புதன், 24 மே, 2017

பெரியபுராணம் (ஈ.வெ.ரா)


02-10-1943 - குடிஅரசிலிருந்து...

பெரியபுராணத்தில் உள்ள விஷயங்கள் உண் மையாய் நடந்த செய்திகளா? அல்லது மக்களுக்குச் சிவபக்தி உண்டாக வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு சைவ சமயவாதிகளால் கற்பனை செய்யப்பட்ட செய்திகளா? சிவனுக்கு மனித உருவமும் மாட்டு வாகனமும் பெண்ஜாதி பிள்ளை களும் உண்மையாகவே இருந்து வருகிறதா? அல்லது சிவபக்தர்கள் கற்பனை செய்த கருத்துக் களா? சிவன்தான் முழு முதல் கடவுள் என்றால், முழுமுதல் கடவுள் என்பதற்கு உருவம், பெண்டு, பிள்ளை கற்பிப்பது பொருத்தமாகுமா?

கைலாயம் முதலிய இடங்கள் உண்மையிலேயே இருக்கின்றனவா? அல்லது சைவ மதவாதிகள் கற்பனையா? உண்மையாய் கைலாயம் என்கின்ற இடம் ஒன்று இருக்குமானால் சாஸ்திரப்படி அதற்கு ஆதாரம் இருக்கிறதா? சிவன், விஷ்ணு, பிர்மா, இந்திரன் முதலியவர்கள் உண்மையிலேயே அவர் களைப்பற்றிச் சொல்லப்படுகிற பெரிய புராணம் முதலிய மத ஆதாரங்களின்படி இருந்த வர்களா? அல்லது மதவாதிகளால் கற்பிக்கப்பட்டவர்களா?

அகஸ்தியனென்றும், நாரதனென்றும் மற்றும், மனிதத் தன்மைக்கும் விஞ்ஞான உண்மைக்கும் மேற்பட்டவர்கள் என்றும், சொல்லப்பட்டவர்களை யெல்லாம் உண்மையாய் இருந்தவர்கள் என்றும் அவர்கள் சங்கதி எல்லாம் உண்மையாய் நடந்தவைகள் என்றும் பெரிய புராணக்காரர்கள் நம்புகிறார்களா?

பெரிய புராணச் செய்திகள் உண்மையாக நடந்தவைகள் என்றால் ஒரு ஆயிரம் வருஷங்களுக்குள்ளாகக் கடவுள்கள் நேரில் வந்து காட்சி கொடுத்ததாக அருத்தமாகவில்லையா!

கைலாயத்தில் இருந்து மாட்டின் மேல் வந்து பக்தனையும் அவன் மனைவியையும் அந்த மாட்டின் மேல் ஏற்றிக்கொண்டு கைலாயத்துக்குப் போய் விட்டார்கள் என்றால் அது உண்மையாகவே நடந்திருக்குமா?

மாடு இரண்டாகி வந்ததும், மாடு ஆகாயத்தில் ஏறிச் சென்றதும் கற்பனையா? அல்லது உண் மையா?    உண்மையானால் அது கடவுள் தன்மைக்கு ஏற்றதா? அல்லது மனிதத் தன்மைக்கு ஏற்றதா?

இந்த மாதிரிக் கடவுள் அற்புதங்கள், பக்தர்கள் அற்புதங்கள் எல்லாம் இப்போது சைவத்தில் நடைபெறாமல் இருப்பதற்குக் காரணம் என்ன?

சாயிபாபா, ராமகிருஷ்ணர், ரமண ரிஷி, காந்தியார், சொரக்காய் சாமியார், பாம்பன் சாமியார், மெய்வழி ஆண்டவன், மவுன சாமியார், பட்டி னத்தார், பத்திரகிரியார், அருணகிரியார் முதலியவர்களைப்பற்றிச் சொல்லப்படும் அற் புதங்கள் எல்லாம் பெரியபுராண பக்தர்களது அற்புதங்களோடு சேர்ந்தவைகளா? அல்லது அதை விட மட்ட ரகமானவையா, அல்லது கற்பனை களா?

அற்புதங்கள் இல்லாத கடவுள்களோ - மதமோ - பக்தர்களோ - மதித்து வணங்கத்தக்கவர்களோ - சைவத்தில் - பெரியபுராணத்தில் ஏன் இருப் பதில்லை.

பெரியபுராணம் நிஜமானால் பக்தலீலா மிருகமும் நிஜமாய்த்தான் இருக்கவேண்டுமா? அல்லது அது கற்பனையா? சிவன் என்கின்ற ஒரு கடவுள் ரிஷபாரூடராய்ப் பார்வதி சமேதராய்க் கைலாயத்தில் இருக்கின்றார் என்றால், விஷ்ணு என்பதாக ஒரு கடவுள் கருட ஆரூடராய், லட்சுமி சமேதராய் வைகுண்டத்தில் இருக்கிறார் என்பது மெய்யா? அல்லது கற்பனையா? நாயன்மார்கள் நால்வர்களுடைய கதையும் மெய்யானால், ஆழ்வாராதிகள் பன்னிருவர்கள் கதைகளும் மெய்யா? கற்பனையா?

தேவார திருவாசகங்களுக்கும், நாலாயிரப் பிரபந்தங்களுக்கும் என்ன வித்தியாசம்? எது முந்தியது? எது உண்மை? எது சிறந்தது? பெரிய புராணம் இன்றைய சைவர்களுக்குப் பொருத்த மானதா? இன்று அது சைவர்களுக்குள் பரப்பப் படுவது கடவுள் பெருமை, பக்தர் பெருமை ஆகியவை தெரிவதற்கு ஆகவா? அல்லது அதைப் பின்பற்றச் செய்வதற்கு ஆகவா? பெரியபுராணம் ஒழுக்க நூலாகுமா?

பெரிய புராண சிவன் முழுமுதற் கடவுளாக இருக்க முடியுமா?     முழுமுதற் கடவுள் என்பதற்கு ஏதாவது லட்சணம் உண்டா? அந்த லட்சணப்படி பெரிய புராண சிவன் இருக்கிறாரா?

