புதன், 30 ஆகஸ்ட், 2017

கற்பிழந்த மாரியம்மா!



நமது நாட்டில் நம்மால் வணங்கப்படும் கடவுள்கள் எல்லாமுமே ஆரியக் கடவுள்கள் என்பதைப் பற்றிய உண்மையில் யாருக்குமே மறுப்பு இருக்காது.

இந்தக் கடவுள்கள் ஆரியக் கடவுள்கள் என்பது மாத்திரமல்லாமல், இக்கடவுள்கள் _ ஆண் பெண் கடவுள்கள், அவர்களது மனைவி மக்கள், அவதாரங்கள், மூர்த்தி கரங்கள் யாவுமே ஒழுக்கக் கேடு, நாணயக் கேடு, கற்புக் கேடு ஆகிய இழிவான குற்றங்களுக்கு உட்பட்டவையாகவே இருந்து வருகின்றன.

இந்த விஷயங்களில் ஆரியர்களுக்கு மானம், வெட்கம், இழிவு இல்லையானதால், அவர்கள் அந்த நடத்தைகளையே நமக்கு உற்சவங்களாகக் கொண்டாடும்படியும் செய்து விட்டார்கள்.
இந்தப்படியான கடவுள் உற்சவங்கள், பண்டிகைகள் ஆகியவைகளைப் பற்றி ‘குடிஅரசு’விலும், ‘விடுதலை’யிலும் மற்றும் புராண ஆபாசம், கடவுள் நடத்தைகள் முதலிய புத்தகங்களிலும் விளக்கி வருகிறோம்.

இப்போது இந்தக் கோடைக்காலப் பருவத்தில் தமிழ்நாட்டில் எங்கும் மாரியம்மன் பண்டிகை என்பதாக ஒரு பண்டிகை நடந்து வருகிறது. மாரியம்மன் கடவுள் _ கிராம தேவதை என்று பெயர் இருந்தாலும், அது ஆரியக் கதைப்படி, ஜமதக்கினி முனிவரின் மனைவி ரேணுகா தேவி, மாரி ஆகிவிட்டாள். இந்த மாரி இல்லாத கிராமமே தமிழ்நாட்டில் இல்லை. மாரி, கிராம தேவதையாதலால், பாமர மக்கள் எல்லோருக்கும் கடவுளாகி விட்டாள்.

இந்த இரேணுகை என்னும் மாரியம்மனின் சரித்திரம் மிகவும் இழிவாகக் கருதத் தக்கதாகும்.
இந்த இரேணுகை என்னும் மாரி ஜமதக்கினி முனிவரின் மனைவி. அவள் ஒரு அன்னிய புருஷன்மீது இச்சைப்பட்டு _ அதாவது, அவள் நீராடக் கங்கைக்குச் செல்லும்போது, எதிர்ப்பட்ட சித்ரசேனனைக் கண்டு மோகித்துக் கற்புக் கெட்டுவிட்டாள். அதை அறிந்த கணவன் ஜமதக்கினி அவளைக் கொன்றுவிடும்படி தன் மகன் பரசுராமனுக்குக் கட்டளையிட்டார். பரசுராமன், இரேணுகையை வேறு யார் தடுத்தும் கேளாமல் கொன்று விட்டான். கொன்றுவிட்டு வந்து, தாயைக் கொன்று விட்டோமே என்று துக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் _ தகப்பன் ஜமதக்கினி அதை அறிந்து மகனுக்காக மாரியைப் பிழைப்பிக்க இசைந்து, மந்திர நீர் தந்து எழுப்பி வரும்படி மகனை அனுப்பினார்.

தாயைப் பிழைப்பிக்கச் சென்ற பரசுராமன் கொலைக் களத்துக்குச் சென்று தாயின் தலையை எடுத்து முண்டத்துடன் ஒட்டவைக்கையில் _ கொலைக் களத்தில் பல முண்டங்கள் வெட்டுப்பட்டுக் கிடந்ததால் அடையாளம் சரிவரத் தெரிந்து கொள்ளாமல், ஏதோ ஒரு முண்டமாகக் கிடந்த உடலை எடுத்துத் தலையுடன் ஒட்டவைத்து அழைத்து வந்து தகப்பனிடம் விட்டான். கணவன் அவளைப் பார்த்து, ‘நீ இங்கு இருக்க வேண்டாம்; கிராமங்களுக்குப் போய், அங்கு வாசம் செய்து, கிராம மக்களுக்கு நோய் வந்தால் பரிகாரம் செய்து கொண்டு இரு’ என்று 
கூறி அனுப்பி விட்டார்.

அதுமுதல், மாரி கிராமங்களில் வசிக்கத் தொடங்கினாள். கிராமவாசிகள் இந்த விஷயமறிந்து மாரியம்மன் தலையை மாத்திரம் வணங்கிப் பயன் அடைய முன்வந்து, தங்கள் ஊர்களில் மாரிக்குக் கோயில் கட்டி _ மாரியின் தலையை மாத்திரம் வைத்து வணங்கி வருகிறார்கள். இது ஒரு புராணம்.

