சனி, 29 அக்டோபர், 2016

திருமணம்திருமணம்

7.7.1929 - குடிஅரசிலிருந்து....
இப்போது நம் நாட்டில் நடைபெற்றுவரும் மணங்கள் பெரிதும் மணத்தின் உண்மைத் தத்துவமற்றதும், அர்த்தமற்ற வெறும் சடங்கையே முக்கியமாகக் கொண்டதுமாய் நடை பெறுகின்றன.
மணமக்கள் தங்களுக்குள் செய்து கொண்ட ஒப் பந்தத்தைக் காப்பாற்றுதற்குப் பலர் முன் உறுதிப் படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட மணமுறையானது  தற்காலம் வெறும் சடங்குகளையும் அர்த்தமற்ற பழக்க வழக்கங்களையும் காப்பாற்றும் முறையாய்த் திகழ்கின்றது. மணத்தின் லட்சியம் முழுவதும் சடங்காய் ஏற்பட்டுவிட்டது. இயற்கை எழுச்சியாலும் உணர்ச்சி யாலும் ஏற்படவேண்டிய மணம் செயற்கையில் நிகழ வேண்டியதாய்விட்டது.
அது போலவே, இயற்கைக் காதலும் இன்பமும்கூட செயற்கைக் காதலாகவும் இன்பமாகவும் மாறிவிட்டது. மணமக்கள் ஒருவரை ஒருவர் தாங்களாகவே தெரிந்து எடுத்துக் கொள்ள வேண்டியதற்குப் பதிலாக வேறு ஒருவர் தெரிந்தெடுத்து மணமக்களை ஒப்புக் கொள்ளச் செய்ய வேண்டியதாயிருக்கின்றது..
அநேக மணங்களில் மணம் நிகழும்வரை, அதாவது தாலியைப் பெண் கழுத்தில் கட்டும் வரை ஆண் இன்னார், இப்படிப்பட்டவர் என்று பெண்ணுக்கும், பெண் இன்னார், இப்படிப்பட்டவர் என்று ஆணுக்கும் தெரியாமலேயே இருக்கின்றது. சில மணங்களில் தாலி கட்டி சில நாள் வரை கூட தெரிவதற்கில்லாமல் இருக்கின்றது. ஒருவருக்கொருவர் முன்னைக் கூட்டியே தெரிய வேண்டாமா என்று யாராவது கேட்டால், அன்று பிரமன் போட்ட முடிச்சை இனி அவிழ்த்து வேறு முடிச்சு போடவா போகிறான் என்று சமாதானம் சொல்லி விடுகின்றார்கள்.
எங்கள் பக்கங்களில் கல்யாணப் பெண்கள் இரண்டு கைகளைக் கொண்டும் கண்களை நன்றாய்ப் பொத்திக் கொண்டும் தேம்பித் தேம்பி அழுது கொண்டும் இருக்க, மற்றொரு பெண் கையைப் பிடித்து தரதரவென்று மணவறைக்கு இழுத்துக் கொண்டு வருவது வழக்கம். தாலி கட்டுவதற்குக் கூட கைகளைப் பிடித்து விலக்கித்தான் கட்ட வேண்டும். யார் தாலி கட்டினதென்று பெண்ணுக்குத் தெரியவே தெரியாது. இப்படி அழுது கொண்டும்.
கண்களை மூடிக் கொண்டும் இருக்கும் பெண்கள்தான் நல்ல உத்தமப் பெண்கள் என்று சொல்லுவார்கள். பெண்களுக்குக் கல்யாணம் என்பது தன்னை மற்றொரு வீட்டிற்கு அடிமையாய் விற்பது என்பது அர்த்தமாயிருக் கின்றதேயொழிய ஆணும் பெண்ணும் கூடி வாழ்வதற்குச் செய்யும் காரியம் என்பது இன்னமும் அநேக பெற்றோர்களுக்குத் தெரியவே தெரியாது.
கல்யாணச் சடங்கு நடந்து பெண்ணை மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பும் போது, பெண் வீட்டாரும், நெருங்கின சுற்றத்தாரும் அழுது கொண்டும், பெண்ணும் தேம்பித் தேம்பி அழுது கொண்டுந்தான் அனுப்பப்படுகின்றது. கல் என்றாலும் கணவன், புல் என்றாலும் புருஷன் என்று சொல்லி, புருஷன் சொன்னபடியும், மாமி, மாமன், நாத்தி, கொழுந்தன் சொன்ன படியும் நட என்று பெண்களுக்குப் படிப்பிக்கப்படுகின்றன.
இம்மாதிரி உபதேசத்தில் கட்டுப் பட்ட பெண்கள் தங்களை மாமியின் வேலைக்காரிகள் என்று எண்ணிக் கொள்ளுவார்களே தவிர இயற்கை இன்பத்தை எப்படி அனுபவிக்க முடியும் என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.
வாழ்க்கை, மணம், இன்பம், காதல் என்பவைகள் ஒவ்வொரு தனிமனிதனின் உரிமையாகும். அன்றியும் அவை அவரவரின் தனி இஷ்டத்தைப் பொறுத்தது மாகும். இவற்றில் அன்னியருக்குச் சற்றும் இடமில்லை.
ஆனால் இப்போது இவை மற்றவர்களுடைய திருப்திக்கும் இஷ்டத்திற்கும் ஏற்றபடி நடக்கின்றது. மணமக்களுக்குத் தங்கள் தங்கள் காதலின் மேல் ஏற்படும் மணம்தான் வாழ்க்கையில் இன்பத்தைக் கொடுக்க முடியும். ஆதலால் இன்று நடந்த மணமானது உண்மையான சீர்திருத்த மணமாகும்.


