வியாழன், 30 ஜூன், 2016

கலை வளர்ச்சி

தந்தை பெரியார்

தமிழ் மக்களுக்குக் கலை வளர்ச் சியைப் பற்றிய கவலை, பண்டிதர் களைத் தவிர, மற்ற கலை உணர்ச்சியே இல்லாத பொது மக்களுக்கும், கலை என்றால் என்ன என்று அறிந்திராத செல்வச் சீமான்களுக்கும், கலை இன் னது என்றே உணர்ந்திராத செல்வச் சீமான்களுக்கும்,
கலை இன்னது என்றே உணர்ந்திராமல் கலையின் பேரால் வயிற்றுப்பாட்டுத் தொழில் நடத்தின தொழிலாளிகளுக்கும் இன்று திடீ ரென்று ஏற்பட்டு, கலை வளர்ப்பு முயற்சியில் இறங்கத் தோன்றின காரணம் என்ன என்பதை முதலில் யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்ளுகிறோம். அதாவது இந்தியின் ஆதிக்கத்தை ஒழிக்க மக்கள் ‘தமிழ், தமிழ்’ என்று செய்த தமிழ்க் கிளர்ச்சியேயாகும்.
தமிழ்நாட்டில் ஆரியர் ஆதிக்கம் பெற்று எல்லாத் துறைகளையும் தம் வயப்படுத்திக் கொண்டு தங்கள் இன நலத்துக்கும் சுயநலத்துக்கும் ஏற்ற வண் ணம் அவைகளைப் பெருக்கிக் கொண் டார்கள். மேலும், அவற்றின் மூலமே தமிழர் செல்வத்தைக் கொள்ளை கொண்டு வாழ்வதல்லாமல் சமுதாயம்,
சமயம் ஆகிய துறைகளிலும் தங்களது ஆதிக்கத்தையும், தமிழர்களுடைய இழிவையும், அடிமைத்தனத்தையும் பெருக்க முயல்கிறார்கள். இவை சுயமரியாதை உணர்ச்சியுள்ள தமிழர் களுக்குத் தோன்றி அவர்கள் ஒவ்வொரு துறையிலும் உள்புகுந்து தடவிப் பார்த்து உள் இரகசியங்களை வெளிப் படுத்தியதன் பயனாகவே கலை இன, மொழி முதலிய இன்றைய கிளர்ச்சிகள் தோன்ற வேண்டியதாயிற்று.
இக்கிளர்ச் சிகளுக்குச் செல்வாக்கு ஏற்பட்டவுடன் பண்டிதர்கள், கலைத் தொழில் வாழ்வுக் காரர்கள், பிரபுக்கள் முதலியவர்கள் இவற்றில் கவனம் செலுத்திப் பயனும், பொது நலத் தொண்டு புகழும் பெற முயல வேண்டியவர்களானார்கள். இது மிக்க நியாயமும், பாராட்டத்தக்க காரியமும் ஆகும் என்பதில் எள்ளளவும் ஆட்சேபணை இல்லை.
இசைக்கலை
ஆனால், இந்த முயற்சியினால் இம்மாதிரியான கிளர்ச்சி தோன்ற வேண்டிய உட்கருத்து என்ன இருந் ததோ அதற்கு அனுகூலம் ஏற்பட வேண்டாமா என்றும், அனுகூலம் ஏற்படா விட்டாலும், கேடாவது ஏற்படாமல் இருக்க வேண்டாமா என்றும் கேட்கிறோம். உதாரணமாக “இசை (சங்கீத)க் கலைக்கு   மொழி முக்கியமில்லை.
குரல் இனிமை, ஒலி இனிமை, தாள இனிமை தான் முக்கிய மானது. மொழி இனிமை முக்கியமல்ல என்று இருக்குமேயானால், நமக்கு இந்த இசைக் கலை வளர்ச்சி முயற்சியில் இன்று கலந்து கொள்ள வேண்டிய அவ சியமே இல்லை என்று சொல்லலாம். அப்படிக்கில்லாமல் இசையில் மொழி இனிமையே முக்கியமானது.
அம்மொழி தமிழ்மொழியாய் இருக்க வேண்டும் என்று நாம் சொல்லுவதனால் அம் மொழிக்கு பொருள் வேண்டாமா?
அப்பொருளுக்கு பலன் வேண் டாமா? அப்பலன் கிளர்ச்சியின் குறிக் கோளுக்கு ஏற்றதாக, நலந்தரத்தக்கதாக இருக்க வேண்டாமா? என்பதை யோசித்துப் பார்க்க வேண்டுமாய் வாசகர்களை வேண்டுகிறோம்.
உதாரணமாக சென்னைத் தமிழ் இசை மாநாட்டில் இசைவாணர் தியாக ராஜ பாகவதர் பாடினார். அவற்றுள் மாதிரிக்கு இரண்டு பாட்டுகளின் தன்மையைப் பாருங்கள்.
ஒரு பாட்டு:
(ராகம்: ஷண்முகப்பிரியா)
பல்லவி
பார்வதி நாயகனே பரமசிவா
கருணாகர சம்போ

அனுபல்லவி
சர்வ பௌமனே சங்கரனே கைலாச வாசனேசந்திரசேகரா
என்பதாகும்,
மற்றொரு பாட்டு.
(ராகம்: லதாங்கி)
பல்லவி
ஸ்ரீஜகதாம்பிகையே தீனதயாபரி சங்கரி
அனுபல்லவி
ஒ ஜனநி நீயே அபயம் சாணுன் உபய சரணம் என்பதாகும்.
இப்படியே தான் அங்கு நடந்த 100க்கு 97 மற்ற பாட்டுகளும் இருந்தன. இந்தப் பாட்டுகளை தெலுங்கிலோ, சமஸ்கிருதத்திலோ, இந்தியிலோ, அல்லது ஜப்பான், ஜெர்மனி மொழியிலோ பாடி, இருந்தால் என்ன குடிமுழுகிப் போய் இருக்கும்?
இந்த மாதிரி பாட்டுகள் பாடச் செய் வதற்கு ஆகவா இருகோடீஸ்வரர்கள் கூடி, உலகத்தைத் திரட்டி பல பதினாயிரக்கணக்கான ரூபாய்கள், பல அறிஞர்களின் அருமையான நேரங்கள், ஊக்கங்கள், செலவழித்து என்றும் கண்டிராத ஓர் உயர்ந்த திருவிழா இராப்பத்து பகல் பத்து போல் நடத்துவது என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்.
இதுதான் தமிழிசைக் கிளர்ச்சி என்றால் இதற்கு (பார்ப்பனர்களின் ஐகோர்ட் ஜட்ஜுகள், ஐ.சி.எஸ். கலெக் டர்கள் முதல்) இத்தனை “பெரியவர்கள்” விரோதம் தான் இப்பெரியார்களுக்கும், தமிழ் இசை கிளர்ச்சி இயக்கத்திற்கும் எதற்கு ஏற்பட வேண்டும், என்று யோசித்தால் இது ஒரு பைத்தியக்காரத் தனமான வேலை என்றே தோன்றும்.
(29.1.1944 “குடிஅரசு” தலையங்கம்)
-விடுதலை,9.1.16

