திங்கள், 19 ஜூன், 2023

பார்ப்பனர் மீண்டும் ஆதிக்கம் செலுத்தவே ஹிந்தி - சமஸ்கிருதத் திணிப்பு

 

 *தந்தை பெரியார்

5

நமது நாட்டில் ஆங்கிலப்படிப்பு பரவ ஆரம்பித்த தன் பலனாகவும், ஏழு ஆண்டு களாக நமது இயக்கம் யாருக்கும் அஞ்சாமல், எந்த எதிர்ப்புக்கும் பின் வாங்காமல் உண்மைகளை எடுத்துக்கூறி பிரசாரம் செய்ததன் பலனாகவும், பார்ப்பனீயத்திற்கும், வருணா சிரம தருமங்களுக்கும் ஏற்கனவே ஏற்பட்டிருந்த மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ச்சியடைய ஆரம்பித்து விட்டது. இதனால் உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக்கொண்டும், பூதேவர்கள் என்று கூறிக்கொண்டும், இருந்த பார்ப்பனர்களுடைய கௌ ரவமும் குறையத் தொடங்கி விட்டதென்பதும் உண்மையாகும். ஆகையால் அவர்கள் காங்கிரசின் பெயராலும், அரசாங்க உத்தியோகத்தின் செல்வாக் காலும், மற்றும் பல பொது இயக்கங்களின் பேராலும், தங்களைத் தலைவர்களாகவும், தியாகிகளாகவும், தேசாபிமானிகளாகவும் செய்து கொண்டு, பார்ப்பன ரல்லாத மக்களை ஏமாற்றி வாழ்ந்து வந்தவர்கள், இப்போது மேற்படி பொது இயக்கங்களிலும் பார்ப்பனரல்லாதார் புகுந்து தங்களுக்கும் பங்கு  கொடுக்க வேண்டும் என்று போராட ஆரம்பித்தவுடன் வேறுபல பேர்களாலும், பிரசாரங்களாலும் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்ட முயற்சி செய்கின்றார்கள்.

நமது இயக்கமானது பார்ப்பனர்களை நமது மக்கள் உயர்வாகக் கருதுவதற்குக் காரணமாக  இருந்த 'மதம்', 'வேதம்' 'புராணம்', 'ஸ்ருதி', 'கடவுள்', 'ஆன்மா', 'மோட்சம்', 'நரகம்', 'பாவம்', 'புண்ணியம்', முதலிய அடிப்படைகளிலேயே கை வைத்து அவைகளை அழிக்கத் தொடங்கியவுடன், அவர்கள் விழித்துக் கொண்டு அந்த அடிப்படைகளை மறுபடியும் புதுப்பித்து அவைகள் மூலம் மீண்டும் பழைய ஆதிக்கத்தைப் பெறவே வழி தேடுகிறார்கள். இதற்காகவே பார்ப்பனர்கள், காங்கிரசின் பெயரால், 'மகாத்மா' 'பாரதமாதா' 'அவதாரம்' கதர் 'ஹிந்தி' 'கொடியேற்ற வணக்கம்' 'ஜெயந்தி' விழாக்கள் முதலியவைகளைக்கொண்டு பாமர மக்களின் மனத்தில் பழைய வருணாசிரம தருமத்தையும், மூட நம்பிக்கைகளையும் உண்டாக்குவதோடுமட்டும அல்லாமல், 'பிராமண சபை' 'சனாதன தரும சபை' 'தருமரட்சணசபை' 'வேதோத் தாரண சங்கம்' 'அத்வைத சபை' 'ஹிந்து மத சபா' முதலிய சங்கங்களை அமைத்துக் கொண்டு இவைகள் மூலமாகவும், மக்களுடைய பகுத்தறிவைத் தடுத்து, அவர்களை வைதிக மூடநம்பிக்கையுடையவர்களாக்க முயற்சி செய்கிறார்கள். இந்த மாதிரியான வைதிக சபைக் காரர்களுக்கு நாம் நன்றி பாராட்டுகிறோமேயொழிய உண்மையில் அவர்களிடம் துவேஷமோ, கோபமோ அடையவில்லை. ஏனெனில், அவர்கள் பிராமணர் களின் உண்மை மனக்கருத்தை அச்சபைகளிற் செய்யும் பிரசங்கங்களின் மூலமாகவும், தீர்மானங் களின் மூலமாகவும் வெளிப்படுத்துவதால், பிராமண ரல்லாதார் ஏமாறாமல் இருக்கவும், பிராமணர்களை நம்பிக் கொண்டிருக்கும் மக்களை எச்சரித்துத் திருத்தவும் முடிகிறது, என்கின்ற இந்தக்காரணத் திற்காகவே நாம் அவர்களுக்கு நன்றி பாராட்டுவதாகக் கூறுகிறோம்.

பார்ப்பனர்களுடைய உண்மையான அபிப்பிரா யத்தை அறிய வேண்டுமனால், சென்ற 23-11-1931இல் கும்பகோணத்தில் கூடிய தஞ்சை ஜில்லா பிராமண சபையின் இரண்டாவது வருடக் கொண்டாட்டத்தின் நிகழ்ச்சிகளைக் கவனித்தால் விளங்காமல் போகாது. அப்பொழுது, பணக்காரர்களாகவும், ஆங்கிலம் படித்தவர்களாகவும், வக்கீல் தொழில் செய்பவர் களாகவும் அரசாங்க உத்தியோகத்திலிருந்து உபகாரச் சம்பளம் பெற்று நீங்கியவர்களாகவும், உபாத்தி யாயர்களாகவும், ஒன்றுந் தெரியாத வைதீகர்களாகவும் உள்ள பார்ப் பனர்கள் ஒன்று கூடிப் பேசிய வார்த்தைகளின் சில பகுதிகளைக் கவனிப்போம். (இந்நிகழ்ச்சி சென்ற 26-11-1931ஆம் தேதி வெளியான 'தமிழ்நாடு' பத்திரிகையில் காணப்படுகிறது.)

"நவ நாகரிகத்தில் அகப்பட்டுக் கொண்டு ஆயிரக் கணக்கான பிராமணர்கள் தங்கள் தங்கள் தர்மத்தை மறந்து நிற்கிறார்கள். மாமிசம் உண்ணும் பிராமண னையும், குடிக்கும் பிராமணனையும் நாம் இப்போது பல இடங்களில் காண்கிறோம். எனக்குப் பிரத்தியட்ச மாய்த் தெரிந்ததைத் தான் கூறுகிறேன். டில்லியில் ஓர்விருந்து நடந்தது. அதில் சற்றும் அச்சமில்லாமல் மாமிசம் சாப்பிட்ட பிராமணனை நான் அறிவேன்."

"கவர்னர் முதலிய பிரமுகர்களுக்கு நடத்தும் விருந்துக் கச்சேரிகளில் ஆதிதிராவிடர்களால் பரிமாறப்பட்டு அநேக பிராமணர்கள் சாப்பிடுகிறார்கள். இது என்ன பிராமணீயம் என்று கேட்கிறேன். ஆதி திராவிடர்களைக் கோயில்களுக்குள் பிரவேசிக்கக் கூடாதென்று நாம் சொல்லுகிறோம். ஆனால் ஆதிதிராவிடர்கள் கையில் போஜனம் செய்யும் பிராமணர்களை நாம் கோயிலுக்குள் நுழையாமல் தடுக்கிறோமா? கடல்கடந்துவரும் பிராமணர்களை நாம் வரவேற்று உபசரிக்கிறோம். வைதிகர்கள் பிள்ளைகள்கூட அய்.சி.எஸ். முதலான பரீட்சை களுக்குச் சீமைக்குச் செல்லுகிறார்கள். அதைப் பற்றி நாம் என்ன செய்கிறோம்?" என்று தலைமை வகித்த பார்ப்பனர் பேசியிருக்கிறார்.

இவர் பேசியிருப்பது முழுவதும் உண்மையான விஷயம் என்பதில் யாரும் சந்தேகப்பட வேண்டியதில்லை. இந்த நிலைமையைச் சீர்த்திருத்திப் பழைய வைதிக நிலைமைக்கு மறுபடியும் பார்ப் பனர்களைக் கொண்டு வரவேண்டுமே என்னும் உணர்ச்சியோடு அவர் பேசியிருக்கலாம். அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய தில்லை. மேற் கூறியபடி 'ஒழுக்கம்' கெட்ட பார்ப்பனர்களும் தங்களைப்பார்ப் பனர்களாகவே மதித்துக் கொண்டு மற்றவர்களைச் 'சூத்திரர்களாக' மதிக்கும் அகங்கார மனப்பான்மை தான் ஒழியவேண்டும் என்று நாம் கூறுகிறோம். ஏதோ இவர் இம்மாதிரி பார்ப்பனர்களின் நடத்தையை வெளிப்படையாகக் கூறிவிட்டாரே ஒழிய செய்கையில் மேற்கூறியவாறு 'ஒழுக்கங் கெட்டவர்'களாக உள்ள பார்ப்பனர்களையெல்லாம் பகிஷ்கரிக்க எந்தப் பார்ப்பானும் முன்வரமாட்டான் என்பதை நாம் அறிவோம். நேற்று திருவனந்தபுரத்தில் நடந்த சம்பவத்தைக் கவனித்தாலே இது விளங்கும். திரு. காந்தி, பண்டித ஜவகர்லால் நேரு, லாலா லஜபதிராய், முதலியவர்களைக் கப்பலேறிச்சென்று வந்தவர்கள்  என்ற காரணத்திற்காக உள்ளே செல்வதைத் தடுத்த கோயிலில் மகாராஜாவின் உத்தரவு காரணமாக கப்பல் பிரயாணம் செய்த சர்.சி.பி.ராமசாமி அய்யர் அவர்கள் செல்லவில்லையா? அவர் இல்லாமல் வேறு ஒரு பார்ப்பனரல்லாதாருக்காக மகாராஜாவால் தடை நீக்கப்பட்டு அப்பார்ப்பனரல்லா தாரும் கோயிலுக்குள் போயிருந்தால் திருவாங்கூரில் உள்ள பார்ப்பனர்களும், பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ள வைதிகர்களும் சும்மா இருந்திருப்பார்களா? திருவாங்கூரில் 'இந்து மதம் அழிந்துவிட்டது' என்று போடும் கூச்சல் ஆகாயத்தைப்பிளக்கும் அல்லவா? அன்றியும், இதே சர்.சி.பி. ராமசாமி அய்யர் அவர்கள் சட்டமெம்பராய் இருந்த காலத்தில் கும்பகோணத்திற்கு வந்திருந்தபோது 'உலககுரு' என்று பார்ப்பனர்களால் கூறப்படுகின்ற 'சங்கராச்சாரியார்' அவரை 'ஆசீர் வதித்து' பாராட்டினாரே. இதுபோலவே 'சூத்திரர்கள்' என்கின்றவர்களிடத்தில் பேசினால் 'பாவம்' என்ற கொள்கையையுடைய சங்கராச் சாரியாரும் மற்றும் வைதிகப் பார்ப்பனர்களும், உத்தியோகப் பார்ப்பனர் களையும், இங்கிலாந்து சென்று வந்த பார்ப்பனர் களையும், கறி தின்னும் பார்ப்பனர்களையும், குடிக்கும் பார்ப்பனர்களையும், வரவேற்றும், ஆசீர்வதித்தும் அவர் களைப் புகழ்ந்தும், அவர்களுடைய வாக்கு உதவியையும், பொருள் உதவியையும் பெற்றார்கள்- பெறுகிறார்களே இவற்றையெல்லாம் யாராவது கண்டித்தார்களா? இல்லையே, ஆகையால் மேற்கூறிய பார்ப்பனர் அபிப்பிராயத்தை வேறு எந்தப் பார்ப் பனரும் ஒப்புக்கொண்டு நடத்தையில் அனுஷ்டிக்க முன்வர மாட்டார்கள் என்பது நிச்சயம்.

மற்றொரு பார்ப்பனர் 'ஆங்கிலப்படிப்பினால் தான் பார்ப்பனீயம் கெட்டது' என்று பேசியதற்குப் பதிலாக 'நான் ஆங்கிலக்கல்வி கற்றவனே, ஆனால் என் னுடைய மத தர்மங்களில் அக்கல்வி தலையிட்டிருக் கிறதாய் நான் சொல்ல முடியாது. முக்கியமாய் நாம் நம் சிறுவர்களுக்குச் சமகிருதக் கல்வியைப்புகட்டினால் பல தீமைகள் வராமல் தடுக்கலாம். இது மிகவும் முக்கியமான காரியமாகும்' என்று ஒரு சர்வகலாசாலைப் பட்டம் பெற்ற பார்ப்பனர் பேசியிருக்கிறார். இதி லிருந்து படித்த பார்ப்பனர்களும், உத்தியோகம் செய்யும் பார்ப்பனர்களும் என்ன தான் கெட்டாலும் தங்கள் பிராமணியக் கொள்கைகளைத்தாம் விட்டுவிட்டதாக நினைத்துக்கொள்ளுவதேயில்லை யென்பது விளங்கும், அவர்கள் வருணச்சிரம தர்ம முறைப்படியே தாங்கள் மேலாகவும், மற்றவர்கள் தங்களுக்குக் கீழாகவும் இருக்கவே விரும்புகிறார்கள் என்பதும், அதற்காகவே உழைக்கிறார்கள் என்பதும் உண்மையென்பதில் சந்தேகப்பட வேண்டியதில்லை. மற்றும் "பிராமணியம் ஒருநாளும் அழியாது. அது எந்தக் காலத்திலும் நிலைபெற்றிருக்கும் சக்தியை உடைய தாகும். சென்ற யுகங்களிலும் அனேக பிரா மணர் நாஸ்திக புத்தியை உடையவர்களாய் இருந் தார்கள். இப்பொழுது இது புதிதல்ல" என்று ஒருவரும்?