வைதிகர்களின் இறக்கம்

11.08.1929- குடிஅரசிலிருந்து....

பெண்களுக்குக் கல்வி கற்பிக்கக்கூடாது. ஒரு பெண் தனது கணவனையே தெய்வமாக மதித்துக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும்.
அவர்களுக்குச் சுதந்தரமே கிடையாது, என்று சனாதன தருமத்தின் பேராலும் சாஸ்திரத்தின் பேராலும் கடவுளின் பேராலும், இதுவரை கண்மூடித்தனமாக கூச்சல் போட்டுவந்த வைதிகர்களுக்கு இப்போதுதான் சிறிது சிறிதாக புத்தி உதயம் ஆகி வருவதாகத் தெரிகிறது.
நமது சுயமரியாதை இயக்கத்தை பார்ப்பனர்களும் அவர்களுடைய கூலிகளும். நாஸ்திக இயக்கம் என்று கூறி பாமர மக்களை ஏமாற்றி வந்தாலும், நமது கொள்கைகளும், தீர்மானங்களும், பிரச்சாரமும் அவர்களை நேர் வழியில் நடக்கும்படி நிர்ப்பந்தித்து வருகின்றன என்பதிற் சந்தேக மில்லை.
நாம் ஒவ்வொரு கூட்டத்திலும் மகாநாட்டிலும் பெண் மக்களின் பொருளாதார உரிமை, பாலிய விவாகம் ஒழித்தல், விதவா விவாகம் செய்தல் முதலிய நியாயமான உரிமைகட்காக பேசியும் தீர்மானங்கள் செய்தும் போராடி வருவது எல்லோ ருக்கும் தெரியும்.
சில நாட்களுக்கு முன்னர் திருவல்லிக் கேணியில் பெரிய பெரிய சாஸ்திரிகள் என்பவர்களும் பண்டிதர் என்பவர்களும் ஒன்று கூடிப் பெண்மக்கள் முன்னேற்றத்திற்கான சில தீர்மானங்கள் செய்திருக்கின்றனர் அவையாவன:
1. அவிபக்தமாகவோ, விபக்தமாகவோ உள்ள நமது இந்துக் குடும்பங்களில் சாஸ்திரியமாக விவாகம் செய்யப்பட்ட பெண்களுக்கு விவாக சமயத்திலிருந்து புருஷனது குடும்பச் சொத்திலும் அவனது சம்பாதனத்திலும் அப்படியே ஸ்திரி களின் சொத்திலும் அவர்களின் சம்பாதனத்திலும் புருஷர்களுக்குச் சமபாகமும், ஏற்படுத்துவதற்கு வேண்டிய முறையை நமது ஆரியர்கள் யாவரும் சமூகக் கட்டுப்பாட்டின் மூலம் ஏற்படுத்திக் கொள்வது அவசியம்.
2. சாஸ்திரீயமாக விவாகம் செய்து கொண்ட பெண்ணைத் தகுந்த காரணமின்றித் தள்ளிவிட்டும் மறு விவாகம் செய்பவரைச் சமூகப் பகிஷ்காரம் செய்வதற்கு வேண்டிய கட்டுப்பாட்டை அமைத்துக் கொள்ளுவது அவசியம்.
3. ஒரு குடும்பத்தில் புருஷர்களுக்குப் போலவே
ஸ்திரீகளுக்கும் குடும்பச் சொத்தில் பாகம் கிடைக்குமாறு வழி தேட வேண்டும்.
4. ஒரு குடும்பத்தில் ஒரு பிதாவுக்கு ஒரு ஆணும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகள்  பிறந்து பெண்ணுக்குக் கல்யாணமாகி புத்திரனுக்குக் கல்யாண மாவதற்குள் பிதா முதலியோர் இறந்த சில நாளைக்கெல்லாம் அந்த ஆண் பிள்ளை இறப்பானானால் பிதா மூலம் கிடைத்த அவனது சொத்தும் ஸ்வார்ஜித சொத்தும் அவனது தாயாதிகள் அடைவது என்ற கெட்ட முறையை மாற்றி அவனது சகோதரியும், அவளது குழந்தைகளும் அனுபவிக்கும் படிக்கான முறையை ஏற்படுத்தி அதை அனுபவத்தில் கொண்டு வர வேண்டும்.
ஆகவே இவ்வழியை ஆரியர் யாவரும் சமூகக் கட்டுப்பாடு மூலம் ஏற்படுத்திக் கொள்ளத் தவறினால் அதன் மூலம் ஸ்திரீகளுக்கு நேரும் கஷ்டங்களைப் போக்க வேண்டி நமது காருண்யக் கவர்ன்மெண்டாரை அவ்வழியில் கடுமையான சட்டமியற்றி அதை உடனே அனுஷ்டானத் துக்குக் கொண்டுவந்து ஸ்திரீகளைக் காக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானங்களேயாகும்.
குறுகிய கால அளவில் இவ்வளவு தூரம் பெண் மக்கள் விஷயத்தில் வைதிகர்களின் விடாப்பிடியைத் தளரச் செய்த நமது சுயமரியாதை இயக்கம் இன்னும் கூடிய விரைவில், பாலிய விவாகம் ஒழித்தல், விதவா விவாகம் செய்தல் முதலியவற்றிற்கும் எவ்வித எதிர்ப்பும் நாட்டில் இல்லாமற் செய்து தக்க ஆதரவு தேடிவிடும் என்று உறுதி கூறுகின்றோம்.


