழைந்து கொண்டான். தேவர்கள் வேண்டுகோளால் மூத்தவனைக் கொல்ல மகாவிஷ்ணு நரசிம்ம (சிங்க) அவதார மெடுத்து வந்து கொன்று விட்டார். இளைய வனான இரண்யாட்சனைக் கொல்ல மகாவிஷ்ணு வராக (பன்றி) அவதார மெடுத்து வந்து சமுத்திரத்திற்குள் பாய்ந்து இரண்யாட்சனைக் கொன்று பூமியைக் கொண்டுவந்து பழையபடி விரித்துவிட்டு போய்விட்டார்.
இதுவரை கதையில் அதிசயம் அதாவது பொய்யும் புளுகும் இருக்கலாமே தவிர, இதில் ஆபாசமில்லை. இனிமேல் நடப்பது தான் ஆபாசம்.
என்னவென்றால் விஷ்ணு பல அவ தாரம், பலரூபம் எடுத்து இருக்கிறார். அவற்றுள் பெரும் பாகம் ஆபாசமாகவே முடிகின்றன.
விஷ்ணு, அசுரர்களால் கடைந்து எடுக் கப்பட்ட அமிர்தத்தை வஞ்சித்து தேவர் களுக்குக் கொடுப்பதற்காக அசுரர்களை ஏமாற்ற மோகினி அவதாரமெடுத்தார். அந்தக் காரியம் தீர்ந்த உடன் சிவனுக்கு அந்த மோகினி அவதாரத்தின்மீது ஆசை வந்து அவர் பின் திரிந்து, மோகினி இணங்காமல் போய் இருவரும் பலாத்காரம் செய்து, சிவன் இந்திரியம் பூமியில் கொட்டப்பட அந்த இந்திரியம் பூமியில் வெள்ளி தங்கமாக வேர் இறங்கிவிட்டன. அதுதான் இன்று வெள்ளியும் தங்கமுமாம்.
மற்றொரு சமயம் சிவன் பத்மாசூரனுக்கு வரம் கொடுத்ததால் அவன் சிவன் தலையிலேயே கையை வைத்து சிவனைக் கொல்லவர சிவன் ஓடி ஒழிந்து விஷ்ணு வைக் கூப்பிட விஷ்ணு மோகினி அவதார மெடுத்து தந்திரம் செய்து பத்மாசூரனை இறக்கும்படி செய்து விட்டுத் திரும்புகை யில் சிவன் அவளைப் புணர்ந்தானாம். அப்போது அய்யனார் பிறந்தார். இப்படி யுள்ள கதைகள் போலவே விஷ்ணு பன்றி அவதாரமெடுத்து இரண்யாட்சனைக் கொன்றுவிட்டுத் திரும்பும் காலையில், பன்றி தான் கொண்டு வந்த பூமியைத் தனக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய உரிமை இருக்கிறதென்று கருதி அந்தப் பூமியையே அந்த பன்றி புணர்ந்ததாம். பூமியும் அதற்கு சம்மதித்து இடம் கொடுத்ததாம். அப்போது பூமி கர்ப்பமாகி ஒரு குழந்தையையும் பெற்று விட்டதாம். அக்குழந்தைக்கு நரகாசூரன் என்று பெயர் இட்டார்களாம். ஏன் அப்பெயர் இட்டார்கள் என்றால் நரகலைச் சாப்பிடுகின்ற பன்றிக்கும், நரகலைச் சுமக்கின்ற பூமிக்கும் குழந்தை பிறந்ததால் நரகன் என்று பெயர் இடாமல் வேறு என்ன பெயர் இடுவார்கள்?
இப்படிப் பிறந்த இந்தக் குழந்தை வங்காளத்துக்கும், அஸ்ஸாமுக்கும் மத்தியில் உள்ள ஒரு பிரதேச அரசனாக இருந்து கொண்டு பிரம்மாவின் மனைவியின் காதணியையும் வருணனின் ஆயுதத் தையும் பிடுங்கிக் கொண்டு, இந்திரனின் சிம்மாசனத்தையும் தூக்கிவர எத்தனித் தானாம். அதோடு தேவர்களுக்கு தொல்லை கொடுத்தானாம்; உலகத்தையும் துன்புறுத்தினானாம். தேவர்களுக்காக கிருஷ்ண பகவான் வந்து இந்த அசுரனை வதம் செய்தாராம். அந்த நாளை கொண் டாடுவதுதான் தீபாவளியாகும். இது என்ன கதை? இதில் அறிவு மானம் இருக்கிறதா?
இரண்யாட்சன் பூமியை சுருட்டித் திருடிக் கொண்டு போகக் காரணம் என்ன?
பூமி தட்டையாய் இருந்தாலல்லவா சுருட்ட முடியும்? அதுதான் உருண்டை ஆயிற்றே? பூமியை உருட்டிக் கொண் டல்லவா போயிருக்க வேண்டும்?
அப்படியே சுருட்டினதாக வைத்துக் கொள்வதானாலும் சுருட்டினவன் எங்கே இருந்து கொண்டு பூமியை சுருட்டி இருப்பான்? ஒரு சமயம் ஆகாயத்தில் தொங்கிக் கொண்டு சுருட்டி இருந்தாலும் பூமியில் இருந்த மலை, சமுத்திரம், ஆறு, ஜீவப்பிராணி முதலிய சகலமும்தானே பாயாக சுருட்டப்பட்டு பாய்க்குள் சிக்கி இருக்க வேண்டும். அப்படி இருக்க அவன் பூமியை தூக்கிக் கொண்டு ஒளிய வேறு சமுத்திரமேது? வேறு சமுத்திரமிருந் திருந்தால் அது எதன்மீது இருந்திருக்கும்?
அப்படியே வைத்துக் கொண்டாலும் இந்தப் பூமியை திருப்பிக் கொண்டுவர விஷ்ணு அவதாரமெடுப்பானேன்? அதுவும் பன்றி அவதாரமெதற்கு? அப்போது அது ஆகாரமான எதைத் தின்று இருக்கும்? எதையோ தின்று தொலைந்து போகட்டும்.