"நீங்கள் இவ்விடத்தில் ஒரு சத்தியம் செய்து கொள்ள வேண்டும். பெண்களை நாம் பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பக் கூடாது. தகுதியற்ற கல்வியைப் பெண்களுக்குப் போதிப்பதனால் தான் நம்முடைய குடும்பங்கள் கெட்டுப் போகின்றன. நம்மை நாம் பலப்படுத்திக்கொள்ள வேண்டும். சாரதா சட்டத்தை எதிர்த்து அதற்கு நாம் கீழ்ப்படியாமல் இருக்க வேண்டும் இந்தியாவுக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அரசாங்கம் நமக்கு அநேக தீங்குகளைச் செய்யப் போவதும் நிச்சயம். ஆகையால், நாம் முன்ஜாக்கிரதையுடனிருந்து காரியங்களைக் கவனிக்க வேண்டும்" என்று ஒருவரும் பேசியிருக்கின்றனர்.

இந்தப் பேச்சுக்களிலிருந்தும், இவ்வாறு பார்ப் பனர்கள் பிரசாரங்கள் செய்து கொண்டு வருவதிலி ருந்தும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது. "அவர்கள் அனைவரும், மீண்டும் வருணாசிரம தருமராஜியத்தை நிலைநாட்டவே பாடுபடுகிறார்கள்" என்பது தான். இந்த வகையில், பார்ப்பன சபைகளில் உள்ள பார்ப்பனர்களும், காங்கிரசில் உள்ள பார்ப்பனர்களும், அரசாங்கத்தில் உத்தியோகஞ்செய்யும் பார்ப்பனர் களும், மற்றும் எந்த இழிவான நிலையில் உள்ள பார்ப்பனர்களும், தங்கள்  ஆதிக்கம் அழியாமல் இருப் பதற்கும், தங்கள் ஆதிக்கம் மறுபடியும் தேசத்தில் நிலைபெற்றுப் பார்ப்பனரல்லாத மக்களை அடிமைப் படுத்துவதற்குமே பல துறைகளிலும் இருந்து உழைக் கிறார்கள் என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது.

இந்தக் காரணத்திற்காகவே தான், மதசம்பந்தமான 'அவதாரபுருஷர்கள்' எனறு அவர்களாலேயே கொண் டாடப் படுகின்ற 'ஆழ்வார்கள்' 'நாயன்மார்கள்' 'பக்தர்கள்' முதலியவர்களிலும் பார்ப்பனர், பார்ப்பனரல் லாதார் என்ற வித்தியாசத்தை மனத்திற்கொண்டு பார்ப்பனரல்லாத 'ஆழ்வார்'களுக்கும், 'நாயன்மார்' களுக்கும் 'பக்தர்'களுக்கும் பெருமை கொடாமல் பார்ப்பனர்கள் என்பவர்களுக்கே பெருமை கொடுக்கும் இவர்கள், வருணாச்சிரம தருமத்தைக் குரங்குப் பிடியாகப் பிடித்திருக்கும் திரு.காந்தியை, 'மகாத்மா'வாகவும் 'அவதார' புருஷராகவும் கொண் டாடுகின்றனர். இந்தியாவில் உள்ள மதங்களுக்கும், கலை களுக்கும், நாகரிகங்களுக்கும், பாதுகாப்பு வேண்டும் எனக் கூறும் காங்கிரசை, போற்றுகின்றனர். இன்றேல், திரு காந்தியை மூலையில் தூக்கிப்போட்டு விட்டுக் காங்கிரசையும் ஒழித்து விட அவர்கள் முயற்சி செய்யப் பின்வாங்க மாட்டார்கள் என்பது நிச்சயமான செய்தியாகும்.

மக்களுடைய பகுத்தறிவை வளர்ப்பதற்குரிய நூல் களோ, இலக்கியங்களோ இல்லாததும், வருணாசிரம தருமத்தைப் போதிக்கும், துளசிதாஸ் ராமாயணம், பகவத்கீதை முதலிய நூல்கள் உள்ளதுமாகிய இந்தி மொழியைப் பிரசாரம் செய்கின்றனர்.  சனாதன தர்மத்தைப் போதிக்கும் சமஸ்கிருதப் படிப்பை விருத்தி செய்யவேண்டு மென்று பேசுகின்றனர்.

இவ்வாறு செய்வதில் உள்ள தந்திரத்தையும் யோசித்துப் பாருங்கள். ஆங்கிலப் படிப்பினால் விஞ்ஞான அறிவும், பிறநாட்டு நாகரிகங்களும், சுதந்திர உணர்ச்சியும் உண்டான காரணத்தால் தான் இன்று பார்ப்பனரல்லாதார் சுயமரியாதை உணர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்ற விஷயம் தெரிந்தே மேற்கூறியவாறு பிரச்சாரஞ் செய்கின்றனர் என்று கூறுவதில் தவறு என்ன இருக்கிறது என்று கேட்கிறோம்.

இச்சமயத்தில் மற்றொரு விஷயத்தையும், கூறி வைதிக அரசியல் பார்ப்பனர்களின் சூழ்ச்சியை வெளிப்படுத்த விரும்புகிறோம்.

சென்ற சில தினங்களுக்கு முன் குருவாயூர் கோயில் சத்தியாக்கிரகத்தைக் கண்டிக்க முன்வந்த, திரு.எம்.கே. ஆச்சாரியார், "கோயில் பிரவேசஞ் செய்ய விரும்பு கிறவர்கள், மத பக்தியினால், சுவாமி தரிசனத்திற்காக கோயிலுக்குள் செல்லவேண்டும் என்று விரும்பவில்லை. அரசியல் காரியங்களை முன்னிட்டு சமவுரிமை வேண்டும் என்பதற்காகவே கோயிற்பிரவேசம் விரும்புகின்றனர்.ஆகையால் அதைத் தடுக்க வேண்டும்" என்ற அபிப் பிராயத்தை வெளியிட்டிருந்தார். இதிலும், எப்படியாவது, மததர்மம் அழியாமல் காப்பாற்றப்பட  வேண்டும் என்ற அபிப்பிராயம் அடங்கியிருப்பதைக் காணலாம். 'மத தர்மத்தை ஒப்புக்கொள்ளுகிறவர்களுக்குக் கோயில் பிரவேசம் அளிக்கலாம்' என்ற அபிப்பிராயத்தையும் அவரே ஒப்புக் கொண்டி ருக்கிறார். இதிலிருந்து மத தர்மம், ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டால் எந்த வகையிலும் பிராமணியம் அழியாமல் நிலைக்கும் என்பது தான் அவர் கருத்து என்பதை அறியலாம்.

ஆனால், மத தர்மம் ஒப்புக் கொள்ளப்படும் போது, எல்லாவகுப்பினரும் கோயிலுக்குள் செல்லலாம் என்ற உரிமை எப்படி ஏற்படும் என்பது தான் நமக்கு விளங்கவில்லை. இன்னார் கோயிலுக்குள் போகலாம், இன்னார் கோயிலுக்குள் போகக்கூடாது என்பதற்கும் அந்தப் பாழும்மத தர்மந்தானே காரணமாக இருந்து கொண்டிருக்கிறது. ஆகவே, திரு.ஆச்சாரியார் கூறும்மத தர்மத்தையும், பிராமண சபையார் பிரசாரம் செய்யும் மத தர்மத்தையும் எவ்வாறு நாம் ஒப்புக் கொள்ள முடியும்? ஒரு போதும் ஒப்புக்கொள்ளவே முடியாது. அழிக்கப்பட்டே ஆகவேண்டும் என்றே கூறுகின்றோம்.

ஆகையால், பார்ப்பனர்கள் செய்யும், எல்லாப் பிரச் சாரங்களும், மதத்தையும், மத தர்மத்தையும், அதன் மூலம் வருணாசிரம தருமத்தையும், பார்ப்பனியத் தையும் காப்பாற்றவே செய்யப்படும் பிரசாரங்களே என்பதை மீண்டும் கூறி எச்சரிக்கை செய்கிறோம்.

'குடிஅரசு' - தலையங்கம் - 29.11.1931

ஞாயிறு, 11 ஜூன், 2023

அறிவு வளர்ந்தால் மடமை மறையும்

பெரியார் பேசுகிறார் – அறிவு வளர்ந்தால் மடமை மறையும்

2023 பெரியார் மே-16-31,2023

 – தந்தை பெரியார்

நம் மக்களின் பொருளாதார நிலை கொஞ்சங்கூட முற்போக்கு இல்லாமல்
தான் இருந்து வருகிறது. ஏதோ சில பேர் வேண்டுமானால் மில் தொழிலாலும், சினிமா தொழிலாலும், ஓட்டல் தொழிலாலும் கொள்ளை லாபம் அடைந்து கொழுத்த பணக்காரர்களாகி இருக்கலாமே ஒழிய, சாதாரண மக்களாகிய 100-க்கு 90 பேருடைய வாழ்க்கைத் தரம் அப்படியேதான் இருந்து வருகிறது. முன்பு மூன்று அணா சாப்பாடு சாப்பிட்டவன் இன்று ஒரு ரூபாய் சாப்பாடு சாப்பிடலாம். ஆனாலும், மூன்று அணாவுக்கு அன்று கிடைத்த அளவு உணவு இன்று ஒரு ரூபாய்க்குக் கிடைப்பதில்லையே! முன்பு ஆறு அணா கூலி சம்பாதித்தவர்கள், இன்று ஒரு ரூபாய் சம்பாதிக்கலாம். அவ்வளவுதான். ஆனால், மூன்று ரூபாய் சம்பாதித்தாலும் பழைய ஆறு அணா வசதி இல்லை. சில அணா அளவில் தான் கூலி உயர்ந்ததே யொழிய, ஏழை மக்களுக்கு, பாட்டாளிகளுக்கு வாழ்க்கைத் தரமொன்றும் உயர்ந்து விடவில்லை. ஆனால், முதலாளிகள் கோடீஸ்வரர்களாகி விட்டார்கள். இராஜபோகம் அனுபவிக்கிறார்கள்.

மற்ற தேசங்களில் எத்தனையோ புதுப் புது கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நம்நாட்டில் ஒன்றுகூட கண்டு பிடிக்க வசதி ஏற்படவில்லை. மற்ற நாட்டினரின் கண்டு பிடிப்புகளைப் பயன்படுத்தியாவது அதிகமான பலன் பெற்றிருக்கிறோமா என்றால் அதுவும் பொதுமக்களுக்கு இல்லை. அவற்றைச் சரிவர உபயோகிக்கக் கூட நம் நாட்டில் வசதி செய்து தரப்படுவதில்லை. நம் அறிவு முன்னேற்றத்துக்கும், நம் ஆட்சிக்கும் அவ்வளவு தூரம் பாமர மக்களின் நன்மையைப் பற்றி, அவர்களது வாழ்க்கையும் சிறிதாவது உயர்வடைய வேண்டும் என்பது பற்றி யாரும் கவலை எடுத்துக் கொள்வதில்லை. கோவையிலுள்ள ஒரு சாதாரண தொழிலாளிகூட தனக்குப் போதிய வருவாய் இருந்தால் தன் மகனை கல்லூரிப் படிப்பு வரை படிக்க வைக்க முடியும். கோவை ஜில்லாவைச் சேர்ந்த ஆனைமனையிலுள்ள பெரிய மிராசுதாரர்கூட பண வசதியிருந்தும் தன் மகனை கல்லூரிப் படிப்புக்கு அனுப்ப முடியாது. காரணம், மகனை நகரத்திற்கு அனுப்பினால் தக்க கண்காணிப்பு இல்லாததால் அவன் சிகரெட்டுக் குடிக்கிறான், சினிமா பார்க்கிறான், கண்ட பெண்களைக் காதலிக்கிறான், கடைசியில் காலியாக வீடு திரும்புகிறான். எனவே, கிராமத்திய மக்களுக்குப் படிக்க வசதியில்லாமல் போய் விடுகிறது.