-விடுதலை,24.9.16

ஓ.என்.ஜி.சி சார்பில் இந்தியாவில் 22 இடங்களில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

ஓ.என்.ஜி.சி  சார்பில் இந்தியாவில்  22 இடங்களில்
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
மய்ய அரசின் நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனத்தில் (Oil and Natural Gas Commission - ONGC) தந்தை பெரியாரது பிறந்த நாள் நாடு முழுவதும் உள்ள அதன் அலுவலகங்களில் 22 மய்யங்களில் கொண்டாடப்பட்டது.
தந்தை பெரியார் பிறந்தநாள் விழா நடைபெற்ற இடங்கள்: அகர்தலா (திரிபுரா), அங்கிலேஸ்கர் (குஜராத்), பரோடா (குஜராத்), பொக்காரோ (ஜார்காண்ட்), கோவா, டேராடூன் (ஓ.என்.ஜி.சி தலைமையிடம்), ஜோத்பூர் (இராஜஸ்தான்), ஜோத்பூர் (குஜராத்), ஜோராத் (அசாம்), காம்பே (குஜராத்), சென்னை (தமிழ்நாடு), புதுடில்லி (தேசிய தலைநகர்),
கிழக்கு கடற்கரை (காக்கிநாடா - ஆந்திரா), அஜீரா (குஜராத்), காரைக்கால் (புதுச்சேரி), மேசானா (குஜராத்), மும்பை (மகாராஷ்டிரா), நஜிரா (அசாம்), சில்சர் (அசாம்), உரான் (மகாராஷ்டிரா), கொல்கத்தா (மேற்கு வங்காளம்) இராஜமுந்திரி (ஆந்திரா) ஆகிய 22 இடங்களில் உள்ள ளிழிநிசி அலுவலகங்களில் தந்தை பெரியார் 138ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
தந்தை பெரியார் பெயரால் கைப்பந்து விளையாட்டுப் போட்டி
பிறந்த நாள் விழாக் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக, தமிழ்நாட்டில் உள்ள ஓ.என்.ஜி.சி.அலுவலகங்கள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தந்தை பெரியார் கைப்பந்து (வாலிபால்) போட்டி நடத்தப்படுகிறது.   ஓவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 17ஆம் நாளில் இந்தப் போட்டி நடத்தப்படுகின்றது. இவ்வாண்டு  தமிழ்நாடு - இராமநாதபுரத்தில் நடைபெற்றது. தமிழக அரசின் அமைச்சர் மணிகண்டன் விழாவில் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
அனைத்து நிகழ்ச்சிகளிலும் அந்தந்த அலுவலக உயர் அதிகாரிகளும், பணியாற்றும் அலுவலர் மற்றும் ஊழியர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர். ளிழிநிசி நிறுவனத்தில் தந்தை பெரியாரது பிறந்த நாள் விழா   கொண்டாட சி. சேதுபதி, மின் பிரிவு தலைமைப் பொறியாளர் டி.எஸ். அன்பரசு ஆகியோரின் பங்கு முக்கியமானது.
தந்தை பெரியாரது சமூகப் புரட்சிப் பணிகளின் பலன் மய்ய அரசு ரீதியாக அங்கீகரிக்கப்பட்டு அலுவலக ரீதியில் பெரியாரது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது, "பெரியார் உலக மயமாகிறார்" எனும் லட்சியப் பயணத்தில் ஒரு மைல் கல் சாதனை ஆகும்.
- நமது செய்தியாளர்
-விடுதலை,24.9.14


தீபாவளிபற்றி குடியரசில் பெரியார்!