மற்றும் சிவ புராணத்தில், அந்த மாரி, கார்த்தவீரியனை மோகித்துச் சாபமடைந்தாள் என்று காணப்படுகிறது.

மற்றொரு புராணத்தில், அவள் புருஷன் ஜமதக்கினி கொல்லப்பட்டதால் அவள் அவனுடன் உடன்கட்டை ஏறினாள். இதை இந்திரன் ஒப்புக்கொள்ளாமல் மழை பெய்யச் செய்ததும் அவளது உடல் அரை வேக்காட்டுடன் நின்றுவிட்டது. அதனால் அவள் எழுந்து பக்கத்தில் உள்ள பஞ்சமத் தெருவில் நிர்வாணத்தோடு வேப்பிலையால் மானத்தை மறைத்துக்கொண்டு ஓடினாள். அதைக் கண்ட பஞ்சமர்கள் பச்சை மாவும், பழமும், இளநீரும் கொடுத்து உபசரித்தார்கள்; ஒரு வண்ணாத்தி சேலை கொடுத்து ஆதரித்தாள். இந்த அய்தீகம்தான் இன்று மாரியம்மன் பூசையாக நடத்தப்படுகிறது. பூசை, உருவம், உணவு முதலியவை எப்படி இருந்தாலும் _ இந்த மாரியம்மன் மீது இரண்டு விபச்சாரக் குற்றங்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன.  

1.    சித்திரசேனனை மோகித்துக் கற்பு இழந்தது;

2.    கார்த்தவீரியனை இச்சித்துக் கற்பு இழந்தது.

இரண்டிலும் புருஷன் ஜமதக்கினியால் கண்டுபிடிக்கப்பட்டு, அவள் தண்டிக்கப்-பட்டிருக்கிறாள்.
இதற்குப் புராண ஆதாரங்கள் இருக்கின்றன.

நமது கடவுள் நம்பிக்கையிலும், கடவுளை வணங்குவதிலும் நமக்குள் எவ்வளவு மடமை இருந்தாலும் _ நாம் வணங்கும் கடவுள்களை இவ்வளவு மோசமான _ நாணயம், ஒழுக்கம், நாகரிகம் என்பவை இல்லாமல், இவை யாவும் காட்டுமிராண்டித்தனமாக இருப்பது பற்றிக் கவலைப்பட வேண்டாமா? என்றுதான் கவலைப்படுகிறேன்.

(‘விடுதலை’ - கட்டுரை - 25.3.1960)

- தந்தை பெரியார்

-உண்மை இதழ்,1-15.8.17

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

அரசியல்வாதிகள் நடுக்கம்



தந்தை பெரியார்

மனித சமூகத்தில் பிராமணன் என்று  ஒரு ஜாதி மேலாக இருந்து பாடுபடாமல் வயிறு வளர்க்கவும், சண்டாளன் என்று ஒரு ஜாதி கீழாக இருந்து பாடுபட்டு பாடுபட்டு இராப் பட்டினியாய் இருக்கவுமான காரியங்கள் கூடாது என்றால் சங்கராச்சாரி என்னும் மதத்தலைவன் அது பிறவியிலேயே ஏற்பட்டதென்றும் அதற்கு ஆதாரம் பிராமணனுடைய ரத்தத்திலும் சண்டாளனுடைய ரத்தத்திலும் இருக்கின்றது என்றும் சொல்வாரானால் மிஸ். மேயோ நூற்றுக்கணக்காய் ஆயிரக்கணக்காய் இந்த நாட்டில் பிறக்காததும் பிறந்த பெருமையை அடைய முடியாமல் போனதும் இந்தியாவுக்குப் பெருத்த நஷ்டமல்லவா என்று கேட்கின்றோம்.

மிஸ். மேயோ அம்மையார் இந்தியாவிற்கு வரப்போகின்றார் என்கின்ற சேதி எட்டியவுடன் இந்திய அரசியல்வாதி, தேசியவாதி, சீர்திருத்தவாதி என்கின்ற கூட்டங்களுக்குப் புலியைக்கண்ட ஆட்டுக்கூட்டங்கள் போல் நடுக்கங்கள் ஏற்பட்டுவிட்டதைப் பத்திரிகைகளில் காணலாம்.

மிஸ். மேயோ யார்? அவர் புலிக்குச் சமமானவரா? அந்தம்மையாரைக் கண்டால் இந்தியர்கள் நடுங்க வேண்டியதுதானா என்பவைகளை முதலில் யோசிப்போம்.

மிஸ். மேயோ ஒரு ஆங்கில மாது. அவர் 4, 5 வருடங்களுக்குமுன்  இந்தியாவுக்கு வந்து இந்துக்களின் நாகரிகம், பழக்க வழக்கம், மதச்சம்பிரதாயம், வாழ்க்கை முறை முதலியவைகளைப் பற்றி நன்றாய் அனுபவ ஆதாரங்களுடனும், தக்க சாட்சியங்களுடனும் ஆராய்ந்து விசாரித்து அறிந்த உண்மைகளை ஒரு சிறிய புத்தக ரூபமாக்கி இந்தியத்தாய் என்னும் பேரால் உலக மக்களுக்கு வெளியிட்டவர்.

