செவ்வாய், 21 ஏப்ரல், 2020

கோடம்பாக்கம் பகுத்தறிவு சங்க ஆண்டுவிழா


தந்தை பெரியார்

தோழர்களே!
இன்று இவ்வாண்டு விழாவில் தோழர்கள் ஊ.பு.அ.செளந்திரபாண்டியன், என்.சிவராஜ், எஸ்.குருசாமி, டி.என்.ராமன், குஞ்சிதம், வித்துவான் முனிசாமி, ஆரோக்கியசாமி, கல்யாணசுந்தரம் ஆகியவர்கள் பேசினார்கள்.

 என்னுடைய முடிவுரையுடன் ஆண்டு விழா நிகழ்ச்சி முடிவு பெற்றதென்றே கருதுகிறேன். 

ஆனால் நான் பேசவேண்டும் என்று கருதி இருந்தவற்றை எல்லாம் உபன்யாசகர்கள் பேசிவிட்டார்கள். ஆதலால் நான் அதிகம் பேசுவேன் என்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள். நீங்கள் ஒற்றுமையாய் இருக்க வேண்டும்.

 பெண்களை அதிகமாக அங்கத்தினர்கள் ஆக்க வேண்டும்.

பகுத்தறிவு

உண்மையிலேயே எல்லோரும் பகுத்தறிவுக்கு இடம் கொடுக்க வேண்டும். பகுத்தறிவை வளர்க்க வேண்டும். எந்த விஷயத்தையும் ஆராய்ச்சி செய்துபார்க்க வேண்டும். மனதிற்குத் தோன்றியதை எல்லாம் பகுத்தறிவு என்று சொல்லிவிடக்கூடாது.

 புஸ்தகத்தைப் படித்து ஒப்புவிப்பது பகுத்தறிவாகிவிடாது. சாத்தியம் அசாத்தியம் இன்னதென்று அறியவேண்டும். அனுபவ பலன் இன்னதென்று தெரியவேண்டும்.

 நமது சக்தி எப்படிப்பட்டது? அது எவ்வளவு? என்பதை உணரவேண்டும். காலதேச வர்த்தமானங்களைக் கவனிக்க வேண்டும். நமது அறிவுக்கு ஒரு காரியம் சரி என்று பட்டாலும் மேல்கண்ட அனேக விஷயங்களை உணர்ந்தே அதைப் பிரயோகிக்க வேண்டும். 

அதாவது பகுத்தறிவை பிரயோகிக்க பகுத்தறிவு வேண்டும்.

உங்கள் கொள்கை

இங்கு பேசிய பலர் சுயமரியாதையைப் பற்றியும் அரசியலைப் பற்றியும் பேசினார்கள். இச்சங்கத்தை சேர்ந்த மக்கள் பெரிதும் தாழ்த்தப்பட்ட மக்களாகக் காணப்படுகிறபடியால் உங்களுக்கு அரசியல் அரசாங்கத்தைத் தழுவிப் போவதுதான் பயன்படத்தக்கதாகும். அரசியலில் உங்கள் வகுப்பைத் தனியாகப் பிரிக்கப்பட்டாய் விட்டது. மற்ற வகுப்புகள் லட்சியத்திற்கும் நிலைக்கும் உங்கள் வகுப்பு லட்சியத்துக்கும் நிலைக்கும் பெரியதொரு வித்தியாசம் இருப்பதாலேயே அரசியலில் நீங்கள் தனி உரிமை கேட்க வேண்டியதாயிற்று.

 அந்தப்படியே அரசாங்கம் உங்களுக்குத் தனி உரிமை அளித்தும் நீங்கள் மற்ற மேல் ஜாதி மக்கள் என்பவர்களால் ஏமாற்றப்பட்டு விட்டீர்கள்.

 அதனால்தான் அவர்கள் மேல் ஜாதிக்காரர்களாய் இருக்கிறார்கள். அதில்லாததினால்தான் நீங்கள் கீழ் சாதி என்பதில் சேர்க்கப்பட்டு அதற்குண்டான பயனை அனுபவித்து வருகிறீர்கள்.

 உங்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று குறிப்பிட்டதற்கே தோழர் ஆரோக்கியசாமி கோபித்துக்கொண்டார். 
கோபித்து என்ன செய்வது? பிரத்தியட்சத்தில் நீங்கள் தாழ்த்தப்பட்டு இருக்கிறீர்களா இல்லையா? 
அந்தப்படி இல்லையானால் உங்களுக்குத் தனி உரிமையே வேண்டியதில்லை அல்லவா? 
சமூக வாழ்வில் உங்களுக்கு எவ்வளவு இடையூறு சட்டப்படி இருக்கிறது என்று பாருங்கள்.

 உங்களுக்குக் கோவில் பிரவேச உரிமை கிடையாது. தெரு, குளம், பள்ளிக்கூடம் ஆகியவைகளின் பிரவேச உரிமைகூட இப்போது ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்ட பிறகு உங்களுக்கு உண்டாகி இருக்கிறது. 

அதற்கு இன்னும் பல இடங்களில் தடை இருந்து வருகிறது.

கோவில் பிரவேசம்

திருவாங்கூர் கோவில் பிரவேச உரிமையைப் பற்றிப் பாராட்டிப் பேசினார்கள். அதனால் உங்களுக்கு என்ன லாபம்? உங்கள் தாய் நாட்டில் உங்கள் நிலை என்ன?

 உங்களைவிட இன்னும் மேல் ஜாதிக்காரர்கள் என்பவர்களுக்கே நமது நாட்டில் பல இடங்களில் கோவிலின் மதில் பிரவேச உரிமை கூட கிடையாது. 

இந்த நிலையில் உள்ள மக்கள் சிலர் சிறிது கூட மானமில்லாமல் அரசியலைப் பற்றிப் பேசுகிறார்கள். அவர்கள் மனித உரிமைக்கு லாயக்கற்றவர்கள் என்பதற்கு இதுவே போதிய உதாரணமாகும்.

நியாயமாகப் பேசப்போனால் நீங்கள் மாத்திரம் தாழ்த்தப் பட்டவர்கள் அல்ல. சில இடங்களில் கோவில் உரிமை இல்லாதவர்கள் மாத்திரம் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல. சகல கோவில்களிலும் பிரவேசிக்க உரிமை உள்ள நாங்களும் தாழ்த்தப்பட்டவர்களேயாவோம். 

கோவிலில் எங்களுக்கும் உரிமை இல்லாத இடம் பல உண்டு. காப்பிக்கடை, ஓட்டல் முதலிய இடங்களில் நாங்கள் ஒதுக்கப்பட்டவர்களாகவும் சில அறைகளுக்குள் செல்லப்படாதவர்களாகவும் தான் இருந்து வருகிறோம். 

உங்கள் இழிவைப்பற்றி பேசுவதால் எங்கள் இழிவும் நீங்கலாம் என்பதே எங்கள் அனுதாபத்தின் கருத்தாகும். 

பந்தியில் சாப்பிடும்போது தனக்கு வேண்டிய பதார்த்தத்தைப் பக்கத்து இலையில் இருக்கிறவர்களுக்கு வேண்டும் என்று சொல்லிப் பரிமாறுகிறவனைக் கூப்பிட்டு பிறகு தனது இலைக்கும் வாங்கிக்கொள்ளுகிற தந்திரத்தை நீங்கள் அறிந்ததில்லையா?

 அது போல்தான் உங்கள் குறையோ இழிவோ நீங்கினால் கூடவே எங்கள் குறையும் இழிவும் தானாகவே நீங்கிவிடும். அதனாலேயே உங்கள் குறைகளைப்பற்றி நாங்கள் சதா பேசிக்கொண்டே வருகிறோம்.

காங்கிரசில் சேருவது

நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு "அரசியல்" கூப்பாடுகளை வெறுக்கிறீர்களோ, எவ்வளவுக்கு எவ்வளவு "அரசியல்" கட்சிகளுடன் சேராமல் இருக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு உங்களுடைய குறைகள் நிவர்த்திக்கப்படலாம் என்பது எனது அபிப்பிராயம். 

உங்கள் தலைமேல் கால் வைத்து ஏறிப்போகிறவர்களுக்கு இடம் கொடுக்காமல் இருப்பீர்களானால் உங்கள் கொடுமை சீக்கிரத்தில் கவனிக்கப்படும். இல்லாவிட்டால் நீங்கள் படிக்கல்லாக விழுந்து கிடக்க வேண்டியதுதான்.

காங்கிரஸ் ஏற்பட்டு 50 வருஷகாலம் ஆகியும் ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டு பங்கு கேட்க ஆரம்பித்த பிறகே சமுதாயத் துறையில் பெரியதொரு மாறுதல் ஏற்பட முடிந்தது. அதன் பிறகுதான் உங்கள் நிலையும் இந்த 10 வருஷகாலத்தில் எவ்வளவோ மாறுதலை அடைய முடிந்தது.

