வெள்ளி, 22 மார்ச், 2019

புல்லேந்தும் கை வாளேந்துமா?பார்ப்பனர்கள் ஆணவத்தோடு அந்தணர் மாநாட்டைக் கூட்டி நமக்கு சவால் விடுகிறார்கள். நேற்று முளைத்த காளான்கள் தானே நீங்கள் என்ற தன்மையை நீங்கள் அறியாமல்  போனதேனோ? காளான்கள் வெயிலில் கருகி போகும். மழை பெய்தால் துளிர்க்கும், அதுபோல் இந்த சுயராஜ்ய காலம் உங்களுக்கு மழைக்காலமாயிருக் கிறது. நீங்கள் துள்ளிக் குதிக்கிறீர்கள். நாளை மக்கள் அறிவு பெற்றெழுவார்களானால் (வெயிற்காலம் வருமானால்) நீங்கள் காளான்களைப்போல் கருக வேண்டிவர் கள்தானே! இதை சிந்திக்க வேண்டாமா நீங்கள்?

நாங்கள் நம்பிக்கை குறைவாக நடந்து கொண்டதாக ஒரு உதாரணமாவது உங்களால் காட்ட முடியுமா? உங்களிடம் பண்டிதர்களும், பி.ஏ.க்களும், எம்.ஏக்களும் இருக்கிறார்கள் என்று வேண்டுமானால் நீங்கள் பெருமையடித்துக் கொள்ளலாம் என்றாலும், நேற்று புதிதாக பள்ளியைவிட்டு வந்து எங்கள் கழகத்தில் சேர்ந்து ஒரு 10 நாளைக்குள் கருப்புச் சட்டை போட்டுக் கொண்டிருந்த மாணாக்கன் ஒருவனுக்குப் பதில் சொல்ல முடியவில்லையே உங்களால்!  அவன் கூறுவானே பதில், நீங்கள் என்ன கேள்வி கேட்டாலும் உங்கள் பெரிய பெரிய தலைவர்கள் பேச வந்தால் கூட ஒரு 2, 3 ஆயிரம் பேரைக் கூட்ட முடியவில்லையே! எங்கள் கழக மாணவன் ஒருவன் பேசுவதா யினும் கூட ஆயிரக்கணக்கில் கூட்டம் சேர்ந்து விடுகிறதே! ஒரு கருப்புச் சட்டைக் காரனைத் தொலைவில் பார்த்தால் கூட உங்கள் தலைவர்கள் கூட்டத்தை முடித்துக் கொண்டு ஓடிவிடுகிறார்கள். இதன் அர்த்த மென்ன? வரப்போகிற அரசியல் சட்டம்  எப்படி இருக்க வேண்டுமென்று எடுத்துச் சொல்லக் கூடவா எங்களுக்கு உரிமை இருக் கக் கூடாது. எங்கள் உரி மையை எத்தனை நாள் மறுத்து வரமுடியும்? வெடிகுண்டை மூடி வைத்தால் எத்தனை நாளைக்கு அது வெடிக்காமல் இருக்கும்? இந்நாட்டைப் பற்றியோ, இந்நாட்டு மக்களைப் பற்றியோ  அவர்களுக்கு (பார்ப்பனர்களுக்கு) கவலை கிடையாது. ஆகவே அவர்களை கண்டு நீங்கள் ஆத்திரப்பட்டு விடக்கூடாது. ஆராய்ந்து தெளிய வேண்டும். நீங்கள் (தமிழர்கள்) பார்ப்பனர் திராவிடர் போராட் டம் ரொம்பவும் வளர்ந்துவிட்டது.  பார்ப்ப னர்களும் துணிந்துவிட்டார்கள். துணியக் காரணமும் இல்லாமல் இல்லை.

