ஞாயிறு, 26 மே, 2024

லட்சியத்தை நிறைவேற்ற புத்திசாலிகளல்ல – போராளிகளே தேவைPublished July 2, 2023, விடுதலை நாளேடு

தந்தை பெரியார்

பெரியோர்களே! தோழர்களே! தாய்மார்களே! தூத்துக்குடியில் மாநாடு நடத்த இவ்வூர்த் தோழர்கள் அனுமதி கோரியபோது இவ்வளவு பெரிய கூட்டம் இங்கு கூடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்தப் பஞ்ச காலத்தில் இவ்வளவு தொலைவில் நடத்தப்படும் மாநாட் டிற்கு வெகு சொற்ப நபர்களே வரக்கூடும் என்றும், மாநாடு ஏதோ ஒரு சடங்குமுறை மாநாடாகவே இருக்கக் கூடும் என்றும் பலர் நினைத்திருந்தனர். ஆனால், இதுவரையில் நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கடற் கரைக் கூட் டங்கள் தவிர்த்த வேறெந்தக் கூட்டத்திற்கோ, மாநாட் டிற்கோ இவ்வளவு பேர் எப்போதுமே கூடிய தில்லை! இந்தியாவிலேயே கூட ஒருவேளை அகில இந்தியக் காங் கிரஸ் மாநாட்டுக் கூட்டங்கள்தான் இவ் வளவு பெரியதாக இருக்கக் கூடுமோ என்னவோ அறியேன். அதுவும் இவ் வளவு  உற்சாகத்தோடும், துடிதுடிக்கும் ஆர்வத்தோடும், பத்தாயிரக்கணக்கில் தாய் மார்களும், இளைஞர்களும், தோழர்களும் கூடியிருக்கும் இப்பெரிய ஜன சமுத்தி ரத்தைப் பார்க்கும்போது நான் உள்ளபடியே மிகமிக மகிழ்ச்சியடைகிறேன். ரயில் தொந்தரவால் பல ஆயிரக் கணக்கான மக்கள் வர இயலாமல் ஆங்காங்கே நிறுத்தப் பட்டுங்கூட இவ்வளவு பேர் கூடியிருப்பது, அதுவும் எவ்வித அசவுகரிய குறிப்போ ஏமாற்று குறிப்போ இல் லாமல் மகிழ்வுடன் கூடியிருப்பது எனக்குக் கண்கொள்ளாக் காட்சியாகவே இருக்கிறது. பிரம்மாண்ட உற்சவங்கள் தவிர்த்த மற்ற இடங்களுக்கு  இதுவே ரிக்கார்ட் என்று கூடக் கூறலாம்.

குரல் உள்ளவரை பேசவேண்டும்!

நாதசுரக் குழாயாய் இருந்தால் ஊதியாகவேண்டும், தவுலாயிருந்தால் அடிபட்டுத்தான் ஆகவேண்டும் என்பதுபோல், எனக்குத் தொண்டை, குரல், உள்ள வரை யில் பேசியாகவேண்டும், பிரசங்கம் செய்தாக வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், இவ்வளவு பெரிய கூட்டத்தைக் காண்பதால் ஏற்பட்டுள்ள உள பூரிப்பும், ஒரு தனியான அகம்பாவமும் என் உள்ளம் பூராவையும் கவர்ந்து நிற்கிறது. இருந்தாலும் முயற்சித்து ஏதோ சொல் லுகிறேன்.

சேலம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சில புரட்சி கரமான தீர்மானங்களால் சர்க்கார் சம்பந்தம் நீங்கப் பெற்று, கழகத்தின் பேரும் மாற்றம் அடைந்து, திராவிட நாடு பிரிவினையும், லட்சியமாக்கப்பட்டதிலிருந்து நமது செல்வாக்கு அனுதினமும் பெருகிக் கொண்டே வருகிறது. இதைக் காணும் சில பொறாமைக்காரர்களும், மேதாவிகள் என்று தம்மை நினைத்துக் கொண்டிருக்கும் சில புத்திசாலி களும் நம்மீது ஏதேதோ குற்றங்குறை கூறி வருகிறார்கள். நம் கழகத்தைப் பின்பற்றி நடந்து வருபவர்களை இவர்கள் பயித்தியக்காரர்கள் என்றுகூடக் கருதி வருகிறார்கள்.

புத்திசாலிகள் அல்ல! 

பொறுப்பான லட்சியப் போர் வீரர்களே வேண்டும்!

என்னைப் பொறுத்தவரையில், என்னைப் பின்பற்றி நடந்து வருபவர்கள் புத்திசாலிகளாய் இருக்க வேண்டு மென்ற கவலை எனக்கு ஒரு சிறிதும் கிடையாது. தங்கள் அறிவை, ஆற்றலை மறந்து, என் லட்சியத்தை நிறை வேற்றிக் கொடுக்கக் கூடிய ஆட்கள்தான் எனக்குத் தேவையே ஒழிய, அவர்கள் புத்திசாலிகளா, முட்டாள்களா, பயித்தியக்காரர்களா, கெட்டிக்காரர்களா? என்பதுபற்றி எனக்குக் கவலை இல்லை.

இந்த சந்தர்ப்பத்தில் எனது மதிப்பிற்குரிய நண்பர் பா.வே. மாணிக்க நாயக்கர் அவர்கள் கூறியது எனது ஞாபகத்திற்கு வருகிறது. அவர் ஈரோட்டில் எக்ஸிக்யூடிவ் என்ஜினீயராய் இருந்தபோது, அவர் எங்கள் வீட்டில் குடியிருந்தார். மாடுகளுக்குச் சுலபமாய் இழுக்கக் கூடிய புது மாதிரியான கவலை ஒன்று செய்ய தனக்கு இரண்டு கொல்லர்களை தருவித்துக் கொடுக்கும்படி சொன்னார். நான் யோசித்து, இரண்டு கெட்டிக்காரக் கொல்லர்களின் – அதாவது துப்பாக்கி செய்யக் கூடியவர்கள், பெயரைக் குறிப்பிட்டு அவர்களை அழைத்து வரும்படி என் காரியஸ்தர்களுக்குக் கூறினேன்.

அப்போது அவர் சொன்னார், “கொல்லன் – கெட்டிக் காரன் என்பவர்களை அனுப்பி வைப்பாயானால் அவர்கள் இருவருக்குள்ளும் கெட்டிக்காரத்தனப் போட்டி வேலையைக் கெடுத்துவிடும், அவர்களே எனக்கு யோசனை சொல்ல முந்துவார்கள், என் திட்டம் ஆட்டம் கொடுத்து வேலை நடவாது. ஆகவே, நான் சொல்வதைப் புரிந்துகொண்டு அதன்படி வேலை செய்யக்கூடிய, ஒரு படிமானமுள்ள, சொன்னபடி நடக்கக்கூடிய, இரண்டு சம்மட்டியும், சுத்தியும் பிடித்துப் பழகிய ஒரு சாதாரண ஆளை அனுப்பி வைத்தால் போதுமானது. அவர்கள் முட்டாள்களாய் இருந்தாலும் சரி; அவர்களைக் கொண்டு சுலபத்தில் வேலையை முடித்துக் கொள்ளலாம்” என்று கூறினார்.

சேரு முன்பு சிந்திப்பீர்! 

சேர்ந்த பிறகோ அதை மறப்பீர்!

புத்திசாலிகள் சண்டையிட்டுக் கொள்வது எப் போதுமே இயற்கைதான். ஆகவேதான், நான் நீடா மங்கலம் மாநாட்டின்போதே மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறேன். என்னைப் பின்பற்றுகிறவர்கள் தங்கள் சொந்தப் பகுத்தறிவைக் கூட கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டுமென்று. யாராவது ஒருத்தன்தான் நடத்தக் கூடியவனாக இருக்க முடியுமே தவிர, எல்லோருமே தலைவர்களாக இருக்க முடியாது. மற்றவர்கள் தலைவர் இட்ட கட்டளைப்படி நடக்க வேண்டியவர்கள்தான். தோழர்களே நான் இப்போது கூறுகிறேன். நீடா மங்கலத்தைவிட ஒருபடி மேல் செல்லுகிறேன்.

நீங்கள் இந்த இயக்கத்தில் உள்ளவரை உங்கள் சொந்தப் பகுத்தறிவை மட்டுமல்ல, உங்கள் மனச்சாட்சி என்பதைக் கூட நீங்கள் கொஞ்சம் மூட்டை கட்டி வைத்து விட வேண்டியதுதான். கழகத்தில் சேருமுன்பு நீங்கள் உங்கள் பகுத்தறிவு கொண்டு கழகக் கோட்பாடுகளை எவ்வளவு வேண்டுமானாலும் ஆராய்ந்து பார்க்கலாம்! என்னுடன் வாதாடலாம். உங்கள் மனச்சாட்சி என்ன கூறு கிறது என்று நீங்கள் எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானா லும் ஆர அமர இருந்து யோசித்துப் பார்க்கலாம்!

ஆனால், எப்போது உங்கள் மனச்சாட்சியும், பகுத் தறிவும் இடங் கொடுத்து, நீங்கள் கழகத்தில் அங்கத்தினர் களாகச் சேர்ந்து விட்டீர்களோ உங்கள் பகுத்தறிவையும், மனச்சாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு கழகக் கோட்பாடுகளைக் கண்மூடிப் பின்பற்றி நடக்க வேண்டியதுதான் முறை.

ஒரு எஜமான் வேலைக்காரனைப் பார்த்து, ‘அந்தப் பெட்டியைக் கொஞ்சம் எடப்பா’ என்று கூறினால், ‘என் மனச்சாட்சி என்னை அதற்கு அனுமதிக்கவில்லையே?’ என்று கூறினால், அது முறையாகுமா? ஒரு டிஸ்ட்ரிக்ட் சூப்ரன்டெண்ட் ‘சுடு!’ என்று போலிஸ்காரனுக்கு உத்தரவு போட, அவன் ‘என் மனச்சாட்சி அதற்கு இடங் கொடுக்க வில்லையே’ என்று கூறினால், அந்தச் சூப்ரன்டெண்ட் கதி என்னாவது? கசாப்புக் கடையில் வேலை பார்க்க ஒப்புக் கொண்டவன் ‘அந்த ஆட்டை வெட்டுடா!’ என்று எஜமான் உத்திரவிடும்போது, ‘அய்யோ என் மனச்சாட்சி மாட்டேன் என்கிறதே; நான் என்ன செய்யட்டும்?’ என்று கூறினால், ‘ஏண்டா மடப்பயலே! முன்னாடியே உனக்கு இது தெரி யாமற் போனதென்னடா?’ அப்போது உன் மனச்சாட்சி எங்கேடா போயிருந்தது? என்று கேட்பானா? இல்லையா அவனை?

குதர்க்கம் பேசுதல் விஷமமல்லவா?

ஆகவே, மனச்சாட்சியோ, சொந்தப் பகுத்தறிவோ கழகக் கொள்கையை ஒப்புக்கொள்ள மறுக்குமானால், உடனே விலகிக் கொள்வதுதான் முறையே ஒழிய, உள்ளிருந்து கொண்டே குதர்க்கம் பேசித் திரிவது என்பது விஷமத்தனமே ஆகும் என்பதைத் தெரிவித்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

சிலருக்கு நான் ஏதோ சர்வாதிகாரம் நடத்த முற்படு கிறேன் என்று தோன்றலாம். இது ஓரளவுக்குச் சர்வாதிகாரம் தான் என்பதையும் ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனால், தோழர்களே! நீங்கள் சிந்திக்கவேண்டும்; இந்த சர்வாதி காரம் எதற்குப் பயன்படுகிறதென்று? என்னுடைய சர்வாதி காரத்தைக் கழக லட்சியத்தின் வெற்றிக்காக, பொது நன்மைக்காகப் பயன்படுத்துகிறேனே ஒழிய, எந்தச் சிறு அளவுக்கும் எனது சொந்தப் பெருமைக் காகவோ, ஒரு கடுகளவாவது எனது சொந்த நன்மைக்காகவோ பயன் படுத்திக் கொள்ளவில்லை என்பதை நீங்கள் ஆராய்ந்து பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டுகிறேன்.

என் சொந்த விளம்பரத்திற்காக, என் சொந்தப் பெரு மைக்காக இதுபோன்ற மாநாடுகள் கூட்டப்படுகின்றன என்று சிலர் கருதுவதற்கொப்ப, இம்மேடையின் கண் பேச நேரும் தோழர்களும் என்னைப்பற்றிப் புகழ்ந்து பேசு வதிலேயே தமது சொற்பொழிவுக்குக் கொடுக்கப்படும் நேரத்தின் பெரும் பகுதியைச் செலவு செய்கின்றார்கள். இதை நான் அறவே வெறுக்கிறேன். சிறிதும் விரும்ப வில்லை. ஆகவே, சொற்பொழிவாளர்கள் என்னைப் பற்றிப் புகழ்ந்து பேசாமல் இருக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

இருந்த காந்தியார் வேறு!  இறந்த காந்தியார் வேறு!

சென்ற மாநாட்டிற்குப்பின் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகளில் முதன்மையாகப் பேசப்பட வேண்டியது காந்தியாரின் மறைவைக் குறித்தாகும். காந்தியார் உயி ரோடிருந்தவரை அவருடைய போக்கைப் பெரும் அளவுக்குக் கண்டித்து வந்த எனக்கு, காந்தியார் மறைவுக் குத் துக்கப்படவோ, அவரது மறைவிற்குப் பின் அவரைப் பற்றிப் புகழ்ந்து பேசவோ என்ன உரிமை யுண்டென்று சிலர் கேட்கலாம். சில காங்கிரஸ்காரர்களின் நல்லெண் ணத்தைச் சம்பாதித்துக் கொள்ளவே நான் இவ்விதம் சூழ்ச்சி செய்வதாகவும் கருதியிருக்கலாம். ஆனால், தோழர்களே! இவை உண்மையல்ல. காந்தியார் மறைவுக்கு ஆக எந்த காங்கிரஸ்காரர் துக்கப்பட்டார்? அழுதார்? வேதனைப்பட்டார்கள்? காங்கிரஸ்காரர்கள் பண்டிகை கொண்டாடினார்கள். காங்கிரஸ் முக்கிய ஸ்தர்களாக இருந்த பார்ப்பனர்கள் இனிப்பு வழங்கி னார்கள். எனக்கு உண்மையிலேயே இப்பொழுதும் துக்கம் மேலிடுகிறது.

காந்தியாரின் மறைவுக்கு அனுதாபப் பட, மற்றவர்களைக் காட்டிலும் அதிகத் துக்கப்பட வேறுபல காரணங்கள் உண்டு. முதலாவதாகக் காங்கிரஸ் காரர்கள் பலரும் பார்ப்பனர்களும் கருதி இருந்த காந்தியார் வேறு, இறந்த காந்தியார் வேறு என்று நான் கருதுகிறேன்.