 அப்படிக்கில்லாமல் காங்கிரசுக்கே கை தூக்கி வந்திருப்பீர்களானால் - மேல் ஜாதிக்காரர்கள் பின்னாலேயே கோவிந்தாப் போட்டிருப்பீர்களேயானால் உங்கள் நிலை எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

திருவாங்கூர் பிரகடனம்

திருவிதாங்கூர் ஆலயப் பிரவேச விளம்பரத்தைக் கவனித்துப் பாருங்கள். அது எப்படி ஏற்பட்டது? தோழர் சர்.சி.பி.ராமசாமி அய்யரைப்பற்றி நமக்குத் தெரியாதா? அவர் சர்க்கார் பராமரிப்பிலுள்ள சகல வீதிகளிலும் சகல பிரஜைகளும் நடக்கலாம் என்று ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள் செய்த சட்டத்திற்கு மதிப்புக் கொடுக்காமல் தடுத்தவரல்லவா?

 அதாவது கல்பாத்தி ரோட்டில் ஈழவர்கள் நடக்கக்கூடாது என்று ஒரு பார்ப்பன மேஜிஸ்ரேட் 144 தடை உத்திரவு போட்டு தடுத்ததைப் பற்றி சட்டசபையில் கேள்வி கேட்கப்பட்ட போது சர்.சி.பி. அய்யர் என்ன பதில் சொன்னார்? அந்த தடை உத்திரவு சரியானதுதான் என்று ஆதரித்துப் பதில் சொன்னார். அதாவது அந்த பிரவேச சட்டத்திற்கு ஒரு புது வியாக்கியானம் செய்தார். என்னவென்றால் "ஏதாவது ஒரு வேலையின் பேரில் - அவசியத்தின் பேரில் தெருவில் நடப்பவனுக்குத்தான் அந்தச் சட்டம் இடம் கொடுக்குமே ஒழிய அனாவசியமாய் வேலை இல்லாமல் நடப்பவனுக்கு அச்சட்டம் இடம் கொடுக்காது" என்று சொல்லி குறிப்பிட்ட 144 தடை உத்திரவு வேண்டுமென்றே அவசியம் இல்லாமல் நடந்து மேல் ஜாதிக்காரர்களின் மனத்துக்கு சங்கடமுண்டாக்குவதை தடுப்பதற்கு ஆக போடப்பட்ட உத்திரவு என்றும் அது அவசியம் தான் என்றும் சொன்னார்.

ஆகவே திருவாங்கூர் திவான் சர்.சி.பி. அய்யரின் தாராள நோக்கம் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அப்படி இருக்க திருவாங்கூர் கோவில் கதவு எப்படி உடைக்கப்பட்டது என்று யோசித்துப் பாருங்கள். அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களும், ஈழவர்கள், நாடார்கள் உள்பட உள்ள மற்ற மக்களும், மதத்தையும், கோவிலையும் சாமியையுமே உடைக்கப் பார்த்தார்கள்.

 இந்துமதம் புரட்டு, கோவில் புரட்டு, சாமியே புரட்டு என்று மகாநாடுகள் கூட்டி பதினாயிரக்கணக்கான பேர்கள் சேர்ந்து தீர்மானம் செய்தார்கள். பலர் முஸ்லீமாக துருக்கி தொப்பி போட்டார்கள், பலர் தாடி வளர்த்து தலைமுடி வளர்த்து கிருபான்(கத்தி) கட்டித் தொங்கவிட்டுக் கொண்டு சீக்கியர்கள் ஆனார்கள். சிலர் குடும்பத்தோடு கிறிஸ்தவர்கள் ஆனார்கள். அதன் பிறகே கோவில் கதவு திறக்கப்பட்டது. 

தமிழ் நாட்டில் உள்ள சகல மேல் ஜாதிக்காரர்களும் பார்ப்பனர்கள் உள்பட திருவாங்கூர் ராஜாவை வாழ்த்தி விட்டார்கள். வெற்றி பெறும் இரகசியம் எங்கே இருக்கிறது பாருங்கள். அதுபோலவே நீங்கள் காங்கிரஸ், மதம், கோவில், சாமி ஆகியவைகளை யெல்லாம் உடைக்க ஆரம்பித்தீர்களேயானால் உங்களுக்கு யாருடைய தயவும் இல்லாமல் சகல சுதந்திரமும் சகல உரிமையும் தானாக உங்களைத் தேடிக்கொண்டுவரும்.

பட்டம் மாற்றுவதில் பயனில்லை

அப்படிக்கு இல்லாமல் தாழ்த்தப்பட்டவர்கள் என்று உங்களைக் கூப்பிடுவதற்கு ஆக நீங்கள் கோபித்துக்கொள்வதால் ஒரு காரியமும் ஆகிவிடாது. பறையர்கள் என்கின்ற பட்டம் மாறி ஆதிதிராவிடர்கள் ஆகி இப்போது அரிஜனங்கள் என்கின்ற பட்டம் வந்ததுபோல் வேறு ஏதாவது ஒரு பெயர் ஏற்படலாமே ஒழிய குறையும் இழிவும் நீங்கிவிடாது. விவசாரிகளுக்கும், குச்சிக்காரிகளுக்கும் தேவதாசி, தேவ அடியாள் என்கின்ற பெயர்கள் இருப்பதால் அவர்களுக்கு சமூகத்தில் இழிவு இல்லாமல் போய்விடவில்லை.
அதுபோலவே பார்ப்பனரல்லாதார்களுக்கு நாயகர், முதலியார், தேவர், வேள் ஆளர், ராஜர் ராயர் என்கின்றதான பல பெயர் இருந்ததாலேயே சமூக வாழ்வில் சூத்திரன் என்கின்ற பெயர் போய்விடவில்லை. ஆதலால் பெயரைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். இழிவும் குறையும் போக்க வழி பாருங்கள். அதற்கு அம்மாதிரி நம்மை குறைவுபடுத்தும் மக்களுடன் ஒத்துழையாமை செய்வதும் அவர்களுடைய முன்னேற்றத்துக்கு நாம் முட்டுக்கட்டை போடுவதும் தான் சரியான மருந்தாகும்.

கோடரிக் காம்புகள்

சில கோடாலிக் காம்புகள் அவர்களுடன் ஒத்துழைப்பதால் நாம் ஏமாந்துவிடக்கூடாது. அப்படிப்பட்ட இழி மக்கள், மானமற்றவர்கள் நம்மில் பலர் இருப்பதாலேயே நாம் இம்மாதிரி சங்கம் ஸ்தாபனம் பல வைத்துக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டியிருக்கிறது. எல்லோருக்கும் சுயமரியாதை உணர்ச்சி இருக்குமானால் தாழ்த்தப்பட்டவர்கள் சங்கமோ, பார்ப்பனரல்லாதார் சங்கமோ எதற்கு ஆக இருக்க வேண்டும்?

 நம்மில் எத்தனையோ பேர் உதைத்த காலுக்கு முத்தமிட்டு வாழ வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் இழி தொழிலுக்கெல்லாம் நாம் பரிகாரம் செய்ய வேண்டியவர்களாய் இருக்கிறோம். அந்தப் பரிகாரம் நம்முடைய உறுதியும் தைரியமும் கொண்ட ஒத்துழையாமையிலும் முட்டுக்கட்டையிலும்தான் இருக்கிறது.

 சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி சிலர் பேசியதோடு என்னையும் சில கேள்விகள் துண்டுச் சீட்டு மூலம் கேட்டிருக்கிறார்கள்.

கேள்விகள்

1. தோழர் ஜீவானந்தம் முதலியவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று ஒருவர் கேட்கிறார். இப்போது ஒரு வித்தியாசமும் இல்லை. முன்பு அவர்கள் தேர்தல் பிரசாரம் ஊசிப்போனது என்றும், நாற்றமடிக்கிறது என்றும் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் இப்போது அவர்களும் தேர்தல் பிரசாரத்தில் இறங்கிவிட்டதாகப் பத்திரிகைகளில் பார்க்கிறேன். 

நான் ஜஸ்டிஸ் கட்சிக்கு தேர்தல் பிரசாரம் செய்கிறேன். அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் பிரசாரம் செய்கிறார்கள். மற்றபடி வித்தியாசம் இல்லை.

2. இரண்டாவதாக ஜஸ்டிஸ் கட்சிக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் என்ன வித்தியாசம் என்று ஒரு தோழர் கேட்டிருக்கிறார். அதற்கும் பதில் ஒரு வித்தியாசமும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இன்றுள்ள ஜஸ்டிஸ் கட்சியின் முக்கிய கொள்கையாகிய வகுப்பு வாரிப்பிரதிநிதித்துவம் உத்தியோக விஷயங்களில் அனுபவத்தில் சிறிதாவது இருக்கிறது என்றால் அது ஜனநாயக கட்சியின் மூல புருஷரான தோழர் எஸ்.முத்தையா முதலியார் அவர்களின் தொண்டினால் என்றுதான் சொல்லுவேன்.

 ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களில் பலரும், பார்ப்பனரல்லாத மக்களில் பலரும் அவருக்கு போதிய நன்றி விசுவாசம் காட்டாவிட்டாலும் நான் என்னைப் பொறுத்தவரை எப்போதும் ஒரு அளவுக்கு நன்றி யுடையவனே ஆவேன். மற்றபடி ஜனநாயகக் கட்சியார் அரசியல் நிபுணத்துவத்தை உத்தேசித்து ஜஸ்டிஸ் கட்சிக்கும் மிதவாத கட்சிக்கும் தங்கள் கட்சிக்கும் ஏதோ வித்தியாசமிருப்பதாக கூறலாம். ஆனால் அது என் சிறிய கண்ணுக்குத் தென்படவில்லை.

இந்தியாவில் ஒரே கட்சிதான்

இன்று இந்தியாவில் அரசியல் கொள்கையில் ஒரே கட்சிதான் உண்டு. அதாவது தேர்தலில் வெற்றி பெற்று மந்திரி பதவியை அடைந்து பணமும் அதிகாரமும் பெறவேண்டும் என்கின்ற கவலை கொண்ட ஒரே கட்சிதான் உண்டு. அதை அடைவதற்கு பல மார்க்கங்கள் பல தந்திரங்கள் கொண்டிருப்பதன் மூலம் பல கட்சிகள் இருப்பதாய்க் காணப்படலாம். அதோடு கூடவே அவை பெரிதும் சமுதாயத்துறையில் ஒன்றுக்கொன்று நேர்மாறான கொள்கை கொண்ட கட்சிகளாய்க் காணப்படலாம். அதன் பயனாய் சில கட்சி உண்மை பேசலாம். சில கட்சி புரியாத மாதிரி பேசலாம். சில கட்சி அடியோடு பொய்யும் புரட்டும் பித்தலாட்டமும் பேசலாம். இதுதான் இன்று அரசியல் கட்சிகளின் நிலைமை.

ஜஸ்டிஸ் கட்சி

ஆனால் ஜஸ்டிஸ் கட்சி தனது கொள்கைகளில் திட்டத்தில் உண்மை பேசுகிறது. அதுவும் சாத்தியமான மட்டும்தான் நடத்திக்கொடுப்பதாய் பச்சையாய்ச் சொல்லுகிறது. அதில் உள்ள தலைவர்களுக்குள்ளோ அங்கத்தினர்களுக்குள்ளோ கட்சி கொள்கை விஷயத்தில் அபிப்பிராய பேதமில்லை. தலைவர்களில் பின் பற்றுபவர்களில் ஒருவருக்கொருவர் ஒற்றுமை இல்லாதவர்களாகவும் பொது நோக்குடையவர்கள் அல்லாதவர் களாகவும் சுயநலத்துக்கு ஆக எதையும் செய்யக் கூடியவர்களாகவும் இருக்கலாம். அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. அம்மாதிரி நபர்கள் எல்லாக் கட்சியிலும் உண்டு. அவர்களால் நேரும் கெடுதிக்கு எல்லாக் கட்சியாரும் சிறிது மார்ஜன் (இடம்) விட்டுத்தான் தீரவேண்டும். மற்றபடி இன்று சமுதாயத் துறையில் பிற்பட்டு அடிமைப்பட்டு இழிவுபட்டுக் கிடக்கும் மக்களுக்கு ஜஸ்டிஸ் கட்சிதான் "சஞ்சீவி" மருந்து என்று சொல்லுவேன்.

காங்கிரஸ் கட்சிக்கு உத்தியோகமும் பதவி ஆசையும் இருப்பதாலேயே நான் அதை குறைகூறவில்லை. ஆனால் அது பிற்படுத்தப்பட்டு இழிவுபடுத்தப்பட்டு இருக்கும் மக்களுக்கு சமஉரிமை அளிக்க மறுப்பதையும் மற்றவர்கள் அளிப்பதைக் கெடுப்பதையுமே முக்கியக் கொள்கையாய்க் கொண்டு இருக்கிறபடியால் அதை ஒழித்து ஆக வேண்டும் என்கின்றேன். அதன் தலைவர்கள் பழமை விரும்பிகளாக இருப்பதாலேயே வருணாச்சிரம தர்மிகளாக இருப்பதாலேயே அவர்களிடத்தில் எனக்கு நம்பிக்கையும் மதிப்பும் இல்லை. மற்றபடி கட்சிகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

சுயமரியாதைப் பிரசாரம்

3. சுயமரியாதை இயக்கப் பிரசாரம் ஏன் செய்யவில்லை என்று கேட்கப்பட்டிருக்கிறது.
நானும் எனது தோழர்களும் ஒரு அளவுக்கு செய்து கொண்டுதான் வருகிறோம். ஆனால் முக்கிய கவனம் ஜஸ்டிஸ் பிரசாரத்தில்தான் இருக்கிறது. சுயமரியாதை இயக்கத்தின் நன்மையைக் கோரி அது அவசியம் என்று கருதுகிறேன். எப்படியானாலும் இன்னும் ஒன்றரை மாதங்களில் ஜஸ்டிஸ் தேர்தல் பிரசாரம் தீர்ந்துவிடும். அதற்கப்புறம் அக்கட்சி தேர்தலில் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வி அடைந்தாலும் சரி, நானும் எனது தோழர்களும் தனி சுயமரியாதை இயக்கப் பிரசாரம் தான் செய்வோம்.

தோற்குமா? ஜெயிக்குமா?

4. ஜஸ்டிஸ் கட்சி வெற்றி பெறுமா? என்று கேட்கப் பட்டிருக்கிறது.
ஜஸ்டிஸ் கட்சி தோல்வியடைந்தால், நான் மகிழ்ச்சியடைவதோடு சுயமரியாதை இயக்கப் பிரசாரத்துக்கு பார்ப்பனரல்லாத மக்களால் அதிக ஆதரவு கிடைக்கக்கூடும் என்கிற தன்மையால் இயக்கப் பிரசாரம் வளமாய் நடக்கவும் இடம் ஏற்படும் என்று கருதுகிறேன். ஜஸ்டிஸ் கட்சி ஜெயித்தால் தலைவர்கள், பதவி பெற்றவர்கள் ஆகியவர்களினது அனாதரவு ஏற்பட்டாலும் ஏற்படலாம். ஏனெனில், சிதறி கிடக்கும் பார்ப்பனரல்லாத மக்கள் ஒன்று சேர்ந்து பலமாய் வேலை செய்ய தோல்வி ஒரு சாதனமாகும். ஆனால் ஜஸ்டிஸ் கட்சித் தோல்வியடையாது. ஏனெனில் அதற்கு எதிரான கட்சி எதுவும் கொள்கையில் பலம் பொருந்தியதாக இல்லை. ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களில் சிலர் இப்போது இருக்கும் அலட்சிய புத்தியும் பொறுப்பற்ற தன்மையும், சுயநல சூழ்ச்சியையும் விட இன்னும் கேவலமாய் நடந்து கொண்டாலும் அக்கட்சிக்கு தோல்வி ஏற்பட்டுவிடும் என்று நான் கருதவில்லை. ஏனெனில், அதற்கு கொள்கை பலம் உண்டு. காங்கிரசுக்கு அது அடியோடு பூஜ்யம். ஆதலால் ஜஸ்டிஸ் கட்சி தோல்வி அடையாது என்று கருதுகிறேன்.

சமதர்மம்

5. சமதர்மத்தைப் பற்றி ஒரு தோழர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஜஸ்டிஸ் கட்சி சமதர்மக் கட்சி என்பதை ஞாபகத்தில் வையுங்கள். அது தோன்றிய பிறகுதான் இன்று பறையனும், பார்ப்பானும் ஒரு ஸ்தானத்தில் சரிசமமாய் வீற்றிருக்கிறார்கள். புலியும் பசுவும் ஒரு துறையில் தண்ணீர் குடிப்பதுதான் சமதர்ம ராஜ்யம் என்பது பழங்கால பேச்சு. ஆனால், அது இன்று சர்க்கஸ் கொட்டகைகளில் நடைபெறுகின்றது. அதனாலேயே, நாம் அதை சமதர்ம ராஜ்யம் என்று சொல்லுவதில்லை. ஆனால், இன்று பறையனும், பார்ப்பானும், சாஸ்திரியும், சங்கராச்சாரியும், சக்கிலியும் ஒரு பீடத்தில் அமர்கிறார்கள்; ஒரு பதவியில் இருக்கிறார்கள். எப்படி? சவுக்கினாலா? ரிவால்வர் பயத்தினாலா? இல்லவே இல்லை. தாங்களாகவே ஆசைப்பட்டு அதுவும் பத்தாயிரம், இருபதாயிரம் செலவு செய்து கொண்டு போய் அமர ஆசைப்படுகிறார்கள். பறையனை பார்ப்பான் பிரபுவே எஜமானே என்று நின்று கொண்டு கெஞ்சிப் பேசுகிறான். இதெல்லாம் எப்படி ஏற்பட்டது? ஜஸ்டிஸ் கட்சி ஏற்படுவதற்கு முன் தாழ்த்தப்பட்ட வகுப்புகளைப் பற்றிய ஒரு வார்த்தையாவது காங்கிரஸ் கூட்டத்தில், நடவடிக்கையில், ஆதாரத்தில், திட்டத்தில், கொள்கையில் இருந்ததா என்று யோசித்துப் பாருங்கள். ஆகவே, ஜஸ்டிஸ் கட்சி சமதர்ம கட்சி என்பதில் உங்களுக்கு இன்னும் சந்தேகம் உண்டா என்று கேட்கின்றேன். ஆகையால் சமுதாய சமதர்ம வேலையே தான் நான் இப்போதும் இன்றும் செய்து வருகிறேன்.
பொருளாதார சமதர்ம வேலை செய்ய எனக்கு ஆசைதான். ஆனால், காங்கிரஸ் அதற்குப் பரமவிரோதி என்பதோடு அது ஒரு காட்டிக்கொடுக்கும் ஸ்தாபனமுமாகும். அது ஒழிந்தால்தான் பொருளாதார சமதர்மம் பேச சவுகரியப்படும் என்றாலும் சட்டத்துக்கு மாறாய் இல்லாமல், அதாவது சர்க்கார் அடக்குமுறைக்கு ஆளாகாமல் எவ்வளவு சமதர்ம பிரசாரம் செய்யலாமோ அவ்வளவையும் செய்துதான் வருகிறேன். செய்யத்தான் போகிறேன். மற்றபடி நீங்கள் எனக்கு இவ்வளவு கெளரவம் செய்து இவ்வளவு தூரம் எனது அபிப்பிராயத்தை எடுத்துச் சொல்ல வசதி அளித்ததற்கு எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