இந்தப் பன்றி பூமியைப் புணர ஆசைப் படுவானேன்! கொண்டு வந்ததற்குக் கூலியா? அப்படியேதான் இருக்கட்டும். இதற்கு இந்தப் பன்றியுடன் போகம் செய்ய பூமிதேவி இணங்கலாமா? இது என்ன கதை? திராவிட மக்களை அசுரன், இராட் சதன், அரக்கன் என்று கூறி அவர்களை இழிவு செய்ய எழுதினதல்லாமல்  வேறு என்ன இது? வங்காளத்தில் ஆரியர் வரு முன்பு திராவிடர்கள்தானே ஆண்டு கொண்டிருந்திருக்க வேண்டும்? ஆரி யர்கள், திராவிடர்களைக் கொல்வதானால் மானம், வெட்கம் பார்க்காமல் மிருகங் களுடன் புணர்ந்தானாலும் சரி, மலத்தைத் தின்னாலும் சரி, எப்படியான இழிவான அசிங்கமான காரியத்தைச் செய்தாவது கொல்லலாம் என்கின்ற தர்மத்தை ஆரியர் களுக்கு போதிக்க வந்த மனுநூல் போன்ற ஒரு கோட் தானே ஒழிய இப்புராணங் களுக்கு வேறு என்ன கருத்து சொல்ல முடியும்?
ஆகவே அப்பேர்ப்பட்ட கதையில் ஒன்றான நரகாசூரன் கதையை நம்பி நாம் பண்டிகை கொண்டாடலாமா? நாம் திராவிடரல்லவா? நம் கடவுள்கள் மலம் தின்பதையும், நம் பெண் கடவுள்கள் பன்றியுடன் புணர்ச்சி செய்வதையும் ஒப்புக் கொள்ள நம்மால் முடியுமா? ஒப்புக் கொள்ளலாமா? நமக்கு மானம், வெட்கம், புத்தி ஒன்றுமே கிடையாதா?
நம் தலைவனைக் கொன்றதை நாம் கொண்டாடும் அவ்வளவு மானம் ஈனம் அற்றவர்களா நாம்? நாம் வீர திராவிட ரல்லவா? நம் இன மக்கள் தீபாவளி கொண் டாடலாமா? கண்டிப்பாய் கொண்டாடா தீர்கள். கொண்டாடுவதானால் இந்தக் கதை கொண்ட புத்தகங்களை வாங்கி நடு வீதியில் வைத்து ஆண்கள் மிதியடியால் மிதி மிதியென்று மிதியுங்கள்; பெண்கள் முறத்தால் மொத்து மொத்து என்று மொத்துங்கள்.
- குடிஅரசு -கட்டுரை -  07.10.1944


விடுதலை12.10.14  .

சனி, 27 டிசம்பர், 2014

சித்திரபுத்திரன்-2 கடவுள் இருந்தால்...


    சர்வ வல்லமையுள்ள கடவுள் ஒருவர் இருந்தால் மனிதனுடைய தேவைக்கும் ஆசைக்கும் தகுந்தபடி நடந்து கொண்டிருப்பார். அல்லது கடவுளுக்கு இஷ்டமில்லாத விஷயங்களைப் பற்றி மனிதனுக்குத் தேவையில்லா மலாவது, ஆசையில்லாமலாவது அல்லது நினைப்புக்கே வராமலாவது செய்திருப்பார்.
உதாரணமாக, மனிதன் தனக்கு முகத்தில் மயிர் வேண்டியதில்லை என்று கருதி, தினம் தினம் சவரம் செய்து கொள்ளுவதைப் பார்க்கிறோம். ஆனால், கடவுள் அனுக்கிரகத்தால் அது தினம் தவறாமல் முளைத்துக் கொண்டே வருவதையும் பார்க்கிறோம்.
இது என்ன கடவுளுடன் மனிதன் ஏற்றுக்கு மாறாய் நடந்து போட்டி போடுகிறானா? அல்லது மனிதனுடன் கடவுள் ஏற்றுக்கு மாறாய் நடந்து போட்டி போடுகிறாரா? அல்லது ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாமல் அவரவர் காரியத்தை அவரவர்கள் பார்க்கின்றார்களா?
- சித்திரபுத்திரன் மனிதனுடைய சிந்தனா சக்தியானது - மனிதனை மனிதன் உண்ணவும், மனிதனை மனிதன் சுரண்டவும், மனிதனை மனிதன் வெறுக்கவுமான காரியங்களைச் செய்கிறது.
பகுத்தறிவும் சிந்தனா சக்தியும் இல்லாத மற்ற ஜீவப் பிராணிகளிடம் இருக்கும் எந்தக் கெட்ட காரியம் மனிதனிடம் இல்லை என்று சொல்ல முடியும்? மற்ற ஜீவனைத் தொல்லை கொடுப்பது, வஞ்சிப்பது, துன்பப் படுத்துவது முதலாகிய கெட்ட சுபாவம் பகுத்தறிவும் சிந்தனா சக்தியும் படைத்த மனிதனிடம் இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா?
-தந்தை பெரியார்


      மனிதனுடைய சிந்தனா சக்தியானது - மனிதனை மனிதன் உண்ணவும், மனிதனை மனிதன் சுரண்டவும், மனிதனை மனிதன் வெறுக்கவுமான காரியங்களைச் செய்கிறது.

     பகுத்தறிவும் சிந்தனா சக்தியும் இல்லாத மற்ற ஜீவப் பிராணிகளிடம் இருக்கும் எந்தக் கெட்ட காரியம் மனிதனிடம் இல்லை என்று சொல்ல முடியும்? மற்ற ஜீவனைத் தொல்லை கொடுப்பது, வஞ்சிப்பது, துன்பப் படுத்துவது முதலாகிய கெட்ட சுபாவம் பகுத்தறிவும் சிந்தனா சக்தியும் படைத்த மனிதனிடம் இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா?
                                                                                                                                  -தந்தை பெரியார்

விடுதலை,26.12.14

திங்கள், 24 நவம்பர், 2014

நமது உயிரைக் கொடுத்தேனும் ஜாதியை ஒழிப்பொம்

ஜாதி ஒழிப்பைக் காங்கிரஸ் கட்சி தன்னுடைய இலட்சியமாகக் கொள்ள வேண்டுமென்று தீர்மானம் கொண்டு வந்தேன். அந்தச் சந்தர்ப்பத்தில் இராஜ-கோபாலாச்சாரி சொன்னார், நாயக்கரே! (திருநெல்வேலியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில்) இது வீண்வேலை; புத்தனெல்லாம் முயற்சி செய்து தோற்றுப்போனான்; முஸ்லிம் 700 ஆண்டு முயற்சி செய்து தோற்றுப் போனான்; நீங்கள் ஏன் இதைச் செய்ய வேண்டும்? என்றார்.

