செவ்வாய், 26 ஜூன், 2018

இந்தியாவுக்கு ஏற்ற ‘மே தினம்’


தந்தை பெரியார்



மே தினம் என்பது இன்று உலகமெங்கும் ஒவ்வொரு தேசங்களிலும் கொண்டாடப் படுவதனாலும் ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகின்றது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ரஷ்யாவில் கொண்டாடப்படுவதுபோல் இங்கிலாந்தில் கொண்டாடப்பட மாட்டாது. ஸ்பெயினில் கொண்டாடப்படுவது போல் பிரெஞ்சில் கொண்டாடப்பட மாட்டாது.

அதுபோலவே தான் மேல் நாடுகளில் அய்ரோப்பா முதலிய இடங்களில் கொண்டாடப்படுவது போல் இந்தியாவில் கொண்டாடத் தக்க நிலைமை இல்லை.
ஏனெனில், ஒவ்வொரு தேசத்தின் நிலைமை வெவ்வேறான தன்மையில் இருந்து வருகிறது. எல்லா தேசமும் ஒரே விதமான பக்குவத்தை அடைந்துவிடவில்லை.

ஆரம்ப திசையில் இருக்கிற தேசமும் முடிவை எட்டிப் பார்க்கும் தேசமும் ஒரே மாதிரி கொண்டாட வேண்டும் என்று கருதுவதும் புத்திசாலித்தனமாகாது.
இன்று ரஷ்யாவில் மே தினத்தைக் கொண்டாடுவதின் முக்கிய நோக்கம் பெரிதும் தங்கள் தேசத்தை மற்ற தேசங்கள் பின்பற்ற வேண்டும் என்கின்ற ஆசையைப் பொருத்ததாகும்.

இங்கிலாந்து, பிரெஞ்சு முதலிய தேசங்களில் கொண்டாடுவதின் நோக்கம் ரஷியாவைப் பல விஷயங்களில் பின்பற்ற வேண்டும் என்கின்ற கருத்தைக் கொண்டு அதற்கு பக்குவம் செய்வதற்கு ஆசைப்படுவதாகும்.

எப்படி இருந்தாலும் அடிப்படையான நோக்கத்தில் ஒன்றும் பிரமாத வித்தியாசம் இருக்காது. அனேக துறைகளில் சிறப்பாக சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டு தாழ்த்தப்பட்டு, இம்சைப் படுத்தப்பட்ட அடிமை மக்கள் சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் அடைய வேண்டும் என்கின்ற உணர்ச்சியே மே தினக் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

அந்த உணர்ச்சி எல்லா மக்களுக்கும் ஏற்பட்டால் பிறகு அந்தந்த நாட்டு நிலைமைக்குத் தக்கபடி முயற்சியும் கிளர்ச்சியும் தானாகவே வந்துவிடும்.

ஒடுக்கப்பட்டுத் தாழ்த்தப்பட்ட அடிமை மக்கள் என்பவர்கள்கூட ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகவே இருக்கிறார்கள்.
மேல் நாடுகளில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் என்பவர்கள் தொழிலாளிகள் என்கின்ற பெயரால் அவர்களது தொழில் நிலையையும் செல்வ நிலையையும் பொருத்து இருக்கிறார்கள்.

அதனாலேயே இந்தக் கிளர்ச்சிக்கு தொழிலாளி, முதலாளி கிளர்ச்சியென்றும் வகுப்புப் போர் என்றும் சொல்லப்படுகின்றது.

ஆனால் இந்தியாவில் ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் என்பது தொழில் நிலையையும், செல்வ நிலையையும் முக்கியமாய் கொள்ளாமல், மக்களின் பிறவி நிலையையே பிரதானமாய்க் கொண்டு பெரும்பான்மையான மக்கள் ஒடுக்கப்பட்டும் தாழ்த்தப்பட்டும், அடிமைப் படுத்தப்பட்டும் இருப்பதால் தொழில் நிலைமையையும், செல்வ நிலைமையையும் நேரே நோக்கிக் கிளர்ச்சியோ, புரட்சியோ செய்வது முக்கியமானதாய் இல்லாமல் பிறவி பேதத்தையே மாற்றக் கிளர்ச்சியும், புரட்சியும் செய்ய வேண்டியது முக்கியமாய் இருக்கின்றது. ஆதலால் தொழிலாளி, முதலாளி கிளர்ச்சி என்கின்றதைவிட மேல் ஜாதி, கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும்.

ஏனென்றால், இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவியிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு விட்டது.

