வெள்ளி, 27 நவம்பர், 2015

கார்த்திகைத் தீபத் திருவிழாவா? கடவுள்களின் பித்தலாட்டமா?


- தந்தை பெரியார்

கார்த்திகைத் தீபப் பண்டிகை ஒரு தெய்வீகம் பொருந்திய சிறந்த நாளாகக் கருதி இந்தியா முழுவதும் கொண் டாடப்பட்டு வருகின்றது. கார்த்திகை நட்சத்திரத் தினத்தை சுப்ரமணியன் என்னும் சாமிக்கு உகந்த நாளாகக் கருதி, பக்தர்கள் என்பவர்கள் பூசை களும், விரதங்களும் மேற்கொள்கின் றார்கள். இதில் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகையே மிகவும் சிறந்த பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தச் சமயத்தில் சுப்பிரமணியனின் 6 வகையான ஊர்கள் என்று புராணம் கூறும் ஊர்களுக்கு மக்கள் பிரயாணம் செய்து, ரொக்கப் பணத்தைச் செலவு செய்வதோடு, காடு, மேடு, குப்பை கூளங்களில் எண்ணற்ற விளக்குகளை வைப்பதன் மூலம் ஆகும் எண்ணெய், நெய், செலவு, சொக்கப்பனை கட்டி நெருப்பு வைப்பதற்கு ஆகும் செலவு போன்றவற்றுடன், இதனால் மக்களுக்கு உண்டாகும் மூடநம்பிக்கையும், அத னால் உண்டாகும் மூடப்பழக்க வழக்கங்களும் பற்றிக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்!
இந்த மூடப் பண்டிகைக்கு 2 கதைகள் உள்ளன. முதலாவது, ஒரு சமயம் அக்னித் தேவன் என்னும் கடவுள் சப்தரிஷிகளின் மனைவிமார் களைப் பார்த்து மோகங்கொண்டானாம். அதனை அறிந்து அவனது மனைவி சுவாகாதேவி என்பவள், அவர்களுடன் தன் கணவன் மோகங் கொண்டதால், சப்த ரிஷிகள் சபித்து விடுவார்கள் என்று எண்ணிப் பயந்து, அதனால் தானே வசிஷ்டரின் மனைவி அருந்ததியை விட்டுவிட்டு, மற்ற ஆறு ரிஷிகளின் மனைவிமார்களைப் போல் உருவம் கொண்டு, தன் கணவன் ஆவலை நிறைவேற்றினாளாம். இவ்வாறு சுவாகா தேவி கொண்ட ஆறு உருவத்திற்கும் கார்த்திகை என்று பெயராம். இவை கள்தாம் கார்த்திகை நட்சத்திரமாகக் காணப்படுபவையாம். இந்த நட்சத்திரப் பெண்கள்தான் சுப்பிரமணியன் என்ற கடவுள் குழந்தையாக இருந்தபோது அதை எடுத்து வளர்த்தார்களாம்!
அடுத்து, இதன்மூலம் அறிவது, பிறர் மனைவிமேல் ஆசைப்படுவது, விபச் சாரம் செய்வது குற்றம் இல்லை. தன் கணவன் எந்தக் காரியத்தை விரும்பி னாலும் அதைப் பூர்த்தி செய்து கொடுக் கும் அடிமையாக மனைவி இருக்க வேண்டும் என்பது.
இவ்வாறு நம் மக்களுக்குக் கற்பிக் கும் மூடநம்பிக்கையைப் பாருங்கள்!
அடுத்த கதை
ஒரு சமயம் பிரம்மா, விஷ்ணு ஆகிய இரண்டு கடவுள்கள் ஒவ்வொரு வரும் முழு முதற்கடவுள் தாம் தாமே என்று கூறிக் கொண்டதனால், இரு வருக்கும் வாய்ச் சண்டை ஏற்பட்டு, பிறகு அடிபிடிச் சண்டை ஆகிவிட்ட தாம். இதைக் கண்ட பரமசிவன் எனும் கடவுள், வானத்திற்கும், பூமிக்கும் ஆக ஒரு பெரிய ஜோதி உருவில் அவர்கள் இருவருக்கும் இடையில் நின்றானாம். சண்டை போட்டுக் கொண்டு இருந்த இருவரும் திகைத்து நிற்க, உடனே பரமசிவன் தோன்றி, இந்த ஜோதியின் அடிமுடிகளை யார் முதலில் கண்டு வருகின்றார்களோ அவர்தான் பெரிய வர் என்றானாம்.
உடனே விஷ்ணு பன்றி உருவம் கொண்டு பூமிக்குள் துளைத்துக் கொண்டு வெகுதூரம் சென்று காண முடியாமல் திரும்பி விட்டானாம்.
பிரம்மன் அன்னப்பறவை வடிவம் கொண்டு ஜோதியின் முடியைக் காண மேலே பறந்து சென்று கொண்டு இருக் கையில், கீழ் நோக்கி ஒரு தாழம்பூ வந்து கொண்டு இருந்ததாம். அதைக் கண்டு பிரம்மன், தாழம்பூவே எங்கிருந்து. எவ்வளவு காலமாய் வருகின்றாய்? என்று கேட்கவும், நான் பரமசிவனிடம் இருந்து கோடிக்கணக்கான வருஷங் களாக வந்து கொண்டு இருக்கின்றேன். என்றதாம். உடனே பிரம்மன், நான் சிவன் முடியைப் பார்த்து விட்டதாக சாட்சி கூறுகின்றாயா? என்று கெஞ்சி னானாம். அதற்குத் தாழம்பூ சம்மதித்த தாம். இதைக் கண்ட சிவன் கோபங் கொண்டு பொய் சொன்னதற்காக பிரம்மனுக்கு இவ்வுலகில் கோயில் இல்லாமல் போகக்கடவது என்றும், தாழம்பூ இனிமேல் பூசைக்கு உதவாமல் போகக்கடவது என்றும் சாபமிட்டாராம்.
உடனே, பிரம்மாவும் விஷ்ணுவும் வருந்தி - திருந்தி சிவன்தான் பெரியவன் என்பதை உணர்ந்து, மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தங்கள் வழக்கைத் தீர்த்து வைத்ததற்கு அடையாளமாக, 'இம்மலையின் மேல் ஒரு ஜோதி உருவாகி இருக்க வேண்டும் என்று கேட்க, அதற்குச் சிவனும் சம்மதம் தெரி வித்து, மாதத்தில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை, கார்த்திகைப்பண்டிகையில் இந்த மலையில் ஜோதியாய்க் காணப் படுவேன் என்று சொன்னானாம். இது தான் திருவண்ணாமலைப் புராணமாகிய அருணாசலப் புராணத்தில் கூறப்படும் கார்த்திகைத் தீபப் பண்டிகையாகும்.
இவ்வாறு, முரண்பட்ட வேடிக்கை யான இந்த இரண்டு கார்த்திகைப் பண்டிகைகளால் நமது மக்கள் மனத்தில் குருட்டுப் பக்தியும், மூடநம்பிக்கையும், முட்டாள்தனமும் அதிகப்படும் என்ப தைத் தவிர, வேறு சந்தேகம் உண்டா? மேலும், நமது நாட்டில் பொருட் செலவும், வறுமையும், மூட நம்பிக்கை யும், வீண் காலப்போக்கும் கொண்டவர் களுக்கு எடுத்துக்கூறத் தொடங்குபவர் களுக்கு
உடனே பகுத்தறிவு அற்ற வைதீக மூடர்கள், தேசத் துரோகி, மதத் துரோகி, வகுப்புவாதி, நாத்திகன் என்ற பட்டங் களைச் சூட்டி விடுகின்றார்கள். சிறி தாவது பொறுமை கொண்டு, நாம் சொல்லும் பகுத்தறிவால் ஆராய்ந்து பார்ப்பவர்கள் இல்லை.
-விடுதலை,23.11.15

பகுத்தறிவும் சுயமரியாதையும்!