பூமியைப் பாயைப்போல் சுருட்டி எடுத்துக்கொண்டு கடலுக்குள் ஒருவன் நுழைந்துகொள்ள முடியும் என்பதை எந்தப் பஞ்சாங்கப் புரோகிதன்கூட ஏற்றுக்கொள்ளமாட்டான். ஆனால் பஞ்சாங்க நம்பிக்கையுடையவன் மட்டுமல்ல, பஞ்சாங்கத்தையே பார்க்காத – நம்பாத பார்ப்பனரிலிருந்து பூகோளத்தைப் பற்றிப் போதனைசெய்யும் பேராசிரியர்கள் வரை கொண்டாடி வருகிறார்களே ஏன்?
மகாவிஷ்ணு (?) பன்றியாக வேஷம் போட்டுக் கொண்டுதான் கடலுக்குள் நுழைய முடியும்! சுருட்டியிருந்த பூமியை அணைத்து தூக்கிவரும் போதே மகாவிஷ்ணுக்கு காமவெறி தலைக்கேறி விடும்! அதன் பலனாக ஒரு குழந்தையும் தோன்றிவிடும்! அப்படிப் பிறந்த குழந்தை ஒரு கொடிய அசுரனாக விளங்கும்! என்கிற கதையை நம் இந்துஸ்தானத்தின் மூலவிக்கிரகமான ஆச்சாரியாரிலிருந்து ஒரு புளியோதரைப் பெருமாள் வரை யாருமே நம்பமாட்டார்கள் – நம்ப முடியாது.
ஆனால் இப்படி நம்பாத விஷ்ணு பக்தர்கள் முதல், விஷ்ணுவுக்கு எதிர் முகாமிலுள்ளவர்கள் வரை இந்த நாட்டில் கொண்டாடி வருகிறார்கள். ஏன்? சுயமரியாதை இயக்கத்தின் தீவிரப் பிரசாரத்தினால், இன்று திராவிட நாட்டிலுள்ள பல ஆயிரக்கணக்கான திராவிடத் தோழர்கள் இந்த மானமொழிப்புப் பண்டிகையைக் கொண்டாடுவதில்லை என்றாலும், படித்தவன் – பட்டதாரி – அரசியல் தந்திரி – மேடைச் சீர்திருத்தவாதி என்பவர்களிலேயே மிகப் பலபேர் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றார்கள் என்றால், இந்த அறிவுக்குப் பொருத்தமற்ற கதையை ஆதாரமாகக் கொள்கிறார்கள் என்றால் இவர்களுடைய அறிவுக்கும் அனுபவத்துக்கும் யார்தான் வயிற்றெரிச்சல்படாமல் இருக்கமுடியும்? ஆரியப் பார்ப்பனர்கள், தங்களுக்கு விரோதமான இந்நாட்டுப் பழங்குடி மக்களை – மக்களின் தலைவர்களை அசுரர்கள் – அரக்கர்கள் என்கிற சொற்களால் குறிப்பிட்டார்கள் என்பதையும், அப்படிப்பட்ட தலைவர்களுடைய பிறப்புகளை மிக மிக ஆபாசமாக இருக்கவேண்டும் என்கிற ஒன்றையே கருத்தில் கொண்டு புழுத்துப்போன போக்கினின்றெல்லாம் எழுதிவைத்தார்கள் என்பதையும், இந்த நாட்டுச் சரித்திரத்தை எழுதிவந்த பேராசிரியர்களில் பெரும்பாலோரால் நல்ல முறையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இருந்தும் அந்த உண்மைகள் எல்லாம் மறைக்கப்பட்டுப்போக, இந்த நாட்டு அரசாங்கமும் – அதன் பாதுகாவலரான தேசியப் பார்ப்பனர்களும் இன்றைக்கும் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்கிறார்கள் என்றால் அதை எப்படித் தவறு என்று சொல்லிவிட முடியும்? திராவிடப் பேரரசன் (வங்காளத்தைச் சேர்ந்த பிராக ஜோதிஷம் என்ற நகரில் இருந்து ஆண்டவன்) ஒருவனை, ஆரியர் தலைவனான ஒருவன், வஞ்சனையால், ஒரு பெண்ணின் துணையைக் கொண்டு கொன்றொழித்த கதைதான் தீபாவளி.
இதை மறைக்கவோ மறுக்கவோ எவரும் முன்வர முடியாது. திராவிட முன்னோர்களில் ஒருவன், ஆரியப் பகைவனால் அழிக்கப்பட்டதை, அதுவும் விடியற்காலை 4 மணி அளவுக்கு நடந்த போரில் (!) கொல்லப்பட்டதை அவன் வம்சத்தில் தோன்றிய மற்றவர்கள் கொண்டாடுவதா? அதற்காக துக்கப்படுவதா?
திராவிடர் இன உணர்ச்சியைத் தொலைக்க, ஆரிய முன்னோர்கள் கட்டிய கதையை நம்பிக்கொண்டு, இன்றைக்கும் நம்மைத் தேவடியாள் பிள்ளைகள் எனக் கருதும் பார்ப்பனர்கள் கொண்டாடுவதிலாவது ஏதேனும் அர்த்தமிருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், மானமுள்ள திராவிடன் எவனாவது இந்த பண்டிகையைக் கொண்டாடலாமா? என்று கேட்கிறோம்.
தோழர்களே! தீபாவளி திராவிடனின் மானத்தைச் சூறையாடத் திராவிடனின் அறிவை அழிக்கத் திட்டமிடப்பட்ட தீ நாள்! இந்தத் தீ நாள் திராவிடனின் நல்வாழ்வுக்குத் தீ நாள். இந்தத் தீயநாளில் நீங்கள் செய்ய வேண்டிய வேலை என்ன? தன் தலையில் தானே மண்ணையள்ளிப் போட்டுக் கொள்வதா? யோசியுங்கள்!
– குடிஅரசு – தலையங்கம் – 15.10.1949

வெள்ளி, 28 அக்டோபர், 2016

பெரியார் கே ப்ரதிநிதி விசார்’ என்ற நூல் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டது.


பகுத் அச்சா!

இந்தி புத்தக உலகில் சமீபத்திய ‘பெஸ்ட் செல்லர்’ யார் என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள்! நம் பெரியார்தான். ஆம்! ‘பெரியார் கே ப்ரதிநிதி விசார்’ என்ற நூல் கடந்த செப்டம்பர் மாதம் பெரியார் பிறந்தநாள் அன்று, ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டது. புதுடெல்லியின் ‘ஃபார்வர்டு பிரஸ்’, ‘காட்டாறு’ இதழ் இரண்டும் இணைந்து வெளியிட்ட இந்த நூல் ஒரே மாதத்தில் இரண்டாயிரம் பிரதிகள் விற்றுத் தீர்ந்திருக்கிறது. பெரியார் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தேவைப்படுகிறார். பகுத் அச்சா!

