சனி, 29 டிசம்பர், 2018

குழந்தைகளுடன் மணமக்கள் திருமணம் (3)

28.09.1930- குடிஅரசிலிருந்து...
சென்ற வாரத் தொடர்ச்சி...
அப்படிப்பட்ட பெண்கள்தான்; பெண்கள் நாயகம் என்று அழைக்கப்படத் தக்கவர்கள் ஆவதோடு பெண்கள் உலகத்திற்கும் பெரிய உபகாரம் செய்த வர்களாவார்கள். முக்கிய மாய் இதற்காக வேண்டியேதான் ஆத் மார்த்தம் தெய்வீகம் என்பவை களிலுள்ள புரட்டுகளை வெளியாக்கக் கட்டாயப் படுத்தப்படு கின்றோம். இது போலவே மண மகனும் தனக்குள்ள உணர்ச்சி, அவா, சுதந்திரம் ஆகிய காரியங்கள் எல்லாம் பெண் ணுக்கும் உண்டென்றும் தான் எவ்வளவு காரியம் பெண்ணிடம் எதிர்பார்க்கின்றோமோ அவ்வளவு காரியம் பெண்ணுக்கும் தன்னிடம் எதிர்பார்க்க முடியும் என்றும் கருதி அனு பவத்திலும் அதுபோலவே நடக்கவிட வேண் டும். தனக்கு அடிமைக் காக ஒரு பெண்ணை மணம் செய்து கொண்டோமென்கின்ற உணர்ச்சியை அடியோடு மறந்து விட வேண்டும்.
இந்த நாட்டில் பொதுவாக ஒழுக்கம் சீர்பட வேண்டுமானால் விபசாரம் என்னும் காரியத்தில் உள்ள கெடுதிகள் நீங்க வேண்டு மானால் விதவைத் தன்மையும், ஆண்களுக்கு விபசார தோஷமில்லை என்கின்ற நடப் பையும் ஒழித்தாக வேண்டும். இவை ஒழிந்தால் உண்மையான காதலின்பமும், வாழ்க்கையில் திருப்தியும், சாந்தியும், ஒழுக்கமும் கட்டாயம் ஏற்பட்டுவிடும்.
ஆகவே மேற்கண்ட இரண்டு காரியங் களே பெரிதும் மனிதத் தன்மைக் கும், இயற்கை இன்ப நுகர்ச்சிக்கும் இடையூறாய் இருந்து வருகின்றது. பெண் களைப் பெற் றோர்களும் ஒருவிஷயத்தை முக்கியமாய் கவனிக்க வேண்டும்.
அதாவது பெண்களுக்கும் 16 வயது வரை நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும். மனித இயற்கைக்கு விரோதமாக ஆணுக்கு ஒருவிதமும், பெண்ணுக்கு ஒரு விதமுமாக அடக்கத்தையும் அடிமை உணர்ச்சியையும் கற்றுக் கொடுக்கக்கூடாது. பெண் ணின் தாய்மார்கள் பெண்களை அவர்களின் மாமியார்கள் வீட்டுக்கு அடிமைக்காக அனுப்புவ தாய்க் கருதி, அதற்குத் தயார் செய்யும் வழக்கத் தைவிட்டுவிட வேண்டும். எந்தப் பெண்களையும் தான் ஆண்களுக்குக் கீழ்பட்ட ஒரு பெண் என்றும், தனக்கு ஆண்களைவிட சில அடிமை குணங்களோ, அடக்கக்  குணங்களோ வேண்டுமென்று கருதும்படி கற்றுக் கொடுக்கக் கூடாது. அநேகமாய்த் தானே தனக்கு வேண்டிய காதலனைத் தெரிந்தெடுத்துக் கொள்ள பெண் களைப் பழக்கப்படுத்த வேண்டும். இம்மாதிரியாகப் பழக்கினோமானால் பெண் கள் உலகம் தலைசிறந்து சுதந்திரம் பெற்று உலகத்திற்குப் பெருத்த உதவியாக இருக்கும்.
இப்பொழுது பெரும்பான்மையான தெய் வீகத் திருமணங்கள் என்பது வெறும் அடிமைத் திருமண மாகவும் பிறர் இஷ்டத்திற்கே முழுபொறுப்பும் விடப்பட்ட தாகவும், நிர்ப்பந்தத்திற்கும், ஒரு கட்டுப் பாட்டிற்கும் கட்டிக் கொண்டு எப்படி இருந் தாலும் சரிப்படுத்திக் கொள்ள வேண்டிய தாகவும் இருக்கின்றது. ஆகையால் அந்த முறைகளும் ஒழிய வேண்டும்.
இன்றையதினம் ஒரு குழந்தையுடனுள்ள ஒரு விதவைப் பெண்ணை மணம் செய்து கொள்ள ஏற்பட்டதால் பலர் விதவையா னாலும் குழந்தை இல்லாத விதவை கிடைக்க வில்லையா என்று சொல்ல வந்து விட்டார்கள்.
இதற்கு முன் பக்குவமான சாந்தி முகூர்த்த மான விதவையைக் கலியாணம் செய்தபோது பக்குவமாகாத விதவை கிடைக்கவில்லையா என்றார்கள்.
வேறு ஜாதியில் ஒரு விதவையைக் கல்யாணம் செய்து கொண்டபோது நமது ஜாதியிலேயே ஒரு விதவை இல்லையா என்றார்கள். ஆதலால் இவ்விஷயங்களில் நாம் பொது ஜன அபிப் பிராயத்தைக் கண்டு பயப்படக்கூடாது. நல்ல வார்த்தையில் மிதமான வழியில் செய்யப்படும் முயற்சி கைகூடவே கூடாது.
ஏனென்றால் நமது மக்கள் பெரிதும் பாமர மக்களாகவே வைக்கப் பட்டிருக்கிறார்கள். அடிமை களுக்கு லட் சணமே ஒரு சிறு மூட்டையைத் தூக்கச் சொன்னாலும் முடியாது போ, உன் வேலையை பார் என்றுதான்  சொல்வார்கள். ஆனால் டவாலியைக் கழற்றி இரண்டு கொடுத்தால் பெரிய மூட்டையாய் இருந் தாலுங் கூட தூக்குவதற்குள் என்னய்யா அவசரம் என்பார்கள்.
ஆகையால் நாட்டைப் புதுப்பிக்க வேண்டு மானால் அமிதமான கொள் கையில் போய்க் கொண்டே இருக்க வேண்டும். அப்போது ஒருபடி நமது பின்னாலேயே மக்கள் வந்து கொண்டி ருப்பார்கள் என்று பேசியவுடன் மணமக்கள் தங்கள் ஒப்பந்தம் சொல்லி மாலை மாற்றிய பின் திருமணம் முடிந்தது.
-விடுதலை நாளேடு, 29.12.18