- தந்தை பெரியார்

திராவிடர் கழகம் மற்ற காங்கிர, கம்யூனிட் கட்சிகளுக்கு எவ்விதத்திலும் விரோதமானதல்ல. அவைகளை விட தீவிரமான கருத்துக்களையும், திட்டங் களையும் கொண்டதுதான் எங்கள் கழகம் என்று எங்கு வேண்டுமானாலும் சொல் வோம். சொல்லுவது மட்டுமல்ல, மெய்ப் பித்தும் காட்டுவோம். காங்கிரசுகாரனோ, கம்யூனிஸ்டோ நெருங்கக்கூட பயப்படும் ஆத்மார்த்தத் துறையில் நாங்கள் அஞ் சாது குதிக்கிறோம். ஆத்மார்த்தக்காரர்கள் நம்மைக் கண்டு அஞ்சும் அளவுக்கு மக்களுக்குப் பகுத்தறிவு ஊட்டி வருகி றோம். புராணக்காரனுக்கு மேலாக தத்து வார்த்தம் பேசுகிறோம். அவன் தத்து வார்த்தம் பேசினால் அவனுக்கும் மேலாக வேதாந்தம் பேசுவோம். அவன் வேதாந் தத்தை விட்டு ராமகிருஷ்ணரின் சிஷ்யன் என்றால், நாங்கள் அவருக்கும் மேலான இராமலிங்கரின் சிஷ்யர்கள் என்போம். அவன் மோட்சத்தைப்பற்றிப் பேசினால், அதற்கும் நாங்கள் குறுக்கு வழிகாட்டி யனுப்புவோம். சமுதாயத்தில் உண்மை யான சமத்துவம் நிலவ வேண்டுமென்பது தான் எங்கள் ஆசை. சமத்துவம் என்றால் சமுதாய இயல், பொருளாதார இயல், அரசி யல், மொழியியல் ஆகிய எல்லாத் துறை களிலும் சமத்துவ சுதந்திரம் வேண்டுமென் பதுதான் எங்கள் கோரிக்கை. ஆகவே, எங்களைச் சற்று தீவிரவாதிகள் என்று யாராவது கூறலாமே தவிர, எங்களைப் பிற்போக்கானவர்கள் என்றோ அல்லது எங்கள் கொள்கைகளைப் பற்றி இவ்வளவு பெருமையாகக் கூறிக் கொள்ள அருகதை யற்றவர்கள் என்றோ யாரும் கூற முடி யாது. நீங்கள் நான் ஏதோ அளப்பதாகவோ அல்லது உங்களை ஏமாற்றப் போகிறேன் என்றோ நினைத்து விடக்கூடாது. சிந்தித் துப் பார்க்க வேண்டும், நாங்கள் கூறுவதில் எவ்வளவு உண்மை இருக்கிறதென்று. மனப்பூர்வமாகச் சொல்லுகிறேன், எங்க ளுக்கு மந்திரிப்பதவி பெறவோ அல்லது ஒரு பிர்லாவாக ஆகவேண்டுமென்றோ விருப்பம் இல்லையென்று.
எங்களைக் குறை கூறுபவர் எவர்?
எங்களைக் குறை கூறியே தம் வாழ்க் கைவசதியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய ஏதோ ஒரு சுயநலக் கும்பல் தான் எங்கள் மீது குறை கூறி வருகிறதே ஒழிய, எங்களைப் போன்ற ஒழுங்கான திட்டமுடைய ஒரு இயக்கம் இல்லை யென்றே திடமாகக் கூறுவேன். எங் களுக்கு வேறு கழகங்களைப்பற்றி குறை கூற வேண்டிய அவசியமும் இல்லை. அப்படிக் குறை கூறுவதற்கோ அல்லது நம் மீது சுமத்தப்படும் அபாண்டப் பழிகளுக்கு அதே முறையில் பதில் கூறவோ எங் களுக்குப் பத்திரிகை வசதியோ, பண வசதியோ, அதிகார வசதியோ, ஆள் வசதியோ இல்லை.
ஒரே விளக்கு ஊருக்கெல்லாம் வெளிச்சம்
அதனால்தான் நான் ஒருவனே ஊர் ஊராகச் சென்று சங்கூதி வரவேண்டியி ருக்கிறது. ஒரே விளக்குதான் எல்லா ஊருக் கும் வெளிச்சம் தரவேண்டியிருக்கிறது. ஒரே பத்திரிகைதான் எங்கும் பிரசாரம் செய்ய வேண்டியிருக்கிறது. நம்மீது குறை கூறும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு ஆள் கூட்ட வசதி அதிகம். அவர்களிடம் அதிகாரமுண்டு ஆட்களைப் பயமுறுத்த, அஞ்சாதவரை அடக்கி வாய் பூட்டுப் பூட் டவும், கள்ள மார்க்கெட் செய்ய உரிமை யளிக்கவும் வசதியுண்டு அவர்களிடம். இதுவன்னியில் கோடிக்கணக்கான பண மும், ஆயிரக்கணக்கான பத்திரிகைகளும் அவர்களுக்குண்டு. இவையெல்லாம் நமக் கில்லாத காரணத்தால்தான் அவர்களின் புளுகுகளுக்கு அவர்கள் முறையிலேயே சமாதானம் தெரிவிக்க வாய்ப்பற்றவர்களாக நாம் இருந்து வருகிறோம்.
குறையிருந்தால் கூறுங்கள்
அதனால்தான் உங்களைப் பகுத்தறிவு கொண்டு சிந்திக்கும்படி வேண்டுதல் செய்கிறோம். நாங்கள் கூறுவதெல்லாம் உண்மையென்றோ, சத்தியமென்றோ அல்லது நாங்கள் கூறுவதை கடுதாசியில் எழுதி நெருப்பிலிட்டால் கூட அழியாத அளவுக்குச் சுத்தமானதென்றோ கூறுவ தில்லை. நாங்கள் ஏதாவது தவறு சொல்லி யிருந்தால், தவறு செய்திருந்தால் அருள் கூர்ந்து தயை செய்து எடுத்துக் கூறுங்கள். நாங்கள் நன்றியறிதலோடு திருத்திக் கொள் கிறோம். அல்லது சமாதானம் தெரிவிக் கிறோம். நாங்கள் கூறுவதை அப்படியே நம்பி விடவேண்டாம் என்றுதான் நாங்கள் உங்கள் பகுத்தறிவுக்கு விண்ணப்பம் செய்து வருகிறோம்.
சிந்திப்பது மனித தர்மம், அதுவே சுயமரியாதை
நாங்கள் கூறுவனவற்றிற்கு எங்கு மறுப்பு கிடைக்குமென்று நீங்கள் தேட வேண்டும். யாராவது ஆட்சேபனை தெரிவிப்பார் களானால், கண்கொத்திப் பாம்பு போல் இருந்து கருத்துடன் கவனிக்க வேண்டும். பிறகு பொறுமையோடு ஒன்றையொன்று ஒப்பிட்டுச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். உங்கள் அறிவையே உண்மையான நுட்ப மான தராசாகக் கொண்டு தராதரங்களை நிறுத்துப் பார்க்க வேண்டும். மாசிருக்கும், பாசி இருக்கும், களிம்பிருக்கலாம். அறிவு கொண்டு உரைத்துப் பாருங்கள். உங்கள் அனுபவத்தால் அலசிப் பாருங்கள், சிந்தித்துப் பாருங்கள், சிந்திக்க வேண்டியது தான் மனித தர்மம். யார் எது சொன்னாலும் உங்கள் சொந்த புத்தி கொண்டு சிந்தித்துப் பாருங்கள். சுதந்திரத்தோடு உங்கள் அறிவைச் சட்டத்திற்கோ, சாஸ்திரத்திற்கோ, சமய சந்தர்ப்பத்திற்கோ, சமுதாய சம்பிரதா யத்திற்கோ, பழக்க வழக்கங்களுக்கோ அடிமைப்படுத்தாமல் சிந்தித்துப் பார்த்து முடிவு செய்யுங்கள்.
நாம் இதைத்தான் சுயமரியாதை என்கி றோம். சுய அறிவு கொண்டு சிந்தித்துப் பார்ப்பதற்குத்தான் சுயமரியாதை என்று பெயர். ஒவ்வொருவரும் தம் சுய அறிவு கொண்டு சிந்திக்க உரிமை பெற்றிருப்ப தற்குத்தான் பூர்ணசுயேச்சை என்று பெயர் எதையும் பூர்ண மரியாதை கொடுத்துக் கேட்டு பூர்ண சுயேச்சையோடு ஆராய்ந்து முடிவுக்கு வாருங்கள்.
மனிதனை மனிதனாக்குவது சிந்தனை
இச்சிந்தனா சக்திதான் மனிதனை மிருகங்களிடமிருந்தும், பட்சிகளிடமிருந்தும் பிரித்துக் காட்டுவதாகும். மிருகங்கள் மனி தனை விட எவ்வளவோ பலம் பெற்றி ருந்தும் அவை அவனுக்கு அடிமைப்பட்டி ருப்பதற்கும் இதுதான் காரணம். கழுகு 1லு மைல் உயரப் பறந்து கொண்டிருக்கும் போதே தரையிலுள்ள ஒரு சிறு பாம்பைக் கூட கண்டு பிடித்துவிடும். பார்வையில் அது நம்மைவிட அதிகச் சக்தி பெற்றி ருக்கிறது என்பதற்காக நாம் அதை மேம்பட்டதாக ஒப்புக் கொள்ளுகிறோமா? ஆகவே மனிதனிடமுள்ள வேறு எந்தச் சக்தியைக் காட்டிலும், பகுத்தறியும் சக்தி தான் அவனை மற்ற எல்லா ஜீவராசிகளைக் காட்டிலும் மேம்பட்டவனாக்கி வைக்கிறது. ஆகவே, அதை உபயோகிக்கும் அளவுக் குத்தான், அவன் மனிதத் தன்மை பெற்றி யங்குவதாக நாம் கூற முடியும். பகுத் தறிவை உபயோகியாதவன் மிருகமாகவே கருதப்படுவான்.
ஆனால், எந்த மனிதனும் ஒரு அள வுக்காவது பகுத்தறிவை உபயோகித்துத் தான் வாழ்கிறான். நகை வாங்கும்போது அதை உரைத்துப் பார்க்காமலோ, அக்கம் பக்கம் விசாரிக்காமலோ யாரும் வாங்கி விடுவதில்லை. அப்படிப் பார்ப்பதும் பகுத் தறிவுதான். ஒரு சேலை வாங்கி னாலும் கூட சாயம் நிற்குமா, அதன் விலை சரியா, இதற்குமுன் இவர் கடையில் வாங் கிய சேலை சரியாக உழைத்திருக்கிறதா, இக்கடைக்காரர் ஒழுங்கானவர்தானா என்றெல்லாம் சிந்தித்துப் பார்த்துத்தான் வாங்குகிறோம். இப்படிப்பட்ட சில்லறைக் காரியங்களுக்கெல்லாம் பகுத்தறிவை உபயோகிக்கும் நாம் சில முக்கியமான விஷயங்களில் மட்டும் பகுத்தறிவை உப யோகிக்கத் தவறி விடுகிறோம். அதனால் ரொம்பவும் ஏமாந்தும் போகிறோம். இதை உணர்த்துவதுதான், பகுத்தறிவின் அவசி யத்தை வற்புறுத்துவதுதான் எனது முதலாவது கடமை.
ஒரு ரேடியோவாக என்னைக் கருதுங்களேன்
என் கருத்தைச் சொல்ல எனக்கு உரிமை உண்டு. சுதந்திரம் உண்டு என்ற நம்பிக்கையின் பேரில் நான் என் பகுத் தறிவுக்குட்பட்டதை என்னால் கூடுமான அளவுக்கு விளக்கிச் சொல்லுகிறேன். நீங்களும் ஏதோ ஒரு ரேடியோ பேசுவ தாகக் கொண்டு சற்று அமைதியாகவும், கவனத்தோடும் கேளுங்கள். உங்களுக்கு விருப்பமற்ற செய்திகளை ரேடியோ அறி விக்கிறது என்பதற்காக அதை உடைத் தெறிந்து விடுவீர்களா? அல்லது அதன் மீது உங்களால் கோபித்துக் கொள்ளத் தான் முடியுமா? ஆகவே, நான் கூறுவது உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும் கொஞ் சம் கவனமாகக் கேட்டுப் பின்பு ஆராய்ந்து பார்க்க வேண்டுகிறேன். நான் பொறுப் பற்றும் பேசுவதில்லை. திராவிடர் கழகத் தலைவன் என்கிற முறையில்தான், எனக்குள்ள சகல பொறுப்புகளையும் உணர்ந்துதான் பேசுகிறேன். நான் கூறு வதில் சந்தேகம் ஏற்படுமானாலும் அதை விளக்கிக் கூறவும் நான் தயாராகவே இருக்கிறேன்.
குடிஅரசு - சொற்பொழிவு - 01.05.1948
-விடுதலை,22.11.15

ஞாயிறு, 22 நவம்பர், 2015

மெட்டீரியலிஸம் - ஆத்மா

ஆத்மா என்னும் விஷயத்தைப் பற்றி இங்கு எழுதப்பட்டிருப்பதை பார்க்கும் போது நண்பர்கள் பலர் இது ஒரு தத்துவ விசா ரணை;
இதைப்பற்றி எழுதவோ, பேசவோ வேண்டிய அவசியம் சமுதாய சீர்திருத்தக் காரருக்கு எதற்கு? சுயமரியாதைக் காரர்கள் அனாவசியமாய்க் கண்ட கண்ட விஷயங்களிலெல்லாம் தலையிட்டுச் சீர் திருத்தத்துறையைப் பாழாக்கிக் கொள்ளு வானேன்? என்று கூசாமல் பேசுவார்கள்.
ஆனால் இப்படிப்பட்ட நண்பர்கள் சமுதாயச் சீர்திருத்தம் என்பது என்ன? என்பதைச் சரிவர உணராதவர்கள் என்று நினைத்துவிட்டு, நம் நோக்கப்படியே, நாம் மேலே சொல்லக் கூடிய நிலையிலேயே இருக்கின்றோம்.
ஏனெனில் சமுதாயச் சீர்திருத்தம் என்றால், ஏதோ அங்கும் இங்கும் இடிந்து போன - துவண்டுபோன, ஆடிப்போன பாகங்களுக்குச் சுரண்டி, கூறுகுத்தி, மண்ணைக் குழைத்து, சந்து பொந்துகளை அடைத்து பூசி மெழுகுவது என்றுதான் அநேகர் கருதி இருக்கிறார்கள்.
ஆனால், நம்மைப் பொறுத்தவரை நாம் அம்மாதிரி துறையில் உழைக்கும் ஒரு சமுதாயச் சீர்திருத்தக்காரரல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
நாம் யார் என்றால், மக்கள் சமுதாயம் (மக்கள் சமுதாயம் என்றால் உலக மக்கள் சமுதாயம்) என்ன காரணத்தினால் - ஏன் சீர்திருத்தப்பட வேண்டிய நிலைமைக்கு வந்தது என்பதை உணர்ந்து, உணர்ந்தபடி மறுபடியும் அந்நிலை ஏற்படாமலிருப்பதற்கு நம்மால் இயன்றதைச் செய்யும் முறையில் அடியோடு பேர்த்து அஸ்திவாரத்தையே புதுப்பிப்பது என்கின்றதான தொண்டை மேற்கொண்டிருக்கின்றபடியால் சமுதாயச் சீர்திருத்தம் என்பதைப் பற்றி, மற்ற மக்கள் அநேகர் நினைத்திருந்ததற்கு, நாம் மாறுபட்ட கொள்கையையும், திட்டத்தையும், செய்கையையும் உடையவராய்க் காணப்பட வேண்டிய நிலைமையில் இருக் கின்றோம்.
இதனாலேயேதான் நாம், உலக மக்கள் உண்டு என்பதை தப்பு என்றும், கெட்டது என்பதை நல்லதென்றும், நல்லது என்பதை கெட்டது என்றும், காப்பற்றப்பட வேண்டு மென்பதை ஒழிக்க வேண்டும் என்றும், மற்றும் பலவாறாக மாறுபட்ட அபிப்பிராயத்தைக் கூறுவோராக - செய்வோராகக் காணப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.
ஆனால் நம் போன்ற இப்படிப்பட்டவர்கள் உலகில் நல்ல பெயர் சம்பாதிப்பதும், மதிக்கப்படுவதும், பழிக்கப்படாமல் - குற்றம் சொல்லப்படாமல் - இருப்பதும் அருமை என்பது மாத்திரம் நமக்கு நன்றாய்த் தெரியும்.
- தந்தை பெரியார் (குடிஅரசு, தொகுதி -4, பக்கம்-27)
தகவல்: க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி(கி.அ.) கன்னிவாடி (து.அ.) திண்டுக்கல் கோட்டகை.
-விடுதலை,18.1.13

