புதன், 30 மே, 2018

நம்ம நாட்டுக்கு வேண்டியது என்ன? அரசியல் திருத்தமா? சமுகத் திருத்தமா?

தந்தை பெரியார்
இந்த சமயம் தமிழ் மக்கள் மிகவும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியதும் கூர்மையாய் கவனித்து நடக்க வேண்டியதுமான நெருக்கடியான சமயம் என்பதை நாம் பல தடவை அடுத்து அடுத்து வெளியிட்டு வந்திருக்கிறோம். இம்மாதிரியான சந்தர்ப்பங்கள் அடிக்கடி ஏற்படாது, 10 வருஷங்களுக்கு ஒரு முறையோ, 20 வருஷங்களுக்கு ஒரு முறையோதான் ஏற்படுகின்றது. அதைத் தக்க வழியில் உபயோகித்துக் கொள்ள முடியாமல் பார்ப்பனர்கள் கொடுமை செய்து வருவது ஒரு பக்கமிருந்தாலும் பார்ப்பனரல்லாதார்களில் அரசியல் பிழைப்புக்காரரும், கோடாரிக் காம்புகளும், முடந்தெங்குகளும் மற்றொரு பக்கமும் இருந்து கொண்டு நாடு முழுவதும் பாழாகும் வண்ணமும், சமுகம் முழுவதும் இழிவுபடும் வண்ணமும் துரோகச் செயல்கள் செய்து வருகின்றார்கள். ஆதலால் பார்ப்பனரல்லாத மக்கள் இதுசமயம் முக்கியமாய் விழித் திருக்க வேண்டியதாய் இருக்கின்றது.


நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆக வேண்டிய காரியங்களைப் பற்றி விசாரிப்பதற்கென்றோ எவ்வகை சீர்திருத்தம் வழங்க வேண்டுமென்பதை அறியவோ, இதுசமயம் ஒரு கமிஷன் அரசாங்கத்தாரால் நியமிக்கப்பட்டு இருக்கிறது. இதைத் தக்க வழியில் உபயோகித்துக் கொள்ள வேண்டியது மக்களின் முக்கிய கடமை. எனவே இப்போது வந்திருக்கும் இந்த கமிஷனிடம் நமது நிலைமைகளையும் தேவைகளையும் சொல்லிக் கொள்வது எவ்வழியிலும் இழிவானதாகாது. ஆதலால் இப்போது நமது நிலை என்ன? நமக்கு இப்போது வேண்டியது என்ன? சுயமரியாதையும் ஒற்றுமையும் தரவல்ல சமுக சீர்திருத்தமா அல்லது நாட்டை இழிவுபடுத்தி பிரித்து வைக்கும் அரசியல் திருத்தமா என்பதுதான் முக்கியமான கேள்வி. அரசியல் சீர்திருத்தம் என்பது நமக்கு இரண்டு மூன்று தடவை வழங்கப் பட்டாய் விட்டது. அதனால் எதிர்பாராப் பதவிகள் எல்லாம் நமக்குக் கிடைத்திருக்கின்றது. மாதம் 5500 ரூ, 6500 ரூ, 7500ரூ கிடைக்கும்படியான உத்தியோகங்கள் கிடைத்துவிட்டன. அதுவும் தெருவில், பிச்சை எடுத்தும், பஞ்சாங்கம் சொல்லி பணம் பறித்தும் முனிசிப்பாலிட்டி விளக்கு வெளிச்சத்தில் படித்தும் வந்தவர்களுக்கு உயர்தர நீதிபதி பதவியும் நிர்வாக பதவியும் கிடைக்கத்தக்க சீர்திருத்தம் வழங்கப்பட்டு இருக்கின்றது. பிரபு பட்டமும் கவர்னர் பதவியும் கிடைத் திருக்கின்றது.

இனி நமக்கு கிடைக்க வேண்டிய பதவி இன்னது பாக்கி இருக்கின்றது என்று சொல்ல மிகவும் கஷ்டப்பட வேண்டி யிருக்கிறது. அரசர் பதவியும், அரசுப் பிரதிநிதி பதவியும், சேனாதிபதி பதவியும்தான் இனிபாக்கி இருக்கின்றது என்பது நமது அபிப்பிராயம். ஆனாலும் இது வரை நமக்குக் கிடைத்த மேல்கண்ட பதவிகளை நாம் உபயோகமற்றதென்று சொல்லித் தள்ளிவிடவும் இல்லை. ஒருவர் மேல் ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு அதை அடைய முயற்சிக்கின் றோமேயொழிய, அடைந்து வருகின்றோமே ஒழிய வேண்டாமென்று ஒருவரும் சொல்லவே இல்லை. அவை களை எந்த அரசியல் இயக்கமும் தள்ளவும் இல்லை. இந்த நிலையில் நாடு என்ன முன்னேற்றமடைந்திருக்கிறது என்று கேட் கின்றோம். ஒருசமயம், பதவியும் சம்பளமும் மாத்திரம் கிடைத்ததேயல்லாமல் அதற்கேற்ற அதிகாரம் கிடைக்க வில்லை என்று யாராவது சொல்லக் கூடுமா? நீதிபதி அதிகாரங்களில் நம்நாட்டு மக்களின் சகல சொத்துகளைப் பற்றியும் அவர்களது உயிரைப் பற்றியும் நீதி வழங்கத்தக்க அதிகாரம் கொடுக்கப் பெற்றிருக்கின்றோம்.

