வெள்ளி, 30 செப்டம்பர், 2016

எனது கவலை!

தந்தை பெரியார்

எனது கவலை லட்சியம் யாதெனில் அந்நியன் என்றால் வெள்ளையன், பனியா, முல்தானி, மார்வாடி, காஷ்மீரி, குஜராத்தி ஆகிய இவர்கள் ஆதிக்கத்திலிருந்து அதாவது, எந்தவித ஆரிய ஆதிக்கத்திலிருந்தும் விலகுவதும், பிரிட்டிஷ்காரன், அமெரிக்கன், ரஷியன், மேற்கண்ட மார்வாடி, பனியா, பார்ப்பனன் மேலோகத்தான் என்பவன் எவனும் நம்மைச் சுரண்டக் கூடாது என்பதாகும்.

வெள்ளையனே வெளியேறு என்பது பற்றி காந்தியார் அர்த்தம் சொல்லும்போது அவன் சுரண்டிக்கொண்டு வெளியே போகாமல் இங்கேயே இருப்பதைப் பற்றிக் கவலையில்லை என்று சொல்லுகிறார்.

நாம் இங்கு உள்ள பார்ப்பனன் சமுதாயத்தின் பேரால், ஆரியத்தின் பேரால் சுரண்டக்கூடாது என்றும், மீறி எவன் சுரண்டினாலும் திராவிட நாட்டைவிட்டு வெளியே கொண்டு போகக்கூடாது என்றும் சொல்லுகின்றோம். விளக்கமாக, சென்னை மாகாணம் முழு சுயேச்சையுடன் இருக்க வேண்டும். பிர்லாக்கள், டாட்டாக்கள், மகாத்மாக்கள், நேருக்கள், வெள்ளைக்காரர்கள் யாராயிருந்தாலும், சென்னை மாகாணம் என்னும் திராவிட நாட்டு எல்லைக்குள் நுழைய வேண்டுமென்றால் பாஸ்போர்ட் அனுமதிச்-சீட்டு வாங்கிக் கொண்டு தான் உள்ளே நுழைய வேண்டும். எந்த வடநாட்டானோ, அல்லது வேறு எந்த அந்நியனோ நமது நாட்டுக்குத் தலைவனாகவோ, ராஷ்டிர-பதியாகவோ, மகாத்மாவாகவோ இருக்கக் கூடாது. மனிதரெல்லாம் சமமாக வாழ-வேண்டும் மனித வர்க்கத்தில், பறையனோ, சூத்திரனோ, சக்கிலியோ, பிராமணனோ, இழி ஜாதியானோ இருக்கக் கூடாது. இத்தகைய கொள்கைகள் காங்கிரசில் இருக்கின்றனவா? இதற்குக் காங்கிரஸ் சம்மதிக்கின்றதா? அப்படி சம்மதிக்காவிட்டால் யார் பித்தலாட்டக்காரர்? யார் உண்மை விடுதலைக்கு சமத்துவத்திற்கு எதிரிகள்?

உலக நாடுகள் பெற்றுள்ளமை போல நமது நாடும் சுதந்திரம் பெற்றுத் தனிநாடாக இருக்க வேண்டும். நாலு கோடி மக்களிலே யார் வேண்டுமானாலும், மந்திரியாகவோ, மகாத்மாவாகவோ இருக்கட்டும். நம்மிலே அத்தகைய தகுதியுடையவர்கள் இல்லையா? நமக்கு அரசியல் தெரியும், பரம்பரை பரம்-பரையாக அரசாண்டவர்கள் நாம். நமக்குக் கப்பலோட்டத் தெரியும். பரம்பரை பரம்பரையாகக் கப்பலோட்டி வாணிபம் செய்தவர்கள் நாம், பிறன் ஆதிக்கம், உயர்வு இங்கு வேண்டாம்,  திராவிடர்கள் இங்கு நான்காவது ஜாதியினராக இருக்கின்றார்கள். திராவிடரல்லாத ஒரு கூட்டம் முதலாவது ஜாதியாக இருக்கின்றது. நூற்றுக்குத் தொண்ணூறு பங்காக உள்ள திராவிட இனம் இன்று சட்டத்திலே, சாஸ்திரத்திலே, சூத்திரனாக, பஞ்சம இழிமகனாக வாழ்கின்றது. திராவிடன் மனிதனாக வாழ வேண்டாமா? திராவிட நாடு இழிமக்கள் இல்லாத நாடு ஆக வேண்டாமா?

