வெள்ளி, 30 ஜூன், 2017

கடவுள்


20.11.1932  - குடிஅரசிலிருந்து...

கடவுள் என்பது அர்த்தமும் குறிப்பும் அற்ற வார்த்தையாய் இருந்து வந்த போதிலும் அது மனித சமுகத்தில் 100க்கு  99 மக்களை பிடித்து தன்வயப்படுத்தி மடமையாக்கி  ஆதிக்கம்  செலுத்தி வருகின்றது.

கடவுள் என்ற வார்த்தை கற்பிக்கப்பட்டு பல ஆயிரக்கணக்கான  வருஷங்கள் ஆயிருந்த  போதிலும்கூட, கடவுள் என்பது இன்னது என்று குறிப்பாக குளறுபடி இல்லாமல் - தெளிவுபட உணர்த்திய வர்களோ  உணர்ந்த வர்களோ இது வரையில்  காணக் கிடைக்கவில்லை.

பொதுவாக  அந்தப் படி ஒரு உணர்ச்சியை மக்களுக்குள் எப்படியாவது புகுத்தி அவர்களைப் பயப்படுத்தி வைக்க  வேண்டும் என்கின்ற  அவசியத்தினால் அதற்கு என்று வேறு ஒரு (மானச) உலகத் தையும், பாவ புண்ணிய பயனையும் மோட்ச நரகத்தையும், கற்பித்து அதை பரப்ப பலவித தாபனங்களைச் உண்டாக்கி அதன் பிரசாரத்தின் பேரால் பிழைக்க ஒரு கூட்டத்தையும் ஏற்பாடு செய்து அக்கூட்டத்திற்கு அதிலேயே பிழைத்துத் தீர வேண்டியதான நிலைமையையும் ஏற்படுத்தி விட்டதால் வெகு சுலபமாகவும்,  செல்வாக்காகவும் அதன் பிரசாரம் நடக்கவும்,  மக்களை தன் வயப் படுத்தவும்  ஆன காரியங்கள் நடந்து கொண்டே வருகின்றன. கடவுள் என்றால் என்ன, என்றாலும், கடவுள் என்றால் என்ன, என்பதை உணருவதற்கில்லாமலும், உணர வேண்டும் என்று  நினைப்பதற்கு இல்லாமலும் இருந்து வருகிறது.

யாராவது  கடவுளைப் பற்றி நெருக்கிப் பிடித்துக் கேட்டால் அது முழுவதும் முன்னுக்குப் பின் முரணான கருத்துகளையும், செய்கை களையும் கொண்டிருப்பதும் ஆளுக்கு ஒரு வித வியாக்கியானம் கூறுவதுமாய் இருப்பதோடல்லாமல் வேறு விதமாய் குறிப்பான பதில் கிடைப்பது என்பது அறிதாகவேயிருக்கிறது. கடவுள் என்பது சர்வ  வல்லமையும், சர்வ வியாபகமும், சர்வ சக்தியும் கொண்ட ஒரு ஒப்பற்ற தனி பொருளென்று சொல்லப் பட்டு விட்டு உடனேயே அது கண்ணுக்குத் தெரியாதது என்றும், மனதிற்குத் தோன்றாதது என்றும் சொல்லப்படுவதோடல்லாமல் அதற்கு உருவம் இல்லை யென்றும், குணம் இல்லை யென்றும், இன்ன தன்மையது என்று விளக்க முடியாதது என்றும் சொல்லப்பட்டு விடுகின்றது.

கரைபுரண்டு போகும் சீர்திருத்த வெள்ளத்தை நாம் ஒரு புறமாகத் திருப்பி விட்டுப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கருதுவதெல்லாம் வெறும் மாறு பாட்டுக்காக மாறவேண்டு மென்றில்லாமல் பகுத் தறிவுக்கும், தன்மானத்திற்கும், வாழ்க்கை நலத்திற்கும் ஏற்ற முறையில் அச்சீர்திருத்த வெள்ளம் புறப்பட்டுப் பழைய குப்பைக் கூளங்களையும், துர்நாற்றத்தையும் அடித்துக் கொண்டு போவதுடன் மேடு பள்ளங்களையும் நிரவிக் கொண்டு போக வேண்டும்.

-விடுதலை,23.6.17

ஆதியில்....


20.11.1932  - குடிஅரசிலிருந்து...

