ஞாயிறு, 3 ஜனவரி, 2016

கோயில் என்பது ஒரு சமுதாயப் பொது இடமே!


- தந்தை பெரியார்

தந்தை பெரியார் அறிவுரை யாற்றுகையில் குறிப்பிட்டாதாவது:-
இன்றையத் தினம் இந்த ஊரிலே சூத்திரன் என்னும் இழிவு நீங்கக் கிளர்ச்சி சம்பந்தமாக நடைபெற்ற கமிட்டிக் கூட்டத்தில், தோழர்கள் விருப்பத்திற்கிணங்க அடுத்த மாதத்திலேயே இந்த ஊரிலே இருக்கிற இராஜகோபாலசாமி கோயிலின் மூலஸ்தானம், கர்ப்பக்கிருகம் என்கின்ற இடத்திற்கு நாமும் போகலாம் என்பதான கிளர்ச்சியை ஆரம்பிக்க இருக்கின்றோம். அதைப் பற்றி விளக்குவதற் காகவே  இப்பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
அது மத சம்பந்தமான காரியம் என்று சிலபேர் சொல்வார்கள். ஆனால், மத சம்பந்தப்பட்ட காரியமல்ல, அது சமுதாய சம்பந்தமான காரியமாகும். கோயிலில் கர்ப்பக்கிருகத்திற்குள் போவதும் மத சம்பந்தமானது என்கிறார்களே! கோயிலுக்குள் (பறையன், சக்கிலி என்று) தாழ்த்தப்பட்ட மக்கள் போகக்கூடாது என்று தடுத்து வைத்திருந்தார்கள். நம் போராட்டத்தால் இன்று அவர்கள் எல்லாம் போகலாம் என்றாகி, இன்று கோயிலுக்குள் நாம் போகிற தூரம் வரை அவர்களும் வருகின்றார்கள். இதனால் மதம் ஒன்றும் கெட்டு விட்டதாக யாரும் சொல்ல வில்லை. கோயிலுக்குள் போகிறவர்கள் எல்லாம் சாமி நம்பிக்கைக்காரர்கள் அல்ல. சாமி நம்பிக்கைக்காராகப் பார்த்து விடுவது இல்லை. எல்லா மதத்தைச் சார்ந்தவர்களையும் விடுகிறார்கள். எல்லாக் கட்சிக்காரர்களும் காங்கிரஸ்- கம்யூனிஸ்ட்- தி.மு.க. என்று எல்லோருமே தான் போகிறார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் போய்க் கொண்டுதானிருக்கிறார்கள்.
கடவுள் நம்பிக்கைக்காரர் தான்- கும்பிடுகிறவர் தான் போக வேண்டுமென்று எந்தக் கோயிலிலும் நோட்டீஸ் வைக்கவில்லை. போகிறவர்கள் அத்தனை பேரும் சாமி கும்பிடுவதற்காகப் போகிறவர்களும் அல்ல. பல காரியங்களை முன்னிட்டுச் செல்கின்றார்கள். அதில் சிலர் சாமி கும்பிடுவதற்காகவும் செல்கின்றனர். அவ்வளவுதானே ஒழிய எல்லோருமே சாமி கும்பிடச் செல்வது கிடையாது.
தஞ்சை, மதுரை, சிதம்பரம், சீரங்கம், திருவிடைமருதூர் போன்ற ஊர்களில் உள்ள பெரிய கோயில்களின் பிரகாரங்கள், இந்த விதியிலிருந்து அந்த வீதிக்குப் போவதற்குப் பொது ரோடாக இருக்கிறது. அது ஒரு சமுதாயப் பொது இடம் என்பது தவிர வேறு ஒன்றுமில்லை. தாழ்த்தப்பட்டவர்கள், சில ஜாதிக்காரர்கள் கோயிலுக்குள்ளே நுழையக்கூடாது என்றிருந்தது. நாம் ரகளை செய்ததால் எல்லா இடத்தையும் திறந்துவிட்டு விட்டார்கள் ஆனால், ஓர் இடத்தை மட்டும் பார்ப்பான்- குருக்கள் தான் செல்ல வேண்டுமென்ற ஒதுக்கி, நாமெல்லாம் அங்கு செல்லக்கூடாது என்று தடைசெய்து வைத்திருக்கின்றான். இதை உடைத்து விட்டால் பிறகு பேதம் இருக்காது. புனிதம் கெட்டுவிடும் என்று சொல்வதெல்லாம் சாதிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஏற்பாடு தானே தவிர, மற்றப்படி எந்தப் புனிதமும் இல்லை. அதே சிலை கர்ப்பக்கிருகத்தை விட்டு வெளியே இருக்கும் போது யார் வேண்டுமானாலும் தொடலாம் என்கின்றான். அப்படி இருக்கும் போது அந்த இடத்திற்கு மட்டும் என்ன புனிதம் என்பது நமக்கு விளங்கவில்லை. நம்மை ஏமாற்றச் செய்து கொண்ட ஏற்பாடுதான் என்று தோன்றுகிறது.