இன்று ஆட்சி  இவர்கள் ஆதிக்கத்தில் இருக்கிறது. அநேகமாக இவர்களின் ஆதிக்கத்திற்கு இதுவே கடைசி காலமாகவும் இருக்கக் கூடும். இன்று தவறின்  நாளை ஆட்சிய யார் கைக்குச் செல்லுமோ என்று அஞ்சுகிறார்கள். ஆகவே ஆட்சி தம் ஆதிக்கத்தில் உள்ள போதே நம்மீது பாய்ந்து தம் ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்ள நினைக்கிறார்கள். கருப்பு நாய், வெள்ளை நாய் ஆகாது. கழுதை குதிரை யாகாது. ஆண் பெண்ணாக மாற முடியாது. பெண் ஆணாக மாற முடியாது. இவை எப்படி ஆண்டவன் படைப்போ, அதுபோல் ஆண்டவனால் பார்ப்பனாகப் பிறப்பிக்கப் பட்டவன் பார்ப்பானாகத்தான் இருப்பான். ஆண்டவனால் சூத்திரனாகப் பிறப்பிக் கப்பட்டவன் சூத்திரனாகத்தான் இருப் பான்.  இவைகள் மாற்ற முடியாதவைகள் என்று கூறியிருக்கிறார்கள்.  திவான் பகதூர் ராமசாமி சாஸ்திரியார், எம்.எஸ். சுப்ரமணி அய்யர் ஆகியோர் கூடி இனி இரண்டிலொன்று பார்த்துக் கொள்ள தீர்மானத்திருக்கிறார்கள்.  புல்லேந்திய கை வாளேந்தும். பலமுறை வாளேந்திப் பலரைக் கொலை செய்திருக்கிறோம். பலரை அண்டியிருந்து பிழைத்திருக்கி றோம்? என்று கூறினாலும் மார்தட்டிக் கூறுகிறார்கள். சிப்பாய் கலகத்தை நடத்தி யவர் யார் தெரியுமா ராணா என்கிற ஒரு பார்ப்பான். ஞாபமிருக்கட்டும். அதுமட் டுமா? திருநெல்வேலியில் ஆஷ் துரையை சுட முன்வந்தவன் யார் தெரியுமா? வாஞ்சி என்கிற ஒரு பார்ப்பான் என்று கூறிவிட்டு இதுமட்டுமா உலகமே போற்றிய உத்தமர்  காந்தியாரைக் சுட்டுக் கொன்றது யார் தெரியுமா? கோட்சே என்கிற ஒரு பார்ப் பான் என்பது ஞாபகம் இருக்கட்டும் என்று கூறாமல் குறிப்பு மட்டும் காட்டியிருக் கிறார்கள். துப்பாக்கி எடுக்குமளவு துணிந்து நம்மை போருக்கு அழைக் கிறார்கள்.

நாம் அஞ்சாமல் எதிர்த்து நிற்போம்  அவர்கள் பேச்சுப்படி முன்வரட்டும்!


அதற்கு முன் சற்று அந்த அய்யர் கூறியிருப்பதை அலசிப் பார்ப்போம். ஆணைப் பெண்ணாக்க முடியாது.  பெண்ணை ஆணாக்க முடியாது என்கிறார். அய்யோ பாவம்! இன்னும் இந்த அய்யன் பஞ்சாங்கக் காலத்திலேயே இருக்கிறார். மேனாட்டு அறிஞர்கள் இதற்கும் வழிகண்டுபிடித்து விட்டார்கள் என்பதையும்,  ஒரு பெண் ஆணாக்கப் பட்டு விட்டார் என்பதையும் இயற்கை யாகவே சேவல் பெட்டையாவதும், பெட்டை சேவலாவதும் சகஜமாகவே இருந்து வருகிறது என்பதை இவர் அறிந்து கொள்ள வேண்டுகிறோம்.

அடுத்த படியாக பாப்பானும்  சூத்திர னும் கடவுள் படைப்பு என்பது.ஆகவே இவ்வேற்றுமை மாற்றக் கூடாது. மாற்ற முடியாது என்கிறார். இந்தப் பார்ப்பானை படைத்த கடவுள்தானே என்னையும் படைத்திருக்க வேண்டும்? அந்தக் கடவுள் அனுமதியில்லாமலா பாப்பானை ஒழிப்பது தான் சூத்திரனை ஒழிப்பதுதான் என் வேலை என்று கூறிக் கொண்டு அதை யொட்டி பிரசாரம் செய்து வருவேன்? நான் மட்டும் எப்படிக் கடவுள் ஆக்கி னைக்கு புறம்பாக நடக்க முடியும்? அப்படி யிருக்கும் போது அவரண்டையே போய் முட்டிக் கேளேன். ஆண்டவனே அந்தண னையும் படைத்து அவனை ஒழிக்க ஒரு இராசாமி நாய்க்கனையும் ஏன் படைத்தாய் என்று! உன் மண்டையில் இருப்பது  மூளையா? களிமண்ணா? மூளையிருந் தால் இதை உன்னால் உணர்ந்து கொள் ளாதிருக்க முடியுமா? இதுவரை பல கஷ்டங்களுக்கிடையேயும் இந்தத் தூத்துக்குடியில் சுமார் ஒன்றரை இலட்சம் பேர் கூடியிருக்கிறோம் என்றாலும் ஒரு பார்ப்பனப் பத்திரிகையாவது ஒரு வரி எழுதுமா இங்கு நடக்கும் நடவடிக்கைப் பற்றி?   ஏதாவது ஒரு சின்னக் கலவரம் இங்கல்ல, தூத்துக்குடிக் கடைத்தெருவில் கருப்புச் சட்டையினர் கலாட்டா என்று பிரசுரிக்கின்றவா இல்லையா பாருங்கள்? அவ்வளவு கட்டுப்பாடாக நம் சங்கதியை மறைக்கின்றன. எங்கோ சென்னை ரஸிக ரஞ்சனி சபாவில் மூணே முக்கால் பார்ப் பனர்கள் கூடினார்கள் என்றால், அதுபற்றி ஒவ்வொரு பார்ப்பன பத்திரிகைகளிலும் ஒரு பக்கம் சேதி வருகிறதே இந்த அக்கிரமத்தைப் பற்றிக் கேட்க ஆளுண்டா! இவ்வளவு அக்கிரமம் நீங்கள் செய்து கொண்டு புல்லேந்தும் கை வாளேந்தும் என்று கூறுகிறீர்கள். அடுக்குமா, இந்த ஆணவம் உங்களுக்கு?