ஆதியில் மனிதர்கள் காடுகளில் தனிமையாய் சுயேச்சையாய்த் திரிந்த - இயற்கை  வாழ்க்கையிலிருந்து சமுக கூட்டு வாழ்க்கைக்கு வரும் போது அவனவன் தன் தனக்கு வேண்டிய சகல காரியங்களையும் தானே செய்து கொண்டும், அவசியமான பரபர  உதவிகளை வழங்கிக் கொண்டும் ஒரே சமுகமாய், சமத்துவமாய் வாழலாம் என்று எண்ணினானே ஒழிய, மற்றபடி மற்றொருவனை அடிமைப் படுத்தி அவனிடம் தனக்கு வேண்டிய எல்லா வேலை யையும் வாங்கிக் கொண்டு ஏய்த்து, அவனை உலக சுகபோகங்களில்  பட்டினிப் போட்டு தான் மாத்திரம் சோம் பேறியாய் இருந்து வாழ்ந்து கொண்டு எல்லா சுகபோகங் களையும் தானே அனுபவித்துக் கொண்டு இருப்பதற்கோ அல்லது மற்றவனுக்கு அடிமையாய் இருந்து கஷ்டப்பட்டு உழைத்து அவ்வுழைப்பின் பெரும் பயனை மற்றவன் அனுபவிக்க விட்டு விட்டு தான் பட்டினி கிடப்பதற்கோ அல்ல என்பது நேர்மையுள்ள மனிதர் யாவரும் ஒப்புக் கொள்ளத் தக்க விஷயமாகும்.

ஆனால், நாள் ஏற ஏற மக்களுக்குள் சிலருக்குப் பேராசையும், பொறாமையும், சோம்பேறித்தனமும் வலுக்க வலுக்க அவற்றிலிருந்து செல்வவானும் அரசனுக்குக் குருவும் ஏற்பட்டு பிறகு அவற்றை நிலை நிறுத்தி ஆத்மா, கடவுள், வேதம், ரிஷிகள், மகாத்மாக்கள், ஆகியவைகளைக் கற்பித்து பிறகு அவைகளின் மூலம் கடவுள் செயல், முன் ஜென்மம், பின் ஜென்மம், கர்மம், பாவம், புண்ணியம், மேல் உலகம், கீழ்உலகம், தீர்ப்பு நாள், மோட்சம், நரகம் ஆகியவைகளும் கற்பிக்க வேண்டியதாய் விட்டது. இந்த கற்பனைகளின் பயன் தான் பெரும்பான்மையான மக்கள் பாமரர்களாகவும் ஏமாற்றப்படவும், கொடுமைக்குள்ளாகவும் மற்றவர்களுக்கு அடிமையாகி உழைக்கவும் உழைத்தும் சரியான கூலி கிடைக்காமல் பட்டினிக் கிடந்துழல்வதைப் பொருமையுடன் பொருத்துக் கொள்ளவுமான காரியங்கள் நடந்து வருவதுடன் அவை எங்கும் என்றும் நிலைத்தும் நிற்கின்றன. எப்படியாயினும் இந்த நிலை அடியோடு அழிபட வேண்டும்.  அதற்காக அதன் காப்புகளான மேற் குறிப்பிட்ட கடவுள், மதம், தேசியம், ஜாதியம் என்பவை களும் அவற்றின் பேறுகளான ஆத்மா, முன் ஜென்மம், கர்மம், தீர்ப்பு, மோட்ச நரகம், பாவ புண்ணியம், ஆகியவை களாகிய போலி உணர்ச்சிகளும் அவற்றின் ஸ்தாபனங்களும் உடைத் தெரியப் பட வேண்டும்.
-விடுதலை,23.6.17

தலைவிதி


20.11.1932  - குடிஅரசிலிருந்து...கஷ்டப்படுகிற மனிதர்கள் தாங்கள் பாடுபட்டும் பட்டினி இருக்க நேருவதையும், யோக்கியமாய் நாணயமாய் நடந்து இழிவாய் கீழ் மக்களாய்க் கருதப்படுவதுமான தங்களது கொடுமையின் நிலைமைக்கு மற்றவர்களால் தாங்கள் ஏமாற்றப் படுவதுதான் காரணம் என்பதை உணராமல் தங்களுடைய முன் ஜென்மகர்ம பலன் - தலை விதி - கடவுள் செயல் என்பதாகக் கருதிக் கொண்டு சிறிதும் முன்னேறுவதற்கு முயற்சி செய்யாமலும் சூழ்ச்சியின் தன்மையை உணராமலும் இருப்பதோடு தங்கள் நிலைமையைப் பற்றி சிறிதும் அதிருப்திக் கூட அடைய கூடாதென்று கருதி தங்கள் நிலையைப் பற்றி தாங்களே சமாதானமும் சாந்தமும் அடைந்து கொள்ளுகிறார்கள். வெளியில் சொல்லிக் கொள்ளக் கூட வெட்கப் படுகிறார்கள். ஏனெனில் கஷ்டப்படுகின்ற மக்களுக்குக் கடவுள் உணர்ச்சி யும் மதமும் இதைத்தான் போதிக்கின்றது. எப்படி என்றால்,