ஒரு சிறு வேண்டுகோள். இந்தக் கிளர்ச்சிக்காக நம் தோழர்கள் நன்கொடை வசூலிக்க இருக்கிறார்கள். உங்கள் எல்லாரிடமும் வருவார்கள். இதற்கு நீங்கள் பெரிய தொகை கொடுக்க வேண்டும் என்பதல்ல. சிறு தொகை- உங்களால் இயன்றது கொடுத்தால் போதும். எல்லா மக்களின் ஆதரவும் இருக்க வேண்டும் என்பதற்காகவும் எல்லா மக்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவுமே எல்லோரிடமும் நன்கொடை வசூலிக்கச் சொல்லி இருக்கின்றேன். நாம் கிளர்ச்சி ஆரம்பித்ததும் எல்லோரும் போகலாம் என்று திறந்துவிட்டால் ஒரே நாளில் முடிந்துவிடும். தடைசெய்தால் தொடர்ந்து நடைபெற வேண்டும். வழக்குத் தொடுத்தால் வெற்றிபெறுகிற வரை போராட வேண்டியிருக்கும். எப்படி வைக்கத்தில் போராட்டம் நடந்ததோ, அங்கு எப்படி இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி நடத்தினோமோ, அதுபோல தினம் 10,20 பேர் சென்று, தொடர்ந்து கிளர்ச்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் நம்மைக் கர்ப்பக்கிருகத்திற்குப் போக அனுமதிக்கிறவரை தொடர்ந்து போராட வேண்டி இருக்கும்.
இந்த இந்துமதம் என்கிற ஏற்பாட்டைத் தவிர, உலகிலுள்ள மற்ற கிறிஸ்து, - முஸ்லிம் மற்ற மதத்தைச் சார்ந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தங்கள் மத சம்பந்தமான, சமுதாய சம்பந்தமான எல்லாவற்றிலும் கலந்து கொள்ள அவர்களுக்கு உரிமை உண்டு. இந்து மதம் என்பதில் மட்டும் தான்- ஒரு பிரிவினருக்கு மட்டும் தான்-  மத சமுதாய சம்பந்தமான காரியங்களில் கலந்து கொள்ள உரிமை உண்டு என்று, அவர்களாகவே ஏற்பாடு செய்து வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
நம் மக்கள் மானாபிமானத்தைப் பற்றிக் கவலைப்படுவது கிடையாது. எதையாவது செய்து எப்படியாவது வாழ்ந்தால் போதும் என்றிருக்கிறார்களே ஒழிய மானத்தைப் பற்றிக் கவலைப்படுவதே கிடையாது. மனைவியை விட்டுக் கொடுத்தாவது மோட்சத்திற்குப் போகலாம் என்று சொன்னானே ஒழிய, மானத்திற்காக உயிரையும் கொடுக்கத் துணிய வேண்டும் என்று சொல்லவில்லை ஆனதால், மதத்தில்,- சமுதாயத்தில் நமக்கு இருக்கிற இழிவுபற்றி, மானமற்ற தன்மைப் பற்றி கவலையற்று இருக்கின்றார்கள். நம் நாட்டில் தோன்றிய மகான்கள், மகாத்மாக்கள், பெரியவர்கள் முதற்கொண்டு எல்லாப் புலவர்களும், மேதாவிகளும் நம் இலக்கியங்களும், புராணங்களும், இதிகாசங்களும், கடவுள் கதைகளும், மானத்தைப் பற்றி,- மனிதத் தன்மையைப் பற்றி ஒரு சிறிதுகூட, கவலைப்படாத தன்மையில் எழுதி வைத்திருக்கின்றார்கள் என்பதோடு நடந்து கொண்டும் வந்திருக்கின்றனர். அதையே பெருமையாகக் கருதிக் கொண்டும் வந்திருக்கின்றனர் ஆனதால் மானத்தைப்பற்றிக் கவலைப்படாமல், நம் மக்களும் வாழ வேண்டியவர்களாகி விட்டார்கள்.
