வெள்ளி, 28 ஏப்ரல், 2017

சொர்க்கவாசல் திறப்பு

மார்கழி மாதம் வந்தால், வைகுண்ட ஏகாதசி என்று கூட்டம் கூட்டமாய் சீரங்கம் முதலிய ஊர்களுக்குப் பணச் செலவு செய்து கொண்டு போவதும், பொய்யையும் புளுகையும் காவடிக் கதையாய்ச் சொல்வதும், அறுத்துச் சமைத்த பாம்பும், கோழியும், மீனும் உயிர் பெற்று விட்டது என்பதும், மண் சர்க்கரை ஆகிவிட்டது என்பதும், வெட்டித் துண்டாக்கப்பட்ட குழந்தை உயிர் பெற்று விட்டது என்பதும் இதுபோல் இன்னும் பல பொய்களை வெட்கமில்லாமல் சொல்வதும், அழுக்குக் குட்டைகளில் குளித்தும், குடித்தும் பஞ்சாமிர்தம் எனும் அசிங்கத்தை உண்டும், அதனால் காலரா போன்ற கொடிய நோய்க்கு இரையாவதும் நாம் கண்டதுதானே! அசிங்கம், ஆபாசம், அறியாமை இவைதானே நமது பண்டிகைகளாக இருந்து வருகின்றன!

சீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு என்று கதை அளக்கிறார்களே, அதன் தாத்பரியத்தைக் கேளுங்கள்:

நாகப்பட்டினத்தில் இருந்து ஜைனக் கோயிலின் பொன்விக்கிரகத்தைத் திருடி வந்து, அதை உருக்கி எடுத்துப் பணமாக்கி, திருமங்கை ஆழ்வார் என்ற நாமக்காரன் ஸ்ரீரங்கம் கோயிலின் மதில்களைக் கட்டினான். ஆனால், அக்கோயிலின் மதில்களையும் கட்டடங்களையும் கட்டிய தொழிலாளிகட்கோ அந்தக் கோயிலின் சின்னத்தையே - அதாவது நாமத்தையே சாத்திவிட்டான். கூலி கேட்ட தொழிலாளர்களை ஓடத்தில் ஏற்றி, திரவியம் தருகிறேன் என்று கூறி, காவிரி தீரத்தில் கொண்டு போய்க் கவிழ்த்துக் கொன்று விட்டான் - ஓடக்காரன் துணையோடு!

அவர்களை ஆற்று வெள்ளத்தில் தள்ளி, படுகொலை செய்த இடத்திற்குக் கொள்ளிடம் என்றும், அந்தத் துறைக்குப் பார்வானத்துறை (பார்வானம் - சுடுகாடு, பார்வணம் - சிரார்த்தம் செய்யும் இடம்) என்றும் பெயரிட ஆண்டவனிடம் இறைஞ்ச, அவ்வாறே அளிக்கப்பட்டு, அன்று கொல்லப்பட்டவர் களுக்கெல்லாம் முக்தியும் அளிக்கப்பட்டதாம்! (திருமங்கை ஆழ்வார் வைபவம் என்ற நூல் ஆதாரப்படி).

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசியின்போது திறக்கப்படுகின்றதே சொர்க்காவல் - அது எங்கே செல்லுவது தெரியுமா? திருமங்கை ஆழ்வார் கொள்ளிடக்கரையில் தொழிலாளர் களைக் கொன்று சிரார்த்தம் செய்த அந்தப் பார்வானத்துறைக்கு! சொர்க்கவாசல் மகிமை புரிகிறதா?

- தந்தை பெரியார்

 -உண்மை,1.15.1.17


”இந்து மதக்”காரருக்கு மனம் புண்படுகிறதாம்! - தந்தை பெரியார்

 


இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை. இந்து மத ஆதாரம் என்பதாக நம்மைப் பயன்படுத்தும்படி செய்யப் பட்டிருப்பவை புராண இதிகாசங்களும், புராண இதிகாசக் கடவுள்களும்தாமே ஒழிய வேறில்லை.

இந்து மதத்தின் பெயரால் நம்மை நடந்து கொள்ளும்படி செய்திருப்பதெல்லாம் ஜாதிப் பிரிவுகளும், அப்பிரிவுகளில் நாம் கீழ் ஜாதியாய், பார்ப்பானின் தாசி-அடிமைப் பெண்ணின் மகனாக ஆக்கப்பட்டும், நம்மை அதை ஏற்கும்படியும் செய்திருப்பதுதான். இந்த நிலையில்தான், நாம் இந்தப் புராண நடப்புகளுக்கும், கடவுள்களுக்கும் விரோதமாய் நடக்கிறோம் என்றும், கண்டிக்கிறோம் என்றும், வெறுக்கிறோம் என்றும், இந்நடத்தைகளுக்காக நம்மை அரசாங்கம் தண்டிக்க வேண்டும் என்றும் பார்ப்பனர்கள் பாடுபடுகிறார்கள்.

