ஞாயிறு, 24 டிசம்பர், 2017

புரட்டாசி சனிக்கிழமை


இனி அடுத்தாற்போல் வரும் புரட்டாசி சனிக்கிழமை உற்சவங்களும், திருப்பதி முதலிய நூற்றுக்கணக்கான சனிக்கிழமைப் பெருமாள்கள் உள்ள ஊர்களின் உற்சவங்களும், சனிக்கிழமை பிடிப்பதன் மூலம் அவரவர்கள் வீட்டில் ஏராளமாய் சமைத்துக்கொண்டு சோம்பேறி களையும் அயோக்கியர்களையும் மெனக்கட்டுத் தேடிப் பிடித்து வந்து அவர்களுக்கு வயிறு நிறையவும் போட்டு மற்றும் மூட்டை கட்டிக் கொண்டும் போகக்கூடிய அளவு மேல் கொண்டும் போட்டு கஞ்சாவுக்கோ கள்ளுக்கோ சூதாடவோ கையில் பணமும் கொடுத்து, இவ்வளவும் போறாமல் அந்த நாளெல்லாம் பட்டினி கிடந்து அந்தச் சோம்பேறிகளின் காலிலும் விழுந்து மாலை 3 மணி 4 மணி சுமாருக்கு சாப்பிடும் பண்டிகையிலோ விரதத்திலோ கடுகளவு அறிவு இருக்கின்றதா என்று கேட்கின்றேன். புரட்டாசி சனிக்கிழமை வந்தால் எத்தனை பேர்கள் தங்களுக்கும் பட்டை நாமம் போட்டுக் கொண்டு செம்புக்கும் நாமத்தை குழைத்து போட்டுக் கொண்டு, துளசியை அரளிப்பூவையும் அந்த செம்புக்கு சுத்திக் கொண்டு வெங்கிடாசலபதி கோவிந்தா என்றும் நாராயணா கோவிந்தா என்றும் கூப்பாடு போட்டு அரிசியோ காசோ வாங்கிக் கொண்டு போவதில் ஏதாவது பலனுண்டா? என்றுதான் கேட்கின்றேன்.

மற்றும் திருப்பதிக்குப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு தலை மயிரும் தாடி மயிரும் வளர்த்து வெறும் மஞ்சள் நனைத்த துணிக்கட்டிக் கொள்ளுவதும் மேளம் வைத்துக் கொள்வதும் பெண்டுபிள்ளைகள் சுற்றத் தார்களை அழைத்துக் கொள்வதும் வருஷ மெல்லாம் பணம் போட்டு மொத்தமாய் பணம் சேர்ப்பதும் அல்லது வேண்டுதலையின் மேல் இவ்வளவு பணம் என்று கடன் வாங்கியாவது எடுத்துக் கொள்வதும் அல்லது வியாபாரத்திலோ வேறு வரும் படியிலோ லாபத்தில் இத்தனை பங்கு என்று கணக்கு வைத்து சேர்த்து எடுத்துக் கொள்வதும் ஆன பணமூட்டை கை கட்டிக்கொண்டு கடைவாயிலும் நாக்கிலும் வெள்ளிக் கம்பியைக் குத்திக் கொண்டு போதாக்குறைக்குத் தெருவில் கூட்டமாய் கோவிந்தா கோவிந்தா- கோவிந்தா!

 


எந்த ஒன்றையும் தோற்றுவித்தவர் ஒருவர் இருக்க வேண்டுமென்றால், அந்தக் கடவுளைத் தோற்றுவிக்கவும் ஒருவர் இருக்க வேண்டுமல்லவா?

கடவுள் யாராலும் தோற்றுவிக்கப்படாமல் தானே தோன்றியது என்றால், இந்த உலகம் யாராலும் தோற்றுவிக்கப்படாமல், ஏன் தானே தோன்றியிருக்கக் கூடாது?

இல்லாத ஒன்றாகிய “கடவுள்’’, தானே தோன்றியது என்று எண்ணுவதைவிட, உலகில் இருக்கக்கூடியவை, தானே தோன்றின என்று எண்ணுவதுதானே அறிவுடமையாகும்?