சுதந்திரம் எப்படி சில பேருக்கே சுகம் அனுபவிக்கும் வாய்ப்பாக ஆக்கப்பட்டு விட்டதோ, அப்படியே மற்ற வசதிகளும் சில பேருக்கே உரியதாக ஆக்கப்பட்டு விட்டன. சுதந்திரம் வந்தும் இன்னும் ஒருவன் பட்டதாரியாக, 22 வயது ஆக வேண்டியிருக்கிறது.
அந்தப்படிப்பும் அவன் செய்யப்போகும் உத்தியோகத்திற்கு எவ்வகையிலும் உபயோகப்படாத படிப்பாக இருக்கிறது. 22 வயது
வரை படிக்க வைத்தும் அது வீண்செலவாகவே ஆகி விடுகிறது. கல்லூரிப் படிப்புக்குப் பணம் செலவழிக்க முடியாதவனாகவே பல குடியானவர்கள் தங்கள் மக்களைக் கல்லூரிகளுக்கு அனுப்புவதில்லை. எப்படியேனும் படிப்புச் செலவு குறைக்கப்பட்டாக வேண்டும். குறைந்த செலவில், குறைந்த காலத்தில் அவனவனது வாழ்க்கைக்குப் பயன்தரத் தக்கதான படிப்பு கற்பிக்கப்பட வசதி செய்து தரப்பட வேண்டும். சாதாரணமாக ஆபீஸில் குமாஸ்தா வேலை பார்க்க வேண்டிய ஒருவனுக்குச் சரித்திரமோ, பூகோளமோ, அல்ஜிப்ரா, டிரிக்னாமெட்ரியோ தேவையில்லை அல்லவா? சப்- இன்ஸ்பெக்டர் வேலைக்கு ஒருவன் கேல்குலஸ் ஏன் படிக்க வேண்டும்? தாசில்தார் உத்தியோகத்திற்கு இடினா ஏன்? இருந்தாலும் எந்த உத்தியோகத்துக்கென்றாலும் குறைந்தது பி.ஏ. பட்டம் பெற்றிருக்க வேண்டுமாம். ஏனப்பா இது அவசியமா என்று கேட்க யாரும் துணிவதில்லை.

ஒரு வருடத்திற்கு 365 நாள் என்றால், அதில் கல்லூரி வேலை செய்வதெல்லாம் 150 நாள்தான். மற்ற 200 நாளும் வீண்தான். ஆசிரியர்களுக்குத் தரும் சம்பளமும் வீண்தான். ஏனப்பா இப்படிப் பிள்ளைகளின் நல்ல காலத்தை வீணாக்க வேண்டும் என்று கேட்டால், கேட்ப வனுக்கு ஆதரவு கிடையாது. ஓட்டும் கிடைக்காது. பி.ஏ. படித்துத்தான் என்ன லாபம்? விஞ்ஞானம் படித்த பட்டதாரியே நெற்றியில் விபூதியும், நாமமும், பொட்டும், குங்குமமும் அப்பிக் கொண்டு திரிகிறானே! அது மட்டுமா? காவடி தூக்கிக் கொண்டு குதித்தாடும் பட்டதாரிகளும் கூட இருக்கிறார்களே இன்னும். பாமர மக்கள், பாட்டாளி மக்கள் இவர்களைப் பார்த்தே இன்னும் மூடநம்பிக்கைக்காரர்கள் ஆகிவிடுவார்கள்போல் இருக்கிறதே. எனவே தோழர்களே, தொழிலில் முன்னேற்றமில்லை, விவசாயத்தில் முன்னேற்றமில்லை, பொருளாதாரத்தில் முன்னேற்றமில்லை, கல்வியிலும் முன்னேற்றமில்லை. ஏன் மக்கள் முன்னேற்றத்திற்குத் தயாரிக்கப்படவில்லை? மக்கள் தயாராகாதவரை ஆட்சியும் பயன்பெறும் காரியம் செய்தல் கூடாது.

எனவேதான் நாம் அன்று முதலே கூறி வருகிறோம்; நாங்கள் அரசாங்கத்திற்கு விரோதிகள் அல்ல. காங்கிரஸ் ஆட்சியை ஒழிக்கவும் நாங்கள்
ஒன்றும் ஆசைப்படுபவர்களல்ல. ஆட்சியிலுள்ளவர்களைக் கொண்டேதான் மக்களுக்கு நலமானதைச் செய்ய விரும்புகிறோம் என்று அரசாங்கம் நடத்துவோரும் அரசாங்கத்தின் குறை காண்போரும் அரசாங்கத்திற்கு எதிர்ப்பாக தேர்தலில் நிற்போரும் முதலில் மக்களின் அறிவைப் பயன்படுத்துவதில் தம் கவனத்தைச் செலுத்த வேண்டும். மக்களைத் திருத்துவதில், அவர்களுக்குத் தெளிவு ஏற்படுத்துவதில் முழுக் கவலையும் செலுத்த வேண்டும். படிப்பினால் மட்டுமே மக்களைத் தெளிவுள்ளவர்களாக ஆக்கிவிட முடியாது. பரீட்சையில் நல்ல மார்க் வாங்கி விட்டதாலேயே ஒருவனைப் பகுத்தறிவாளியென்று நம்மால் ஒப்புக் கொள்ள முடியாது. மக்களிடையே பகுத்தறிவுப் பிரச்சாரம் நடத்தப்பட வேண்டும். அப் பிரச்சாரம் மூலம்தான் ஏதேனும் இன்றைய கஷ்டங்களுக்குப் பரிகாரம் காண முடியும். இன்று பெரும்பாலான மக்கள் பெரும் மனக்கஷ்டத்திற்குப் பலியாகி இருக்கின்றனர். வாழ்க்கையில் எவ்வித உற்சாகமும் அவர்களால் காண முடியவில்லை. சிலர் சுகம் அனுபவிப் பதைப் பார்த்து பலர் கஷ்டப்படுகின்றனர். தங்களுக்குப் போதுமானது கிடைக்க-வில்லையே என்பது மட்டுமே கஷ்டத்திற்குக் காரணம் இல்லை. பிறர் தம்மைவிடஅதிகம் அடைகிறார்களே என்ற கஷ்டமும் அதிகமாக இருந்து வருகிறது. வாழ்க்கையிலுள்ள மடுவுக்
கும் மலைக்கும் போன்ற அளவு வித்தியாசம்தான் பெரிதும் கஷ்டத்திற்குக் காரணமாய் அமைந்திருக்கிறது.

இது மாற்றப்பட வேண்டுமானால் பகுத்தறிவுப் பிரச்சாரம் தான் செய்யவேண்டும். சகல துறைகளிலும் மக்களுக்கு அறிவு புகட்டப்-படல் வேண்டும் இது நம் தென்னாட்டுக்கு மட்டுமே அல்ல. அகில இந்தியாவுக்குமே தேவையானதாகும். என்றாலும், நம் தென்னாடு தான் பகுத்தறிவுப் பிரச்சாரம் நன்கு செழித்து வளர்வதற்கான பண்பாடு பெற்றிருக்கிறது.

எனவே, முதலில் நம் தென்னாட்டைப் பற்றி கவலை எடுத்து கொள்ள வேண்டும் என்கிறோம். வடநாட்டில் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்வதெல்லாம் எதிர்நீச்சல் வேலையாகும். உயர்மேடு ஏறும் வேலையாகும். நான் உலகத்தைச் சுற்றிப் பார்த்திருக்கிறேன். இந்தியாவையும் இரண்டு மூன்று முறைக்கு மேலாகவே சுற்றிப் பார்த்திருக்கிறேன். அதுவும் சுமார் 40 வருடங்களுக்கு முன்பிருந்தே இந்தியாவைச் சுற்றிப் பார்த்து வந்திருக்கிறேன். சாதாரண மனிதனாகவே சுற்றி மக்களோ டெல்லாம் பழகியும் பார்த்திருக்கிறேன். அய்ரோப்பாவிலும், ரஷ்யா முதற்கொண்டு பல நாடுகளுக்கும் சென்று அந்தந்த நாட்டுமக்களைப் பார்த்தும் அவர்களுடன் பழகியும் இருக்கிறேன். 1903, 1904-இல் இந்தியா பூராவும் பிச்சை எடுத்துத் திரிந்தும் பார்த்திருக்கிறேன். அய்ரோப்பாவோடும், வடநாட்டோடும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நம் தென்னிந்தியாதான் அறிவில் சிறந்த நாடாக எனக்குப் படுகிறது. அதிலும் மற்றவர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது. ஆந்திரர்களையும், மலையாளிகளையும், கன்னடியர்களையும் காட்டிலும் தமிழர்கள்தான் அறிவில் சிறந்தவர்களாக எனக்குத் தோற்றுகிறார்கள். சூத்திரர் என்றால் தமிழர்கள் ரோஷப்படும் அளவுக்கு எந்த வடநாட்டானும் எந்த ஆந்திரனும் மலையாளியும்கூட ரோஷப்படுவதில்லை. சூத்திரன் என்று சொல்லிக் கொண்டுதான் போகட்டுமே. அதனால் என்ன குடி முழுகிப் போய்விடும் என்றுதான் பம்பாய்க்காரன் சொல்வான். மைசூர் ராஜ்யமும் அப்படித்தான். நம் நாட்டிலோ 100-க்கு 60 பேராவது சூத்திரர்என்றால் ஆத்திரப்படுவார்கள்; கோபப்படுவார்கள். மேலும் மூட நம்பிக்கை ஒழிய வேண்டும் என்பதிலும் அதன் அவசியத்திலும் நமக்குத்தான் சற்று விளக்கம் ஏற்பட்டிருக்கிறது.

பெருமை, புகழ், தொழில் வளம் முதலியவற்றைப் பற்றி எடுத்துக் கொண்டாலும் நம் மாகாண மக்கள்தான் மற்ற மாகாணக்காரர்களை விட சற்று அதிகமான கவலை எடுத்துக் கொண்டு வருகிறார்கள். மற்ற மாகாணக்காரர்களெல்லாம் நம் மாகாணத்தைக் கொண்டு நாம் பிழைக்கலாம் என்று ஆசைப்படுகிறார்களேயொழிய, நம்மைப் போல் நம் மாகாணத்திலிருந்தே சகலத்தையும் உண்டாக்கி தம் மக்களை வாழ்விக்க வேண்டும் என்று அவர்கள் நினைப்பதில்லை. அவ்விதம் நினைக்கும் அறிவும், தெளிவும், வசதியும் அவர்களுக்கு இல்லை. நமக்குத்தான் உண்டு. நம் தென்னிந்தியா இயல்பாகவே, தான் பெற்றுள்ள இயற்கை வசதிகளால் பிறர் கண்களை உறுத்தி வருகிறது. அதனால்தான் வடநாட்டவர் நம்மைப் பிரிய விடாமல் கண்காணிப்பாக இருந்து வருகிறார்கள். தேசிய ஒற்றுமை பறி போய்விடும் என்று கூப்பாடு போட்டு நம்மை முன்னேற்றமடைய வொட்டாமல் தடுத்து வருகிறார்கள்.

(3.8.1949 அன்று கோவையில் கோபால் பாக் ஹாலில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை.

(‘விடுதலை’ 20.8.1949)

மே தினம் என்றால் என்ன? – தந்தை பெரியார்

மே தினம் என்றால் என்ன? – தந்தை பெரியார்

2023 கட்டுரைகள் பெரியார் மே 1-15,2023

 தோழர்களே!

மே தினம் என்பதைப் பற்றி இங்கு இதுவரை 5, 6 தோழர்கள் எடுத்துச் சொல்லி விட்டார்கள். நான் முடிவுரை என்கின்ற முறையில் ஏதாவது பேச வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்.

மே தினம் என்பது இன்று உலகமெங்கும் ஒவ்வொரு தேசங்களிலும் கொண்டாடப் படுவதனாலும் ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகின்றது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ரஷ்யாவில் கொண்டாடப்படுவதுபோல் இங்கிலாந்தில் கொண்டாடப்பட மாட்டாது. ஸ்பெயினில் கொண்டாடப்படுவது போல் பிரெஞ்சில் கொண்டாடப்பட மாட்டாது.

அதுபோலவே தான் மேல் நாடுகளில் அய்ரோப்பா முதலிய இடங்களில் கொண்டாடப்படுவது போல் இந்தியாவில் கொண்டாடத் தக்க நிலைமை இல்லை.

ஏனெனில், ஒவ்வொரு தேசத்தின் நிலைமை வெவ்வேறான தன்மையில் இருந்து வருகிறது. எல்லா தேசமும் ஒரே விதமான பக்குவத்தை அடைந்துவிடவில்லை.

ஆரம்ப திசையில் இருக்கிற தேசமும் முடிவை எட்டிப் பார்க்கும் தேசமும் ஒரே மாதிரி கொண்டாட வேண்டும் என்று கருதுவதும் புத்திசாலித்தனமாகாது.

இன்று ரஷ்யாவில் மே தினத்தைக் கொண்டாடுவதின் முக்கிய நோக்கம் பெரிதும் தங்கள் தேசத்தை மற்ற தேசங்கள் பின்பற்ற வேண்டும் என்கின்ற ஆசையைப் பொருத்ததாகும்.