புராணங்கள், இதிகாசங்கள் எல்லாம் பார்ப்பனர்களால் 2000, 3000 ஆண்டுக் காலத்திற்குள் எழுதப்பட்டவைகளேயாகும். அவற்றில் வரும் கடவுள்கள், அவற்றின் செய்கைகள் எல்லாம் அது போலவே, பார்ப்பனர் தங்கள் நலனுக்கேற்றபடி அவைகளுக்கு அமைத்து உருவாக்கி யவைகளே ஆகும்.

எந்தப் புராண, இதிகாச நடப்பும், கடவுள் செய்கையும் இன்றைய நிலைக்கு ஏற்றவை அல்லவே அல்ல. ஏனெனில், 2000, 3000 ஆண்டு களுக்கு முற்பட்டதென்றால், அந்தக் காலம் எப்படிப்பட்ட காலமாய், எவ்வளவு காட்டுமிராண்டி, முட்டாள்தனமான காலமாய் இருந் திருக்கும்! எனவே, அவை இன்றைய புதுமை, விஞ்ஞான, பகுத்தறிவு உணர்ச்சி கருத்துக் காலத்திற்கு ஏற்குமா? இவை ஏற்படுத்தப்பட்ட வெகு காலத்திற்குப் பிறகுதான் வேறுமதஸ்தர் களால் ஒரு கடவுள் என்பதும், ஒழுக்கம், நேர்மை என்பனவாகிய நல்ல குணங்கள் என்பவைகளும் கற்பிக்கப்பட்டனவாகும். இந்தக் கற்பனைகளுக்கு முன்பு கடவுள்கள் தன்மை, அவற்றின் நடப்புகள் எவ்வளவு அசிங்கமும், ஆபாசமும் அயோக்கியத் தனமுமானவை என்பதற்கு ஆதாரம் வேண்டு மென்றால், அவற்றின் யோக்கியதைகளை அவர்கள் எழுதி இருக்கிறபடி அவற்றில் உள்ளதை உள்ளபடி எடுத்துச் சொன்னாலே, தங்களுக்கு மன நோவையும், மானக் கேட்டையும் உண்டாக்கி விட்டதாகப் பதறித் துடித்து எந்த அக்கிரமமான காரியத்தைச் செய்தாவது என்ன மாய்மாலக் கூப்பாடு போட்டாவது மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைத்து விடலாம் என்று துடிக்கிறார்கள்.

உதாரணமாக, இவர்களால் உண்டாக்கப்பட்ட ஆதாரங்களில் உள்ளபடியே நாம் பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்களைப் பற்றியோ, இவர்கள் மனைவிகளைப் பற்றியோ, அக்கால தெய்வீக மக்களைப் பற்றியோ, அவதாரங்களைப் பற்றியோ எடுத்துச் சொன்னால் இவர்களுக்கு மானக் கேடும், மனப் புண்ணும் ஏன் ஏற்படவேண்டும்? அந்தப்படி இல்லை, அது பொய், கற்பனை என்று பதில் கூறாமல் ஆத்திரப்படுவதென்றால் அவை மானாபிமானம் அறிவு இல்லாத காலத்தில் செய்யப்பட்டன என்றுதானே பொருள்! இப்படிப்பட்ட முட்டாள் தனமானதும் அயோக்கியத்தனம் என்று சொல்லக் கூடியதுமான காரியங்களை,  அவை இன்றைக்குப் பொருந்தா; யாரும் அவற்றை ஏற்க வேண்டிய தில்லை என்று யோக்கியமாய்ச் சொல்லி அவைகளை மறைத்து விட்டால் யாரும் அவற்றைக் குற்றம் சொல்லமாட்டார்கள்.

அப்படியல்லாமல்  அவற்றைப் பண்டிகைகளாக, உற்சவங்களாக, பழி தீர்க்கும் காரியங் களாகக் கொண்டாடுவது என்றால், இதற்குப் பரிகாரம் பதிலுக்குப் பதில் காரியங்கள் செய்யாமல் இருப்பதா?

உதாரணமாக, இராவணன் இராமன் மனைவியை எடுத்துப்போய்க் கற்பழித்து விட்டான் என்ற ஆத்திரத்தில் இராவணனைக் கொடியவனாக ஆக்கி மக்களுக்குப் பிரச்சாரம் செய்து அவன் உருவத்தை ஆண்டு தோறும் நெருப்பில் கொளுத்துகிறார்கள். அரசாங்கமே அதில் பங்கு கொள்ளுகிறது.

இந்த இராவணன் செய்கையின் உண்மை, ஆதாரப்படி அந்தப்படி இல்லை.

சீதை சம்மதித்தே இராவணனுடன் சென்றதாகவும், அவன் வீட்டிலேயே இருந்து வாழ்ந்ததாகவும், அதனால் சீதைக்குக் கர்ப்பம் ஏற்பட்டதாகவும் தான் ஆதாரத்தில் துருவிப் பார்த்தால் தெரிய வருகிறது.

மற்றும் தேடிப் பார்த்தால் இராமனே சீதையை இராவணன் அழைத்துப் போகவும் அதற்கு வசதி செய்யவும் ஏற்பாடு செய்தான் என்றும் சொல்வதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன.

