திங்கள், 15 ஆகஸ்ட், 2016

திராவிடர்கள் யார்?

சில பார்ப்பன அடிமைகள் ‘திராவிடர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்?’ என்று தெரிந்தோ, தெரியாமலோ கேட்கிறார்கள். பார்ப்பானை தவிர்த்த மற்ற மக்களெல்லாம் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாசாரப்படி கூறுகிறோம். உதாரணமாக முஸ்லீம் ஒருவரை இரத்தப் பரீட்சை செய்து பார்த்தால், நமக்கும் அவருக்கும் பேதம் இருக்காது. அவன் முன்பு நம்மவனாக இருக்கலாம். ஆனால், கலாசாரப்படி முஸ்லிம் என்கிறான், பார்ப்பானை ஏன் ஆரியன் என்கிறோம்? ஆரிய கலாசாரம் வேறு, அவன் பூணூல் போட்டுக் கொள்கிறான். ஆரியர்கள் மற்றும் ஆரியக் கடவுள்கள், இதிகாசங்கள், சாஸ்திர புராணங்கள் வேறு. ஆனால், இவற்றையெல்லாம் நம் தலையில் கட்டினான். அவன் வேறு ஜாதி, பிறப்பு; நாம் வேறு ஜாதி, பிறப்பு என்ற முறையைப் புகுத்தினான்.

தீண்டாமை ஒரு வழக்கம். தீண்டாமை ஒழிந்த தினமே பறையன் மாறிப் போவானா? சக்கிலி இல்லாமற் போவானா? தீண்டாமை ஒழிந்து விட்டதால் சக்கிலி வேறாய் விட்டானா? நமக்குத் தீண்டாமை இல்லையென்பதாலேயே நமக்கு சூத்திரப் பட்டம் போய் விட்டதா?

டில்லி ஆட்சியின் அரசமைப்புச் சட்டத்திலே ஒரு வார்த்தை ‘ஜாதி ஒழிக’ என்று இருக்கிறதா? 

24.02.1954 அன்று அதிகாரப்பட்டியில் தந்தை பெரியார் ஆற்றிய உரையின் ஒரு பகுதி (‘விடுதலை’ 28.02.1954)
-உண்மை,1-16.6.16

