செவ்வாய், 30 மே, 2023

மாற்றத்திற்கு இடமில்லாதது ஆரியம் இடமளிப்பது திராவிடம்

   

தந்தை பெரியார்

5

தலைவர் அவர்களே! மாணவர்களே!

இவ்வூர் திராவிடர் கழகத்தின் சார்பாக நான் பேச வேண்டுமென்று சில மாணவர்களால் விரும்பப்பட்டேன்; அதுபற்றி மகிழ்ச்சியோடு பேச ஒருப்பட்டேன். எனினும் என்ன பேசுவது என்பது பற்றி நான் இதுவரைகூடச் சிந்திக்கவில்லை. மாணவர்களாகிய உங்களைப் பார்த்தால் நீங்கள் பெரிதும் 15 வயது 18 வயது உடைய வர்களாகவே காண்கிறீர்கள்; உங்களுக்குப் பயன்படத் தக்கதும் பொருத்தமானதுமாக பேச வேண்டுமென்றால் மிகவும் கவனத்தோடு பேச வேண்டியிருக்கிறது.

ஆனால் “படிக்கும் சிறு குழந்தைகளுக்குப் பாடப் படிப்பைத் தவிர, வேறு பேச்சு என்னத்திற்கு?” என்ற காலம் மலையேறிவிட்டது. ஏனெனில், படிப்பே மோச மானதாக இருப்பதால் அப்படிப்பைத் திருத்துவதற்கு ஆவது உங்களிடத்தில் உணர்ச்சி தோன்ற வேறு பேச்சு அவசியமாகிவிட்டது. 

உங்கள் படிப்பின் தன்மை

முதலாவது உங்கள் படிப்புக்கு லட்சியமே இல்லை, லட்சியமற்ற படிப்பு என்பது ஒருபுறம் இருந்தாலும், என்ன படிப்புப் படிப்பது என்பது பள்ளிக்கூடத்தாருக்கும், ஆசிரியர்களுக்கும்கூட சம்பந்தமற்றதாகும்; இதனால் இப்படிப்பினால் ஏற்படும் பயன் என்ன என்றாலோ அதுவும் தானாக ஏதாவது ஏற்பட்டால் அதுதான் பயனே ஒழிய மற்றபடி நிச்சயமான பயன் என்ன ஏற்படும் என்று கருதுவதற்கில்லை. படிப்பது என்பது வெறும் “பேச்சள விற்கு அறிவுக்காக, அறிவு விருத்திக்காக” என்று சொல்லப்படுகிறது. 

ஆனால், படித்தவர்களுக்கு அறிவு விருத்தியாகிறதா? படித்தவர்கள் அறிவாளிகளாக இருக்கிறார்களா என்றால், ஆம் என்று சொல்ல முடிவதில்லை. 

 பூகோளம் படித்தவனுக்கு உலகப் பரப்பு, அதன் பிரிவுகள் சரியாக ஞாபகத்தில் இராது. ஆனால் இல் லாததும் இருக்க முடியாததுமான மேல் ஏழுலோகம், கீழ் ஏழுலோகம், அதன் வர்ணனை பலன், தன்மை இருப்பதாக முழு ஞாபகமாகத் தெரியும், ஞானசாஸ்திரம் படித்தவனுக்கு சூரியன், சந்திரனின் உண்மைத் தன்மை, கிரகணங்களின் உண்மைத்தனம் - இயக்கம், அதன் சீதோஷ்ண நிலைமைக்குக் காரணம் ஆகியவை சரியாகத் தெரியாது. ஆனால் சூரியனுக்கு 16 குதிரை, சந்திரனுக்குக் கலை வளரவும் தேயவும், சாபம் இவர்களது மனைவி மக்கள், அவர்களது விபசாரம், ராகு கேது விழுங்குதல். அதனால் கிரகணம், அதற்குப் பரிகாரம் என்பது போல கற்பனைக் கதைகள் யாவருக்கும் உண்மையென்ற காரணமும், அதை அனுசரித்த அனுபவமும், அதற்கு ஏற்ப நடப்பும் தெரியும். விஞ்ஞானத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. உதாரணம், விஞ்ஞானப் படிப்பின் இன்றைய நிபுணர் களைப் பார்த்தாலே விஞ்ஞானப் படிப்பின் தன்மையும், பலனும் நன்றாய் விளங்கும். இப்படியாகப் படிப்புக்கும், அறிவுக்கும், பெரும்பாலும் உண்மைக்கும், நடப்புக்கும் சம்பந்தமில்லாத மாதிரியான படிப்புத்தான் இன்று பள்ளிப்படிப்பாகப் போய்விட்டது.   

ஆசிரியருடன் விவாதம் புரியுங்கள்

உங்களுக்கு உபாத்தியாயர்கள் இப்படிப்பட்ட படிப்பைக் கற்றுக் கொடுக்கும்போது இந்தமாதிரியான காரியங்களைப்பற்றிச் சிந்தித்து, நீங்கள் இது சரியா என்று கேட்பதன்மூலம் உங்கள் ஆசிரியர்களால் உண்மை அறிவிக்கப்படுவீர்கள். பரீட்சையில் பாசாவதற்கு நீங்கள் படித்ததையும், சொல்லிக்கொடுத்ததையும், எழுதினாலும் உங்கள் அறிவுக்கும், அனுபவத்திற்கும் எது உண்மை என்பதாவது விளங்கக்கூடும். ஆதலால் முரண் வந்த இடங்களில் விளக்கம் விரும்புங்கள். கட்டுப்பாடாகவும் அதிகப்படியாகவும் மாணவர்கள் விளக்கம் பெற விரும்பு வீர்களானால் ஆசிரியர்களும் உங்களுக்கு விளக்கம் சொல்லவாகிலும் பயன்படும்படி அறிவு பெறுவார்கள். இப்படிப்பட்ட விளக்கம் தெரிந்த ஆசிரியர்கள் பெருகு வார்களானால் மக்களுக்குப் படிப்பதால் ஏற்படும் கடமை யாவது காலப்போலக்கில் குறையும் என்று கருதுகின்றேன். இதை ஏன் உங்களிடம் சொல்லுகிறேன் என்றால் இதுவரை கல்வி இலாகாக்காரர்கள் இந்தக் குறைபாட்டைப் பற்றி சரியானபடி சிந்தை செலுத்தவே இல்லை. படிப்ப வர்களுக்கு இரட்டை மனப்பான்மை அதாவது சரி யானதும், போலியும் கற்பனையுமானதுமான ஆகிய இரு முரண்பட்ட மனப்பான்மை உண்டாகும்படியாகவே கல்வியால் செய்யப்பட்டு வந்திருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதற்கு ஆகத்தான். எனவே இதுவரை உங்களுக்கு படிப்பைப்பற்றி சில கூறினேன்.

திராவிடர் கழகம் ஏன்? 

இனி உங்கள் கழகத்தைப் பற்றிச் சில கூற ஆசைப் படுகிறேன். திராவிடர் மாணவர் கழகம் என்பதில் ‘திரா விடர்’ என்கின்ற பெயர் ஏன் வைக்க வேண்டிய தாயிற்று? இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஏன் எங்கு பார்த் தாலும் திராவிடர் திராவிடர் என்று சொல்லப்படுகிறது. 

இதுவரை இருந்துவருகிற பிரிவுகள், பேதங்கள் ஆகியவைகள் போதாமல் இது வேறு ஒரு புதிய பிரிவா? என்றெல்லாம் நீங்கள் கேட்கப்படலாம். அவற்றிற்கு உங்களுக்கு விடை சொல்லத் தெரியவேண்டும். அதை நீங்கள் தெரிந்துகொள்ளா விட்டால் திராவிடர்களின் எதிரிகள் இந்தத் திராவிடம் என்பது ஒரு புதுப் பிரி வினையை உண்டாக்கக் கூடியது என்றும், இது மக்க ளுக்குள் துவேஷத்தையும், பேதத்தையும் உண்டாக்கக் கூடியதென்றும் சொல்லி திராவிட மக்களின் மேம்பாடு முன்னேற்ற உணர்ச்சியையும், முயற்சியையும் கெடுக்கப் பார்ப்பார்கள். இதுவே எதிரிகளின் வழக்கம். 