வேடிக்கை சம்பாஷணை - சித்திரபுத்திரன் -


குடித்தனக்காரன் : அய்யா ஆ ஆ! எங்க வீதியில் நெருப்புப் பிடித்து 10, 20 வீடு வேகுதய்யா! எவ்வளவு தண் ணீர் ஊற்றியும் அவிய மாட்டேன் என் கிறது. எல்லோரும் வந்து கொஞ்சம் உதவி செய்யுங்கள். உங்கள் பிள்ளைக் குட்டி களுக்குப் புண்ணியமாகும்.
சித்திரபுத்திரன் : அய்யய்யோ! ஏனப்பா நெருப்புப் பிடித்தது?
குடித்தனக்காரன்: ஒருத்தருக்கும் தெரியவில்லை அய்யா.
சித்திரபுத்திரன்: அப்படியானால் உங்கள் வீதியில் பிராமணாள் இருக் கின்றார்களா?
குடித்தனக்காரன் : ஆம் 4, 5 வீட்டுக் காரர்கள் இருக்கின்றார்கள்.
சித்திரபுத்திரன் : அவர்கள் ஏதாவது உங்கள் வீதிப்பக்கம் வந்தார்களா?
குடித்தனக்காரன் : ஆம் அய்யா, காலையில் ஒரு பிராமணர் ஆத்துக்கு போய் குளித்துவிட்டு மொணா மொணா என்று சொல்லிக்கொண்டு இந்த வீதியில் தான் போனார்.
சித்திரபுத்திரன் : சரி, சரி, உங்கள் வீதி வீடுகள் வெந்துபோனதற்குக் காரணம் தெரிந்து போயிற்று.
குடித்தனக்காரன் : என்ன அய்யா எனக்குத் தெரியவில்லையே!
சித்திரபுத்திரன் : இது தெரியாதா உனக்குப் பிராமணாள் கையில் நெருப்பு இருக்கிறதே; நீ கேட்டதில்லையா?
குடித்தனக்காரன்: நான் கேட்ட தில்லையே!
சித்திரபுத்திரன் : அட பைத்தியமே, பிராமணாள் நாம் கும்பிட்டால் அவர்கள் இடது கையை மோந்து பார்ப்பது போல் மூக்குக்குப் பக்கத்தில் தூக்குகிறார்களே அது ஏன்? வலது கையில் அக்கினி இருப்பதால் அது தூக்கினால் எரிந்து போய் விடுவோம் என்று இடது கையை மோந்து பார்ப்பது.
குடித்தனக்காரன் : அப்படியா! அது எனக்குத் தெரிந்திருந்தால் நான் அவர் களை அந்த வீதியிலேயே நடக்கவிட்டு இருக்க மாட்டேனே. ஏமாந்து போய் விட்டேன்.
சித்திரபுத்திரன் : அது மாத்திரமா, பிராமணாள் வாயிலும், நெருப்பு, வயிற் றிலும் நெருப்பு; இது உனக்குத் தெரியாதா?
குடித்தனக்காரன்: தெரியவில்லையே! சற்றுத் தெரியும்படியாய் சொல்லுங்களேன்.
சித்திரபுத்திரன் : பிராமணாள், எங்கள் வாயில் விழுந்தால் பஸ்பமாய் போய் விடுவாய் என்று சொல்லு கிறார்களே அது என்ன? வாயில் நெருப்பு இருப்ப தால்தானே அவர்கள் அப்படிச் சொல்வது. தவிரவும், பிராமணாள், நம்மைப் பற்றி ஏதாவது நினைத்தால் நாம் பஸ்பமாய் விடுவோம் என்று சொல்லுகின்றார்களே அதன் அர்த்தம் என்ன? நினைத்தால் பஸ்பமாய் விடுவதாய் இருந்தால் வயிற்றில் நெருப்பு இல்லா விட்டால் முடியுமா?
குடித்தனக்காரன் : இதென்ன இந்த இழவு பார்ப்பனர்கள் சங்கதி. கையில் நெருப்பு, வாயில் நெருப்பு, வயிற்றில் நெருப்பு இப்படி வைத்திருந்தால் நாம் எப்படி அவர்களோடு வாழ்வது? இப்படி தினம் ஒரு வீதி வெந்து சாம்பலாவ தானால் இந்த நாலு பிராமணர்களாலேயே இந்த ஊரே சீக்கிரம் சாம்பலாய் விடும் போலிருக் கிறதே.
சித்திரபுத்திரன் : பின்னை தெரியா மலா நம்முடைய பெரியவாள் பிராமணர் களை கிட்ட சேர்க்க வேண்டாம் என்று சொல்லுகின்றார்கள்.
குடித்தனக்காரன்: ஓ! ஹோ!! இதற் காகத்தான் அவர்கள் அப்படி சொல் கின் றார்களா! சரி, இனி புத்தியாய் பிழைத்துக் கொள்கிறேன். இந்த நெருப்பை எப்படி யாவது அணைத்து விடுங்களய்யா?
- குடிஅரசு -கற்பனை உரையாடல்- 18.03.1928
விடுதலை,18.1.14

திங்கள், 16 நவம்பர், 2015

பெரியாருக்காக கப்பலையே நிறுத்திய காமராஜர்


1956ஆம் ஆண்டு காமராசர் முதலமைச்சராக இருந்த காலகட்டம். தந்தை பெரியாருக்கு மலேசியா, -சிங்கப்பூர் நாடுகளில் இருந்து அழைப்பு வந்தது. சிங்கப்பூர் தமிழ்முரசு நாளிதழின் ஆசிரியர் கோ.சாரங்கபாணி அவர்கள் அய்யாவை அழைக்க ஏற்பாடு செய்து இருந்தார்கள். முதலில் பர்மாவுக்கு போய் பின்னர் அங்கிருந்து மலேசியாவின் பினாங்கு பிறகு சிங்கப்பூர் என பயணம் செய்வதாக திட்டம்.
அய்யாவுடன் அவரின் உறவினர்கள் ஆனைமலை நரசிம்மன், அவரது சகோதரி ராமகிருஷ்ணம்மாள், தவமணியம்மை, நான் ஆகிய அய்ந்து பேரும் செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
விசாவைப் பெற்றுக்கொண்டு கப்பல் கம்பெனிக்குப் போய் அய்ந்து பேருக்கும் டிக்கெட் எடுத்தோம். எஸ்.எஸ்.ரஜூலா என்கிற அந்த புகழ்பெற்ற கப்பல் கம்பெனிக்காரர்கள் டிக்கெட் கொடுக்கிற போதுதான் நீங்கள் அய்ந்து பேரும் பயணம் செய்ய வேண்டுமானால் மாநில அரசாங்கம் கொடுக்கும் நோ அப்செக்சன் சர்டிபிகேட் எடுக்க வேண்டும்! என்று சொன்னார்கள். இது என்னடா புதுக்கரடி? என்று நான் ஆடிப்போனேன். டிக்கெட் கைக்கு கிடைக்கும்போதே மாலை 6 மணி ஆகிவிட்டது. மறுநாள் காலை 7 மணிக்கு கப்பலில் புறப்பட வேண்டும். இரவு ஒரே ஒரு பொழுதுக்குள் தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் சான்றிதழில் சீல் பெற்றாக வேண்டும். கோட்டையில் எல்லோரும் வீட்டுக்குப் போயிருப்பார்கள். நாளை காலையில் கப்பலில் புறப்பட்ட மாதிரிதான் என்று கவலையோடு நான் பெரியாரின் வீட்டுக்கு வந்தேன். மணியம்மையும் கிருஷ்ணம்மாளும் பயணம் புறப்படுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருந்தனர்.
பெட்டி படுக்கைகள் கட்டி தயாராக வைக்கப்பட்டிருந்தன. இந்த பரபரப்பைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் படாமல் தந்தை பெரியார் எப்போதும்போல படித்துக்கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தார்!
நான் மிகவும் சோர்ந்துபோய் வருவதைக் கண்ட மணியம்மை விபரம் கேட்டார். நிலைமையை எடுத்துச் சொன்னேன். சற்று யோசித்த மணியம்மை, நீ உடனே முதலமைச்சர் காமராஜரை போய்ப் பார். அவரால் உடனே ஏற்பாடு செய்ய முடியும். அய்யாகிட்டே இதையெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்காதே. அவர் சத்தம் போடுவார். முதலைமைச்சருக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாதென்பார் என்று சொன்னார்.
நான் இரவு 8 மணி அளவில் காமராஜரின் திருமலைப்பிள்ளை சாலை வீட்டுக்குப் போனேன். காமராஜரிடம் நடந்ததை சொன்னேன். காமராஜரோ, இதற்கு நீ ஏன் இவ்வளவு அலைஞ்சே? என்கிட்டே சொல்லி இருந்தால் பாஸ்போர்ட்லேருந்து மற்ற எல்லா ஏற்பாடுகளையும் நானே செய்து இருப்பேனே.. சரி நீ நாளைக்கு காலைல பத்து மணிக்கு வா. நான் சீல் போட்டு கொடுக்க சொல்றேன் என்றார். நான் தயங்கியபடி மெல்ல, கப்பல் காலை 7 மணிக்கு. ராத்திரிக்குள் சீல் போட்டு வாங்கினாத்தான் என்றேன்.
காமராஜர் உடனே, அட என்னப்பா நீ..? போகப்போறது பெரியார்! வேற யாரும் சாதாரண ஆளில்லை. கப்பலை நிக்கச்சொல்லி மத்தியானமா எடுக்கச் சொல்வோம்! போ போ.. காலைல வா! என்றார். இதெல்லாம் நடக்கிற காரியமா என எனக்கு மலைப்பாகத் தோன்றியது. நான் தயக்கத்தோடுதான் அவர் சொன்னதை கேட்டுக் கொண்டிருந்தேன். அடுத்த நிமிடமே முதலமைச்சர் காமராஜர் அங்கிருந்த உதவியாளர்களிடம் ரஜூலா கப்பல் சதக் தம்பி மரைக்காயருக்கு போனைப் போடு என்றார்.
தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி அவரிடம் கொடுத்தனர். இந்தாப்பா நாளைக்கு பெரியார் பர்மாவுக்கு போறாரு. அவருக்கு அரசாங்க அனுமதி 12 மணிக்குத்தான் கெடைக்கும். அவர் கப்பலுக்கு வந்து சேர 1 மணி ஆயிடும். நீங்க என்ன பண்றீங்க.. நாளைக்கு மட்டும் கப்பல் மதியம் ரெண்டு மணிக்கு எடுங்க. பயணிகளிடம் முன்கூட்டியே அறிவிச்சிடுங்க. மற்ற பயணிகளுக்கும் தொல்லை இருக்காதில்லையா.. ஞாபகம் இருக்கட்டும்.. போறது நம்ம பெரியார்.. புரியுதான்னேன் என்று உரிமையோடும் அதிகாரத்தோடும் பேசிவிட்டு வைத்தார். பின்னர் என்னைப் பார்த்து, என்னய்யா இப்போதாவது தைரியம் வந்துச்சா.. நீ பொறப்படுப்பா.. கவலையே படாதே.. கப்பலையே நிறுத்திப் புடுவோம்! என்றார்.
மறுநாள் காலையில் சொன்னதுபோலவே எல்லா இடத்திலும் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்து வைத்திருந்தார். எனக்கு ராஜ மரியாதையோடு வேலைகள் நடந்தன. பகல் 12 மணிக்கெல்லாம் நான் வெற்றியோடு வீடு திரும்பினேன். காமராஜர், இதை எல்லாம் பெரியார்கிட்ட போய்ச் சொல்லிகிட்டு இருக்காதே. அவருக்கு இதெல்லாம் கொஞ்சம்கூட பிடிக்காது.. என்ன புரியுதான்னேன் என்றார்.
அதிகாரமோ பதவியோ ஏதுமில்லாத ஒரு சாதாரண மனிதனுக்காக கடலில் கப்பல் காத்துக் கிடந்தது. நாங்கள், தலைவர் காமராஜரின் பெருந்தன்மையை நினைத்துப் பூரித்தபடி பயணம் கிளம்பினோம்.
முன்னாள் அமைச்சர் க.இராசாராம் சொன்னவை.
உண்மை இதழ்,16-31.7.15