இங்கிலாந்து, பிரஞ்சு முதலிய தேசங்களில் கொண்டாடுவதின் நோக்கம் ரஷியாவைப் பல விஷயங்களில் பின்பற்ற வேண்டும் என்கின்ற கருத்தைக் கொண்டு அதற்கு பக்குவம் செய்வதற்கு ஆசைப்படுவதாகும்.

எப்படி இருந்தாலும் அடிப்படையான நோக்கத்தில் ஒன்றும் பிரமாத வித்தியாசம் இருக்காது. அநேக துறைகளில் சிறப்பாக சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டு தாழ்த்தப்பட்டு, இம்சைப்படுத்தப்பட்ட அடிமை மக்கள் சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் அடைய வேண்டும் என்கின்ற உணர்ச்சியே மே தினக் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

அந்த உணர்ச்சி எல்லா மக்களுக்கும் ஏற்பட்டால் பிறகு அந்தந்த நாட்டு நிலைமைக்குத் தக்கபடி முயற்சியும் கிளர்ச்சியும் தானாகவே வந்துவிடும்.

ஒடுக்கப்பட்டுத் தாழ்த்தப்பட்ட அடிமை மக்கள் என்பவர்கள்கூட ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகவே இருக்கிறார்கள்.

மேல் நாடுகளில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் என்பவர்கள் தொழிலாளிகள் என்கின்ற பெயரால் அவர்களது தொழில் நிலையையும் செல்வ நிலையையும் பொருத்து இருக்கிறார்கள்.
அதனாலேயே இந்தக் கிளர்ச்சிக்கு தொழிலாளி, முதலாளி கிளர்ச்சி
யென்றும் வகுப்புப் போர் என்றும் சொல்லப்படுகின்றது.

ஆனால் இந்தியாவில் ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் என்பது தொழில் நிலையையும், செல்வ நிலையையும் முக்கியமாய்க் கொள்ளாமல், மக்களின் பிறவி நிலையையே பிரதானமாய்க் கொண்டு பெரும்பான்மையான மக்கள் ஒடுக்கப்பட்டும் தாழ்த்தப்பட்டும், அடிமைப்படுத்தப்பட்டும் இருப்பதால் தொழில் நிலைமையையும், செல்வ நிலைமையையும் நேரே நோக்கிக் கிளர்ச்சியோ, புரட்சியோ செய்வது முக்கியமானதாய் இல்லாமல், பிறவி பேதத்தையே மாற்ற, கிளர்ச்சியும் புரட்சியும் செய்ய வேண்டியது முக்கியமாய் இருக்கின்றது. ஆதலால் தொழிலாளி – முதலாளி கிளர்ச்சி என்கின்றதைவிட, மேல் ஜாதி – கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்குப் பொருத்தமானதாகும்.

ஏனென்றால், இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவியிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டுவிட்டன.

நாலாவது வருணத்தான் அல்லது கீழான ஜாதியான் அல்லது சூத்திரன் என்று சொல்லப்படும் பிரிவே தொழிலாளி. அதாவது சரீரத்தால் உழைத்து வேலை செய்பவரின் மூலம் மற்ற ஜாதியாருக்கு வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்ய வேண்டும் என்கின்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டதாகும்.

அய்ந்தாவது ஜாதியான பஞ்சமன் அல்லது சண்டாளன் என்று சொல்லப்பட்ட ஜாதியான் என்பவன் வாழ்நாள் முடிய மற்ற ஜாதியாருக்கு அடிமையாய் இருந்து தொண்டாற்ற வேண்டும் என்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டவன்.
இந்த இரு கூட்டத்தாரிடமும் கூலி கொடுக்காமலே வேலை வாங்கும் உரிமை மேல் ஜாதியானுக்கு உண்டு. அதுவும் மத. சாஸ்திர பூர்வமாகவே உண்டு.

இது இன்றைய தினம் நிர்ப்பந்தத்தில் இல்லை என்று சிலர் சொல்லக் கூடுமானாலும், ஒரு சிறு மாறுதலோடு அனுபவத்தில் இல்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது.

பஞ்சம வகுப்பைச் சேர்ந்த மக்களாகிய சுமார் 6, 7 கோடி மக்களில் 100-க்கு 99 பேர்கள் இன்று அடிமையாக, இழி மக்களாக நடத்தப்படவில்லை என்று யாராவது சொல்ல முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். அதுபோலவே பார்ப்பனரல்லாதார் என்கின்ற இந்து மக்கள் ஆண், பெண் அடங்கலும் சூத்திரர்கள் — அதாவது சரீர வேலை செய்யும் வேலை ஆட்கள் என்ற கருத்தோடு அழைக்கப்படுவது மாத்திரமல்லாமல், ஆதாரங்களில் குறிக்கப்படுவதோடு அந்தச் சூத்திரர்கள் என்கின்ற வகுப்பார்களேதான் இன்று சரீரப் பிரயாசைக்காரர்களாகவும், கூலிகளாகவும், உழைப்பாளிகளாகவும், ஏவலாளர்களாகவும், தொழிலாளர்களாகவும் இருந்து வருகின்றார்களா இல்லையா என்று பாருங்கள்.

மற்றும் ஜாதி காரணமாகவே, தொழிலாளி-களாகவோ, சரீர பிரயாசைப்படும் உழைப்பாளி
களாகவோ இல்லாமலும், சரீரப் பாடுபடுவதைப் பாவமாகவும் கருதும்படியான நிலையில் சில ஜாதியார்கள் இருக்கிறார்களா இல்லையா? என்றும் பாருங்கள்.

இந்தியாவில் தொழிலாளி – முதலாளி அல்லது எஜமான், அடிமை என்பது பிரதானமாக பிறவி ஜாதியை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இந்தியாவில் மே தினக் கொண்டாட்டம் என்பது பார்ப்பான், (சூத்திரன்) பஞ்சமன் அல்லது சண்டாளன் என்கின்ற ஜாதிப் பிரிவுகள் அழிக்கப்பட வேண்டும் என்கின்ற நிலையில்தான் பெரியதொரு கிளர்ச்சியும், புரட்சியும் ஏற்பட வேண்டும் என்கின்ற கருத்தோடு இன்று கொண்டாடவேண்டியதாகும்.

இந்தியாவில் வகுப்புப் போர் என்பதற்குப் பதிலாக வேறு ஏதாவது சொல்ல வேண்டுமானால் ஜாதிப் போர் ஏற்பட வேண்டும் என்பதாகத்தான் சொல்ல வேண்டும்.

இந்தியாவில் ஒரு ஜாதியார் 100-க்கு 99 பேர்கள் நிரந்தரமாக தொழிலாளி-களாகவும், அடிமைகளாகவும், ஏழைகளாகவும், மற்றவர்களுக்கே உழைத்துப் போடு-கின்றவர்களாகவும் இருப்பதற்குக் காரணம் பிறவியில் வகுக்கப்பட்ட ஜாதிப் பிரிவே அல்லாமல் வேறு என்ன? இதை அடியோடு அழிக்காமல் வேறு விதமான கிளர்ச்சிகள் எது செய்தாலும் தொழிலாளி, முதலாளி நிலை என்பது அனுபவத்தில் இருந்துதான் தீரும்.

இன்று முதலாளி தொழிலாளி என்பதற்கு நாம் என்ன வியாக்கியானம் செய்கிறோம்? பாடுபடாமல் ஊரான் உழைப்பில் பதவி, அந்தஸ்துடன் வாழ்வதையும் பாடுபடுகின்றவன் ஏழையாய், இழிமக்களாய் இருப்பதையும் தான் முறையே சொல்லுகின்றோம்.

ஆகவே, ஜாதியையும் அதற்கு ஆதாரமான மதத் தன்மையையும் அழிக்காமல், வேறு எந்த வழியிலாவது முதலாளி- தொழிலாளி தன்மையை மாற்றவோ அல்லது அதன் அடிப்படையாய் அணுகவோ நம்மால் முடியுமா என்று பாருங்கள்.
இந்தியாவில் ஏழை மக்களுக்காக தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடுகின்றேன் என்று சொல்லுகின்றவர்கள் யாரானாலும் அதற்கு ஆதாரமும் அடிப்படையுமான ஜாதிப் பாகுபாட்டையும், மதத் தன்மையையும் ஒழிக்க சம்மதிக்க இல்லையானால் அவர்கள் எல்லோரும் யோக்கியர்கள் என்று நாம் சொல்லிவிட முடியாது. அரசியல் தலைவர்களில் எவரும் இதற்குச் சம்மதிப்பதில்லை.

ஏதாவது ஒரு தொழிற்சாலையில் நித்திய கூலிக்கோ, மாதச் சம்பளத்துக்கோ பாடுபடுகின்ற நான்கு தொழிலாளிகளைக் கூட்டி வைத்துப் பேசிவிடுவதனாலேயே அல்லது அத் தொழிலாளிகள் விஷயமாய்ப் பேசி விடுவதனாலேயே அல்லது அவர்களுக்குத் தலைமை வகிக்கும் பெருமையைச் சம்பாதித்துக் கொண்டதினாலேயே எவரையும் உண்மையான தொழிலாளிகளுக்குப் பாடுபட்டவர்களாக கருதிவிடக் கூடாது. அவர்களெல்லாம் அரசியல், தேசியம் ஆகியவற்றின் பேரால் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் செய்வது போல் தொழிலாளிகளின் பேரால் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் நடத்துகின்றவர்களாகவே பாவிக்கப்பட வேண்டியவர்களாவார்கள்.

இந்து மக்களின் மதமும் அவர்களது ஜாதிப் பிரிவும் தொழிலாளி முதலாளி தன்மையின் தத்துவத்தை நிலைநிறுத்தவே ஏற்படுத்தப்பட்டதாகும். இந்தக் காரணத்தாலேயேதான் மற்ற நாட்டு மே தினக்கொண்டாட்டத்திற்கும், இந்நாட்டு மே தினக்கொண்டாட்டத்திற்கு பெருத்த வித்தியாசம் இருக்கின்றது என்று சொல்லுகிறேன்.
இந்த முதலாளி_ தொழிலாளி நிலைமைக்கு வெள்ளையர்- கருப்பர்கள் என்கின்ற நிற வித்தியாசத்தைக் காரணமாகச் சொல்லிவிட முடியாது. ஏனெனில், தொழிலாளி- முதலாளி வித்தியாசம் ஒழிக்கப்பட வேண்டும் என்கின்ற கருத்தை இந்தியர்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தவர்களே வெள்ளையர்களாகும். அந்த முறை மாற்றப்படக் கூடாது என்பதை மதமாகக் கொண்டிருக்கிறவர்களே கருப்பர்களாகும்.

ஆகையால், இதில் வெள்ளையர் – கருப்பர் என்கின்ற கருத்துக்கு இடமில்லை. ஆனால் பார்ப்பனர்- பார்ப்பனரல்லாதார் என்பதைத்தான் முக்கியமாய் வைத்துப் பேச வேண்டியிருக்கிறது.
இந்திய தேசியம் என்பதுகூட ஜாதியையும், மதத்தையும் காப்பாற்றுவதையே முக்கியமாய்க் கொண்டிருக்கிறதினால்தான் அப்படிப்பட்ட தேசியம் ஒருநாளும் தொழிலாளி- முதலாளி நிலைமைகளை ஒழிக்க முடியாது என்பது மாத்திரமல்லாமல் இந்தத் தேசியம் தொழிலாளி – முதலாளி தன்மை என்றும் நிலைத்திருக்கவே பந்தோபஸ்து செய்து வருகிறது என்று அடிக்கடி சொல்லி வந்திருக்கிறேன்.

இன்று நம் நாட்டிலுள்ள பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் என்கின்ற கிளர்ச்சி பெரிதும் முதலாளி – தொழிலாளி கிளர்ச்சியேயாகும். இந்தக் கிளர்ச்சியின் பயனாகவே வருண தருமங்கள் என்பது அதாவது பிறவியிலேயே தொழிலாளி, முதலாளி என வகுக்கப்பட்டிருப்பது ஓரளவு மாறி வருகின்றது.

இந்தக் காரணத்தினால் தான் முதலாளி வர்க்கம் அதாவது பாடுபடாமல் ஊராரின் உழைப்பில் பலன் பெற்று வயிறு வளர்க்கும் ஜாதியாகிய பார்ப்பன ஜாதி அடியோடு அநேகமாய் எல்லோருமே இந்த பார்ப்பனரல்லாதார் கிளர்ச்சிக்கு பரம எதிரிகளாய் இருந்து கொண்டு துன்பமும் தொல்லையும் விளைவித்து வருகிறார்கள்.
இக்கிளர்ச்சியை வகுப்புத்துவேஷம் என்றுகூட சொல்லுகிறார்கள். பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாதார்கள் என்கின்ற இரு ஜாதியார்களுக்கும் பார்ப்பனர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிற நிபந்தனைகளைப் பார்த்தால் வகுப்புத் துவேஷம், வகுப்புக் கொடுமை என்பவைகள் யாரால் செய்யப்பட்டு இருக்கிறது – செய்யப்பட்டும் வருகிறது என்பது நன்றாய் விளங்கும்.