திராவிடம் - திராவிடர் என்பது 

திராவிடம் என்றும், திராவிடர் என்றும் சொல்லுவது நாமாக ஏற்படுத்திய புதிய கற்பனைச் சொற்கள் அல்ல. இது நம் நாட்டிற்கும், நம் மக்களுக்கும் குறிப்பிடும் ஒரு சரித்திர சம்பந்தமான பெயர்களாகும். இவை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வழங்கி வரும் பெயர்களுமாகும். உங்களுக்கு நன்றாய் இந்த உண்மை விளங்கவேண்டுமானால் நீங்கள் உங்கள் பள்ளியில் இன்று படிக்கும் இந்த நாட்டு (இந்துதேச) சரித்திரப் புத்தகத்தைப் புரட்டிப் பாருங்கள். அதில் எந்த சரித்திரப் புத்தகத்தை எடுத்துக்கொண்டாலும் அதன் விஷய முதல் பக்கத்தில் திராவிடம், திராவிடர் என்கின்ற தலைப்புக்கொடுத்து அவற்றின் வரலாறுகள் எழுதப் பட்டிருக்கும். இவை முடிந்த அடுத்த பக்கத்தைத் திருப்பினீர்களானால் அதில் ஆரியம், ஆரியர் என்கின்ற தலைப்பு கொடுத்து சரியாகவோ தப்பாகவோ அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். எனவே இவை அதாவது திராவிடர், ஆரியர் என்பவை உங்கள் குழந்தைப் பருவத்தில் பள்ளிப்படிப்பில் உங்களுக்கு ஊட்டப்பட்ட சேதிகளும், வெகு காலத்திற்கு முன் ஏற்பட்ட உண்மைகளும் ஆராய்ச்சிச் சுவடிகளில் காணப்படும் சேதிகளுந்தானே ஒழிய இன்று புதிதாக நானோ மற்றும் வேறு யாரோ கொண்டு வந்து புகுத்தியது அல்ல. இதுவேதான் இந்நாட்டுச் சரித்திரத்தின் கி,ஙி,சி ஆகும். இதிலிருந்து பார்த்தாலே நம்முடையவும் நம் நாட்டினுடையவும் தன்மைகள் ஒருவாறு நமக்கு விளங்கிக் கொள்ள முடியும் என்பதற்கு ஆகவே அதை ஞாபகப்படுத்தும் படியான மாதிரியில் அனுபவத்தில் வழக்கத்திற்கு நினைவுக்கு வரும்படி செய்ய இன்று அதைப்பற்றிச் (திராவிடத்தை பற்றி) சிறிது அதிகமாய் உங்களிடம் பேச வேண்டி இருக்கிறது. 

இதுகூட ஏன்? 

இதுகூட ஏன்? இன்று புதிதாகச் சொல்லப்படவேண்டும் என்று கேட்கப்படலாம். எத்தனையோ ஆயிரம் வருடங் களுக்கு முன்பு இருந்தே இருந்துவருகிற திராவிடர் ஆரியர் என்கின்ற வார்த்தையை நாம் இன்று அமலுக்கு - பழக்கத்திற்கு அதிகமாய்க் கொண்டு வருவதால் அந்தக்கால நிலைக்கு நாம் போகவேண்டும் என்கின்ற கருத்து அதில் இருப்பதாக யாரும் கருதிவிடக்கூடாது. பிற்போக்குக்கு ஆக நாம் அப்படிச் சொல்லவில்லை. நமக்குச் சிறு பிரயாயத்தில் சரித்திர மூலம் படிப்பிக்கப்பட்டிருந்தும் அனுபவத்தில், உணர்ச்சியில் ஏன் நம் மக்களுக்குள் நினைவிலிருக்க முடியாமல் போய்விட்டது என்று நாம் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்ள வேண்டுமே ஒழிய, ஏன் நமக்கு இப்போது ஞாபகப்படுத்தப்படுகிறது என்ற கேள்விக்கு இடமே இல்லை. ஆனாலும் ஏன் என்றால், 

ஏற்பட்ட கெடுதி 

அதாவது, திராவிடர் என்ற நினைவில்லாததால் நமக்கு என்ன கெடுதி ஏற்பட்டது என்று கேட்டால் அந்த நினைவு நமக்கு இல்லாததால்தான் நாம் 4 ஆம் , 5 ஆம் ஜாதியாய், சமுதாயத்திலும், தற்குறிகளாய்க் கல்வியிலும், கூலிகளாய்த் தொழிலும், ஏழைகளாய் வாழ்க்கையிலும் அந்நிய ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களாய் அரசியல், ஆத்மார்த்த இயல் என்பவற்றிலும் காட்டுமிராண்டி காலத்து மக்களாய் அறிவு, கலாச்சாரம், தன்மானம் ஆகியவைகளிலும் இருந்து வருகிறோம். இது இன்று நேற்றல்லாமல் நம்மைத் திராவிடர் என்பதையும் நம்நாடு திராவிடநாடு என்பதையும் மறந்த காலம் முதல் அதாவது சுமார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இருந்து வருகிறோம். நாம் நம்மைத் திராவிடர் என்று கருதினால், நினைவுறுத்திக்கொண்டால் உலக நிலையில் திராவிடர் (நம்) நிலைஎன்ன? தன்மை என்ன? நாம் எப்படி இருக்கிறோம்? என்பது உடனே தென்படும் ஏன் எனில், நாம் எப்படி இருக்க வேண்டியவர்கள்?

நாம் முன் கூறின இழிநிலையும் குறைபாடுகளும் இந்த நாட்டில், ஏன் உலகிலேயே திராவிடர்களுக்குத்தான் (நமக்குத்தான்) இருக்கிறதே தவிர திராவிட ரல்லாதவர்களுக்கு இல்லவே இல்லை. திராவிடமல்லாத வேறு நாட்டிலும் இல்லை. 

எப்படி ஒருவன் பறையனாய், சக்கிலியாய் இருப்பவன், அவன் இஸ்லாம் என்றாகிவிட்டால் அந்தப்பறத் தன்மை, சக்கிலித் தன்மை உடனே ஒழிந்துபோகிறதோ அதேபோல் அறியாமையால் ஆரியத்தில் சிக்குண்டு கீழ் மகனான மக்கள் தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக்கொண் டாலே சரிசமமான மக்களாக ஆகிவிடுகிறார்கள். அதாவது எல்லா மேன்மைக்கும் முன்னேற்றத்திற்கும் உரிமையும் சமபங்குமுள்ள சுதந்திர மக்களாக ஆகி விடுகிறார்கள். அப்படிக்கில்லாமல் தன்னை ஆரியத் தோடு பிணைத்துக்கொண்டு இருக்கிற எந்தத் திராவி டனும் கீழ்மகன் என்ற தன்மையை ஒப்புக் கொண்டவனேயாவான். எவ்வளவு முயற்சி செய்தாலும் மீள முடியாதவனே ஆவான். உதாரணமாக தோழர் 

சர். ஆர்.கே. சண்முகம் செட்டியார் தன்னை இந்து என்று சொல்லிக்கொள்ளுவதன் மூலம் எவ்வளவு பெரிய ஜாதி வைசியரானாலும், “பிராமண”னுக்கு கீழ் ஜாதி என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதுதான் இன்றைய அனுபவம். இதுதான் இதுவரை யார் பாடுபட்டும் வெற்றி பெறாத காரணம். இதைக் கண்டிப்பாய் உணருங்கள். யுக்திக்கும், நியாயத்திற்கும், அனுபவத்திற்கும் ஒத்த உண்மையாகும் இது. 

திராவிடர் என்பதின் கருத்து 

இனி திராவிடத் தன்மையைப் பற்றிச் சில கூறுகிறேன். 

நான் நம்மைத் திராவிடர் என்பதும், இது சரித்திர காலத் தன்மை என்பதும், உங்களை நான் அந்தக் காலத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகக் கருதா தீர்கள். அல்லது திராவிடர் - ஆரியர் என்று உடல் கூறு சாஸ்திரப்படி பரீட்சித்து அறிந்து பிரித்துப் பேசுவதாக கருதாதீர்கள்.

ஆதலால் வார்த்தையின் பேரில் வழக்காட வேண்டிய தில்லை. திராவிடம் என்பது என்ன மொழியாய் இருந்தால் என்ன? காப்பி(பானம்) என்னமொழி? அது காலை ஆகார(பான)த்திற்கு ஒரு குறிப்பு மொழி, அவ்வளவில் தான் பார்க்கவேண்டும். பாகிஸ்தான் என்னமொழி? இந்துக்கள் என்பவர்கள் ஆதிக்கத்தில் இருந்து மீள்வதற்கு ஒரு அறிகுறி மொழி; அவ்வளவில்தான் அதைக் கருத வேண்டும். 

கலந்துவிட்டது என்பது... 

ஆரியன் திராவிடன் என்பது கலந்துபோய்விட்டது, பிரிக்க முடியாதது, ரத்த பரீட்சையாலும் வேறுபடுத்த முடியாதது என்று சிலர் வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறிவற்ற பேச்சு என்றே சொல்லுவேன். ஆரிய திராவிட ரத்தம் கலந்துவிட்டிருக்கலாமே தவிர ஆரிய திராவிட ஆச்சார அனுஷ்டானங்கள் கலந்து விட்டனவா? பிராமணாள் ஓட்டல், பிராமணர்களுக்கு மாத்திரம்; பிராமணன், சூத்திரன், பறையன், சக்கிலி, பிராமணனல்லாதவன் ஆகிய பிரிவுகள் எங்காவது கலந்துவிட்டனவா? பேதம் ஒழிந்து விட்டதா? பிராம ணர்கள் என்பவர்கள் உயர்வும் பாடுபடாமல் அனுபவிக் கும் போக போக்கியமும், சூத்திரர்கள், பறையர்கள், சக்கிலிகள் (திராவிடர்கள்) என்பவர்கள் இழிவும், கஷ்ட உழைப்பும், ஏழ்மையும் தரித்திர வாழ்வும் எங்காவது சரிசரி கலந்து விட்டதா? பிரிக்க முடியாதபடி ஒன்றி விட்டதா? அல்லது அறிவு, கல்வி, தகுதி திறமை கலந்து விட்டதா? எது கலந்துவிட்டது; இரத்தம் கலந்தாலென்ன கலவாவிட்டால் என்ன? வாழ்வு, போகபோக்கியம், உரிமை கலத்தல் வேண்டாமா? 