நாலாவது வருணத்தான் அல்லது கீழான ஜாதியான் அல்லது சூத்திரன் என்று சொல்லப்படும் பிரிவே தொழிலாளி. அதாவது சரீரத்தால் உழைத்து வேலை செய்பவரின் மூலம் மற்ற ஜாதியாருக்கு வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்ய வேண்டும் என்கின்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டதாகும்.

அய்ந்தாவது ஜாதியான பஞ்சமன் அல்லது சண்டாளன் என்று சொல்லப்பட்ட ஜாதியான் என்பவன் வாழ்நாள் முடிய மற்ற ஜாதியாருக்கு அடிமையாய் இருந்து தொண்டாற்ற வேண்டும் என்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டவன்.

இந்த இரு கூட்டத்தாரிடமும் கூலி கொடுக்காமலே வேலை வாங்கும் உரிமை மேல் ஜாதியானுக்கு உண்டு. அதுவும் மத சாஸ்திர பூர்வமாகவே உண்டு.
இது இன்றைய தினம் நிர்ப்பந்தத்தில் இல்லை என்று சிலர் சொல்லக் கூடுமானாலும், ஒரு சிறு மாறுதலோடு அனுபவத்தில் இல்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது.

பஞ்சம வகுப்பைச் சேர்ந்த மக்களாகிய சுமார் 6, 7 கோடி மக்களில் 100-க்கு 99 பேர்கள் இன்று அடிமையாக, இழி மக்களாக நடத்தப் படவில்லை என்று யாராவது சொல்ல முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். அதுபோலவே பார்ப்பனரல்லாதார் என்கின்ற இந்து மக்கள் ஆண், பெண் அடங்கலும் சூத்திரர்கள் - அதாவது சரீர வேலை செய்யும் வேலை ஆட்கள் என்ற கருத்தோடு அழைக்கப்படுவது மாத்திரமல்லாமல், ஆதாரங்களில் குறிக்கப்படுவதோடு அந்தச் சூத்திரர்கள் என்கின்ற வகுப்பார்களே தான் இன்று சரீரப் பிரயாசைக்காரர்களாகவும், கூலிகளாகவும், உழைப்பாளிகளாகவும், ஏவலாளர்களாகவும், தொழிலாளர்களாகவும் இருந்து வருகின்றார்களா இல்லையா என்று பாருங்கள்.

மற்றும் ஜாதி காரணமாகவே, தொழிலாளிகளாகவோ, சரீர பிரயாசைப்படும் உழைப்பாளிகளாகவோ இல்லாமலும், சரீரப் பாடுபடுவதைப் பாவமாகவும் கருதும்படியான நிலையில் சில ஜாதியார்கள் இருக்கிறார்களா இல்லையா? என்றும் பாருங்கள்.

இந்தியாவில் தொழிலாளி, முதலாளி அல்லது எஜமான், அடிமை என்பது பிரதானமாக பிறவி ஜாதியை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இந்தியாவில் மே தினக் கொண்டாட்டம் என்பது பார்ப்பான், (சூத்திரன்) பஞ்சமன் அல்லது சண்டாளன் என்கின்ற ஜாதிப் பிரிவுகள் அழிக்கப்பட வேண்டும் என்கின்ற நிலையில்தான் பெரியதொரு கிளர்ச்சியும், புரட்சியும் ஏற்பட வேண்டும் என்கின்ற கருத்தோடு இன்று கொண்டாடவேண்டியதாகும்.

இந்தியாவில் வகுப்புப் போர் என்பதற்குப் பதிலாக வேறு ஏதாவது சொல்ல வேண்டுமானால் ஜாதிப் போர் ஏற்பட வேண்டும் என்பதாகத்தான் சொல்ல வேண்டும்.

இந்தியாவில் ஒரு ஜாதியார் 100-க்கு 99 பேர்கள் நிரந்தரமாக தொழிலாளிகளாகவும், அடிமைகளாகவும், ஏழைகளாகவும், மற்றவர் களுக்கே உழைத்துப் போடுகின்றவர்களாகவும் இருப்பதற்குக் காரணம் பிறவியில் வகுக்கப்பட்ட ஜாதிப் பிரிவே அல்லாமல் வேறு என்ன? இதை அடியோடு அழிக்காமல் வேறு விதமான கிளர்ச்சிகள் எது செய்தாலும் தொழிலாளி, முதலாளி நிலை என்பது அனுபவத்தில் இருந்துதான் தீரும்.