என்று கூப்பாடு போட்டு வீட்டுக்கு வீடு, கடைகடைக்கு காசு பணம் வாங்கி ஒருபகுதியை ரயிலுக்குக் கொடுத்து திருப்பதி போவதும், அங்கு முழங்கால் முறிய மலையேறுவதும் ஆண்களும் பெண்களும் தலைமொட்டை அடித்துக் கொள்வதும் அந்தமலைச்சுனைத் தண்ணீரில் குளிப்பதும் அந்த பட்டை நாமம் போட்டுக் கொள்வதும் கொண்டுபோன பணத்தைக் கடாரத்தில் காணிக்கையாக கொட்டுவதும் ஆண்களும் பெண்களும் நெருக்கடியில் இடிபடுவதும் பிடிபடுவதும் வெந்ததும் வேகாததுமான சோற்றைத் தின்பதும் மற்றும் பல சோம்பேறிகளுக்கும் மேகவியாதிக் காரர்களுக்கும் வேக வைத்தோ விலைக்கு வாங்கியோ போடுவதும் விறகு கட்டையிலும் வேர்களிலும் செய்த மரமணி மாலைகளை வாங்கி கழுத்தில் போட்டுக் கொள்வதும். மலைக் காய்ச்சலோடு மலையைவிட்டு இறங்கி வருவதும் வீட்டுக்கு வந்து மகேஸ்வரபூஜை பிராமண சமார்த்தனை செய்வதும் தவிர மற்றபடி இவைகளால் ஏதாவது செய்தவனுக்கோ, கூடப்போன மக்களுக்கோ நாட்டுக்கோ ஒழுக்கத்திற்கோ மதத்திற்கோ கடுகளவு நன்மை உண்டாகுகின்றதா என்று கேட்கின்றேன்.

திருப்பதிக்குப் போய் வந்த பிறகாவது யாராவது தங்கள் துர்க்குணங்களையோ கெட்ட செய்கைகளையோ விட்டுவிட்டதாகவாவது அல்லது திருப்பதி யாத்திரையானது இம்மாதிரி குணங்களை விடும்படி செய்ததாகவாவது நம்மில் யாராவது பார்த்திருக்கின்றோமா? என்று கேட்பதுடன் இம்மாதிரி அறிவீனமான காரியத்திற்கு நமது நாட்டில் வருஷத்திற்கு எத்தனை கோடி ரூபாய் செலவாகின்றது என்பதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணராவது கணக்கு போட்டார்களா என்று கேட்கின்றேன்.

தீபாவளி

இனி அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை என்று கஷ்டமும் நஷ்டமும் கொடுக்கத்தக்க பண்டிகையொன்று வரப்போகின்றது. அதிலும் ஏதாவது, அறிவுடைமை உண்டா? என்று கேட்கின்றேன் தீபாவளி பண்டிகையின் கதையும் மிக்க ஆபாசமானதும், இழிவானதும், காட்டுமிராண்டித் தனமானதுமாகும், அதாவது விஷ்ணு என்னும் கடவுள் பன்றி உருக்கொண்டு பூமியைப் புணர்ந்ததன் மூலம் பெறப் பட்டவனான நரகாசூரன் என்பவன் வருணனுடைய குடையைப்பிடுங்கிக் கொண்டதால் விஷ்ணு கடவுள் கிருஷ்ணா வதாரத்தில் கொன்றாராம். அந்தத் தினத்தைக் கொண்டாடுவதற்கு அறிகுறியாக தீபாவளி பண்டிகை கொண்டாடுவதாம்.