அது மாத்திரமல்ல. இந்த நீதியை மக்களுக்கு வாங்கிக் கொடுப்பதற்குப் பாடுபடுகின்றவர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு நபர் ஒன்றுக்கு 50000 ரூபாய் 100000 ரூபாய் வரையிலும் கூட வரும்படி சம்பாதிக்கத்தக்க நீதி வழங்கும் முறை களையும் நீதி அடையும் முறைகளையும் கொடுக்கப் பெற்றிருக்கின்றோம். அநீதிகள் இன்ன விதம் இருக்க வேண்டுமென்று சட்டம் ஏற்படுத்தும் பொறுப்பும் நமக்கே கொடுக்கப்பட்டிருப்பதைக் காட்ட சட்ட நிர்மாண சபைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அவைகளும் உபயோக மற்றவையென்று யாராலும் வெறுத்துத் தள்ளிவிடப்படவும் இல்லை. இந்தியாவில் உள்ள எல்லா விதமான அரசியல் தலைவர்களும் இந்தச் சட்ட நிரூபண சபைகளில் இன்னும் உட்கார்ந்து கொண்டு சட்டமியற்றிக் கொண்டு இருக் கின்றார்கள். அதுவும் தங்களது சொந்த ஓதாவில் அல்லாமல் சீர்திருத்தத்தின் மூலம் ஏற்பட்ட நியதிப்படி பொது ஜனங்களின் வாக்குப் பெற்று பொது ஜனங்களின் பிரதி நிதிகள் என்கின்ற முறையில் உட்கார்ந்து கொண்டிருக் கிறார்கள். அரசாங்க சபை தவிர மற்ற 7, 8 மாகாண சட்ட சபைகளிலும் இந்திய சட்ட சபைகளிலும் ஜனப் பிரதிகளே அதிக எண்ணிக்கை இருக்கத் தக்க விதமாகவே அமைக் கப்பட்டிருக்கிறது. அதுவும் சர்க்காரைத் தோற்கடிக்கத்தக்க அதிகப்படிக்கான எண்ணிக்கையாகவே இருப்பதுடன் பல தடவை சர்க்கார் தோற்கடிக்கப்பட்டும் இருக்கிறது.

நீதி இலாகா, சட்டசபை இலாகா மாத்திரமில்லாமல் நிர்வாக இலாகாவிலும் நமக்கு அதிக எண்ணிக்கை வழங்கப்பட்டி ருக்கிறது. உதாரணமாக சென்னையை எடுத்துக் கொள்வோம். நிர்வாக சபையில் ஏழு மெம்பர் களும் ஒரு தலைவரும் இருப்பதாக வைத்துக் கொண்டால் அதில் அய்ந்து பேர் இந்தியர்களாகவே இருக்கத்தக்க மாதிரி இருக்கின்றது.

இந்த அய்வர்களிலும் மூன்று பேர் ஜனப் பிரதிநிதிகள் என்பவர்களின் நம்பிக்கையைப் பெற்றே இருக்கத் தக்க வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறார்கள். மற்ற இருவர் களும் இந்தியப் பிரமுகர்களாகவே நியமிக்கப்படத் தக்கதாயிருக்கின்றது. அந்தப்படியே நியமிக்கப்பட்டும் வருகிறது. அந்தப்படி நியமனம் பெறுகின்றவர்களும் அற்பத்தனமாய் நடந்து கொள்வதற் கில்லாமலும்; கண்ணிய மாய் நடக்கத்தக்க மாதிரியாகவும் மாதம் 5550 ரூபாய் சம்பளமும்  மாதம் சுமார் 1500 ரூபாய் படித்தரமும் பெறும் படியான சவுகரியங்களும் அமைக்கப்பட்டு இராஜ போகமும் கொடுக்கப்பட்டு அந்தப்படியே அடைந்தும் வருகின்றார்கள்.

இந்திய ஜனப்பிரதிநிதித்துவம் கொண்ட இவ்வளவும் அரசியல் ஸ்தாப னங்கள் என்பது மூலமாய் கேட்டுக் கொண்டதற்கு இணங்கியே அரசாங்கத் தாரால் கொடுக் கப்பட்டதாக இருக்கின்றதே யல்லாமல் வேறல்ல. எனவே இவைகளினால் நாட்டிற்கோ நாட்டிலுள்ள பற்பல ஜன சமுகங்களுக்கோ ஏற்பட்ட நன்மைகள் என்ன? ஏழை களுக்கு ஏற்பட்ட நன்மைகள் என்ன? விவசாயிகளுக்கு ஏற்பட்ட நன்மை என்ன? கூலிக் காரருக்கு ஏற்பட்ட நன்மை என்ன? வியாபாரிகளுக்கு ஏற்பட்ட நன்மை என்ன? தொழி லாளிக்கு ஏற்பட்ட நன்மை என்ன? என்று கேட்கின்றோம்.

ஏழைகளுக்கு ஏற்பட்ட நன்மையின் யோக்கியதைக்குப் பிச்சைக்காரர் களின் தொல்லையும் ஒழுக்கக் குறைவுகள் அதிகப்படுவதும் போதிய சாட்சியாகாதா? என்று கேட் கின்றோம்.

விவசாயிகளுக்கு ஏற்பட்ட நன்மையின் யோக்கிய தைக்குப் பூமிகள் எல்லாம் ஒவ்வொரு தனி மனிதனுக்கே அதுவும் விவசாயம் செய்யத் தெரியாதவனுக்கே போய்ச் சேர்ந்து வருகின்றதும் விவசாயிகள் அவர்களுக்கு உழைத் துப் பட்டினி கிடப்பதும் போதிய சாட்சியாகாதா? என்று கேட்கின்றோம்.

கூலிக்காரர்களுக்கு ஏற்பட்ட நன்மையின் யோக்கிய தைக்குத் தூத்துக்குடி, மண்டபம், நாகப்பட்டினம், சென்னை, காகிநாடா முதலிய துறைமுகங்களில் தங்கள் தங்கள் பெண்டு பிள்ளைகளுடன் வாரம் ஒன்றுக்குப் பதினாயிரக் கணக்கான மக்கள் கூலிக்காரர்களாக கப்பல் ஒதுக்குகின்ற காட்சி போதாதா? என்று கேட்கின்றோம்.

தொழிலாளிகளுக்கு ஏற்பட்ட நன்மையின் யோக் கியதைக்குத் திடீர் திடீர் என்று ஆயிரக்கணக்கான, பதினா யிரக்கணக்கான தொழிலாளர்களை முதலாளி மார்கள் வேலையிலிருந்து தள்ளுவதும் அவர்களது வேலைகளை இயந்திரங் களைக் கொண்டு சரி செய்து கொள்வதும் அத்தொழிலாளிகள் தெருத்தெருவாய் திண்டாடுவதும்  மாதம் 100 ரூ வரும்படி பெற்ற தொழிலாளி கூலி போதாது என்று கேட்டதற்கு நீக்கப்பட்ட நிமித்தம் ஒற்றை மாட்டு வண்டி ஓட்டுவதும், பால் கறந்து விற்பதுமான வேலையில் கூட ஜீவனம் செய்ய முடியாமல் திண்டாடுவதுமான நிலைமை போதாதா? என்று கேட்கின்றோம்.