நிற்க, தோழர் நீலாவதி அம்மையார் சொன்னதுபோல் முதலாளி தொழிலாளிக் கொடுமை ஒழிய வேண்டும் என்பதில் ஆண், பெண் கொடுமையும் ஒழிய வேண்டியதவசியமாகும். ஆண்கள் முதலாளிகளாகவும், பெண்கள் தொழிலாளிகளாகவும், அடிமைகளாகவும்தான் நடத்தப்பட்டு வருகிறார்கள். இதுவும் வெறும் பிறவி காரணமாகவே ஒழிய, மற்றபடி இதில் வேறு காரணம் ஒன்றுமே இல்லை. ஆண், பெண் என்பதற்கு பிறவி காரணமாய்க் கற்பிக்கப்பட்டிருக்கிற பேதங்கள், நிபந்தனைகள் அடியோடு ஒழிக்கப்பட்டாக வேண்டும்.

இதற்கும் பெண் மக்கள் பெரியதொரு புரட்சிக்குக் கிளர்ச்சி செய்யவேண்டும். ஆண் மக்களோடு தைரியமாய்ப் போர் தொடுக்க வேண்டும். பெண்கள் போர் தொடுக்க ஆரம்பித்தால் ஆண் மக்கள் சரணாகதி அடைந்தே தீருவார்கள்.
நிற்க. இந்த மே தினத்தை நாம் ஒரு பெரிய பண்டிகை போல் கொண்டாட வேண்டும். ஏனெனில், நமது பண்டிகைகளில் அநேகம் இம்மாதிரி வெற்றிகளை ஞாபகப்படுத்துவதேயாகும். தீபாவளி, ஸ்ரீராம நவமி முதலிய பண்டிகைகள் எல்லாம் இந்நாட்டில் ஆரியர்கள் திராவிட மக்களை வென்ற நாள்களையும், வென்ற தன்மைகளையும் கொண்டாடுவதைத் தவிர வேறொன்றுமே முக்கியமாய் இல்லை. இதெல்லாம் தெரிந்த பலர்கூட இப்பண்டிகைகளைக் கொண்டாடுவது இந்நாட்டில் மக்கள் உற்சாகத்திற்கு வேறு மார்க்கம் இல்லாததே ஒழிய, மற்றபடி மதம், பக்தி, சுயமரியாதை அற்ற தன்மை என்பவைகளே அல்ல.

பெண்களையும், வேலை ஆள்களையும் சிறிதுகூட ஓய்வில்லாமல் அடிமை போல் நடத்துகிறோம். அவர்களுக்குப் பண்டிகை, உற்சவம் ஆகியவைகள் தான் சிறிது ஓய்வும் சந்தோஷமும் கொடுக்கின்றன.
தண்டவாளப் பெட்டியில் வைத்துப் பூட்டி வைப்பதுபோல் பெண் ஜாதிகளைப் பூட்டி வைக்கும் சிப்பாய்களெல்லாம் உற்சவம், பண்டிகை என்றால் சிறிதாவது தாராளமாய் வெளியில் விட சம்மதிக்கிறார்கள். உற்சவங்களில் அவர்கள் நிலை எப்படி ஆனாலும் கவலைப்படுவதில்லை. கண்ணெதிரிலேயே நசுக்கப்படுவதையும், கசக்கப்படுவதையும் பார்த்துக்கூட சகிக்கிறார்கள். ஆதலால் நம் பெண்களுக்கும், தொழிலாளிகளுக்கும் எவ்வளவுதான் நாம் பகுத்தறிவையும், சுயமரியாதைக் கொள்கைகளையும் போதித்தாலும் உற்சவமும், பண்டிகையும் அவர்களை விட்டு விலகவே முடியாது. எனவே, நாம் இப்படிப்பட்ட பண்டிகைகள் சிலதை கொண்டாட ஏற்பாடு செய்தோமேயானால் மத சம்பந்தமான பண்டிகை, உற்சவம் ஆகியவைகளை மக்கள் கைவிடுவதற்கு அனுகூலமாயிருக்கும்.
ஆகவே தோழர்களே, இதுவரை நாங்கள் சொன்ன ஒவ்வொன்றையும் சிந்தித்துப் பார்த்து, தங்களுக்குச் சரியென்று தோன்றியபடி நடக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொண்டு, இக்கூட்டத்தை முடித்து விடுகிறேன்.

(காரைக்குடியில் நடைபெற்ற மே தினக் கொண்டாட்டத்தில்
தலைவர் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய முடிவுரை)

– “குடிஅரசு’’ சொற்பொழிவு – 12.05.1935

திராவிட மக்களை இழிவுபடுத்தும் புராணங்கள் ஒழிக்கப்பட வேண்டும்

 

பெரியார் பேசுகிறார் – திராவிட மக்களை இழிவுபடுத்தும் புராணங்கள் ஒழிக்கப்பட வேண்டும்

2023 ஏப்ரல் 16-30,2023 பெரியார் பேசுகிறார்

-தந்தை பெரியார்

தமிழும், தமிழ்நாடும், தமிழ் மக்களும் இப்படிப் பிரிந்து கிடக்கிற காரணத்தால்தான் ஒற்றுமைக்குப் பாடுபடும் நாங்கள் திராவிட நாடு என்றும், திராவிட மக்கள் என்றும், திராவிட கலாச்சாரம் என்றும் புத்துணர்ச்சி ஏற்படுத்தப் பாடுபட்டு வருகிறோம். தமிழ் என்பதும், தமிழர் கழகம் என்பதும் மொழிப் போராட்டத்திற்குத்தான் பயன்படுமே யொழிய, இனப் போராட்டத்திற்கோ, கலாச்சாரப் போராட்டத்திற்கோ சிறிதும் பயன்படாது.

ஆரியர்கள் முதலில் தம் கலாச்சாரத்தைப் புகுத்தித்தான் நம்மை வெற்றி கொண்டார்கள். நம் கலாச்சாரத்தைக் கெடுத்துத்தான் நம் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார்கள். நாமும், நம் கலாச்சாரத்தை மறந்து ஆரியக் கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டதால்தான் அவர்களுக்குக் கீழான மக்களாக, அவர்களுடைய இழி மக்களாக, சூத்திரர்கள், பஞ்சமர்களாக ஆக்கப்பட்டோம்.

எனவே, அக்கலாச்சாரத்திலிருந்து விடுபட வேண்டுமென்றால் மொழிப் போராட்டம் ஒன்றினால் மட்டுமே வெற்றி பெற்றுவிட முடியாது. கலாச்சாரத்தின் பேரால், இனத்தின் பேரால் போராட்டம் நடத்த வேண்டும். அதில் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் நாம் விடுதலைப் பெற்றவராவோம். மொழிப் போராட்டம், கலாச்சாரப் போராட்டத்தின் ஒரு பகுதி தானேயொழிய, முழுப் போராட்டமாகவோ, முடிவான போராட்டமாகவோ ஆகிவிடாது.

சட்டம், சாஸ்திரம், சமுதாயம், சம்பிரதாயப் பழக்க வழக்கங்கள், புராணங்கள், இதிகாசங்கள் இவை எல்லாவற்றிலுமே நம் இழிவு, நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே, இவை எல்லாவற்றிலிருந்தும் நம் இழிவு நீக்கமடைந்தாக வேண்டும். மொழியில் மேம்பாடு, வெற்றியும் பெற்று விடுவதாலேயே நமது இழிவும், இழிவுக்கு ஆதாரமான கலாச்சாரமும் ஒழிந்துவிடாது. மேலும் இவ்விழிவால் அவதிப்படுபவர்கள் தமிழ் மொழி பேசுகிறவர்கள் – தமிழர்கள் என்பவர்கள் மாத்திரமல்லாமல், சென்னை மாகாணத்தில் மட்டுமல்லாமல், இந்தியாவின் மற்ற மாகாணங்களிலும், அதாவது வேறு பல மொழிகள் பேசும் மக்கள் உள்ள வங்காளம், பீகார், பம்பாய், மகாராஷ்டிரா முதலிய மாகாணங்களிலும் இருக்கிறார்கள்.

அங்குள்ள தாழ்த்தப்பட்ட தோழர்களும், தம்மைத் திராவிடர்கள் என்றுதான் கூறிக் கொள்கிறார்கள். உண்மையில் அவர்களும் திராவிடர்கள்தான்!
இவர்கள் எல்லோருமே இன்றில்லையானாலும் நாளை நிச்சயம் ஆரியத்தை எதிர்க்க, அதற்காக புரட்சி செய்ய ஒன்றுபடப்-போவது நிச்சயம். எனவேதான் நாம் பல எதிர்ப்புகளுக்கிடையேயும் திராவிடர் கழகம் என்கிற பேராலேயே தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம்.

இந்த ஆரியர் – திராவிடர் போராட்டம் புராண காலந்தொட்டே நடைபெற்று வரும் போராட்டமாகும். புராண காலத்தைப் பற்றி நமக்கு விளக்கமாகத் தெரியவில்லை என்றாலும், ஆரியர் கலாச்சாரத்தை ஒழிக்க பவுத்தர்கள் வெகு பாடுபட்டிருக்கிறார்கள். இந்துக் கலாச்சாரத்திற்கு அதாவது, ஆரியக் கலாச்சாரத்திற்கு நேர் எதிர்ப்பான இஸ்லாம் கலாச்சாரத்தைக் கொண்டவர்களான முகலாயர்களும், ஆரியத்தை அழிக்க எவ்வளவோ பாடுபட்டார்கள். ஆனால், அவர்கள் வெற்றி பெற்றவர்களில்லை.எனவேதான் அவர்களே வெற்றி காண முடியாதபோது, இந்த திராவிட கழகத்தார் எங்கே வெற்றி காணப்போகிறார்கள் என்று பார்ப்பனர்கள் நம்மைப் பரிகாசம் செய்து வருகிறார்கள்.
அவர்கள் பரிகசிக்கட்டும்; நமக்குக் கவலையில்லை. என்னைப் பொறுத்தவரையில் நம் முயற்சி வெற்றி பெறும் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கையுண்டு, திடமான உறுதியுண்டு.

வெள்ளையனுடைய சுமார் 200 வருட கால ஆட்சியும், நமது அய்ந்து வருட கால பகுத்தறிவுப் பிரச்சாரமும், ஆரியக் கலாச்சாரத்தின் ஆதிக்கத்தை, குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைத்திருக்கின்றன. சமுதாய உயர்வு, தாழ்வுகள் இன்று அவ்வளவாக மக்கள் மனதைப் பீடித்து நிற்கவில்லை. முன்பெல்லாம் ஓர் உயர் ஜாதிக்காரனுக்கு ஒரு தாழ்ந்த ஜாதிக்காரன் வீட்டில் தண்ணீர் சாப்பிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டால் அவனுக்கு வயிறெல்லாம் வேதனைப்படும்.

இன்று அப்படிக்கில்லை. யார் கடையிலும் டீ சாப்பிடுவதும், யார் கையாலும் தண்ணீர் குடிப்பதும் சகஜமாகி விட்டது. இன்னார் வீட்டில் நான் சாப்பிட மாட்டேன் என்று சொல்வதே தனக்குப் பெருமை என்று இருந்ததுபோய், இப்போது தனக்கு அது மரியாதைக் குறைவு என்று நினைக்கும்படிக்கும், அருகிலுள்ளவரும் இன்னும் இந்தக் காட்டுமிராண்டி காலப் பழக்கத்தைக் கைவிடாமல் இருக்கிறாய் என்று கேட்கவும் ஆன நிலை ஏற்பட்டிருக்கிறது.

குருகுலப் போராட்டத்தின்போது பார்ப்பனர்களுக்குக் தனி இடமும்,தனி உணவும் இருக்கவேண்டும் என்று கிளர்ச்சி செய்தது போய், அவர்களே பெரும்பாலோர் இன்று சமபந்தி போஜனம் பற்றியும், சம உரிமை பற்றியும் பேச முன் வந்திருக்கிறார்கள். இன்று கிட்டத்தட்ட எல்லா மாணவ உணவு விடுதிகளிலுமே ஒரே சமையல், ஒரே இடத்தில் எல்லோரும் சமமாய் உட்கார்ந்து சாப்பிடல் என்ற பழக்கம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. பெண் கொள்வது, கொடுப்பது என்பது தவிர்த்து மற்ற எல்லாவற்றிலுமே ஓர் அளவுக்காவது சமத்துவம் வந்திருக்கிறது. அதிலும் பார்ப்பனருக்கு சகிப்புத்தன்மை வந்து இருக்கிறது. மனு தர்மத்தைப் பற்றிப் பேசினால் எங்கு தம் நிலை இன்னும் அதிக ஆபத்துக்குள்ளாகி விடுமோ என்று பார்ப்பனர்களே மனுதர்மத்தைப் பற்றிப் பேச அஞ்சும்படியான நிலை ஏற்பட்டிருக்கிறது.