சகோதரி சகோதரர்களே! இதில் ஏதாவது புத்தியோ மனிதத் தன்மையோ இருக்கின்றதா என்று பாருங்கள்! விஷ்ணு என்னும் கடவுள் பூமியை புணருவது என்றால் என்ன என்றாவது அது எப்படி என்றாவது, நரகாசூரன் என்றால் என்ன? வருணன் என்றால் என்ன? வருணன் குடை என்றால் என்ன? என்பதாவது, அப்படி ஒன்று இருக்க முடியுமா என்றாவது,  இவைகள் உண்மையா என்றாவது கருதிப் பாருங்கள்! இப்படி பொய்யானதும் அர்த்தமற்றதுமான பண்டிகையினால் எவ்வளவு கஷ்டம்? எவ்வளவு ரூபா நஷ்டம்? எவ்வளவு கடன்? எவ்வளவு மனஸ்தாபம்? எவ்வளவு பிரயாணச் செலவு? என்பவைகளை ஒரு சிறிது கூட நமது மக்கள் கவனிப்பதில்லையே! அப் பண்டிகையை உத்தேசித்து ஒவ்வொருவரும் தனது யோக்கியதைக்கும் தேவைக்கும் மேற்பட்ட பணம் செலவு செய்து, துணி வாங்க ஆசைப்படுகிறான்; தன்னிடம் ரூபாய் இல்லா விட்டாலும் கடன் வாங்குகின்றான்.

கடன் என்றால் வட்டி அல்லது ஒன்றுக்கு ஒன்றரை பங்கு கிரையம் ஏற்பட்டுவிடுகின்றன. இதுதவிர மாமனார் வீட்டு செலவு எவ்வளவு? தவிர சுத்த முட்டாள்தனமான பட்டாசுக் கொளுத்துவது எவ்வளவு? மற்றும், இதனால் பலவித நெருப்பு உபாதை ஏற்பட்டு வீடு வேகுதலும், துணியில் நெருப்பு பிடித்து உயிர் போதலும், பட்டாசு சுடுவதாலும் செய்வதாலும் மருந்து வெடித்து உடல் கருகி கண், மூக்கு, கை, கால், ஊமை யாவதுமான காரியங்கள் எவ்வளவு நடக்கின்றது? இவ்வளவும் அல்லாமல் இந்த பண்டிகை கொண்டாடுவதற்கு அறிகுறியாக எவ்வளவு பேர்கள் கள்ளு, சாராயம் குடித்து மயங்கி தெருவில் விழுந்து புரண்டு, மானம் கெடுவது எவ்வளவு? மேலும் இதற்காக இனாம் இனாம் என்று எத்தனைப் பாமர மக்கள் பிச்சை எடுப்பது அல்லது தொந்தரவு கொடுத்து பணம் வசூல் செய்வது ஆகிய இந்தக் காரியங்களால் எவ்வளவு பணம், எவ்வளவு நேரம், எவ்வளவு ஊக்கம், செலவாகின்றது என்று கணக்குப்பாருங்கள். இவைகளை எல்லாம் எந்த இந்திய பொருளாதார தேசிய நிபுணர்களாவது கவனிக்கிறார்களா? என்று கேட்கின்றேன். துலாஸ்தானம் தவிரவும் இந்து மதத்திலேயே அய்ப்பசி துலாஸ்தானமென்று புதுத் தண்ணீர் காலத்தில் நதிகளில் போய் அழுக்குத் தண்ணீரில் தினம் தினம் காலையில் குளிப்பதும், புதுத்தண்ணீர் ஒத்துக் கொள்ளாமல் கஷ்டப் படுவதும் இதற்காக ஊரைவிட்டுவிட்டு ஊர் பணம் செலவு செய்து கொண்டு போய் கஷ்டப்படுவதும். ஒன்று இரண்டு தண்ணீர் இழுத்து கொண்டு போகப் படுவதும், குளித்து முழுகிவிட்டு நதிக்கரையில் இருக்கும் பார்ப்பனர்களுக்கு அரிசிப் பருப்பு பணம் காசு கொடுத்து அவன் காலில் விழுவதுமான காரியங்கள் செய்வதும், ஆதிமுதல் அந்தம் வரை அத்தனையும் பொய்யும் ஆபாசமுமான காவிரிப் புராணம் படிக்க கேட்பதும் அதற்காக அந்த பொய்யையும் கேட்டுவிட்டு பார்ப்பானுக்குச் சீலை, வேஷ்டி, சாமான், பணம் கொடுத்து காலில் விழுவதுமான காரியம் செய்கின்றோம். காவேரியைப் பெண் தெய்வமென்பதும் அதில் ஆண்கள் குளிப்பதுமான காரியம் ஆபாசமல்லவா?