நான் தோற்றாலும் கவலையில்லை; இது நல்ல வேலையாகத் தெரிகிறது; அந்தக் காலம் வேறு; இந்தக் காலம் வேறு; மக்களுக்கு அறிவுவர ஆரம்பித்துள்ளது; மேலும் இன்னும் எத்தனை காலம் நாங்கள் சூத்திரராக (தேவடியாள் மக்களாக) இருப்பது என்றேன் நான்.
பிறகு காங்கிரசை விட்டு 1925 இல் காஞ்சிபுரம் மாநாட்டிலே வெளிவந்தேன்; நான் கொண்டு வந்த வகுப்புரிமைத் தீர்மானத்தைச் சூழ்ச்சியாக ஒழித்துக் கட்டினார்கள். காங்கிரஸ் ஸ்தாபனம் (கட்சி) பார்ப்பனரல்லாதாருக்குத் துரோகம் செய்து அவர்களைப் பார்ப்பனருக்குக் காட்டிக் கொடுக்கும் அமைப்பு என்பதை நன்றாக உணர்ந்தவுடன் நான் வெளியே வந்தேன். வந்தவுடன் (1925) சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தேன்; இந்த 32 வருடங்களாக ஜாதிகள் ஒழிய வேண்டும் என்றே பிரச்சாரம் செய்து வருகிறேன்.
1938 ஆம் ஆண்டில் இராஜகோபாலாச்-சாரியார் சென்னைக்கு முதன்மந்திரியாக வந்தபோது பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளுக்கு இந்தியைக் கட்டாயப் பாடாமாக்கினார். அதை எதிர்த்து 2000 பேரைச் சிறைக்கு அனுப்பினேன்; எனக்கும் 2 வருட தண்டனை விதித்தார்கள். அப்போது சொன்னேன்: நான் தமிழ்நாட்டின் ஆட்சி தமிழ் மக்களின் கைக்கு வந்து ஆகவேண்டும் என்பதை; அப்போதே நான் உணர்ந்தேன்; காங்கிரஸ்காரன்கூட விடுதலை கேட்காத காலம். ஏதோ கொஞ்சம் அதிகமான அதிகாரத்தை வெள்ளைக்காரன் கொடுத்தால் போதும் என்று சொல்லி வந்த காலம்.
நம்முடைய இயக்கம் நாளுக்கு நாள் நல்லமுறையில் வளர்ந்து வருகிறது; நம்முடைய உண்மையான பலத்தை அறிந்தவர்கள் வடநாட்டவர்களே. அதனால்தான் அரசமைப்புச் சட்டத்தில் தங்களுக்கு மிகுந்த பாதுகாப்பைத் தேடிக்கொண்டார்கள்.
இந்தத் தமிழ்நாட்டுப் பார்ப்பனர் தங்களுடைய ஆதிக்கத்தை நிலைக்க வைக்க சூழ்ச்சி செய்ததுதான் இந்த அரசமைப்புச் சட்டம்! தமிழ்நாட்டைப் பற்றிப் பார்ப்பனருக்கு மிகவும் சந்தேகம்; பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி இங்கு மிகுதியாக உண்டு; நாட்டு ஆட்சி தமிழர்கள் கைக்குப் போனால் தங்களை ஒழித்துக் கட்டிவிடுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆகவே யாரை விட்டாலும் விடலாம். இந்தத் தமிழ்-நாட்டவரை மட்டும் தனியாக விடக்கூடாது. அவர்களை என்றென்றும் அடிமையாக வைத்திருக்க வேண்டும் என்று திட்டம் தீட்டி விட்டார்கள்.
பெயருக்கு ஏதோ இது கூட்டாட்சி (திமீபீமீக்ஷீணீறீ ஷிணீமீ) என்று பெயர். ஆனால் இது உண்மையல்ல. பலமான சர்வாதிகார ஆட்சியே கூட்டாட்சி என்று சொல்கிறானே ஒழிய சட்டத்தில் பிரிவதற்கு இடம் இல்லை. அந்தப் பிரச்சினைக்கே அதில் இடம் கிடையாது. சேர்வது வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம். கோவாவைச் சேர்த்துக் கொள்ளலாம். பாண்டிச்சேரியைச் சேர்த்துக் கொள்ளலாம்; பாகிஸ்தான் மீதுகூட சண்டைக்குப் போகலாம்! ஆனால் நம்முடைய தமிழ்நாடு பிரிவதற்குச் சட்டத்தில் இடமில்லை; ஆகவே கூட்டாட்சி என்று சட்டத்தில் போட்டிருப்பதெல்லாம் பித்தலாட்டம்.
ஜாதியினுடைய இழிவை மக்கள் உணர்வதில்லை; அந்த அளவுக்கு அதில் ஊறிப்போய் விட்டார்கள்; ஏதோ பகவான் செயல், பகவானால் அமைக்கப்பட்டுள்ளது என்று எண்ணிக் கொண்டுள்ளனர் நம்முடைய மக்கள். என்றைய தினம் மதம், கடவுள் இவற்றில் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தார்களோ அப்போதே இந்த இழிவை இவர்கள் உணராத நிலைக்கு வந்து விட்டார்கள்.
இந்த ஜாதி முறையைக் கண்டித்தவர்கள்  இரண்டொருவர். அவர்களில் புத்தர் ஒருவர். அவருடைய கொள்கையை இந்த நாட்டை-விட்டே ஒழித்துவிட்டார்கள். ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாய் புத்தர்கள் என்பவர்கள் அந்தக் கொள்கை தோன்றிய நாட்டில் வாழ்கிறார்கள். புத்தக் கொள்கையில் மக்களைச் சேர்த்தார் அம்பேத்கர்! உடனே அரசாங்கம் புத்தக் கொள்கையில் சேர்ந்தவர்-களுக்குச் சலுகையில்லை; வேலைக்கு இடம் ஒதுக்கி வைக்கமாட்டோம் என்று சொல்லி-விட்டார்கள். அந்தக் கொள்கைக்குப் போனவன் இரண்டொருவனும் இப்போது திரும்பி வரப் பார்க்கிறான்.