மற்றும் இராவணன் ஆரியர்களுக்கு எதிரியாய் இருந்த தானாலேயே அவனைக் கொல்ல இந்த ஏற்பாடு செய்ததாகவும் ஆதாரங்கள் இருக்கின்றன.

இராவணனைப் பார்ப்பனர்கள் எரிக்கிறார்கள். அவமானப் படுத்துகிறார்கள் என்றால்,

நம்மையெல்லாம் சூத்திரர்கள், நான்காம் ஜாதியார்கள் ஆகவும், நம் பெண்களைப் பார்ப்பனர் அனுபவிக்கும் தாசிகளாகவும் ஆக்கி வைத்து அந்தப் படி சாஸ்திர தர்மங்கள் எழுதி வைத்துக்கொண்டு மேலே குறிப்பிட்ட இராமாயணத்திலேயே சூத்திரன் பிராமணனை (பார்ப்பானை)க் கடவுளாக வணங்காமல், கடவுளை நேராகக் காண வணங்கினான்.  அதனால் பிராமணனுக்குக் கேடு வந்தது; ஆகையால் அந்தச் சூத்திரனைத் துண்டு துண்டாக வெட்டி வதைக்கிறேன் என்று சொல்லி சித்திரவதை செய்து இராமன் கொன்றான் என்றால், அந்த ராமனை நெருப்பில் கொளுத்துவதோ அவமானம் செய்வதோ பெரும் குறையா கிவிடுமா? குற்றம் என்று கூறலாமா? என்பதுதான்சிந்திக்க வேண்டியதாகும். பார்ப்பனர் இதைக் குற்றமென்று சொல்வதற்குக் காரணம் தங்கள் உயர் நிலையைக் காப்பாற்றிக் கொள்ளவே ஒழிய வேறில்லை.

அது போலத்தான் சூத்திரர்கள் (பார்ப்பனர் தாசி மக்கள்) என்று பார்ப்பனரால் சொல்லப் படுகிற நாம் நம் இழிநிலையைப் போக்கிக் கொள்ள மான உணர்ச்சியோடு முயற்சிக்கிறோம். அதற்கு ஏற்றதைச் செய்கிறோம். அதற்கு ஏற்றதைச் செய்கிறோம், செய்ய இருக்கிறோம். அதற்கேற்ற விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்.

இதை மனம் புண்படுகிறவர்கள் உணர வேண்டுகிறோம்.

“உண்மை”, 14.2.1971

உண்மை”, 1-15.1.17

வியாழன், 27 ஏப்ரல், 2017

சமதர்மம் எங்கே இருக்கின்றது?

02.04.1933 - குடிஅரசிலிருந்து...

தோழர் இராமசாமி சிவகங்கையில் பேசியதாவது

தலைவரவர்களே! தோழர்களே! சமதர்மம் என்பது நமக்கொரு புதிய வார்த்தை அல்ல, எல்லாச் சமுகத்தாரும் எல்லா மதஸ்தர்களும் விரும்புவதும் அந்தப்படியே யாவரும் நடக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பதும், ஒவ் வொரு சமுகத்தானும் ஒவ்வொரு மதஸ்த்தனும் தங்கள் தங்கள் சமுகங்களிலும், மதங்களிலும் இருக்கின்றதென்று சொல்லி பெருமை பாராட்டிக் கொள்ளுவதுமான வார்த் தையேயாகும்.

ஆனால் காரியத்தில் மாத்திரம் உண்மையான சமதர்ம தத்துவங்களை எடுத்துச் சொன்னால், இதுசாத்தியப்படு மாவென்று பேசுவதாகவும் இது நாஸ்திகமென்றும், துவேஷமென்றும் சொல்லு வதாகவே இருக்கிறது. எச்சமதர்மக்காரனையாவது அழைத்து உங்கள் சமுகத்தில் மதத்தில் சமதர்மம்  இருக்கிறது என்றாயே நீ ஏன் இப்படியிருக்கிறாய்? அவன் ஏன் அப்படியிருக்கிறான்? நீ ஏன் எஜமானனாய் இருக்கிறாய்? அவன் ஏன் அடிமையாயிருக்கிறான்? நீ ஏன் பிரபுவாய் செல்வந்தனாயிருக்கிறாய்? அவன் ஏன் ஏழையாய், தரித்திரனாய், பிச்சைக்காரனாய், பட்டினிக்கிடப் பவனாயிருக்கிறான்?  உனக்கு ஏன் மூன்றடுக்கு மாளிகை? அவனுக்கு ஏன் ஓட்டைக் குடிசைக் கூடயில்லை? நீ ஏன் வருஷம் 10000 கணக்காய் லாபம் பெருக்கி ராஜபோகம் அனுபவித்து லட்சாதிபதியாய் விளங்குகின்றாய்? அவன் ஏன் நஷ்டப்படடு, கைமுதலை இழுந்து கடன் கார னாகிறான்? நீ ஏன் பிச்சை கொடுக்கத் தகுந்தவனானான்? அவன் பிச்சை வாங்கத் தகுந்தவனான்? நீ ஏன் பாடுபடாமல் வேதத்தையும், மந்திரத்தையும் சொல்லிக் கொண்டு நோகாமல் வயிறு வளர்க்கின்றாய்? அவன் ஏன் பாடுபட்டு இடுப்பொடிந்து, கூன்விழுந்து இளைத்துப் போகிறான். உன் பிள்ளை ஏன் பி.ஏ.எம்.ஏ., அய்.சி.எஸ். பாரிஸ்டர் படிக்க முடிந்தது? அவன் பிள்ளை ஏன் கையெழுத்தப் போடகூடத் தெரிந்து கொள்ள முடிய வில்லை என்பன போன்ற சாதாரணமான பொதுக் கேள்விகளைக் கேட்டால் சமதர்ம மதக்காரர்கள் என்பவர்கள் என்ன பதில் சொல்லுகிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.