உத்தரப்பிரதேசம் கான்பூரில் பெரியார் கொள்கைவழி நடந்தவர்களுக்கு "பெரியார் நெறியாளர் விருது!''

தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்வுகள்
(விகேக் திவஸ் சமாரோஹ்)
பகுத்தறிவு தின விழா
மேலே கண்ட விருதின் தமிழாக்கம் அருகே காண்க.
திரு..........................................
பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் 45 ஆம் ஆண்டு நினைவு விழா அர்ஜக் சங்கத்தின் சார்பில் பகுத்தறிவு தினவிழாவாக கொண்டாடப்படுகிறது,
இந்த ஆண்டு கான்பூரில் 25 டிசம்பர் 2018 செவ்வாய்கிழமை நண்பகல் 12 மணி முதல் 3 மணிவரை  ஷிரம்சீல் புத்தவிகார் பஞ்சஷீல் கல்வி அறக்கட்டளை, பெரியார் சாலை, கான்பூர் ஜிஜக், கான்பூர் புறநகர், உத்தரப்பிரதேசம் -  இங்கு நடைபெற்றது,
இதில் பெரியார் ராமசாமி காட்டிய வழியில் நடந்தவர்கள், அவரது கொள்கைகளை பரப்புரை செய்தவர்கள் மற்றும் அவரது எழுத்துக்களை மக்களிடையே நூல்வாயிலாகக் கொண்டு சென்றவர்கள் என அனைவருக்கும் அர்ஜக் சங் - கான்பூர் கிளை மூலமாகவும், இந்தியாவின் மண்ணின் மைந்தர்கள், மனிதநேய செயல்பாட்டாளர்கள் மற்றும் பகுஜன் சார்பில் இந்த விருதை பணிவுடன் சமர்பிக்கிறோம்.
சுபோத் சிவ்நாத் சிங், கான்பூர் மாவட்ட தலைவர் அர்ஜக் சங்
புத்திஸ்ட் ராம்லகன் ஷிரம்சீல்
ஷிரம்ஷீல் புத்தவிகார்
கான்பூர், டிச.29 நாடு முழுவதும் தந்தை பெரியார் அவர்களின் 45 ஆம் ஆண்டு நினைவு நாள் கடை பிடிக்கப்பட்டது. வட இந்தியாவில் செயல்பட்டுவரும் அர்ஜக் சங் அமைப்பின் கான்பூர் பிரிவு இந்த முறை அய்யாவின் வழியில் நின்றவர்களுக்கு, அய்யாவின் கொள்கைகளைப் பரப்புரை செய்பவர்களுக்கு பாராட்டு விழா நடத்தி  சான்றிதழுடன் நினைவுப் பரிசும் வழங்கியுள்ளது. இந்த ஆண்டு நடந்த விழாவில் 42 நபர்களுக்கு பெரியார் நெறியாளர் விருது(பெரியார் பெல்லோஷிப் அவார்ட்) வழங்கினார்கள்.
தந்தை பெரியார் அவர்களின் உண்மை இராமாயணம்' என்ற நூலை சச்சி இராமாயண்' என்ற தலைப்பில் பெரியார் லலாய் சிங் அவர்களுடன் இணைந்து இந்தியில் மொழி பெயர்த்து, அதற்குத் தடை வந்தபோது, வழக்காடிய பெரியார் ராம் ஆதார் அவர்களுக்கு புத்த துறவி ராம்லக்கன் ஷிரம்சீல் அவர்கள்  விருதை வழங்கினார்.
25.12.2018 ஆம் தேதி நடந்த விழாவில் மாயாவதி ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த யஷ்காயி ராம் சுவரூப் வர்மா, யஷ்காயி பெரியார் லலாய் சிங், தலித் மித்ர லாலாஜி பால் ஷிக்ஷக், டி.சிறீகிருஷ்ண ராஜ்புத்,பெரியார் மோதிலால் கவுதம் பிரதான், அமோலி குர்மிவான், பாபூராம், சர்பஞ்ச் தமர்பூர், மோகன் லால் படேல் சகஜன்பூர்வாலா, பிரகாஷ் நாராயண் கட்டியார், பெரியார் ராம்னாத் சின்ன ராதாபூர், பெரியார் சிவகுமார் பாரதி சிக்கந்தரா, சீதாராமன் கடியார், பெரியார் ராமச்சந்திர கடியார், அவரது மகன் சீன் தயாள் போன்றோருக்கு பெரியார் நெறியாளர் விருதுகள் வழங்கப்பட்டது, இந்த நிகழ்வில் கான்பூர், அலகாபாத்(பிரயாக்ராஜ்), இட்டா, லக்னோ, சமஸ்திபூர், ராம்புரா மற்றும் சுல்தான்பூர் போன்ற மாவட்ட அர்ஜக் சங் நிர்வாகிகள் பங்குகொண்டனர். மேலும் கான்பூர் பெரியார் நகர் பகுதி முனிசிபல் கவுன்சிலர் போன்றோர் பெரியார்பற்றி பல்வேறு சிறப்பான கருத்துகளை எடுத்துரைத்தனர்.
கான்பூர் புறநகர் ஷிரம்சீல் புத்தவிகாரில் தலைமை துறவி மற்றும் ஷ்ரம்சீல் சமாஜ் உத்தான் சமிதி தலைவரும் சமூக சேவகருமான ராம்லக்கன் ஷிரம்சீல் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். அர்ஜக் சங்கத்தின் கான்பூர் தலைவர் சிவநாத்சிங் சுபோத் கலந்துகொண்டு  விருதுகளை வழங்கி சிறப் பித்தார்.