(தி இந்து: 29.10.2016)

வாழ்த்துகள் தாமரை!
Dhalapathi RaJ (முகநூல்)

புதன், 26 அக்டோபர், 2016

தீபாவளிப் பண்டிகை

வருஷா வருஷம் கடவுளுக்கு (சாமிகளுக்கு) கல்யாண உற்சவம் வருவது போல வருஷா வருஷம் தீபாவளி போன்ற பண்டிகைகளும் வந்து கொண்டிருக்கின்றன.

நம் மக்களும் பெரும்பான்மையோர்கள், கடவு ளுக்கு எங்காவது கல்யாணம் செய்வாருண்டா? கடவுள்தானாகட்டும் கல்யாணம் செய்து கொள்ளுமா? என்கின்ற அறிவே இல்லாமல் எப்படி கோயில்களில் வருஷா வருஷம் கல்யாணம் செய்கிறார்களோ அதே போல் இந்தத் தீபாவளி முதலிய பண்டிகைகளை நம் மக்கள் அனேகம் பேர் கொண்டாடி வருகிறார்கள்; இவற்றுள் அண்மையில் வரப்போகும் இந்த தீபாவளிப் பண்டிகையின் உண்மை என்ன? அதன் தத்துவம் என்ன? என்பது பற்றி நம் மக்களுக்குக் கவலை இருப்பதே இல்லை; ஏதாவது ஒரு சாக்கு வைத்துக் கொண்டு கொண்டாட்டங்கள் கொண்டாட வேண்டும். ஏதாவது ஒரு சாக்கில் கடவுள் மத பக்தி காட்டிக் கொள்ளவேண்டும் என்கின்ற கருத்தைத் தவிர நம் மக்களுக்கு அவற்றின் உள்கருத்தை அறிவது என்கின்ற உணர்ச்சியோ கவலையோ இருப்பதில்லை.

சாதாரணமாக நம்மைப் போல் உள்ள ஒரு மனிதனை நாம் பிராமணன் என்று கருதுகிறோமானால், ஒருவனை பிராமணன் என்று அழைக்கிறோம் என்றால், அதன் கருத்து என்ன? என்பது பற்றி நாம் சிந்திப்பதே இல்லை. ஒருவனை நாம் பிராமணாள் என்றால், நாம் யார்? ஒருவனை நாம் பிராமணன் என்று அழைப்பதால் நம்மை யார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்? நம்மை நாம் எந்தப்படியும் நினைத்துக் கொள்ளவில்லை என்று ஆனாலும்கூட அதன் கருத்து என்ன ஆகின்றது? அதனால் நாம் நம்மை சூத்திரன், கீழ் பிறப்பு என்பதாக ஒப்புக் கொண்டதாகத்தானே ஆகிறது? என்பது போன்ற அறிவில்லாததனாலேயே ஒருவனை நாம் பிராமணன் என்கின்றோம். இந்தக் காரணத்தால் பிராமணன் என்பதாக ஒரு ஜாதி மகன் இருக்கவும், சூத்திரன் என்பதாக ஒரு ஜாதி மகன் இருக்கவும் நாமே இடம் கொடுத்து உதவி செய்தவர்களாக ஆகிவிடுகிறோம். இதனால் பிராமணர்கள் என்பவர்களும் (பார்ப்பனர்கள்) தங்களை பிராமணர்கள் என்று எண்ணிக்கொண்டு, நம்மை சூத்திரர்கள் என்றே கருதிக் கொண்டு மற்றெல்லா விஷயங்களிலும் நம்மை சூத்திரர்களாகவே (கீழ்ஜாதி மகனாகவே) நடத்துகிறார்கள்.

இது போலவே நாம் இந்த தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடுவதன் மூலம் நாம் நம் இழி நிலையை உணராத, மான உணர்ச்சியற்ற மக்களாக ஆகி, வேறு யாராவது நமது இழி நிலை ஒழிப்புக்கு ஆக செய்யப்படும் முயற்சிகளுக்கும் முட்டுக் கட்டை போட்டவர்களாகி, நம் பின் சந்ததிகளுக்கும் மான உணர்ச்சி ஏற்படாமலும் இழிவு படுத்தப்படவும் ஆதரவு காட்டி வைத்தவர்களாக ஆகிவிடுகிறோம்.

இன்று நம் நாட்டில் அரசியல், பொருளியல், கல்வி இயல், சமய, சமுதாய இயல், என்பவைகளின் பேரால் செய்யப்படும் கிளர்ச்சிகளும் குறிப்பாக திராவிடர் கழகத்தாரால் செய்யப்பட்டு வருபவைகளும்,மற்றும் பல பொது முயற்சி கிளர்ச்சிகளும் எதை அடிப்படையாகக் கொண்டது என்று நாம் சிந்தித்துப் பார்ப்போமே யானால், உண்மையில் அதன் அடிப்படைத் தத்துவம் நம் மக்கள் பெரும்பாலோருக்கு அதாவது 100-க்கு 99 பேருக்கு இருந்து வரும் பிறவி இழிவும், அவ்விழிவு காரணமாக நமக்கு இருந்துவரும் பல உரிமை மறுப்புக்களும் முன்னேற்றத் தடைகளும் ஒழியவேண்டும், ஒழிக்கப்பட வேண்டும் என்பதும், நம் எதிரிகளால் அல்லது நம்மை இப்படி ஆக்கிவைத்து பலன் அனுபவித்துக் கொண்டு இருக்கும் மக்களால் இந்த நிலையை இப்படியே இருத்தி வைக்க வேண்டும் என்பதுமான ஒரு போட்டா போட்டி முயற்சிகளேயாகும்.

