வெள்ளி, 27 அக்டோபர், 2023

எனக்குத் தலைவர் பெரியார்தான்!- லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்நான் என்றும் சுயமரியாதைக்காரன்.


'சம்பூர்ண இராமாயணம்' திரைப்படம் எடுக்கும்போது என்னை பரதன் வேடத்தில் நடிக்க அழைத்தார்கள். நான் மறுத்துவிட்டேன். 


'ஏன் நடிக்க மறுக்கிறீர்கள்?' 

என்று கேட்டார்கள்.


நான், "எனக்கென்று ஒரு கொள்கை உண்டு. அது பெரியார் கொள்கை. நான் முதலில் கழகத்துக்காரன். இரண்டாவதுதான் தொழில்!"

என்று சொன்னேன்.


இதனால்தான் அண்ணா என்னை 'லட்சிய நடிகர்' என்று அழைத்தார்கள். அதுவே எனக்கு பட்டமாயிற்று.


மதுரை கறுப்புச்சட்டை மாநாட்டில் கலந்து கொண்டது இன்னும் நினைவில் உள்ளது. அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக என் அம்மாவிற்கு கடிதம் எழுதி, "எனக்கு உடல்நிலை சரியில்லை என்று நீங்கள் கடிதம் போடுங்கள்" என்று கடிதம் எழுதவைத்து அந்த கடிதத்தை நாடகக் கம்பெனியில் காட்டி லீவு வாங்கிக் கொண்டு மாநாட்டில் கலந்து கொண்டேன். அங்கு அய்யா அவர்கள் பேசிய பேச்செல்லாம் நினைவில் உள்ளது.


மூடநம்பிக்கை ஒழிந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று பெரியார் கருதினார். தவறை வெளிப்படையாக தட்டிக்கேட்டவர் பெரியார். அவருக்கு முன்பு அப்படி ஒரு தலைவர் தோன்றியதில்லை. இறுதியில் தந்தை பெரியாரின் கொள்கைதான் நிற்கும்.


தி.மு.க பிரிந்த பிறகும் நான் அய்யாவை சந்தித்து வந்தேன்.


1962ல் தேனியில் திமுக சார்பில் போட்டியிட்டேன். என்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் கட்சியினர், என்னை "கறுப்புச்சட்டைக்காரன். சாமி இல்லை! பூதம் இல்லை!!" என்று சொல்பவன் என்று கூறி எனக்கு ஓட்டுப் போடாதீர்கள் என்று பிரச்சாரம் செய்தார்கள். பண்டித நேரு அவர்கள் எனக்கு எதிராக நின்றவரை ஆதரித்துப் பேசினார். ஆனாலும் நான்தான் வெற்றி பெற்றேன்.


1967ல் திமுக ஆட்சியைப் பிடித்தது. அப்போதெல்லாம் பெரும்பாலும் அண்ணா என் வீட்டில் தான் இருப்பார்.

கழகம் வெற்றிபெற்றதும் அண்ணா அவர்கள் என்னை அழைத்தார்கள்.


"உடனே கார்களுக்கு ஏற்பாடு செய். அய்யா அவர்களைப் பார்க்க வேண்டும்" என்று அண்ணா அவர்கள் கூறினார்கள்.


அன்று இரவே திருச்சி புறப்பட்டோம். அய்யாவை சந்தித்து அண்ணா வாழ்த்து பெற்றார்கள்.


எத்தனையோ சரித்திர நாயகர்களைச் சொல்கிறார்கள். படிக்கிறோம். நாம் கண்ட சரித்திர நாயகர் தந்தை பெரியார்தான். நம்மை மனிதராக்கியவர். தமிழர் சமுதாயத்தை தலைநிமிர வைத்தவர். என்றைக்கும் எனக்கு அய்யா ஒருவரே தலைவர்!


(2003 செப்டம்பரில் வெளிவந்த தந்தை பெரியார் 125 வது பிறந்தநாள் மலருக்காக எஸ்.எஸ்.ஆர் அளித்த பேட்டி.)


(லட்சிடிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் நினைவு நாள் அக்-24) வாழ்க! வாழ்க!!


    - Dhalapathiraj .