புதன், 29 ஜூன், 2016

காலத்திற்கேற்ப வாழுங்கள்


- தந்தை பெரியார்
நம் கழகமும், நமது முயற்சியும், பிரசாரமும் எந்த ஒரு தனிப்பட்ட வகுப்பு நலத்துக்கோ, தனிப்பட்ட மனிதனின் சுயநலத்துக்கோ அல்ல என்பதை மக்கள் உணரவேண்டும்.
பொதுவாகவே நம் நாட்டு மனித சமுதாய முன்னேற் றத்தின் அவசியத்திற்காகவே பாடுபடுகிறோம்.
இன்று நாம் நம்மையும், மற்ற வெளிநாட்டு உலக மக்களையும் நோக்கும்போது நமது மூளை எப்படி இருக்கிறது? மிக மிகத் தாழ்ந்த நிலையாக இல்லையா?
நாமும், நம் நாடும் உலகில் மிகவும் பழைமையானவர் களாவோம். மற்ற நாட்டவரைவிட நம் பெருமையும், வாழ்வும் மிக மிக உயர்ந்த தன்மையில் இருந்ததாகும்.
அப்படிப்பட்ட நிலையில் இருந்த நாம், நமது நாடு, இன்று பழிப்புக்கு இடமான தன்மையில் இருக்கிறோம். அதாவது நாம் சமுதாயத்தில் கீழான மக்களாக்கப்பட்டு, வாழ்வில் அடிமைகளாக இருக்கும்படி செய்யப்பட்டு விட்டோம்.
இன்றைய உலகம் மிகவும் முற்போக்கடைந் திருக்கிறது. மக்கள் அறிவு மிகவும் மேலோங்கி இருக்கிறது. மக்கள் வாழ்வும் எவ்வளவோ மேன்மை அடைந்திருக்கிறது. ஆனால் நாம் மாத்திரம் காட்டுமிராண்டிகளாகவே இருந்து வருகிறோம். இதற்குக் காரணம் எதுவானாலும் நாம் சமுதாயத்தில் கீழ்ஜாதி மக்களாக இருந்து வருவதல்லாமல், நம்முடைய பழக்கம், வழக்கம் முதலிய காரியங்களும், அதற்கேற்ற வண்ணம் உலகோர் பழிக்கும்படியிருக்கிறது.
நம் பெண் மக்கள், தாய்மார்கள் இதை உணரவேண்டும். நாம் சூத்திரர்களாகவும், நம் பெண்கள் சூத்திரச்சிகளாகவும் இருக்கிறோம் நம்மில் 100க்கு 10 பேருக்குக்கூட கல்வி இல்லை. நாம் 100க்கு 90 பேர் உடலுழைப்புப் பாட்டாளி மக்களாகக் கீழ் வாழ்வு வாழுகிறோம்.
இந்த நிலைக்குக் காரணம் என்ன? நம் இழிவையும் கஷ்டத்தையும் பற்றி நமக்கு ஏன் கவலை இலலை? பாட்டாளி மக்களாகிய நாம் ஏன் தாழ்ந்த ஜாதிகளாகக் கருதப்பட வேண்டும்? அதுவும் இந்த விஞ்ஞான காலத்தில்? என்று உங்களை, நீங்களே கேட்டுப் பாருங்கள்.
நம்மிடத்தில் எந்தவிதமான இயற்கை இழிவோ, இயற்கைக் குறைபாடோ கிடையாது. நாம் சமுதாயத் துறையில் கலைப்படு வதில்லை. நம் சமுதாய வாழ்வுக்கு ஆன காரியங்களைப் பற்றிச் சிந்திப்பதில்லை. நாம் தனித்தனியாக, தத்தம் நலம் பேணி வெறும் சுயநலக்காரர் களாகி, பொதுவில் தலைதூக்க இடமில்லாமல் போய் விட்டது.
நமது சமுதாய வாழ்வுக்கென்று, இன்று நமக்கு எவ்விதத் திட்டமும் கிடையாது. நம் வாழ்வுக்கு, நமக்கு, பொருத்தமில்லாதவைகளை மதம், கடவுள், தர்மம் என்று சொல்லிக்கொண்டு அவைகளுக்கு அடிமையாகி வாழ்வது தான் நம்மைத் தலையெடுக்க வொட்டாமல் செய்து விட்டது.
நமக்கு நல்வழிகாட்டவும், அறிவைப் பெருக்கவும், மனிதத் தன்மையடையவும் நல்ல சாதனம் கிடையாது. நம் மதம், கடவுள், தர்மம் என்பவை நமக்குக் கேடானதாக இருந்து வருவதை நாம் உணரவில்லை.
நம் மதம் நம்மை என்றைக்குமே முன்னேற்றாததாக இருந்து வருகிறது. மதத்தின் பயனாகத்தான் நாம் சூத்திரர், சூத்திரச்சி, கடை ஜாதியாக இருக்கிறோம்.
நம் கடவுள்கள் நம்மை ஏய்ப்பவையாக, நம்மை மடையர்களாக ஆகும்படியாக ஆக்கி வருகிறது.
நமது தர்மங்கள் என்பவை நம்மை முயற்சி இல்லாதவர்களாக ஆக்கிவிட்டன.
ஆகையால், நாம் இத்துறைகளில் எல்லாம் பெருத்த மாறுதல்களையடைய வேண்டும்.
நம் கடவுள் தன்மையில் இருந்து வரும் கேடு என்ன வென்றால், கடவுளை ஒரு உருவமாகக் கற்பித்துக் கொண்டு, அதற்கு ஆக வீடு வாசல், (கோவில்) பெண்டு பிள்ளை, சொத்து சுகம், போக போக்கியம் ஆகியவை செய்து கொடுத்து அனுபவிக்கச் செய்கிறோம். அது மாத்திரமல்லாமல் நாம் கற்பனை செய்து, நாம் உண்டாக்கி, நாமே மேல்கண்டபடி வசதியும் செய்து கொடுத்துவிட்டு, அப்படிப்பட்ட கடவுள் நம்மை இழி ஜாதியாய்ச் சிருஷ் டித்தது என்று கூறிய எவனோ அயோக்கியன் பேச்சைக் கேட்டுக் கொண்டு, நம்மையும் நாமே இழி ஜாதியாய்க் கருதிக் கொண்டு, அக்கடவுளைத் தொடவும், நெருங்கவும் செய்வது தோஷம் - கூடாது என்று நம்பி எட்ட நிற்கிறோம்.
இதனால் நம்மை நாமே கீழ்மைப் படுத்திக் கொண்டோம் என்று ஆகிறதா? இல்லையா? இப்படிப்பட்ட மடத்தனமும், மானமற்றதனமும் உலகில் வேறெங்காவது காணமுடியுமா?
இன்றைய நம் கோவில்கள் எவ்வளவு பெரிய கட்டடங்கள்? எவ்வளவு அருமையான சிற்பங்கள்? அவை களுக்கு எவ்வளவு கோடி ரூபாய் சொத்துகள்? அவை களுக்கு எவ்வளவு பூசை உற்சவ போக போக்கியங்கள்? இவை யாரால் ஏற்பட்டன? யாரால் கொடுக்கப்பட்டன? ஆனால், அவை  மூலம் பயனடைந்து, உயர்ந்த மக்களாக ஆகிறவர்கள் யார்? அவைகளுக்கெல்லாம் அழுதுவிட்டு, கிட்ட நெருங்கக்கூடாத மக்களாய், எட்டி நின்று இழிவும், நட்டமும் அடைகின்றவர்கள் யார்?
நீங்கள் உண்மையாய்க் கருதிப் பாருங்கள்!
இந்த நாட்டில் உள்ள பல ஆயிரக்கணக்கான கோவில் களில், ஒரு கோவிலையாவது, மேல் ஜாதிக்காரர் என்று உரிமை கொண்டாடும் பார்ப்பனர்கள் கட்டியிருப்பார்களா? அவைகளுக்கு இன்று இருந்துவரும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் பெறுமான சொத்துகளில், ஒரு ரூபாய் பெறு மான சொத்தாவது பார்ப்பனர்களால் கொடுக்கப்பட்டி ருக்குமா?
நாம் கோவில்கட்டி, நாம் பணம் கொடுத்து, பூஜை உற்சவம் செய்வித்து, இதற்குப் பணம் கொடுத்த நாம் ஈன ஜாதி, இழி ஜாதி, நாலாஞ் ஜாதி, சூத்திர ஜாதி, அய்ந்தாம் ஜாதி, கடை ஜாதி என்பதாக ஆவானேன்? நம்மைப் பல வழியாலும் ஏய்த்துச் சுரண்டி அயோக்கியத் தனமாகக் கொள்ளை கொண்டு வாழும் பாடுபடாத சோம்பேறிப் பித்தலாட்டப் பார்ப்பனன் மேல் ஜாதியாக இருந்து வருவானேன்? இதைச் சிந்தித்தீர்களா? சிந்திக்க யாராவது இதுவரை நமக்குப் புத்தி கூறி இருக்கிறார்களா?
நாம் ஈனஜாதி, இழி மக்கள் என்று ஆக்கப்பட்டதற்குக் காரணம் இந்தக் கடவுள்கள் தான் என்பதையும், நாம் முட்டாள்கள், மடையர்கள் ஆனதற்குக் காரணம் இந்தக் கடவுள்களுக்குக் கட்டடம் சொத்து போக போக்கியச் செலவு கொடுத்ததுதான் என்பதையும் இப்போதாவது உணரு கின்றீர்களா? இல்லையா?
அதுபோலவேதான் நம் தலையில் சுமத்தப்பட்டிருக்கும் இந்து மதம் என்பது நம்மைச் சூத்திரனாகவும், நம்மை ஏய்த்துப் பிழைக்கும் பார்ப்பானைப் பிராமணனாகவும் ஆக்கியிருக் கிறதா? இல்லையா?
அதுபோலவேதான் நம் தர்மங்கள் என்று சொல்லப் படும் மனுதர்மம், புராணம், கீதை, இராமாயணம், பாரதம் முதலிய இதிகாசங்களில் அல்லாமல் வேறு எதனாலாவது, நம்மைச் சூத்திரன், சூத்திரச்சி, வேசி மகன், தாசி மகன், அடிமை, கீழ்ஜாதி என்று யாராவது சொல்ல இடமிருக் கிறதா? காரண காரியங்கள் இருக்கின்றனவா?
ஆகவே நமது இழிவுக்கும் ஈனத்துக்கும் மேற்கண்ட நம் கடவுள், மதம், தர்ம சாஸ்திரங்கள் எனப்பட்டவை அல் லாமல், வேறு ஒன்றும் காரணம் அல்ல என்பதை இப்போதாவது உணருகிறீர்களா?
நமது மேன்மைக்கு, நல்வாழ்வுக்கு, நமது இழிவு நீங்கி மனிதத் தன்மை வாழ்வு வாழ்வதற்கு, மனித சமுதாயமே பகுத்தறிவுடன் உயர்ந்த ஜீவப்பிராணி என்பதைக் காட்டிக் கொள்வதற்கு, நமது இன்றைய நிலையில் இருக்கும் கடவுள், மதம், தர்மம், நீதி முதலியவை பெரிய மாற்ற மடைந்தாக வேண்டும்.
நமது கடவுள்கள் காட்டுமிராண்டிக் காலத்தில் கற்பிக்கப் பட்டவை, அல்லது கண்டு பிடிக்கப் பட்டவை, அல்லது நமக்குத் தெரிய வந்தவை. நமது மதமும், மனிதனுக்கு நாகரிகம், பகுத்தறிவுத் தெளிவு இல்லாமல் மிருகப் பிராயத்தில் இருந்தபோது, அப்போ துள்ள அநாகரிக மக்களால் உண்டாக்கப் பட்டதாகும். நமது ஒழுக்கம் நீதி என்பவைகளும் அக் காலத்துக்கு ஏற்ப, அக்காலத்தில் உள்ள அறிவுக் கேற்ப ஏற்பட்டவையாகும்.
இன்று காலம் மாறிவிட்டது, இயற்கை கூட மாறிவிட்டது. அறிவின் தன்மை, அனுபவத்தன்மை மாறிவிட்டது. மனிதனுடைய மனோதர்மம், ஆசாபாசம், ஆற்றல் மாறிவிட்டன. இப்படிப்பட்ட இக்காலத்துக்கு, 20ஆம் நூற்றாண்டுக்கு 4000ஆம் 5000ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கடவுள், மதம், தர்மம், நீதி செல்லுபடியாக முடியுமா?
ஆகவே இன்றைக்கு ஏற்றபடியாக இவை மாற்றப்பட்டாக வேண்டும். இன்று எந்த ஒருஒழுக்கத்தை, நீதியை நாம் விரும்புகிறோமோ, மற்றவர்களிடம் எதிர்பார்க்கின்றோமோ அப்படிப்பட்ட நீதியும், ஒழுக்கமும் கொண்ட கடவுள் மதம் வேண்டும். எப்படிப்பட்ட அறிவை முன்னேற்றத்தை விரும்புகிறோமோ, அப்படிப்பட்ட கடவுள், மதம், நீதி, தர்மம் கொண்ட கடவுள், மதம் வேண் டும். இன்று அப்படிப்பட்ட கடவுள், மதம் நமக்குண்டா? நம் கடவுள்களிடம் இல்லாத அயோக்கியத்தனங்கள் இன்று உலகில் எந்த அயோக்கியனிடமாவது உண்டா? நம் மதத்தில் இல்லாத காட்டுமிராண்டித்தனங்கள், மூடநம்பிக் கைகள் எந்த மடையனிடமாவது - குடுக்கைத் தலையனிட மாவது உண்டா? நான் மதத்தின் மீது, கடவுள் மீது குற்றம் சொல்லவில்லை. ஆனால், அப்படிப்பட்ட காலத்தில் அப்படிப்பட்ட அறிவுள்ள வர்களால் அவை சிருஷ்டிக்கப் பட்டவையாகும். காட்டிக் கொடுக்கப்பட்டவையாகும்.
இந்த மதத்தை - கடவுள் தன்மைகளை ஏற்படுத்தின - உண்டாக்கிய - காட்டின பெரியோர்கள் தெய்வப் பிறவிகள் - தெய்வீகத் தன்மை உடையவர்கள் என்பதான அந்த மகான்களே இன்று இருப்பார்களேயானால், உடனே மாற்றி விட்டு வேறு வேலை பார்ப்பார்கள். அல்லது வெளியில் வர வெட்கப்படு கிறார்கள்.
உதாரணமாக இவைகளை நீங்கள் சரி என்கிறீர்களா? அதாவது மூன்று பெரிய கடவுள்கள், அவைகளுக்கு ஈட்டி, மழு முதலிய ஆயுதங்கள். மாடு, பருந்து முதலிய வாகனங்கள், பெண்டாட்டி பிள்ளை குட்டிகள், போதாதற்கு வைப்பாட்டிகள், மேலும் பல குடும்பப் பெண்களை விரும்பி, கட்டிய கணவனுக்குத் தெரியாமல் வேஷம் போட்டு, உருமாறி விபசாரம் செய்வதில் அம்மூவரும் ஒருவரை ஒருவர் போட்டி போடுவதில் சாமர்த்தியம் நிறைந்தவர்கள்.
இம்மூவரையும் தலைவராகக் கொண்ட மதத்தில் நாலைந்து ஜாதிகள். முதல் ஜாதி பார்ப்பன ஜாதி. இந்த ஜாதி பாடுபடாமல் மற்றவர்கள் உழைப்பைச் சுரண்டியே வாழ்ந்து வரவேண்டும். இவர்களுக்குத்தான் எங்கும் முதலிடம். மற்றவர்கள் எல்லாம் இவர்களுக்குக் குற்றேவல் செய்து, வாயையும் வயிற்றையும் கட்டி அடங்கி ஒடுங்கி வாழவேண்டும்.
இந்த மதத்தில் உள்ள மக்களுக்குச் சொல்லப்பட்டிருக் கும் நீதி - ஒழுக்கம், ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு மாதிரி. பார்ப்பான் திருடினால் அவன் தலையைச் சிரைத்து மொட்டையடிப்பதே போதுமான தண்டனை. அதே திருட்டை ஒரு அய்ந்தாவது ஜாதிக்காரன் செய்தால் அவனுடைய கையை வெட்டி விடுவது அதற்கேற்ற தண்டனை என்று சொல்லுகிறது மனு நீதி. அந்த மனுநீதியில் சொல்லப்பட்டிருக்கும் நீதிகள் எல்லாம் இந்த அடிப்படையில்தான் வகுக்கப்பட்டிருக்கின்றன.
ஆகவே அக்காலத்தில் கடவுள் மத தர்மங்களை, இக்காலத்துக்கு ஏற்றபடி அமைத்துக் கொள்ளுங்கள் என்பதற்கு ஆகவே இதைக் குறிப்பிடுகிறேன்.
பெரிய அறிவாளிகள்கூட எண்ணெய் விளக்கை இன்று அறவே நீக்கிவிட்டு, எலெட்ரிக் விளக்குப் போட்டுக் கொள்ளவில்லையா?
கட்டை வண்டிப் பிராயணத்தை நீங்கள் தள்ளிவிட்டு ஏரோப்ளேன் - ஆகாயக்கப்பல் பிராயணத்தை நீங்கள் விரும்பவில்லையா?
ஆகையால், ஆதிகாலம் என்கின்ற காலத்தில், ஆதி கால மனிதர்கள், மகான்கள் என்பவர்களால் ஏற்படுத்தப் பட்ட ஆதிகாலத் தன்மையிலிருந்து மாறுபட்டு, இக்கால நிலைக்கு ஏற்றதுபோல் நடந்து கொள்ளுங்கள்.
காலத்தோடு கலந்து செல்லாதவன் ஞாலத்துள் பயன்படமாட்டான்.
தந்தை பெரியார் அவர்கள் சொற்பொழிவு, (குடிஅரசு 15.1.1949
விடுதலை,31.8.14-