ஓ கஷ்டப் படுகின்ற மனிதனே! கஷ்டப் பட்டும் பட்டினி கிடக்கின்ற இளைத்த ஏழை மனிதனே!! நீ உனது முன்ஜென்மம் பாவகர்ம பலத்தினால் தலை விதியால் - கடவுள் சித்தத்தால், இம் மாதிரி துன்பத்தை அனுபவிக் கின்றாய். இந்த ஜன்மத்தில் நீ உனக்கேற்பட்ட இந்த நிலைமையை பொறுமையுடன் ஏற்று சமாதானமும் சாந்தமும் அடைந்து இருப்பாயாகில் அடுத்த ஜென்மத்தில் சுகப் படுவாய் மேலான பிறவி பெறுவாய் அல்லது மேல் உலகில் மோட்சம், என்னும் மேன்மையை அடைவாய் - கடவுள் சன்மானம் அருளுவார் என்கின்ற உபதேச மேயாகும்.

இந்தப் பொறுமை உபதேசமும் சாந்த உபதேசமும், சமாதான உபதேசமும், மக்களைக் கோழைகளாகவும், முற்போக்கற்றவர்களாகவும், செய்து அவர்களது கஷ்டத்திலிருந்தும், இழிவிலிருந்தும் முன்னேற முடியாமலும், விடுபட முடியாமலும் சுயமரியாதை உணர்ச்சி பெறாமலும் இருந்து உயிர் வாழும் படி செய்து வந்திருக்கிறது.
-விடுதலை,23.6.17

இவ்வளவு தானா?


20.11.1932  - குடிஅரசிலிருந்து...

இவ்வளவு மாத்திரம் தானா? இந்தக் கடவுள் உணர்ச்சியும் மதமும் செல்வந்தர்களுக்கும், மிராசு தாரர்களுக்கும் மற்றும் உத்தியோகம் வியாபாரம், லேவாதேவி என்னும் பேர்களால் ஏழைகளிடமிருந்து பெரும் பணம் கொள்ளை கொண்டு மற்றவர்களைப் பட்டினி போட்டு பெரும் பணம் சேர்க்கும் பணக்காரர் களுக்கும் போதிப்பது என்ன என்பதைப் பார்த்தாலோ அது, ஓ பிரபுக்களே! செல்வவான்களே!! ஏராளமாக மேலும் மேலும் பணம் சேர்க்கும் பணக்காரர்களே!!! லட்சபுத்திரர்களே!! நீங்கள் முன்ஜன்மத்தில் செய்த புண்ணிய கர்மங்களால் கடவுள் உங்கள் மீது வைத்து கருணையினால் இவ்வுயர் நிலையை அடைந்திருக் கிறீர்கள்.

இவ்வேராளமான பண வருவாய்கள் உங்களுக்கு ஏற்பட்டி ருக்கும் இச்சுக போகம் உங்களுக்குக் கிடைத் ததற்குக் காரணம் கடவுள் சித்தமேயாகும். ஆதலால் நீங்கள் கடவுள் பக்தி உள்ளவர்களாக இருந்து கடவுளுக்குக் காணிக்கை செலுத்துவதன் மூலமும் கடவுளுக்குக் கோயில் கட்டுவதன் மூலம் கடவுள் பக்தர்களான பாதிரிகுரு, பிராமணர் முதலியவர்களுக்கு மரியாதை செய்து சத்திரம் மடம் முதலிய உதவி அளிப்பதன் மூலமும் நன்றி செலுத்தி இந்நிலையை நிலை நிறுத்திக் கொள்ளுவதுடன் மோட்சலோகத்திலும் சுலபமாக  இடம் சம்பாதித்துக் கொள்ளுங்கள்  என்ப தேயாகும். ஆகவே தோழர்களே! இந்த காரணங் களாலேயே மக்களில் உயர்வு - தாழ்வும், எஜமான் - அடிமையும், முதலாளி - தொழிலாளியும், அரசன் - குடிகளும், குரு - சிஷ்யனும் ஏற்பட்டிருக்கின்றன  என்பதை இப்போதாவது உணருகிறீர்களா?

ஒருவன் பூணூல் போட்டுக்கொண்டு, நெற்றிக் குறி இட்டுக் கொண்டு, அவன் தாயார் மொட்டை அடித்து முக்காடு போட்டுக் கொண்டு, அவன் மனைவி கோவணம் போட்டு சேலை கட்டிக் கொண்டு இருக்க உங்களிடம் வந்து நான் பொதுஉடைமைவாதி, அதுவும் இடதுசாரிக் கம்யூ னிஸ்ட் என்று சொன்னால், அதை நீங்கள் நம்பினால் நீங்கள் எவ்வளவு தூரம் முட்டாள்கள் ஆவீர்களோ அதேபோல்தான் நெற்றிக் குறியுடன் இராமாயணம், பாரதம், தேவாரம், பிர பந்தங் களைப் படித்துக்கொண்டு பாராயணம் செய்து கொண்டு பூசை புனஸ்காரங்களுடன் திரிகின்ற வனைச் சமதர்மவாதி என்று நம்புவதாலும் ஆவீர்கள்.   - தந்தை பெரியார்
-விடுதலை,23.6.17

ஆரியப் பார்ப்பனர்களை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பீர்களானால்,

நானுஞ் சொல்லுகிறேன் (சு.ம.வின் சீடன்)
13.11.1943 - குடிஅரசிலிருந்து... 