ஆகவே, திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச்சொல், லட்சியச் சொல் ஆகும். எப்படியாவது ஆரியக் கட்டுப்பாட்டால் நமக்கு ஏற்பட்டிருக்கிற கொடுமையான இழிநிலை, முட்டுக்கட்டை நிலைமாறி மேன்மை அடைய வேண்டும். ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இடமில்லாதது; திராவிடம் என்றால் மாற்றிக்கொள்ள இடமளிப்பது என்பதுதான் உண்மைத் தத்துவமாகும். 

நாம் இந்தத் திராவிடர் என்ற பெயர் கொண்டு விடுவதால் நமக்கு வேறு தவறுதல்கள் எதுவும் நேர்ந்துவிடாது. நம் எதிரிகள் சொல்லும் குறும்புத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு அதாவது கடவுள், மதம், சாஸ்திரம், ஒழுக்கம், கலை, தர்மம், புண்ணியம், பக்திவிசுவாசம் முதலியவைகள் எல்லாம் ஒழிக்கப்பட்டுப் போகும் என்பவை மிகவும் இழிவான குணத்தோடு நம்மீது சுமத்தும் குற்றச்சாட்டு களும் புகார்களுமாகும். திராவிடர், திராவிட இனத்தவர், திராவிடக் கூட்டத்தவர் என்பதற்கும், இந்தக் குற்றச்சாட்டுக்கும், எவ்வித சம்பந்தமுமில்லை, இவைகள் ஒன்றும் கெட்டுவிடாது. ஆரியத்தால் தீண்டப்படாத வனான ஒரு பறையன், சக்கிலி தன்னை இஸ்லாமியன் என்று ஆக்கிக்கொண்டால் அவன்மீது இந்த இழி தன்மைகளுக்கு அருத்தம் உண்டா என்று பாருங்கள். அதோடு அவனுக்கு, அவன் பறையனாயி ருந்தால் சூழ்ந்து கொண்டிருந்த அவனைப் பறையனாக் குவதற்குக் காரணமாயிருந்த கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம், புண்ணியம் முதலிய ஈனத்தன்மைகள் ஆரியருடையதுகள் கண்டிப்பாய் நசித்துப்போய் விடு கிறதா இல்லையா பாருங்கள். அதனால் அவன் நாஸ்திகன் ஆகிவிடுகிறானா? இல்லையே! அதற்குப் பதிலாக ஈனத் தன்மைக்குக் காரணமாயில்லாத இஸ்லாம் கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம் முதலியவைகள் அவனைச் சூழ்ந்து அவன் மீதிருந்த இழிவுகளை நீக்கிவிடும்.  

இங்குதான் உங்களுக்குப் பகுத்தறிவு வேண்டும். ஜாக்கிரதை வேண்டும். இன்றைய உலகம் எல்லாத் துறையிலும் மாறுதல் ஏற்பட்டு முன்னேற்றம் அடைந்து வருகிறதே ஒழிய நாசமாய்விடவில்லை. பழையது களுக்கும், பயனற்றதுகளுக்கும் சிறிதாவது குறைந்த சக்தி கொண்டவைகளும் நசித்துதான் போகும்; கைவிடப் பட்டுத்தான் போகும். 

சிக்கிமுக்கியில் ஏற்பட்ட வெறும் நெருப்பு வெளிச்சம் மறைந்து படிப்படியாக மாறி இன்று எலக்டிரிக்(மின்சார விளக்கு) வெளிச்சம் வந்ததானது நாசவேலையல்ல என்பதும்; அது முற்போக்கு வேலை என்பதும் யாவரும் ஒப்புக்கொள்ளுவார்கள். ஆதலால், ஆரம்பகாலத்தில் - பழங்காலத்தில் தோன்றிய அல்லது தோற்றுவிக்கப்பட்ட கடவுள், மதம், சாஸ்திரம், இசை, ஒழுக்கம், பக்தி என்ப வைகள் இன்றைக்கும் அப்படியே பின்பற்றப்படவேண்டும் என்றால் அது அறியாமையேயாகும். அறியாமை அல்ல என்றால், புத்தர், ஏசு, மகம்மது, ராஜா ராம்மோகன்ராய் ஆகிய கடவுள், மதம், கலை, ஒழுக்கம், பக்தி ஆகிய வைகளில் மாற்றம் ஏற்படுத்தியவர்கள் நாச வேலைக் காரர்களா? எடிசன், மார்கோனி, டார்வின், சாக்கரடீஸ், லூதர், மார்க்சு, ஏஞ்சல்ஸ் ஆகியவர்கள் நாச வேலைக் காரர்களா? இவர்கள் மனித சமுதாய ஒழுக்கத்தை சமுதாய அடிப்படையைக் கலைப்பவர்களா? என்று சிந்தி யுங்கள்; மாறுதல் உணர்ச்சியால் அதுவும் முற்போக்கான பழைமையை உதறித்தள்ளின மாறுதலில்தான் பயன் உண்டாக முடியும். 

மாறுதல் என்று சொல்லி பழைமையைத் திருப்புவது, அதாவது ராட்டினம் கொண்டுவருவது, செல்லரித்து மக்கி ஆபாசமாகப் போன புராணங்களை உயிர்ப்பிப்பது, பழைய கோவிலைப் புதுப்பிப்பது, என்பவைகள் மாறுதல் ஆகிவிடா. எனவே மாறுதல் கருத்தால் வெகுகாலமாக இருந்து வரும் குறைகளை இழிவுகளை நீக்கிக் கொள்ளச் செய்யும் முயற்சியை நாசவேலை என்று கருதாதீர்கள். 

இவ்வித மாறுதலுக்கு நீங்கள்தான், அதாவது இளை ஞர்கள், குழந்தைப் பருவமுள்ளவர்கள், ஆகியவர்கள் தான் பெரிதும் தகுதி உடையவர்கள் ஆவீர்கள். நன்றாய்ச் சிந்திக்கும் காலம் இது. சிந்தித்து வாது புரியுங்கள், விவகாரம் கிளப்புங்கள். அதனால் அனுபவம், அறிவு முதிர்ச்சி பெறுவீர்கள். உங்கள் வாதத்தால் உங்கள் ஆசிரியர்களுக்கும் சிந்திக்கும் சக்தியும் பகுத்தறிவும் தோன்றும்படி வாது புரியுங்கள். நீங்கள் காரியத்தில் இறங்க உங்களுக்கு இன்னும் சற்று அனுபவம் பெறுங்கள். யாவர் சொல்வதையும் காது கொடுத்துக் கேளுங்கள், கேட்டவை களைச் சிந்தித்துச் சிந்தித்து உண்மை, நேர்மை கண்டு பிடிக்க வாதம் செய்து, கேள்வி கேட்டு அனுபவம் பெறுங்கள். எனவே, நான் இவ்வளவு நேரம் சொன்ன வைகளில் உள்ள குற்றம் குறைகளை உங்கள் தலைமை ஆசிரியரும், இக்கூட்டத் தலைவருமான அறிஞர் திருத்துவார். 

(09.07.1945 ஈரோடு மகாஜன ஹைஸ்கூலில் சரஸ்வதி ஹாலில் திராவிட மாணவர் கழகத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய சொற்பொழிவு)

குடிஅரசு - சொற்பொழிவு - 14.07.1945

திங்கள், 29 மே, 2023

ஜாதியையும், மதத்தையும் அழிக்காமல் தொழிலாளி - முதலாளி தன்மையை மாற்ற முடியுமா? - தந்தை பெரியார்

 

     

 5


 

தோழர்களே! மே தினம் என்பதைப் பற்றி இங்கு இதுவரை 5, 6 தோழர்கள் எடுத்துச் சொல்லி விட்டார்கள். நான் முடிவுரை என்கின்ற முறையில் ஏதாவது பேச வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்.

மே தினம் என்பது இன்று உலகமெங்கும் ஒவ்வொரு தேசங்களிலும் கொண்டாடப்படுவதனாலும் ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகின்றது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ரஷ்யாவில் கொண் டாடப்படுவதுபோல் இங்கிலாந்தில் கொண்டாடப்பட மாட்டாது. ஸ்பெயினில் கொண்டாடப்படுவது போல் பிரெஞ்சில் கொண்டாடப்பட மாட்டாது.

அதுபோலவே தான் மேல் நாடுகளில் அய்ரோப்பா முதலிய இடங்களில் கொண்டாடப்படுவது போல் இந்தியாவில் கொண்டாடத் தக்க நிலைமை இல்லை.

ஏனெனில், ஒவ்வொரு தேசத்தின் நிலைமையும் வெவ்வேறான தன்மையில் இருந்து வருகிறது. எல்லா தேசமும் ஒரே விதமான பக்குவத்தை அடைந்துவிடவில்லை.

ஆரம்ப திசையில் இருக்கிற தேசமும் முடிவை எட்டிப் பார்க்கும் தேசமும் ஒரே மாதிரி கொண்டாட வேண்டும் என்று கருதுவதும் புத்திசாலித்தனமாகாது.

இன்று ரஷ்யாவில் மே தினத்தைக் கொண்டாடுவதின் முக்கிய நோக்கம் பெரிதும் தங்கள் தேசத்தை மற்ற தேசங்கள் பின்பற்ற வேண்டும் என்கின்ற ஆசையைப் பொறுத்ததாகும்.

இங்கிலாந்து, பிரஞ்சு முதலிய தேசங்களில் கொண்டாடு வதின் நோக்கம் ரஷ்யாவைப் பல விஷயங்களில் பின்பற்ற வேண்டும் என்கின்ற கருத்தைக் கொண்டு அதற்கு பக்குவம் செய்வதற்கு ஆசைப்படுவதாகும்.