அந்தம்மையார் வெளியிட்ட உண்மைகளை இதுவரை எவரும் அடியோடு பொய் என்று  யாரும் மறுத்துக்கூற முன்வரவில்லை. அரசியல் பிழைப்புவாதிகளும் அரசியல் பிழைப்புப் பத்திரிகைகளும் அம்மையைத் தூற்றின. சில கண்டன உரைகள் பகர்ந்தன. ஆனால் அவை பொய் என்று கூறயெவருக்கும் தைரியம் வரவில்லை.

தோழர் காந்தியார் அப்புத்தகம் இந்திய சீர்திருத்தவாதிகளுக்குள் என்றும் நிலைத்திருக்க வேண்டியதொரு ஆதாரம் என்றார்.

தோழர் ரவீந்தரநாத் டாக்கூர் மத சம்பந்தமான காரியங்களுக்கு இந்தியர் மாட்டுச் சாணியைச் சிறிது சாப்பிடுகின்றார்களே ஒழிய வேறில்லை என்றார்.

தோழர் லாலாலஜபதிராய் அவர்கள் அமெரிக்கா மாத்திரம் வாழுகின்றதா என்று சொன்னார். தென்னாட்டு தேசபக்தர்களுக்குத் தலைவராய் வாய்த்த தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் வேதம், சாஸ்திரம் ஆகியவைகள்தான் எல்லோரும் படிக்கக்கூடாது என்கின்ற நிர்பந்தம் இருந்து வருகின்றதே ஒழிய மற்றப்படி ஒன்றுமே படிக்கக்கூடாது என்கின்ற நிர்பந்தம் இல்லை என்று சொன்னார்.

மகாகாருண்ணியமும், நீதியும், நாகரிக ஞானமும், பகுத்தறிவும் கொண்டவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பிரிட்டிஷ் அரசாங்கமோ குழந்தைகளைக் கல்யாணம் செய்யக் கூடாது என்ற சட்டம் செய்ய ஏற்பாடு செய்தாகி விட்டது என்று உலகத்துக்குத் தெரிவித்து விட்டார்களே ஒழிய அதைச் சரியானபடி நீதி செலுத்தாமலே இருந்து வருகிறார்கள்.

மேயோ அம்மையார் இந்தியாவுக்கு வந்து இந்திய மக்கள் அவிவிவேகத்தையும், காட்டுமிராண்டித்தனத்தையும், மிருகத்தனத்தையும் வெட்டவெளிச்சமாய் ஆதாரங் களோடு விளக்கிக்காட்டி விட்டுப்போய் இன்றைக்கு 4, 5 வருஷங்களாகியும் அவை வெளியான புத்தகங்கள் பல பாஷைகளிலும் பதினாயிரக்கணக்காகச் செலவாகியும் நாளதுவரை அவ்வாபாசமானதும், காட்டுமிராண்டித்தனமானதுமான விஷயங்களில் 100க்கு 10 வீதம்கூட அரசியல்வாதிகளாலோ, தேசியவாதிகளாலோ, சீர்திருத்தவாதி களாலோ, அரசாங்கத்தாராலோ ஒழிக்க முடியவில்லை என்றால் இந்தப் பாழாய்ப்போன இந்திய நாட்டுக்கு ஒரு மேயோ - அதுவும் 5 வருஷத்திற்கு ஒரு தடவை வரும்படியான மேயோ போருமா? என்று கேட்கின்றோம்.

குழந்தை மணம் இன்றும் 4 வயது பெண் குழந்தைக்கு 25 வயது தடி ஆணை மணம் செய்கின்றார்கள். உள்நாட்டில் அந்த சட்டத்தை மீறினால் கேள்வியே இல்லை. வெளிநாட்டுக்குப் போய் அங்கே மணம் செய்து கொண்டு வந்துவிட்டால் பேச்சே இல்லை என்கின்ற முறையில் இன்று நம் நாட்டில் குழந்தை மணம் தடுப்பு இருந்து வருகின்றது. இதைக் கண்டு நம் தேசபக்தர்கள் வெட்கமடைய வேண்டியிருக்க மேலும் மிஸ். மேயோவைக் கண்டு எங்கள் யோக்கியதையைப் பற்றி நீ காகிதத்தில் எழுதினது போராதம்மா தயவு செய்து கல்லில் எழுதிவையம்மா என்று கேட்க வேண்டாமா என்று கேட்கின்றோம்.

கல்வி விஷயத்தைப் பற்றி இந்தியாவில் வெள்ளைக்கார நாகரிக அரசாங்கம் வந்து 200 வருஷமாகிய இன்றும் 100-க்கு 8 பெயரே அதுவும் மேல்ஜாதிக்காரர்களுக்குள்ளாகவே கல்வி பெரிதும் நின்றுவிடும் மாதிரியான முறையில் இருக்குமானால் மிஸ். மேயோவை மேளதாளம் வைத்து அழைத்து ஊர்வலம் செய்து வரவேற்பு வாசித்து நமது அரசாங்க ஆட்சியின் யோக்கியதையை உலகெல்லாம் பரப்பும்படி காணிக்கை வைத்துக் கேட்டுக்கொள்ள வேண்டாமா என்று கேட்கின்றோம்.