செவ்வாய், 28 ஜூன், 2016

பேராசையும் சோம்பேறித்தனமுமே பிரார்த்தனையின் அடிப்படை


- தந்தை பெரியார்
பிரார்த்தனை என்பது இன்று உலகில் மக்கள் சமூகம் எல்லோரிடத்திலும், அதா வது கடவுளால் மக்கள் நடத்தப்படு கிறார்கள் என்று நம்பும் எல்லோரிடத்திலும் இருந்து வருகிறது. இது எல்லா நாட்டிலும், எல்லா மதக்காரர்களிடத்திலும் இருந்து வருகிறது.
பிரார்த்தனை என்பதற்கு ஜபம், தபம், வணக்கம், பூசனை, தொழுகை முதலிய காரியங்களும், பெயர்களும் சொல்லு வதுண்டு.
இவையெல்லாம் கடவுளை வணங்கி தங்களுக்கு நன்மை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுவதேயாகும்.
தனக்கு வேண்டியவற்றை எல்லாம், அதாவது இம்மையில் இவ்வுலகில் புத்தி யுத்தி, செல்வம்,  இன்பம், ஆயுள், புகழ் முதலியவையும், மறுமையில் மேல் உலகத் தில் பாவ மன்னிப்பு, மோட்சம், நல்ல ஜென் மம் முதலியவையும் கிடைக்க வேண்டும் என்கின்ற ஆசையே பிரார்த்தனையின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.
இந்தப் பிரார்த்தனையின் அஸ்திவாரம் உலகத்தைப் படைத்துக் காத்து வரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும், அவர் சர்வ வல்லமையும், சர்வ வியாபக மும், சர்வமும் அறியும் ஞானமும் உடைய வர் என்பதும், அப்படிப்பட்ட கடவுளை வணங்குவதால் ஒருவனுக்கு வேண்டிய சகல காரியத்திலும் சித்தி பெறலாம் என் பதுமானவை தான் பிரார்த்தனைக்காரர் களின் கருத்தாயிருக்கிறது.
இப்படிப்பட்ட பிரார்த்தனைக்கு அக்கடவுளை வணங்கு வது, தோத்திரம் செய்வது, புகழ்வது, பஜனை செய்வது முதலிய காரியங்கள் ஒருபுற மிருக்க, பொருள்களைக் கொண்டும் கட வுளைத் திருப்தி செய்து அவற்றால் பயன் பெறலாம் என்பதும் இந்தப் பிரார்த் தனையில் சேர்ந்ததாகும்.
அதாவது கடவுளுக்கு இன்னது செய்வதாக நேர்ந்து கொள்ளுவது, ஜீவபலி கொடுப்பது, கோயில் கட்டுவது, உற்சவம் செய்வது முதலிய காரியங்கள் செய்யப்படு வனவாகும். ஆகவே, இப்படிப்பட்ட பிரார்த் தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாற்றுப் பெயர் சொல்ல வேண்டுமானால், பேராசை என்று தான் சொல்ல வேண்டும். பேராசை என்றால் தகுதிக்கு மேல் விரும் புவது; வேலை செய்யாமல் கூலி பெறுவது.
படித்து பாஸ் செய்ய வேண்டியவன் பிரார்த் தனையில் பாஸ் செய்வது என்றால், பணம் வேண்டியவன் பிரார்த்தனையில், பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால், மோட்சத்துக்குப் போக வேண்டும் என்கிற வன் பிரார்த்தனையில் மோட்சத்துக்குப் போக வேண்டும் என்றால், இவற்றுக்கெல் லாம் பேராசை என்று சொல்லுவதோடு வேலை செய்யாமல் கூலி கேட்கும் பெரும் சோம்பேறித்தனமும், மோசடியும் என்று சொல்லுவதும் தான் மிக பொருத்தமாகும்.
பேராசையும், சோம்பேறித்தனமும் ஏமாற்றும் தன்மையும் இல்லாவிட்டால், பிரார்த்தனைக்கு இடமே இல்லை.
சற்று முன் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஆக பிரார்த்தனை செய்வதும், பிரார்த் தனையில் அவற்றை அடையப் பார்ப்பதும் முன் குறிப்பிட்ட சர்வ வல்லமை, சர்வ வியாபகம் உள்ள கடவுளை சுத்த முட்டாள் என்று கருதி, கடவுளை ஏமாற்றச் செய்யும் சூழ்ச்சி என்று கூட சொல்லி ஆக வேண்டி யிருக்கிறது.
எந்த மனிதனும் தகுதியானால் எதையும் அடையலாம். அதற்கு வேண்டிய காரி யங்கள் செய்து, தகுதியாக்கிக் கொண்டு பலனடைய எதிர்பாராமல் காரியத்தைச் செய்யாது, பிரார்த்தனையில் பலன் அனுபவிக்க வேண்டும் என்று கருதினால், கடவுள், வேலை செய்யாமல் கூலி கொடுக் கும் ஒரு அறிவற்றவர் என்றும், தன்னைப் புகழ்வதாலேயே வேண்டியதைக் கொடுக் கும், ஒரு தற்புகழ்ச்சிக்காரர் என்றும் தானே சொல்ல வேண்டும்.
தவிர, இந்தப் பிரார்த்தனையின் தத்துவ மானது மனிதனைச் சோம்பேறியாக்கு வதோடு சகலவித அயோக்கியத்தனமான காரியங்களுக்கும் லைசன்சு, அனுமதிச் சீட்டுக் கொடுப்பது போலாகிறது. விதை நட்டு, தண்ணீர் பாய்ச்சாமல், அறுப்பு அறுக்க கத்தி எடுத்துக் கொண்டு போகிற வனுக்கும், யோக் கியமான காரியங்களைச் செய்யாமல் கடவுள் கருணையை எதிர் பார்ப்பவனுக்கும் என்ன வித்தியாசம் என்பது விளங்கவில்லை.
கடவுள் சகலத்தையும் உணர்ந்து அதற்குத் தகுந்தபடி கர்மபலன் கொடுக்கக் கூடிய சர்வசத்துவம் உள்ளவர் என்று ஒருவன் கருதியிருப்பானேயானால் அவன் கடவுளைப் பிரார்த்தனை செய்யும் வேலை யில் ஈடுபடவோ, அதற்காக நேரத்தைச் செலவு செய்யவோ ஒரு பொழுதும் துணிய மாட்டான்.
ஏனென்றால், சகல காரியமும் கடவு ளால்தான் ஆகும் என்று நினைத்துக் கொண்டு கடவுள் யாருடைய முயற்சியும், கோரிக்கையும் இல்லாமல் அவனவன் செய்கைக்கும், எண்ணத்துக்கும், தகுதிக்கும் தகுந்தபடி பலன் கொடுப்பதற்குத் தகுந்த ஏற்பாடும் செய்து விட்டார் என்றும், (அதா வது விதியின்படி தான் முடியும் என்றும் தெரிந்து இருந்த ஒருவன் அந்தத் தெளிவில் நம்பிக்கை இருந்தால்) பிரார்த்தனை செய் வானா என்று யோசித்துப் பார்க்க வேண்டு கிறோம்.
சாதாரணமாக மக்களில் 100-க்கு 90 பேர்களிடம் பிரார்த்தனை வெகு கேவல மான - அறிவற்ற வியாபாரத்தனமான முறையில் இருந்து வருகிறது. அதாவது எனக்கு இன்ன பலன் ஏற்பட்டால் உனக்கு இன்ன காரியம் செய்கிறேன்; அல்லது உனக்கு நான் இன்ன காரியம் செய்கிறேன். அதற்குப் பதிலாக நீ இன்ன காரியம் எனக்குச் செய் என்கின்ற முறையிலே பிரார்த்தனை இருந்து வருகிறது.
இப்படியேதான், இதையே தான் பிரார்த் தனையைத் தூண்டும் ஆதாரங்களும், சாஸ்திரங்களும், கரும காண்டமும் கூறு கின்றன.
இதைப் பார்த்தால், இவர்கள் எல்லோ ரும் அதாவது இந்தப் பிரார்த்தனைக் காரர்கள் எல்லோரும் கடவுள் புத்திசாலி என்றோ, சர்வசக்தி உள்ளவன் என்றோ, பெரிய மனிதத் தன்மை உடையவன் என்றோ கருதவில்லை என்று தான் சொல்லி ஆக வேண்டும். சிலர் சொல்லு கிறார்கள், மனிதன் பாவி, அவன் பாவ கர்மத்தைச் செய்து தான் தீருவான்; ஆதலால் மன்னிப்புக் கேட்டுத்தான் தீர வேண்டும் என்கிறார்கள்.
நான் பாவம் செய்து தான் தீருவேன்; நீ மன்னித்துத் தான் ஆகவேண்டுமென்று பிரார்த்திப்பதைக் கடவுள் ஏற்றுக் கொள் ளுவதானால் மனிதன் எந்தப் பாவத்தைச் செய்வதற்கும் ஏன் பயப்பட வேண்டும் என்பது நமக்குப் புலப்படவில்லை. பாவத் துக்கு எல்லாம் மன்னிப்பு இருக்குமானால் புண்ணியம் என்பதற்கு அர்த்தம் தான் என்ன?
ஆகவே, கடவுள் கற்பனையைவிட இந்தப் பிரார்த் தனைக் கற்பனையானது மிக மிக மோசமானது என்று தான் சொல்ல வேண்டும்.
பிரார்த்தனைக் கற்பனை இல்லாவிட் டால் கடவுள் கற்பனை ஒரு பிரயோஜனத் தையும் கொடுக்காமல் போய்விடும்.
மனிதன் பூஜையும், பிரார்த்தனையும் செய்து லாபம் அடைவதற்குத் தான் கடவுள் ஏற்படுத்தப்பட்டதே ஒழிய, கடவுளுக்கு ஆக பூஜையும், பிரார்த்தனையும் ஏற்படுத் தப்படவில்லை.
குரு - (பாதிரி), புரோகிதன் (பார்ப்பான்) ஆகியவர்கள் பிழைப்புக்கு ஆகவே பிரார்த்தனையும், கடவுள் மன்னிப்பும் ஏற்படுத்தப்பட வேண்டியதாய் விட்டது. இந்த இரண்டு காரியமும் இல்லாவிட்டால் பார்ப்பானுக்கோ, பாதிரிக்கோ, முல்லா வுக்கோ ஏதாவது வேலை உண்டா என் பதை யோசித்துப் பாருங்கள். ஆஸ்திகர்கள் கொள்கைப்படி மனிதனுடைய செய்கை யும், எண்ணமும், சித்திரபுத்திரனுக்கோ, கடவுளுக்கோ தெரியாமல் இருக்கவே முடியாது. இதற்கு ஆக பலன் கொடுக்க தீர்ப்பு நாளும், எமதர்மராஜாவும் இருந்தே இருக்கிறான்.
மத்தியில் பிரார்த்தனை பூசனை என்பது, மேல்கண்ட இரண்டையும் ஏமாற்றவா? அல்லது குருவும், புரோகிதனும் பிழைக் கவா? என்பது யோசித்தால் விளங்காமற் போகாது.
பிரார்த்தனையில் செலவாகும் நேரத்தைப் போல, மனிதன் வீணாய் கழிக்கும் நேரம் வேறு இல்லை என்றே சொல்லுவோம்.
சில சோம்பேறிகள் பிழைப்பதற்கு ஆக மக்கள் புத்தி எவ்வளவு கெடுகிறது? மக்களுக்கு அயோக்கியத்தனம் செய்ய எவ்வளவு தைரியம் ஏற்பட்டு விடுகிறது? பொருள்கள் எவ்வளவு நாசமாகிறது?
என்பவற்றையெல்லாம் யோசித்துப் பார்த்தால் பிரார்த்தனை என்பது ஒரு புரட்டான காரியம் என்றோ, பயனற்ற காரியம் என்றோ, அறிவீனமான காரியம் என்றோ விளங்காமற் போகாது.
பூசை புரட்டு குறித்து பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை (விடுதலை 20.11.1953.).
-விடுதலை,2.3.14

கடவுளை நம்புகிறவர்களை முட்டாள் என்று சொல்வதற்கு யார் காரணம்?