விருது வழங்கும் விழாவிற்கான சுவரொட்டிகள் உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் ஒட்டப்பட்டு இருந்தன
விழாவின் முக்கிய விருந்தினராக சிக்கந்தராபாத் சட்டப்பேரவை உறுப்பினரும் சமாஜ்வாடி சிக்கந்தரா பாத் மாவட்ட தலைவருமான புரபுத்த ஷிரம்சீல் மற்றும் கான்பூர் மாவட்ட பெரியார் கொள்கை வழியில் நடக்கும் அனைவரும் கலந்துகொண்டனர்.
- விடுதலை நாளேடு, 29.12.18

வெள்ளி, 28 டிசம்பர், 2018

ஜாதி முறை

14.12.1930 - குடிஅரசிலிருந்து...

ஜாதிப்பெயர் கொடுக்க


வேண்டிய அவசியமில்லை


சமீபத்தில் வரப்போகும் சென்சஸில் ஜன கணிதமெடுக்கும் சந்தர்ப்பத்தில் கணக்கு எடுக்க வருபவர் ஜாதிப் பெயரைக் கேட்டால் அதற்கென்ன பதில் சொல்வதென்றும், அவர்களிடம் தனக்கு ஜாதி இல்லை யென்று யாராவது சொன்னால் அது சென்ச சட்டப்படி குற்றமாகாதா என்றும் மற்றும் பலவிதமாக பல கனவான்களிடமிருந்து கடிதங்களும் பலர் கையொப்பமிட்ட மகஜர்களும் நமக்கு வந்திருக் கின்றன. இதைப் பற்றி அறிந்து கொள்ள லாகூர் ஜாதி ஒழிக்கும் சங்கத்தார்  இந்திய கவர்ன்மெண்டுக்கு அனுப்பிய விண்ணப் பத்திற்கு கவர்ன்மெண்டார் அனுப்பிய பதிலை நமக்குத் தெரிவித்திருக் கிறார்கள். அப்பதிலில் குறிப்பிட்டிருப்பதென்ன வென்றால்,

ஜாதி வித்தியாசம் ஒழிக்கப்பட வேண்டு மென்னும் விஷயத்தில் கவர்ன்மெண்டுக்கு மிக்க அனுதாபம் உண்டு. ஆனால் ஜாதி வித்தியாசப் பிரிவுகளை செசன்ச குறிப்பில் குறிப்பிடாததினால் மாத்திரமே ஏதாவது பலன் உண்டாய் விடும் என்று எண்ணுவதற் கில்லை. ஆனபோதிலும் கல்யாண விஷயத்திலும் சாப்பாட்டு விஷயத்திலும் ஜாதி வித்தியாசம் பாராட்டாமல் ஜாதிக் கொள்கையை உண்மையாய் அடியோடு விட்டு இருக்கின்றவர்கள். தங்களுக்கு ஜாதி இல்லையென்று சொன்னால் அதை ஜனக்கணக்கு எடுப்பவர்கள் (அதாவது  என்யூமிரேட்டர்கள்) ஒப்புக் கொண்டு அந்தக் காலத்தில் ஜாதியில்லை அதாவது சூடை என்று பதிவு செய்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டி ருக்கிறார்கள்.

இது தற்சமயம் நமக்குப் போதுமானதாகும். ஏனெனில் தங்களுக்கு ஜாதி இல்லையென்று கணக்குக் கொடுக்க இஷ்டமுள்ளவர்கள் சர்க்கார் நிபந்தனைக்குப் பயந்து அதாவது ஜாதிப்பெயர் கொடுக்கா விட்டால் ஏதாவது ஆபத்து வருமோ என எண்ணிக் கொண்டிருப்ப வர்களுக்கே இது தைரியத்தைக் கொடுப்பதாகும்.

ஆதலால் ஜாதி வித்தியாசம் மனதில் மாத்திர மல்லாமல், அனுபவத்திலும் பாராட்டாமலிருக்கின்ற வர்கள் தைரியமாய் என்யூமிரேட்டர்கள் - கணக் கெடுப்பவர்களிடம் தங்களுக்கு ஜாதியில்லை அல்லது (சூடை) நில் என்று சொல்லிவிடலாம் என்பது விளங்கும்.

அதுபோலவே மதம் என்ன என்று கேட்கும் போதும் தைரியமாய் தங்களுக்கு மதம் இல்லை யென்று சொல்லிவிடலாம். இதை மீறிக் கணக் கெடுப்பவர்கள் ஏதாவது சொல்லித்தானாக வேண்டு மென்று கேட்டால் பகுத்தறிவு மதம் என்று சொல்லி விடலாம்.

ஆதலால் யாரும் சர்க்காருக்குப் பயந்து கொண்டு உண்மைக்கும், தங்கள் உணர்ச்சிக்கும் விரோதமாய் ஜாதிப் பெயரோ, மதப் பெயரோ கொடுக்க வேண்டும் என்கின்ற அவசியமில்லை.

