வியாழன், 30 ஜூலை, 2015

சுயமரியாதைத் திருமணமும் புராண மரியாதைத் திருமணமும்


- தந்தை பெரியார்
தோழர்களே! இன்று இங்கு நடக்கும் இத் திருமணத் திற்கு சுயமரியாதைத் திருமணமென்றும் சீர்திருத்தத் திருமணமென்றும் சொல்லப்படுகிறது. சுய மரியாதைத் திருமணம் என்றால் சிலருக்குப் பிடித்த மில்லாமல் இருக்கலாம் என்று சீர்திருத்த திருமணம் எனச் சொல்லப்படுகிறது.
சீர்திருத்தம்
எப்படியிருந்தாலும் ஒன்றுதான். சீர்திருத்தம் என்றால் என்ன?  இருக்கின்ற நிலைமையில் இருந்து மாற்றம் செய்வதையே சீர்திருத்தம் என்றும், நாகரிகமென்றும் சொல்லுகிறோம் என்றாலும், இந்தச் சீர்திருத்தமும் நாகரிகமும் வெறும் மாறுதலுக்காகவே ஏற்படுவதும் உண்டு. மற்றும் பல விஷயங்களில் சவுகரியத்தையும், நன்மையையும், அவசியத்தையும், பகுத்தறிவையும் உத்தேசித்து மாற்றப்படுவதும் உண்டு. மாறுதலும் சீர்திருத்தலும் மக்களுக்கும் உலகத்திற்கும் புதிதல்ல. உலகம் தோன்றிய நாள்முதல் ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு மாறுதல் அடைந்து வந்திருக்கின்றது என்பதைச் சரித்திரங்களையும், பழைய சின்னங்களையும் பார்த்து வந்தால் நன்றாய் விளங்கும். அதுபோலவே மனித சமூகம் சகல துறைகளிலும் எவ்வளவு மாறுதல்கள் அடைந்து வந்திருக்கிறது என்பதும் வாழ்க்கையில் எவ்வளவு மாறுதல்கள் அடைந்து வந்திருக்கின்றது என்பதும் நம் குறைந்தகால ஆயுளின் அனுபவத்தைப் பார்த்தாலே தெரியவரும்.
மாறுதல்
மாறுதல் என்பது இயற்கையே ஆகும். மாறுதல் இல்லாமல் எந்தநாடும், எந்தச் சமூகமும், எந்த வஸ்துவும் இருக்கமுடியாது. இந்தக் கலியாணம் சுயமரியாதைக் கலியாணம் என்றும், இதில் பழக்கவழக்கங்கள், சாஸ் திரங்கள், சம்பிரதாயங்கள் ஒன்றும் கவனிக்கப்படுவ தில்லை என்றும், இதை புராண மரியாதைக்காரர்களும், வைதிகர்கள் என்பவர்களும் குற்றம் சொல்லலாம்.
வைதிகம்
சாதாரணமாக இந்நாட்டில் நடைபெறும் வைதிக கலியாணம் புராண முறைப்படி நடக்கும் கலியாணம் ஆகியவைகளைப் பற்றியே சிந்தித்துப் பாருங்கள். வைதிக பிரச்சாரத்துக்கும், வைதிகத்துக்குமாகவே உயிர் வாழ்வதாய் சொல்லிக்கொள்ளும் பார்ப்பன சமுகத் தையே எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களுடைய கலி யாணங்களில் இப்போது எவ்வளவு சீர்திருத்தம், எவ் வளவு மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள். காலை 7 மணிக்கு வீட்டைவிட்டு புறப்பட்டு தூரத்தில் உள்ள கோவில்களுக்குப் போய் அங்கு கலியாணம் செய்துகொண்டு பகல் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு மாலை 6 மணிக்கு புறப்பட்டு வீடுவந்து சேர்ந்து விடுகிறார்கள். 3 - நாள், 5 - நாள், 7 - நாள், அவ்பாசனங்கள், சடங்குகள் என்பவைகள் எல்லாம் எங்கே போய்விட்டன? பெரும்செலவுகள், ஆடம் பரங்கள், பலவகைப்பட்ட விருந்துகள் எல்லாம் எங்கே போய்விட்டன?
சென்னை
மற்றும் குருட்டு நம்பிக்கையும் மூடபக்தியும் பிறந்த ஊராகிய சென்னை முதலிய இடங்களில் நாயுடு, முதலியார், செட்டியார் என்று சொல்லப்படும் ஜாதி களும், வைதிக சிகாமணிகளும் சடங்குகளினாலும், வேஷங்களினாலும் தங்களைப் பெரிய ஜாதியார் என்று சொல்லிக்கொள்ளுகிறவர்களுமான மக்கள் இன்று தங்கள் தங்கள் வீட்டிலேயே, ஒரே நாளில், ஒரு பகலில் ஒரு விருந்தில் கலியாணங்களை முடித்து விடுகின்றனர். இவைகள் எல்லாம் மனிதனில் எவனும் மாறுதலுக்கு ஆளாகாமல் இருக்கமுடியாது. காசிக்கும் ராமேஸ்வரத் துக்கும் நடந்து போனால்தான் புண்ணியம், குதிரை வண்டியில் போய், ரயிலில் போய், மோட்டாரில் போய், ஆகாயக்கப்பலில் மணிக்கு 300 மைல் வேகம் போகக் கூடிய நிலைமையை அடைந்துவிட்டான். இவனிடம் புராணத்தையும், வைதிகத்தையும் பேசினால் செல்லுமா என்றும் யோசித்துப் பாருங்கள். அதுபோலவே சிக்கிமுக்கிக் கல்லின் மூலம் விளக்கு வெளிச்சத்தை உண்டாக்கிக் கொண்டிருந்த மனிதன் விளக்காகி, பந்தமாகி, பவர் லைட்டாகி, கியாஸ் லைட்டாகி, இன்று எலக்டிரிக் லைட் அதாவது ஒரு பொத்தானை அமுக்கினால் லட்சம் விளக்கின் வெளிச்சம் போன்ற பிரகாசத்தைக் கண்டுபிடித்து அனுபவித்து வருகிறான். இந்தக் காரியங்களையெல்லாம் புராணமும், வைதிகமும் தடுத்துவிடக் கூடுமா என்று பாருங்கள்.
திருமணம்
அதுபோலவே இந்தத் திருமணம் என்னும் விஷயத் திலும் முற்போக்கு ஏற்பட்டுத்தான் தீரும். அதை நீங்கள் தடுத்துவிட முடியாது. திருமணத்துக்கு 1000 சாத்திரமும், புராணமும் இருந்தாலும் அதை இனி மக்கள் நம்பிக் கொண்டும், ஏற்றுக் கொண்டும் இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. காலதேச வர்த்தமானத்துக்குத் தகுந்தபடி மாறிக்கொண்டு தான் வரும். அநேக தேசங்களில் கலியாணம் என்ற பேச்சே இப்போது அமலில் இல்லை. ஆணும், பெண்ணும் ஒன்றாகக் கூடித்தான் வாழ வேண்டும் அல்லது வாழ்க்கை நடத்தவேண்டும் என்கின்ற முறையும் இல்லை. இஷ்டப் பட்டால் இரண்டு பேர் கூட்டு வியாபாரம் செய்வதுபோல சேர்ந்து ஒரு குடும்பத்தை நடத்துகிறார்கள். இஷ்டம் இல்லா விட்டால் தனித்தனியாக குடும்பத்தை நடத்துகிறார்கள்.
மேலும் குடும்பம் என்கின்ற தொல்லையே இல்லாமல் சுதந்திர மக்களாகவே இருக்கிறார்கள்.
ஓர் ஆணும், பெண்ணும் சேர்ந்து அனுபவிக்கும் இன் பத்தையும், உணர்ச்சி பரிகாரத்தையும், இரு சினேகிதர்கள் அனுபவிக்கும் சிநேக இன்பத்தைப் போலவும் இயற்கைக் கூட்டுப் போலவும் கருதி வாழுகின்றார்கள். இவை எல்லாம் மனிதன் அனுபவத்தினாலும், நாளுக்கு நாள் மனித னுடைய கஷ்டமும், கவலையும், தொல்லையும் குறைக்கப் பட்டு வர வேண்டும் என்கின்ற முயற்சியினாலும் தத்துவ விசாரத்தினாலும் ஏற்படும் காரியங்களேயாகும்.
சுயமரியாதை
ஆதலால் சுயமரியாதை என்கின்ற வார்த்தையைக் கண்டு யாரும் பயப்பட வேண்டியதில்லை.
மனிதனுடைய பகுத்தறிவுக்கு மரியாதை கொடுப்பது தான் சுயமரியாதையின் முக்கிய தத்துவம் என்பதை ஞாபகத்தில் வையுங்கள். உங்கள் பகுத்தறிவினாலும் உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு ஒன்று தோன்றி உலகப் பழக்க வழக்கத் துக்கு - சாத்திரத்துக்கு - மதக்கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின்மீது அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால் அதைத்தான் சுயமரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகிறோம். அதைத்தான் அடிமைத் தனம், சுதந்திரமற்றதனம் என்று சொல்லுகின்றோம்.
ஆதலால் எந்தக் காரியத்தையும் உங்கள் பகுத்தறி வையும் அனுபவப் பலனையும் அனுசரித்துப் பார்த்து நடக்க வேண்டும் என்கின்ற முறையிலேதான் இந்தச் சுயமரியாதைக் கலியாணம் என்பதும் ஆங் காங்கு செய்யப்பட்டும், பிரச்சாரம் செய்யப்பட்டும் வருகின்றதே ஒழிய வெறும் மாறுதலுக்காக என்று செய்யப்படவில்லை.
புராண மரியாதை