கலப்பு மணமும் சுயமரியாதை இயக்கமும்


தாய்மார்களே! தோழர்களே!! குமாரராஜா அவர்களே!!!
இன்று மாலை 6 மணிக்கு இக்கூட்டம் கூட்டுவது என்று இருந்தேன். குமாரராஜா அவர்களுக்கு 6 மணிக்கு வேறு இடத்தில் ஒரு நிகழ்ச்சி அழைப்பு இருப்பதால் அதற்குப் போக வேண்டியிருப்பதை முன்னிட்டு சீக்கிரம் கூட்ட வேண்டியதாய் விட்டது. இவ்வளவு அவசரத்தில் கூட்டியும் மண்டபம் நிறைய தோழர்கள் வந்து கூடியிருப்பதைப் பார்த்தால் இம்மாதிரியான சீர்திருத்த காரியங்களில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் உள்ள ஆர்வம் நன்றாய் விளங்குகின்றது.
இன்று நாம் பாராட்டக் கூடியிருக்கும் திருமணமானது தோழர் குருசாமி - குஞ்சிதம் அம்மையாரின் தங்கை தோழர் காந்தம் ஙி.கி., ஙி.ஷிநீ., பிஷீஸீ வி.நீ., அம்மையாருக்கும் செங்கல்பட்டு ஜில்லாவாசியும், செங்கல்பட்டு ஜில்லாஅசிஸ்டெண்ட் பஞ்சாயத்து ஆபீசராய் நேற்று வரை இருந்து, இன்று முதல் பொன்னேரி தாலுக்கா ஜூனியர் டிப்டி இன்ஸ்பெக்டர் ஆப் ஸ்கூல்ஸ் என்ற உத்தியோகத்தில் இருப்பவருமான தோழர் சுந்தரவடிவேல் எம்.ஏ.எல்.டி., அவர்களுக்கும் நடந்த திருமணமாகும்.
ஏனைய திருமணங்களில் இல்லாத மாறுதல்
இத்திருமணத்தில் இதற்கு முன் நடந்த திருமணங்களில் நடந்திராத மாறுதல் விஷயங்கள் ஒன்றும் அதிகமாக நடந்துவிடவில்லையானாலும் இரகசியமாக நடந்தது என்பதும், சர்க்காரில் பதிவு செய்ததும்  இக்கூட்டம் கூட்டினதுமல்லாமல் வேறு சடங்கும், அதாவது தாலி கட்டுதல் மாலை மாற்றுதல் முதலியவைகூட இல்லாமல் நடந்தது என்பதும் தான். மாப்பிள்ளை தொண்டை மண்டல வேளாளர் சைவ வகுப்பைச் சேர்ந்தவர். பெண் சாதாரண வேளாள அசைவ வகுப்பைச் சேர்ந்தவர். இருவரும் கல்வியில் இரட்டைப் பட்டம் பெற்றவர்கள். சம வயதினர். இதில் நாம் எடுத்துக் கொள்ளுவது ஜாதி, கலப்பு மணம் என்பதுதான் என்றாலும் இது ஒன்றும் அதிசயமில்லை. இதற்கு முன் 20, 30 வருஷங்களுக்கு முன்னாலேயே பல இம்மாதிரி நிகழ்ந்திருக்கின்றன.
ஆதலால் அதுவும் முக்கியம் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் இம்மாதிரி ஜாதி கலப்பு மணம் இன்னும் சர்வசாதாரணமாக ஆக்கப்படுவதற்கு ஒரு பிரசாரத்திற்காக இதை இப்படி விளம்பரப்படுத்துகிறோம்.
உதாரணமாக சரோஜினி அம்மாள் என்கின்ற பார்ப்பன பெண்ணுக்கும், கோவிந்தராஜுலு நாயுடு என்கின்றவருக்கும் 1910-க்கு முன்பே திருமணமாகியிருக்கிறது. டாக்டர் சுப்பராயன் என்கின்ற வேளாளக் கவுண்டருக்கும், ராதாபாயம்மாள் என்கின்ற பார்ப்பனப் பெண்ணுக்கும் 25 வருடங்களுக்கு முன்பே திருமணமாகி இருக்கிறது.
தேவதாசி வகுப்பு என்பதைச் சேர்ந்த முத்துலட்சுமி அம்மையார் என்கின்ற பெண்ணுக்கும், ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் ஆகியிருக்கிறது.
முத்துலட்சுமி அம்மையார் தங்கை நல்லமுத்து அம்மையாருக்கும், டி.ஆர். வெங்கிட்ட ராம சாஸ்திரியார் குமாரரான ஒரு பார்ப்பனருக்கும் திருமணம் நடந்திருக்கிறது.
ஒரு சாயபுக்கும் எண்டோமெண்ட் போர்ட் பிரசிடெண்ட் நாயுடு பெண்ணுக்கும் திருமணம் நடந்திருக்கிறது.
ஒரு அய்யங்கார் பெண்ணுக்கும் ஒரு சாயபுக்கும் திருமணம் நடந்திருக்கிறது.
ஜட்ஜு குமாரசாமி சாஸ்திரியார் குமாரருக்கும், ஒரு அய்ரோப்பிய மாதுக்கும் திருமணம் நடந்திருக்கிறது. ருக்மணி அம்மாள் என்கின்ற ஒரு பார்ப்பன பெண்ணுக்கும், அருண்டேல் துரைக்கும் திருமணம் நடந்திருக்கிறது.
தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் (பார்ப்பனர்) பெண்ணுக்கும், காந்தியார் (வாணியர்) மகனுக்கும் திருமணம் நடந்திருக்கிறது.
மற்றும், சில ஆதி திராவிட பெண்களுக்கும், நெல்லை சைவ வேளாள வகுப்பு ஆண்களுக்கும் திருமணம் எனது வீட்டிலேயே ஒன்றுக்கு மேற்பட்டு நடந்திருக்கிறது. சென்ற மாதத்திலும் ஒரு தேவதாசி வகுப்பு ராஜம் என்னும் பெண்ணுக்கும் சம்மந்தம் என்னும் ஒரு சைவ பண்டிதர் மகனுக்கும் திருமணம் நடந்தது.
கலப்புமணம் செய்து கொண்டால் சொத்து இல்லையா?
ஆகவே, கலப்பு மணமோ உயர்வு - தாழ்வு ஜாதிமணமோ இக்காலத்தில் ஒன்றும் அதிசயமல்ல என்பது எனது அபிப்பிராயம். எனக்குமுன் பேசிய பல பெரியார்கள் இப்படிப்பட்ட திருமணங்களுக்கு நானும் சுயமரியாதை இயக்கமும் காரணம் என்பதையும், நான் ஒப்புக் கொள்வதற்கில்லை. நாம் செய்வதெல்லாம் இவற்றை விளம்பரம் செய்து மற்றவர்களையும் இதை பின்பற்றும்படி செய்ய ஆசைப்படுவதையும் தவிர வேறில்லை. கலப்புமணம் செய்து கொண்டால் சொத்து இல்லையென்றும், சட்டப்படி செல்லாது என்றும் சொல்வதுகூட சரியல்ல. பார்ப்பனப் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டாலோ, அல்லது பார்ப்பன ஆணைக் கலியாணம் செய்து கொண்டாலோ மாத்திரம்தான் செல்லாதாம். அதைத்தவிர மற்றபடி பார்ப்பனரல்லாதார் இந்துக்கள் தங்களுக்குள் எந்த ஜாதியில் யாரை மணம் செய்து கொண்டாலும் அது செல்லுபடியாகும். ஆதலால் அதைப்பற்றிய சந்தேகம் இனி யாருக்கும் வேண்டாம்.
இந்துலா என்பதில் பார்ப்பனர்கள் தங்கள் ஜாதி கலந்து போகக் கூடாது என்பதற்காக ஏனெனில் தாங்கள் மற்ற ஜாதிகளைவிட உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளுவதற்காக தங்களைப் பொறுத்த வரையில் வேறு ஜாதியில் கல்யாணம் செய்து கொண்டால் சொத்து பாத்தியமில்லை என்று செய்து கொண்டார்கள். ஆதலால் நமக்கு அதனால் கெடுதல் ஒன்றும் இல்லை.
பெரியதொரு வெற்றி
நாம் கோருவதெல்லாம் ஒவ்வொருவரும் தாங்கள் தங்கள் வீட்டுத் திருமணங்களை இம்மாதிரி அதாவது சரியான நல்ல ஜோடி சேர்க்கத்தக்க வண்ணம் நடந்து கொள்ள வேண்டும் என்பதேயாகும். குமாரராஜா அவர்களும் இதற்கெல்லாம் சுயமரியாதை இயக்கமும், நானும்தான் காரணம் என்றார். அவர் கலப்பு மணத்தைப் பற்றி மாத்திரம் அல்லாமல் செலவு சுருக்கத்தைப் பற்றியும், நாள் சுருக்கத்தைப் பற்றியும், ஆடம்பரம் ஒழிப்பு பற்றியும் சொன்னார். அவைகளுக்காக சுயமரியாதை இயக்கம் பாடுபட்டு வருவது உண்மைதான். அதை குமாரராஜா அவர்கள் ஒப்புக்கொண்டு ஆதரித்தது நமக்குப் பெரியதொரு வெற்றியாகும்.
ஏனெனில் அவர் பெரிய செல்வவான். செல்வவான்கள் சிக்கனமாகவும், ஆடம்பரமில்லாமலும் நடத்தினால்தான் அது வழிகாட்டியாகும். ஏழைகள் சிக்கனமாக நடத்துவது அதிசயமாகாது. ஆகவே சிக்கனத்தைப்பற்றி நான் பேசுவதைவிட அவர் பேசுவது மிகவும் சிறந்ததாகும்.
வள்ளல் சிவஞான தேசிகர் அவர்கள் நமது முறையைப் போற்றிப் பேசி என்னையும் புகழ்ந்து கூறி இதுதான் பழந்தமிழர் முறை என்று கூறினார். அவர் பெரிய கல்விச் செல்வம் படைத்தவர். அவர் கூறியவற்றை, என்னைப்பற்றிக் கூறியதைத் தவிர, மற்றவைகளுக்காக நான் நன்றி செலுத்துகிறேன்.
நான் ஒருவன் இல்லாவிட்டால் தமிழர் உலகமே முழுகிப் போயிருக்குமென்றார். அதற்காக நான் பெருமைப்படவில்லை. அவரது அன்பு அப்படி சொல்லச் செய்தது. ஆனால் அவரைப்போலவே என்னைப்பற்றி அதற்கு விரோதமாக அவதூறாகப் பேசுவதையும் கேட்கிறேன். ஆதலால் இரண்டையும் சரி செய்து விடுகிறேன். அதாவது என்னாலேயே தமிழர் சமுதாயம் மாத்திரமல்லாமல் மனித சமுதாயமே பாழ் ஆகி விடுகிறதென்றும், தங்கள் கடவுள்கள் ஒழிகின்றதெனவும் குறைகூறப்படுகின்றன என்றும் இனி சுயமரியாதை இயக்கத்தை ஒழிப்பது தங்கள் கடமையாகக் கொண்டிருப்பதாயும் பலர் சொல்லுவதையும் நான் காதில் கேட்கிறேன். இங்கு இவ்விடத்திலும், அம்மாதிரி எழுதிய சில கேள்வித்தாள்களை இதோ என் கையில் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்டவர்கள் எதிரில் நின்று பேசாமல் கோழைத்தனமாக எழுதி மேஜையில் வைத்துவிட்டுப் போய் விடுகிறார்கள். இதோ அதில் கையொப்பமிட்டவர்கள் பெயரைக் கூப்பிடுகிறேன். தைரியமாக வந்தால் அவர்களது கேள்விக்கு சமாதானம் சொல்ல வணக்கத்தோடு நிற்கிறேன்.
உண்மை இதழ்,16-31.7.15