குறிப்பு: 27.12.1936 ஆம் நாள் கோடம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தை அடுத்த வரதராஜப் பேட்டையில் நடைபெற்ற கோடம்பாக்கம் பகுத்தறிவு சங்கத்தின் நான்காம் ஆண்டு விழாவில் ஆற்றிய தலைமை உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 10.01.1937

கருப்பு சட்டை ஏன்?


*- தந்தை பெரியார் -*

இனி நான் இறந்தாலும் ஏனையத் திராவிடத் தோழர்கள் ஏமாந்து விட மாட்டார்கள். எனது வேலையை அப்படியே விட்டுவிடமாட்டார்கள். தொடர்ந்து போராடி, வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுவிட்டது. நமது கொள்கைகள் ஒரு அளவுக்குப் பொது மக்களின் செல்வாக்கைப் பெற்றுவிட்டது. இன்னும் கொஞ்ச காலத்திற்குள் நம் இஷ்டம் போல் நடக்காத மந்திரிகளுக்கு மந்திரிசபை நாற்காலி இடம் கொடுக்காது, நம் இஷ்டப்படி நடக்காத அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடைக்காது.
நம் இஷ்டப்படி நடக்காத சட்டசபை மெம்பர்களுக்கு சட்டசபை இடங்கொடுக்காது என்கிற நிலை ஏற்பட்டுவிடும். இந்நிலை வெகு சீக்கிரமே ஏற்பட வேண்டுமானால் நாம் எல்லோரும் கருப்புச் சட்டைக்காரர்களாக வேண்டும்.

நீங்கள் என்ன சட்டைக்காரர்களோ என்று நம்மைச் சிலர் கேட்கக் கூடும். நம் நாட்டில் சட்டைக்காரர்கள் என்றொரு கூட்டம் இருந்து வருவது உண்மைதான். 

அவர்கள் பல ஜாதிக்குப் பிறந்தவர்கள், ஆகவே வெறும் சட்டைக்காரர்கள் என்று மட்டும் அழைக்கப்பட்டு வருகிறார்கள்.
நாம் அப்படிக்கல்ல, நாம் ஒரே ஜாதிக்குப் பிறந்தவர்கள். ஆகவே கருப்புச்சட்டைக்காரர்கள் என்று நம்மை அழைத்துக் கொள்கிறோம்.

கருப்புச் சட்டை ஒரு படையமைப்பின் சின்னமல்ல. அது இழிவின் அறிகுறி, இழிவிற்காக அவமானப்படுகிறோம், துக்கப்படுகிறோம், அதைப் போக்கிக் கொள்ள முடிவு செய்துவிட்டோம் என்பதன் அறிகுறி. பாடுபட்டுப் படி அளந்துவிட்டுப் பட்டினி கிடக்கும் நானா பஞ்சமன்? என் பாட்டின் பலனால் நோகாமல் உண்டு வாழும் நீயா பார்ப்பனன் இது நியாயமா?

கேள்விகளின் அறிகுறி கருப்புச்சட்டை
பாடுபடும் எங்களுக்கெல்லாம் இழிவான வேலைகள், பாடுபடாத உங்களுக்கெல்லாம் மந்திரி வேலையா? இது நியாயமா? பாடுபடாத நீங்கள் எல்லாம் அய்.சி.எஸ். படிப்பதா? கலெக்டர் ஆவதா? இது நியாயமா? நாங்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும், எவ்வளவுதான் உங்களுக்கு வாரிக் கொடுத்தாலும், எவ்வளவுதான் சுத்தமாய் இருந்தாலும், எவ்வளவுதான் ஒழுக்கமாய் நடந்து கொண்டாலும் நாங்கள் சூத்திரர்கள், பஞ்சமர்கள்?
நீங்கள் எவ்வளவுதான் பாடுபடாத சோம்பேறி வாழ்வு நடத்தினாலும், எவ்வளவோ எங்களை மோசம் செய்து எங்களிடம் பிச்சை எடுத்துப் பிழைத்தாலும், நீங்கள் எவ்வளவுதான் அழுக்குப் பிடித்து, சொறி பிடித்துக் குஷ்டரோகியாகக் கிடந்தாலும், எவ்வளவுதான் ஒழுக்க ஈனர்களாக திருடர்களாக, கொலைக்காரர்களாக, கொள்ளைக் காரர்களாக, தூது செல்பவர்களாக இருந்தாலும் நீங்கள் உயர் ஜாதிப் பார்ப்பனர்களா? இது நியாயமா? என்ற கேள்விகளின் அறிகுறிதான் இந்தக் கருப்புச் சட்டை?

தோழர்களே! நீங்கள் விரும்பி அணியுங்கள் இதை! அடுத்த மாநாட்டிற்குள்ளாவது நம் சூத்திரப்பட்டம் ஒழிந்து போகும். அடுத்த மாநாட்டிற்குள் இந்த இழி ஜாதிப் பட்டம் கட்டாயம் ஒழிக்கப்பட்டேயாக வேண்டும். அதற்காக ஒரு 2000, 3000 பேர்களாவது பார்ப்பனர்களின் பலி பீடத்தில் தம் உயிரை இழக்கத் தயாராக இருக்க வேண்டும்.

நானா சூத்திரன்? என் தாய்மார்களா சூத்திரச்சிகள்? இனி இந்நிலை ஒரு நிமிட நேரமேனும் இருக்க இடங்கொடேன்? இதோ என் உயிரை இதற்காக அர்ப்பணிக்கவும் துணிந்து விட்டேன் என்கிற உணர்ச்சி ஒவ்வொரு திராவிடனுக்கும் ஏற்படவேண்டும்.
இழிஜாதிபட்டத்தை ஒழிப்பதென்பது சுலபமான காரியமல்ல என்றாலும் உலக அறிவு முன்னேற்றம், ஜாதி உயர்வு தாழ்வுகளே இனி இருக்க கூடாது. ஆகவே உறுதி பெற்றெழுங்கள், செத்தாலும் சரி இழிவு நீக்கம்தான் முக்கியம் என்று. சாகாமலே கூட வெற்றி பெற்று விடலாம்.

*ஆதாரம் : "குடிஅரசு" இதழ் - 05.06.1948*

*நன்றி : "விடுதலை" ஞாயிறு மலர்  06.09.2014* 

திங்கள், 13 ஏப்ரல், 2020

தமிழ் வருஷப் பிறப்பு

60 வருடங்களுக்கு மானங்கெட்ட கதை

ஆரிய சம்பந்தமான கதைகள், சேதிகள் ஆகியவை களில் எதை எடுத்துக் கொண்டாலும் அதில் ஆபாசம், அசிங்கம், விபசாரம், இயற்கைக்கு மாறுபட்ட வண்டத் தனமான சங்கதிகள் முதலியவை இல்லாமலிருப்பது மிக மிக அதிசயமாகும்.

சில வாரங்களுக்கு முன்னால் மாரியம்மன் என்னும் ஒரு பெண் தெய்வத்தைப் பற்றி வெளியான வியாசம் வாசகர் களால் படிக்கப்பட்டிருக்கலாம். அதற்கும் சில வாரங்களுக்கு முன் பண்டரிபுரத்தைப் பற்றி எழுதப் பட்டிருந்த வியாசம் படிக்கப்பட்டிருக்கலாம்.

இப்போது இன்னும் சிறிது நாட்களுக்குள் வருஷப் பிறப்பு வரப் போகிறது. இந்த வருஷப் பிறப்புக்குச் சம்பந்தப்பட்ட தமிழ் வருஷங்களின் யோக்கியதையை மானமுள்ள தமிழ்மக்கள் படித்துப் பார்க்க வேண்டும் என்கின்ற ஆசையாலேயே இதை நான் எழுதுகிறேன்.