வாங்கோ! தம்பிகளே வெளியில், இப்படி நீங்கள் நேரில் வரவேண்டும் என்று தானே இவ்வளவு காலம் பொறுத்திருந் தோம். எவ்வளவு சீக்கரம் வெளிவருகிறீர் களோ! அவ்வளவு சீக்கரம் எங்களுக்கு நலமா யிற்றே! அவ்வளவு சீக்கிரத்தில் எங்களது இழிவும் ஒழிந்து போகுமே! நீங்கள் இருப் பது 100க்கு 3 பேர் நாங்கள் இருப்பது 100க்கு 97 பேர். எங்களில் ஒரு ஆள் உங்களில் ஒரு ஆளைக் கூடவா வெற்றிக் கொள்ளமாட் டான்? நாங்கள் 97 க்கு 3 பேர் அழிந்தால் பரவாயில்லை. மிச்சம் இருக்கும் 94 பேராவது இழிவு நீங்கி மனிதர்களாக வாழ்வார்கள். உங் களில் 3க்கு 3 பேர் மாண்டால் அப்புறம்  சைபர்தான் இருக்கும். புல்லேந்தியவர் வாளேந்தினால், வாளேந்தி யவர்கள் என்ன ஏந்துவார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள் விரல் உரல் ஆனால், உரல் என்ன ஆகும்?அப்புறம் உங்கள் கதி என்னவா கும்? என்பதையும் நினைத்து பாருங்கள்.

அனுதினமும் பார்ப்பனர்கள் தான் திராவிடர்களுக்கு தொல்லை கொடுத்து வருகிறார்களே ஒழிய திராவிடர்களல்ல. பார்ப்பனர்களுக்கு தொல்லை கொடுத்து வருவது என்பதை எல்லா மக்களும் உணர்ந்து கொள்ள  வேண்டும். பார்ப்பனர் கள் வாழையிலைகள், திராவிடர்கள் முட்செடிகள். வாழையிலை முள்ளின் மீது மோதினாலும், முள் வாழை இலை மீது மோதினாலும் வாழையிலை தான் அழிந்து விடும். அதுபோல பார்ப்பனர்கள் திரரவிடர் கள் மீது மோதினாலும் தாம்தான் அழி வார்கள். திராவிடர்கள், பார்ப்பனர்களை மோத ஆரம்பித்தார்களோ அப்புறம் பார்ப்பனப் பூண்டே இந்நாட்டில் இருக்காது. இதைப் பார்ப்பனர்கள் உணர வேண்டும்.

(தூத்துக்குடி திராவிடர் கழக 18 ஆம் மாகாண மாநாட்டில் தந்தை பெரியார் அவர்களின் உரை  குடிஅரசு சொற்பொழிவு 29.5.1948)
-  விடுதலை ஞாயிறு மலர், 9.3.19