முட்டாள்தனமானதும், போக்கிரித் தனமானதுமான பதிலைத்தான் சொல்லுவார்கள். அதென்ன பதிலென்றால் அய்ந்து விரல்களும் ஒன்றுபோல் இருக்கின்றனவா? ஒன்று உயர்வு, ஒன்று தாழ்வு ஆகத்தானே கடவுள் சிருஷ்டியின் இயற்கை இருக்கின்றது என்று சொல்லு கிறார்கள்.  இந்தப்பதிலைப் படித்த மேதாவிகளான பி.ஏ., எம்.ஏ., பண்டிதர்களும், சாஸ்திரிகளும், குருமார்களும், பாதிரிகளும், மவுலானாக்களும், தத்தவஞானி என்பவர் களும், மகாத்மாக்கள் என்பவர்களும் அரசியல் ஞானிகள், சீர்திருத்தக்காரர்கள், பரோபகாரிகள். ஆஸ்திகர்கள், பிரமஞானிகள், ஆரிய சமாஜக்காரர்கள் முதலாகிய எல்லாப் பொறுப்பு வாய்ந்த கனவான்களும் சொல்லு கின்றார்களென்றால் இந்தக் கூட்ட மக்களோ, மதமோ, அரசியலோ, ஞானமோ, சமதர்மமாகுமா? என்று யோசித்துப் பாருங்கள்.

ஏழை பணக்காரக் கொடுமைக்கும், சோம்பேறி உழைப்பாளி தன்மையில் உள்ள வித்தியாசத்திற்கும் அய்ந்து விரல்களும் ஒன்று போலிருக்கின்றனவா? என்கின்ற உதாரணத்திற்கும் ஏதாவது பொருத்தமிருக் கிறதாவென்று யோசித்துப் பாருங்கள். இந்த பதிலை ஒன்று முட்டாள் தனம் அல்லது போக்கிரிதனமான பித்தலாட்டத் தனம் என்று தானேசொல்ல வேண்டும். இன்னும் வெளிப்படையாகப் பேசவேண்டுமானால் இன்று காணப்படும் மதம், ஜாதி, சமுகம், அரசாங்கம், ஞானம், தத்துவ சாஸ்திரம் முதலியவை களையெல்லாம் சமதர்மத் துக்கு விரோதமான சூழ்ச்சி எண்ணத்தின் மீது கட்டப் பட்டவையென்றுதான் சொல்ல வேண்டும்.

இதுமாத்திரமல்லாமல் இவைகளெல்லாவற்றிற் கும் ஆதராமாய்க் கொள்ளப்படும் கடவுள் என்ற தன்மையும் இந்த உண்மை சமதர்மத்திற்கு விரோதமான தன்மைகளை நிலைநிறுத்தவும் அதன் குற்றங்களை உணராமலிருக்கவும், திருத்தப்பாடு செய்யாமலிருக்கவும் தந்திரக்காரர்கள் செய்த சூழ்ச்சியேயாகும்.

அல்லவென்றால் இச்சூழ்ச்சிகளைக் கண்டுபிடிக்க முடியாத திருத்தப் பாடு செய்து கொள்ளமுடியாத மூட மக்களின் அறியாமை உணர்ச்சியேயாகும். இன்றையத் தினம் வார்த்தையில் சமதர்மமேயொழிய காரியத்தில், வாழ்க்கைத் தத்துவத்தில் எங்கே சமதர்மம் இருக்கிறது?

ஒருவனுக்கு மகிமையில், சம்பாதனையில் அல்லது சொத்தில் இத்தனையில் ஒரு பங்கு என்று பிச்சை கொடுத்துவிட்டால் அது சமதர்மமாகிவிடுமா? ஒருவனை தொட்டுக் கொண்டால் அது  சமதர்மமாகிவிடுமா? ஒருவன் கூட இருந்து சாப்பிட்டுவிட்டால் அது சம தர்மமாகிவிடுமா? ஒருவனைக் கோவிலுக்குள் விட்டு விட்டால் அது சமதர்மமாகி விடுமா? ஒருவன் கூட இருந்து கடவுளைப் பிரார்த்தனை செய்தால் அது சமதர்மமாகி விடுமா? ஒரு சத்திரம் கட்டி வைத்துவிட்டால் அது சமதர்மமாகி விடுமா? ஒருவன் கஞ்சித் தொட்டி வைத்து எல்லோருக்கும் கஞ்சி ஊற்றினால் அது சமதர்மமாகி விடுமா? எல்லோரையும் ஒன்றாய் உட்கார்ந்து படிக்கச் சொன்னால் சமதர்மமாகி விடுமா? எல்லோரும் ஒன்றாயிருந்து ஒன்றாய் உட்கார்ந்து கும்பிட ஒரு கோவில் கட்டி விட்டால் சமதர்மமாகிவிடுமா? என்று யோசித்துப் பாருங்கள்.