மனிதத்தன்மை விஷயத்தில் - ஆலயங்களுக்கு மக்கள் செல்லும் விஷயத்தில் இன்ன ஜாதியார் இவ்வளவு இன்ன ஜாதியார் இவ்வளவு தூரம்தான் போகலாம். இன்ன ஜாதியார் போகவே கூடாது என்கின்ற காட்டுமிராண்டி வழக்கத்தை நிறுத்த சட்டம் செய்யவேண்டும் என்று சொன்னால் சர்க்காரார் அது வெகுஜனங்களுக்கு இஷ்டமில்லை. ஆனதால் அதை எதிர்க்கிறோம் என்று சொல்லுவதும், காங்கிரசுக்காரர்கள் வெகுஜனங்களுக்கு விரோதமான காரியத்தைச் செய்யக்கூடாது என்று சொல்வதும், வைதீகர்கள் மதத்தில் அரசாங்கமோ, பொதுஜனங்களோ, காங்கிரசோ, சீர்திருத்தவாதிகளோ பிரவேசிக்கக்கூடாது என்று சொல்லுவதும், கடைசியாக அச்சட்டம் வாபீசு வாங்கிகொள்ள நேர்ந்ததும், அதுவும் காந்தியாரும் ராஜகோபாலாச்சாரியாரும் செய்த துரோகத்தினால் இச்சட்டம் வாபீசு வாங்கிக்கொள்ள நேர்ந்தது என்று சொல்ல நேர்ந்தது என்றால் மிஸ். மேயோ அம்மையாரின் விஜயம் இந்நாட்டுக்குஒரு தடவை அவசியமா, பலப்பல ஆயிரம் தடவை அவசியமா என்று கேட்கின்றோம்.
ஜீவகாருண்ய விஷயத்தில ஆடுமாடுகளை உயிருடன் கட்டிப்போட்டு அதன் வாயையும், மூக்கையும் பிடித்து அமிழ்த்திக் கொண்டு வெதரை நசுக்கி சரீரத்தில் சதை சதையாய் அறுத்து மாமிசத்தை எடுப்பதும், அந்த விதமான கைங்கரியத்துக்கு மதகைங்கரியம் என்ற சொல்லுவதுடன் தான் சித்திரவதைக் கொலையைப் பற்றி வேறுயாருக்கும் பேச உரிமையில்லை என்று சொல்லுவதுமான காரியங்கள் நேற்றும், இன்றும், நாளையும், முக்காலத்தலும் நடந்து வரக்கூடியதாய் இருக்கும்போது மிஸ். மேயோவை இந்தியாவுக்கு வரும்படி இதுவரை அழைக்காமல் இருந்தது இந்நாட்டு மக்கள் அவிவிவேகமல்லவா என்று கேட்கின்றோம்.

மனித சமுகத்தில் பிராமணன் என்று  ஒரு ஜாதி மேலாக இருந்து பாடுபடாமல் வயிறு வளர்க்கவும், சண்டாளன் என்று ஒரு ஜாதி கீழாக இருந்து பாடுபட்டு பாடுபட்டு இராப் பட்டினியாய் இருக்கவுமான காரியங்கள் கூடாது என்றால் சங்கராச்சாரி என்னும் மதத்தலைவன் அது பிறவியிலேயே ஏற்பட்டதென்றும் அதற்கு ஆதாரம் பிராமணனுடைய ரத்தத்திலும் சண்டாளனுடைய ரத்தத்திலும் இருக்கின்றது என்றும் சொல்வாரானால் மிஸ். மேயோ நூற்றுக்கணக்காய் ஆயிரக்கணக்காய் இந்த நாட்டில் பிறக்காததும் பிறந்த பெருமையை அடைய முடியாமல் போனதும் இந்தியாவுக்குப் பெருத்த நஷ்டமல்லவா என்று கேட்கின்றோம்.

இப்படிப்பட்ட, குறைகள் கொடுமைகள், அவிவிவேகத்தனங்கள், மூர்க்கத்தனங்கள், காட்டுமிராண்டித்தனங்கள் இன்னமும் வண்டிவண்டியாய் இருக்க அவைகளைப்பற்றி சரியாய் பேசாமல் அவைகளை ஒழிக்க யோக்கியமாய் முயற்சிக்காமல் மிஸ்.மேயோ வருகிறாள், மீண்டும் மிஸ்.மேயோ, குப்பைக்காரி மேயோ வருகை என்றெல்லாம் தலைப்புக் கொடுத்து மேயோவை வைவதென்றால் இக்கூட்டத்தாருக்கு மனிதத் தன்மையோ, சுயமரியாதை உணர்ச்சியோ இருக்கின்றதா என்று கேட்கின்றோம்.

மிஸ். மேயோ அம்மையாரின் இந்திய விஜயத்துக்கு அரசாங்கத்தார் உதவி புரிந்ததாகவும் உள்உளவாய் இருந்ததாகவும் இனியும் அப்படிச் செய்வார்களா என்றும், இந்திய சட்டசபையில் கேள்விகள் கேட்கப்பட்டதாகப் பார்த்தோம். இதற்கு அரசாங்கம் வெண்டைக்காய் பதில் சொன்னதையும் பார்த்தோம்.

