ஞாயிறு, 23 நவம்பர், 2025

புராணப் பிழைப்புக்காரர்களின் ஏமாற்றே உழைப்பும், பணமும் சுரண்டப்படுவதே கார்த்திகை தீபம்

 


தந்தை பெரியார்

மதத்தின் பெயரால் ஏற்பட்ட பண்டிகைகளின் மூலமாகவே நமது நாட்டுச் செல்வங்களும், மக்களின் உழைப்பும் பெரிதும் வீணாகிக் கொண்டு வருகின்றன என்பதை பல தடவை எடுத்துக்காட்டிப் பேசியும், எழுதியும் வருகிறோம்.

எவ்வளவு பேசினாலும், எவ்வளவு எழுதினாலும் நமது மக்களுக்கு இன்னும் அப் பண்டிகைகளில் உள்ள அபி மானமும், மூட நம்பிக்கையும் ஒழிந்தபாடில்லை. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதைப் போல், அடிக்கடி அவற்றின் புரட்டுகளை வெளிப்படுத்தி வருவ தனால், நமது மக்களுக்கு அவைகளின் உண்மை விளங்கக்கூடும் என்று கருதியே நாமும் இடைவிடாமல் எழுதிக் கொண்டு வருகிறோம். சென்ற மாதத்தில்தான் நமது நாட்டின் செல்வத்தைக் கொள்ளை கொண்டு பாழாக்கிச் சென்ற தீபாவளிப் பண்டிகையைப் பற்றி எழுதியிருந்தோம்.

பயன் என்ன?

அப்பண்டிகையால் நமக்குக் கிடைத்த பயன் என்ன? தீபாவளியின் பெயரால் ஏறக்குறைய 20 கோடி மக்களாவது பண்டிகை கொண்டாடி இருப்பார்கள். இவர்கள் பண்டி கையால் சுமார் 10 கோடி ரூபாய்க்குக் குறையாமல் பாழ்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தப் பத்துகோடி ரூபாயும், அனாவசியமாய் துணி வாங்கிய வகையிலும், பலகாரங்கள் செய்த வகையிலும், பட்டாசு வாங்கிப் பொசுங்கிப் புகையும் கரியுமாக ஆகிய வகையிலும் செலவாகியிருக்கும் என்பது மட்டுமல்ல; பண்டிகை நாளில் வருத்தமின்றிக் களித்திருக்க வேண்டும் என்பதைக் கருதி, ஏழை மக்கள்கள், சாராயம், பிராந்தி, விஸ்கி, ஜின், ஒயின், பீர், ராமரசம் முதலிய வெறும் பானங்களைக் குடித்துக் கூத்தாடிய வகையிலும் ஏராளமான பணம் செலவழிந்திருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இது போன்ற பண்டிகைகளால், நமது நாட்டில் பொருட்செலவும், வறுமையும், மூட நம்பிக்கையும், வீண் காலப்போக்கும் நிறைந்திருப்பதை எடுத்துக் கூறத் தொடங்குகின்றவர்களுக்கு, உடனே பகுத்தறிவற்ற வைதிக மூடர்கள், தேசத்துரோகி, வகுப்புவாதி, நாத்திகன் என்ற பட்டங்களைச் சூட்டி விடுகின்றனர். சிறிதேனும் பொறுமை கொண்டு, சொல்லும் விஷயத்தைப் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்க்கின்றவர்களில்லை. இத்தகைய வீண் காரியங்களை ஒழித்து மக்களைப் பகுத்தறிவுடையவர்களாகச் செய்ய இது வரையிலும் எந்த தேசியத் தலைவர்களாவது, எந்தத் தேசியத் தொண்டர் களாவது, எந்தத் தேசியப் பத்திரிகைகளாவது முயற்சி யெடுத்துக் கொண்டார்களா?

இந்தப் பண்டிகையினால் வெற்று நாளில் மறந்து போயிருந்த சாமிக்குப் படையல் போடத் தூண்டும் புராணக் கதை, மூடநம்பிக்கை மக்கள் மனத்தில் மறுபடியும் வந்து குடி புகுந்ததோடு, அவர்களுடைய செல்வமும் கொள்ளை போகும் நிலை ஏற்பட்டது.

இவ்வளவு மாத்திரம் அல்ல, தீபாவளிப் பண்டிகைக்கு விடுமுறை விட்டதன் பயனாய், தினக் கூலிக்கு வேலை செய்யும் ஏழை மக்களின் கூலியை இழந்ததோடல்லாமல், கடன் வாங்கி நஷ்மடைந்தது எவ்வளவு? வேலை நடக்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, அதனால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு!

தீபாவளிக்கு முன் சில நாட்களும் தீபாவளியைக் கருதி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல், விளையாட் டுகளிலும் வேடிக்கைகளிலும் கவனம் செலுத்திய காரணத் தால், அவர்களுடைய படிப்புக்கு நேர்ந்த கெடுதி எவ்வளவு! அரசியல் காரியங்கள் நடைபெறுவதில் இந்த ஓய்வால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு!

இவ்வளவு தொல்லைகளையும் உண்டாக்கிச் சென்ற தீபாவளிப் பண்டிகையின் ஆர்ப்பாட்டம் மறைந்து இன்னும் ஒரு மாதம்கூட ஆகவில்லை; சரியாக 15 நாள்களுக்குள்ளாகவே மற்றொரு சனியன் தொடர்ந்து வந்துவிட்டது.

இவ்வாறு தவறாமல் ஒவ்வொரு மாதமும் நமது நாட்டுச் செல்வத்திற்குச் சனியன் பிடிப்பது வழக்கமாகவும், அவ்வழக்கம் தெய்வீகம் என்று சொல்லப்படுவதாகவும், மதத்தின் முக்கியப் பகுதி என்று சொல்லப்படுவதாகவும் இருந்து வருகின்றது.

