வெள்ளி, 28 செப்டம்பர், 2018

வகுப்புவாதிகள் அயோக்கியர்களா?

***தந்தை பெரியார்***
இந்தியர்களின் அடிமைத் தன்மைக்கும், இழி நிலைக்கும் மதமும், ஜாதியும், வகுப்பும் அவை சம்மந்தமான மூட நம்பிக்கை எண்ணங்களும், வெறிகளும், சடங்குகளும், இவற்றிற்காக ஒருவரை ஒருவர் அவநம்பிக்கை கொண்டு அடக்கி ஆள நினைப்பதுமே முக்கியமான காரணங்களாகும் என்பதாக நாம் பலதடவை சொல்லி வந்திருக்கின்றோம். பலமாக அனேக உதாரணங்களுடன் எழுதியும் வந்திருக் கின்றோம்.

மதங்களின் பேரால் பல முக்கிய மதங்களும், அநேக கிளை மதங்களும் உட்பிரிவு மதங்களும் ஏற்பட்டு, மக்களைப் பெரும் பெரும் பிரிவுகளாகப் பிரித்து விட்ட தென்றாலும் வருணாசிரமத்தையும், ஜாதிப் பிரிவுகளையும், பல வகுப்புப் பிரிவுகளையும் கொண்டதான இந்து மதமானது, எல்லா மதங்களையும் விட மக்கள் சமுகத்திற்குப் பெரிய இடையூறாய் இருந்து கொண்டுமக்களின் ஒற்றுமையையும், தன்னம்பிக்கை யையும் அடியோடு பாழாக்கி வருவதுடன் இதன் காரணமாய் மக்கள் வலு இழந்து, சுயமரியாதை இழந்து, சுதந்திரமற்று நடைப்பிணங்களாகவும், பகுத்தறிவற்ற மிருகத்தன்மையிலும் கேவலமாகவும் வாழ்ந்து வருகின்றார்கள்.

இதற்கு உதாரணமாக, சென்னை மாகாணத்தை மாத் திரம் எடுத்துக்கொண்டு பார்த்தாலே போதும், இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஜனங்கள் சுமார் மூன்றே முக்கால் கோடி மக்கள் இருக்கின்றார்கள் என்றாலும் அவர்கள் 385 ஜாதி களாகவும் மற்றும் பல உள் பிரிவு ஜாதிகளாகவும் வகுக்கப் பட்டிருக்கின்றார்கள் (இந்த ஜாதி பெயர்களும் ஒவ்வொரு ஜாதியாரின் எண்ணிக்கையையும் காலம் சென்ற எல்.டி சாமிக்கண்ணு பிள்ளை அவர்களால் பிரசுரித்த மெட்ராஸ் இயர்புக் என்னும் புத்தகத்தில் காணலாம்). நாளேற நாளேற நாகரிகத்தின் காரணமாகவும், செல்வ நிலையின் காரண மாகவும் இன்னும் அதிகமான ஜாதிப் பிரிவுகளும், உட்பிரிவுகளும் ஏற்படும்படியான நிலையிலேயே தேசம் போய்க் கொண்டிருக்கின்றதே தவிர அவைகள் குறைந்து ஒன்று படத்தக்க முயற்சியோ அறிகுறியோ காண்பதற்கில்லை.

இந்தியாவின் 8-ல் ஒருபாகம் கொண்ட சென்னை மாகாணத்தில் மாத்திரம் 385 ஜாதிப் பிரிவுகள் இருக்கின்ற தென்றால் இனி மற்ற 7 பாக ஜனத் தொகையில் எத்தனை ஜாதிப் பிரிவுகள், எத்தனை உட்பிரிவுகள் இருக்கக்கூடும் என்பதை வாசகர்கள் சற்று சிந்தித்துப்பார்த்தால் தானாக விளங்கிவிடும்.

இந்த ஜாதிப் பிரிவுகள் மாத்திரமல்லாமல் உயிரினும் தேசத் தினும் முக்கியமாய் கருத வேண்டியதான தாய் பாஷைப் பிரிவுகள் எவ்வளவு? இவ்வளவு ஜாதியும், தாய் பாஷையும் தங்களுக்குள் பிரிவுபட்டு இருக்கின்றோம் என்று மாத்திரம் நினைத்துக் கொண்டிருக்காமல் தங் களுக்குள் ஒன்றுக்கொன்று உயர்வு தாழ்வு என்று எண்ணிக் கொண்டிருக்கின்ற உள் எண்ணமும் வெளி நடவடிக்கைகளும் வெறுப்பும் துவேஷமும் எவ்வளவு?

இவற்றையெல்லாம் கவனிக்காமலும், இதை நேர்படுத்த முயற்சிக்காமலும் யாரோ சில சோம்பேறிகளும் சுயநலக் காரரும் தேசியம் தேசியம் என்று சொல்லி மக்கள் கண்களில் மிளகாய்ப் பொடியைப் போட நினைத்தால் நாடு எப்படி சேமம் அடையும்? கொஞ்ச நாளைக்கு மாத்திரம்தான் தேசிய வயிற்றுப்பிழைப்பு வியாபாரம் நடத்த முடியுமே ஒழிய இது என்றும் நிலைத்திருக்க முடியுமா என்பது யோசிக்கத் தக்கதாகும்.

வகுப்புவாதம் கூடாது என்று சொல்லுவதன் மூலம் ஏதோ சில பயங்காளிகளையும், வேறு வழியில் பிழைக்க வகையற்ற தேசியவாதி களையும், உத்தியோகம் பதவிப் பிரியர்களையும் மிரட்டலாமே ஒழிய, வகுப்புப் பிரிவுகளாலும், உயர்வு தாழ்வு வித்தியாசங்களாலும் உள்ள கஷ்டத்தையும் கேட்டையும் ஒழிக்க முடியுமா என்று கேட்கின்றோம்.

வகுப்புவாதம், மதவாதம், ஜாதிவாதம் பேசி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பவர்களால் தேசத்தின் விடுதலை கெட்டுப்போகின்றது என்று திப்பிலி, தேசாவரம், சதகுப்பைக ளெல்லாம் பேசவும் எழுதவும் தொடங்கி விட்டதைக் கண்டு நாம் சிறிதும் லட்சியம் செய்யவில்லை.

அந்தப்படி எழுதும் பேசும் யோக்கியர்களில் 100-க்கு அரைப்பேராவதுதங்கள் மதத்தையும், உள்மதத்தையும், ஜாதியையும், உள் ஜாதியையும், வகுப்பையும், உள் வகுப் பையும் விட்டு விட்டவர்கள் உண்டா என்று பந்தயம் கட்டி கேட்கின்றோம்.

ஆகவே, தேசியம் என்பதும், தேசியப் பிழைப்பு என்பதும் மக்களை எவ்வளவு அயோக்கியர்களாகவும் இழிதகைமை உள்ளவர்களாகவும் செய்து விடு கின்றது என்பது கவனித்துப் பார்ப்பவர்களுக்கு விளங்காமல் போகாது.

எப்பொழுது ஒருவனுக்கு, அவனுக்கு என்று தனி மதம், தனி ஜாதி, தனி வகுப்பு என்பதாக பிரிக்கப்பட்ட பின்பு அவன் தனது மதம், தனது ஜாதி, தனது வகுப்புக்கு என்ற ஒரு உரிமை கேட்பதில் என்ன தப்பிதமோ, அயோக்கியத்தனமோ இருக்க முடியும்?