உங்களுடைய புராண மரியாதைக் கலியாணத்தைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். பு. ம. கலியாணத்தின் முதல் தத்தவமே பெண்கள் ஆண்களுக்கு அடிமைகள் - சுதந்திர மற்றவர்கள் - மனிதத் தன்மைக்கு அருகதையற்றவர்கள் என்பவற்றை நிலை நிறுத்து வதற்காகச் செய்யப்படும் சடங்குகள் அல்லது காரியம் என்பது எனது அபிப்பிராயம். உதாரணமாக கன்னிகாதானம், பெண் கொடுத்தல், பெண் வாங்குதல், தாலி கட்டுதல் முதலிய வார்த்தைகளாலும் புருஷனுக்குக் கொண்டவன், கொண்டான் என்று சொல்லப்படுகின்ற வார்த்தைகளாலும் பெண் அடிமை யாகப் பாவிக்கப்படுகிறது என்பதை உணரலாம்.
இந்தச் சுயமரியாதைக் கலியாணம் என்பதன் முக்கிய தத்துவம் கூட்டு வாழ்க்கையில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமோ, உயர்வோ, தாழ்வோ இல்லை யென்பதும் சகல துறைகளிலும் சம சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்பதுமேயாகும்.
மற்றும் வைதிகப் புராண முறைக் கலியாணத்தில் மதம், ஜாதி, வகுப்பு, குலம், கோத்திரம் முதலியவற்றைக் கவனிப் பதே முக்கியமாய் இருப்பதால் ஆண், பெண் பொருத்தம் சரியாய் ஏற்படுவதில்லை. குலத்தில் ஒரு குரங்கை கொள், பாத்திரமறிந்து பிச்சை கொடு, கோத்திரமறிந்து பெண் ணைக் கொடு என்றும் பழமொழிகளைப் பார்த்தாலே குலம், கோத்திரம், ஜாதி, வகுப்பு முதலியவைகளுக்குள்ள நிர்ப் பந்தங்கள் நன்றாய்த் தெரியும். இதன் பயனாய் அநேகக் கலியாணங்களில் பெண்ணுக்கு ஏற்ற மாப்பிள்ளை இல்லாமலும், மாப்பிள்ளைகளுக்கு ஏற்ற பெண் இல்லா மலும், நாயும், பூனையும் போல் ஜோடிகள் சேர்ந்து விடு கின்றன.
சுயமரியாதைக் கலியாணத்தில் ஜாதி, வகுப்பு, குலம், கோத்திரம் என்பனவை கவனிக்கப்படாமல் மணமக்களு டைய யோக்கியதாம்சங்களையே கவனித்துப் பார்க்கப்படு கின்றன.
வைதிகக் கலியாணத்தில் வயதுக்கிரமங்களை தக்க பருவங்களை முக்கியமாய் கவனிப்பதில்லை. தக்க பருவம் வருவதற்கு முன்பு பெண்களுக்குக் கலியாணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருந்து வருகின்றது. உதாரணமாக 10 வயது வந்தால் ஒரு பறையனுக்கு பிடித்துக்கொடு என்று சொல்லும் பழமொழியைப் பார்த்தால் விளங்கும். 50, 60 வயதான ஆண் கிழத்துக்கு 10, 12 வயது பெண் குழந் தையைப் பிடித்து தாலிகட்டி விடுகிறார்கள். கலியாண விஷயத்தில் ஆண்களுக்கு கிழம் என்பதே இல்லையாம்.
இந்த விஷயத்திலும் சுயமரியாதைக் கலியாணம் தக்க சரிசமமான வயதுப் பொருத்தம் பார்த்தே செய்யப்படும்.
மற்றபடி புராணக் கலியாணங்களில் நாள் பார்ப்பது, கோள் பார்ப்பது, சடங்குகள் செய்வது, அதிகச் செலவுகள் செய்வது முதலிய காரியங்களால் கலியாணக்காரர்களுக் குத் தாங்க முடியாததும், விலக்க முடியாததுமான பல அசவுகரியங்கள், செலவுகள் ஏற்படுகின்றன.
உதாரணமாகப் புரோகிதன் அதிகாலையில் நாலரை மணி 5 மணி, 6 மணிக்கு முகூர்த்தம் வைத்துக் கொடுத்து விடுகிறான், இதனால் இரவெல்லாம் தூக்கமில்லாமல் கலியாணத்துக்கு வந்த ஜனங்கள் அவதைப்படுகிறார்கள். பல்லு விளக்காமல், கால், கை கழுவாமல், வெளிக்கும் போகாமல் நித்தியக் கடன்களைக் காலா காலத்தில் கழிக்க முடியாமல் மக்கள் அவதைப்படுவதும் மற்றும் மக்கள் பழக்கவழக்கமெனும், சடங்கு, ஆடம்பரம் முதலியவை களால் கலியாணக்காரர்களுக்குச் சகிக்க முடியாத தொல்லைகளும், தாங்க முடியாத கடன்களும் ஏற்பட்டு அக்குடும்பங்கள் ஒன்று, இரண்டு வருஷங்களுக்கும் சில சமயங்களில் வாழ்நாள் முழுவதும் கடனில் மூழ்கி வேதனைப்படுவதுமாக இருந்து வருகின்றது.
சுயமரியாதைக் கலியாணத்தில் எல்லோருக்கும் சவுகரியமான நேரமும், மிகவும் சுருக்கமான செலவும் கொண்டு நடத்தப்படுவதோடு அனாவசியமான அர்த்த மற்ற சடங்குகளையும் ஒழித்து நடத்தப்பட வேண்டு மென்று கற்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் எல்லாம் கலியாணத்திற்கு ஏதாவது பலக்குறைவோ, கெடுதலோ ஏற்பட்டுவிடும் என்று யாரும் பயப்பட வேண்டிய தில்லை. கலியாணத்துக்கும், ஜாதி, மதம், சடங்கு, நேரம், காலம், குலம், கோத்திரம் ஆகியவைகளுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை.
புராண மரியாதையால் என்ன பயன்?
நம் நாட்டில் ஜாதி, மதம், குலம், கோத்திரம், காலம், நேரம், சடங்குக்கிரமம் முதலியவற்றைக் கவனித்தே 100க்கு 99 கலியாணங்கள் செய்யப்படுகின்றன. இப்படி யெல்லாம் செய்தும் இன்று அவற்றின் பலன்களைக் கவனித்துப் பார்ப்பீர்களே யானால் ஒட்டு மொத்தம் பெண் சமுகத்தில் 100க்கு 20 பெண்கள் விதவைகளாய் இருக்கிறார்கள். இந்த விதவைகளுள் 100க்கு 25 பேர்கள் 20 வயதிற்குக் கீழ்ப்பட்ட விதவைகள் என்றால் அவர் களின் கஷ்டத்தையும், அனுபவிக்கும் வேதனைகளையும் பற்றி உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. நாள், கோள் பார்த்து சாதிரப்படி சடங்குகள் செய்யப் பெற்ற தெய்வீகக் கலியாணங்களில் பெண்கள் 100க்கு 20 பேர் ஏன் விதவைகளாய் இருக்க வேண்டும். அவர்களில் 100க்கு 25 பெண்கள். 20 வயதுக்குட்பட்டவர்கள் விரக வேதனையில் ஏன் அழுந்திக் கொண்டிருக்க வேண்டும் இது தெய்வீக மதத்தின் பலனா?  அல்லது அசுர மனத்தின் பிசாச மனத்தின் பலனா என்று யோசித்துப் பாருங்கள். தெய்வீகம், பழக்கம், வழக்கம், சாதிரம் என்கின்ற வார்த்தைகள் முன்னேற்றத்துக்கும், பகுத்தறிவுக்கும், சுதந்திரத்துக்கும், ஜென்ம விரோதியான வார்த்தை களாகும். (ஆதலால் சுயமரியாதைக் கலியாணம் என்பதில் மேற்படி முன்னேற்ற விரோதியான வார்த்தைகளாகும்.) ஆதலால் சுயமரியாதைக் கலியாணம் என்பதில் மேற்படி முன்னேற்ற விரோதிகளுக்கும், சுதந்திர விரோதிகளுக் கும் இடமில்லை. இந்தக் காரணங்களால்தான். பழமை விரும்பிகள், வைதிகர்கள் பகுத்தறிவற்ற கோழைகள், சுயமரியாதை இயக்க மென்றாலும், சுயமரியாதைக் கலியாணமென்றாலும் முகத்தைச் சுழித்து கண்களை மூடி விழிப்பார்கள். இவர்களைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. இந்தக் கூட்டங்களுக்கு மரியாதைக் கொடுத்த எந்த தேசமோ, சமுகமோ விடுதலை பெற்றதாக யாரும் சொல்ல முடியாது.
ஆகையால்தான் இந்தப் பிரச்சாரம் செய்து வரு கின்றோம். மற்றபடி இந்தக் கலியாணத்தில் என் போன் றாருக்கு யாதொரு வேலையும் இல்லை. புரோகிதத்துக் காக எவரும் இங்கு வரவும் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் எல்லோரும் இதனை, கவனித்து நன்றாய் சிந்தித்துப் பாருங்கள், நன்மையைக் கைக்கொண்டு பகுத் தறிவு வளர்ச்சிக்கும் விடுதலைக்கும் உதவி புரியுங்கள் என்ற கேட்டுக் கொண்டு, உங்கள் சார்பாக மணமக்கள் தங்கள் ஒப்பந்தங்களைக் கூறி ஒருவரையொருவர் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ள வேண்டிக் கொள்ளுகிறேன்.
(22.09.1934 கோவை சுயமரியாதை சங்கத்தின் ஆதரவினால் தோழர் என். கிருஷ்ணசாமிக்கும் வி. லட்சுமிக்கும் நடைபெற்ற சுயமரியாதை  திருமண சொற்பொழிவு)
- பகுத்தறிவு - சொற்பொழிவு - 07.10.1934
விடுதலை,12.7.15