அரசாங்கத்தார் மேயோ அம்மையாருக்கு உதவி செய்ததற்காகவும், உள்உளவாய் இருந்ததற்காகவும் உண்மையான தேசியவாதிகள் மகிழ்ச்சி அடைய வேண்டுமே யொழிய அதற்காக குற்றம் கூறக்கூடாது என்பதே நமதபிப்பிராயம். பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவுக்கு வந்து 200-வருஷமான பிறகும், இந்திய மக்களது உழைப்பின் பயனை-அவர்களது ரத்தத்தைக் காய்ச்சி இறக்கிய சத்தை சமாதானமும் நீதியுமான அரசாட்சி என்னும் பெயரால் மாதம் 1க்கு 1000, 2000, 5000, 10000, 20000, 30000 ரூபாய்கள் என்பதாக லட்சக்கணக்கான பிரிட்டிஷார் அனுபவித்தும் இன்னமும் இந்தியா மிருகப் பிராயத்திலேயே இருந்து வருகின்றது என்றால் உலகோர் முன் இந்தியர்களுக்கு அவமானமா? பிரிட்டிஷ் ஆட்சி முறைக்கு அவமானமா என்பதை நன்றாய் நடு நிலைமையில் இருந்து பொதுநோக்குடன் ஆராய்ந்து பார்க்கும்படி தேசியத் திருக்கூட்டத்தாருக்கு ஞாபகப்படுத்துகிறோம்.

தோழர் காந்தி, ராஜகோபாலாச்சாரியார் போன்றவர்களே பெரும்பான்மையான ஜன அபிப்பிராயத்துக்கு விரோதமான காரியங்களைச் செய்யக்கூடாது என்றும் மேல் ஜாதிக்காரர்கள் சம்மதமில்லாமல் மத சம்மந்தமான பழக்க வழக்கங்களைப் பற்றி பேசக் கூடாது-தொடக்கூடாது என்றும் சொல்லி விடுவார்களேயானால் மேயோ போன்ற - அல்லாவிட்டால் லெனின் போன்ற - கமால் பாட்சா போன்ற அமானுல்கான் போன்ற வெளிநாட்டார்களால்தான் மதசம்பந்தமான ஆபாசங்களும் - கொடுமைகளும் குப்பைகளும் சாக்கடைகளும் ஒழிந்து இந்திய நாடு மனிதத் தன்மையை அடைய முடியுமே தவிர வேறில்லை என்றுதான் எண்ண வேண்டியிருக்கின்றது.

ஆகவே, பிரிட்டிஷ் அரசாங்கத்தார் இந்த மாதிரியான கூச்சல்களுக்குப் பயப்படாமல் மேயோ அம்மையாரை மறுமுறை அழைத்து வந்து இங்கு சமுகத்தின் பேராலும் மதத்தின் பேராலும் ஆட்சியின் பேராலும் இருந்து வரும் கொடுமைகளையும் குற்றங்களையும் உண்மையாய் அறிய அவகாசம் கொடுத்து அவைகள் சீக்கிரத்தில் ஒழிய உதவி செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகின்றோம்.

- 'பகுத்தறிவு', கட்டுரை - 02.09.1934

-விடுதலை,20.8.17

திங்கள், 21 ஆகஸ்ட், 2017

தந்தை பெரியார் நினைவும் கொள்கையும் இருக்கும்வரை பா.ஜ.க. இங்கு தலை எடுக்க முடியாது, பிராமணியம் ஆதிக்கம் செலுத்த முடியாது


மேனாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் சங்கநாதம்



பொன்னமராவதி, ஆக. 21- தந்தை பெரியார் நினைவும், கொள்கை யும்  தமிழ்நாட்டில் இருக்கும் வரை பா.ஜ.க.வோ, பிராமணி யமோ தமிழ்நாட்டில் தலை தூக்க முடியாது என்று மேனாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம் பரம் சங்கநாதம் செய்தார்.

13.8.2017 அன்று பொன்ன மராவதியில் மேனாள் நிதிய மைச்சரும், காங்கிரசு கட்சியின் மூத்த தலைவருமாகிய ப.சிதம் பரம் பேசுகையில் குறிப்பிட்ட தாவது:

பாரதிய ஜனதா கட்சியால் தமிழ்நாட்டில் வேரூன்றவே முடியாது. இந்த மண்ணிலே இந்துத்துவாவுக்கு இடம் கிடையாது. இந்த மண்ணிலே சடங்கு சாத்திரங்களுக்கு இடம் கிடையாது. இந்த மண்ணிலே மீண்டும் பிராமணிய ஆதிக்கம் தலைதூக்க முடியாது. இந்த மண்ணிலே மீண்டும் மேல் ஜாதி, உயர் ஜாதி என்று தங் களை நினைத்துக் கொண்டிருப் பவர்களுடைய ஆதிக்கத்துக்கு வழிவகுத்துத் தரமுடியாது. பாரதிய ஜனதா கட்சி 60 ஆண்டுகளுக்கு முன்னால், 70 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் நாட்டை ஆட்டிப்படைத்த சக்திகளுடைய மறு உருவம்.