இன்று முதலாளி தொழிலாளி என்பதற்கு நாம் என்ன வியாக்கியானம் செய்கிறோம்? பாடுபடாமல் ஊரான் உழைப்பில் பதவி, அந்தஸ்துடன் வாழ்வதையும் பாடுபடுகின்றவன் ஏழையாய், இழிமக்களாய் இருப்பதையும் தான் முறையே சொல்லுகின்றோம்.

ஆகவே, ஜாதியையும் அதற்கு ஆதாரமான மதத் தன்மையையும்  அழிக்காமல், வேறு எந்த வழியிலாவது முதலாளி, தொழிலாளி தன்மையை மாற்றவோ அல்லது அதன் அடிப்படையாய் அணுகவோ நம்மால் முடியுமா என்று பாருங்கள்.

இந்த மே தினத்தை நாம் ஒரு பெரிய பண்டிகை போல் கொண்டாட வேண்டும். ஏனெனில், நமது பண்டிகைகளில் அநேகம் இம்மாதிரி வெற்றிகளை ஞாபகப் படுத்துவதேயாகும். தீபாவளி, ஸ்ரீராம நவமி முதலிய பண்டிகைகள் எல்லாம் இந்நாட்டில் ஆரியர்கள் திராவிட மக்களை வென்ற நாள்களையும், வென்ற தன்மைகளையும் கொண்டாடுவதைத் தவிர வேறொன்றுமே முக்கியமாய் இல்லை. இதெல்லாம் தெரிந்த பலர்கூட இப்பண்டிகைகளைக் கொண்டாடுவது இன்னாட்டில் மக்கள் உற்சாகத்திற்கு வேறு மார்க்கம் இல்லாததே ஒழிய மற்றபடி மதம், பக்தி, சுயமரியாதை அற்ற தன்மை என்பவைகளே அல்ல.

பெண்களையும், வேலை ஆள்களையும் சிறிதுகூட ஓய்வில்லாமல் அடிமை போல் நடத்துகிறோம். அவர்களுக்கு பண்டிகை, உற்சவம் ஆகியவைகள் தான் சிறிது ஓய்வும் சந்தோஷமும் கொடுக்கின்றன. தண்டவாளப் பெட்டியில் வைத்துப் பூட்டி வைப்பதுபோல் பெண் ஜாதிகளைப் பூட்டி வைக்கும் சிப்பாய்களெல்லாம் உற்சவம், பண்டிகை என்றால் சிறிதாவது தாராளமாய் வெளியில்விட சம்மதிக்கிறார்கள். உற்சவங்களில் அவர்கள் நிலை எப்படி ஆனாலும் கவலைப்படுவதில்லை. கண்ணெதிரிலேயே நசுக்கப் படுவதையும், கசக்கப்படுவதையும் பார்த்துக்கூட சகிக்கிறார்கள். ஆதலால் நம் பெண்களுக்கும், தொழிலாளிகளுக்கும் எவ்வளவுதான் நாம் பகுத்தறிவையும், சுயமரியாதைக் கொள்கைகளையும் போதித்தாலும் உற்சவமும், பண்டிகையும் அவர்களை விட்டு விலகவே முடியாது. எனவே நாம் இப்படிப்பட்ட பண்டிகைகள் சிலதை கொண்டாட ஏற்பாடு செய்தோமேயானால் மத சம்பந்தமான பண்டிகை, உற்சவம் ஆகியவைகளை மக்கள் கைவிடுவதற்கு அனுகூலமாயிருக்கும்.

ஆகவே தோழர்களே, இதுவரை நாங்கள் சொன்ன ஒவ்வொன்றையும் சிந்தித்துப் பார்த்து, தங்களுக்கு சரியென்று தோன்றியபடி நடக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொண்டு, இக்கூட்டத்தை முடித்து விடுகிறேன். (காரைக்குடியில் நடைபெற்ற மே தினக் கொண்டாட்டத்தில் தலைவர் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய முடிவுரை)

            - ‘குடிஅரசு’- 12.05.1935

- உண்மை இதழ், 1-15.5.18

திருக்குறள் பரப்ப பெரியாரின் தீவிர செயல்பாடுகள்



  பெரியார் அவர்களும் புன்முறுவலோடு கைகூப்பி தமது வணக்கத்தையும் நன்றியறிதலையும் காட்டி விட்டு, தமது சொற்பொழிவைத் தொடங்கினார்கள். அவர்தம் 2 மணி நேர உருக்கமான சொற்பொழிவை மக்கள் யாவரும் மிக மிக அமைதியாகக் கேட்டனர்.