 

தந்தைபெரியார் பொன்மொழிகள்




* சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு மற்றவர்கள் என்ன சொல்லுவார்கள், நம்மை எப்படி மதிப்பார்கள் என்கின்ற எண்ணமே இருக்கக் கூடாது என்பதோடு அந்தப்படி நினைப்பவன் மனிதச் சமுதாயத் தொண்டுக்கு அருகனாகவே மாட்டான் என்றும் தைரியமாய்ச் சொல்லுவேன்.

* உண்மையிலேயே ஜாதியின் பேரால் இந்தத் தொழிலாளி வர்க்கம் என்பது சிருஷ்டிக்கப்படவில்லை என்று சொல்லப்படுவது உண்மையானால் கக்கூசு எடுக்கிற தொழிலாளி மக்களிலும் நாலு பார்ப்பனர்கள் இருக்க வேண்டுமே. ஆனால் எந்தப் பார்ப்பானாவது கக்கூசு எடுத்ததாக யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தாழ்த்தப்பட்ட மகன்தானே அந்த வேலையைச் செய்கிறான்?
- விடுதலை நாளேடு, 22.12.18

குழந்தைகளுடன் மணமக்கள் திருமணம் (2)

28.09.1930- குடிஅரசிலிருந்து...

இம்மாதிரி மணம் புதியதென்று சொல்லு வதற்கோ, அல்லது இயற்கைக்கும் மனிதத் தன்மைக்கும் விரோதமான தென்றோ யாரும் சொல்லிவிட முடியாது. இதை ஆட்சேபிப் பவர்களை நான் மனிதர்கள் என்றே ஒப்புக் கொள்ளமாட்டேன். அவர்களுக்குச் சுய மரியாதை இருக்கும் என்றும் நான் கருத மாட்டேன்.

சாதாரணமாக, நமது நாட்டில் விதவைகள் உள்ள வீடுகளில் நடக்கும் காரியங்கள் எனக்கு நன்றாய்த் தெரியும். அநேகச் சிசு கொலைகளும் அநேக மன வருத்தங்களும் இயற்கைக்கு விரோதமான காரியங்களும் ஏதாவது ஒன்றும் நடந்த வண்ணமாகவே இருந்து வருகின்றது. இதனால் பல கொலைகளும் நடக்கின்றன. சில இடங்களில் பெண்கள் வெளியில் ஓட ஓட அழைத்து வந்து பந்தோபஸ்தில் வைக்கப் படுகின்றனர். சில இடங்களில் முறைகள் என்பது தவறியும் நடத்தப்படுகின்றன. இவற்றிற்கெல்லாம் காரணம் என்னவென்று பார்த்தால் இயற்கை உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி வைப்பதேயாகும். இயற்கை உணர்ச்சியைக் கட்டுப்படுத்தும்படியான எந்தக் கொள்கைகளும், சட்டங்களும் ஒரு நாளும் சரியாக நடை பெறவே நடைபெறாது. அப்படி எங்காவது நடை பெற்றாலும் அது நிலைத்திருக்கவே முடியாது. இந்தக் கொடுமைகள் இப்படி இருக்குமானால் 4 பெண்கள் 5 பெண்கள் கூடி ஒரு ஆணைத் தங்கள் இன்பத்திற்கென்று ஏற்படுத்தி அவனுக்கு நல்ல போஷணையும், அழகும் செய்து அடைத்து வைத்து அவனைத் தங்களது காம இச்சைத் தீர்க்கும் இன்பப் பொருளாய் அனுபவிக்கும் காலமும், வீட்டு அடிமையாய் நடத்தப்படும் காலமும் வந்து விடும் என்று நான் கருதுகிறேன். அப்படி வந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். ஆண்களினது கருமத்தின் பயன் என்றுதான் அதைக் கருதுவேன்.

தவிர சுயமரியாதைக் கலியாணம் என் பதில் புதிய முறையோ, புதிய சடங்கோ ஒன்றுமில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அர்த்தமற்றதும், பொருத்த மற்றதுமான சடங்குகள் வேண்டாம் என்பதும் அனாவசியமான அதிகச் செலவும், அதிகக் காலக் கேடும் இருக்கக்கூடாது என்பதும்தான் சுயமரியாதைக் கலியாணத்தின் முக்கியத் தத்துவமாகும். ஆதலால் உள்ள சடங்கு களையும், பணச்செலவையும், காலச் செல வையும் குறைத்து நடத்துவதே இத்திருமணத் தின் முக்கிய கொள்கை என்பதைத் தெரிவித் துக் கொள்ளுகிறேன்.

மற்றும் திருமணம் என்பது ஒரு பெண்ணுக்கும் ஒரு ஆணுக்கும் ஏற்பட்டக் கூட்டு வாழ்க்கையின் ஒப்பந்தம் என்பதும் இத்திருமணம் இந்த மணமக்களின் இந்த உலக மானுஷிக வாழ்க்கைக்கேதான் என் பதும் உணர்ந்து மணமக்கள் மணம் செய்து கொள்ளவேண்டும் என்பது சுயமரியாதைத் திருமணத்தில் மிகவும் முக்கியமானதாகும். அதாவது கலியாணம் மனிதத்தன்மைக்கு மேற்பட்ட தென்றும் ஆத்மார்த்தத்திற்கு என்றும், அதில் ஏதோ தெய்வீகம் இருக்கிற தென்றும் கருதி வாழ்க்கையில் உள்ள சுதந் திரங்களையும், இயற்கை இன்பங் களையும் அடையமுடியாமல் செய்யும் ஜீவனற்ற உணர்ச்சியை ஒழிக்க வேண்டுமென்பதே முக்கியமானதாகும்.