சிவபிரான் முழுமுதற் கடவுள் என்பதை கிறிஸ்தவர், முஸ்லிம்கள் ஒப்புக்கொள்ளுகிறார்களா? அவர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் வை ணவர், மாத்துவர் ஸ்மார்த்தர்களாவது ஒப்புக் கொள் ளுகிறார்களா?

---------------

திராவிடர் கழகம் என்று சொல்லப்படுவது இந்துக்களில் 100-க்குத் 97 பேராக இருக்கிற பார்ப்பனரல்லாத மக்கள் அனை வருக்குமான கழகமாகும். அதன் கொள்கை திராவிட மக்களை முன்னேறச் செய்வதும் அவர்களுக்கு இருக்கிற இழிவைப் போக்கி உலக மக்களைப் போல வாழச் செய்வதுமாகும்.  - -
- தந்தை பெரியார்

-விடுதலை,19.5.17

ஞாயிறு, 21 மே, 2017

கருப்புச் சட்டைப் படை:

தந்தை பெரியார்
கருப்புச் சட்டைப் படை என்பதாக ஒரு படை ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக தமிழ்நாட்டில் திரட்டப் படுவது பற்றிப் பலருக்குக் கிலி ஏற்பட்டு அந்தக்கிலியைப் பரிகாசம் செய்வதன் மூலமாகப் பல இடங்களில் காட்டி வருகிறார்கள். நாட்டில் அரசியலின் பேராலோ மதத்தின் பேராலோ, சமுதாயத்தின் பேராலோ ஏற்பட்டிருக்கும் ஒவ்வொரு கட்சியாரும் அக்கட்சித் தொண்டாற்றுவதற்கு என்று ஒவ்வொரு படையை ஏற்படுத்திக் கொண்டிருக் கிறார்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது. ராம தண்டு, அனுமான் சைனியம், செஞ்சட்டை, நீலச்சட்டை, இந்துஸ்தான் சேவாதளம் என்பன போன்ற பல படைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பற்றியெல்லாம் எவரும் ஏதும் பேசாமல் இருந்துவிட்டு, கருப்புச் சட்டைப்படை என்பதற்கு ஆக மாத்திரம் ஏன் இத்தனை பேர்கள் பரிகாசம் செய்யவும், ஜாடை பேசவும் (கேலிச்சித்திரம்) பொம்மை போட்டுக் காட்டவுமான காரியங்கள் செய் கிறார்கள் என்பது விளங்கவில்லை. எப்படி இருந்தபோதிலும் கருப்புச் சட்டைப்படை என்பது மற்றப் படைகளைவிட மக்கள் கவனத்தை அதிகமாகக் கவர்ந்திருக்கிறது என்பதில் அய்யமில்லை என்பதோடு, அதற்கேற்றபடியே மக்கள் கவனத்தை ஆழ்ந்து செலுத்தும்படியான அளவுக்குக் கருப்புச் சட்டைப்படை வேலை செய்யப் போகிறது என்பதிலும் அய்யமில்லை.
கருப்புச் சட்டைப் படை அரசியலில் ஏதாவது தீவிரக் கிளர்ச்சி செய்யவோ, ஓட்டுப் பெறவோ அல்லது ஏதாவது ஒரு வகுப்பு மக்கள் மீது வெறுப்புக்கொண்டு யாருக்காவது தொல்லை கொடுக்கவோ, அல்லது நாசவேலை செய்து நம் மக் களையே பலி கொடுக்கவோ, நம் பொருளையோ பாழாக்கிக்கொள்ளவோ அல்ல என்பதைத் தெளிவாக வலியுறுத்திக் கூறுவோம். மற்றபடி அப்படை எதற்கு ஆக என்றால் இழிவு கொண்ட மக்கள் தங்கள் இழிவை உணர்ந்து வெட்கமும், துக்கமும் அடைந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டவும் அவ்விழிவை நீக்கிக் கொள்ள தங்கள் வாழ்வை ஒப்படைக்கத் தயாராய் இருக்கிறார்கள் என்பதைக் காட்டவும் அதற்கான முயற்சிகளைச் செய்யத் தலைவர் கட்டளையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் என் பதைக் காட்டவுமே ஏற்படுத்தப்பட்டிருப்பதாகும்.
கருப்புச் சட்டைப் படை என்கின்ற பெயர் சிலருக்கு இழிவாக இருப்பதாகக் காட்டப்படுகிறது. அனுமான் படை, வானர சைனியம் என்று சொல்லப்படுவதை மனிதக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் பெருமையாகக் கருதி பொறுத்துக் கொண்டிருக்கும்போது, கருப்புச் சட்டைப் படை என்பது மாத்திரம் மக்களுக்கு எந்த விதத்தில் இழிவாக கருதப்படுகிறது என்பது நமக்கு விளங்கவில்லை. சிலரால் கருப்புச் சட்டை பார்வைக்கு அசிங்கமாக இருப்ப தாக சொல்லப்படுகிறது. பகுத்தறிவு உள்ள மக்கள் உச்சிக் குடுமியும், மழுங்கச் சிரைத்த தலையும்,பட்டை நாமமும், சாம்பல் பூச்சும், தொப்பை வயிறு தொப்புள் குழியுடன் தெரியும்படியான பஞ்சகச்சமும்; சூத்திரன் என்று ஒரு ஜாதியும், பார்ப்பான் என்று ஒரு ஜாதியும், பறையன், சக்கிலி என்று ஒரு ஜாதியும் அதற்கு ஒவ்வொரு மாதிரி அடையாள வேஷமும் கொண்டு அவற்றை அந்தந்த மக்களும் ஏற்றுக் கொண்டு நடக்கும் காட்சியைவிடவா கருப்புச் சட்டை அசிங்கமாகவும் கேலியாக வும் இருக்கக்கூடும் என்று கேட்கிறோம்.
மற்றும் கன்னான் வார்த்துக் கொடுத்த செம்புப் பொம்மைகளைச் சுவாமிகள் என்று சொல்லி அதை வண்டியில் வைத்து வாத்தியத்துடன் இழுப்பதும், அதற் குக் கல்யாணம் காரியாதி செய்வதும் பிள்ளை குட்டிகள் இருப்பதாகக் காட்டுவதும் சோறு பலகாரம் படைப்பதும் ஆன முட்டாள் தனமான காரியங்களைவிடவா கருப்பு சட்டைக்காரர்கள் மக்களுக்குக் கேலிக் கிடமாய் நடந்துகொள்ளுகிறார்கள் என்று சொல்ல முடியும்? என்று கேட்கிறோம்.