இருந்த காந்தியார் ஆரிய காந்தியார்! ஆரியரால் உண்டாக்கப்பட்ட காந்தி யார். நம் எதிரிகளின் காந்தியார். ஆனால், இறந்த காந்தியார் நம் காந்தியார். ஆரியம் அழிந்துவிடுமே எனப் பயந்து ஆரியரால் கொல்லப்பட்ட கொலையுண்ட காந்தியார். அதனால் தான் நாம் மற்றவர் களுக்கும் மேலாகத் துக்கப்படுகிறோம். அதனால்தான், மற்ற வர்களைவிட நமக்குத்தான், அவர் மறைவுக்காக துக்கப்படவும் உரிமை யுண்டு என்று கூறிக் கொள்கிறோம். ஒருவர் தம் மறைவு காலத்தில் எந்த நிலையில் இருக்கிறாரோ, அதைப் பொறுத்துத்தான் அவருடைய மறைவுக் குத் துக்கப்படுபவர்களும், சந்தோஷப் படுபவர்களும் அமைவார்கள். உதா ரணமாக, நான் காங்கிரஸ் ராமசாமியாக ஒரு காலத்திலும், சுயமரியாதை ராம சாமியாக ஒரு காலத்திலும், திராவிடர் கழக ராமசாமியாகத் தற்காலத்திலும் இருந்து வருகிறேன். காங்கிரஸ் ராம சாமியாக இருந்த காலத்தில் நான் இறந் திருந்தால், ‘சுதேசமித்திரன்’ ஆசிரியர் உள்பட, ‘ஹிந்து’ ஆசிரியர் உள்பட பல காங்கிரஸ்காரர்களும் அய்யர், அய்யங் கார்களும் துக்கங் கொண்டாடியிருப்பார்கள். சுய மரி யாதை ராமசாமியாக இறந்திருந்தால் சுயமரியாதைக் காரர்களும் மற்றும் சில அறிவாளிகளும் மட்டும் துக்கம் கொண்டாடியிருப்பார்கள். ஒரு சில சுயமரியாதைக்கார பார்ப்பனர் தவிர்த்த மற்றப் பார்ப்பனர்கள், வைதீகர்கள் எல்லோரும் சந்தோஷப்பட்டிருப்பார்கள்.

இருந்தவர் ஆரியக் காந்தியார், 

இறந்தவர் திராவிடக் காந்தியார்!

ஆனால், இன்று மறைய நேர்ந்தாலோ திராவிடர்கள் அனைவரும் துக்கங் கொண்டாடலாம் என்று கருதுகிறேன். இதேபோல், காந்தியாரும் தம் மறைவின் போது திராவிடர் கழகக் கொள்கைகளை ஒப்புக்கொண்ட காந்தியாராகத் தான் மறைந்தாரே ஒழிய, ஆரிய தர்மத்தை ஒப்புக்கொண்ட காந்தியாராக மறையவில்லை. இந்து மத தர்ம அநீதியைக் கண்டிக்கப் புகுந்ததால், அதற்கான பலனையடைந்தார். சூத்திரன் தலை எடுத்தால் பார்ப் பானுக்கு ஆபத்து என்ற மனுதர்ம விதிப்படி, அவர் பார்ப்பனனால் கொல்லப் பட்டார். இராமாயண கதையில் சம்பூகன் அடைந்த கதியை அவர் அடைந்தார். சம்பூகன் கொல்லப்பட்டதற்கு ஆரியப் பார்ப்பனர்கள் அகமகிழ்ந் ததாக, இறந்த பார்ப் பனர்களெல்லாம் உயிர்த்தெழுந்ததாக, கதையில் காணப் படுகிறது. காந்தியார் கொல்லப் பட்டதற்குப் பார்ப்பனர்கள் மிட்டாய் வழங்கியதை நாம் நேராகப் பார்த்தோம். காந்தியார் மறைவுக்குப் பார்ப் பனர்களே காரணம் என்று வடநாட்டில் பார்ப்பனர்கள் வீடுகள் சாம்பலாக்கப்பட் டதையும், பார்ப்பனர்களின் வீடுகள் சூறையாடப்பட்ட தையும், பார்ப்பன தாய்மார்கள் அவமானப்படுத்தப் பட்டதையும், பார்ப்பனர்கள் தங்க இடமின்றி ஓடி தவித்ததையும் நாம் பத்திரிகையில் பார்த்தோம். அதற்கு நஷ்ட ஈடாகப் பம்பாய் மாகாண சர்க்கார் ஒவ்வொரு பார்ப்பனனுக்கும் ரூ.2000 இனாமாகவும், ரூ.25,000 வரை ரொக்கக் கடனும் கொடுத்து உதவியதாகவும் நாம் பத்திரிகையில் பார்க்கிறோம். இங்கு பார்ப்பனர் களுக்கு அத்தகைய கேடு நேரவில்லை. இதற்கு நம் கழகம் தான் காரணமே ஒழிய, காந்தியார் மறைவுக்குத் துக்கப்படுபவர் இந்நாட்டில் இல்லாமல் போனதால் அல்ல.

எங்களால் வந்த வாழ்வு! 

இன்றோ நமக்குச் சவால்!

இதை அறியாத பார்ப்பனர்கள் ஆணவத்தோடு அந் தணர் மாநாட்டைக் கூட்டி நமக்குச் சவால் விடுகிறார்கள். இந்தப் பார்ப்பனர்களை, இன்று மட்டுமல்ல, என்றுமே காப்பாற்றி வரு பவர்கள் நாம்தான். இந்நாட்டிலிருந்து பார்ப்பனர்களை அறவே ஒழித்துக் கட்டவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த (ஜஸ்டிஸ் கட்சியின் ஆட்சியில்) ஒரு காலத்தில் பார்ப்பனர்கள் தெருவில் வரக்கூட யோக்கியதையற்றுக் கிடந்தார்கள். அந்தக் காலத்தில் ஜஸ்டிஸ் கட்சியை இருந்த இடம் தெரியாமல் ஒழிக்க, நான் தேசியத்திற்கு முதல் அடிமையானேன். தோழர் வரதராஜுலு நாயுடு அடுத்த அடிமையானார். தோழர் கல்யாண சுந்தர முதலியார் மூன்றாவது அடிமை யானார். ராஜகோபாலாச்சாரியார், எஸ். சீனு வாசய்யங்கார், ரங்கசாமி அய்யங்கார், சத்தியமூர்த்தி அய்யர் போன்ற வர்களுக்கு மேடையில் இடம் வாங்கிக் கொடுத்தவர்களும், அவர்களுக்குத் தமிழ்ப் பேசக் கற்றுக் கொடுத்தவர் களும்கூட நாங்கள்தான்.

அக்காலத்தில் தோழர் ராஜகோபாலாச்சாரியாருக்கு, வீடு பிரித்துப் போட்டுக் கிடக்கிறது என்று கூறத் தெரியாது. வீடு அவுத்துப் போட்டுக் கிடக்கிறது என்றுதான் கூறுவார். சத்தியமூர்த்தி அய்யருக்கு நேக்கு, நோக்கு, அம்மாஞ்சி, அம்மாமி, அவா, இவா இவை தவிர வேறு தமிழ் வார்த்தைகள் பேசத் தெரியாது. ரங்கசாமி அய்யங்கார், டாக்டர் ராஜன், சுதேசமித்திரன் ஆசிரியர் இவர்கள் ஒரு சிலர் தவிர்த்து, அந்தக் காலத்தில் பார்ப்பனர்களில் தமிழ்ப் பேச ஆள் கிடையாது. கூட்டத்தில் பார்ப்பனர்களுக்குப் பேச உரிமை வாங்கிக் கொடுத்தவர்களும், அவர்களுக்குத் தியாகம் செய்ய (ஜெயிலுக்குப் போக) கற்றுக் கொடுத் தவர்களும் நாங்கள்தான். ராஜகோபாலாச்சாரியாரை வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள். இது உண்மையா அல்லவா என்று. நாளைக்கு கவர்னர் ஜெனரலாகப் போகிறார். என்னையும் காண்பார். கண்டால் வெட்கப்படப் போகிறார். கட்டியழப் போகிறார். ‘நான் இப்படியானேன்; நீ அப்படியே இருக்கிறாயே’ என்று கேட்பார். நாங்கள் இல்லாதிருந்தால் இந்த நாட்டில் ராஜகோபாலாச்சாரி ஏது? கவர்னர் ஜெனரல் பதவிதான் ஏது? சர்வம் பார்ப்பனிய சுயராஜ்யம் ஏது? பெற்ற பதவியில் நான் பங்கு கேட்கவில்லை.

சுயராஜ்யம் வந்ததென்றால், குறைகளைச் சொல்லக் கூடவா உரிமை இல்லை

உங்களுக்குச் சுயராஜ்யம் வந்துவிட்டது, பதவி வகிக்கிறீர்கள் என்றால், எங்கள் குறைபாடுகளை எடுத்துச் சொல்லக்கூடவா எங்களுக்கு உரிமை இருக்கக் கூடாது? சுயராஜ்யம் வந்துவிட்டதென்றால், சுயராஜ்யத்தில் பதவி வகிக்க நேர்ந்த சுயராஜ்யப் புலிகள் மற்றவர்களை ஆடுகளைப் போல் கொன்று அழித்துத்தான் தீர வேண் டுமா? கொள்ளைக்காரர்களும், வஞ்சகர்களும், காலி களும் எப்போதும்போல் சாதுக்களை, யோக் கியர்களை, ஏழைகளை வஞ்சித்துத்தான், கொள்ளையடித்துத்தான் வாழ்ந்து வரவேண்டுமா? சுயராஜ்ய சர்க்கார் இதைத் தடை செய்தல் வேண்டாமா? சுயராஜ்ய சர்க்காரில் ஏழை கள்தான் அதிக வரி செலுத்தவேண்டுமா? சுயராஜ்யம் வந்து ஏழைகள் பட்டினி கிடக்கவேண்டுமா? சுயராஜ்யம் வந்துவிட்டதென்றால் ஒரு ஊரில் அரிசி ரூபாய்க்கு முக் கால்படியும், ஒரு ஊரில் அரிசி ரூபாய்க்கு இரண்டே கால்படியுமா விற்பது?

உண்மையாக கூறுகிறேன்; தோழர்களே! உங்களுக்கும் கேட்க அதிசயமாயிருக்கும். நமது மாநாட்டிற்குத் தேவை யான அரிசியை விலை சரசமாயுள்ள (அதாவது ரூபாய்க்கு இரண்டே கால்படி விலையுள்ள) தஞ்சை ஜில்லாவில் வாங்கிக் கொள்ள அனுமதி தரவேண்டுமென்று மந்திரி யாருக்கு கடிதம் எழுதி இருந்தேன். அதற்கு மந்திரியார் பதில் எழுதியிருக்கிறார்.’ இந்த மாகாணத்தில் அந்த ஒரு ஜில்லாவில் தான் நெல் அதிகமாக (ஏனோ) விளைந்து விட்டது.  ஆகவே, அந்த அரிசியை வாங் கிக் கொள்ள உங்களுக்கு அனுமதி கொடுக்க மாட்டோம். வேறு எந்த ஜில்லாவில் வேண்டு மானாலும் 50 மூட்டைகள் வரைக்கும் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று எழுதியி ருக்கிறார். அதிக மாக விளைந்துள்ள ஊரில் நெல்லும், அரிசியும் மக்கிப் புழுப் புழுக்கவேண்டுமாம்! பற்றாக்குறை ஜில்லாவில் மேலும் அரிசி வாங்கி மேலும் அந்த ஊரில் பஞ்சத்தை அதிகமாக்க வேண்டுமாம்!

‘குடிஅரசு’ 29.05.1948

தூத்துக்குடி கழக மாநாட்டில் 

தந்தை பெரியார் அவர்களின் உரை

சனி, 18 மே, 2024

பகுத்தறிவுக்குத் தடைகள்!

விடுதலை ஞாயிறு மலர்
Published April 6, 2024

– தந்தை பெரியார்

பகுத்தறிவு என்பது மனிதனுக்கு ஜீவநாடி, உயிர்நாடி ஆகும்.
ஜீவராசிகளில் மனிதனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. இதில் மனிதன் எவ்வளவுக்கு எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கின்றானோ அவ்வளவுக் கவ்வளவு காட்டுமிராண்டி என்பது பொருள்.
பகுத்தறிவு பெறும்படியான சாதனம் நமக்கு நீண்ட நாட்களாகவே தடைப் படுத்தப்பட்டு வந்துள்ளது. நம்மை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனர்கள் நாம் பகுத்தறிவை அடைய முடியாமல் தடை செய்துகொண்டு வந்தார்கள்.
மக்களிடையே பகுத்தறிவைத் தடைப்படுத்த கடவுள், மதம், சாஸ்திரம் முதலியவைகளைப் புகுத்தி, அவைகளை மக்கள் நம்பும்படி செய்து விட்டார்கள். கடவுள் என்றால் ஒத்துக் கொள்ள வேண்டும். எங்கே? ஏன்? எப்படி? என்று கேட்கக் கூடாது என்று கூறிவிட்டார்கள்.

இதைப் போலவே மதத்திற்கும் என்ன? எப்படி? என்று சிந்திக்கக் கூடாது என்று கூறி விட்டார்கள். இதைப் போலத்தான் சாஸ்திரமும்.
இதில் நாம் பகுத்தறிவு என்றால் என்ன என்பதற்கு விளக்கம் காண்கிறோம். பகுத்தறிவு என்பது ஆதாரத்தைக் கொண்டு தெளிவடைவது; மூடநம்பிக்கை என்பது ஆராயாமல் ஏற்றுக் கொள்வது என்பது பொருள்.
நமது இழிநிலை, நமது முட்டாள்தனம் மாற வேண்டுமானால் நாம் ஒன்றும் பெரிய கஷ்டப்பட்டு முயற்சி செய்ய வேண்டிய தில்லை. பகுத்தறிவு கொண்டு தாராளமாக சிந்தித்தால் போதும்.