தெய்வீகம் என்கின்ற பதமே சாதாரண மாக நமக்குத் தெரியாது என்பதற்குத்தான் பெரிதும் பயன் படுத்தப்பட்டு வருகின்றது. அதோடு ஆத்மார்த்தம் என்பதும் புலனறி வற்ற சூனியத்திற்குச் சமமானதற்கே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. ஆகவே மனித வாழ்க்கையின் முக்கியமான தத்துவமான இன்ப உணர்ச்சியின் இயற்கை அனுபவத்தை அடைய முடியாமல் தடைசெய்வதற்கு மாத்திரம் பயன்படும்படியாகத் தெரியாத, அர்த்தமற்ற தெய்வீகத்தையும் ஆத்மார்த்தத் தையும் இப்படிபட்ட விஷயத்தில் கொண்டு வந்து புகுத்தியதானது மனிதனை வெறும் பிணம் ஆக்குவதற்கும் அடிமையாக்குவதற் குமே பயன்படுத்தச் செய்த புரட்டே யொழிய வேறில்லை. தெய்வீகக் கலியாணத்தில், ஆத் மார்த்த கலியாணத்தில் புருஷனுக்கும் பெண் ணுக்கும் வித்தியாச நிபந்தனைகளும் எஜ மான் அடிமைத் தன்மைகளும் எதற்காக ஏற் படுத்த வேண்டும். தெய்வீகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வித்தியாசமுண்டா? ஆத் மார்த்தத்தில் ஆண் ஆத்மா; பெண் ஆத்மா வென்கின்ற பிரிவுண்டா?

எவ்வளவு பெரிய புரட்டுகளை இந்த முக்கியமான காரியத்தில் கொண்டு வந்து போட்டு, இன்பமும், சுதந்திரமும் பாழக்கப் பட்டு விட்டது என்பதை யோசித்துப் பாருங்கள். ஆகையால் புருஷனுக்காகப் பெண்ணும், பெண்ணுக்காக புருஷனும் இரண்டு பேரும் சேர்ந்து இன்பமடைவதற்கு என்பதைத் தவிரத் திருமணத்தில் வேறு தத்துவமொன்றும் இல்லவே இல்லை என்பது தான் திருமணத்தைப் பற்றிய நமது அபிப் பிராயம். இம்மாதிரி மணமக்கள் இருவரும் ஒரு பொது வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டதற்கு அவர்களுக் குள் செய்துகொள் ளும் ஒப்பந்தத்திற்குச் சாட்சியத்தைத் தவிர நமக்கு இதில் வேறு வேலை இல்லை. ஆகவே நாம் எல்லோரும் சாட்சியத் திற்காகவே அழைக்கப்பட்டிருக்கின்றோம், கூடி இருக் கின்றோமென்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த மாதிரியான சமுதாய உதவி கூட்டு வாழ்க்கையில் கலந்துள்ள ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் செய்து கொள்ள வேண்டி யதேயாகும். இதில் மணமக்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென் றால் தங்களில் எவருக்கும் எந்த விதத்திலும் வாழ்க்கை நடத்துவதில் பொறுப்போ உரி மையோ ஜாஸ்த்தி கம்மியாய் இருக்கின்றது என்று யாரும் கருதிக் கொள்ளக் கூடாது என்பது தான். அதாவது பெண் தான் புருஷ னுக்கு அடிமை யாயிருக்க கடவுளால் பிறப் பிக்கப்பட்ட ஒரு சுய உணர்ச்சியற்ற ஜீவ னென்றோ கல்லென்றாலும் கணவன் புல் லென்றாலும் புருஷன், அவன் அடித்தாலும், உதைத்தாலும் அன்னியருக்கு கூட்டிவிட்டு ஜீவித்தாலும் புருஷனே தெய்வம் என்று கருதுகின்ற அடிமை உணர்ச்சிக் கண்டிப்பாய் பெண்ணுக்கிருக்கவே கூடாது. நமது கண வனும் நம்மை போன்ற மனித ஜீவனேயாகும். பெண்ணிடம் அவன் எப்படி நடந்து கொள்ளு கிறானோ அப்படி தான் அவள் தன்னிடமும் நம்மை நடந்து கொள்ள எதிர்பார்க்க முடியும். ஒழுக்கத்திலோ, சுதந்திரத்திலோ உணர்ச்சியிலோ நமக்கும் அவனுக்கும் வித்தியாசம் கிடையாதென்று எண்ணவேண்டியது மாத் திரமல்லாமல் ஒவ்வொருத் துறையிலும் அனுபவத்தில் கொண்டு வர வேண்டும்.

- விடுதலை நாளேடு, 22.12.18

தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை (மரண சாசனம்)