மாணவர் எழுச்சி மகிழ்ச்சியளிக்கிறது! - தந்தை பெரியார்


தகுதி பார்த்துதான் மாணவர்களுக்கு உயர்ந்த படிப்பு, படிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்ற சட்டம் திராவிட மாணவர்களுக்குப் பெரிதும் கேடு விளைவித்துள்ளது.இச்சட்டம் செய்வதில் அடிப்படையான நோக்கம் திராவிடர்களின் முன்னேற்றத்தைத் தடுத்துப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைப் பெருக்குவது என்பதுதான்.
மேலும் ஆங்காங்குள்ள உயர்நிலைப் பள்ளிகளின் பார்ப்பன ஆசிரியர்கள் திராவிட மாணவர்களுக்குப் பலவகையாலும் தொல்லைகள் கொடுத்து வருகின்றனர். பல பள்ளிக்கூடங்களில் திராவிட இன உணர்ச்சிபெற்ற திராவிட மாணவர்களைத் தேர்தலில் வெற்றிபெறாவண்ணம் ஆரியத் தலைமையாசிரியர்கள் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.
வாய்மையில் வழுவாத  திருவள்ளுவரின் படத்தை வகுப்பு அறையில் வைக்கவேண்டுமென்று திராவிட மாணவர்கள் விரும்பினால் அதற்கு ஆரிய ஆசிரியர்கள் பெரும் முட்டுக்கட்டை போடுகிறார்கள். அதோடுமாத்திரமன்றி வடநாட்டுப் பார்ப்பனத் தலைவர்களின் படத்தை திறந்துவையுங்கள் என்று ஞானோபதேசம் செய்கின்றனர். வேறு சில பள்ளிகளில் கருப்புச்சட்டையணிந்து பள்ளிக்குச் செல்லக்கூடாது என்றும், பெரியார் பேட்ஜு சட்டையில் குத்திக் கொண்டு பள்ளிக்குச் செல்லக் கூடாதென்றும் கட்டளையிடுகின்றனர். அதே நேரத்தில் வடநாட்டுத் தலைவர்களின் உருவம் பதித்த  பேட்ஜுகளைக் கதர்ச்சட்டையில் குத்திக்கொண்டு பள்ளிக்குவரும் மாணவர்களைக் கண்டிப்பதில்லை. அதற்கு மாறாகக் கருப்புச் சட்டையணிந்து பள்ளிக்கு வரும் மாணவர்களைப் பற்றிப் புகார் செய்யுங்கள் என்று கதர்ச்சட்டை அணிந்த மாணவர்களை ஏவி விடுகின்றனர் பார்ப்பன ஆசிரியர்கள்.
சில பள்ளிகளில் காங்கிரஸ் இயக்கத்தைச் சார்ந்த குறிப்பிடத்தக்கவர்களைக் கொண்டு கூட்டம் நடத்துகிறார்கள். ஆனால் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களையோ, அல்லது தமிழன் என்ற உணர்ச்சி பெற்றவர்களையோ அவர்கள் எவ்வளவு தகுதியுடையவர்களாயினும் பள்ளிகளில் மாணவர்கள் அழைத்து கூட்டத்தில் பேசவைக்கவேண்டுமென்று விரும்பினால் தலைமையாசிரியர்கள் தடைசெய்கின்றனர். தடை செய்வது மாத்திரமன்றி அப்படிப் பட்டவர்களை வரவழைக்கவேண்டும் என்று கூறும் மாணவர்களின் பிற்கால வாழ்க்கையைக் கெடுத்துவிடவும் செய்கின்றனர். சில மாணவர்கள் எதற்கும் அஞ்சாது இனவுணர்ச்சிபெற்ற திராவிடத் தலைவர்களைக் கொண்டு கூட்டம் நடத்தித்தான் தீருவோம் என்று கூறினால், அரசியலில் சம்பந்தப்பட்டவர்கள் பள்ளிகளில் வந்து சொற்பொழிவாற்றக் கூடாது; அங்ஙனம் அவர்கள் சொற்பொழிவாற்றினால் மாணவர்கள் மனம் சிதறுண்டுவிடும்.   அவர்கள் செவ்வனே பாடங்களைப் படிக்கமாட்டார்கள் என்று பொய்க் காரணத்தைக்காட்டி இனவுணர்ச்சிபெற்ற மாணவர்களின் முயற்சியைத் தடைசெய்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள் தகுதியிருப்பினும் இராவிடினும் பள்ளிகளில் வந்து சொற்பொழிவாற்றலாமோவென்று கேட்கிறோம். அவர்கள் மாத்திரம் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களல்லவா? பின்னர் ஏன் திராவிடவுணர்ச்சி பெற்றவர்களையும்,  தமிழன்  என்ற உணர்ச்சி பெற்றவர்களையும் பள்ளிகளில் பேச அனுமதிப்பதில்லை?
சில பள்ளிகளில் திராவிடமாணவர்கள் நன்றாகப்படித்து முதல்  மார்க்கு பெறும் வண்ணம் தேர்வு எழுதினாலும் பார்ப்பன ஆசிரியர்கள் வேண்டுமென்றே அவர்களுக்கு குறைந்த மார்க்கு போட்டுச் சிறிதும் தகுதியில்லாத பார்ப்பன மாணவர்களுக்கு முதல் மார்க்கு கொடுக்கிறார்கள்.
வேறு சில பள்ளிகளில் காலையில், செத்தமொழியான  வடமொழியில்தான் இறை வணக்கம் பாடவேண்டும், தமிழ் மொழியில் இறை வணக்கம் பாடக்கூடாது என்று பார்ப்பன ஆசிரிரியர்கள் கூறுகிறார்கள். மீறி தமிழில்தான் இறைவணக்கம் பாடவேண்டும் என்று சொல்லும் மாணவர்கள் பார்ப்பன ஆசிரியரின் சூழ்ச்சிக்கு ஆளாகாமலிருப்பதில்லை. இன்னும் சில பள்ளிகளில் பார்ப்பன மாணவர்களுக்கெனத் தனியான உணவு விடுதிகளும்,   திராவிட மாணவர்களுக்கென தனியான உணவு விடுதிகளும் வைத்துள்ளனர். சமத்துவத்தையும், சமரசத்தையும் போதிக்கும் பள்ளிகளில் ஜாதி வித்தியாசம் ஏன்? என்று மாணவன் கேட்டால் அப்படிக்கேட்கும் மாணவன் பள்ளியிலிருந்து நீக்கப்படுகின்றான்.
மாணவர்களின் பாடத்திட்டத்தில் திராவிடர் களை அடிமைப்படுத்துவதற்குக் கருவிகளாயிருந்த புராணங்களைச் சேர்த்து அவைகளையும் படித்துத் தேர்ச்சிபெறவேண்டும் என்றுள்ளது. சில பள்ளிகளில் திராவிட உணர்ச்சிபெற்ற ஆசிரியர்கள் இருப்பார்களானால் அவ்வாசிரியர் களைத் தொலைத்துக் கட்டுவதற்குப் பார்ப்பன ஆசிரியர்களும், பார்ப்பனப் பாதந்தாங்கும் ஆசிரியர்களும் சதிசெய்கின்றனர்; மாணவர்களைத் தூண்டிவிட்டு இனவுணர்ச்சி பெற்ற நல்லாசிரியர்கள்மீது புகார் செய்யச் சொல்லுகிறார்கள். அதன் காரணமாகப் பல திராவிட ஆசிரியர்கள் வேலையினின்றும் விலக்கப்படுகிறார்கள்.
ஒருசில பள்ளிக்கூடங்களில் பார்ப்பன ஆசிரியர்கள் கருங்காலி மாணவர்களைத் தூண்டிவிட்டு ஆசிரியர்களையும் அடிக்கச் செய்கின்றனர். அடிபட்ட ஆசிரியர் மேலிடத்தில் நியாயத்திற்குச் சென்றால், பார்ப்பன ஆதிக்கம் பெற்ற மேலிடம் நீதி விழைந்து சென்ற ஆசிரியர்தான் தவறிழைத்தவர் என்று தீர்ப்பு கூறுகிறது.
இனவுணர்ச்சி கொண்ட மாணவர்கள் கல்விபயிலும் ஒரு பல்கலைக் கழகத்திற்கே ஆண்டுதோறும் அரசியலார் அளித்துவரும் பணவுதவியை நிறுத்திவிடவேண்டும் என்று சட்டசபையில் கூறப்படுகின்றது.
இன்னும் போகப் போக காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்து ஏனைய கட்சியை ஆதரிக்கும் எந்த மாணவனும் கல்விச்சாலையில் கல்வி பயிலக்கூடாது என்று சட்டம் இயற்றினாலும் இயற்றுவார்கள்! யாரறிவார்?
இன்னோரன்ன குறைபாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இவற்றிற்கெல்லாம் காரணம் நாட்டு ஆட்சியும், அதிகாரபீடமும் பார்ப்பனர்களிடத்திலும், அவர்களின் அடிவருடி களிடத்திலும் இருப்பதுதான். இந்நிலை மாறினால் ஒழிய திராவிட மாணவர்களின் இழிவு நீங்காது என்று திட்டமாகக் கூறிவிடலாம்.
இவற்றை மாற்றுவதற்குத் திராவிட மாணவர்கள் என்ன செய்யமுடிவு செய்துள்ளனர்? இழிநிலை மாறுவதற்கு ஒரே ஒரு மருந்துதான் உண்டு. அதுதான் இனப்புரட்சி. அதுவும் ஒற்றுமையுடன் கூடிய இனப்புரட்சிதான் எளிதில் இழிநிலையைப்போக்கும்.
இப்போது திராவிட மாணவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் இனவுணர்ச்சிபெற்று விட்டனர். இனஉணர்ச்சிப் பெற்ற மாணவர்களெல்லாம் தங்கள் இனவுணர்ச்சியால் எழும் சக்திகளை ஒன்று  திரட்டி ஒரு பெரும் புரட்சி செய்தல் வேண்டும். அங்ஙனம் பெரும் புரட்சி செய்தால்தான் திராவிட மாணவர்களுக்கு இப்போதுள்ள இழிவுகளைப் போக்கமுடியும். அப்பெரும் புரட்சிதான் பாராளுமன்றம் முதல் பஜனைமடம் வரையில் பரவியிருக்கும் பார்ப்பன ஆதிக்கத்தை அடியோடு ஒழித்துத் திராவிடர்களை மக்களாக ஆக்கும்.
இன இழிவைப்போக்க எழுச்சி பெற்ற மாணவர்கள் செய்யப் போகும் தொண்டு சற்றுக் கடினம்தான். கரடுமுரடான பாதையையன்றோ செம்மைபடுத்த வேண்டும்? என்றாலும் தாங்கள் மேற்கொண்ட பணியை சலியாது ஆற்றுவர் என்பது திண்ணம். காரணம் அவர்கள் உலக வரலாறுகளை படிப்பவர்கள், சாம்ராஜ்யங்கள் சரிவுற்ற சரித்திரங்களை படிப்பவர்கள் முதலாளிகளின் ஆட்சியை ஒழித்துத் தொழிலாளர்களின் ஆட்சியை நிறுவிய தீரச்செயலை நன்குணர்ந்தவர்கள். எனவே அவர்கள் எதற்கும் அஞ்சார்கள்.
அதோ புரட்சி வாடை வீசுகிறது!
கோடை விடுமுறையில் அவர்கள் மாவட்டம் தோறும் செய்யும் பிரசாரந்தான் புரட்சியின் முதல் அறிகுறி. அதுதான் புரட்சி வாடை. இப்புரட்சிவாடை வரப்போகும் பெரும் புரட்சிக்கு வித்து என்று துணிந்து கூறலாம்.
எனவே, மாவட்டந்தோறும் உள்ள திராவிடர் கழகத் தோழர்கள் அடுத்த மாதம் தொடக்கத்தில் பிரசாரம் செய்யும் மாணவர்களை நன்கு பயன்படுத்திக்கொள்வார்களாக! உறுதியாக வருங்காலத்தில் இன இழிவு ஒழியும்!
குடிஅரசு, கட்டுரை, 19.04.1947
குறிப்பு : அன்றைக்கு பெரியார் பேசியதை இன்றைக்கு அய்.அய்.டி.யில் பெரியார்-அம்பேத்கார் வாசகர் வட்டத் தடை - மற்றும் பி.ஜே.பி. ஆட்சியுடன் ஒப்பிட்டு, பள்ளி பற்றி பேசியதை பல்கலைக் கழகம், அய்.அய்.டி. வரை விரிவு படுத்திப் பாருங்கள். அய்யா சென்னது அப்படியே பொருந்துவதை அறியலாம்.
-விடுதலை,1-15.6.15

அய்யாவிற்கு அய்.நா. (யுனஸ்கோ) விருது தந்த நாள் “ 27-06-1970



உலகில் எந்தத் தலைவருக்கும் கிடைக்காத ஒப்பற்ற வாசகங்களை பாராட்டுரையில் கொண்ட விருது; ஒப்பற்ற ஏற்பளிப்பு. உலகில் வேறு யாருக்கும் இந்த பெருமை கிடைத்ததில்லை. இவ்விருது 27.06.1970 அன்று மத்திய அமைச்சர் திரிகுணசென் அவர்கள் தலைமையில் அன்றைய தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் பங்கேற்ற விழாவில் வழங்கப்பட்டது. தந்தை பெரியார் என்றால் பார்ப்பானைத் திட்டுவார்; கடவுள் இல்லையென்பார் என்று குறுகிய வட்டத்திற்குள் அவரை குறைத்து குறுக்கிக் காட்டும் குள்ளநரிக் கூட்டத்திற்கு இவ்விருது ஒரு பதிலடி!