நமது கொள்கை பகுத்தறிவு
பகுத்தறிவு என்றால் நாஸ்திகம் என்பது பொருள். அறிவு கொண்டு சிந்திப்பதுதான் நாஸ்திகம் ஆகும். கடவுள் மனதுக்கும், வாக்குக்கும் எட்டாதது என்று கூறப்பட்டாலும் அதுதான் உலகத்தை உண்டாக்கி நம்மை எல்லாம் நடத்துகின்றது.
எல்லா விதமான சர்வ சக்திகளும் உடையது என்று கூறப்படுகிறது.
அப்படிப்பட்ட கடவுள் நம்மைத் தவிர்த்து மற்ற உலகத்துக்கு ஒன்றுதான்.
ஆனால், நமக்குத்தான் ஆயிரக் கணக்கில் கடவுள்கள்!
நம்மைத் தவிர்த்த மற்ற உலகிற்கு கடவுளுக்கு உருவம் இல்லை;
நமது கடவுளுக்கோ பல்லாயிரக் கணக்கான உருவங்கள்.
மற்ற நாட்டுக் கடவுள்களுக்கு ஒன்றும் வேண்டியதில்லை.
மற்ற நாட்டுக் கடவுள்களுக்கு ஒன்றும் வேண்டியதில்லை.
நமது நாட்டுக் கடவுளுக்கோ மனிதனுக்கு வேண்டியது எல்லாமுமே வேண்டும்.
மற்ற நாட்டுக்காரர்கள் கடவுள் – யோக்கியம், நாணயம், ஒழுக்கம் உடையது என்று உண்டாக்கியிருக்கிறார்கள்.
நமது நாட்டுக் கடவுளுக்கோ இந்த ஒழுக்கம், நாணயம் எதுவும் கிடையாது.
மனிதனில் கீழ்த்தரமானவனுக்கு என்னென்ன குணங்கள் இருக்குமோ, அவைகள் அத்தனையும் கடவுளுக்கு ஏற்றி விட்டிருக்கிறார்கள்.

இப்படி ஏராளமான பேதங்களையும், நடப்புக்கு ஒவ்வாத காரியங்களையும், காரியத்திற்கு கேடான குணங்களையும் கடவுளுக்குக் கற்பித்திருக்கிறார்கள்.
இவைகளை எல்லாம் நம்புவதுதான் மூடநம்பிக்கை. நல்ல வண்ணம் சிந்தித்து, ஆராய்ந்து ஏற்க வேண்டியதை ஏற்றுக் கொண்டு மற்றதைத் தள்ளி விடுவதுதான் பகுத்தறிவு!
நாம் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்த்தால் பகுத்தறிவுக்கு ஏற்ற கடவுள் இருக்கிறதா என்று சிந்தித்துப் பார்த்தால் இல்லவே இல்லை.
உண்மையில் ஒரு கடவுள் இருக்கு மானால், நமக்குத் தெரியாமல் இருக்க வேண்டிய அவசியம் என்ன?
அந்தக் கடவுள், தாம் இருப்பதாக நமக்காவது ஏன் தெரியப்படுத்தக் கூடாது?

– தலையங்கம், ‘விடுதலை’, 20.6.1973
– க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி

மே தினம் என்றால் என்ன? பெண்களுக்கும் – தொழிலாளர்களுக்கும் ஓய்வும் – சந்தோஷமும் வேண்டும் – தந்தை பெரியார்


விடுதலை நாளேடு

Published April 28, 2024

தோழர்களே!
மே தினம் என்பதைப் பற்றி இங்கு இதுவரை 5, 6 தோழர்கள் எடுத்துச் சொல்லி விட்டார்கள். நான் முடிவுரை என்கின்ற முறையில் ஏதாவது பேச வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்.
மே தினம் என்பது இன்று உலகமெங்கும் ஒவ்வொரு தேசங்களிலும் கொண்டாடப் படுவதனாலும் ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகின்றது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ரஷ்யாவில் கொண்டாடப்படுவதுபோல் இங்கிலாந்தில் கொண்டாடப்பட மாட்டாது. ஸ்பெயினில் கொண்டாடப்படுவது போல் பிரெஞ்சில் கொண் டாடப்பட மாட்டாது. அதுபோலவே தான் மேல் நாடுகளில் அய்ரோப்பா முதலிய இடங்களில் கொண்டாடப்படுவது போல் இந்தியாவில் கொண்டாடத் தக்க நிலைமை இல்லை.

வெவ்வேறான தன்மைகள் ஏனெனில், ஒவ்வொரு தேசத்தின் நிலைமை வெவ்வேறான தன்மையில் இருந்து வருகிறது. எல்லா தேசமும் ஒரே விதமான பக்குவத்தை அடைந்துவிடவில்லை. ஆரம்ப திசையில் இருக்கிற தேசமும் முடிவை எட்டிப் பார்க்கும் தேசமும் ஒரே மாதிரி கொண்டாட வேண்டும் என்று கருதுவதும் புத்திசாலித்தனமாகாது.
இன்று ரஷ்யாவில் மே தினத்தைக் கொண்டாடுவதின் முக்கிய நோக்கம் பெரிதும் தங்கள் தேசத்தை மற்ற தேசங்கள் பின்பற்ற வேண்டும் என்கின்ற ஆசையைப் பொறுத்ததாகும்.
இங்கிலாந்து, பிரெஞ்சு முதலிய தேசங்களில் கொண்டாடுவதின் நோக்கம் ரஷ்யாவைப் பல விஷயங்களில் பின்பற்ற வேண்டும் என்கின்ற கருத்தைக் கொண்டு அதற்கு பக்குவம் செய்வதற்கு ஆசைப்படுவதாகும்.

எப்படி இருந்தாலும் அடிப்படையான நோக்கத்தில் ஒன்றும் பிரமாத வித்தியாசம் இருக்காது. அனேக துறைகளில் சிறப்பாக சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டு தாழ்த்தப்பட்டு, இம்சைப்படுத்தப்பட்ட அடிமை மக்கள் சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் அடைய வேண்டும் என்கின்ற உணர்ச்சியே மே தினக் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
அந்த உணர்ச்சி எல்லா மக்களுக்கும் ஏற்பட்டால் பிறகு அந்தந்த நாட்டு நிலைமைக்குத் தக்கபடி முயற்சியும் கிளர்ச்சியும் தானாகவே வந்துவிடும். ஒடுக்கப்பட்டுத் தாழ்த்தப்பட்ட அடிமை மக்கள் என்பவர்கள் கூட ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகவே இருக்கிறார்கள். மேல் நாடுகளில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் என்பவர்கள் தொழிலாளிகள் என்கின்ற பெயரால் அவர்களது தொழில் நிலையையும் செல்வ நிலையையும் பொறுத்து இருக்கிறார்கள். அதனாலேயே இந்தக் கிளர்ச்சிக்கு தொழிலாளி, முதலாளி கிளர்ச்சியென்றும் வகுப்புப் போர் என்றும் சொல்லப்படுகின்றது.

இந்தியாவில் ஆனால் இந்தியாவில் ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு, அடிமைப்படுத்தப் பட்ட மக்கள் என்பது தொழில் நிலையையும், செல்வ நிலையையும் முக்கியமாய் கொள்ளாமல், மக்களின் பிறவி நிலையையே பிரதானமாய்க் கொண்டு பெரும்பான்மையான மக்கள் ஒடுக்கப்பட்டும் தாழ்த்தப்பட்டும், அடிமைப்படுத்தப்பட்டும் இருப்பதால் தொழில் நிலைமையையும், செல்வ நிலைமையையும் நேரே நோக்கிக் கிளர்ச்சியோ, புரட்சியோ செய்வது முக்கியமானதாய் இல்லாமல் பிறவி பேதத்தையே மாற்றக் கிளர்ச்சியும், புரட்சியும் செய்ய வேண்டியது முக்கியமாய் இருக்கின்றது. ஆதலால் தொழிலாளி, முதலாளி கிளர்ச்சி என்கின்றதைவிட மேல் ஜாதி, கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும்.
ஏனென்றால், இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவியிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு விட்டது.
நாலாவது வருணத்தான் அல்லது கீழான ஜாதியான் அல்லது சூத்திரன் என்று சொல்லப்படும் பிரிவே தொழிலாளி. அதாவது சரீரத்தால் உழைத்து வேலை செய்பவரின் மூலம் மற்ற ஜாதியாருக்கு வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்ய வேண்டும் என்கின்ற நிபந் தனைக்குக் கட்டுப்பட்டதாகும்.
அய்ந்தாவது ஜாதியான பஞ்சமன் அல்லது சண்டாளன் என்று சொல்லப்பட்ட ஜாதியான் என்பவன் வாழ்நாள் முடிய மற்ற ஜாதியாருக்கு அடிமையாய் இருந்து தொண்டாற்ற வேண்டும் என்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டவன்.

இந்த இரு கூட்டத்தாரிடமும் கூலி கொடுக் காமலே வேலை வாங்கும் உரிமை மேல் ஜாதி யானுக்கு உண்டு. அதுவும் மத சாஸ்திர பூர்வ மாகவே உண்டு.
இது இன்றைய தினம் நிர்ப்பந்தத்தில் இல்லை என்று சிலர் சொல்லக் கூடுமானாலும், ஒரு சிறு மாறுதலோடு அனுபவத்தில் இல்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது.
பஞ்சம வகுப்பைச் சேர்ந்த மக்களாகிய சுமார் 6, 7 கோடி மக்களில் 100-க்கு 99வு பேர்கள் இன்று அடிமையாக, இழி மக்களாக நடத்தப்படவில்லை என்று யாராவது சொல்ல முடியுமா? என்று யோசித் துப் பாருங்கள். அதுபோலவே பார்ப்பனரல்லாதார் என்கின்ற இந்து மக்கள் ஆண், பெண் அடங்கலும் சூத்திரர்கள் – அதாவது சரீர வேலை செய்யும் வேலை ஆட்கள் என்ற கருத்தோடு அழைக் கப்படுவது மாத்திரமல்லாமல், ஆதாரங்களில் குறிக்கப் படுவதோடு அந்தச் சூத்திரர்கள் என்கின்ற வகுப் பார்களே தான் இன்று சரீரப் பிரயாசைக்காரர் களாகவும், கூலிகளாகவும், உழைப்பாளிகளாகவும், ஏவலாளர்களாகவும், தொழிலாளர்களாகவும் இருந்து வருகின் றார்களா இல்லையா என்று பாருங்கள்.
ஜாதி அடிப்படையில் மற்றும் ஜாதி காரணமாகவே, தொழிலாளி களாகவோ, சரீர பிரயாசைப்படும் உழைப்பாளி களாகவோ இல்லாமலும், சரீரப் பாடுபடுவதைப் பாவமாகவும் கருதும்படியான நிலையில் சில ஜாதியார்கள் இருக்கிறார்களா இல்லையா? என்றும் பாருங்கள்.

இந்தியாவில் தொழிலாளி, முதலாளி அல்லது எஜமான், அடிமை என்பது பிரதானமாக பிறவி ஜாதியை அடிப்படையாகக் கொண்டி ருப்பதால் இந்தியாவில் மே தினக் கொண்டாட்டம் என்பது பார்ப்பான், (சூத்திரன்) பஞ்சமன் அல்லது சண்டாளன் என்கின்ற ஜாதிப் பிரிவுகள் அழிக்கப்பட வேண்டும் என்கின்ற நிலையில்தான் பெரியதொரு கிளர்ச்சியும், புரட்சியும் ஏற்பட வேண்டும் என்கின்ற கருத்தோடு இன்று கொண்டாட வேண்டியதாகும்.
இந்தியாவில் வகுப்புப் போர் என்பதற்குப் பதிலாக வேறு ஏதாவது சொல்ல வேண்டுமானால் ஜாதிப் போர் ஏற்பட வேண்டும் என்பதாகத்தான் சொல்ல வேண்டும்.
இந்தியாவில் ஒரு ஜாதியார் 100-க்கு 99 பேர்கள் நிரந்தரமாக தொழிலாளிகளாகவும், அடிமை களாகவும், ஏழைகளாகவும், மற்றவர்களுக்கே உழைத்துப் போடுகின்றவர்களாகவும் இருப்பதற்குக் காரணம் பிறவியில் வகுக்கப்பட்ட ஜாதிப் பிரிவே அல்லாமல் வேறு என்ன? இதை அடியோடு அழிக்காமல் வேறு விதமான கிளர்ச்சிகள் எது செய்தாலும் தொழிலாளி, முதலாளி நிலை என்பது அனுபவத்தில் இருந்துதான் தீரும்.

ஊரான் உழைப்பில் இன்று முதலாளி தொழிலாளி என்பதற்கு நாம் என்ன வியாக்கியானம் செய்கிறோம்? பாடுபடாமல் ஊரான் உழைப்பில் பதவி, அந்தஸ்துடன் வாழ்வதையும் பாடுபடுகின்றவன் ஏழையாய், இழிமக்களாய் இருப்பதையும் தான் முறையே சொல்லுகின்றோம். ஆகவே, ஜாதியையும் அதற்கு ஆதாரமான மதத் தன்மையையும் அழிக்காமல், வேறு எந்த வழியிலாவது முதலாளி, தொழிலாளி தன்மையை மாற்றவோ அல்லது அதன் அடிப் படையாய் அணுகவோ நம்மால் முடியுமா என்று பாருங்கள்.
இந்தியாவில் ஏழை மக்களுக்காக தாழ்த்தப் பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுகின் றேன் என்று சொல்லுகின்றவர்கள் யாரானாலும் அதற்கு ஆதாரமும் அடிப்படையுமான ஜாதிப் பாகுபாட்டையும், மதத் தன்மையையும் ஒழிக்க சம்மதிக்க இல்லையானால் அவர்கள் எல்லோரும் யோக்கியர்கள் என்று நாம் சொல்லிவிட முடியாது. அரசியல் தலைவர்களில் எவரும் இதற்குச் சம்மதிப்பதில்லை.

ஏதாவது ஒரு தொழிற்சாலையில் நித்திய கூலிக்கோ, மாதச் சம்பளத்துக்கோ பாடுபடுகின்ற நான்கு தொழிலாளிகளைக் கூட்டி வைத்து பேசி விடுவதனாலேயே அல்லது அத் தொழிலாளிகள் விஷயமாய் பேசி விடுவதனாலேயே அல்லது அவர்களுக்குத் தலைமை வகிக்கும் பெருமையைச் சம்பாதித்துக் கொண்டதினாலேயே எவரையும் உண்மையான தொழிலாளிகளுக்குப் பாடுபட்டவர் களாக கருதிவிடக் கூடாது. அவர்களெல்லாம் அரசியல், தேசியம் ஆகியவற்றின் பேரால் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் செய்வது போல் தொழிலாளிகளின் பேரால் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் நடத்துகின்றவர்களாகவே பாவிக்கப்பட வேண்டியவர்களாவார்கள்.

பெருத்த வித்தியாசம் இந்து மக்களின் மதமும் அவர்களது ஜாதிப் பிரிவும் தொழிலாளி முதலாளி தன்மையின் தத்து வத்தை நிலைநிறுத்தவே ஏற்படுத்தப்பட்டதாகும். இந்தக் காரணத்தாலேயேதான் மற்ற நாட்டு மே தினக்கொண்டாட்டத்திற்கும், இந்நாட்டு மே தினக் கொண்டாட்டத்திற்கு பெருத்த வித்தியாசம் இருக் கின்றது என்று சொல்லுகிறேன்.
இந்த முதலாளி, தொழிலாளி நிலைமைக்கு வெள்ளையர், கருப்பர்கள் என்கின்ற நிற வித்தி யாசத்தைக் காரணமாகச் சொல்லிவிட முடியாது. ஏனெனில், தொழிலாளி முதலாளி வித்தியாசம் ஒழிக்கப்பட வேண்டும் என்கின்ற கருத்தை இந்தி யர்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தவர்களே வெள்ளையர்களாகும். அந்த முறை மாற்றப்படக் கூடாது என்பதை மதமாகக் கொண்டிருக்கிறவர்களே கருப்பர்களாகும். ஆகையால், இதில் வெள்ளையர், கருப்பர் என்கின்ற கருத்துக்கு இடமில்லை. ஆனால் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்பதைத்தான் முக்கியமாய் வைத்துப் பேச வேண்டியிருக்கிறது.

