வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

சுயமரியாதைக் கண்ணாடி மூலம் பாருங்கள்தலைவரவர்களே! சகோதரிகளே!! சகோதரர்களே!!!

சுயமரியாதை இயக்கம் என்பதைப் பற்றி பேச வேண்டுமென்பதாக நண்பர் பெருமாள் அவர்களால் இக்கூட்டம் கூட்டப்பட்டிருக்கின்றது. நாங்கள் திரு. பெருமாளின் குமாரத்தியின் திருமணத்திற்கு என்று அழைக்கப்பட்டு இங்கு வந்தோம், இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த ஊரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசவேண்டுமென்ற ஆசை அநேக நண்பர்களுக்கு இருந்ததால் நானும் இந்த சந்தர்ப்பத்தை வீணாக்காமல் சிறிது பேசலாமென்றே கருதுகின்றேன். சுயமரியாதை இயக்கத்தின் தீவிரமான கொள்கைகளையெல்லாம் இப்போது உங்களுக்கு எடுத்துச் சொல்வது என்பது சற்று கஷ்டமானாதா யிருக்குமென்றே கருதுகின்றேன்.

ஏனென்றால் இதற்கு முன் இங்கு இந்தப்பிரசாரம் நடத்தப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. அதன் தீவிரக் கொள்கைகளை நீங்கள் முதல் முதலாக கேட்கும்போது. அது உங்களைத் திடுக்கிடச் செய்யும். அவற்றின் உண்மையை அறிவது என்பது இன்றே சுலபத்தில் புலப் படக் கூடியதாகாது. ஆதலால் உங்களுக்குச் சிறிது நிதானமான முறையில் தான் பேச வேண்டியவனா யிருக்கிறேன். அதாவது இந்த நான்கு, அய்ந்து வருஷங் களுக்கு முன் கிராம ஜனங்களின் முன் நான் எந்த நிலையில் பேசினேனோ அது போல் முதல் பாடத்திலிருந்து பேச வேண்டியவனாயிருக்கிறேன். ஏன் இந்தப்படி சொல்லு கிறேன் என்றால் திரு. பெருமாள் வீட்டுக் கல்யாணத்திற்குப் பார்ப்பான் வரவழைக்கப்படாததாலேயே இவ்வூரார் அவர்மீது மிகுந்த கோபமாய் இருப்பதாகவும், நான் கோவில் குளங்களைப்பற்றி குற்றம் சொல்லுகின்றவன் என்பதாகவும், ஜாதிகளையெல்லாம் ஒன்றாக்க வந்திருக்கின்றேன் என்பதாகவும், குற்றம் சொல்லி இந்தக் கூட்டத்திற்கு யாரும் போகக்கூடாதென்று சிலர் பிரசாரம் செய்தார்களாம். இப்படிப்பட்ட முயற்சிக்காரர்கள் முன்னால் பார்ப்பனர் களின் நடத்தையையும் கோவில் குளங்களினுடைய தொல்லையையும் எடுத்துச் சொன்னால் எப்படி அது உங்களால் நடு நிலையில் கிரகிக்கப்படும் என்பதை நீங்களே நினைத்துப்பாருங்கள். புதிய சங்கதி எதுவானாலும் காதை மூடிக்கொள்ளவே நமது மக்கள் கற்பிக்கப்பட்டிருக் கின்றார்கள். சிறு குழந்தைப்பருவத்தில் நமக்குப் புகுத்தப்பட்ட விஷயங் களையே ஆராய்ச்சியின் மூலம், அறிவின் மூலம் கண்டமுடி வென்று கருதி அதற்குத் தலை கொடுத்துக்கொண்டு இருக் கின்றோம். நமது உள்ளத்தில் எது எது பதிக்கப்பட்டு விட்டதோ அதெல்லாம் தேர்ந்த ஞானிகளாலும், தெய்வத்தன்மை பொருந்திய அவதார புருஷர்களாலும் சொல்லப் பட்ட உண்மைகள் என்ற உறுதியுடனே புகுந்தப்பட்டிருக்கிறோம். ஆகையால் புதிய நோக்கங்களையும் தோற்றங்களையும் காண சகிக்காத வர்களாக இருக்கின்றோம். உலகப் போக்கை நாம் தெரிய நேர்ந்தாலும், பார்க்க நேர்ந்தாலும் அதன் அனுபவத்தின் மேன்மையை அடையவும் பாராட்டிப்பேசவும், தயாராய் இருக்கின்றோமே அல்லாமல் அதை நமது வாழ்க்கையுடன், நமது நாட்டு எண்ணங் களுடன் பொருத்திப் பார்ப்பதற்குச் சிறிதும் எண்ணுவதே கிடையாது. நமது மக்களின் இந்த மாதிரியான நிலையைப் பார்த்துப் பார்த்து, மனம் கஷ்டப் பட்டதால்தான் நாங்கள் இந்த துறையில் இறங்கித் தொண்டு செய்ய வேண்டியவர் களானோம்.

