திங்கள், 25 மே, 2020

விகடன்" விஷமம் - பார்ப்பனர்கள் தமிழர்களுக்கு இழைக்கும் கொடுமை

"விகடன்" விஷமம்

       தந்தை பெரியார்

17.10.37ந் தேதி "விகட"னின் தலையங்கத்தில் "வாழிய செந்தமிழ்" என்னும் தலைப்பில் ஒரு வியாசம் காணப்படுகிறது. 
அதில் ஹிந்தியை முதல், இரண்டாவது, மூன்றாவது பாரம் வரைக்கும் வைக்கப் போகிறபடியால் அதற்கு மேல் சமஸ்கிருதம் இஷ்டபாடமாக வைக்கலாம் என்றும்,
இங்கிலீஷைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்றும்,
சீநிவாச சாஸ்திரியார் ஒருவரேதான் இங்கிலீஷ்காரரைப் போல பேசத் தெரிந்தவர் என்றும்,
ஆதலால் இங்கிலீஷ் அப்படி பேசத்தெரிய முயற்சி செய்வது பயன்படாது என்றும்,
இங்கிலீஷையும் தமிழிலேயே சொல்லிக்கொடுக்க வேண்டும் என்றும்,
தமிழ் கற்றுக்கொடுக்க தோழர் உ.வே. சாமிநாதய்யர்தான் தகுதியானவரென்றும் அவர்தான் தற்கால கொள்கையை தமிழில் புகுத்தாமல் நூலிலுள்ள இன்பத்தை மாத்திரம் நுகரும்படி செய்வார் என்றும்,
சமஸ்கிருதமே உலகத்து நாகரீகத்துக்கு எல்லாம் அடிப்படையான பாஷை என்றும், அதை படிக்க பள்ளிக்கூடங்களில் வசதியும் தூண்டுதலும் வேண்டுமென்றும்,
டாக்டர் சுப்பராயன் கல்வி மந்திரியாய் இருந்து இதை உணர்ந்து இருப்பது பாக்கியம் என்றும் மற்றும் பல விஷயங்களும் "வாழிய செந்தமிழ்" என்னும் தலைப்பில் இருக்கின்றன.

இந்த தலையங்கத்தை கசக்கிப்பிழிந்தால் இங்கிலீசுக்கு சாஸ்திரியாரே கெட்டிக்காரர், தமிழுக்கு சாமிநாதய்யரே கெட்டிக்காரர், பாஷைகளில் சமஸ்கிருதமே சிறந்தது என்பதும் ஹிந்தி கட்டாயம் 3-ம் பாரம் வரை படித்தாக வேண்டும்; பிறகு சமஸ்கிருதம் சுலபமாய் வந்து விடும்; தமிழ் கற்றுக்கொடுக்கும் போது தமிழர்களின் நிலை, கொள்கை ஆகியவைகளைப் புகுத்தக்கூடாது; இங்கிலீஷ் பிரதானமல்ல; அது படித்ததால் பல கேடுகள் வந்து விட்டன என்பதும் இந்த அபிப்பிராயத்துக்கு மரியாதை கொடுத்து தக்கது செய்ய டாக்டர் சுப்பராயன் கல்வி மந்திரியாய் இருக்க ஒப்புக்கொண்டது தமிழ் நாட்டின் பாக்கியம் என்பதுந்தான் சாரமாகும்.

இதற்கு பெயர்தான் வாழிய செந்தமிழாம். இந்த விஷயங்களை எழுதுகிறவர்கள் புத்திசாலிகளா அல்லது இதையும் படிக்க இருக்கும் மக்கள் மடையர்களா என்பதுதான் தமிழர்கள் கவனிக்க வேண்டிய பிரச்சினையாகும்.

டாக்டர் சுப்பராயன் அவர்களுக்கு மந்திரி வேலை கொடுத்து விட்டு அவரிடம் என்ன வேலை வேண்டுமானாலும் வாங்கலாம், அவர் எதற்கும் தமது கையெழுத்தைக்கூட யார் வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளவும் அனுமதித்துவிடுவார்.