இக்காலத்திலே சிம்மாசனத்திற்கோ மகுடத்திற்கோ மதிப்பில்லை. ஜனநாயக ஆட்சியே இக்காலத்திற்குத் தேவை எனப்-படுகின்றது. நாணயம், ஒழுங்கு, மனிதத் தன்மையுடன் யார் வேண்டுமானாலும் அதிகாரம் செலுத்தட்டும் இன்றைக்கு அரசராகவும் இருக்கட்டும்.

நீதி, நேர்மை, சமத்துவ ஆட்சிதான் நமக்கு வேண்டும். இராமாயணத்தில் சொல்லப்படுவது போன்று ஒரு ஜதை செருப்பு ஆண்டாலும் நமக்குக் கவலையில்லை ஆனால் சாஸ்திரத்திலே, சட்டத்திலே, நடைமுறையிலே நமக்கும், நம் இனப் பாட்டாளியான மக்களுக்கும் இருக்கும் சூத்திரப்பட்டம் ஒழிய வேண்டும். சோம்பேறி அயோக்கியர்களுக்கு இருக்கும் பிராமணோத்துவப் பட்டம் ஒழிய வேண்டும். சாஸ்திரத்திலே, மதத்திலே, கடவுளிலே ஜாதி இருப்பதை, பிரிவு இருப்பதை, பிறவி இழிவு இருப்பதை ஒழித்து விடுவதாகக் காங்கிரசில் எங்கேயாவது கொள்கைத் திட்டம் இருக்கின்றதா? எப்போதாவது எந்தத் தலைவராவது சொன்னார்களா? காந்தியாருக்கு இப்போது வேண்டுமானாலும் தந்தி கொடுத்து கேட்டுப் பாருங்கள். ஒப்புவாரா பார்க்கலாம். இராமன் காலத்தில் இருந்துதானே பறையன், சூத்திரன், பிராமணன் என்றும் மேல், கீழ் ஜாதிகள் இருந்திருக்கின்றன. சாமி கும்பிட்ட குற்றம் செய்த ஒரு சூத்திரன் கொல்லப்பட்ட பிறகுதான் இறந்து போன பார்ப்பனன் உயிர்பெற்று எழுந்ததாகப் புராணம் (இராமாயணம்) சொல்கின்றது. அரிச்சந்திரன் காலத்தி-லிருந்த பறையன் இன்றும் இருக்கின்றானே. ஆகவே, இத்தகைய இழிவு-களைப் போக்குவதற்காகத்தான் திராவிடர் கழகம் ஓர் உண்மையான ஒப்பற்ற விடுதலை ஸ்தாபனமாக விளங்கி வேலை செய்து வருகிறது.

இந்தியா என்னும் இப்பரந்த உபகண்டம் சுமார் 3000 மைல் நீளம் 2000 மைல் அகலம் உள்ளதாக இருக்கின்றது. இங்கு மக்களிடையே பண்டைக்காலம் தொட்டு இன்று வரையில் பல பேதங்கள் வளர்ந்து வந்துள்ளன. ஒருவர் வீட்டில் ஒருவர் சாப்பிடுவதில்லை. மணந்து கொள்வதுமில்லை. பலபாஷைகள், பல நாகரிகங்கள், பல உயர்வு தாழ்வுகள் ஆகிய வித்தியாசங்கள் இருந்து வருகின்றன. இத்தகைய பேதமுள்ள பிரதேசம் உலகத்தில் எங்குமேயில்லையே. இவ்வளவு வேற்றுமை கருத்துடைய ஒரு பெரிய உபகண்டத்தை ஒரே நாடு என்றும், ஒரே ஆட்சியில் இருக்க வேண்டுமென்றும் சொன்னால் இதை நாம் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்?

வெள்ளையன் எங்களுக்கு வேண்டாம்.  அவன் எதற்கும் எங்களுக்குத் தேவையில்லை. நாட்டை ஆண்டு வந்த நாங்கள், வெள்ளையன் வந்த பிறகு பியூனாக, பட்லராக, கான்ஸ்டேபிலாக இருக்கிறோம். ஆனால் பிச்சை எடுத்தக் கூட்டத்தார், இன்று அய்கோர்ட் ஜட்ஜாக, அட்வகேட் ஜனரலாக, திவானாக, மந்திரியாக, சங்கராச்சாரியாக, பகவான்களாக இருக்கின்றனர்.