புதன், 20 மார்ச், 2019

பார்ப்பனர்களே! கனவு பலியாதுதந்தை பெரியார்


காந்தியாருடைய முடிவிற்குப்பின் அவருடைய பிரிவை மறப்பதற்காக என்று, இந்து மத சாஸ்திர சம்பிரதாயங்களின்படி பதிமூணாம் நாள் அஸ்தி கரைக்கும் சடங்கு இந்திய யூனியன் முழுவதும், எந்த அளவு இந்து மத வெறிக்கு இடம் கொடுக்க முடியுமோ, அந்த மாதிரியான நடவடிக்கைகளால் நடந்து முடிந்திருக்கிறது. காந்தியாரைப் படுகொலை செய்தவன் ஒரு பார்ப்பனன் - இந்துமத சாம்ராஜ்ய வருணாசிரம வெறியன் என்கின்ற கொடுமையை எப்படி மறைக்கிறது என்று ஏங்கிக் கொண்டிருந்த இந்த நாட்டுப் பார்ப்பனர்களும், பார்ப்பனியத்திற்கு ஒத்தாசையாக இருந்தே வயிற்றுப் பிழைப்பையும், கவுரவத்தையும் மற்ற நடவடிக்கைகளையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கின்ற நிலைக்கு வந்துவிட்ட பக்தர்கள், தொண்டர்கள், தலைவர்கள், தியாகிகள், மந்திரிகள் என்பது போல பல முத்திரைகள் குத்திக் கொண்டவர்களும், பிரபுக்கள், ஜமீன்தார்கள், கள்ள மார்க்கட் வியாபாரிகள் என்கிற பெயர்களிலிருக்கிற பகற்கொள்ளைக்காரர்களும், ஆச்சாரியர்கள், சுவாமிகள், மகந்துக்கள், என்கின்ற பெயர்களிலிருக்கிற தீவட்டிக் கொள்ளைக்காரர்களும் சேர்ந்து போட்டிப் போட்டுக் கொண்டு படிதாண்டாத பக்தர்களாக ஆகிப் பார்ப்பனிய மதத்திற்கு இப்போதைய நிலைமையில் எவ்வளவு பாதுகாப்புச் செய்ய முடியுமோ, அவ்வளவையும் செய்து விட்டார்கள். இந்த நடவடிக்கைகள் மறைந்த பெரியார் காந்தியாருக்கு மரியாதையைச் செய்வதாகும் என்று சொல்லப்படுவதை நாம் ஒப்புக் கொண்டாலும், இந்தக் காரியத்தின் ஆடம்பரங்களால் பார்ப்பனியம் எப்படி உலகத்தின் கண்களில் மண்ணைத் தூவி விட்டது? அதனுடைய சதிச் செயல் நிறைவேறுவதற்கு மேலும் எந்த மாதிரிக் காரியங்கள் செய்து வருகின்றது? என்பதைத்தான் இங்கு எடுத்துக்காட்டுவதற்கு ஆசைப்படுகிறோம்.

பார்ப்பனிய மதக் கொடுமையை - வஞ்சகத்தை - மானத்தை அழிக்கும் செயலை - கொள்ளையும், கொலையும் செய்யும் கொடிய போக்கினை இந்த திராவிட நாட்டில் பிறந்து மறைந்த ஒவ்வொரு அறிவாளியென்று பெயர் எடுத்தவர்களும், அந்தந்தக் காலத்தில் எந்தெந்த அளவு அவர்களால் தெரிவித்திருக்க முடியுமோ, அப்படி அப்படித் தெரிவித்துத்தான் போயிருக்கிறார்கள் என்பதையும், அவைகளெல்லாம் வெறும் பக்திக்குரிய, பூஜைக்குரிய, பாராயணத்திற்குரிய ஏட்டுச் சுரைக்காய்களாக ஆகிவிட்டன என்பதையும் அவற்றை தெரிவித்தவர்கள், சித்தர்கள், அடியார்கள், வள்ளலார்கள், மகான்கள் என்கிற பெயர்களுக் குரியவர்களாக ஆகிவிட்டார்கள் என்பதையும், இந்த பெரியார்களுடைய கருத்துக்கள் மக்களுக்குப் பிரயோசனப் படாமல் போவதற்குப் பார்ப்பனியம் என்னென்ன குள்ளநரிச் செயல்கள் செய்ய வேணுமோ, அதையெல்லாம் செய்து விட்டது என்பதையும் நாம் பல முறையும் விளக்கி வந்திருக்கிறோம்.

இந்தப் பார்ப்பனர்களின் மோசடித் தன்மை தொலைய வேண்டுமானால், இந்த நாட்டு மக்களை மூடப்பழக்க வழக் கங்களிலிருந்து தடுத்தாக வேண்டுமானால், மக்கள் எல்லோரும் ஒரே குலம் என்கிற நல்லுணர்ச்சியைக் கைக்கொள்ள வேண்டு மானால், உலகத்தின் மற்ற நாடுகளைப் போல் நாமும் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டுமானால், முதலில் மக்களுக்கிடையே பரப்பப்பட்டிருக்கும் மதவுணர்ச்சியின் வேர்களுக்கு வெந்நீரை ஊற்ற வேண்டும்; குருட்டுத்தனமான மதவுணர்ச்சியை வளர்க் கும் பண்டிகைகள் வெறுக்கப்பட வேண்டும்; அயோக்கிய செயல்களுக்கெல்லாம் வளர்ப்பு பண்ணைகளாயிருந்து, மதப் போர்வையைப் போர்த்திக் கொண்டிருக்கும் மடாலயங்கள் எல்லாம் மக்களின் சொத்தாக ஆக வேண் டும்; காந்தியார் சொன்னது போல் விபசார விடுதிகளாயிருக்கும் கோவில்கள் எல்லாம் கோயில் பூனைகளுக்குப் பால் பண்ணையாக இல்லாமல், மக்களுக்கு அறிவுப் பண்ணை யாக ஆக வேண்டும்; என்கிற கிளர்ச்சியை இந்த நாட்டில் கல்லெறிக்கும், சாணி வீச்சுக்கும் செருப்பு வீச்சுக்கும் இடையிலும், அக்கினித் திராவகம் வீசுதல், நெருப்பு வைத்து பந்தலை எரித்தல், சேலையையுரிந்து மானபங்கப்படுத்துதல் என்கிற காங்கிரசார் ஆட்சியில் நடந்த அக்கிரம அட்டூழிய செயல்களுக்கிடையிலும், நமது தலைவர்களும், தொண்டர்களும், தாய்மார்களும் எந்த விதமான சொந்த பிரயோஜனத்தையும் கருதாமல் விடாது செய்துவந்திருக்கிறார்கள் என்பதையும் திராவிட நாடு நன்கறியும்.