தந்தை பெரியார்




அருமைத் தோழர்களே,  இப்போது நமக்கு வேண்டியதெல்லாம் மான உணர்ச்சி வேணும்; நமக்கு இருக்கிற இழிவு நீங்கணும். அப்புறம் மேலே போகலாம்; போகணும். மனுஷனுக்கு இருக்கிற உரிமை என்ன தெரியுமா? மனுஷனுக்கு இருக்கிற சக்தி, உரிமை. ஒவ்வொரு மனுஷனும் குறைந்தது 500 வருஷம் இருக்கலாம் - 500 வருஷம் இருக்கலாம் (அழுத்திச் சொல்கிறார்); இப்போ இல்லையே, இப்போ 52 வயசுதான் இருக்கிறோம் - சராசரி. எனக்கு இப்போ 95; இன்னும் எவனாவது ஒரு பத்துப் பேர் இருப்பான் 100 வயசானவன். இருக்க முடியலையே, வெள்ளைக்காரன் வந்ததனாலே இந்த அளவாவது இருக்கிறோம். வெள்ளைக்காரன் வருவதற்கு முன்னே, அவன் வந்த அன்றைக்குக்கூட நமக்கு 10 வயது இல்லை - 7 வயது - வெள்ளக்காரன் வர்ற போது இந்த நாட்டுக்குச் சராசரி. அவன் வந்ததற்கப்புறம், அவன் வைத்தியம், அவன் ஆஸ்பத்திரி, அவனுடைய முயற்சி, அவனுடைய சுகாதாரம் இதெல்லாம் நமக்கு ஏற்றதற்கு அப்புறம், இப்போது நாம் சராசரி 50 வருஷம் இருக்கிறோம். மேல்நாட்டிலே 75 வயசு இருக்கிறான்; ரஷ்யாவிலே கிட்டத்தட்ட 100 வயசு இருக்கிறான். நாமும் இன்னும் 10, 20 வருஷத்திலே 75 வருஷத்துக்கு வந்துவிடுவோம்; வெள்ளைக்காரன் 120 வருஷத்துக்கு போய்விடுவான். இப்படியே நாளாக, நாளாக 500 வருஷம் வரைக்கும் இருப்போம். அதற்கு மேலே வேற என்ன வரணும்? இருக்கிறது ஒரு கஷ்டமல்ல - சாகிறதுதான் கஷ்டம். அவ்வளவு வசதிகளை எல்லாம் பண்ணியிருக்கிறான் நாட்டிலே. அவ்வளவு அற்புத அதிசயங்களையெல்லாம் கண்டுபிடித்திருக்கிறான். நமக்கு ஒன்றும் இல்லாததற்குக் காரணம், நாம் தேவடியாள் மக்களாய் இருந்ததினாலே.

நாங்கள் வராதிருந்தால் படிப்பு ஏது? சொல்லுங்கள், சுயமரியாதை இயக்கம் ஆரம்பிக்கிறபோது, நாம் 10 பேருகூட படிக்கவில்லையே, 100-க்கு!   அது வந்ததற்கு அப்புறம், ஆரம்பித்தோம், அறிவைப்பற்றி. சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தபோது அதற்கு என்ன கொள்கை தெரியுமோ? அய்ந்து கொள்கை.

என்ன கொள்கை?

1. கடவுள் ஒழியணும்

2. மதம் ஒழியணும்

3. காந்தி ஒழியணும்

4. காங்கிரசு ஒழியணும்

5. பார்ப்பான் ஒழியணும்.

அன்றைய முதற்கொண்டு இன்றைய வரைக்கும் இந்த அய்ந்து கொள்கைகள்தான் நடக்கின்றன. காந்தியை ஒழித்தான், ஒழித்துவிட்டான். நாம் ஒழிக்கிறதற்கு முன்னே பார்ப்பானே ஒழிச்சு போட்டான். காந்தி நம்ம பேச்சைக் கேட்டு நம்ம பக்கம் திரும்பினார். 'இன்னமும் கடவுள்னு சொல்றியே முட்டாள்'ன்னான். உடனே காந்தி, 'கடவுளுக்கும், காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லைடா' என்றார்; 'காங்கிரசுகாரன் கடவுளை இப்போது சேர்க்க வேண்டியதில்லை' என்று சொல்லிவிட்டார். சொன்ன 30 நாளில் கொன்று போட்டானுங்கய்யா அவரை! 'ஓ, இவன் ராமசாமி ஆகிவிட்டான்! அவனுக்காவது நாதி இல்லை; இவன் காந்தின்னா இந்தியாவிற்கே பெரியவன். எல்லாரும் நம்பிடுவாங்க'ன்னு சட்டென்று கொன்று போட்டுட்டான் அவரை.

அடுத்தாற்போல ஒழியவேண்டியவன் காங்கிரசு. காங்கிரசு ஒழிந்தது; அது ஒன்றும் உருப்படியாகாது - உருப்படியாகாது; இப்பொழுதே இரண்டு பேர் தொங்குறாங்களே - இரண்டாகப் பிரிந்தது - ஒன்றுக்கொன்று மானங்கெட்டு திரியுது. இப்போது ஒருவருக்கொருவர் சேர்ந்து பார்க்கலாம் என்று. சேர்ந்தால் இனிமே என்ன மரியாதை இருக்கப் போகிறது? என்ன ஆகப் போகுது. இனிமேல் எவன் காங்கிரசை ஆதரிப்பான், பொறுக்கித் தின்கிறவனைத் தவிர? காங்கிரசுக்கு என்ன கொள்கை இருக்கிறதென்று, ஒருத்தன் கேட்பான். இன்றைக்கு இருக்கிற நம்முடைய காமராசர் வாயிலே 'ஜாதி ஒழிக' என்று ஒரு வார்த்தை வருமா? சொல்ல முடியுமா? சொன்னால், அவர் காங்கிரசிலே இருக்கக்கூடாதே! காங்கிரசு வேலையே ஜாதியைக் காப்பாற்றுவதுதானே முதலில் எடுத்ததும். பார்ப்பானாலே உண்டாயிற்று; அவன் நன்மைக்கு அவன் பண்ணிக்கிட்டான். போகிறவன் அதை ஒத்துக்கிட்டுத்தானே ஆகணும்? காமராசர் நம்மோடு சேர்ந்ததால், கொஞ்சம் காரியம் செய்தார். பக்தவத்சலம் வாயிலே வருமா 'ஜாதி ஒழிக' என்று. இல்லை, சுப்பிரமணியம் வாயிலே வருமா 'ஜாதி ஒழிக' என்று. சொன்னால் அவர் காங்கிரசில் இருக்க முடியாதே! அந்த மாதிரித் திட்டத்தோடு இருக்கிறானுங்க; அது இனிமேல் உருப்படியாகுமா?