இந்த நாட்டில் உண்மையான முட்டாள் தனத்தை யும், காட்டுமிராண்டித் தனத்தையும், சுயநல சூழ்ச்சிக் காரர்கள் மக் களுக்குள் கடவுள், மதம் என்னும் மயக்க வஸ்துக்கள் பேரால் புகுத்தி மடையர் களாகவும், மானமற்றவர்களாகவும் இழிவுபடுத்தி வைத்திருக்கும் காரியங்களைப் பற்றி இந்நாட்டு மக்கள் சிறிதும் கவலையும் இல்லாமல், மான உணர்ச்சியும் இல்லாமல் பொறுத்துக்கொண்டு, பின்பற்றி வந்த கார ணத்தாலேயே அவைகளை ஒழிக்கவோ, அவ்விழிவுகளிலும், மடமையிலும் இருந்து வெளிவரவோ எவராலாவது செய்யப்படும் முயற்சிகளையெல்லாம் அம்முயற்சியின் எதிரிகள் பரிகாசம் செய்தும், பழி சுமத்தியும், குறும்புப் பிரசாரம் செய்தும், மற்றும் பல வழிகளில் வஞ்சகம், துரோகம், பலாத்காரம் முதலியவைகளைச் செய்தும், அடக்கி வைத்தும், ஒழித்தும் வந்திருக்கிறார்கள். அதுபோலவே திராவிட மக்களின் இழி வையும், மடமையையும் நீக்க இன்று முன் வந்திருக்கும் கருப்பு சட்டைப் படையைப் பற்றி எதிரிகள் கேலி செய்து பழி சுமத்தி குற்றம் கற்பிப்பது இப்போது அதிசயமல்ல என்போம்.
வெள்ளைக்காரனை ஓட்டுவது என்று பெயரை வைத்துக்கொண்டு அதற்கு ஆக என்று ராட்டினம் சுற்றுவதும், வெள்ளையனை ஓட்டும்படை (தேசிய வீரன்) என்று பெயர் வைத்துக்கொண்டு கோணிச்சாக்கை (கதர் துணியை) கட்டிக்கொண்டு குரங்கு குல்லாயை (கதர் குல்லாயை) தலையில் மாட்டிக்கொண்டு திரிகிறதுமான பைத்தியக் காரத்தனத்தை விட, ஆபாசக் காட்டு மிராண்டி செய்கையை தோற்றத்தைவிடக் கருப்புச் சட்டை போட்டுக்கொண்டு இருப்பது எந்தவிதத்தில் ஆபாசமாகவும், பைத்தியகாரத்தனமாகவும் ஆகிவிடும் என்பது நமக்கு விளங்கவில்லை.
மனிதனுக்கு மானம் பிரதானமே ஒழிய அழகு பிரதானமல்ல. அழகு என்பது நாம் ஏற்படுத்திக் கொள் வதாகும். நம் பெண்கள் ஆபாசமாய் வேஷம் போட்டுக் கொள்ளுவதைக் காதிலும், மூக்கிலும் ஓட்டைகள் போட்டுக் கொள்ளுவதை, அதில் விகா ரமாய் நகைகள் என்று கண்ட கண்ட வைகளை மாட்டிக் கொள்ளுவதை அழகென்கிறோம். அப்படி இல்லாமலிருப்பதை அசிங்கமாக இருப்பதாகக் காண்கிறோம். ஆனால் மானமும், மடமையும் நாம் ஏற்படுத்திக் கொள்வதல்ல. நமக்கு இயற்கையாகவே அவை அறியப்படக் கூடிய வைகளாகும்.
எனவே, கருப்புச் சட்டையைப் பற்றி மற்றவர்கள் (நம் எதிரிகள்) கேலி செய்கிறார்கள் என்று படை வீரர்கள் யாரும் கருதிவிடக் கூடாது என்பதோடு நிர்ப்பந்த மாக ஏற்படக்கூடிய சமயம் தவிர மற்ற சமயங்களில் கருப்புச் சட்டை மாத்திரமல் லாமல் கருப்பு உடை அதாவது வேஷ்டியும் அல்லது பைஜாமா என்றும் கால் சட்டையும் கூட கருப்பாய் இருந்தாலும் நலமேயாகும். சட்டைகளை கருப்பு சட்டைப் படை ஸ்தாபனத்தில் இருந்தே விலைக்குச் சப்ளை செய்ய முயற்சிகள் நடந்துவருகின்றன.
பெண்களும் இப்படையில் சேரலாம். அவர்கள் கருப்புச் சேலை அல்லது குறைந்த அளவு கருப்பு ரவிக்கையையே சதா அணிந்து கொள்ள வேண்டும். கூடுமான வரையில் நகைகளை வெறுத்துத் தள்ள வேண்டும்.
இன்று நம்மைப் பரிகாசம் செய் கிறவர்கள் நம்மைப் பார்த்துப் பொறாமைப்படும்படியான அளவுக்கும், நம்மைப்போல் அவர்களும் காப்பி அடிக்கும்படியான அளவுக்கும் நாம் வேலை செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம், வேலை செய்யவும் போகிறோம். இதற்கு ஆக நாம் ஒவ்வொருவரும் குடும்பம் வாழ்வு என்பவைகளைத் துச்சமாகக் கருத வேண்டியவர்களாக இருக்கிறோம்.இன்று தோன்றியுள்ள இந்த திராவிடர் கருப்புச் சட்டைப் படை இயக்கம் பொதுநல வாழ்வின் பேரால் தொப்பை வளர்க்கவோ யோக்கியதைக்கு மேற்பட்ட சுகவாழ்வு வாழவோ ஏற்பட்டதல்ல, அப்படிப் பட்டவர் என்று சந்தேகிக்கப்பட நேர்ந்த எவருக்கும் கூடத் திராவிட இயக்கம் இடம் கொடுத்தால் இயக்கம் தற்கொலை செய்து கொள்ளச் சம்மதித்தது போலாகும்.
இயக்கத்திற்குத் தொண்டாற்றுவதில் எவரும் தன் நலத்தைச் சிறிதாவது விட்டுக் கொடுக்கத் தயாராகவும், தனது மானாவ மானத்தைக் கூட லட்சியம் செய்யாமல் இயக்கத்திற்கு தலை கொடுக்கக் கூடியவர் களாகத் துணிவுகொள்ள வேண்டும். விளம் பரத்திற்கும், சுயநல வாழ்வு மேம்பாட்டிற்கும் என்று கருதி இயக்கத்தை ஏணிப் படிக்கல்லாக உபயோகிக்கக் கருதுபவர்கள் திடீர் என்று கவிழ்க்கப்பட்டு விடுவார்கள் என்பதை மனதிலிறுத்திக் கொண்டு இதில் கலக்க வேண்டும். உண்மையான இயக்கத் தில் இது இயற்கை. ஆதலால் சொந்த வெட்கம், மற்றவர்கள் செய்யும் பரிகாசம், விஷமத்தனமான போதனை ஆகியவை களுக்குக் கருப்புச் சட்டைக்காரர்கள் சட்டை செய்து காது கொடுக்கக்கூடாது என்பதை நன்றாய் வலியுறுத்திக் கூறு கிறோம். அடுத்த மாதம் சென்னையில் கூடும் நிர்வாகக் கமிட்டிக் கூட்டத்தில் கருப்புச் சட்டை விதிகள் மற்ற விவரங்கள் தெளிவுபடுத்தப்படும்.
இப்போது படைவீரர்கள் தங்கள் கழுத்து அளவு, மார்பு அளவு, உயரம் முதலியவை களைத் தெரிவிக்க வேண்டும். சட்டை 1க்கு ரூபாய் 1-12-0 அல்லது 2-க்குள் விலையாக லாம். சட்டை தேவை உள்ளவர்கள் எவ் வளவு வேண்டும் என்பதையும் எழுத வேண்டுகிறோம்.
- ‘குடிஅரசு’ தலையங்கம் - 17.11.1945