புதன், 29 ஜூலை, 2015

முரளீஸ் கபே போராட்டத்தின் முகாந்திரம் என்ன?


சென்னை திருவல்லிக்கேணி பகுதியில், முரளி பிராமணாள் கபே - இன்றைய நிலை படம்(2015)

-கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர், திராவிடர் கழகம்

பார்ப்பனர்களுக்கு இப்பொழுதெல்லாம் துளிர் விட்டுவிட்டதா? இடக்கு முடக்காக எல்லாம் பேச, எழுத ஆரம்பித்துவிட்டனர் - பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்ட ஆரம்பித்துவிட்டனர்.
58 ஆண்டுகளுக்குமுன் நடந்த ஒரு பிரச்சி னையை மீண்டும் கிளறிவிட ஆசைப்படுகிறார்கள்.
திருச்சியில் 18.4.1957 அன்று கூடிய திராவிடர் கழக மத்திய கமிட்டியில், ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சியின் ஒரு கூறாக ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
5.5.1957 முதல் பார்ப்பனர் உணவு விடுதிகளில் இடம்பெறும் பிராமணாள் என்ற எழுத்துகளை அழிப்பது என்பதுதான் அந்த அறிவிப்பு.
அதனைத் தொடர்ந்து மாநில ஆட்சியாளருக்கும், ஆளுநருக்கும் தந்தை பெரியார் கடிதம் ஒன்றை எழுதினார். அது விடுதலையிலும் வெளிவந்தது (27.4.1957).
ஜாதிப் பிரிவு என்பது நம்நாட்டில் அனு பவப்பூர்வமாக பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்ற இரண்டு பிரிவுகளுக்குள் அடங்கிவிடு வதாக உதாரணத்துடன் குறிப்பிடப்பட்டு இருந்தது. சிலர் தங்களை க்ஷத்திரியர் என்றும், சிலர் வைசியர் என்றும் அழைத்துக் கொண் டாலும், பிராமணாள் இவர்களையும் சூத்திராள் என்றுதான் கருதுகிறார்கள்.
தெரிந்தோ தெரி யாமலோ பிராமணாள் விடுதி என்ற உணவுக் கடைகளை நடத்திட அரசு அனுமதி தந்து விடுகிறது. பார்ப்பனர் வீடு என்று அவர்கள் சொந்த வீட்டில் போட்டுக்கொள்ளட்டும்; அரசு அனுமதியோடு மற்றவர்களை இழிவுபடுத்தும் அடையாளமாகவும், பணம் சம்பாதிக்கவும் ஏன் பிராமணாள் என்ற வார்த்தை பயன்பட வேண்டும்? 25 ஆண்டுகளுக்கு முன்பே நான் சில நகர சபைத் தலைவர்களையும் சேர்த்துக் கொண்டு நகர சபை லைசென்ஸ் தர மறுத்தேன்.
(1917 இல் ஈரோடு நகர மன்றத் தலைவராக தந்தை பெரியார் இருந்தபோது, ஈரோட்டில் கொங்கப்பறைத் தெரு என்று இருந்ததை வள்ளுவர் தெரு என்று மாற்றினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது).
அரசு நகர சபை இதில் தலையிடக்கூடாது என்றது. பிறகு ரயில்வேயுடன் போராடி அங்கே யிருந்த பிராமணாள் ஓட்டல், பிராமணாள் சாப்பிடுமிடம் ஆகியவற்றை எடுக்கச் செய்தேன். எனவே, அருள்கூர்ந்து 5.5.1957-க்குள் அமலுக்கு வருமாறு ஓர் அவசர உத்தரவு பிறப்பித்துப் பிராமணாளை அகற்றிவிட்டால்,
நேரடி நட வடிக்கையாக ஒரு கிளர்ச்சி செய்ய அவசிய மிருக்காது என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று முறைப்படி அந்தக் கடிதத்தில் குறிப்பிட் டிருந்தார் தந்தை பெரியார். இதற்கான உரிய நியாயமான பதில் அரசு தரப்பிலிருந்தோ, ஆளுநர் தரப்பிலிருந்தோ பதில் வராத நிலையில், நாடெங்கும் பிராமணாள் போர்டு அழிப்புப் போராட்டத்திற்கு ஆணை பிறப்பித்தார் அறிவுலக ஆசான் அய்யா பெரியார்!
அனேகமாக, எல்லா இடங்களிலும் பிராமணாள் ஒழிந்தபோது, சென்னை திருவல்லிக்கேணி பகுதியில், முரளி பிராமணாள் கபே என்ற உணவு விடுதிக்கார பார்ப்பனர் மட்டும் பிராமணாள் பெயரை எடுக்கமாட்டேன் என்று அடம்பிடித்தார்.
தந்தை பெரியார் நினைத்திருந்தால், கழகத் தோழர்கள் நினைத்திருந்தால், அந்தப் போர்டை எடுக்க எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்?
எந்தப் போராட்டத்தையும் வன்முறையில் நிறைவேற்றிக் கொள்ள விரும்பாதவர்தான் வெண்தாடி வேந்தர் தந்தை பெரியார்.
அந்த உணவு விடுதியின் முன் நாள்தோறும் மாலை நேரத்தில் அமைதியான முறையில் மறியல் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்து, அறிவிக்கவும் செய்தார்.
அந்த உணவு விடுதிமுன் அறப்போராட்டத்தை தந்தை பெரியாரே தொடங்கியும் வைத்தார். நாள் தோறும் கழகத் தோழர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தொடக்கத்தில் சிட்டி போலீஸ் ஆக்ட் 41 ஆவது பிரிவின்படி ரூ.50 அபராதம் என்றும், கட்டத் தவறினால் இரண்டு வாரம் சிறை  தண்டனையும் விதிக்கப்பட்டது. சில நாள்கள் கழித்து 71(11) என்ற இன்னொரு விதியைச் சுட்டிக்காட்டி, மூன்று வாரம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது - பிறகு 5 வாரம் என்றும் நீண்டது.
கருஞ்சட்டைத் தோழர்களா அபராதம் கட்டுவார்கள்? சிரித்த முகத்துடன் சிறைச் சாலை நோக்கிச் சென்றனர். அன்னை மணியம்மை யார், குத்தூசி குருசாமி, ஏ.பி.ஜனார்த்தனம் என்று தோழர்கள் சிறைச்சாலைக்குச் சென்ற வண்ணம் இருந்தனர்.
வெளியூர்களிலிருந்தெல்லாம் கழகத் தோழர்கள் திரள ஆரம்பித்தனர். 5.5.1957 இல் தொடங்கப்பட்ட மறியல் போராட்டம் 2.12.1957 அன்றோடு முடிவுற்றது - 1010 கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.
முரளி பிராமணாள் கபே உரிமையாளரான பி.கே.வெங்கடேசன் முதல் நாள் இரவு ஒரு கூடை மாம்பழத்துடன் சென்னை மீரான் சாகிபு தெருவில் இருந்த தந்தை பெரியார் அவர்களிடம் சரணடைந் தார். தன் தவறுக்கு மன்னிப்புக் கோரினார். பின்னர் முரளி பிராமணாள் கபே என்ற பெயர் முரளி  அய்டியல்  ஓட்டல் என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டது (22.3.1958).
தந்தை பெரியார் அவர்களின் பெருந்தன்மை - முரளீஸ் கபே ஓட்டல் முதலாளி நேரில் வந்து மன்னிப்புக் கோரிய செய்தியை விடுதலையில் வெளியிடவேண்டாம் என்று தடுத்துவிட்டார்.
ஒருவர் தன்னைத் தனிமையில் சந்தித்து, மன்னிப்புக் கோரிய நிலையில், அதனை வெளியில் பரப்புவது சம்பந்தப்பட்டவரை அவமதிப்பதாகும் என்று தந்தை பெரியார் கூறிவிட்டார்கள்!
உண்மை இவ்வாறு இருக்க, அந்த முரளீஸ் கபே உரிமையாளரின் மகன் என்று சொல்லிக்கொண்டு, வினாயகர் முரளி என்பவர் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏட்டில் (26.6.2015) ஒரு கரடியை அவிழ்த்து விட்டுள்ளார்.
பிராமணர்களுக்கு எதிராக ஈவெராவின் பலவழிகளிலும் நடைபெற்ற போராட்டங்கள் ஒரு சார்பாகவே இருந்தன. 1950களின் இறுதியில் ஏராளமான பார்ப்பனர்கள் குறிவைக்கப்பட்டனர்.
தன்னுடைய தனிப்பட்ட அனுபவம்குறித்து கூறுகையில் உடல் ரீதியிலும், மனதளவிலும் பெரியாரின் தொண்டர்களால் பார்ப்பனர்கள் குடும்பத்தைக் குறிவைத்து தாக்கப்பட்டதற்கு சாட்சியாக இருக்கிறேன். 1950களின் இறுதியில்திருவல்லிக்கேணி பாரதி சாலையில் ஹோட்டல் முரளி கபே உரிமை யாளர்  என்னுடைய தந்தை  பி.கே.வெங்கடேசு வரன் திராவிடர் கழகத்துக்காரர்களால் அச் சுறுத்தப்பட்டார்.  உணவகத்தின் பெயர்ப்பலகை யில் பிராமணாள் என அமைக்கப்பட்டிருந்தது.
பிராமணாள் என்பதை நீக்க வேண்டும் என்று கூறியதற்கு அவர் மறுத்துவிட்டதுதான் காரணம். தொடர்ச்சியாக அவர் அதில் உறுதியாக இருந்ததால், ஈவெரா ஓராண்டுக்கும் மேலாக நாள்தோறும் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வந்தார்.
அப்போது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர். ஹோட்டலுக்கு வருவோர்மீது தாக்கு தலை நடத்தினார்கள். அந்த ஹோட்டலுக்கு வருபவர்கள் பார்ப்பனர் அல்லாதவர்களாக இருந்தாலும், பணியாற்றுபவர்கள் அதிக எண்ணிக்கையில் பார்ப்பனர் அல்லாதவர்களாக இருந்தபோதிலும் தாக்கப்பட்டனர்.
அதேநேரத்தில் என்னுடைய தந்தையின் பார்ப்பனர் அல்லாத நண்பர்கள் அந்த இக் கட்டான நிலையில் உதவிவந்தனர். என்னுடைய தந்தை சட்டப்போராட்டத்தை நடத்திவந்தார். இந்தப் பிரச்சினைகுறித்த  தகவல் பிரபலமாக செய்தித்தாள்களில் இடம் பிடித்தது. தமிழ்நாடு சட்டமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது.
கடைசியாக காஞ்சி சங்கராச்சாரியின் தலையீட்டின்பேரில் கபே மீதான தாக்குதல்கள் முடிவுக்கு வந்தன. பெயர்ப்பலகையிலிருந்து பிராமின் என்கிற சொல்லும் அகற்றப்பட்டது. சுத்த சைவம் என்பதைக்குறிக்கவே அது பயன்படுத்தப்பட்டது. ஜாதியைக் குறிப்பிட்டு எதுவும் செய்வதற்காக இல்லை.
- வினாயகர் முரளி, திருவல்லிக்கேணி, சென்னை.
பரிதாபம்! அந்தப் போராட்டம் நடந்த ஆண்டுகூட இவருக்குத் தெரியவில்லை; 1950 ஆம் ஆண்டில் நடந்ததாக எழுதுகிறார். அது உண்மையிலேயே நடந்தது 1957 ஆம் ஆண்டில்தான். யாரோ தூண்டி விட்டு, அவசரத்திலும், ஆத்திரத்திலும் எழுதினால் இப்படித்தான்; 5.5.1957 இல் தொடங்கப்பட்டு 2.12.1957 இல் நிறைவுற்றது; அந்தப் போராட்டம் என்பதுதான் உண்மை.
தந்தை பெரியார் வன்முறையால் சாதித்து இருக்க முடியும். அதற்கு அதிக நேரமும் தேவைப்படாது; தந்தை பெரியார் அவர்களை அறிந்தவர்களுக்கு ஓருண்மை உறுதியாகவே - தெளிவாகவே தெரியும்; அவர் வன்முறையை வெறுக்கக்கூடியவர். போலீஸ் காரர் அடித்தாலும் அய்யா! முகத்தைப் பார்க்காதே - நன்கு அடிபடும் வண்ணம் முதுகைக் குனிந்து காட்டு என்று சொன்ன சொக்கத் தங்கமாயிற்றே அவர் - அவரைப் பார்த்தா இப்படி அபாண்டமாக 58 ஆண்டு களுக்குப் பிறகு அழி பழி சுமத்த ஆசைப்படுவது?
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் என்றால்,  பார்ப்பனர்களுக்கு இப்பொழுதெல்லாம் நெரிகட்ட ஆரம்பித்துவிட்டது. இந்த நிலையில் எந்த அபாண் டத்தையாவது அவர்கள்மீது கொளுத்திப் போட வேண்டும் என்ற நெருக்கடி அவாள் வட்டாரத்துக்குள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இத்தகையவர்களைத் தேடிப்பிடித்து பின்னாலி ருந்து இயக்கக்கூடிய இந்துத்துவா அமைப்புகள் நாட்டில் இருப்பது தமிழ்நாட்டின் வெகுமக்களுக்கு மிக நன்றாகத் தெரியுமே!
முரளீஸ் கபே போராட்டத்தின்போது, ஆகஸ்ட் கிளர்ச்சி என்ற தலைப்பில் தந்தை பெரியார் வெளியிட்ட அறிக்கையைப் படித்துப் பார்த்தால், அந்த அறப்போராட்டத்தைத் தந்தை பெரியார் நடத்திக் காட்டிய பாங்கின் சிறப்பு விளங்கும்.
அய்யா இந்த ஓட்டல் பார்ப்பனரு டையது. இந்த ஜாதி நம் குடியை, வாழ் வைக் கெடுத்த ஜாதி, நம்மை ஏமாற்றி பாடுபடாமல், நமது உழைப்பைச் சுரண்டிக் கொழுத்திருப்பதோடு, நம்மைச் சூத்திரன், தாசி மகன், பறையன், சக்கிலி, சண்டாளன், கீழ்ஜாதி, இழிமகன் என்றெல்லாம், சட்டம், சாஸ்திரம், வேத, புராண இதிகாசங்களில் எழுதி வைத்துக் கொண்டு அந்தப் படியே நடத்தி வரு கின்றனர்.
இந்தப் பார்ப்பனர் ஓட்டலில் நாம் சென்று உணவருந்துவது இழிவு! இழிவு! மகா இழிவு! மானங்கெட்ட கீழ்த்தர இழிவு! அய்யா, அருள்கூர்ந்து அங்கு செல்லாதீர்கள் என்று கைகூப்பி, குனிந்து, கெஞ்சிக் கேட்டு திரும்பிப் போகச் செய்யவேண்டும்.
- ஈ.வெ.ரா.
விடுதலை, 23.7.1957
பொதுமக்கள் மத்தியில் எப்படி வேண்டுகோள் வைக்கவேண்டும் என்று இப்படி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கைகூப்பி, குனிந்து, கெஞ்சிக் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று அல்லவா வேண்டுகோள் விடுத் துள்ளார். இத்தகைய தலைவரைப்பற்றியா பழி போடுவது?
பழி போடுவதும், அபவாதம் பேசுவதும்தான் பார்ப்பனர்களுக்கே உரித்தான வயிற்றுப் பிழைப்புக் கலையாயிற்றே!
இந்தக் காலகட்டத்தில் மாநிலக் காவல்துறை அமைச்சர் எம்.பக்தவத்சலம் அவர்களிடம் செய்தி யாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் என்ன பதில் சொன்னார் தெரியுமா? பத்திரிகைகளில் வெளிவந்ததைப் போன்று யாரும் அவருடைய இயக்கத்தால் பாதிக்கப்படவில்லை என்றார்.
(9.12.1957 திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியது)
இந்த இடத்தில் முக்கியமாக குறிப்பிடவேண்டிய ஒரு தகவலும் உண்டு.
மறியலில் ஈடுபட்ட திராவிடர் கழகத் தோழர்கள் மீது ஒரு நாள் ஓட்டலின் மாடியிலிருந்து முரளீஸ் கபே பார்ப்பனர்கள் சுடுநீரை ஊற்றினார்கள் என்பது சாதாரணமா? அப்பொழுதுகூட கழகத் தோழர்கள் தந்தை பெரியார் அவர்களின் கட்டளைக்குக் கட்டுப்பட்டவர்கள் என்ற முறையில் அமைதி காத்தனர்.
இயல்பாக அந்த நேரத்தில் எத்தகைய வன்முறைகள் வெடிக்க வாய்ப்புண்டு என்பதை ஒரே ஒரு நொடி எண்ணிப் பார்த்தால், கழகத் தோழர்களின் பண்பாட்டின் - கட்டுப்பாட்டின் மேன்மை எத்தகை யது என்பது விளங்காமற் போகாது.
மீண்டும் 1978 இல் சில இடங்களில் பிராமணாள் ஓட்டல் தலைதூக்கியபோது, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் போராட்ட அறிவிப் பினை வெளியிட்டார். அந்தநேரத்தில், ஓட்டல் சங்கத் தலைவராக இருந்த திரு.எம்.பி.புருசோத்தமன் அவர்கள் கழகத் தலைவருக்குக் கடிதமே எழுதினார். பிராமணாள் என்ற பெயர் நீக்கப்படும் - எல்லா உணவு விடுதிகளுக்கும் சுற்றறிக்கை விடப்பட் டுள்ளது என்று எழுதினாரே, அந்த வரலாறு எல்லாம் வினாயகர் முரளிகளுக்குத் தெரியுமா?
கடைசியாக சிறீரங்கத்து கிருஷ்ணய்யர் என்பவர் நடத்தி வந்த ஓட்டலில் பிராமணாள் தலைகாட்டியது. கழகம் களத்தில் குதித்தது. அடம் பிடித்த கிருஷ் ணய்யர், சிறீரங்கத்தில் கழகத் தலைவர் ஆற்றிய உரையின் எழுச்சி - கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் மூண்டெழுந்த கிளர்ச்சி காரணமாக இரவோடு இரவாக மூட்டையைக் கட்டிக் கொண்டு புறப்பட்டு விட்டாரே! (4.11.2012).
வன்முறையை அக்கிரகாரத்தின் பக்கம் ஏவ வேண்டும் என்று தந்தை பெரியார் விரும்பியிருந்தால், காந்தியார், நாதுராம் கோட்சே என்ற பார்ப்பனரால் படுகொலை செய்யப்பட்டபோது, அந்தச் சந்தர்ப்பத் தைத் தந்தை பெரியார் பயன்படுத்தியிருந்தால், ஒரு புல், பூண்டு மிஞ்சியிருக்குமா? அதேநேரத்தில், அன்றைய பம்பாயில் என்ன நடந்தது? பார்ப்பனர்கள் தாக்கப்படவில்லையா? பல வீடுகள் தாக்கப்பட வில்லையா?
நியாயமாக பார்ப்பனர்கள் தந்தை பெரியாருக்கும், திராவிடர் கழகத்துக்கும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளவர்கள். கழகத்தின் பண்பாட்டைப் பலகீனமாக எடை போடவேண்டாம்!
-விடுதலை,1.7.15

