வெள்ளி, 30 மார்ச், 2018

வடநாட்டுக் கடவுள்கள்


02.09.1928- குடிஅரசிலிருந்து....

கடவுள்கள் என்பது ஒவ்வொரு நாட்டுக்கொவ்வொரு விதமாகவும், ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விதமாகவும் இருந்து வருகின்றன. சாதாரணமாய் இந்தியாவிற்கே பிரதான புண்ணிய பூமிகளான காசி, ஜகநாதம், பண்டரிபுரம் முதலிய க்ஷேத்திரங்களிலுள்ள சாமி கோவில் களில் யார் வேண்டுமானாலும் உள்ளே சென்று சாமியைத் தொட்டு பூசை செய்யவும் கட்டி அழுது தனது குறைகளைச் சொல்லிக் கொள்ளவும் உரிமைபெற்ற சாமிகளாகவே இருக்கின்றன.

ஆனால் தென்னாட்டிலோ அதே சாமிகளைத் தொடாத போதிலும் கிட்டப் போய் கும்பிட்டாலும் உடனே அச்சாமிகள் செத்துப் போய்விடுகின்றன. ஆனால் பார்ப்பானுக்குப் பணமும் சோறும் கொடுத்தால் மறுபடியும் அவைகள் உயிர்பெற்று விடுகின்றன. எனவே நமது தென்னாட்டுச் சாமிகளின் சக்திகள் கூட நமது பார்ப்பனர்களிடம் எவ்வளவு அடிமைப்பட்டுக் கிடக்கின்றன என்பது கவனிப்பவர்களுக்கு விளங்காமல் போகாது.

இப்போது மத்திய மாகாணத்தில் வார்தாவென்னுமிடத்தில் உள்ள சாமிகள் காசி முதலியவைகளிலுள்ள சாமிகளைப் போலவே தங்கள் சக்தியை பிராமணனிடமிருந்து விடுதலை செய்து கொண்டதாகத் தெரியவருகின்றது.

அதாவது, வார்தாவில் உள்ள லட்சுமி நாராயணசாமி கோவிலுக்குள் தீண்டாதவர்கள் எனப்படுபவர்கள் போய் கும்பிடலாம் என்று அங்குள்ள மக்கள் தீர்மானித்து அந்தப்படியே இந்த ஒரு வாரமாக எல்லோரும் உள்ளே போய் கும்பிட்டு வருகிறார்களாம்.

இதுவரை அந்தக் கோவிலில் உள்ள ஒரு சாமி கூட சாகவில்லையாம். இன்னும் சில இடங்களிலும் இது போலவே நடைபெற்று வருகின்றதாம்.

ஆனால் நம் தென்னாட்டு சாமிகளுக்கு மாத்திரம் பார்ப்பனர்கள் கையி லிருந்து தப்பிக்க இன்னும் சக்தியேற்படவில்லை என்கின்றதானது நமக்கு மிகவும் வெட்கக் கேடான காரியமாய் தோன்றுகிறது.

கடவுள் நெறியையும், கடவுள் தன்மையையும் ராமசாமி நாயக்கனும் சுயமரியாதைக் கூட்டத்தாரும் பாழாக்குகின்றார்கள் என்று சொல்லு வதற்கு மாத்திரம் நமது நாட்டில் ஆட்கள் ஏராளமாய் இருக்கின் றார்களேயொழிய மற்றபடி இக்கூட்டத்தாருக்கு பார்ப்பானைத் தவிர கடவுள்களின் கோவிலுக்குள்ளே மற்றவர் போனாலும் அதைத் தொட்டாலும் கடவுள் செத்துப் போவார் என்கின்ற கொள்கை கடவுள் தன்மைக்கும் கடவுள் நெறிக்கும் ஏற்றதா என்பதை ஒருவராவது கவனிக்கின்றாரா என்று பார்த்தால் அடியோடு இல்லையென்றே தான் சொல்ல வேண்டியிருக்கின்றது.