பெரியார் ஒரு பிசிராந்தையார்

சிகரம்
பெரியார் மீது பற்றுகொண்டு அவரது தொண்டர்களாய், மாணவர்களாய், போராளிகளாய், பரப்புரையாளர்களாய், எழுத்தாளர்களாய் உலகெங்கும் எராளமானவர்கள் நாம் அறிந்தும் அறியாமலும் இருந்தனர்; இருக்கின்றனர்.
இதில் பார்ப்பனர்கள் சிலரும் அடக்கம். தமிழகத்தைப் பொறுத்தவரை சின்னக்குத்தூசி, ஞாநி, கமலகாசன் போன்றவர்களைச் சொல்லலாம்.
என்னுடைய மாணவர் ஒருவர் அய்.ஏ.எஸ். தேர்வில் தேர்வுபெற்று டில்லியில் பயிற்சிபெற்றபோது, அங்கு வகுப்பு நடத்திய பார்ப்பன முதியவர் “இந்தியாவில் தந்தை பெரியாருக்கு இணையான ஒரு சிந்தனையாளர், யதார்த்தவாதி, பகுத்தறிவுவாதி, மனிதநேயப் பற்றாளர் எவரும் இல்லை. அவர் பெருமையை பார்ப்பனர்கள் திட்டமிட்டு மறைக்கின்றனர்; திரிக்கின்றனர். இந்தியா முன்னேற அவரது சிந்தனைகளே உகந்தவை’’ என்று மனம் திறந்து கூறினாராம்.
இந்தியாவின் வடமாநிலங்களில் பலர் பெரியாரின் பற்றாளர்களாய் பரவி வாழ்கின்றனர். அவர்களுள் ஒருவர்தான் “லலாய் சிங் யாதவ்’’. “இந்திய வரலாற்றில் புகழ்பெற்ற நாத்திகர்கள்’’ என்ற நூலின் ஆசிரியர் இவர்.
இவர் தந்தை பெரியாரின் மீது கொண்ட அளப்பரிய பற்றின் காரணமாய் அவருக்கு “பெரியார் லலாய் சிங் யாதவ்’’ என்று பெயர் சூட்டப்பட்டது என்றால் பாருங்களேன்!
1973 டிசம்பர் 24-ஆம் தேதி தந்தை பெரியார் இறந்துவிட்டார் என்ற செய்தி லாலய் சிங்கிற்கு அவரது சென்னை நண்பர் மூலம் கிடைத்தது. பெரியார் இறந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் கூடி மரியாதைச் செலுத்தினர். இதற்கு தலைமையேற்ற லலாய் சிங் 3 மணி நேரம் உணர்வுபொங்க உரையாற்றினார். அன்று இரவு முதல் அவரது உடல்நிலை சீர்குலைந்தது, சிலநாட்கள் அய்யா அவர்களின் மறைவு வாட்ட, கவலையில் மூழ்கி உணவு தண்ணீர் சாப்பிடாமல் இருந்த காரணத்தால் அவரது உடல் மிகவும் நலிவுற்றது. அதன் பிறகு அவரது நாத்திக நண்பர்கள் ஒன்று கூடி சீர்திருத்தவாதிகள் மறைந்துவிட்டால் அவர்களின் பணியை நாம்தான் எடுத்துச் செல்லவேண்டும்; நாம் சோர்ந்துவிட்டால் பெரியாரின் பணிகளை யார் எடுத்துச்செல்வது என்று கூறி அவருக்கு தெம்பூட்டினர்.
பெரியாரின் மறைவிற்குப் பிறகு லலாய் சிங் முழுமையான சமூகப் பணியில் இறங்கினார். தனது நிலங்களை விற்று 3 பதிப்பகங்களை கான்பூர் நகரில் வாங்கினார்.  வேதம், ஸ்மிருதி, உபநிடதம், ராமாயணம், மகாபாரதம், கீதை, மற்றும் இந்துமதப் புராணங்களை எதிர்த்து, அவற்றின் தரமற்றத் தன்மையைக் கூறி அதற்கான ஆதாரங்களை எடுத்துக்காட்டி சிறு சிறு நூல்களாக வெளியிட்டார்.
அவரது நூல்கள் தொடர்ந்து உபி அரசால் தடைசெய்யப்பட்டு வந்த நிலையில் அவர், துணிச்சலுடன் எதிர்த்து, உச்சநீதிமன்றம் வரைச் சென்று நூல்களுக்கான தடையை  நீக்கி மீண்டும் விற்பனைக்கு கொண்டுவந்தார். அப்படி அரசால்  தடைவிலக்கப்பட்ட நூல்களை இலவசமாக மக்களுக்கு கொடுத்துவந்தார்.  சமஸ்கிருத நூல்களில் உள்ள புரட்டுக்களை எழுதிப் பரப்பினார்.
இவர் தொடக்க காலத்தில் பல்வேறு சமூக சீர்திருத்த கூட்டங்களை உத்திரப்பிரதேசம் மற்றும் பிகார் மாநிலங்களில் நடத்தியவர். 1968ஆம் ஆண்டுதான் தந்தை பெரியாரின் நட்பு கிடைத்தது. தந்தை பெரியார் லலாய் சிங் அவர்களின் தொண்டினைப் பாராட்டினார். இந்த நிலையில் ராமாயணப் புரட்டு என்ற நூலை இந்தியில் வெளியிட பெரியாரிடம் அனுமதி வேண்டினார். பெரியாரும் அனுமதியளித்தார். உடன் அதை தானே ஹிந்தியில் எழுதி நூலாக வெளியிட்டார். அதை உத்திரபிரதேச அரசு தடை செய்தது. சுதந்திரத்திற்குப் பிறகு உத்திரப்பிரதேச அரசு தடைசெய்த முதல் நூலாகும். இதன் பிறகு உச்சநீதிமன்றம் வரைச் சென்று தடையை நீக்கினார். பிறகு மகாபாரதம், புராணங்கள் போன்றவற்றைப் பற்றியும் விமர்சித்து எழுதினார். இவரது 5 நூல்களை உத்திரப்பிரதேச அரசு தடை செய்தது. ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றம் வரைசென்று தடையை நீக்கி வெற்றிபெற்றார்.
தனது 80-ஆவது வயதில் “பெரியார் ஜன் ஜாகிருதி சன்ஸ்தான்’’ (பெரியார் மக்கள் விழிப்புணர்வு அமைப்பு) என்ற ஒன்றை உருவாக்கி அதன் மூலம் பல்வேறு கருத்தரங்கங்களை நடத்தி வந்தார். 1993-ஆம் ஆண்டு அவர் மறைந்தார்.
அவர் மறைந்த பின்னும் அந்த அமைப்பினர், தொடர்ந்து பிரச்சாரங்கள் செய்து விழிப்புணர்வு ஊட்டி வருகின்றனர். ஆண்டுதோறும் சிறந்த நாத்திகர்கள் பாராட்டப்படுகின்றனர்.
கோப்பெருஞ்சோழனுக்கு பிசிராந்தையார் போல தந்தை பெரியாருக்கு இவர் என்பது முற்றிலும் பொருந்தும். மாநிலம் கடந்து, மொழி கடந்து இப்படி ஒரு பற்றாளர் இருப்பது வியப்பிலும் வியப்பல்லவா?
- ஹிந்தியில் உள்ள தகவல்களைத் தமிழில் பெயர்த்துத் தந்தவர்: சரவணா இராசேந்திரன்.
-உண்மை,16-30.5.16