சனி, 25 ஜூலை, 2015

ஆஸ்திகனா? நாஸ்திகனா? (சித்திரபுத்திரன்)-10

நாஸ்திகன்:- பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியாவை விடுதலை செய் விக்க வேண்டும் என்று பேசுகிற, பாடுபடுகிற தேசாபிமானிகள், தேசிய வாதிகள், தேச பக்தர்கள் ஆகியவர்கள் ஆஸ்திகர்களா? நாஸ்திகர்களா?
ஆஸ்திகன்:- ஆஸ்திகர் என்றால் என்ன?
நா:- சர்வ சக்தியும் சர்வ வியாபகமும் உள்ள சர்வேஸ்வரன் ஒருவன் உண்டு. உலகம் முழுமையும் உண்டாக்கி ஆண்டு வருகிறான். அவ(னது சித்தம்) னன்றி ஒரு அணுவும் அசையாது என்கின்ற முடிவை உடையவர்கள்.
ஆ:- நாஸ்திகர் என்றால் என்ன?
நா:- மேற்கண்ட முடிவை ஒப்புக் கொள்ளாதவர்கள். ஆகவே பிரிட்டிஷ் ஆதிக்கத்தை ஒழிக்கவேண்டும் என்ற தேச பக்தர்கள் முதலிய வர்கள் ஆஸ்திகர்களா? நாஸ்திகர்களா?
ஆ:- பிரிட்டிஷ் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்கின்ற வர்களுக்கும் ஆஸ்திக நாஸ்திகத்துக்கும் என்ன சம்பந்தம்?
நா:- சர்வ சக்தி, சர்வ வியாபகம், சர்வஞ்ஞத்துவம் உள்ள கடவுளின் திருச்சித்தமில்லாமல் இந்தியாவுக்கு பிரிட்டிஷ் ஆதிக்கம் வந்திருக்க முடியுமா?
ஆ:- ஒரு நாளும் வந்திருக்க முடியாது.
நா:- அப்படிப்பட்ட கடவுளுக்கு பிரிட்டிஷ் ஆதிக்கம், இந்தியாவுக்கு மிக மிக இன்றியமையாத அவசியம் என்ற முடிவேற்படாமல் திருச்சித்தம் ஏற்பட்டிருக்குமா?
ஆ:- ஏற்பட்டிருக்காது.
நா:- அப்படியானால் சர்வ சக்தி, சர்வ வியாபகம், சர்வஞ்ஞத்துவம் உள்ள ஒரு கடவுளுடைய முடிவுக்கும் திருச்சித்தத்திற்கும் விரோதமாக இந்தியாவில் இருந்து பிரிட்டிஷாரின் ஆதிக்கம் ஒழிந்துவிட வேண்டு மென்று கருதுவதும் முயற்சிப்பதும் கடவுளுடைய சர்வசக்தி........... முதலிய வைகளை நம்பாமலா அல்லது கடவுளின் அப்படிப்பட்ட சக்திகளுடன் எதிர்த்து போட்டிபோட்டுப் பார்க்கவா?
ஆ:- கடவுளின் சர்வ சக்தியை நன்றாய் அறிந்து தினமும் கடவுளிடம் பேசும் மகாத்மா காந்திகூட இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை ஒழிக்கவேண்டுமென்று தானே கருதுகிறார்.
நா:- அது வேறு சங்கதி. உம்மைக் கேட்டதற்கு நீர் பதில் சொல்லும்.
ஆ:- எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. காந்தியார் வரப்போகிறார். அவரைக்கேட்டு நான் பதில் சொல்லுகிறேன்.
நா:- உன் சங்கதியே அதாவது நீ நாஸ்திகனா? ஆஸ்திகனா? என்கின்ற சங்கதியே உனக்குத் தெரியாமல் திண்டாடுகிற நீ, சுயமரியாதைக் காரர்கள் நாஸ்திகர்கள் என்று சொல்லுவது மடத்தனமும் போக்கிரித்தனமு மான காரியமா இல்லையா? அல்லது இவ்விரண்டிலொன்றா இல்லையா?
ஆதலால் இந்த சங்கதிக்கு சரியான பதில் தோழர் காந்தியிடமிருந்தோ அல்லது அவரது பாட்டனாரிடமிருந்தோ தெரிந்து வந்து எனக்குச் சொல்லு கின்ற வரையில் சு.ம. காரர் நாஸ்திகர் என்று எங்காவது, மூலை முடக்கு களிலாவது, சந்து பொந்துகளிலாவது பேசுவாயேயானால் உன்னைப்போல் அயோக்கியன், இழிதகமை உள்ள மனிதன் அற்பன், மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் சோம்பேறிக் கூட்ட வஞ்சகன் வேறு யாரும் இல்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்.
-விடுதலை,24.7.15

மதம் மனிதனுக்கு அவசியமா?