இம்முயற்சி காரணமாகத்தான் நாம் ஏன் ஒருவனை பிராமணன் என்று அழைக்கக்கூடாது என்பதும், நாம் ஏன் உற்சவாதிகளைக் கண்டிக்க வேண்டும் என்பதும், நாம்  ஏன் தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கொண் டாடக்கூடாது என்பதுமான விஷயங்களைப் பற்றி பிரச்சாரங்களும் வேண்டுகோள்களும் செய்து வருவதாகும்.

அது போலவே இந்தக் காரணங்களால்தான் இந்த நடத்தைகளால் பலனடைந்து நம்மை இழிவுப்படுத்தி, அடக்கி ஒடுக்கி அழுத்தி வைத்திருக்கும் பிராமணர்கள் என்பவர்களின் உற்சவம், பண்டிகை, வர்ணாசிரம ஜாதிக்கிரமம் அவற்றை அனுசரித்த ஆதாரங்களாகிய வேத சாஸ்திர, புராண இதிகாசம், அவை சம்பந்தமான இலக்கியம் முதலியவை காப்பாற்றப்படவும், பிரசாரம் செய்யவும், இயல் இசை நாடகம் மூலம் அவற்றைப் பரப்பி வரவுமான எதிர் முயற்சிகளுமாகும்.

இது பழைய போராட்டமே

இந்த இரண்டு போராட்டமும் இந்த நாட்டில் இன்று நேற்று அல்லாமல், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே நடந்து வந்திருக்கின்றன என்பதை நாம் இன்றும் ஆதார பூர்வமாய்க் காணலாம். ஆயிரக்கணக் கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்து வந்திருக் கிறது என்பதைக் காட்டுவதுதான், அதை ஆதரிக்கும்படி தூண்டுவதுதான், அந்தத் தன்மையை நிலைத்திருக்கச் செய்வதுதான் இன்றைய உற்சவம், பண்டிகை முதலான காரியங்களாகும்.

எதனால் இதை இந்தப்படி நாம் சொல்லுகிறோம் என்றால்  ஏறக்குறைய 100 க்கு 90 க்கு குறையாத உற் சவம், பண்டிகை நல்ல நாள் கெட்ட நாள் கொண்டாட்டங்கள், விரதம் முதலிய அநேக காரியங்களுக்கும் இந்தப் புராண இதிகாசங்களும், சமுதாய நடப்புகளுக்கு சாஸ்திர தர்மங்களுமே காரணமாக இருந்து வருவதாலேயே இப்படிக் கூறுகிறோம்.

உதாரணமாக, கடவுள் அவதாரங்கள், கடவுள்களின் யுத்தங்கள், கடவுள்கள் செய்த (சம்ஹாரம்) கொலைகள், கடவுள்கள் செய்த வஞ்சக (கபடநாடக)ங்கள், கடவுள் களின் காலடிகளில் அழுத்தி மிதித்துக் கொண்டு இருக்கும் சூர, அசுர, ராட்சதாதிகள் முதலியன எல்லாம் எதற்காக என்று பார்த்தோமேயானால் நன்றாய் விளங்கிடும்.

கந்தப் புராணம், பாகவத புராணம், இவை சம்பந்தமான மற்ற இதிகாசங்கள் முதலிய எல்லாம் ஜாதிப் போராட்டமாகவும், பிறப்புப் போராட்டமாகவுமே இருந்து வருவதோடு, மேல்ஜாதி என்பதை ஒப்புக் கொள்ளாமல், மேல் ஜாதி சம்பிரதாயத்தையும் உரிமையையும் நடப்பு களையும் கீழ் ஜாதியார் என்பவர்கள் எதிர்த்துச் செய்த புரட்சியான போராட்டங்காளவே இருந்து வரும்.

இதுதான் தேவாசுர (சுரர்-அசுரர்) போராட்டமாகவும், தேவர் -அரக்கர் போராட்டமாகவும், இராட்சத சம்காரங்களாகவும் இன்றும் கருதப்பட்டு வருவதாகும்.
தெளிவாகச் சொல்லவேண்டுமானால் சிவன், கந்தன், காளி, விஷ்ணு அவதாரமான ராமன், கிருஷ்ணன், பலராமன், நரசிம்மன், வராகமூர்த்தி முதலானவர்களும், சூரர், அரக்கர் முதலியவர்கள் பிராமண தர்மத்தை எதிர்த்ததற்கு ஆக தோன்றி எதிர்த்தவர்களை கொன்று இருக்கிறார்கள் என்றும், இந்த கொலையைப் பற்றி மகிழ்ச் சியடையவும்தான் பண்டிகை உற்சவம் கொண்டாடு கிறோம் என்றும் கூறலாம்.

ராட்சதர்கள் யார்?