இனியாவது நமது தென்னாட்டுக் கோவில்களின் நிர்வாகிகள் கவனித்து தங்கள் தங்கள் நிர்வாகத்திலுள்ள கோவில்களில் இருக்கும் கடவுள்களை பார்ப்பன அடிமைத்தனத்திலிருந்து வடநாட்டு சாமி களைப் போல விலக்கி சுதந்திரமுள்ள சாமிகளாகவும்  எல்லோருக்கும் சமமான சாமிகளாகவும்  இருக்கத்தக்கதான நிலையில் இருக்கும்படி செய்வார்களா? என்று கேட்டுக்கொள்கின்றோம்.

 

வாழ்வில் உள்ள தேவைகள், ஏற்பாடுகள், ஆசா பாசங்கள் இவைகளுக்குத் தகுந்தாற்போல் மொழி வேண்டும். கட்டை வண்டியில் இருந்து ஆகாய விமானத்திற்குப் போய் விட்டோம். அதற்கு ஏற்ற மொழி வேண்டாமா? தமிழ்மொழி உயர்வுதான், எந்த அளவில்? தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில். ஆனால், அதுதான் முடிந்த மொழி என்பதாக முடிவு செய்ய முடியுமா? 
- தந்தைபெரியார்

- விடுதலை நாளேடு, 30.3.18

இந்துமதப் பிரச்சாரம்

15.04.1928-  குடிஅரசிலிருந்து...

இந்து மதம் என்பது ஒரு போலி மதம் என்றும், ஒரு கொள்கையும் அற்றதென்றும், பார்ப்பனர்களின் வாழ் வுக்கும் வயிற்றுப் பிழைப்புக்குமே கடவுளின் பெயராலும், முனிகள் பெயராலும், ரிஷிகள் பெயராலும் பல ஆபாசங் களையும் சுயநலக் கொள்கை களையும் கற்பனை செய்து அவற்றைப் பாமர மக்கள் நம்பும்படி பல மிரட்டுதலான நிபந்தனைகளை ஏற்பாடு செய்து அவைகள் நிலைப் பதற்குத் தகுந்த தந்திரங்களும் சூழ்ச்சிகளும் செய்து வருகிறார்கள் என்றும் அதை அறி யாமல் பல தமிழ் மக்களும் சைவம் என்றும் வைணவ மென்றும் அர்த்தமற்ற சில கடவுள் களின் பேரால் சமயங்கள் என்பதாக வகுத்துக் கொண்டு சிவன், விஷ்ணு என்னும் பெயர்கள் உடைய பல கடவுள்கள் இருப்பதாகவும் அவர்கள் பல ரூபங் களாகவும், பல அவதாரங் களாகவும் இருப்பதாகவும், அவற்றை வணங் குவதும், துதிபாடுவதுமே சைவ வைணவ கொள்கையென்றும் வைத்துக் கொண்டு அதன் மூலம் பார்ப்பனர்கள் சூழ்ச்சிக்கு இடம் கொடுத்து வரப்படுகின்றது என்றும் நாம் பல தடவைகளில் பேசியும் எழுதியும் வந்திருக் கின்றோம். இதுவரையில் நம் நாட்டில் இதைப் பற்றித் தக்க காரணம் காட்டி மறுத்தோஅல்லது சமாதான மோ யோக்கியமான வழியில் சொல்லவோ எழுதவோ இல்லை.