- தந்தை பெரியார்
இந்தக் கடவுள், மதம், சாஸ்திரம் போன்ற முட்டாள் தனம் முன்னோர்கள் காலத்தி லிருந்து இருந்து வருகிறது. இதை மாற்றக் கூடாதது என்று சொல்கின்றோமே தவிர, உணவை, உடையை, மற்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் முன்னோர்கள் பழமையைக் கடைபிடிப்பது கிடையாது.
விளக்கெண்ணெய் அகல் விளக்கைத் தூக்கிக் குப்பையிலெறிந்துவிட்டு மனிதன் மின்சார விளக்கைப் பயன்படுத்துகின் றானே தவிர, முன்னோர்கள் காலத்தி லிருந்து இருந்து வந்தது என்று எவனும் அகல் விளக்கைப் பயன் படுத்துவது கிடையாதே!
இங்கு மனிதன் சிந்திப்பது பாவம், மதத்திற்கு விரோதம், கடவுளுக்கு விரோ தம் என்று சொல்லி மனிதனின் சிந் தனையைத் தடுத்து விட்டதால் அறிவு வளர்ச்சியடைய முடியாமல் போய்விட்டது. ரஷ்யாக்காரன் கடவுள், மதத்தை ஒழித்து சிந்தனைக்குச் சுதந்திரம் கொடுத்ததால் அங்கு ஏழையும் இல்லை - பணக்காரனுமில்லை, தொழிலாளியும் இல்லை - தாழ்ந்த சாதிக்காரனும் இல்லை - உயர்ந்த சாதிக் காரனும் இல்லை. எல்லா மக்களும் சமமாக இருக்கிறார்கள்.
உலகில் நாம் பல பாகங்களைப் பார்த்துச் சிந்திக்க ஆரம்பித்த பின்தான் நம் இழிவிற்குப் காரணம் பகுத்தறி விருந்தும் அதனைக் கடவுள் - மதம் - சாஸ்திரம் - புராணம் - முன்னோர் - பெரியோர் என்கிற காரியங்களில் பயன்படுத் தாததே என்பது புலப்படுகிறது.
பகுத்தறிவு என்பது ஒரு மனிதனால் புகுத்தப் பட்டதல்ல, தானாக ஏற்படுவதாகும். ஏசு கிறிஸ்து ஆயிரம் கடவுள் இல்லை; ஒரு கடவுள்தான் உண்டு என்றான். அப்போது அவன் பகுத்தறிவுவாதி! முகமது நபி ஆயிரம் கடவுள் இல்லை; கடவுளுக்கு உருவ மில்லை; ஒரு கடவுள்தான் உண்டு என்று சொன்னான்; அந்தக் காலத்தில் அவன் பகுத்தறிவு வாதி! இப்போது நான் அந்த ஒரு கடவுளும் தேவையில்லை என்கின்றேன்.
குரங்கை எப்படி மனிதன் அடக்கி ஆட்டி வைக்கின்றானோ அதுபோல் மூடமக்களை மதவாதிகள் ஆட்டி வைக் கின்றனர். எதற்காக ஒருவன் மேல் சாதி என்றால், கடவுள் அமைப்பு, மத அமைப்பு, தலையெழுத்து, முன் ஜென்மத்தில் அவன் செய்த புண்ணியம் என்கின்றான். எதற்காக ஒருவன் கீழ்சாதி என்றால் அவன் தலை யெழுத்து, கடவுள் அமைப்பு, மத அமைப்பு, முன் ஜென்மத்தில் அவன் செய்த பாவம் என்கின்றான். ஆகையால்தான் மனிதனின் இழிவை ஒழிக்க இந்தக் கடவுள், மதம், சாதி, சாஸ்திரம் முன்ஜென்மம் என்கின்ற முட் டாள் தனங்களை ஒழிக்க வேண்டுமென் கிறோம்.
நோய்க்கு மூலகாரணம் என்ன என்பதை அறிந்து அதற்குப் பரிகாரம் செய் தால்தான் நோய் குணமாகும். அதுபோன்று நம் இழிவிற்கு, அறிவற்ற தன்மைக்கு, மானமற்ற தன்மைக்கு, அடிப்படை மூலம் எது என்று பார்த்து அதனை அழித்தால் தான் மனிதனின் இழிவு, அறிவற்றதன்மை, மானமற்ற தன்மை ஒழியும். இந்து மதம் இருப்பதால்தான் ஒருவன் பார்ப்பானா கவும், ஒருவன் பறையனாகவும் இருக்கின்றான். இந்துமதம் இல்லை என்றால் பார்ப்பானு மில்லை, பறையனுமில்லையே! கிறிஸ்து மதத்தில், முஸ்லிம் மதத்தில் பார்ப்பான் - பறையன் என்று எவனுமில்லையே!
இந்துமதம் என்பதாக ஒரு மதமே கிடையாது. காந்தியும் இதைச் சொல்லி விட்டார். இந்து என்றால் கருப்பு நிறமுடை யவன் என்றுதான் பொருள். இந்துமதம் இருந்தது என்பதற்கு எந்த இலக்கியத்திலும் சான்றில்லை. இந்து மதம் எப்போது தோன்றியது? அதன் தலைவன் யார்? மதநூல் (வேதம்) எது? என்றால் இவைகள் எதற்கும் தெளிவான விளக்கம் இல்லை. இவற்றிலிருந்தே இந்துமதம் இல்லை என்பதை உணரலாம்.
சிந்திக்காததனாலே எவன் அதை உப யோகப்படுத்திக் கொண்டு வாழ்கின் றானோ,  அவன்தான் நம்மையெல்லாம் சிந்திக்க ஒட்டாமல் தடுக்கின்றான். மற்ற வற்றில் பகுத்தறிவைப் பயன்படுத்துவது போன்று கடவுள் - மத - சாஸ்திர விஷயத் திலும் மனிதன் தன் சிந்தனையை - பகுத் தறிவைப் பயன்படுத்த வேண்டுமென்று நாம் சொல்கின்றோம்.
நாம் கடவுள் இல்லை என்று சொன் னால், கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று சொன்னால், இது நாமாக சொன்னது இல்லையே. கடவுள் நம்பிக்கைக்காரன் நம்மைப் பற்றிச் சொன்னதற்குப் பதில்தான் நாம் சொல்வதாகும்.
பைபிளிலேயே இருக்கிறதே! எவன் கடவுளை நம்பவில்லையோ அவன் முட்டாள், அயோக்கியன் என்கின்றான். துலுக்கனை எடுத்துக் கொண்டால் எவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லையோ அவன் காபிர், முட்டாள், அறிவில்லாதவன், அயோக்கியன் என்கின்றான்! கடவுள் நம்பிக்கையற்றவனையெல்லாம் கொலை செய்திருக்கிறார்களே!
சமணனும், புத்தனும் என்ன அயோக்கியத்தனம் செய்தனர்? எதற்காக அவர்களைக் கொலை செய்ய வேண்டும்? கழுவேற்றிக் கொல்ல  வேண் டும்? மதத்தைப் பரப்பியதே மக்களை வெட்டி வீழ்த்திக் கொன்றுதானே? துலுக் கன் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொன்றுதானே மகம்மதிய மதத்தைப் பரப்பினான்?
1920இல் மலையாளத்தில் மாப்பிள்ளா கலகம் ஏற்பட்டதே மதத்தைப் பரப்புவ தற்காக ஏற்பட்ட கலவரம்தானே! அது 1920லேயே இப்படிப்பட்ட கொடுமை நடந்திருக்கிற தென்றால் 1000, 2000 ஆண்டு களுக்கு முன் நடந்த கொடுமையைப் பற்றிச் சொல்ல வேண்டுமா?
ஏசுவை எதற்காகக் கொன்றார்கள்? ஆயிரம் கடவுள்கள் இல்லை; ஒரு கடவுள் தான் உண்டு என்று சொன்னார். அதற் காகத்தான் அவரைச் சிலுவையிலறைந்து கொன்றார்கள். இப்படிக் கடவுள் நம்பிக்கை யற்றவர்களை அழித்து ஒழித்துத்தான் மக்களை மடையர்களாக்கி வைத்திருக் கின்றார்கள்.
நாம் இப்போது இது போன்ற கழகங்கள் துவக்குவதன் நோக்கம் மனிதர்களுக் கிடையே இருக்கிற மடமை, முட்டாள் தனம், அறிவற்ற தன்மை ஒழிக்கப்பட வேண்டும். மற்ற உலகிலுள்ள மனிதர் களைப் போல் இழிவற்று அறிவு பெற்று வாழ வேண்டுமென்பதற்காகவும் மனிதன் தன்னை மனிதன் என்று சொல்லிக் கொள் வதற்குச் சிந்தனை வேண்டும். அந்தச் சிந்தனையைத் தூண்டுவதற் காகவும் ஏற்பாடு செய்யப்படுவதேயாகும் என எடுத்துரைத்தார்.
10.12.1970 அன்று கோவை மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் தொடர்ச்சி (விடுதலை, 20.1.1971).
-விடுதலை,16.3.14

காட்டுமிராண்டி ஏன்?


நம்மைப் போன்ற எல்லா குணமும், உணர்ச்சியும், நடப்பும் உள்ள மனிதனை கடவுள் என்கின்றோம்; கடவுள் அவதாரம் என்கின்றோம்; அதற்கு ஆதாரங்கள் வேறு தேடி, அதற்கு அற்புதங்கள் கற்பித்து நாம் காட்டு மிராண்டிகள் ஆவதோடு, மற்ற மக்களையும் காட்டு மிராண்டிகளாக்குகிறோம்.
இது எதற்கு? பாமர மக்களை ஏமாற்றுவதற்குத் தானே? இந்தக் குணம் காட்டுமிராண்டித் தன்மை உடையது அல்லவா? ஒவ்வொருவரும் சிந்தித்து பாருங்கள். முஸ்லீம் யாருக்குமே கடவுள் தன்மை கொடுக்க மாட்டான்; யாருக்குமே கடவுளுக்கு ஒப்பானவன் என்பதாகக் கூட கொடுக்க மாட்டான்.
நமக்குத்தான் குரங்கு, பாம்பு, காக்காய், கழுகு, ஆடு, மாடு, யானை, குதிரை எல்லாம் கடவுள்களாகி விடுகின்றன. தினமும், பூசை, ஆராதனைகள் கூட செய்யப் படுகின்றன. இவை போதாதா நாம் காட்டுமிராண்டிகள் என்பதற்கு?
- தந்தை பெரியார்

அந்த இருவர் சந்தித்த போது...

மதம் எப்படி உண்டாயிற்றென்றால், உலகத்தில் முதல் அயோக்கியன் ஒருவன், முதல் முட்டாள் ஒருவனைச் சந்தித்த போது அந்த முட்டாளின் மூலம் அந்த அயோக்கியன் லாபம் பெற்றுப் பிழைக்க இந்த மதப் புரட்டை உண்டாக்கினான். - வால்டையர்

பக்தி ஏன் வராது?

இடங்கொண்டு விம்மி யிணைக் கொண் டிறுகி
யிளகி முத்து வடங் கொண்டகொங்கை மலைகொண் டிறைவர் வலிய நெஞ்சை நலங்கொண்ட கொள்கை
நலங்கொண்ட நாயகி நல்லரவின் படங்கொண்ட வல்குல் பனிமொழி வேதப் புரியிறையே!