வகுப்புவாதம், மதவாதம், ஜாதிவாதம் கூடாது என்கின்ற யோக்கியர்கள்  ஒருவராவது மதத்தையும், ஜாதியையும், வகுப்பையும் அழிக்கச் சம்மதிக்கின்றார்களா? அது மாத்திர மல்லாமல் பார்ப்பனர் முதல் பறையர் வரை மாயாவாதம் முதல் சைவர் வரை அவரவர்களின் ஜாதி மத வகுப்புக்கு உயிரை விட்டாவது காப்பாற்ற வேண்டும் என்கின் றார்களேயொழிய ஒருவராவது ஜாதி மத வகுப்புக்களைக் குழிதோண்டிப் புதைக்க வேண்டும் என்று சொல்லுகின்றவர்களைக் கண்டு பிடிக்க முடியுமா? மதத்தையும், ஜாதியையும், வகுப் பையும் ஒருபுறத்தில் காப்பாற்றிக் கொண்டு மற் றொரு புறத்தில் ஜாதி மத வகுப்புப் பிரதிநிதித்துவம் கேட்பதை அயோக்கியத்தனம், இழி தன்மை என்று சொன்னால் அப்படிச் சொல் லுவது ஆயிரம் மடங்கு அயோக்கியத் தனமும், இரண்டாயிரம் மடங்கு இழிதன்மையும், வஞ்சகத்தன்மையும், துரோகத் தன்மையும் ஆகாதா என்பதோடு இது தங்கள் வயிற்றுப்பிழைப் புக்கும், வாழ்வுக்கும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கின்ற கீழ்மக்கள் தன்மையா அல்லவா என்று கேட் கின்றோம்.

தேசம் ஜீவராசிகளுக்குப் பொதுவானதாகும். தேச ஆட்சியும் மக்களுக்குப் பொதுவானதாகும். எந்த மனிதனுக் கும் ஆட்சியில் அவனது இஷ்டத்தை தெரிவிக்கவும், ஆட்சியில் பங்குபெறவும் உரிமை உண்டு என்பவை எந்த மூடனும் மறுக்க முடியாததாகும். ஏதோ சில அயோக்கிய வஞ்சககாரர்களது செல்வாக்குக்காலத்தில்  அவர்களது ஏய்ப்பில் விழுந்த முட்டாள் மன்னர்களான, ஒழுக்க ஈன முள்ள அரசர்கள் காலத்தில் ஏற்பட்ட அக்கிரமங்களாலும், கொடுங் கோன்மைகளாலும் ஜாதி மத வகுப்பு ஆணவர்கள் ஏற்பட்டு ஒரு ஜாதி மத வகுப்பை மற்றொரு ஜாதி மத வகுப்பு அடக்கி ஆளும்படியாகவும், ஒரு ஜாதிமத வகுப்பு உழைப்பில் மற்றொரு ஜாதி மத வகுப்பு சோம்பேறியாய் இருந்து கொண்டு உண்டு வாழும் படியாயும் செய்யப்பட்டு விட்டதினாலேயே எல்லா காலங்களிலும் எல்லா அரசாட்சி களும் அப்படிப்பட்ட வஞ்சகர்களுக்கே உதவியாகவே இருக்கவேண்டுமா என்றும், யாரோ சிலருக்குப் பிழைப்பதற்கு வேறு வழி இல்லாத தினாலேயே அந்த ஈனர்க்களுக்கு கூலியாய் இருக்கும் இழிதகைமையை மற்றவர்களும் அடையவேண்டுமா என்றும் கேட்கின்றோம்.

ஏதாவது ஒரு மனிதன் என்னுடைய மதம் சிறுபான்மை யானது என்றும், என்னுடைய ஜாதி வலியிழந்த ஜாதி யென்றும், என்னுடைய வகுப்பு தாழ்த்தப்பட்டு இழிவுபடுத்தப் பட்டதென்றும் சொல்லி, அதன் காரணமாக ஆட்சியில் எனக்குள்ள பங்கு இன்னது என்பதைத் தெளிவாய்ச் சொல்லி, என்னை நீ அடக்கி ஆள முடியாதபடி செய்துவிடு என்று சொல்வதில் என்ன தப்பு இருக்கின்றது என்று கேட்கின்றோம். இதற்குப் பதில் சொல்லாமல் அப்படிக் கேட்பது குலாம் தன்மை என்றும், தேசத் துரோகத்தனம் என்றும் சொல்லுவதானால் அப்படிச் சொல்லுகின்றவர்களை இப்படிச் சொல்லுவது வயிற்றுப் பிழைப்புக்கு எச்சிலை பொறுக்கும் இழிதன்மை என்று ஏன் சொல்லக் கூடாது. தன் பங்கை தனக்குக் கொடு என்று கேட்டவுடன் கொடுக்க மறுத்த குடும்பங்கள் எல்லாம் அநேகமாய் நாசமுற்றே இருக்கின்றன. ஆகவே எந்த மதக்காரருடைய பங்கையானாலும், எந்த ஜாதி வகுப்புக் காரருடைய பங்கையானாலும் மறுத்து ஏமாற்றப்பார்த்தால் கண்டிப்பாக அந்த நாடு கேடுறுவது திண்ணம். எப்படிக் கேடுற்றாலும் சில பொறுப்பற்ற கூலிகளின் ஜீவனம் நடந்தேறலாம் என்பதில் நமக்குச் சந்தேகமில்லை. ஆனால், நாடு கெடும் என்பதை உண்மையும் பொறுப்பும் உள்ள மக்களுக்கு எடுத்துக்காட்டக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

சுமார் ஏழு கோடி தாழ்த்தப்பட்ட மக்களும், சுமார் எட்டுகோடி முஸ்லிம்களும், தங்களுக்கு இந்துக்களிடம் நம்பிக்கை இல்லை என்று சொன்னால் எங்களை நம்பித் தானாக வேண்டும் என்று சொல்ல எந்த இந்துவுக்கு உரிமை உண்டு என்று கேட்கின்றோம். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் தக்க சமாதானம் சொல்லி சரிப்படுத்த முயற்சிக்காமல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு காந்தி யிடமும், காங்கரசினிடமும் நம்பிக்கை இருக்கின்றது. அம்பேத்காரிடம் நம்பிக்கை இல்லை என்று சில பாவங்களுக்குப் பணம் கொடுத்து சீமைக்குத் தந்தி அடித்து பத்திரிகைகளில் விளம்பரப் படுத்தி விடுவது யோக்கியமான செய்கையாகுமா? என்று கேட்கின்றோம்.

உண்மையிலேயே தாழ்த்தப்பட்ட வகுப்பார்கள் என்பவர் களில் நூற்றுக்குக் கால் பேராவது காந்தியையும் காங்கிரசையும் நம்புகின்றார்களா என்று பந்தயம் கட்டிக் கேட்கின்றோம்.