சுயமரியாதை


சுயமரியாதை இயக்கம் என்பதின் முக்கிய கொள்கைகள் என்பவை ஒன்றும் புதி தானதோ, அல்லது ஏதாவது அதிசயமானதோ என்று நீங்கள் மலைக்க வேண்டிய தில்லை. அது மனிதன் அறிவுபெறவும், சமத்துவம் அடையவும், சுதந்திரம் பெறவும் பாடு படுகின்றது. அறிவுக்கும், சமத்துவத்திற்கும் சுதந்திரத்திற்கும் எதிராயும் தடையாயும் இருக்கும் எதையும் அடியோடு ஒழிக்க தைரியம் கொள்ளுகின்றது. இந்த நிலையில் மக்களின் மூடத்தனத்தினாலும் தாழ் வினாலும், அடிமைத்தனத்தினாலும் பயனடைந்து வாழ்கின்றவர்களுக்குச் சுயமரியாதை இயக்கம் ஒரு கோடாலியாய் காணப்படுவதானால் அதிசயமொன்று மில்லை. எங்களைக் கண்டால் துவேஷமும், வெறுப்பும் ஏற்படத்தான் செய்யும், எங்களைவையவும் தொல்லைப் படுத்தவும் அவரவர்கள் மனம் தூண்டத்தான் செய்யும், இவ்வியக்கத்தைக் கையாளுகிறவர்களுக்கு  அவற்றை யெல்லாம் சமாளிக்க சக்தி இருந்தால்தான் இவ்வியக்கத்தால் ஏதாவது பலன் ஏற்படமுடியும். எதிர்ப்புக்கும் தொல்லைக்கும் பயந்தால் ஒரு காரியமும் நடவாமல் போவதோடு பிற்போக்கும் ஏற்பட்டுவிடும்.

சாதாரணமாக நாங்கள் இந்த ஊர் பொது ஜனங்களின் பாராட்டுதலையும், வணக்கத்தையும் மரியாதையும் பெற்று கொஞ்சம் பணமும் சம்பாதித்துக் கொண்டு போக வேண்டுமானால் எங்களால் சுலபத்தில் முடிந்துவிடும். நமது ஜனங்களின் முட்டாள்தனம் எங்கு, எங்கு இருக்கின்றது என்பது எங்களுக்குத் நன்றாய்த் தெரியும்.

உதாரணமாக, நாங்கள் தேசபக்தர்களைப் போல கதர் வேஷம் போட்டு கையில் கொடியைப் பிடித்துக்கொண்டு பாரதமாதாவுக்கு ஜே! சுயராஜ்யத்திற்கு ஜே! மகாத்மாவுக்கு ஜே! என்று கூறிக்கொண்டோ, அல்லது பெரிய கடவுள் பக்தர் போல் வேஷம் போட்டுக் கொண்டு மஞ்சள் உடையோ, காவி உடையோ கட்டிக் கொண்டு பட்டைநாமம் போட்டுடக் கொண்டு குடை, தேசகண்டி இவைகளுடன் நாராயண மூர்த்தி கோவிந்தா கோவிந்தா என்றோ சொல்லிக்கொண்டு பஜனை கோஷ்டியுடனோ கூட்டமாய் வந்தோமானால் நீங்கள்கும்பிட்டு காசு கொடுத்துவிட்டுப் போவீர்கள் என்பது எங்களுக்கு நன்றாய்த் தெரியும். இதற்காக ஒரு துரும்பைக் கிள்ளிப் போடவேண்டிய அவ்வளவு சிறிய கஷ்டம்கூடநாங்கள் படவேண்டியதில்லை.

ஆனால், நாங்களோ இன்று அப்படி சொல்லி வயிறு வளர்ப்பதனுடைய புரட்டுகளை எடுத்துச்சொல்லுகின்ற வேலையை மேற்போட்டுக் கொண்டிருக்கின்றோமாதலால் சோம்பேறிப் பிழைப்புக்காரர்களுடைய கோபத்திற்கும் பழிதீர்த்துக்கொள்ளும் வஞ்சகத்திற்கும் ஆளாக வேண் டியவர்களாக இருக்கின்றோம். இந்திய நாடு சூழ்ச்சிக் காரருடைய ஆட்சிக்கு உட்பட்டகாலம் முதலே எங் களைப்போல் ஒரு கூட்டம் பல தடவை தோன்றி சூழ்ச்சிகளை வெளிப்படுத்தி வந்திருக்கின்றதானாலும் சூழ்ச்சிக்காரர்களின் சாமாத்தியமானது, அவற்றை லட்சி யப்படுத்தக் கூட முடியாமல் செய்துகொண்டே வந்திருக் கின்றது. இன்றைய தினம் அறிவு வளர்ச்சிக்கும், சமத்துவத் திற்கும், சுதந்திரத்திற்கும் விரோதமான காரியங்கள் என்று எதை எதை நாங்கள் கருதுகின்றோமோ அவற்றையெல்லாம் எங்களுக்கு முன்னும் அநேக பெரியார்கள் கருதி வெகுகடினமாக கண்டித்து பேசி இருக்கிறார்கள்.