செவ்வாய், 16 மே, 2017

ஜமீன்தாரல்லாதார் மகாநாட்டில் பணநாயகம்பற்றி தந்தை பெரியார் உரை

தோழர்களே! மொத்த விஸ்தீரணத்தில் மூன்றிலொரு பாக பரப்புக்குமேல் ஜமீன் முறை ஆட்சியிலிருக்கும் இந்த சேலம் ஜில்லாவில் முதல் முதலாக இன்று இங்கு ஜமீன்தாரல்லாதார் மகாநாடு ஒன்று கூட்டப்பட்டதானது எனக்கு மிகுதியும் மகிழ்ச்சியைக் கொடுப்பதாகும்.

நாம் உலக பொது ஜனங்களுக்குச் செய்யவேண்டிய வேலைகளின் முக்கியத்துவம் எல்லாம் இம்மாதிரியாக பல அல்லாதார்கள் மகாநாடுகள் கூட்டி அவர்களது ஆதிக்கங்களையும், தன்மைகளையும் ஒழிப்பதில்தான் பெரிதும் அடங்கியிருக்கின்றது. இன்னும் இதுபோலவே பல மகாநாடுகள் கூட்டவேண்டியிருக்கிறது. சுயமரி யாதை மகாநாடுகள் கூட்டப்படும் இடங்களில் இம் மாதிரி மகாநாடுகள் அடிக்கடி கூட்டப்படுமென்று எதிர்ப்பார்க்கிறேன்.

உதாரணமாக லேவாதேவிக்காரர்கள் அல்லாதார் மகாநாடு, முதலாளிகள் அல்லாதார் மகாநாடு, தொழிற்சாலை சொந்தக்காரர்கள் அல்லாதார் மகாநாடு, வீடுகளின் சொந்தக்காரர்கள் அல்லாதார் மகாநாடு, நிலச்சுவான்தார் அல்லாதார் மகாநாடு, மேல்ஜாதிக்காரர்கள் அல்லாதார் மகாநாடு, பணக் காரர்கள் அல்லாதார் மகாநாடு என்பது போன்ற பல மகாநாடுகள் கூட்டி இவர்களின் அக்கிர மங்களையும், கொடுமைகளையும், மோசங்களையும், பொது ஜனங்களுக்கு விளக்கிக் காட்டி அவைகளை ஒழிக்கச் செய்யவேண்டியது நமது கடமையாகும்.

உலகில் எந்த எந்த ஸ்தாபனங்களால், எந்த எந்த தன்மைகளால், எந்த எந்த வகுப்புக் கூட்டங் களால் மனித சமூகத்திற்கு இடைஞ்சல்களும் சமத்து வத்திற்கும், முற்போக்குகளுக்கும் தடைகளும், சாந்திக்கும் சமாதானத் துக்கும் முட்டுக்கட்டைகளும் இருக்கின்றனவோ, அவைகளெல்லாம் அழிந்தொழிந்து என்றும் தலை தூக்காமலும், இல்லாமலும் போகும்படி செய்யவேண்டியது தான் சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய லட்சியமாகும். மனித சமூகத்துக்கு உள்ள தரித்திரத்திற்குக் காரணம் செல்வவான்களேயாகும். செல்வவான்கள் இல்லாவிட்டால்  தரித்திரவான்களே  இருக்கமாட்டார்கள், மேல் வகுப்பார் இல்லாவிட்டால் கீழ்வகுப்பார் இருக்கவே மாட்டார்கள். ஆதலால்தான் இம்மாதிரி அல்லாதவர்கள் மகாநாடு கூட்டவேண்டு மென்கின்றோம்.

இன்று ஏன் முதன் முதலாக ஜமீன்தார் அல்லாதார் மகாநாடு கூட்டினோமென்றால் இன்றைய உலக ஆதிக்கம் அவர்கள் கையிலேயே இருந்து வருகின்றது. இதற்குமுன் இந்நாட்டு ஆதிக்கம் பார்ப்பனர்கள் கையிலேயே இருந்தது.  அதற்காகவே நமது இயக்கம் பல பார்ப்பனர் அல்லாதார் ஸ்தாபனங்களும், மகாநாடுகளும், வாலிபசங் கங்களும், புதியமுறையில் தோற்றுவித்தும்,  கூட்டுவித்தும் பார்ப்பனக் கொடுமைகளையும், மோசங்களையும் ஒருவாறு பாமரமக்களுக்கு விளக்குவதில் முனைந்து நின்று வேலை செய்ததின் பயனாய் ஒரு அளவுக்குப் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்பதில் வெற்றி பெற்றோம்.