சீமையில் திரு. காந்தியவர்கள் தாழ்த்தப்பட்டவர் களுக்குக் காங்கிரசும் நானும்தான் பிரதிநிதி என்று சொன்னபோது திரு. அம்பேட்கர் சொன்ன பதிலுக்கு திரு. காந்தி என்னபதில் சொன் னார்? அம்பேட்கர் அவர்கள் நல்ல வெளிப் படையான பாஷையில் காங்கிரசுக்குத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் யாதொரு சம் பந்தமும் இல்லை. காங்கிரசில் தாழ்த்தப்பட்ட மக்கள் கிடையா. அப்படியிருக்கத் திரும்பத் திரும்ப திரு. காந்தியவர்கள் காங்கிரசும் தானும்  தான் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பிரதிநிதிகள் என்று சொல்லுவது பொறுப் பற்றவர்கள் சொரணையில்லாமல் பேசும் பேச்சாகும் என்று எடுத்துச் சொன்னார். அப்படி இருக்கும் போது மறுபடியும் மறுபடியும் காங்கிரசுதான் தாழ்த்தப்பட்டவர் களுக்குப் பிரதிநிதி என்று சொல்லுகின்ற வர்களுக்குச் சிறிதாவது மானமோ,  சுய மரியாதையோ இருக்குமானால் திரு. அம்பேட்கருக்குப் பதில் சொல்லிவிட்டு மேல்கொண்டு சமாதானம் சொல்ல வேண்டும். அதாவது இன்ன இன்ன தாழ்த்தப்பட்ட மக்கள் இத்தனை, பேர்கள் காங்கிரசில் இருக்கின்றார்கள். அவர் களது நிலைமை இன்னது என்று தெரிவித்துவிட்டு அம்பேட்கரையும் அவரது அபிப்பிராயத் தையும் கண்டிப்பது ஒழுங்காகும். அப்படிக்கில்லாமல் அம்பேட்கர் ஒரு குலாம், எம்.சி ராஜா ஒரு குலாம், என்.சிவராஜ் ஒரு குலாம், மதுரைப்பிள்ளை ஒரு குலாம், அவர்களை ஆதரிக்கின்ற மற்றவர்களும் குலாம் - இழிமக்கள் என்று பேசி விட்டால் எழுதி விட்டால் சமாதானமாகிவிடுமா என்று கேட்கின்றோம். இந்தப்படி பேசுகின்ற எழுதுகின்றவர் களுடைய உண்மை குலாம் தன்மை நமக்குத் தெரியாதா என்பதை அவரவர்களே யோசித்துப் பார்க்க வேண்டுமாய் வணக்கத்துடன் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

தன் பங்கைக் கேட்பவனைக் குலாம் என்றும், அடிமை என்றும், அதிகார வர்க்கத்தினர் கூலி என்றும், எச்சில் பொறுக்கிகள் என்றும் சொல்லத் துணிவதின் கருத்தெல்லாம் பேனாவும், காகிதமும் தன்வசம் இருக்கின்றன என்கின்ற தலைகொழுப்பில்லாமல் மற்றபடி அறிவும் நாணயமும் இருந்து செய்த காரியம் என்று சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.

அன்றியும் வட்ட மேஜை மகாநாட்டு முஸ்லிம் பிரதிநிதிகளைத் துரோகிகள் என்றும், வஞ்சகர்கள் என்றும், முஸ்லீம்களின் தொல்லை, என்றும், முஸ்லீம்களின் முட்டுக் கட்டை யென்றும், முஸ்லிம்களின் வஞ்சகம் என்றும், முஸ்லிம்களின் சூழ்ச்சி என்றும், தலையங்கம் கொடுத்து எழுதுவதே தேசியப் பத்திரிகைகளுக்கு ஒரு யோக்கியதை யாக விளங்குகின்றது. இது தட்டிப் பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன் என்று சொல்வது போல் நடக்கும் காரியமேயல்லாமல் வேறு என்ன என்று சொல்லமுடியும்.  தாழ்த்தப்பட்ட மக்கள் கையிலும், முஸ்லிம்கள் கையிலும் சரியான பத்திரிக்கைகள் இருந்து.  அச்சமுகத்தாருக்கும், தங்கள் உரிமைக்குப் பாடுபடுவதில் இன்னும் சரியான அக்கறை இருந்து அப்பத்திரிக்கைகளை ஆதரித்து பிரபலப் படுத்தி இருந்தால் இந்த தாழ்த்தப்பட்ட மக்கள் கையிலும், முஸ்லிம்கள் கையிலும் சரியான பத்திரிகைகள் இருந்து அச்சமுகத்தாருக்கும் தங்கள் உரிமைக்குப் பாடுபடுவதில் இன்னும் சரியான அக்கரை இருந்து, அப்பத்திரிக்கைகளை ஆதரித்து பிரபலப்படுத்தி இருந்தால் இந்த சமூகங்களின் தலையில் தேசியத்தின் பேரால் சுலபத்தில் கல்லைப் போட்டு விட முடியுமா என்று கேட்கின்றோம். மௌலானா ஷௌகத் அலியைப் பற்றி சில பத்திரிகைகள் வெகு இழிவாய் எழுதத் தொடங்கி விட்டன. மௌலானா ஷௌகத் தலியின் நாணயத்தைவிட எந்த விதத்தில் திருவாளர்கள் காந்தியும், மாளவியாவும், ரங்கசாமி அய்யங்காரும், ராஜகோபாலாச் சாரியாரும், சத்தியமூர்த்தியும் உயர்ந்தவர்கள் என்று கேட் கின்றோம். மௌலானா ஷௌக்கத்தலி அவர்கள் மகமதிய சமுகமாகிய 8 கோடி மக்களுக்கும் சமமான ஆதிக்கம் வேண் டுமென உழைக்கிறார் என்றே வைத்துக் கொள்ளுவோம்.

ஆனால், மேல்கண்ட திரு. காந்தி முதலியவர்களின் உழைப்பு எத்தனை கோடி மக்களின் ஆதிக்கத்திற்கு என்பதை யோசித்துப் பாருங்கள். இந்திய ஜனத்தொகையில் 100க்கு மூன்று பேராய் உள்ள பார்ப்பன வகுப்புக்குமாத்திர மல்லாமல், வேறு வகுப்புக்கு ஆதிக்கமில்லாவிட்டாலும் சமத்துவமாவது கிடைக்கும்படி உழைக்கின்றார்களா? என்று கேட்கின்றோம். இம்மாதிரி சுயவகுப்புப் புலிகளான ஆசாமிகளைத் தேச பக்தர்கள் என்றும், உண்மையான முஸ்லிம் பிரதிநிதிகளை வகுப்புவாதிகள் சூழ்ச்சிக்காரர்கள், குலாம்கள் என்றெல்லாம் சொல்லுவதென்றால் இது எவ் வளவு மோசடியான தந்திர மென்பது யோசித்துப் பார்ப்பவர்களுக்கு விளங்காமல் போகாது.

நிற்க, ஒரு சமுகத்தாரிடமோ ஒரு மதக்காரரிடமோ மற்றொரு சமுகத்தார் உண்மையில் வயப்பட்டு பந்தோ பஸ்து விரும்பினால் அவர்களுக்கு சமாதானம் சொல்லி அவர்கள் பயம் தீரும்படியான மார்க்கம் செய்வதை விட்டு விட்டு இந்தப்படியெல்லாம் கேவலப்படுத்தி அவர்களது விருப் பங்களை அலட்சியப்படுத்தி அடக்கி ஆள நினைப்பது ஒரு நாளும் முடியாது என்பதற்காகவும், விஷமப்பிரசாரம் செய்து இழிவுபடுத்தப்பார்ப்பது இனி செல்லாது என்பதற்காகவுமே இதை எழுதுகின்றோம். அன்னியன் கையில் ஆதிக்கமும் பாதுகாப்பும் இருக்கும் போதே இவ்வளவு அக்கிரமங்களும், கொடுமைகளும், வஞ்சகங்களும் மனந்துணிந்து வேண்டு மென்றே செய்கின்ற மக்கள் இனி தங்கள் கைக்கு ஆதிக்கம் வந்தால் என்ன செய்யமாட்டார்கள் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டியது நடுநிலைமையாளர் கடமையாகும்.