இந்திய தேசியம் என்பதுகூட ஜாதியையும், மதத்தையும் காப்பாற்றுவதையே முக்கியமாய்க் கொண்டிருக்கிறதினால்தான் அப்படிப்பட்ட தேசியம் ஒருநாளும் தொழிலாளி, முதலாளி நிலைமைகளை ஒழிக்க முடியாது என்பது மாத்திரமல்லாமல் இந்தத் தேசியம் தொழிலாளி, முதலாளி தன்மை என்றும் நிலைத்திருக்கவே பந்தோபஸ்து செய்து வருகிறது என்று அடிக்கடி சொல்லி வந்திருக்கிறேன்.

இன்று நம் நாட்டிலுள்ள பார்ப்பனர் பார்ப்பன ரல்லாதார் என்கின்ற கிளர்ச்சி பெரிதும் தொழிலாளி, முதலாளி கிளர்ச்சியேயாகும். இந்தக் கிளர்ச்சியின் பயனாகவே வருண தருமங்கள் என்பது அதாவது பிறவியிலேயே தொழிலாளி முதலாளி வகுக்கப் பட்டிருப்பது ஒரு அளவு மாறி வருகின்றது.
இந்தக் காரணத்தினால் தான் முதலாளி வர்க்கம் அதாவது பாடுபடாமல் ஊராரின் உழைப்பில் பலன் பெற்று வயிறு வளர்க்கும் ஜாதியாகிய பார்ப்பன ஜாதி அடியோடு அனேகமாய் எல்லோருமே இந்த பார்ப்பனரல்லாதார் கிளர்ச்சிக்கு பரம எதிரிகளாய் இருந்து கொண்டு துன்பமும் தொல்லையும் விளைவித்து வருகிறார்கள்.
இக்கிளர்ச்சியை வகுப்புத்துவேஷம் என்றுகூட சொல்லுகிறார்கள். பார்ப்பனர்கள், பார்ப்பனரல் லாதார்கள் என்கின்ற இரு ஜாதியார்களுக்கும் பார்ப்பனர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிற நிபந் தனைகளைப் பார்த்தால் வகுப்புத் துவேஷம், வகுப்புக் கொடுமை என்பவைகள் யாரால் செய்யப் பட்டு இருக்கிறது, செய்யப்பட்டும் வருகிறது என்பது நன்றாய் விளங்கும்.
கொடுமை ஒழிய வேண்டும்

நிற்க, தோழர் நீலாவதி அம்மையார் சொன்னது போல் முதலாளி தொழிலாளிக் கொடுமை ஒழிய வேண்டும் என்பதில் ஆண், பெண் கொடுமையும் ஒழிய வேண்டியதவசியமாகும். ஆண்கள் முதல £ளிகளாகவும், பெண்கள் தொழிலாளிகளாகவும், அடிமைகளாகவும்தான் நடத்தப்பட்டு வரு கிறார்கள். இதுவும் வெறும் பிறவி காரணமாகவே ஒழிய மற்றபடி இதில் வேறு காரணம் ஒன்றுமே இல்லை. ஆண், பெண் என்ப தற்கு பிறவி காரண மாய்க் கற்பிக்கப்பட்டிருக்கிற பேதங்கள், நிபந் தனைகள் அடியோடு ஒழிக்கப் பட்டாக வேண்டும்.
இதற்கும் பெண் மக்கள் பெரியதொரு புரட்சிக் குக் கிளர்ச்சி செய்யவேண்டும். ஆண் மக்களோடு தைரியமாய்ப் போர் தொடுக்க வேண்டும். பெண்கள் போர் தொடுக்க ஆரம்பித்தால் ஆண் மக்கள் சரணாகதி அடைந்தே தீருவார்கள்.

நிற்க. இந்த மே தினத்தை நாம் ஒரு பெரிய விழா போல் கொண்டாட வேண்டும். ஏனெனில், நமது விழாக்களில் அநேகம் இம்மாதிரி வெற்றிகளை ஞாபகப்படுத்துவதேயாகும்.
ஓய்வும் சந்தோஷமும்
பெண்களையும், வேலை ஆள்களையும் சிறிது கூட ஓய்வில்லாமல் அடிமை போல் நடத்து கிறோம். அவர்களுக்கு விழாக்கள் உற்சவம் ஆகியவைகள் தான் சிறிது ஓய்வும் சந்தோஷமும் கொடுக்கின்றன.

தண்டவாளப் பெட்டியில் வைத்துப் பூட்டி வைப்பதுபோல் பெண் ஜாதிகளைப் பூட்டி வைக்கும் சிப்பாய்களெல்லாம் உற்சவம், பண்டிகை என்றால் சிறிதாவது தாராளமாய் வெளியில் விட சம்மதிக்கிறார்கள். உற்சவங்களில் அவர்கள் நிலை எப்படி ஆனாலும் கவலைப்படுவதில்லை. கண் ணெதிரிலேயே நசுக்கப்படுவதையும், கசக்கப்படு வதையும் பார்த்துக்கூட சகிக்கிறார்கள். ஆதலால் நம் பெண்களுக்கும், தொழிலாளிகளுக்கும் எவ் வளவுதான் நாம் பகுத்தறிவையும், சுயமரியாதைக் கொள்கைகளையும் போதித்தாலும் உற்சவமும், விழாக்களும் அவர்களை விட்டு விலகவே முடியாது. எனவே நாம் இப்படிப்பட்ட விழாக்கள் சிலதை கொண்டாட ஏற்பாடு செய்தோமேயானால் மத சம்பந்தமான விழாக்கள், உற்சவம் ஆகிய வைகளை மக்கள் கைவிடுவதற்கு அனுகூலமா யிருக்கும். ஆகவே தோழர்களே, இதுவரை நாங்கள் சொன்ன ஒவ்வொன்றையும் சிந்தித்துப் பார்த்து, தங்களுக்கு சரியென்று தோன்றியபடி நடக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொண்டு, இக்கூட்டத்தை முடித்து விடுகிறேன்.

(காரைக்குடியில் நடைபெற்ற மே தினக் கொண்டாட்டத்தில் தலைவர் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய முடிவுரை)
குடிஅரசு – சொற்பொழிவு – 12.05.1935

உலகில் ஆஸ்திகம் என்பது இல்லாதிருக்குமானால் மேல் ஜாதிக்காரனுக்கு இடமேது? – தந்தை பெரியார்
Published April 7, 2024, விடுதலை நாளேடு

இன்று இந்தியாவில் சிறப்பாக தென்னிந்தியாவில் எங்கு பார்த்தாலும் எந்தப் பத்திரிகையைப் பார்த்தாலும், எந்த ஸ்தாபனங்களைப் பார்த்தாலும் அவற்றின் உள் மர்மம் “நாத்திகத்தை”க் கண்டு நடுங்கி “ஆத்திக”ப் பிரசாரம் செய்வதையே முக்கிய லட்சியமாகக் கொண்டு இருப்பதாகத் தெரியவருகின்றது.

இதற்கு உண்மையான காரணம் என்னவெனில் இன்றையத்தினம் உலகில் காணப்படும் வலுத்தவன் இளைத்தவன் நிலைமைக்கு அடிக்காரணமாய் இருந்து சோம்பேறிகளுக்கும், பேராசைக்காரர்களுக்கும், முரடர்களுக்கும் ஆதரவாயிருந்து அவர்களது நிலைமையை மேலும் மேலும் பலப்படுத்தி நிலை பெறச் செய்து வந்திருப்பது இந்த ஆத்திகமே” யாகும். விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஆத்திகம் என்பதாக ஒன்று இல்லாதிருந்திருக்குமானால் உலகில் மேல் ஜாதிக் காரனுக்கு இடமேது? குருமார்கள், முல் லாக்கள், பாதிரிமார்கள் அர்ச்சகர்கள் புரோகிதர்கள் பண்டாரசன்னதிகள், பட்டக்காரர்கள், மடாதிபதிகள் ஆகியவர் களுக்கு இடமேது? பிரபுக்கள் முதலாளிகள் லேவாதேவிக்காரர்கள், மிராசுதாரர்கள், பண்ணையார்கள், ஜமின்தாரர்கள், ராஜாக்கள், மகாராஜாக்கள், இளவரசுகள், லட்சுமி புத்திரர்கள் ஆகியவர்களுக்கு இடமேது?

அன்றியும் இந்த ஆத்திகம் என்பது இல்லா திருக்குமானால் கீழ் ஜாதிக்காரன், ஏழை, பிச்சைக்காரன், கூலி வேலையாள் முதலிய இழிவுபடுத்தப்பட்ட அடிமைப்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடமேது? என்பவைகளைக் கூர்ந்த அறிவு கொண்டு நடுநிலை என்னும் கண்ணாடி மூலம் பார்த்தால் யாவருக்கும் இதன் உண்மை நன்கு விளங்கும்.
அன்றியும் இன்றைய ஆத்திகப் பிரசாரகர்கள் எல்லாம் எங்கு பார்த்தாலும் சரீரத்தினால் சிறிதும் பாடுபடாமல், நோகாமல் உட்கார்ந்து கொண்டு ஊரார் உழைப்பில் உண்டு உடுத்தித் திரியும் சோம்பேறிகளும் நயவஞ்சகர்களுமாகவே இருக்கின்றார்களே ஒழிய வேறு யாராவது இவ்வளவு இருக்கிறார்களா? என் பதைக் கவனித்தாலும் உண்மை விளங்காமல் போகாது.
மேலும் இந்த ஆத்திகக் கூட்டம் எல்லாம் நாத்திகத் திற்கு அணுவளவாவது பதில் சொல்ல யோக்கியதை இல்லாமல் இருந்தாலும் நாத்திகம் பரவுவதற்குக் காரணம் என்ன? என்பதைக் கண்டுபிடித்து அதை சரிப்படுத்துவதற்கு யோக்கியதையோ இஷ்டமோ இல்லாமல் இருந்தாலும் அதைப் பற்றிக் கவனிப்ப தென்பதில்லாமல் ஒரே அடியாய் “இது ரஷியப் பிரசாரம், போல்இவிக் பிரசாரம், இவை மக்களை மிருகப் பிராயத்திற்குக் கொண்டு வரும் பிரசாரம், என்று சொல்லிப் பாமர மக்களின் மடமையை உப யோகப்படுத்திக் கொண்டு அவர்களை வெறியர் களாக்கி அதனால் ஆத்திகத்தை நிலைநிறுத்தி விடலாம் என்றே கருதுகிறார்கள் பாமர மக்களும், ஏழை மக்களும் தாழ்த்தப்பட்டு இழிவு படுத்தப்பட்ட மக்களும் என்றென்றைக்கும் மூடர்களாகவே இருப் பார்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பது தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டிருப்பதாகத் தான் முடியுமே அல்லாமல் மற்றபடி அதனால் யாதொரு பயனும் ஏற்படப் போவதில்லை என்பது மாத்திரம் உறுதி.

நாத்திகம் “ரஷ்யாவிலிருந்து பரவுகின்றது” என்று சொல்லிவிடுவதன் மூலமாகவே ஆத்திகர்கள் நாத்திகத்திற்கு ஒரு இழிவு கற்பிக்க முயற்சிக்கின்றார்கள் அதற்கு உதாரணமாக ரஷியாவின் நாத்திக திட்டத்தையும் வெளிப்படுத்தி இருக்கின்றார்கள்.ழ

அதாவது “ரஷிய சர்க்கார் தங்கள் நாட்டில் 5 வரு ஷங்களுக்குள் கடவுள், மதம், கோயில் ஆகியவைகள் இல்லாமல் இருக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த 5 -வருஷ நாத்திக திட்டத்தைப் பற்றி லண்டன் பார்லிமெண்டு மெம்பர் தோழர் ஆதல்டச்சஇ என் பவர் பேசிய ஒரு விருந்துப் பேச்சில் குறிப்பிட்ட தென்னவென்றால்
1. முதல் வருஷத்தில் கோவில்களையும், மார்க்க ஆராதனைகளையும் இடங்களையும் மூடிவிடுவது.
2. இரண்டாவது வருஷத்தில் எந்த வீடுகளிலும் பிரார்த்தனைக்கு இடம் இருக்கக் கூடாது என்பதுடன், சர்க்கார் உத்தியோகத்தில் மத சம்பந்தமான எண்ணமுடையவர்கள் யாவரும் இல்லாமல் செய்து விடுவது – மத சம்பந்தமான புத்தகங்கள் ஆதாரங்க ளெல்லாம் அழிக்கப் பட்டாகவேண்டும். நாத்திக படம், நாடகம், சினிமா முதலியவை நூற்றுக் கணக்காக நடத்த வேண்டும்.
3. மூன்றாவது வருஷத்தில் எந்த வீடுகளிலும் கடவுள் என்ற உச்சரிப்பே இல்லாதபடி செய்து விடுவது. இந்த உத்தரவுக்கு கீழ்ப் படியாதவர்களை தேசத்தை விட்டு வெளியாக்கி விடுவது.
4. எல்லாக் கோவில்களையும் பிரார்த்தனை ஸ்தலங்களையும் பொது நன்மைக்கு பயன்படும்படி சினிமா இளைப்பாறும் மண்டபம், காலப் போக்கு ஸ்தலம் ஆகியவைகளாக மாற்றுவது.
5. அய்ந்தாவது வருஷத்தில் அதாவது 01-05-1937க்குள் கடவுளுக்கு வீடோ வணங்க இடமோ நினைக்க உள்ளமோ ரஷிய எல்லைக்குள் இருக்கக் கூடாது. என்பதாகும். இந்த காரியங்களில் ரஷியர் வெற்றி பெற்று விடுவார்கள் என்பதற்கு இப்போதே அங்கு பல அறிகுறிகள் காணப்படுகின்றன. அன்றியும் ரஷ்யா இந்த நிலை எய்தி விட்டால் அங்குள்ள மனித சமுக விடுதலையும் சமத்துவமும் சுதந்திரமும் பெற்றுக் கவலை இன்றி மேன்மையாய் வாழ்வார்கள் என்பதற்கும் அங்கு அநேக அறிகுறிகள் தோன்றுகின் றன. எப்படியெனில் ரஷியர்கள் கடவு ளையும் மதத்தையும் அழிக்கவேண்டும் என்று கருதியது இன்று நேற்றல்ல வெகு காலமாகவே கருதிவந்திருக்கிறார்கள்.

