ஞாயிறு, 19 மார்ச், 2023

ஒரே நாடு ஒரே மொழி?

 

 தந்தை பெரியார்

ஒட்டி வாழ முடியாத - வாழுவதற்கான இயல்பில்லாத - ஒன்றையொன்று வஞ்சித்தே வாழும்படியான இயல்பினையூட்டி வருகிற வருணாசிரம இந்து மதக் கலாச்சாரம் என்றைக்கு இந்த நாட்டை விட்டு ஒழிகிறதோஒழிப்பதற்கு எப்பொழுது துணிவு பிறக்கிறதோ அப்பொழுதுதான் இந்தியாவை ஒரு நாடு என்று சொல்ல முடியும்.

 மத்திய சட்டசபையில் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லும் போது மவுலானா ஆசாத் இந்துஸ்தானியில் சொன்னதாகவும்அவர் சொன்னது இன்னது என்று தெரியாமல் தென்னாட்டுப் பொறுக்கு மணிகள் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்துக் கொண்டிருந்து விட்டுப் பின் ஒவ்வொருவராக எழுந்து,  இந்துஸ்தானியில் சொன்னது புரியவில்லை என்றும்இந்துஸ்தானி தெரிந்த வர்களுக்குக் கூட மவுலானா (பண்டிதஇந்துஸ்தானி புரியவில்லை என்றும் கூறியதாகவும்இதைக் கேட்டுச் சாந்த மூர்த்தியின் பிரதிநிதி என்று மதிக்கப்படும் முதல் மந்திரி தோழர் நேரு அவர்கள், "இனி மேல் நான் பேசுவதெல்லாம் இந்துஸ்தானியில் தான் பேசப் போகிறேன்இருப்பதற்குப் பிடித்தமாயிருந்தால் வாயை மூடிக்கொண்டு கப்சிப் என்று பேசாமலிருங்கள்இல்லாவிட்டால் வெளியே போய்விடுங்கள்என்று மிகவும் சாந்தமான முறையில் சொன்னதாகவும்நேரு அவர்கள் இவ்வாறு சொல்வது பிரச்சினையைத் தீர்த்து விடுவதாகுமாஎன்று தோழர் பட்டாபி அவர்கள் எடுத்துக்காட்டியதாகவும் ஒரு செய்தியும்இந்துஸ்தானி யில் ஒருவர் கேள்வி கேட்க அதற்குத் தோழர் ஜான் மத்தாய் அவர்கள் மலையாளத்தில் பதில் சொன்ன தாகவும்அதை வரவேற்றுப் பலரும் சிரித்தார்கள் என மற்றொரு செய்தியும்சமீபத்தில் வெளிவந்ததைத் தோழர்கள் பார்த்திருக்கலாம்.

இந்திய யூனியனின் பாராளுமன்றம் என்று சொல் லப்படும் மத்திய சட்டசபை இப்போதைய நிலையில் திராவிடர்களுக்குக் கொஞ்சமும் பயன்படமாட்டாது என்றும்திராவிடர்களை அவமதிப்பதற்கும்சிறுமைப் படுத்தவதற்கும்அடக்குவதற்கும்ஒடுக்குவதற்குமே அந்த சபை கருவியாக இருக்க முடியுமென்றும்நாம் நெடுநாளாய்க் கூறி வந்ததையே இந்தச் சம்பவம் வற்புறுத்துகின்றதென்றாலும்நமது கருத்தை முன்பு ஏற்றுக் கொள்ளாதவர்களும் கூட நேரிடையாக இந்த உணர்ச்சியை - ஆணவத்திற்கு அடங்கி அடிமைகளாக இருக்க வேண்டிய பரிதாப நிலையை - உணர்ந்து அனுப விப்பதற்கும் இந்தச் சந்தர்ப்பம் பயன்பட்டிருக்கிறது என்பதை எண்ணி வரவேற்கிறோம்முதன் மந்திரி நேரு அவர்கள் நான் இனிமேல் பேசுவதெல்லாம் இந்துஸ்தானி யில்தான் பேசப்போகிறேன் என்று முரட்டுத்தனமாகப் பதில் கூறிய பிறகுதோழர் ஜான்மத்தாய் மலையாளத்தில் பதில் கூறினாரென்றால்அந்தச் சம்பவம் நமது தேசியத் தாள்கள் சொல்வது போல தமாஷுக்கு உரிய சம்பவ மாகத்தான் இருக்க முடியுமாஎன்றும்உன்னுடைய உரிமைக்கு என்னுடைய உரிமை குறைந்ததில்லை என்கிற உரிமை உணர்ச்சியைப் பிரதிபலிக்கவில்லையாஎன்றும் கேட்கின்றோம்மேலும்தோழர் ஜவஹர் அவர்களுக்கு இந்துஸ்தானியில் பேசுவதற்கு எவ்வளவு உரிமையும்நியாயமும்இருக்கிறதோ அந்த உரிமையும்நியாயமும்ஏன் மற்றவர்களுக்கு இல்லாமல் போகு மென்றும்அதை எப்படி தோழர் ஜவஹர் அவர்கள் மறுக்க முடியும்எனவும் எண்ணிய அடிப்படையின் மீதுதான்முதலாளிகளின் பாதுகாவலரான தோழர் ஜான்மத்தாய் மலையாளத்தில் பதில் சொல்லியிருக்க வேண்டுமென்று எவருமே எண்ண வேண்டும்இந்த உரிமை உணர்ச்சியை எவரும் குறை சொல்ல முடியாது.

ஆனால்நாட்டின் பல சிக்கல்களை அறுத்துமுடிவு கட்டுவதற்காகக் கூடியிருக்கும் இவ்வளவு பெரிய அறிவாளிகள்ஒருவர் கருத்தை மற்றவருக்கு அறிவித்துக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்கிற நியாயத்தைப் பின்பற்றாமல்தான் தோன்றித்தனமாய் ஒவ்வொருவரும் அவரவர்கள் மொழிகளில் பேசினார்கள் என்றால்இது எந்த நியாயத்திற்கு ஒத்ததாக இருக்க முடியும் எனவும்வாத்தியாராய் இருக்கும் தோழர் ஜவஹர் அவர்களே இப்படி வழி காட்டுவார்களேயானால்மாணவர்கள் தானங்களிலே இருக்கும் மற்ற மெம்பர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் எனவும்அங்கேயே ஒருவர் சொல்லியது போல இது ஏகாதிபத்திய மனப்பான் மையைக் காட்டவில்லையாஎனவும்இந்தப் போக்குத் தானே நாட்டின் எல்லாப் பிரச்சினைகளிலும் கையாளப் படும் எனவும்நம் திராவிடத் தேசியத் தோழர்களைக் கேட்க ஆசைப்படுகின்றோம்.

பலமொழி பேசப்படும் ஒரு துணைக் கண்டத்திலுள்ள சட்டசபையில்இதுபோல மொழித்தகராறு வருவது ஆச்சரியப்படத்தக்கதல்ல என்றாலும்இந்த நிலை மையை வளர விடாமல் இருப்பதற்கு என்ன வழிஎன் றால்சபைத்தலைவர் தோழர் மாவ்லங்கர் சொன்னது போல் எல்லோரும் இந்துஸ்தானியைக் கற்றுக் கொண்டு விடுவதுதான் தகராறு தீரும்வழி என்று தேசியத் தலை வர்களால்தொண்டர்களால் கூறப்பட்டு வருகின்றது.