'குடிஅரசு' - தலையங்கம் - 08.11.1931

-  விடுதலை நாளேடு, 23.9.18

சனி, 22 செப்டம்பர், 2018

பெரியாரின் முற்போக்கு(அய்ரோப்பிய) பயணம்

அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான ‘டெய்லி ஒர்க்கர்’ ஏட்டில் பெரியாரின் சித்திரத்தோடு இடம் பெற்ற கட்டுரை.

பெரியாரையும் முற்போக்குக் கருத்துக்களையும் யாராலும் பிரிக்க முடியாது. இத்தகைய கருத்துக்களுக்கு விதையாய் 1931-32ம் ஆண்டு அவர் மேற்கொண்ட ஐரோப்பிய சுற்றுப் பயணம் அமைந்தது. இப்பயணத்தின் போது சோவியத் ஒன்றியம், ஜெர்மனி, பிரிட்டன், ஸ்பெயின், போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகளுக்கு பெரியார் சென்றார். இப்பயணம் பல்வேறு முற்போக்கு இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தித் தந்திருந்தது. சோவியத் யூனியனில் அவர் இருந்த மூன்று மாதங்களும் அவருக்கு தொழிற்சாலைகளிலும் பொறியியல் துறையிலும் சோஷலிசம் ஏற்படுத்தியிருந்த சாதனைகளை உணர்த்தியது. இக்காலக் கட்டம் பொருளாதார முறையில் ஏற்பட்ட ‘பெரு மந்தம்‘ எனக் குறிக்கப்பட்ட காலம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனியில் கம்யூனிஸ்ட் அகிலத்தால் தூண்டப்பட்ட குழு என்னும் ஏகாதிபத்திய எதிர்ப்புக் குழு உலகெங்கிலுமுள்ள, நேரு உள்ளிட்ட, காலனியாதிக்க எதிர்ப்பு தேசியவாதிகளை உற்சாகப்படுத்தியது. மேலும் இப்பயணத்தில் நிர்வாணவாதிகள், சுதந்திர சிந்தனையாளர்கள், நாத்திகவாதிகள், எமிக்ரெ புரட்சியாளர்கள், கம்யூனிஸ்டுகள், சோஷலிசவாதிகள் என பல அமைப்பினரை பெரியார் சந்தித்தார். எவ்வித ஐயமுமின்றி இவை பரபரப்பான நாட்கள்தான்.இத்தருணத்தில் தான் முதன்முறையாக இனச் சிக்கலோடு அவருக்கு பிணைப்பு ஏற்பட்டது.

1932-ஆம் ஆண்டின் கோடைக் காலத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி பிரிட்டனில் இருந்தபோது பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த முதல் கம்யூனிஸ்ட்டான ஷாபுர்ஜி சக்லத்வாலா, பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் துவக்ககால உறுப்பினரான கிளெமன்ஸ் பாமி தத் போன்ற பலரை சந்தித்தார்.இதில் கிளெமன்ஸ் பால்மே தத் என்பவர் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்ட உதவிய ரஜனி பாமி தத்தின் சகோதரராவார். இவை தவிர பெரியார் பல்வேறு கம்யூனிஸ்ட் முன்னணிகளையும் அதன் உறுப்பினர்களையும் சந்தித்தார்.

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குழு, தொழிலாளர் சர்வதேச நிவாரணம், பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழ் அலுவலகம் ஆகியன குறிப்பிடத்தகுந்தவை. பெரியார் பிரிட்டனில் இருந்தபோது, கம்யூனிஸ்ட் தலைவர் சக்லத்வாலாவுடனேயே இருந்தார். மேலும் அங்கேயிருந்தபோது மாபெரும் தொழிலாளர் பேரணியில் உரையாற்றியதோடு பிரிட்டிஷ் தொழிலாளர் தலைவர் ஜார்ஜ் லான்ஸ்பரியை விமர்சனம் செய்தார்.பிரிட்டனில் இருந்தபோதுதான் புகழ்பெற்ற ஸ்காட்ஸ்பரோ வழக்குடன் பெரியாருக்கு பரிச்சயம் ஏற்பட்டது. இவ்வழக்கின் விளைவாகத்தான் ‘டு கில் எ மாக்கிங் பிர்ட்’ (கேலி செய்யும் பறவையை கொல்லுதல்) என்ற பிரபலமான நாவல் 1960இல்வெளிவந்தது.

அது என்ன ஸ்காட்ஸ்பரோ வழக்கு?

1931 மார்ச் மாதம் 25-ஆம் தேதி, ஆப்பிரிக்க-அமெரிக்க இளைஞர்கள் 9 பேர், டென்னிஸ்ஸி (அமெரிக்கா) என்னும் இடத்தில் தொடர் வண்டியில் ஏறினர். விரைவில் அவர்கள் புலம் பெயர்ந்த ஏழைத் தொழிலாளி போல வேடமணிந்து இரண்டு வெள்ளை இனப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்டனர். வெள்ளை இன நீதிபதிகளால் நடத்தப்பட்ட இவ்வழக்கு நேர்மையான முறையில் நடத்தப்படவில்லை. ஒருவரைத் தவிர அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி குறுக்கிட்டு அவ்விளைஞர்களைக் காப்பாற்ற சிறப்பான பங்கை ஆற்றியது.அடா ரைட் என்னும் ராய்(14), ஆன்டி(17) ஆகிய குற்றம்சாட்டப்பட்ட இரு இளைஞர்களின் தாய், கம்யூனிஸ்ட் கட்சியை அணுகி சட்ட ரீதியான போராட்டத்தைத் தொடருமாறு வேண்டினார். ஒரு சர்வதேச பிரச்சார இயக்கம் இதற்காக துவக்கப்பட்டது. இதைப் பற்றி சூஸன் டி.பென்னிபேக்கர் என்பவர் ஆய்வு செய்து ஆய்வுக் கட்டுரை வெளியிட்டார். இந்த இயக்கத்தின் எதிர்பாராத நட்சத்திரமாக அடா ரைட்டின் தாய் விளங்கினார். அதுவரையில் மதக் குழுவில் இருந்த அவர் அரசியல் அனுபவமே இல்லாதவர். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த அவர் அதுவரையில் தேசத்தின் எல்லைகளைத் தாண்டியதில்லை. ஆனால் இந்த பிரச்சாரத்திற்காக ஐரோப்பா சென்றார்.

பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்டுகளும் இதற்காக பல்வேறு அமைப்புகளின் ஆதரவைத் திரட்டினர். டெய்லி வொர்க்கர் ஸ்காட்ஸ்பரோ தினம், மே 7,1932-இல் பின்பற்றப்படுவதாக செய்தி வெளியிட்டது. ஆனால் அடா ரைட்டால் எளிதாக பிரிட்டனுக்குள் நுழைய இயலவில்லை. முதலில் பிரிட்டிஷ் வெளியுறவு அதிகாரிகள் அடா ரைட், பிரிட்டனுக்கு உள்ளே நுழையக் கூடாது என்றனர். ஆனால் அவர்களே பின்னர் போராட்டத்தின் அழுத்தத்தினால் அடாவை பிரிட்டனுக்குள் அனுமதிக்க வேண்டியதாயிற்று. ஆனால் அடாவுக்கு பத்து நாள் மட்டுமே விசா தரப்பட்டது.பெரியார் பிரிட்டனில் இந்த பத்து நாட்களும் இருந்தார். ஜூன் 28, 1932 அன்று அடாவின் வருகைக்கு பிறகு ஸ்காட்ஸ்பரோ இளைஞர்களுடனான தொழிலாளர் கூட்டம் லண்டனில் நடைபெற்றது.