- அபிராமிபட்டன் எழுதிய அபிராமி அந்தாதி, பாடல் எண் 42.,

பொருள்: அகன்று, பருத்து, விம்மி, இணைந்து இறுகி வேண்டுங்கால் இளகி, முத்து வடமணிந்து இருக்கின்ற கொங்கையாகிய மலைகளைக் கொண்ட கல்லினும் வலிய கணவர் நெஞ்சை ஆடும்படிச் செய்த வெற்றி மாது யாரெனில், பாம்பின் படம் போன்ற அல்குலினை (பெண்குறி)யும் குளிர்ந்த மொழியினையும் உடைய வேதச் சிலம்பைத் தரித்த அபிராமியே!
-விடுதலை,14.3.14

தோழர்களே! சாகத் துணிவு கொள்ளுங்கள்


- தந்தை பெரியார்
இந்தத் திராவிட வாலிபர் சங்க ஆண்டு விழாவுக்குத் தலைமை வகித்து தலைமை முன்னுரை நிகழ்த்துவது என்கின்ற சம்பிரதாய நிகழ்ச்சிப்படி நான் ஏதாவது பேசவேண்டும். அப்படிப் பேசுவதில் திராவிடர் என்பதுபற்றியும், நீங்கள் பெரிதும் இளைஞர்கள் ஆனதால் நானும் முதியோனாய் இருப்பதால் உங்களுக்குச் சிறிது அறிவுரை வழங்குவது என்கின்ற தன்மையிலும் சில வாக்கியங்கள் சொல்வது பொருந்துமெனக் கருதுகிறேன்.
நாம் திராவிடர்
நாம் நம்மைத் திராவிடர் என்று ஏன் சொல்லுகிறோம்?
இந்த நாடு திராவிட நாடு, நாம் இந்நாட்டு மக்கள், இந்நாட்டுப் பழங்குடி மக்கள், இந்நாட்டில் மேன்மையாய் நாகரிகத்தில் சிறந்து மானிகளாய் வீரர்களாய் வாழ்ந்த வர்கள், வீரத் திராவிடர்கள் என்ற பெய ரைச் சரித்திர காலத்திற்கு முன்னிருந்து உடைத்ததாய் இருந்தவர்கள், ஆதலால் திராவிடர்கள் என்கிறோம், இதை நானாக அல்லது நானே சொல்லவில்லை. இது இன்று மாத்திரம் சொல்லப்படவில்லை.
இந்த நாட்டுச் சரித்திரம் , ஏன்? உலகச் சரித்திரம் தெரிந்த காலம் முதலாய் ஆராய்ச்சி நிபுணர்களான பல அறி வாளிகளால் கண்டுபிடிக்கப்பட்ட உண்மை யும் இன்றும் பள்ளிப் பிள்ளைகளுக்கு வழங்கும் சரித்திர நூல்கள் முதல் புராணங்களில் குறிப்பிட்டு இருக்கும் கற்பனை, பழிச்சொற்கள் என்பவைகள் வரையில் காணப்படும் சேதிகளுமாகும்.
பழமைகள், பழமை சம்பவங்கள், காட்சி சாலைகளுக்கும், நேரப் போக்குப் பரிகாசத் துக்கும் சென்று கொண்டிருக்கும் இந்தப் புத்துலகில் பழங்காலச் சரித்திரத்தையும் பரிகசிக்கும் புராணத்தைப் பற்றியும் கூட ஏன் சொல்லுகிறேன் என்று கேட்பீர்கள். அந்தமாதிரி அதாவது, நம்மைப் பற்றி நம் முன்னைய நிலையைப் பற்றி மேலே நான் சொன்னமாதிரியாய் இருந்து நாம் இன்று எந்தமாதிரியில் இருக்கிறோம்?
பழமை நிலைமையும் இயற்கையும் முற்போக்கில் மாற்றப்பட்டு இருக்கிறதா பிற்போக்கில் பின்னும் மோசமான நிலைமையில் கொண்டுபோய்த் தள்ளி இருக்கிறதா என்பதைச் சிந்திக்கவும், நாம் அதைவிடச் சிறிதாவது மேன்மையும், மனிதத்தன்மையும் அடைந்திருக்கிறோமா அல்லது கீழ்மையும், இழிநிலையும், மானமற்ற தன்மையும் அடைந்திருக்கிறோமா என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்து மேலால் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்ப தற்கும் ஆகவேயாகும்.
நாம் சூத்திரர்களா?
நாம் பிறவியிலோ தன்மையிலோ தகுதியிலோ சூத்திரர்களாக இருந்தவர்கள் அல்ல; உண்மையில் அல்ல. பின்நாம் யார்? என்றால் வீரத்திராவிடர்கள் ஆவோம். எப்பொழுது முதல் என்றால் முன் நான் சொன்னபடி உலக சரித்திரம் மனிதநூல் ஆகியவை எட்டியகாலம் முதல் என்பேன். இவை வெறும் வார்த்தையால் மாத்திரம் அல்ல. நாடு, இனம், பண்பு, நடைமுறை ஆகியவைகளால் இயற்கையைத் தழுவி திராவிடர்களானவர்கள்.
நமது இந்த முடிவு இதுவரை யாராலும் மறுக்கப்படவில்லை, நம் எதிரிகளாலும் மறுக்கப்படவில்லை. இந்த உணர்ச்சி நமக்குக் கூடாது என்று சொல்லும் சுயநல சமயசஞ்சீவிகளாலும் கூட மறுக்கப்படவில்லை ஆனால் நாம் தான் நாம் திராவிடர் என்று சொல்லிக் கொள்ள, நம்நாடு திராவிடம் என்று சொல்லிக்கொள்ள, நாம் சூத்திரர்கள் அல்ல என்று சொல்லிக்கொள்ள வெட்கப் படுகிறோம்.
எப்படி மானமும் சுதந்திர உணர்ச்சியும் அற்ற ஒரு பெண் மற்றொரு ஆண் மகனைக் கண்ணால் பார்ப்பதால் கற்புப் போய்விடுமென்று கருதிப் பயப்படு கிறாளோ, பார்க்க வெட்கப்படுகிறாளோ அதுபோல் நாம் திராவிடர் என்று சொல் லிக்கொண்டால் நமது மதம் போய்விடும், தேசியம் போய்விடும், செல்வாக்குப் போய்விடும் என்று பயப்படுகிறோம், வெட்கப்படுகிறோம்.
எந்தக் காரணத் தாலேயோ நாம் சூத்திரர்கள் என்பதாக ஆக்கப்பட்டிருந்தாலும் இன்றும் சூத்திரர் களாக அதுவும் நாம் மாத்திரமல்லாமல் நம் இன்றைய ராஜாக்களும், மகாராஜாக்களும், பண்டார சன்னதிகளும், ஜமீன்தாரர்களும், ஆயிரக்கணக்கான வேலி நிலமுள்ள மிராசுதாரர்களும், பல கோடி ரூபாய் செல்வமுள்ள ராஜா, சர் முதலியவர்களும் சூத்திரர்களாக இருக்கவும் நடத்தப்படவும் இதுதான் (நாம் திராவிடர் என்று உணராத தும், உணர்ந்தாலும் சொல்லிக்கொள்ளப் பயப்படுவதும்) காரணமாகும்.
ஆனால் இந்த இழிவு அவர்களுக்கு (அப்படிப்பட்ட பெரியவர்களுக்கு) மிக சகஜமாகிவிட்டது. எப்படியோ அவர்களை அவர்களது ஆசா பாசம் அவர்களுக்குச் சகிப்புத்தன்மையை உண்டாக்கிவிட்டது. நமக்குப் பட்டம் இல்லை, பதவி இல்லை, செல்வம் இல்லை இவை பற்றிய மானமற்ற பேராசை இல்லை. எனவே நாம் ஏன் திராவிடன் என்பதை மறந்து மறைத்துக்கொண்டு நம்மைச் சூத்திரன் என்பதாகக் காரியத்தில் ஆதாரத் தில் ஒப்புக்கொள்ள வேண்டும்?
சூத்திரன் என்றால் என்ன?
சூத்திரன் என்பது தாசிமகன், ஆரியர் களின் அடிமை; ஆரியநலத்துக்கு ஆக, ஆரியர்களின் மேன்மை வாழ்வுக்காக இருப்பவன், இருக்க வேண்டியவன், இருந் தும் வருகிறவன் என்பதாகும். இதுதான் அந்த வார்த்தையின் அருத்தம். சாஸ்திரம் கடவுள் என்பவற்றின் வாக்குமாகும். ஆனால் உண்மையில் நாம் அப்படிப்பட்ட வர்கள் அல்லாதவர்களாக இருக்கும்போது அந்தப் பெயரை ஏன் நமக்கு இருக்க விடவேண்டும்? என்று கேட்கிறேன்.
தோழர்களே, இக்காலத்தில் உண்மை யான ஒரு தாசிமகனையே பாருங்கள். தனது தாய் தாசி என்றும், தனது வீடு வாசல் செல்வம் தாசித்தனத்தால் வந்ததென்றும் தெரிந்தவன்கூட அவனது சுயமரியாதைக் கொதிப்பால் தாசியே உலகில் இருக்கக் கூடாது சட்டத்தில் இருக்கக் கூடாது, தன் தாய் வீட்டிற்குள்ளும் வேறொரு பயல் அவன் ஜமீன்தாரரானாலும், அவன் குருவானாலும், ஆச்சாரியானாலும், கோடீஸ்வரன் ஆனாலும் வரக்கூடாது என்று தன் தாயைச் சகோதரியைக் கண்டிக்கிறான். வருகிறவனையும், ஏன்? வந்து கொண்டிருக்கிறவனையும் விரட்டி அடிக்கிறான், அநேகமாய் அடித்துத் துரத்தியே விட்டான்.
இத்தனைக்கும் அவர்களுக்குத் தேவ அடியார்கள், தேவதாசிகள் என்று பெயர் இருந்தும்கூட. ஆனால் நம் சுயமரியாதை என்ன என்று பாருங்கள், நாம் வேசி மக்கள், அடிமை (சூத்திரர்) என்று அழைக்கப்படுகிறோம். அப்படி நம்மை அழைப்பவர்களைச் சாமி என்கிறோம். அப்படிப்பட்டவர்களை நம்மிலும் மேலானவர்களாகக் கருதி வைதிகக் கருமங்களை (முட்டாள்தனமான, இழிவுதரும்படியான காரியங்களை) அவர் களைக்கொண்டு செய்வித்துக் கொள் கிறோம்.
அதையே வலியுறுத்தும் மார்க்கத்தை, சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்று நம்மை சொல்லிக்கொள்ளுகிறோம் வாயால் சொல்லிக்கொள்ளுவது மாத்திரமல்லாமல் மற்றவர்களுக்கும் தெரியும்படியான குறி களையும் (ஏதாவது ஒரு அடையாளத்தை யும்) அணிந்துகொள்ளுகிறோம். இந்த பேதத்தையும், இழிவையும் மானமற்ற உணர்ச்சியையும் நிலைநிறுத்துவதும், பெருக்கிக் கொள்வதுமான காரியங்களை நமது ஆத்மீக, லவுகீக காரியமாய்க் கருதிச் செய்து வருகிறோம். இது நியாயமா? நமக்கு இது தகுதியா? அதுவும் இந்த 20ஆம் நூற்றாண்டில் தகுமா? இதைப் பொறுத்துக் கொண்டு உயிர் வாழலாமா? என்று யோசித்துப் பாருங்கள்.