புத்தக் கொள்கையில் மக்களைச் சேர்த்த அம்பேத்கரைக் கொன்று போட்டு ஒழித்து விட்டார்கள். அவர் எப்படிச் செத்தார் என்பதற்கு இன்றைய தினம் வரை தகவல் ஏதும் இல்லையே! ஏதோ இரவு பத்து மணிவரை படித்துக் கொண்டிருந்தார்; படுக்கைக்குப் போனார்; பொழுது விடிய படுக்கையில் பிணமாகக் கிடந்தார் என்பதைத் தவிர எப்படிச் செத்தார் என்று யாரும் சொல்லவில்லையே? இந்து மதத்திற்கு விரோதமாக (பகையாக) இருந்த அவரை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பது-தானே இவர்களுடைய எண்ணம்? அதன்படி அவரைக் கொன்றுபோட்டு விட்டார்களே! இதைப்பற்றிக் கேட்கக்கூட இன்று நாதி இல்லையே?
வெள்ளைக்காரனுக்கு இந்த நாட்டில் ஆதிக்கத்திற்கு  வசதி செய்து கொடுத்தவன் பார்ப்பனன். நீங்கள், காங்கிரஸ் சரித்திரம், என்ற புத்தகத்தை வாங்கிப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும்; காங்கிரசின் முதல் தீர்மானமே வெள்ளைக்காரன் ஆட்சி என்றென்றைக்கும் நீடிக்க வேண்டும் என்பதுதான். வெள்ளைக்காரனுக்கு உதவி செய்து தங்களுக்கு வேண்டியபடி அவனுடைய காலத்திலேயே சட்டத்தை ஏற்பாடு செய்து-கொண்டுவிட்டார்கள் பார்ப்பனர்கள்.
நம்மை இன்று ஆள்கின்ற இந்து லாவை (இந்து சட்டம்) வாங்கி அதன் முதல் பக்கத்தை முகவுரையைப் படித்துப் பாருங்களேன்.
இந்து லாவானது இந்துமத வேதசாஸ்திரங்-களை அடிப்படையாகக் கொண்டது. பராசரர், நாரதர், யாக்ஞயவல்கியர் மனு ஆகியவர்-களுடைய ஸ்மிருதிகளை (கருத்துகளை) அடிப்படையாகக் கொண்டது; வருணா-சிரமத்தை அடிப்படையாகக் கொண்டது; இந்து லாவில் ஏதாவது சந்தேகம் வந்தால் சொந்தப் புத்தியை உபயோகப்படுத்தக்கூடாது. சாத்திரங்-களில் வல்லவர்களைக் கூப்பிட்டுத்தான் சந்தேகம் தீர்த்துக் கொள்ள வேண்டும். இப்படித்தானே போட்டிருக்கிறது இந்து லாவில்? யாராவது இல்லை என்று சொன்னால் நான் மாற்றிக் கொள்ளுகிறேன்; கொஞ்ச நாள்களுக்கு முன் சுயமரியாதைத் திருமணம் சம்பந்தமாக அய்கோர்ட்டில் (உயர் நீதிமன்றம்) வழக்கு  ஒன்று வந்தபோது வேத சாஸ்திர அடிப்படையில்தானே தீர்ப்புக் கூறப்பட்டது? வேதத்தின் சூத்திரத்தையல்லவா ஜட்ஜ்-மெண்டில் (தீர்ப்பில்) எடுத்துக்காட்டி அதன் அடிப்படையில் தீர்ப்புக் கூறுவதாக எழுதியிருக்கிறார் நீதிபதி.
-ஜாதிப் பிரிவினையால் இந்த நாட்டிற்கு ஏற்பட்ட நன்மை என்ன? இருக்கவேண்டிய அவசியமென்ன? வேண்டுமானால் இந்தப் பார்ப்பான் பாடுபடாமல், உடம்பை வளைக் காமல் வாழமுடிகிறது. மற்றவர்கள் அடைந்த, அடைகின்ற இலாபம் என்ன?
நம்முடைய மக்கள் பிறவித் தொழிலாளர் களாகவும், இழி மக்களாகவும், தற்குறிகளாகவும் இருப்பதற்குக் காரணமான ஜாதியை ஒழிக்க நாம் முயற்சிகள் செய்துள்ளோம். எங்களுடைய முயற்சிகள் போதிய பயனளிக்காததற்குக் காரணம் சட்டம் குறுக்கே நிற்கிறதுதான்.
உயிருக்கு நாங்கள் துணிந்துவிட்டோம். முதலாவதாக அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்தப்போகிறோம். இந்தச் சட்டத்துக்குக் காரணமான காந்தியை அடுத்தபடியாக ஒழிக்கப்போகிறோம், பிறகு உயிரைக் கொடுப்போம்.
(23.10.1957 அன்று நெல்லை மாவட்டம் ஏரலில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு - விடுதலை 4.11.1957)

ஞாயிறு, 23 நவம்பர், 2014

முப்பெரும்கேடுகள்


- தந்தை பெரியார்
இப்போது உள்ளபடி நானும்நீங்களும் கீழ்சாதி. இந்த இழிநிலை நீங்க, கிளர்ச்சி நடந்து  தீரவேண்டும். ஆகவே இப்போது எனக்கு அளித்த வரவேற்பு எல்லாம் நாம் எல்லோரும் மீண்டும் சிறை செல்ல வழி யனுப்பு உபசாரமே என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது! சிறைமீண்ட பெரும் பாலான நம் தோழர்களும், மீண்டும் சிறை ஏகத் தயார்! போராட்டத்துக்குத் தேதி கொடுங்கள்! என்று சொல்கிறார்கள்.