பார்ப்பனர்கள் ஜட்ஜ் முதலிய பெரிய பதவிகளில் இருக்கின்றார்கள். அதனால் அவர்களுக்கு வெள்ளையன் இருப்பதால் நஷ்டமொன்றும் இல்லை. எங்களுக்குத்தான் முதலில் வெள்ளையன் வெளியே போக வேண்டுமென்ற கவலை. ஏனெனில் வெள்ளை-யனுக்கும் ஆரியனுக்கும் நாங்கள்தான் அடிமைகளாக இருக்கின்றோம்.

கம்யூனிட் கட்சியார், மில்லிலும் எஞ்சினிலும் வேலை செய்யும் தொழிலாளர்களையே தொழிலாளர்களாகக் கருதுகின்றார்கள். சரீரத்தினால் பாடுபடும் சூத்திரப் பட்டம் தாங்கிய நாலுகோடி மக்களும் தொழிலாளர்-களல்லவா? சூத்திரனைக் கூலி இல்லாமல் பார்ப்பனன் வேலை வாங்கலாம் என்று மனுதர்ம சாஸ்திரம் சொல்லுகின்றதே. இது கடவுளின் கட்டளையாம். திராவிடச் சங்கம் என்றால் சூத்திரன் சங்கம் என்று தானே கருத்து. இதற்குத்தானே, இப்படிச் சொல்ல வெட்கப்-பட்டுத்தானே பார்ப்பனரல்லாதார் சங்கம் என்றும் சொன்னோம். ஏன் இந்த இழிவான பெயர்கள் நமக்கு? பார்ப்பனன் வேண்டு-மென்றால் தம் சங்கத்தைச் சூத்திரனல்லாதான் சங்கம் என பெயர் வைத்துக் கொள்ளட்டுமே. நாம் ஏன் நம்மைப் பார்ப்பனரல்லாதான் என்று அழைத்துக் கொள்ள வேண்டும்? நமக்குச் சொந்தப் பெயரில்லையா? நாம் திராவிடர்கள் அல்லவா? பிராமணன் உயர்வானவனென்று யஞ்யவல்யர், நாரதர், பராசரர் சொன்னது இன்று இந்து சட்டமாகக் காட்சியளிக்கின்றதே. சட்டத்திலே, சாஸ்திரத்திலே, நடத்தையிலே, பிறவியிலே நாம் சூத்திரராயிற்றே. கடவுளாலே கொடுக்கப்பட்டது என்று சொல்லப்படும், இந்த சூத்திரப் பட்டத்தைத் தாங்கி நிற்பவர்கள் கஷ்டப்பட்டு வேலை செய்யும் தொழிலாளர்-களாகிய திராவிடர்களல்லவா? நாம் எப்பொழுது இந்தச் சூத்திரப்பட்டத்தை ஒழிப்பது?

(18.08.1946 அன்று கும்பகோணத்தில் காங்கேயன் பார்க்கில் தோழர் கே.கே.நீலமேகம் அவர்கள் தலைமையில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவு)

- ‘குடிஅரசு’ - சொற்பொழிவு - 12.10.1946

-உண்மை,16-30.9.16

 

திங்கள், 5 செப்டம்பர், 2016

செக்குலர் என்பதன் பொருள் என்ன?