ஆனால் குருட்டு நம்பிக்கையிலும் மூட வழக்கங் களிலும் பலமாக கட்டுப் பட்ட சிலரும், மதத்தின் பேராலும் சமயத்தின் பேரா லுமே தங்கள் வாழ்க்கையை நிலை நிறுத்திக் கொண்ட சிலரும் கொஞ்சமாவது தங்கள் பகுத்தறிவை உபயோ கிக்காமலும் பொது ஜனங்களுக்கு என்ன சமாதானம் சொல்லுவது, எப்படி மெய்ப்பிப்பது என்பதைப் பற்றி கவலைப்படாமலும் பார்ப்பனர்கள் தங்கள் கற்பனைப் புரட்டுகளை நிலைநிறுத்த ஏற் படுத்தி வைத்துக் கொண்டிருப்பதான நாஸ்திக மாச்சுது மதம் போச்சுது கலிகாலத்தின் கொடுமை என்கின்ற யோக்கிய மற்றதும், வஞ்சகமும், கொடுமையும் நிறைந்ததுமான ஆயு தங்களை உபயோகித்து ஏமாற்றப் பார்க்கின் றார்களே ஒழிய ஒரு வழியிலாவது சரிப்பட்டு வருகின்றதில்லை. சமீபகாலமாக சில சைவர் கள் என்போர்கள் நம்மைப்பற்றி காணாத இடங்களில் சைவத்திற்கு பெரிய ஆபத்து வந்துவிட்டது எல்லோரும் உஷார் உஷார் என்பதும் ஏதாவது அர்த்தமற்றதும் பாமரர் களுள் ஏமாறத்தக்கது மான வார்த்தைகளை அடுக்கித் துண்டு விளம்பரங்கள் போடுவதும் அதை சில வயிற்றுப் பிழைப்பு பத்திரி கைகளும் தனக்கென யாதொரு கொள்கை யுமற்ற சமயம் போல் நடந்து உயிர் வாழ் வையே முக்கியப் பிழைப்பாய்க் கொண்டிருக் கும் பத்திரிகைகளும் ஆசாமிகளும் நாயக்கர் பிரச்சாரம், என்று விஷமத் தலைப்பின்கீழ் எடுத்துப் போடுவதும் மற்றும் தாங்களே தங்கள்பேரால் எழுதுவ தற்குத் தைரியமற்று ஏதோ பல அனாமதேயங்களின் பேரால் நாயக்கர் மதத்தை அழிக்கப் பார்க்கின்றார், நாஸ் திகத்தை பிரச்சாரம் செய்கின்றார் என்கின்ற மாதிரி எழுதுவதுமான காரியங்கள் நடந்து வருகின்றது.

நிற்க, சிவனைப் பற்றியும் சிவனைக் கடவு ளாகக் கொண்ட சைவ சமய ஆதாரங்களான பல புராணங்களைப் பற்றியும் அதில் உள்ள புரட்டுகளைப் பற்றியும் அது போலவே விஷ் ணுவைப் பற்றியும் விஷ்ணுவைக் கடவுளாகக் கொண்ட வைணவ சமய ஆதாரங்களான பல புராணங்களைப் பற்றியும் நாம் குறிப்பிடும் விஷயங்களைப் பற்றி மததூஷணை தெய்வ நிந்தனை என்று பேசிவிட்டு எழுதிவிட்டு தங்கள் தங்கள் சமயத்தைப் பற்றி பேசும் போதும் அதைப் பெருமைப்படுத்தி நினைக் கும் போதும் சைவன் வைஷ்ணவத்தையும் விஷ்ணுவையும், வைண வன் சைவத்தையும் சிவனையும் எவ்வளவு தூரம் இகழ்ந்தும், இழிவாயும் ஆபாசமாயும் வேதத்தின் பேராலும் உபநிடதத்தின் பேராலும் புராணங்களின் பேராலும் எழுதியும் பேசியும் வருகின்றார்கள் என்பதைப் பார்ப்போ மானால் இது வரை நாம் பேசியும் எழுதியும் வந்தது அவற் றில் பதினாயிரத்தில் ஒருபங்குகூட இருக்காது என்றே சொல்லுவோம். உதாரணமாக, சிவ பராக்கிரமம் என்னும் புத்தகமும், கூரேச விஜயம் என்னும் புத்தகமும், ராமாயணம், பாரதம், பாகவதம், விஷ்ணு புராணம், கந்த புராணம், பெரியபுராணம், திருவிளையாடல் புராணம், அருணாசல புராணம், விநாயக புராணம் என்னும் சமய புராணங்களும் ஆகியவைகளை நடுநிலையில் இருந்து படித்துப்பார்ப்பவர் களுக்கு இதன் உண் மைகள் விளங்காமல் போகாது. நாம் சொல் வதும் எழுதுவதும் ஒவ்வொன்றும் மேற்கண்ட சமய ஆதாரங்களாகி பல புத்தகத்தில் சிவன் சொன்னதாகவும், விஷ்ணு சொன்னதாகவும், பிரம்மா சொன்னதாகவும், முனி சொன்ன தாகவும் ரிஷி சொன்னதாகவும் உள்ள விஷயங் களையே குறிப்பு காட்டி எழுதியும் சொல்லியும் வருகின்ற தோடல்லாமல் நம்மை எதிர்க்கும் சில புரட்டர்கள் சொல் வதுபோல் அதற்கு இதல்ல அருத்தம் இது சையன்சுக்குப் பொருத்தம் இது படியாத முட்டாளின் கருத்து இது குண்டர் களின் வேலை ஆராய்ச்சியில்லாதவர்களின் கூற்று என்பதான அயோக்கியத்தனமும், போக்கிரித்தனமும், பேடித்த னமும், இழிதகைமையும் பொருந்தியதான சமாதானங்களை ஒருபோதும் சொல்ல முன் வருவதே இல்லை.