கழக கொடியின் இலட்சியம்! - அன்னை மணியம்மையார்

திராவிட நாடும், திராவிட சமுதாயமும் இந்திய நாடு, இந்திய சமுதாயம் என்பது போன்ற ஒரு கற்பனை நாடும், கற்பனைச் சமுதாயமும் அல்ல; கற்பனைச் சொற்களும் அல்ல. வேத - புராண - இதிகாசங்களுக்கு முன்பிருந்தே திராவிட நாடும், திராவிட சமுதாயமும், திராவிடத் தனி ஆட்சியும் இருந்து வந்திருக்கிறது. வேதத்தில் மீனக் கொடியைப் பற்றியும், இராமாயண இதிகாசங்களிலும் மீனக் கொடியைப் பற்றியும் குறிப்புகள் இருக்கின்றன.
ஆகவே, சரித்திர காலத்திற்கு முன்பிருந்தே வெகு காலமாக இருந்து வந்ததான நம் நாடும், சமுதாயமும், ஆட்சியும் மறைவு பட்டு, அன்னியர் ஆதிக்கத்திற்கும், சுரண்டுதலுக்கும், ஏவல் கொள்ளுதற்கும் ஆளாகி ஈன நிலையில் இருக்கும் நம் நாடும், சமுதாயமும் அடியோடு மறைந்து அழிந்து போன நம் அரசும் மறுபடியும் புத்துயிர் பெற்று எழ வேண்டுமானால் அவற்றிற்கேற்ற இலட்சியத்தையும், உணர்ச்சியையும், ஊக்கத்தையும் குறிக்கும்படியான சின்னமாக நம் திராவிடக் கொடியை திராவிட மக்கள் யாவரும் கருத வேண்டும்.
_-கோபி மாநாட்டில் கொடியேற்றி மணியம்மையார் பேசிய உரையிலிருந்து... குடிஅரசு 13.6.1944
உண்மை,1-15,3,16