சாஸ்திரியாருக்கு இவ்வளவு விளம்பரம் கொடுத்திருப்பது எதற்கு? பத்திரிக்கைகள் தோழர் சாஸ்திரியார் பிரிட்டிஷாரின் கூலிப் பிரசாரகராய் உலகம் சுற்றி பிரிட்டிஷை புகழ்ந்து  
பிரசாரம் செய்து பட்டம் பணம் சம்பாதித்துக் கொண்டதல்லாமல் இதுவரை இந்தியாவுக்கு அவரால் ஏற்பட்ட நன்மை இன்னது என்று யாராவது சொல்லமுடியுமா? அல்லது எந்த பார்ப்பனப் பத்திரிகையாவது உறுதி செய்ய முடியுமா?

தோழர் உ.வே. சாமிநாதய்யர் அவர்கள் தமிழ் பழைய ஏட்டுப் பிரதிகளைக் கைப்பற்றி தமிழ் உணர்ச்சி இல்லாமல் வடமொழி கருத்துக் களையும் ஆரியர் கொள்கைகளையும் உட்புகுத்தி புத்தக ரூபமாக்கி புத்தகம் அச்சுப்போட தமிழர்களிடம் பணம் பெற்று புத்தகம் விற்ற பணத்தை தனது முதலாக்கி பணக்காரராகி பட்டம் பரிவட்டம் பெற்றதல்லாமல் தமிழுக்கு அவரால் ஏற்படுத்தப்பட்ட இலக்கியம் இன்னது, இலக்கணம் இன்னது அல்லது வெளிப்படையாய்க் கட்டிய சொந்த கருத்து அமைந்த நூல் இன்னது என்று ஏதாவது எடுத்துக் காட்ட முடியுமா?

மற்றும் சமஸ்கிருதம் இவ்வளவு உயர்ந்தது என்று சொல்லுகிற இப்பார்ப்பனர்கள் அப்பாஷை இலக்கிய இலக்கணங்களால் காட்டு மிராண்டித்தன காலத்திய  கற்பனைக் கதைகளும் பார்ப்பனர்களே கடவுள் - கடவுளே பார்ப்பனர்கள் என்கின்ற வஞ்சக விஷம உணர்ச்சிகளும் மக்கள் அறிவை அடக்கி காட்டு மிராண்டித்தனத்துக்கு கொண்டு போகும் அடிமைப் புத்தி கற்பிப்பும் அல்லாமல், சமஸ்கிருதத்தில் அரசியல், சமூக இயல், பொருளியல், கல்வி இயல், அறிவியல், ஒழுக்க இயல் ஆகியவற்றிற்கு யோக்கியமான - நாகரிகமான கருத்துக்களோ பயன்படக்கூடிய பொருள்களோ ஏதாவது இருக்கிறது என்பதாக யாராவது சொல்ல முடியுமா?

ஆகவே இவ்வளவு மோசமாயும் நம் சமூகத்துக்கே கேடாகவும் இருக்கும் விஷயத்தை எடுத்துக் கொண்டு "விகடன்" கையாளும் மாதிரியைப் பார்த்தால் பார்ப்பன பிரசார சூழ்ச்சி அதில் எவ்வளவு இருக்கிறது என்பது நன்றாய் மக்களுக்கு விளங்கிடும்.

கடைசியாக பார்ப்பனரின் கருத்து மக்கள் இங்கிலீஷ் படித்தே சுதந்தரமும் பகுத்தறிவும் சுயமரியாதையும் பெறும் உணர்ச்சி பெற்று விடுவதால், அதை ஒழித்துவிட்டு ஹிந்தியையும் சமஸ்கிருதத்தையும் புகுத்தி தமிழுக்கும் தாங்களே வாத்தியார்களாகி விட்டால் தமிழர்களை பழையபடி சூத்திரர்களாக்கி தாசி மக்களாக்கி விடலாம் என்கின்ற எண்ணமும் சூழ்ச்சியும் அல்லாமல் வேறு இல்லை என்பதும் விளங்கிவிடும்.