சிறை சென்றவர்களில் சில பேர் செத்தனர், இவர்களெல்லாரும் சாகாதிருந் தால் ஆயிரம் ஆண்டுகளுக்கா இருக்கப் போகிறார்கள்? நோயால் தூக்குப் போட்டுக் கொண்டா செத்தோம்? இல்லை! பின் எதற்காக? இலட்சியத்திற்காகச் செத்தனர். எனக்கும் உங்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும். எந்த நேரத்திலேயோ சாகும் நாம், இந்த உயர்வான இலட்சியத் துக்காகச் சாவோமே! செத்தவர்களைக் கண்டு  நாம் வெட்கப்பட வேண்டும். நாமும் இலட்சியச் சாவு பெறத் துணிய வேண்டும்.
நமது இயக்கப் புத்தகங்கள் சிலவற்றை வாங்கிப் படிக்க வேண்டும். காரணம் விளங் கினால்தான் உற்சாகமாக ஈடுபடுவீர்கள்! தோழர்களே!  இந்த நாட்டிலே மனித சமுதாயத் துக்கு மூன்று பெரிய கேடுகள்!  மக்கள் நன்மை தீமை உணர இவற்றை  ஒழித்தாக வேண்டும்.
முதலாவதாக மேல்சாதி.... கீழ் சாதி; ஒருவன் பார்ப்பான், கடவுளுக்குச் சம மானவன்! அவன் சாமி! பிராமணன் என அழைக்கப்பட வேண்டும். அவன் கடவுள் இனம்! சாமிக்கும் பூணூல்! அவனுக்கும் பூணூல்! அவன் உயர்ந்தவன், நாம் தாழ்ந் தவர்கள்.
மனிதனில் எதற்கு மேல்சாதி.... கீழ்சாதி? இந்தக் கொடுமை இந்த நாட்டைத் தவிர உலகில் வேறு எந்த நாட்டிலுமில்லையே!
மேல்சாதி என்பது பாடுபடாத சோம் பேறி வாழ்வுக்கு ஏற்பட்டது. கீழ் சாதி அந்தச் சோம்பேறிக்கு ஆகப் பாடுபடும் சாதி. பாடுபட்டதைச்  சோம்பேறிகள் அனுபவிக்க விட்டுவிட்டது.
இரண்டாவதாகப் பணக்காரன், ஏழை. இது எதற்காக? பணக்காரன் - ஊரார் உழைப்பை அனுபவித்து, பணம் சேர்த்துக் கொள்ளையடிப்பவன்! ஏழை பாடுபட்டுப் பணக்காரனிடம் கொடுத்துவிட்டுக் கஷ்டப் படுபவன்; ஏன் இப்படி? அவசியமென்ன? பணக்காரன் மக்களுக்காக என்ன பாடு படுகிறான்? ஏழை என்ன பாடுபடுகிறான்? ஏழை என்ன பாடுபடவில்லை?
மூன்றாவதாக - ஆண் எஜமானன்! பெண் அடிமை! இராஜாவின் வீட்டிலும் இராணி யானாலும் சரி பெண் அடிமைதான்! சில நிர்ப்பந்தம், அடக்குமுறை ஆண்களுக் குத்தான் சவுகரியம் அளிக்கின்றன. மிருகங் களில் கூட இருக்கலாம். அவைகளுக்குப் புத்தி இல்லை. மனிதனில் ஆண் எசமான்; பெண் அடிமை; இந்த வேறுபாடு தேவை யில்லாதது; அக்கிரமமானதுங்கூட; பொருத் தமற்றது. இயற்கைக்கு விரோதமானது.
இங்கு மூன்று பேர் மேல் சாதி; 97 பேர் கீழ்ச்சாதி! அதுபோல பணக்காரன் மூன்று பேர்; ஏழை 97 பேர்; ஏன் இந்த வேறுபாடு? சிந்தித்தால் கிடைக்கும் காரணம். இந்த மூன்று தன்மைகளுக்கும், சிறுபான்மை யினர் பெரும்பான்மையானவர்களைக் கஷ்டப்படுத்து கிறார்கள்.
காரணம் 1. கடவுள்; 2. மதம் - சாஸ்திரம்; 3. அரசாங்கம்.
கடவுள் பெயரால் ஏன் மேல் சாதி கீழ்சாதி என்றால் மதம் சாஸ்திரம் அப்படி. மதம் சாஸ்திரம் பாதுகாப்புக்கு அரசாங்கம் உள்ளது. ஆகவே இந்த மூன்று கேடுகளும் ஒழியவேண்டுமா, வேண்டாமா? இந்த மூன்றில் கடுகத்தனை வேர் இருக்கும் வரை நாம் கஷ்டப்பட வேண்டியதுதான். யார் இதைப் பற்றியெல்லாம் நினைக் கிறார்கள் திராவிடர் கழகத்தைத் தவிர?
திராவிடர்கழகம் என்றால் கடவுள் இல்லை, மதத்தை  எதிர்க்கிறது, நேரு அர சாங்கம் ஒழிய வேண்டு மென்பது தானா? என்கின்றனர்.
பாடுபடாத சோம்பேறிக் கொள்ளைக் காரன்களுக்கு அனுமதி அளிக்க இந்த மேல் சாதி பாதுகாப்பென்றால் ஏன் இவற்றை ஒழிக்கக் கூடாது? சூழ்ச்சி சுயநலக்காரன் வாழவே இந்த ஆட்சி; இதை ஒழிக்கப் பாடுபடாவிட்டால் நமக்கும், மிருகத்துக்கும் என்ன வித்தியாசம்? இவற்றை ஒழிக்க, நாம் மனிதத் தன்மையை அடைய முடியாதபடி செய்ய, இம்மூன்று தன்மைகளும் மக்களை ஏமாற்றி துப்பாக்கி, இராணுவம் பேரால் மிரட்டுகின்றன.
இதற்குக் கிளர்ச்சி என்பது சாதாரண மானது; போதாது. இரத்த ஆறு ஓட வேண்டும். நேர்மையை நிலைநாட்டச் செய்ய வேண்டும். இந்த மாதிரியான நிலை ஏன் ஏற்பட்டதென்றால் நமக்குக் கோழைத் தனம்; அறிவில்லாத தன்மையால் ஏற்பட்ட குறைகள்! பின் எதற்காக இம்மாதிரி வேறு பாடுகள் இருக்க வேண்டும்?