டெய்லி வொர்க்கர் நாளிதழ் இது பற்றி 1932, ஜூன் 30 அன்று ‘உற்சாகமூட்டும் காட்சிகள் அரங்கேறியதாக’ தெரிவிக்கின்றது.500 பேர் கலந்துகொண்ட அக்கூட்டத்தில் தாடி வைத்த 53 வயது பெரியாரும் கம்யூனிஸ்ட் தலைவர் சக்லத்வாலாவும் இருந்தனர். மென்மையான குரலில் பேசிய அடா ரைட் “எனது இரண்டு பையன்களையும் இன்னும் ஏழு பையன்களையும் விடுவிக்கப் போராடும்போது உலகெங்கிலுமுள்ள சிறையிலுள்ள வர்க்க கைதிகளுக்காகவும் போராடுகின்றீர்கள்” எனத் தெரிவித்தார். இது கூட்டத்தினரை நெகிழவைத்தது.

இந்தியாவில் தீண்டாமை

சக்லத்வாலா கூட்டத்தில் பேசும்போது, இந்தியாவில் பல ‘ஸ்காட்ஸ்பரோக்கள்’ நடப்பதாகக் கூறினார். ஆப்பிரிக்க-அமெரிக்க தொழிலாளர்களைச் சேர்க்காத அமெரிக்க தொழிற்சங்கங்களை கண்டித்தார். உலகெங்கிலும் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களே எந்த இனபேதமும் பார்க்காமல் தொழிலாளர்களை உறுப்பினர்களாக சேர்க்கின்றன என்றும் சக்லத்வாலா கூறினார்.

அமெரிக்கத் தூதரகத்திற்கு தீர்மானத்தைத் தெரிவிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் இஸாபெல் பிரவுன் ஆற்றிய பேச்சு பெரியாரை மிகவும் கவர்ந்தது. இவர் தொழிற் சங்கங்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறை உத்திகளை கோடிட்டுக் காட்டினார்.ஜிம் ஹெட்லி என்னும் நீக்ரோ மீனவர் அமைப்பைச் சேர்ந்தவர் நிதி திரட்டுவதைப் பற்றித் தெரிவித்தார். அதன் பிறகு ஏலம் நடைபெற்றது. வழக்கமாக சிக்கனத்தைக் கடைபிடிக்கும் பெரியார் ஈ.வெ.ரா அன்று அரை பவுண்டுக்கு ஜெர்மனி வெள்ளிச் சங்கிலியை வாங்கினார்.பெரியாரின் இந்த பயணம் முற்போக்கு அமைப்புகளோடு தொடர்பு ஏற்படுத்தியதோடு அவரிடமிருந்த முற்போக்கு சிந்தனையை வலுப்படுத்தியது. அடா ரைட் மற்றும் ஸ்காட்ஸ்பரோ வழக்கின் பரிச்சயம் பெரியாருக்கு உலகை முடமாக்கிக்கொண்டிருக்கும் சமூக ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிய புரிதலை அதிகமாக்கியது

.தமிழில் : பேரா.ச.இராமசுந்தரம்(நன்றி : தி இந்து (ஆங்கிலம்) 22.8.2015)
   Veldurai Rajkumar

- இசை இன்பன், முகநூல் பக்கம்.

செவ்வாய், 18 செப்டம்பர், 2018

படிப்பு வேறு, அறிவு வேறு! 140ஆவது ஆண்டில் தந்தை பெரியார்

எளிமையினால் ஒரு தமிழன்


படிப்பில்லை யென்றால்


இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்.


இலவச நூற்கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும்'


என்றார் பாரதிதாசன்.
கட்டாயக் கல்வியும் இலவசக் கல்வியும் அவசியம் என்று வலியுறுத்தி 1929 பிப்ரவரி 18 அன்று செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை முதல் மாகாண மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினார் தந்தை பெரியார். இலவசக் கல்வி எனும்போது கல்விக் கட்டணச் சலுகையை மட்டுமின்றிப் புத்தகம், உணவு, உடை முதலியவற்றையும் மாணவர்களுக்கு அரசு வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பெரியாரின் கல்வி குறித்த சிந்தனை யையே மேலே குறிப்பிடப்பட்ட பாடலில் பாரதிதாசன் எதிரொலித்தார்.

ஒரே ஒரு கவிஞனை மட்டுமல்ல; தன்னுடைய கொள்கையாலும் செயற்பாட்டாலும் உலகில் அனேகரின் சிந்தனையைச் செதுக்கியவர் ' ஈ.வெ.ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட பெரியார். ஆதிக்கச் சாதியினரின் வீதிக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட மக்களுக்கு ஆலயம் முதல் பாடசாலைவரை பிரவேசிப்பதற்கான உரிமையைப் போராடிப் பெற்றுத்தந்தவர் அவர்.

அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு

1920-களில் வெறும் 7 சதவீத எழுத்தறிவு பெற்ற மக்களைக் கொண்டிருந்த தேசத்தில், கல்வி வழங்குவது ஒரு சாதியைச் சேர்ந்தவர்களின் அதிகாரம் அல்ல, அது அரசாங்கத்தின் கடமை என்று குரல் கொடுத்தார் பெரியார். தன்னுடைய இடைவிடாத முயற்சிகளாலும் பரப்புரை களாலும் சாதிப் பாகுபாடு வேரூன்றி இருந்த இந்தியச் சமூகத்தில் 1928-லேயே அன்றைய மதராஸ் மாகாணத்தில் (தமிழகத்தை உள்ளடக்கியது) அரசுப் பணிகளில் இட ஒதுக்கீட்டு முறை அமல்படுத்த அரசை உந்தித்தள்ளினார். இன்று இந்தியாவின் பிற மாநிலங் களுக்கு இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் தமிழகம் முன் மாதிரியாகத் திகழ்வதற்கு அவர் ஆற்றிய பங்கு கணிசமானது.

பகுத்தறிவு என்ற அடித்தளத்தின் மேல் அறிவார்ந்த சமூகத்தைக் கட்டமைக்கக் கனவு கண்டார். வயிற்றுப் பிழைப்பு, சுயமரியாதை, சுதந்திரம், அன்பு, பரோபகாரம் முதலியவற்றோடு கண்ணியமாக உலக வாழ்க்கையை நடத்தத் தகுந்த அறிவைத் தருவதே கல்வி என்றார். அத்தகைய கல்வியை ஜனநாயகப்படுத்தக் குலக் கல்வித் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார். 1952 ஏப்ரல் 10 அன்று அன்றைய தமிழக முதல்வர் ராஜாஜி 15 ஆயிரம் பள்ளிகளில் 6 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளை மூடி குலக் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அத்திட்டத்தைக் கடுமையாக எதிர்த்துப் பேசியும் எழுதியும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் பெரியார். பலவகைப் போராட்டங்களை நடத்தினார். மக்களின் எதிர்ப்பு பெருகவே 1954-இல் ராஜாஜி முதல்வர் பதவியில் இருந்து விலகி, காமராஜர் முதல்வரானார். 1954 மே 18 அன்று குலக் கல்வித் திட்டத்தைக் காமராஜர் ஒழித்தார்.