பெரியாரின் கல்விச் சிந்தனைகள்

1. 85 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்பட வேண்டிய அவசியமெல்லாம், ஒருவன் தன் வாழ்நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்குத் தகுதிப்படுத்துவது என்பதேயாகும். அல்லது உலகில் நல்வாழ்க்கை வாழத் தகுதி யுடையவனாக்குவது என்பதாகும்.
‘குடிஅரசு’ 27.9.1931
இதன் பொருள் அறிவு வளர்ச்சி, கண்டுபிடிப்பு-களில் ஆர்வம் - மற்ற பழைமை-வாதக் கருத்துக்களைக் கண்டு அஞ்சி அஞ்சி வாழாமை - ‘சுதந்திரத்தோடு வாழ்தல்’
2. ‘‘பொதுவாக மக்கள் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் அவசியம் வேண்டி யிருப்பவை, கல்வி, செல்வம், தொழில், சமூக சமத்துவம்.’’
3. ‘‘எல்லா மக்களுக்கும் தொழிற்கல்வி போதிக்கவேண்டும்; படித்து முடித்ததும் அவரவர் தொழில் செய்து அதன்மூலம் வருவாய் அடையும்படிச் செய்ய வேண்டும். (5.5.1972)
4. அறிவு என்பது வெறும் ஏட்டு அறிவு அன்று; உலக அறிவே முக்கியம். பொது அனுபவ அறிவுதான் பட்டப் படிப்பை விடச் சிறந்தது. ‘‘ஒருவன் எவ்வளவோ படித்திருக்கலாம். பட்டப் படிப்புகள் எல்லாம் படித்திருக்கலாம். பலே அறிஞன், புத்திசாலி என்று பேசப்படலாம். எல்லாம் அனுபவ அறிவைவிட மட்டரக-மானவைகளே’’.
5. ‘‘கல்வியானது அனைவரும் ஒன்றாக வாழக் கற்றுக் கொடுக்கவேண்டும்.
கற்பதன்மூலம் அனைவரிடத்திலும் அன்பு காட்டவேண்டும். அத்துடன் உலகத்தோடு ஒத்து வாழவும், உலகில் உள்ள அனைவரும் உடன் பிறந்தவர்கள் எனக் கருதவும் கல்வி வழி செய்வதாக அமைதல் வேண்டும்.
6. ‘‘கல்வி அறிவு மனிதனை மனிதத் தன்மையோடு வாழ்ந்து மற்ற மனிதனுக்கு உதவியாய் இருக்கப் பயன்படவேண்டும்.’’
- ‘விடுதலை’ 25.1.1947
7. கல்வியை, ஏற்கெனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கும், பரம்பரையாகக் கல்வியறி-வோடு இருப்பவர்களுக்கும் பிறவியிலேயே தங்களை அறிவாளிகள் என்று சொல்-பவர்களுக்கும் கற்பிக்க வேண்டியதே இல்லை. சிறப்பாக பெண்களுக்கும், தீண்டாதவராக ஆக்கப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்-பட்டோருக்குமே இப்போதைக்குக் கல்வி கற்பிப்பது இன்றிமையாதது. முன்னுரிமை இவர்களுக்கே என்பதே அதன் கருத்து.
8. ‘‘தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கை நலத்திற்கே கல்வியைப் பயன்படுத்துவது கல்வியின் பயன் ஆகிவிட்டதால், கல்வி கல்லாத மக்கள் என்பவருடைய நாணயம், ஒழுக்கம் என்பதைவிட, கற்றவர்கள் என்பவர்களுடைய நாணயமும், ஒழுக்கமும் மிக மோசமாகவே இருக்கும்படி படித்த அநேகர் நிலைமை ஏற்பட்டுவிட்டது.
(‘குடிஅரசு’, 1.4.1944)
கட்டாயக் கல்வி
9. ஆறு மாதத்திற்குள் கையெழுத்துப் போடத் தெரிந்து கொள்ளாதவர்களுக் கெல்லாம், எழுதப் படிக்கத் தெரிந்து கொள்ளாதவர்களுக்கு எல்லாம் மூன்று மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று சட்டம் போட்டால் விழுந்து விழுந்து படிக்க-மாட்டார்களா?
‘விடுதலை’, 4.9.1950
10. உலகக் கல்வி வேறு; பகுத்தறிவு வேறு. பட்டம் வேறு - பெரிய டாக்டராய் இருப்பார்; அவர் சாணியும், மூத்திரமும் சாப்பிட்டால் மோட்சத்திற்குப் போகலாம் என்று நினைப்பார்!
பெரியவான சாஸ்திர நிபுணராக இருப்பார் அவரும் தன் இறந்த தந்தைக்கு (திதிமூலம்) அரிசி, பருப்பு, காய்கறி, செருப்பு அனுப்புவார். அவரும் தன் மனைவியையும், மகளையும் வீட்டுக்குத் தூரம் என்று திண்ணையில் தள்ளி வைத்துவிட்டு உள்ளே தாழ்ப்பாள் போட்டுத் தூங்குவார். மூட நம்பிக்கையற்ற கல்வி, சமயம் சாராக் கல்வியாக இருக்கவேண்டும்.
‘‘மனிதனின் கல்வியின் அவசியம் எல்லாம் மனித அறிவை வளர்க்கவும், அவ்வறிவால் தான் இன்புறுவதும், மக்கள் இன்புறும் தன்மை ஏற்படவும் அனுகூலமானதாக இருக்க-வேண்டும்.’’ (‘குடிஅரசு’, 27.5.1937) ஸீ
-உண்மை,16-31.1.16

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

கோயில் நுழைவுத் தீர்மானத்தை எதிர்த்த மதுரை வைத்தியநாத அய்யர்!