மத-சம்பிரதாயங்களால்தான் இந்த வேற் றுமைகள் ஏற்படுகின்றன. இவை ஒழிய, ஆணும், பெண்ணும் பாடுபடவேண்டும். பொதுமக்கள் ஒவ்வொருவரும் இக்காரி யத்தில் இறங்க வேண்டும்.
உலகத்தில் 30 கோடி மக்களைக் கொண்ட ரஷ்யா, 65 கோடி மக்கள் உள்ள சைனாவில் கடவுள், மதமில்லை! சாஸ்திர சம்பிரதாயமில்லை! ஆண், பெண் பேத மில்லை! உத்தியோகத்தில், பட்டாளத்தில், போலீசில் இரு பிரிவினரும் சமம். அங்கு ஆண்கள் செய்யும் வேலையைப் பெண்கள்  பார்க்கிறார்கள்.  அங்கெல்லாம் எப்படி இந்த நிலைமை  வந்தது?
இராஜாவைப், பாதிரியை வெட்டி வீழ்த்தினார்கள்; கோயில்களை இடித்துத் தள்ளினார்கள்! எனவே அங்கு ஆண் எசமானுமில்லை. பெண் அடிமையுமில்லை.
இந்த நிலையிலே ஒன்று நீயா! அல்லது நானா! என்பதுதான் நமது முடிவாக இருக்க வேண்டும்; இந்த இழிநிலையை நீக்க எல்லோருமே தான் சாவோமே! என்ன முழுகி விட்டது? கடவுள் அப்படிச் சொன் னார்! சாஸ்திரம் இப்படிச் சொல்கிறது? என்றெல்லாம் மனிதன் பயங்காளிப் பழக்க வழக்கத்தில் ஊறிப்போய்விட்டான்.
இம்மாதிரி முயற்சி, நமது கிளர்ச்சி சாதி ஒழியவேண்டுமென்பது.  இதற்கு எவ்வளவு தூரம் போக வேண்டும்? முதலாவது சாதியைப் பாதுகாக்கும் கடவுளை ஒழிக்க வேண்டும்.
நாம் ஏன் 4-ஆவது 5-ஆவது சாதி? ஏன் பறையனென்றால் கடவுளையும், மதத் தையும் நம்புகிறான். இதை நம்புவனெல் லாம் சாதியில் பறையன், எனவே நாம் சாதியையும் கடவுளையும் ஒழிக்க வேண் டும். நீ என்ன மதம் என்று கேட்டால், நான் அறிவு. மதமென்று சொல்ல வேண்டும். கடவுள் இல்லை, சாஸ்திரமில்லை என்று சொல்லவேண்டும்; கடப்பாறையை விழுங்கி விட்டுச் சுக்குக் கஷாயம் குடித்தால் போதுமா? ஏன் என்று கேட்க வேண்டாமா? மதம், கடவுள் இப்படி! இதைப் பாதுகாக்க இப்படி அரசாங்கம் ஒன்று இருக்கிற தென்றால் இதை ஒழிக்க வேண்டாமா?
காந்தி இவற்றையெல்லாம் நினைத் திருப்பாரா? இல்லையே, இதனால்தான் காந்தி பார்ப்பானுக்கு மகான்! எனக்கு அவர் சாதாரண மனிதன்! சாணியையும், கல்லை யும் கடவுளாக்குபவன் மனிதனை மகாத்மா என்றால் நம்பத்தானே செய்தான்? இதை எதிர்க்க  திராவிடர் கழகத்தைத் தவிர வேறு எவன் பாடுபட்டான்? சொல்லப் பயப் படுகிறானே? சொல்பவனைச் சிறையில் போடுவதும், கொடுமைப்படுத்துவதுமா அரசாங்கம் என்பது? மக்களை நேர் மையாக ஆள்வதல்லவா அரசாங்கம்!
பணக்காரனைக் காப்பாற்றுவதற்குத் தான் அரசாங்கம் உள்ளது; சட்டதிட்டம் மீறினால் போலீஸ், பட்டாளம், ஜெயில், துப்பாக்கியெல்லாம்.
இந்தக் கொடுமைகளை மாற்ற வேண்டுமென்று ஒருவனும் சொல்ல வில்லை. பாடுபடவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் புத்தர் சொன்னார்! சொன்னவரை ஒழித்தார்கள்!  புத்த நிலை யங்களைக் கொளுத்தினர். திருவள்ளுவர் இவையெல்லாம் அக்கிரமமென்றார்.
அவர் சொல் இன்று குப்பையில்! இராமாயணம், கீதை முதலிய கசுமாலம் (மலக்கழிவு)  இம் மாகாணத்தில் முன்நிற்கின்றன. இவற்றைக் கொளுத்து என்று சொல்ல ஒருவனு மில்லை, திராவிடர் கழகத்தைத் தவிர! இவனில்லையென்றால் உங்கள்  கதி இன்று எப்படி இருக்கும் என்று நினையுங்கள். வேறு எவன் இதைச் சொல்லி இருக்கிறான்?
காங்கிரஸ்காரன் அவ்வளவு பேரும் கடவுளை நம்பணும், மதத்தை நம்பணும், அதைக்காப்பாற்ற அரசாங்கம் தேவை, என்பவர்கள், கடவுள், மதம் வேண்டு மென்கிற காங்கிரசை எதிர்ப்பவன், எதிர்க் கிற எதிர்கட்சி என்று கூறி, காங்கிரசுக் காரனுக்குப் பாதுகாப்பான சட்டசபையில், பார்லிமெண்டில் (நாடாளுமன்றத்தில்) இருந்து கொண்டு வயிறு வளர்க்கிறான். வெளியிலும் சொல்லிக் கொண்டுமிருக் கிறான்.
திரு. ம.பொ.சிவஞானம் நம்மை எதிர்த்துப் பார்ப்பானிடம் பொறுக்கப் போகிறார். நாம் தமிழர், என்னும் கட்சிக் காரர்கள் கடவுளைச் சாதியைப் பற்றிப் பேசினால் வாய் சுட்டுவிடும் என்கின்றனர்! ஆனால் ஒரு  காரியத்தில்  - தனிநாடு தேவை என்பதில் ஒத்து வருகிறார்கள்; பாடுபடுகிறார்கள்.