எப்படி இருந்தாலும் அடிப்படையான நோக்கத்தில் ஒன்றும் பிரமாத வித்தியாசம் இருக்காது. அனேக துறைகளில் சிறப்பாக சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டு தாழ்த்தப் பட்டு, இம்சைப்படுத்தப்பட்ட அடிமை மக்கள் சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் அடைய வேண்டும் என்கின்ற உணர்ச்சியே மே தினக் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

அந்த உணர்ச்சி எல்லா மக்களுக்கும் ஏற்பட்டால் பிறகு அந்தந்த நாட்டு நிலை மைக்குத் தக்கபடி முயற்சியும் கிளர்ச்சியும் தானாகவே வந்துவிடும்.

ஒடுக்கப்பட்டுத் தாழ்த்தப்பட்ட அடிமை மக்கள் என்பவர்கள்கூட ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகவே இருக்கிறார்கள்.

மேல் நாடுகளில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் என்பவர்கள் தொழிலாளிகள் என்கின்ற பெயரால் அவர்களது தொழில் நிலையையும் செல்வ நிலையையும் பொறுத்து இருக்கிறார்கள்.

அதனாலேயே இந்தக் கிளர்ச்சிக்கு தொழிலாளி, முதலாளி கிளர்ச்சியென்றும் வகுப்புப் போர் என்றும் சொல்லப்படுகின்றது.

இந்தியாவில்

ஆனால் இந்தியாவில் ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் என்பது தொழில் நிலையையும், செல்வ நிலையையும் முக்கியமாய் கொள்ளாமல், மக்களின் பிறவி நிலையையே பிரதானமாய்க் கொண்டு பெரும்பான்மையான மக்கள் ஒடுக்கப்பட்டும் தாழ்த்தப்பட்டும், அடிமைப்படுத்தப்பட்டும் இருப்பதால் தொழில் நிலைமையையும், செல்வ நிலைமையையும் நேரே நோக்கிக் கிளர்ச்சியோ, புரட்சியோ செய்வது முக்கியமானதாய் இல்லாமல் பிறவி பேதத்தையே மாற்றக் கிளர்ச்சியும், புரட்சியும் செய்ய வேண்டியது முக்கியமாய் இருக்கின்றது. ஆதலால் தொழிலாளி, முதலாளி கிளர்ச்சி என்கின்றதைவிட மேல் ஜாதி, கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும்.

ஏனென்றால், இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவியிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு விட்டது.

நாலாவது வருணத்தான் அல்லது கீழான ஜாதியான் அல்லது சூத்திரன் என்று சொல்லப்படும் பிரிவே தொழி லாளி. அதாவது சரீரத்தால் உழைத்து வேலை செய்பவரின் மூலம் மற்ற ஜாதியாருக்கு வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்ய வேண்டும் என்கின்ற நிபந்தனைக்குக் கட்டுப் பட்டதாகும்.

அய்ந்தாவது ஜாதியான பஞ்சமன் அல்லது சண்டாளன் என்று சொல்லப்பட்ட ஜாதியான் என்பவன் வாழ்நாள் முடிய மற்ற ஜாதியாருக்கு அடிமையாய் இருந்து தொண் டாற்ற வேண்டும் என்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டவன்.

இந்த இரு கூட்டத்தாரிடமும் கூலி கொடுக்காமலே வேலை வாங்கும் உரிமை மேல் ஜாதியானுக்கு உண்டு. அதுவும் மத சாஸ்திர பூர்வமாகவே உண்டு.

இது இன்றைய தினம் நிர்ப்பந்தத்தில் இல்லை என்று சிலர் சொல்லக் கூடுமானாலும், ஒரு சிறு மாறுதலோடு அனுபவத்தில் இல்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது.

பஞ்சம வகுப்பைச் சேர்ந்த மக்களாகிய சுமார் 6, 7 கோடி மக்களில் 100-க்கு 99 விழுக்காடு பேர்கள் இன்று அடிமையாக, இழி மக்களாக நடத்தப்படவில்லை என்று யாராவது சொல்ல முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். அதுபோலவே பார்ப்பனரல்லாதார் என்கின்ற இந்து மக்கள் ஆண், பெண் அடங்கலும் சூத்திரர்கள் - அதாவது சரீர வேலை செய்யும் வேலை ஆட்கள் என்ற கருத்தோடு அழைக்கப் படுவது மாத்திரமல்லாமல், ஆதாரங்களில் குறிக்கப்படுவதோடு அந்தச் சூத்திரர்கள் என்கின்ற வகுப்பார்களே தான் இன்று சரீரப் பிரயாசைக்காரர்களாகவும், கூலிகளாகவும், உழைப்பாளிகளாகவும், ஏவலாளர்களாக வும், தொழிலாளர்களாகவும் இருந்து வருகின் றார்களா இல்லையா என்று பாருங்கள்.

மற்றும் ஜாதி காரணமாகவே, தொழிலாளிகளாகவோ, சரீர பிரயாசைப்படும் உழைப்பாளிகளாகவோ இல்லாமலும், சரீரப் பாடுபடுவதைப் பாவமாகவும் கருதும்படியான நிலையில் சில ஜாதியார்கள் இருக்கிறார்களா இல்லையா? என்றும் பாருங்கள்.

இந்தியாவில் தொழிலாளி, முதலாளி அல்லது எஜமான், அடிமை என்பது பிரதானமாக பிறவி ஜாதியை அடிப்படையாகக் கொண்டி ருப்பதால் இந்தியாவில் மே தினக் கொண்டாட்டம் என்பது பார்ப்பான், (சூத்திரன்) பஞ்சமன் அல்லது சண்டாளன் என்கின்ற ஜாதிப் பிரிவுகள் அழிக்கப்பட வேண்டும் என்கின்ற நிலையில்தான் பெரியதொரு கிளர்ச்சியும், புரட்சியும் ஏற்பட வேண்டும் என்கின்ற கருத்தோடு இன்று கொண்டாடவேண்டியதாகும்.

இந்தியாவில் வகுப்புப் போர் என்பதற்குப் பதிலாக வேறு ஏதாவது சொல்ல வேண்டுமானால் ஜாதிப் போர் ஏற்பட வேண்டும் என்பதாகத்தான் சொல்ல வேண்டும்.

இந்தியாவில் ஒரு ஜாதியார் 100-க்கு 99 பேர்கள் நிரந்தரமாக தொழிலாளிகளாகவும், அடிமைகளாகவும், ஏழைகளாகவும், மற்றவர்களுக்கே உழைத்துப் போடுகின்ற வர்களாகவும் இருப்பதற்குக் காரணம் பிறவியில் வகுக்கப் பட்ட ஜாதிப் பிரிவே அல்லாமல் வேறு என்ன? இதை அடியோடு அழிக்காமல் வேறு விதமான கிளர்ச்சிகள் எது செய்தாலும் தொழிலாளி, முதலாளி நிலை என்பது அனுபவத்தில் இருந்துதான் தீரும்.

இன்று முதலாளி தொழிலாளி என்பதற்கு நாம் என்ன வியாக்கியானம் செய்கிறோம்? பாடுபடாமல் ஊரான் உழைப்பில் பதவி, அந்தஸ்துடன் வாழ்வதையும் பாடுபடு கின்றவன் ஏழையாய், இழிமக்களாய் இருப்பதையும் தான் முறையே சொல்லுகின்றோம்.

ஆகவே, ஜாதியையும் அதற்கு ஆதாரமான மதத் தன்மையையும்  அழிக்காமல், வேறு எந்த வழியிலாவது முதலாளி, தொழிலாளி தன்மையை மாற்றவோ அல்லது அதன் அடிப்படையாய் அணுகவோ நம்மால் முடியுமா என்று பாருங்கள்.

இந்தியாவில் ஏழை மக்களுக்காக தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுகின் றேன் என்று சொல்லுகின்றவர்கள் யாரானாலும் அதற்கு ஆதாரமும் அடிப்படையுமான ஜாதிப் பாகுபாட்டையும், மதத் தன்மையையும் ஒழிக்க சம்மதிக்க இல்லையானால் அவர்கள் எல்லோரும் யோக்கியர்கள் என்று நாம் சொல்லிவிட முடியாது. அரசியல் தலைவர்களில் எவரும் இதற்குச் சம்மதிப்பதில்லை.

ஏதாவது ஒரு தொழிற்சாலையில் நித்திய கூலிக்கோ, மாதச் சம்பளத்துக்கோ பாடுபடு கின்ற நான்கு தொழிலாளிகளைக் கூட்டி வைத்து பேசிவிடுவதனாலேயே அல்லது அத் தொழி லாளிகள் விஷயமாய் பேசி விடுவதனா லேயே அல்லது அவர்களுக்குத் தலைமை வகிக்கும் பெருமையைச் சம் பாதித்துக் கொண்டதினாலேயே எவரையும் உண்மையான தொழிலாளிகளுக்குப் பாடு பட்டவர்களாக கருதிவிடக் கூடாது. அவர்க ளெல்லாம் அரசியல், தேசியம் ஆகியவற்றின் பேரால் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் செய்வது போல் தொழிலாளிகளின் பேரால் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் நடத்து கின்றவர்களாகவே பாவிக்கப்பட வேண்டிய வர்களாவார்கள்.