நான் சொல்லுகிறேன் என்ற தலைப்பில் சென்ற வாரக் குடிஅரசின் 13-ஆம் பக்கத்தில் சு.ம. அவர்கள் ஆஸ்திகர்களுக்கு ஒரு சவால் விடுத்திருந்தார். அதில் அவர் ஏற்றுக்கொள்ளத் தயாராயிருக்கும் மதம், கடவுள் இவைகளின் குணங்கள் எப்படியிருக்க வேண்டுமென்று சில நிபந்தனைகளை வெளியிட்டிருக்கிறார். தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் இவையிரண்டுக்கும் சிருஷ்டி கர்த்தர்களாயுள்ளவர்கள் ஆரியர்-பார்ப்பனர் ஆகையால் அவர்களைப் பற்றி சில விஷயங்களைக் கீழே குறிப்பிட்டிருக்கிறேன்.

ஆரியப் பார்ப்பனர்களே! அவர்களது கால்வருடும் கண்ணிய வான்களே! நாங்கள் ஆரியப் பார்ப்பனர்களை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பீர்களானால், அவர்களைத்துவேஷிக்கக் கூடாதென்பீர் களானால், அவர்களைப் பகைக்கக்கூடாதென்பீர்களானால், அவர் களையும் உடன்பிறந்தார்களைப் போல் (1)பாவிக்க வேண்டுமென் பீர்களானால், அவர்கள் தன்மானத் தமிழர்களாகிய நாங்கள் விரும்புகிறபடி, அதாவது அறிவு உலகம் ஒத்துக்கொள்கிறபடி இருந்தால், அவசியம் ஏற்றுக்கொள்கிறோம்.

(1.) ஆரியர் தங்களது ஜாதியைக் குறிக்கும் அடையாளத்தை நெற்றியிலோ, உடலிலோ அளிக்ககூடாது. உடையைக் கொண்டோ, தலைமயிரைக் கொண்டோ, பேச்சைக் கொண்டோ அவர்கள் தமிழர்களுக்குப் புறம்பானவர்கள் என்று கண்டுகொள்ள முடியாதபடி இருக்கவேண்டும்.

(2) கோவில்களிலுள்ள கல்லையும் செம்பையும் கழுவி வயிறு வளர்க்கும் வேலையை அடியோடு விட்டுவிட வேண்டும். அதாவது கோவில்களுக்கும் அவர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இருக்கக் கூடாது. அவைகளை வேறு நல்ல காரியங்களுக்குப் பயன் படுத்துவதை இவர்கள் மறைமுகமாகவோ, நேரிடையாகவோ தடுக்கவோ எதிர்க்கவோ கூடாது.

(3) தாங்களே ஊட்டிய நஞ்சைத் தாங்களே எடுக்கவேண்டு மென்ற நீதிப்படி எல்லாத் தமிழர்களுடனும் கலப்பு மணஞ் செய்து கொள்ளச் சம்மதிக்கவேண்டும். இதற்கு இடையூறாக உள்ள சட்ட திட்டங்களை ஒழித்துவிட வேண்டும்.

(4) வண்டியோட்டுதல், ரிக்ஷா முதலிய வண்டிகளை இழுத்தல், விறகு வெட்டுதல், உழுதல், தண்ணீர் இறைத்தல், சுமை தூக்குதல், வீடு கட்டுதல், தெருப்பெருக்குதல், அசுத்தத்தை அள்ளுதல், சவரஞ் செய்தல், துணி வெளுத்தல், மாடு மேய்த்தல் முதலிய இன்னும் பல்வேறு தொழில்களை ஏழைகளாயுள்ள தமிழர்கள் எவ்வாறு செய்து வருகிறார்களோ, அதே மாதிரி, அதே நிலையிலுள்ள ஆரியப் பார்ப்பனரும் செய்ய வேண்டும்.

(5) அங்காடி விற்றல், நெல்குத்துதல், நடவு நடுதல், சிறு சுமைகள் தூக்குதல், பாத்திரம் தேய்த்தல் முதலிய தொழில்களையும் இன்னும் பல்வேறு தொழில்களையும் ஏழைகளாயுள்ள தமிழ்ப் பெண்கள் எவ்வாறு செய்து வருகிறார்களோ அதே மாதிரி, அதே நிலையிலுள்ள ஆரியப் பார்ப்பனப்பெண்களும் செய்யவேண்டும்.