குடி அரசு - துணைத் தலையங்கம் - 17.10.1937

பார்ப்பனரல்லாத மாணவர் படிப்பின் கஷ்டமும் பார்ப்பன உபாத்தியாயர்களின் கொடுமையும்


May 24, 2020 • Viduthalai • 
* தந்தை பெரியார்

எங்கு பார்த்தபோதிலும் பார்ப்பன உபாத்தி யாயர்களின் கொடுமையானது சகிக்க முடியாத அளவில் பெருகிக் கொண்டே வருவதாக தினமும் நமக்குச் சங்கதிகள் எட்டிக் கொண்டே வருகின்றன. அவற்றுள் அநேகம் வெளியிடவே மனம் கூசுகின்றது. அரசாங்கக் கல்வி இலாகா மந்திரி ஒரு பார்ப்ப னரல்லாதாராயிருந்தும் ஸ்தல ஸ்தாபனங்களின் தலைவர்களும், மற்றும் தனிப்பட்ட பள்ளிக் கூடங் களின் நிர்வாகஸ்தர்களும் பார்ப்பனரல்லாதாரராகவே இருந்தும் பார்ப்பனரல்லாத பிள்ளைகளின் கஷ்டம் சற்றாவது நிவர்த்தியானதாகக் காண்பதற்கில்லை. இனி சீக்கிரத்தில் நிவர்த்தியாவதற்கு மார்க்கம் ஏற்படும் என்றும் கருதுவதற்கில்லை. இதற்கு முக்கிய காரணம் என்னவென்று பார்ப்போமானால் அநேக மாய் கல்வி இலாகா உத்தியோகங்களில் பெரிதும் பார்ப்பனர்களே அதிகாரிகளாய் இருந்து வருவதும், பரீட்சை அதிகாரிகளும் பார்ப்பனர்களாகவே இருந்து வருவதும் அவர்களது சலுகைக்குப் பார்த்திரமான உபாத்தியாயர்களும் தலைமை உபாத்தியாயர்களும் பார்ப்பனர்களாகவே இருந்து வருவதும் தவிர வேறு காரணம் சொல்வதற்கில்லை என்றே சொல்லுவோம். யோக்கியமாகவும், நியாயமாகவும் பேசுவோமானால் கல்வி இலாகாவில் பார்ப்பனர்கள் என்பவர்கள் கண்டிப்பாய், அதிகாரியாகவோ உபாத்தியாயர் களாகவோ இருக்கக் கூடாதென்றே சொல்லுவோம்.
பார்ப்பனர்கள் மூலம் மக்களுக்குக் கல்வி போதிக்க எண்ணுவதை விட கல்விச் சாலைகளை அடைத்து விடுவது, மேலென்று கூடச் சொல்லத் துணிவோம். ஏனெனில், முதலாவதாக இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு பார்ப்பனனும் தன்னை உயர்ந்த ஜாதி என்றும், அதாவது வருணாச்சிரமப்படி தாம் 'பிராமண'ரென்றும், மற்றவர் 'சூத்திர'ரென்றும் எண்ணிக் கொண்டி ருப்பவர்கள் எந்தக் கொள்கைப் படி தன்னை 'பிராமண'ரென்றும், மற்றவனை 'சூத்திர'ரென்றும் எண்ணிக்கொண்டிருக்கிறார்களோ, அதே கொள்கையின்படி 'பிராமணன்' 'சூத்திரனை'ப் படிக்க வைக்கக் கூடாதென்றும், 'சூத்திரன்' படித்தால் வருணதர்மம் கெட்டுப் போகுமென்றும், பிராமண னுக்கு ஆபத்தாய் முடியுமென்றும், 'சூத்திரனை'ப் படிக்க வைத்தப் 'பிராமணர்' 'நரகத்தை அடைவார்' என்றும் கருதப்பட ஆதாரங்கள் இருக்கின்றன.
இந்தக் கொள்கையை மனப்பூர்வமாக நம்பின பார்ப்பனர்கள் உபாத்தியாயராயிருந்தால் பார்ப்பன ரல்லாத பிள்ளைகளை அவர்கள் படிக்க விடு வார்களா? படித்தாலும் பாசாக சம்மதிப்பார்களா? என்பதை வாசகர்களே யோசித்து முடிவு கட்டிக் கொள்ள விரும்புகின்றோம்.