இந்தி அல்லது இந்துஸ்தானி அல்லது பல மொழி களையும் கலந்து பேசப்படும் புதுக்கலவை மொழி என்கிற முறையில் ஏதேனும் ஒரு மொழி இந்தியா என்கிற துணைக் கண்டத்திற்குப் பொது மொழியாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதையும்பலவேறு மொழிகளும்நாகரிகப் பழக்க வழக்க மாறுபாடுகளும் நிறைந்துகுணச் செயல்களாலும் வேறுபட்டு விளங்கும் இந்தியாவைஒரே கலாச்சாரம் நிரம்பிய ஒரு நாடு என்று கொள்வது எல்லாப் பிரச் சினைகளையும் சிக்கலாக்கக் கூடிய ஒரு பெரிய தவறு என்பதையும்பல முறை விளக்கி வந்திருக்கிறோம்கனம் ஆச்சாரியாரவர்கள் இந்தியைக் கட்டாயமாக இத்திராவிடர் நாட்டில் புகுத்திய நேரத்தில் அதை எதிர்த்து நமது திராவிடத் தந்தை பெரியாரவர்களும்ஆயிரக்கணக்கான ஆண்களும்பெண்களும் குழந்தை களுடன் சிறை புகுந்துஇருவரை உயிர்ப்பலி கொடுத்துஉலகத்திலேயே இம்மாதிரியான ஒரு போராட்டம் நடந்ததில்லை என்று பேசும்படியாகச் செய்துஅதை வெறுத்து ஒழித்திருப்பது உலகமே மறந்துவிட முடியாத சம்பவமாகும்.

திராவிடர்கள் இந்திஇந்துஸ்தானி வேண்டாமென்று எதிர்ப்பதற்கு காரணம் என்னஇந்துஸ்தானியை வைத்தே இவ்விந்தியத் துணைக் கண்டத்தை ஆள வேண்டுமென்று நினைப்பவர்கள் இதனை எண்ணிப் பார்க்க வேண்டும்.

திராவிட நாட்டில் கட்டாய இந்தி பரவக் கூடாது என்று கிளர்ச்சி செய்து வெற்றி பெற்றவர்கள்பகுத்தறிவு வாதிகள்இந்தி என்ற மொழியின் மீது ஏன் அவர்களுக்கு வெறுப்புமனதிலுள்ளதை வெளிப்படுத்தும் கருவிதான் எந்த மொழியுமே தவிரஎந்த ஒரு மொழிக்கும் தனிப்பட்ட தெய்விக சக்தியோவேறு மகாத்திமியமோ இருக்கிறது என்பதை நம்பாதவர்கள் - ஒப்புக் கொள் ளாதவர்கள் - பகுத்தறிவுவாதிகள்அப்படியிருக்கஅவர்கள் ஏன் கட்டாய இந்தியை எதிர்த்தார்கள்?

இதனை எண்ணிப் பார்க்க வேண்டிய ஒவ்வொரு நேரத்திலும்எண்ணுவதற்கே மறுத்துவரும் தேசியத் திராவிடர்கள் தயவு செய்து இப்போதாவது நினைத்துப் பார்க்க வேண்டுகிறோம்.

இந்தியத் துணைக் கண்டத்தை ஒரு நாடு என்றும்ஒரே கலாச்சாரம் நிரம்பியதென்றும்வடநாட்டுத் தேசியத் தலைவர்கள் எல்லாம் சொல்லி வருவதையேஇந்த நாட்டுத் தேசிய வீரர்கள் என்று பட்டங்கட்டிக் கொண்டிருக்கும் மற்றவர்களும் சொல்லி வருகிறார்கள்ஒரே கலாச்சாரம் என்பதன் உண்மையான யோக்கியதை என்ன?

"எத்தனையோ நாடுகளின் கலாச்சாரங்கள் இந்த நாட்டில் வந்து கலந்தனஅவைகளையெல்லாம் தன்னுள் அடக்கித் தனது தனித்த உயர்வான கலாச்சாரம் விளங்க நிற்கிறது இந்தியாஇதைக் கண்டு நான் பெருமையடைகிறேன்"  என்கிறார் தோழர் ஜவஹர்லால்அவர் எந்தக் கலாச்சாரத்தை உயர்வானது என்று பாராட்டுகிறாரோ அந்தக் கலாச்சாரம் தான் திராவிடர் களைச் சூத்திரர்களாக்கிதேவடியாள் பிள்ளைகளாகச் செய்துசமுதாயத்தில் தாழ்வுறச் செய்துஒட்ட முடியாத பல ஜாதிகளாக்கிகல்லையும் மண்ணையும் கடவுள்களாகக் கும்பிடச் செய்துபார்ப்பனியம் மட்டும் உறிஞ்சிப் பிழைப்பதற்கும்மற்ற மக்கள் வாழ்வு எல்லாம் உறிஞ்சப்பட்டு வருவதற்குமாக ஆகிவிட்டது என்பதை யும்அந்த ஒரு கலாச்சாரத்திற்கு இந்த நாடு இடங் கொடுத்ததால்தான் நெஞ்சு உறுதியும் நேர்மைத் திறமு மின்றிவஞ்சகத்தை வீரம் என்றும்தந்திரத்தை அறி வுடைமை என்றும் கருதச் செய்துகாரண காரியத்தைக் கண்டறியும் சக்தியைஇழக்க செய்துவிட்டது என்ப தையும்அந்த ஒரு கலாச்சாரம் இன்னும் புனிதமானது என்று மதிக்கப்படுகிற நிலைமையினால் தான் இந்த  நாடு முற்போக்குத் தன்மையை இழந்திருக்கின்றது என்பதையும்அந்த ஒரு கலாச்சாரம் தான் பார்ப்பனிய இந்துமதக் கலாச்சாரம் என்பதாகும் என்பதையும் நாம் பலமுறை எடுத்துக்காட்டி வந்திருக்கின்றோம்.

இந்தியா ஒரு நாடு என்பதையும்,  அதற்கு ஒரு பொது மொழி தேவை என்பதையும் திராவிடர்கள் - பகுத்தறிவு வாதிகள் - ஒப்புக் கொள்ளாததைஎந்த அறிவுடைய வனும் மறுக்க முடியாத விதத்தில் திராவிடர் கழகம் விளக்கி வந்திருக்கின்றதுவிளங்கிக் கொள்ள மறுப்பவர் களுக்கு விளங்காமலிருக்க முடியுமே தவிரமற்றபடி அவ்விளக்கங்கள் எந்த மனிதனுக்கும் விளங்காமலிருக்க முடியாது.

ஒட்டி வாழ முடியாத - வாழுவதற்கான இயல்பில்லாத - ஒன்றையொன்று வஞ்சித்தே வாழும்படியான இயல் பினையூட்டி வருகிற வருணாசிரம இந்து மதக் கலாச் சாரம்என்றைக்கு இந்த நாட்டை விட்டு ஒழிகிறதோஒழிப்பதற்கு எப்பொழுது துணிவு பிறக்கிறதோஅப் பொழுது தான் இந்தியாவை ஒரு நாடு என்று சொல்ல முடியும் என்பதையும்அதற்கு உபாயமாக எமது பெரியாரவர்கள் கூறியிருக்கும்காந்தி நாடுகாந்தி மதம் என்பதைக் கைகொண்டு அரசாங்கத் தின் மூலமாகப் பரப்பினால்தான்ஒரு நாடு என்கிற சித்தாந்தம் நிலைக்க முடியும்பிரயோஜனத்தையும் கொடுக்குமென்பதையும்அந்த நிலையில் இந்த நாட்டிற்கு எந்த ஒரு மொழியையும்பொது மொழி யாக்குவது தான் எளிது என்பதையும்உண்மையிலேயே நாட்டு முன்னேற்றத்தில் அக்கறை யுடைய தேசியவாதிகள் என்பார்கள்விரைந்து தெளி வடைய வேண்டியனவாகும்.

ஜாதி பேதமற்ற - மத உணர்ச்சிக்கும் இடமில்லாத - சமதர்மக் குடியரசைக் காண்பதற்கான முயற்சி சிறிதும் இல்லை என்பதையும்மேலும் மேலும் இந்து மத சாம்ராஜ்ய ஆட்சியை நிலை நாட்டுவதற்குதான்சமதர்ம வீரர் ஜவஹர்ஜெயப்பிரகாசத்திலிருந்து சனாதனச் சாக்கடைச் சங்கராச்சாரி வரை முயற்சிக்கப் பட்டு வருகிறது என்பதையும்காந்தியவர் படுகொலை கூட இந்துமத பெருமையோடு அய்க்கியப்பட்டு விட்டதென்பதையும் பார்க்கும்போதுஇந்தியாவை ஒரு நாடு என்பதும்இதற்கு இந்துஸ்தானியோஇன்னொரு மொழியோ பொது மொழியாக இருக்க வேண்டும் என்பதும் வடிகட்டின வடநாட்டு ஏகாதிபத்தியத்தையும்வருணாசிரம ஆட்சியையும் புகுத்துகிற முயற்சியே யாகும்இம்முயற்சிதிராவிட உணர்ச்சியுடைய ஒருவன் உயிரோடு இருக்கும் வரையிலும் வெற்றிதராது என் பதைஇப்பொழுதும் வற்புறுத்திக் கூறுகிறோம்.