உன் சொந்த இழிவை ஈனத்தை நீக்கிக் கொள்ளாத நீ, நாட்டுக்குச் சுதந்திரம், மனித சமுதாயத்திற்கு விடுதலை ஏழைகளுக்குச் செல்வம், உண்டாக்கப் பாடுபடுகிறேன் என்றால் உன்னைவிட மடையனோ அல்லாவிட்டால் அயோக்கியனோ அல்லா விட்டால் பித்தலாட்டக்காரனோ வேறு யார் இருக்கமுடியும்? திராவிடனுடைய சரித் திரத்தில் இந்த இழி தன்மை என்றும் இருந்ததாகக் காணப்படவில்லையே!
எது தேசியம்? எது விடுதலை?
ஆயிரக்கணக்கான எச்சிலிலை கழியும் ஓட்டலுக்குள் சென்று சமமாய் இருக்க அனுமதியில்லை. நீ பத்து லட்சக்கணக்காக செலவழித்துக் கட்டி வருஷம் லட்சக்கணக் கான செலவு செய்து பூஜை உற்சவம் செய்துவரும் கோவிலுக்குள் சென்று பிச்சை எடுத்துப் பிழைக்கும் உச்சிக்குடுமி மக்களுடன் சரிசமமாய் நின்று பிரார்த்திக்க உரிமை இல்லை என்பதாக இருந்துவரும், நடத்தப்பட்டு வரும் மக்களுக்குத் தேசியமா? சுயராஜ்ஜியமா?
உண்மைத் திராவிடன் இப்படிப்பட்ட எச்சிலிலை மண்டபங்களையும், கோவில் களையும் நிர்துளியாக்குவதையல்லவா தேசியம் சுயராஜ்ஜியம் என்று எண்ண வேண்டும்?
இன்றைய தினம் இந்த நிலையைப் பொறுத்துக்கொண்டு, இதை மாற்ற வேலை செய்பவர்களையும் எதிர்த்துத் தொல்லை விளைவித்துக்கொண்டு தேசியம், சுய ராஜ்ஜியம், விடுதலை, சுதந்திரம் பேசும் திராவிடன் எவனானாலும், தம்மைச் சிறிதாவது திராவிட ரத்தம் ஊசலாடும் திராவிடன் என்று கருதுகிற எவனானாலும் அவன் எல்லாம் நம் எதிரிகளின், அதாவது வெள்ளை ஆரியர், தவிட்டு நிற ஆரியர் ஆகிய இரு கூட்டத்தினரின் லைசென்சு பெற்ற அடிமைகள் அல்லது நம்மைக் காட் டிக்கொடுக்கும் ஒற்றர்கள் என்று தூக்கு மேடையில் இருந்துகொண்டு கூறுவேன்.
எது பொதுவுடைமை இன்றைய பொது உடைமைக்காரர்கள் என்பவர்களின் யோக் கியதைதான் என்ன? வெங்கடாசலபதிக்கு (ஒரு கருங்கல் பொம்மைக்கு) பத்து லட்ச (10,00,000) ரூபாயில் கிரீடமா? மற்றும் பல குழவிக்கல், தாமிர பொம்மை ஆகியவை களின் பேரால் நடக்கும் அட்டூழியங்களைப் பாருங்கள். ஊர்தோறும் கோவில், மணி தோறும் பூஜை, மாதந்தோறும் உற்சவம், வருஷந்தோறும் சாமி திருமணமா? இவைகளுக்குப் பண்டு எவ்வளவு? பண்டம் எவ்வளவு? பூசாரி பண்டார சன்னதி எவ்வளவு?
எனவே நம் நாட்டு, இனத்தின் அறிவு, செல்வம், முயற்சி எதில் மண்டிக் கிடக்கின்றன? நம்மவர்களே ஆன கிருபானந்தவாரிகள், திருநாவுக்கரசுகள் ஆகியவர்கள் காலட்சேபமும், இசை அரசுகள் சங்கீதங்களும், நாடக மணிகள் நாடகங்களும், சினிமாக்களும், பண்டித மணிகள் வித்துவத் தன்மைகளும் இன்று எதற்காகப் பயன்படுகின்றன? இவைகள் பொதுவுடைமையின் எதிரிகள் அல்லவா?
இவர்கள் எல்லோரும் தனி உடைமைக் காரர்களின் நிபந்தனை இல்லாத அடி மைகள் அல்லவா? இவைகளை அச்சுக் குலையாமல் அசைய விடாமல் காப்பாற்ற இடம் கொடுத்துக்கொண்டு பணக்காரனைப் பார்த்து ஆத்திரப்பட்டால், குரைத்தால், பாமரத் தொழிலாளிகளை ஏமாற்றினால் பொது உடைமை ஆகிவிடுமா?
காங்கிரஸ்
காங்கிரஸ், தேசிய விடுதலைக்காரன் யோக்கியதைதான் என்ன இதைவிட மேலானதாகிவிட்டது. எந்தத் தேசியவாதி இந்தப்பக்கம் திரும்பினான், எந்தப் பொதுஉடைமை மாநாட்டில் எந்தத் தேசிய மாநாட்டில் இந்தத் தன்மைகளைப் பொசுக் கிப் பொங்கல் வைக்கவேண்டுமென்று பேசப்பட்டது? தீர்மானங்கள் செய்யப்பட் டது? நினைக்கப்பட்டது?
இந்த மகா உத்த மர்கள் எங்களைக் குறை சொல்லுவ தெதற்கு? அரசாங்கத்தைத்தான் குறை சொல்லுவதெதற்கு? அரசாங்கம் இப்படியெல்லாம் செய்யச் சொல்லுகிறதா? அல்லது இவைகளைப் பற்றிப் பேசுவது ராஜத்துரோகமா? காப்பிக் கடைக்குள், கோவிலுக்குள் முன் மண்டபத்தில் பறை யனை, சூத்திரனை விடக்கூடாது என்று எந்த அந்நிய ஆட்சி சட்டம் செலுத்தியது?
கோவிலுக்குக் கூத்தியை வைக்கச் சொல்லி, கடவுளைத் தாசிவீட்டுக்கு அழைத்துப் போகச் சொல்லி, கல்லுக்குத் தங்கத்தில் கவசம் போட்டு வைரத்தில் கிரீடம் வைக்கச் சொல்லி எந்த அடக்குமுறை சுரண்டல் அந்நிய ஆட்சி சொல்லிற்று?
எங்கள் கோபம்
இன்று எது ஒழிய வேண்டும்,யார் வெளியேற வேண்டும், எது மாற வேண்டும்? இவை அறியாத மக்களும், சுயநலவாதிகளும், சமயசஞ்சீவிகளும், வயிற்றுப்பிழைப்பு, பொதுஉடைமை, தேசபக்தர் குழாங்களும் எங்களை ஏன் கடிய வேண்டும். எங்களுக்கு எந்தப் பார்ப்பான் மீது கோபம்? எந்தக் கடவுள் மீது கோபம்? எந்தத் தலைவன் மீது கோபம்? எந்த ஜாதி மீது கோபம்? எந்த வெள்ளையனிடம் அன்பு? தோழர்களே! பித்தலாட்டத்தின் மீது கோபம், முட்டாள் தனத்தின் மீது கோபம், ஏமாற்றுகிறதன்மை மீது கோபம், எங்களை இழிவுபடுத்தியும், முன்னேற வொட்டாமலும் செய்து வைத்து இருக்கும் சகலத்தின் மீதும் கோபம், இவைகளுக்கு ஆதரவளிப்பதால் வெள் ளையன் மீதும் கோபம்.
ஆகவே, எங்களை காங்கிரஸ்காரர் களும், பொதுஉடைமைக்காரர்களும் மற்றவர்களும் ஏன் கோபிக்க வேண்டும். ஏன் தொல்லை கொடுக்க வேண்டும்?
எங்களைத் தொல்லை கொடுப்பவர்கள் சுரண்டல்கார எங்கள் எதிரிகள் அல்லது அவர்களது நிபந்தனை அற்ற அடிமைகள் என்பவர்கள் அல்லாமல் வேறு யாராய் இருக்க முடியும்?
இளைஞர்களே! நடப்பது நடக்கட்டும் என்று நீங்கள் எதற்கும் துணிவு பெற்றுத் தொண்டாற்றவேண்டிய காலம் இது.
நீங்கள் அடிபட வேண்டும். காயப்பட வேண்டும். கும்பல் கும்பலாகச் சிறைப்பட நேரிட்டாலும் மனம் கலங்காமல் நிற்கும் துணிவு பெற வேண்டும். இதற்குத்தான் திராவிட இளைஞர் கழகம் இருக்க வேண்டும்.
நாடானது விடுதலை, சமதர்மம், முன்னேற்றம், சீர்திருத்தம், கலை, கல்வி, தேசியம் என்னும் பேர்களால் மிக்க அடிமைத்தனத்திற்கும், காட்டுமிராண்டி தனத்துக்கும் போய்க்கொண்டு இருக்கிறது. வேசிக்கும் விபசாரிக்கும் தேவர் அடியாள் என்று பெயர் இருப்பதுபோல் நாட்டின் மனித சமுதாயத்தின் இழிவுக்கும், கீழ் மைக்கும், ஏழ்மைக்கும், அடிமைக்கும் அயோக்கியர்கள் ஆதிக்கத்திற்கும் மேற் கண்ட விடுதலை முதலிய பெயர்கள், ஸ்தாபனங்கள் இருந்து வருகின்றன.
தோழர்களே! துணிவு கொள் ளுங்கள், சாகத் துணிவு கொள்ளுங்கள். உங்கள் சொந்த வாழ்வு நலத்தையும், மானத்தையும் விட்டுத் தொண்டாற்றத் துணிவு கொள்ளுங்கள். இதுதான் இன்றைய திராவிட வாலிபர் கழக ஆண்டு விழாவில், இனி வெகுகாலம் வாழப்போகும் மக்களாகிய உங்களுக் குச் சாகப்போகும் கிழவனாகிய நான் வைத்துவிட்டு போகும் செல்வமாகும்.
உன் சொந்த மானத்தை விட்டாகிலும், உன் இன ஈனத்தை ஒழிப்பதற்குத் தொண்டு ஆற்று.
உன் இனத்தின் இழிவை, ஈனத்தைப் போக்க உன் சொந்த மானத்தையும் பலிகொடு.
இனத்தின் மானத்தைக் காக்க எவ்வகைத் துன்பத்தையும் பொறுத்துக் கொண்டு தொண்டாற்றத்தக்க குடி மகன் இல்லாத இனம் வேர்ப்பற் றில்லாத மரம்போல்,  கோடரிகொண்டு வெட்ட வேண்டிய அவசியம் இல்லாத மரம்போல்  தானாகவே விழுந்துவிடும் தன் இனத்திற்கு உண்மையான தொண் டாற்றுபவனுக்கு அடையாளம் என்ன வென்றால் அத் தொண்டால் ஏற்படும் இன்னலுக்கும், துன்பத்திற்குமே அவனது வாழ்வையும், உடலையும் ஒப்புவித்து விட்டவனாக இருக்க வேண்டும்.
இது நான் சொல்வதல்ல, குறள் வாக்கிய மாகும்.
(23.08.1945 அன்று திருச்சி டவுன் ஹாலில், திராவிட வாலிபர்கள் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தலைமை ஏற்று பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற் பொழிவு)
குடிஅரசு - சொற்பொழிவு - 01.09.1945