உதாரணமாக ஜாதி மதத்தை கண்டித்தும், வேத சாஸ்திரங்களைக் கண்டித்தும், கோவில், குளம், கல்லுருவம் தாம்பர உருவம் ஆகியவைகளைக் கண்டித்தும், பூஜை,  உற்சவம், சடங்கு ஆகியவைகளைக் கண்டித்தும், எத்த னையோ பெரியோர்கள் பேசியிருக்கின்றார்கள். சாஸ்திரத் தைச்சுட்டு சதுர் மறையைப் பொய்யாக்கி சூத்திரத்தைக் கொண்டு சுகம் பெறுவதெக்காலம் என்று ஒருவர் சொல்லி யிருக்கிறார். ஒரு பெரியவர் கல்லையும் செம்பையும் வணங்கும் கசடர்காள் என்று சொல்லியிருக்கின்றார். ஜாதி, மத பேதமெல்லாம் சூழ்ச்சியால் ஏற்படுத்தப்பட்டது என்று சொல்லியிருக்கின்றார்.   இன்னும் எவ்வளவோ சொல்லி இருக்கின்றார்கள். ஆனால், நம் மக்களோ அப்பெரி யோர்களையெல்லாம் தெய்வீகத் தன்மை கொண்டவர்கள் என்றும், ஞானிகள் என்றும் சித்தர்கள் என்றும் கருதி இன்றும் வணங்குகின்றார்கள்.  ஆனால், அப்பெரியோர் சொன்னவைகளைக் கவனித்துப் பார்க்கும்படி யாராவது சொன்னால் மாத்திரம் அவர்கள் மீது மிருகப் பாய்ச்சல் பாய்கின்றார்கள்.  இது ஒன்றே போதாதா நம் மக்களின் அறிவின் திறத்தை அளந்து பார்ப்பதற்கு என்று யோசித்துப் பாருங்கள். இந்த மாதிரியான பாமர உணர்ச்சியும் பயங்காளித்தனமும், வைத்ததைச் சுமக்கும் மிருக சுபாவமும் இன்னாட்டு மக்களின் உயர்குணங்களாகப் பாவிக்கப்பட்டு வருவதாலேயே உலகத்தில்  இந்திய நாடு மாத்திரம் வெகுகாலமாகவே அடிமை நாடாகவே, கூலி நாடாகவே சுயமரியாதையும் அறிவும் ஞானமும் அற்ற நாடாகவே இருந்து வருகின்றது. இதற்குக் காரணம் இன்னதுதான் என்பதைக் கண்டுபிடிக்க நம்மவர்களுக்கு இன்னமும் அறிவு ஏற்படவில்லை. ஒரு நாய் வளர்க் கின்றவன் தன் நாயை மற்றவன்மேல் ஏவிவிடுவது போல் நம்மை யார் சூழ்ச்சி செய்து இக்கெதிக்கு ஆளாக் கினார்களோ, அவர்களேதான் அச்சூழ்ச்சியை ஒழிக்க வரும் ஆட்கள் மேல் நம்மை உசுபடுத்தி விடுவதால் உண்மையை உணர கவலை கொள்ளாமல் அவர்கள் கைகாட்டின பக்கம் திரும்பிக் கொண்டு கத்துகின்றோம்.

நமது நாட்டு அடிமைத்தனம் எத்தனை காலமாய் இருந்து வருகின்றது என்பதை நினைத்துப் பாருங்கள். தர்மராஜ்யம், இராமராஜ்யம், சத்திய கீர்த்தி அரிச்சந்திர ராஜ்யம் முதலிய அவதார ராஜ்யம்  முதல் தெய்வீகத்தன்மை பொருந்திய மூவேந்தர் முதலிய சரித்திர ராஜ்யம் வரை இந்திய மக்கள் நிலைமையைச் சற்று ஞாபகப்படுத்தி ஆராய்ச்சி செய்து உண்மையை கண்டு பாருங்கள். அந்த நிலைக்கு இந்த நிலைமேலானதா? கீழானதா? என்று சுயமரியாதைக்கண்ணாடி மூலம் பாருங்கள். ஞானக் கண்ணாடி மூலம் பாருங்கள். சுதந்திரம், சமத்துவம் என்கின்ற கண்ணாடிகள் மூலம் பாருங்கள்.

நீங்கள் எந்த பார்ப்பனர்களையும் கேட்டுப்பாருங்கள். தங்கள் நிலை இன்றையை நிலையைவிட அன்று அதாவது அவதார ஆட்சியிலும் மூவேந்தர் ஆட்சியிலும் மேலாயிருந்தது. ஆனால், இன்று கீழாயிருக்கின்றது என்றுதான் சொல்லுகின்றார்கள்.  ஆனால், அவர்கள் தவிர மற்ற மக்களாகிய சூத்திரர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்ட ஜாதியர்கள் என்று இழிவுபடுத்தி இருக்கிற நம்மில் 100க்கு 99 ஜனங்களைக் கேட்டுப் பாருங்கள். நெஞ்சில் கையை வைத்து நினைத்துப் பாருங்கள். அன்றுக்கு இன்று எவ்வளவு மேலான நிலையில் இருக்கின்றோம் என்பதை ஒவ்வொரு துறையாய் ஆராயுங்கள் உண்மை காண்பீர்கள். இதோடு நின்று விடாமல் இந்த நிலையோடு திருப்தி அடையாமல், இன்னும் மேலே போகவேண்டும் என்று சொல்லுங்கள். எவ்வளவு மேலே போகவேண்டுமானாலும் நானும் கூடவே வர பாடுபடுகின்றேன். ஆனால் பழைய நிலையே மேல் அதற்கே போக வேண்டும் என்றுசொன்னால் அதைச் சகிக்க முடியவில்லை. அரைநிமிஷம்கூட அதை ஆதரிக்க முடியாது. உலகம் அறிவு பொருள் முதலிய அகத்திலும் புறத்திலும் சமத்துவத்தையும் பூரண சுயேச்சையையும் அடைய தீர்மானித்து விட்டது. இந்தியா மாத்திரம் மூடர்களாய், அடிமைகளாய் இழிமக்களாய் இருக்கும் அவதார ராஜ்ஜியத் திற்குப் போகவேண்டுமென்றால் இந்நாடு அடியோடு அழிந்து போவதே மேலான காரியமல்லவா?