மதநம்பிக்கையாளன்:- மனிதனின்றும் மத நம்பிக்கையை ஒழிப்பதினால் என்ன பயன் ஏற்படப் போகின்றது? மத நம்பிக்கை புறக்கணித்த சமூகத்தினர் களையும், பாமர மக்களையும் சன்மார்க்க ஒழுக்கத்திலீடு படச் செய்யாதா?
மதநம்பிக்கையற்றவன்:- தங்களுடைய அபிப் பிராயம் சரியானதாகத் தோன்றவில்லை. உலகில் இன்று ஏற்பட்டிருக்கும் சகல சண்டை சச்சரவுகளுக்கும், குழப்பங்களுக்கும் மதமே காரண கர்த்தாவாக இருக் கின்றது. உலக சரிதத்தை ஊன்றி படிப்பின் மதத்தின் பெயரால் அனேக இரத்த ஆறுகள் பெருகியிருப்பதை காண்கிறோம்.
தற்போது அனுஷ்டானத்திலிருக்கும் ஜாதி வித்தியாசமும், அனுசார மூடநம்பிக்கைகளும் மதத்தி னின்றே தோன்றினவைகளாகும். இதை மதங்களே காப்பாற்றிக் கொண்டு வருகின்றன. எல்லா மதப் புரோகிதர்களும் எளிய மக்களை ஏமாற்றி இரத்த வியர்வை விட்டு உழைத்து சம்பாதிக்கும் சிறு பொருளை கவர்ந்துக் கொள்ளுவது பிரசித்தி பெற்ற விஷயமாகும்.
இப்படி மக்களுக்கு தீமை விளைவிக்கும் மதத்தை அழிப்பது ஒரு பெரும் உபகாரமாகும். சன்மார்க்கத்தில் மனிதனை ஈடுபடச்செய்வது மதமல்ல. ஆனால் பகுத்தறிவு தன்மையினால் ஆராய்ந்து நடப்பதாகும்.
நம்பிக்கையாளன்:- சத்தியத்துடனும் வெகு மதியுடனும், இன்பத்துடனும் ஜீவிதத்தை நடத்த வேண்டுமானால் ஒருவனுக்கு மதம் அவசியமில்லையா?
நம்பிக்கையற்றவன்:- ஒருக்காலுமில்லை. சத்திய மாகவும், மரியாதையுடனும் ஜீவிப்பதற்கு மத நம்பிக்கை அவசியமில்லை. அதற்கு ஒவ்வொருவனுடைய அறிவையும் சரியான முறையில் நடத்தினால் போதும், உலகப் பிரசித்தி பெற்ற சார்லஸ் பிராட்லா, இங்கர்சால் ஹக்ஸிலி, டார்வின் போன்றோர் மிக பிரசித்தியுடன், பொது ஜனங்களின் நன்மதிப்பை பெற்று உண்மையுடனேயே வாழ்ந்து வந்தனர்.
நம்பிக்கையாளன்:- வேத புத்தகங்களிலும், பைபிளிலும், குரானிலும் நம்பிக்கை கொள்வது மனிதனை சன்மார்க்கத்திலீடு படச்செய்யும் என்பதை தாங்கள் மறுக்கின்றீரா?
மதநம்பிக்கையாளன்:- அது மிகக்குறைவாகும். பொதுவாக மதநூற்களிலுள்ள தத்துவங்கள் மக்களுக்கு நன்மை பயப்பதாகும்.
நம்பிக்கையற்றவன்:- தாங்கள் கூறுவது சரியல்ல, சன்மார்க்கத்தை போதிக்கின்ற நம்பிக்கை மனிதனுக்கு இருக்கிறதென்றால் அது உலகில் பொதுவாக நன்மை பயக்க வேண்டியது தான்.
ஆனால் தற்போது நம்நாட்டில் எல்லா திருடர்களும், கொலையாளிகளும், அக்கிரமக் காரர்களும் கொடுங்கோன்மையாளர்களும் மதத்தில் நம்பிக்கை உடையவர்களாகவே காணப்படுகின்றனர்.
நம்பிக்கையாளன்:- தங்களுக்கு மத நம்பிக்கையோடு உலகிற்கு செய்யும் நன்மை, மத நம்பிக்கையில்லாமல் செய்வதை விட பதின் மடங்கு அதிகரித்ததாகும் என்பது தான் எமது அபிப்பிராயம். மத நம்பிக்கை இல்லாதவன் எனக்கூறுமாயின் தங்களை யாரும் அனுகூலிக்கவோ, அல்லது தங்களுடைய அபிப்பிராயங்களை எவரும் கவுரவிக்கவோ மாட்டார்கள்,
நம்பிக்கையற்றவன்:- பொது ஜன அபிப்பிராயத் திற்காக எமது மனத்திற்கு எதிராக எமது அறிவிற்கு பொருந்தாத எக்காரியத்தையும் செய்ய துணியவே மாட்டான். பொதுஜன பெரு வெள்ளத்தில் ஒழுக நான் என்னை அனுமதிக்க வில்லை.
எமக்கு சரியான தென்றும், நியாயமான தென்றும் தோன்றுவதை நான் செய்வேன். அதை பிறருக்கும் கூறுவேன். அது அநீதியென பிறர்கூறின் அதை பகுத்தறிவால் ஆராய்ந்து ஒப்புக்கொள்ள ஒருக்காலும் பின் வாங்க மாட்டேன்.
நம்பிக்கையாளன்:- தாங்கள் ஒரு மத நம்பிக்கை இழந்தவனெனக் கூறி மற்ற பொதுக்காரியங்களில் ஈடுபடினும் மக்கள் அதை ஆதரிக்க மாட்டார்கள்.
மதநம்பிக்கையற்றவன்: இது ஒரு பெருந்தவறு, பொது நன்மை பயக்கின்ற எல்லா காரியங்களுக்கும் எல்லா மத நம்பிக்கையாளர்களும் மத நம்பிக்கை இழந்தவர்களும் ஒன்று சேர்ந்து பிரயாசைப்படுவதில் என்ன தவறு. மகம்மதியர்களும், இந்துக்களும் பீகார் பூகம்பத்திற்காக பணத்தை சேகரிக்கக் கூடாதா? மது ஒழிப்பைப் குறித்து பிரசங்கிக்கக் கூடாதா?
நம்பிக்கையாளன்:- ஆமாம்! தங்களுக்கு மத நம்பிக்கை இல்லையே!
நம்பிக்கையற்றவன்:- மத பாகுபாடுகளை முன் நிறுத்தி மண்டையை உடைத்துக் கொள்ளும் கொடிய மதம் எனக்கு வேண்டவே வேண்டாம்.
நம்பிக்கையாளன்:- மதம் அவசியமில்லாதவர்களுக்கு தாங்கள் வேறு எதை அளிக்கின்றீர்?
நம்பிக்கையற்றவன்:- மனித வாழ்க்கையில் அனு சாரங்களுடனும், மூட நம்பிக்கைகளுடனும் பகிரங்கபோர் தொடுத்து ஜெயிப்பதற்குரிய பகுத்தறிவு.
(புரட்சி, 1934)


தந்தை பெரியார் பொன்மொழிகள்
  • கரைபுரண்டு போகும் சீர்திருத்த வெள்ளத்தை நாம் ஒரு புறமாகத் திருப்பி விட்டுப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கருதுவதெல்லாம் வெறும் மாறு பாட்டுக்காக மாறவேண்டுமென்றில்லாமல் பகுத்தறிவுக்கும், தன் மானத்திற்கும், வாழ்க்கை நலத்திற்கும் ஏற்ற முறையில் அச்சீர்திருத்த வெள்ளம் புறப்பட்டுப் பழைய குப்பைக் கூளங்களையும், துர்நாற்றத்தையும் அடித்துக் கொண்டு போவதுடன் மேடு பள்ளங்களையும் நிரவிக் கொண்டு போக வேண்டும்.
  • மதம், கடவுள், சாஸ்திரங்கள், விதி, பகவான் செயல் என்பவைகள் எல்லாம் முதலாளிகளுக்கு, அவர்களின் முதலாளித் தன்மை நீடூழி வாழ்வதற்கு, அழியாமல் இருப்பதற்கு ஆகத்தான் ஒரு கற்கோட்டையாக இருக்கிறது. அவைகள் அழியாமல், அழிக்கப்படாமல் முதலாளித் தன்மை அழியாது.

-விடுதலை,24.7.15

இனி பலிக்காது! சர்ச்சும் கன்னியா மடமும் பணக்காரர்களும்


இனி பலிக்காது! சர்ச்சும் கன்னியா மடமும் பணக்காரர்களும்
ஸ்பெயின் தேசத்தில் ஏற்பட்ட புரட்சியின் பயனாய் சோம்பேறி மடங்களுக்கும் ஏமாற்றுக் கூட்டத்திற்கும் அயோக்கியக் கூட்டத்திற்கும் சரியான ஆபத்துகள் வந்திருக்கின்றதை பத்திரிகை சேதிகளில் காணலாம்.
அதாவது ஸ்பெயின் தலைநகராகிய மேட்ரிக்நகரில் இருந்து கிருத்துவ கோயில்கள் என்னும் சோம்பேறி மடங்கள் இடிக்கப்பட்டும் கன்யாமாடங்கள் என்னும் ஏமாற்றுக் கூட்டத்தாரின் மடங்கள் நெருப்பு வைத்துக் கொளுத்தப் பட்டும் பணக்காரர்கள் என்னும் அயோக்கியக்கூட்டம் உயிரோடு ஒரு கட்டடத்திற்குள் அடைத்து நெருப்பு வைத்துக் கொளுத்த ஏற்பாடு செய்யப்பட்டும் வருவதாக அறிவிக்கப்படுகிறது.
கோயில்களில் கடவுள் இருப்பதாகவோ அல்லது அவைகள் கடவுள் பிரார்த்தனைக்காக ஏற்பட்டவை களாகவோ இருக்குமானால் - கன்னிகாஸ்திரீகள் கடவுள் சேவை செய்பவர்களாகவோ அல்லது கடவுளுக்கு ஆக ஒழுக்கமுள்ளவர்களாக நடப்பவர்களாகவோ இருப்பார் களானால் -
பணக்காரர்கள் தங்கள் முன் ஜன்மத்தில் செய்த நற்கருமங்களால் செல்வம் பெற்றவர்களாகவோ அல்லது கடவுளின் திருச்சித்தால் செல்வம் அடைந்தவர்களாகவோ இருப்பார்களேயானால் இவைகள் முறையே இடிபடவும் நெருப்பு வைத்து எரிக்கவும், உயிருடன் அடைந்து கொள்ளி வைத்துக்கொளுத்தவும் ஆன நிலைமை ஏன் ஏற்படுகிறது என்பது நமக்கு விளங்கவில்லை.
உண்மையிலேயே கடவுள்  ஒருவர் இருக்கிறார் என்று கூறுகின்றவர்கள் இச்செய்கையை கண்டபின் கோயில்கள் கன்யாமாடங்கள் பணக்காரர்கள் ஆகியவை உலகில் இருப்பதற்கு கடவுளுக்கு இஷ்டமில்லை.
ஆதலால் அவைகள் கொளுத்தப்படுகின்றன என்று எண்ண வேண்டும். அல்லது புரட்சிகாரர்கள் கடவுளைவிட சக்தியுடையவர்கள் அதனால் தான் இவைகளை கொளுத்த நினைத்தார்கள் என்று சொல்லவேண்டும். அப்படிக் கில்லாமல் தொட்டதற்கெல்லாம் இது வேத விரோதம் இதுமத விரோதம் என்கின்ற பூச்சாண்டிகள் இனிப் பலிக்காது.
(புரட்சி, 1933)
கேள்வி - பதில்
கேள்வி: திரு.காந்தியாரைத் திருவனந்தபுரம் கன்னியாகுமரி போன்ற கோவில்களில் உள்ளே விடாமல் இருந்தும் அதைப் பற்றிக் கவலையில்லாமல் இருக்கிறாரே ஏன்?
பதில்: அந்த விஷயத்தில் அதிகக் கவலையெடுக்க ஆரம்பித்தாரேயானால், மகாத்மா என்ற பட்டம் போய் மதத் துரோகி என்ற பட்டம் வந்து விடுமென்பது அவருக்குத் தெரியுமே! அவரென்ன பயித்தியக்காரரா?
(புதுவை முரசு -1931)