முன்னேற்றக் கழகம் ஒழிந்தாலும், 'காங்கிரசு ஒழிக'ங்கிற, 'ஜாதி ஒழிக'ங்கிற ஒரு சீர்திருத்த உணர்ச்சி உள்ளவர்கள்தான் இனி வருவாங்க; அதனாலே, இனி வந்துட முடியாது. காந்தியும் போய்ட்டான்; காங்கிரசும் ஒழிந்து போச்சு; கடவுளும் தெருவிலே சிரிப்பாய் சிரிக்குது. அதுதான் வீரமணி சொன்னாரு, செருப்பாலே அடிச்சாங்களே கடவுளை, என்ன ஆயிப்போச்சு? 'கடவுளை செருப்பாலே அடித்தான்; அதனாலே ஓட்டுப் பண்ணவேண்டாம்' என்று காமராசர் முதற்கொண்டு தப்பட்டை அடிச்சாங்க. ஆனால், என்றைக்கும் வராத அளவுக்கு 200 பேருக்கு மேலே வந்துட்டாங்களே! முன்னேற்றக் கழகத்துக்காரன் 185 பேர்; அவர்களை ஆதரிக்கிறவர்கள் 20 பேர். காங்கிரசு, காந்தி, கடவுள், வெங்காயம் எல்லாம் சேர்ந்து 20 பேர்கூட வரவில்லையே! சாமியைத் திட்டுறான் என்று சொல்லுகிறீர்களே - புத்தி இல்லாமல் சொல்றானே தவிர, சாமியைச் செருப்பாலே அடித்த பிரச்சினை மேலே 200 பேர் வந்துட்டாங்களே. ஆனதினாலே மக்கள் அறிவு பெற்றுக்கிட்டு வருகிறார்கள். பயன்படுத்திக்க வேணும். அவங்களுக்கு விஷயங்களை எடுத்துச் சொல்லணும் - தெரியாது வெகு பேருக்கு.

எனவேதான், இப்போது நாம் முன்னேற்றம் அடையணும்; மேலே வருவதற்குள்ளே பள்ளத்திலே இருந்து நிலத்துக்கு வரணும்; மேட்டுக்கு வரணும்; அப்புறம் மேலே ஏறணும்.  இப்போது நாம் பள்ளத்திலே கிடக்கிறோம். என்ன? நாலாவது ஜாதி, அய்ந்தாவது ஜாதி, தீண்டப்படாத ஜாதி, பார்ப்பானுடைய வைப்பாட்டி மக்கள் இப்படியல்லவா இருக்கிறோம் நாம். இது மாறவேணும், அப்புறம் மேலே போகணும்; மாறாது மேலே போக முடியுமோ? யாரும் கவனிக்கலே... கவனிக்காமல் போனால், நாங்கள் சும்மா இருக்கலே; ஒன்று போனால் ஒன்று செய்துகிட்டே இருக்கிறோம். நாளுக்கு நாள் கொஞ்சம் மாறிக்கிட்டேதான் வந்தது. இன்னும் மாறணும். எங்களால்தான் முடியும்னு இருக்கிறது நிலைமை. வேற எந்தக் கட்சிக்காரனுக்கும் இதிலே கவலை இல்லை. 'இவங்களோடு சேர்ந்தால் ஓட்டுப் போய்விடுமே' என்று பார்க்கிறான்; மானம் போறதைப்பத்தி அவனுக்கு வெட்கமில்லை. ஆகவே, நாம் மகாநாடு போட்டோம். இந்த மகாநாடு போட்டதற்குக்கூட காரணம் சொன்னாரே! 'தீண்டாமை இல்லை'ன்னு சட்டத்திலே எழுதிப் போட்டான்; 'எந்த விதத்திலேயும் தீண்டாமை இல்லை'ன்னுட்டான். ஆனால், 'மதத்திற்கு மாத்திரம் உண்டு'ன்னு ஓர் அடையாளம் வைத்துவிட்டான் - நிபந்தனை. இல்லாதிருந்தால், நாம் அந்தத் தீர்மானத்தின் மேலேயே எல்லாக் காரியத்தையும் நடத்தி இருப்போம். அதுதான் சொன்னேனே, எல்லோரும் கோவிலுக்குப் போகலாம் என்று சட்டமே பண்ணினால், அந்தச் சட்டம் செல்லாதுன்னு ஆயிப்போச்சே! அதேமாதிரிதானே சாஸ்திரத்திற்கு விரோதமாய் இருக்கிற எந்தக் காரியமும் இனிமேல் செல்லாது. இனிமேல் நாம் இழிமகன். எனவேதான், மாத்திக்க வேண்டிய அவசியத்திற்கு வந்துட்டோம்; அவைகளையெல்லாம் பார்த்தோம், மாத்தி ஆகணும். சட்டத்திலேயும், சாஸ்திரத்திலேயும் இருக்கிறதினாலே, முதலிலே அதைக் கேட்டோம். சட்டத்திலே இருக்கிறது ஒழியவேணும் என்றால், சட்டம் ஒழிந்தால் உண்டு. சட்டத்திலே ஒழிக்கவில்லையானால், ஆட்சியை ஒழித்தால்தான் உண்டு. அவ்வளவுக்கு இப்போ நாம் பக்குவமாகணும். ஆட்சியை ஒழியும்படியாக இல்லாமல் பாதுகாத்துக்கிட்டான். 'தனியாக இருந்தால், எவனும் ஒன்னும் பண்ணமாட்டான்; கூட்டாக இருந்தால் எல்லாம் ஒன்று சேர்ந்துக்குவாங்க'ன்னு 15, 16 நாடுகளாகப் பிரித்தான். அந்தந்த நாட்டை, அந்தந்த நாட்டோட வச்சு, மற்ற நாட்டோடு சம்பந்தமில்லை என்று சொல்லிட்டான். அவனைப்பற்றி இவன் கவனிக்கக் கூடாது; இவனைப்பற்றி அவன் கவனிக்கக் கூடாதுன்னுட்டான். 16 மாகாணங்களில் ஜனங்கள் இருக்கிறாங்க, ஒருத்தருக்கு ஒருத்தர் சம்பந்தம் இல்லையே! அவனும், நானும் தாராளமாகப் பேசிக் கொள்ள முடியாதே! அவன் மொழி வேறு - இந்தப் பக்கம் இருக்கிறவன் வந்தால் மலையாளம் பேசுவான்; இந்தப் பக்கம் இருக்கிறவன் வந்தால் தெலுங்கு பேசுவான்; இந்தப் பக்கம் இருக்கிறவன் வந்தால் கன்னடம் பேசுவான்; இன்னும் கொஞ்சம் தாண்டினால் மராட்டி; இன்னும் கொஞ்சம் தாண்டினால் குஜராத்தி; இன்னும் கொஞ்சம் தாண்டினால் இந்தி; அப்புறம் வங்காளி. அந்தந்த பாஷை ஒன்று சேராமல் இருப்பதற்கு என்ன பண்ணணுமோ அதையெல்லாம் பண்ணிட்டான்.