நூல்:
மனித உரிமைப்போரில்
பெரியார் பேணிய அடையாளம்
ஆசிரியர்:
பேராசிரியர் கு.வெ.கி.ஆசான்
1922இல் திருப்பூரில் நடந்த மாநாட்டில் வகுப்புரிமை மற்றும் கோயில் நுழைவுத் தீர்மானங்களை எதிர்த்தவர்களுக்குப் பாடம் புகட்டவேண்டும் என்பதற்காக, மனுதர்ம நூலையும், இராமாயணத்தையும் கொளுத்த வேண்டும் என்ற கிளர்ச்சித் திட்டத்தை வெளிப்படுத்தினார். திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகள் இது தொடர்பாகத் தரும் செய்தி சுவையானது. “திருப்பூரிலே வாசுதேவ அய்யர் தலைமையில் தமிழ்நாட்டுக் காங்கிரசு கூடியது. நாடார் முதலியோர் கோயில் நுழைவைப்பற்றி இராமசாமி நாயக்கரால் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அவர் பெரும் புயலைக் கிளப்பினார். அத்தீர்மானம் என்னால் ஆதரிக்கப்பட்டது. அதை எதிர்த்தவர் மதுரை வைத்தியநாத அய்யரும், கிருஷ்ண அய்யங்காருமாவர். பின்னே காங்கிரசு ஆட்சியில் (1937_-39) மதுரையில் தீண்டாமையைப் போக்க முயன்றவர் வைத்தியநாத அய்யர் என்று கேட்டு மகிழ்வெய்தினேன். சீர்திருத்த முன்னணிக்குத் தூற்றலும் பின்னணிக்குப் போற்றலும் நிகழ்தல் இயல்பு போலும்.’’
உண்மை,1-15.2.16

ஈரோட்டு மண்ணில் தந்தை பெரியார் நூற்றாண்டு விழா!’’