ஆனால், அந்தப் பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்தது என்கின்ற சந்தோஷத்தை அடைவதற்குள் அதற்குப் பதிலாக அதுபோன்ற கொடுமையும் மோசமுமான ஜமீன்தார் ஆதிக்கம் தலைதூக்கி தாண்டவமாட ஏற்பட்டுவிட்டது. முன்பிருந்த கெடுதியும் தொல் லையுமே பார்ப்பன ஆதிக்கம் என்னும் பேரால் இல்லாமல் ஜமீன்தார் ஆதிக்கம் என்னும் பேரால் இருந்துவருகின்றன.

பார்ப்பனர்களைப்போலவே ஜமீன்தார்கள் பிறவியின் காரணமாகவே பரம்பரை உயர்வுள்ளவர்கள் என்று சொல்லிக் கொள்ளப்படுபவர்கள். பார்ப்பனர் களைப் போலவே ஜமீன்தார்கள் இன்றைய ஆட்சி முறைக்கு தூண்கள் போலவும் இருந்து வருகின்றவர்களாவார்கள். பார்ப்பனர்களைப் போலவே ஜமீன்தார்கள் என்பவர்கள் உலகத் துக்கு வேண்டாதவர்களும், உலக மக்கள் கஷ்டங்க ளுக்கெல்லாம் காரணமாயிருப்பவர்களு மாவார்கள்.

இந்த ஜமீன்தார்கள் எப்படி ஏற்பட்டார்கள்? எப்படியிருந்து வருகின்றார்கள்? இவர்களது செல்வமும், மேன்மையும் எதற்குப் பயன்படுகின்றன? என்பவைகளை யோசித்துப் பார்த்தால் இவர்கள் உலகுக்கு வேண்டாதவர்கள் என்பதும், ஒழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதும் நன்றாய் விளங்கும்.

இன்றைய தினம் சாதாரணமாய் ஜமீன்தார்கள் என்றால் என்ன? என்று பார்ப்போமானால் ஒரு விஸ் தீரணமுள்ள பிரதேசத்தை சொந்தமாக உடையவர்கள் என்றும், அந்த விஸ்தீரணத்திலுள்ள பூமிகளுக்கு உள்ள வரி (கிஸ்தி) இந்த ஜமீன்தார்களுக்கே சேர்ந்தது என்றும் அதில் ஏதோ ஒரு பாகம் சர்க்காருக்குச் செலுத்திவிட்டு பாக்கியை தாங்களே அனுபவிப்பவர்கள் என்றும் தான் அருத்தமாய் இருந்து வருகின்றது.

பொதுவாக பூமிகளுக்குக் கிஸ்தி அதாவது நிலவரி கொடுப்பது என்பது எதற்காக வழக்கத்திலிருந்து வருகின்றது என்றால் பயிரிடும் மக்களின் நன்மைக்கும் பத்திரத்திற்குமான காரியங்களைச் செய்யவே பயிரில் ஒரு பங்கு கொடுக்கப்படுவதாகும். அது போலவே சர்க்கார் வாங்கும் நிலவரிகளுக்கும் மற்றபடியான வரிகளுக்கும் சரியாகவோ, தப்பாகவோ ஒரு வரவு செலவுத்திட்டம் காட்டி அதன்படி படிப்பு, சுகாதாரம், நீதி, பத்திரம், போக்குவரவு சாதனம் முதலிய காரியங்களுக்குப் பயன்படுத்தி வருவதாய்ச் சொல்லியும், கணக்கு காட்டியும் வருகிறார்கள், ஆனால் இந்த ஜமீன்தார்களால் குடிகளிடமிருந்து வாங்கும் நில வரிக்கும், வாரத்துக்கும் இது போல் குடிஜனங்களுக்கு என்ன பிரதிபிரயோஜனம்  இருந்து வருகின்றது? என்பதை நாம் முக்கியமாய் கவனிக்க வேண்டும்.

ஜமீன்தார்கள் தங்கள் வரும்படியில் சர்க்காருக்கு ஏதோ ஒரு சிறு பாகம் கொடுப்பதாய்ச் சொல்லப்படுவ தெல்லாம் குடிகளிடமிருந்து வரியை எப்படியாவது வசூலிப்ப தற்கும், ஜமீன்தார்கள் என்ன அக்கிரமம் செய்தாலும் குடிகளால் ஜமீன்தாரர்களுக்கு ஆபத்து இல்லாமல் இருப்பதற்கும் கூலியாகவே ஒழிய மற்றபடி ஜமீன் குடிகளுடைய நன்மைக்கு என்பதாக எண்ணங் கொண்டல்ல என்பதே எனதபிப்பிராயம்.

இந்த ஜமீன்தார்களுக்கு இந்தப் பதவி வந்ததற்கு காரணம் எல்லாம் ஆதியில் அந்நிய சர்க்கார் இத்தேசத்துக்கு வந்தபோது அவர்களுக்கு வேண்டிய சவுகரியம் செய்து கொடுத்தும், இங்குள்ள எதிர்ப்புகளை அடக்கி ஒடுக்க உதவி செய்ததுமான காட்டிக் கொடுத்த காரியங்களுக்குத்தான் சன்மானமாய் (லஞ்சமாய்) கொடுக்கப்பட்டதேயொழிய வேறில்லை.

இப்படிப்பட்ட இந்த ஜமீன்தார்களின் யோக்கி யதையை நான் உங்களுக்கு அதிகமாய் சொல்லிக்காட்ட வேண்டிய அவசியமில்லை. அவர்களுடைய அருங்குணங்களில் எல்லாம் குடிப்பதும், கூத்திமார்கள் வைப்பதும், பந்தயம் சூது ஆடுவதும் தலை சிறந்த குணங்களாகும். மேலும் இப்பொழுது சிறிதுகாலமாய் அதாவது பார்ப்பன ஆதிக்கம் ஒடுங்க ஆரம்பித்த பின்பு அரசியல் தேர்தல்களை பணத்தின் மூலம் வியாபார முறையில் நடத்தி வெற்றி பெற்று ஆதிக்கமடைந்து பெருமை அடைவதையும், பணம் சம்பாதிப்பதையும் மற்றொரு அருங்குணமாய் கொண்டி ருக்கிறார்கள்.