என்றைய தினம் கஷ்டப்படுகின்ற மக்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏழை மக்களுக்கு, தொழிலாளிகளுக்கு தங்கள் கஷ்டத்தையும் இழிவையும் பசிக் கொடுமையையும் நீக்கிக் கொள்ள வேண்டும் என்கின்ற உண்மையான எண்ணம் உதிக்கின்றதோ அன்றே கடவுளும் மதமும், ஒடித்தான் தீர வேண்டும், மறைந்துதான் ஆகவேண்டும்.

ஆகவே, ரஷிய ஜனங்கள் கொடுங்கோன்மை யாலும், முதலாளிகள் பிரபுக்கள்மார் ஆதிக்கத் தினாலும் அனுபவித்து வந்த துன்பங்களில் இருந்து மீள வேண்டும் என்று கருதிய நிமிடமே கடவுள் பேரிலும், மதத்தின் பேரிலும் பாய்ந்து அவற்றின் பிடித்தத்தை மக்களிடையே இருந்து தளர்த்தி விரட்டி அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களது வெற்றி முரசொலி “கடவுளை ஒழிப்பது பணக்காரர்களை ஒழிப்பதாகும்” “மதத்தை ஒழிப்பது, உயர்வு தாழ்வை அழிப்பதாகும்” என்பதேயாகும்.

இந்த முரசை ரஷியாவெங்கும் அடித்து ரஷிய மக்களின் உள்ளத்தில் கல்லின் மேலேழுதிய எழுத்துப்போல் பதியவைத்த பிறகு தான் கொடுங் கோன்மை வேறுடன் சாய்ந்தழிந்தது பணக்காரத் தன்மை அதன் கிளைகளுடனும் சுற்றங்களுடனும் மறைந்தொழிந்தது.

கடவுளும், மதமும் ஒழிந்து விட்டதால் “மக் களுக்கு” ஆபத்து என்பது ரஷியாவில் ஓரளவுக்கு ருஜுப்படுத்தப்பட்டதை நாமும் நன்றாய் மனப் பூர்வமாய் ஒப்புக் கொள்ளுகிறோம். ஆனால் எந்த மாதிரியான மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டது என்பது தான் இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயமாகும். எனவே எப்படிப்பட்ட மக்களுக்கு ஆபத்து வந்து விட்டது என்றால், இன்றைய தினம் இந்தியாவில் ஆத்திகப் பிரசாரமும், மத பிரசாரமும் செய்யும் மக்களைப் போன்ற மக்களுக்குத் தான் ரஷியாவிலும் கடவுளும் மதமும் ஒழிந்ததால் ஆபத்து வந்துவிட்டது. இப்படிப்பட்ட மக்கள் அங்கு 100க்கு 5 பேர்களோ 7 பேர்களோ தான் அதாவது சக்கிரவர்த்திகளாகவும், அரசர்களாகவும், ஜமீன்தாரர்களாகவும், முதலாளி களாகவும் பெரியபெரிய உத்தியோகஸ்தர், டாக்டர்கள், வக்கீல்கள் போன்ற பல ஊரான் உழைப்பில் கொள்ளை அடிப்பவர்களாகவும், பாதிரிகளாகவும் முல்லாக்களாக வும், குருமார்களாகவும் மேல் ஜாதிக்காரர்களாகவும் இருந்து வந்த மக்களுக்கே தான் ஆபத்து வந்து விட்டது.

மற்றபடி இவர்கள் தவிர்ந்த மற்ற 100க்கு 90 பேர்களுக்கு மேற்பட்ட ஏழைகள் தொழிலாளிகள் கீழ்மைப்பட்டவர்கள் என்று சொல்லத்தக்க மக்கள் யாவருக்குமே மேன்மை கிடைத்து விட்டது.
அதுவும் தூங்கும் போது கீழ் மகனாய் கூலியாய் அடிமையாயிருந்து விழித்தெழும்போது மேன்மகனாய் விடுதலை பெற்றவனாய் சமவுரிமை அடைந்தவனாய் ஆனதுபோல் நிலைமை உயர்ந்து விட்டது.

ஆகவே, கடவுளும் மதமும் ஒழிவதின் மூலம் மக்கள் சமூகத்திற்கு எந்த நாட்டிற்கும் இவ்வித “ஆபத்து” நிலைமைதான் ஏற்படகூடும். இந்தப்படி யான “ஆபத்து” நிலையை தாழ்த்தப்பட்ட அடிமைப் படுத்தப் பட்ட ஏழைத் தொழிலாளி மக்கள் அதுவும் இந்தி யாவில் மாத்திரமல்லாமல் ரஷியா தவிர உலகமெங்கணும் 100க்கு 90 பேர்களாயிருப்பவர்கள் மேளதாளம் வைத்து வருந்தி வருந்தி அழைத்து வரவேற்க வேண்டியவர்களாகவே இருக்கிறார்கள். இவர்களை இனி ஹரிபஜனையினாலும் ஆண்டவன் மகிமையினாலும் – அடியார்கள் தூதர்கள் பெருமையினாலும் ஒரு நாளும் மறக்கடித்து விட முடியாது.

உலகத்தில் எந்த ஆண்டவனை நம்பின சமூகமும் எற்த மதத்தை ஏற்ற சமூகமும், இந்த கதியில்தான் இருந்து வருகின்றதேயொழிய “ஆண்டவனையும் அவனை அடையும் மார்க்கத்தையும்” ஒழித்த ரஷியாவைப்போல் மனித சமூகம் உயர்வுதாழ்வு இல்லாமல் சமதர்மமாய் இருப்பதாக யாராவது சொல்ல முடியுமா?
பணக்காரர்கள் கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் கட்டியதினாலும், வேத பாட சாலைகள், யுனிவர் சிட்டிகள் மதராசாக்கள் கட்டி விட்டதினாலேயும், பத்திரிகைகாரர்கள் வேதத்தின் பெருமையையும், புராணத்தின் மகிமையையும், பக்கம் பக்கமாய் எழுதி “ஆண்டவனையும் மார்க்கத்தையும்” புகழ்ந்து கொண்டு “நாத்திகர்”களை வைவதி னாலேயும் ஏழை மக்கள், இழிவுபடுத்தப்பட்ட மக்கள், பாடுபட்டுப் பட்டினி கிடக்கும் மக்கள் எழுத்து வாசனை அறிய வகையில்லாமல் தடுத்து தாழ்த்திவைக்கப் பட்டிருக்கும் மக்கள் கண்களில் மண்ணைப் போட்டு விடமுடியுமா? என்றுதான் கேட்கின்றோம்.

இப்படிப்பட்ட மக்கள் எந்த நாட்டில் எந்த மார்க்கத்தில் எந்த ஆண்டவன் படைப்பில் இல்லாம லிருக்கின்றார்கள்? என்று பந்தயம் கட்டி கேட்கின்றோம். இந்த குறை களுக்கு கொடுமைகளுக்கு ஆண்டவன் செயல்” என்பதல்லாமல் வேறு என்ன பதில்? இந்த ஆத்திகர்கள் சொல்லக் கூடும் என்று பணிவாய்க் கேட்கின்றோம். உலகம் தோன்றி பல “லட்சக்கணக்கான” காலங்களாகி விட்டன. “கடவுள்கள்” தோன்றி வெகு காலம் ஆகிவிட்டன. மார்க்கங்கள் தோன்றி ஆயிரக்கணக்கான வருஷங்களாகி விட்டன. இத்தனை கால கடவுள் – மத ஆட்சியிலும் மனித சமூகம் சீர்படவில்லை கவலை யல்லாமல் வயிற்றுக்கு ஆதாரமில்லை. மனிதனுக்கு மனிதன் அடிமைப் பட்டு உழைக் காமல் வாழ முடியவில்லை என்கின்றதான நிலைகள் இன்னமும் இருக்குமானால் இந்த கடவுள்களும், மார்க்கங்களும் இனி அரை நிமிஷ மாவது உலகில் இருக்க அருகதை உண்டா? என்றுதான் கேட்கின்றோம்.

160 வருஷ காலம் இந்தியாவை பிரிட்டிஷார் ஏகபோக சர்வாதிகார சக்கரவர்த்தியாய் ஆண்டும் இந்தியாவில் 100க்கு 90 தற்குறிகளும், 100க்கு 97க்கு கீழ் ஜாதியாரும், மற்றும் தீண்டாத ஜாதியும், தெருவில் நடக்காத ஜாதியும் இன்னும் இந்தியாவில் இருப்பதினால் அவர்கள் இந்தியாவை ஆள ஒரு சிறிதும் யோக்கியதை கிடையாது என்று எப்படி சொல்லுகின்றோமோ, அவர்களை விரட்டி அடிக்க எப்படி பாடுபடுகின் றோமோ, அதுபோல் தான் ஏன்? இன்னும் அதற்கும் மேலாகத்தான் இந்தக் கடவுள்களையும், மார்க்கங் களையும் விரட்டி அடிக்க கடமைப்பட்டிருக்கின்றோம் எப்படி எந்த மதமும் எந்த மார்க்கமும் மக்களை சமமாக பாவிக்காது சமமாக ஆக்காது. இதுவரை பாவிக்கவும் இல்லை ஆக்கவும் இல்லை என்று சொல்லுகிறோமே அதுபோல் தான் இன்று உலகில் வேறு அந்த அரசும், ஆட்சியும் மக்களை சமமாக பாவிக்க வில்லை – நடத்த வில்லை என்று சொல்லி எப்படிப்பட்ட ஆட்சியும் வேண்டியதில்லை சமதர்ம ஆட்சியே வேண்டும் என்கின்றோம். இதனால் யாருக்கு என்ன கஷ்டம்? என்பது நமக்கு விளங்க வில்லை. யாராவது “எங்கள் ஆண்டவன் கட்டளை, எங்கள் மார்க்க கொள்கை, எங்கள் அரசியல் முறை இதுதான்” என்று சொல்ல வருவார்களானால் குஷா லாய் வரட்டும் மண்டியிட்டு வரவேற்க காத்திருக் கிறோம். அவர்களோடு ஒன்றுபட கலர முன்னிற் கிறோம். அதில்லாமல் “இது போல்ஷவிக் பிரசாரம்”, “இது மனித சமுகத்திற்கு ஆபத்து”, “இது தேசியத்திற்கு ஆபத்து”, “இது சுயராஜ்ஜியத்திற்கு ஆபத்து”, “இது சட்டத்திற்கும் நீதிக்கும் அமைதிக்கும் ஆபத்து என்கிறதான பூச்சாண்டிகளைக் கொண்டு ஏழைகள் பட்டினி கிடக்கின்றவர்கள் – கீழ்மைப்படுத்தப்பட்ட வர்கள் கண்களில் மிளகு பொடியைக் தூவ முற்பட்டால் கண்கள் போனாலும் உயிர் போனாலும் எத்தனை காலமாவதானாலும் எப்பாடு பட்டாகிலும் இதைச் சாதித்துத் தீர வேண்டுமென்றுதான் சொல்லுவோம் – அவர்களுக்கு இதை தவிர வேறு மார்க்கம் இல்லை என்றுதான் சொல்லுவோம்.”

‘குடிஅரசு’ – தலையங்கம் – 04.12.1932

புதன், 15 மே, 2024

நீதி தாமதமாகவோ தவறாகவோ கூடாது – தந்தை பெரியார்விடுதலை நாளேடு
Published May 5, 2024

தந்தை பெரியார்

நமது வகுப்பார் சீர்குலைந்து மானங்கெட்டுப் பார்ப் பனர்களின் அடிமை களாகி அவர்களின் வாலைப்பிடித்துக் கொண்டு திரிவதற்கு முக்கியக் காரணம் நம்நாட்டில் ஏற்பட்டிருக்கும் கோர்ட்டுகள் என்று சொல்லப்படும் சூதாடுமிடங்களும், அவைகளுக்கு ஜட்ஜுகள் என்று சொல்லப்படும் சூதாட்ட நிர்வாகிகளுமே ஆவார்கள்.

சீட்டு மேஜை

அதாவது ஒருவர் ஒரு வீட்டை சூதாட்டத்திற்கு வாடகைக்குக் கொடுத்திருந் தால் அவ்வீட்டில் சூதாடிகளை ஒன்றுசேர்த்து அவ்வாட்டத்திற்கு அனுகூலமான சாமான் களையும் ஆடவசதியையும் செய்து கொடுத்து சீட்டு மேஜைக்காக என்றும் கூலி வாங்குகிறவன் ஒருவனுண்டு, சூது ஆடவருகிறவர்கள் ஒவ்வொரு வெற்றிக்கும் இவ்வளவு என்று கொடுத்துவருவதுண்டு. சாதாரணமாக காலைமுதல் மறுநாள் காலை வரையில் ஆளுக்கு இவ்வளவு என்பதாக கையில் பணம் வைத்துக்கொண்டு சூதாட ஆரம்பித்தால் கடைசியாய் எழுந்து போகும் போது நாலுபேர் தோல்வி அடைந்து கடன் காரராய் எழுந்து போவதும் இருவர் சம்பாதித்தவர்களாகவும் இருவர் அசலோடு போவதாகவும் காணப்படும், சம்பாதித்தவர் என்பவர்களுக்கு அவர்கள் அசலும் மேல்கொண்டு கால்ரூபாயோ அரை ரூபாயோ லாபமிருப்பதாகத் தெரியும். அதுவும் தோற்றவர்கள் மேல் கடன் விட்டிற்கும் தொகையா யிருக்கும். ஆனால் தோற்றபணமும் கடன்காரராக்கிய பணமும் எங்கு போய்விட்டதென்று பார்ப்போமேயானால் வீட்டு வாடகை காரனுக்கும் சீட்டாட வசதி செய்து கொடுத்த சீட்டுமேஜைக்காரனுக்கும், அந்த இடம் தெரிந்து அங்குவந்து மிரட்டிய போலீஸ்காரனுக்கும் தான்போயி ருக்குமே ஒழிய ஆடினவர்களுக்கு லாபமிருக்காது, இப்படியே தினப்படி வந்து சூதாடுவதும் தினப்படிபலர் தோல்வியடைவதுமாயிருக்குமே ஒழிய ஜெயித்தவர்களுக் குத் தோற்றவர்கள் பணம் அவ்வளவும் வந்திருக்காது. அதுபோலவே கோர்ட்டு நீதி என்பது இடம் கொடுத்தவர் களுக்கு சமானமாகிய அரசாங்கத்திற்கும் ஆடவசதி செய்து கொடுத்து சீட்டுமேஜை வாங்கியவர்களுக்குச் சமான மாகிய வக்கீலுக்கு மிரட்டி காசுவாங்கும் போலீசுகாரனுக்குச் சமானமாகிய கோர்ட்டு சிப்பந்திகளுக் கும் தூணுகளுக்கும் போய் சேர்ந்துவிடுகிறதே தவிர உண்மையான விவகாரக் காரனுக்கு ஒன்றுமே மீதியாவதில்லை.