சொற்பொழிவின் துவக்கத்திலேயே தான் எப்போதுமே தன் அறிவு ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு நடந்து வந்தவன் என்பதையும், அது ஒரு வேளை தவறாக முடியுமோ என்ற அச்சம் சில சமயங்கள் ஏற்பட்டபோதிலும், தாம் தொடர்ந்து உறுதியோடு அதையே ஆதாரமாகக் கொண்டு நடந்து வந்தமையையும் எடுத்துக் கூறி, அதையே காலையில் தலைவர் திரு. சக்கரவர்த்தி நயினார் அவர்கள் ஒப்புக்கொண்டமை. தான் நடந்துகொண்ட வகையே சாலச் சிறப்புடைத்து என்பதைத் தெரிந்து கொண்டதாகவும், மனிதன் ஒவ்வொருவனும் தன் வாழ்வுக்குத் தானே எஜமானன் என்பதை உள்ளபடி உணர்ந்து செயலாற்றி வருதலே நன்மை பயக்கத்தக்கது என்றும், தன்னறிவு தனக்கு காட்டிக்கொடுக்கும் வரை சற்று தாமதம் ஏற்படினும், பொறுத்திருந்தே பார்த்து நடத்தலே மேலானது என்றும், அதனால் சற்று சங்கடம் ஏற்படினும், அதனால் கேடொன்றும் நேர்ந்து விடாதென்றும், இன்று திருக்குறளை தாம் புகழ்ந்து கூறுவதற்கும் தம்முடைய கருத்துக்கள் அதில்  காணப்படுவதால்தானே ஒழிய, அது வள்ளுவரால் கூறப்பட்டது என்பதற்காகவோ அல்லது அதில் கூறப்பட்டுள்ளது யாவுமே பகுத்தறிவுக்கு ஏற்றது என்ற கருத்தினாலுமோ அல்ல என்றும், அதில் தம் முன்னேற்றக் கருத்துக்கு ஒவ்வாதன இருப்பின் அவற்றை விலக்க, தாம் எப்போதும் தயங்கப் போவதில்லை என்றும் தெரிவித்துக் கொண்டார்.

குறளும் சுயமரியாதையும்

மேலும், அவர் பேசுகையில், திருக்குறளின் மேன்மை தம் அருமை நண்பர் பா.வே.மாணிக்க நாயக்கர் காலத்திலேயே தமக்கு ஓர் அளவுக்குப் புலப்பட்டது என்றாலும், இன்றைய நாள்வரை அதைப்பற்றி அதிகம் பேசாமல் இருந்தமைக்குக் காரணம், நீண்ட நாட்களாகவே நம்மிடையே ஆரியத்தால் புகுத்தப்பட்டு நம் வாழ்வைக் கெடுத்துக் கொண்டு வரும் கடவுள், மதம், இவை சம்பந்தப்பட்ட மூடநம்பிக்கைகள், அறவே ஒழிக்கப்படும் வரை திருக்குறளை மக்களிடையே பரப்புவதால் பயனில்லை என்பதை தெளிவாக உணர்ந்ததன் காரணத்தினால்தான் என்றும், இன்று சுயமரியாதைப் பிரச்சாரத்தால் மூடநம்பிக்கைகளும் ஆரிய மாயையும் பெரும் அளவுக்கு நீங்கி தாம் எடுத்துக் கூறும் சீர்திருத்த கருத்துகளை ஒப்புக்கொள்ளவும், அவற்றை மக்களிடையே பரப்பவும் போதுமான ஆதரவாளர்கள் ஏற்பட்டுவிட்டனர். நமது பிரச்சாரம் வெற்றி பெற்று விட்டது. ஆரியம் அழியும் காலம் மிக நெருக்கத்திற்கு வந்துவிட்டது என்பதை உள்ளபடி அறிந்த பிறகே அதைப் பரப்ப துணிவு கொண்டு மாநாட்டைக் கூட்டும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டார்.