கல்வியில் இருக்கும்  சூதுகள் அநேகமாக நம்மவர்களுக்குத் தெரியாதென்றே சொல்லலாம். உதாரணமாக பார்ப்பனரல்லாத பிள்ளைகள் பி.ஏ.பாஸ். செய்வதென்றால் பிள்ளைகளுக்கு 22, 23, 24 வருடங்களாகி விடுகின்றன. ஆனால் பார்ப்பனப் பிள்ளைகள் 18, 19, 20 வயதிற்குள் பி.ஏ.பாசு செய்து விடுகின்றன. இதற்குக் காரணம் என்ன? என்பது நம்மவர்களுக்கு தெரியுமா? யாரையாவது காரணம் கேட்டால், "அது பிராமணப்பிள்ளை. அதற்குப் படிப்பு சீக்கிரம் வருகின்றது. நம்ம பிள்ளை ரொம்பவும் மந்தம். அதனால் சீக்கிரம் வருவதில்லை" என்று ஒரு வார்த்தையால் பதில் சொல்லி விடுவார்கள். ஆனால் நம்பிள்ளைகளும் ஒரு வருடமாவது தவறாமல் ஒவ் வொரு வகுப்பிலும் பாசு ஆகிக்கொண்டே போனா லும் எப்படியும் பி.ஏ.பரீட்சைக்கு போக 22 வயதாய் விடுகின்றது. ஒன்று அல்லது இரண்டு வருடம் தவறி னால் இருபத்து நான்கு வயதாய் விடுகின்றது. மூன்று வருஷம் தவறினால் இருபத்தைந்தாய் விடுகின்றது. பிறகு சர்க்கார் உத்தியோகத்திற்கு லாயக்கில்லாதவர்-களாகி விடுகின்றார்கள். ஆனால் பார்ப்பனர் பிள்ளைகளோ ஒன்று இரண்டு வருஷம் தவறினாலும் கூட 20, 21-ல் பி.ஏ. படித்து முடித்து விடுகின்றார்கள். இதன் ரகசியம் என்னவென்றால் நம் பிள்ளைகளை 7-வது வயதில் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி அரிவரி வகுப்பில் சேர்க்கின்றோம். 7-வது வயதில் அரிவரியில் சேர்ந்தால், அவன் தவறாமல் பாசு செய்தால்கூட 22-ல்தான் பி.ஏ. பரீட்சைக்குப் போக முடியும் ஏனென்றால் அரிவரி வகுப்புக்கும் பி.ஏ.பாசு செய்யும் வகுப்புக்கும் இடையில் 15 வருஷம் வேண்டியிருக்கின்றது. அதாவது அரிவரியில் இருந்து 4-வது வகுப்புக்கு அய்ந்து வருடமும், 4-வதிலிருந்து எஸ்.எஸ்.எல்.சி. அல்லது 6-வது பாரத்திற்கும் 6 வருஷம், அதிலிருந்து பி.ஏ.க்கு 4 வருஷம் ஆகவே தவறாமல் பாசு செய் தாலும் 15 வருஷ சாவகாசம் வேண்டியிருக்கின்றன. ஆனால் பார்ப்பனர்களோ தங்கள் குழந்தைகளை 5-வது வயது முதலே வீட்டில் கொஞ்சம் சொல்லிக் கொடுத்து ஆறாவது வயதிலோ அல்லது ஏழாவது வயதிலோ பள்ளிக் கூடத்திற்குக் கொண்டுபோய் முதல் பாரத்தில் சேர்த்து விடுகின்றார்கள். தலைமை உபாத்தியாயர்கள் பார்ப்பனர்களானதால் கணக்கில் சாதாரண 2 கேள்வியும், இங்கிலீஷில் இரண்டு வார்த்தைக்கு அர்த்தத்தையும் கேட்டுவிட்டு "முதல் பாரத்திற்கு லாயக்கு" என்று சொல்லி விடுகின்றார்கள். இதில் அவர்களுக்கு அய்ந்து வருடப் படிப்பும் காலமும் காலச்செலவும் மீதியாகி விடுகின்றன. 14 வயதுக்குக் கீழ்பட்ட பிள்ளைகளை எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சைக்கு எடுப்பதில்லை என்கின்ற நிபந்தனையினால் பார்ப்பனர்கள் தங்கள் பிள்ளைகளை முதல் பாரத்தில் சேர்க்கின்றார்கள்.. அந்த நிபந்தனையும்  இல்லாதிருக்குமானால் மூன்றாவது பாரத்தில்கூட சேர்த்து விடுவார்கள். தவிர 18, 19-ல் அவர்கள் பி.ஏ.பாசு செய்து விடுவதால் 25-வது வயது வரைக்கும் 5 அல்லது 6 வருட காலம் உத்தியோகம் தேட அவர் களுக்குச் சாவகாசம் இருக்கின்றது. ஆகவே அவர்கள் பி.ஏ. படித்து விட்டால் எப்படியும் யாரையாவது பிடித்து என்ன செய்தாவது உத்தியோகம் சம்பாதித்துக் கொள்ள போதிய சௌகரியம் இருக்கின்றது.