நண்பர்களே, உலகத்தை ஒருகண்ணில் பார்த்து இந்தியாவை ஒரு கண்ணில் பார்த்து, இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உண ருங்கள். நம் கல்வி, செல்வம், வாழ்வு விவசாயம் வீரம், மானம், அறிவு ஆராய்ச்சி, முற்போக்கு ஆகியவைகள் எல்லாம் எப்படி இருந்தது, இருக்கிறது. மற்ற நாடுகள் எப்படி இருந்தன, இருக்கின்றது என்பவைகளை சிந்தித்துப் பாருங்கள் என்று சொல்லி, ஒவ்வொன்றிலும் வெளிதேசத்தையும் இந்தியாவையும் ஒப்பிட்டு பார்க்கும்படி விளக்கிக் காண்பித்து விட்டு உட்கார்ந்தார்.

"உபசாரப்பத்திரம்"


இந்த சமயத்தில் ஒரு வாலிபர் கடலூர் வாலிபர்கள் சார்பாக திரு இராமசாமிப் பெரியாருக்கு உபசாரப்பத்திரம் படிக்க வேண்டும் என்று சொல்லி அதன் பிரதி ஒன்றை தலைவரிடம்  கொடுத்தார். தலைவர் அதை வாங்கித் தானே வாசித்துப் பார்த்தார் அவ்வுபசாரப் பத்திரத்தில் முதல் இரண்டு மூன்று வாக்கியங்களில் திரு.இராமசாமியை பாராட்டும் பாவனையாகவும் பின் இரண்டு வாக்கியத்தில் கதரைப்பற்றிய அபிப்பிராயத்தை விளக்க வேண்டுமென்றும், தாலி கட்டுவது அடிமைத்தனத்திற்கு அறிகுறி என்று சொல்லும் தங்கள் மனைவியார் ஏன் தாலி கட்டி இருக்கிறார் என்றும் கேள்வி கேட்கும் பாவனையாக எழுதப்பட்டிருந்தது. பின்னர் திரு. இராமசாமி எழுந்து பதில் சொல்லும் முறையில் தாலி கட்டிக்கொண்டிருப்பது அடிமைத் தனத்திற்கு அறிகுறி என்று அநேக பெண்கள் இன்னமும் உணரவில்லையென்றும், உணர்ந்த பல பெண்களும் தாங்கள் அடிமைகளாய் இருப்பதைப்பற்றிக் கவலைப் படாமல் இருக்கிறார்கள் என்றும், சிலர் சமுகத் துறைக்குப் பயந்து கட்டிக்கொண்டிருக் கிறார்கள் என்றும் எந்த எண்ணத்தின் மீது தனது மனைவி யார் கட்டிக்கொண்டிருந்தாலும் அவர்களது இஷ்டத்திற்கு விரோ தமாய் பலவந்தம் செய்யத்தான் துணியவில்லை என்றும் சொன் னார். ஒருவர் மத்தியில் எழுந்து உங்கள் குடும்ப மனைவியையே நீங்கள் அடக்கி ஆளமுடிய வில்லையானால் மற்றவர்களை எப்படி திருத்தமுடியும் என்றார். இதற்கு திரு.இராமசாமி சமாதானம் சொல்லுகையில் மனைவியை அடக்கி ஆளவில்லை என்று சொன்ன நண்பர் மனைவி என்றால் அடிமை என்கின்ற நமது பழைய கொள்கையை மனதில் வைத்துக் கொண்டு பேசுகின்றாரேயொழிய, அவர்கள் இஷ்டப்படி நடக்க அவர்களுக்கு உரிமை உண்டு என்றும் சிறிதும் கவனியாமல் சொல்லுகிறார் என்றே கருதுகின்றேன் என்றும், பெண்களுக்கு கல்வியறிவும், சுதந்திர உணர்ச்சியும், சுயமரியாதையும் ஏற்பட்டால் தானாகவே தாலியை அறுத் தெரிந்து விடுவார்கள் என்றும் சுதந்திர உணர்ச்சி உள்ள பெண்கள் இனி தாலி கட்ட கழுத்தைக் கொடுக்க மாட்டார்கள் என்றும், இவ்விஷயங்களில் மற்ற வெளிஜனங்கள் என்பவர்களுக்கும் குடும்பத்தார் என்பவர்களுக்கும் பிரமாத வித்தியாசம் இல்லையென்றும், சொல்லிவிட்டு கடைசியாக இந்தக் கூட்டத்தில் அரசியல் சம்பந்தமான பேச்சை தான் வேண்டுமென்றே பேசாமல் விட்டு விட்டதாகவும் ஏனெனில் இதுவே முதல் கூட்டமானதால் அதிகமான விஷயங்களை ஜீரணம் செய்விக்க முடியாதென்று கருதியே அப்படிச் செய்ததாகவும் ஆனபோதிலும் காங்கிரசுக்காரர்கள் என்கின்ற முறையில் சிலர் அவர்களாகவே நம்மை பேசும்படி செய்ததால்தான் அதற்கு நன்றி செலுத்துவதாகவும் கூறி கதரைப்பற்றியும் அதற்கும் அரசியலிற்கும் பொருளதாரத்திற்கும் உள்ள சம்பந்தத்தைப் பற்றியும் அது எவ்வளவுதூரம் தொழில் முறையிலோ பொருளாதாரத் துறையிலோ உதவி இருக்கின்றதென்றும் அது சமதர்ம கொள்கைக்கும் மனிதனின் இயற்கையான ஆசாபாசங்களுக்கும் முன்னேற் றத்திற்கும் எவ்வளவு இடையூறென்றும் எடுத்துக் காட்டியதுடன் திரு.காந்தியே மில்லை ஆதரிக்க வந்து விட்டதுடன் புதிய யந்திரம் கண்டுபிடிக்க ஆசைப்பட்டு கண்டுபிடிப்பவருக்கு ரூ.100000 சன்மானம் கொடுக்க முன்வந்துவிட்டார் என்றும் கதர்தற்காலசாந்திதான் என்பதாக திரு. ராஜகோபாலாச் சாரியார் சொல்லியிருக்கும் அபிப்பிராயங்களையும் எடுத்துச் சொல்லிவிட்டு கதரை ஒரு தர்ம கைங்கரியமாக வைத்துக் கொண்டாலும்கூட ஏழைகள் பிழைக்கவென்று மக்களிடம் கதரின் பேரால் 4அணா வசூலித்து அவர்களுக்கு ஒரு அணா போய்ச் சேரும்படியிருப்பது தர்ம கைங்கரியம் ஆகாதென்றும் எப்படியெனில் ஒரு நாளைக்கு கால்ராத்தல் நூல் நூற்று ஒரு அணா கூலி அல்லது ஒன்ணேகாலணா கூலி பெரு கின்றார்கள் என்றால் அந்த கால் ராத்தல் நூலால் நெய்யப்பட்ட கதரை வாங்க வேண்டியவர் 6  அணா கொடுக்கிறார்.