இந்த வருஷப் பிறப்புக் கதை நாகரிகம் உள்ள மக்களால் எழுதப்பட்டிருக்க முடியுமா? இதைப் படித்துப் பார்க்கும் அந்நியன் இந்தக் கதை சம்பந்தப்பட்ட மக்களை என்ன என்று நினைப்பான்? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஒரு முக்கிய சம்பவத்தை ஞாபகப்படுத்தக் கூடியதாகவும், சரித்திரத்திற்கு பயன்படத்தக்கதாகவும், நாகரிகமுள்ளதாகவும் உள்ள வருஷக் கணக்குகள் இருக்கின்றன. உதாரணமாக அவர்களது வருஷங்களுக்கு கி. மு., கி. பி., ஹிஜரி என்கின்ற பெயர்களும் அதற்கு நல்ல கருத்துகளும் இருக்கின்றன.

ஆனால் தமிழனுக்கும், நாதியற்ற தமிழனுக்கு என்ன வருஷம் இருக்கிறது? அதற்கு என்ன கருத்து என்று பார்ப்போமானால் தமிழன் என்கின்ற பெயர் வைத்துக் கொண்டு இந்த நாட்டில் வாழ்வதற்கு வெட்கமில்லையா? என்று தான் தோன்றும். தமிழனின் நிலையை ஆரியர்கள் தங்கள் சாமர்த்தியத்தால் மானங்கெட்ட காட்டுமிராண்டி, லம்பாடி சமூகமாக ஆக்கிவிட்டதால் இவ்வளவு இழிவு ஏற்பட்ட இந்தக் காலத்திலும் தமிழனுக்கு சூடு, சொரணை ஏற்படுவதில்லை.

கோவிலுக்கு தேவதாசிகளை விட்டவன் தமிழனே என்றால் மற்றபடி தமிழனால் ஆக்கப்படவேண்டிய இழி செயல் வேறு என்ன இருக்கிறது?

இது மாத்திரமா? மோட்சம் என்றால் தமிழன் எதையும் செய்ய முன் வருகிறான்.

'ஆ பயன் அய்ந்து' என்று சொல்லிக் கொண்டு மாட்டு மூத்திரம், சாணி எல்லாவற்றையும் காசு கொடுத்து வாங்கிக் குடிக்கிறான் மற்றும் கேரள நாட்டில் நடப்பதை எழுதவே கை நடுங்குகிறது. ஏன் என்றால், ஒரு தடவை விடுதலை எழுதிவிட்டு ரூ.1500 செலவு செய்தும் ஆசிரியருக்கும், சொந்தக்காரருக்கும் 9, 9 மாத தண்டனை கிடைத்தது. அக்கிரமம் செய்கிறவர்களுக்குப் பெரிய வேட்டையும், பதவியும் கிடைக்கிறது; எடுத்துக்காட்டுபவருக்கு செலவும், ஜெயில் வாசமும் கிடைக்கிறது.

மனுதர்மத்தைவிட ஒருபடி முன்னால் போய்விட்டது நமது தேசிய ஆட்சி. ஆதலால் அதைச் சொல்லப் பயந்து கொண்டு நிறுத்திக் கொள்ளுகிறேன்.

ஆரியர்களால் எழுதப்பட்டு இன்று நம் இலக்கண, இலக்கியங்களில் முன்னிடம் பெற்று நம் பண்டிதர்களுக்குப் புலவர் (வித்வான்) பட்டம் பெற ஆதாரமாயிருக்கும் நூல்களில் இருப்பதையே சொல்லுகிறேன். படித்துப் பாருங்கள். இந்த ஆபாசமுறை மாற்றப்பட வேண்டாமா? நம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்றதை மறந்து இனிமேலாவது ஒரு நாகரிகமான முறையில் நமது வருஷ முறையை அமைத்துக்கொள்ள வேண்டாமா என்பதை வலியுறுத்தவே மேலும் கீழும் குறிப்பிடப்படுவனவாகும்.

நம் வருஷப் பிறப்புக்குத் தமிழ் வருஷப் பிறப்பு என்று சொல்லிக் கொள்ளுகிறோம். இது நியாயமா? தமிழ் வருஷப் பிறப்பு கதையைப் பாருங்கள்.

வருடப் பிறப்புக் கதை

நாரதப் பிரம்ம ரிஷி அவர்களுக்கு ஒரு நாள் காமஇச்சை ஏற்பட்டதாம். எங்கு போனால் இது தீரும்? என்று ஞான திருட்டியினால் பார்த்து சாட்சாத் கிருஷ்ண பகவானிடம் போனால் தமது காம இச்சை தீரும் என்று கருதி கிருஷ்ணனிடம் ஓடோடி ஓடினாராம். கிருஷ்ண பகவான் நாரத முனி சிரேஷ்டரே எங்கு வந்தீர்? என்றாராம். அதற்கு நாரதர் ஒன்றும் இல்லை என்று தலையைச் சொரிந்து கொண்டு பல்லைக் காட்டினாராம். கிருஷ்ண பகவான் சும்மா சொல்லும் என்றாராம். நாரதர், எனக்கு எப்படியோ இருக்கிறது. உமக்கு அறுபது ஆயிரம் கோபிகள் (வைப்பாட்டிகள்) இருக்கிறார்களே, அதில் ஒன்று கொடுங்களேன் என்று கேட்டாராம். உடனே கிருஷ்ண பகவான் இது தானா பிரமாதம் இன்று இரவு எனது அறுபது ஆயிரம் கோபிகளில் நான் இல்லாத வீட்டிற்குப் போய் அங்கு உள்ள கோபியை அனுபவித்துக் கொள்ளுங்கள் என்றாராம். உடனே நாரத பிரம்மம் கிருஷ்ண பகவானுக்கு ஒன்று போக 59999 கிடைத்ததாகக் கருதிக் கொண்டு மகிழ்ச்சிப் பெருக்குடன் கோபிகள் வீட்டுக்கு சென்றாராம். அங்கு சென்று எந்த வீட்டைப் பார்த்தாலும் அங்கெல்லாம் கிருஷ்ண பகவான் கோபியுடன் படுத்துக்கொண்டிருப்பதைக் கண்டு வெட்கப்பட்டு வெகு கோபத்துடன் கிருஷ்ண பகவான் வீட்டுக்கு வந்தார். வழியில் என்ன நினைத்துக் கொண்டு வருகிறார் என்று யோசித்தால் அது மிகவும் வேடிக்கையானது. அதாவது இப்படி நம்மை மோசம் பண்ணின கிருஷ்ணனையே இன்று அனுபவிப்பது என்று தான் கருதிக் கொண்டு வருகிறார் என்று தெரியவருகிறது.

அதாவது, பகவானே நான் சென்ற கோபி வீட்டில் எல்லாம் நீர் இருந்தீர். ஆதலால் சும்மா வந்துவிட்டேன். அதன் நிமித்தம் நான் தேவரீரையே அனுபவிக்க ஆசைப்படுகிறேன் என்று சொன்னதோடு பகவானைப் பெண்ணாகக் கொண்டு அனுபவிக்க அழைத்தால் ஒரு சமயம் வரமாட்டாரோ என்று கருதிப் போலும், பகவானே, என்னைப் பெண்ணாய்க் கொண்டு தாங்கள் அனுபவிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் கொண்டேன் என்று கெஞ்சினார். பகவான் உடனே கருணை கொண்டு ஸ்ரீமதி நாரத அம்மாளை அனுபவித்தார். எத்தனை காலம் அனுபவித்தார் என்று தெரிய யாராவது வாசகர் ஆசைப்படலாம். இந்த நாரத அம்மையுடன் கண்ணன் 60 வருஷம் லீலை செய்தார். அப்புறம் என்ன ஆயிற்று என்றால் ஆணாயிருந்தால் என்ன, பெண்ணாயிருந்தால் என்ன, பகவான் கிரீடை செய்தால் அது வீணாகப் போகுமோ? போகவே போகாது. எனவே அந்த 60 வருஷ லீலைக்கும் வருஷத்திற்கு ஒரு பிள்ளை வீதம் நாரத அம்மாளுக்கு 60 பிள்ளைகள் பிறந்தன. இந்த 60 பிள்ளைகளும் தகப்பனைப் பிடித்துக் கொண்டு எங்களுக்கு என்ன கதி? என்று கேட்டன. பகவான் அருள் சுரந்து நீங்கள் 60 பேரும் 60 வருஷங்களாக ஆகி ஒவ்வொருவர் ஒவ்வொரு வருஷத்திற்கு உலகாளுங்கள் என்று கருணை சாதித்தார். அதிலிருந்து 60 வருஷங்கள் ஏற்பட்டு அவைகளுக்கு இந்த 60 பிள்ளைகள் பெயர் வைக்கப்பட்டு வருஷம்தோறும் அப்பெயர்கள் மாறி மாறி வருகின்றன.

ஆகவே, இந்த 60 வருஷங்கள் பகவானும் ரிஷியும் ஆன ஆணும் ஆணும், ஆண் பெண்ணாகச் சேர்ந்து பிறந்த குழந்தைகள். இதற்காகத்தான் நாம் வருஷப்பிறப்பு கொண்டாடுகிறோம்.