இவற்றால் இதை செய்கின்ற மனிதனுக்கோ, இதை அனுபவிக்கின்ற மனிதனுக்கோ, முறையே நஷ்டமென்ன? லாபமென்ன? இவையெல்லாம் வெறும் பித்தலாட்ட சமதர்மங்கள்.

உலகம் பொது, உலகத்திலுள்ள செல்வம் போக போக்கியம் பொது, உலகத்தில் மனித வாழ்க்கைக்கு  வேண்டிய காரியத்திற்காக மனிதன் செய்ய வேண்டிய வேலைகளெல்லாம் பொது, அதனால் ஏற்படும் பலன்களெல்லாம் எல்லா மக்களுக்கும் பொது, சரிபாகம் பிரித்துக் கொள்ளத்தக்கது.

இதற்கு மீறி நடந்தால் குற்றம் - தண்டிக்கத்தக்கது என்று எந்தமதம். எந்த சமுகம், எந்த அரசாங்கம், எந்த அரசியல் ஞானம், எந்த மத தத்துவஞானம் எந்த மகாத்மா முதலியவைகள் கூறுகின்றன? என்பதை சிறிது யோசித்துப் பாருங்கள். மதவெறிக் காரணமாக தன்தன் மதம் சமதர்மமதம் என்பதும், சமயவெறிக் காரணமாக  தன்தன் சமயம் சமதர்ம சமயமென்பதும் அரசியல் வெறி - சூழ்ச்சி காரணமாக தன்தன் அரசியல் முறை சமதர்மம் என்பதுமான பித்தலாட்டங்கள் தான் நடைபெறு கின்றனவேயல்லாமல் உண்மை சமதர்மம் எங்கே இருக்கின்றது? எதில் இருக்கின்றது? என்பதை நடுநிலையிலிருந்து யோசித்துப் பாருங்கள்.
-விடுதலை,7.4.17

மாமாங்கத்தின் அற்புதம்

26.02.1933 - குடிஅரசிலிருந்து...

புராண மரியாதைக்காரன் கேள்வி: அய்யா, சுயமரியாதைக்காரரே கும்பகோண மாமாங்க குளத்தில் ஒரு அற்புதம் நடக்கின்றதே அதற்கு சமாதானம் சொல்லும் பார்ப்போம். சுயமரியாதைக்காரன் பதில்: என்ன அற்புதமய்யா?

பு.ம:- மாமாங்கக்குளம் எவ்வளவு சேறாய் இருந்தபோதிலும்,  கூழாய் இருந்த போதிலும் அதில் அவ்வளவு ஜனங்கள் குளிக்கிறார்களே அந்த குளத்துத் தண்ணீர் ஏன் குறைவதில்லை? இதற்கு பதில் சொல் பார்ப்போம்.

சு.ம:- இது ஒரு நல்ல புத்திசாலித்தனமான கேள்விதான், இதன் காரணம் சொல்லு கிறேன், சற்று தயவு செய்து கேட்க வேண்டும். அதாவது மாமாங்க குளத்தில் உள்ள தண்ணீரையெல்லாம் முனிசிபாலிட்டியார் இரைத்து விடுவார்கள். பிறகு ஒரு இரண்டு அடி உயரத்  தண்ணீர் மாத்திரம் அதில் இருக்கும் அடியில் சிறிது மணலும் கொட்டி வைப்பார்கள். ஜனங்கள் தண்ணீரில் இறங்கியவுடன் மணல், சேறு, ஜனங்களின் அழுக்கு ஆகிய எல்லாம் சேர்ந்து குழம்புமாதிரி அழுக்கு நிறமாக ஆகிவிடும். குளிக்கிற ஜனங்களுடைய உடம்பு, துணிகள் எல்லாம் சேற்றுவேஷக்காரன் போல் கருப்பாக ஆகிவிடும். இந்த நிலையில் குளிக்கும் ஒவ்வொரு நபரும் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீரை தனது வேஷ்டி நனையும் அளவுக்கு குளத்தைவிட்டு வெளியில் எடுத்துக் கொண்டு போகிறான் என்பது வாஸ்த்தவம் தான். ஆனால் அதற்கு பதிலாக ஒவ்வொரு நபரும் ஆண் பெண் அடங்கலும் அக்குளத்தில் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் விட்டு விட்டுத்தான் போகிறார்கள்.

பு-ம:- அதெப்படி தண்ணீர் விட்டு விட்டுப் போகிறார்கள்? நமக்கு அது புரியவில்லையே அவர்களிடம் தண்ணீர் ஏது?