“தந்தை பிறந்த ஈரோட்டு மண்ணில் கழகம் எடுத்த நூற்றாண்டு விழா!’’
ஈரோடு வரலாற்றில் இப்படி ஒரு ஊர்வலம், இப்படி ஒரு பொதுக்கூட்டம் இதற்கு முன் நடக்கவில்லை; இனி அப்படி ஒன்று நடக்குமோ என்ற வினாக்குறியை எழுப்பும் வரலாற்றைப் படைத்த கருஞ்சட்டை ஊர்வலம் 17, 18.03.1979 அன்று தந்தை பிறந்த மண்ணில் தனி வரலாற்றை படைத்தது.
மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கருஞ்சட்டை சமுத்திரம், ஈரோட்டு நகரின் ஒவ்வொரு துளி மண்ணையும் எழுச்சிப் புயலாக்கியது. வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்வலம் துவங்கும் முன்னே என்னுடைய தலைமையில், டாக்டர் கலைஞர், ஈழத்தமிழர் தலைவர் அமிர்தலிங்கம், திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் உள்ளிட்ட கழகத் தோழர்கள் புடைசூழ தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் சிலைகளுக்கு மலர்மாலை சூட்டி ஊர்வலத்தில் பங்குகொள்ள டாக்டர் கலைஞர் அவர்கள் கருஞ்சட்டை அணிந்து சங்கமித்த அந்த காட்சி மறக்க-முடியாத உணர்ச்சிக் காவியமாக அமைந்தது.
ஊர்வலம் கழகத் தோழர் பெருமாள் தலைமையில் தொடங்கியது. கழகப் பொருளாளர் தஞ்சை கா.மா.குப்புசாமி அவர்கள் தலைமையில் மாநாடு தொடங்கியது. விழாவில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எம்.கல்ணயாணசுந்தரம் எம்.பி. ஆகியோரும் கலந்துகொண்டனர்.
விழாவில் நான் உரையாற்றும்போது, “தந்தை பிறந்த மண்ணிலே இன்றைய தினம் மாபெரும் விழா நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. சரித்திரச் சிறப்பு வாய்ந்த விழாவாக அமைந்திருக்கிறது. அதேநேரத்தில், சிறப்பான கொள்கை விழாவாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இனவிழாவாக அமைந்திருக்கிறது’’.
அதைப்போல் அய்யாவின் கொள்கைகளுள் முக்கியமான கம்யூனல் ஜி.ஓ. சட்டத்தில் இந்த அரசுக்குத் தடுமாற்றமும்  சரியான குழப்பமும் ஏற்பட்டுள்ளது. தந்தை பெரியார் அவர்கள் போராடிப் பெற்ற வகுப்புவாரி பிரதிநித்துவ உரிமையை இந்த அரசு முடமாக்கிட முனையுமானால், திராவிடர் கழகம் எந்த விலையையும் கொடுத்து அதனை தடுத்து நிறுத்தும். இயக்கத்தின் இளைஞர் பட்டாளம் இப்போரில் முன்னணியில் நிற்பார்கள்.
“தந்தை பெரியார் அவர்களின் கொள்கைக்கு ஆபத்து என்றால், அதனைத் தடுத்துக் காக்கத் தூக்கு மேடையும் ஏறத் தயார்’’ என்று முழக்கத்தை முன்வைத்தேன்.
நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட கலைஞர் அவர்கள் கறுப்புச் சட்டையுடன் காட்சியளித்தார். அப்போது விழாவில் பேசும்பொழுது, “தந்தை பெரியார் அவர்கள் இந்தச் சமுதாயச் சீர்திருத்த இயக்கத்தை _ சமுதாயப் புரட்சி இயக்கத்தை இன்றைக்கு கட்டுக்கோப்போடு நடத்திச் செல்கின்ற பெரும்பொறுப்பை, அருமைச் சகோதரர் உரிமையோடு நான் தம்பி என்றுகூட அழைக்கலாம், அப்படிப்பட்டவர் இந்த இயக்கத்தை கட்டுக்கோப்பாக நடத்திச் செல்கிறார் என்றால் தந்தை பெரியார் சார்பாக _ அன்னை மணியம்மையார் சார்பாக இந்த அரிய முயற்சியில் ஈடுபட்டிருக்கின்ற அருமைத் தம்பி வீரமணி அவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்வது என்னுடைய பெரும் கடமையாகும்’’ என்று குறிப்பிட்டார்.
இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்த எம்.கல்யாணசுந்தரம் அவர்கள் பேசும்பொழுது, “பெரியார் அவர்களோடு 1952க்குப் பிறகு தனிப்பட்ட தொடர்பு கொண்டிருந்தவன் நான். ஆனால் அதற்கு முன்பே, தமிழ்நாட்டில் கம்யுனிசம் பரவுதற்குக் காரணமாக இருந்ததற்கு முக்கியமானவராக இருந்த அவரை நான் நன்கு அறிந்திருந்தேன். சிங்காரவேலனாரும், அவரும் பொதுவுடமைக் கருத்துக்களைத் தமிழ் மண்ணிலே தூவினார்கள்.
ஜாதியின் பெயரால் நிலவும் ஏற்றத்தாழ்வு ஒழிய வேண்டும்; சமத்துவம் மலர வேண்டும் என்று பெரியார் கூறியதிலே எங்களுக்கு உடன்பாடு உண்டு. மூடநம்பிக்கை முற்றிலும் ஒழிய வேண்டும். பகுத்தறிவு மலர வேண்டும் என்பதற்காக பெரியார் உழைத்த உழைப்பு சாதாரணமானதல்ல.