இந்த நீளமுள்ள துணியை மில் துணியாக வாங்கினால் 0-2-6 அணாவுக்கு வாங்கலாம், ஆகவே ஒரு அணா தர்மம் செய்யமற்றவனிடம் 3-6 தட்டிப்பறிக்கவேண்டி இருக்கின்றது என்று புள்ளி விபரத்துடன் எடுத்துக் காட்டினார். மற்றொரு வாலிபர் ஒரு சந்தேகம். 1. கடவுள் உண்டா இல்லையா? 2. கடவுளை அடையும் மார்க்கம் என்ன? 3. மனிதன் கடமை என்ன? என்று கேட்டார்.

இதற்கு திரு. இராமசாமி, கடவுள் என்பதை தான் ஒரு அர்த்தமற்ற வார்த்தை என்று கருதியிருப்பதாகவும், ஆனால், கடவுளைப் பற்றி பேசுபவர்கள் அதற்குத் தனித்தனி அர்த்தம் கற்பித்துக் கொள்ளுகிறார்கள் என்றும், கேள்வி கேட்பவர் கடவுளுக்கு இன்ன விதமான அர்த்தம் கொண்டு இருக்கிறார் என்று தெரிந்தால் அது உண்டு இல்லை என்றும் எப்படி அடைவதென்றும் ஒரு வார்த்தையில் முடித்து விடலாம் என்று சொன்னார். இதற்குக் கேள்வி கேட்டவர் ஒன்றும் பதில் சொல்லவில்லை.

பிறகு மனிதனுடைய கடமை என்பது தனியாக ஒன்று இல்லை என்றும் அவரவர் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் அனுபவத்திற்கும் சரி என்று பட்ட விஷயங்களின்படி அவரவர் நடந்து கொள்ளுவதைத் தான் கடமையாகக் கொள்ள வேண்டுமென்று சொன்னார்.

'குடிஅரசு' - சொற்பொழிவு - 20.09.1931

- விடுதலை நாளேடு, 25 .8 .19

பெரியாரின் சங்கநாதமும் தொண்டர்களின் பேரெழுச்சியும் (2)10.07.1948 - குடிஅரசிலிருந்து... -

சென்ற வாரத் தொடர்ச்சி

வந்த கடிதங்களில் இங்கு நாம் இரண் டொன்றைத்தான் குறிப்பிட்டிருக்கின் றோம். சில தோழர்கள் வஞ்சினங்கூறி எழுதி, ரத்தத்திலேயே கையெழுத்திட்டு அனுப்பியிருக்கிறார்கள்.

சுருக்கமாகக்கூறவேண்டுமென்றால், இக்கடிதங்கள் இந்நாட்டு மக்களின் வீரத் திற்கு ஒரு எடுத்துக்காட்டாய், என்றும் அழிவுறாத இலக்கியமாக விளங்கத் தகுந்த பெரும் பொக்கிஷமென்று கூற வேண்டும்.

ஈவு இரக்கமற்ற, வன்கண்மையும் குரூரமே உருவான இப்போதைய அகிம்சா மூர்த்திகளின் சுயரூபத்தையும், அவர்களின் அட்டூழியமான அக்கிரமப் போக்கையும் கண்டபிறகே, பெரியார் அவர்களால் இக்கொடிய சூழ்நிலையை நன்றாக விளக்கிக் கூறப்பட்ட பிறகே இத்தனை ஆயிரம் தோழர்கள் கச்சையை வரிந்து கட்டி எங்கு? எப்பொழுது? எப்படி? என்ற கேள்விகளைப் போட்டு முழக்கஞ் செய்கின்றார்கள் என்பதைக் கேட்கும் போது எந்தத் திராவிடன் தான் மகிழ்ச்சியடையாதிருப்பான்?

வடநாட்டு ஆதிக்கத்தை முறியடிக்க, பார்ப்பனியச் சுரண்டலை படுகுழியில் புதைக்க, முன்னேற்றப் பாதையில் எடுத்து அடிவைத்து நடக்க முடியாத இன இழி வைத் துடைக்க, இந்தத் திராவிட இன உணர்ச்சியுடைய இளைஞர்கள் மட் டுமோ, எத்தனையோ காங்கிரசு திரா விடத் தோழர்களும் கலந்து அய்க்கிய மடையக் காத்திருக்கிறார்கள் என்பதை யும் நாமறிகிறோம்.