விடுதலை,1.6.14

திங்கள், 27 ஜூன், 2016

சீர்திருத்தப் பிரசங்கம்



- தந்தை பெரியார்
தோழர்களே!
சுயமரியாதைக் கல்யாணம் என்பது சில புதிய முறைகளைக் கொண்ட ஒருவித சீர்திருத்த திருமணமேயாகும்.
சனாதன திருமணத்துக்கும், சீர்திருத்தத் திருமணத்துக்கும் என்ன பிரமாத வித்தியாசங் கள் இருக்கின்றன என்பதைச் சற்று யோசித் துப் பாருங்கள்.
சனாதனத் திருமணம் - வைதிகத் திருமணம் - சாஸ்திரியத் திருமணம் என்ப வைகள் எல்லாம், இப்போது எவருடைய முயற்சியும் விருப்பமும் இல்லாமலே நாளுக்கு நாள் தானாகவே மாறிக் கொண்டு வருகின்றன. ஒரு நாள் கல்யாணம் இப்பொ ழுது பெருத்த நாகரிகமாய்ப் போய்விட்டது.
கலப்பு மணம் என்பது பெரியதொரு சீர்திருத்தமாய் பாவிக்கப்பட்டு விட்டது. சட்டம், சமூகம், சாஸ்திரம், மதம் எல்லாம் வரவர நாகரிகத் திருமணத்தையும், சீர்திருத் தத் திருமணத்தையும் அனுமதித்து விட்டது. ஆதலால் அதைப் பற்றி இப்போது ஏதும் பேச வேண்டிய அவசியமிருப்பதாய்த் தெரியவில்லை.
நாயுடு மாப்பிள்ளையும், வேளாளப் பெண்ணுமாய் போய்ச் சேர்ந்து விவாகம் செய்து கொள்வது என்பது சர்வ சாதாரண விஷயம் என்பதில் சேர்ந்ததாகும். இதனால் மனுதர்ம சாஸ்திரம் பழக்கம் ஒன்றும் கெட்டுப் போகவில்லை.
ஆனால், பார்ப்பனப் பெண்ணும், வேளாள மாப்பிளையும், பார்ப்பனப் பெண்ணும் நாயுடு மாப்பிள்ளையும், பார்ப்பனப் பெண்ணும் துலுக்க மாப்பிள்ளையும், பார்ப்பனப் பெண்ணும், குஜராத்தி சேட் மாப்பிள்ளையும், பார்ப்பனப் பெண்ணும், வெள்ளைக்கார மாப்பிள்ளையும் இப்படி மதக் கலப்பின கீழ் மேல் ஜாதி கலப்புமான - மனுதர்ம சாஸ்திரத்துக்கு விரோதமான திருமணங்கள் பெரிய இடங்களில் எல்லாம் எவ்வளவோ நடந்தாகி விட்டது.
இந்தத் தம்பதிகளுக்கு பிறந்த குழந்தைகள் எந்தச் சாதியை சேர்ந்தவர்கள் என்று மனுதர்ம சாஸ்திரத்தையோ, வருணசங்கிரகத்தையோ பார்ப்போமானால் அவர்கள் சண்டாள ஜாதியைவிட கீழான ஜாதிகளாய் மதிக்கப் படுவதைக் காணலாம்.
அப்படிப்பட்ட தாழ்வான நிபந்தனை களையெல்லாம் லட்சியம் செய்யாமல் கற்றவர்கள் செல்வவான்கள். மேல்ஜாதிக் காரர்கள், சாஸ்திரிகள், ஆச்சாரியார்கள் என்கின்றவர்களே துணிந்து நடக்கிறார்கள் என்றால் சமஜாதி கல்யாணமாகிய வேளாளன்-நாயுடு, ரெட்டி-நாயுடு கலப்பு மணம் என்பதைப் பற்றி யாரும் கவலைப் பட வேண்டியதில்லை.
கல்யாணம் என்றால் என்ன?
திருமண விஷயங்களில் ஜாதி, மதம், சடங்கு, சாஸ்திரம் ஆகியவைகளைப் பார்க் கும் விஷயங்களைப் பற்றி பேசும் முன்பு, கல்யாணம் என்றால் என்ன என் பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
பாமர ஜனங்கள் கல்யாணம் என்பதை வீட்டு வேலைக்கு ஒரு ஆள் (வேலைக் காரியை) வைப்பது போலவே கருது கிறார்கள். புருஷனும் அப்படியே கருது கிறான். புருஷன் வீட்டாரும் அதுபோலவே தங்கள் வீட்டு வேலைக்கு ஒரு பெண் கொண்டு வருவதாகவே கருதுகிறார்கள். இது மாத்திரமா! பெண் வீட்டாரும் தங்கள் பெண்ணை வீட்டு வேலைக்கே தயார் செய்து விற்றுக் கொடுக் கிறார்கள். பெண்ணும் தான் ஒரு வீட்டுக்கு வேலை செய்யப் போவதாக கருதுகிறாள்.
பெண்ணின் கடமையும், சமையல் செய்வது, பாத்திரம் விளக்குவது, வீடு வாசல் கூட்டி மெழுகி சுத்தம் செய்வது, இதுகளோடு பிள்ளையையும் பெற்றுக் கொண்டு அதையும் வளர்ப்பது ஆகியவைகளையே முக்கியமாகக் கொண்டதாக இருக்கிறது.
மதமும், சாஸ்திரங்களும் கல்யா ணத்தைப் பற்றி என்ன சொல்லுகின்றன என்று பார்த்தால் பெண் சுதந்திரமற்றவள், அவள் காவலில் வைக்கப்பட வேண்டிய வள் என்பது ஒருபுறமிருக்க, கல்யாணம் செய்வதானது மனிதன், புத் என்னும் நரகத்துக்கு போகாமல் இருப்பதற்கு ஆக ஒரு பெண்ணை பெறுவ தற்கு ஆகவும், பெற்றோர்களுக்கு இறுதிக் கடன் திதி முதலியவைகள் செய்ய ஒரு பிள் ளையைப் பெறவும் கல்யாணம் செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறு கின்றன.
ஆகவே, கல்யாணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் கூடி இயற்கை இன் பத்தை நுகரவும், ஒருவரை ஒருவர் காதலித்து ஒருவருக்கொருவர் வாழ்க்கைப் போட்டியில் ஏற்படும் சிரமத்துக்கு இளைப் பாறவும், ஆயாசம் தீர்த்துக் கொள்ளவுமே ஆணுக்கு ஒரு பெண்ணும், பெண்ணுக்கு ஒரு ஆணும் வேண்டியிருக்கிறது என்பதை பெரும்பாலோர் சிந்திப்பதே இல்லை.
இக்கல்யாணம் பொருத்தம் பார்க்க வேண்டிய பொறுப்பு மணமக்களுக்கே உண்டு என்பதையும் கருதுவதே இல்லை. கல்யாணம் மணமக்கள் எத்தனத்தினா லேயே ஆக வேண்டியது என்பதையும் ஒப்புக் கொள்ளுவதே இல்லை.
கல்யாணம் என்றால் அது தெய்விக மானது. தெய்வ எத்தன மானது, தெய்வமே பொருத்தி வைக்க வேண்டியது என்று கருது வதும், கல்யாணத்தில் எப்படிப்பட்ட பொருத் தம் பொருந்தாப் பொருத்தமானாலும், அதனால் எப்படிப்பட்ட துன்பமும், தொல்லை யும் அனுபவமானதும் கண் கூடான பிரத்தி யட்ச அனுபவமாய் இருந்தாலும் அதைத் தெய்வ எத்தனம், தெய்வ சித்தம் என்கின்ற பெயரால் அனுபவிப்பதும் அந்தப்படி நினைத்து திருப்தியடைவது மாய் இருக் கின்றது.
இவற்றையெல்லாம் மாற்ற வேண்டும் என்பதும், இப்படிப்பட்ட துன்பங்களுக்கும், தொல்லை களுக்கும் மணமக்கள் கல் யாணத்தினால் ஆளாகாமல் இருக்க வேண்டுமென்பதற்காகவே, கல்யாணத்தில் சீர்திருத்தம் அல்லது முறையில் மாறுதல் என்பது அவசியம் வேண்டும் என்கிறோம்.
கல்யாணம் என்றால் சுதந்திர வாழ்க்கை, சமத்துவ வாழ்க்கை என்று இருக்க வேண் டுமே ஒழிய, அடிமை வாழ்க்கை, மேல் கீழ் வாழ்க்கை என்று இருக்கக் கூடாதென்பதே எங்களது ஆசை.
நாம் ஆயிரம் சமாதானம் சொன்னாலும் பெண்ணை அடிமையாகவே, ஒருவனுடைய சொத் தாகவே கருதுகிறோம் என்பதோடு, பெண் ஜாதியை நமது போகப் பொருளாகவே கருதுகிறோம். அதற்கு ஒரு தனி உயிரும், மனமும் இருப்பதாகக் கருது வதில்லை. இது இன்று உலக சித்தாந்தமா யிருக்கிறது.
குறிப்பிட்ட ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு பெண் ஜாதியாய் இல்லாத கல்யாண மில்லாத பொண் ணுக்கு மாத்திரம் சுதந்திரம் என்பது சிறிதாவது உண்டு என்று சொல்ல லாமே தவிர, மற்றபடி கல்யாணமான பெண்கள் என்றால் அடிமைகளாகவே மதிக்கப் படுகிறார்கள்.
உதாரணமாக நமது சக்கரவர்த்தி திருமக னாரான இளவரசர் நேற்றைய தினம் தன்னை ஒருவர் ஏன் கல்யாணம் செய்து கொள்ள வில்லை என்று கேட்டதற்கு அவர், ஒரு பெண்ணை அடிமையாக்க எனக்கு இஷ்ட மில்லாததால் நான் கல்யாணத்தை விரும்ப வில்லை என்று சொல்லியிருக்கிறார். இதில் எவ்வளவு பெரிய உண்மை இருக்கிற தென்பதை சிந்தித்துப் பாருங்கள்.
பெண் அடிமை என்பது மனித சமுக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே வளர்ச்சி பெற வேண்டிய மனித சமுகம் பகுத்தறிவு இருந்தும் தேய்தல் அடைந்து கொண்டே வருகின்றது.
தாயின் குணம், தாயின் தன்மை பெரிதும் பிள்ளைக்கு பிறவியிலேயே வருகின்றது என்பதை யார் மறுக்க முடியும். மக்களின் குணம் 100க்கு 90 பாகம் சரீர அமைப்பை பொறுத்ததேயாகும். சரீர அமைப்புக்கு தாய் தகப்பன் சரீர அமைப்பை பெரும் பாகம் காரணமாகும். ஆகையால் இந்த அடிமைப் பெண், சுதந்திர உணர்ச்சியுள்ள பிள் ளையைப் பெறும் என்று எப்படி எதிர் பார்க்க முடியும்?
கல்வி, அறிவு, செல்வம் ஆகியவைகள் இல்லாத தாயானவள் நல்ல தாராள புத்தியும், சமத்துவ ஞானமும், திருப்தி ஆன மனமும் உள்ள பிள்ளைகளை எப்படி பெற முடியும்? என்பதை உணர்ந்தோமேயானால் மனித சமுகம் சுதந்திரமாக கவலையற்று திருப்தியாய் ஏன் வாழவில்லை என்ப தற்குத் தானாகவே காரணம் விளங்கும்.
ஒழுக்கம்
மற்றும் வாழ்க்கையில், ஒழுக்கத்தில் புருஷனுக்கு வேறு சட்டம், பெண்ணுக்கு வேறு சட்டம் வைத்திருக்கிறோம்.
ஆனால், ஒழுக்கத்தைப் பற்றி சதா பேசுகிறோம் - ஒழுக்கம் என்பதை எழுத்தில், சப்தத்தில் பார்க்கின்றோமே ஒழிய காரியத்தில் பார்ப்பதே இல்லை. விபசாரித்தனம் என்பதை எவ்வளவு கண்டிக்கிறோம் - அதற்கு எவ் வளவோ நிபந்தனைகள் நிர்ப்பந்தங்கள் சட்ட மூலமாய் - சமுக மூலமாய் - சாஸ்திர மூலமாய் - இயற்கை மூலமாய் எல்லாம் வைத்திருக் கிறோம். அப்படி எல்லாம் இருந்தும் அதை இருவருக்கும் சமமாய் வைக்கவில்லை.
ஆண் விபசாரத்தைப் பற்றி பேசுவோரே கிடையாது. அப்படி இருந்தாலும் அதற்குப் பெயர் பலக் குறைவு (றுநயமநேளள) என்று சொல்லி விடுகிறோம். பெண் விபசாரத்தை நாணயக் குறைவு, ஒழுக்கக் குறைவு, கெட்ட குணம், இகழத் தக்கது, கண்டிக்கத்தக்கது, வெறுக்கத் தக்கது என்றெல்லாம் சொல்லுகிறோம். ஆணும் பெண்ணும் சேர்ந்தால்தான் விபசார மாகுமே தவிர, ஒரு பெண்ணும் மற்றொரு பெண்ணும் சேர்ந்து விபசாரம் செய்துவிட முடியாது. அதை யாரும் விபசாரமென்று சொல்ல மாட்டார்கள்.
ஒருவருக்கொரு நீதி என்கின்ற முறை யாலே தான் உலகில் பெரிதும் விபசாரம் இருந்து வருகிறதே தவிர, பெண்களின் கெட்ட குணங்களால் இருந்து வருவதாகச் சொல்லிவிட முடியாது.