ஆரிய பார்ப்பனக் கூட்டம் அய்யாவை எவ்வளவு மறைக்க முயன்றாலும் அய்யா ஆதவன்போல் அறிவு பரப்பி வெளிப்படுவார் என்பதன் அடையாளம் இவ்விருது. “
Periyar - The Prophet of the New age;
The Socrates of South East Asia;
Father of the Social reform movement;
and Arch enemy of ignorance, superstitions, 
meaningless customs and base manners”.
- UNESCO (27.06.1970)
இதன் தமிழாக்கம்: பெரியார் _ புதிய உலகின் தொலைநோக்காளர்; தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற பழக்கவழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி அண்ணா அவர்கள் (தமிழக முதல்வர்) அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற நிலையில் 10.10.1968இல் தந்தை பெரியாருக்கு எழுதிய கடிதத்தில், தங்கள் பணி, மகத்தான விழிப்புணர்ச்சியைச் சமூகத்தில் கொடுத்திருக்கிறது. புதியதோர் பாதை மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. நான் அறிந்த வகையில், இத்தனை மகத்தான வெற்றி வேறு எந்த சமூக சீர்திருத்தவாதிக்கும் கிடைத்ததில்லை, அதுவும் நமது நாட்டில் என்று குறிப்பிட்டு பெருமைப்படுத்தினார். தந்தை பெரியார் ஒப்பாரில்லா உலகத் தலைவர் என்பதை இந்த விருது வெளிச்சம் போட்டுக் காட்டியதோடு, அவரைக் கொச்சைப்படுத்த, புரட்டு, திரிபுவாதங்கள், அபாண்ட குற்றச்சாட்டுகள் கூறும் குறுமதியாளர்களின், மோசடிப் பேர்வழிகளின் அயோக்கியர்களின் முகத்திரையையும் கிழித்தெறிந்தது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் கூறிய மண்டைச் சுரப்பை உலகு தொழும்! என்ற வரிகளின் ஏற்பளிப்பாகவும் இது அமைந்தது! தந்தை பெரியாரின் இனிவரும் உலகம் என்ற நூல் அவர் ஓர் தொலைநோக்காளர் என்பதை உறுதிசெய்தது.
அதையும் இவ்விருது ஏற்பளிப்புச் செய்தது! வாழ்க பெரியார் பெருமை!
குறிப்பு: இந்த விருது பற்றி, தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள், ஒரு நாளைக்கு ஒரு வரியை எடுத்துக்கொண்டு நான்கு நாள்கள் ஆற்றிய உரை (23.09.2014 முதல் 26.09.2014 வரை) விரைவில் நூலாக வந்து, அய்யாவின் பெருமையின் அழியாச் சின்னமாக நிலைக்கவுள்ளது என்பதை அறிவித்து மகிழ்கிறோம்.
உண்மை இதழ்,16-30.6.15

கலைகள் மனித சமுதாயத்திற்குப் பயன்பட வேண்டும் - தந்தை பெரியார்



பெரியார் என்றால் அவர் கலைகளை விரும்பாதவர் இலக்கியங்களை நேசிக்காதவர் என்பன போன்ற கணிப்புகளை, கருத்தூகங்-களை பலரும் கொண்டுள்ளனர், அதையே மற்றவர்களுக்கும் பரப்புகின்றனர்.

பெரியார் ஒரு மானுடப்பற்றாளர். அதற்குரிய அத்தனை இயல்புகளும், உணர்வுகளும் விருப்பங்களும் அவரிடம் காணப்பட்டன. அவர் இலக்கியங்களை, கலைகளை, கேளிக்கை-களை நேசிக்காதவர் அல்லர். மாறாக அவை மக்களை மானமும், அறிவும், விழிப்பும், சிந்தனையும், நல்லொழுக்கமும், நன்னோக்கும் உடையவர்களாக ஆக்க பயன்பட வேண்டும் என்றே விரும்பினார். அந்த அளவுகோலின்படி அதற்கு பயன்படாத பல கலைகளையும், இலக்கியங்களையும் அவர் வெறுத்தார். குறிப்பாக ஆதிக்கத்தை ஏற்றத்தாழ்வை, மூட நம்பிக்கைகளை, பேதத்தை, அடிமைத்தனத்தை ஆதரிக்கக்கூடிய, வளர்க்க கூடியவற்றை எதிர்த்தார். பெரும்பாலான கலையும் இலக்கியங்களும் வெறுக்கத் தக்கனவாய், எதிர்க்கத் தக்கனவாய் இருந்தமையால் அவற்றை அவர் எதிர்த்தமையால், பெரியாருக்கு கலை, இலக்கியங்களைப் பிடிக்காது என்பது போன்ற ஒரு கருத்தேற்றத்தை பலரும் கொண்டனர். எனவே அவர் கலை இலக்கியங்களை விரும்பக்கூடியவர் மட்டுமல்ல  அவற்றை கூர்மையாக ஆய்வு செய்து கருத்தும் கூறியவர் என்பதை அவர்கூறிய மொழிகளிலே நாம் அறியலாம்.
கலைகள் பற்றி பெரியாரின் கருத்துக்கள்
(அ) நாடகம்:
தன்னலமற்ற தொண்டர்கள் தெருவெங்கும் அறிவுப் பிரச்சார நாடகங்கள் நடத்த வேண்டும். இதற்கு தோழர் இராதா ஓர் எடுத்துக்காட்டு.
நம்நாட்டுக் கலைகள் கடவுள் பிரச்சாரத்திற்கே பயன்படுத்தப்படுகின்றன. ஆரியர்கள் தங்கள் நலத்திற்கும் ஆதிக்கத்திற்கும் ஏற்ப கருத்துக்களைப் பரப்ப பதியச்செய்ய கலைகளைப் பயன்படுத்துகின்றனர்.
கலைகள் பல இருப்பினும் அவற்றில் உள்ள கலைஞர்கள் பலர் இருப்பினும் எல்லாம் பார்ப்பன ஆதிக்கம் வளர்க்கவும், பகுத்தறிவிற்கு ஒவ்வாத கருத்துக்களைப் பரப்பவும் பயன்-படுத்தப்படுகின்றன. கலைஞர்களும் பார்ப்பனர்-களின் விருப்பத்தை, நோக்கத்தை நிறைவேற்றி வைக்கவே உழைக்கின்றனர்.
நடிகர்களுக்கு இன உணர்ச்சியில்லை காசுக்காக நடிக்கிறார்கள்.
நாங்கள் பணத்திற்காக நடிக்கிறோம். மக்கள் விரும்பும்படி நடிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம் என்று சிவாஜிகணேசன் உட்பட பல நடிகர்கள் என்னிடம் கூறியுள்ளனர். எதற்கு முதன்மைத் தரவேண்டுமோ அது தரப்படாமல், சாதி, மதம், பார்ப்பன மேலாண்மை வளர்க்கவே கலைகளில் அதிக கவனமும், முன்னுரிமையும் அளிக்கப்படுகின்றன.
கலையென்பதை மனித சமுதாய வளர்ச்சிக்கு பயன்படும்படியாக கற்பனை செய்து நடிக்க வேண்டும். அதன்மூலம் மக்கள் அறிவு பெற்று சிந்திக்கத் தூண்ட வேண்டும்.
நாடகம் என்பது சாயம் பூசிக்கொண்டு, கூத்தாடவும், காசு சம்பாதிக்கவும் இருக்கிற-தென்றால் அது மிகவும் முட்டாள்தனம் என்றே சொல்வேன்.
மாறாக மக்கள் முன்னேறவும், உண்மை உணரவும் உகந்த வகையில் நாடகங்கள் நடிக்கப்படுவது அவசியம் என்றார்.
ஆக பெரியாரின் மேற்கண்ட கருத்துக்களைச் சிந்தித்துப்பார்த்தால் அவர் கலையை வெறுத்தவர் அல்லர் மாறாக, கலை உயர் நோக்கத்தை, மனித மேம்பாட்டை எட்டச் செய்ய துணைநிற்பதாய் இருக்க வேண்டும் என்றவர்.
நாடக நடிகர்களும் பணம் தான் குறிக்கோள் என்றில்லாமல் மக்கள் நலத்தை முதன்மையாகக் கொண்டு தொழில் செய்ய வேண்டும் என்று வரையறுத்துக்கூறுகிறார்.
அதுமட்டுமல்ல அவர் கலைகளைக்கூர்ந்து நோக்கிக் கருத்துக்களும் சொல்லியுள்ளார்.
நாடகங்களில் பொருத்தமற்ற இடங்களில் பாட்டு வருவது, அதிக அளவில் தேவையில்லா இடங்களில் எல்லாம் பாட்டு வருவது சரியல்ல என்றார்.
அக்கால நாடகங்களில் கருத்துகள் அதிகம் இடம் பெறாது, வெறும் பாடல்களாகவே பாடிக் கொண்டிருப்பர். அதை நுட்பமாகக் கண்டு அதை அகற்றி, இலக்கு எட்டும் வகையிலும் சலிப்பு ஏற்படா வண்ணமும் இருக்க வேண்டும் என்பதை கலைக்-கண்ணோட்டத்தோடு, மக்கள் உளவியல் அடிப்படையில் கருத்துக் கூறிய அவரது நுட்பம் வியப்புக்குரியது.
அதற்கு ஓர் எடுத்துக்காட்டும் தருகிறார். உதாரணமாக நெருப்பு பிடித்துக்கொண்ட நேரத்தில் பதட்டமும் பரபரப்பும், கவலையும், கலக்கமும் கொண்டு நடிக்க வேண்டும். மாறாக அப்போது சுதி, தாளம், ராகம் முதலியவற்றைச் சேர்த்து பாட்டுப்பாடி கொண்டிருக்கக்கூடாது.
ஆனால், தற்போது நாடகங்களில் பாடிக்-கொண்டுதான் இருக்கிறார்கள். இது இயல்பான போக்காக, நடிப்பாக இருக்க முடியுமா? என்று அறிவார்ந்த சிந்தனையைத் தூண்டினார்.
அதே போல் சீர்திருத்த நாடகங்களில் நல்ல சீர்திருத்தத்தை, மாற்றத்தைக் கொண்டுவரும்-படியாக, உணர்வை அறிவைத் தூண்டக்-கூடியதாக வார்த்தைகளை வசனங்களைச் சொல்ல வேண்டும் என்ற நுட்பமான கருத்தையும் தந்தை பெரியார் அவர்கள் கூறினார்கள்.
(ஆ) ஓவியம், சிற்பம்:
இந்தியாவில் ஓவியம், சிற்பம் எல்லாம் இந்துமத சம்பந்தமான, கடவுள் சம்பந்தமானதாக இருக்கிறதே தவிர பகுத்தறிவிற்கு இயற்கை கலை ரசனைக்கு உரிய வகையில் எங்கு உள்ளன? அதிலுள்ள ஆபாசங்களை நாம் குறை சொன்னால் நமது பண்டிதர்கள், அவை இருக்க வேண்டும், அவை இல்லையென்றால் இக்கலைகள் அழிந்துவிடும். அதை ஆபாசமாகப் பார்க்கக்கூடாது. கலையாகப் பார்க்க வேண்டும் என்கின்றனர். காட்டுமிராண்டிதனமான உணர்ச்சிகளை கோயில்களில் வளர்ப்பதுதான் கலைகளா?
நமது கோயில்களில் உள்ள சிற்ப ஓவியங்களில் 90% இயற்கைக்கு முரண்பட்டவை. மிருக உடல் மனிதத்தலை, விலங்கைப் புணர்தல், பறவை மீது மனிதன் அமர்வது, பூமீது பெண்கள் அமர்வது! இவையெல்லாம் அறிவிற்கும் இயற்கைக்கும் பொருந்துவதா?
அருமையான ஓவியங்களையும் சிற்பங்-களையும் விட்டுவிட்டு - அநாகரிகமும், காட்டுமிராண்டித்தனமும், மிருகப்பிராயமும் கொண்டதுமான உருவங்களை வைத்துக்-கொண்டு கொஞ்சமும் வெட்கமில்லாமல் இவற்றைக் கலை என்பதா? என்று கடுமையாகச் சாடினார்.
ஓவியமும், சிற்பமும், அறிவையும், கலை உணர்வையும் தூண்டக்கூடியதாய், இரசிக்கத்தக்க-தாய் இருக்க வேண்டும் என்கிறார்.
(இ) இசை:
உலகில் மனித உணர்ச்சித் தோற்றங்களில் இசையும் ஒன்று. இச்சங்கீதம் நாட்டிற்கும், சீதோஷ்ண நிலைக்கும், அறிவு வளர்ச்சிக்கும் உரியதாய் இருக்க வேண்டும். மாறாக அதே சங்கீதம் உலகிற்கே பொருந்தக் கூடியதாகாது. ஒரு நாட்டுக்கு இன்பமாய் இருக்கும் இசை இன்னொரு நாட்டிற்கு இன்பம் தராது.
அதுவும் சங்கீதம் தாய்மொழியில் பாடப்பட வேண்டும். மாறாக அன்னிய மொழிகளில் பாடி அதைத்தான் பிற மொழிக்காரன் கேட்க வேண்டும் என்பது கொடுமையல்லவா. தமிழன், தெலுங்கு கீர்த்தனை தான் கேட்கவேண்டும் என்று திணிப்பது ஆதிக்கம் அல்லவா? என்று கலை சார்ந்த உரிமைக்குரல் எழுப்பினார் பெரியார்.
(ஈ) இலக்கியம்:
இலக்கியம் என்பது, அறிவையும், மானத்தையும், சமத்துவத்தையும் வளர்ப்பதாய் இருக்க வேண்டும். அப்படிப்பார்த்தால், திருக்குறள் தான் ஏற்கத் தக்கதாய் இருக்கிறது. அதிலும் ஏற்க இயலாத கருத்துக்கள் இருந்தாலும், பெரும்பாலும் நல்ல கருத்துக்கள் உள்ளன. ஆரிய ஆதிக்கத்திற்கு எதிராய் குரல் எழுப்பிய வள்ளுவர், சமணர்கள் எழுதியவை  தவிர மற்ற பக்தி இலக்கியங்களில் எல்லாம் பார்ப்பன ஆதிக்கமும் தமிழன் இழிவும்தானே மிகுந்துள்ளன என்று கூறி இலக்கியம் என்பது மானம், அறிவு, சமத்துவம், விழிப்பு இவற்றை ஊட்டக்கூடியதாய் விளக்கக்கூடியதாய் இருக்க வேண்டும் என்கிறார்.
ஆக, தந்தை பெரியார் கலை, இலக்கியங்-களை எதிர்த்தவர், வெறுத்தவர் அல்லர், மாறாக அவை உயர்நோக்கும் உயர் கருத்தும் இயல்பான போக்கும் உடையதாக இருக்க வேண்டும் என்று விரும்பியவர்.
(தரவு: 29.8.1956இல் திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி 7.4.1951 காஞ்சிபுரம், 22, 23.5.1950இல் பெங்களூர். 22.7.1951இல் சேலம், 16.4.1961இல் ஜோலார்பேட்டை, 7.2.1944இல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 9.9.1934 சென்னை, 27.3.1952இல் கரூர் பேசிய பேச்சுகள்.)
உண்மை இதழ்,1-15.8.15