ஹிந்து மக்களின் மதமும் அவர்களது ஜாதிப் பிரிவும் தொழிலாளி முதலாளி தன்மையின் தத்துவத்தை நிலைநிறுத்தவே ஏற்படுத்தப்பட்டதாகும். இந்தக் காரணத்தாலேயேதான் மற்ற நாட்டு மே தினக் கொண்டாட்டத்திற்கும், இந்நாட்டு மே தினக்கொண்டாட்டத் திற்கும் பெருத்த வித்தியாசம் இருக்கின்றது என்று சொல்லுகிறேன்.

இந்த முதலாளி, தொழிலாளி நிலைமைக்கு வெள் ளையர், கருப்பர்கள் என்கின்ற நிற வித்தியாசத்தைக் காரணமாகச் சொல்லிவிட முடியாது. ஏனெனில், தொழிலாளி முதலாளி வித்தியாசம் ஒழிக்கப்பட வேண்டும் என்கின்ற கருத்தை இந்தியர்கள் கவனத்துக்குக் கொண்டு வந்த வர்களே வெள் ளையர்களாகும். அந்த முறை மாற்றப்படக் கூடாது என்பதை மதமாகக் கொண்டிருக்கிறவர்களே கருப்பர்களாகும்.

ஆகையால், இதில் வெள்ளையர், கருப்பர் என்கின்ற கருத்துக்கு இடமில்லை. ஆனால் பார்ப்பனர், பார்ப்பன ரல்லாதார் என்பதைத்தான் முக்கியமாய் வைத்துப் பேச வேண்டியிருக்கிறது.

இந்திய தேசியம் என்பதுகூட ஜாதியையும், மதத்தையும் காப்பாற்றுவதையே முக்கியமாய்க் கொண்டிருக்கிறதினால் தான் அப்படிப்பட்ட தேசியம் ஒருநாளும் தொழிலாளி, முதலாளி நிலைமைகளை ஒழிக்க முடியாது என்பது மாத்திரமல்லாமல் இந்தத் தேசியம் தொழிலாளி, முதலாளி தன்மை என்றும் நிலைத்திருக்கவே பந்தோபஸ்து செய்து வருகிறது என்று அடிக்கடி சொல்லி வந்திருக்கிறேன். 

இன்று நம் நாட்டிலுள்ள பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற கிளர்ச்சி பெரிதும் தொழிலாளி, முதலாளி கிளர்ச்சியேயாகும். இந்தக் கிளர்ச்சியின் பயனாகவே வருண தருமங்கள் என்பது அதாவது பிறவியிலேயே தொழிலாளி முதலாளி வகுக்கப்பட்டிருப்பது ஒரு அளவு மாறி வருகின்றது.

இந்தக் காரணத்தினால் தான் முதலாளி வர்க்கம் அதாவது பாடுபடாமல் ஊராரின் உழைப்பில் பலன் பெற்று வயிறு வளர்க்கும் ஜாதியாகிய பார்ப்பன ஜாதி அடியோடு அனேகமாய் எல்லோருமே இந்த பார்ப்பனரல்லாதார் கிளர்ச்சிக்கு பரம எதிரிகளாய் இருந்து கொண்டு துன்பமும் தொல்லையும் விளைவித்து வருகிறார்கள்.

இக்கிளர்ச்சியை வகுப்புத்துவேஷம் என்றுகூட சொல்லு கிறார்கள். பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாதார்கள் என்கின்ற இரு ஜாதியார் களுக்கும் பார்ப்பனர்கள் ஏற்படுத்தி வைத் திருக்கிற நிபந்தனை களைப் பார்த்தால் வகுப்புத் துவேஷம், வகுப்புக் கொடுமை என்பவைகள் யாரால் செய்யப்பட்டு இருக்கிறது, செய்யப்பட்டும் வருகிறது என்பது நன்றாய் விளங்கும்.

நிற்க, தோழர் நீலாவதி அம்மையார் சொன்னதுபோல் முதலாளி தொழிலாளிக் கொடுமை ஒழிய வேண்டும் என்பதில் ஆண், பெண் கொடுமையும் ஒழிய வேண்டியது அவ சியமாகும். ஆண்கள் முதலாளிகளாகவும், பெண்கள் தொழிலாளி களாகவும், அடிமைகளாகவும்தான் நடத்தப் பட்டு வருகிறார்கள். இதுவும் வெறும் பிறவி காரணமாகவே ஒழிய மற்றபடி இதில் வேறு காரணம் ஒன்றுமே இல்லை. ஆண், பெண் என்பதற்கு பிறவி காரணமாய்க் கற்பிக்கப் பட்டிருக்கிற பேதங்கள், நிபந்தனைகள் அடியோடு ஒழிக்கப்பட்டாக வேண்டும்.

இதற்கும் பெண் மக்கள் பெரியதொரு புரட்சிக்குக் கிளர்ச்சி செய்யவேண்டும். ஆண் மக்களோடு தைரியமாய்ப் போர் தொடுக்க வேண்டும். பெண்கள் போர் தொடுக்க ஆரம்பித்தால் ஆண் மக்கள் சரணாகதி அடைந்தே தீருவார்கள்.

நிற்க. இந்த மே தினத்தை நாம் ஒரு பெரிய பண்டிகை போல் கொண்டாட வேண்டும். ஏனெனில், நமது பண்டி கைகளில் அநேகம் இம்மாதிரி வெற்றிகளை ஞாபகப் படுத்துவதேயாகும். தீபாவளி, சிறீராம நவமி முதலிய பண்டிகைகள் எல்லாம் இந்நாட்டில் ஆரியர்கள் திராவிட மக்களை வென்ற நாள்களையும், வென்ற தன்மை களையும் கொண்டாடுவதைத் தவிர வேறொன்றுமே முக்கியமாய் இல்லை. இதெல்லாம் தெரிந்த பலர்கூட இப்பண்டிகைகளைக் கொண்டாடுவது இன்னாட்டில் மக்கள் உற்சாகத்திற்கு வேறு மார்க்கம் இல்லாததே ஒழிய மற்றபடி மதம், பக்தி, சுயமரியாதை அற்ற தன்மை என்பவைகளே அல்ல.

பெண்களையும், வேலை ஆள்களையும் சிறிதுகூட ஓய்வில்லாமல் அடிமை போல் நடத்துகிறோம். அவர் களுக்கு பண்டிகை, உற்சவம் ஆகியவைகள் தான் சிறிது ஓய்வும் சந்தோஷமும் கொடுக்கின்றன.

தண்டவாளப் பெட்டியில் வைத்துப் பூட்டி வைப்பது போல் பெண் ஜாதிகளைப் பூட்டி வைக்கும் சிப்பாய் களெல்லாம் உற்சவம், பண்டிகை என்றால் சிறிதாவது தாரா ளமாய் வெளியில் விட சம்மதிக்கிறார்கள். உற்சவங்களில் அவர்கள் நிலை எப்படி ஆனாலும் கவலைப்படுவதில்லை. கண்ணெதிரிலேயே நசுக்கப்படுவதையும், கசக்கப்படு வதையும் பார்த்துக்கூட சகிக்கிறார்கள். ஆதலால் நம் பெண்களுக்கும், தொழிலாளிகளுக்கும் எவ்வளவுதான் நாம் பகுத்தறிவையும், சுயமரியாதைக் கொள்கைகளையும் போதித்தாலும் உற்சவமும், பண்டிகையும் அவர்களை விட்டு விலகவே முடியாது. எனவே நாம் இப்படிப்பட்ட மே தினம் போன்ற சிலதை கொண்டாட ஏற்பாடு செய்தோமேயானால் மத சம்பந்தமான பண்டிகை, உற்சவம் ஆகியவைகளை மக்கள் கைவிடுவதற்கு அனுகூலமா யிருக்கும்.

ஆகவே தோழர்களே, இதுவரை நாங்கள் சொன்ன ஒவ்வொன்றையும் சிந்தித்துப் பார்த்து, தங்களுக்கு சரியென்று தோன்றியபடி நடக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொண்டு, இக்கூட்டத்தை முடித்து விடுகிறேன்.

(காரைக்குடியில் நடைபெற்ற மே தினக் கொண்டாட்டத்தில்  தலைவர் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய முடிவுரை) குடிஅரசு -  சொற்பொழிவு - 12.05.1935 


இந்தியாவில் தொழிலாளி, முதலாளி அல்லது எஜமான், அடிமை என்பது பிரதானமாக பிறவி ஜாதியை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இந்தியாவில் மே தினக் கொண்டாட்டம் என்பது பார்ப்பான், (சூத்திரன்) பஞ்சமன் அல்லது சண்டாளன் என்கின்ற ஜாதிப் பிரிவுகள் அழிக்கப்பட வேண்டும் என்கின்ற நிலையில்தான் பெரியதொரு கிளர்ச்சியும், புரட்சியும் ஏற்பட வேண்டும் என்கின்ற கருத்தோடு இன்று கொண்டாடவேண்டியதாகும்.

பார்ப்பனர் - வடவரோடு இந்திப் போட்டி பலிக்குமா?

  

தந்தை பெரியார்

v5

அன்புமிக்க தலைவர் அவர்களேதோழர்களேதாய்மார்களே!