        -   தந்தை பெரியார்

-உண்மை இதழ், 1-15.10.17

சனி, 23 டிசம்பர், 2017

உண்மையான தமிழர்கள் (திராவிடர்கள்) தீபாவளி கொண்டாடக் கூடாது!தீபாவளிப் பண்டிகை வரப்போகின்றது. பார்ப்பனரல்லாத மக்களே! என்ன செய்யப் போகின்றீர்கள்? “அப்பண்டிகைக்கும் எங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை’’ என்று சொல்லிவிடப் போகின்றீர்களா? அல்லது அப்பண்டிகையை கொண்டாடப் போகின்றீர்களா?  என்பதுதான் “நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்’’ என்று கேட்பதின் தத்துவமாகும். நண்பர்களே சிறிதும் யோசனையின்றி, யோக்கியப் பொறுப்பின்றி, உண்மைத் தத்துவமின்றி, சுயமரியாதை உணர்ச்சியின்றி சுயமரியாதை இயக்கத்தின்மீது வெறுப்புக்கொள்ளுகின்றீர்களே யல்லாமல், மற்றும் சுயநலப் பார்ப்பனர் வார்த்தைகளையும், மூடப்பண்டிதர்களின் கூக்குரலையும், புராணப் புஸ்தக வியாபாரிகளின் விஷமப் பிரசாரத்தையும், கண்டு மயங்கி அறிவிழந்து ஓலமிடுகின்றீர்களே அல்லாமல் மேலும் உங்கள் வீடுகளிலும், அண்டை அயல்களிலும் உள்ள கிழங்களுடையவும், அழுக்கு மூட்டைகளுடையவும் ஜீவனற்ற தன்மையான பழைய வழக்கம் பெரியோர் காலம் முதல் நடந்துவரும் பழக்கம் என்கின்றதான வியாதிக்கு இடங்கொடுத்துக்கொண்டு கட்டிப் போடப்பட்ட கைதிகளைப்போல் துடிக்கின்றீர்களே அல்லாமல் உங்கள் சொந்தப் பகுத்தறிவை சிறிதுகூட செலவழிக்கச் சம்மதிக்க முடியாத உலுத்தர்களாய் இருக்கின்றீர்கள்.

பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராயிருக் கின்றீர்கள். சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் எவ்வளவு வேண்டு மானாலும் விட்டுக் கொடுக்கத் தயாராயிருக்கின்றீர்கள். ஆனால், உங்கள் பகுத்தறிவை சிறிதுகூட செலவழிக்கத் தயங்குகிறீர்கள். அது விஜயத்தில் மாத்திரம் ஏன் வெகு சிக்கனம் காட்டுகின்றீர்கள்? இந்நிலையி லிருந்தால் என்றுதான் நாம் மனிதர்களாவது? 

புராணக் கதைகளைப்பற்றி பேசினால் கோபிக்கிறீர்கள். அதன் ஊழலை எடுத்துச் சொன்னால் காதுகளைப் பொத்திக் கொள்ளுகின்றீர்கள். எல்லாருக்கும் தெரிந்தது தானே; அதை ஏன் அடிக்கடி கிளறுகின்றீர்கள். இதைவிட உங்களுக்கு வேறு வேலை இல்லையா என்று கேட்கின்றீர்கள். ஆனால், காரியத்தில் ஒரு நாளைக்குள்ள அறுபது நாழிகை காலத்திலும் புராணத்திலேயே மூழ்கி மூச்சு விடுவது முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் புராணப் புரட்டை உணர்ந்தவர்களா? புராண ஆபாசத்தை வெறுத்தவர்கள் ஆவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள். பண்டித, பாமர, பணக்கார ஏழை சகோதரர்களே!