சமுதாய சம்பந்தமான கிளர்ச்சி யென்றால், நான் ஒருவன் தான் கொலை செய்யாமல், பலாத்காரம் இல்லாமல், நெருப்பு வைக்காமல் செய்து வெற்றியும் பெற்றிருக்கின்றேன். சரித்திர புராணங்களையும் நடப்பையும் பார்த்தால் சமுதாய சம்பந்தமான மாற்றங்கள் நடைபெற்ற போதெல்லாம் ஆட்களைக் கழுவேற்றி, நெருப்பு வைத்துக் கொளுத்தி நாசம் செய்து, கொலை- கொள்ளைகள் செய்து தான் மாற்றங்கள் நடத்தியிருக்கின்றன. எனக்குப் பிறகு நீங்கள் பலாத்காரம் இல்லாமல் கிளர்ச்சி நடத்துவீர்கள் என்று கருதுவதற்கில்லை. இப்போது எது எதுக்கோ பஸ்ஸை, ரயிலை, வீட்டைக் கொளுத்துகிறான். கொலை, கொள்ளைகள், கலவரங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றான். நாம் நம் இழிவைப் போக்கிக் கொள்ள- மானத்தைப் பாதுகாக்கவே கிளர்ச்சி செய்கிறோம்.
இதற்கெல்லாம் பாடுபடாமல் விட்டால் அடுத்து இந்தக் காரியத்தை செய்ய வேறு யாரும் முன்வருவார்கள் என்று சொல்ல முடியாது. எனக்குக் கடிதம் எழுதுகிறவர்கள்; எழுதுகிறார்கள், நீங்கள் மைனா பிடிக்கிறீர்கள்; இதில் ஒன்றும் காரியம் நடக்காது; பலாத்காரத்தால் தான் செய்ய முடியும். நாங்கள் அதற்குத் தயாராக இருக்கிறோம். நீங்கள் ஒப்புதல் கொடுத்தால் ஒரே நாளில் முடித்துவிடுகிறோம் என்று இதையெல்லாம் நான் விரும்பவில்லை.
அடுத்த மாதத்தில் ஆரம்பிக்காலாம் என்றிருக்கிறேன். எனக்கு உடல் நலமும் இல்லை, வயதும் ஆகிவிட்டது என்றாலும் இதை நடத்தியே தீரவேண்டி இருக்கிறது. அரசாங்கத்திற்குப் பாடுபட்டோம்; தமிழன் அரசாங்கம், தமிழர்கள் அரசாங்கம், தமிழ் மக்களின் நலனில் அக்கறையுள்ள அரசாங்கம் அமைந்துவிட்டது. பதவி உத்தியோகங்களில் தமிழர்கள் நல்ல அளவுக்கு முன்னேறி இருக்கின்றார்கள். கல்வித்துறையிலும் நல்ல அளவுக்கு முன்னேறி இருக்கின்றனர். என்றாலும், அவர்கள் யாரும் தங்கள் சமுதாய இழிவு பற்றிக் கவலை அற்றவர்களாகவே இருக் கின்றனர். நாம் ஒருவர்தான் இந்த இழிவு போக வேண்டுமென்பதற்காகப் பாடுபட வேண்டியிருக்கிறது. சமுதாயத்துறையில் இந்தக் காரியம் செய்து விட்டால் போதும் என்று கருதுகின்றேன். எப்படியாவது நம் மக்களின் இழிவு நீங்கியாக வேண்டும். மந்திரியாக இருந்து பயன் என்ன? உத்தியோகம் போனால் நாளைக்கு அவர்கள் சூத்திரர்கள் தானே! பதவி- உத்தியோகம் இருக்கிறவரை தானே இந்த அந்தஸ்தும் மதிப்பும்? அதுபோனால் அவர்களும் சூத்திரர்கள் பட்டியலில் சேரவேண்டியவர்கள் தானே! இதை யாரும் மறுக்க முடியாதே! நீங்களெல்லாம் நல்லவண்ணம் சிந்திக்கவேண்டும். எதற்காக நாம் சூத்திரர்களாக- பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்களாக வாழ வேண்டும்? நாம் எதில் பார்ப்பானைவிடக் குறைந்தவர்கள்? நாம் மட்டும் ஏன் சாமி சிலை இருக்கிற இடத்திற்குள் போகக்கூடாது என்பதையெல்லாம் சிந்திக்க வேண்டும். இங்கு நடைபெற இருக்கிற கிளர்ச்சிக்கு உங்களால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டும். ஆதரவு கொடுக்க வேண்டும்.