திராவிடக் காளைகளின் பேரெழுச் சியைக் கண்ட ஓமாந்தூரார் மந்திரிசபை, திராவிடர்களின் மானத்தைப் பறித்து, மொட்டையடித்து நாமம் போட்டு கோவிந்தா! கோவிந்தா என்று கூக்குரல் போடச் செய்யும் இக்காரியத்தைக் கைவிடுமா? அல்லது கைவிடாதிருக்குமா? நிதானப்புத்தி இல்லாமல், நேற்றுச் சொல்லியதை இன்று மாற்றிச் சொல்லி, ஒரு மந்திரி சொல்வதை மற்றொரு மந்திரி அது அவர் சொந்த அபிப்பிராயமே தவிர மந்திரிசபையின் கருத்தல்ல என்று மறுத்துப் பேசி வரும், மந்திரிகளடங்கிய மந்திரி சபையிலே நிதானப்போக்கை நாம் எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்க்கத் தேவையுமில்லை.

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே என்று ஆண்டவனுக்கும் உலக மக்கள் நிகழ்ச்சிக்கும் தத்துவம் காட்டும் மெய்யன்பர்களின் போக்கை மறுத்து, ஆட்டுவிப்பவன் யார், அவன் எங்கிருந்து கொண்டு எப்படி எதனால் ஆட்டுகின் றான் என்று கேட்கும் எந்த பகுத்தறிவு வாதிதான், ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே என்று இப்போதைய மந்திரி சபையைக் குறித்துக் கூறும் போது எப்படி மறுத்துவிட முடியும்? பார்ப்பனர்களும் - பனியாக்களும் ஏவியபடியெல்லாம் ஏவல் கேட்கும் இந்த மந்திரி சபை, இந்த மந்திரி சபை அமைவதற்கு என்ன அடிப்படையோ அந்த அடிப்படை அழிந்தொழிய, இந்த நாட்டு ஆட்சியின் அமைப்பு வேறு எவரின் தலையீடுமற்ற நிலையில் அமைக்கப்பட வேண்டுமென்ற உரிமைப் போராட்டம், மந்திரி சபையின் வெற்றிகரமான பின் வாங்கும் நடத்தை யால் சிலநாள், கால தாமதமானால் ஆகுமே தவிர, எப்படியும் போராட்டம் நடந்துதானே தீரும்! நடந்துதானே ஆக வேண்டும்! இந்த உறுதியும் உரமும் பெற்ற உணர்ச்சி வெள்ளத்தைத்தான், திராவிடர் களின் வீர முழக்க பேரொலியைக் கேட்டுக் கண்களுள்ள எவரும் காணவேண்டும்.

நிற்க, தொண்டர்களுக்கு இந்த நேரத் தில் நாம் இவைகளைக் கூற வேண்டு மென்று ஆசைப்படுகிறோம். இன இழி வைத் துடைப்போம்! எவர் தடுப்பினும் எதிர்ப்போம்! எப்பொழுது போராட்டம்? இப்போதே நாங்கள் தயார்! என்று தினவெடுக்கும் தோள்களையுடைய செந்தமிழ் வீரர்களே! இப்போராட் டத்தில் எங்கள் பங்கு என்ன குறைச்சலா என்று மனம் புழுங்கும் தாய்மார்களே! இளைஞர்களே! போராட்ட முறையில் நீங்கள் கைக்கொள்ள வேண்டிய முதல் பாடம் கட்டுப்பாடு. கட்டுப்பாட்டுக் கடங்கிப் போர்த்தலைவன் குறித்த வேளையில், குறித்த இடத்தில், குறிப்பிட்ட காரியத் தைச் செய்ய நீங்கள் ஆயத்தமாயிருக்க வேண் டும்!  உங்களுடைய சக்தியைச் சிதற டிக்க பார்ப்பனியம் பல வலைகளை வீசும்! ஏமாந்து விடாதீர்கள்! எழுச்சி யையே ஆயுதமாகக் கொண்டு, வேறு எந்தக் கொலைக் கருவியையும் கைக் கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட வேண்டியிருக்கும் உங்களை, தவறான பாதையைக் காட்டி சரிந்து விழுவதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்யும் பார்ப்பனிய அதிகாரவர்க்கம்! அதற்கு ஒத்துழைத்து பின்பாட்டுப் பாடி ஒத்து ஊதி தாளம் போடும் பணக்கார வர்க்கம்! உணர்ச்சிக்கு அடிமைப்பட்டு உலுத்தர் களின் ஏமாற்றத்திற்கு உள்ளாகாதீர்கள்!

உங்களுடைய சக்தியனைத்தும் கட்டுப்பாடாய் ஒருமுகமாக ஒரு முனையிலே செலுத்தப்பட வேண்டும் என்பதைக் கவனத்தில் வையுங்கள்!

கட்டுப்பாட் டோடு கூடிய எழுச்சியே, நம் காரியத்தை வெற்றிபெறச் செய்யும் என்பதை நினைவில் வையுங்கள்.

 - விடுதலை நாளேடு, 24.8.19

மக்களினம் மாண்புற வள்ளுவர் தந்த குறள்! (4)

13.11.1948-குடி அரசிலிருந்து...