சிறந்தது இருபாலர் கல்வி

ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குக் கல்வி அத்தியாவசியம் என்றார் பெரியார். கிட்டத்தட்ட 22 வயதுவரை பெண்களுக்குக் கல்வி அளித்து வேலை பெறுவதற்குரிய தகுதி யையும் வருமானம் ஈட்டுவ தற்கான வழிவகையையும் செய்துதர வேண்டியது பெற்றோரின் கடமை. இருபாலர் கல்வி முறையே சிறந் தது. அப்படித்தான் ஆணுக்கு நிகராகச் செயலாற்றக் கூடி யவர்களாகப் பெண்களை உருவாக்க முடியும் என்றார்.

ஆசிரியர், மாணவர்களுக்கு சுயமரியாதை, சமத்துவம், அன்பு, தேசப்பற்று ஆகியவற்றைக் கற்றுத் தர வேண்டும். அதிலும் துளிர் பருவத்தினருக்குக் கல்வி போதிக்கும் வேலை முழுவதும் பெண்களுக்கே கொடுக் கப்பட வேண்டும். மாணவர்கள் படிப்பைத் தவிர வேறெதிலும் கவனம் சிதறாமல் தீவிரமாகக் கல்வி பெற வேண்டும் என்று ஆசிரியர்களையும் மாணவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் வலியுறுத் தியவர் பெரியார்.

அப்படி அவர் ஆற்றிய சில உரைகளின் சுருக்கம்:

பட்டமெல்லாம் கல்வியாகுமா?

என்னுடைய வாழ்நாளில் சுமார் 2 வருஷக் காலந்தாம் நான் பள்ளியில் படித்திருப்பேன். அப்போதும் என் கையெழுத்தைப் போடக் கற்றுக்கொண்டேன் என்று சொல்லலாம். ஆகவே, கல்வி முறையிலும் உங்கள் குறைகளைப் பற்றியும் உங்களுக்கு சொல்லக் கூடிய சக்தி என்னிடத்தில் இல்லை . ஏதோ என் புத்தி, அனுபவத்திற்கெட்டியவரையில் சில வார்த்தைகளைச் சொல்கிறேன்.

சாதாரணமாக, ஆரம்ப ஆசிரியர்கள் என்ற பெயரையே யாருக்கு உபயோகப்படுத்தலாம் என்றால், முதலில் நமது பெண் மக்களுக்குத்தான் உபயோகப் படுத்தலாம். ஏனெனில் நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள் அவர் களுடைய தாய்மார்களாகிய, நமது பெண்களேயாவார்கள்.

எனவே, இரண்டாவதாகத்தான் நீங்கள் ஆசிரியர்கள் ஆவீர்கள். நீங்கள் இருவரும் எப்படிக் குழந்தைகளைப் படிப்பிக்கின்றீர்களோ அப்படியே அவர்கள் தேசத்துக்கும், தேச நன்மைக்கும், ஒழுக்கத்துக்கும் உரிய மக்களாய் வாழக்கூடும். எனவே தேசம் மக்களாலும், மக்கள் ஆசிரியர்களாலும், உருப்பட வேண்டி இருக் கிறது. ஆனால், அப்பேர்ப்பட்ட ஆரம்ப ஆசிரியர் களாகிய பெண்களோ, நமது நாட்டில் பிள்ளை பெறும் இயந்திரங்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது அறிவுண்டாக நாம் இடங்கொடுத்தாலல்லவா பிள்ளை களுக்கு அறிவுண்டாக்க அவர்களால் முடியும்?

நீங்கள் முதலில் மக்களுக்கு சுயமரியாதை இன்ன தென்பதைக் கற்றுக்கொடுக்க வேண்டும்; சமத்துவத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும்; மக்களிடத்தில் அன்புடன் இருக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும்; தேசாபிமானத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும். இவற்றில் ஏதாவது உங் களால் கற்றுக் கொடுக்கப்படுகிறதா?

இந்தப் பட்டமெல்லாம் கல்வியாகுமா? இதைப் பெற்றவர்களெல்லாம் படித்தவர்களாவார்களா?

சலவைத் தொழிலாளி, சிகை அழகு நிபுணர், தச்சுத் தொழிலாளி, கொல்லர், செருப்பு தைக்கும் தொழிலாளி முதலியோர் எப்படித் தங்கள் தொழிலைக் கற்றுத்  தேர்ந்திருக்கிறார்களோ அப்படியே பி.ஏ., எம்.ஏ. என்று படித்தவர்கள் என்போரும் அந்தப் பாடத்தைக் கற்றவர் களாவார்கள்.

சலவைத் தொழிலாளிக்கு எப்படிச் சரித்திரப் பாடம் தெரியாதோ, அப்படியே பி.ஏ. படித்தவர்களுக்கு வெளுக்கும் தொழில் தெரியாது. செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு எப்படி இலக்கண இலக்கியங்களும் வேதவியாக்கியானங்களும் தெரியாதோ, அப்படியே வித்வான்களுக்கும் சாஸ்திரி களுக்கும் செருப்பு தைக்கத் தெரியாது. ஆகவே இந்தத் தொழிலாளிகளைவிட பி.ஏ., எம்.ஏ., வித்வான், சாஸ்திரி முதலிய பட்டம் பெற்றவர்கள் ஒருவிதத்திலும் உயர்ந்தவர் களுமல்லர்: அறிவாளி களுமல்லர்; உலகத்துக்கு அனுகூல மானவர்களுமல்லர். இவைகளெல்லாம் ஒரு வித்தை அல்லது தொழில்தானே தவிர அறிவாகாது. இந்தப் புரிதலோடு நீங்கள் மக்களின் உண்மையான ஆசிரியராக இருக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன்.

- போளூரில், 24-4-1927-இல் நடந்த ஆரம்ப ஆசிரியர்கள் மாநாட்டில் சொற்பொழிவு

‘குடிஅரசு' 1-5-1927

படிப்பே பிரதானம்

மாணவர்களே! நீங்கள் படிப்பை ஒழுங்காகக் கவனித்துப் படியுங்கள்; உங்கள் பெற்றோர் கடன் வாங்கி, எப்படியாவது நீங்கள் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்கிற ஆசையால் செலவழித்து, உங்களைப் படிக்க வைக்கிறார்கள். அப்படி இருக்கும்போது நீங்கள் படிப்பைத் தவிர வெளி விஷயங்களில் கலந்து கொள்ளாதீர்கள். சாதாரண மாணவர்களைக் கிளர்ச்சிக்கு அல்லது மற்றக் காரியங்களுக்குத் தூண்டுவதே தவறு. அவர்கள் உலக அனுபவம் இல்லாதவர்கள்; எதையும் எளிதில் நம்பிவிடுவார்கள்; உள்ளத்தின் வேகத்தில் எதுவும் செய்துவிடுவார்கள். அவர்களை இந்த முறையில் பழக்கி அவர்களைச் சிலர் கேடு அடையச் செய்யக்கூடாது.

- சென்னையில், 5-12-1952ஆம் தேதி சொற்பொழிவு, 'விடுதலை' 11-12-1952

இப்படி பெரியார் சிந்தனையிலும் செயலிலும் கடும் உழைப்பைச் செலுத்தியதன் பலனை, இன்று நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். இன்று அனை வருக்கும் கல்வி என்பது உறுதி செய்யப்பட்டி ருக்கிறது. பெண் குழந்தைகளுக்குக் கல்வி புகட்டுவதில் தமிழகப் பெற்றோர் ஆர்வம் காட்டுகிறார்கள். இதன்மூலம் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்துவருகிறார்கள். இட ஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. தீண்டாமைக் கொடுமை சட்ட ரீதியாக தடை செய்யப்பட்டிருக்கிறது.