வியாழன், 23 ஜூலை, 2015

தெய்வ நம்பிக்கைக்கு மரணம் காரணமா?- தந்தை பெரியார்


வினா: கடவுளைப் பற்றிப் பொது வாக ஜனங்கள் கொண்டிருக்கும் கருத்துக்களை விளக்கிக்கூறு.
விடை:- கடவுள் வான மண்டலத் தையும், பூமியையும், அதிலுள்ள சகல சராசரங்களையும் படைத்தவன் என்று மக்களில் பெரும்பாலார் நம்புகிறார்கள்.
வினா:- அப்புறம்?
விடை:- கடவுள் சர்வ ஞானமுடைய வனாம், யாவற்றையும் பார்க்கிறானாம். பிரபஞ்ச முழுதும் அவனது உடைமை யாம், சர்வவியாபியாம்.
வினா:- கடவுள் ஒழுக்கத்தைப்பற்றி ஜனங்கள் என்ன சொல்லுகிறார்கள்.
விடை:- அவன் நீதிமானாம்; புனித னாம்.
வினா:- வேறு என்ன?
விடை:- அவன் அன்பு மயமான வனாம்.
வினா:- கடவுள் அன்பு மயமானவ னென்று ஜனங்கள் எப்பொழுதும் நம்புகிறார்களா?
விடை:- இல்லை. மக்கள் அறிவும், ஒழுக்கமும் உயர உயர, கடவுள் யோக் கியதையும் விருத்தியடைந்து கொண்டே போகிறது.
வினா:- உன் கருத்தை நன்கு விளக்கிக்கூறு.
விடை:- காட்டாளன் கடவுள், ஒரு காட்டாளனாகவும், திருடனாகவும் இருந்தான். அராபித் தலைவன் கடவுளான ஜாப், ஒரு கீழ் நாட்டு யதேச்சாதிகாரியாக இருந்தான். யூதர்கள் கடவுளோ வெறியனாயும், பழிக்குப்பழிவாங்கும் குணமுடைய வனாகவும் இருந்தான். கிறிஸ்தவர் கடவுளோ, அற்பாயுளுடைய மக்கள் செய்யும் குற்றங்களுக்கு நித்திய நரக தண்டனை வழங்கக் கூடியவனாக இருக்கிறான். வினா:- கடவுளைப் பற்றிய வேறு அபிப்பிராயங்கள் என்ன?
விடை:- மக்கள் மனோ, வாக்கு, காயங்களினால் செய்யும் காரியங்களில் அவன் சிரத்தையுடையவனாக இருக் கிறானாம்.
வினா:- ஏன்?
விடை:- அவனுக்கு விருப்பமான காரியங்களை நாம் செய்தால் பரிசளிக் கவும் விருப்பமில்லாத காரியங்களைச் செய்தால் தண்டனையளிக்கவும்.
வினா:- கடவுளுக்கு என்ன என்ன பெயர் வழங்கப்பட்டிருக்கின்றன?
விடை:- ஒவ்வொரு தேசத்தாரும் கட வுளை ஒவ்வொரு பெயரால் அழைக் கிறார்கள், கிரேக்கர்கள் யூயஸ் என்றும், ரோமர்கள் ஜோவ் என்றும், பார்சிகள் ஆர்முஸ்ஜித் என்றும், இந்துக்கள் பிரம்மம் என்றும், யூதர்களும் கிறிஸ் தவர்களும் ஜிஹோவா என்றும், முகம் மதியர் அல்லா என்றும் கடவுளை அழைக்கிறார்கள்.
வினா:- கடவுளுக்குக் கொடுக்கப்பட்டி ருக்கும் வேறு பெயர்கள் எவை?
விடை:- பரம்பொருள், அனந்தன், மூலகாரணன், பரமாத்மா, நித்தியசக்தி, பிரபஞ்சம், இயற்கை, மனம், ஒழுங்கு முதலியன.
வினா:- ஆனால், ஜனங்கள் சொல் லும் கடவுள் ஒரே பொருளைத்தானா குறிக்கிறது?
விடை:- இல்லை, சிலர் கடவுளை ஒரு ஆளாக பாவனை செய்கிறார்கள். சிலர் ஒரு கருத்தெனக் கூறுகிறார்கள். வேறு சிலர் சட்டம் என்கிறார்கள். மற்றும் அறிய முடியாத ஒரு சக்தி என்கிறார்கள். ஒரு கூட்டத்தார் கடவுள் பூரணன் என்கிறார்கள். பின்னும் சிலர் ஜடப் பொருளும் மனமும் அய்க்கியப்படும் நிலையே கடவுள் என நம்புகிறார்கள்.
வினா:- மக்கள் எப்பொழுதும் ஒரே கடவுளில் நம்பிக்கை வைத்து வந்திருக் கிறார்களா?
விடை:- மக்களில் பெரும்பாலார் ஒருகடவுள் அல்லது பல கடவுள்கள் இருப்பதாக நம்பியே வந்திருக்கிறார்கள்.
வினா:- ஒன்றுக்கு மேற்பட்ட கடவு ளுண்டா?
விடை:- பல கடவுள்களும் உண்டென்றே பொதுவாக நம்பப்படுகிறது.
வினா:- பல கடவுள்களை நம்புகிற வர்களுக்கு என்ன பெயர் அளிக்கப் படுகிறது?
விடை:- பல கடவுளை நம்புகிறவர் பல தெய்வவாதிகள், ஒரே கடவுளை நம்புவோர் ஏக தெய்வவாதிகள்.
வினா:- சில, பல தெய்வவாதிகளின் பெயர் சொல்லு.
விடை:- எகிப்தியர், இந்துக்கள், கிரேக்கர், ரோமர்.
வினா:- ஏக தெய்வவாதிகள் யார்?
விடை:- யூதர்கள், கிறிஸ்தவர்கள், முகம்மதியர்.
வினா:- இவர்கள் எல்லாம் எப்பொ ழுதுமே ஏக தெய்வவாதிகளாக இருந் தார்களா?
விடை:- இல்லை, ஆதியில் எல்லா ஜாதியாரும் பல தெய்வங்களையே வணங்கி வந்தார்கள்.
வினா:- பல தெய்வவாதிகளின் கடவுள்கள் எவை?
விடை:- சூரியன், சந்திரன், ஆவிகள், நிழல்கள், பூதங்கள், பேய் பிசாசுகள், மிருகங்கள், மரங்கள், மலைகள், பாறைகள், நதிகள் முதலியன.
வினா:- இவைகள் எல்லாம் கடவு ளாக நம்பப்பட்டதாய் உனக்கு எப்படித் தெரியும்?
விடை:- எப்படியெனில் ஜனங்கள் அவைகளை வணங்குகிறார்கள், அவை களுக்கு ஆலயங்கள் கட்டினார்கள், விக்கிரகங்கள் உண்டு பண்ணினார்கள், அவைகளுக்கு பூஜைகள் நடத்தி னார்கள்.
வினா:- இந்த தெய்வங்கள் எல்லாம் ஒரே மாதிரி மகிமையுடையன வென்று ஜனங்கள் நம்பினார்களா?
விடை:- எல்லாக் கடவுள்களுக்கும் மேலான ஒரு கடவுளுக்கு அவை அடிமைகள், அல்லது சின்னங்கள் என்று அறிவாளிகளான சொற்பப்பேர் நம்பினார்கள்.
வினா:- அறிவில்லாதவர்களோ?
விடை:- அவைகளில் சில அதிக சக்தி யுடையவை என்றும், சில கருணையுடை யவை என்றும், சில அழகானவை என்றும், சில அதிக புத்தியுடையவை என்றும் நம்பினார்கள்.
வினா:- கடவுள் உற்பத்திக்கு அவர் கள் என்ன காரணம் கூறுகிறார்கள்.
விடை:- கடவுள் உற்பத்திக்குப் பலவித மான காரணங்கள் கூறப்படுகின்றன.
வினா:- அவற்றுள் சிலவற்றை விளக்கு.
விடை:- முதற்காரணம், ஆதி கால மக்கள் அறிவில்லாதவர்களாக, குழந் தைகளைப் போல் பயங்காளிகளாயும் இருந்தார்கள். எனவே, தனக்கு அறிய முடியாதவைகள் மீது அவர் களுக்குப் பயமுண்டாயிற்று. கண்ணால் காண முடியாத ஏதோ ஒன்றே பயத்தை உண்டு பண்ணுகிறதென்று நம்பினார்கள்.
இரண்டாவது, மக்கள் பலவீனராயும், உதவியற்றவராயுமிருப்பதினால் அவர்களுக்கு உதவியளிக்கக்கூடிய சர்வ சக்தியுடையவொன்று இருக்க வேண்டுமென்று நம்பினார்கள்.
மூன்றாவது, மனிதன் இயல்பாக நேசமனப்பான்மையுடையவன், பிறருடன் கலந்து பழகவே அவன் எப்பொழுதும் விரும்புகிறான். எனவே, தன்னைச் சூழ்ந்திருக்கும் அறிய முடியாத சக்திகளை அறியவும், அவற்றுடன் சம்பந்தம் வைத்துக் கொள்ளவும் விரும்புகிறான். இறுதியில் அறியமுடியாத சக்திகளைக் கடவுளாக உருவகப்படுத்திக் கொள்கிறான்.
நான்காவது, தெய்வ நம்பிக்கைக்கு மரணமே முக்கிய காரணம்.
வினா:- அது எப்படி?
விடை:- நமக்கு உலகத்தில் சிரஞ்சீவி யாக வாழ முடியுமானால் தெய்வங் களைப் பற்றியோ, தெய்வீக சக்திகளைப் பற்றியோ நினைக்கத் தேவையே உண்டாகாது. மரணம் உண்டு என்ற உணர்ச்சியினாலேயே மறு ஜென் மத்தைப் பற்றியும், பிறப்புக்கும் இறப் புக்கும் காரணமாக இருக்கும் ஒன்றைப் பற்றியும், யோசிக்க வேண்டியதாக ஏற் படுகிறது. பிராணிகளுக்கு மரணத்தைப் பற்றிய சிந்தனையே இல்லாததினால் கடவுளும் இல்லை.
வினா:- தெய்வங்களின் தொகை பெருகிக் கொண்டே இருக்கிறதா?
விடை: இல்லை. அது குறைந்து கொண்டே போகிறது.
வினா: ஏன்?
விடை:- மக்களது அறிவும், சக்தியும் வளர வளர தம்மைத்தாமே காப்பாற் றிக் கொள்ள முடியுமென்ற நம்பிக்கை விருத்தியடைகிறது.
வினா:- அறிவில்லாதவர் கடவுள் களைவிட அறிவுடையோர் கடவுள் குறைவா?
விடை: ஆம். நாகரிகமில்லாதவர் களே பல தெய்வங்களை வணங்கு கிறார்கள்.
வினா:- ஏக தெய்வவாதிகள் நிலைமை என்ன?
விடை:- இப்போதும் பெரும்பாலோர் ஏக தெய்வ நம்பிக்கையுடையவர்களா கவே இருக்கிறார்கள்.
வினா:- கடவுள் நம்பிக்கையே இல் லாதவர்களும் இருக்கிறார்களா?
விடை: ஆம். அதிகம் பேர் இருக் கிறார்கள்.
- குடிஅரசு - கட்டுரை (உரையாடல்) 03.05.1936
-விடுதலை,26.7.14

செவ்வாய், 21 ஜூலை, 2015

தந்தை பெரியாரின் பொன்மொழிகள்

 
  • பிறர் உங்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ அவ்வாறே நீங்கள் மற்றவர்களிடம் நடந்து கொள்வதே ஒழுக்க நெறியாகும்.
  • படிப்பு எதற்கு? அறிவுக்கு. அறிவு எதற்கு? மனிதன் மனிதத் தன்மையோடு வாழ்ந்து மற்ற மனிதனுக்கு உதவியாய் - தொல்லை கொடுக்காதவனாய் -நாணயமாய் வாழ்வதற்கு. கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்பட வேண்டிய அவசியமெல்லாம் அவன் தன் வாழ்நாளில் சுதந்திரத் தோடு வாழ்வதற்குத் தகுதிப்படுத்தவே.
  • மனிதனுக்கு உள்ள பண ஆசையும், பதவி ஆசையும் எப்படிப்பட்டவனையும் கெடுத்து, ஒழுக்கமற்ற காரியங்களைச் செய்யத் தூண்டுகின்றன.
  • பொதுவுடைமை வேறு, பொது உரிமை வேறு. பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும். பொது உரிமை, என்பது சம அனுபவம் (சமவாய்ப்பு) என்பதாகும்.
  • கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
  • அறிவிற்கும் அனுபவத்திற்கும் ஒத்து வராததை பயத்தால் நம்புகிறவன் பக்குவமடைந்த மனிதனில்லை.
  • பகுத்தறிவுக்கும் தன்மானத்திற்கும் முரண்பட்ட எதையும் நீக்க வேண்டும்
  • மனிதனின் கடவுள் உணர்ச்சி மாறமாறத்தான் அறிவு வளர்ச்சியடைகிறது.