மற்றபடி நாடு முன்னேற்ற மடைந்தது என்பதற்குச் சாட்சியாக மக்களின் அரசாங்க நிர்வாகச் செலவுக்காக வரி வசூலிப்பது வருஷத்திற்கு வருஷம் விஷம் ஏறுவது போல வருஷம் ஒன்றுக்கு 40 கோடியிலிருந்து, 165 கோடி ரூபாயாக உயர்த்தியிருப்பதும், நாட்டிலிருந்து வியாபாரத்தின் மூலம் வருஷத்திற்கு வருஷம் மேல்கண்டபடியே கோடிக்கணக் கான ரூபாய்களைக் கொண்டே வெளிநாடுகளுக்குப் போய்க் கொண்டு இருப்பதும் எங்கும் பார்த்தாலும் படித்த மக்கள் முதற் கொண்டு வேலையில்லாமல் திண்டாடுவதும் போதாதா? என்று கேட்கின்றோம்.

வியாபாரிகள் நிலைக்குச் சாட்சியாக நாணயமாற்றுதல் மூலமாகவும் வருமான வரி மூலமாகவும், பத்து லட்சம் கணக்கான ரூபாய்களுக்கு வருஷா வருஷம் நூற்றுக்கணக் கான பெரிய பெரிய வியாபாரிகளும் இயந்திர சாலைகளும் தீபாவளி ஆகிவருவது போதாதா என்று கேட்கின்றோம்.

நாடு ஒழுக்கத்தில் முன்னேறியிருக்கின்றது என்கின்ற யோக்கியதைக்குச் சாட்சியாக கோர்ட்டுகளும், நியாயாதி பதிகளும், நியாயவாதிகளும், காவலாளிகளும், நிர்வாக ஸ்தாபனங்களும் ஜெயில்களும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போவது போதாதா? என்று கேட்கின்றோம்.

சமுக ஒற்றுமையின் யோக்கியதைக்குச் சாட்சியாக நாளுக்கு நாள் இந்து முஸ்லீம் கலவரங்களும் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் விவாதங்களும், கீழ்ஜாதி மேல் ஜாதி தொல்லைகளும் புதிய புதிய வகுப்பு உரிமைகளும் வளர்ந்து கொண்டு போவதும் போதாதா? என்று கேட்கின்றோம்.

நாடு அரசியல் அறிவு பெற்றிருக்கும் யோக்கியதையை அறிய சாட்சியாக எலக்ஷன் கஷ்டங்களும் விவகாரங்களும் வேற்றுமை விரோதங்களும் போதாதா? என்று கேட் கின்றோம்.

சமுக முன்னேற்ற மடைந்திருப்பது என்பதின் யோக்கியதையை அறிய கேவலம் மனிதனுக்கு மனிதன் தொட்டால் பாவம்! பார்த்தால் பாவம் என்பதை ஒழிப்பதில் உள்ள கஷ்டங்களும், காங்கிரசில் இருந்த தீண்டாமை மதத் திட்டமும் மனித சமத்துவத் திட்டமும் எடுத்தெறியப்பட் டிருப்பதும், வீதியில் நடப்பதற்கும், பள்ளியில் படிப்பதற்கும், கிணற்றில் தண்ணீர் மொண்டு குடிப்பதற்கும் நம்மால் ஒப்புக் கொள்ளப்படாமல் சர்க்கார் கோர்ட்டுகளில் நீதி பெற வேண்டியிருப்பதும் பல சந்தர்ப்பங்களில் அங்கும் இந்திய அதிகாரிகளாலேயே இவைகள் மறுக்கப்படுவதும் வருணா சிரம மகாநாடுகள் நடப்பதும் வகுப்பு மகாநாடுகள் பெருகிக் கொண்டு போகவேண்டிய அவசியம் மேற்படுவதும் போதாதா என்று கேட்கின்றோம்.

நாட்டின் பொது நாகரிக முன்னேற்றத்தின் யோக்கி யதையைப்பற்றி அறிவ தற்குச் சாட்சியாக மிஸ். மேயோ போன்ற நூற்றுக்கணக்கான பேர்கள் எழுதி இருக்கும் புஸ்தகங்களும் அதை நாடக ரூபமாக அன்னிய நாடுகளில் நடத்திக் காண்பிக்கப்படுவதும், இன்னும் பலர் இப்போதும் அம்மாதிரி விஷயங்களில் பிரவேசித்து புஸ்தகமெழுதி பணம் சம்பாதிப்பதும், இவ்வளவுமல்லாமல் மதத்தின் பேரால், கோயில்களின் பேரால், சுவாமிகளின் பேரால் விபசாரப் பெண்கள் உற்பத்தியையாவது தடுக்க வேண்டும் என்கின்ற நிபந்தனை கொண்ட சட்டம் செய்வதில் மதத்திற்கு ஆபத்து வந்துவிடும் என்று மதத் தலைவர்களும் உயர்ந்த ஜாதியார் என்பவர்களும், வாதாடுவதும் அறியாக் குழந்தைகளைப் பொம்மைக் கல்யாணம் செய்து பெண்ஜாதி புருஷர்களாக்கி வீட்டிற்குள் தள்ளக் கூடாது என்பதாக சட்டம் ஏற்படுத்த பெண்மணிகள் முயற்சித்தால் அதையும் மதத் தலைவர்களும், உயர்ந்த ஜாதியார் என்பவர்களும், அரசியல் தலைவர்களும் மதத்தின் பேராலும் தேசத்தின் பேராலும், தடுப்பதும், மற்றும் ஒருவரை ஒருவர் தொடுவது பாவம் என்றும், ஒருவர் தொட்ட தண்ணீரைச் சாப்பிட்டால் நரகம் கிடைக்கு மென்றும், ஒருவர் தொழும் இடத்தில் மற்றொருவர் தொழுதால் கடவுள் அருள் போய்விடும் என்றும், ஒருவர் குளிக்கும் இடத்தில் மற்றொருவர் குளித்தால் நதியோ குளமோ கெட்டுப் போகும் என்றும் மதத்தின் பேராலும் கடவுள்கள் பேராலும் நிர்ப்பந்தப்படுத்தி வருவதும் போதாதா? என்று கேட்கின் றோம். அன்றியும் இவைகள் முழுவதும் ஒழிய வேண்டும் என்று யாராவது முயற்சித்தால் அதற்கு "நாஸ்திகம்" என்றும் தேசத்துரோகமென்றும் பெயர் கொடுத்து அம்முயற்சிகளை ஒழிக்கமுற்படுவதும் போதாதா? என்று கேட்கின்றோம்.