பார்ப்பனர்களின் அக்கிரமமான நடத்தையைப் பொறுக்க முடியாமல், மனிதப் பண்பின் மீது வைத்த நம்பிக்கையினால், இந்த மாதிரியான கிளர்ச்சி வலுவாக 25 வருடங்களாகவே நடந்து வந்தாலும், இந்த நாட்டு மக்களை ஏமாற்றி வாழ்வதையே தொழிலாகக் கொண்ட பார்ப்பன வர்க்கத்தின் பிரதிநிதிகளான இந்து, சுதேசமித்திரன் என்கிற விஷ ஊற்றுகளும், அவைகளின் கிளைகளான விகடன், கல்கி போன்ற விஷ சாக்கடைகளும் பாஷ்யங்கள், பட்டா பிராமன்கள், வரதாச்சாரிகள், வைத்தியநாதர்கள் என்கின்ற விஷ கொசுக்களும், பரவி, தீண்டி, கொட்டி வருகிற கொடுமைகளாலும், நம்முடைய இனத் துரோகிகளான கவிதாமணிகள், ரிப்பேர் செய்யும் பண்டிதர்கள் என்பவர்கள் அவர்களோடு கூடிக் கொண்டு அவர்கள் வீசி எறியும் எச்சிலை சுவைத்து ருசித்து, ரசித்துக் கொண்டு, முன்னோடும் பிள்ளைகளாய் இருந்து வருவதாலும், மக்களுடைய சிந்தித் துணரும் திறனை எல்லாத் துறைகளிலும் பங்கு போட்டுப் பறிமுதல் செய்துவந்த துணிவினாலும் நம்மையே நாஸ்தி கர்கள் என்றும், தேசத்துரோகிகள் என்றும், வகுப்புவாதிகள் என்றும் கூசாமல் பார்ப்பனர்கள் பட்டம் சூட்டினார்கள்.

தீவிரவாதிகள், அதி தீவிரவாதிகள் என்று அரசியலில் பெயர் எடுத்தவர்கள் எல்லாம், இந்த மதக் கொடுமையை அறிந்தும் கூட வெளியில் சொல்வதற்கு அஞ்சி வாழ்ந்த காலத்தில், மதவுணர்ச்சியைப் பெருக்குவது, வளர்ப்பது நல்ல தல்ல. மத வெறி நாட்டிற்குப் பெரிய தீமையைச் செய்யும் என்று நாம் கூறிய போது நம்மை நாஸ்திகர்கள் என்று சொன் னதற்கு ஆக நாம் பின் வாங்கவில்லை. ஏன்? எப்படியாவது உண்மை வெளிப்படத்தானே வேண்டும்? எவ்வளவு காலத் திற்குத்தான் புரட்டர்களுடைய திருகுதாளங்கள் வெற்றி யடையும்? என்று எண்ணிய உறுதியான நம்பிக்கை யினாலேயே நம் நம்பிக்கை வீண் போகவில்லை. பெரியார் காந்தியாருடைய படுகொலைக்குப் பிறகு, இந்த நாட்டிலுள்ள எல்லா பத்திரிகைகளும், ஒரே குரலாக மகாத்மாவை மத வெறி அழித்துவிட்டது. மதவெறி ஒழிக! மத வெறியே மாண்டு போ! என்று கூறுவதைக் கேட்க, அப்பாடா! இப்பொழுதாவது இந்த பத்திரிகைகளுக்கு ஞானம் வந்து விட்டதே என்று நம் கோரிக்கை வெற்றி பெற்றதை எண்ணிப் பெருமூச்சு விட்டாலும், இவர்களுக்கு இந்தப் புத்தி வருவதற்காக காந்தியாரா படுகொலையடைய வேண்டும்? என்பதையும், வந்த புத்தி நிலைத்திருந்து அதற்கான வழிகளில் ஈடுபட வேண்டாமா? என்பதையும்தான் இந்த நேரத்தில் வருத்தத்தோடு எண்ண வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம்.