இந்தக்கூட்டம் நாளை இச்சென்னையில் நடைபெற இருக்கும் இந்தி எதிர்ப்பு மறியலைக் குறித்து மக்களுக்கு விளக்கிக் கூறுவதற்காகக் கூட்டப்பட்ட கூட்டமாகும்இந்நாட்டில் அதுவும் இச்சென்னை மாநகரில் இந்தி எதிர்ப்பைக் குறித்து யாருக்காவது விளங்க வைக்க வேண்டுமென்றால்சென்ற 10 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்திராத குழந்தைகளுக்கும்அன்று விளக்கம் தெரியாது விபரம் தெரியாது இருந்த குழந்தைகளுக்கும் தான் சற்று விளக்கம் கூறவேண்டியிருக்குமே ஒழியமற்றையோருக்கு தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லைகாரணம் அவ்வளவு விளக்கமாக அன்று நாம் இந்தி எதிர்ப்பின் அவசியத்தைப் பற்றிப் பேசியிருக்கிறோம் என்பதால்தான்சென்ற 10 ஆண்டுகளுக்கு முந்திஇதே இந்தி மொழி மூலம் நமது திராவிட மொழிக்கும்திராவிடர் கலாச்சாரத்திற்கும்திராவிட மக்களுக்கும் வரநேர்ந்த ஆபத்தைத் தடுக்க வேண்டு மென்று நாம் ஒரு போராட்டத்தை இதே சென்னையில் நடத்தி வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதால்தான்அக்காலத்தில் ஏற்பட்ட ஆபத்துக்கும்இக்காலத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்துக்கும் பல வேற்றுமைகள் உண்டுஏதாவது கடினமான காய்ச்சலைப்பற்றிக் கூற வேண்டு மானால்இக்காய்ச்சல் மிக "விருலன்ட் பாரத்தில்அதாவது மிகக் கொடூரமானவேகமானஆபத்துக் கிடமான தன்மையில் வந்துள்ளது என்று கூறுவார்கள்அதே போல் நமது கலாச்சாரத்திற்கு இன்று வந்துள்ள ஆபத்து முன்னை விடச் சற்று கடினமானசற்று தொந்தரவான தன்மையில் வந்துள்ளது.

பழைய இந்தி நுழைப்பு!

10 ஆண்டுகளுக்கு முன்பு இன்று கவர்னர் ஜெனரலாக இருக்கும் தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் முதன்மந்திரியாய் இருந்த காலத்தில்இதே இந்தி கட்டாயப் பாடமாகக்கூட அல்லஇஷ்டபாடமாக வைக்கப்பட்டதுஅதுவும் மாகாணம் பூராவுக்கும் 40 அல்லது 50 பள்ளிகளில் மட்டுமே பாடமாக வைக்க ப்பட்டதுஅன்று அதைக்கூட நாம் எதிர்த்தோம்நமது எதிர்ப்பின் வலிவைக் கண்டதும்இந்தியை இஷ்டப் பட்டுப் படிப்பவர்கள் கூடஇஷ்டப்பட்டாலொழிய பரீட்சைக்குப் போக வேண்டாம்சென்றாலும் தேற வேண்டிய அவசியமும் இல்லை என்று கூறப்பட்டது.

எதிர்ப்பு வளர வளர ஏதோ 100-வார்த்தைகளாவது இந்தியில் ஒரு மாணவன் தெரிந்து கொண்டால் போதுமானது என்று கூறப்பட்டதுகடைசியாக, "இவ்வளவு அதிருப்தி மக்களுக்கு இருக்குமென்று தெரிந்திருந்தால் நான் இந்த மொழியைப் புகுத்தியே இருக்கமாட்டேன்என்று அவரே கூறும்படியான நிலைகூட ஏற்பட்டதுகடைசியில் இவ்வாறு கூறுமாறு செய்யப்பட்ட அவர்முதல் முதலாக இந்தி எதிர்ப்புப் போர் துவக்கப்பட்டபோது என்ன கூறினார் தெரியுமா?

ஆணவம் குறைச்சலில்லை

"நான் இம்மாகாணத்தின் முதன்மந்திரிமக்களால் தெரிந்து எடுக்கப்பட்டு மந்திரியாக வந்துள்ளவன்நான் உத்தரவிடுகிறேன் என்றால்மக்களின் பிரதிநிதியாகிய நான் உத்தரவிடுகிறேன் என்று பொருள்அப்படியிருக்க மக்களின் பிரதிநிதிகள் அல்லாதயாரோ வெளியில் உள்ள ஒரு ராமசாமி நாயக்கரும்ஒரு சோமசுந்தர பாரதி யாரும் எதிர்க்கிறார்கள் என்பதற்காகவா உத்திரவை மாற்றுவேன்அவர்களுக்காகவா விட்டுக் கொடுப்பேன்அது நடக்காதுமுடியாதுஎன்று ஆணவத்தோடு கூறினார்அதற்காக நாம் அன்று அஞ்சினோம் இல்லைமக்களிடம் இந்தியால் விளையக் கூடிய கேடுகளைப் பற்றித் தெளிவாக எடுத்துக் கூறினோம்அவர்களும் ஒப்புக் கொண்டு பேராதரவு அளிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

ராஜி பேசிய படலம்

அதைக்கண்டு அன்று ஆணவத்தோடு சவால்விட்ட ஆச்சாரியாரும் சமரசத்திற்கு வரராஜிபேச முன்னுக்கு வர நேரிட்டதுராஜிபேச வந்தவர் ஜெயில் சூப்ரன் டெண்ட் முன்னிலையில்தான் என்னுடன் பேசினார்சமரசம் பேச வந்தவரும் கூட இன்றும் உயிருடன்தான் இருக்கிறார்அவர் யார் என்பதையும்தான் தெரிவித்து விடுகிறேனேவேறு யாருமில்லைஇன்றைய மத்திய அரசாங்க நிதி மந்திரியாயுள்ள தோழர் சண்முகம் செட்டியார்தான் என்னுடன் ராஜிபேச அனுப்பப்பட்டார்அவர் கூறினார். "இப்போது இந்தி புகுத்தப்பட்டுள்ள நாற்பது பள்ளிகளோடு இந்தி நுழைப்பை நிறுத்திக் கொள்ள ஒப்புக் கொள்வதாயிருந்தால் போராட்டத்தை நிறுத்திக் கொள்ளச் சம்மதம் தானாஎன்று கேட்டார்அதற்கு நான் சொன்னேன் "இது வெறும் வீம்புதானேஇந்தி தேவையில்லையென்று அவர் உணருவதாயிருந்தால் இந்த 40 பள்ளிகளில் கூட எடுத்துவிடுவது தானேநான் ஜெயித்தேனாஅவர் ஜெயித்தாரா என்று காட்டிக் கொள்ளத்தானே இப்படிக் கூறுகிறார்இதற்கு ஒப்புக் கொள்ள முடியாதுஎன்று கூறினேன்அதற்கு அவர் சொன்னார்.

"இந்த 40 பள்ளிகளில் கூட இந்தி நிரந்தரமாக இராதுஅதுவும் குறைக்கப்பட்டு விடும் என்று கூடக் கூறுகிறார்அப்படிச் செய்வதாயிருந்தால் போராட்டத்தை நிறுத்தச் சம்மதம்தானாஎன்று கேட்டார்அப்படியானால் முடிவாக 40 பள்ளிகளிலும் இந்தி மொழி எடுக்கப்பட்டு விடும் என்று முடிவான தேதியைக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்எனக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் கூட இல்லைஅந்தத் தேதிக்குள் எடுக்கப்படா விட்டால் மறுபடியும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்வதாயிருந்தால் போராட்டத்தை நிறுத்துகிறேன் என்று கூறினேன்அதற்கு அவர் தன்னால் பொறுப்பேற்க முடியாதென்றும்அந்தத் தேதியைக் கேட்டுத் தெரிவித்து விடுவதாகவும் கூறிச் சென்றார்.

வேகமும் வீம்பும்

இந்தப் பேச்சு நடந்தது சென்னை ஜெயிலில்இப்பேச்சு நடந்த சில நாட்களில் எனக்குக் காய்ச்சல் வரவும் என்னைப் பெல்லாரிச் சிறைக்கு மாற்றினார்கள்அங்கும் காய்ச்சல் ஏற்பட்டதுஅங்கிருந்து கோவைக்கு மாற்றப்பட்டேன்நான் பெல்லாரியில் இருந்தபோது இங்கு இந்தி எதிர்ப்பை நடத்தியவர்கள் சற்று வேகமாகப் போய்விட்டார்கள்அதன் பயனாய் சர்க்காருக்கும் வீம்பு அதிகமாகிவிட்டதுஅதன் பயனாய் சமரசப் பேச்சு கைவிடப்பட்டதுகோவையிலும் எனக்குக் காய்ச்சல் ஏற்பட்டு வயிற்றுப் போக்கும் ஏற்படவேகோவை ஜெயில் சூப்ரின்டெண்ட் கொஞ்சம் பயந்து விட்டார்அவர் ஒரு டாக்டர்அவர் உடனே ராஜ கோபாலாச்சாரியாரைப் பார்த்து நிலைமையைச் சொன்னார்ராஜகோபாலாச்சாரியாரும் "தாளமுத்துவுக் கும்நடராஜனுக்கும் ஏற்பட்ட கதி இவனுக்கும் ஏற்பட்டுவிட்டால் என்ன நேருமோஎன்று அஞ்சி "உடனே ஓடோடியும் போய் விடுதலை செய்துவிடுவெளியில் போய் என்ன வேண்டுமானாலும் ஆகட்டும்என்று கூறிவிட்டார்ஞாயிறன்று சூப்ரண்டென்டு அவரைப் பார்த்தார்ஞாயிற்றுக்கிழமையன்றே விடுதலை உத்தரவும் செய்யப்பட்டதுபிறகு இந்தி எதிர்ப்புக்காக சிறை சென்றவர்களைஅவர்கள் சிறைவாசம் முடியும் முன்பே கொஞ்சம்கொஞ்சமாக விடுதலை செய்து கொண்டே வந்தார்அதையொட்டி இந்தி இன்று எடுபடும்நாளை எடுபடும் என்று பேச்சு உலாவ ஆரம்பித்ததுஅப்படிப்பட்ட நிலையில் யுத்தமும் வந்ததுநாம் போட்ட உத்தரவை நாம் எடுப்பானேன்வெள்ளையனே எடுத்துவிடட்டுமே என்ற நினைப்பில்காங்கிரஸ் மந்திரிகளும் பேசாமலே யிருந்து கடைசியாக ராஜினாமா கொடுத்து விட்டுச் சென்றார்கள்வெள்ளையர் சர்க்கார் ஆலோசகர்களாக வந்ததும் அந்த உத்தரவை ரத்து செய்து விட்டார்கள்இதுதான் பழைய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் சுருக்கமாகும்.