எனவே அரசியல் சீர்திருத்தத்தால் இந்தியர் இந்திய மக்கள் அடைந்திருக்கும் நன் மைக்கு மேல் கண்டவைகளை விட இனியும் வேறு என்ன உதாரணங்கள் வேண்டும் என்று கேட்கின்றோம். ஆதலால் இனியும் அதிகமான அரசியல் சீர்திருத்தம் கிடைத்தால் இந்தியாவுக்கு என்ன பலனைக் கொடுக்கக் கூடும், இந்தியா என்ன கதியை அடையக் கூடும், என்பவைகளை யோசித்துப் பார்த்தால் உண்மையான இந்தி யனுக்கு இப்போது என்ன வேண்டும்? அதாவது அரசியல் திருத்தமா? சமுக திருத்தமா? என்பது புலன் ஆகாமல் போகாது என்று சொல்லுவோம். எந்தக் காரணத்தைக் கொண்டும் அரசியல் திருத்தத்தால் நமது நாடு முன்னேற முடியவே முடியாது என்பது இதுவரையில் கிடைத்த அனுபவத்தினாலேயே தெரிந்து கொண்டோம். அன்றியும் எந்நாடும் முதலில் சமுக சீர்திருத்தமும் சமுக ஒற்றுமையும் பெறாமல் அரசியல் சுதந்திரம் பெற்றதாக யாரும் கூற முடியாது.

தேசியம் என்பது வேறு. அரசியல் என்பது வேறு என்பதை முதலில் உணர்ந்து கொள்ளவேண்டும். தேசியம் என்பது தேசிய மக்களின் சுயமரியாதை முன்னேற்றத்தைப் பொறுத்தது. அதைப் பலர் தப்பாக அர்த்தம் செய்து காட்டி பாமர மக்களை ஏமாற்றி உயிர் வாழ்கிறார்கள். அரசியல் என்பது யார் நம்மை ஆள்வது என்கின்ற விஷயமல்ல. நமது மக்களுக்கு எம்மாதிரி அரசியல் முறை இருக்க வேண்டும் என்பதுதான் நமது அரசியல் விஷயமாகும். இப்போதைய அரசியல் வாதிகள் எல்லாம் தங்கள் தங்கள் தனி ஆதிக்கத்திற்கும், வயிற்றுப் பிழைப்புக்கும் ஏற்ற முறைகளை வகுக்கின்றார்களே யொழிய தேசத்திற்கும், தேசத்திலுள்ள பெரும்பான்மை மக்களுக்கும் ஏற்ற முறைகளை வகுப்பதே இல்லை. அந்தப்படி வகுத்தால் அரசியலில் பிழைப்பவர்களுக்குப் பிழைப்பு போய்விடும். ஏனென்றால் நமது நாட்டில் யோக்கியமான பிழைப்புகள் மறைந்து விட்டதினால் அநேகருக்கு அரசியல் வயிற்றுப் பிழைப்பாய் போய் விட்டது. அதிலும் தேசத்தைக் காட்டிக் கொடுத்தும் தேசமக்களின் சுயமரி யாதையை விற்றும் பிழைக்க வேண்டிய நிலையில் அரசியல் பிழைப்பு அமைக் கப்பட்டு விட்டது. ஆதலால் இப்போதைய அரசியல் இயக்கங்களாலும், இப்போதைய அரசியல் பிழைப்புக்காரர்களாலும் ஏற் படும் அரசியல் சீர்திருத்தத்தால் இந்திய நாடு ஒரு நாளும் முன்னேற்ற மடைய முடியவே முடியாது என்று உறுதியாய்ச் சொல்லுவோம்.... போதிய பலனளித்தாலும், பலனளிக்காவிட்டாலும் சமுக சீர்திருத் தமே இப்போது வேண்டாற்பாலது.

சமுக சீர்திருத்தம் இல்லாத காரணமே இந்திய மக்கள் பல மதங்களாகப் பிரியவும் அவற்றுள் உயர்வு தாழ்வு, உள் சண்டைகள் ஏற்படவும், பல ஜாதிப்பிரிவுகள் உண் டாகவும், அவற்றுள் உயர்வு தாழ்வுச் சண்டைகள் ஏற்படவும், இதன் பலனாய் மக்கள் நிரந்தரமாய் ஒற்றுமைப்பட மார்க்கமில்லாமல் வேற்றுமைப்பட்டு பிரிந்து நிற்கவுமான நிலை ஏற்பட்டு இருக்கின்றது. இதை யாரும் மறைக்க முடியாது. இவற்றை உணர்ந்தே அனேக பெரியோர்கள் சமுக சீர்திருத்தத்திலேயே உழைத்து வந்திருக்கிறார்கள். தற்காலம் நமது சமுக நிலையின் பலன் தான் அரசியல் கொடுமைகளேயல்லாமல் வேறல்ல. அரசியல் சீர்திருத்தம் வந்த பிறகு சமுக சீர்திருத்தம் ஏற்பட்டு விடும் என்று சொல்பவர்கள் எல்லாம் முதல் நெம்பர் அயோக்கியர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. ஏதாவது ஒன்று இரண்டு யோக்கியர்கள் என்போர்களும் அதில் கலந்திருக் கின்றார்கள் என்று யாராவது சொல்ல வருவார்களானால் அப்படி கலந்திருப் பவர்கள் அயோக்கியர்களாயில்லா விட்டாலும் முட்டாள்களாகவாவது - கண்டிப்பாய் இருந்துதான் ஆகவேண்டும் என்று உறுதி கூறுவோம்.

சுவாமி விவேகானந்தருடைய வாக்கைப் பாருங்கள்! ஸ்ரீமான் காந்தியின் முந்திய வாக்குகளைப் பாருங்கள்! அப்படிப் பார்ப்பீர்களானால் இந்திய நாட்டின் நன்மை யைப்பற்றி இவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாய் விளங்கும்.