இப்படி ஆணும் ஆணும் சேர்ந்ததால் பிறந்த அதிசய மான பிள்ளைகளானாலும் இந்த வருஷப் பெயரையோ, எண்ணிக்கையையோ கொண்டு 60 வருஷத்திற்கு மேற்பட்ட காலத்தைக் கண்டுபிடிக்க முடிவதில்லை. அதனால்தான் தமிழனுக்கு சரித்திரம் இல்லை என்பதோடு தமிழர் சரித்திர காலத்திற்கு விவகாரம் இல்லாமலும் இல்லை.

ஆகையால் இனியாவது தமிழர்கள் இந்த 60 வருஷ முறையைக் காரித் துப்பிவிட்டு கி.பி.யையோ, ஹிஜரி யையோ, கொல்லத்தையோ, விக்கிரமாதித்தனையோ, சாலிவாகனனையோ அல்லது வேறு ஏதாவது ஒரு சனியனையோ குறிப்பு வைத்துக் கொள்ளுவார்களா? என்றும் அவ்வளவு சூடு சொரணை தமிழனுக்கு உண்டா என்றும் கெஞ்சிக் கேட்கிறோம்.

- தந்தை பெரியார்

"குடிஅரசு" - கட்டுரை - 8.4.1944

- விடுதலை நாளேடு, 13.4.20

திங்கள், 6 ஏப்ரல், 2020

மக்களினம் மாண்புற வள்ளுவர் தந்த குறள்!

தந்தை பெரியார்

திராவிடன் அன்றே எதிர்த்தான்!

அன்பர் கலியாண சுந்தரனார் திராவிட நாடு வேறு, ஆரிய நாடு வேறு, திராவிடப் பண்பு வேறு, ஆரியப் பண்பு வேறு என்று இன்று காலை தெரிவித்தது போல், திராவிட நூல் வேறு, ஆரிய நூல் வேறுதான். திராவிடர்கள் எப்போதுமே ஆரியர்களை ஆரிய கலாசாரத்தை வெறுத்தே வந்திருக்கிறார்கள். திராவிட நாட்டை ஆரியர்களின் படையெடுப்பிலிருந்து காப்பாற்றப் பெரிதும் முயற்சி எடுத்திருக்கிறார்கள். இதனுண்மையைக் கந்த புராண ஆரம்பத்தில் காணலாம்.

சிவபெருமானுடைய கல்யாணத்தின் போது தேவர்க ளும், ரிஷிகளும் வந்து தென்னாடு உயர்ந்து விட்டதென்றும், வடநாடு தாழ்ந்துவிட்டதென்றும் அதற்குப் பரிகாரம் உடனடியாகச் செய்யப்பட வேண்டுமென்றும் விண்ணப்பம் செய்து கொள்கிறார்கள். இதிலிருந்து தென்னாட்டினர் உயர்வு ஆரியர்களால் எவ்வளவு வெறுக்கப்பட்டது என்பது இனிது புலனாகிறது. சிவன் யார் கெட்டிக்காரன் என்று ஆலோசித்துப் பார்த்து அகத்தியனை அனுப்பியிருக்கிறார். பரிகாரம் செய்ய மிகமட்டமான அதாவது சூழ்ச்சியில், தந்திரத்தில், வஞ்சகத்தில் கைதேர்ந்த ஒருவனை அனுப்பி வைக்கிறார். அவன் விந்திய மலையருகில் வரவும் அங்கு காவல் செய்துவந்த வாதாபியும், வில்லவனும் அவனைத் தடுத்து விடுகிறார்கள். இவர்கள் கந்தபுராணத்தில் சித்திரிக்கப் படுகிற சூரனுடைய தங்கச்சியின் மக்கள் ஆவார்கள். இவர்கள் வட நாட்டிலிருந்து யார் வந்தாலும் அவர்களைக் கொன்று தின்று விடுகிறதாகக் கூறப்படுகிறது. அதே மாதிரியே அகத்தியனையும் தின்று விட்டதாகவும் ஆனால், அவனை ஜீரணம் செய்ய முடியவில்லை என்றும், அவனுடைய வயிற்றைக் கிழித்துக் கொண்டு அகத்தியன் வெளிப்பட்டுச் சென்றான் என்றும், சென்று தமிழ் வளர்த்தான் என்றும் காணப்படுகிறது.

மடப்புலவர்களின் மதித்திறமை!

இந்தத் தமிழ்ப் புலவர்களும் ஆராய்ந்தறியாமல் இதையொட்டி 'அகத்தியன் வளர்த்த தமிழ்' என்று புகழ் பாடி விட்டனர். அகத்தியன் இங்கு வந்து பாதிரிகள் போல் தமிழ் கற்று நமது தர்மங்களை. ஒழுக்கங்களை மாற்றிய மைத்து இருக்கக்கூடும். இதற்காக அவனுக்கு நன்றி காட்டும் அவ்வளவு நன்றியுடையவர்கள் நமது மடப் புலவர்கள். 'நாய் நன்றி காட்டுவதெல்லாம் அந்நியனிடத்துத்தான்' என்பதுபோல், பழங்கால இப்பண்டிதர்களும் அந்நிய அகத்தியனுக்கே மரியாதை செய்துவிட்டனர். அந்த அகத்தியன் முடிவில் தமிழ் நாட்டிலிருந்து ராவணனைத் துரத்தி விட்டதாக வேறு காணப்படுகிறது. இதற்கும், ராவணனுடைய தம்பிக்கும், ராமன் பட்டம் வாங்கிக் கொடுப்பதற்கும் ஏதேனும் பொருத்தம் இருக்கிறதா என்பதும் தெரியவில்லை. இக்கதைகள் எல்லாம் அபிதான சிந்தாமணியில் கொடுக்கப்பட்டிருக்கிறது அவற்றைப் படித்துப் பாருங்கள் தெரியும். ஆரியர் திராவிடம் போராட்டம் எப்போது ஏன் துவங்கியது என்று!

காட்டிக் கொடுக்கும் கயவர்களின் முன்னோன் விபீஷணன். இப்போது எப்படி சில திராவிடர்கள் அறி விழந்து ஆரிய வடவர்களையே தமது அரசியல் தலை வர்கள் என்றுகொண்டு, தாம் பணியாற்றும் வகையில், ஏனைய திராவிடர்களையும் எப்படி அவர்களுக்கு நிரந்தர அடிமைகளாக வைத்திருக்க முயற்சிக்கின்றனரோ அதுபோல், வால்மீகி காலத்திலும் சில திராவிடர்கள் இருந்திருப்பதை நாம் அவரது ராமாயணத்தைப் படிப்பதன் மூலம் நன்கு அறியலாம். வாலி கொல்லப்பட்ட பிறகு விபீஷணனைக் கொண்டு வந்து அனுமார் சேர்க் கிறார். அப்போது சுக்ரீவன் கேட்கிறான், அண்ணனுக்கே துரோகம் செய்யும் இவன் நாளை உனக்கு மட்டும் துரோகம் செய்யமாட்டான் என்று எப்படி நம்புவது என்று - அதற்கு ராமன் என்ன  சொல்லுகிறான் பாருங்கள்.

"என் லட்சியத்திற்கு அதைப்பற்றி யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. ராவணன் தோல்விதானே, அவனது முடிவுதானே எனக்கு வேண்டியது அதற்கு உதவி செய்யத் தகுந்தவன் யாராக இருந்தால், எப்படிப்பட்டவனாயிருந்தால் என்ன? அவனை, நண்பனாக கொள்ள வேண் டியது தானே! மேலும் அவன் எப்படி எனக்குத் துரோகம் செய்ய முடியும்? அவனுக்கு வேண்டுவது அண்ணனுடைய ராஜ்யமன்றோ, அண்ணன் செத்தால்தானே அவனுக்கு ராஜ்யம் வரும். ஆதலால், தனது அண்ணனை ஒழிக்க வழி நமக்குக் கூறி உதவி செய்துதானே தீருவான். இந்த விஷயத்தில் அவன் நமக்குத் துரோகம் செய்ய முடியாதே. அதன் பிறகு என்ன துரோகம் அவனால் நமக்கு செய்ய முடியும். இவனை விட்டால் ராவணனை எனக்குக் காட்டிக் கொடுக்கக் கூடிய வேறு ஆள் ஏது?" என்று சொல்லி விபீஷணனை ஏற்றுக் கொள்கிறான்.