அன்பர்களே! சமீபத்தில் தீபாவளிப் பண்டிகை என்று ஒன்று வரப்போகின்றது. இதைப் பார்ப்பனரல்லாத மக்களில் 1000-க்கு 999 பேர்களுக்கு மேலாகவே கொண்டாடப் போகின்றீர்கள். தீபாவளிப் பண்டிகையைப் பெரிதும்  கொண்டாடப்போகின்றீர்கள். பொதுவாக எல்லோரும் - அதாவது துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும், பண்டிகையை உத்தேசித்து துணி வாங்குவது என்பது ஒன்று; மக்கள், மருமக்களை மரியாதை செய்வதற்கென்று தேவைக்கும் மேலானதாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்துவதற்கு ஏற்றதல்லாத தானதுமான துணிகள் வாங்குவது என்பது இரண்டு; அர்த்தமற்றதும், 

பயனற்றதுமான வெடிமருந்து சம்பந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று; பலர் இனாம் என்றும், பிச்சை என்றும் வீடுவீடாய் கூட்டங்கூட்டமாய்ச் சென்று பல்லைக்காட்டிக் கெஞ்சி பணம் வாங்கி அதைப் பெரும்பாலும் சூதிலும், குடியிலும் செலவழித்து நாடு சிரிக்க நடந்துகொள்வது நான்கு; இவற்றிற்காக பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது அய்ந்து; அன்று ஒவ்வொரு வீடுகளிலும் அமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச் செய்து அவைகளில் பெரும் பாகம் கண்டவர்களுக்குக் கொடுப்பதும், வீணாக்குவதும் ஆறு; இந்தச் செலவுக்காகக் கடன்படுவது ஏழு. மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவாகின்றது என்பதும், அதற்காகக் கடன்படவேண்டியிருக்கின்றது என்பதுமான விஷயங்களொருபுற மிருந்தாலும், மற்றும் இவைகளுக்கெல்லாம் வேறு ஏதாவது தத்துவார்த்தமோ, அறிவியல்(சைன்ஸ்) பொருத்தமோ சொல்லுவதானாலும், தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண்டாடப்படுகிறது என்கின்றதான விஷயங்களுக்கு சிறிதுகூட எந்த விதத்திலும்  காரணம் (சமாதானம்) சொல்லமுடியாது என்றே சொல்லுவோம். ஏனெனில், அது எப்படிப் பார்த்தாலும் பார்ப்பனியப் புராணக் கதையை அஸ்திவாரமாகக் கொண்டதாகத்தான் முடியுமே ஒழிய மற்றபடி எந்த விதத்திலும் உண்மைக்கோ, பகுத்தறிவிற்கோ, அனுபவத்திற்கோ சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே முடியாது.

தீபாவளிப் பண்டிகையின் தத்துவத்தில் வரும் பாத்திரங்கள் 3. அதாவது நரகாசூரன், கிருஷ்ணன், அவனது இரண்டாவது பெண்சாதியாகிய சத்தியபாமை ஆகியவைகளாகும். இவர்கள் சம்பந்தமான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் நமக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இம்மாதிரியான ஒரு பண்டிகை தீபாவளி என்று கொண்டாட வேண்டுமென்றாவது ஒப்புக்கொள்ள முடியுமா என்று கேட்கின்றோம்.

மற்றும் இம்மாதிரியான எந்த விஷயங்களிலும் கிராமாந்தரங்களில் இருப்பவர்களைவிட,  பட்டணங்களில் இருப்பவர்கள் மிகுதியும் மூடத் தனமாகவும். பட்டணங்களில் இருப்பவர்களைவிட சென்னை முதலான பிரதான பட்டணங்களில் இருப்பவர்கள் பெரிதும் மூடசிகாமணிகளாகவும் இருந்து வருவதையும் பார்க்கின்றோம். உதாரணமாக தீபாவளி, சரஸ்வதி பூசை, தசரா, பிள்ளையார் சதுர்த்தி, பதினெட்டு, அவிட்டம் முதலிய பண்டிகைகள் எல்லாம் கிராமாந்தரங்களைவிட நகரங்களில் அதிகமாகவும். மற்ற நகரங்களைவிட சென்னையில் அதிகமாகவும் கொண்டாடுவதைப் பார்க்கின்றோம்.