எனவே, இச்சமயம் நமது நாட்டிற்கு வந்துள்ள ராயல் கமிஷனை சமுக சீர்திருத்தத்திற்காகவே நாம் உபயோகித் துக் கொள்ள வேண்டும். பகிஷ்கார மானாலும், வரவேற் பானாலும், சமுக சீர்திருத்தத்திற்கும் சுயமரியாதைக்குமே நடத்த வேண்டும். எம்மை சர். ஜான் சைமன் கூப்பிட்டு உமக்கு அரசப் பிரதிநிதி பட்டம் வேண்டுமா? சூத்திரன் என்கின்ற பட்டம் நீங்க வேண் டுமா? என்று கேட்டால் சூத்திரன் என்கின்ற பட்டம் நீங்க வேண்டும் என்று சொல்லுவோம். ஏனென்றால் நமக்குக் கவர்னர் பதவியும் சட்ட மெம்பர் பதவியும் மந்திரி பதவியும் கிடைத்தும் இந்தப்பதவி பெற்றவர்களாலாவது ஜனப்பிரதிநிதிகள் சபைகளிலாவது நம்மை சூத்திரன் என்று அழைக்கும் தன்மை மாறவில்லை என்பதை உத்தேசித்துத்தான். பறையர் என்று இழிவாக பேசப்படும் குலத்தில் உதித்தவர் என்று சொல்லப்படும் ஸ்ரீமான் எம்.சி. ராஜாவுக்கு இந்திய சட்ட சபையில் உட்காரும் யோக்கியதை கிடைத்தும் தெருவில் நடக்கும் உரிமையும் சுவாமியைப் பார்த்து கும்பிடும் உரிமையும் கிடைக்கவில்லை; குளத்தில் தண்ணீர் குடிக்கும் உரிமையும் கிடைக்கவில்லை.

இனி எந்த அரசியல் பதவியும் பட்டமும் அதிகாரமும் கிடைத்தால் நாம் சூத்திரனாகாமல் மனிதனாயிருக்கக் கூடும்? ஸ்ரீமான் எம்.சி. ராஜா குளத்தில் தண்ணீர் குடிக்கக் கூடும் என்பதை யோசித்துப் பாருங்கள். "சுயராஜ்யம் கிடைத்தால் எல்லாம் சரியாய்ப் போய்விடும்" என்கின்ற பித்தலாட்டக்காரர்களை நம்புபவர்களுக்கு ஒரு வார்த்தை. அதென்னவென்றால் இந்தியா சுயராஜ்ய மடைந்திருந்த காலத்தில்தான், ராம்ராஜ்யத்தில் தான் மனு அதர்ம சாஸ்திரம் உண்டானது. ஆட்சியிலும் இருந்தது, நமக்குச் சூத்திரப்பட்டமும் சண்டாளப் பட்டமும் கிடைத்து தெருவில் நடக்க உரிமை கேட்டவர்களைக் கழுவில் ஏற்றினதும், வேதத்தையும் நீதியையும் படித்தால் நாக்கை அறுக்கவும் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவும், பார்த்தால் கண்ணைக் குத்துவதுமான, சட்டம் அமுலிலிருந்து வந்தது. இப்போது இந்திய அரசர்கள் ஆளும் ராஜ்யங்கள் அதாவது மைசூர், திருவாங்கூர், கொச்சி முதலிய தேசங்களில் தான் மனுஅதர்மம் தாண்டவமாடுகின்றது. ஆதலால் நமக்கு வேண்டியது, சமுக முன்னேற்றம், சுயமரியாதை. இதை அடையாமல் ராயல் கமிஷன் மாத்திரமல்ல மற்றும் நரகத்தில் இருப்பது என்பதையும் உபயோகித்து கொள்ள வேண்டியது மக்கள் கடமை. எனவே சுயநலக்காரர்கள் வார்த்தையையும் புரட்டர்கள் வார்த்தையை யும் நம்பி ஏமாந்துவிடக்கூடாது என்று எச்சரிக்கை செய்கின்றோம்.

- குடிஅரசு - தலையங்கம் - 26.02.1928

-  விடுதலை நாளேடு, 20.5.18

திங்கள், 7 மே, 2018

இந்தியாவில் பெண்கள் நிலை

தந்தை பெரியார்


தோழர்களே! இந்தியப் பெண்கள் நிலைமையைப் பற்றி பேசுவ தென்றால் அது மிகவும் பரிதாபகரமான விஷயமாகும். அங்குள்ள ஆண், பெண், வித்தியாசமானது முதலாளி தொழிலாளிக்கு உள்ள வித்தியாசத் தைவிட மிகக் கடினமானது. ஒரு தொழிலாளியானவன் எப்படியாவது பணம் சம்பாதித்துக் கொண்டானேயானால் அவன் மெள்ள மெள்ள முதலாளி கூட்டத் தில் கலந்து கொள்ளக் கூடியவனாகி விடுவான். ஆனால் இந்தியப் பெண்களோ அப்படியில்லை. அவர்கள் எந்த நிலையிலும் ஆண்களுக்கு அடிமையாகவும், அவர்களுடைய அனுபவப் பொரு ளாகவும், ஆண்களையே தெய்வமாகக் கருதி பூஜித்து தொண்டு செய்து கொண்டிருக்க வேண்டியவர்களாகவும் இருப்பார்கள்.

பெண் இழிவான பிறவி

இந்தியாவில் இந்து பெண்கள் இந்துமத சம்பிரதாயப்படி "பாப ஜன்மங்களாகக்" கருதப்படும். அதாவது சென்ற ஜன்மத்தில் அவர்கள் செய்த பாப காரியங்களால் இந்த ஜன்மத்தில் பெண்களாய்ப் பிறக்கிறார்கள் என்பது ஒரு சாஸ்திர விதி. ஒரு குடும்பத்தில் எத்தனை பெண் குழந்தை இருந்தாலும் அக்குடும்பத்திற்கு ஆண் குழந்தை இல்லா விட்டால் அதை பிள்ளையில்லாத குடும்பம் என்றே சொல்லுவது வழக்கம். ஒரு வீட்டில் ஒரு பெண் குழந்தை பிறந்தால் அது அவ்வீட்டுக்கு அதிருப்தி தரத்தக்க விஷயமாகவே கருதப் படும். ஆண் குழந்தை பிறந்தால் வெகு திருப்தியுடன் ஆடம்பரச் செலவு செய்வார்கள். ஏதாவது ஒருசபை அல்லது கூட்டம் யாரும் பேசாமல் நிஸப்த மாய் இருப்பதாய் இருந்தால் அதைப்பார்த்து "என்ன பெண் பிறந்த வீடு போல் இருக்கிறதே" என்று கேட்பது வழக்கம்.