ஆச்சாரியார் ராமநாதர்களை அறிமுகப்படுத்திய முறை

இதே மாதிரிதான், தம்முடைய லட்சியத்தையே குறிக்கோளாகக் கொண்டு இன்றையப் பார்ப்பனர்களும் மானாபிமானம் அற்று தம் கட்சிக்கு ஆள் தேடித் திரி கிறார்கள். நமக்கு எவன் துரோகம் செய்கிறானோ அவன்தான் பார்ப்பனர்க்கு ரொம்பவும் வேண்டியவன். மகாதேசபக்தன். அவர்களுடைய போற்றுதலுக்கு உரியவர்கள். புகழ்பெறுபவர்கள். நம்முடைய துரோகிகளின் மூலம்தான், அன்றுதொட்டு இன்றுவரையும் அவர்கள் சுகமாக வாழ்ந்து வருகிறார்கள். இதை, இந்த நாசமாய் போன துரோகம் செய்பவர்கள் உணர்ந்தால் தானே. தோழர்கள் ராமநாதனும் கே. வெங்கடசாமி நாயுடுவும் நமது கட்சியினின்று நீங்கி சென்றபோது, இவர்களைக் காந்தியாருக்கு அறிமுகம் செய்தபோது ராஜகோபாலாச்சாரியார், அன்று அனுமார் ராமனிடம் விபீஷணனை அறிமுகம் செய்து வைத்தது போன்றே செய்தாரே. "ராமநாதன் வந்துவிட்டார். பழையபடி அந்த சரணாகதிக்கு நீங்கள் மனமிரங்கி இடம் அளிக்க வேண்டும். ராமர் எப்படி விபீஷணனுக்கு அபயம் அளித்தாரோ அதேபோன்று இவருக்கும் தாங்கள் அபயம் அளித்தருள வேண்டும்" என்று.

ராவணனை விட்டு விபீஷணன் நீங்கியதற்கும், சுயமரியாதைக் கட்சியை விட்டு ராமநாதன் நீங்கியதற்கும் ஒப்புதல் காட்டிவிட்டாரே ராஜகோபாலாச்சாரியார். இது போலவே வெங்கிடசாமி நாயுடு விஷயத்திலும் சொன்னார். இந்த ராமாயண சம்பிரதாயந்தானே அன்று முதல் இன்று வரைக்கும் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

கீதையை ஆரியர்கள் போற்றுவதேன்?

நீங்களே சிந்தித்துப் பாருங்கள், பார்ப்பனர்கள் குறளுக்கு எவ்வளவு மரியாதை செய்கிறார்கள். கீதைக்கு எவ்வளவு மரியாதை செய்கிறார்கள். அவர்கள் பகவத் கீதையை அச்சுப் போட்டு இனாமாக வழங்கி வருவதும் அதைப்பற்றிப் பெருமையோடு எங்கும் பேசிவருவதும் உங்களுக்குத் தெரியாததல்லவே! இது ஏன் என்று நீங்கள் சிந்தித்ததுண்டா? கிருஷ்ணன் கீதையின் மூலம் 4 ஜாதிமுறை உண்டென்பதையும், அதில் பார்ப்பனர்களே முதல் ஜாதியினர் என்பதையும் - கடவுளுக்கும் பெரியவர்கள் பார்ப்பனர்கள் என்ற தத்துவம் இருப்பதோடு, எப்படியும் அதர்மம் செய்தவர்களுக்கு மன்னிப்பு உண்டு, வர்ண அதர்மம் செய்பவர்களுக்கு மன்னிப்பு இல்லை என்று ஒப்புக் கொண்டிருப்பதுதான் அதற்குக் காரணம் என்பதை உணருக! வேதாந்திகளுக்கும், பார்ப்பனர்களுக்கும் கீதையில் 1000 வரி தெரிந்திருப்பது ஏன்? குறளிள் 2 வரி கூடத் தெரியாதது ஏன்? என்பதையும் சிலர் காவி வேட்டி கட்டிக்கொண்டு திராவிடர் கூடக் கீதைப் பிரசாரம் செய்துவருவது ஏன்? என்பதையும் யோசித்துப் பாருங்கள். கீதை எவ்வளவு அக்கிரமத்துக்கும் முக்காடுபோட்டுவிடும் காவி உடையைப் போல் ஏன்? கீதைக்குத் தலைவனான கிருஷ்ணனே அக்கிரமத்தின் தலைவனான காரணத்தால்!

பித்தலாட்டப் போர்வை கீதை!

அதற்கு பெரிய நெருப்பு குறள்!

தோழர்களே! நாம் எதிர்க்கும் நான்கு ஜாதிமுறையைக் கடவுளின் பேரால் வலியுறுத்தத்தான் கீதையும் கிருஷ்ண பஜனையும் என்பது உங்களுக்கு நினைவிருக்கட்டும்.

கீதை படிப்பவர்கள் எத்தகைய தர்மத்தையும், ஒழுக் கத்தையும் கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் பகவானே இதைச் செய்துள்ளபோது சாதாரண மனிதனான நான் எம்மாத்திரம் என்றோ, எல்லாம் பகவான் செயல் என்றோ, நான் ஏன் பார்ப்பான் என்பதைக் கிருஷ்ணனிடம் கேட்டுத் தெரிந்துக் கொள் என்றோ சுலபமாகப் பதில் கூறிவிடலாம். ஆனால் குறளைப் படித் தாலோ தர்மத்தின்படி நடக்க வேண்டும். பித்தலாட்டம் செய்ய முடியாது. பித்தலாட்டம் செய்பவரைக் கண்டாலும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.

குறளிலும் இன்றைய நிலைக்குப் புறம்பான கருத்துக்கள் சில இருக்கலாம். அவற்றை மாற்றிவிட வேண்டியது தான். அத்தகைய மாற்றத்திற்கு இடம் தருவதுதான் குறள்.

மனித சமுதாயத்திற்கே வழிகாட்டி குறள்!

குறளை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உட்பட யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். மாமிசம் சாப்பிடுவது மறுக்கப் பட்டிருக்கிறது என்னலாம். காய்கனி தானியம் இவை அபரிமிதமாகக் கிடைக்குமானால், மாமிசம் தின்ன வேண்டிய அவசியம்தான் என்ன இருக்கிறது?

முகம்மது நபியவர்களால் கூறப்பட்டுள்ள பல கருத்துக்களைக் குறளில் அப்படியே காணலாம். முஸ்லிம்களுக்கு எதிராக அதில் ஒன்றுமே காணமுடியாது. அது மனுதர்மத்துக்கு உண்மையான விரோதி நூல் என்று திடமாகவே சொல்லலாம். மனுதர்ம சூத்திரங்களுக்கு நேர்மாறான கருத்துக்களைக் கொண்ட குறள் அடிகளை ஏராளமாகத் திருக்குறளிலிருந்து எடுத்துக்காட்டலாம்.

மனித சமுதாயத்திற்கே நல்வழிகாட்டி, நன்னெறியூட்டி, நற்பண்புகளையும் ஒழுக்கங்களையும் கற்பிக்கும் வகையில் எழுதப்பட்ட நூல்தான் திருக்குறள். எனவே தான், எல்லா மக்களும் எல்லா மதத்தவரும் எங்கள் குறள், எங்கள் மதக்கருத்தை ஒப்புக் கொள்ளும் குறள் என்றெல்லாம் அதைப் போற்றி வருகிறார்கள்.

எனவேதான், அதன் ஆசிரியரைக் கூட சில மதத்தினர் தம்மவர் என்று உரிமைப் பாராட்டிக் கொள்கிறார்கள். ஜைனர் தம்மவர் என்று கூறி அவரை மொட்டைத் தலைய ராகக் காட்டுகிறார்கள். சைவர்கள் அவரை தம்மவர் என்று கூறி ஜடாமுடியுடன் விபூதிப் பட்டையுடன் காட்டுகிறார்கள். அவரோ எம்மதமும் இல்லாதவராகவே தோற்றுகிறார். ஒரு இடத்தில் "மயிரும் வைத்துக்கொள்ள வேண்டியதில்லை. மொட்டையும் அடித்துக்கொள்ள வேண்டியதில்லை. யோக்கியனாய் இருக்க வேண்டுமானால்" என்று கூறியிருக்கிறார். அப்படியான பெரியாரை வைணவர்கள் தம்மவர்தான் என்று கூறிக்கொண்டு வடகலை நாமம் போட்டுக் காட்டுகிறார்கள். அவரை ஆழ்வாரில் ஒருவராகவும் ஆக்கிவிடுகிறார்கள். அவருக்கு வடகலை நாமம் போட்டது மகாமகாக் கொலைபாதகத்தனமாகும்.

இராமாயணக் கூத்து ஏன்?

திருவள்ளுவர் தவிர்த்த வேறு யாரையும் மற்ற மதத்தவர்கள் இம்மாதிரி மதிப்பதில்லையே. இதிலிருந்தே தெரியவில்லையா, குறளில் காணப்படும் திராவிடப் பண்பு எத்தகையது என்று? இப்படிப்பட்ட திருக்குறளை விரும்புவதை விட்டு நம் நாட்டவர்கள் இராமாயணத்தை வைத்துக் கொண்டு கூத்தடிக்கிறார்களே அது நியாயமா?