சென்றவாரத் தொடர்ச்சி

வால்மீகி ராமாயணத்தைத் தன் இஷ்டம்போல் மாற்றி விட்டான் கம்பன். எனவேதான், அவனைச் சாட வேண்டியிருக்கிறது.

வால்மீகியின் ராமாயணம்!

வால்மீகி ஒரு அரேபியன் நைட் கதையைப் போல்தான் ராமனுடைய கதையையும் பாடி இருக்கிறார். தசரதனுடைய குடும்பத்தை ஒரு சாதாரணமான குடும்பமாகத்தான் குறிப்பிட்டுள்ளார். அவன் வீட்டுப் பெண்டிர்களை மீன் கண்டம் விற்கும் பெண்டிர்களை போன்று தான் வர்ணித்துள்ளார்.

மேலும் சீதையின் கற்பில் சந்தேகம் கொள்வதற்கான பல கருத்துக்களை, அவள் ஒரு கீழ்த்தர பெண், சாஸ்திரப்படியான கற்பு அற்றவள், என்று கொள்வதற்கான பல கருத்துக்களை அவர் ராமாயணத்தில் இடை இடையே கொடுத்துள்ளார். தன் மனைவி மீது சந்தேகம் கொண்டு கர்ப்ப காலத்தில் அவளைக் காட்டிற்குக் கொண்டு போய் விட்டு வருவது போன்ற, அதாவது சாதாரண மனிதன் கூட வெட்கங்கொள்ளக் கூடியதான பல சேதிகளை அவர் கொடுத்துள்ளார்.

திருக்குறள் சுயமரியாதையின் ஊற்று!

திருவள்ளுவர் கூறிய கருத்துக்களுள் ஒன்றேனும் ஒழுக்கக் குறைபாடுள்ளதாகக் காணப்படாது. அறிவுள்ளவர் யாரும் மறுக்க முடியாத, வெறுக்க முடியாத கருத் துக்களை அமைத்துத்தான் அவர் குறளை இயற்றியுள்ளார். குறளை ஊன்றிப் படிப்பவர்கள் எல்லோரும் நிச்சயம் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள். அரசியல் ஞானம், சமுக ஞானம், பொருளாதார ஞானம் ஆகிய சகலமும் அதில் அடங்கியிருக்கிறது.

திராவிடன் அன்றே எதிர்த்தான்!

அன்பர் கலியாண சுந்தரனார் திரா விட நாடு வேறு, ஆரிய நாடு வேறு, திராவிடப் பண்பு வேறு, ஆரியப் பண்பு வேறு என்று இன்று காலை தெரிவித்தது போல், திராவிட நூல் வேறு, ஆரிய நூல் வேறுதான், திராவிடர்கள் எப்போதுமே ஆரியர்களை ஆரிய கலாசாரத்தை வெறுத்தே வந்திருக்கிறார்கள். திராவிட நாட்டை ஆரியர்களின் படையெடுப் பிலிருந்து காப்பாற்றப் பெரிதும் முயற்சி எடுத்திருக்கிறார்கள். இதனுண்மையைக் கந்த புராண ஆரம்பத்தில் காணலாம்.

சிவபெருமானுடைய கல்யாணத்தின் போது தேவர்களும், ரிஷிகளும் வந்து தென்னாடு உயர்ந்துவிட்டதென்றும், வடநாடு தாழ்ந்துவிட்டதென்றும் அதற் குப் பரிகாரம் உடனடியாகச் செய் யப்படவேண்டுமென்றும் விண்ணப்பம் செய்து கொள்கிறார்கள். இதிலிருந்து தென்னாட்டினர் உயர்வு ஆரியர்களால் எவ்வளவு வெறுக்கப்பட்டது என்பது இனிது புலனாகிறது. சிவன் யார் கெட் டிக்காரன் என்று ஆலோசித்துப் பார்த்து அகத்தியனை அனுப்பியிருக்கிறார். பரிகாரம் செய்ய மிகமட்டமான அதாவது சூழ்ச்சியில், தந்திரத்தில், வஞ்சகத்தில் கைதேர்ந்த ஒருவனை அனுப்பி வைக்கிறார். அவன் விந்திய மலையருகில் வரவும் அங்கு காவல் செய்துவந்த வாதாபியும், வில்லவனும் அவனைத் தடுத்து விடுகிறார்கள். இவர்கள் கந்தபுராணத்தில் சித்திரிக்கப்படுகிற சூரனுடைய தங்கச்சியின் மக்கள் ஆவார்கள். இவர்கள் வட நாட்டிலிருந்து யார் வந்தாலும் அவர் களைக் கொன்று தின்று விடுகிறதாகக் கூறப்படுகிறது. அதே மாதிரியே அகத்தியனையும் தின்று விட்டதாகவும் ஆனால், அவனை ஜீரணம் செய்ய முடிய வில்லை என்றும், அவனுடைய வயிற்றைக் கிழித்துக் கொண்டு அகத்தியன் வெளிப் பட்டுச் சென்றான் என்றும், சென்று தமிழ் வளர்த்தான் என்றும் காணப்படுகிறது.

மடப்புலவர்களின் மதித்திறமை!