'குடிஅரசு' - தலையங்கம் - 28.02.1948

'கடவுள்' மனிதனுக்கு தோன்றியது எப்படி? - தந்தை பெரியார்

 

சுயமரியாதை இயக்கம் நாட்டில் பரவ ஆரம்பித்தபிறகு, அதிலும் அவ்வியக்கம் நாட்டில் சற்று செல்வாக்குப் பெறத் தொடங்கிய பின்பு, மக்களுக்குள் தானாகவே ஒருவிதக் குழப்ப உணர்ச்சி தோன்றியிருப்பதை நாம் நன்றாய் உணர்ந்து வருகின்றோம். அதோடு கூட பார்ப்பனர்களும் பார்ப்பனரல்லாதார்களில், அரசியல், தேசியம் ஆகியவைகளின் பேரால் பிழைக்கும் பிழைப்புக்காரர்களும், சமயம், புராணம், பிரசங்கம் ஆகியவைகளின் பேரால் பிழைக்கும் பிழைப்புக்காரர்களும் இவ்வியக்கத்தை எதிர்க்க கடவுளையும், மதத்தையும் பற்றிய பொதுமக்களின் குழப்பத்தைத் தங்களுக்கு ஆதாரமாய் வைத்துக்கொண்டும், மற்றும் திரித்துக் கூறிக்கொண்டும் விஷமப் பிரசாரம் செய்து வருவதனாலும், நமது இயக்கத்தில் உண்மையான பற்றுக்கொண்ட உண்மை நண்பர்களில் சிலர், இவ்விஷமப் பிரசாரத்தைக் கண்டு பயப்படுவதாகத் தெரிவதாலும், மற்றும் சில பெரியோர்களும், சமய சம்பந்தமாக மனத்துடிப்புக் கொள்வதாலும், நமது நிலையையும், கடவுள், மதம் என்பது பற்றி நாம் கொண்டுள்ள கருத்தின் நிலையையும் சற்று விளக்கிவிட வேண்டுமென்பதாகக் கருதி இதனை எழுதப் புகுந்தோம். இவைகளைப் பற்றி இதற்கு முன் பல தடவை பேசியும், எழுதியுமிருக்கின்றோம். 

ஆயினும் அவைகளைவிட இது சற்று தெளிவாக இருக்கலாம் என்கின்ற எண்ணத்தின் மீதே இதை எழுதுகின்றோம். வாசகர்கள் தயவுசெய்து இதைச் சற்று நிதானமாகவும், கவனமாகவும் படித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம். இந்த முதல் பகுதியானது இதே தலைப்பின் கீழ் திருநெல்வேலி ஜில்லா இரண்டாவது சுயமரியாதை மகாநாட்டின் முடிவுரையின்போது நம்மால் எடுத்துச் சொல்லப்பட்டதை அனுசரித்தும், சில நண்பர்கள் அதை விளக்கி எழுதும்படி சொன்னதை ஆதரித்தும் எழுதப்பட்டதாகும்.

நமது கவலை?

முதலாவதாக, நமக்குக் கடவுளைப் பற்றியாவது, மதத்தைப் பற்றியாவது சிறிதும் கவலை இல்லை என்பதாகவும், கஷ்டப்படும் மக்களின் துன்பம் நீங்கி அவர்களுக்கு அறிவு, ஆற்றல், இன்பம் ஆகியவைகளில் உள்ள கட்டுப்பாட்டை உடைத்து விடுதலையை உண்டாக்க வேண்டும் என்பதே முக்கிய கவலை என்பதாகவும் அநேக தடவைகளில் வெளியிட்டிருக்கின்றோம். அதுவும் பலர் நம்முடைய இம்முயற்சியில் கடவுளையும், மதத்தையும், கொண்டு வந்து குறுக்கே போட்டுவிட்டால்தான் நாம் அதைப்பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டியதாயிற்றே ஒழிய உண்மையில் கடவுளையும், மதத்தையும் பற்றிப் பேசவேண்டும் என்கின்ற அவசியத்தையோ, ஆசையையோ கொண்டு நாம் அதில் பிரவேசிக்க வில்லை.

அதுபோலவேதான் சைவ சமயத்தைப் பற்றியும் நாம் பேசவேண்டிய அவசியம் ஏற்பட்டதும் என்போம். எப்படியெனில் சில சைவத் தலைவர்கள் நமக்கு எதிராகத் தம்மால் கூடிய சூழ்ச்சிகள் எல்லாம் செய்து பார்த்தும், ஒன்றிலும் பயன் பெறாததால் கடைசியாகச் சமயமென்றும், சமயப் பெரியாரென்றும் கூறிக்கொண்டு அவ்வார்த்தைகளையே தமது ஆயுதமாகவும், சமய சம்பந்தமான சில பைத்தியக்காரர்களைத் தமக்குப் படை யாகவும் வைத்துக் கொண்டு, அவர்களைத் தெருவில் இழுத்து நம்மீது உசுப்படுத்திவிட்டுச் சூழ்ச்சிப்போர் தொடுக்க ஆரம்பித்ததின் பலனாய், சைவ சமயம் என்பதும் சமயாச்சாரியர்கள் என்பவர்களும் சந்திக்கு வரவேண்டியவர்களானதோடு சைவப் பெரியார்கள் என்பவர்களின் சாயமும் வெளுக்க வேண்டியதாய் விட்டது.

என்ன? எப்படி? எதனால்?

இன்றைய தினம் பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், ராமாயணம், பாரதம் ஆகியவைகளிலுள்ள கதைகளை நம்பி முக்கிய கதாநாயகர்களைக் கடவுள்களாக மதித்து வணக்கம், பூஜை, உற்சவம் செய்ய எவனெவன் சம்மதிக்கின்றானோ அவன் மாத்திரமே கடவுள் நம்பிக்கையும், சமயப் பற்றும் கொண்டவன் என்றும், மற்றவர்கள் நாத்திகர்கள் - சமயத் துரோகிகளெனவும் தீர்மானிக்கப்பட்டு, அதுவே முடிந்த முடிவாகவும் சொல்லப்பட்டுவிட்டது.

இது எப்படி இருந்தபோதிலும், கடவுள், மதம் என்பது என்னவென்பது பற்றியும், இவை எப்படி உண்டாயிற்று என்பது பற்றியும், இவற்றை உண்டாக்கியவர்கள் கெட்ட எண்ணத்தோடு உண்டாக்கினார்களா? அல்லது நல்ல எண்ணத்தோடு உண்டாக்கினார்களா? அல்லது அறியாமையினால் உண்டாக்கினார்களா? என்பவைகளைப் பற்றியும், இவற்றில் நமது அதாவது மக்கள் - கடமை என்ன என்பது பற்றியும் சற்று ஆலோசித்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். 

அதைப்பற்றி முதலாவதாக இங்கு குணம், உருவம், பெயர் அற்ற தன்மைகளையுடைய கடவுள் என்பதைப் பற்றியும், மக்களின் வாழ்க்கை நலத்திற்காக ஏற்படுத்தப்பட்ட கொள்கைகள் தான் மதம் என்று சொல்லப்படும் மதத்தைப் பற்றியுமே இங்கு விவரிக்கக் கருதியுள்ளோமே தவிர, மற்றப்படி பல கடவுள்களின் தன்மையையும், மதப்பிரிவுகளான கிறிஸ்தவ, இஸ்லாமிய, சைன, பவுத்த, சீக்கிய, சைவ, வைணவ, ஸ்மார்த்த, சாக்கிய, வாம முதலிய பல உள் மதங்களைப் பற்றியும் நாம் இங்கு தனித்தனியாகப் பிரஸ்தாபிக்க உத்தேசமில்லை. ஏனெனில், அவற்றிற்கு ஏற்கெனவே மறுப்புகள் தாராளமாய் வெளிப்பட்டு ஒருவருக்கொருவர் பதில் சொல்ல முடியாமல் தத்துவார்த்தம் என்கின்றதற்குள் அடைக்கலம் புகுந்தும், நம்பித்தான் ஆகவேண்டும் என்கின்ற நிர்ப்பந்தத்திற்குள் புகுந்துமே தான், ஒவ்வொருவரும் அவரவர்கள் கடவுளையோ, கடவுள் தூதர்களையோ, அவதாரங்களையோ, சமயங்களையோ, சமயாச்சாரி யார்களையோ காப்பாற்றிக்கொள்ள முடிந்ததேயொழிய அறிவின் மீதோ, நியாயத்தின் மீதோ, நிலை நிறுத்த முடியாமல் போய்விட்ட விஷயம் உலகம் அறிந்த தாகும். ஆதலால் இப்பகுதியில் நாம் அவற்றில் பிரவேசிக்கவில்லை.