அன்றியும் நாம் சொல்லும் விஷயங்களைச் சமயத்தைக் காக்க வந்ததாகச் சொல்லிக் கொள்ளும் வைணவ சைவ பக்தர்கள் சொல் லுவதையும் எடுத்து இரண்டொரு உதார ணங்கள் காட்டுவோம்.

தற்சமயம் நமது பிரச்சாரத்தைப் பற்றி வைணவர்களை விட சைவர்களுக்குத் தான் அதிக ஆத்திரமாக இருக் கின்றது. அவர் களுக்குத்தான் எங்கு அவர்கள் சைவசமயம் போய்விடுமோ என்கின்ற பயம் அதிகமாய்ப் பிடித்து ஆட்டி மதம் போச்சு மதம் போச்சு என்கின்ற பொய்யழுகை அழுகின்றார்கள். அவர்கள் தான் நாம் மிகுதியும் சமய நிந்தனை செய்வதாக கூப்பாடு போடுகின்றார்கள். வைண வர்களில் பெரும்பான்மையோர் இதைப் பற்றி அதிக கவலை எடுத்துக் கொண் டதாகத் தெரியவில்லை. ஒரு சமயம் நம்மை எதிர்க்கத்தக்க ஆதாரங்களைத் தேடிக் கொண்டிருந்தாலும் இருக்கலாம். ஆனாலும் இப்போது வெளிப்படையாய் ஒன்றையும் காணோம்.. சமீபத்தில் வைணவன் என்கின்ற ஒரு பத்திரிகை நம்மைப் பற்றி குற்றம் சொல்லப் புறப்படுகையில் ராமாயணத்தைப் பற்றி நாம் எழுதியவைகளில் தனக்குச் சற்று மனத்தாங்கல் இருப் பதை மாத்திரம் காட்டிக் கொண்டதே ஒழிய அது சரியா தப்பா அல்லது பொய்யா என்பதைப்பற்றி ஒரு வார்த்தையும் சொல்ல முன்வர (இஷ்டமில்லையோ அல்லது தனக்குச் சக்தி இல்லையோ) வில்லை. ஆனால் கடைசியாக அப்பத்திரிகை சொன்ன சமாதானம் என்ன வென்றால் இராமாயணத்தைக் காட்டிலும், பன்மடங்கு ஆபாசமான நூல்கள் பல இருக்கின்றன என்றும், இராமனைக் காட்டிலும் ஆபாசமான நடை உடைய கடவுளர் பல இருக்கிறார்கள். அவ்வாபாசங்களைக் குறித்து இவ்வாராய்ச்சிக் காரர் ஒரு வார்த்தையேனும் கூற முன்வரவில்லை. இராமாயணம் மட்டும் இவர்கள் கண்களில் உறுத்திக் கொண்டிருக்க காரணம் என்ன என்று கேட்டு இருக்கிறாரே ஒழிய மற்றபடி ஒருமறுப்பும் சமாதானமும் காணவில்லை. அதற்கு நாம் அவருக்குச் சொல்லும் பதில் மற்ற நூல்களுடையவும், கடவுள்களுடையவும் ஆபாசங்கள் அதனதன் முறையில் தானாக வெளிவரும்.  இதிகாசங்கள் என்கின்ற தலைப்பு இராமாயணத்திற்கு மாத்திரம் ஏற்பட்டதல்ல. வரிசைக் கிரமமாய் எல்லா ஆபாசங்களுக்கும் ஏற்பட்டது என்பதும் இராமா யணத்தை முதலில் எடுத்துக் கொண்டதற்குக் காரணம் அதை பார்ப் பனர்கள் அதிகமாக நமது மக்களின் தலையில் சுமத்தி தினமும் அதற்காக அனேக நேரமும், பொருளும் செலவாவதும் அதனால் பார்ப்பனர்கள் கொள்ளையடிப்பதும் அதிகமாயிருப்பதினால் அதை முதலில் எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதுந்தான்.
- விடுதலை நாளேடு, 30.3.18