இப்படிக் கொண்டாடும் ஜனங்களில் பெரும்பான்மையோர் எதற்காக. ஏன் கொண்டாடுகின்றோம் என்பதே தெரியாதவர்களாகவேயிருக்கின்றார்கள். சாதாரணமாக மூடபக்தியாலும் குருட்டுப் பழக்கத்தினாலும் கண்மூடி வழக்கங்களைப் பின்பற்றி நடக்கும் மோசமான இடம் தமிழ்நாட்டில் சென்னையைப் போல் வேறு எங்குமே இல்லை என்று சொல்லிவிடலாம். ஏனெனில், இன்றைய தினம் சென்னையில் எங்கு போய்ப் பார்த்தாலும் ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலும் சரீரமில்லாத ஒரு தலைமுண்ட உருவத்தை வைத்து அதற்கு நகைகள் போட்டு பூசைகள் செய்து வருவதும், வீடுகள் தோறும் இரவு நேரங்களில் பாரத இராமாயண காலட்சேபங்களும், பெரிய புராணக் காலட்சேபங்களும், பொதுஸ்தாபனங்கள் தோறும் கதாகாலட்சேபங்களும் நடைபெறுவதையும் இவற்றில் தமிழ்ப் பண்டிதர்கள் ஆங்கிலம் படித்த பட்டதாரிகள் கவுரவப் பட்டம் பெற்ற பெரிய மனிதர்கள், பிரபலப்பட்ட பெரிய உத்தியோகஸ்தர்கள் மற்றும் பிரபுக்கள், டாக்டர்கள், சைன்ஸ் நிபுணர்கள், புரபசர்கள் முதலியவர்கள் பெரும் பங்கெடுத்துக் கொண்டிருப்பதையும் பார்க்கலாம். பார்ப்பனரல்லாதார்களில் இந்தக் கூட்டத்தார்கள்தான் ஆரியர் வேறு தமிழ் வேறு என்பாரும், புராணங்களுக்கும் திராவிடர்களுக்கும் சம்பந்தமில்லை என்பாரும், பார்ப்பனர் சம்பந்தம் கூடாது என்பாரும், பார்ப்பனரல்லாத சமுகத்தாருக்கு நாங்கள்தான் பிரதிநிதிகள் என்பாரும், மற்றும் திராவிடர்கள் பழைய நாகரிகத்திற்கு மக்களை அழைத்துச் செல்லவேண்டு மென்பாரும் பெருவாரியாக இருப்பார்கள். ஆகவே, இம்மாதிரியான விஷயங்களில் படித்தவர்கள் பணக்காரர்கள் உத்தியோகஸ்தர்கள் என்கின்றவர்கள் போன்ற கூட்டத்தாரிடம் அறிவு, ஆராய்ச்சி சம்பந்தமான காரியங்கள் எதிர்பார்ப்பதைவிட, பிரசாரம் செய்வதைவிட உலக அறிவு உடைய சாதாரண மக்களிடம் எதிர்பார்ப்பதே, பிரசாரம் செய்வதே பயன் தரத்தக்கதாகும்.

எப்படியானாலும் இந்த வருஷம் தீபாவளிப் பண்டிகை என்பதை உண்மையான தமிழ் மக்கள் திராவிடர்கள் என்பவர்கள் கண்டிப்பாய் அனுசரிக்கவோ கொண்டாடவோ கூடாது என்றே ஆசைப்படுகின்றோம்.

(குடிஅரசு - கட்டுரை - 16.10.1938)