நம்முடைய பிள்ளைகளோ சிறு வயதில் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பினால் தலைமை உபாத்தியாயராயிருப்பவர், "இவன் ரொம்பவும் சின்னப் பையன். இன்னும் ஒன்று இரண்டு வருடம் பொறுத்து அப்புறம் கூட்டிக் கொண்டு வாருங்கள்" என்று சொல்லுவதும், "குழந்தைகள் நன்றாய் ஆடிப்பாடி விளையாடட்டுமே, நன்றாய் எட்டு வருடம் ஆன பின்பு பள்ளியில் வைத்தால் போதாதா?" ஏன் இப்படிக் குழந்தைகளை வதைக்கின்றீர்கள் என்று "பரிதாபப்பட்டு" திருப்பி அனுப்பி விடுகின்றார்கள். தவிர, நாம் நிர்ப்பந்தப் படுத்தி சேர்த்தாலும் அவன் தகுதியைவிட ஒரு வகுப்பு கீழாகவே சேர்க்கிறார்கள். அன்றியும் பள்ளிக் கூட பரீட்சைகளில் கூடுமானவரை ஒவ்வொரு வருடமும் அழுத்தி வைக்கவே பார்க்கின்றார்கள்.
பிறகு பல வழிகளிலும் அதாவது 'உனக்குப் படிப்பு வராது' 'வேறு வேலை பார்த்துக் கொள்', 'வீணாய்ப் பணம் செலவழிக்காதே' 'பெஞ்சுக்கு வாடகை கொடுக்காதே' என்று பேசி பிள்ளையின் ஊக் கத்தையும் உற்சாகத்தையும் கெடுப்பதிலேயே கவலை கொள்ளுகின்றார்கள். பையன்களைச் சர்க் கார் பரீட்சைக்கு அனுப்புவதிலும் உபாத்தியாயர் களுக்கே அந்த உரிமை இருப்பதால் சட்டத்தின் மூலம் எவ்வளவோ தகராறு செய்து பார்த்தும் மீறி னால் வேறு வழியில் தகராறும் சொல்லி நிறுத்திவிடவே பார்க்கின்றார்கள். இவ்வளவும் தாண்டிப் பரீட்சைக்குப் போய் எழுதினாலும் பரீட்சை பரிசோதகர், மார்க்கு கொடுப்பவர், முடிவு சொல்வதில் முக்கியமானவர் ஆகியவர்கள் எல்லோரும் பார்ப்பனர்களே. கடைசி யாகப் பாசானாலும் சர்க்கார் உத்தியோகத்திற்குப் போவதற்கு வேண்டிய வயது தாண்டி விடுகின்றது. ஒரு சமயம் மீதி இருந்தாலும் ஒரு வருடம் அல்லது ஆறு மாதமே இருக்குமாதலால். அவசரத்தில் எங்காவது போய் குழியில் விழுவது போல் சிறிய உத்தியோகந்தான் சம்பாதிக்க முடிகின்றன. பரீட்சையில் தவறிப் போனாலோ அதோ கதிதான். வெளிப்படையாக இவ்வளவு கஷ்டம் நமக்கு இருப்பதுடன் மறைமுகமாய் செய்யக் கூடிய கொடுமைகள் எவ்வளவோ இருக்கின்றன. எனவே இந்த நிலையில் நமது கல்வி சாதனம் இருந்து வரு கின்றது. ஆதலால், சட்டசபையில் இந்த விஷயங்களை விளக்கி இதற்காக ஒரு கமிட்டி ஏற்பாடு செய்து இக்கஷ்டங்கள் உண்டா, இல்லையா, என்று விசாரித் துப் பார்த்து உண்மை என்று பட்டால் இதற்கு ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டும் என்று ஜனப்பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்ளும் சட்டசபை அங்கத் தினர்களைக் கேட்டுக் கொள்கின்றோம். பார்ப்பன ரல்லாத மாணவர்களும் நமக்கு எழுதிக் கொண்டிருப் பதைவிட இதற்காக ஒரு மாணவ மாகாநாடு செய்து தங்கள் குறைகளை அதில் விளக்கிக்காட்டிப் பரி காரத்திற்குச் சில தீர்மானங்கள் செய்து அதை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று யோசனை சொல்லுகின்றோம். மற்றபடி பிள்ளை களுக்குத் தனிப்பட்ட முறையில் இருந்துவரும் கொடுமைகளை மற்றொரு சமயம் விளக்குவோம்.
 'குடிஅரசு' - தலையங்கம் 07-07-1929