இன்றைய இந்தி நுழைப்பு முறை

இந்தச் சங்கதியை நன்றாக அறிந்துள்ளவர்கள் இன்று தாம் பதவிக்கு வந்ததும் அதே காரியத்தை மறுபடியும் செய்ய முற்பட்டிருக்கிறார்கள்சுதந்திர அரசாங்கத்தில்சொந்த அரசாங்கத்தில் தான் அன்னிய வடநாட்டு மொழி நம் நாட்டில் புகுத்தப்படுகிறதுஅதுவும் முன்னையைவிட சற்றுக் கடினமான முறையிலேயே புகுத்தப்பட்டுள்ளதுஎனவேநமது போராட்டத்தின் அளவும் முன்னையதைவிடச் சற்று விரிவானதாகவே அமையும்உத்தரவு பிறப்பித்தவர் களும்திடீரென்று இந்தியை இந்நாட்டில் கட்டாய பாடமாக்கிவிடவில்லைஇதுதான் நாம் சிந்திக்க வேண் டிய விஷயம்இந்தியை இன்னும் சில பாஷைகளோடு சேர்த்து அவற்றில் ஏதாவதொன்றை இரண்டாவது மொழியாகப் படிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தவர்கள் மாகாணம் பூராவுக்கும் ஒரே மாதிரி உத்தரவைப் பிறப்பிக்கவில்லைஇரண்டாம் மொழி கன்னடம்மலையாளம்தெலுங்கு ஆகிய பகுதிகளில் மட்டுமே கட்டாயம் ஆக்கப்பட்டதுதமிழ் நாட்டில் இஷ்டபாடமாக வைக்கப்பட்டதுஅந்த உத்தரவிலேயே அதற்குக் காரணமும் கூறியுள்ளார்கள்தமிழ்ப் பகுதியில் இந்தி புகுத்தப்படுவதைச் சிலர் ஆட்சேபிப்பதால் இரண்டாம் மொழியை இப்பகுதியில் மட்டும் கட்டாய மாக்கவில்லை என்று திட்டமாகக் கூறியுள்ளார்கள்.

சண்டைக்குப் போவானேன் என்றே கருதினோம்

இந்தி இந்நாட்டில் இஷ்டபாடமாக வைக்கப்பட்டது கூடத் தவறுமறுபடியும் ஆட்சியாளர்கள் நம்மை வலுவில் சண்டைக்கு இழுக்கத் துணிந்து விட்டார்கள் போல் இருக்கிறது என்று இவ்வுத்தரவைக் கண்டித்து 'விடுதலை'யில் எழுதி இருந்தோம்என்றாலும் அப்போது இப்படிப்பட்ட ஒரு போராட்டத்தை நடத்த வேண்டு மென்று நாங்கள் தீர்மானம் செய்யவில்லைசண்டைக் குப் போவானேன்இஷ்டப்பட்டவர்கள் வேண்டு மானால் படித்துக் கொள்ளட்டுமே என்று எங்கள் கருத்தைத் தெரிவித்துக் கொண்டதோடு மட்டும் நிறுத்திக் கொண்டோம்.

பார்ப்பனர் வயிறெரிந்தால்.........

தமிழ்நாட்டில் மட்டும் இந்தி இஷ்டமாக்கப்பட்டது ஒன்றிரண்டு பார்ப்பனர்களுக்கு வயிற்றெரிச்சலை உண்டாக்கியதுகோவைக்கு மந்திரியார் சென்றிருந்த போது 'ஏன் தமிழ் நாட்டில் மட்டும் இந்தி இஷ்டப் பாடமாக்கப்பட்டதுஎன்று கேட்கப்பட்டதுஅதற்கு அவர் விளக்கமாக பதில் கூறியிருக்கிறார்அப்பதில் என்ன தெரியுமா?

"வேண்டுமென்று தான் நாங்கள் இந்நாட்டில் இந்தியைக் கட்டாயமாக்கவில்லைஇந்த நாட்டு மக்கள் இந்தி மொழியை விரும்ப மாட்டார்கள் என்பதை உணர்ந்துதான் அப்படிச் செய்தோம்அந்த உத்தரவிற்கு ஆட்சேபணை வராததிலிருந்து நாங்கள் நினைத்தது சரியென்றே தெரிகிறதுஎன்று பதில் கூறியிருக்கிறார்இச்சேதி 24.06.1948ஆம் தேதி சுதேசமித்திரனில் 22.06.1948இல் மந்திரியார் பேசியதாக "இந்தியும் கட்டாய பாடமும்என்கிற தலைப்பில் வெளிவந்துள்ளதுபடிக்கிறேன் கேளுங்கள்வேண்டுமென்றுதான் இந்தி இந்நாட்டில் (தமிழ்நாட்டில்கட்டாயமாக்கப்படவில்லைபொது மக்கள் இவ்வுத்தரவை எப்படி ஏற்கிறார்கள் என்று கவனிக்கவே இப்படி உத்தரவு பிறப்பித்தோம்இரண்டொரு இடத்தைத் தவிர இவ்வுத்தரவிற்கு ஆட்சேபணை வரவில்லையேஅப்படி இருக்க எப்படி பொதுமக்கள் அபிப்பிராயத்திற்கு விரோதமாக எப்படி இந்தியைக் கட்டாயப்படுத்துவது என்று பதில் கூறியிருக்கிறார்இதை நீங்கள் நன்கு யோசித்துப் பார்க்க வேண்டும்ஆட்சேபணையே வரவில்லையே என்று இரண்டு ஏகாரம் போட்டுப் பேசியிருக்கிறார்அதே 24.6.1948 தேதியில் இந்தச் சேதியையும் வெளியிட்டு விட்டு, "இந்தி கட்டாயமாகத் தேவைஎன்று சுதேச மித்திரன் ஒரு தலையங்கமும் தீட்டிவிட்டதுஅதுவும் இந்தி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பதுதான் பொதுஜன அபிப்பிராயம் என்று கூடக் கூறிவிட்டதுஅதற்கு ஆதாரமாக உத்தரவில் சிலர் ஆட்சேபிப்பதால் கட்டாயமாக்கவில்லை என்று கூறியிருப்பதைக் காட்டி கட்டாய இந்தியை ஆட்சேபிப்பவர்கள் ஒரு சிலர்தான் என்பதை மந்திரியார் உணர்ந்திருக்கும் போது அந்த ஒரு சிலருக்காக இஷ்ட பாடமாக்குவதாஎன்று கேட்டி ருப்பதோடு சர்க்காரை எப்போதும் எதிர்ப்ப வர்கள் எந்த நல்ல காரியத்தையும் எதிர்க்கத்தான் செய்வார்கள்அதற்காக நல்ல காரியத்தைக் கைவிட்டு விடுவதாநல்லகாரியத்திற்குக்கூட ஒரு சிலர் ஆட்சேபணை செய்து கொண்டுதான் இருப்பார்கள் என்று கூறி மது விலக்கைக்கூட சிலர் ஆட்சேபிக்கவில்லையாஎன்று உதாரணம் காட்டியிருக்கிறது.

கட்டாய உத்தரவு

ஆட்சேபணையே வரவில்லையே என்று கூறிய மந்திரியார்சுதேசமித்திரனுடைய ஆட் சேபணையைக் கண்டதும்உடனே தம் உத்திரவை மாற்றி விட்டார்மாற்றும் போதும் தெளிவாகவே கூறியிருக்கிறார்தமிழ்நாட்டிலும் இந்தி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக் கிறார்முந்திய உத்திரவில் தமிழ்நாடு மட்டும் கட்டாயத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறதுஇப்போது மற்ற பகுதிகளோடு தமிழ்நாடும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறதென்று.

ஏதோ ஒன்றென்றால் ஏனோ வாத்தியாரும் சலுகையும் கட்டாயம்?