எவ்வளவு பெண் குழந்தை இருந்தாலும் ஒருவனுக்கு ஆண் குழந்தை இல்லாவிட்டால் வேறு குடும்பத் தில் இருந்து ஒரு ஆண்பிள்ளையை சுவீகாரம் எடுத்துக் கொள்வார்களே ஒழிய பெண் குழந்தையை வார்சு குழந்தையாய்க் கருதுவதில்லை.

பெண்கள் எந்த நிலையிலும் சுதந்திரத்திற்கு அருகதை அற்றவர்கள் என்பதே மத சம்பிரதாயம். ஒரு பெண்ணானவள் குழந்தைப் பருவத்தில் தாய் தகப்பன் மேற்பார்வையிலும், வாலிபப்பருவத்தில் புருஷன் மேற்பார்வை யிலும், வயோதிகப் பருவத்தில் தன் மக்கள் மேற்பார்வையிலும் இருக்க வேண்டுமே ஒழிய, சுதந்திரமாய் இருக்க விடக்கூடாதென்று மனுதர்ம சாஸ் திரத்தில் குறிப் பிடப்பட்டிருக்கின்றது. இது மாத்திரமல்லாமல் பெண்களை கடவுள் பிறவியிலேயே விபசாரியாய் பிறப்பித்திருப்பதால், அவர்களை சர்வ ஜாக்கிரதையாக காவல் காக்க வேண்டும் என்று மத சாஸ்திரத்தில் எழுதப்பட்டிருக்கின்றது.

பெண்களுக்கு கல்வி கூடாது

பெண்களுக்கு கல்வி கற்பிப்பதும் மதசாஸ்திர விரோத மான காரியமாகும். இவ்வளவு நாகரீகமான காலத்திலும் இந்தியாவில் மொத்த ஜனத் தொகையில் 100-க்கு ஒருவர் வீதந்தான் பெண்கள் கல்வி கற்றிருக்கக்கூடும். அப்படிக் கற்றிருந்தாலும் அந்தக்கல்வி அவர்களது வாழ்க்கையில் யாதொரு காரியத்திற்கும் பயன்படுவதில்லை. பெண்களுக்கு கற்றுக்கொடுப்பதெல்லாம் வீட்டு சமையல் வேலை முதலிய வேலைகளைச் செய்யத்தான் கற்றுக் கொடுப்பது வழக்கம். சிறு பருவ முதலே அவர்களை ஆண் குழந்தைகளிடம் இருந்து பிரித்து வைக்கவேண்டுமென்று கருதுவதால் பொதுப்பள்ளிக் கூடங்களுக்கு அவர்களை அநேகமாய் அனுப்பவே மாட்டார்கள். மற்றபடி சிறு குழந்தைப்பருவத்தில் யாருக்காவது சங்கீதம் பாட்டு முதலியவை கற்றுக் கொடுக் கப்பட்டாலும் அவை அப்பெண்ணின் வாழ்க்கையில் சிறிதும் பயன்பட சந்தர்ப்பம் இருப்பதே கிடையாது.

கல்யாணம்

கல்யாண விஷயம் என்பது மிகவும் பரிதாபகரமானது. அநேகமாக பெண்களுக்கு 10, 12 வயதிற்குள்ளாக கல்யாணம் ஆகிவிடும். பிறந்த ஒரு வருஷத்திலிருந்தே எப்பொழுது வேண்டுமானாலும் கல்யாணம் செய்யலாம். சில வகுப்புகளில் எப்படியானாலும் 10 வயதிற்குள் கல்யாணம் செய்தாக வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தம் உண்டு.

கல்யாணம் என்பது பெண் கழுத்தில் ஆண் ஒரு கயிற்றை கட்டுவதுதான் கல்யாணம். தாலிகட்டுகின்றது என்கின்ற சடங்கு வரையிலும் பெண்ணுக்கு மாப்பிள்ளை இன்னார் என்றே அடையாளம் தெரியாது. மாப்பிள்ளைக்கும் பெண் இன்னார் என்றே அடையாளம் தெரியாது. கல்யாணம் என்பது பெண் மாப்பிள்ளை ஆகியவர்களின் பெற்றோர்கள் செய்து கொள்ளும் ஏற்பாடே ஒழிய, பெண் மாப்பிள்ளை ஆகிய இருவருடைய சம்மதம் என்பது கிடையாது. பெண்ணுக்கும் மாப் பிள்ளைக்கும் பொருத்தம் என்பது ஜோசியத்தின் மூலமும், சகுனத்தின் மூலமும் பார்ப்பதே தவிர பிரத்தியட்ச யோக்கியதை முதலிய வைகளைக் கொண்டு பார்ப்பதில்லை. 5, 10 வயதுள்ள சிறு பெண்களுக்கு 40, 50 வயதுள்ள மாப்பிள்ளையை கல்யாணம் செய்வதும் உண்டு. 10 வயது பையனுக்கு 20 வயது பெண்ணை கட்டுவதும் உண்டு. 60, 70 வயது கிழவனுக்கு சிறு பெண்களை கல்யாணம் செய்வதும் உண்டு. சென்ற வருஷத்தில்கூட 90 வயது கிழவன் ஒரு சிறு பெண்ணை கலியாணம் செய்து கொண்டான். பெண்ணின் தாய் தகப்பன்மார் யாருக்கு கல்யாணம் செய்து கொடுப்பதானாலும் பெண் சம்மதித்துதான் ஆகவேண்டும். பெண் ஏதாவது தனது அதிருப்தியை காட்டினால் அது பெண்ணின் கற்புக்கே விரோதமானது என்று சொல்லி விடுவதால் பெண் தன்னை யாருக்கு கொடுக்கப்படுவ தானாலும் சம்மதித்தாக வேண்டும்.