சு.ம: - இதுவும் நல்ல கேள்வி தான், பதில் சொல்லுகிறேன், மாமாங்க காலத்தில் கூட்டம் அதிகம். தெருக்களில் எங்கும் பக்கத்தில்மறைவே இடம் இருக்காது. ஒரு மனிதன் வீட்டை விட்டுப் புறப்பட்டால் மாமாங்க குளத்துக்கு போவதற்குள் நசுங்கி பஜ்ஜியாய் விடுவான். இதன் மத்தியில் அவன் மூத்திரம் பேய வேண்டுமானால் வழியில் காலோடு பேய்ந்துகொள்ள வேண்டும் அல்லது குளத்துக்கே போய் ஆக வேண்டும். ஆகவே யாரும் காலோடு பேய்ந்து கொள்ள சம்மதிக்க மாட்டார்கள். எப்படியாவது அடக்கி, அடக்கி அவசரமாய் குளத்துக்குப் போகும்வரை அடக்கிக் கொண்டுதான் போவார்கள். குளத்தில் இறங்கி துணியை நனைத்துக் கொண்டவுடன் இவர்களை அறியாமலே மூத்திரம் வந்து விடும். அந்த மூத்திரம் மாமாங்க தீர்த்தத்துடன் தீர்த்தமாய் இரண்டறக் கலந்துவிடும். அப்போது அவர்களால் செலவாகும் தண்ணீர் கிட்டத்தட்ட சரிசமமாகவே பூர்த்தியாகிவிடும். ஆகவே வரவும், செலவும் சரியாகிவிடும்.

பு.ம;- அந்தப்படி அந்தக்குளத்தில் மூத்திரம் சேருமானால் தண்ணீரில் ஒருவித நாற்றமிருக்காதா?

சு.ம:- நாற்றமிருக்கத்தான் செய்யும். தீர்த்தத் தண்ணீரை முகந்து பார்ப்பது மகா பாவம் என்று அவர்களுக்குச் சொல்லி வைக்கப்பட்டிருக் கின்றதல்லவா? ஆதலால் யாரும் முகந்து பார்க்கமாட்டார்கள். ருசியும் பார்க்க மாட்டார்கள். ஏனென்றால் அது அவ்வளவு அழுக்காகவும், குழம்பாகவும் இருக்கும். அன்றியும் இன்னொரு விஷயம் என்னவென் னறால் முனிசிபாலிட்டியார் குளத்துத் தண்ணீரில் கெந்தகப் பொடிபோட்டு வைத்திருக்கிறார்கள். ஆதலால் மூத்திர நாற்றம் எது? கந்தக நாற்றம் எது? என்று சுலபத்தில் கண்டு பிடிக்கவும் முடியாது. ஆகவே சிலவுக்கும், வரவுக்கும் தானாகவே சரியாய் போய்விடும். இதற்குக் கடவுள் அற்புதம் ஒன்றும் தேவையில்லை.
-விடுதலை,7.4.17

புதன், 26 ஏப்ரல், 2017

மாட்டிறைச்சி சாப்பிடுவது அவமானம் உடையது அல்ல

தந்தை பெரியார்

நான் இந்தப் பக்கத்தில் எப்போது வந்தாலும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி ஏற்படுத்திக்கொண்டு எனக்குப் பெருமை அளிப்பதையே காரியமாகக் கொண்டு வருகிறார்கள்.

இந்தத் தடவை இப்படி கோழிப் பண்ணையைத் திறந்து வைக்கும் பணியினை அளித்துள்ளார்கள்.

கோழிப்பண்ணை என்று சொன்னாலே தானிய விவசாயம் போல இதுவும் ஒரு உணவுப் பண்ட விவசாயம் ஆகும். மற்ற தானியம் காய்கறிகள், உணவுக்கு எப்படிப் பயன்படுகின்றதோ அதுபோலவே கோழியும் உணவுக்காகப் பயன்படுகின்றது. கோழி முட்டை இடு கின்றது. குஞ்சு பொரிப்பது எல்லாம் மனிதன் உணவுக்காகவே பயன்படுகின்றது.

இயற்கையின் தத்துவம் எப்படி இருந்தாலும் உற்பத்தி பொருள்கள் ஜீவன்கள் எல்லாம் மனிதனுடைய உணவுக்குத்தான் பயன்படுகின்றது. மனிதன் ஒருவனைத் தவிர, அனேகமாக எல்லா ஜீவராசிகளும் உணவுக்குத் தான் பயன்படுகின்றது ஒன்றை ஒன்று தின்று வாழ்கின்றன அப்படி ஒன்றை ஒன்று தின்று வாழ்வது ஏன் என்று சொல்லத் தெரியாது.

சிலர் கடவுள் செயல் என்பார்கள். இது உண்மையாக இருக்குமானால் கடவுளைப்போல அயோக்கியன் வேறு இல்லை. கடவுளைக் கருணாமூர்த்தி தயாபரன் என்கின்றார்கள். ஆனால், தினம் தினம் லட்சக்கணக்கில் மாடு, பன்றி, ஆடு, கோழி, மீன் முதலியன கொல்லப்பட்டு தின்னப்படுகின்றன. இதற்கெல்லாம் கடவுள்தான் காரணம் என்று ஆகிவிடுமே. எனவே, கடவுள் பற்றிய எண்ணம் கருத்து எல்லாம் பொய் யானதாகும். உலகப்பரப்பில் 350க்கு மேற்பட்ட கோடி மக்கள் உள்ளார்கள். இதல் 230 கோடி மக்கள் மாமிசம் சாப் பிடும் மக்கள் ஆவார்கள். இந்தியாவில் தான் 10, 15 கோடிகள் வாயளவில் மாமிசம் சாப்பிடாதவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் இருக்கின்றார்கள்.