பார்ப்பான் உயிர் கடவுள் பொம் மையிலும், கல்லிலும் தான் இருக்கிறது. அவை ஒழிந்தால் பார்ப்பானைப் பிராமணன் என்றோ, சாமி என்றோ, மேல் ஜாதியான் என்றோ எவனும் மதிக்க மாட்டான்.
பூணூல் இல்லாத பார்ப்பனர் காங்கிரஸ்காரர்கள்
இப்போதே பார்ப்பனர் தங்களுக்குக் கூண்டோடு அழிவுக்காலம் வந்துவிட்டது என்று கருதி, எந்தப் பாதகத்தைச் செய் தாவது - அதாவது யாரைக்கொன்றாவது, மக்களை எல்லாம் காலிப்பயல்களாகச் செய்தாவது தங்களைக் காப்பாற்றிக் கொள்ளத் தீர்மானித்து, இக்காரியத்தில் (ஒவ்வொரு பார்ப்பானும்) தங்களாலான கைங்கரியத்தைச்செய்து பார்த்து விடத் துணிந்துவிட்டார்கள்.
இதற்கு ஆதாரம் இந்நாட்டில் எங்குப் பார்த்தாலும் நடந்துவரும் அயோக் கியத்தனங்களும் காலித்தனங்களுமே போது மானவையாகும். இந்த நிலைக்குப் பூணூல் இல்லாத பார்ப்பனர்களாகிய காங்கிரஸ்காரர்களும் பெரும் காரணஸ் தர்களாகவும், பொறுப்பாளர்களாகவும் இருக்கிறார் .
தொழிலாளர் என்று கூச்சல் பார்ப்பனக் கூட்டு முயற்சியே!
பார்ப்பனர்களுக்கு அவர்களது பார்ப்பனத் தன்மை இறங்கிக் கொண்டு வருகின்றது. காங்கிரஸ்காரர்களுக்கு இந்த நாட்டில் அவர்கள் ஆதிக்க வாழ்வு இறங்கியே விட்டது. ஆகையால் இரு சாராரும் சேர்ந்து தங்களால் செய்யக்கூடிய எல்லாப் பாதகச் செயல்களையும் செய்து பார்த்து விடுவது என்று  துணிந்து விட்டிருக்கிறார்கள். இப்போது வேலை நிறுத்தம், தொழிலாளர் என்று கூச்சல் போடுவதெல்லாம் பார்ப்பனக் கூட்டு முயற்சிதான்.
இன்னும் பல பெரிய கேடுகள் ஏற் படலாம். இன்றைய திராவிட முன்னேற்ற (பகுத்தறிவு)க் கழகத்தைக் கவிழ்க்கும் வரை (அதை அவ்வளவு எளிதில் செய்ய முடியாது) ஓயாமல் பல கேடுகளைக் செய்துதான் வருவார்கள். மக்கள் சகித்துக் கொண்டுதான் தீரவேண்டும். ஏன் என்றால், பார்ப்பான் ஒழிவதும், காங்கிரஸ் ஒழிவதும் இலேசான காரியம் அல்ல.
பெரிய சதி முடிச்சுடன் திரிகிறார்கள்
எளிதில் பிரிய முடியாதபடி அவை, ஒன்றுக்கொன்று ஆதரவில் பெரிய முடிச்சுப் போட்டுக்கொண்டிருக்கின்றன.
இரண்டும் தங்கள் ஆதிக்கக் கட்டடத் தைக் கடவுள், மதம், கோவில், உருவம், இவை சம்பந்தமான கட்டுக்கதைகள் ஆகிய அஸ்திவாரத்தின் மீதே கட்டிக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக் கிறார்கள்.
இவர்கள் ஒழிக்கப்பட வேண்டுமென் றால் மக்களுக்குப் பகுத்தறிவேற்பட்டுப் பகுத்தறிவுக்கு மாறான எதையும் ஒழித்துக் கட்டுவது என்ற துணிவு தமிழர்களுக்கு ஏற்பட்டால்தான் முடியும்.
காந்தி சொன்னதன்
முழுப் பொருள் என்ன?
இதை மனத்தில் வைத்துத்தான் காந்தியாரும் ‘காங்கிரஸ் ஒழிக்கப்பட வேண்டும்’ என்றும், ஆட்சி - செக்குலர், மதச்சார்பற்ற - பகுத்தறிவு ஆட்சியாக இருக்கவேண்டுமென்றும் சொன்னார். இதனாலேயே அவர் கொல்லப்பட்டுவிட்ட படியால், காங்கிரஸ் கலைக்கப்படாமல் போய்விட்டதோடு, செக்குலர் ஆட்சி என்று சட்டம் செய்தும், அது அமுலுக்குக் கொண்டுவர முடியாமலே போய்விட்டது.
இப்போது அதை மதச்சார்பற்ற ஆட்சியாகச் செய்யக்கூடிய தி.மு.க. ஆட்சி நல்வாய்ப்பாக ஏற்பட்டிருந்தும் அதைக் காங்கிரசாரும், பார்ப்பனரும் ஒழிக்கப் பார்க்கின்றார்கள்.
செக்குலருக்குப் பார்ப்பனர் கூறும் விபரீத வியாக்கியானம்