புதன், 28 மார்ச், 2018

காமராஜரின் சமதர்மம் என்பதே பார்ப்பனக் கொலை தர்மம் என்பதுதான்

தந்தை பெரியார்டில்லியில் காமராஜர் தங்கி இருந்த வீட்டுக்கு நெருப்பு வைத்து விட்டார்கள், பார்ப்பனர்கள்! ஏன் இப்படிச் சொல்லுகின்றேன் என்றால் நெருப்பு வைத்த நாளில் சிருங்கேரி சங்கராச்சாரி, பூரி சங்கராச்சாரி முதலிய பார்ப்பன சமுதாயத் தலைவர்கள் டில்லியில் இருந்து இருக்கின்றார்கள்; தவிரவும் சன்னியாசிகள் (சாதுக்கள்) என்னும் பேரால் ஆயிரக்கணக்கான பார்ப்பனர்கள் பல பாகங்களிலுமிருந்து அன்று டில்லிக்கு வந்து இருக்கின்றார்கள். ஏன் இந்த சன்னியாசிகளை பார்ப்பனர்கள் என்கின்றேன் என்றால், பார்ப்பனர் அல்லாத (சூத்திர) ஜாதிக்கு சன்னியாசம் கொள்ள உரிமை இல்லை. அவனை சாதுவென்றோ, சன்னியாசி என்றோ சொல்ல மாட்டார்கள்.

ஆகவே அன்றைய கலவரத்துக்கு, காலித் தனத்துக்கு நேரடியாக சம்பந்தப்பட்டவர்களும், தூண்டிவிட்டவர்களும், ஆதாரமாக இருந்தவர் களும், தலைமை வகித்தவர்களும் பார்ப்பனர்கள் தவிர, மததர்ம சம்பிரதாயங்களில் பார்ப்பனர் களுக்கு சீடர்களாக இருந்தவர்களும் தான் காரணஸ்தர்கள் ஆவார்கள் என்ற உறுதியால் தான் சொல்லுகின்றேன். மற்றும் இராஜாஜி எலெக் ஷனுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியை ஒழித்தாக வேண்டும் என்றும், எந்த அதர்மத்தைச் செய்தாவது ஒழித்தாக வேண்டும் என்பதாகச் சொன்னதும், அகிம்சையைக் கடைபிடிக்க வேண்டியதில்லை என்பதாகப் பேசியதும் எனது உறுதிக்கு ஆதாரம் ஆகும்.

வருணாசிரம தர்மத்தை ஒழித்ததை எதிர்க்கவே இக்கலவரம்

பசுவதைத் தடுத்தல் என்பது ஒரு பொய்யான காரணமேயாகும். உண்மைக் காரணம் பார்ப்பன ருடைய வருணாசிரம தர்மத்துக்குக் கேடுவந்து விட்டது என்பது ஒன்றேதான். அந்தக் கேட்டை உண்டாக்கினது. காமராஜர் என்கின்ற ஒரே காரணம் தான் காமராஜர் இருந்த வீட்டுக்கு நெருப்பு வைக்க முக்கியமான காரணமாகும். பார்ப்பானுக்கு மாட்டுக் கொலையைப் பற்றி அக்கறை இருக்கின்றது என்பது அப்துல்காதர் ஆடி அமாவாசை அன்று தன் தகப்பனாருக்கு தர்ப்பணம் கொடுத்தார் என்பது போன்ற கதையே யாகும். இந்த சாதுக்கள், சங்கராச்சாரியார்கள், மற்றும் சர்வ பார்ப்பனர்களுக்கும் முன்னோர் களாகிய ரிஷிகள், முனிவர்கள், மகான்கள், தேவர்கள், இராமன், கிருஷ் ணன் முதலிய எல்லா ஆரியர்களுக்கும் மாடு தான் முக்கிய ஆகாரமாய் இருந்திருக்கின்றது! இவ்வுண்மை இன்றும் மனு தர்ம சாஸ்திரத்தில், பார்ப்பன தர்மமாய் இருந்து வருகின்றது.