கடவுள் விஷயத்திலும் முன்போல் யாரும் பக்தி செலுத்துவதில்லை அதுவும் கோயிலில் தாசிகள் ஒழிக்கப்பட்டு விட்ட பிறகு கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் கூட்டம் இருபாலிலும் வெகுவாகவே குறைந்துவிட்டது. தேர் திருவிழாக்களிலும் மக்கள் முன்போல் அதிகமாகக் கலந்துகொள்வதில்லை. கடவுள் பக்தி குறையவே, கடவுளுக்குக் கோவில் கட்டுவதும், மானியம் கொடுப்பதும் குறைக்கப்பட்டு, பள்ளிக்கூடம் கட்டவும், ஆராய்ச்சிக் கல்லூரிகள் அமைக்கவும், ஆஸ்பத்திரி கட்டவும் பணம் உதவப்பட்டு வருகிறது.என்றாலும் இவையே போதுமானதாகி விடாது.

இன்னும் புராணங்கள் மதிக்கப்பட்டு வருகின்றன. புராணப் பாத்திரங்களே நமக்குக் கடவுள்களாகவும், புராணக் கருத்துகளே நமக்கு மதக் கருத்துகளாகவும், பண்டிகை விரதங்களாகவும் இன்னும் இருந்து வருகின்றன.

பழங்காலத்தில் – சரித்திரத்துக்கு முந்திய காலத்தில் ஆரியக் கலாச்சாரத்தை யார் யார் எதிர்த்தார்களோ, அவர்களை இழித்தும், பழித்தும் பேசி அவர்கள் ஒழிக்கப்பட்ட விதத்தை எடுத்துக் கூறும் கதைகளே புராணங்களும், இதிகாசங்களும் ஆகும்.
ஆரியத்தை எதிர்ப்பவன் இன்ன கதிக்குள்ளாவான் என்பதை எடுத்துக்காட்டி, மக்களைப் பயமுறுத்தி ஆரியத்தின் உயர்வில் நம்பிக்கைகொள்ளுமாறு செய்வதற்கென்றே எழுதப்பட்டனவாகும் அவைகள். ஆரியத்தை எதிர்த்தவர்கள் அத்தனை பேருமே நம்மவர்கள்; திராவிடர்கள்.அவர்கள் அத்தனை பேருமே ஒழுக்க ஈனர்களாக, அயோக்கியர்களாக ஆரியத்தால் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். அத்திராவிடர்களை ஒழித்த எல்லாருமே நமக்கு கடவுளர்களாக ஆக்கப்பட்டு, அவற்றை நாம் இன்றும் தொழுது வருகிறோம்.

இராவணனை அழித்த இராமன் நமக்குத் தெய்வம். இராவணைக் காட்டிக் கொடுத்த விபீஷணன் நமக்கு ஆழ்வார். இரண்யனை ஒழித்த நரசிம்மாவதாரம் நமக்குக் கடவுள், நரகாசுரன் ஒழிக்கப்பட்ட தினம் நமக்குப் புண்ணியதினம். இப்படிப்பட்ட கதைகளே தினம் நம் புராணங்கள். என்னே அறியாமை!

நம்மவரின் முன்னேற்றத்திற்காக, நம்மவரின் நல்வாழ்வுக்காகப் பாடுபட்ட நம் மன்னர்கள் ஒழிக்கப்பட்ட தினங்களா நமக்குப் புண்ணிய தினங்கள்? நம்மவரை வென்ற கதாபாத்திரங்களா நமக்குத் தெய்வங்கள்?
இவ்வறியாமையிலிருந்து நாம் என்றுதான் மீட்சி பெறுவது? மதம் என்றால் மக்களுக்கு நல்லொழுக்கம் கற்பிக்கத்தக்கதாக இருக்க வேண்டும்.

(24.01.1950இல் சென்னை – ராபின்சன்பார்க் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை – ‘விடுதலை’, 26.01.1950)

டாக்டர் அம்பேத்கர் உலகறிந்த பேரறிஞர் ஆவார்

 

பெரியார் பேசுகிறார் – டாக்டர் அம்பேத்கர் உலகறிந்த பேரறிஞர் ஆவார்

2023 ஏப்ரல் 1-15,2023 கட்டுரைகள் பெரியார் பேசுகிறார்


தந்தை பெரியார்

அம்பேத்கர் அவர்கள் மனிதத் தன்மையில் தீவிரமான கருத்தும் தைரியமான பண்பும் கொண்டவர் ஆவார். அவர் சமுதாயத் துறையில் தைரியமாக இறங்கிப் பாடுபட்டவர். மக்களால் பெருமையாகப் பாராட்டப்பட்ட காந்தியாரையே பிய்த்துத் தள்ளியவர்! எப்படி ஜின்னா அவர்கள் நடந்து கொண்டாரோ அது போல மதத்துறையினை சின்னாபின்னப்படுத்தியவர். காந்தியாரால் சமுதாயத் துறைக்கு ஒரு நன்மையும் ஏற்படவில்லை. கேடுகள் தான் வளர்ந்து இருக்கின்றது என்று புத்தகம் எழுதியவர்.
இவர் ராமாயணத்தையும் மனுதர்மத்தையும் கொளுத்தியவர்.
பார்ப்பனர்களால் பெருமையாகக் கொண்டாடப்படும் கீதையை பைத்தியக்காரன் உளறல் என்று துணிந்து கூறியவர்.
எப்படி காந்தி ஒருபார்ப்பானால் கொல்லப்பட்டாரோ அது போலவே இவரும் கடைசியாக பார்ப்பன சூழ்ச்சியால் கொல்லப் பட்டார். அது அதி
சயம் இல்லை. இது போன்றவர்கள் எல்லாம் பார்ப்பனர்களால் கொல்லப்பட்டுள்ளார்கள். சமண, பவுத்தர்கள் கொல்லப்பட்டது உங்களுக்குத் தெரியாதது அல்ல.

அம்பேத்கர் அவர்கள் வட்ட மேஜை மாநாட்டில் காந்தியார் அரிஜனங்களின் தலைவர் என்று கூறியபோது, ‘‘நான் உங்களுக்குப் பல தடவைகள் கூறி இருந்தும் நீங்கள் மனம் கூசாது, அரிஜனங்களின் தலைவர் என்று கூறிக் கொள்கிறீர்களே’’ என்று கேட்டார். காந்தியால் எதிர்த்துப் பேசமுடியவில்லை. இங்குள்ளவர்கள் எல்லாம் அம்பேத்கர் அப்படிப் பேசியதற்காக கூப்பாடு போட்டார்கள். அம்பேத்கர் கூறினார். “தாழ்த்தப்பட்டவர்களுக்கு. நீங்கள் உண்மைத் தலைவராக இருந்தால் என்னை ஏன் இங்கு அழைத்து இருக்கின்றார்கள்” என்று காந்தியைக் கேட்டவர்.

சமுதாயக் கேடுகள் ஒழிய, ஜாதி ஒழிய, கடவுள், மதம் சாஸ்திரங்கள் ஆகியவை ஒழிய வேண்டும் என்று துணிந்து கூறியவர் ஆவார். இந்தத் தென்னாட்டில் அல்ல; இதை விட மூடநம்பிக்கைகள் மலிந்த வடநாட்டில் துணிந்து எடுத்துக் கூறிப் பாடுபட்டவர்.
அம்பேத்கர் அவர்களின் நாளை கொண்டாடுகின்றோம் என்றால் அவர் கொள்கையை நாம் தெரிந்து கொள்ளவேயாகும். எப்படி திராவிடர் கழகம் காங்கிரசை வெளுத்து வாங்கி வந்ததோ அதுபோல அம்பேத்கரும் காங்கிரசின் வண்டவாளங்களை எல்லாம் எடுத்து வெளுத்துக் கட்டியவர். சமுதாயத் துறையில் பிற்படுத்தப்பட்டவர்கள், சமுதாயத் துறையில் முன்னேற்றம் அடைவதைத் தடை செய்ய ஏற்படுத்தப்பட்டது தான் காங்கிரஸ் என்று கூறியவர்.

பானர்ஜி என்ற காங்கிரஸ் பார்ப்பனத் தலைவர் காங்கிரஸ் தலைமையுரையில் அரசியல் பற்றிப் பேசும் போது சமுதாயத்தைப் பற்றிப் பேசுவது தப்பு என்று கூறியுள்ளார். காந்திக்கு முன்பு வரை அரசியல் மாநாடு தனியாகவும், சமுதாயச் சீர்திருத்த மாநாடு தனியாகவுமே நடந்து வந்தன. திலகர், “காங்கிரஸ் மாநாட்டுக் கொட்டகையில் சமுதாயச் சீர்திருத்த மாநாடு நடைபெறக்கூடாது. நடைபெற்றால் தீவைத்து விடுவோம்’’ என்று மிரட்டியுள்ளார்.

ஒரு சமுதாயத்தில் நாம் என்றென்றைக்கும் இழிமக்களாகவும் வசதியற்றவர்களாகவும் இருக்க ஓர் இனம் சகல துறையிலும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதுதானே காங்கிரஸ் என்று எடுத்துக் காட்டியவர்.
தனித்தொகுதி முறை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவசியம் தேவை. தாழ்த்தப்பட்ட மக்களே ஓட்டு அளித்து தேர்ந்து எடுக்க வேண்டும் என்று திட்டம் நிறைவேற்றப்பட்டது. காந்தியார் அவர்கள் இப்படி தனித் தொகுதி முறை ஏற்பட்டால் நான் சோறு தின்ன மாட்டேன் என்று பட்டினி கிடந்தார். அப்போது நான் பாரிசில் இருந்தேன். பேப்பரில் பார்த்துவிட்டு உடனே நானும் ராமநாதனும் அம்பேத்கருக்குத் தந்தி கொடுத்தோம் —இப்போதுதான் உங்கள் இனத்துக்கு நல்வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஏமாந்து கையெழுத்துப் போட்டுவிடாதீர்கள் என்று. எப்படியோ கையெழுத்துப் போட்டு விட்டார். காந்தியார் பட்டினி கிடந்து இறந்து விடுவாரோ என்பதற்கு மட்டும் அல்ல; அவரையே கொலை செய்யவும் சதிகள் நடைபெற்றன. எனவே, யையெழுத்துப் போட்டு விட்டார்.

அம்பேத்கர் வெகுநாளைக்கு முன்னமேயே இந்த இந்து மதத்தை விட்டுவிட்டு முஸ்லிம் மதத்தில் சேர்ந்துவிட முடிவு கட்டினார். நான் “குடிஅரசு” ஆஃபீசில் இருந்து தந்தி கொடுத்தேன். இஸ்லாத்தில் சேர்ந்தால் இஸ்லாமியர்களுக்கு அடங்கி
இருக்க வேண்டுமே ஒழிய, இந்துக்களையும் திருத்த முடியாது; முஸ்லிமாக இருந்து இந்து மதத்தைத் தாக்க முடியாது என்றேன். பிறகு மாளவியா, காந்தி எல்லாம் அவரிடம் சென்று ரொம்ப வேண்டிக்கொண்டதால் கைவிட்டார். மதம் மாறுவது மட்டும் உறுதி. ஆனால், எந்த மதம் என்று மட்டும் இப்போது சொல்லுவதற்கு இல்லை என்றார்.

பிறகு புத்த மதத்தில் சேருவதாக இருந்த போதிலும் என்னையும் அழைத்தார். நான் கூறினேன், “நாம் புத்தனாக மாறிவிட்டால் இந்து மதத்தின் குறைபாடுகளை எல்லாம் பேச முடியாது. எப்படி இந்துவானவன் முஸ்லிம் மதத்தைப் பற்றி பேசினால் முஸ்லிம் சண்டைக்கு வருகின்றானோ, அதுபோலத்தான் நாம் புத்தனாக மாறி இந்து மதத்தைப் பற்றிப் பேசினால் எதிர்ப்பார்கள். நாம் இந்து மதத்தை இந்துவாக இருந்து எதிர்ப்பதனால் எவனும் நம்மைத் தட்டிக் கேட்க முடியவில்லை என்று கூறினேன்.

பர்மாவில் நடைபெற்ற பவுத்த மாநாட்டுக்கு நானும் போய் இருந்தேன். அம்பேத்கரும் வந்து இருந்தார். அவர் என்னைக் கேட்டார், “கையெழுத்துப்போடு, புத்தராக ஆகிவிடுவோம்” என்றார். நான் கூறினேன்  “நாம் மட்டும் சேர்ந்தால் போதுமா? நம்மைப் பின்பற்ற பல லட்சம் மக்களைத் தயார் செய்து கொண்டு அல்லவா இறங்க வேண்டும். இப்போது நமது நாட்டில் மதத்தின் பெயரால் எவ்வளவு மூடத்தனமான நம்பிக்கையும் சடங்குகளும் நடைபெறுகின்றதோ அதுபோலத்தானே இன்று பர்மாவிலும் புத்த மதத்தின் பேரால் நடைபெறுகின்றதைக் காண்கின்றோம். நமது கருத்துப்படி அமைய நாம் நமக்கு பலத்தைத் திரட்டிக் கொண்டு பிறகுதான் இறங்க வேண்டும்’’ என்றேன். ‘‘என்னமோ நாம் இப்படியே இருந்து விட்டால் போதுமா? ஏதாவது செய்து விட்டுச் சாக வேண்டாமா?’’ என்று கூறினார்.