தோற்றாலும் கெடுதி – ஜெயித்தாலும் கெடுதி

விவகாரத்திற்கு வரும் வாதி தோற்றால் அனேகமாய் பாப்பராய் விடுகிறான். ஜெயித்தால் செலவு செய்த தொகையை அடைந்தவனாகிறான். அதுபோலவே பிரதி வாதியும் ஜெயித்தாலும்தோற்றாலும் அநியாயமாய் கெட்டுப்போகிறான். இதன் காரணம் என்னவென்று பார்ப்போமேயானால் பிரிட்டிஷ் கோர்ட்டுகள் என்று சொல்வது பலருக்கு உத்தியோகம் கிடைக்கவும் வக்கீல்கள் பிழைக்கவும் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டனவே அன்றி குடிமக்கள் நீதி அடைய அல்லவே அல்ல என்பதுதான்.
நியாயம் கிடைக்கும் தன்மை
வக்கீல்களின் புரட்டுகளாலும் தந்திரங்களாலும் விவகாரக்காரனுக்குக் கையில் பணமிருக்கிறவரை “நியாயம்” கிடைக்கும் மாதிரி வசதி செய்யப் பட்டிருக்கிறது. சிற்சில சமயங்களில் சில விவகாரகாரனுக்குக் கைப்பணம் தீர்ந்துபோனபிறகுகூட கடன் கிடைப்பதாயிருந்தால் மறுபடியும் கூட நியாயம் கிடைக்க வழியிருக்கிறது. பெரிய விவகாரங்களில் நியாயம் என்பது சட்டத்தைப் பொருத்த தாகவே இல்லை. மாதிரி கேசுகளில் இதற்கு முன் உள்ள ஜட்ஜுகள் என்ன அபிப்பிராயம் கொடுத்திருக்கிறார். இன்ன ஊர் ஜட்ஜு எப்படி தீர்ப்பு சொல்லி இருக்கிறார் என்று பழைய ஜட்ஜுகளின் அபிப்பிராயமே சட்டமாயி ருக்கிறது. சில கேசுகளில் அந்தந்த ஜட்ஜுகள் கொள்ளும் அபிப்பிராயமே சட்டமாகும். நீதி ஸ்தலங்கள் என்பவை வரிசைக் கிரமமாய் முன்சீப் கோர்ட், ஜில்லா ஜட்ஜு அல்லது சப்ஜட்ஜு அப்பீல், ஹைக்கோர்ட் அப்பீல், புல்பெஞ்சு அப்பீல், லட்டர்ஸ்பேட்டெண்ட் அப்பீல், ரிவிஷன் பிரிவி கவுன்சில் என படிப்படியாய் பல ஸ்தானங்கள் விவகாரக் காரன் அறிவீனத்திற்கும் ஆணவத்திற்கும் பணத்திமி ருக்கும் தக்கபடி அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வளவுக்கும் தூண்டுகோலென வக்கீல் கூட்டங்களும் இவர்களை நத்திப் பிழைக்கும் இவர்களது புரோக்கர்களும் மலிந்து வருகின்றன. இவ்வித நியாய ஸ்தலமுறையும் நியாயவாதி முறையும் நியாயங் கிடைக்கு முறையும் நீங்காமல் மக்கள் சுயராஜ்ஜிய மடைந்துவிடலாம் என்பது சமுத்திர நீரை எல்லாம் குடித்துவிடலாம் என்பது போலவே ஆகும்.
கோர்ட்டு ஏற்படுத்தினதின் கருத்து
பொதுவாய் நோக்குமிடத்து இம்முறைகள் நாட்டின் விடுதலைக்கு விரோதமாகவும் பார்ப்பன ஆதிக்கத்திற்கு அனுகூலமாகவும் சர்க்காரும் பார்ப்பனரும் கூடிசெய்த சூழ்ச்சியே அல்லாமல் வேறல்ல.

தற்கால தேசாபிமானம்

தற்கால “தேசாபிமானி” என்பவருக்கும் பொது நல சேவை செய்பவர் என்பாருக்கும் இம்மாதிரி கோர்ட்டுகளையும் நியாயம் கிடைக்கும் முறைகளையும் இன்னும் அதிகமாக உற்பத்தி பண்ணுவதே யோக்கிய தாம்சமாயிருக்கிறது. சமீபத்தில் சட்டசபைக்கு நின்ற கனவான்களில் ஒருவர் தன்னுடைய யோக்கிய தாம்சத்தை வெளிப்படுத்திய ஒரு அறிக்கையில் நான் இன்ன ஊருக்கு கோர்ட்டுகள் வைக்கும்படி செய்தேன். இன்னஊரில் எடுக்கப்பட்டுவிட இருந்த கோர்ட்டை நிலை நிறுத்தினேன். ஆதலால் எனக்கு ஓட்டுச் செய்யுங்கள் என்று வெளியிட்டிருந்தார். இதுபோலவே ஒரு ஒட்டர் ஒரு சட்டசபை அபேட்சகருடைய யோக்கியதையைப் பரிசீலிக்கையில் அவ்வபேட்சகரைப் பார்த்து நீர் இந்த ஊரில் ஏற்பட இருந்த சப்- கோர்ட்டை வேண்டாமென்று சொன்னீராம். ஆதலால் உமக்கு தேசபக்தி இல்லை. ‘நீர் பொதுநலசேவைக்காரராக மாட்டீர் உமக்கு ஓட்டு செய்ய முடியாது’ என்று சொன்னாராம். அதற்கு அந்த அபேட்சகர் ‘நீர் தப்பாய் நினைத்துக் கொண்டீர், நான் இந்த ஊருக்கு ஒரு ஜில்லா கோர்ட்டே வரவேண்டுமென்கிற ஆசையினால் சப்கோர்ட் வேண்டாமென்று சொன்னேன். இந்த ஊர் நிலைமைக்கு இங்கொரு ஜில்லா கோர்ட்டு வேண்டாமா? அனேக ஜில்லாக்களில் இரண்டு ஜில்லா கோர்ட் இருப்பது போல் இந்த ஜில்லாவுக்கும் இரண்டு கோர்ட் வேண்டும். அதற்கு இந்த ஊர்தான் தகுதி’ என்று சொன்னாராம். இதிலிருந்து இம்மாதிரி ஓட்டர்களுக்கும் அபேட்சகர் களுக்கும் எவ்வளவு தேசபத்தியும் பொதுநல சேவையும் இருக்கிறது என்று யோசித்துப் பார்த்தால் தெரியும்.

சட்டமென்பது தேசபக்தி

அரசாங்கத்தாரின் மற்றபடி சட்ட சம்பந்தமான இலாகா சட்டமெம்பரின் வேலை தான் என்ன? இவ்வருஷம் சட்ட கலாசாலையில் (லாகாலேஜில்) படித்துதேறிய பிள்ளைகள் தொகை எவ்வளவு? இறந்து போனவக்கீல்கள் தொகை எவ்வளவு? அதுகளுக்கு பதில் செய்து சரிகட்டின பிள்ளைகள் போக மீதி தொகை எவ்வளவு? இவர்கள் பிழைப்புக்கு புதிதாய் உற்பத்தி பண்ணின உத்தியோக மெவ்வளவு? போக பாக்கியுள்ள பிள்ளைகளின் வயிற்று பிழைப்புக்கு எந்தெந்த ஊரில் நிரந்தர முன்சீப் கோர்ட்டுகளை ஏற்படுத்தலாம். எந்தெந்த ஊரில் நிரந்தர சப்- கோர்ட்டுகளை ஏற்படுத்தலாம். எந்தெந்த ஊரில் தற்காலசாந்தியாக முன்சீப் கோர்ட்டுகளை ஏற்படுத்தலாம், எந்தெந்த ஊரில் நிரந்தர ஜில்லா கோர்ட்டுகளை ஏற்படுத்தலாம், எந்தெந்த ஊரில் தற்கால சப்ஜட்ஜ் கோர்ட்டுகளை ஏற்படுத்தலாம், எந்தெந்த ஜில்லாவுக்கு உதவி சப் ஜட்ஜுகளையோ குறிப்பிட்ட காரியங்களுக்கு என்கிற ஜட்ஜுகளையோ நியமிக்கலாம் என்கிற கவலையே தவிர வேறென்ன இருக்கிறது?

சட்ட மெம்பரும் வக்கீல் பேட்டியும்

சட்ட மெம்பரை வக்கீல்கள் கூட்டம் கூடி பேட்டி காணுவதிலும் என்ன வேண்டுகோள் இருக்கிறது? “அய்யா எங்களுக்கு பிழைப்பு குறைந்து போய் விட்டது, ஒரு கோர்ட்டிலேயே எல்லா வக்கீல்களும் வந்துமுட்டிக் கொள்கிறார்கள், இதனால் வக்கீல் பிழைப்புக்கும் மரியாதை குறைகிறது, ஆதலால் இக்கூட்டத்தை கொஞ்சம் குறையுங்கள் அல்லது இன்னும் ஒரு கோர்ட்டாவது ஏற்படுத்துங்கள், பார்ப்பனரல்லாத வக்கீல்கள் அதிகமாகி விடுகிறார். ஆதலால் வக்கீல் பரீட்சையை இன்னும் கொஞ்சம் அதிக செலவு கட்டணம் ஆக்குங்கள். நம்மை போல் பிச்சை எடுத்து அவர்கள் படிக்கமுடியாது . வேறு வேலைக்குப் போய்விடுவார்கள். பார்ப்பனரல்லாத வக்கீல்கள் அதிகமாய் வரக்கூடாது என்கிற எண்ணத்தின் பேரில் 2வது கிரேடு வக்கீல் பரீட்சைகளையும் 1வது கிரேடு வக்கீல் பரீட்சைகளையும் எடுத்தும்கூட பி.ஏ.பி.ஏல்., வகுப்பிலும் பார்ப்பனரல்லாத பிள்ளைகள் படித்து வருகிறார்களே இதை எப்படியாவது ஒழித்து இன்னும் கொஞ்சம் செலவும் அதிகமான கஷ்டமும் வைத்து அவர்களை இந்த செய்யமுடியாதா” என்பதாகிற இதுகள் தான் வேண்டுகோளாயிருக்கிறதே தவிர வேறன்ன என்பது யோக்கியர்களுக்கு விளங்காமல் போகாது.

கோர்ட்டுகள் அதிகமாவதினாலே
வழக்குகள் அதிகமாகிறது

எத்தனைக்கெத்தனை கோர்ட்டுகள் அதிகமாய் வைக்கிறார்களோ அத்தனைக்கத்தனை வழக்குகள் உற்பத்தியாகிக்கொண்டே இருக்கிறது. இதனால் வழக்கு களும் விவகாரங்களும் உற்பத்தியாவதற்குக் கோர்ட்டுகளே காரண மல்லாமல் வேறென்ன? உதாரணம் வேண்டு மென்றால் கள்ளுக்கடைகளையும், தாசி வீடுகளையும், மோட்டார் வசதிகளையும் பார்த்தால் நன்றாய் விளங்கும். நாம் ஏன் கள்ளுக்கடைகளைக் குறைக்கும்படி சர்க்காரை வேண்டுகிறோம். கடை குறைந்தால் குடிகாரரின் எண்ணிக் கையும் குடிக்கும் அளவும் குறையும் என்று தான் தவிர வேறென்ன? நாலு தாசிகள் இருக்கும் ஊரில்நடக்கும் விபசாரத் தனத்துக்கும் 40 தாசிகளிருக்கும் ஊரில் விபசாரித்தனத்துக்கும் கணக்கு பார்த்தால் அதிக தாசிகள் உள்ள ஊர்களில் நடக்கும் விபசாரித்தனம் செய்கிற ஆள்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்குமா அல்லவா? அதுபோலவே ஒரு ஊருக்கு ஒரு தரம் போய் வரும் போக்குவரத்து வசதிகளுக்கு பதிலாக நான்குதரம் போய் வரும்படி போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தினால் அதற்கேற்ற பிரயாணிகள் அதிகமாக ஏற்படுவார்களா இல்லையா? அதுபோலவே கோர்ட்டுகள் அதிகமாகவும் ஊர் ஊராகவும் ஏற்பாடு செய்தால் விவகாரம் வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.
பழைய நிலைமையும் புதிய நிலைமையும்
ஆதியில் கோயமுத்தூர் ஜில்லாவுக்கு இரண்டு முன்சீப் கோர்ட்டுகளும் ஒரு சப்-ஜட்ஜுகோர்ட்டும்தான் இருந்தன. இப்போது கொள்ளேகாலம் உட்பட 8 முன்சீப் கோர்ட்டுகளும் 3 சப் ஜட்ஜு கோர்ட்டுகளும் இருக்கின்றன. இரண்டு ஜில்லா கோர்ட்டும் இருக்கின்றன. இவ்வளவும் போதாமல் இனியும் ஒரு சப் ஜட்ஜு வேண்டுமென்று பலரும்,இனியும் ஒரு ஜில்லா கோர்ட்டு வேண்டுமென்று பலரும் விரும்புகிறார்கள்.

கோர்ட்டுக்கு அவசியமுண்டா?

இதிலிருந்து நாம் அறியவேண்டியதென்ன? இவ்வளவு நீதி ஸ்தலங்கள் ஏற்படும்படியான அளவுக்கு இந்த ஜில்லாவில் சென்ற 40, 50 வருஷத்தில் ஜனத்தொகை பெருகிவிட்டதா? அல்லது இவ்வளவு கோர்ட்டுகள் ஏற்படும் படி ஜனங்கள் அவ்வளவு அயோக்கியர்களாகி விட்டார்களா? என்று பார்த்தால் ஜனத்தொகை ஏறக்குறைய முன் இருந்த அளவுக்கு 4இல் ஒரு பாகம்தான் அதிகமாகி இருக்கிறது இந்த அளவுக்கு சுமார் ரு (கால்) முன்சீப் கோர்ட்டு அதிகமாகியிருந்தால் போதும். அதிகமானால் ஒரு முன்சீப் கோர்ட்டு அதிகமாகலாம் என்றே வைத்துக் கொண்டாலும் 5 அல்லது 6 முன்சீப் கோர்ட்டு களும் ஜில்லா ஜட்ஜு அதிகாரமுள்ள ஒரு மேல்கண்ட ஜட்ஜுயும் 2 சப்ஜட்ஜுயும் அதிகமாகக் காரணமென்ன? இதைப் பார்க்கும் போது இவ்வளவு கோர்ட்டுகளுக்கும் வக்கீல் களுக்கும் வேலை உண்டாக்க தக்க மாதிரிக்கு ஜனங்களை அயோக்கியர்களாகவும், சர்க்காரும் பார்ப்பனர்களும் பழக்கி வைத்திருக்கிறார்கள் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது? அல்லாமலும் முன் காலங்களில் முன்சீப்புகள் 5 மணி வரை வேலை செய்வார்கள், சம்ப ளமும் அவர்களுக்கு 200, 300 தான். இப்போது 11.30 மணிக்கு கச்சேரிக்கு வந்தால் 2 அல்லது 3 மணிக்கு வீட்டுக்கு போய் விடுகிறார்கள். சம்பளம் 500, 600 வாங்குகிறார்கள்.