தந்தை பெரியாருடைய நினைவு இருக்கும்வரை, தந்தை பெரியாரை தமிழ்ச்சமுதாயம் தந்தை பெரியார் என்று ஏற் றுக்கொண்டிருக்கும்வரை பாரதீய ஜனதா கட்சிக்கு தமி ழகத்திலே ஓர் இடம்கூட கிடைக்கப் போவதில்லை.

தந்தை பெரியார் நமக்கு சுயமரியாதையைக் கற்றுத் தந்தார். தந்தை பெரியார் உயர் ஜாதி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடினார். தந்தை பெரியார் பின் தங்கிய மக்களுக்கும், தலித் மக்களுக்கும் போராடி யவர்.

தந்தை பெரியார் பெண் விடுதலைக்காகப் போராடிய வர். தந்தை பெரியார் சடங்கு சாத்திரங்களை எதிர்த்தவர். 60, 70 ஆண்டுகளாக அந்த மரபு தமிழகத்திலே நீங்காத மரபாக அமைந்திருக்கிறது.

காங்கிரசு கட்சி மாறுபட்ட அரசியல் கட்சியாக இருந்தா லும், தந்தைபெரியாருடைய வழியிலேதான்,  பெருந்தலை வர் காமராஜர் தமிழகத்தை நடத்திச் சென்றார்.

பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தினுடைய முதலமைச் சராக இருந்த காலத்திலே, மீண்டும் பிராமணியம் தலை தூக்கவில்லை. மீண்டும் சடங்கு சாத்திரங்கள் தலைதூக்கவில்லை.

தமிழகத்திலே பின்தங்கிய மக்கள், தலித் மக்கள், பெண் கள் கல்வி மேம்பாடு அனைத் துக்கும் அடித்தளம் நாட்டியவர் பெருந்தலைவர் காமராஜர் அவர் கள் என்று மேனாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.

-விடுதலை,21.8.17

சனி, 19 ஆகஸ்ட், 2017

உலகுக்கே உகந்த தத்துவம் சுயமரியாட்தை!

சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம் உலகம் ஒப்புக் கொண்டதேயாகும். என்னவென்றால், காரண காரிய தத்துவ உணர்ச்சியையும் உலகம் ஏற்றுக்கொண்டு விட்டது. மனித வாழ்வின் ஒவ்வொரு எண்ணத்திற்கும் தோற்றத்திற்கும் காரண காரியத்தை மனித ஜீவன் தேடுகின்றது; இயற்கையையே ஆராயத் தலைப்பட்டாய் விட்டது. விவரம் தெரியாத வாழ்வை அடிமை வாழ்வு என்று கருதுகிறது. சுயமரியாதை இயக்கத்தின் தத்துவமே அதுதான். எந்தக் காரியமானாலும் காரண காரியமறிந்து செய்; சரியா, தப்பா என்பதை அந்தக் காரண காரிய அறிவிற்கும், ஆராய்ச்சிக்கும் விட்டுவிட்டு; எந்த நிர்ப்பந்த சமயத்திலும் அதன் முடிவுக்கு மரியாதை கொடு என்கிறது. அதுதான் சுயமரியாதை. மனிதன் சரியென்று கருதிய எண்ணங்களுக்கும் முடிவுகளுக்கும் மரியாதை கொடுப்பது தான் சுதந்திரமாகும். சுதந்திரத்திற்கும் சுயமரியாதைக்கும் அதிக தூரமில்லை.

இன்றைய சுதந்திரவாதிகள் சுயமரியாதையை அலட்சியம் செய்கிறார்கள். இது உண்மையிலேயே மூடவாதம் என்று சொல்வோம். சுயமரியாதை அற்றவர்களுக்கு சுதந்திரம் பலனளிக்காது என்பதுதான் சரியான வார்த்தையாகும்.

சுயமரியாதை இயக்கத்திற்குத்தான் சுதந்திர உணர்ச்சி உண்டு. சுயமரியாதைக்காரனின் சுதந்திரம் இருக்கத் தக்கதாகவே இருக்கும். சுதந்திரக்காரனின் சுதந்திரமோ அவனுக்கே புரியாது. புரிந்தாலும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பொறுத்ததாக மாத்திரம் இருக்கும்.

உதாரணமாக, இன்று அரசியல் சுதந்திரத்தை எடுத்துக் கொள்வோம். இன்று அரசியல் உலகில் இருவர் பெயர் அடிபடுகின்றது. ஒன்று தோழர் காந்தியார் பெயர்; மற்றொன்று தோழர் ஜவஹர்லால் பெயர்.

காந்தியார் இந்துமதம் புனருத்தாரணம் ஆவதும், பழைய முறைகள் உயிர்ப்பிக்கப் படுவதும் சுதந்திரம் என்கிறார். ஜவஹர்லால் பண்டிதர் இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுபடுவது சுதந்திரம் என்கிறார். இவர்கள் இருவரும் கோரும் சுதந்திரங்களில் எது வந்ததானாலும் அல்லது இரண்டுமே வந்துவிட்டாலும் மனித சமூக வாழ்க்கையில் உள்ள துன்பங்களில் எது ஒழிக்கப்பட்டுவிடும் என்று ஆராய்ந்து பார்த்தால், சுதந்திரம் சுயமரியாதை அளிக்காது என்பது விளங்கும். எவ்வளவு சுதந்திரம் ஏற்பட்டாலும் சுயமரியாதைக்குத் தேவை இருந்து கொண்டுதான் இருக்கும்.