உலகில் உள்ள மக்கள் 100-க்கு 100 பேர் மாட்டின் பாலைக் குடிப்பதும், மாட்டு உழைப்பைப் பயன்படுத்திக் கொள்வதும் 100-க்கு 50 பேருக்கு மேலாக மாட்டு மாமிசம் உண்பதும், 100-க்கு 90 பேர் வேறு பல மாமிசம் உண்பவர்களாகவே இருந்து வருகின்றார்கள்.

இப்படிப்பட்ட மக்களுக்கு பசுவதைத் தடுப்பு உணர்ச்சி ஏற்பட்டது என்றால், இதை எந்த மடையன் தான் உண்மை என்று நம்புவான்? எப்படி அது யோக்கியமான காரியமாய் இருக்க முடியும்? காமராசர் பார்ப்பனரைவதை செய்யும் காரியத்தை உண்டாக்கியவர். அதுதான் சமதர்மம் என்பது. காமராஜரின் சமதர்மம் என்பதே பார்ப்பனக் கொலை தர்மம் என்பதுதான் தத்துவார்த்தமாகும்.

காமராஜர் சமதர்மத்தில் எல்லோருக்கும் படிப்பு, எல்லோருக்கும் வீடு, எல்லோருக்கும் வேலை, எல்லோருக்கும் உணவு, எல்லோருக்கும் சம அந்தஸ்து ஏற்பட்டுவிடும். பிறகு இதில் மனித பேதம் எப்படி இருக்க முடியும்? மனித பேதம் தானே பார்ப்பனியம் என்பது.

முற்றிலும் பார்ப்பனர் - ஆதரவாளர் செய்த சதியே!

ஆகவே இதனால்தான் இந்த பார்ப்பனியக் கலவரத்துக்கும், காலித்தனத்திற்கும் பார்ப்பன குருமார்கள், பார்ப்பன சாதுக்கள், பார்ப்பன அதிகாரிகள், பார்ப்பனர்கள், பார்ப்பனப் பத்திரி கைக்காரர்கள், பார்ப்பன தர்மிகள் காரணமாக, காரிய சித்தர்களாக இருந்திருக்கின்றார்கள் என்பதோடு, பிர்லா, பஜாஜ், டாட்டா முதலிய செல்வர்கள் பலபேர்கள் கூட்டமும், மற்றும் சொல்ல வேண்டுமானால் நந்தாக்கள் முதலிய மந்திரிகள் கூட்டமும் உடந்தையாயும் ஆதர வாளர்களாகவும் இருந்திருக்கின்றார்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

நேரு தங்கைக்கும், மற்றும் நேரு ஜாதிக்கும் இந்த சமதர்மம் எதிர்க்கப்பட வேண்டி யதாகவே இருந்து வந்திருக்கின்றது. மற்றும் நந்தாக்கூட்டம் பெரிய அழுக்கு மூட்டைக் கூட்டமாகும். இந்திய பிரதமர் தேர்தலுக்கு நடந்த போட்டியில் ஒருவராக நிற்க முனைந்தவர் நந்தா! அதுவும் ஒரு பிரபல ஜோசியர் கட்டளைப்படி நின்றவர். தேதி மாற்றத்தால் விலகிக் கெண்டவர்! இப்படிப் பட்ட அவர் எப்படி சமதர்மத்துக்கு உடந்தையாக இருக்க முடியும்? எனவே, டெல்லி கலவரமும், காலித்தனமும் பார்ப்பனரின் மனுதர்மத்துக்கும் காமராஜரின் மனித(சம) தர்மத்திற்கும் ஏற்பட்டு நடந்துவரும் பலாத்காரப் போராட்டங்களில் ஒன்றேயாகும். எல்லாப் போராட்டங்களையும், கலவரத் தையும், காலித்தனங்களையும் விட நேற்று நடந்த டில்லி போராட்டத்தின் குறிப்பிடத் தகுந்த முக்கியம் என்னவென்றால்; காமராஜர் தங்கி இருந்த வீட்டை காமராஜர் உள்ளே இருந்து தூங்கிக் கெண்டு இருக்கும்போது நாலுபுறமும் சூழ்ந்து கொண்டு நாலு புறத்திலிருந்தும் நெருப்பு வைத்துக் கொளுத்தினதுதான் முக்கியமாக குறித்துக் கொள்ளதக்கதான சம்பவமாகும். இந்தச் செய்கை காலிக்கூட்டத்தினரால் இலக்கு வைத்துத் திட்டமிட்டு நடத்திய செய்கையாக இருக்க முடியாது, பார்ப்பன சங்கராச்சாரியார்கள் பலரும், சாதுக்களும், ஆனந்தாக்களும், பிர்லாக் களும், பஜாஜ், டாட்டாக்களும் அழுக்கு மூட்டை நந்தாக்களும் கூடி, கலகம் நடத்திட திட்டமிட்டு, பல லட்ச ரூபாய் உதவி, பல அதிகாரி களைச் சரிப்படுத்திக் கொண்டு நடத்திய சதித் திட்டமேயாகும்.