சக்தி என்பது எது?

முதலாவது மக்களுக்குக் கடவுள் எப்பொழுது? எப்படி ஏற்பட்டது? என்பதைப் பற்றி ஆராய்வோம். மனிதன் பிறந்து வளர்ந்து நினைக்கப்பட்ட பிறகுதான் கடவுள் என்கின்ற ஒரு வஸ்து நிச்சயம் செய்யப்பட்டு இருக்கவேண்டும். அதை யாரும் மறுக்க முடியாது. ஏனெனில் இப்போதுகூட மக்களுக்குப் பிறர் சொல்லிக் கொடுத்த பிறகுதான் கடவுள் என்கின்ற பேச்சும், நினைப்பும் ஏற்படுகின்றதே தவிர தானாக ஏற்படுவதில்லை. எப்படியெனில், சிறு குழந்தை களை நாம் கட்கத்தில் இடுக்கிக்கொண்டு ஒரு உருவத்தையோ, வஸ்துவையோ காட்டி ‘சாமி’ என்றும், அதைக் கைகூப்பிக் ‘கும்பிடு’ என்றும் சொல்லிக்கொடுத்த பிறகே, குழந்தை சாமியைக் கும்பிட அறிகின்றது. அதுபோல, ஆதியிலும் மனிதன் பிறந்த பிறகுதான் அவன் மனதிற்குக் கடவுள் நினைப்புத் தோன்றியிருக்கவேண்டும்.

அது எப்படி என்றும், எப்போதென்றும் பார்ப் போமானால் சாதாரணமாக மனிதனுக்கு அறிவு வளர்ச் சியும், ஆராய்ச்சி வளர்ச்சியும் இல்லாத காலத்தில்தான் கடவுள் நினைப்புத் தோன்றி இருக்கவேண்டும். 

கடவுள் என்பது 

கடவுள், ஸ்வாமி அல்லா, காட் என்ற தமிழ், சமஸ்கிருதம்; அரபி, ஆங்கிலம் முதலிய பல பாஷைகளில் பல சொற்களாக இருந்தாலும், குறிபிட்ட அர்த்தத்தில் உலகத் தோற்றத்திற்கும், நடப் பிற்கும், அழிவிற்கும் காரணமாகிய ஒரு சக்தியையே குறிப்பிடுவதாகவும், அதாவது சிலரால் இயற்கை என்று சொல்லப்படுமானால், அவ்வியற்கையின் இயங்குதலுக்கும், பஞ்சபூதக்கூட்டு என்று சொல் லப்படுமானால் அக்கூட்டின் சேர்க்கைக்கும், ஏதாவது ஒரு சக்தி இருந்துதானே ஆகவேண்டும் என்பதுவும், அந்த சக்திதான் கடவுள், எல்லாம் வல்ல ஆண்டவன், அல்லா, காட் என்று சொல்லப்படுகின்றது என்று சொல்வதானாலும், அந்த சக்தி என்னும் கடவுளே எப்படி மக்கள் மனதிற்கு வந்தார் என்பதுதான் இங்கு விசாரிக்கத்தக்கதாய் இருக்கின்றது. 

ஆகவே, அந்த சக்தி மனிதனுக்குத் தோன்றிய காலம் எது என்பதாகவும், அது நம் நாட்டைப் பொறுத்தவரை எப்படியிருந்தது என்பதாகவும் பார்க்க வேண்டுமானால், நம் நாட்டிலுள்ள கடவுள்களைக் கொண்டுதான் அதைத் தாராளமாய் உணர முடியும். அதாவது இப்போது நமது நாட்டிலுள்ள கடவுள்கள் எவையென்றால் பூமி, மலை, காற்று, நெருப்பு, நதி, சூரியன், சந்திரன், நட்சத்திரம், மழை, இடி, மின்னல், மேகம், நோய்கள், பயங்கரமான மிருகங்கள் ஆகியவைகளெல்லாம் கடவுளாகக் கருதப்படுகின்றன. 

இவைகளெல்லாம், இவற்றின் உண்மையை அறிய ஆற்றல் இல்லாத காலத்தில் கடவுளென்று ஒப்புக் கொள்ளப்பட்டவைகள். அதிலும் இமய மலையே கைலையங்கிரியாகவும், அதுவும் வெள்ளி மலையாகவும், அங்கு கடவுள் இருப்பதாகவும், அங்கிருந்து வரும் நீர் அம்மலையிலுள்ள கடவுளின் தலையிலிருந்து வருவதாகவும், கருதப்பட்டதோடு, இமயமலைக்கு அப்பால் ஒரு நாடும் கண்டுபிடிக்க முடியாதிருந்ததும், மேல்நாட்டை மேல்லோகமென்றும், கீழ்நாட்டை பாதாளலோகம், நரகலோகம் என்றும், இப்படிப் பலவாறாகக் கடவுள் தன்மையைச் சொன்னதற்குக் காரணமென்னவென்று பார்க்கும் போது அவற்றின் உண்மையை அறிய முடியாததாலேயே அவைகளைக் கடவுளென்றும், அவற்றின் இயங்குதலைக் கடவுள் சக்தி என்றும் சொல்லவேண்டிய அவசியம் தானாகவே ஏற்பட்டது.

இப்போதும் மனிதன் தன்னால் முடிந்தவைகள் போக, முடியாதவைகளுக்கே கடவுள் சக்தி என்று சொல்லி விடுகின்றான். உதாரணமாக, சிறு குழந்தைகள் ஒரு ஜால வேடிக்கைக்காரனுடைய செய்கையை மந்திர சக்தி என்றும், தெய்வ சக்தி என்றும், உபாசனா சக்தி என்றும் கருதுகிறார்கள். சிறுவனாயிருக்கும் பொழுது நாமும் அப்படியே கருதியிருந்தோம். இப்போது அறிவு வளர்ச்சி பெற்றபின் அந்த ஜால வேடிக்கைகளை மந்திர சக்தி என்று எண்ணாமல் தந்திரம், கைத்திறம் என்று சொல்லுகின்றோம். மற்றும் அந்த ஜால வேடிக்கைக்காரன் செய்யும் ஜாலத்தின் வழி இன்னதென்று நமக்குத் தெரியாவிட்டாலும் கூட நாம் அவற்றை ஒரு காலமும் மந்திரசக்தி என்றோ, தெய்வ சக்தி என்றோ, சொல்லாமல் “இது ஏதோ தந்திரம்தானே ஒழிய வேறில்லை; ஆனால் அது இன்னது என்று கண்டுபிடிக்க நம்மால் முடியவில்லை” என்று சொல்லி விடுகிறோம். 