(6) ஆயுள் ஹோமம், கலியாணம், கருமாதி, திதி, புண்ணியாதானம், புது வீடு புகுதல், சீமந்தம், சோதிடம், அமாவாசை, அர்ச்சனை, அபிஷேகம், கும்பாபிஷேகம், தேர், திருவிழா, கோவில் கட்டுதல் முதலிய எந்த விதமான காரணத்தைக் கொண்டும் தமிழர்களிடமிருந்து ஒரு பைசாவோ, வேறு ஒரு சிறு துளியோ வாங்கவே கூடாது. இவைகளெல்லாம் முழுப்புரட்டு என்பதையும், தமிழர்களை முழு முட்டாள்களாக ஆக்குவதற்காகவே சைவம், வைஷ்ணவம், வழக்கம், சாஸ்திரம் என்ற வேறு பெயர்களால் தங்களால் உண்டாக்கப்பட்டவை என்பதையும் கண்ணியமாக ஒத்துக்கொண்டு பிரசாரம் செய்யவேண்டும்.

(7) ஜாதிவேற்றுமையையும், மதப் பூசல்களையும், மூட எண்ணங்களையும், அடிமைத் தனத்தையும், குருட்டு நம்பிக்கையையும், கோழைத் தனத்தையும் தமிழர்களிடம் உண்டாக்குவதற்காகவே கற்பிக்கப்பட்டுள்ள எல்லா இதிகாசங்களும், எல்லாப் புராணங்களும், கட்டுக் கதைகள், நாவல்கள், மறக்கப்பட வேண்டியவைகள், ஒழிக்கப்பட வேண்டியவைகள் என்பதைக் கண்ணியமாக ஒப்புக் கொள்ளவேண்டும். (தமிழர்களிலேயே எவ்வளவோ பேர் இவ்வாறு சொல்ல மாட்டார்களே என்று வீண் சாக்குக் கூறக்கூடாது. ஆணிவேரை அறுத்துவிட்டால் சல்லி வேர்கள் மறுநாளே மடித்துப் போகும்.)

(8) ஆரியரை (பார்ப்பனர்)க் குறிக்கக்கூடிய அய்யர், அய்யங்கார், சாஸ்திரி, சர்மா, ராவ் முதலிய பட்டங்களை எந்த சந்தர்ப்பத்திலும் உபயோகிக்கக் கூடாது.

(9) உலக வாழ்க்கைக்கோ, மனிதர்களின் நல்லொழுக்கத்திற்கோ உதவாத வேதபாராயணம், யாகம், பூஜை, அர்ச்சனை முதலியவைகளும், சங்கராச்சாரியர், மாதவாச்சாரியார், ஜீயர் முதலியஅமைப்புக்கள் உடனே ஒழிக்கப்பட வேண்டும்.

செத்து மடிந்துபோன சமஸ்கிருதத்தை விட்டொழித்து உயிருள்ள மொழிகளைப் பயில வேண்டும்.

10.தீபாவளி, சரஸ்வதி பூஜை, விநாயக சதுர்த்தி, ஸ்ரீ ராம நவமி, அறுபத்து மூவர் விழா, கந்தர் சஷ்டி, சிவராத்திரி, கிருஷ்ண ஜயந்தி முதலிய பண்டிகைகள் மூடத்தனத்தையும், மத வெறியையும், சமுகச்சண்டையையும், அறிவீனத்தையும் தமிழர்களிடம் வளர்ப்ப தற்காகவே தங்களால் ஏற்படுத்தப்பட்டவைகள் என்பதைக் கண்ணிய மாக ஒப்புக்கொண்டு இவைகளை அடியோடு நிறுத்திவிட வ்ண்டும்; நிறுத்தும்படியாக அடிமைகளாக்கப்பட்ட தமிழர்களிடம் பிரச்சாரஞ் செய்யவேண்டும். (இப்பண்டிகைகளுக்குப் பதிலாக என்ன விழாக்களைக் கொண்டாட வேண்டுமென்பது பிற்காலத்தில் ஏற்படும் திராவிடநாட்டு சர்க்காரால் நிர்ணயிக்கப்படும்.)

இப்போதைக்கு இந்த நிபந்தனைகள்போதும். இவைகளின்படி நடக்கும் ஆரியர் பார்ப்பனர் திராவிடநாடு ஆட்சியில் ஏற்றுக் கொள்ளப்படுபவர்; அன்னியராகக் கருதப்படமாட்டார். எங்கே பார்க்கலாம்! எத்தனை ஆரியர்கள் முன்வருகிறார்கனென்று!

-விடுதலை,30.6.17

பொறுக்கு மணிகள் (சித்திரபுத்திரன்)

23.10.1943  - குடிஅரசிலிருந்து...