நன்றி: இந்து தமிழ்திசை  (வெற்றிக்கொடி) (18.9.2018)


- ம.சுசித்ரா

- விடுதலை நாளேடு, 18.9.18

திங்கள், 17 செப்டம்பர், 2018

நீதிக்கட்சி தலைவர்கள் பார்வையில் பெரியார்

டாக்டர் டி.எம். நாயர்
அன்னிபெசன்ட் அம்மையாரின் தன்னாட்சி இயக்கத் திற்குப் பல காங் கிரசுப் பார்ப்பனத் தலைவர்கள் ஆதரவு தந்து வரு வதோடு, ஒரு சில திராவிடக் கருங்காலி களும், கங்காணிகளும் விபீஷணர்களாக ஆகிப் பேராதரவு தந்து வருகின்றனர். காங் கிரசுத் தலைவர்களில், சேலம் டாக்டர் பி. வரதராசுலுநாயுடு, ஈரோடு இராமசாமி நாயக்கர், தூத்துக்குடி வழக்கறிஞர் வ.உ. சிதம்பரம்பிள்ளை, சென்னைப் புலவர் திரு.வி. கல்யாண சுந்தர முதலியார் போன்றோரே, பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்குப் பாடுபடும் தலைவர்களாக இருந்து வருகின்றனர். மற்ற தேசியத் தலைவர்கள் எல்லோருமே பார்ப் பனர்கள் தாம்.அவர்களால் நடத்தப்படும் செய்தித் தாள்களில் ஆசிரியர்களும், அவற்றின் நிருபர்களும் பார்ப்பனர்களே! அவர்கள் தங்களின் சுயநல அரசியல் செல்வாக்கையும், தலைமையையும் வளர்த்துக் கொள்வதற்கு, அவர்களுடைய பொய், பித்தலாட்ட 'இந்து', 'சுதேசமித்திரன்', 'பிரபஞ்சமித்திரன்' போன்ற சாக்கடைச் செய்தித் தாள்கள் பெரிதும் உதவுகின்றன! (வெட்கம்! வெட்கம்! என்ற ஆரவாரம்)
(புகழ்பெற்ற சென்னை, ஸ்பர்டங் சாலை உரையிலிருந்து 7.10.1917)
பனகல் அரசர்
தற்காலத்திய மிகப் பெரிய சமூக சீர்திருத்த வாதி திரு. இராமசாமி நாயக்கரே ஆவார். நமது மக்களின் நலனுக்காக அவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் சிறை செல்வார். அவர் தமது உயிரைத் தியாகம் செய்யவும் தயாராக இருப்பவர் ஆவார்.
(1928)
சர். ஏ.டி. பன்னீர்செல்வம்
காங்கிரஸ்காரர் களுக்கு வார்தா எப் படியோ, அப்படித் தான் நம் மக்களுக்கு ஈரோடு. காந்தியின் அறிவுரை கேட்க அவர்கள் வார்தா போவது போல, பெரியார் அறிவுரை கேட்க நாம் ஈரோடு போகிறோம்.
சர்.கே.வி. ரெட்டி (நாயுடு)
திரு. இராமசாமி நாயக்கர் ஒரு உண்மை யான சிங்கம். அவர் சிங்கத்தின் இதயத்தைப் பெற்றிருக்கிறார்; வாழ்க்கையில் அச்சம் என்பதையே அறியாதவர். அவசியம் நேர்ந் தால் எந்தவிதமான தியாகத்திற்கும் தயாராக இருப்பவர் அவர். (1928-இல் சென்னை மாகாணத்தின் தற்காலிக ஆளுநராக இருந்தபோது)
- விடுதலை, 17.9.18