புருஷன் வீட்டில் பெண் நிலைமை

கல்யாணம் செய்யப்பட்ட பெண் புருஷன் வீட்டு வேலைக்கே கல்யாணம் செய்யப்பட்டதாய் கருதி புருஷன் வீட்டில் மாமனார், மாமி, நாத்தி, கொழுனன் ஆகியவர் களுக்கு வேலையாளாக இருந்து சகல வேலையையும் பார்க்கவேண்டும். சில வகுப்புகளில் பெண் புருஷனின் தகப்பன்மாருக்கும், சகோதரர்களுக்கும்கூட பெண்சாதியாய் இருக்க வேண்டும். இதற்கு சட்டத் திலும் இடமுண்டு. பெண் தாய் வீட்டிலிருந்து புருஷன் வீட்டிற்கு போகும் போது அழுதுகொண்டே போகும். பெற்றோர்கள் பெண்ணுக்கு சொல்லி அனுப்பும் புத்திமதி யெல்லாம் "புருஷன் வீட்டில் உள்ளவர்களுக்கு பணிந்து, நல்ல வேலைக்காரியாய் நடந்துகொள்" என்றுதான் சொல்லி அனுப்புவார்கள். அந்தப்பெண்ணை புருஷன் எவ்வளவு கொடுமையாய் நடத்தினாலும் கேள்வி கிடையாது. சில சமயங்களில் புருஷனுடைய பெற்றோர்கள் கொடுமைப் படுத்தினாலும் கேள்வி கிடையாது.

புருஷன் எவ்வளவு அயோக்கியனாகவும், குடிகார னாகவும், சூது, விபசாரம் செய்பவனாகவும், இருந்தாலும் பெண்ணுக்கு கேள்க்க அதிகாரம் கிடையாது. அவன் வரும்படி இல்லாமல் திரிந்தாலும் பெண் தானே கூலி வேலை செய்தாகிலும் அவனுக்கு சாப்பாடு போடவேண்டும். பெண் இவற்றையெல்லாம் தனது முன் ஜன்மத்தின் கர்ம பலனென்று எண்ணிக்கொள்ள வேண்டும்.

கல்யாண ரத்து கிடையாது

புருஷன், மேல்கொண்டு எத்தனை பெண்சாதி வேண்டுமானாலும் கல்யாணம் செய்து கொண்டு வாழலாம். எத்தனை தாசிகளை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இந்து மத கடவுள்கள் 60 ஆயிரம் பெண் களை கட்டிக் கொண்டதாகவும், 12 ஆயிரம் தாசிகள் வைத்திருந்ததாகவும் மத ஆதாரங்கள் உண்டு. எந்த நிலையிலும் கல்யாண ரத்து என்பது கிடையவே கிடையாது. பெண்ணுக்கு ஒரு தடவை கல்யாணம் ஆகிவிட்டால் சாகும்வரை அவனிடமேதான் இருந்தாக வேண்டும். புருஷன் கொடுமை சகிக்காமல் பெண் தாய் வீட்டுக்கு போய்விட்டால், புருஷன் கோர்ட்டில் தாவா செய்து டிக்ரி பெற்று பெண்ணை சுவாதீனம் செய்து கொள்ளலாம். ஆனால் பெண்ணுக்கு புருஷனிடமிருந்து ஜீவனாம்சம் பெறத்தான் பாத்தியமுண்டு. அதுவும் பெண் விபசாரி என்று புருஷன் ருஜுப்படுத்திவிட்டால் அந்த ஜீவனாம்சமும் இல்லை.

சொத்துரிமை

பெண்ணுக்கு தகப்பன் சொத்தில் சிறிதும் பங்கு கிடையாது. புருஷன் சொத்திலும் பங்கு கிடையாது.

விதவைத்தன்மை

புருஷன் இறந்துவிட்டால் பெண் விதவை என்று அழைக்கப்படுவாள். புருஷன் இறக்கும்போது அவள் எவ்வளவு செல்வத்துடன் மேன்மையாய் இருந்தாலும், கணவன் இறந்தவுடன் இவள் ஒரு அபசகுன உருவமாக ஆகி விடுவாள். நகை அணியக்கூடாது, புஷ்பம், வாசனை, நல்ல உடுப்பு ஆகியவை அணியக்கூடாது. ஒரே வேளை - அதுவும் சத்தற்ற ஆகாரந்தான் சாப்பிட வேண்டும். சில வகுப்புகளில் தலையை மொட்டையடித்து, வெள்ளை உடுப்பு அணிந்து கொண்டு வீட்டிற் குள்ளாகவே வீட்டு வேலைகள் செய்து கொண்டு இருக்க வேண்டும். விதவையைக் காணுவது அபசகுனமாகப் பாவிக்கப்படும். விதவைக்கு குடும்ப காரியங்களில் அல்லது சடங்குகளில் எவ்வித பாத்தியமும் கிடையாது. சாப்பாட்டுக்கு மாத்திரம் பெற பாத்திய முண்டு. வேறு கல்யாணம் செய்து கொள்ளவும் கூடாது. 5 அல்லது 10 வயதில் புருஷன் இறந்து போனாலும் பெண் கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது. ஆனால் புருஷன் தனது பெண்ஜாதி இறந்த 10 நாளிலேயே கல்யாணம் செய்து கொள்ளலாம்.

அவன் எவ்வளவு கிழவனாயிருந்தாலும் மறுமணம் செய்து கொள் வதில் எவ்வித ஆட்சேபணையும் கிடையாது. புருஷன், குழந்தை இல்லா விட்டாலும், ஆண் குழந்தை இல்லா விட்டாலும் வேறு கல்யாணம் செய்து கொள்ளலாம். பெண் தனது குழந்தை பருவத்தில் புருஷன் இறந்து போனாலும் வேறு கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது.