முழு ராஜ்யமுள்ள பிரிட்டிஷ் தேசத்தில் குடிகளுக்கு ஏன்? ராஜாவுக்கே தன் இஷ்டப்படி கல்யாணம் செய்து கொள்ள சுதந்திரம் இல்லாமல் ராஜ்யத்தைத் துறக்க வேண்டியதாகி விட்டது என்றால் அதுவும் ஜனப் பிரதிநிதிகளால் - அதுவும் பொது ஜனங்களுடைய விருப்பம், ஆமோதிப்பு என்பவைகளின் பேரால் என்றால் ஜவஹர்லால் சுயராஜ்யத்தில் காந்தியார் சுதந்திரத்தில் மனிதனுக்குக் கடுகளவாவது சுயமரியாதைக்கு இடமுண்டா என்று கேட்கிறோம்.

அப்படிக்கில்லாமல் சுயமரியாதை பெற்ற (சுய மரியாதைக்குப் பிறகு) சுதந்திரமாய் இருந்தால், காதலுக்கு பிரிட்டிஷ் அரசருக்கு ஏற்பட்டதுபோல் விலங்கு இருக்குமா? என்று கேட்கிறேன். சுயமரியாதை என்பதற்கு நிகர் உலகில் மனிதனுக்கு உயிரைத் தவிர வேறு ஒன்றுமே இல்லையென்று சொல்ல வேண்டும்.

தமிழ் நாட்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றி வெகு சாதாரண முறையில் எவ்வளவோ எதிர்ப்புக்கிடையில் நேரப் போக்குப் பிரசாரமாக நடந்து வந்திருந்த போதிலும் அதற்கு எத்தனையோ இடையூறுகள் பல கூட்டங்களில் இருந்தது ஏன்? சுயமரியாதை இயக்கம் தமிழ்நாடு, மலையாள நாடு, ஆந்திர நாடு ஆகியவைகளை சமுதாய இயலில் ஒரு கலக்கு கலக்கி விட்டிருக்கிறது. மத இயலிலும் மகாபண்டிதர்கள், ஞானிகள், ஆச்சாரியார்கள் என்பவர்களையெல்லாம் மாறிக் கொள்ளச் செய்திருக்கிறது; தோழர் காந்தியாரைப் பல கரணங்கள் போடச் செய்துவிட்டது.

பெண்கள் உலகில் உண்மையான சுதந்திர வேட்கையைக் கிளப்பிவிட்டது. கீழ்சாதி, மேல்சாதி என்பவைகள் ஓடுவதற்கு ஓட்டத்தில் ஒன்றுக்கொன்று பந்தயம் போடுகின்றன. கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் பைபிளுக்கும், குர்-ஆனுக்கும் புதிய வியாக்யானங்கள் செய்யத் தலைப்பட்டு விட்டனர். காங்கிரஸ் தொல்லை இல்லாமல் இருந்திருக்குமானால் இந்தியா பூராவையும் சுயமரியாதை இயக்கம் இன்னும் அதிகமாய் கலக்கி இருக்கும் என்பதோடு, பார்ப்பனீயம் அடியோடு மாண்டிருக்கும் என்றே சொல்லலாம்.

இந்தியா முழுமைக்கும் பிரசாரம் செய்யப் போகின்றது சுயமரியாதை இயக்கம். அது தனது பழைய வாலிபர்கள் பெரும்பாலோர் வாழ்க்கைப் பருவம் அடைந்துவிட்டதால் புதிய வாலிபர்களைச் சேகரித்துக் கொண்டு வருகிறது. ஏராளமான வாலிபர்கள் இருக்கிறார்கள்; எனக்கு ஒரு சமயம் குறை ஏற்பட்டாலும் சுயமரியாதைக்குக் குறை ஏற்படாது.

வாலிபர்களே! தயாராய் இருங்கள்!