20.10.1969 அன்று மன்னார்குடியில் ஈ.வெ.ரா. பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு
‘விடுதலை’ 27-10-1969
‘விடுதலை’ 3-1-16

சனி, 2 ஜனவரி, 2016

மக்களின் நன்மைக்காக பாடுபடும் முஸ்லிம் தலைவர்கள்


-தந்தை பெரியார்
தோழர்களே!
நேரம் அதிகமாகி விட்டது. நமது ஊருக்கு இந்த மாதிரி இரவு 12 மணிவரை கூட்டம் கூட்டிப் பேசியது இதுவே முதல் தடவை என நினைக்கிறேன்.
இந்த நடு இரவில் இத்தனை ஆயிரம் மக்கள் மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத் துடனும் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தால் மிகுந்த ஆச்சரியமாகவே இருக்கிறது. வெளியூர்களிலிருந்து பல தலைவர்கள் வந்திருப்பதை அறிந்து அவர்கள் பேச்சு களைக் கேட்கவே இவ்வளவு பேர்கள் வந்திருக்கிறார்கள். எனக்கு முன் பேசிய தலைவர்கள் மிகவும் அருமையாகப் பேசினார்கள்.
முன் பேசிய சைபுல் இஸ்லாம் ஆசிரி யர் மவுல்வி அகமது சயித் சாயபு, தோழர் மலங்கு அகமது பாஷா சாயபு அவர் களும், மவுலானா சாபுடீன் சாயபு அவர் களும் நாட்டு மக்களின் நன்மைக்காகவும், இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காகவும் மிகவும் பாடுபட்டு வருகிறார்கள். இதுசமயம் எது எது அவசியமாகப் பேச வேண்டுமோ அவைகளையெல்லாம் எனக்கு முன் பேசியவர்கள் பேசிவிட்டார்கள். இருந்தா லும் நான் சிறிது பேச விரும்புகிறேன்.
இங்கு நபிகள் நாயகம் அவர்கள் பிறப்பைப் பற்றியும், அவர் சேவையைப் பற்றியும் மிக அருமையாகப் பேசப்பட்டது.
எனக்கு முன் பேசியவர்கள் முஸ்லிம் மதம் கத்திமுனையால் பரப்பப்பட்டது என்று எதிரிகள் கூறி வருவது தப்பு என்ப தற்குப் பல சமாதானங்கள் கூறினார்கள். மகமதிய மதம் கத்தி முனையால் பரப்பப் பட்டதா, இல்லையா என்பது பற்றி எனக்குத் தெரியாது.
மற்ற மதங்கள் அன்பினால் பரப்பப்பட்டதா?
இன்று ஒவ்வொரு மார்க்கத்தினுடைய சரித்திரமும் அந்தந்த மதங்கள் வாளாயுதம் இல்லாமல் வளர்ந்ததாகக் கூறவில்லை. ஏன் அதிக தூரம் போகவேண்டும்? இந்து மதத்தை எடுத்துக் கொள்வோம். அது அன்பினால் பரப்பப்பட்டதா? சன்மார்க்கத் தால் பரப்பப்பட்டதா? ஜீவகாருண்யத்தால் பரப்பப்பட்டதா?
அதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமானால் மதுரையில் வருடா வருடம் நடைபெற்றுவரும் திருவிழாவைப் பாருங்கள்.
அங்கு 8,000 சமணர்களைக் கழுவேற்றியதையே காட்டப்படுகிறது. இது எதைக் காட்டுகிறது? அன்பையா? ஜீவ காருண்யத்தையா? சன்மார்க்கத்தையா?
இனி வைணவ மதத்தை எடுத்துக் கொள்வோம். அந்த மதக்காரர்கள் மற்ற கோயில்களை இடித்துக் கொள்ளை அடித்தே அவர்கள் கோயில்களைக் கட்டினார்கள் எனப் பெருமையாகப் பேசிக் கொள்கிறார்கள். அதற்குச் சீரங்கம் கோவிலே உதாரணமாகும்.
இப்படியெல்லாம் இருக்க ஒரு மதத்தினர் மற்ற மதத்தினரை ஏன் பரிகசிக்க வேண்டும்?
இன்று அகராதிகளைப் புரட்டிப் பாருங்கள்.
துலுக்கர் என்றால் மிலேச்சர் என்றும், துலுக்க பாஷை என்றால் மிலேச்ச பாஷை என்றும், துருக்கி என்றால் முரடர் என்றும் எழுதி இருக்கிறது. இதுவெல்லாம் மகமதி யரை இழிவு செய்ததாகாதா?
தோழர் மலங்கு அகமது சாயபு அவர்கள் கூறியதுபோல் இன்று நாட்டில் மக்களை எத்தனை பிரிவுகள் செய்து இழிவுபடுத்தி இருக்கிறார்கள்?
பிராமணன் பிரம்மாவின் முகத்தில் பிறந்தவனென்றும், சத்திரியன் புஜத்தில் பிறந்தவனென்றும், வைசியன் தொடையில் பிறந்தவனென்றும், சூத்திரன் பாதத்தில் பிறந்தவனென்றும், அவன் மேலே கூறப்பட்ட ஜாதியார்களுக்கு அடிமை வேலை செய்யவே பிறந்திருக்கிறான் என்றும் இழிவுபடுத்தி இருக்கிறார்கள். இந்த இழிவைப் பற்றிப் பிரசாரம் செய்தால் 153ஆம் செக்ஷனை பிரயோகம் செய்து பிரசாரத்தைத் தடுக்க முயற்சி செய் கிறார்கள்.
இதுவுமில்லாமல் நமது பிரசாரத்தை ஒழிக்க ஒரு புதுமார்க்கம் தேடி இருக் கிறார்கள். அது என்னவென்றால், சென்ற வாரம் சிம்லாவில் கூடிய உள்நாட்டு மந் திரிகள் கூட்டத்தில் வகுப்பு துவேஷமாகப் பேசுவதையும், எழுதுவதையும் தடுக்கக் கடுமையான முறைகளைக் கையாள வேண்டுமென்பதாகும்.
ஒரு புதுமார்க்கம்
இதுபற்றித் தோழர் அ. பொன்னம் பலனார் அவர்கள் மிக விளக்கமாகப் பேசினார்கள். வங்காளத்தைச் சேர்ந்த பங்கிம் சந்திரசட்டர்ஜி எழுதிய ஆனந்த மடம் என்ற புத்தகத்தினால் வகுப்பு துவேஷம் ஏற்படவில்லையா?  வந்தேமாத ரத்தால் வகுப்பு துவேஷம் ஏற்பட வில்லையா? இந்தியை கட்டாயப் பாட மாகச் செய்வது வகுப்பு துவேஷமாகாதா?
இந்த மாதிரி வகுப்புத் துவேஷங்கள் வரும்படி காரியங்கள் செய்வதும், அதைத் தடுக்கப் புறப்படுபவர்களை வகுப்புத் துவேஷிகள் என்றும், அவர்களை அடக்க வேண்டுமென்றும், அவர்கள் பத்திரிகை களை முடக்க வேண்டுமென்றும் சட்டம் செய்தால் வகுப்புத் துவேஷம் இன்னும் அதிகமாக வளருமா? நீங்குமா என்று யோசித்துப் பாருங்கள்.