இன்றைக்கு மதவெறி, மதவெறி என்று முழக்கமிடுகின்ற பத்திரிகைகள்,  அந்த மதவெறியை, விஷ நீரை ஊட்டு வதற்காக என்னென்ன முறைகளைக் கையாண்டன? எவ் வளவு துணிந்து அயோக்கியத்தனமாகப் பொய் புளுகுகளை மூட்டை மூட்டையாகப் பரப்பின. இதற்கு சித்திரங்கள், இசைகள், சினிமாக்கள், செய்தி தாபனங்களை எப்படி துணையாகச் சேர்த்துக் கொண்டன என்ற இவைகளை யெல்லாம் கொஞ்சமும் எண்ணிப் பாராமல் இப்போது மதவெறியே! மாண்டுபோ! என்று போடுகிற கூச்சலால் ஏற்படப்போகும் பிரயோசனமென்ன? முந்தின போக்குத் தவறான பாதை என்பதை உணராவிட்டால், இப்போது மதவெறி மதவெறி என்று சேர்ந்து கோவிந்தா போடு வதனுடைய அர்த்தமென்ன?

உண்மையாகவே மதவெறி கொடுமை யானது என்பதை இந்த நாட்டு பார்ப்பனர்கள் உணர்ந்தார்கள் என்றோ, பார்ப்பனப் பத்திரிகைகள், தேசியப் பத்திரிகைகள் தெரிந்து கொண்டு விட்டன என்றோ எவராவது சொல்ல முடியுமா? பார்ப்பனர்கள் உணரவில்லை, பார்ப்பன பத்திரிகைகள் தெரிந்துகொள்ளவில்லை என்ற நிலைமை இருந்தால் கூட பாதகமில்லை. ஒரு பக்கம் மதவெறி மதவெறி என்று கூப்பாடு போட்டுக் கொண்டே, மற்ற ஒன்பது பக்கங்களிலும் மதவெறியைப் பெருக்குவதற்கான காரியங் களையே வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் செய்கிறதென்றால் இந்த போக்குக்கு ஒரு முடிவில்லையா? ஏ! பார்ப்பனியமே! இந்த நாட்டையும் ரத்தக்கறை படிய செய்ய வேண்டும் என்பதிலே ஏன் உனக்கு இவ்வளவு ஆசை? என்பதை நம்மால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

திராவிடர் கழகம் ஒரு வகுப்பு வாத ஸ்தாபனம். பார்ப்பனர்கள் மீது துவேஷத்தைப் பரப்பி வருகிறது. அதை இந்த நேரத்திலே ஒழித்துக் கட்டவேண்டும் என்கிறது இந்து. பேஷ்! ஒரே கல்லால் இரண்டு பட்சிகளை - ஏன் - மூன்று பட்சிகளை வீழ்த்தும் திட்டம் என்று அது உள்ளம் மகிழலாம். காந்தியாரைச் சாகடித்ததற்கு ஏதோ சில பார்ப்பனர் களையாவது பலி கொடுக்க வேண்டியிருக்கிறதே. இந்த பலியினாலேயே ஏன் திராவிடர் கழகத்தையும் வீழ்த்திவிடக் கூடாது? இதுதான் பார்ப்பனர்களின் விருப்பமும், திட்டமும். இந்த செயலுக்கு ஒத்துழைப்போமா? வேண்டாமா? எந்த அளவு ஒத்துழைக்கலாம்? எப்படி இதை வைத்துக் கொண்டு பயமுறுத்தலாம்? என்கிற ஆலோசனையில் ஈடுபட்டிருக் கின்றது, இன்றைய திராவிடர்களை அதிகமாகக் கொண் டிருக்கும் நம் திராவிட நாட்டு மந்திரி சபை. மந்திரி சபை மனம் வைத்தால் ஒரு நாலெழுத்து எழுதிவிட்டால் போதுமே என்று எதிர்பார்க்கின்றார்கள் நம் அருமைப் பார்ப்பனர்கள். எதிர்பார்க்கட்டும்! திராவிடர் கழகத்தை ஒழித்து விடுவ தற்காக எழுதுகின்ற அந்த நாலு எழுத்துக்களே, மந்திரி சபையையும் கவிழ்த்து விடுவதற்குப் போதுமானது என்று எண்ணுகிறது, அவர்களின் சூழ்ச்சி படிந்த மனம். அதுதான் அவர்கள் கருதுகின்ற மூன்றாவது பட்சியாகவும் இருக்கலாம்.