சுயமரியாதை இயக்கத்தின் அறிவியல் கொள்கை

நான் 1925ஆம் ஆண்டில் காங்கிரசிலிருந்து விலகிய பின் அரசியல் என்பது நமது நாட்டைப் பொறுத்தவரையில் பார்ப்பன ஆதிக்கத்திற்குப் பார்ப்பனரால் நடத்தப்படும் போராட்டமே யொழிய, பொது ஜன நன்மைக்கேற்ற ஆட்சி முறை வகுப்பதற்கோ அல்லது வேறு எந்த விதமான பொது நல நன்மைக்கேற்ற லட்சியத்தைக் கொண்டதோ அல்ல என்பதைத் தெளிவாக உணர்ந்து அப்படிப்பட்ட பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்பதையும், எந்தக் காரணம் கொண்டும் நமது நாட்டில் இனியும் பார்ப்பன ஆதிக்கம் ஏற்பட இடம் கொடுக்கக்கூடாது என்பதையும் கருதி, பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஊற்றாக இருந்து வரும் கடவுள், மதம், ஜாதித் தத்துவங்களையும் இந்தத் தத்துவத்திற்கு இடமாக விருக்கிற மூட நம்பிக்கையும், மூட நம்பிக்கையை அரசியல், கடவுள், மதம், சாத்திரம், தர்மம் ஆகியவற்றின் பேரால் வளர்க்கும் பார்ப்பன சமுதாயத்தையும் ஒழிப்பது என்ற கொள்கை மீது சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒரு இயக்கத்தைத் தோற்றுவித்து, நானே தோற்றுவித்தவனாகவும், தொண்டாற்றுபவனாகவுமிருந்து பல தோழர்களின் ஆதரவு பெற்று அதை நடத்தி வந்தேன். இந்த நிலையில் காங்கிர சானது அரசியல் ஆதிக்கத்தில் பிரவேசிப்பதில்லை என்றும், சமுதாயத் தொண்டே தான் காங்கிரசின் பிரதான கொள்கை என்றும் சொல்ல நிர்மாணத் திட்டம் என்னும் பேரால் பொய் நடிப்பு நடித்து மக்களை ஏமாற்றி வந்த (காங்கிரஸ்) தனது வேடத்தை மாற்றிக் கொண்டு அரசியல் ஆதிக்கத்தைக் கைப்பற்றி துணிந்து வெளிப்படையாகவே அரசியலில் புகுந்து ஆட்சியைக் கைப்பற்ற முன்வந்து விட்டதையும் உணர்ந்தேன்.

பிறகு எனது நிலை மேலே குறிப்பிட்டபடி கடவுள், மதம், ஜாதி, தர்ம, சாத்திர, சம்பிரதாய, பார்ப்பன சமுதாய ஒழிப்பு வேலைகளுடன், அரசியலில் பார்ப்பனர் நுழையாதபடியும், ஆதிக்கம் பெறாமல் இருக்கும்படியும் தொண்டாற்ற வேண்டிய அவசியத்திற்கு ஆளாக நேரிட்டு விட்டது. 

அதாவது இவ்வளவு துறையிலும் பாடுபட வேண்டியதே எனக்குச் சமுதாய தொண்டாக ஆகிவிட்டது. இதன் பயனாய் எனது வேலை இரட்டித்து விட்டதுடன் எதிர்நீச்சல் போல் மிக மிகக் கஷ்டமான காரியமுமாகி விட்டது. எப்படி எனில் நான் கடவுள், மத, சாஸ்திரம், சம்பிரதாய, ஜாதித் துறையில் பாடுபட்டால் எதிரிகள் (பார்ப்பனர்) அரசியல் துறையில் முன்னேறி விடுகிறார்கள். அரசியல் துறையில் பாடுபட்டால் எதிரிகள் (பார்ப்பனர்) கடவுள், மத, சாஸ்திர, சம்பிரதாய, ஜாதித் துறையில் முன்னேறி விடுகிறார்கள். ஆதலால் இரு துறைகளில் மூடநம்பிக்கையுள்ள பாமர மக்கள் இடையில் வேலை செய்வதென்பது எனக்கு மேற்சொன்னபடி மிக மிகக் கஷ்டமாகவும், காட்டு வெள்ளத்தில் எதிர் நீச்சல் போடும் வேலை போலும் திணற வேண்டியதாகி விட்டது.

இதற்கிடையில் எனக்கேற்பட்ட மற்றொரு மாபெரும் தொல்லை என்னவென்றால், என் தொண்டுக்கு ஆதரவாகச் சேர்த்து எடுத்து அணைத்துப் பக்குவப்படுத்தி வந்த தோழர்கள் எல்லாம் 100-க்கு 100 பேரும் பக்குவமடைந்த வுடன், விளம்பரம் பெற்று பொது மக்கள் மதிப்புக்கு ஆளானவுடன் அத்தனை பேரும் எதிரிக்குக் கையாள் களாகவே (எதிரிகளால் சுவாதீனம் செய்யப்பட்டு) எதிரி களுக்குப் பல வழிகளிலும் பயன்படுபவர்களாகி விட்டதோடு எனக்கும், எனது தொண்டிற்கும் எதிரிகளாக, முட்டுக்கட்டை களாக பலர் விளங்க வேண்டியவர்களாகி விட்டார்கள். இதற்குக் காரணம் (பிரஹலாதன், விபீஷணன் போல்) நமது ஜாதிப் பிறவித் தன்மைதான் என்று சொல்ல வேண்டியதைத் தவிர எனது 40 வருட பொதுத் தொண்டின் அனுபவத்தில் வேறொன்றும் சொல்ல முடியவில்லை.

இந்த நிலையில் நான் 40 ஆண்டுகளாகத் தொண்டாற்றி வந்து இன்றுள்ள நிலையில் எனது தொண்டின் பயனும் நிலையும் இருக்கிறதென்றால் என்னைப் பற்றி அறிஞர்கள் தான் விலை மதிக்க வேண்டும்.
-உண்மை,16.31.7.17