பெரியாருக்கு விழா யார் எடுத்தாலும் கலந்துகொள்ள வேண்டியது நமது கடமை என்ற முறையில் கலந்துகொண்டேன். நம் நாட்டில் கம்யூனிஸ்ட் என்றால் என்ன? பூர்ஷ்வா என்றால் என்ன? என்பதற்கு எல்லாம் விளக்கம் முதன்முதலில் எழுதியது பெரியார் அவர்களின் ‘குடிஅரசு ஏடு’தான்.
வடநாட்டில் ஒரு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிற்படுத்தப்-பட்டவர்களுக்கு இடஒதுக்கீட்டுப் பிரச்சினை. தமிழ்நாட்டிலே எப்படி 50 சதவீதம் தாழ்த்தப்-பட்ட, பிற்படுத்தப் பட்டவர்களுக்கு இடம் ஒதுக்கினார்கள் என்று என்னைக் கேட்கிறார்கள். பெரியார் அவர்கள் பாடுபட்டு இருப்பதை அவர்களுக்கு நான் சுட்டிக்-காட்டினேன்.
பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டியது அவர்களின் ஜனநாயக உரிமை என்று பிற்படுத்தப்பட்டோர் கமிஷனுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் சார்பில் கருத்தைத் தெரிவித்துள்ளேன்.
இந்தியா பல மொழிகள் பல கலாசாரங்கள் பல இனங்கள் கொண்டநாடு. இத்தகைய நாட்டில் ஒரு குறிப்பிட்ட மொழியின் ஆதிக்கமோ, குறிப்பிட்ட கலாச்சாரத்தின் ஆதிக்கமோ, குறிப்பிட்ட இனத்தின் ஆதிக்கமோ நடைபெறாத காரியமாகும்.
தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கம் மொழிப் பிரச்சினைக்காகப் பாடுபட்டு இருக்கிறது. மொழி ஆதிக்கத்தை எதிர்த்துக் குரல் கொடுத்து இருக்கிறது.
சுரண்டல் அற்ற ஒரு சமுதாயத்தை நாம் அமைத்தாக வேண்டும். அப்படி அமைக்கப்-படும்போது சமுதாயத்தில் மொழி பிரச்சினை மட்டுமல்ல, அதனைப் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கும் நிச்சயம் தீர்வு கிடைக்கும்’’ என்று அவர் குறிப்பிட்டார்.
நூற்றாண்டு விழாவில், முதல்நாள் இரவில் நடை-பெற்ற கருத்தரங்கில் தலைமை வகித்து பேசிய பெரியார் பேருரையாளர் பேராசிரியர் மா.நன்னன் அவர்கள் உரை-யாற்றுகையில்,
இந்த கருத்தரங்கிற்கு நான் தலைமையேற்பது என் வாழ்வில் நான் பெற்ற சிறந்த பேறாகும்.
கடவுளை மறக்கச் சொன்னால், மற்றொன்றை நினைக்கச் சொல்ல வேண்டு-மல்லவா?  “அதுதான்  மனிதனை நினை’’ என்று பெரியார் சொன்னார். புரட்சி என்றால் புரட்டித் தள்ளுவதாகும். இரத்த ஆற்றை ஓடவிட்டு உருவாக்குவது ஒருவகை; மக்கள் மனதிலே புரட்சித் தாகத்தை உண்டாக்கி புரட்சியை விளைவிப்பது  இரண்டாவது வகை.
தந்தை பெரியார் இரண்டாவது வகையானப் புரட்சி உண்டாக்கப் பாடுபட்டார். அதனால்தான் மனிதனுடைய சிந்தனையிலேயே புரட்சியை உண்டாக்கி, அதன் அடிப்படையிலே புரட்சியை உண்டாக்கிவிட்டால், அதை யாரும் மாற்றி அமைத்து விடமுடியாது என்பது அய்யாவின் கணிப்பாகும்’’ என்று குறிப்பிட்டார்கள்.
கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய பெரியார் பேரூரையாளர் பேராசிரியர் ந.இராமநாதன் அவர்கள் பெரியார் ‘ஒரு புரட்சிவாதி’ என்ற தலைப்பில் ஆற்றிய உரையில், “தந்தை பெரியார் அவர்கள் இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன கருத்துக்களையும் மாநாடுகளில் போட்ட தீர்மானங்களையும் தான், இன்றைய தினம் பொதுவாக ஆட்சிகள் நடை-முறைப்-படுத்தி வருவதை நாம் பார்க்கின்றோம். மனித வாழ்வில் அவர் சொல்லாத கருத்துக்களே இல்லை எனலாம்.
தமிழகத்தில் ஒரு சரியான ஆட்சி வந்து, இப்பொழுதுள்ள சட்டங்கள் அனைத்தையும் அழித்து அய்யாவின் கருத்துக்களை சட்டமாக ஆக்குமேயானால் அதைவிட ஒரு சிறந்த மனித வாழ்வுக்கு வாய்ப்பே இல்லை.
அய்யாவை  யுனெஸ்கோ பாராட்டுகிறது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் எல்லாம் அய்யாவின் கருத்துக்களை ஆராய்ச்சி செய்கின்றன. அந்தக் கருத்துகளிலே டாக்டர் பட்டங்கள் பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள். புரட்சிக்கவிஞர் மிக அழகாகச் சொன்னார்,
தொண்டு செய்து பழுத்தபழம்
துயதாடி மார்பில் விழும்
மண்டைச்சுரப்பை உலகுதொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