நாம் பார்ப்பனர்களுக்குப் பல முறை கூறியிருக்கிறோம். இது மனு மாந்தா காலமல்ல! உங்களுடைய பேடித்தனமான, மறைந்து தாக்கும் வேலைகள் எல்லாம் திராவிட நாட்டைப் பொருத்தவரையில் பயன்படாது! உங்களுக்குச் சில விபீஷ ணர்கள் அகப்பட்டாலும் கடைசிவரைக்கும் விபீஷணர் களாயிருக்க எந்த ஒரு திராவிடனும் அகப்படமாட்டான்! அப்படி அகப்பட்டாலும் அவன் ஒரு திராவிடனாகவும், திராவிடனுக்குப் பிறந்தவனாகவும் இருக்க மாட்டான் என்றே எதிர்கால வரலாற்றிலே இடம் பெறுவான்! அப்படியே சிலர் அகப்பட்டாலும் அவர்களுடைய துணையைக் கொண்டு திராவிடர்களை அழித்து விடலாமென்று மனதினால் எண்ண வேண்டாம்! ஒவ்வொருத்தனும் ஏன் நான் தேவடியாள் பிள்ளை? ஏன் நான் நாலாம் ஜாதி? அய்ந்தாம் ஜாதி? இந்த நாட்டை என் முன்னோர்கள் ஆளவில்லையா? இப்பொழுது நான் பாடுபடவில்லையா? உழைக்கிறவன் நான், அய்க்கியம், தேசியம், மதம், கடவுள், வெங்காயம் என்கிற பெயர்களால் மேனி வாடாமல் உண்ணுகிறவன் நீயா? என்று தாழ்த்தப்பட்ட தோழர்களிலிருந்து உயர்த்தப்பட்டதாக நடித்துக் கொண்டிருக்கிற மந்திரிகள் வரை கருதிக் கொண்டிருக்கிற காலம் இது.

நீங்கள் சொல்லி வந்த தேசத் துரோகிகள் என்கிற பட்டம் இனி நாட்டில் செலவாணியாகாது என்பதைத் தெரிந்துகொண்டு, வகுப்பு வாதிகள், வகுப்பு துவேஷிகள் என்கிற பட்டத்தைத் தீவிரமாகக் கட்ட ஆரம்பித்திருக்கிறீர்கள். இது நெஞ்சறிந்த பொய் என்று உங்களுக்குத் தெரியும்! வகுப்புத் துவேஷிகள் நீங்களா? அல்லது நாங்களா? இருந்தும், இந்த அபாண் டத்தைக் கண்ணை மூடிக் கொண்டு பரப்பு கிறீர்கள்!

சொல்லுகிறவன் சொன்னாலும் கேட்பவனுக்கு புத்தி எங்கே போச்சு என்கிற பழமொழியைத் தெரிந்திருக்கும் நீங்கள் தான், அந்தப் பழமொழியை அறிந்திருக்கும் மந்திரிகளிடத்தில் தலையணை மந்திரம் செய்கிறீர்கள்! மெய்யாகவே நாங்கள் வகுப்புத் துவேஷிகள், உங்களை (பார்ப்பனர்களை) ஒழித்து விட விரும்புகிறவர்கள் என்று கருதுகிறீர்களா? அது உண்மையாக இருந்தால், உங்க ளுடைய அட்டூழியமான அநீதிகளால் எத்தனை அக்கிர காரங்கள் இதுவரை சாம்பலாகியிருக்க வேண்டும்? எத்தனை பேர்கள் நடுத்தெருக்களிலேயே நாய்களைப் போலச் சாகடிக்கப்பட்டிருக்க வேண்டும்? எத்தனை பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்? வட நாட்டிலே நடந்த மிருகச் செயல்களை நாள்தோறும் கேட்ட இந்த நாட்டில், வகுப்பு வெறி திராவிடர்களால் பரப்பப்பட்டு வருகிற நிலையிருந்திருந்தால், உண்மையாகவே பார்ப்பனன் என்று சொல்லிக் கொள்வதற்கு ஒரு புல் பூண்டு இங்கே இருக்க முடியுமா? ஏன் விபரீதமான முயற்சியில் இறங்கு கிறீர்கள்! நீங்களே பார்ப்பனன், பிராமணன், துரோகிகள் என்று சொல்லிக் கொள்வதிலே, அழைக்கப்படுவதிலே வெட்கப்பட வேண்டும் என்று நினைக்கிறோமே தவிர, உங்களைக் கொன்றெறிந்து விட வேண்டுமென்ற எண்ணம், அதற்கான நடவடிக்கை எங்களிடத்தில் ஒரு காலத்திலும் இருந்ததுமில்லை! இருக்கப் போவதுமில்லை! இந்த நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்வதாயிருந்தால், முதலில் பார்ப்பனியத்திற்குப் பாதுகாவலாய் இருக்கும் எங்கள் தாய்களையும், தந்தைகளையும், மனைவிகளையும் கொலை செய்ய வேண்டியவர்களாவோம். ஏன்? நாங்கள் அழிய வேண்டுமென்று விரும்புவது பார்ப்பனர்கள் அல்ல. பார்ப்பனியமே.