இவ்வளவுக்கும் பிறகு இப்போது சர்க்கார் கூறும் முக்கிய வாதம்நாங்கள் இந்தி கட்டாயம் என்று சொல்ல வில்லையேஎன்பது தான்சர்க்கார் உத்திரவிலும்மந்திரிகள் பேச்சுக்களிலும் கட்டாயம் என்கிற வார்த்தை பலமுறை காணப்படுகிற போதிலும்தாங்கள் கட்டாய பாடமாக்கவில்லை என்றுகூறி மக்களை ஏய்க்கப் பார்க்கிறார்கள் - எப்படிக் கட்டாயமில்லை என்று கூறுகிறார்கள் என்றால் இந்தியை எங்கு கட்டாயம் என்றோம்இந்தி அல்லது சமஸ்கிருதம் அல்லது உருது அல்லது மற்ற ஏதாவதொரு இந்திய மொழி ஒன்றைத் தானே கட்டாயமாக்கியிருக்கிறோம்இரண்டாம் மொழி தான் கட்டாயமே ஒழிய இந்தியல்லவே என்கிறார்கள்இந்தி அல்லது சமஸ்கிருதம் அல்லது அரபி அல்லது உருது அல்லது தெலுங்கு என்று ஒரு 5 மொழிகளில்ஏதாவதொன்றை எடுத்துக் கொள்ளும்படி கூறிவிட்டுஇந்தி படிப்பவர்களுக்குத்தான் சர்க்கார் உத்தியோகம் அளிக்கப்படும்சர்க்கார் சலுகை அளிக்கப்படும் என்றால்இந்தி தவிர வேறு எதைக் கற்பார்கள் மாணவர்கள்ஏதாவதொன்றைப் படிக்கலாம் என்று கூறுப வர்கள் இந்திக்கு மட்டும் எல்லாப் பள்ளிகளிலும் வாத்தியார்களை நியமிப்பானேன்இந்தி வாத்தியார் களை உற்பத்தி செய்யமட்டும் பணம் ஒதுக்கி வைப் பானேன்இந்தி தவிர மற்ற மொழிகளுக்கு இவ்வித ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதிலிருந்தேசர்க்காரின் பித்தலாட்டம் வெளிப்படுகிறதாஇல் லையாஇதுதான் போகட்டும்.

சர்க்கார் பத்திரிகை இது!

சாகசப் பித்தலாட்டம் இது!

சர்க்காரின் கருத்தைத் தெரிவிக்கச் சர்க்காரால் நடத்தப்பட்டுவரும் "சென்னைச் செய்திஎன்ற மாத வெளியீட்டில்கனம் கல்வி மந்திரியார் என்ன கூறியிருக்கிறார் என்பதைக் கவனியுங்கள்இது சர்க்கார் பத்திரிகைஇதில் கனம் கல்வி மந்திரி அவினாசிலிங்கம் செட்டியார் எழுதியது என்று போடப்பட்டு அவரது போட்டோவுடனும்கையெழுத்துடனும் வெளி வந்துள்ளதுஎன்ன வென்று கவனியுங்கள் 01.08.1948இல் வெளியாகி 02.08.1948இல் எங்களுக்குக் கிடைத்தி ருக்கும் இப்பத்திரிகையில் (பத்திரிகையும் போட்டோ வையும் காட்டிஇந்தியைப்பற்றி ஏதேதோ எழுதிவிட்டு இந்நாட்டு மாணவர்கள் ஒவ்வொரு வருக்கும் ஒரு சிறு அளவுக்கேனும் இந்தி தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்பதை வற்புறுத்த வேண்டியது அனாவசியம்எனவேதான் எல்லா ஹைகூல்களிலும் இந்தியைக் கட்டாயப் பாடமாகப் போதிக்கப்பட வேண்டுமென்று சர்க்கார் உத்திரவு பிறப்பித்துள்ளார்கள் என்று எழுதியிருக் கிறார்இப்படி எழுதிவிட்டு நான் எங்கே இந்தியை கட்டாயமாக்கி இருக்கிறேன் என்று கூறினால் அது பித்தலாட்டமா அல்லவாநேற்று முந்தா நாள் நடைபெற்ற சம்பாஷணையின்போது இதையெல் லாம் எடுத்துக்காட்டினேன் என்றாலும் அவர்கள் சொன்னதையே தான் திரும்பித்திரும்பிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

முடியாததை முடியாதென்பதா வெட்கம்?

இப்போதோ கட்டாயப் பாடம் மட்டும் இல்லைகட்டாயப் பரீட்சையும் உண்டுஅதில் நல்லமார்க்கு வாங்கினால்தான் தேர்ச்சியும் உண்டுநமது பிள்ளைகள் எப்படி இந்தியைக் கற்றுத் தேற முடியும்மிக கஷ்டமாயிருக்குமே என்று கூறினால் "அப்படிச் சொல்லிக் கொள்வது வெட்கமாயில்லையாஎன்று மந்திரியார் கேட்கிறார். "நம்மால் செய்ய முடியாத ஒன்றை நம்மால் செய்ய முடியாதேஎன்று கூறுவதற்கு நாம் ஏன் வெட்கப்படவேண்டும்முடியாத ஒன்றை முடியாது என்று கூறுவதில் அவமானம் என்ன இருக்கிறதுநான் கேட்கிறேன் மந்திரியாரை உங்களுக்கு நீக்ரோ பாஷை தெரியுமாஅப்பாஷை உங்கள் நாக்கில் நுழையுமா என்றுநுழையாது என்றுதானே மந்திரி பதில் கூறுவார்நீக்ரோ பாஷை என் நாக்கில் நுழையாது என்கிறாயேஅதைக் கூறிக் கொள்வது அவமானமில்லையா என்று கேட்டால் அதற்கென்ன பதில் கூறுவார் மந்திரியார்தமிழ்நாட்டில் பிறந்த ஒருவருக்கு தமிழ் படிக்கத் தெரியவில்லைதமிழ் பேசத் தெரியவில்லை என்றால்அதற்காக வெட்கப்படுவதில் வேண்டுமானால் நியாயம் இருக்கிறதுதமிழ்நாட்டில் பிறந்தவன் தனக்கு இந்தி வராது என்று கூறுவதில் என்ன வெட்கப்பட வேண்டியிருக்கிறது.

சிறுவர்களின் மீது திணிப்பதா?

பார்ப்பனர்கள் சமஸ்கிருதம் படித்தவர்களின் சந்ததி யார்கள்சமஸ்கிருதத்தில் ஒவ்வொரு எழுத்துக்கும் 4 சப்தங்கள் உண்டுஇந்திக்கும் அப்படியேதான்நாலு சப்தங்களுக்கேற்ப எழுத்துருவங்களும் மாறியிருக் கின்றனஆனால் தமிழ் மொழியில் அப்படிக்கில்லைசப்தத்தில் மாறுதல் இருந்தாலும் எழுத்து உருவத்தில் மாறுதல் இல்லைதமிழ் எழுத்துக்களை உச்சரிப்பதும் வெகுசுலபம்தமிழ் எழுத்துக்களையே உச்சரித்துப் பண்பட்ட தமிழன் நாக்கால் இந்திச் சப்தத்தைச் சரிவர உச்சரிக்க முடியாதுஅப்படிப்பட்ட ஒரு மொழியை நமது சிறுவர்களின் மீது திணித்து அவர்களைக் கொடுமைப் படுத்தலாமாஎன்பது தான் எங்கள் கேள்வி.

தெலுங்கு ரெட்டியார்தான் ஆனால் தெலுங்கைச் சரியாகப் பேசுவாரா?

நான் ஒன்று சொல்ல நினைக்கிறேன்அதற்காக நண்பர் ரெட்டியாரும் என் மீது கோபித்துக் கொள்ளமாட்டார் என்று கருதுகிறேன்ரெட்டியார் ஒரு தெலுங்கரானாலும் அவருக்குச் சரியாகத் தெலுங்குப் பேசத் தெரியாதுநான் ஒரு கன்னடியன் என்றாலும் எனக்குச் சரியாகக் கன்னடம் பேசத் தெரியாதுஏன்ரெட்டியாரின் மூதாதையர் தமிழ்நாட்டில் வந்து குடியேறி சுமார் 600 ஆண்டுகள் சுமார் 10 - தலைமுறைகள் ஆகியிருக்கும்அதற்கும் பல ஆண்டுகள் முந்தித்தான் எனது மூதாதையரும் தமிழ்நாட்டை அடைந்திருக்க வேண்டும். 10 தலைமுறைகளாக தமிழ் நாட்டிலேயே எங்கள் குடும்பத்தினர் வாழநேரிட்ட காரணத்தால்எங்கள் சொந்தமொழி எங்களுக்குச் சரியாகத் தெரியாது போய்விட்டதுநான் பேசும் கன்னடமும்ரெட்டியார் பேசும் தெலுங்கும் ஒரு தமிழனுக்குத்தான் புரியுமே யல்லாது ஒரு கன்னடியனுக்கோஒரு தெலுங்கனுக்கோ சரியாகப் புரியாதுகாரணம் தமிழ்நாட்டிலேயே பலகாலம் இருந்து தமிழர்களிடையே பழகித் தமிழே பேசிவந்ததுதான்தமிழ் திரிந்த தெலுங்கேபழக்கத்தால் ரெட்டியாருக்குமறந்து போய்விட்டதென்றால்சரிவர கற்கசரிவரப் பேசமுடியாது போய்விட்டது என்றால்தமிழ் மாணவர்களால் எப்படி இந்தி படிக்கமுடியும் என்று நண்பர் ரெட்டியார் சிந்திக்க வேண்டாமா?

(09.08.1948 அன்று பெத்துநாயக்கன்பேட்டை சிவஞானம் பார்க்கில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவு)

'குடிஅரசு' - சொற்பொழிவு - 14.08.1948