 

மனிதன் யார் என்றால் நன்றி விசுவாச முடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான். மற்றவர்கள் நரி, பூனை, பாம்பு, தேள், கொசு, மூட்டைப்பூச்சி முதலிய அதாவது மற்றவர்களை ஏய்த்தும் துன்புறுத்தியும், இரத்தம் உறிஞ்சியும் வாழும் ஜீவப் பிராணிகளேயாகும்.

தன் வாழ்க்கை ஜீவியத்துக்கு உலக வழக்கில் யோக்கியமான மார்க்கமில்லாதவன் எவனும் யோக்கியனாக இருக்கமுடியாது ? இருந்தால் அது மிக மிக அதிசயம்தான். இதற்கு உதாரணம் கோர்ட்களில் ஜட்ஜும் வக்கீலும் வாதி, பிரதிவாதி, சாட்சி ஆகியவர்களை உனக்கு என்ன ஜீவனம் என்று ஒருகேள்வி கேட்பதும்; மக்கள் அதிகப் படுத்திச் சொல்லுவதுமே போதுமானது.

பக்தி எதிலிருந்து வளருகின்றது? ஆசையில் இருந்தும், அன்னியர் பார்த்து மதிப்பதிலிருந்தும் வளருகிறது.

உண்மையான விபசாரித்தனம் எதிலிருந்து வளருகிறது? இயற்கை உணர்ச்சியில் இருந்தும், ஆண், பெண்கள் தங்களை அலங்கரித்துக் காட்டிக் கொள்ளுவதிலிருந்தும் வளருகிறது.

சமுதாய சீர்திருத்தத்தின் கடைசி எல்லை பொதுஉடைமை என்பதைப் போலவே நாஸ்திகமும் அறிவின் உண்மையான கடைசி எல்லையாகும். ஆனால் அறிவும்,துணிவும், தனக்கென வாழாது தன்னல மறுப்பும் கொண்டவனே, பொது உடமையையும் நாஸ்திகத்தையும் பயன்படும்படி எடுத்துச் சொல்ல முடியும். இவை இல்லாதவர்கள அவற்றின் பேரால் பிழைக்கத்தான் முடியும்.

தலைவிதியும், மோட்ச நரகமும் ஒன்றுக் கொன்று முரண்பட்டதாயினும், மக்களின் பேரா சையும் மடமையும் இரண்டையும் நம்பச்செய்கிறது. மனி தர்கள், எப்படி உண்மையான மக்களை மதிக்கா மலும் நம்பாமலும், அயோக்கியர்களையும் வேஷக் காரர்களையும் நம்புகிறார்களோ, அதுபோல் தான் உண்மையான மதத்தை (கொள்கைளை) நம்பாமல், புரட்டும் பித்தலாட்டமும் உள்ள மதங்களையே நம்புகிறார்கள். ஏனெனில் மக்கள் சுபாவம் ஆசை யும் சுயாநலமுமே ஆனதால், புரட்டும் பித்த லாட்டமும் தான் ஆசையையும், சுயநலத்தையும் திருப்தி செய்வதாக வாக்களிக்கிறது.

ஆசையும் சுயநலமுமற்றவனுக்கு கடவுளும் மோட்சமும் தேவையே இல்லை என்பதோடு அயோக்கியர்களையும், பித்தலாட்டக்காரர்களையும் மதிக்கவேண்டிய அவசியமே இல்லை.

ஒரு நல்ல தகப்பன், தன் வீட்டுப் புறவடையில் ஒரு கிணற்றை வெட்டி, அதற்குச் சுற்றிலும் கைபிடிச் சுவர் கட்டாமல் தன் குழந்தை புத்தி இருந்தால் ஜாக்கிரதையாய் நடக்கட்டும் இல்லாவிட்டால் விழுந்து சாகட்டும் என்று சொல்லுவானா? அது போலவே, ஒரு நல்ல கடவுள், சாத்தானை (தீமை களை) உண்டாக்கி விட்டுத் தனது பிள்ளைகளான குழந்தைகளை புத்தி இருந்தால் சாத்தானுக்குத் தப்பிப் பிழைக்கட்டும் இல்லாவிட்டால் சாத்தானால் நரகத்தில் வீழட்டும் என்று சொல்லுவானா?
-விடுதலை,30.6.17