கிராமச் சீர்திருத்தம் என்பது புரட்டுதோழர்களே!


-தந்தை பெரியார்
கிராமதிகாரிகளும், ஆரம்ப ஆசிரியர்களும் ஆகிய இரு கூட்டத்தார்கள் அவர்களது தொழிலின் காரணமாக அடிமைகளேயா வார்கள். ஏனெனில், இருவரும் அரசியல் முறைப்படி இரு இலாகாவின் கடைசித்தர அடிமைகள்.
விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் கிராம அதிகாரிகள் தலைவிதி தாசில்தார், ரிவின்யூ டிவிஷன் ஆபீசர் முதலியோருடைய பேனா முனையில் அடங்கி உள்ளதாகும்.

இந்த கிராம அதிகாரிகளுடையது மாத்திரமல்லாமல், இவர்களது பின் சந்ததிகளுடைய தலைவிதியும் அது போன்றதேயாகும். கிராம அதிகாரிகள் சர்க்கார் உத்தியோகஸ்தர்களுக்கு முறிச்சீட்டு எழுதிக் கொடுத்த அடிமை என்று சொன்னால் மறுப்பதற்குப் போதிய காரணங்கள் கிடையாது.
அதுபோலவே ஆரம்ப ஆசிரியர்கள் தலையெழுத்தும் இன்ஸ்பெக்டர் ஆப் ஸ்கூல், ஜில்லா போர்ட் பிரசிடெண்ட், சேர்மென் ஆகியவர்கள் கை பேனா முனையில்தான் இருக்கிறது என்பது என் அபிப்பிராயம்.
இவர்களுக்கு அளிக்கப்படும் நற்சாட்சிப் பத்திரங்கள் எல்லாம் இவர்கள் நல்ல நிபந்தனை இல்லாத அடிமைகளா என்பதைப் பொருத்ததே தவிர, இவர்களின் நடத்தையையோ, சாமர்த்தியத்தையோ பொருத்தது என்று அடியோடு சொல்லிவிட முடியாது.
ஆனால், இவர்கள் மேல் அதிகாரிகளால் யோக்கியமாய் கையாளப்படுவார்களே யானால், இவர்களும் நல்ல யோக்கியர்களாகவும், கெட்டிக்காரர்களாகவும் அமைவார்களானால் இவர்களால் ஜன சமூகத்துக்கு எவ்வளவோ நன்மை செய்ய வசதி இருக்கிறது.
இவர்களது நிலைமை அடிமைத்தன்மையானது என்றாலும், இவர்களது பதவி நல்ல பொறுப்பும், பயனும் உள்ளது என்பதை நான் அழுத்தம் திருத்தமாய்ச் சொல்லுவேன். இவர்கள் புது உலகத்தை சிருஷ்டிக்கலாம். கிராமாதிகாரி என்பவர் கிராம மக்களுக்குத் தகப்பனார் ஆவார்.
சிட்டி பாதர் (City Father) என்பதுபோல் இவர்கள் வில்லேஜ் பாதர்ஸ் (Village Fathers) ஆவார்கள். அதுபோலவே ஆரம்ப ஆசிரியர்களும் பிள்ளைகளுக்கு வெளிச்சத்தைக் கொடுத்து அந்த வெளிச்சத்திலேயே வாழ்நாள் முழுதும் நடக்கும்படிச் செய்யக்கூடிய ஒரு உயர்ந்த தச்சன் ஆவார்கள். இவர்கள் இருவரும் இன்றைய உலக வாழ்வில் ஒரு முக்கியமான ஸ்தானம் வகிப்பவர்களாவார்கள்.
தோழர் வேலாயுதம் அவர்கள் இவ்விருவரும் கிராமத்தை எந்த எந்த வழியில் முன்னுக்குக் கொண்டு வரலாம் என்பதைப் பற்றி பலவழிகள் சொன்னார்கள் என்றாலும், நானும் ஒரு வழி சொல்லுகிறேன். அந்த ஒரே வழியின் மூலம்தான் கிராமங்களை முன்னுக்குக் கொண்டு வரலாமே ஒழிய, மற்ற எந்த வழிகளாலும் கிராமங்களை முன்னுக்குக் கொண்டுவர முடியாது என்பது என் அபிப்பிராயம்.
கிராம முன்னேற்றம்
அந்த வழி என்னவென்றால், நாட்டில் கிராமங்களே இல்லாமல் செய்து விடுவதுதான். ஏனெனில், கிராமம் என்பது ஒருவித வருணாசிரம தர்ம முறையில் கீழான ஜாதிக்குச் சமமாய் இருப்பது.
மேல்ஜாதியானுக்கு உழைத்துப்போட வேண்டியது எப்படி கீழ்ஜாதியானின் கடமையாக இருந்து வருகின்றதோ, அதாவது கீழ்ஜாதியான் ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ளா-விட்டாலும் ஜாதிமுறையில் கட்டுப்பட்டு இருப்பதன் காரணமாகவே எப்படி கீழ்ஜாதியான் என்பவன் உழைப்பவனாகவும், மேல்ஜாதியான் என்பவன் அவ்வுழைப்பை அனுபவிப்பவனாகவும் தானாகவே இருந்துவர முடிகின்றதோ அதுபோலவே பட்டணங்கள் மேல்ஜாதியாகவும்,
கிராமங்கள் கீழ்ஜாதியாகவும் இருந்துவருகின்றன. எப்படி கீழ்ஜாதிக்காக எவ்வளவுதான் பாடுபட்டு அவர்கள் முன்னேற்றத்துக்காக நாம் எவ்வளவுதான் உழைத்தாலும், அவர்கள் அடியோடு ஜாதி மதத்தை விட்டுவிட்டு வேறு மதத்திற்குப் போய்விட்டால் ஒழிய அவர்களது கீழ் ஜாதித்தன்மை ஒழிவதில்லையோ,
அதுபோல் மேல்ஜாதித்தன்மையும் ஒழிவதில்லையோ அதுபோலவேதான் கிராமங்கள்  அடியோடு ஒழிந்து கிராமவாசி என்கின்ற மதம் மாறி பட்டணவாசி, நகரவாசி என்கின்ற மதக்காரன் ஆனால் ஒழிய, கிராமவாசி கஷ்டம் ஒழியப்போவதில்லை.
ஆதலால், கிராம அதிகாரிகளும், ஆரம்ப ஆசிரியர்களும் கிராம முன்னேற்றம் என்னும் துறையில் ஏதாவது உழைக்க வேண்டும் என்கின்ற ஆசை இருந்தால் அவர்கள் கிராம ஜனங்களையெல்லாம் நயத்திலோ, பயத்திலோ பட்டணங்கள், நகரங்கள் ஆகியவற்றுக்குத் துரத்திவிடுவதேயாகும்.
கிராம முன்னேற்றம் என்றால் என்ன? கிராம ஜனங்களுடைய முன்னேற்றம் என்பதேயாகும். கிராம ஜனங்கள் முன்னேற்றம் என்றால் என்ன? கிராம ஜனங்களுடைய சவுக்கியமேயாகும்.
கிராம ஜனங்களுடைய சவுக்கியம் என்றால் என்ன? கிராம ஜனங்கள் பட்டணத்தில் உள்ள ஜனங்கள் அடைகின்ற சவுகரியங்களையும், சுகங்களையும் அடையவேண்டும் என்பதாகவே ஆக வேண்டும் அல்லவா?
அப்படிக்கில்லாமல் கிராமத்துக்கு இட்டேரி போட்டு ஒரு கிணறு வெட்டிக்கொடுத்து, ஒரு பள்ளிக்கூடம் கட்டிவைத்து கம்பு இப்படி விதைக்கிறது, சோளம் இப்படி அறுக்கிறது, விறகு இப்படி உடைக்கிறது, ஆடு-_மாடு இப்படி மேய்க்கிறது, பால்_வெண்ணெய் இப்படி எடுத்து நகரத்துக்காரனுக்குக் கொண்டுவந்து கொடுத்து-விட்டுப் போவது, சாணி இப்படிச் சேகரம் செய்வது,
எருமுட்டை இப்படித் தட்டுவது, ஏர் இப்படி உழுவது, களை இப்படி எடுப்பது, தண்ணீர் இப்படிப் பாய்ச்சுவது, இப்படி அறுப்பது, அறுத்து பட்டணத்தானுக்கு இப்படிக் கொண்டுவந்து சேர்ப்பது என்பன முதலியவற்றைக் கிராம மக்களுக்குச் சொல்லிக் கொடுத்தால் போதுமா?
அதுபோலவே கைத்தொழில் விஷயத்திலும் இப்படிப் பஞ்சு அரைப்பது, இப்படிப் பஞ்சு கொட்டுவது, இப்படி ராட்டினத்தில் நூல் நூற்பது, இப்படி நூல் கொண்டுவந்து பட்டணத்தில் விற்றுவிட்டு உப்பு, மிளகாய், கடுகு, மிளகு, சீரகம் வாங்கிக்கொண்டு போவது என்பன போன்றவை சொல்லிக் கொடுத்தால் போதுமா?
இவற்றால் எல்லாம் கிராமவாசி சினிமா பார்க்க முடியுமா? நல்ல துணிமணி, மேல்சட்டை போட முடியுமா? பார்க்கில் உலாவ முடியுமா? அவன் பெண்டு, பிள்ளை  ஷி.ஷி.லி.சி. இல்லா விட்டாலும் தாய் பாஷையில் கையெழுத்துப் போடவாவது கற்றுக்கொள்ள முடியுமா? அல்லது கிராமவாசிகளுக்கு இந்த உரிமை, மனுவோ கடவுளோ பிறவியிலேயே கொடுக்கவில்லையா?
சூத்திரன், முதல் மூன்று வருணத்தானுக்கு உழைக்கவே பிறந்தான். சூத்திரன் பணம் வைத்துக்கொண்டிருந்தால் பலாத்காரமாய் மேல்ஜாதிக்காரன் பிடுங்கிக் கொள்ளலாம் என்கின்ற மனுதர்ம சாஸ்திரம்-போல், கிராமவாசி பட்டணவாசிக்கு உழைத்துப் போடவே பிறந்தான், கிராமவாசி பணம் வைத்துக் கொண்டிருந்தால், வக்கீலும், வியாபாரியும், லேவாதேவிக்காரனும் கழுத்தைத் திருகி, பிடுங்கிக் கொள்ளலாம் என்று ஏதாவது, கினு சாஸ்திரம் இருக்கிறதா?