மற்றபடி இவர்களிடம் என்னயோக்கியதை இருக்கிறது? இவர்களால் தேசத்துக்கோ, மனித சமூகத்துக்கோ என்ன பயன்? என்று பார்த்தால் ஒன்றும் இல்லை என்பது தெற்றென விளங்கும். இன்றைய ஜமீன்முறை நாளடைவில் எல்லா பூமியும் அவர்கள் கைக்கே போய்ச்சேரும் படியானதாகவும், எல்லா அதிகாரமும், பதவியும் அவர்கள் கைக்கேபோய்ச் சேரும்படியான மாதிரியிலும் தான் இருந்து வருகின்றது.

ஏனெனில் வரி கொடுக்க முடியாத பூமிகளும், வரி கொடுக்கவும், செலவுக்கும் வரும்படி போதாமல் இருந்துவரும் குடியானவனுடைய பூமிகள் முழுவதும் பணக்காரர்களாயிருக்கின்ற ஜமீன்தாரர்களுக்குத் தான் நாளாவட்டத்தில் போய்ச் சேருகின்றதாய் இருக்கிறது. இந்தக் காரணத்தால்தான் ஒவ்வொரு ஜமீன்தார்களுக்கும் லட்சக்கணக்கான ஏக்கர் பூமிகள் இருந்து வருகின்றன.

இதுபோலவே தேர்தல்களிலும், அது எப்படிப்பட்ட தேர்தலாய் இருந்தாலும் ஜமீன்தாரர்கள் தாராளமாய் 40,000, 50,000, ஒரு லட்சம், இரண்டு லட்சம், என்கின்ற கணக்கில் ரூபாய்களை வாரி இறைத்து எலக்ஷன்களில் வெற்றி பெற்றும், மற்றும் வேறு இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு 1000, 5000 என்கின்ற கணக்கில் ரூபாய்களை கொடுத்து அவர்களை தங்கள் அடிமையாக்கியும் சகல பதவிகளையும் அதிகாரங் களையும் சுவாதீனப்படுத்திக் கொள்ளவும் முடிகின்றது.

இந்த மாதிரி விலை கொடுத்து தங்களின் செல் வத்தின் பயனாயும் செல்வாக்கின் பயனாயும் பெற்ற பதவியும் அதிகாரமும் ஆதிக்கமும் எந்தவழியில் உபயோகப்படுத்தினாலும் கேள்வி கேட்பாடு இல்லாமல் செலாவாணியாகி வருகின்றதைப் பார்க்கின்றோம்.

ஜமீன்தாரர்களின் நடவடிக்கைகளை நாம் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் இன்று யாரும் இல்லை என்றே நினைக்கின்றேன். சில ஜமீன்தாரர்கள் அவர்கள் எல்லைக்குள்பட்ட விஸ்தீரணத்தில் எந்தப் பெண் ருதுவானாலும் அவர்களே தான் முதலில் சாந்தி முகூர்த்தம் செய்யவேண்டும் என்கின்ற (எழுதாத) சட்டம் அமலில் இருந்து வருவது எனக்குத் தெரியும். இதில் ஒன்றும் அதிசயம் இருப்பதாக யாரும் நினைக்க வேண்டிய தில்லை.

இந்தச் சட்டம் சில மதகுருக்கள்மாருக்கும் இருந்து வருவது எனக்குத் தெரியும். இது தவிர தனது குடிஜனங்களிடம் இருக்கும் நல்ல பெண், நல்லமாடு, குதிரை முதலியவைகள் ஜமீன்தார்களுக்கே சொந்தமானது என்கின்ற முறையும் சில இடங்களில் இருந்து வருவது எனக்குத் தெரியும்.

மற்றும் பல ஜமீன்தாரர்கள் சுகவாசமும், வெளிநாடு சுற்றுப்பிராயணமும், 100, 200 கணக்கான மனைவிகளும், வைப்பாட்டிகளும், ஆயிரம் இரண்டாயிரக்கணக்கான தாசிகள் விபச்சாரிகள் ஆகியவர்கள் சம்பந்தமும் வைத்துக் கொண்டிருப்பதுடன் 40, 50, 100, 200 குதிரைகளும் 10, 20, 30, மோட்டார்கார்களும், 10, 20, அய்யர்கள் என்று பெயர்வழங்கும் மாமாக்களையும் உடையவர்களாக இருந்துகொண்டு நெல், மரத்தில் காய்க்கின்றதா? கொடியில் காய்க்கின்றதா? செடியில் காய்க்கின்றதா? என்றுக்கூட தெரியாதவர்களும் வேஷ்டிகள் செடியில் காய்க்கின்றதா? அல்லது தறியில் நெய்யப் படுகின்றதா? என்று தெரியாதவர்களும் ஏராளமாய் இருக்கிறார்கள்.

இவர்கள் வாழ்க்கை நிலையை அவர்களது பள்ளிக்கூட வாழ்வில் இருந்தே கவனித்தால் பெரும் பாலும் ஒவ்வொருவர்களுடைய யோக்கியதையும் விளங்கும். சாதாரணமாக சென்னை மாகாணத்தை எடுத்துக் கொண்டோமேயானால் வருஷமொன்றுக்கு ஜமீன்தாரர்களுக்கு குடிகளிடமிருந்து சுமார் இரண்டரை கோடி ரூபாய் வரையில் கிஸ்தி (நிலவரி) கிடைக்கின்றது.

இதில் அரைக்கோடி ரூபாய் மாத்திரமே இவர்கள் சர்க்காருக்குச் செலுத்திவிட்டு பாக்கி இரண்டு கோடி ரூபாய்களை இந்த ஜமீன்தார்கள் அனுபவித்து வருகின்றார்கள், இந்த  இரண்டு கோடி ரூபாயில் 100-க்கு 90 பாகம் ரூபாய்கள்  நான் மேல் குறிப்பிட்ட வழியிலேயே பாழாக்கப்படுகின்றன.