குறளைக் கொண்டு வாழ்க்கையை நிர்ணயிப்போம்

மேலும் பேசுகையில், சமுதாயத்தின் ஒழுக்கமும் நாணயமும் மிகவும் கெட்டுவிட்ட தென்றும், மனிதனை மனிதன் வஞ்சித்து வாழும் கொடுமை மிக மிக மலிந்துவிட்டதென்றும், இத்தகைய ஒழுக்கக் கேட்டிற்குக் காரணமான கடவுளும் மதமும் மாற்றப்பட்டாக வேண்டுமென்றும் தெரிவித்துக்கொண்டதோடு, காந்தியார் வணங்கிய கடவுளும் போற்றிய அகிம்சையும், சத்தியமும், மதமும், அவருக்கே பயன்படாது போய்விட்டமை காரணமாக வேணும் இவ்வுண்மை மக்களுக்குப் புலப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

வள்ளுவர் - பொதுவுடைமைக்காரர்

மேலும், அவர் திருவள்ளுவர் காலம் பொது உடைமைக் காலமோ, சமதர்மக் காலமோ அல்ல. ஆனால் வள்ளுவர் சிறந்த பொது உடைமைக்காரராகவே விளங்குகிறார். அதனால்தான் நம் போற்றுதலுக்கு ஆளாகிறார் என்று குறிப்பிட்டுவிட்டு, இத்தகைய புனித சிறப்பு வாய்ந்த திருக்குறளை அனைவரும் போற்றி அதன்படி நடந்து நல்வாழ்வு வாழ வேண்டுமென்றும், நாட்டின் மூலை முடுக்குகள் தோறும்கூட திருவள்ளுவர் கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டு, திருக்குறள் கருத்துக்கள் பரப்பப்படவேண்டுமென்றும், ஆண்டுதோறும் இதுபோன்ற வள்ளுவர் மாகாண மாநாடுகளும், ஒவ்வொரு ஜில்லாவிலும் தனி மாநாடும் கூட்டப்பட வேண்டும் என்றும் கூறி, குறள் ஆரியத்தை ஒழிக்க ஒப்பற்ற நல்லாயுதம் என்றும், திருக்குறள் பிரச்சாரக் குழு ஒன்று அமைக்கப் பட்டு விரைவில் செயலாற்றத் துவங்குமென்றும், அதற்கான ஆதரவைப் பொது மக்கள் தந்துதவ வேண்டும் என்றும் கூறி, மாநாட்டில் கலந்து கொண்ட புலவர்களுக்கும் அறிஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் நம் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொண்டார்.

என்.எஸ்.கிருஷ்ணன்



அடுத்தபடியாகப் பேசிய நகைச்சுவை அரசு என்.எஸ்.கிருஷ்ணன், அவர்கள் குறளுக்கு தற்போது வழங்கிவரும் உரைகள் யாவும் சாதாரண மக்களுக்கு ஒரு சிறிதும் பயன்படாததாக இருக்கிறதென்றும் நல்லதோர் உரையை உண்டாக்கிக் கொடுப்பதற்கான முடிவு இம்மாநாட்டின் கண் ஏற்பட வேண்டுமென்றும் தெரிவித்துக் கொண்டு சில காங்கிரஸ் அறிவாளிகள் பெரியார் அவர்கள் வெறும் பெருமைக்காகவும், பதவிக்காகவும் பாடுபட்டு வருகிறார் என்று கூறி வருவதுபோல், தம்மால் வேறு எந்த அறிவுள்ள மகனாலோ கூற இயலாதென்றும், திராவிடன் தலைநிமிர்ந்து வாழ வேண்டும், மக்கள் யாவரும் மனிதத் தன்மை பெற்று மனிதர்களாக வாழவேண்டும் என்ற ஒரே கருத்தை உட்கொண்டுதான் பெரியார் அவர்கள் பெருந்தொண்டு ஆற்றி வருகிறார் என்றும், அவர் வாழ் நாளிலேயே அவர் அகமகிழ அவர் வழிப்படி நடந்து இன்பத் திராவிடத்தை உண்டாக்கித் தரவேண்டு மென்றும்கூறி இடுக்கண் வருங்கால் நகுக என்று குறளையும் எடுத்தோதி கஷ்ட நஷ்டம் பாராமல் பெரியார் வழி பின்பற்றி நடக்கவேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறினார்.

சி.என்.அண்ணாதுரை



 