தங்களுக்குப் பிரியமில்லாத இந்தியை கட்டாயப் பாடமாக வைப்பதால் தாங்கள் படிக்க முடியாது என்று கூறியதற்காகச் சுமார் 1001 பேர்களை சிறையில் அடைத்து வைத்துக் கஷ்டப்படுத்துவது எதைக் காட்டுகிறது? இது வகுப்புத் துவேஷத்தைக் கிளப்புவதாகாதா?
கஷ்டப்படும் மக்கள் யோசிப்பதென்ன?
இந்த நாட்டிலுள்ள 35 கோடி மக்களில் 9 கோடி மக்களை முஸ்லிம்களென்றும், 6 கோடிப் பேர்களை தீண்டாதாரர்களாகவும், 20 கோடிப் பேர்களை சூத்திரர்களாகவும் பிரித்து அடிமையாக்கி அவர்களைக் கஷ்டப்படுத்துவதை எடுத்துக் கூறினால் இது வகுப்பு துவேஷமா? இப்படியெல்லாம் வகுப்புத் துவேஷம் என்ற பேரால் ஒரு சாராரின் பிரசாரத்தை அடக்க முயல் வதைப் பார்த்தால்  இது மனிதத்தன்மை ராஜ்ஜியமா?
கொடுங்கோன்மை ராஜ் ஜியமா என்று கஷ்டப்படும் வகுப்பினர் யோசிக்கின்றனர். சுயராஜ்ஜியம் என்ற பெயரால் ஒரு கூட்டத்தார் மக்களை ஏமாற்றிப் பிழைத்து வருவதை மக்களிடம் எடுத்துக் கூறினால் இது வகுப்புத் துவேஷம், இதை ஒழிக்க வேண்டுமென்று கூறும் இந்த மந்திரிசபையை ஒழிக்க மக்கள் ஒன்று சேர மாட்டார்களா என்று கேட் கிறேன். மற்றும் வகுப்புவாதமாக எழுதும் பத்திரிகைகளை அடக்கவும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இதுபற்றி விடுதலை பத்திரிகையில் எழுதியிருப் பதைப் பார்த் தால் நன்கு விளங்கும்.
பத்திரிகைகளை அடக்கினால்....?
வகுப்புத் துவேஷம் என்ற பேரால் வகுப்புத் துவேஷத்தை அடக்கிச் சமாதானம் நிலவப் பாடுபடும் பத்திரி கையை அடக்க முயன்றால் நாட்டில் வகுப்புக் கலவரங்கள் அதிகமாகி பனங் காய்கள் உருளுவது போல் மக்கள் தலைகள் உருளும் எனப் பயப்படுகிறேன்.
இம்மாதிரி சம்பவங்கள் நிகழ வேண்டுமென்று மந்திரி சபையார் விரும்பு கிறார்களா? மற்றும், முஸ்லிம்களின் ஒப்பற்ற தலைவர்களான ஜனாப் ஜின்னா அவர்களையும், ஜனாப் கலிபுல்லா சாயபு அவர்களையும், மற்ற தலைவர்களையும் வகுப்புவாதிகளென்றும், தேசத் துரோகி களென்றும், உத்தியோக வேட்டைக்காரர் களென்றும், தாழ்த்தப்பட்டோர்களின் தலைவர்களான தோழர்கள் டாக்டர் அம்பேத்கர்,
எம்.சி.ராஜா, என். சிவராஜ், ஆர். சீனிவாசன் முதலாகிய தலைவர் களையும் இழிவாகவும், கேவலமாகப் பேசுவதும், பார்ப்பனரல்லாப் பெருங்குடி மக்களின் தலைவர்களையும் கேவலமாகப் பேசுவதும் இழிவாகப் பேசுவதுமான காரியங்களை ஒரு கூட்டத்தார் செய்து வந்தால் அந்தந்த வகுப்பார்களுக்கு ஆத்திரமுண்டாகுமா - உண்டாகாதா என்று கேட்கிறேன். இந்த மாதிரி விஷ யங்கள் ஒழிய வேண்டுமென்று கூறினால் இது வகுப்புத் துவேஷமா?
(31.05.1939 அன்று ஈரோடு பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு)
குடிஅரசு - சொற்பொழிவு - 11.06.1939
-விடுதலை,6.12.15