அவர் தாம் பெரியார்! என்று மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டினார்.
மற்றவர்கள் எல்லாம் புரட்சியைப் புத்தகங்களில் படித்தவர்கள்; பெரியார் அப்படி அல்ல!
எல்லாம் சுயசிந்தனைகள் அத்தகைய சிந்தனைகள் அவருக்கு இளமை முதற்-கொண்டே இருந்து வந்தன.
அந்தச் சிந்தனைகள் தான் வளர்ச்சித் திசையில் அவருடைய கருத்துக்களாக உயர்ந்து மலர்ந்தன.
விருதுநகரிலே ஒரு பொதுக்கூட்டம். ஆரியத்தையும், அதன் அடிவருடிகளையும் தாக்கு தாக்கென்று தாக்கினார். ஒருவர் கோபம் அடைந்து கத்தியைத் தூக்கிக் கொண்டு மேடையை நோக்கி ஓடி வந்தார்.
ஓடிவந்தவரின் கையைப் பிடித்துத் தடுத்து பெரியார் தன் பக்கத்திலேயே உட்கார வைத்துக் கொண்டார்.
கூட்டத்தார்களும் ஆதரவாளர்களும் அந்தப் பேர் வழியைத் தாக்கப் பாய்ந்து வருகிறார்கள். அவர்களைத் தடுத்து அந்தப் பேர்வழியை அமைதியாக வீட்டில் கொண்டு போய்விடச் சொன்னார். அப்பொழுது அஞ்சாநெஞ்சன் அழகிரியும் அய்யாவுடன் இருந்தார்.
இதைச் சுட்டிக்காட்டி அழகிரி சொன்னார், “இவர் தான் பெரியாருள் பெரியார்’’ என்றார்.
மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? அவனை ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என நினைப்பார்கள், அய்யாவோ அதற்கு மாறாக நினைக்கிறார். அவன் அறியாமையில் நடந்து கொண்டான்; அவனைத் திருத்தினால் நமக்கே தொண்டனாவான் என்றார்.
பல்லாயிரம் ஆண்டுகாலமாக கடவுள், மதம், ஜாதி, சாத்திரம், சம்பிரதாயம் இவற்றால் பாழ்பட்ட மக்களைத் திருத்த பெரியார் எந்தப் படை கொண்டு வந்தார்?
தன்னந்தனி மனிதனாக நின்று, தனது சொந்தக் கருத்துக்களால் திருத்தினார். அதனால்தான் அய்யா அவர்கள் மறைந்த பின்பு அவருடைய கருத்துக்கள் நிலைப் பெற்று வாழ்கின்றன, வளர்கின்றன!’’ என்று பல்வேறு சம்பவங்களை விளக்கியுள்ளார்.
விழாவில் ஜனசக்தி ஆசிரியர் தா.பாண்டியன் எம்.ஏ.பி.எல் அவர்கள் ஆற்றிய சிறப்புரையில்,
“50 ஆண்டுகளுக்கு முன்பு நாம் சொன்னால் யார் கேட்டார் என்று பெரியார் அவர்கள் ஒதுங்கி நின்று இருந்தால் இன்று பேசப் பலருக்கு நா எழுந்து இருக்காது, எழுதுவதற்குப் பலருக்கு பேனா துணிந்து இருக்காது.
ஒருவர் எங்காவது தொடங்கி அடித்தால் தான், ஒருவர் கோடு கிழிக்கத் தொடங்கினால்-தான் நியாயம் பிறக்கும். எனவே, அவர் மனித குலம் முழுவதுமே அடக்கிக் கொண்டு இருந்த அறியாமை இருட்டுக்குத் தீ கொளுத்தி ஒரு புதிய சமுதாயத்தைத் தொடங்க வேண்டும் என்பதற்காகத் தான் தடம் போட்ட மாமனிதர்.
எனவே ஒரு தனி மனிதர் என்ற முறையிலேயே அவர் ஓர் சக்தியாகத் திகழ்ந்தார் அவர் வாழும் காலம் முழுமையும் அவரோடு மோதிக் கொண்டவர்கள் பட்டியலையும் அருகாமையில் நின்றவர்கள் பட்டியலையும் பார்த்தால் மோதி நின்ற மாமலைகள் மிகப் பெரிது என்று குறிப்பார்கள்.
எழுதவும் படிக்கவும் தெரியாது, காசு கொடுத்து வாங்கவும் மாட்டான். இதற்காக நாம் சும்மா இருந்தால் கெடுதல் என்று தான் வாயாலேயே கருத்துப் பிரச்சாரம் செய்து மக்களது அறியாமையினை நீக்குவதற்கு என்று மேடை கலைக்கே முதல் மேடை போட்டுத் தந்தவர் தமிழகத்தில் பெரியார்  ஆவார்.
இந்தப் பெரியாரால் உருவாக்கப்பட்ட பெரிய பேச்சாளர்கள் தான் தமிழகத்தை அநேகமாக கடந்த நாற்பது ஆண்டுகாலமாக நாவால் ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால், அத்தனைப் பேரையும் பேசவைத்தப் பெரியார் தமக்கென மேடைக்கென்றே ஒரு பாணியை அமைத்துக் கொண்டு பேசியதே இல்லை.
வீட்டிலும், வெளியிலும் இயற்கையாகவே என்ன பேசுவாரோ அவையேதான் மேடை பேச்சிலும் அமைந்திருந்தன’’ என்று குறிப்பிட்டார்கள்.
கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி, குடந்தை ஏ.எம்.ஜோசப், உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும், கழகத் தோழர்களும், தோழியர்களும் கருஞ்சட்டை பட்டாளங்களாக பெருந்தீவிரமாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-உண்மை,1-15.2.16