- தந்தை பெரியார்
- உண்மை இதழ்,16-31.10.17

சூத்திரன் என்கின்ற இழிவு நீக்கக் கிளர்ச்சிஇந்துக்கள் என்கின்ற சமுதாயத்தில் பார்ப்பனர் அல்லாத மக்களாகிய நாம் எல்லோரும், சூத்திரர்கள், கீழ்ப்பிறவியாளர் என்று சட்டம்,. சாஸ்திரம் முதலியவற்றில் குறிப்பிடப் பட்டிருப்பதோடு, கோவில்கள் முதலியவற்றில் மூலஸ்தானம், கர்ப்பக்கிருகம் என்பவற்றில் பிரவேசிக்கக்கூடாதவர்கள் என்று இழிவுபடுத்தப்பட்டிருக்கிறோம். நம் கிளர்ச்சிகளால் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் உட்பட எல்லா இந்துக்களும் செல்லலாம்; ஜாதி (பிறவி) காரணமாக எந்த மனிதனுக்கும்,  எந்தவிதமானத் தடையும், பாகுபாடும் இல்லை என்று சட்டத்தில் செய்யப்பட்டும், கோயிலில் கடவுள் சிலை வைக்கப்பட்ட இடத்திற்குள் மட்டும் பார்ப்பனரல்லாத இந்து மக்கள் செல்லக்கூடாது என்ற நிபந்தனை ஏற்படுத்திக் கொள்ளப் பட்டிருக்கிறது. இந்த நிபந்தனைக்குப் பார்ப்பனரல்லாத மக்கள் கீழ்ஜாதியார், இழிஜாதியார் என்று இருக்கப்பட வேண்டும்-, ஆக்கப்பட வேண்டும் என்கிற காரணம் ஒன்றைத்தவிர, வேறு ஒரு காரணமும், நியாயமும் இல்லை. எப்படியென்றால், மூலஸ்தானம், கர்ப்பக்கிருகம் என்பது இடத்தைப் பற்றியதே தவிர, கடவுளைப் பற்றியதாக இல்லை. மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டிராத சாஸ்திர- சடங்கு முறைப்படி வைக்கப்பட்ட எந்தக் கடவுளையும் யாரும் நெருங்கலாம்- தொடலாம். நெருங்கித் தொட்டுக் கும்பிடலாம். ஆனால், மூலஸ்தானத்தில் இருக்கும் சிலைக்கு அருகில் மாத்திரம் பார்ப்பனர் அல்லாதவர்கள் செல்லக்கூடாது. அதாவது அந்த அறைக்குள் செல்லக்கூடாது என்பதுதான் தடையின் தத்துவம்.

இதன் கருத்து என்னவென்றால், முறைப்படிக் கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்ட கடவுள் எதுவானாலும்- இராமன், கிருஷ்ணன், கந்தன், கணபதி, சூரியன், சந்திரன் முதலிய எவையானாலும்- எந்தக் கோயிலுக்குள்ளும் மூலஸ்தானம் என்பதற்குள் இல்லாமலிருந்தால் நெருங்கலாம்- தொடலாம் என்பதாகத்தான் இன்று அனுபவத்தில் இருந்து வருகிறது. எனவே, மூலஸ்தானத்திற்குள் மனிதன் பிரவேசிப்பதால் எந்தக் கடவுளுக்கும் எவ்விதப் புனிதமும் கெட்டுப் போவதில்லை. மூலஸ்தானத்திற்குத் (இடத்திற்கு) தான் புனிதம் கெட்டுவிடுகிறதாம். அதுவும் பார்ப்பனரல்லாத மனிதர்கள் சென்றால் தான் கெட்டு விடுகிறதாம்.

மற்றப்படி பூனை, எலி, பல்லி, கரப்பான் பூச்சி முதலிய ஜந்துக்கள் எதுவேண்டுமானாலும் போகலாமாம்; கடவுளையும் தொடலாம். நாம் போகக் கூடாதாம்- அதுவும் இந்திய தேசத்தில், அதுவும் சில பார்ப்பன ஆதிக்கமுள்ள சில மாகாணங்களில் மாத்திரம்தான். இங்கு நாம் போனால் புனிதம் என்பது கெட்டு விடுகிறதாம்.

அடுத்த மாகாணமாகிய ஒரிசாவில் ஜெகந்நாத்திலுள்ள இந்தியாவிலேயே உயர்ந்த கோயிலான பூரிஜெகநாத் என்கின்ற கிருஷ்ணன் கோயிலில் யாரும் மூலஸ்தானத்திற்குள் சென்று கிருஷ்ணன் சிலையைச்  சுற்றி வந்து அவனின் காலைத் தொட்டுக் கும்பிடலாம்.

மற்றும் காசி, பண்டரிபுரம் முதலிய கோயில்களிலும் மூலஸ்தானத்திற்குப் புனிதம் இல்லை. யாரும் நெருங்கலாம் தொடலாம்.