உண்மையாக மாமிசம் தின்னாதவர்கள் 2 கோடி கூட இருக்க மாட்டார்கள். நம் நாட்டில் கோழி சாப்பிடு வான் மீன் சாப்பிடுவான். மாடு சாப்பிட மாட்டேன் என்பான். மாடு சாப்பிடுவான் பன்றி இறைச்சி சாப்பிடமாட்டேன் என்பான் இப்படியே ஒவ்வொன்றை விட்டு வேறு ஒன்றை சாப்பிடக் கூடிய வர்களும் உள்ளார்கள்.

நம் நாட்டில் இந்துக்கள் என்னும் கூட்டத்தில் சிலர் மாடு தின்பது இல்லை சில கூட்டத்தார் சாப்பிடுகின்றார்கள். உலகில் எங்கும் மாடு சாப்பிடுகின் றார்கள். நமது நாட்டில் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் மாடு சாப்பிடுகின்றார்கள் மற்றும் அநேக ஜாதியார் மாடு சாப்பிடுகின்றார்கள்.

நான் விடுதலை பொங்கல் மலரில் மக்களின் உணவு விஷயமாக ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அதில் மனிதனுக்கு கிரமமான உணவு மாமிசம்தான் சும்மா அதைவிட்டுவிட்டு பழக்கவழக்கத்தை உத்தேசித்து அதனை ஒதுக்குகின்றார்கள். அதிலும் மாடு தின்பதை ஒதுக்குகின்றார்கள். இதனால் மக்கள் பலவீனர்களாகத்தான் ஆகின்றார்கள். மக்கள் விவசாயப் பண்ணை வைத்துக்கொண்டு தானியங் களை உற்பத்திப் பண்ணுவதுபோல மாட்டுப்பண்ணைகள் வைத்து நல்ல வண்ணம் வளர்த்துப் பெருக்க வேண்டும். பசுவை பாலுக்கு வைத்துக்கொண்டு காளை மாடுகளை உணவுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எழுதியுள்ளேன்.

மேல்நாடுகளில் மாட்டை உணவுக்குத் தான் பயன்படுத்துகின்றார்கள். உழவுக்கு மாட்டைப் பயன்படுத்துவது கிடையாது. முன்பு குதிரையைத் தான் பயன்படுத்தி னார்கள். இன்று இயந்திரம் மூலம் உழவு செய்கின்றார்கள்!

மேல்நாட்டார் மனஉறுதியுடனும் சுறு சுறுப்புடனும் இருப்பதற்கு அவர்களின் உணவுமுறைதான் காரணம் ஆகும். நாம் சுத்த சோம்பேறிகளாகவும் மன உறுதி யற்றவர்களாகவும் இருக்கக் காரணம் நமது சத்தில்லா உணவுமுறைதான் ஆகும்.

சைனாக்காரனையும், மலாய்க்காரனையும், ஜப்பானியனையும் எடுத்துக் கொண்டால் அவன் சாப்பிடாத மாமிசமே கிடையாது. மாடு, பன்றி மட்டுமல்ல பாம்பு, பல்லி, ஓணான் முதலியவைகளை யும் சாப்பிடுவான். அவன்கள் எல்லாம் சிறந்த உடல் வலிமை உள்ளவர்களாக விளங்குகின் றார்கள்.

நாம் சக்தி குறைந்தவர்களாவும், மன உறுதியற்ற வர்களாகவும், சோம்பேறிகளாகவும் இருக்கக் காரணம் நமது அரிசி உணவுதான். அரிசி சும்மா மனிதனை சாகாமல் வைத்திருக்குமே ஒழிய வலிவு உடையவர்களாக இருக்க உதவாது. அதில் சத்து இருக்காது. மற்ற காய்கறிகளிலும் அவ்வளவாக சத்து அதிகம் இராது.

இதன் காரணமாகத்தான் தொழிலாளர்கள் கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை முதலியன சாப்பிட்டு வந்தார்கள். அவர்களும் அரிசி சாப்பிட ஆரம்பித்து சோம்பேறியாகி விட்டார்கள். அரிசியும் காய்கறியும் சோம்பேறியாக ஊரார் உழைப்பை உண்டு வாழக் கூடியவர்களுக்கு வேண்டுமானால் பொருந்துமே ஒழிய உழைப்பாளிக்கு ஏற்றதல்ல.

அரிசி உணவு தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், வங்கம், பஞ்சாப்பில் ஒரு பகுதி இப்படி சில பாகத்தில்தான் சாப்பிடுகின்றார்கள். மற்ற பகுதி மக்கள் எல்லாம் கோதுமையே சாப்பிடுகிறார்கள். கோதுமை அரிசியைவிட சத்து அதிகம் உள்ளது.