எனவே, ஒரே காரியம் நமக்கே ஒரு காலத்தில் மந்திரமாகவும், தெய்வ சக்தியாகவும் தோன்றியது. பிறகு அது தந்திரம் என்று தோன்றக் காரணம் என்னவென்றால், அது அறிவு வளர்ச்சியும், ஆராய்ச்சியின் பலனுமேயாகும். அதுபோலவே நமக்கு இப்போது தெய்வ சக்தி, கடவுள் சக்தி என்று தோன்றுகின்ற காரியமெல்லாம் மேல்நாட்டாருக்குக் கடவுள் சக்தி என்று தோன்றுவதில்லை. உதாரணமாக, சூரிய, சந்திர கிரகணம் இன்னது என்று கண்டுபிடிக்க முடியாத காலத்தில் நாம் அவைகளுக்கு ஒரு தெய்வ சக்தியைக் கண்டுபிடித்து, சூரியன் என்கின்ற தெய்வத்தை ராகு என்கின்ற பாம்பு பிடிப்பதாகவும், அது சூரியன் என்கின்ற கடவுளுக்கு ஏற்பட்ட சாபம் என்றும் சொல்லி, அச்சாபம் தீர நாம் மந்திரங்கள் ஜெபித்து, அத்தோஷம் தீர ஸ்நானமும் செய்து வருகின்றோம். இது வானசாஸ்திரம் தெரியாத காலத்தில் ஏற்படுத்திக் கொண்ட கருத்தாகும். இப்போது வானசாஸ்திரம் தெரிந்தவர்கள் பூமி, சூரியன் இவற்றின் இயங்குதல், அதன் காலஅளவு ஆகியவைகளைக் கண்டுபிடித்தபின், சூரியனைப் பாம்பு கடிப்பதில்லை என்பதையும் ஒருவாறு நன்றாய் உணருகின்றோம். அதுபோலவே எங்கிருந்து எப்படி மழைத் தண்ணீர் வருகின்றதென்பது தெரிந்தவுடன் நதிக் கடவுளும், மேகக் கடவுளும், வர்ண பகவானும் சிறிது சிறிதாக நம் மனதைவிட்டு மறையத் தொடங்கிவிட்டன.

அதுபோலவே, வியாதிகள் எப்படி வருகின்றன என்கின்றதான சுகாதார ஆராய்ச்சியும், உடற்கூற்று ஆராய்ச்சியும் நமக்குத் தெரியவந்த பின்பு பேதி, மாரி, அம்மை முதலிய தெய்வங்களின் உணர்ச்சியும் மதிப்பும் சிறிது சிறிதாக மறையத் தலைப்பட்டன. இதுபோலவே “காற்று, கருப்பு, பேய்” முதலியவைகளும் மறைந்து வருகின்றன. துப்பாக்கி, பீரங்கி முதலிய ஆயுதங்கள் கண்டுபிடித்தபின் யானை, புலி, சிங்கம் முதலிய தெய்வங்களைப் பற்றிய பயமும் மறைய ஆரம்பித்துவிட்டன. இந்த முறையில் இனியும் நமக்குள் மீதி இருக்கும் கடவுள் உணர்ச்சிகள் எவை என்று பார்ப்போமேயானால், காரணகாரியம், ஆதாரம் முதலிய விவரங்கள் கண்டுபிடிக்க முடியாதவைகளையே கடவுள் செயல் என்றும், கடவுள் சக்தி என்றும் சொல்லி வருகின்றோம். இவைகளும் நாளுக்கு நாள் மனிதன் அறிவு வளர்ச்சியும் ஆராய்ச்சியும் முதிர முதிர மறைந்து கொண்டே தான் வரும். மேலும் இப்போது ஒருவருக்குக் கடவுள் சக்தி என்று தோன்றப்படும் காரியங்கள், மற்றொருவருக்குக் கடவுள் சக்தி என்று தோன்றப்படாமல் இருப்பதையும் பார்க்கின்றோம். அது அவ்விருவருடைய அறிவு ஆராய்ச்சி ஆகியவற்றின் வித்தியாசமேயாகும்.

ஏன் இருக்கிறது?

இப்போதும் நம் மனதிற்கு எட்டாத காரியங்களை மேனாட்டார் செய்யும்போது நாம் அதிசயப்பட்டாலும், அதை மந்திர சக்தி என்று நாம் சொல்லத் துணிவதில்லை. இந்த அளவுக்கு நாம் தைரியம் பெற்றுவிட்டோம் என்றாலும், நமக்குப் பூரண அறிவும் ஆராய்ச்சி முடிவும் ஏற்படும் வரை கடவுள் உணர்ச்சி நம்மை விட்டு விலக முடியாது. அன்றியும் வாழ்க்கையில் பக்குவமடையாதவர்களுக்குக் கடவுள் உணர்ச்சி சிறிது காலம் வரை இருந்தே தீரவேண்டியதாயும் இருக்கின்றது. அதாவது கஷ்டப்பட்டு ஏமாற்றமடைந்தவனுக்கும், ஈடு செய்யமுடியாத நஷ்டமடைந்தவனுக்கும் கடவுள் செயல் என்பதைச் சொல்லித்தான் ஆறுதலையும், திருப்தியையும் அடையச் செய்ய வேண்டியிருக்கின்றது. நல்ல அறிவும் ஆராய்ச்சியும் உடையவர்களும் தங்களுக்குக் காரண காரியம் எட்டாத இடத்திலும், ஈடு செய்யமுடியாத இடத்திலும் கடவுள் செயல் என்பதைக் கொண்டு தான் திருப்தி அடைகின்றார்கள்.

அப்போது தங்கள் அறிவுக்கு மேல் ஒன்று இருப்பதை எண்ணித்தீர வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் உறுதியான பக்குவமடைந்தவர்கள், எந்த விஷயத்திற்கும் தங்களுக்குத் தெரிந்த காரணத்தைக் கொண்டு சமாதானமடைவதும், தெரியாததாயிருந்தால் நமக்கு எட்டவில்லை என்றோ, அல்லது இதுதான் இயற்கை என்றோ கருதித் திருப்தியடைவதுமாய் இருக்கின்றார்கள். எனவே சாதாரண மக்களின் கடவுளுக்கும், சற்று அறிவுடைய மக்களின் கடவுளுக்கும், ஆராய்ச்சிக்காரர்களின் கடவுளுக்கும், பக்குவமடைந்தவர்கள் எண்ணத்திற்கும் வித்தியாசங்களுண்டு. ஒருவருக்கொருவர் கடவுள் வணக்கத்திலும், கடவுள் மீது சுமத்தும் பொறுப்பிலும் வித்தியாசங்களுண்டு.

குறிப்பு: (மெட்டிரியலிஸம் (உலோகாயதம்) என்ற தலைப்பில் பெரியார் அவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன் பல இடங்களில் பேசியதும், எழுதியதும் ஆன தொகுப்பு)

குடிஅரசு - கட்டுரை - 16.04.1949

பெரியார் சிலை சந்தித்த வழக்கும் - பாராட்டுக்குரிய உயர்நீதிமன்றத் தீர்ப்பும்!

 

பெரியார் ஒரு சமூகப் புரட்சியாளர். பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழ்ச் சமூகத்தில் ஊடுருவியிருந்த, ஆழங்காண முடியாத ஜாதியத்தை, மூடப் பழக்கங்களை எதிர்த்துக் களம் அமைத்து வெற்றியையும் பெற்றவர். இந்த வெற்றி முழு வெற்றியா ? என்று சிலர் வினவக்கூடும். உலகில் எந்தச் சமூகப் புரட்சியாளரும் தன் வாழ்நாளில் முழு வெற்றியைப் பெறவில்லை. ஆனால், ஜாதியத்தின் ஆணிவேரை, சல்லி வேரை அசைத்து, வெட்டிய முதல் வெற்றி பெரியா ரின் வெற்றி, இதை முற்றிலும் உணர்ந்த அறிஞர் அண்ணா 1968 இல், தந்தை பெரியாருக்கு எழுதிய மடலில், "எந்தச் சமூகச் சீர்த்திருத்தவாதியும், தன் வாழ் நாளில், தங்களைப் போல் வெற்றி பெற்ற தில்லை'' என்று குறிப்பிட்டுள்ளார். பெரியா ரின் சாதனைகளை உள் உணர்ந்து, பெரியா ரின் பெருமையை, சிறப்பை உலகறியச் செய் தார் அறிஞர் அண்ணா.

இங்கிலாந்து நாட்டுப் புகழ்மிக்க அரசியல் அறிஞர் பேராசிரியர் ஹரால்டு லாஸ்கி “சமூகச் சிந்தனையின் வரலாற்றில் காரல் மார்க்சை விஞ்சிய தனிச்சிறப்பை யாரும் பெற்றிருக்கவில்லை. வரலாற்று ஆய்வு நோக்கோடு அவரின் பங்களிப் பைப் பார்க்காமல், மார்க்சைப் பாராட்ட இயலாது” (No name in the history of social ideas occupies plece more remarkable than that of Karl Marx. His position, indeed cannot be appreciated unless it is seen in its historical perspective......) என்று குறிப்பிட்டார்.