தாம் புத்த மதத்தில் சேரப் போவதாகவும், தாம் மைசூரில் பெரிய பவுத்த பல்கலைக்கழகம் ஏற்படுத்தப் போவதாகவும், மைசூர் மகாராஜா உதவ இருப்பதாகவும் கூறினார்.

நாங்கள் இப்படி பர்மாவில் பேசிக்கொண்டு இருக்கும்போது ஒரு புத்த பிட்சு அந்த இடத்துக்கு வந்தான். அவனுக்கு அம்பேத்கர் என்னை ஈ. வெ.ராமசாமி என்று அறிமுகப்படுத்தினார். அந்த பிட்சு உடனே என்னைப் பார்த்துக் கேட்டான், “நீ என்ன புத்தமதத்தைக் காப்பாற்ற வந்தாயா அல்லது ஒழிக்க வந்தாயா?” என்று கேட்டான். அவன் போன பிறகு அவன் யார் என்று விசாரித்தபோது அவன் வங்காளத்தில் இருந்து வந்து இருக்கின்றான். இவன் பார்ப்பானாக இருந்து புத்த பிட்சுவானவன் என்று தெரிவித்தார். இப்படித்தான் பார்ப்பனர் அன்றும் புத்த மதத்தில் சேர்ந்து புத்த மதத்தையே ஒழித்தனர்.

கொஞ்ச நேரத்துக்கு எல்லாம் அங்கு அம்பேத்கர் கடைசி காலத்தில் திருமணம் செய்து கொண்ட பார்ப்பன மனைவி வந்தாள். என்னை அம்பேத்கர் அறிமுகப்படுத்திய உடனே அந்த அம்மாள் சொன்னாள், ‘‘நீங்கள் யாரையோ தேடிக்கொண்டிருந்தீர்களே அப்போதே நினைத்தேன், இந்த ஆசாமியைத் தான் தேடிக் கொண்டிருந்திருப்பீர்கள்’’ என்று கூறினாள்.
தோழர்களே! அம்பேத்கர் இன்னும் கொஞ்ச காலம் இருந்திருப்பாரேயானால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எவ்வளவோ நலந்தரும் மாறுதல்கள் இன்னும் செய்திருப்பார். அம்பேத்கர் சட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 100க்கு 16 வீதம் வாங்கிவிட்டார். நான் அவரைக் கேட்டேன், “உங்கள் ஜாதிக்கு 16 வாங்கிக் கொண்டீர்களே… எங்கள் ஜாதியைப்பற்றி மறந்து விட்டீர்களே” என்று கேட்டேன். “ராமசாமி நீ சொல்லுவது தப்பு. இந்தக் கமிட்டியில் இருந்தவர்கள் எல்லாம் பார்ப்பான்கள். அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், டி.டி.கிருஷ்ணமாச்சாரி, கோபால்சாமி அய்யங்கார், முன்ஷி என்ற நாலு விஷப்பாம்புகள் இருந்தார்கள். ஒரு சாயபு. இவர் ஓர் அனாமதேயம். அவர்கள் இனத்தாருக்குக்கூட அவரால் எதையும் செய்ய முடியவில்லை.

‘‘நான்தான் எதையும் எடுத்துச் சொல்லி ஆக வேண்டும். பார்ப்பான்கள் எல்லாம் மெஜாரிட்டியாக இருப்பதனால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை’’ என்றார்.

மேலும் கூறினார். “நான்தான் அரசியல் சட்டத்தை உண்டாக்கினேன். இம்மாதிரியான ஓட்டைகள் எல்லாம் ஏற்பட்டுவிட்டது. இந்த அரசியல் சட்டத்தை எடுத்து கொளுத்துவதாக இருந்தால் நான் முன்னணியில் இருந்து தீ வைக்கத் தயார்” என்றார்.
பிறகு பார்லிமெண்டிலேயே கூறினார், “நான் தான் இந்த அரசியல் சட்டம் உண்டாக்கியதாகக் கூறுகின்றார்கள். அதை தீ வைக்க வேண்டும் என்று கூறினால் நானே முன்நின்று வைப்பேன்’’ என்று கூறினார்.
இப்படி அம்பேத்கர் அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பாடுபட இயக்கம் நடத்துவதை வகுப்புவாத இயக்கம் என்று பார்ப்பனர் கூறிப் பழித்தனர்.

இப்படிப்பட்ட ஒப்பற்ற தலைவரைபின்பற்றுபவர்களாகிய -தாழ்த்தப்பட்டவர்களாகிய – நீங்கள் கடவுள், மதம், சாஸ்
திரங்களில் நம்பிக்கை வைக்கக்கூடாது என்றும், காமராசர் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் செய்யப்படும் நன்மைகள் பற்றியும் குறிப்பிட்டுப் பேசினார்.

(அரக்கோணத்தில் 16.4.1961 அன்று அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் தந்தை பெரியார் ஆற்றி உரை).– ‘விடுதலை’, 4.5.1961

பெரியார் பேசுகிறார் ! குறளும் – நானும்

 


2023 பெரியார் பேசுகிறார் ஜனவரி 16-31 ,2023

பெரியார் பேசுகிறார் ! குறளும் – நானும்

தந்தை பெரியார்

பேரன்பு படைத்த தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! வணக்கம்.
வள்ளுவர் குறளையும், அந்தப்படியே, அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும் போது, பலர் என்னிடம், “எல்லாம் போய்விட்டால், நமக்கு எதுதான் நூல்!’ என்று கேட்பார்கள். நான், ‘ இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது; அதை எடுத்துவிடு என்று கூறினால் அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது?’ என்று பதில் கூறுவேன்.
ஏறக்குறைய மத சம்பந்தமான காரியங்களில் மக்களுக்கு நம்பிக்கையே இருக்கக் கூடாது என்று கருதி அந்தப்படியாகவே பிரச்சாரம் புரிந்து வந்தேன். பிறகு நாளாக ஆக நல்ல அறிவாளிகளோடு_ – அறிவாளி என்றால் பண்டிதர்களோடு அல்ல; பொது அறிவுள்ள மக்களோடு, திராவிட உணர்ச்சி மிக்கவர்களோடு – நம் உணர்ச்சியுள்ள அறிவாளிகளோடு பழகியபோது குறளின் மேன்மை பற்றி அவர்கள் எடுத்துக் கூறினார்கள். நான், ‘ இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதே, இந்த இடத்தில் இப்படி யிருக்கிறதே!’ என்று கேட்டேன். ‘ அது பரிமேலழகரின் உரை; அது குறளாசிரியர் கருத்தல்ல’ என்று எடுத்துக் கூறி உண்மை உரையினைச் சொன்னார்கள். அந்தக் காலத்தில் பரிமேலழகர் உரை தான் சிறந்த உரை என்று கொண்டாடப்பட்டது. அவர் மனுதர்ம சாஸ்திரப்படி குறளுக்கு உரை எழுதிவிட்டார். பின்னர் வந்த அறிவாளிகள் அதைக் கண்டித்து, குறளின் உண்மைக் கருத்தை எடுத்துக் காட்டினார்கள்.

அதிலிருந்துதான் நான் குறளைப் பற்றிப் பேசுகிறேன். அதுவும் அதையே ஆதாரமாக (Authority) எடுத்துக் கொண்டல்ல; ‘ நான் சொல்லுகிற கருத்து- அதிலும் இருக்கிறது பார்!’ என்று கூறிவந்தேன்.
சிறிது குறை இருந்தாலும் இப்போதைக்கு இது இருக்கட்டும் என்று கருதினேன்.
புராணக் கருத்துகளிலும், மூடநம்பிக்கை-களிலும் மூழ்கிக் கிடக்கும் நம் மக்களுக்குப் பகுத்தறிவு வளர்ந்தபின், மூடக் கருத்துகள் ஆட்டம் கண்ட பின்தான் குறளின் பொருளை உணரும் அறிவு மக்களுக்கு உண்டாகும் என்று கருதி, முதலில் மூடக் கருத்துகளை அகற்றும் பணியில் பிரச்சாரம் புரிந்து வந்தேன். இன்று மக்களுக்குக் கொஞ்சம் அறிவுத் தெளிவு_ -பகுத்தறிவுத் தன்மை வளர்ந்து இருக்கிறதால் இன்று குறளைப் பற்றிப் பேசுகிறேன்.
‘குறளில் இப்படியிருக்கிறதே! நீ ஏன் இப்படி நடக்கிறாய்?’ என்று கேட்காதீர்கள். நான் சொல்லுவது அதில் இருக்கிறது என்ற அளவில்தான் – நான் குறளை ஆதரிக்கிறேன்; அதை அப்படியே முழுவதையும் ஒத்துக் கொள்ளமாட்டேன்.

உதாரணமாக, மாமிச உணவு உண்பதை வள்ளுவர் மிக வன்மையாகக் கண்டிக் கிறார்; கொல்லாமையின் உயர்வு குறித்து வெகுவாக எழுதியிருக்கிறார். குறளிலேயே அப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதே என்பதற்காக நான் மாமிச உணவு உட்கொள்ளாமல் இருக்கமுடியுமா? மக்களுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் குறள்தான் ஆதாரம் என்று சொல்லவில்லை.
குறளிலிருந்து உங்களுக்கு வேண்டியதை ஏற்றுக் கொள்ளுங்கள். வேண்டாததைத் தள்ளிவிடுங்கள் என்றுதான் கூறுகிறேன்.
ஒரு கடையில் எல்லா சாமான்களும் கிடைக்கும் என்றால், அந்தக் கடையில் உள்ள எல்லா சாமான்களையும் நாம் வாங்கிக்கொண்டு வருவோமா? நமக்குத் தேவையான சாமான்களை மாத்திரந்தான் வாங்கிவருவோம். அது போலவே, குறளில் வேண்டியதை எடுத்துக்கொண்டு வேண்டாததை விட்டு விடுங்கள் என்று கூறுகிறேன்.

குறளில் ஏதோ சில குறைகள் இருக்கலாம் ; இருக்க முடியும். ஏனென்றால், அது 1950-வது வருடத்திய (இன்றைய) மாடல் அல்ல. 2000 வருடத்திற்கு முந்திய சங்கதி. திருவள்ளுவர் திரிகால முணர்ந்த முனிபுங்கவரென்றோ, ஞானியென்றோ நாம் கொள்ளவில்லை. 2000 வருடங்களுக்கு முன்னர் ஒருவன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும் எலக்ட்ரிக் லைட், ஒலிபெருக்கி, மோட்டார் முதலியவைகளைக் கண்டிருப்பானா ! மதவாதிகள் வேண்டுமானால், எல்லாக் காலத்தையும், முக்காலத்தையும் உணர்ந்த மகான் இவர்’ என்று பலரை விளம்பரப்படுத்தலாம். ஆனால், அது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. நாம் திருவள்ளுவரை மகான் என்றோ அவதார புருஷரென்றோ ஒத்துக்கொள்ளமாட்டோம்.
திருவள்ளுவர் நல்ல அறிவாளி, ஆராய்ச்சிக்-காரர். அந்தக் காலத்தில் மக்களிடம் பரவி இருந்த மூட எண்ணங்களோடு போராடிய அறிஞர் என்ற அளவில்தான் ஒத்துக் கொள்ள முடியும்.

அந்தப்படியிருக்க, 2000 ஆண்டுகளுக்கு முன்னதாகத் திருவள்ளுவர் சொன்னவை எல்லாம் அப்படியே இன்றைக்கும் ஏற்றதாக இருக்க முடியுமா? இன்றைய நிலைக்கு நான் பேசும் கொள்கைகள் சரி; என் திட்டங்கள் சரி என்றால் எனக்குப் பிறகும், இன்னும் 100, 200, 1000 வருடங்களுக்குப் பிறகும் என் கொள்கைகள் – நான் வகுத்த திட்டங்கள் கொஞ்சங்கூட மாற்றப்-
படாமல் அப்படியே இருக்க வேண்டும் என்பது என்ன நியாயம்? அந்தப்படி இருக்க முடியுமா?
காலத்திற்கு ஏற்ற முறையில்தான் எண்ணங்களின் விரிவும், கொள்கை, திட்டங் களும் இருக்க முடியும். போர் முறை பற்றித் திருவள்ளுவர்- வில், வாள், வேல், கேடயம் என்ற ஆயுதங்களை வைத்துத்தானே எழுதியிருக்கிறார்? இன்று எழுதப்பட்டால் அணு குண்டைப் பற்றி எழுதுவார்கள் ; நாளைக்கு வேறொன்று. இந்தப் படியாகத்தானே மாறிக் கொண்டே போகும்! அப்படியிருக்க, எதையும் மாற்றக்கூடாது என்பது என்ன நியாயம்? ஆரியக் கருத்துகள், தத்துவங்கள் நம் நாட்டில் நுழையாதிருந்தால், நமக்குக் குறளே ஆதாரமாக-. குறளே நம்முடைய மதமாக இருந்திருக்கும். ஆரியர்கள் திருவள்ளுவரை முதலிலேயே -பிறப்பிலேயே இழிந்தவராக ஆக்கிவிட்டார்கள்.