போலீஸ் 7-8 பேர்களை சுட்டது என்றால், ஏதோ அனாமதேயக் காலிகளைத் தான் சுட்டு இருக்குமே ஒழிய மேற்கண்ட கூட்டத்தினரில் ஒரு வரைக்கூட சுடவில்லை. சுட நினைக்கவும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நான் 3ஆம் தேதி எழுதி 4ஆம் தேதி சென்னைக்கு பதிப்பிக்க அனுப்பிய, விடுதலை பெயர்போட்டு 6ஆம் தேதி எழுதிய சாதிப்பிரிவுகள் என்ற தலையங்கத்தின் நல்லவண்ணம் விளக்கிக் கூறி இருக்கின்றேன்.

அதில் இனி நடக்க வேண்டியது மந்திரி களைக் கொல்ல வேண்டியது தான் என்று எழுதி இருக்கின்றேன், ஆனால் டில்லி செய்கை மந்திரி களைக் கொல்லுவதாய் இல்லை.

மந்திரிகள் பல மாகாணங்களில் இச் செய்கை களுக்கு ஆதரவானவர்களாக இருக்க நேர்ந்து விட்டதால் (காங்கிரஸ்) தலைவரையே கொல்லத் திட்டமிட்டு அவர் இருந்த வீட்டில் தூங்கிக் கொண்டு இருக்கும்போது வீட்டைச் சுற்றி 4 புறத்திலும் நெருப்பு வைக்கச் செய்து விட் டார்கள், காமராஜர் தங்கியிருந்த வீட்டிற்கு புழக்கடைப்பக்கம் வெளியேற ஒரு வழி இல்லாதிருந்தால் காமராஜரின் கதி அன்று என்ன ஆகி இருக்கும்?

நாடெங்கும் கலவரம் பரவும் ஆபத்து

இனி இது தேசத் தலைநகரில் மாத்திரம் அல்லாமல் மாகாணங்கள் முழுவதிலும் இக் கொலை, நெருப்பு வைத்தல் காரியங்கள் பரவும் என்பதிலும் ஆட்சேபணை இல்லை. இன்று பல மாகாண ஆட்சித் தலைவர்கள், பார்ப்பன அடிமைகள் வருணாசிரமக் காவலர்கள், சமதர்ம விரோதிகள் என்று சொல்லும்படியாகவே அமைந்து விட்டார்கள்! ஆதலால் இந்த மாடல் டில்லிக் காலித்தனங்கள் இனி எல்லா மாகாணங் களிலும் ஏற்பட்டே தீரும்; பலவற்றில் ஏற்பட்டே விட்டதே!

அதாவது பார்ப்பன எதிரிகள், பார்ப்பனரின் எதிரிக் கட்சித் தலைவர்கள் என்பவர்களைக் கொல்லவும் அவர்கள் வீட்டையும் நெருப்பு வைத்துக் கொளுத்தவுமான நிலை ஏற்படலாம். அவற்றிற்கு அரசாங்கம் பாதுகாப்பும் அதற்கு ஏற்ற அளவில் தான் இருந்து வரும். எதிர்க் கட்சிக்காரர்கள் (பார்ப்பன அடிமைக்கட்சிக் காரர்கள்) இப்போதே அடிக்கல் நாட்டிக் கொண்டு விட்டார்கள். அதுதான் அண்ணாதுரையைத் தாக்கினார்கள் என்பது போன்ற கற்பனைகளாகும்.