செக்குலர் - மதச்சார்பற்ற என்ற சொல்லுக்கு இவ்விருசாராரும் என்ன வியாக்கியானம் கூறுகிறார்கள் என்றால் ‘ஒரு பெண் கன்னியாய் இருக்கவேண்டு மென்றால் அதற்கு ஆண் சம்பந்தமே இருக்கக்கூடாது என்பது பொருள் அல்ல; எல்லா ஆண்களையும் சமமாகக் கருதிக், கூப்பிட்டவனிடமெல்லாம் கலவி செய்ய வேண்டும் என்பதுதான் கன்னி என்பதற்குப் பொருள்’ என்பது போல் பொருள் சொல்கிறார்கள். எல்லா மதங்களையும் சமமாகப் பார்க்கவேண்டும் என்கின்ற கொள்கை மத விஷயத்தில் காலம் காணாததற்கு முன்பு இருந்தே இருந்து வருகிறபோது, அதைப் புதிதாக வலியுறுத்த வேண்டிய அவசியம் ஏன் வரும்?
செக்குலர் எதற்குப் பொருந்தும்?
‘செக்குலர்’ என்ற சொல்லை ஆங்கிலச் சொல்லாகத்தான் சட்டத்தில் புகுத்தி னார்களே ஒழிய வேறு மொழிச் சொல் லாகப் புகுத்தவில்லை. ஆங்கிலச் சொல் லுக்கு வியாக்கியானம் அந்தச் சொல்லை உற்பத்தி செய்தவர்கள் சொல்லுவதைப் பொறுத்ததே ஒழிய, அதன் கருத்துக்கு விரோதிகளான பார்ப்பனர்களும், காங் கிரஸ்காரர்களும் சொல்லுவது பொருத் தமாக முடியுமா?
அந்தச் சொல்லும்கூட அரசாங்க காரியத்திற்குத்தான் பொருந்தும் என்று இன்றைய ஆட்சியாளர்கள் சொல்லு கிறார்களே ஒழிய அது எல்லா மக்களுக்கும் வலியுறுத்தும் பொருள் என்று சொல்ல வில்லையே!
அப்படி இருக்க இதில் பார்ப்பனருக்கும், காங்கிரசாருக்கும் ஏன் ஆத்திரம் வர வேண்டும்?
ஏன் என்றால், தங்கள் வாழ்வு அதில் தான் இருக்கிறது; அதில்தான் மக்களுடைய முட்டாள்தனத்தில் கிளைத்து எழுந்த கடவுள், மதம், கோவில், அதில் உள்ள கற்சிலைகள், அவற்றின் பொம்மைகள், சித்திரங்கள், படங்கள், தட்டிகள் முதலி யவைகள் இருக்கின்றன. அதனால்தான் அவர்களுக்கு ஆத்திரம் வருகின்றது.
தமிழர்கள்
கடமை என்ன?
எதை எதையோ சொல்லி, எதை எதையோ செய்து எப்படியோ போகட்டும்; நமக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை; அதற்குப் பெரும் கூட்டம் தயாராய் இருக்கிறது. ஆனால் பார்ப்பனரும், காங் கிரஸ்காரர்களும் (காங்கிரசிலும் தனித் தன்மையுள்ள ஒரு கூட்டம் இருக்கிறது. ஆனால் அவர்கள் வெளிப்படையாய் வரப்பயப்படுகிறார்கள்) அல்லாத பொது மக்கள் (தமிழர்கள்) கடமை என்ன?
நம் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் ஊரில் பொதுக்கூட்டம் போட்டு, அரசாங்க காரியங்களை ஆத ரித்துப் பாராட்டித் தீர்மானங்கள் போட்டு, அத்தீர்மானங்களை முதலமைச்சருக்கும், மத இலாகா அமைச்சருக்கும் அனுப்பிய வண்ணம் இருக்க வேண்டியது அவசியம்.
பார்ப்பனப் பிரச்சாரத்தைப் பார்த்தாவது நமக்குப் புத்தி வர வேண்டாமா?
பார்ப்பனர்கள் தினந்தோறும் தங்கள் பத்திரிகைகளில் யார்யாரோ அநாம தேயங்கள் பேரால் பல கடிதங்கள் வெளி யிட்டு வருகிறார்கள். நாம் அப்படிச் செய்யாவிட்டாலும், பொதுக்கூட்டங்கள் போட்டுப் பேசித் தீர்மானங்கள் செய்து அனுப்பவேண்டாமா?
இப்படிச் செய்வது ஒரு வகையில் பார்ப்பனர் யோக்கியதையையும், காங் கிரசார் யோக்கியதையையும் பொதுமக்கள் தெரிந்துகொள்வதற்கு வசதியாகும்.
சூத்திர வாழ்க்கையில்
சுகமா?
பொதுவாக நம் தமிழ் மக்கள், தாங்கள் என்றென்றும் குத்திரர்களாக, கீழ்ஜாதி களாக இருக்க ஆசைப்படுகிறார்களா? இல்லாவிட்டால் அதை மாற்றத் தமிழர்கள் செய்யும் செய்யப்போகும் காரியம் என்ன என்று கேட்கிறேன். தாங்களாகச் செய்யா விட்டாலும் ஆட்சியையாவது ஆதரிக்க வேண்டாமா?
ஒவ்வொரு தமிழனும், தன் வீட்டில் உள்ள கடவுள்-மத சம்பந்தமான படங்களை எடுத்து எறியவேண்டும்; எடுத்து எறிந்துவிட்டுத் தகவல் கொடுக்கவேண்டும் பொதுக்கூட்டத்தில் காட்டிக்கிழித்து எறிய வேண்டும்.
இவற்றாலும், இப்படிப்பட்ட காரியங் களாலும்தாம் தமிழர் இழிவு நீங்கும்.
‘உண்மை’,  1412.1971
விடுதலை ஞாயிறு மலர், 30.7.16