கண்ணீர்த்துளிகள் பார்ப்பானைப் பற்றி, கடவுளைப் பற்றி, சாமியைப்பற்றி மூச்சு விடுகிறார்களா? பார்ப்பான் தயவில் ஓட்டுப் பிச்சைப் பெற்றுப் பதவிக்குப் போக வேண் டுமென்றே கட்சி வைத்துக் கொண்டிருக் கிறார்கள். கம்யூனிஸ்டும் அப்படியே; தலைவர்கள் பார்ப்பான் (சிரிப்பு)! அங்கு வேறு என்ன இருக்க முடியும்? மதத்தைக் காப்பாற்றணும், கட்சியைக் காப்பாற்றணும், பார்ப்பன ரல்லாத பணக்காரனை மாத்திரம் ஒழிக்க வேண்டும்  என்கிறான்.
காங்கிரஸ் கருதுவதோ பார்ப்பானுக்குச், சாதிக்குக், கடவுளுக்கு, மதத்துக்குக், காங்கிரசுக்குப் பாதுகாப்பு தந்து, பதவி ஒன்றே போதும் என்கிறது. கடவுள், சாஸ் திரம் ஒழிய வேண்டுமென்று  கூற வேறு யார் இருக்கிறார்கள்? நாங்கள் இல்லா விட்டால்  பள்ளர், பறையர், சூத்திரன், பார்ப்பான் காலில் விழுவார்கள். அவன் நட்ட கல்லில் முட்டிக் கொள்வார்கள். எவனாவது  இனி கடவுள் மதத்தைப் பற்றி பேசினால் ஒழிக்க வேண்டாமா? கொள் ளையடிக்கிறார்கள், கொடுமை செய் கிறார்கள்.
இம்மாதிரி செய்பவர்களே கீழ்ச்சாதி - அயோக்கியனென்பதானால் அது பார்ப்பானைத்தான் பெரிதும் சொல்ல வேண்டும்; நோகாமல் வஞ்சித்துச் சாப் பிடுகிறான். மனிதனுக்குத் தேவையான  காரியங்களை நாம் செய்வது. அதன் பலனை நாம் அனுபவிப்பதில்லை. ஆனால் இவை ஒன்றும் செய்யாத பார்ப்பான்தான் அனுபவிக்கிறான்.
ஆகவே பார்ப்பான்தான் கீழ்ச்சாதியாகும். வலுத்துவன் இளைத்த வனைச் சுரண்டாமல், உதைக்காமல் பாது காத்தலே அரசாங்கக் கடமை.  இப்போது அப்படி இல்லாமல் வலுத்தவனுக்காத்தானே அரசாங்கமிருக்கிறது! அறிவு, உணர்ச்சி இருக்கிறவர்கள் கிளர்ச்சி செய்ய வேண்டிய நிலையில், நாம் அறிவிலிகள், உணர்ச்சி யற்றவர்களாதலால் சும்மா இருக்கிறோம்.
புத்தி, மானம் உள்ளவர்கள் கடவுள் நம்மைக் காப்பாற்றுமென்று நினைக்க லாமா?..... பார்ப்பான் மேல் சாதியா? அவன் கடவுள், சாஸ்திரத்தைக் காப்பற்ற வேண் டுமா? அதற்குப் பாதுகாப்பான அரசாங் கத்தை ஆதரிக்க வேண்டுமா? நாம் இவைகளை முட்டாள் தனம் என்று உணர வேண்டும். சைனா, ரஷ்யா மாதிரி ஆக வேண்டும். இவற்றைச் செய்யப் பகுத்தறி வாதியாக வேண்டும்.
மொத்த உலக ஜனத்தொகை 250 கோடி. சைனா, ஜப்பான், ரஷ்யா, போன்ற நாட்டு 100 கோடி மக்களுக்கு மேல் கடவுளில்லை என்பவர்கள். அவர்கள் மற்றும் 100 கோடிக்கு மேற்பட்ட முஸ்லிம் கிறிஸ்தவர் களுக்குக் கடவுள் உண்டு; மதமுண்டு. அவர்கள் கடவுள் எப்படி இருக்கிற தென்றார்கள்?
நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள் கட வுளை? அன்பு, ஒழுக்கமான, நேர்மையான ஒரு கடவுள்; அதற்கு உருவமில்லை அது ஒன்றும் வேண்டாத கடவுளென்கிறார்கள்.
இந்துக்களையெடுத்துக் கொள்ளுங்கள். குரங்கு, பாம்பு, கழுகு, பன்றி, குதிரை, ஆடு, மாடு, எலி, மரம், ஆறு, குளம், அசிங்கக் குட்டை, எல்லாம் கடவுள். (பைத்தியக்கார னுக்கு கள் ஊத்தினது மாதிரி  கடவுள்கள்)
செருப்புக் கடவுள் - கரூர் பக்கம் சக்கிலி, கதவு அளவு செருப்பு செய்து அதற்குச் சூடம் காண்பிக்கிறான்.
கடவுளுக்குப் பெண்டாட்டி, வைப் பாட்டி. வேறு எந்த நாட்டுக் காரனாவது செய்கிறானா? நமதென்கிற கடவுளுரு வத்தைத் துலுக்கன் உதைப்பான். பார்ப்பான் சுங்கம் வசூலிக்கவே தவிர வேறு எதற்கு? அவனுக்குக் கடவுள் பக்தி உண்டா உங்களைப்போல்? இந்த இராமன் சிவன், கிருஷ்ணன், நம் கடவுள்களா?
எல்லாம் வடநாட்டில் இருந்து பார்ப்பான் கொண்டு வந்த கடவுள்களே! இவற்றை நம் நாட்டில் கொண்டு வந்து வைத்துள்ளான். உதைத்து நம்பவைத்து, காசு பறிக்கிறான். இராமன், கிருஷ்ணன் எவனுக்கோ பிறந்து செத்தவன்களை நமக்குக் கடவுளென்றால் பிறந்தான், செத்தான் என்றால் கடவுள்களா அவன்கள்? இறப்பு, பிறப்பு இல்லாதவன் கடவுள் என்று கிறிஸ்தவர், முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.