தமிழ்நாட்டு ஆட்சி அமைப்பை மாற் றாவிட்டால் காமராஜருக்கு பாதுகாப்பு ஏற்பட்டு விடுமே என்றுதான் கருதுகின்றனர். என்னைப் பற்றி கவலை இல்லை, எனக்கு ஒரு கால் நாட் டிலும், ஒரு கால் சுடு காட்டிலும் என்ற பருவத்தில் இருக்கின்றேன். ஆதலால் என்னைப் பற்றிக் கவலை இல்லை.

நாட்டின் இரட்சகர் காமராசர் இன்றேல், நாதியற்ற நிலைதானே?

காமராசர் இன்று இந்த நாட்டுக்கு இரட்சகராக இருக்கின்றார். அதனால் தான் பார்ப்பனர்களும், பார்ப்பன அடிமைகளும் காமராசர் மீது கண் வைத்து இருக்கின்றார்கள் - அவர் வீட்டைக் கொளுத்தினார்கள்.

காமராசருக்கு ஏதாவது ஏற்பட்டால் அவருக்கு ஒன்றும் நட்டம் இல்லை. அவரது தாயார்கூட மயக்கம் வரும்வரை அழுவார்கள் அவ்வளவு தான். பிறகு நம்நாடு வருணாசிரம தர்ம நாடாகி விடும்!

அதுமாத்திரம் அல்ல, இன்றைய பார்ப்பனக் கூலிகளான காங்கிரஸ் எதிர்கட்சிகளுக்கு, தலைவர்களுக்கு, பலர்களுக்கும் நாதியற்ற நிலை ஏற்பட்டு விடும். பழைய கருப்பர்களாக ஆகி விடு வார்கள், பிறகு நாடு என்ன ஆகுமோ? எப்படி ஆகுமோ? எப்படியோ இருக்கட்டும்; இனி காமராஜர் தக்க பாதுகாப்புடன் இருக்க வேண்டும். பார்ப்பன எதிர்ப்புக் கட்சித் தோழர்கள் ஒவ்வொரு வருக்கும் 6 அங்குல நீளத்திற்குக் குறையாத கத்தி ஒன்றை தற்காப்புக்காக வைத்துக் கொண்டிருக்க வேண்டும். கண்டிப்பாக சீக்கியர்களது மததர்மம் போல், கத்தி வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

இந்த காரியம் காமராஜரைப் பாதுகாக்க அல்ல. நம்நாட்டில் உள்ள 3 கோடி கீழ்ச்சாதி (சூத்திரனை) மக்களை இழிவில் இருந்தும், அடிமை நிலையில் இருந்தும், படுகுழிப்பள்ளத்தில், இருந்தும் வெளி யாக்கிப் பாதுகாக்கவே ஆகும்.

நமது சரித்திரம் தெரிய, இந்த நாட்டில் காமராஜரைப் போல ஓர் இரட்சகர் இது வரை தோன்றியதே இல்லை. புராணங்களில் இரண்யர்கள், இராவணர்கள் தோற்றுவிக்கப்பட்டு இருக்கின்றார்கள், அவர்கள் எல்லாம் கொல்லப் பட்டதாக - பிரகலாதன், அனுமார், விபீடணன் களைக் கொன்று அழிக்கப்பட்டதாக எழுதி புராணங்களை முடித்திருக்கின்றார்கள்.

அந்தக்காலம் அப்படி; ஆனால் இந்தக் காலம் அதுபோன்ற புராண - சரித்திர காலம் அல்ல; உண்மை பிரத்யேக நடப்புக்காலம். இதில் அந்த வித்தைகளைப் பலிக்க விடக்கூடாது.

கத்தி வைத்துக்கொள்ளுங்கள்! காமராஜரை பாதுகாருங்கள்! மறுபடியும் எழுத இடம் வைத்துக் கொள்ளாதீர்கள். கண்டிப்பாய் கத்தி வைத்துக் கொள்ளுங்கள்! - காமராசர் கொலை முயற்சி சரித்திரம்  என்ற நூலிலிருந்து...
- விடுதலை நாளேடு, 25.3.18