புராண இதிகாச அரசுரர்களும், சூரர்களும், ராக்கதர் களும், இராட்சதர்களும் என்று அழைக்கப்படுகிறவர்கள் யார்? தேவர்கள் என்று அழைக்கப்படுகிறவர்கள் யார்? என்று பார்த்தோமேயானால், முறையே இந்த சூத்திரர்களும், பிராமணர்களும் என்பவர்கள் அல்லாமல் வேறு யாரைக் குறிக்கிறது என்று யாராவது ஆதாரம் காட்ட முடியுமா? என்று பார்த்தால் முடியவே முடியாது என்பது அனேக அறிஞர்கள் ஆராய்ச்சியாளர்களான மேதாவிகளால் எழுதி வைக்கப்பட்டிருந்தும், இன்றைய ஆராய்ச்சி நூல்களாலே அறியலாம்.
புராணங்களை எடுத்துக் கொண்டாலும் பாகவத புராணத்தில் இரண்யன் வதைக் கதையில் இரண்யன்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் இக்கருத்தை தெளிவாய் விளக்கு கின்றன.
அதாவது, இரண்யன் பிராமணர்களுக்கு எதிரி, பிராமணர்களின் உயர்சாதித் தத்துவத்தையும் அவர்களுடைய ஜபதப மந்திரத் தத்துவத்தையும் ஒப்புக் கொள்ளாதவன்; பிராமணர்களை அடிமையாக்கிக் கொண்டு அவர்களிடம் வேலை வாங்குகிறவன்; இரண்யன் பிராமணர்களை ஆதரிப்பதற்கு ஆக பிராமணர்களால்  ஆக்கப்பட்ட விஷ்ணுவின் சகாயத்தால் இவ்வளவு அக்கிரமங்கள் செய்வதால் இந்த விஷ்ணுவை முதலில் ஒழிக்க வேண்டும்; இந்த விஷ்ணுவுக்கு ஆராதனம், எக்கியம், அவிர்பாகம் செய்யும் பிராமணர்களை அடியோடு அழித்து ஆகவேண்டும்; ஆதலால் ஓ! தானவர்களே! (ஏவலாளர்களே) மண்வெட்டி கோடாரி கடப்பாறை கொண்டு புறப்படுங்கள்; இந்த பிராமணர்கள் ஜபதபம் எக்கியம் ஓமம் செய்யும் இடத்தை அணுகுங்கள். அவை களை அழித்துத் தரை மட்டமாக்குங்கள்; புறப்படுங்கள் என்று சொன்னதாக இரண்யன் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளது.

இரண்யன் தம்பி மீதும் குற்றம் சாட்டப் பட்டிருக்கிறது.

இரண்யன் தம்பி மீது பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு ஓடிவிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

இது போலவே இராணவன் மீதும், அவன் தேவர் களுக்கு விரோதமாக அவர்கள் யாகாதிகளை அழித்த தாகவும், பிராமணர்களை வீட்டு வேலைக்கு வைத்துக் கொண்டு வேலை வாங்கியதாகவும்,  தேவர்களுக்குக் கேடு செய்ததாகவும் குற்றம் சுமத்தப் பட்டிருக்கிறது.

இது போலவே கந்த புராணத்தில் சூரன் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

இவைகள் நடந்ததோ இல்லையோ, உண்மையோ, பொய்யோ, எப்படி இருந்தாலும் மேல் ஜாதி, கீழ்ஜாதி, சுரர் - அசுரர், தேவர்கள்-ராக்கதர்கள் என்னும் பேரால் யுத்தங்களும் தேவர்களால் மற்றவர்கள் கொல்லப் பட்டதுமான கருத்துக்களையும் சங்கதிகளையும் கொண்ட தாக இருக்கின்றன என்பது யாராலும் மறுக்க முடியாது. பாகவத்தில் இரண்யன் பிராமணர்கள் மோசக்காரர்கள் என்றும், பிராமணர்களை அழிக்க வேண்டும் என்றும் ஜாதி குறிப்பிட்டுச் சொன்னதாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மற்றும் கந்த புராணமும், இராமாயணமும் பார்த்தால்,  அவற்றில் வரும் பெயர்கள் மாத்திரம் வேறு வேறாக இருக்கின்றனவே ஒழிய,இரண்டும் ஒரே கதையைத்தான்  குறிக்கின்றன.கருத்தும் தேவாசுர யுத்தம்தான் என்று எவரும் உணரலாம்.

எனவே, இப்படிப்பட்ட அதாவது நமக்குக் கேடும் இழிவும் ஏற்பட்டதான போராட்டத்தில் வரும் உற்சவம், பண்டிகைகள் ஆகியவற்றை நாம் திராவிடர்கள் அதாவது சூத்திரர்கள் என்று இழித்துக் கூறப்படுபவர்களாகிய நாம் கொண்டாடலாமா என்பதுதான் இன்றைய பிரச்சினையாகும்.