பிறகு, அண்ணாதுரை அவர்கள் ஆண்டுக்கொருமுறை குறள் மாநாட்டைக் கூட்டவேண்டுமென்றும், குறளுக்கு நல்லதோர் உரைகாண ஒரு குழுவை நியமித்து இன்றைய நடப்புக்கேற்ப ஓர் நல்லுரை உண்டாக்கித் தர ஒரு செயற்குழு அமைக்கப்பட வேண்டு மென்றும், அச்செயற்குழுவுக்கு திரு.வி.க. அவர்களைத் தலைவராக இருக்கவும், திருக்குறள் முனுசாமி அவர்களைத் செயலாளராக இருக்கவும், தோழர்கள் நெடுஞ்செழியன், கா.அப்பாதுரை, புலவர் இலக்குவனார் ஆகியவர்களை அங்கத்தினர் களாக இருக்குமாறு கேட்டுக்கொண்டும், அவர்களும் மேலும் சிலரையும் சேர்த்துக் கொள்ள அதிகாரம் அளித்தும் மூன்று தீர்மானங்களைப் பிரேரேபிக்குமுகத்தான், மக்கள் வாழ்வு நலிந்திருக்கக் கண்ட பெரியார், அவர்தம் வாழ்வை நலப்படுத்த நூல்கள் பல தேடிப் பார்த்தபோது தான்கண்ட பாரதம், பாகவதம், பகவத்கீதை, இராமாயணங்கள், வேதங்கள், உபநிஷத்துக்கள் இவை யாவும் பல கேடுகளைத் தம்மிடத்தே கொண்டு ஆரிய பிரச்சாரத்தால் புரட்டுகள் வெளித்தோன்றாமல் இருந்து வருபவைகள், திராவிடர் வாழ்வுக்கு உண்மையில் பெரிதும் கேடு செய்து வருபவைகள் இவைகளே என்று கண்டுதான் இதுகாறும் அவற்றிலுள்ள புரட்டுகளை எடுத்தோதி வந்து இன்று மக்களுக்கு அவற்றின் மீதுள்ள பற்றுதல் வெகுவாகக் குறைந்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் திருக்குறள் என்ற ஒப்பற்ற நீதி நூலை மாநாடு கூட்டித் திராவிடர்களுக்கும் _- எல்லா தமிழர்களுக்கும் தருகிறார் என்று குறிப்பிட்டார்.  மேலும், இனி திராவிடன் ஒவ்வொருவன் கையிலும் குறள் எப்போதும் இருத்தல் வேண்டுமென்றும், திராவிடன் கையில் குறளிருப்பதை பகவத்கீதை ஏந்தித் திரியும் பார்ப் பனர்கள் காண்பார்களாயின் பார்ப்பனியம் படுகுழியில் புதைக்கப்படப் போவது நிச்சயம் என்பதை உணர்ந்து, நமக்கும் மேலாக திருக்குறளைப் போற்றிப் புகழ முற்படுவதோடு அல்லாமல், தம் அகம்பாவத்தையும் மூட நம்பிக்கைகளையும்  கைவிட்டேயாக வேண்டும் என்ற தீர்மானத்திற்கு வந்து விடுவார்கள் என்று கூறினார்.

நல்லதோர் செயல் திட்டம்

தளபதி அண்ணாதுரை மேலும் பேசுகையில், பெரியார் இம்மாநாட்டின் மூலம் நல்லதோர் செயல் திட்டத்தைத் தருகிறார் என்றும், அவர் கொடுத்த எத்திட்டத்தையும் இதுவரை  கைவிட்டறியாத நாம், பெரியார் ஓர் நல்லுழவர் என்பதை நன்குணர்ந்துள்ள நல்ல பண்ணையாளர்களாகிய நாம், அவர்தம் முயற்சி வெற்றி பெற எல்லாவகையாலும் பாடுபடுவோம் என்றும், திருக்குறளை துணைக்கொண்டு நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், நம் வாழ்வைக் கெடுக்கவேண்டி ஆரியம் நம் பாதையில் வெட்டியுள்ள படுமோசப் படுகுழிகள் யாவும் நம் அறிவுக் கண்களுக்குத் தெற்றெனப் புலப்படும் என்றும், கம்பருக்குத் திருவிழாக் கொண்டாடும் புன்மதியாளர் காது செவிடுபடும்படி திருக்குறள் இனி ஓதப்படும் என்றும், விரைவில் வெற்றிமுரசு கொட்டி நமது பெரும்படைப் போர் பல நடத்தி நற்பயிற்சி பெற்றுள்ள நம் பெரும்படை, ஒவ்வொரு போரிலும் வெற்றியே கண்ட நம் பெரும்படை திக்கெங்கணும் புறப்படும் என்றும், வெற்றி கொண்டு பெரியாரின் பேரிதயம் மகிழ செயலாற்றும் என்றும் சூளுரை கூறி தம் சொற்பொழிவை முடித்தார்.
தீர்மானங்கள் யாவும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு தலைவரின் சுருக்கமான முடிவுரையுடன் கூட்டம் இனிது கலைந்தது.

- உண்மை இதழ், 1-15.5.18