அரிசி சோறு சாப்பிட குழம்பு பொறியல் ரசம் மோர் முதலியன வேண்டியுள்ளது. இதற்கு நேரமெனக்கேடு அதிகம் ஆகும். கோதுமை உணவுக்கு பக்குவமுறையும் கம்மி அதற்கு தொட்டுக் கொள்ள ஏதோ கூட்டு ஒன்று தயார் செய்து கொள்ளுவான்.

நாம் நல்ல அளவு இன்று மாமிசம் சாப்பிடு கின்றவர்களாக இல்லை. ஏழை வாரத்திற்கு ஒரு தடவை சாப்பிட்டால் அதுவே அதிசயம். பணக்காரன் இரண்டு தடவை சாப்பிடுவான். சாப்பிடும் அளவும் மிகக் கொஞ்சம்  அரிசி சோறு மிகுதியாக வும், மாமிசம் கொஞ்சமாகவும் தான் இருக்கும். மேல் நாட்டில் உணவில் பெரும் அளவு மாமிசமும் குறைந்த அளவுதான் கோதுமையும் சேர்த்துக் கொள்ளுவான்.

நமது நாட்டில் கோழி மாமிசமானது ஆட்டுக் கறியைவிட அதிக விலையாக உள்ளது. ஆனால், மக்கள் சல்லிசில் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய மாட்டு மாமி சத்தை உண்ண மறுக்கின்றார்கள்.

தோழர்களே! பார்ப்பனர்கள் எல்லாம் மாடு எருமை தின்றவர்கள் ஆவர். இராமாயணம் பாரதம் மனுதர்மம் பார்த்தாலே தெரியும் யாராவது விருந்தாளி வந்தால் கன்றுக்குட்டியை அறுத்துத்தான் விருந்து வைத்ததாகக் காணலாம்.

பிறகு எப்படியோ, அதனை பார்ப்பான் விட்டு விட்டு சாப்பிடுகின்ற நம்மவர்களை கீழ்மக்கள் என்று கூறி விட்டான்.

30, 40 ஆண்டுகளுக்கு முன்னமேயே சிலர் மாடு சாப்பிட வேண்டும் என்று கூறியிருக்கின்றார்கள். நாமும் காய்கறி அரிசி உணவைக் குறைத்துக் கொண்டு மாட்டு மாமிச, உணவைத் தாராளமாக சாப்பிட வேண்டும். மலிவு விலையில் கிடைக்க பெரிய பெரிய மாட்டுப் பண்ணைகள் ஏற்படுத்த வேண்டும். மாடு தின்பது பாவம் அல்ல. அப்படியே பாவம் என்றாலும், கோழித் தின்பதில் எவ்வளவு பாவமோ அவ்வளவு பாவம் தான் மாடு தின்றாலும் ஆகும். நமது சாமிக்கே மாடு, எருமை, கோழி, பன்றி முதலியன காவு கொடுத்துக் கொண்டுதானே வருகின் றார்கள்.

மாடு சாப்பிடுவது அவமானம் உடையது அல்ல. கோழிப் பண்ணை வருமானம் கொடுக்கக் கூடியது. நல்ல சத்துள்ள உணவு அதன் முட்டை முதற்கொண்டு இன்று கிராக்கியாகி விட்டது. முட்டை விலை முன்பு டசன் 3 அணா விற்றது. இன்று ஒரு முட்டை 20 காசு, 25 காசு விற்கின்றது. ஏழை மக்கள் எப்படி வாங்கி தாராளமாக உண்ணமுடியும்?

அரிசி விலை இறங்கினால் பார்ப்பானுக் குத்தான் நல்லது. இப்படிப்பட்ட பண்டங்களுக்கு விலை இறங்கினால் நமக்கெல்லாம் நல்லது.

ஊருக்கு ஊர் 10 பண்ணைக்கு குறை வில்லாமல் கோழிப்பண்ணை ஏற்பட வேண்டும். 500க்கும் கம்மி இல்லாமல் ஒவ்வொரு பண்ணையிலும் முட்டை உற்பத்தியாகவேண்டும். உயர்ந்த ஜாதிக் கோழிகளை வாங்கிப் பெருக்க வேண்டும். அரசாங்கமும் தாராள மாக இம்மாதிரியான காரியங்களுக்கு உதவி செய் கின்றார்கள்.

இந்த நாட்டில் பார்ப்பான் உணவுக்கு ஆக போராட ஆள் உள்ளது. நமது உணவுக்குப் பாடுபட ஆள் இல்லை. நான் சொன்னால் அவன் அப்படித்தான் சொல்லுவான் என்று எண்ணுகின்றார்கள்.

மக்கள் தாராளமாக மாட்டுக்கறி முதலிய இறைச்சி சாப்பிட்டு பலசாலியாக ஆகவேண்டும் என்று எடுத்துரைத்தார்கள்.

21.1.64 அன்று மதுரை அனுமந்தபட்டி கோழிப்பண்ணை திறப்பு விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய உரை.

‘விடுதலை’ 03.02.1964

‘விடுதலை’ 09.04.17