.

திங்கள், 20 ஜூலை, 2015

சாவுக்கு பின்னும் ஜாதியை நிலைநாட்டும் சடங்குகள்


மனிதன் தன் வாழ்க்கையில் குழந்தைப் பருவம் முதல் கிழப்பருவம் வரை அடையும் தன்மையும் இயற்கை யின் தத்துவமேயாகும். அவனுடைய அங்கங்கள் (உறுப்புகள்) குழந்தைப் பருவம் முதற் கொண்டு சிறிது சிறிதாக வளர்ந்து கொண்டே வருகின்றன. அந்த வளர்ச்சி அவன் உண்ணும் ஆகாரங்களையும் மன நிம்மதியான வாழ்க்கையையும் பொறுத்ததாகும். இப்படி வளர்ச்சியடையும் உடல் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வந்தவுடன், அதன் பிறகு வளருவது நின்று விடுகிறது. பிறகு அவ்வுறுப்புகளுக்குக் கொடுக்கப்படும் சக்திகளுக்கு ஏற்றவாறு இயங்கும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன.
அந்த உறுப்புகள் எத்தனை நாளுக்குத்தான் அப்படியே இருக்க முடியும்? அவையும் ஒரு குறிப்பிட்ட காலம்வரை இயங்கும் சக்தியைக் கொண்டவைகளாக இருக்கின்றன. நாளடைவிலேயே அங்கங்களுக்குள்ள சக்தி சிறிது சிறிதாகக் குறைவதற்கு ஆரம்பிக்கிறது. இப்படியே ஒவ்வொரு அங்கமும் பலவீனம் அடைந்து வரும் காலத்தில் மனிதன் கிழப் பருவத்தை அடைந்து கொண்டே வருகிறான். கிழப்பருவம் வளர்ச்சியடைந்து கொண்டே வந்து, முற்றிலும் கிழத்தன்மை அடைந்தவுடன், உடலின் உறுப்புகள் யாவையும் ஒருவித சக்தியும் இன்றி அங்கும் இங்கும் அசையக்கூட போதிய சிறிதளவு பலம்கூட இல்லாமல் போய்விடுகின்றன.
அத்தன்மை வந்தவுடன் மனிதன் உடலினுள் இருக்கும் உறுப்புகளும் அதே தன் மையை அடைந்து உண்ணும் உணவை ஜீரணிக்கவும், அதைப் பக்குவம் செய்து, சத்தைக் கிரகிக்கும் உறுப்புகள் போதிய பலமும் இன்றிப் போய், உணவும் செல்வதற்கும் இல்லாமல் போய்விடுகிறது. பின்பு மனிதனுக்கு இறுதியில் எஞ்சி நிற்பது காற்று ஒன்று தான். அக்காற்று மூக்குக்கும் சுவாச உறுப்புகளுக்கும் இடையில் உள்ள துவாரத்தின் வழியே போய்வந்து கொண்டிருக்கிறது.
சுவாசிக்கும் காற்றில் மனிதன் பிராணவாயுவை உட்கொண்டு கரியமிலவாயுவை வெளியிடுகிறான். அந்த ஆராய்ச்சிப்படி இதுவரை அவன் பிராண வாயுவைக் கிரகித்து, கரியமிலவாயுவை வெளியிட்டு வருகிறான். இந்தத் தன்மையும் ஏற்பட சுவாச உறுப்புக் கள் பலமுடன் இருந்து இயங்கினால்தானே முடியும்? ஆனால் இயற்கையின்படி எல்லா உறுப்புகளும் பலவீனம் அடைந்தது போல் சுவாச உறுப்புகளும் பலவீனம் அடைய ஆரம்பிக்கின்றன. அவைகளுக்குப் போதிய அளவு அதாவது ஒரு சிறிது அளவு காற்றையாவது இழுத்து கிரகிக்கும் பலம் உள்ள வரை மனிதன் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்குகிறான் என்று கூறுகிறோமே அந்த நிலையை அடைகிறான்.
இறுதியில் அந்தப் பலம் கூட இல்லாமல் சுவாச உறுப்புகள் முற்றிலும் பலவீனம் அடைந்து விடுவதால் சிறிது கூட காற்றைச் சுவாசிக்க முடியாமல் போய் விடுகிறது. அப்போதுதான் மனிதன் இறந்து விடு கிறான் என்று சொல்லப்படுகிறது. அவன் உடலில் காற்று போய், உடல் உறுப்புகளையும், இரத்தத்தையும் சுத்தம் செய்து கொண்டு வந்ததன் காரணமாக உடலில் எந்தவிதக் கெடுதலும் ஏற்படுவதில்லை. சுவாசிக்கப் பட்ட பிராணவாயு உடம்பில் உள்ள இரத்தத்தைச் சுத்தம் செய்வதனால் செய்யப்பட்ட இரத்தம் பரவிய உடலின் தசைகள் கெட்டுப் போகாமல் இருக்கின்றன.
ஆனால் மனிதன் இறந்தவுடனோ சுவாசம் இல்லை. அதனால் உடலின் தசைகள் கெடுவதற்கு ஆரம்பிக் கின்றன. அந்தப் பிணம் எவ்வளவு நேரம் இருக்கிறதோ அதற்குத் தகுந்தபடி கெட்டுப் போய்விடும். அதைத் தகுந்தபடி எரித்துவிடாமலோ இருக்கப்பட்டு விடு மானால் அந்த உடல் அழுகிக் கொழகொழத்துப் போய் சகிக்க முடியாதபடி துர்நாற்றமடிக்க ஆரம்பிக்கிறது. அதற்கென்றே உடலைப் புதைத்தோ அல்லது எரித்தோ விடுகிறார்கள். இப்படி மனிதன் பிறந்தது முதல் இறந்ததுவரை உண்டாகும் சம்பவங்கள் அத்தனை யையும் நேரில் காணுகிறோம். சுவாசிக்கும் காற்று நின்றவுடன் உடலை அடக்கம் செய்கிறார்கள்.
இத்தன்மை மனிதன் என்று சொல்லப்படுபவர்கள் அத்தனை பேருக்கும் அவ்வித முடிவுதான். தாழ்ந்த ஜாதி என்று ஆக்கப்பட்டிருப்பவர்களுக்கும் இதே நிலைதான், மேல்ஜாதி கடவுளுக்கும், அடுத்த ஜாதி என்று ஆக்கப்பட்டிருப்பவர்களுக்கும் இந்நிலைதான். அவன் யோக்கியனானாலும், முனிவரானாலும், சித்தரானாலும், மகாபக்திமான் ஆனாலும், கடவுள் அவதாரம் ஆனாலும், தியாகி ஆனாலும், மற்றும் மந்திரியானாலும் நாட்டின் தலைவன் என்பவன் ஆனாலும். இன்னும் புலவன், சிற்பி, பாடகன், ஓவியன், மற்றும் எப்பேர்பட்ட வெங்காயமா னாலும், இந்த நிலையை அடைந்தே தீரவேண்டும்; இது இயற்கையே ஆகும். இப்படி மனிதனுக்கு மட்டுமல்ல; உயிர் உள்ளது என்று எவை எவை சொல்லப்படுகின்றனவோ அவைகள் அத்தனையும் இப்படிப்பட்ட இயற்கைத்தன்மையை அடைந்தே தீருகின்றன - மரம் பட்டுப் போய் விட்டது என்றால், அது வளர்ச்சி இன்றிப் போய்விட்டது என்பது பொருள். அதுமுதல் அந்தப் பட்டுப்போன மரம் காய்ந்துபோக ஆரம்பிக்கிறது; ஒருவித ஈரப்பசையும் இன்றி வெற்றுக்கட்டையாக ஆகிவிடுகிறது, இப்படியே உயிருள்ளது என்பவைகள் அத்தனையும் செத்துப் போகும் நிலையை அடைகின்றன.
செத்துப்போகுதல் என்பது சத்துப் போய்விடுதல் என்பது பொருள். வளருவதற்கு வேண்டிய சத்துக்கள் என்னென்னவோ அத்தனையும் இல்லாமல் போய்விட்ட பிறகு, அதாவது சத்துப்போய்விட்ட பின் அதை சத்துப் போகுதல் என்பது செத்துப் போகுதல் என்று ஆகி இருக்கிறது.
மரம் செத்துப் போனவுடன் அதை அடுப்பு எரிக்க உபயோகிக் கிறோம். நாய் மாடு, கழுதை செத்தவுடன் புதைக்காவிடில் அழுகிப் புழு, பூச்சி பிடித்து விடுகிறது. இறுதியில் அதுவும் மண்ணுடன் மக்கிப் போய்விடுகிறது. செத்துப்போனது என்ற பிறகு அதைப் பற்றி ஒன்றுமே கிடையாது. அதன் முடிவு அத்துடன் சரியாகிவிடுகிறது. இதை நாம் கேள்விப்படவில்லை; சாஸ்திரத்தில் படிக்கவில்லை. கடவுளும், வெங்காயமும் கூறியதாக நான் உங்களிடம் கூறவில்லை. நேரில் கண்டவை; நீங்களும் நேரில் காணுகிற விஷயமே அன்றி, நான் அவன் சொன் னான், இவன் சொன்னான் என்று சொல்லவில்லை; எனவே இந்த முடிவுக்குப் பிறகு என்ன இருக்க முடியும்? ஒன்றுமே கிடையாது. அத்துடன் வாழ்க்கை இறுதி யடைந்து போய் விடுகிறது.
பார்ப்பனன் தங்கள் வாழ்க்கைக்குச் சாதகமாகப் பலவழிகளைக் கையாளுகின்றான். மனிதன் இறந்தவுடன் அந்த உடலை அவரவர் மதப்படி, அதிலும் மதத்தின் உட் பிரிவாக அமைக்கப்பட்டுள்ள ஜாதிமுறைப்படி எரிக்கவோ, புதைக்கவோ வேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறான். அதன்படி மக்களும் இது எங்கள் ஜாதி வழக்கம் என்று கூறிக்கொண்டு, புதைப்பவர்கள் புதைப்பதும், எரிப்பவர்கள் எரிப்பதுமாக இருக்கின்றனர்.
இதனால் என்னவென்றால் அந்தந்த ஜாதிக்காரன் அவனுடைய பின்சந்ததிகள் இன்னஜாதியைச் சேர்ந்த வர்கள் அவர்களும், அதே முறையைப் பின்பற்ற வேண்டும் என்ற முறையை நிலைநாட்டுவதன் மூலம் நடத்தப்படு கின்றன. எனவே மனிதன் இறந்த பின்னும் கூட பார்ப்பான் மதப்பிரச்சாரத்திற்கென்று இன்னின்ன பழக்க வழக்கம் என்று ஏற்படுத்தி இருக்கிறான்.