சமூகப் புரட்சியாளர் பெரியார்பேராசிரியர் மறைமலை இலக்குவனார்
பெரியார் சிறந்த சிந் தனையாளராக, சமூகப் புரட்சியின் வழிகாட்டி யாக, புதிய சிந்தனை களைத் தூண்டிய பத் திரிகையாளராக, பாமர ருக்கும் பகுத்தறிவை வளர்த்த பேச்சாளராக, மூடநம்பிக்கைகளைப் போக்கிடும் ஆசானாகச் செயல்பட்டார். அய்.நா. சபையின் உறுப்பாகிய யுனெஸ்கோ நிறுவனம் 'புத்துலக தொலைநோக்காளர்; தென் கிழக் காசியாவின் சாக்ரடிஸ்; சமூகச் சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம் பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகிய வற்றின் கடும் எதிரி' என்று பெரியாருக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது.
எதையும் ஆழமாகச் சிந்தித்துப்பார்த்து வாதப் பிரதிவாதங்களால் ஆராய்ந்துபார்த்துத் தன் அறிவுக்குச் சரியென்று பட்டதையே ஏற்றுக் கொள்ளும் அறிவு முதிர்ச்சி பிஞ்சுப் பிராயத்திலேயே பெரியாருக்கு வாய்த்திருந்தது. அவர் பள்ளிக்குச் செல்லும்வழியில் கடைவைத்திருந்த ஒரு கடைக்காரர் 'எது நடந்தாலும் எல்லாம் தலைவிதிப்படியே நடக்கிறது' என ஓயாமல் சொல்வதைப் பிள்ளை வயதிலிருந்த ராமசாமி ஏற்றுக்கொள்ள மறுத்துக் கடைக்காரரிடம் வாதங்கள் புரிந்திருக்கிறார். ஆனால் அந்தக் கடைக்காரர் 'எல்லாம் விதிப்படித் தான் நடக்கும்' என்றாராம். சுட்டிப்பிள்ளையாய் இருந்த ராமசாமி அந்தக் கடையில் சாத்திவைத்திருந்த தட்டியைக் கீழே தட்டி விட்டு அப்படியானால் 'இதுவும் விதிப்படி தான் நடந்தது' என்று கூறிவிட்டு ஓடிவிட்டாராம். கடைக்காரர் விதியை நோவாரா? ராமசாமியைத் திட்டுவாரா? அவரது சேட் டைகளைப் பொறுக்கமாட்டாமல் அவரது தந்தையார் வெங்கடப்பர் கடையில் அமர்ந்து வணிகம் பார்க்குமாறு கூறிவிட்டார்.
தமது பொதுவாழ்வின் தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பல போராட்டங்களை முன்னின்று நடத்தினார். அப்போது அவர் நிகழ்த்திய கள்ளுக்கடை மறியல், பங்கு பெற்றுப் போராடிய வைக்கம் போராட்டம் ஆகியன வரலாற்றுப் புகழ்மிக்கவை. காங்கிரசில் இருந்து விலகித் தனியே சமூக நீதியை நிலைநாட்ட 1925-ஆம் ஆண்டு இறுதியில் சுயமரியாதை இயக்கத்தை நிறுவி, சமூக நீதியின் முழக்கமாக 'அனை வருக்கும் அனைத்தும்' என்ற கொள்கையை அடி நாத மாக்கினார். 1928-இல் வகுப்புவாரி உரிமை ஆணையை நீதிக்கட்சியின் ஆதரவுடன் ஆண்ட டாக்டர் சுப்பராயன் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த முத்தையா முதலியார் மூலம் ஆணை பிறப்பிக்கச் செய்து, அதை வரவேற்றார். அதன்படி, அரசு ஆணை அன்றிருந்த சமூகநீதி அரசால் நடை முறைப்படுத்தப்பட்டது. 1950இல் அமலுக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சில அடிப்படை உரிமைப் பிரிவுகள் சில வற்றைச் சுட்டிக்காட்டி, இவ்வாணை சமத்துவத்திற்கு எதிரானது என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் உயர்சாதியினர் போட்ட வழக்கில் நீதிபதிகள் அமர்வு மற்றும் உச்சநீதிமன்றமும் அதை உறுதிசெய்து அறிவித்த நிலையில், இதற்கான பெரியதொரு மக்கள் கிளர்ச்சியை தந்தை பெரியார் முன்னின்று நடத்தினார். இதனை அறிந்த பிரதமர் நேரு, சட்ட அமைச்சர் அம்பேத்கர் ஆகியோர் இந்திய அரசமைப்புச் சட்டத் துக்கு முதலாவது சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் 1951இல் நிறைவேற்றினர். அதன்மூலம் சமூகநீதி, உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகளால் ஏற்பட்ட ஆபத்துகளிலிருந்து காப்பாற்றப்பட்டது. பெரியாரின் பேருழைப்பினால் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் அட்டவணை வகுப்பினர் அரசியலிலும் அரசுப் பணிகளிலும் பெற்ற எழுச்சி இந்தியா எங்கும் பரவியது. ஆட்டோ ஓட்டும் தொழிலாளி மகன் பொறியாளர் ஆவதும், கல்லுடைக்கும் தொழிலாளி மகள் கலெக்டர் ஆவதும் பெரியார் விதைத்த சமூகப் புரட்சியின் விளைவேயாகும். ஆணாதிக்கத்தை எதிர்த்துப் போர்க்குரல் முழங்கி, பெண்கள் தம் அடிமைத்தளையை உடைத்தெறிந்து எல்லா நிலைகளிலும் ஆணுக்குச் சமமாக முன்னேற வேண்டும் என அறிவுறுத்திய முன்னோடித் தலைவர் பெரியாரே. அவருடைய 'பெண் ஏன் அடிமையானாள்' என்னும் நூல் பெண்ணுரிமை இயக்கத்தின் வழிகாட்டி யாய் விளங்குகிறது. தமது வாழ்க்கையிலும் துணைவியார் நாகம்மையார், அவருக்குப் பின் துணைவியாய் அமைந்த மணியம் மையார், தங்கை கண்ணம்மை எனத் தம் இல்லப் பெண்களுக்கும் தலைமையும் முதன்மையும் வழங்கிப் பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கு முன்மாதிரியாய் விளங்கியவர் பெரியார். அவருக்குப் பின்னர் மணியம் மையார் திராவிடர் கழகத்தைப் பல சோதனைகளைக் கடந்து திறமையாக நிலைநிறுத்தியது பெரியார் கொடுத்த பயிற்சியாலேயே எனலாம். அக்காலத்தில் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கூறும் மரியாதைச் சொல் அவர்களுடைய சமயப் பிரிவால் வேறுபட்டிருந்தன. பெரியார் வணக்கம் என்னும் சொல்லை அறிமுகப்படுத்தினார். தொடக்கத்தில் வணக்கம் என்று கூறினால் நீங்கள் சுயமரியாதைக்காரரா என்று கேட்பார்கள். காலப்போக்கில் வணக்கமே செல் வாக்குப் பெற்றது. வணக்கம் என்னும் ஒற்றைச்சொல் சமயம், சாதிப் பிரிவுகளைச் சுக்குநூறாக்கியது. எனவே தமிழின் பயன்பாடு சுயமரியாதையைக் காத்து மனிதர் களை ஒன்றுபடுத்தும் வல்லமை வாய்ந்தது என்பதைப் பெரியார் நிறுவிக்காட்டினார். பெரியாரின் இயக்கம் கல்லூரி மாணவர்களை, படித்தவர்களை, கலைஞர்களை, சமூகப் பொறுப்பில் உள்ள பலரைத் தன்பால் ஈர்த்தது. இவர்களுள் அறிஞர் அண்ணாவும் கலைஞர் மு.கருணாநிதியும் திரைப்பட உரையாடலால் மக்கள் கவனத்தைக் கவர்ந்தனர். பொருந்தாக் கற்பனை மிகுந்த புராணப்படங்கள் மறைந் தன. சமூக ஏற்றத்தாழ்வுகளை எண்ணிப் பார்த்துச் சமநீதியும், சமூகநீதியும் மேலோங்குதற்குரிய கருத்து களைப் பரப்பும் திரைப்படங்கள் வெளிவந்து மக்களைச் சிந்திக்கத் தூண்டின.
பல நடிகர்கள் பெரியாரின் முற்போக்குக் கொள்கை களை மக்கள் மன்றத்தில் பரப்பினர். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி கணேசன்' என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது. கலைவாணர் என்.எஸ்.கே. புரட்சி வாய்ந்த கருத்துகளை மக்களிடையே தம் நாடகங்கள் மூலமும் திரைப்படம் வாயிலாகவும் பரப்பிவந்ததனைப் பெரியார் பாராட்டினார். 'கொள்கை வேறு; நட்பு வேறு' என்பது பெரியா ருடைய வாழ்வியல் நெறி. அவ்வை டி.கே.சண்முகம் பெரியாரைக் காண வரும்போது அவருடைய நெற்றியில் வழக்கமாகக் காணப்படும் திருநீறு காணப்படவில்லை. "என்ன சண்முகம்? என்ன ஆயிற்று? நெற்றி வெறுமனே இருக்கிறதே?" எனப் பெரியார் கேட்டாராம். "இல்லை அய்யா கருஞ்சட்டைக்காரர்கள் நிறைய வலம்வரும் இந்த இடத்தில் நான் நெற்றி நிறைய நீறு பூசிவந்து உங்களைச் சங்கடப்படுத்த விரும்பவில்லை" என்றாராம் அவ்வை டி.கே.சண்முகம். "கொள்கை வேறு; நட்பு வேறு; நன்றாக நீறு பூசி வாருங்கள். எனக்காக நீங்கள் உங்கள் பழகத்தை விட்டுவருவதுதான் எனக்குச் சங்கடமாயிருக்கிறது" என்றார். இப்படிப் பெருந்தன்மையின் இலக்கணமாகத் திகழ்ந்த பெரியாரின் மாண்புமிக்க மனிதநேயம் நம் அனைவருக்கும் வழிகாட்டியாய் விளங்குகிறது. அறியாமையிலும், அடிமைத்தனத்திலும் மூழ்கி யிருந்த தமிழ்நாட்டைத் தலைநிமிர்ந்து எழுச்சி கொள்ளச் செய்ததில் பெரியாரின் பேருழைப்பு பெரும்பங்களித் துள்ளது. நுழைவுத் தேர்வு முறை நடைமுறைப்படுத்தப் பட்டால் கிராமத்து மாணவர்கள் தம் கல்விவாய்ப்பை இழந்துவிடுவார்கள் என எச்சரித்துத் தமது காலத்தில் அறிமுகமாக இருந்த நுழைவுத்தேர்வு முறையைத் தவிர்த்தவர் பெரியார்.
அவர் வழியில் மத்திய அரசும், மாநில அரசும் நீட் முதலான நுழைவுத்தேர்வுமுறைகளை ஒழித்துக் கட்டி சமூகத்தின் அடித்தளத்தில் வாழ்வோரும் கல்விவாய்ப்புப் பெற உழைக்கவேண்டும். இத்தகைய ஆக்கவழிகளில் நாம் முனைந்து செயல்புரியத் தொடங்கினால அதுவே அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாகும். இன்று (செப்டம்பர் 17ஆம் தேதி) பெரியார் பிறந்த தினம்.
நன்றி: 'தினத்தந்தி' 17.9.2018
- விடுதலை, 17.9.18