இதற்கு மாறுபாடாக உங்களுடைய இரத்தத்தைச் சிந்தாமலே, எங்களுக்குள்ளே மோதச் செய்து எங்களை அழிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து வந்திருக்கிறீர்கள்! கூடிக் கெடுப்பது, அடுத்துக் கெடுப்பது, பேசிக்கெடுப்பது என்கிற முறைகளும் அதைக் கையாளுகிற ஆண்களும், பெண்களும் என்கிற நிலையும் இனி பிரயோசனப்படாது என்ற முடிவுக்கு வந்தவர்களாய், இந்து மகா சபை என்கிற பெயரால் ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கத்தில் ஆயுதங்களைச் சேர்த்தீர்கள்! கோவில்களுக் குள்ளேயே கவாத்துப் பழகினீர்கள்! இவற்றை உங்களால் மறுக்கமுடியுமா?

மதவெறி, ஜாதிவெறி ஒழிய வேண்டும் என்பதிலே அக்கறையும், ஆசையும், உண்மையும் இருக்கிறதென்றால் என்ன செய்ய வேண்டும்?

மத சம்பந்தமான பேச்சுகளை, மதப்பெருமைகளைக் கூறுகின்ற நூல்களை, பேசுவது, எழுதுவது, வெளியிடுவது, விற்பது என்கிற உங்களுடைய போக்கை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும். பாரதக் கதைகளை எழுதி எழுதிப் பாமரர்களை வஞ்சிப்பதையும், இராமாயணக் கதைகளை எழுதி, எழுதி இழிவுபடுத்தி வருவதையும், புராணங்களை எழுதி, எழுதி புல்லறிவை வளர்ப்பதையும் விட்டொழித்து விட வேண்டும். நிர்வாணப்படங்களைப் போட்டு, ஆடலழகிகளைக் காண்பித்து மக்களை ஆலயங்களுக்கு அழைக்கும் போக்குக்கு ஆதரவு அளிக்கக் கூடாது. மடச்சாமிகளைக் காட்டி மகேஸ்வரன் பெயரைச் சொல்லி மக்களை மந்தமதியினராக்குவதை விட்டொழிக்க வேண்டும். புராண நாடகங்கள், புராண சினிமாக்களை வளர்ப்பது புனிதமானது என்ற போக்கை கைவிட வேண்டும். எந்த கலைகளுமே இந்த நாட்டுப் பழங்குடி மக்களின் வாழ்வைக் கெடுக்கும் நாச கருவிகளால் கையாளப்படுவது வெறுக்கப்பட வேண்டும். ஜாதிக்கொரு நீதி என்ற இந்துலாவை எடுத்துவிட உறுதி வேண்டும். ஒத்த தகுதிக்கு எல்லா மக்களையும் கொண்டுவர முயற்சிக்க வேண்டுமே தவிர, தகுதியில்லாத பலரை ஒரு பட்டியலில் சேர்த்து, தகுதியும் திறமையும் என்று பேசுவதை மறந்துவிட வேண்டும். மத வேறுபாடுகளைக் காட்டும் மதச் சின்னங்களை அணிந்திருப்பது ஆபத்து என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும். இந்த வேலையை இன்னார்தான் செய்ய வேண்டுமென்ற ஜாதிக்கட்டுப்பாட்டை இந்தநாள் வரைதான் கூறி வந்தோம், இனி அந்தப் போக்கு உதவாது என்பதை உணர வேண்டும். காந்தியாரின் மரணத்தை அறிந்து கொள்ள முடியாத ஜோதிடர் வர்க்கங் களையும், தேவ பாஷை என்கிற செப்படி வித்தை செய்து வரும் முன்ஷிகள், சாஸ்திரிகள், புரோகிதர்கள் என்கிற புரட்டர்கள் வர்க்கங்களையும், வேத பாராயணப் பெயரால் விதவிதமான வேஷம் போடுபவர்களையும் அம்பலத்தில் இழுத்து வந்து அவர்களின் அக்கிரமங்களை விளக்கிக் கூற வேண்டும். மக்களின் உழைப்பை, செல்வத்தை மதப்பெயர் கூறி எவர், எந்த முறையில் வஞ்சித்தாலும், அந்த இழிவை இன்றே ஒழிப்பதற்கு அக்கறை காட்டவேண்டும்.

இவற்றை செய்வீர்களா? இக்காரியங்களை செய்ய முன்வராமல் மேலும் மேலும் வகுப்பு வெறியையே வளர்க்கப் போகின்றீர்களா? பதில் கூற வேண்டியதில்லை. நீங்கள் இனிச் செய்து வரும் செயல்களே நாட்டில் பதில் கூறுவதாக ஆகும். ஆனால், இந்துமத சாம்ராஜ்ய கனவை - வருணாசிரம வக்கிர ஆட்சிக் கனவை - எந்தப் பெயராலும், எந்த நடவடிக்கைகளாலும் உங்களால் இந்த நாட்டில் இனி ஏற்படுத்த முடியாதென்பது மட்டும் உறுதி.

'குடிஅரசு' - தலையங்கம் - 21.02.1948

- விடுதலை நாளேடு, 17.3.19