இந்தத் தமிழ்ப் புலவர்களும் ஆராய்ந் தறியாமல் இதையொட்டி அகத்தியன் வளர்த்த தமிழ் என்று புகழ்பாடி விட்டனர். அகத்தியன் இங்கு வந்து பாதிரிகள் போல் தமிழ் கற்று நமது தர்மங்களை. ஒழுக்கங்களை மாற்றியமைத்து இருக்கக்கூடும். இதற்காக அவனுக்கு நன்றி காட்டும் அவ்வளவு நன்றியுடையவர்கள் நமது மடப்புலவர்கள். நாய் நன்றி காட்டு வதெல்லாம் அன்னியனிடத்துத்தான் என்பதுபோல், பழங்கால இப்பண்டிதர்களும் அன்னிய அகத்தியனுக்கே மரியாதை செய்து விட்டனர். அந்த அகத்தியன் முடிவில் தமிழ் நாட்டிலிருந்து ராவணனைத் துரத்தி விட்டதாக வேறு காணப்படுகிறது. இதற்கும், ராவணனுடைய தம்பிக்கும், ராமன் பட் டம் வாங்கிக் கொடுப்பதற்கும் ஏதேனும் பொருத்தம் இருக்கிறதா என்பதும் தெரியவில்லை. இக்கதைகள் எல்லாம் அபிதான சிந்தாமணியில் கொடுத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது அவற்றைப் படித்துப் பாருங்கள் தெரியும். ஆரியர் திராவிடம் போராட்டம் எப்போது ஏன் துவங்கியது என்று.

காட்டிக் கொடுக்கும் கயவர்களின் முன்னோன் விபீஷணன். இப்போது எப்படி சில திராவிடர்கள் அறிவிழந்து ஆரிய வடவர்களையே தமது அரசியல் தலைவர்கள் என்றுகொண்டு, தாம் பணி யாற்றும் வகையில், ஏனைய திராவி டர்களையும் எப்படி அவர்களுக்கு நிரந்தர அடிமைகளாக வைத்திருக்க முயற்சிக்கின்றனரோ அதுபோல், வால்மீகி காலத்திலும் சில திராவிடர்கள் இருந்திருப்பதை நாம் அவரது ராமாயணத்தைப் படிப்பதன் மூலம் நன்கு அறியலாம். வாலி கொல்லப்பட்ட பிறகு விபீஷ ணனைக் கொண்டுவந்து அனுமார் சேர்க்கிறார். அப்போது சுக்ரீவன் கேட்கிறான், அண்ணனுக்கே துரோகம் செய்யும் இவன் நாளை உனக்கு மட்டும் துரோகம் செய்யமாட்டான் என்று எப்படி நம்புவது என்று அதற்கு ராமன் என்ன சொல்லுகிறான் பாருங்கள்.

என் லட்சியத்திற்கு அதைப்பற்றி யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. ராவணன் தோல்வி தானே, அவனது முடிவுதானே எனக்கு வேண்டியது அதற்கு உதவி செய்யத் தகுந்தவன் யாரா இருந்தால், எப்படிப்பட்டவனாயிருந் தால் என்ன? அவனை, நண்பனாக கொள்ள வேண்டியது தானே! மேலும் அவன் எப்படி எனக்குத் துரோகம் செய்ய முடியும்? அவனுக்கு வேண்டுவது அண்ணனுடைய ராஜ்யமன்றோ, அண்ணன் செத்தால்தானே அவனுக்கு ராஜ்யம் வரும். ஆதலால், தனது அண்ணனை ஒழிக்க வழி நமக்குக் கூறி உதவி செய்துதானே தீருவான். இந்த விஷயத்தில் அவன் நமக்குத் துரோகம் செய்ய முடியாதே.  அதன் பிறகு என்ன துரோகம் அவனால் நமக்கு செய்ய முடியும்.

இவனை விட்டால் ராவணனை எனக்குக் காட்டிக் கொடுக்கக் கூடிய வேறு ஆள் ஏது என்று சொல்லி விபீஷணனை ஏற்றுக் கொள்கிறான்.

ஆச்சாரியார் ராமநாதர்களை அறிமுகப்படுத்திய முறை இதே மாதிரிதான், தம்முடைய லட்சியத்தையே குறிக்கோளாகக் கொண்டு இன்றையப் பார்ப்பனர் களும் மானாபிமானம் அற்று தம் கட்சிக்கு ஆள் தேடித் திரிகிறார்கள். நமக்கு எவன் துரோகம் செய் கிறானோ அவன்தான் பார்ப்பனர்க்கு ரொம்பவும் வேண்டியவன். மகாதேசபக்தன். அவர்களுடைய போற்றுதலுக்கு உரியவர்கள். புகழ்பெறுபவர்கள். நம்முடைய துரோகிகளின் மூலம்தான், அன்று தொட்டு இன்றுவரையும் அவர்கள் சுகமாக வாழ்ந்து வருகிறார்கள்.

இதை, இந்த நாசமாய் போன துரோகம் செய்பவர்கள் உணர்ந்தால் தானே. தோழர்கள் ராமநாதனும் கே. வெங்கடசாமி நாயுடுவும் நமது கட்சியினின்று நீங்கி சென்றபோது, இவர்களைக் காந்தியாருக்கு அறிமுகம் செய்தபோது ராஜகோ பாலாச்சாரியார், அன்று அனுமார் ராமனிடம் விபீஷணனை அறிமுகம் செய்து வைத்தது போன்றே செய்தாரே.

ராமநாதன் வந்துவிட்டார். பழையபடி அந்த சரணாகதிக்கு நீங்கள் மனமிரங்கி இடம் அளிக்க வேண்டும். ராமர் எப்படி விபீஷணனுக்கு அபயம் அளித்தாரோ அதேபோன்று இவருக்கும் தாங்கள் அபயம் அளித்தருள வேண்டும் என்று.

- தொடரும்

  - விடுதலை நாளேடு, 30.8.19