காரல் மார்க்சைப் போன்று உலகச் சிந்தனையார்கள் சிலர்தான் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கா கக் களம் அமைத்து இறுதி வரை போராடி னார்கள். இவ்வரிசையில் இந்தியத் துணைக் கண்டத்தில் பெரியாரின் பங்கு ஈடு இணையற்றது என்பதைப் பல ஆய் வாளர்கள் இன்று கசடறக் கற்று, உணர்ந்து தமது படைப்புகளில் பெரியாரின் அளப் பரிய தொண்டினை இணைத்து ஆய்வுத் தளங்களில் உயர்த்தி வருகின்றனர். இரா மச்சந்திர குகா படைத்துள்ள “புதுமை இந்தியாவின் சிற்பிகள்” (Makers of Modern India 2010) என்னும் நூலில் பெரியாரின் தொண்டு பாராட்டப் பெற்று உள்ளது. உலக அளவில் புகழ் பெற்ற பென் குயின் பதிப்பகம், பெரியாரின் படைப்பு களை ஆங்கில மொழியில் வெளியிட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கெனவே அறிஞர் அண்ணாவின் வாழ்வினையும், தொண்டினையும் நூலாக அப்பதிப்பகம் பதிப்பித்துள்ளது,

இவ்வாறாக, திராவிடர் இயக்க முதன் மையான தலைவர்களின் சிந்தனைகள் உலக அளவில் ஆய்வுக்கு எடுத்துக்கொள் ளப்பட்டு போற்றப்பட்டு வருகின்றன. பெரியாரின் பெரும் தொண்டினைப் போற் றிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் “மண் டைச்சுரப்பை” என்று கூறி பெரியாரின் அறிவாண்மையை அழகுறப் பாவில் படம் பிடித்துள்ளார்.

பெரியார் எனும் அறிவுக் களஞ்சியத்தில் ஒளிரும் துகள்களில் ஒன்றினை எடுத்துக்காட்டுவது இங்கு சாலப் பொருத் தமாக அமைகிறது. “அறிவுத்தொண்டு செய்வது என்பது மற்ற காரியம் போல அல்ல, பகுத்தறிவுத் தொண்டு செய்கிறவ னுக்கு எந்த விதமான பற்றும் இருக்கக் கூடாது. அறிவுப்பற்று பிடித்து நீதிப்பற்றைத் தவிர பகுத்தறிவாதிக்கு மற்றைய கடவுள் பற்றோ, ஜாதிப் பற்றோ இருக்கக்கூடாது..... எப்படி ஜாதி என்பது செயற்கையோ அது போலப் பொருளாதாரத்தில் பெரியவனாக இருக்கின்றதும் செயற்கையே ஆகும். எவனும் பிறக்கும் போதே பூணூலுடன் பிறக்கவில்லை. அதுபோலப் பிறக்கும் போதே பணத்தைக் கொண்டு வரவில்லை” (6.7.1965 இல் செயங்கொண்டத்தில் நடை பெற்ற விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய உரை - விடுதலை 6.8.1965) 

இத்தகைய சிந்தனையை - உண்மை அறிவை வெளிப்படுத்திய பெரியாரைச் சில மண்டைச்சுருங்கிகள் அவ்வப்போது வம்புக்கு இழுக்கிறார்கள். அவற்றில் ஒன்று தான் பள்ளி வளாகத்தில் பெரியார் சிலை வைக்கக் கூடாது என்று அண்மையில் உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்காகும். இவ்வழக்கில் நீதிநாயகம் சந்துரு அளித்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். பெரியார் குறிப்பிட்டது போல (1965) “நீதியானவருக்கு நீதிப்பற்றைத் தவிர வேறு பற்று இருக்கக் கூடாது” என் பதற்கு இலக்கணமாக, நீதித் துறையில் தனித்தன்மையோடு எடுத்துக்காட்டான தீர்ப்புகளை வழங்கியவர் நீதிநாயகம் சந்துரு. எனவே, பெரியார் பற்றி பெரியார் சிலை வழக்கில் நீதிநாயகம் சந்துரு, அவ ருக்கே உரித்தான நீதிச்சான்றாண்மை யோடு வழங்கிய தீர்ப்பினை மொழி பெயர்த்து வழங்குவதில் பெருமிதம் பிறக்கிறது.

தலைமை நீதிபதி ஏ.பி. ஷா

தீர்ப்பு விவரம்:

1. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டணம் அரசு மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர் சங்கத் தலைவர் சுந்தரேசன், பள்ளிக்கு அருகில் உள்ள பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று தொடுத்த வழக்கின் மீது நீதிநாயகம் சந்துரு 8.6.2012 அன்று அளித்த தீர்ப்பில் இடம் பெற்றுள்ள கருத்துகள்.

11.12.2009 இல் (தி.மு.க. ஆட்சியில், தந்தை பெரியார் சிலை அமைப்புக் குழு வினரால் அளிக்கப்பட்ட வேண்டுகோ ளுக்கு இணங்க, பள்ளிக் கல்வி இயக்கு நரகத்தால் அனுமதி அளிக்கப்பட்டது, பள்ளியின், தென்கிழக்குத் திசையில் 10 அடி நீள அகலத்தில் இச்சிலையை நிறுவு வதற்கு தந்தை பெரியார் சிலை அமைப்புக் குழுத் தலைவருக்கு அனுமதியும் பரா மரிப்புப் பணியை மேற்கொள்வதற்கு நீதிமன்றத் தீர்ப்பின் வழியாக ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.

2. அரசு (பெரியார் சிலை) ஆணை யிடுவதற்கு முன்பு பள்ளிக் கல்வி இயக்கு நரிடம் கருத்துக் கேட்டது. இதற்கு அரசுக்கு பதில் அளித்த பள்ளிக் கல்வி இயக்குநர், இச்சிறிய பகுதி மாணவர்களின் விளை யாட்டு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. சிலையை நிறுவுவதால் பள்ளிப் பணிக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது. சிலை நிறுவப்படும் போது தேவையான அளவுக்கு சுற்றுச்சுவர் கட்டப்படும். சிலை அமைப்புக் குழுவின ரின் செலவிலேயே வெண்கலச் சிலை உருவாக்கப்படும். எதிர்காலத்தில் சிலை பராமரிப்புப் பணியை இக்குழு மேற் கொள்ளும். எதிர்காலத்தில் சிலைக்கு மாலையிடும் பணிக்காகத் தேசிய நெடுஞ்சாலையில் சிலைக்குச் செல்லும் வகையில் இரும்புக் கதவுடன் கூடிய வழி அமைக் கப்படும், இக்கருத்து பெற்றோர் ஆசிரியர் கழகத்திடம் விவாதிக்கப்பட்டது. 10 அடி நீள, அகலத்தில் சிலை அமைப்பதற்கு பெற்றோர்ஆசிரியர் கழகத்தின் செயற் குழு 4.9.2008 அன்று தீர்மானத்தின் வழியாக சிலை அமைப்பதற்கு எந்த விதத் தடையும் இல்லை என்பதை உறுதி செய் தது. மேற்குறிப்பிட்ட விவரங்கள் அடிப் படையில் பள்ளிக்கல்வி இயக்குநர் பள்ளிக் கட்டடத்திற்குத் தென்கிழக்குப் பகுதியில் சிலை அமைப்பதற்கு அரசுக்குப் பரிந்து ரையை (அரசாணை பலவகை எண்.331, நாள் 11.2.2009) வழி அளித்தார்.


நீதிபதி சந்துரு
3. இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்ற மேல்முறையீட்டு வழியாக இவ் விசாரணைக்குத் தடை கோரப்பட்டுள்ளது. அரசாணை வெளியிடப்பட்டு இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மனுதாரர் இந்த ஆணையை எப்படி எதிர்க்க முன்வந்தார் என்பது தெளிவற்ற நிலையில் உள்ளது. மனுதாரர் மனுவுடன் இணைக்கப்பட்ட எல்லாவித ஆவணங்களும் இந்த வழக் குக்கு உரித்தானதாகவோ, உகந்ததாகவோ இல்லை.

4. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது, மரியாதைக்குரிய அரசின் தலைமை வழக்குரைஞர் நவ நீதகிருஷ்ணன் அரசு சார்பில் இந்த வழக் குக்காக வாதிட்டது குறிப்பிடத்தக்கதாகும். மனுதாரருக்காக வாதிட்ட வழக்குரைஞர் எம்.ராமதாசு மற்றும் அரசு தலைமை வழக் குரைஞர் நவநீதகிருஷ்ணன் ஆகியோ ரின் வாதங்கள் கேட்டறியப்பட்டன.

5. மனுதாரர் காவேரிப்பட்டணத்தில் பால் பண்ணை நடத்தி வருகிறார். சமூகப் பணியையும், சமுதாயத் தொண்டினையும் ஆற்றி வருகிறார். 18.6.2010 இல் பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தின் தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2011 ஆம் ஆண்டு பள்ளிச் சுற்றுச் சுவரின் தென் கிழக்கு முனை, சிலை அமைப்பதற்காக உடைக்கப்பட்டது என்று மனுதாரர் தெரி வித்துள்ளார். 

6. மேலும், அரசு 2.3.2010 அன்று வெளி யிட்ட அறிவிக்கை வழியாக சுற்றுச்சுவரை மீண்டும் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுத்து, அதைத் தெரிவிக்கும்படி கேட் டுக்கொண்டது. காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த பா.ஜ.க. உறுப்பினர் ஒருவரால் புகார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அரசால் இந்தக் கடிதம் வெளியிடப்பட்டது.

மேற்கூறிய கருத்து மாறுபாட்டால் பள்ளித் தலைமை ஆசிரியர் சிலை அமைப்புக் குழுத் தலைவருக்கு பெரியார் சிலை அமைக்கும் பணியைச் சிறிது காலத் திற்குத் தள்ளி வைக்கும்படி கேட்டுக் கொண்டார். 15.6.2011 இல் பாஜகவின் உட் கிளையால் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நிறுவனர் (ஹெட்ஹேவரின்) சிலையை நிறுவ மடல் அனுப்பப்பட்டது. இதற்கிடை யில் பள்ளித் தலைமை ஆசிரியர் 22.7.2011 அன்று காவேரிப்பட்டணம் சட்டம் ஒழுங் குக் காவல்துறை ஆய்வாளருக்குத் தெரி வித்த தகவலில், சிலை அமைப்புக் குழு வினர் சிலையை அமைப்பதற்கான அடித் தளக் கட்டுமானப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் தங்களின் பணி யினை நிறுத்த முடியாது என்று அறிவித்து, முன் அறிவிப்பின்றி எவ்வித நடவடிக் கையும் மேற்கொள்ளக் கூடாது என்று உள்ளூர் முன்சீப் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இக்காலக் கட்டத் தில் மனுதாரர் 24.4.2012 அன்று மாநில அர சுக்கு ஓர் அறிவிக்கையையும் நீதிமன்றத் தில் இந்த முறையீட்டு மனுவினையும் சமர்ப்பித்துள்ளார்.

7. இச்சூழலில் இந்த முறையீட்டு மனு எவ்வாறு ஏற்கத் தகுந்தது என்று தெளி வாக்கப்படவில்லை. இந்த மேல் முறை யீட்டு மனுவை நீதிமன்றத்தில் அளிப்பதற் குத் தனக்குரிய சட்டப்படியான தகுதி உரிமையைக் குறிப்பிடவில்லை. பள்ளிக் கூடத்தின் செயல்பாடுகளை எவ்விதத் திலும் இடையூறு விளைவிக்காத 10 அடி நீள அகலத்திற்குள் தந்தை பெரியாரின் சிலையைப் பள்ளியின் தென்கிழக்குப் பகு தியில் நிறுவுவதை எதிர்க்கிறார். பள்ளிக் கூடத்தின் உண்மையான நோக்கத்தையே கேள்விக் குறியாக்கியுள்ளார். பெரியார் தமிழ்ச் சமுதாயத்தின் மாற்றத்திற்குப் பல் வகையில் ஆற்றிய பணிகளை அறியாமல், பெரியாரின் கொள்கைகளை மனுதாரர் உருவகப்படுத்தியிருப்பது வழியாகத் தனது அறியாமையைத் தன்னையறியாமல் வெளிப்படுத்தியுள்ளார். நாத்திகக் கொள் கைகளைப் பரப்பியவர் என்ற முத் திரையை மட்டும் அளித்துவிட முடியாது. ஜாதிய ஒடுக்கு முறை, சமூக சமத்துவம், பெண்விடுதலை ஆகிய தளங்களில் பெரியாரின் கருத்துகள் அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த தலைவர்களின் கருத்து களைவிட விஞ்சியிருக்கின்றன. பூலே, அம் பேத்கர் போன்று ஜோதிபாசும், பெரியாரும் தனிச் சிறப்புக்குரிய தொலைநோக்குப் பார்வையும், நிறைந்த இரக்க உணர்ச்சியும், இயற்கையிலேயே மிகப் பெரிய ஆற்றலும், தனித்த சிந்தனைத் திறனும், ஆளுமையும் உடைய மனிதர்கள் ஆவார்கள். தங்களது சமூகத்தில் ஊடுருவியிருந்த அநீதி, அறி யாமை, துன்பம் ஆகியவற்றை ஆழ்ந்து உணர்ந்து அவற்றைத் தங்களுடைய நேர்மைமிக்க திறனாய்வு மதிநுட்பத்தால் உணர்ந்து, உலகளாவிய புரிதலும், ஆய் வும், செயல்பாடுகளும் உருவாவதற்கு வழி வகுத்தவர்கள். ஜாதிய அமைப்பில் ஒடுக்கு முறை, அநீதி, கேடு புதைந்திருப்பதைத் தங்களுடைய அரிய படைப்பாற்றல் மிக்க செயல்பாடுகளால் அடையாளங் கண்டு அறைகூவல் விடுத்தனர். இந்து சமூக அமைப்பையும் அதனுடைய ஆணி வேரையும் இவ்வகையில் அவர்கள் அசைத்தனர். அதன் தலையின் மீது நிற்பதற்கு பெரியாரின் சிறப்பு மிக்க உரை கள் பயன்பட்டன. 

8. தலைமை நீதிபதிஏ.பி.ஷா (மேனாள்) அவர்கள் தலைமையில் அமைந்த அமர்வு, பெரியார் திரைப்படம் தொடர் பான வழக்கில், பெரியார் ஆற்றிய பணி யைப் பாராட்டியுள்ளது. (வழக்கு டி.கண் ணன் எதிர் லிபார்ட்டி கிரியேட்டர், இயக்கு நர் ஞானசேகரன் (2, 1015), அத்தீர்ப் பின் 7 ஆம் பத்தியில் “பெரியார் ஈ.வெ.ராம சாமி சமூக நீதியின் ஏந்தலாக, பகுத்தறிவை, சுயமரியாதையை, சமூகப் புரட்சியைப் பரப்பியவராக, தனது வாழ் நாள் முழுவதும் தீண்டாமை ஒழிப்பு, ஜாதி முறை அழிப்பு, பெண்களின் உரிமைகளை உயர்த்திப் பிடித்தல் ஆகியவற்றுக்காகப் பணியாற் றினார். சமூகத்திற்குத் தீமை களை உரு வாக்கி, பயனற்ற தன்மைகளை உருவாக் கிய கண்மூடித்தனமான நம்பிக் கைகளை, மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் பகுத்தறி வுவாதியாக மக்களிடம் அறிவியல் உணர் வைத் தூண்டினார். 1926இல் சுயமரியாதை இயக்கத்தை நிறுவினார். அறியாமையில் மூழ்கி மக்களைக் கடவுள் பயத்தில் ஆழ்த்தும் பிராமண மேலாதிக்கத் தையும், புரோகித வகுப்பினரை நிலை நிறுத்தும் ஒரு வகையான கேடு விளைவிக் கிற முறையையும் மதம்தான் தொடர்ந்து நிலை நிறுத்துகிறது என்று பெரியார் நம் பினார். எனவே, கடவுள் மதத்தன்மைக்கு எதிராகப் போரிட்டார். வீ.கீதா-எஸ்.வி.ராஜ துரை எழுதிய “பிராமணரல்லாதவர்களின் புத்தாயிரத்தாண்டுப் பயணம்’ நூலில், சுய மரியாதைக்காரர்களின் மதத்தைப் பற்றிய விமர்சனம், (பக்கம் 307) பெரியாரைப் பற்றிய விளக்கம் பின்வருமாறு தரப்பட்டு உள்ளது:

“இந்துத்துவத்தைப் பற்றிக் கடந்த காலத்தில் பெரியார் செய்த விமர்சனத்தைத் தற்காலத்தில் ஒருவர் தனது வாழ்நாளில் செய்வாரெனில், அச்செயல் காலமெல் லாம் விமர்சிக்கப்படும்; எதிர்க்கப்படும். அச்செயலானது அவருடன் இருக்கும் இரு பார்ப்பனப் பிச்சைக்காரர்களுடன் அவருக்கு இருந்த உறவாகவும், நம்பிக் கையை நகைப்புக்குரியதாக்கிய நாடக மாகவும் காணக்கூடியதாக இருக்கும். அதிகாரமும் ஆதிக்கமும் உடைய சமூகப் பழக்க வழக்கங்களின் கட்டமைப்புக் குள்ளே அடுத்தடுத்து அழிவையும், அவ மதிப்பையும் ஏற்படுத்திப் பகுத்தறிவாளர் நிலையான மகிழ்ச்சியடைவர். மதம் பற்றிய பெரியாரின் வெளிப்படையான உருவ வழிபாட்டு எதிர்ப்பாலும், வழிகாட் டுதலாலும் பல சுயமரியாதைக்காரர்கள் நாத்திகத்தையும், கடவுள் வெறுப்புக் கோட்பாட்டையும், செயல்முறையையும் முன்னெடுத்துச் சென்றனர். இச்செயல் கடும் கோபத்தையும், வெறுப்பையும் எதி ரொலித்தது. இவர்கள் கடவுள், மதம், மூட நம்பிக்கைகளின் போலி மதிப்பை அழிக் கவும், கேலிக்குள்ளாக்கவும் வலியுறுத்தி பகுத்தறிவு நெறியின் உச்சத்தில் நின்றனர்.

மதம் பற்றிய சுயமரியாதைக்காரர்களின், பெரியாரின் கருத்துகள் அய்ந்து பெரிய நோக்கங்களைக் கொண்டதாகும். பிராம ணப் புரோகிதரையும் அவரின் முன்னு ரிமை, ஆட்சி, அதிகாரம் பற்றிய திறனாய்வு - சுருக்கமாக - பிராமணர்களையும், பிராம ணியத்தையும் பற்றிய திறனாய்வு ஆகும். வேதங்கள், இதிகாசங்கள், புராணங்களின் பொய்ப் புரட்டுகளை அதிரடியாக, பகுத் தறிவு நெறி சார்ந்து நிலைகுலையச் செய்த திறனாய்வு ஆகும். மூன்றாவதாக, மதத் தைப்பற்றிய திறனாய்வு என்பது உலகின் பார்வையில் - புனிதம், சமய நம்பிக்கை களை அவமதித்தல், சமயச்சார்பற்ற நிலை ஆகியவற்றின் மீதான நம்பிக்கையாளர் களின் எண்ண ஓட்டங்களைத் தீர்மானிக் கும் சமூகப் பண்பாகக் கருதப்படுகிறது. நான்காவதாக, நம்பிக்கைகளை நிலை நிறுத்தி, இயக்குகிற மதக் கோட்பாடுகளை, கொள்கைகளைத் திறனாய்ந்து விளக்க மளித்தல். கடைசியாக, பண்டிகைகள், சடங்குகள், நிகழ்வுகள் பற்றிய திறனாய்வு ஆகும்.”

9. உயர்நீதி மன்ற அமர்வில் (அமிர்த லிங்கம் எதிர் உள்துறை செயலர், தமிழ்நாடு அரசு மற்றும் பிறர் 2010 (2, 1022) பொது இடத்தில் ஒரு சிலையை நிறுவுவதைப் பற்றி ஒரு வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அவ்வழக்கில் அம்பேத்கரின் சிலை உரிய முன் அனுமதி இன்றிப் பொது இடத்தில் நிறுவப்பட்டாலும், அம்பேத்கரின் ஆளு மையைக் கருத்தில் கொண்டு சிலையை வேறு இடத்துக்கு மாற்றத் தேவையில்லை என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது. நீதிமன்றம் அம்பேத்கரின் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவுவதற்கு ஆணை பிறப்பித்தது. நீதி மன்ற அமர்வு இவ்வழக்கில் தீர்ப்பளிக்கும் போது இதற்குரிய அரசாணைகளைப் பற்றி பத்தி 35, 36 இல் தனது இரண்டு வழி காட்டுதல் நெறிகளைப் பதிவு செய்துள்ளது.

“35. முதல் நெறி : நினைவுத்தூண்கள், நினைவகங்கள், வளைவுகள், சிலைகள் அமைப்பதற்கு முன்பு அரசினுடைய அனுமதியைப் பெற வேண்டும். தனி மனிதர்கள், சமூகம் அல்லது அமைப்புகள் சிலை அமைப்பதற்கு விரும்பினால் மனுவை அரசிடம் அளிக்க வேண்டும். அரசினுடைய முன் அனுமதியின்றிச் சிலை நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளக் கூடாது.

36. இரண்டாம் நெறி : நினைவுத் தூண்கள், நினைவகங்கள், வளைவுகள், சிலைகள் அமைக்கப்பட்டிருந்தால் அவற்றை அரசு பாதுகாக்க வேண்டும். இவ்வகை நினைவுச் சின்னங்களை நிறுவியவர்கள் தான் அவற்றைப் பாதுகாத்து, பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பை ஏற்க வேண்டும். அரசாணை எண் : 193, நாள் : 23.8.1990, மீண்டும் 20.11.1998 இல் வெளியிடப்பட்ட அரசாணை ஆகியன வெண்கலத்தால் சிலை வைக்க அனு மதியை அளிக்கும் போது, மேற்கூறிய விதியை அரசு கடைப்பிடிக்க வேண்டும்”.

இந்த வழக்கில், சிலை சிதைக்கப் பட் டதற்கு அதன் மீது ஒரு கம்பம் விழுந்ததே காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெண்கலச் சிலை இது போன்ற நிகழ்வு களைத் தவிர்க்கும்.

10. மேற்கூறிய நெறிகள் அரசாணையின் கருத்தை முழு அளவில் பின்பற்றுகின்றன. மேலும், இந்நிலம் அரசுக்குச் சொந்தமா னது. அரசு அனுமதியும் வழங்கப்பட்டு உள்ளது. சிலை அமைப்புக் குழுவினர் வெண்கலச் சிலையை நிறுவுவதற்கு ஒப்புக் கொண்டுள்ளனர்.

11. எனவே, மனுதாரர் வெளிப்படுத்தி யுள்ள பயஉணர்ச்சி மொத்தத்தில் அடிப் படையற்றது. பள்ளி வளாகத்தில் பெரியார் சிலை வைப்பதனால் பள்ளிக் குழந்தைகள் நாத்திக நோக்குடையவர்களாக மாற மாட்டார்கள். மேலும், பெரியாருடைய வாழ்க்கையையும், அவருடைய தத்துவத் தைப் புரிந்து கொள்வதனால் மாணவர்கள் அரசியல் சட்ட 51 (எ) (எச்) பிரிவில் குறிப் பிட்ட அறிவியல் உணர்வையும், மனிதத் தன்மையையும், ஆய்வு மனப்பான்மை யையும், சீர்திருத்த உணர்வையும் அறிந்து கொள்வதற்கு உதவும். 

மேற்கூறிய விளக்கங்களின்படி இம் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படு கிறது.

(பேராசிரியர் மு.நாகநாதன் அவர்கள் 'எழுதிய நீதியா? நியாயமா?' என்ற நூலிலிருந்து)