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

பார்ப்பான் பணக்காரனானால்? தந்தை பெரியார்


இந்த நாட்டில் பார்ப்பனர்மீது பாமரமக்களுக்கு வெறுப்பு உண்டாகும் படி செய்துவரும் (என்னால்  தோற்று விக்கப்பட்ட) சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவற்றின் பிரச் சாரத்தால் பார்ப்பனர்கள் தங்களுக்கு உரிய வைதீக சம்பந்தமான ஏழ்மை வாழ்க்கையை விட்டுவிட்டு, பாங்கு, வியாபாரம், இயந்திரசாலை முதலாளி முதலிய தொழில்களில் ஈடுபட்டு, ஏராளமான பணம் சம்பாதித்து, அவர் களில் அநேகர் செல்வவான்களாகவும், இலட்சாதிபதிகளாகவும் ஆகிவிட் டார்கள். இதுதான் துவேஷப் பிரச் சாரத்தால், ஏற்பட்டபயன் என்று, பார்ப்பனர்கள் மீது வெறுப்பு கொண்ட பலர் என்னைக் குற்றம் சொல்லுகிறார் கள்.
இது உண்மையானால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியேயாகும்.
எனக்கு, எனது சுயமரியாதை, திராவிடர் கழகப் பிரச்சாரத்தின் கருத்து என்ன வென்றால் ஒரு பார்ப்பான் கூட ‘‘மேல் ஜாதியான்’’ என்பதாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தானே தவிர பார்ப்பான் பணக்காரானாகக் கூடாது, அவன் ஏழையாகவே இருக்க வேண்டு என்பது அல்ல. ஒவ்வொரு பார்ப்பானும், ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் பொப்பிலி ராஜா, சர்.சண்முகம் செட்டியார், சர். இராமசாமி முதலியார் போன்றவராக, கோடீஸ்வரனாகவும், இலட்சாதிபதியாகவும் ஆகிவிட்டாலும் சரியே; எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் எந்தப் பார்ப்பானும், மடாதிபதிகள் உள்பட எவரும் சிறிது கூட நமக்கு மேல் ஜாதியி னன் என்பதாக இருக்கக் கூடாது என்பது தான் என் நோக்கம். பணக்காரத்தன்மை ஒரு சமூகத்துக்குக் கேடானதல்ல. அந்த முறை தொல்லையானது, சாந்தியற்றது என்று சொல்லலாம். என்றாலும் அது பணக்காரனுக்கும், தொல்லையைக் கொடுக்கக் கூடியதும், மனக்குறை உடையதும் இயற்கையில் மாறக்கூடி யதும், எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றக் கூடியதுமாகும்.
ஆனால் இந்த மேல் ஜாதித் தன்மை என்பது இந்த நாட்டுக்கு, பெரும்பாலான மனித சமுதாயத்துக்கு மிகமிகக் கேடானதும், மகா குற்றமுடையதுமாகும்; அது முன்னேற்றத்தையும், மனிதத் தன்மையையும் சம உரிமையையும் தடுப்பதுமாகும். ஒரு பெரிய மோசடியும், கிரிமினலுமாகும். ஆதலால் என்ன விலை கொடுத்தாவது மேல் ஜாதித் தன்மையை ஒழித்தாகக் வேண்டும் என்பது எனது பதிலாகும்.
‘குடிஅரசு’ 9.11.1946
-விடுதலை,6.8.16