செவ்வாய், 27 ஜூன், 2017

தீண்டாதார் துன்பம்

21.02.1932  - குடிஅரசிலிருந்து...வெள்ளைக்காரர்களைப் பார்த்து நீங்கள் எங்களைக் கொடுமைப்படுத்துகிறீர்கள்! ஆகையால், உங்களுடைய அரசாட்சி எங்களுக்குப் பிடிக்கவில்லை; ராஜ்யத்தை எங் களிடம் விட்டு விட்டு நீங்கள் உங்கள் தேசத்திற்குப் போய் விடுங்கள்; நாங்கள் ஒற்றுமையாயிருந்து எங்கள் தேசத்தை ஆண்டு கொள்வோம் என்று சுயராஜ்யவாதிகள் கூச்சலிடு கின்றனர்; இதற்காகச் சட்டமறுப்பு செய்கின்றனர்; சிறைக்குச் செல்லுகின்றனர்; இன்னும் சத்தியாக்கிரகத்தின் பெயரால் என்னென்ன காரியங்களையோ செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால், வடநாட்டில் இந்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள கலகமும் வெறுப்பும், இன்னும் ஓய்ந்த பாடில்லை. இவர்கள் ஒற்றுமையாய் வாழ்வதற்குரிய காரியங்களைச் செய்யவும் இல்லை.

இது ஒருபுறமிருக்க மிகவும் பரிதாபகரமான வாழ்வில் இருந்து துன்பப்படும் ஆதிதிராவிடர் போன்ற தீண்டாத மக் களின் கதி இன்னும் மோசமானதாகவே இருந்து கொண்டிருக்கின்றது. தீண்டாதவர்கள் கோயில் பிரவேசத்தின் பொருட்டு நாசிக்கிலும், குருவாயூரிலும் சத்தியாக்கிரகம் புரிந்து கொண்டு துன்பப்படுதலும், அவர்களை வைதிக இந்துக்கள் எதிர்த்து துன்பப்படுத்துதலும் ஒருபுறமிருக்க, அவர்கள் தங்கள் மட்டிலாவது சுத்தமாகவும், நாகரிகமாகவும், சௌகரியமாகவும் வாழக்கூட மனஞ்சகிக்காத இந்துக்கள் அவர்களுக்குப் பண்ணும் கொடுமை மிகவும் அதீதமாக இருக்கின்றது என்ற விஷயம் நமது நாட்டு மக்களுக்குச் தெரியாததல்ல. சென்ற ஆண்டில் ராமநாதபுரம் ஜில்லாவில் ஜாதி இந்துக்கள் தீண்டாத வர்களுக்குச் செய்த கொடுமையும், திருச்சி ஜில்லாவில் ஜாதி இந்துக்கள் தீண்டாதவர்களுக்குச் செய்த கொடுமையும் இன்னும் மறக்கப்படவில்லை. இதுபோலவே ஒவ்வொரு கிராமத்திலும் தீண்டாதவர்களுக்குப் பல கஷ்டங்களிலிருந்து வருகின்றன. ஆனால், அத்தீண்டாத மக்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு உயர்ஜாதி இந்துக்களின் கையையே எதிர்பார்த் திருப்பதாலும், பெரும்பாலானவர்கள் கல்வி அறிவும் உலக நாகரிக உணர்ச்சியும் இல்லாமையால் தங்களை ஆண்டவன் என்பவன் தீண்டதகாதவராகவே கஷ்டப்படும்படி படைத்தான் எல்லாம் தமது தலை விதியின்படி நடக்கும் என்ற நம்பிக்கை யுடையவர் களாயிருப்பதனாலும் தங்கள் துன்பத்தைச் சகித்துக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.

இப்படி இல்லாமல் தீண்டாத மக்கள் கொஞ்சம் சுயமரியாதை உணர்ச்சி பெற்று தங்களைச் சீர்திருத்தம் செய்துகொள்ள முந்துவார்களானால், அப்பொழுதே அவர்களை முன்னேற ஒட்டாமல் நசுக்கி பழைய சாக்கடையிலேயே அமிழ்த்தி வைக்க ஜாதி இந்துக்கள் தயாராகிவிடுகிறார்கள். இதற்கு உதாரணமாக இப்பொழுது சேலம் ஜில்லா, ராசிபுரம் தாலுகா, தாத்தையங்கார் பட்டிகிராமத்திலிருக் கும் தீண்டத்தகாத மக்களை, அவர்கள் முன்னேற்ற மடையாதபடி அடக்கி வைக்க உயர்ஜாதி மக்கள் அவர்களுக்கு விதித்திருக் கும் நிபந்தனைகளைப் பார்த்தால் விளங்கும். இதைப் பற்றி அவர்கள் சேலம் ஜில்லா கலெக்ட ருக்கும், போலீஸ் சூப்பரிண்டென்டிற்கும் செய்து கொண்டி ருக்கும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டு காட்டியிருக்கின்றனர்.