அத்துடன் விடவில்லை. செத்துப்போனவுடன் உடலிலிருந்து ஆத்மா என்று ஒன்று பிரிந்துவிடுகிறதாம். அது இங்கே தங்காமல் நேராக மேல்லோகம் போகிறதாம்! இவ்வளவு இயற்கைத் தன்மைகளையும் கண்டபின் ஆத்மா என்பது எங்கே இருக்கிறது? அது எப்படிப் பிரிகிறது? என்றால் அது உருவம் அற்றது, கண்ணுக்குத் தெரி யாதது என்று கூறினார்கள். அந்த ஆத்மா நேராக மேல் உலகம் சென்று அங்கு அது, இங்கு செய்த பாவபுண்ணி யத்துக்கு ஏற்றபடி தண்டனை பெறுகிறதாம். பாவம் செய்த ஆத்மா நரகத்தில் தள்ளப்படுகிறதாம். புண்ணியம் செய்த ஆத்மா மோட்சத்தில் தள்ளப் படுகிறதாம். இங்கேதான் உடல் நம் கண்முன்பாகவே எரிக்கப்பட்டது அல்லது புதைக்கப்பட்டது. உருவம் அற்ற ஆத்மா எப்படி அங்கே தண்டனை பெறும்? என்று கேட்டால் அந்த ஆத்மாவுக்கு வேறொரு உடலை மேல் உலகத்தில் கொடுக்கிறார்களாமே! அந்த உடலை இந்த ஆத்மா உடுத்திக் கொண்டவுடன் மனித உருவம் அடைகிறதாம். அதே உடலுக்கு அங்கே தண்டனை கிடைக்கிறதாம். இதில் என்ன நியாயம் இருக்கிறது என்பதைச் சிந்திக்க வேண்டும். பாவமோ புண்ணியமோ செய்த உடல் நம் கண்முன் இங்கே இருக்க, அங்கே வேறொரு உடல் பாவத்தின் தண்டனையையோ, புண்ணியத்தின் சுகத்தையோ அனுபவிக்கிறதாம். அப்படியானால் உண்மையில் பாவம் செய்த உடலைத் தண்டிக்க வேண்டும்; உண்மையில் புண்ணியம் செய்த உடல் சுகமடைய வேண்டும். இதை விட்டு விட்டு, ஏதும் அறியாத வேறொரு உடலை வதைப்பதும், சுகப்படுத்துவதும் என்ன நியாயம் என்று கேட்டால் உடனே இவன் நாத்திகம் பேசுகிறான் என்றுதான் சொல்லத் தெரியுமே தவிர, தக்க பதில் ஒன்றும் கூற முடியாது.
மறுபடியும் அந்த ஆத்மா உலகில் உருவம் எடுத்து வருகிறதாம்! அந்த உருவம் பாவ புண்ணியத்திற்கு ஏற்றபடித் தக்க உருவம் அடைகிறதாம். அதில் ஃபஸ்ட் கிளாஸ் (முதல்தரம்) உருவம் என்று சொல்லப்படுவது பார்ப்பன உருவம். மற்றவை எல்லாம் அதற்குக் கீழ்ப்பட்டவை. மனித உருவத்திலேயே பார்ப்பான் தவிர்த்த மற்ற கீழ்ஜாதி உருவங்கள் தரம் பிரித்து உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்பதற்குத் தகுந்தபடி அமைக்கப்பட்டிருக் கின்றன. மனித உருவத்துக்குக் கீழ் மிருக உருவம்! அதிலும் தரம் பிரித்து அமைத்து மற்றப்படி மரம், செடி, கொடி இப்படி அமைக்கப்பட்டிருக்கின்றன.
இதை ஏன் கூறுகிறேன் என்றால் அயோக்கியப் பார்ப்பனர்கள் தங்களை மட்டும் பெரும் புண்ணியாத் மாக்கள், மற்றவர்கள் எல்லாரும் பெரும் சண்டாளர்கள் என்பதை வாய்விட்டுக் கூறுவதற்குப் பதிலாக இப்படி எழுதி வைத்திருக்கிறார்கள் என்பதைக் கூறவேயாகும். இப்படி நம்மை எந்த விதத்தில் இழிவு படுத்தவேண்டுமோ அம்முறைகளில் எல்லாம் இழிவுபடுத்தி இருக்கிறார்கள்.
அந்த ஆத்மாதான் மேல்லோகத்தில் புண்ணியத்திற் கேற்றபடி மோட்சத்திலேயோ அல்லது பாவத்திற்கேற்றபடி நரகத்திலேயோ தள்ளப்பட்டிருக்கிறதே, பிறகு இங்கே எப்படி வந்தது? அதனதன் நல்வினை தீவினைக்குத் தகுந்தபடி மோட்சம்- நரகத்தில் போய்ச்சேருகிறது என்ற பிறகு இங்கே எப்படிக் குதித்து வரமுடியும்? அப்படி யானால் மோட்சத்திலிருந்து தப்பி ஓடிவந்ததா? நரகத்தை விட்டு ஓடிவந்து விட்டதா? அப்படி அங்கு போய்ச் சேருகிற ஆத்மா சாந்தியடைய இங்கே பார்ப்பானுக்குத் தானதர்மம் செய்தால் போதுமாம்! உடனே அது அவர்களுக்குப் போய்சேருகிறதாம்! அதை அடைந்த அவர்கள் சுகம் அடைகிறார்களாம்! என்ன முட்டாள் தனம் என்பதைச் சிந்திப்பதே இல்லை. 100-க்கு 100 முட்டாள்களாக இருப்பவர்கள்தான் இன்னமும் இதை நம்பிக்கொண்டு பார்ப்பானுக்கு அள்ளிக் கொடுக்கின்றனர். கையில் பணம் காசு இல்லை என்றால் கூட கடன் வாங்கியாவது திவசமும், கருமாதியும் செய்கிறான்.
இப்படித் திவசம் செய்வது குறிப்பிட்ட நாள் வரையிலும் என்று கூட இல்லை. இவன் உயிர் இருக்கும்நாள்வரை அவன் தகப்பனுக்குத் திவசம் செய்கிறான். பார்ப்பான் கூறி இருக்கிறபடி மேலே சென்ற ஆத்மா பிறகு என்ன உருவம் எடுத்ததோ தெரியவில்லை. அந்த உருவம் எடுத்த பிறகும் இவன் திவசம் செய்தானாகில், பார்ப்பான் கூறுகிறபடி அந்த ஆத்மா எங்கே இருந்தாலும் அந்த தானப் பொருள்கள் போய்ச்சேர வேண்டும். அப்படி இது வரை யார் அடைந்திருக்கிறார்கள்?
அப்படியே அவன் கூறுவது உண்மை என்றாலும் இக்கூட்டத்தில் உள்ள அத்தனை பேரும், ஏன் இவ்வூரில் உள்ள அத்தனை பேரும் மற்றும் இந்நாட்டு மக்கள் அத்தனை பேரும் இதற்கு முன் ஏதாவது ஒரு பிறவியில் இருந்திருக்க வேண்டும்; நாம் இல்லை என்றாலும் மற்ற சீவராசிகளாவது முதலில் மனித உருவத்தில் இருந்திருக்கவேண்டும். அவைகள் இறந்தவுடன் அதனதன் பிள்ளைகள் திவசம் கொடுப்பார்கள். அத்தனை பேருக்கும் இல்லை என் றாலும் ஒருசிலருக்காவது தன்னுடைய பிள்ளைகள் திவசம் கொடுப்பார்கள்; அப்படிக் கொடுப்பது இப்போது இவர்களுக்கு வந்து சேரவேண்டும். நியாயப்படி அதுதான் முறையாகும் - ஆனால் இதுவரை அப்படி யாரும் அடைந்ததாகக் கிடையாது. கேள்விப்பட்டது கூட இல்லை. எனவே பார்ப்பானுக்குக் கொடுத்த பின் அதை ஜீரணித்துவிடுகிறான். பிறகு எங்கே இவன் அப்பனுக்கு மேல்உலகத்துக்கு? போகமுடியும்? அப்படியே பார்ப்பான் மேல் உலகத்துக்கு அனுப்பும் சக்தி கொண்ட மந்திரம் கொண்டவனாக இருந்தால் இன்றைக்கு எவ்வளவோ காரியத்துக்குப் பயன்படும். ஆனால் அத்தனையும் புரட்டு என்பதற்கு நடந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுகிறேன்.
ஒரு பார்ப்பனனிடம் ஒரு மடையன் திவசம் கொடுத்துக் கொண்டிருந்தானாம். அப்போது பார்ப்பனன் சொல்படி அந்த மடையன் ஆற்றில் உள்ள தண்ணீரைக் கையால் அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தான். அதன் காரணம் என்ன வென்றால் இவன் இறைக்கும் தண்ணீர் மேல் உலகத்திற்குப் போய் இவனுடைய முன்னோர்களுக்குப் பயன்படு கிறது என்பதாகும். அந்த அடிப்படையில் புரோகிதன் மந்திரம் கூற இவன் தண்ணீர் இறைக்கிறான்.
அப்போது அதைப் பார்த்த ஒருவன், தானும் தண்ணீரைக் கரையின் மேல் வாரி இறைத்தான். அதைக் கண்ட புரோகிதன் நீ ஏன் தண்ணீர் இறைக்கிறாய் என்றதற்கு நான் என்னுடைய ஊரில் உருளைக் கிழங்குத் தோட்டம் வைத்திருக்கிறேன். அதற்குத் தண்ணீர் இறைத்து அதிக நாள்கள் ஆகின்றன. இப்போது நீங்கள் மந்திரம் சொல்லும் போது இறைத்தால் இந்தத் தண்ணீர் என்னுடைய உருளைக்கிழங்குத் தோட்டத்துக்கு போய்ச்சேரும், என்றானாம்.
அதற்குப் புரோகிதன் அது எப்படி அவ்வளவு தூரம் போய்ச் சேரும்? என்று கேட்க அதற்கு இவன் நீங்கள் இன்றைக்கும் தண்ணீர் எங்கேயோ கண்ணுக்குத் தெரியாமல் ஒருவரும் காண முடியாத அவ்வளவு உயரத்தில் இருக்கும் மேல் உலகத்திற்குப் போகிற பொழுது இது இங்கே அடுத்த ஊரில் உள்ள என் தோட்டத்திற்குப் போகாமல் இருக்க முடியுமா? என்று கேட்டானாம். பிறகு புரோகிதன் நம்முடைய சாயம் வெளுத்தது என்று நினைத்து தலைகுனிந்து போய்விட்டானாம்.
(விடுதலை, 21.2.1956)
விடுதலை, 8.8.2010