இந்த நிலவரியானது சென்னை அரசாங்கத்தாருக்கு மாகாணம் பூராவிலும் கிடைக்கும் நிலவரிக்கு 3இல் ஒரு பங்குக்கு மேலானதென்றே சொல்லுவேன். இந்தப்படி விளைவின் பயனாய் உண்டான செல்வம் அதுவும் எத்தனை ஏழைக்குடியானவன், விவசாயக்கூலிக்காரன் ஆகியவர்கள் பெண்டு பிள்ளைகள் சகிதம் தங்கள் சரீரங்களை தினம் 8 மணி முதல் 15 மணிவரையில் வியர்வைப் பிழிந்து சொட்டு சொட்டாய் சேர்த்த ரத்தத்திற்கு சமானமான செல்வத்தை, ஒரு கஷ்டமும், ஒரு விபரமும் அறியாதவர்களும், ஒரு பொறுப்பும் இல்லாதவர்களுமான ஜமீன்தார்கள் சர்க்காரில் லைசென்சு பெற்ற கொள்ளைக் கூட்டத்தார்கள் போல் இருந்து கொண்டு மக்கள் பதறப்பதற வயிறு, வாய் எரிய எரிய, கைப்பற்றி பாழாக்குவதென்றால் இப்படிப்பட்ட ஒரு கூட்டம் உலகில் இருக்க வேண்டுமா? என்றும் இவர்களின்  தன்மையையும், ஆதிக்கத்தையும் இன்னும் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு ஜனசமுகம் சுயமரியாதையை உணர்ந்த  ஜன சமூகமாகுமா? என்பதைப்பற்றியும் யோசித்துப் பார்க்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.

சாதாரணமாக ஜமீன் என்கின்ற மேற்கண்ட தன்மை, நாட்டில் அடியோடு இல்லாமல் இந்த லாபங்களையும் அதாவது இந்த 2 கோடி ரூபாய்களையும் சர்க்காரே நேராய் அடைவதாய் இருந்தால் அதனால் மக்களுக்கு எவ்வளவு பயன் ஏற்படுத்தலாம் என்பதையும் யோசிக்க வேண்டுகின்றேன்.

ஆதலால் மேல்ஜாதி, கீழ்ஜாதி முறை கூடாதென் றும், குருக்கள் முறைக் கூடாதென்றும் எப்படி நாம் பல துறைகளில் வேலை செய்கின்றோமோ அது போலவேதான் ஜமீன்தாரன் குடிகள் என்கின்றத் தன்மையும், முறையும் கூடாதென்று வேலை செய்ய நாம் கட்டுப்பட்டவர்களாய் இருக்கின்றோம் என்று இச்சிறு வார்த்தைகளோடு இந்தத் தீர்மானத்தை நான் பிரேரேபிக்கின்றேன் என்று பேசினார்.

தீர்மானங்கள்

1. உலக செல்வத்தை ஒரே பக்கம் சேர்க்கும் முறையை ஒழிப்பதற்கும், உலகப் பொருளாதார சமத்துவத்துக்கும்,  பாடுபடுகிற மக்கள் அதன் பயனை சரிவர அடைய வேண்டும் என்பதற்கும், ஜமீன்தார் முறையானது பெருத்த கெடுதியாகவும், தடையாகவும் இருந்துவருவதால் ஜமீன்தார் தன்மையை  அடியோடு ஒழிக்கப் பகுத்தறிவுக்கு  ஏற்றவழியிலும், பொருளாதார சமத்துவ நியாயவழியிலும் சுயமரியாதை இயக்கம் பாடுபடவேண்டுமென்று இம் மகாநாடு தீர்மானிக்கிறது.

-பிரேரேபித்தவர்: ஈ.வெ. ராமசாமி, ஆமோதித்தவர்: கே.வி.அழகர்சாமி.

2. இந்திய நாட்டு தேசியக் கிளர்ச்சி என்ப தானது சுயராஜ்யம், சுயஆட்சி, ஜனநாயக ஆட்சி என்பவைகளின் பெயரால் சுமார் 50 வருஷகாலமாகச் செய்து வந்த வேலைகளின் பயனெல்லாம் ஜமீன் தாரர்களுக்கே அனுகூலமாயிருப்பதால். இந்திய ஸ்தல ஸ்தாபனம், சுயஆட்சி அரசாங்கம்  ஜனநாயக ஆட்சி ஆகிய நிர்வாகமெல்லாம் பொதுஜன விரோதிகளான ஜமீன் தாரர்கள் வசமும், அவர்கள் போன்ற செல்வ வான்களிடமே போய்ச்சேருவதாயிருப்பதாலும் இனி அந்தப்படி நேராமல் அதாவது ஜமீன்தாரர்களும் செல்வவான்களும் பொறுப்பற்றவர்களாகிய படித்த கூட்டத்தார் என்பவர்களும் கைப்பற்றாமல் இருக்கும்படி சகல முயற்சிகளும் செய்து அவை ஏழைப் பாட்டாளி மக்கள் கைக்கே வரும்படியான மார்க்கத்துக்கு சுயமரியாதை இயக்கம் மும்முரமாய் உழைக்க வேண்டுமென்று தீர்மானிக்கிறது.

- பிரேரே பித்தவர்: ப. ஜீவானந்தம், ஆமோதித்தவர்: நடேசன்

3. ஜமீன்தார்கள் நிலைத்திருப்பதற்கும், அதிகரிப் பதற்கும் அனுகூலமாயிருந்து வரும் சட்டங்களையும் முறைகளையும் ரத்து செய்துவிட வேணுமாய் கிளர்ச்சி செய்யச் சட்டசபைகளின்  மூலம்  அச்சட்டங்கள் ரத்தாக வேலை செய்யவேண்டும் என்றும் இம் மகாநாடு தீர்மானிக்கிறது. (எ) இக்காரியங்களை நடைபெறச் செய்யவும் ஜமீன் குடிகள் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்ற தீவிர முயற்சிகள் செய்யவும் கீழ்க்கண்டவர்களடங்கிய கமிட்டி ஒன்றை நியமிக்கிறது.