எங்களூர் குடியானவர்கள், நாங்கள் நாகரிகமாக இருப்ப தற்காகப் பொறாமைப்பட்டு எங்களைக் கண்ட இடங்களில் எல்லாம் அடித்தும், எங்கள் தெருப் பெண்களை வாய்க்கு வந்தபடி திட்டியும் கஷ்டப் படுத்துகிறார்கள். அதோடு அல்லாமல் கீழ்க்கண்ட நிபந்தனைகள் ஏற்படுத்தி அதன்படி நடக்காது போனால் எங்கள் கால்களை ஒடித்து விடுவோம் என்று சொல்லுகிறார்கள்.

நிபந்தனைகள்:

1. பறையர்கள் கிராப்பு வைக்கக் கூடாது

2. பள்ளிக்கூடம் தெருவில் இருக்கவும் கூடாது; படிக்கவும் கூடாது.

3. வெள்ளை வேஷ்டிக் கட்டக்கூடாது; அழுக்கு வேஷ்டியிலிருந்தாலும் முழங்காலுக்கு மேல் கட்டவேண்டும்.

4. பெண்கள் மாராடை போடக்கூடாது; மீறி மாராடைப் போட்டால் மாரை அறுத்துவிடுவது.

5. நாகரிகமான நகைகள் போடக்கூடாது.

6. குடைகள் பிடிக்கவும் கூடாது, குடையிருந்தால் நெருப்பு வைத்து கொளுத்தி விடவேண்டும்.

7. பெட்டிகள் கையில் கொண்டு வரக்கூடாது; புஸ்தகமும் கையில் பிடிக்கக்கூடாது (தமிழ்நாடு)

என்பது தீண்டாதவர்களின் விண்ணப்பம். இந்த கொடுமைகளை யார் பொறுத்துக் கொண்டிருக்க முடியும் என்று கேட்கின்றோம். இந்த நிலைதான் கிராமாந்திரங்களி ளெல்லாம் இருந்து வருகின்றது. இதை மாற்றுவதற்கு இது வரையிலும் என்ன முயற்சியை, எந்த தேசியவாதிகள் செய் தார்கள் என்று கேட்கிறோம். அந்நியர் கையில் அதிகாரமும், தாங்கள் சுதந்திரமின்றி அந்நிய நாட்டினருக்கு அடிமையாக இருக்கும் இக்காலத் திலேயே இந்த உயர்ஜாதி இந்துக்கள் தீண்டாதவர்களுக்கு இக்கொடுமையைச் செய்வார் காளாயின் இவர்கள் கையில் ஆட்சியும் அதிகாரமும் கிடைத்துவிட்டால் அவர்களைச் சித்திரவதை செய்யமாட்டார்களா? என்று யோசித்துப்பாருங்கள்.

இந்த மாதிரி வலுத்தவர்கள் இளைத்தவர்களுக்குக் கொடுமை செய்வதைப் பொருட்டுபடுத்தாத ஒரு தேசியம், அல்லது ராஜ்ஜியம் எதற்குப் பயன்படும்? இவ்வாறு தீண்டாத வர்களைக் கொடுமைப்படுத்தும் எண்ணத்தை உயர்ஜாதி இந்துக்களின் மனதில் பதிய வைத்திருப்பதற்குக் காரணம், பாழும் மதமும், வைதிகமும், பழக்க வழக்கங்களுமே அன்றோ? ஆகையால் இந்த பாழும் மதமும், வைதிகமும், பழக்க வழக்க மூட நம்பிக்கையும் தொலைந்தாலொழிய உயர்ஜாதி இந்துக்களின் மனத்தில் மாறுதல் ஏற்படுமா? ஒரு காலும் முடியாது.

ஆகவே, இனியும் தீண்டாதவர்கள் கடவுளையோ மதத் தையோ நம்பிக்கொண்டிருந்தால் ஒரு சிறிதும் முன்னேற்ற மடையப் போவதில்லை. தம்மையே நம்பி இடைவிடாது கிளர்ச்சி செய்வதன் மூலமும் வைதிகர்களாகிய அரசியல் கிளர்ச்சிக்காரர்கள் எல்லாம் சுயராஜ்யம் வந்தபிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறும் வார்த்தைக்கு ஏமாறாமல் முயற்சிசெய்வதன் மூலமும்தான், தாங்கள் விடுதலைப் பெற்று மனிதர்களாக வாழமுடியு மென்று எச்சரிக்கின்றோம்.

மனிதனாகப் பிறந்த யாரும் சுதந்திரமாக வாழவும், மனிதத் தன்மையுடன் வாழவும் விரும் புவதுதான் இயற்கை. எவனும் அடிமையாகவும், அறிவற்றவனாகவும், மனிதனாக மதிக்கப்படாமல் வாழவும் விரும்பமாட்டான். ஆகவே, எந்த நாட்டிலும் அந்நாட்டு மக்கள் அந்த நாட்டின் சுதந்திரத்திற்குத் தடையாக நிற்க மாட்டார்கள். 
- தந்தை பெரியார்

-விடுதலை,24.6.17