எவளோ ஒருத்தி சொன்னாளாம் "பன்னாடைக்குப் பிறந்ததெல்லாம் பந்தம் பிடிக்குது. பண்டாரத்துக்கு பிறந்ததெல்லாம் மணியம் பார்க்குது" என்று. அதாவது மதிக்கப்பட வேண்டியது மதிக்கப்படாமல், மதிக்கப்படக் கூடாதன மதிக்கப்படுகின்றன என்று அர்த்தம். மேற்படி பழமொழி எப்படி வந்ததென்றால், முன்பெல்லாம் மிராசுதாரர்கள் கூத்திகளை வைத்துக் கொள்வார்கள். அவர்கள் கூத்தியோடு இருந்தால் அவர்கள் மனைவிமார் ஊர் பண்டாரத்தைத் துணைக்கு வைத்துக் கொள்வார்கள். தாசி வீட்டில் மிராசுதாரர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் தாசி மக்கள் தொழிலையொட்டி கோயிலில் பந்தம் பிடிக்கும். ஆனால் மிராசுதாரர் பேரால் பண்டாரத்திற்கு அவர் வீட்டில் பிறந்த குழந்தைகள் மிராசு பார்க்கும் என்று கற்பனைக் கதை சொல்லுவார்கள், இதைக் குறிப்பதுதான் அப்பழமொழி. அதுபோல் உண்மைத் திராவிடன் தீட்டிய திருக்குறள் குப் பையிலே கிடக்க, திராவிடர் துரோகி தீட்டிய ராமாயணமும் ஆரியர் தீட்டிய கீதையும் அதி காரத்தில் இருந்து வருகிறது.

ஏன் இந்தத் திறப்பு விழா?

இந்த இழிதன்மையை, மானமற்ற தன்மையை, கவலையற்ற தன்மையை உங்களிடம் முறையிட்டுக் கொள்ள வேண்டித்தான் வள்ளுவர் படத்தைத் திறந்து வைக்க ஒப்புக் கொண்டேன். குறளுக்குள் நான் இன்று புகவில்லை. மற்றொரு சமயம் எடுத்துக்காட்டுகிறேன்.

இந்து மதத்தில்தான் 'தாழ்த்தப்பட்ட' கிளை!

'தாழ்த்தப்பட்ட' வகுப்பார் உணரவேண்டும், இந்துக் களாக இருப்பதால்தான் தாழ்த்தப்பட்ட வகுப்பாரென் கிறவர்களும் இருக்கிறார்கள் என்பதை! குறள் இந்து மதக் கண்டன புத்தகம் என்பதையும், அது சர்வமதத்திலுள்ள சத்துக்களையெல்லாம் சேர்த்து எழுதப்பட்டுள்ள மனித தர்ம நூல் என்பதையும் எல்லோரும் உணர வேண்டும்.

விரும்பிப்படித்து அதன்படி நடக்கவேண்டும். ஒவ்வொருவனும் தான் இந்து அல்ல திராவிடனே - 'திருக் குறளானே' என்று கூறிக் கொள்வதில் பெருமையடைய வேண்டும். விபூதியையும் நாமத்தையும் விட்டொழிக்க வேண்டும். புராணங்களைப் படிக்கக் கூடாது. என்னமதம் என்றால் குறள் மதம், மனித தர்ம மதம் என்று சொல்லப் பழகவேண்டும். யார் எதைச் சொல்லியபோதிலும், எது எத்தன்மையுடையதாய் இருப்பினும், ஒவ்வொருவரும் நன்கு சிந்தித்துப் பார்த்து ஆராய்ச்சி செய்து பார்த்துப் பிறகே எது உண்மை என்பதை முடிவு செய்யவேண்டும். சுய அறிவே பிரதானம் என்ற, 'வாலறிவன் நற்றாள்' என்ற வள்ளுவர் கருத்துப்படி அனைவரும் நடக்க வேண்டும். உருவ வழிபாட்டை ஒதுக்கிவிட வேண்டும்.

முஸ்லிம்களுக்கு விண்ணப்பம்!

முஸ்லிம் தோழர்களுக்கு ஒரு விண்ணப்பம். உங்களை ஏனோ எங்களுடன் நன்கு சேர ஒட்டாமல் உங்கள் தலைவர்கள் தடுத்து வருகிறார்கள். ஜின்னாசாகிப் ஒரு காலத்தில் முஸ்லிம்கள் யாரும் வேறு கட்சியில் சேரக் கூடாது என்று கூறினார் என்றால், அதற்கு அர்த்தம் இருந்தது. முஸ்லிம்களின் லட்சியமான பாகிஸ்தானை அடைய எல்லா முஸ்லிம்களும் ஒரே கட்சியின் கீழிருந்து வேலை செய்ய வேண்டும் என்பதற்காக அவர் அவ்விதம் சொல்லியிருந்தார். அப்பொழுது நானும் முஸ்லிம் கட்சியிலிருந்தேன். பாகிஸ்தான் பெற்றாகிவிட்டது. எனவே அவர் கூறியது காலாவதியாகிவிட்டது. (லிமிடேஷன் பார் ஆகிவிட்டது) இனி முஸ்லிம்கள் தங்களின் பாதுகாப்புக்காக ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து கொள்வது தான் நல்லது. இன்றுள்ள இம் மாகாண முஸ்லிம் தலைவர்கள் சொற்ப சலுகைகளுக்காகவும், பயத்துக்காகவும், சுயநலத்திற்காகவும் காங்கிரஸ்காரர்களின் காலடியில் இருந்து கொண்டு வருகின்றனர். தமக்குக் கிடைக்கும் சலுகைக்காக முஸ்லிம் இனத்தையே காட்டிக் கொடுக்கத் துணிந்து அவர்களைக் கோழைகளாக்கி விட்டனர் இதை முஸ்லிம் பாமரமக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். காங்கிரசுடன் சேர்ந்து கொள்வதா யிருந்தால் தாராளமாகச் சேர்ந்து கொள்ளுங்கள் நாம் வேண்டாமென்று கூறவில்லை. 100க்கு 90-பேராயுள்ள எங்களையே ஏமாற்றிக் கொண்டிருக்கும் பார்ப்பனர்களா 100க்கு 7பேரான உங்களுக்கு வளைந்து கொடுக்கப் போகிறார்களா? எங்களைப் பொறுத்தவரை, இன்னும் நாங்கள் உங்களை எங்கள் உடன் பிறந்தவர்களாகத் தான் கருதி வருகிறோம். நீங்களும் குறள் மதக்காரர்கள் என்றே கருதுகிறோம். நாங்களும் உங்களைப் போல், இந்து மதத்தை வெறுக்கிறோம் என்பதோடு; குறளை ஒரு போதும் வெறுப்பவர்கள் அல்ல; ஒன்றும் முடியாது போனால் உங்களைப் போன்ற குல்லாயாவது போட்டுக் கொள்ளலாம் என்று தான் நாங்கள் கருதியிருக்கிறோம்.

எங்கள் இனத்தவர் நீங்கள் என்பதற்காக, உங்களை இந்த அளவுக்கு அளவளாவும், ஆதரிக்கும் எங்கள் கழகத்தில் வேண்டுமானாலும் சேருங்கள் அல்லது வட நாட்டானால் பல கோடி செலவிட்டு பத்திரிகைகளைக் கொண்டு தீவிர பிரசாரம் செய்து இந்துக்களைத் தூண்டி விட்டு உங்களைக் கொள்ளையடிக்க நினைக்கும் பார்ப்பனர்களோடாவது சேர்ந்து கொள்ளுங்கள். சேருமுன் கொஞ்சம் தீர்க்கமாக யோசித்து விட்டு மட்டும் சேருங்கள். திருவண்ணாமலையும், ஈரோடும், திருநெல்வேலியும் உங்களுக்கு ஞாபகமிருக் கட்டும்.

கிறிஸ்தவர்களே!

நீங்களும் சிந்தியுங்கள்!

முஸ்லிம்களை விடக் குறைவான எண்ணிக்கையுடைய கிறிஸ்தவர்களுக்குச் சொல்லுகிறேன். கிறிஸ்தவர்களாகி விட்ட தாலேயே நீங்கள் உயர்ந்தவர்கள் என்று கருதிக் கொண்டு விடாதீர்கள். நீங்களும் குறள் மதக்காரர்கள். பைபிளுக்கு விரோதமாக குறளில் ஒன்றும் கிடையாது. பார்ப்பனர்களின் தயவுக்காக வேண்டி சுயமரியாதையை இழந்துவிடாதீர்கள். உங்கள் நன்மையை பாதுகாத்துக் கொள்வதாயிருந்தால் ஜாதி, சமய, பேதமின்றி பாடுபடும் திராவிடர் கழகத்தில் சேருங்கள். திராவிடர் கழகம் திருவள்ளுவர் குறளை பின்பற்றி நடந்து வரும் கழகம். இந்நாட்டில் மனுதர்மம் ஒழிந்து மனிதத் தன்மையேற்படப் பாடுபட்டு வரும் கழகம். அதற்குக் குறள்தான் வழிகாட்டி. எந்த முன்னேற்றத்திற்கும் விரோதமில்லாமல் பணியாற்றி வரும் கழகம் என்பதை நீங்கள் உணர்ந்து ஆன எல்லா உதவியையும் அதற்கு அளித்து ஆதரியுங்கள்.

(24.10.1948 அன்று ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழக 19ஆவது மாகாண (ஸ்பெஷல்) மாநாட்டில் திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைத்து பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு.)

'குடி அரசு' - சொற்பொழிவு - 13.11.1948