தோழர்கள்: ஈ.வெ.ராமசாமி, சி.நடராஜன், கே.எம். பாலசுப்பிரமணியம்  பி.ஏ.,பி.எல்., கே.வி. அழகர்சாமி, வி. பார்த்தசாரதி, பிரேரேபித்தவர்:  எஸ்.வி. லிங்கம், ஆமோதித்தவர்: கோவை கிஸன் முதலிய சுமார் 20, 30 தோழர்களாகும்.

‘குடிஅரசு’ - சொற்பொழிவு - 27.08.1933

-விடுதலை,14.5.17

வெள்ளி, 12 மே, 2017

கருநாடகத்தில் 400 பக்கங்களில் 52 தலைப்புகளில் ‘பெரியார் விசாரகளு’ (பெரியார் சிந்தனைகள்) நூல்

கருநாடக அரசின் ‘குவெம்பு பாஷா பாரதி’ வெளியீடுபெங்களூரு, மே 10 ‘பெரியார் விசாரகளு’ என்னும் பெயரில் கன்னடத்தில் தந்தை பெரியார் சிந்தனைகள் அடங்கிய நூல், 400 பக்கங்களில், 52 தலைப்புகளில் வெளிவந்துள்ளது. கருநாடக மாநில அரசே இதனை வெளியிட்டுள்ளது.
ஒருபக்கம் காவிரி நீருக்கான போராட் டம் ஓடிக் கொண்டிருந்தாலும்.... மறுபக்கம் இப்படி ஒரு புத்தகமா? என

ஆச்சர்யத்தில் நாம் ஆடிப் போகும் அளவுக்கு ஒரு செயலைச் செய்திருக்கிறது கர்நாடக அரசு.

ஆம். கர்நாடக அரசின் “குவெம்பு பாஷா பாரதி” வெளியிட்டிருக்கிற ஒரு புத்தகம்தான் நம்மை ஆச்சர்யத்தின் எல்லைக்கே கொண்டுபோய் நிறுத்தி இருக்கிறது.அந்தப்புத்தகத்தின்பெயர் என்ன தெரியுமா? “பெரியார் விசாரகளு” அதுவாகப்பட்டது:“பெரியார் சிந்த னைகள்.”நானூறுபக்கங்களில்பெண் விடுதலை, சமூகநீதி, பவுத்தம் என 52 தலைப்புகளில் பெரி யாரின் சிந்தனைகளை கன்னடத்தில்மொழிபெயர்த்து வெளி யிட்டிருக்கிறார்கள்.

கீழ்வெண்மணியில் நடந்த தலித் படுகொலைகளைக் கண்டித்து 28.12.1968 ‘விடுதலை' நாளிதழில் வெளிவந்த தலையங்கத்தையும் தேடிப்பிடித்து சேர்த்திருப்பது வரலாற்றைப் படிக் காமலே வரலாற்றைப் படைக்க நினைக் கும் சிலருக்கு பாடமாக இருக்கும்.

இந்நூல் வெளிவருவதற்குப் பின்ன ணியில் இருந்தவர்தான் கன்னட பேரா சிரியரான கே.வி.நாராயணா. ஹம்பி பல்கலைக் கழகத்தில் ஒன்பதுமுறை பதிவாளராகப் பணியாற்றிய பெருமைக் குரியவர். அத்தோடு சமஸ்கிருதக் கலப் பில்லாத கன்னட மொழி வளர்ச்சிக்காக உழைத்து வருபவர்தான் இந்தக் கே.வி. நாராயணா.

பெரியாரின் சிந்தனைகளை கன்னட மக்களுக்குக் கொண்டு செல்லும் பணிக்கு பதிப்பாளராகத் துணை நின்றவர் திராவிடப் பல்கலைக் கழகத்திலும், பெங்களூர் பல்கலைக் கழகத்திலும் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய கார்லோஸ் என்றழைக்கப்படும் பேரா சிரியர் தமிழவன்.

பலருக்கும் முன்பாகவே எண்பது களில் அமைப்பியல் வாதத்தினை (ஷிtக்ஷீuநீtuக்ஷீணீறீவீsனீ) தமிழகத்தில் அறிமுகப் படுத்திய முன்னோடிகளில் ஒருவர்தான் நவீன இலக்கியவாதியானள தமிழவன்.
மொழி பெயர்த்த

பேரா.சிவலிங்கம்கார்லோஸ் என்றழைக்கப்படும் பேராசிரியர் தமிழவன் பேராசிரியர் சிவலிங்கம்


பெரியாரை கன்னட அறிவுஜீவிகளும் புரிந்து கொள்ளும் வகையில் கட்டுரை களைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்தவர் பேராசிரியர் சிவலிங்கம். சிவலிங்கம் தமிழ் பேராசிரியர் மட்டுமில்லை. கர் நாடக தலித் மக்களின் விடுதலைக்காக “ஸ்வாபிமானி தலித் சக்தி” என்கிற இயக்கத்தினை முழுவீச்சோடு நடத்தி வருபவர்.
நரபலி கொடுக்கப்பட்ட தலித் இளைஞனின் கொடூரக் கொலையை உலகின் பார்வைக்குக் கொண்டு வந்ததுணிச்சல்....காதலுக்குத்துணை நின்ற தலித் பெண்ணை நிர்வாணமாக ஓடவிட்ட கொடூர முகங்களைத் தோலுரித்த துணிவு மிக்கவர்.

ஒடுக்கப்பட்ட மக்களது விடுதலைக் காக உழைத்துவரும் இவரோடு மொழி பெயர்ப்பில் கைகோத்த மற்றொருவர் நல்லதம்பி.. இன்று இவர்கள் விதைத்த விதை மரமாகி கிளை பரப்பி கனி தரும்போது.... கன்னட மக்கள் தங்களது உண்மையான நண்பர்கள் யார்? தங்களைத் தூண்டிவிட்டுக் குளிர் காயும் பகைவர்கள் யார்? என்பதை துல்லியமாகப் புரிந்து கொள்வார்கள்.

(பாமரன் வலைப்பக்கத்திலிருந்து)

-விடுதலை,10.5.17
.