கிராமவாசியை மனிதன் என்று இன்று யாராவது மதிக்கிறார்களா? அவர்களின் வாழ்க்கை மிருக வாழ்க்கையைவிட வேறு வழியில் மாற்றம் இருக்கிறதா?
இன்று இந்தியாவில் 100க்கு 8 பேர் படித்து இருக்கிறார்கள் என்றால், அந்த 8 பேர் யார்? கிராமவாசிகளுள் படித்தவர் விகிதாசாரம் என்ன? அவர்களிலும் 100க்கு 8 பேர் படித்து இருக்கிறார்களா? மேல்ஜாதிக்காரர்கள் 100க்கு 100 பேர், பட்டணவாசிகள் 100க்கு 50 அல்லது 60 பேர் ஆக இந்தக் கூட்டத்தாரின் எண்ணிக்கைப் பெருக்கத்தால்தான் எல்லா மக்களுக்கும் இந்தியாவில், 100க்கு 8 வீதம் கணக்கு ஆகிறதே தவிர, கிராமவாசிகள் 100க்கு 2, 3 பேர் கூட படித்து இருக்கவில்லை.
ஒரு கிராமம் என்றால் ஒரு பணக்காரன் ஆதிக்கமும், மற்ற மக்களை அவன் அடக்கி ஆளுவதும், அந்தப் பணக்காரன் பட்டணத்தான்-களுக்கு அடிமையாகி மற்ற கிராம ஜனங்களை அரித்துக் கொண்டு வந்து கொடுப்பதும் என்பதல்லாமல் வேறு என்ன நிலையில் கிராமம் இருக்கிறது என்று பாருங்கள்.
கிராமநிலை குப்பை மேடு, கக்கூஸ், ஜலதாரை நாற்றம், தரித்திரக் குச்சுகள், நோய் உருவங்கள், முட்டாள்தனமும், மூட-நம்பிக்கையும் தாண்டவம் என்பவை போன்றவை அல்லாமல், வேறு என்ன காணமுடிகின்றது என்று நீங்களே யோசித்துப் பாருங்கள். நமது நாட்டில் வரிகள் முழுவதும் கிராமவாசிகள் உழைப்பையே அஸ்திவாரமாய்க் கொண்டதாகும். அவர்களை நாம் மனுஷ வர்க்கத்தில் சேர்ப்பதில்லை.
ஆனால், அவர்களுக்காகவே பாடுபடுகிறோம் என்று வேஷம் போட்டு, நாம் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளுகிறோம். நமது சுயராஜ்ஜியத்தாலோ, நமது பூரண சுயேச்சையாலோ, சமுக முன்னேற்றத்தாலோ, ராமராஜ்ஜியத்தாலோ கிராமவாசிகளுக்கு  ஏற்படும் நன்மை என்ன? இதுவரை ஏற்பட்டதென்ன? என்று நீங்களே யோசித்துப்-பாருங்கள். இந்திய காங்கிரஸ் சர்வாதிகாரியான அல்லது சூத்திரதாரியான தோழர் காந்தியாரின் கிராம முன்னேற்றத் திட்டம் என்ன என்று பாருங்கள்.
கிராமவாசிகள் பெட்டிகளில் வெள்ளி நாணயம் இருக்கக்கூடாது என்று காந்தியார் பலதடவை சொல்லி இருக்கிறார். நெல்லுக் குத்தவேண்டும், கருப்பட்டி காய்ச்ச வேண்டும், ராட்டினம் நூற்கவேண்டும் என்பது போன்ற திட்டங்கள் மூலம் 1000 வருஷத்துக்கு முன்னால் இருந்த உலகத்துக்குப் போகச் சொல்லுகிறார்.
இதனால் கிராமம்தான் ஆகட்டும், கிராமவாசிதான் ஆகட்டும், எப்படி முன்னுக்கு வரமுடியும்? என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். நகரத்தில், பட்டணத்தில் இருக்கிற ஒரு தொழிலாளிக்கோ, வீதி கூட்டுபவனுக்கோ உள்ள சவுகரியம், அனுபவம் கிராமாந்தர மிராசுதாரனுக்கு இல்லை என்றால் நீங்கள் நம்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.
இயந்திரசாலைத் தொழிலாளிகளைப் பற்றிப் பிரமாதமாகப் பேசுகிறோம்; அவர்கள் நன்மையே உலக நன்மை என்று பிரச்சாரம் செய்கிறோம். அவர்களாலேயே உலகம் இருக்கிறது என்று சொல்லுகின்றோம். இயந்திரசாலைத் தொழிலாளிகளின் உழைப்பை-விட கிராமவாசிகள் உழைப்பு கொஞ்சமானதா? அல்லது இயந்திரசாலைத் தொழிலாளிகளால் நாட்டுக்கு ஏற்படுகின்ற நன்மையைவிட கிராமவாசிகளால் ஏற்படும் நன்மை குறைந்ததா? என்று யோசித்துப் பாருங்கள்.
ஆனால் அவர்கள் நிலைமையையும், கிராமவாசிகளின் நிலைமையையும் சிறிது ஒப்பிட்டுப் பாருங்கள், கிராமவாசிகள் நிலை எவ்வளவு பரிதாபகர-மானது என்று பாருங்கள்.
என்றாலும், ஒரு விஷயத்தில் நான் நம்பிக்கையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். என்னுடைய ஆசை தானாகவே நிறைவேறி வருகிறது. அதாவது கிராமங்கள் தானாகவே அழிந்து வருகின்றன. கிராம ஜனங்கள் பட்டணங்களுக்குத் தானாகவே குடி ஏறி வருகிறார்கள். இந்த 25 வருஷத்தில் பழைய கிராமங்கள் ஒன்றுக்குப் பகுதி ஆகிவிட்டன.
பட்டணங்கள் ஒன்றுக்கு ஒன்றரை, இரண்டு பங்குகூட ஜனப்பெருக்கம் ஆகிப் பெருத்துவிட்டன. உதாரணமாக, இந்த ஈரோட்டை எடுத்துக் கொள்ளுங்கள். 1910இல் பதினாறாயிரம் ஜனங்கள் ஈரோட்டில் இருந்தார்கள். 1920இல் 22 ஆயிரம் ஜனங்கள் ஆனார்கள். 1930இல் 34 ஆயிரம் ஜனங்கள் ஆனார்கள். 1936இல் இப்போது கிட்டத்தட்ட நாற்பதாயிரம் ஜனங்கள் ஆகி இருப்பார்கள்.
இதுபோலவே நமது ஜில்லாவிலேயே கோயமுத்தூர், திருப்பூர், பொள்ளாச்சி முதலிய நகரங்கள் இரட்டிப்பு ஆகிவருகின்றன. இந்த ஜனங்கள் எங்கிருந்து உற்பத்தி ஆனார்கள்? சொல்லுங்கள் பார்க்கலாம். கிராமங்கள் காலி ஆகிவருகின்றன. கிராம ஜனங்களுக்குப் பட்டணவாசத்தில் மய்யல் ஏற்பட்டுவிட்டது. இனி அதைத் தடுக்க யாராலும் ஆகாது என்பதை மனதில் வையுங்கள்.
ஒரு சமூகம் முன்னேற்றம் அடைந்தது என்றால் அந்தச் சமூகத்தில் எப்படி கீழ்ஜாதி, ஈன ஜாதி மக்கள் என்பவர்கள் இருக்கக்-கூடாதோ, அதுபோலவே ஒரு நாடு முன்னேற்றம் அடைந்தது என்றால் அந்த நாட்டில் கிராமங்கள், பட்டிகள், தொட்டிகள் இருக்கக்கூடாது என்பது என் கருத்து. நாடெல்லாமே நகரங்களாய் இருக்க வேண்டும்.
சூரியன், சந்திரன், தென்றல் எப்படி எல்லோருக்கும் பொதுவோ, அப்படியே பொதுவாழ்க்கை போக்கியங்கள் எல்லோருக்கும் பொதுவாய் இருக்க வேண்டும்; பட்டணத்தில் இருப்பதால் மாத்திரம்தான் அனுபவிக்க முடிகின்றது, கிராமத்தில் இருப்பதால் அனுபவிக்க முடிகிறதில்லை என்கின்ற நிபந்தனை இருக்கக்கூடாது.
சமதர்மம் ஓங்கும் நாடுகளில் கிராமம் என்பதாக ஒன்று இல்லை. வேண்டுமானால் ஒரு நகரத்தில் 25 லட்சம் பேர் இருக்கலாம், மற்றொரு நகரத்தில் 250 பேர் இருக்கலாம், பாடும், அனுபவமும் இருவருக்கும் ஒரே மாதிரிதான்.
இந்த சவுகரியம் செய்ய பொது உடைமையோ, சமதர்மமோ, சட்ட மறுப்போ, ஒத்துழையாமையோ, பூரண சுயேச்சையோ தேவையில்லை; ஜனப்பிரதிநிதிகள், ஜனத்-தலைவர்கள் யோக்கியர்களாக இருந்தால் போதும்.
அவர் அப்படி இல்லாவிட்டாலும் ஆரம்ப ஆசிரியர்களும், கிராம அதிகாரிகளு-மாவது இந்த வேலை செய்தால் போதும். நீங்கள் ஒருவரும் செய்யாவிட்டாலும் இயற்கை செய்யப் போகிறது; செய்து கொண்டு இருக்கிறது. அதைத் தடுக்காமல் இருந்தாலும் போதும்.
(31-10-1936 அன்று ஈரோடு கிராம உத்தியோகஸ்தர் சங்க ஆண்டு விழாவில் கிராம அதிகாரிகளும் ஆரம்ப ஆசிரியர்களும் என்பது பற்றி தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு)
- குடிஅரசு - 22.11.1936
உண்மை இதழ்,15-28.2.15