பாகவதத்தில் கிருஷ் ணனுக்கு இலட்சம் பெண்டாட்டிகள், பல லட்சம் வைப்பாட்டிகள்! பல பெண்களை அவமானப்படுத்திக் கெடுத்தவன். அவன் படத்தை நம் பெண்கள் துடைப்பத்தால் அடித்துக்  காறித்துப்ப வேண்டாமா? ஆண் களுக்குத் தான் புத்தியில்லை என்றால், பெண்களாவது நினைத்துப் பார்கக வேண் டாமா? அவன் படத்தை வீட்டில் வைக்க லாமா? கொலைகாரனைக், கொள்ளைக் காரனைக் கடவுளென்று அவன் அயோக் கியத்தனத்தைப் போற்றிக் கும்பிட்டால் பார்ப்பான் நம்மை சூத்திரன், பறையன், பள்ளனென்று  ஏன் சொல்லமாட்டான்? இராமாயணமும், பாரதமும் மனித சமு தாயத்துக்குப் பித்தலாட்டத்துக்கு ஆதாரம்.
இவை கடவுள் கதைகள். இவற்றை இராசகோபலாச்சாரியும், சங்கராச்சாரியும் வானளாவப் புகழ்ந்து  இவை கடவுளால் கொடுக்கப்பட்டவை என்கிறார்கள். அது அந்தச் சாதியின் ஒழுக்கம். திரௌபதி அய்ந்துபேர் போதாதென்று ஆறாமவனை யும் காதலித்தவள்! சீதை இராவணனுடன் போனவன். அவள் சினையானது இலங் கையில்! இராமன்  பிள்ளைத்தாய்ச்சியுடன் கூட்டி வந்தான். அகலிகை ரிஷி பெண் டாட்டி, தேவகுரு பெண்டாட்டி.
இருவரும் (தாரை, அகலிகை)  விபசாரத்தனம் செய்து, தடயம்  கண்டுபிடித்து, கேசு (வழக்கு) ருசுவாகித் தண்டனையும் ஆகியுள்ளது. இம்மாதிரி ருசுவான கேசுள்ளவர்களுக்குப் பதிவிரதைப் பட்டம் என்பது டாக்டர் இராஜனுக்கு மந்திரி வேலைகொடுத்தது போல் அல்லவா? அவர்கள் மோசமான சாதி.
ஆனதால் அவர்களுக்கு அந்த ஒழுக்கம் பொருத்தம். நாம் அப்படி சொல்லலாமா? புத்தி, மானம் இல்லா விட்டால் இவ்வளவு அவுசாரிகளைக் (விபசாரிகளை) கும்பிட்டால் ஏன் நம்மைச் சூத்திரன் என்று கூறாமலிருப்பான்? இவற்றைக் கண்டிக்க வேண்டும். இவற்றைக் கும்பிடலாமா? இந்தப் புத்தியை நாம் மாற்ற வேண்டாமா?
கிறிஸ்தவனில் சாதி உயர்வு, தாழ்வு கிடையாது. முஸ்லிம்களில் பார்ப்பான்  துலுக்கன், பறை துலுக்கன் இல்லை. ஒரே பைபிள்; ஒரே குர்ஆன்; ஒரே ஏசு. ஒரே நபி தலைவன். உனக்கு (திராவிடனுக்கு) யார் தலைவன்? இராசகோபாலாச்சாரி, சங்க ராச்சாரி உனக்குத் தலைவனா? இப்பொழுது நடைமுறையிலுள்ள ஆண்டு எண்ணிக் கைக்கு அவர்களுக்கு ஆதாரம் உண்டு. உனது ஆண்டுக்கு ஆதாரம் ஏது? இராமா யணமா? பாகவதமா? உன்னை அதில் அரக்கன், சூத்திரன், தேவடியாள் மகன் என் கிறான் - ஏற்கலாமா நீ? அதன்படி இந்த ஆட்சிக்காரன் சட்டத்திலும்  சூத்திரன் என்கிறான்.
ஆகவே தோழர்களே! முதலில் கூறிய மூன்று கேடுகளையும்  ஒழிக்க வேண் டாமா?
மணியம்மை திருவண்ணாமலை பஸ்ஸில் வரும்போது நான்கு பார்ப் பனர்கள் இந்த  இராமசாமி ஆரம்பத்தில் ஈரோட்டிலிருந்து செல்லாக்காசாகி, திருச்சி வந்து, நான்கு ஏக்கர் நிலம் வாங்கிக் கொண்டு, பல லட்சம்  பணம் திரட்டிக் கொண்டிருக்கிறார். நமது நேரு வந்து 4000 பேர்களை உதைத்துஜெயிலில் போட்டு ஒழிக்கச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.  அதனால் ஒழிந்தார்கள் என்று பேசிக் கொண்டு வந்தார்களாம். இதிலிருந்து நம்மை ஒழித்துக்கட்டி விட்டதாக அவன் களுக்குள் எண்ணம்.
தீபாவளிபண்டிகை விமரிசையாக நடப்பதாக எண்ணி நம்மைக் கிண்டலாக தினமணிக்காரன் எழுதுகிறான். இந்தக் கதைப்படி உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கடலுக்குள் ஒளிந்தானென்றும்கடவுள் பன்றி அவதாரம்  எடுத்து மீட்டு, அசுரனைக் கொன்று, தேவர்களைக் காப்பாற்றினான் என்றும் கூறுகிறான். இது எப்படி என்றால் உன் அப்பன் எங்கே என்றானாம்? ஒருவன். என் அப்பன் வானம் ஓட்டையாகி விட்டது. ஆகையால் எறும்புத் தோலை உரித்து அடைக்கப் போயிருக்கிறான் என்றானாம்!
இதைப் போன்று பெரும் புளுகு அல்லவா அந்தக் கதை?அடுத்து வரும் கிளர்ச்சிக்கு அறிகுறியாக அதிகமான பேர் தமிழ்நாடு நீங்கிய இந்தியநாடு படத்தைக் கொளுத்தத் தயாராயிருக்க வேண்டும்.  நம் நாட்டை  நாம் பார்த்துக் கொள்வோம். அவனவன் நாட்டை அவனவன் பார்த்துக் கொள்வான். அரசாங்கத்துக்கு வாய்தா கொடுப்போம். நீங்கள் நிறைய ஆதரவு தரவேண்டும்.
12-11-1958 அன்று மேலவாளாடியில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு : (விடுதலை 7-1-1959)
விடுதலை, ஞாயிறு, 23 நவம்பர் 2014