இனியும் ஒரு கோர்ட்டு வேண்டுமாம்

இவ்வளவும் போதாமல் இனியும் ஒரு சப்ஜட்ஜு கோர்ட்டு வேண்டு மென்றால் இவ்வயோக்கியத்தனத்திற்கு எதைச் சமமாகச் சொல்லுவது. இதையும் நமது ஜில்லாவில் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் ஊருக்கு வரும்படி எதிர்பார்க் கிறார்களாம்.
கோர்ட்டு வந்தால் வந்த ஊருக்கு ஏற்படும் கெடுதி
எந்த ஊரில் வைத்தாலும் வேலை ஏற்படும் என்கிற விஷபத்தில் நமக்கு சந்தேகமில்லை. அப்பீல் செய்ய இஷ்டமில்லாதவனுக்கெல்லாம் அப்பீல் செய்து பார்க்கலாம் என்கிற ஆசை வந்துவிடும். விவகாரத்தில் ஆசை இல்லாமலும், அசலூருக்குப்போய் விவகாரம் செய்வதில் சவுகரியமில்லாமல் தங்களுக் குள்ளாகவே பைசல் செய்து கொள்ளலாம் என்கிறவர்களுக்கெல்லாம் உள்ளூரில் கோர்ட்டு வந்துவிட்டால் பிராது செய்து விடலாம் என்கிற எண்ணம் ஏற்பட்டு விடும். அலட்சியமாகவும் அனாவசிய மாகவும் மறதியில் இருந்த வழக்கு களுக் கெல்லாம் வக்கீல்கள் முதன்மை ஸ்தானம் கற்பித்துக் கொடுத்து வழக்கிலிழுத்து விட்டுவிடுவார்கள். இன்னமும் எவ் வளவோ கஷ்டங்கள் அவ்வூரிலுள்ள ஏழை மக்களுக்கு ஏற்பட்டுவிடும். முதலாவது வீட்டுவாடகை உயர்ந்துவிடும். காய், கறி, மோர், தயிர், பால், நெய், விறகு விலைகள் உயர்ந்துவிடும். கூலிஆட்களின் கூலி அதிகமாய் விடும் ஜனங்களுக்குள் கட்டுப்பாடும், பெரியவர் சிறியவர் என்கிற மரியாதையும் மாறிவிடும். இவ்வளவு அக்கிரமங்களோடு நாணயமும் குறைந்துவிடும். இவ்வளவு கஷ்டங்கள் ஏற்படு வதாயிருந்தாலும் ஒரு வகுப்பாரின் வயிற்றுப்பிழைப்புக் கோர்ட்டுகளை அதிகப்படுத்துவதே தேசசேவையாயும் இதற்கு அனுகூலமாய் இருக்கும் அதிகாரிகளே பூரண கும்பம் எடுக்கத்தக்க யோக்கியதை உள்ளவர்களாவும் போய்விட்டது. இந்த கூட்டத்தார் தான் நமக்கு சுயராஜ்யம் வாங்கிகொடுக்கத்தக்க யோக்கியர்களாம்.

விவகாரக்காரருக்கு ஏதாவது வசதி உண்டா?

இவ்வளவு அக்கிரமங்களுக்கிடையில் ஏற்படுத்தப்படும் கோர்ட்டுகளில் விவகாரக்காரர்களுக்கு ஏதாவது கடுகளவு சவுகரியமோ யோக்கியதையோ அல்லது அவர்களையும் மனிதர்களாய்கருதத்தக்க நிலைமையோ இருக்கிறதா என்று பார்த்தால் அது கொஞ்சமாவது நினைக்கத்தக்க காரியமே அல்ல. நியாயதிபதியாருக்கிறவர் பொது ஜனங்களின் பணத்திலிருந்து மாதம் 500, 1000, 2000, 3000 சம்பளம் வாங்கிகொண்டு மோட்டாரில் வந்து இறங்குவதும், தனி அறையில் இளைப் பாறுவதும், பங்கா வீசுவதும் பக்கத்தில் சேவகர்கள் கைகட்டிக்கொண்டு நிற்பதும், தனி கக்கூசு, தனி சிற்றுண்டி அறை ஆகிய போக போக்கியமும் விவகாரக்காரரை ஏமாற்றி 50, 100, 1000, 2000 என்பதாக பீசுவாங்கும் வக்கீல்கள் குதிரை வண்டிகளிலும், மோட்டார் கார்களிலும் வந்து இறங்குவதும், பங்காவின் கீழ் உட்காரு வதும் தங்களுக்கென இளைப்பாறும் அறைகளுமாக போகபோக்கியங்களும் அடைவதுமாயிருக்கிறார்களே ஒழிய விவகாரக்காரரைப் பற்றியோ, விவகாரத்தின் பொருட்டு சாட்சிக்கு வருகிறவர் களைப்பற்றியோ, கொஞ்சமாவது கவலையே இல்லை, கோர்ட்டுகளில் விவகாரக் காரருடைய பரிதாபம் அவர்கள் உட்கார சவுகரியமில்லை. தங்க இடமில்லை. ஒதுங்க மார்க்கமில்லை. வாய்பேச மார்க்கமில்லை, கோர்ட்டு எல்லைக்குள் இருக்கும் வரை ஜெயிலில் கைதிஇருப்பதுபோல் பயந்து ஒடுங்கி நிற்கவும் ஏதாவது ஒருவருக்கொருவர் வாயைத்திறந்தால் அங்குள்ள சேவகர்கள், ‘உஸ்’ ‘அஸ்’ என்று இடையன் ஆடு மாடுகளை ஓட்டுவது போலவும் ‘பேசாதே’ என்று மரியாதைஇல்லாமல் கட்டளையிடுவதுமான ஹீனத்தன்மைக்கு ஆளாக வேண்டியதேயல்லாமல் அங்கு வாதியாகவோ, பிரதிவாதி யாகவோ, சாட்சியாகவோ வருகிறவர்கள் மனிதர்கள் என்று எண்ணியமாதிரியாய் ஏதாவதுகாணப்படுகிறதா? அல்லா மலும் கோர்ட்டுகள் மெத்தைமீது சிலதும் சந்துகளில்சிலதும் இருப்பதால் கூப்பிட்டாலும் காது கேட்கத் தக்க அவ்வளவு தூரத்திலாவது நிற்கக்கூட இடமில்லாமல் இருப்பதோடு வக்கீலிடம் பேசவோ, ஏதாவது ஒரு விஷயத்தை சொல் லவோ இடமில்லை.

வாய்தாக்கள்

இத்தனையும் போதாமல் ஒரு விவகாரத்தை 3 வருடம் 4 வருடம் நீட்டி 25 வாய்தா 30 வாய்தா போடும் உபத் திரவங்கள் அல்லாமல் காலை 11 மணிக்கு கோர்ட்டுக்குள் நுழைந்தால் மாலை 5 மணிவரையில் நின்றுகொண்டே காத்திருக்க வேண்டும், சிலசமயங்களில் இன்று கேஸ் நடக்காது என்று தெரிந்தாலும் 5 மணிவரை வாய்தா எப்பொழுது என்பது தெரிவதற்காக காத்திருக்கவேணடும் எப்போதுநடக்கும்? இந்த வாய்தாவில் நடக்காதா? என்கிற விவரங்கள் கட்சிக்காரரோ சாட்சிக்காரரோ அறிய வசதியில்லை. இதனால் இவர்களுக்குக் கட்டும் சாட்சி படி, போக வர செலவுமெனக்கெடு எவ்வளவு என்பதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை. ஜட்ஜு பெண்சாதிக் காலில் எறும்பு கடித்துவிட்டால் அன்றையக் கேசுகள் முழுவதும் வாய்தா போட்டாய்விடும். வக்கீல் வீட்டில் அமாவாசை சமையல் நேரமாய் விட்டால் குமாஸ்தா வாய்தா வாங்கி விடுவார். வக்கீலுக்கு வேறு கோர்ட்டுக்குப் போக வேலை யிருந்தால் கேசை மாலையில் எடுத்துக்கொள்ளும்படி ஜட்ஜைக் கேட்டு வாய்தா வாங்கிவிடுவான். இப்படி எவ்வளவு கஷ்டங்கள் ஏற்படுகின்றன. நிற்க, சாட்சிக்கு உடம்பு சவுகரியமில்லா விட்டால் டாக்டர்களுக்கு ரூ. 20, 30 கொடுத்து சர்ட்டிபிகேட் வாங்கவேண்டும் வேறு அவசர வேலை இருந்தால், ரூ. 20,30 கொடுத்து வயிற்றுகடுப்பு என்று பொய் சர்ட்டிபிகேட் வாங்கவேண்டும். இப்படியாக எவ்வளவு கொடுமைகள் விவகாரக்காரருக்கு இருந்து வருகிறதென்பதும் வாய்தாக்கள் ஏற்படுவது கட்சிக் காரர்களாலா அல்லது வக்கீல்களாலா ஜட்ஜுகளாலா என்பதை பார்த்தால் 100-க்கு 90 விவகாரங்களுக்கு ஜட்ஜுகளும் வக்கீல்களுமேயல்லாமல் வாதி பிரதிவாதி காரணமேயில்லை என்பது விளங்கும்.

மேல் அதிகாரிகளோ?

இவற்றைப்பற்றி மேல் அதிகாரிகளுக்கு எழுதினால் ‘அசல் அநியாயம்’ ,’அப்பீலில் அதுவே காயம்’ என்பதுபோல் ‘இதெல்லாம் சகஜம்தான்’ என்று சொல் வார்கள். காரணம் என்னவென்றால் முனிசீப்பு ஸ்தானம் முதல் ஹைக்கோர்ட்டு ஜட்ஜு, சட்டமெம்பர் ஆகிய ஸ்தானம் வரையில் இந்த வக்கீல் கூட்டத்திலிருந்தும் இதனாலே வயிறு வளர்க்கக் கூடிய கூட்டத்திலிருந்துமே ஆள்பிடிக்கிறார்களே தவிர வேறில்லை. வக்கீல் கூட்டத்திலிருந்து நியாயாதிபதிகளை நியமிப்பது என்கிற அக்கிரமம் ஒரு நாட்டில் இருக்கும் வரை பார்ப்பன ஆதிக்கமும் விவகாரமும் வலுக்கவும், குடியானவர்கள் நாசமாய்ப் போகவும் நாடு குட்டிச் சுவராகவும்தான் ஏற்படுமே அல்லாமல் ஒரு நாளும் நாம் உருப்படியாக சுயராஜ்யம் பெறப்போவதில்லை என்பது உறுதி.
– ‘குடிஅரசு’ – கட்டுரை – 06.03.1927

ஒரு விவகாரத்தை 3 வருடம் 4 வருடம் நீட்டி 25 வாய்தா 30 வாய்தா போடும் உபத்திரவங்கள்
அல்லாமல் காலை 11 மணிக்கு கோர்ட்டுக்குள் நுழைந்தால் மாலை 5 மணிவரையில்
நின்றுகொண்டே காத்திருக்க வேண்டும், சிலசமயங்களில் இன்று கேஸ் நடக்காது என்று
தெரிந்தாலும் 5 மணிவரை வாய்தா எப்பொழுது என்பது தெரிவதற்காக காத்திருக்க
வேணடும். எப்போது நடக்கும்? இந்த வாய்தாவில் நடக்காதா? என்கிற விவரங்கள்
கட்சிக்காரரோ சாட்சிக்காரரோ அறிய வசதியில்லை. இதனால் இவர்களுக்குக் கட்டும் சாட்சி
படி, போக வர செலவுமெனக்கெடு எவ்வளவு என்பதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை.

ஞாயிறு, 12 மே, 2024

பெரியார்- அம்பேத்கர் ஒத்த கருத்து!


அண்ணல் அம்பேத்கர் 134ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று

விடுதலை நாளேடு
Published April 14, 2024

பெரியார்- அம்பேத்கர் ஒத்த கருத்து!

பார்ப்பனர்களைப் பொறுத்த அளவில் இந்த நாட்டில் அன்னியர்களைப் போல்தான் நடந்து கொள்கிறார்கள். பார்ப்பனர் அல்லாத மக்களின் முட்டாள்தனமும் அறியாமையுமே பார்ப்பனர்களுக்கு தங்களின் மேலாண்மையை நிலை நிறுத்திக் கொள்ள போதுமானதாகி விட்டது. கொஞ்சம்கூட இரக்கமில்லாமல் அந்த மக்களை மூடநம்பிக்கையில் ஆழ்த்தி பயமுறுத்தி தங்கள் அடிமைகளாகவே பார்ப்பனர்கள் வைத்திருக்கிறார்கள்.

இந்நிலை கண்டு கொதித்தெழுந்தவர்கள் தந்தை பெரியாரும் பாபாசாகேப் அம்பேத்கரும், அதனால்தான் இவர்கள் பார்ப்பனர் அல்லாதவர்களின் மூடநம்பிக்கை களைக் களையப் பாடுபட்டதோடு பார்ப்பனர்கள் அன்னியர்களே என்றும் நமக்கும் அவர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் தவறாமல் வலியுறுத்தி வந்தார்கள்.
பெரியார் அவர்கள், “ஆங்கிலோ இந்தியர்கள் எப்படியோ அதே போலத்தான் இந்நாட்டு பார்ப்பனர்களும், ஆங்கிலோ – இந்தியர்கள் நம் நாட்டுத் தாய்மார்கள் ஈன்றெடுத்தவர்தானே, ஆனால் அவர்களுக்கே சற்றாவது நம் நாட்டு உணர்ச்சி இருக்கிறதா? நமது மக்களைப் பார்த்து, “டேய், டமில் மனுஷா’’ என்று கேவலமாகத்தானே கூறுகின்றனர். அவர்கள் யார்? எந்த நாட்டில் பிறந்தவர்கள் என்ற வரலாற்றை அறியாமல் தாம் ஏதோ அய்ரோப்பாவில் பிறந்து இங்கு வந்து குடியேறியது போல ஜாதி ஆணவத்துடன் அல்லவா நடக்கிறார்கள்?
அதைப் போலவே இந்நாட்டுப் பார்ப்பனர்களும் மேல் நாட்டில் இருந்து வந்து குடியேறிய ஆரியர்களுக்கும் நம் நாட்டவர்களுக்கும் பிறந்தவர்களாய் இருந்தும் கூட ஆரிய ஜாதி முறைகளையும், அதற்கான ஆணவத்தையும் கொண்டு நாட்டுக்குரிய நம் மைக் கீழ் ஜாதிகளாக அடிமைகளாக மதித்து நடத்துகிறார்கள்.