தனி வகுப்புகளில்

இவை பொது நிலைமையாகும். இனி சில தனி வகுப்புகளில் உள்ள பெண்கள் நிலைமையைப் பற்றி சில குறிப்பிடுகின்றேன். சில வகுப்புகளில் பெண்கள், ஆண்கள் கண்களுக்கே தென்படக்கூடாது உடம்பு, தலை, முகம் ஆகிய எல்லாவற்றையும் ஒரு துணியினால் போர்த்தி மூடிக் கொள்ள வேண்டும். கண்கள் மாத்திரம் தெரியும்படி ஓட்டை விட்டு பார்த்துக் கொண்டே போக வேண்டும். பெண்கள் தனியே எங்கும் போகக்கூடாது. சிறு பெண்ணை அதாவது 8, 10, 12 வயது பெண்ணை 20, 30, 40 வயதுக் காரர்களுக்கு கட்டிக் கொடுத்தாலும் கல்யாணமான அன்று இரவே படுக்கை வீட்டில் பெண்ணையும் ஆணையும் தனியாய் படுக்க வைத்து விடுவார்கள். அவன் அதை காமாகாரமாய் எப்படி மிருகத்தனமாய் வேண்டுமானாலும் சில சமயங் களில் நடத்துவான்.

சில வகுப்புகளில், மகனுக்கு கல்யாணம் செய்த பெண் மாமனாருக்கும் பெண்ஜாதியாய் இருந்தாக வேண்டும். 10 வயது பையனுக்கு 20 வயது பெண்ணை கல்யாணம் செய்து பையன் 18 வயது நிரம்புவதற்குள் பெண் ணுக்கு 2, 3 குழந்தைகள் பிறந்து விடும். அது மாமனாருக்கோ அல்லது புருஷனுடைய அண்ணனுக்கோ பிறந்ததாக இருந்தாலும் அக்குழந்தைகள் சட்டபடி பிறந்த லெஜிட்டிமேட் குழந்தைகளாகவே பாவிக்கப்படும். சில வகுப்புகளில் குடும்பத் தலைவன் மாத்திரம் ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு அவனுடைய சகோதரர்கள் உள்பட யெல்லா ருமே அப்பெண்ணை பெண்ஜாதியாய் அனுவிப்பது உண்டு.

சில வகுப்புகளில் ஒரு குடும்பத்தில் மூத்தவன் மாத்திரம்தான் கலி யாணம் செய்து கொள்ளலாம். மற்ற இளைய சகோதரர்கள் வேறு ஜாதி பெண் களை வைப்பாட்டியாக வைத்துக் கொண்டிருப்பது வழக்கம். இந்தப்படி வைப்பாட்டியாக வைத்துக் கொண்ட பெண்களுக்கு குழந்தைகள் பிறந்தால், அவற்றை தகப்பன் காப்பாற்ற வேண்டும் என்கின்ற நிபந்தனை இல்லை. தகப்பன் சொத்தில் அவைகளுக்கு பங்கும் இல்லை.

சில வகுப்புகளில் உயர்ந்த ஜாதிக்காரன் என்கின்ற பிராமணன் மற்ற வகுப்புப் பெண்களைக் கூப்பிட்டால் அவனுக்கு அவள் இணங்கியே ஆக வேண்டும்.

பிராமணன், ஒரு பெண்ணினுடைய புருஷனைக் கூப்பிட்டே அவனுடைய பெண்ஜாதி மீது தனக்கு ஆசையாய் இருப்பதாகவும், அவளை அழைத்து வரும்படியும் கேட்டால் புருஷன் உடனே அழைத்துக் கொண்டு போகவேண்டும். பெண் சம்மதிக்காவிட்டால் நிர்பந்தப்படுத்தி, அல்லது கொடுமைப்படுத்தி சம்மதிக்கச் செய்வதுமுண்டு. சில வகுப்புகளில் குரு கூப்பிட்டால் இணங்கியே ஆகவேண்டும். முன் குறிப்பிட்ட, அதாவது ஒரு குடும்பத்தில் மூத்தவன் மாத்திரம் கல்யாணம் செய்து கொள்ளலாம் மற்றவன் வேறுவகுப்பில் வைப்பாட்டி வைத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்ட வகுப்பில் பெண்கள் மீதி ஆகி அனேக பெண்கள் சாகும் வரை கல்யாணம் இல்லாமல் கன்னிப் பெண்ணாகவே இருந்து சாவது வழக்கம். இப்படிப்பட்ட பெண்களுக்கு அவர்கள் செத்த பிறகு பிணத்திற்கு ஒருவனைக் கொண்டு தாலிகட்டச் செய்து பிறகு நெருப்பில் வைத்துக் கொளுத்தி விடுவது வழக்கம்.

சில வகுப்புகளில் கடவுளுக்கு பெண்ஜாதி ஆகிறது என்று கோயிலில் வைத்து கடவுளை கல்யாணம் செய்து கொண்டதாக ஏற்பாடு செய்து பொது விபசாரியாய் வாழச் செய்வது உண்டு. இவர்களுக்குப்பெயர் தேவதாசி. ஒரு கல்யாணமான பெண்ணுடன் மற்றொரு ஆண் சம்பந்தம் வைத்துக் கொண்டதாகத் தெரிந்தால் அந்த ஆண் சட்டப்படி தண்டனைக்குள்ளா வான். பெண்ணை ஜாதியை விட்டு தள்ளி வைத்துவிடுவதுமுண்டு.

ஒரு பெண் விபசாரியாய் ஆகிவிட்டால், அல்லது தேவதாசியாக இருந்தால் சொத்து வைத்துக் கொண்டு சுதந்திரமாய் இருக்கலாம். இல்லா விட்டால் சொத்து உரிமை இல்லை, சுதந்திரமும் இல்லை. இந்து விதவைகள் நிலை மையைப் பற்றியும், அவர்கள் சம்பந்தமான சட்டங்களைப் பற்றியும் விபரமாய் மற்றொருசமயம் நேரிடும்போது பேசு கிறேன்.

குறிப்பு: அய்ரோப்பாவில் பெண்கள் கூட்டத்தில் தோழர் பெரியார்,  இந்தியப் பெண்கள் நிலையைப் பற்றி பேசியது,

'குடி அரசு' - சொற்பொழிவு - 05.02.1933

பிராமணன், ஒரு பெண்ணினுடைய புருஷனைக் கூப்பிட்டே அவனுடைய பெண்ஜாதி மீது தனக்கு ஆசையாய் இருப்பதாகவும், அவளை அழைத்து வரும்படியும் கேட்டால் புருஷன் உடனே அழைத்துக் கொண்டு போகவேண்டும். பெண் சம்மதிக்காவிட்டால் நிர்ப்பந்தப்படுத்தி, அல்லது கொடுமைப்படுத்தி சம்மதிக்கச் செய்வதுமுண்டு.     


- விடுதலை நாளேடு, 6.5.18