தனித்தனியாக இருந்தால் ஒன்று சேர்ந்துவிடுவான் என்று 15ம், 1 ம் 16 என்று சொல்லிட்டான். வேறு நாதி இல்லையே! இப்போது நாம் ஏற்பாடு பண்ணினோம். 'சூத்திரன் என்கிறதை ஒழிக்கணும்' என்று. நாம் மாத்திரமா சூத்திரன்? இந்தியாவில் உள்ள மக்களிலே (தமிழ்நாட்டிலே உள்ள) நாலரை கோடி மக்களில், ஏறக்குறைய மூன்று கோடி மக்கள் சூத்திரர்கள்தானே - துலுக்கன், கிறிஸ்தவன் தவிர; அவர்கள் இரண்டு பேரையும் சேர்த்தால் இன்னும் ஒரு 50 லட்சம் கூட இருக்காதே; கிறிஸ்தவன் ஒரு 3 லட்சம் இருக்கலாம்; முஸ்லிம் ஒரு 6 லட்சம் இருக்கலாம்; இரண்டும் சேர்த்தால் 10 லட்சமாகும். மற்றவன் எல்லாம் சூத்திரன். பார்ப்பான் ஒரு இரண்டு, மூணு லட்சம்தான் இருப்பான். அவ்வளவு பெரிய சமுதாயம் இந்த மாதிரி இருக்கிறதையே சிந்திக்க முடியவில்லையே.

ஆகவே, இதை மாற்றியாகணும். பெரிய விஷயம்தான்; பெரிய முயற்சி பண்ணணும். பெரிய முயற்சி பண்ணனும். என்ன அவசியம்? அரசியல் சட்டம், அரசாங்கம் நடத்துவதற்கு வேணும்; ஒரு அரசாங்கம் நடக்கவேணும் என்றால், ஒரு சட்டம் இருக்கணும், ஒத்துக்கிறேன். அரசாங்கம் நடத்துவதற்கு சூத்திரன் இருக்கணுமோ? அரசாங்கம் நடக்கணும்னா பார்ப்பான் இருக்கணுமோ - மனுஷன்தானே இருக்கணும்? அமெரிக்காவிலே அரசாங்கம் நடக்குது. அங்கே மனுஷன் தவிர வேற எவன் இருக்கிறான்? பார்ப்பான் இருக்கிறானா? சூத்திரன் இருக்கிறானா? பறையன் இருக்கிறானா? யார் இருக்கிறான் அங்கே?

ஆனதினாலே, அவன் வைத்திருக்கிற பாதுகாப்பெல்லாம்... 'ஒன்று சேரக்கூடாது. அவர்களை உள்ளே கட்டிப் போட்டு வைத்திருக்கிற கயிற்றை அவுத்துவிடக்கூடாது. அடிமையாகவே இருக்கணும். அப்படி அடிமையாய் இருந்தால், நூற்றுக்குத் தொண்ணூறு பேரை 3 பேர் ஆளலாம்.' அதற்குத் தகுந்தபடி செய்துகிட்ட ஏற்பாடு. இப்போது நாம்தான் அதைப்பற்றி கவலைப்படுகிறோம். 'மாற்றியாகணும்'ங்கிறோம்.

நேற்று நடந்த மகாநாட்டுக்கு வேற கட்சிக்காரங்க ஆதரவு ஒன்னும் வரவில்லையே, வரலாம் அல்ல? அவனவன் சக்திக்கு, அனுசரணையா எங்களுக்கு வந்து உதவி பண்ணலாமல்ல. ஒருத்தரும் வரவேயில்லை. எங்க ஆளுங்கதான். அவன் - டில்லிக்காரன் சி.அய்.டி.யைப் போட்டுவிட்டான் - வேற கட்சிக்காரன் எவனாவது உள்ளே போறானா பார் என்று. அதைப் பார்த்து ஒருத்தனுமே வரவில்லை. மந்திரிகளோ, அவனோ, மற்ற கட்சிக்காரனோ, மற்றவனா... ஊம்! இழிவு ஒழிய வேணும்னு சொன்னால், இழிவுக்கு ஆளானவன் எல்லாம் வரணுமே, வந்து உதவி செய்யணுமே. (இல்லை) நாங்கள்தான். ஆனதினாலே, விஷயம் ரொம்ப முக்கியமானது; மாறியே ஆகணும், மாறாவிட்டால் சாகணும்; அந்த உணர்ச்சி உள்ளவன்தான் மிஞ்சுவான். மாறியாகவில்லை என்றாலும் சோறு தின்கணும், என்ன பண்ணியாவது வயிறு ரொப்பணும் அப்படி என்றால், அவனாலே என்னாகும்? நினையுங்க நீங்க! நம்மை அப்படி பண்ணி விட்டான்.

(19.12.1973 அன்று சென்னை தியாகராயர் நகரில்

தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய இறுதிப் பேருரையிலிருந்து....

- விடுதலை நாளேடு, 23.12.18