இந்து மதத்தில் எந்தக் காரியங்களைச் செய்தவராக இருந்தாலும், அதிசயமான அற்புதமான-நடைமுறைக்கு ஒவ்வாத கருத்துகளை அவர்களின் பிறவியில்-வரலாற்றில் புகுத்துவார்கள். இவன் குதிரைக்குப் பிறந்தான்; இவன் குரங்குக்குப் பிறந்தான்; இவன் யானைக்குப் பிறந்தான்; இவன் செத்துப்போனவனை உயிர் மீட்டு எழச்செய்தான்; இவன் மண்ணைச் சர்க்கரையாக்கினான் ; குருடனுக்குக் கண் கொடுத்தான்- என்பது போன்ற அதிசயங்களைப் புகுத்தி விடுவார்கள். ஏனென்றால், அப்போது தான் அதிலிருக்கும் குற்றங் குறைகள் பற்றி-ஆபாசங்கள் பற்றி யாரும் கேள்விகள் கேட்க மாட்டார்கள் என்ற கருத்தோடு !
ஆனால், குறளில் அப்படிப்பட்ட அதிசயம் ஒன்றையுங் கூறாவிட்டாலும் திருவள்ளுவரைத் தெய்வீகப் பிறவியாக ஆக்காவிட்டாலும் – அவருடைய பிறப்புப்பற்றி இழித்துக் கூறிவிட்டார்கள்.

வள்ளுவரின் தாயை ஒரு விபசாரியாகக் கற்பனை செய்து விட்டான். வள்ளுவர் பிறப்பைப்பற்றி எழுதும் போது பறைச்சிக்கும் பார்ப்பானுக்கும் வள்ளுவர் பிறந்தார் என்று எழுதுகிறான். இதில் புத்திசாலித்தனம் என்ன வென்றால் – குறளைப் போன்ற நீதி நெறிகளை, மக்களின் உயர் ஒழுக்கத்திற்கு வேண்டிய பண்புகளைப் போதிக்கத்தக்க தகுதியும் அறிவும் வள்ளுவருக்கு வந்ததற்குக் காரணமே, அவர் பார்ப்பனருக்குப் பிறந்த தால்தான் ஆகும் என்ற கருத்தில் இந்தக் கதையை எழுதியிருக்கிறார்கள். இந்தப்படி பறைச்சியுடன் பார்ப்பான் கூடினான் என்பது, பார்ப்பனர்களுக்கு தர்மப்படி எவ்வளவு கேவலம் என்பதை மறந்துவிட்டார்கள். அக்காலத்தில் அறிவாளிப் பார்ப்பான் எவ்வளவு அயோக்கியத்தனமாக நடந்திருக்கிறான் என்பதைக் காட்டுகிறது. இந்தப்படியாக முதல் எடுத்தவுடனேயே குறளையும், அதன் ஆசிரியரையும் இழிவு படுத்தி விட்டார்கள்.

நாட்டில் புராணங்களைப்பற்றியும், இராமன்-சீதை தொடர்புபற்றியும், கந்தன் வள்ளி காதல் லீலைகள் பற்றியும், கிருஷ்ணனின் பிள்ளை விளையாட்டு, கோபிகள் லீலைகள் பற்றியும் எல்லோருக்கும் – பாமரர்கள், பாட்டாளிகள், படிக்காதவர்கள், கூலிகள் முதற் கொண்டு பெரிய, பெரிய சீமான்கள் வரை தெரியும்; தெரிந்திருப்பார்கள். ஆனால், குறள் பற்றிப் பெரிய பணக்காரர்களுக்கும் தெரியாது; தெரிய வாய்ப்பும் இல்லை. இந்தப்படியாகக் குறளை எந்தெந்த வழியாக மங்கும்படி செய்ய முடியுமோ-மக்கள் மனத்தில் குறளின் கருத்துகள் புகமுடியாது செய்ய முடியுமோ அவ்வளவுக்கு ஆரியர்கள் செய்து விட்டார்கள்.
நான், ஆரியக் கருத்துகளெல்லாம் – அதன் தத்துவங்கள், கொள்கைகள் ஆகியவை களெல்லாம் ஒரு கூட்டத்தின் உயர்வுக்கும், வேறொரு கூட்டம் வேதனைப் படவுமான முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன என்று கூறி- அவைகளை, ஆரியக் கருத்துகளை அவைகளுக்கு ஆதாரமாய் இருக்கின்ற மதம், கடவுள் தன்மை, புராணங்கள் போன்ற வைகளை ஒழிக்க வேண்டும் என்றும் பிரச்சாரம் புரிந்து வருவதால் எனக்கு வள்ளுவர் உள்ளமும், அவர் நூலின் உண்மைக் கருத்தும் தெளிவாகத் தெரிகின்றது.
ஆகவேதான், நாம் வள்ளுவரை, அவர் இயற்றிய திருக்குறளைப் போற்றுகிறோம்.

வள்ளுவர் யார், எந்தக் குலத்தைச் சே;லீந்தவர் என்று நிச்சயமாய்க் கூற முடியாது. வள்ளுவர் ஆரியத்தை எதிர்ப்பவர்; ஆரியக் கருத்துகளைக் கண்டிப்பவர்; அவைகளை வெறுப்பவர் என்று தான் நமக்குத் தெரிகிறது. அதோடு, வள்ளுவர் எந்த மதத்தையும் சார்ந்தவராகத் தெரியவில்லை. சாதாரணமாக சைவ, வைணவ, சமணர்கள் விவாதங்களில் – சமணர்கள்தான் வெல்லுவார்கள். பெரிய புராணம் எழுந்ததே சமணர்களை ஒழிப்பதற்காகத்தான். ஆரியக் கருத்துகளை சமணர்கள் ஏற்கவில்லை என்பதற்காக அவர்கள் வெறுக்கப்பட்டார்கள். அதன் விளைவாகப் பலப்பல தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள் சமணர்கள். இன்றுங்கூட மதுரையில் 8000 சமணர்களை கழுவேற்றின திருவிழா கொண்டாடப்படுகிறது.

அவ்வளவு தூரம் ஆரியக் கருத்துகளை எதிர்த்து, அதற்காக இன்னல்கள் பல பட்டிருக்கும் சமணர்களும்- திருக்குறளை ஆகரிக்கிறார்கள். சைவ சமயத்தவரும், வைணவ மதத்தாருங்கூட திருக்குறளை மாபெரும் நூல் என்று ஒத்துக் கொள்ளுகின்றனர். இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்களும், கிறிஸ்துவ மதத்தின் கீழிருப்பவர்களும் திருக்குறளைப் போற்றுகிறார்கள். இந்தப்படி எல்லோரும் போற்றுவதால்தான் திருக்குறள் ஒரு மதத்தைத் தழுவியோ, ஒரு மதத்தின் உயர்வுக்காகவோ எழுதப்பட்ட நூல் என்றில்லாமல், மக்களின் வாழ்க்கைக்கு, மக்கள் தங்களுடைய வாழ்க்கையிலே கையாள வேண்டிய வழி வகைகள் பற்றி எழுதப்பட்ட நூல் என்று ஆகிறது. குறளாசிரியர் காலத்தில் – இந்து மதம்‘ என்பது இல்லை. இந்து மதம் என்று இருந்திருந்தால் திருக்குறளில் ஒரு இடத்திலாவது ‘ இந்து’ என்ற சொல்லைக் குறிப்பிட்டிருக்கலாம். ஆனால், 1330 பாட்டுகளிலும் ஒரு இடத்திலாவது ‘இந்து’ என்ற சொல் காணப்படவே இல்லை.
அது மட்டுமல்ல, குறளாசிரியர் கடவுளையும், மோட்ச நரகத்தையும் ஒத்துக் கொள்ளவில்லை. குறளில் நீங்கள் அறம், பொருள், இன்பம் என்ற அளவில் தான் காணமுடியுமே தவிர,’ ‘வீடு’ – ‘மோட்சம்‘ பற்றி அவர் கூறி இருப்பதாக இல்லை . அறம், பொருள், இன்பம் என்றுதான் முப் பிரிவுகளைக் கூறுகிறார், மோட்ச சாம்ராஜ்யத்தை விட்டு விட்டு.
திருவள்ளுவர் கடவுளைப்பற்றிக் கவலைப்-படவில்லை என்று கூறினேன். திருக்குறளின் முதல் அத்தியாயத்தில், ‘கடவுள் வாழ்த்து’ என்று ஒரு அதிகாரம் இருக்கிறது. அதில் உருவ வணக்கக் கொள்கைகள் இடம் பெறவில்லை. மேலும், இந்து மதக் கடவுள் களைப் பற்றிய ‘புகழாரம்‘ அந்தப் பத்துப் பாட்டுகளிலும் கிடையாது.

சிலர் கூறுகிறார்கள், ‘குறளில் முதல் அத்தியாயத்தில் இருக்கும் கடவுள் வாழ்த்துப் பாக்கள் இடைச் செருகல்’ என்று; சிலர், ‘அப்படியெல்லாம் இல்லை; வள்ளுவர் பாடியது தான்’ என்று கூறுகிறார்கள். நம்மைப் பொறுத்த வரையில் கடவுள் வாழ்த்துப் பாக்களை வள்ளுவரே பாடினதாக வைத்துக்கொண்டாலும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. இன்றைக்கு நமக்கு இருக்கின்ற கடவுள்களைப் போன்ற கடவுள்களுக்கா வள்ளுவர் வாழ்த்துக் கூறினார்? இல்லை. கடவுள் வாழ்த்துக் கூறப்படும் பத்துப் பாட்டிலும், ஒரு பாட்டிலாவது வள்ளுவர் ‘கடவுள்’ என்ற சொல்லைக் கையாளவில்லை. திராவிட மக்களுக்கு ‘எல்லாம் வல்ல, ‘எங்கும் நிறைந்த’ என்பதாகக் கடவுளைக் குறிக்க ‘கடவுள்’ என்ற ஒரு சொல்லைத் தவிர வேறு சொல் கிடையவே கிடையாது. அந்தச் சொல்லையே வள்ளுவர் தமது குறளில் கையாளவில்லை! கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்தில் கையாளவில்லை என்பதோடு மாத்திரமல்ல, குறள் முழுவதிலுமே-1330 பாடல்களிலுமே ஒரு இடத்திலாவது வள்ளுவர் ‘கடவுள்’ என்ற சொல்லைக் குறிப்பிடவில்லை. தமிழ் மொழியில் உள்ள நல்ல சொற்களையெல்லாம் – உயர்ந்த சொற்களையெல்லாம் தமது நூலில் பயன்படுத்திய வள்ளுவர், ‘கடவுள்’ என்ற சொல்லை மட்டும் பயன்படுத்தவில்லை.

திருக்குறளுக்கு முந்திய நூல் என்று சொல்லப்படுகிற தொல்காப்பியத்திலும் கடவுள் என்ற வார்த்தையே கிடையாது.
இரண்டாவது, ‘கடவுள் வாழ்த்து’ என்பதே கேலிக்குரியது; மிகவும் தவறான சங்கதியாகும். ‘சர்வ வல்லமை’யும் படைத்த- நம்மையெல்லாம் காக்கும் கடவுளுக்கு ‘கடவுள் வாழ்த்து’ என்று நாம் போய் வாழ்த்துக் கூறுவதா? வள்ளுவரை நாம் மாபெரும் அறிவாளி, ஆராய்ச்சிக்காரர் என்று கூறுகிறோம். அதற்குத் தக்க ஆதாரங்களும் இருக்கின்றன. அவர் போய் இந்தப்படி ‘கடவுள்’ என்று நாம் கருதுவதற்கு வாழ்த்துப் பாடல் வாசிப்பாரா?

வள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடியிருப்ப-தெல்லாம் ஒவ்வொரு நற்குணங்களை வைத்து,
அந்தப்படியாக நடக்கவேண்டும் என்பதற்-காகவே பத்துப் பாட்டிலும் பத்து விதமான குணங்களைக் கூறினார். சர்வ வல்லமையுடைய சர்வேசுவரனைப் பற்றிப் பாடுவதென்றால் இரண்டு, மூன்று பாட்டுகளோடு குறளை நிறுத்தியிருப்பார். அதை விட்டு அவ்வளவு பாட்டுகள் அவைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நற்குணத்தைப் போதிக்கிறார் என்றால் என்ன பொருள்? மனிதன் எப்படியிருக்க வேண்டும் என்பதைக் காட்டுவ தற்காகத்தான்- வாழ்வின் வகையை, நிலையை உணர்த்துவதற்காகத்தான் எட்டு, ஒன்பது கருத்துகளை வைத்து வள்ளுவர் கடவுள் வாழ்த்துக் கூறியிருக்கிறார்.