தீபாவளி

இனி எடுத்துக்கொண்ட தலைப்பின் விஷயத்துக்கு வருவோம். அதாவது தீபாவளி பண்டிகை பற்றி, இப்படிப் பட்ட தத்துவம் கொண்ட பண்டிகைகளில் தீபாவளி என்கின்ற பண்டிகையும் ஒன்று. முதலாவது இந்தப் பண்டிகைக்கும் அதன் பெயருக்கும் சம்பந்தமே இல்லை எனலாம். தீபாவளி என்ற சொல்லுக்கு தீப வரிசை (விளக்கு வரிசை) என்றுதான் பெயர். இந்த தீபவரிசை விழாவை கார்த்திகை மாதத்தில் தனியாகக் கொண்டாடுகிறோம். அப்படி இருக்க இந்தப் பெயர் குறிப்பிட்ட பண்டிகைக்குப் பொருத்தமில்லை. இந்த தீபாவளிப் பண்டிகை கொண்டாட வேண்டிய அவசியம் என்னவென்றால், நரகாசுரன்  என்ற ஒரு அசுரன்; இவன் ஒரு தெய்வப் பெண்ணை சிறை பிடித்துக் கொண்டான். (கந்தபுராணம்) இந்திரன் மனைவியை சூரன் சிறைப்பிடித்த கதை, தீபாவளி நரகாசுரன் கசேரு என்ற பெண்ணை சிறைபிடித்த கதை மற்றும் மற்றொரு தெய்வப் பெண்ணாகிய அதிதி என்பவள் காதணியைக் கவர்ந்து கொண்டவன். (எதற்காக எப்படி கவர்ந்தானோ தெரியமுடியவில்லை) இதுதவிர இவனது பிறப்பு வளர்ப்பு மிகவும் அதிசயமானது. அதாவது உலகத்தையே பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் சமுத்திரத்தில் ஒளிந்து கொண்ட இரண்யாட்சன் என்றும், ராட்ச தனைக் கொல்ல மகாவிஷ்ணு பன்றியாக அவதரித்து ராட்சதனைக் கொன்ற பின்பு, அந்தப் பன்றி உருவே பூமியைப் புணர்ந்து அதில் பூமிக்குக் கர்ப்பம் ஏற்பட்டு, அந்தக் கர்ப்பத்தில் உண்டானவன் இந்த நரகாசுரன் சாட்சாத் கடவுளுக்கும் கடவுள் பத்தினியாகிய பூமாதேவிக்கும் பிறந்த இவன் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்தான். அதனால் தேவர்கள் முறையிட்டார்கள். மகாவிஷ்ணு கிருஷ்ணனாக அவதரித்து கிருஷ்ணனும் அவன் மனைவியுமாய், இந்த நரகா சுரனைக் கொன்றுவிட்டார்கள். மகிழ்ச்சியடைய வேண்டும்.

அப்படிக் கொன்றதால் தேவர்கள் சுகம் அடைந் தார்கள். அந்த சுகத்துக்கு ஆகத்தான் நாம் மகிழ்ச்சிக்கு ஆகவே தீபாவளி கொண்டாடவேண்டும்.

இதுதான் தீபாவளி தத்துவம். இது சம்பந்தமான கதையை கவனித்தால் இது சிறிதாவது மனிதத் தன்மைக்கோ கடுகளவு பகுத்தறிவுக்கோ ஏற்றதாக இருப்பதாக யாராவது சொல்ல முடியுமா? எவ்வளவு அசிங்கமும் ஆபாசமும் கொண்ட கதையை, அதுவும் நமக்குக் கேடான கருத்துக் கொண்ட கதையை, நாம் நம் தெய்வீக மதக் கதையாக, ஏன்? கதையாகக் கூட அல்லாமல் உண்மையில் நடந்த தெய்வக் கதையாகக் கொண்டு கொண்டாடுவதா? என்பது யோசிக்கத் தக்கதாகும்.

நரகாசுரன் ஒரு திராவிட நாட்டு அரசனாகவும், திராவிடத்தை (வங்களாத்தை)ச் சேர்ந்த ஒரு பிராக் ஜோதிஷம் என்னும் நகரை ஆண்டவனாகவும் அதே புராணங்களில் காணப்படுகிறான். கதை எப்படி இருந்தாலும் இவனும், இந்த நரகாசுரனும் இரண் யாட்சன், இரணியன் சூரபத்மன் முதலிய திராவிடத் தோன்றல்களோடு ஒருவனாக மதிக்கப்பட வேண்டியவனாவான். இவன் தன்னைப் பெற்ற தகப்பனால், தாயால் கொல்லப்பட்டதாகக் கதை கூறுகிறது. காரணம் தேவர்களுக்குத் தொல்லை  கொடுத்ததால் என்கிறது புராணம்.

ஆகவே, இன்று நாம் (திராவிடர்கள்) இரண்யனையும், இராவணனையும் எப்படிப் போற்றிப் புகழ்ந்து மரியாதை செய்கிறோமோ அது போலவே நரகாசுரனும் நம் மரியாதைக்கு உரியவனாவான். ஆதலால் அப்படிப்பட்ட அவனை தேவர் கூட்டம் கொன்றதற்கு ஆக நாம் துக்கப்பட வேண்டுமே யொழிய, மகிழ்ச்சி அடைவது மடமையும், இழிவும், ஈனமுமாகும். ஆதலால் திராவிட மக்கள் எவரும் தீபாவளி பண்டிகைக் கொண்டாடக் கூடாது என்று வேண்டிக் கொண்டதோடு, திராவிட கழகத்தவர்கள் கண்டிப்பாகக் கொண்டாடக் கூடாது என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தீபாவளியன்று கருப்புச் சட்டையுடன் நரகாசுரனுக்கு வாழ்த்துக் கூறிக் கொண்டு ஊர்வலம் வந்து அவனது கொலைக்காகத் துக்கப்படும் துக்க நாளாகக் கொள்ள வேண்டும்.

(12.10.1949  விடுதலை தலையங்கம்)

-விடுதலை,23.10.16