(‘குடிஅரசு’ 29.5.1949)

பாபாசாகேப் அவர்களும் தன் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களையும் அவமானங்களையும் ஏன் இப்படி என்று ஆராய்ச்சி செய்து இதற்கெல்லாம் அடித்தளம் பார்ப்பனர்களே என்றும் நமக்கு சம்பந்தமில்லாத அன்னியர்கள் என்றும் கண்டறிந்தார்.

அவர், “இந்தியாவில் பார்ப்பனர்கள் தம்முடைய படிப்பறிவில்லாத நாட்டு மக்களை நிரந்தர அறியாமையிலும் வறுமையிலும் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு தத்துவத்தைக் கண்டுபிடிக்க தங்கள் அறிவை ஒழுக்கக் கேடான செயலுக்கு பயன்படுத்தியது போல் உலகில் எந்தவொரு அறிவார்ந்த வகுப்பினரும் செய்யவில்லை. ஒவ்வொரு பார்ப்பனரும் அவர்களின் மூதாதையர் கண்டுபிடித்த தத்துவத்தை இன்றளவும் நம்புகின்றனர்.

இந்து சமூகத்தால் பார்ப்பனர்கள் அன்னியர்களாகக் கருதப்படுகின்றனர். பார்ப்பனர்களை ஒரு பக்கம் நிறுத்தி மற்றொரு பக்கம் சூத்திரர்கள் மற்றும் தீண்டப்படாத மக்களை நிறுத்தி ஒப்பிட்டுப் பார்த்தால் – இந்த இரண்டு பிரிவினரும் இரு வேறு அயல்-நாட்டினர் போல்தான் தோன்றுவர்.
ஒரு ஜெர்மானியனுக்கு ஒரு பிரஞ்சுக்காரன் எப்படி அன்னியனோ, ஒரு வெள்ளைக்காரனுக்கு ஒரு நீக்ரோ எப்படி அன்னியனோ அது போலவே பார்ப்பான் அடிமை வகுப்பினர்களான சூத்திரர்களுக்கும் தீண்டத் தகாதவர் களுக்கும் அன்னியனாவான். இவர்களுக்கு அன்னியன் மட்டும் அல்ல. அவர்களுக்கு விரோதியாகவும் இருக்கிறான்’’

(காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாதவர்களுக்கு செய்ததென்ன? நூலிலிருந்து)

ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வந்த வெள்ளைக்காரன் என்னோடு கை குலுக்குகிறான். தொட்டுப் பேசுகிறான். ஆனால், அடுத்த தெருவில் உள்ள பார்ப்பான் என்னைப் பார்த்தால், தொட்டால் தீட்டு என்கிறான். என்னைத் தொட்டுப் பேசுகிற வெள்ளைக்-காரன் அன்னியனா, பார்த்தால் தீட்டு என்கின்ற பார்ப்பான் அன்னியனா என்று பெரியார் கேட்டதும் பார்ப்பான் ஓர் அன்னியனே என்பது விளங்கும்.

தமிழ் வருஷப் பிறப்பு – தந்தை பெரியார்விடுதலை நாளேடு
Published April 14, 2024

ஆரிய சம்பந்தமான கதைகள், சேதிகள் ஆகியவைகளில் எதை எடுத்துக் கொண்டாலும் அதில் ஆபாசம், அசிங்கம், விபசாரம், இயற்கைக்கு மாறுபட்ட வண்டத்தனமான சங்கதிகள் முதலியவை இல்லாம லிருப்பது மிக மிக அதிசயமாகும்.

60 வருடங்களுக்கு மானங்கெட்ட கதை

சில வாரங்களுக்கு முன்னால் மாரியம்மன் என்னும் ஒரு பெண் தெய்வத்தைப் பற்றி வெளியான வியாசம் வாசகர்களால் படிக்கப்பட்டிருக்கலாம். அதற்கும் சில வாரங்களுக்குமுன் பண்டரிபுரத்தைப் பற்றி எழுதப் பட்டிருந்த வியாசம் படிக்கப்பட்டிருக்கலாம்.

இப்போது இன்னும் சிறிது நாட்களுக்குள் வருஷப் பிறப்பு வரப் போகிறது. இந்த வருஷப் பிறப்புக்குச் சம்பந்தப்பட்ட தமிழ் வருஷங்களின் யோக்கியதையை மானமுள்ள தமிழ்மக்கள் படித்துப் பார்க்க வேண்டும் என்கின்ற ஆசையாலேயே இதை நான் எழுதுகிறேன்.
இந்த வருஷப் பிறப்புக் கதை நாகரிகம் உள்ள மக்களால் எழுதப்பட்டிருக்க முடியுமா? இதைப் படித்துப் பார்க்கும் அந்நியன் இந்தக் கதை சம்பந்தப்பட்ட மக்களை என்ன என்று நினைப்பான்? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஒரு முக்கிய சம்பவத்தை ஞாபகப் படுத்தக் கூடியதாகவும், சரித்திரத்திற்கு பயன்படத்தக்கதாகவும், நாகரிகமுள்ள தாகவும் உள்ள வருஷக் கணக்குகள் இருக்கின்றன. உதாரணமாக அவர்களது வருஷங்களுக்கு கி. மு., கி. பி., ஹிஜரி என்கின்ற பெயர்களும் அதற்கு நல்ல கருத்துகளும் இருக்கின்றன.
ஆனால் தமிழனுக்கும், நாதியற்ற தமிழனுக்கு என்ன வருஷம் இருக்கிறது? அதற்கு என்ன கருத்து என்று பார்ப்போமானால் தமிழன் என்கின்ற பெயர் வைத்துக் கொண்டு இந்த நாட்டில் வாழ்வதற்கு வெட்கமில்லையா? என்று தான் தோன்றும். தமிழனின் நிலையை ஆரியர்கள் தங்கள் சாமர்த்தியத்தால் மானங்கெட்ட காட்டுமிராண்டி, லம்பாடி சமூகமாக ஆக்கிவிட்டதால் இவ்வளவு இழிவு ஏற்பட்ட இந்தக் காலத்திலும் தமிழனுக்கு சூடு, சொரணை ஏற்படுவதில்லை.

கோவிலுக்கு தேவதாசிகளை விட்டவன் தமிழனே என்றால் மற்றபடி தமிழனால் ஆக்கப்படவேண்டிய இழி செயல் வேறு என்ன இருக்கிறது?
இது மாத்திரமா? மோட்சம் என்றால் தமிழன் எதையும் செய்ய முன் வருகிறான்.

ஆ பயன் அய்ந்து என்று சொல்லிக் கொண்டு மாட்டு மூத்திரம், சாணி எல்லாவற்றையும் காசு கொடுத்து வாங்கிக் குடிக்கிறான் மற்றும் கேரள நாட்டில் நடப்பதை எழுதவே கை நடுங்குகிறது. ஏன் என்றால், ஒரு தடவை விடுதலை எழுதிவிட்டு ரூ.1500 செலவு செய்தும் ஆசிரியருக்கும், சொந்தக்காரருக்கும் 9, 9 மாத தண்டனை கிடைத்தது. அக்கிரமம் செய்கிறவர்களுக்குப் பெரிய வேட்டையும், பதவியும் கிடைக்கிறது; எடுத்துக் காட்டுபவருக்கு செலவும், ஜெயில் வாசமும் கிடைக்கிறது.
மனுதர்மத்தைவிட ஒருபடி முன்னால் போய்விட்டது நமது தேசிய ஆட்சி. ஆதலால் அதைச் சொல்லப் பயந்துகொண்டு நிறுத்திக் கொள்ளுகிறேன்.
ஆரியர்களால் எழுதப்பட்டு இன்று நம் இலக்கண, இலக்கியங்களில் முன்னிடம் பெற்று நம் பண்டிதர் களுக்குப் புலவர் (வித்வான்) பட்டம் பெற ஆதார மாயிருக்கும் நூல்களில் இருப்பதையே சொல்லுகிறேன். படித்துப் பாருங்கள். இந்த ஆபாசமுறை மாற்றப்பட வேண் டாமா? நம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்றதை மறந்து இனிமேலாவது ஒரு நாகரிகமான முறையில் நமது வருஷ முறையை அமைத்துக்கொள்ள வேண் டாமா என்பதை வலியுறுத்தவே மேலும் கீழும் குறிப்பிடப்படுவனவாகும்.
நம் வருஷப் பிறப்புக்குத் தமிழ் வருஷப் பிறப்பு என்று சொல்லிக் கொள்ளுகிறோம். இது நியாயமா? தமிழ் வருஷப் பிறப்பு கதையைப் பாருங்கள்.

வருடப் பிறப்புக் கதை

நாரதப் பிரம்ம ரிஷி அவர்களுக்கு ஒரு நாள் காமஇச்சை ஏற்பட்டதாம். எங்கு போனால் இது தீரும்? என்று ஞான திருட்டியினால் பார்த்து சாட்சாத் கிருஷ்ண பகவானிடம் போனால் தமது காம இச்சை தீரும் என்று கருதி கிருஷ்ணனிடம் ஓடோடி ஓடினாராம். கிருஷ்ண பகவான் நாரத முனி சிரேஷ்டரே எங்கு வந்தீர்? என்றாராம். அதற்கு நாரதர் ஒன்றும் இல்லை என்று தலையைச் சொறிந்து கொண்டு பல்லைக் காட்டினாராம். கிருஷ்ண பகவான் சும்மா சொல்லும் என்றாராம். நாரதர், எனக்கு எப்படியோ இருக்கிறது. உமக்கு அறுபது ஆயிரம் கோபிகள் (வைப்பாட்டிகள்) இருக்கிறார்களே, அதில் ஒன்று கொடுங்களேன் என்று கேட்டாராம். உடனே கிருஷ்ண பகவான் இது தானா பிரமாதம் இன்று இரவு எனது அறுபது ஆயிரம் கோபிகளில் நான் இல்லாத வீட்டிற்கு போய் அங்கு உள்ள கோபியை அனுபவித்துக் கொள்ளுங்கள் என்றாராம். உடனே நாரத பிரம்மம் கிருஷ்ண பகவானுக்கு ஒன்று போக 59999 கிடைத்ததாகக் கருதிக் கொண்டு மகிழ்ச்சிப் பெருக்குடன் கோபிகள் வீட்டுக்கு சென்றாராம். அங்கு சென்று எந்த வீட்டைப் பார்த்தாலும் அங்கெல்லாம் கிருஷ்ண பகவான் கோபியுடன் படுத்துக் கொண்டி ருப்பதைக் கண்டு வெட்கப்பட்டு வெகு கோபத்துடன் கிருஷ்ண பகவான் வீட்டுக்கு வந்தார். வழியில் என்ன நினைத்துக்கொண்டு வருகிறார் என்று யோசித்தால் அது மிகவும் வேடிக்கையானது. அதாவது இப்படி நம்மை மோசம் பண்ணின கிருஷ்ணனையே இன்று அனுபவிப்பது என்று தான் கருதிக்கொண்டு வருகிறார் என்று தெரியவருகிறது.
அதாவது, பகவானே நான் சென்ற கோபி வீட்டில் எல்லாம் நீர் இருந்தீர். ஆதலால் சும்மா வந்துவிட்டேன். அதன் நிமித்தம் நான் தேவரீரையே அனுபவிக்க ஆசைப்படுகிறேன் என்று சொன்னதோடு பகவானைப் பெண்ணாகக் கொண்டு அனுபவிக்க அழைத்தால் ஒரு சமயம் வரமாட்டாரோ என்று கருதிப் போலும், பகவானே, என்னைப் பெண்ணாய்க் கொண்டு தாங்கள் அனுபவிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் கொண் டேன் என்று கெஞ்சினார். பகவான் உடனே கருணை கொண்டு சிறீமதி நாரத அம்மாளை அனுபவித்தார். எத்தனை காலம் அனுபவித்தார் என்று தெரிய யாராவது வாசகர் ஆசைப்படலாம். இந்த நாரத அம்மையுடன் கண்ணன் 60 வருஷம் லீலை செய்தார். அப்புறம் என்ன ஆயிற்று என்றால் ஆணாயிருந்தால் என்ன, பெண்ணா யிருந்தால் என்ன, பகவான் கிரீடை செய்தால் அது வீணாகப் போகுமோ? போகவே போகாது. எனவே அந்த 60 வருஷ லீலைக்கும் வருஷத்திற்கு ஒரு பிள்ளை வீதம் நாரத அம்மாளுக்கு 60 பிள்ளைகள் பிறந்தன. இந்த 60 பிள்ளைகளும் தகப்பனைப் பிடித்துக் கொண்டு எங்களுக்கு என்ன கதி? என்று கேட்டன. பகவான் அருள் சுரந்து நீங்கள் 60 பேரும் 60 வருஷங் களாக ஆகி ஒவ்வொருவர் ஒவ்வொரு வருஷத்திற்கு உலகாளுங்கள் என்று கருணை சாதித்தார். அதிலிருந்து 60 வருஷங்கள் ஏற்பட்டு அவைகளுக்கு இந்த 60 பிள்ளைகள் பெயர் வைக்கப்பட்டு வருஷம்தோறும் அப்பெயர்கள் மாறி மாறி வருகின்றன.

ஆகவே, இந்த 60 வருஷங்கள் பகவானும் ரிஷியும் ஆன ஆணும் ஆணும், ஆண் பெண்ணாகச் சேர்ந்து பிறந்த குழந்தைகள். இதற்காகத்தான் நாம் வருஷப் பிறப்பு கொண்டாடுகிறோம்.
இப்படி ஆணும் ஆணும் சேர்ந்ததால் பிறந்த அதிசயமான பிள்ளைகளானாலும் இந்த வருஷப் பெயரையோ, எண்ணிக் கையையோ கொண்டு 60 வருஷத்திற்கு மேற்பட்ட காலத்தைக் கண்டு பிடிக்க முடிவதில்லை. அதனால்தான் தமிழ னுக்கு சரித்திரம் இல்லை என்பதோடு தமிழர் சரித்திர காலத்திற்கு விவகாரம் இல்லாமலும் இல்லை.
ஆகையால் இனியாவது தமிழர்கள் இந்த 60 வருஷ முறையைக் காறித் துப்பிவிட்டு கி.பி.யையோ, ஹிஜரி யையோ, கொல்லத்தையோ, விக்கிர மாதித்தனையோ, சாலிவாகனனையோ அல்லது வேறு ஏதாவது ஒரு சனி யனையோ குறிப்பு வைத்துக் கொள்ளுவார்களா? என்றும் அவ்வளவு சூடு சொரணை தமிழனுக்கு உண்டா என்றும் கெஞ்சிக் கேட்கிறோம்.

  • “குடிஅரசு” – 08.04.1944