ஆகவே, தமிழ்நாட்டில் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள். பார்ப்பனரல்லாத மக்களாகிய நம்மை இழிவுபடுத்தவும், கீழ்மைப்படுத்தவும் சட்டத்தின் மூலம் செய்துகொண்டிருக்கிற ஏற்பாட்டை நாம் உடைத்தெறிய வேண்டியது நம் ஜீவிதக் கடமையாக  இருக்கிறது.

இதை நாம் வெகு நாளைக்கு முன்பே செய்திருக்க வேண்டும். இந்தக்  காரியத்திற்கும், கடவுள் நம்பிக்கைக்கும் எந்தவிதமான சம்பந்தமுமில்லை. கடவுள் நம்பிக்கைக்காரர்களும் இந்தத் தடையைத் தகர்த்து எறியலாம்; கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் மனிதமான உரிமையை முன்னிட்டு  இந்தத் தடையைத் தகர்த்தெறியலாம், எறிய வேண்டும்.

எனவே இந்த இழிவு ஒழிப்புக் கிளர்ச்சிக்குப் பார்ப்பனரல்லாத இந்துக்கள் எல்லாரும் கலந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். இப்போது நமக்கு இருக்கும் இழிவு- நிரந்தரமான இழிவு- என்பது இந்த மூலஸ்தானத்தடை என்பதுதான்.

“மூல ஸ்தானத்திற்குள்’’ பிரவேசிக்க உரிமையுள்ள பார்ப்பான் என்பவனுக்கு ஒரு நிபந்தனையும் இல்லை. பூணூல், உச்சிக்குடுமி இரண்டு மாத்திரம் இருந்தால் போதும். அவன் எதையும் குடிக்கலாம்; எதையும் சாப்பிடலாம்; யாரையும் தொட்டுக்கொள்ளலாம்: யாருடனும் உட்காரலாம், எப்படிப்பட்டவனாகவும் இருக்கலாம். எனவேதான் இந்தத் தடை ஒழிக்கப்பட்டாக வேண்டும்.

இதில் ஒவ்வொரு பார்ப்பனரல்லாத இந்து மனிதனும் கலந்து கொள்ளவேண்டியது அவசியமான காரியம் ஆகும்.

காங்கிரஸ்காரர்களும், -கம்யூனிஸ்ட்களும்,  தி.மு.க.காரர்களும் - தி.க.காரர்களும் எல்லோரும் ஆண், பெண் உட்பட அனைவரும் கலந்து கொள்ள வேண்டியது மானாபிமானக் கடமையாகும். ஆகையால் உடனடியாகக் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் தங்கள் பெயர்களைக் கொடுக்க விரும்புகிறேன்.

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிபோல்,- வைக்கம் கிளர்ச்சிபோல் இக் கிளர்ச்சித் தொடர்ந்து 5,6 மாதங்களுக்குமேல் நடத்தப்பட வேண்டியது வரும். ஆதலால் அதற்கு ஆகும் பெருந்தொகை நன்கொடையாக வேண்டி இருக்கும். வசூலிக்க ஆசிரமம் மாதிரி இடம்- பெரிய இடத்தை ஏற்படுத்திக் கொண்டு, தினமும் அய்ம்பது பேருக்குக் குறையாமல் சாப்பாடு போட்டுக் கைவசம் வைத்து இருக்கவேண்டியதாகவும் இருக்கும்  இதனால் ஒரு நல்ல பிரசார பலனும் ஏற்படும். ஆகவே உடனே இஷ்டப்படும் தோழர்கள் தங்கள் பெயரைக் கொடுக்க வேண்டுகிறேன்; கிளர்ச்சி என்பது எந்தவித பலாத்காரமும் இல்லாமல் அமைதியான தன்மையில் நடைபெறும் ஆதலால் யாரும் இதில் கலந்து கொள்ளலாம்.

13-10-1969 

‘விடுதலை’யில் பெரியார் ஈ.வெ.ரா. தலையங்கம்.

- உண்மை இதழ்,16-30.11.17