அன்றியும் இவ்வளவு தூரம் மதத்தாலும், சட்டத்தாலும், சமூகத்தாலும், நிபந்தனை யாலும் வெறுக்கப்பட்ட விபசாரம் என்பது ஏன் இன்று உலகில் சர்வசாதாரணமாய் இருந்து வருகின்றது? இதற்கு என்ன காரணம் என்பதை யாராவது யோசிக் கிறார்களா?
ஒவ்வொருவரும் விபசார தோஷத்துக்கு ஆளாகிவிட்டே மற்றவர்களை குறை கூறுகிறார்கள் என்பது அவரவர்கள் நெஞ்சில் கையை வைத்து குழந்தை பருவம் முதல் தாங்கள் நினைத்தது, செய்தது ஆகிய காரியங்களை ஞாபகப்படுத்திப் பார்த்தால் விளங்கும்.
நம்முடைய கடவுள்கள் என்று சொல்லப்படும் பிரம்மா, விஷ்ணு, சிவன் முதலியவைகள்கூட விபசார தோஷத்தில் இருந்து விலக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வில்லை. அவர்களுடைய பெண்ஜாதிமார் களைக்கூட விபசார தோஷத்தில் இருந்து விலக்க வில்லை.
ஏன் இப்படி இருக்க வேண் டும்? விபசாரம் மக்களுக்கு இயற்கையா என்று பாருங்கள். ஒரு நாளும் அல்லவே அல்ல. செயற்கை குணங்களாலேயே விபசாரம் நடக்கின்றன அதாவது கல்யாணங்களே பெரி தும் விபசாரத்துக்கு சமானமானவையாகும்.
விபசாரம் என்றால் என்ன?
தனக்கு இஷ்டமில்லாமல், காதல் இல்லா மல், பணம், காசு, சொத்து, வேறுவித நிர்ப் பந்தம் ஆகியவைகளுக்கு ஆக இணங்கு வதே விபசாரம் ஆகும். நமது மணமக்கள் பெரும்பாலோர் தாய் தகப்பன்மார்கள் தங்களை ஜோடி சேர்த்து விட்டார்களே என்பதற்காகவே இணங்கி இருக்கின்றார்கள். மற்றும் பலர் தங்களுக் குள் வேற்றுமை உணர்ச்சியும், (அன்பு) ஆசை இன்மையும் ஏற்பட்டும் பிரிந்து கொள்ள முடியவில்லையே என்பதற்கு ஆகவே இணங்கி இருப்பது போல் இருக் கிறார்கள். இது போன்றவைகள் எல்லாம் நிர்ப்பந்த விபசாரங்களேயாகும்.
மற்றும் பலர் செல்வத்தையே பிரதானமாய்க் கருதி இன்ப உணர்ச்சியை பறி கொடுத்து இணங்கி இருக் கிறார்கள்.  இதுபோன்றவை காசு, பணம், சொத் துகளுக்காகச் செய்யப் படும் விபசாரங்களே யாகும். இவை ஒருபுறமிருக்க, இன்று உலக வழக்கில் இருக்கின்ற விபசாரத் தன்மைகள் தான் ஆகட்டும் ஏன் ஏற்பட வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள்.
பால்ய மணங்களை ஒழித்து காதல் மணம், கல்யாண ரத்து, விதவை மணம், சம உரிமை ஆகியவைகள் ஒரு சமூகத்தில் இருக்கு மானால் இன்றுள்ள விபசாரங்களில் 100-க்கு 90 பாகம் மறைந்து போகும் என்றே சொல் லுவேன். அதோடு பெண் மக்களை நன்றாக படிக்க வைத்து, அவர்களுக்கு சுதந்திர உணர்ச்சியை ஊட்டி, சொத்து உரிமையை யும் வழங்கி விடுவோமே யானால் விபசாரம் என்பது எப்படி நேரும் என்பதை யோசித் துப் பாருங்கள்.
விதவைத் தனம்
விதவைத்தன்மையே தான் விபசாரம் என்கின்ற பிள்ளையை பெறுகிறது. பிறகு ஆண் எப்படி வேண்டுமானாலும் திரிய லாம். எவ்வளவு பெண் ஜாதிகளை வேண்டு மானாலும் மணக்கலாம் என்கின்ற முறையே விபசாரம் என்னும் (அந்தப்) பிள்ளையை வளர்க்கின்றது.
கல்யாண ரத்து இல்லை என்கின்ற முறையானது விபசாரத்தை நீடுழி வாழச் செய்கின்றது.  இவற்றிற்கு எல்லாம் பரிகாரம் செய்யாமல் விபசாரத்தைப் பற்றிப் பேசுவது என்பது பயனற்ற காரியமேயாகும்.
விதவை தன்மை என்பது நமது நாட்டில் மிக்க கொடுமையான முறையில் இருந்து வருகின்றது. இதை எந்தச் சீர்த்திருத்த வாதியும் கவனிப்பதே இல்லை. விதவைகள் வாழ்க்கை ஒரு சிறைக் கூட வாழ்க்கையை ஒக்கும். ஒரு கைதிக்குள்ள நிர்ப்பந்தம் ஒவ் வொரு விதவைக்கும் இருந்து வருகின்றது.
எப்படி ஒரு கைதியானவன் சிறைக்கூட விதியை மீற வேண்டும் என்கின்ற ஆசைக் கும், அவசியத்துக்கும் உள்ளாகிறானோ, அதுபோலவே தான் ஒவ்வொரு விதவையும் விதவைச் சட்டத்தைமீற வேண்டிய நிர்ப் பந்தத்துக்கு ஆளாகிக் கஷ்டப்படுகிறாள். இந்தக் கொடுமை ஒரு நிரபராதியான பெண் ணுக்கு ஏன் ஏற்பட வேண்டும் என்று கேட் டால் இதற்கு என்ன மறுமொழி இருக்கிறது? இந்த 20ஆவது நூற்றாண்டில் தலைவிதி என்றும், கடவுள் செயல் என்றும் சொல்லி மக்களை ஏய்க்க முடியுமா?
விதவைத் தன்மை என்பது கடவுள் செயலாய் இருந்தால், பார்ப்பனர்கள் நிறைந்த பார்த்தசாரதி கோவில் தெரு தெப்பக்குளத்தில் தினம் ஒரு குழந்தை எப்படி மிதக்க முடியும்? ஊர்கள் தோறும் குப்பைத் தொட்டிகளும், ஓடை புறம் போக்குகளும், கள்ளி மேடும், சுள்ளி மேடும், ஊரணிகளும் எப்படிப் பிள்ளைகளை பெற முடியும்?
ஆகவே மனித சமுகத்துக்கு கடுகள வாவது புத்தியும், நேர்மையும் இருக்கின்றது என்று சொல்லப்பட வேண்டுமானால் இந்த விதவைக் கொடுமை முதலில் ஒழிக்க ப்பட்டாக வேண்டாமா? இந்தக் கொடுமை பகுத்தறிவுள்ள மனித சமுகத்தில் இருக் கிறது என்றால் பகுத்தறிவுக்கு இழிவு கற்பிக்க இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா என்று கேட்கின்றேன்.
அதோடு கல்யாண ரத்து என்கின்ற ஒரு முறையும் ஏற்படுத்தியாக வேண்டும். ஏனெனில், கல்யாணத்துக்கு இடமில்லாத காரணத்தினாலே ஆண்கள் மனைவிமார் களிடத்தில் மனிதத் தன்மையோடு நடந்து கொள்ளாமல் மிருகத்தனமாக நடக்கத் தூண்டப்படுகிறார்கள். ஆண்கள் மனைவி மார்கள் தங்களுக்கு பிடிக்கவில்லை யானால் மறுபடியும் மணம் செய்து கொள் ளுகிறார்கள்.
மணமில்லாமல் வைப்பு முறையிலும் வேறு ஸ்திரிகளை சேர்த்துக் கொள்ளவும் செய் கிறார்கள். மற்றும் தங்களுக்கு இஷ்ட மானபடி யெல்லாம் நடந்து கொண்டு பெண்களை இம்சிக்கிறார்கள்.
இவ்வளவுக்கும் தைரியம் வந்ததற்குக் காரணம் ஆண்கள் எப்படி நடந்து கொண் டாலும் மனைவிமார்களுக்கு ஜீவ னாம்சம் கேட்கும் பாத்தியம் தவிர, வேறு எவ்வித உரிமையும் இல்லாததேயாகும்.
பெண்களுக்கு தங்கள் புருஷன் பிடிக்கவில்லையானால் சகித்துக் கொண்டு தலைவிதி என்பதாகச் சொல்லி திருப்தி யுடன் இருக்க வேண்டியதைத் தவிர வேறு ஒரு கதியும் இல்லை. குரூர குணமுள்ள புருஷன், குடிகாரப் புருஷன், குஷ்டரோகி யான புருஷன் முதலிய எப்படிபட்டவனாய் இருந் தாலும் அவனுடைய கொடுமைகளை சகித்துக் கொண்டு அவனுடன்கூட வாழ வேண்டியி ருக்கிறது. இது ஜீவகாருண்யமாகுமா என்று கேட்கின்றேன்.
எனவே தோழர்களே!
சமுக வாழ்க்கையில் முக்கியமாக ஆண் பெண் தன்மையில் செய்ய வேண்டிய சீர்திருத் தம் எவ்வளவு இருக்கிறது என்று பாருங்கள். இவைகளைப் பற்றி எந்தத் தலைவர்களாவது, மகாத்மாக்களாவது, எந்த சர்க்காராவது கவனிக்கிறதா?
பெண்களுக்கு சொத்துரிமையும் இல்லை; கல்வி வசதியும்இல்லை - இதுவும் மிகவும் கொடுமையான காரியமேயாகும். பெண்கள் சொத்துரிமை விஷயத்தில் இந்து மதக் கொள்கை மிகவும் அக்கிரமமான தாகும். பெண்கள் எப்போதும் சொத்துரிமை சர்வ சுதந்திரமாய் அனுபவிக்க மார்க்க மில்லை. விபசாரியாய்ப் போன பெண், தேவடியாத் தொழில் செய்யும் பெண் ஆகியவர்களுக்கே இந்து சமுகத்தில் சொத்துரிமை இருக்கிறது என்றால் இந்து சமுகத்தின் ஈனத் தன்மைக்கு, மடத் தன்மைக்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும்.
ஒரு விதவை விபச்சாரியாய் போய் விட்டால் தான் புருஷன் சொத்தை அனுப வித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அந்த விதவை மறுமணம் செய்து கொண்டால் புருஷன் சொத்துக்களில் ஒரு சிறு தம்பிடி கூட அனுபவிக்க உரிமை இல்லை. புரு ஷனுடைய வாரிசுகள் அவர்கள் எப்படிப் பட்டவர்களாய் இருந்தாலும் அனுபவிக்க லாம் என்பதாக இந்து லா கூறுகிறது.
கல்வி விஷயத்திலும் பெண்கள் கல்வியைப் பற்றி யாரும் கவலை எடுத்துக் கொள்ளுவதில்லை. ஏதோ பெயருக்கு மாத் திரம் தான் பெண் கல்வி விஷயம் நடைபெறு கின்றன.  100க்கு ஒரு பெண்கூட படித்த பெண் இல்லாமல் இருக்கிறது இந்து சமுகம்.
கிறிஸ்துவப் பெண்கள் அனேகமாய் 100-க்கு 10, 20 பேர்கள் படித்திருக்கிறார்கள். முகம் மதிய பெண்களும், அப்படியே. பார்ர்ப்பன பெண்களோ 100க்கு 60, 70 பேர்கள் படித்திருக் கிறார்கள். மற்றப்படி இந்துப் பெண்கள் என்கின்றவர்கள் சராசரி 100க்கு ஒருவர் வீதம் கூட இல்லை.
பெண்களுக்கு அய்ஸ்கூல், மிடில் ஸ்கூல் முதலியவை ஒரு ஜில்லாவுக்கு ஒன்று இரண்டு கூட அதிசயமாய் இருக் கிறது. பெண்களுக்கு மேல் படிப்புக்கு சம்பளமில்லாமல் சொல்லி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு வரும் பெண் களை நன்றாய் படிக்க வைக்க வேண்டும். சுதந்திரகாரனுக்கு பெண்களை தக்கவர் களாக இருக்கும்படியான தொழில் கல்வி ஆகியவைகள் தேடிக் கொடுக்க வேண்டி யது பெற்றோர் கடமையாகும்.
இம்மாதிரியான காரியங்கள் கல்யாண விஷயத்திலும் பெண்கள் விஷயத்திலும் முக்கியமாய் கவனிக்கப்பட வேண்டியி ருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள் ளுகிறேன். (கீழையூர், திருப்புவனம், திருச்சி ஆகிய இடங்களில் முறையே தோழர்கள் வேலு - தனபாக்கியம், நாராயணசாமி - அரங்கநாயகி, சக்கரபாணி - மீனாட்சி ஆகி யோருக்கு நடைபெற்ற திருமணங்களில் ஆற்றிய சொற்பொழிவுகளின் சுருக்கம்)
குடிஅரசு - சொற்பொழிவு - 16.06.1935
-விடுதலை,15.6.14