இப்பொழுது வரும் சனியனாகிய பண்டிகை கார்த் திகைத் தீபம் என்பதுதான்.

இந்தக் கார்த்திகைத் தீபப் பண்டிகையை ஒரு பெரிய தெய்வீகம் பொருந்திய சிறந்த நாளாகக் கருதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை இந்து மதத்தில் உள்ள சைவர், வைணவர், வீர சைவர், ஸ்மார்த்தர் முதலிய எல்லாப் பிரிவினரும் கொண்டாடுகின்றனர்.

சாதாரணமாக, கார்த்திகை நட்சத்திரத் தினத்தைச் சுப்பிரமணியன் என்னும் சாமிக்கு உகந்த சிறந்த நாளாகக் கருதியே பக்தர்கள் என்பவர்கள் விரதங்களும், பூசைகளும் நடத்தி வருகின்றனர். சாதாரண காலத்தில் வரும் கார்த்தி கைகளை விட, கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகையே மிகவும் சிறந்த பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

வீண் செலவு

இதன் பொருட்டுத் திருவண்ணாமலை முதலிய பல ஊர்களுக்கு யாத்திரை போய்ப் பணத்தைச் செலவு செய்துவிட்டுத் திரும்பும்போது, அங்கிருந்து வாந்தி பேதியைக் கொண்டு வருகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் கார்த்திகைக்காக, வைத்தீசுவரன் கோயில், குன்றக்குடி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை முதலிய ஊர்களுக்கு மக்கள் சென்று செலவு செய்யும் செல்வங்களே பதினாயிரக்கணக்காகவும் இலட்சக் கணக்காகவும் ஆகும்போது, பெரிய கார்த்திகை என்று பெயர் பெற்ற கார்த்திகை மாதப் பண்டிகை நாளில் செலவாகும் பொருள் கோடிக்கணக்கில் குறைவுபடுமா?

இதில் எவ்வளவு பொருள் வீணாக்கப்படுகிறது என்பதை நினைத்துப் பாருங்கள்.

தீபாவளிக்காக வரவழைத்து விற்பனையாகாமல் கடைகளில் தேங்கிக் கிடக்கும் பட்டாசுகளுக்கு செலவு வந்து இந்தப் பட்டாசுகளின் மூலம் பணம் படபடவென்று சத்தமிட்டு வீணாக்கப்படும்.

வீடுகளுக்குள்ளும், வெளிப்புறங்களிலும், காடுகளிலும், மேடுகளிலும், குப்பைகளிலும், கூளங்களிலும் எண்ணற்ற 100, 1000, 10,000, 100,000 கணக்கான விளக்குகளைக் கொளுத்தி வைப்பதன் மூலம் செலவாகும் நெய், எண்ணெய்ச் செலவு எவ்வளவு!

கோயில்கள் என்பவைகளுக்குச் சொக்கப் பனை கட்டி நெருப்பு வைப்பதற்காகச் செலவு செய்யும் நெய், எண் ணெய், விறகு முதலியவைகளுக்கு ஆகும் செலவு எவ்வளவு!

கார்த்திகைப் பண்டிகைக்காகத் திருவண்ணாமலை முதலிய ஊர்களுக்குப் பிரயாணம் செய்வதன் மூலமாகும் ரொக்கப் பணச் செலவு எவ்வளவு! அங்குக் கூம்புக்கு (சொக்கப்பனை) செலவாகும் விறகு, கற்பூரம், வெண்ணெய், நெய் ஆகியவற்றிற்காகும் செலவு எவ்வளவு!

இவ்வாறு பலவகையில் செலவு செய்யப்படும் கோடிக் கணக்கான பணங்களால் நமது நாட்டிற்குக் கடுகளாவாவது பயனுண்டா என்று ஆலோசித்துப் பாருங்கள்!

இன்னும் இப்பண்டிகையினால் மக்களுக்கு உண்டாகும் மூடநம்பிக்கையையும், அதனால் உண்டாகும் மூடப் பழக்க வழக்கங்களையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!

கார்த்திகையைப் பற்றி வழங்கும் புராணக் கதை இரண்டு. அவைகளில் ஒன்று:

மூட நம்பிக்கை

ஒரு சமயம் அக்னிதேவன் (நெருப்பு) என்னும் கடவுள் சப்தரிஷிகளின் மனைவிமார்களைப் பார்த்து மோகங் கொண்டானாம். அதையறிந்த அவன் மனைவி சுவாகா தேவி என்பவள், அந்த ரிஷிகளின் மனைவிகளைத் தொந்தரவு செய்தால், அவர்களால் தன் கணவன் சபிக்கப் படுவான் என்று எண்ணினாளாம். அதனால் அவள் வசிஷ்டரின் மனைவியாகிய அருந்ததி உருவத்தை மாத்திரம் விட்டு விட்டு, மற்ற ஆறு ரிஷிகளின் மனைவி மார்களைப் போல் உருவம் கொண்டு தன் கணவன் ஆசையை நிறைவேற்றினாளாம். இவ்வாறு சுவாகாதேவி கொண்ட ஆறு உருவத்திற்கும் கார்த்திகை என்ற பெயராம். இவைதான் கார்த்திகை நட்சத்திரமாகக் காணப்படுவ தாம். இந்த நட்சத்திரப் பெண்கள்தான் சுப்பிரமணியன் என்னுஞ்சாமி, குழந்தையாக இருக்கும் போது, அதை யெடுத்து வளர்த்தார்களாம், என்பது ஒரு கதை.

இக்கதையினால்தான் கார்த்திகை நட்சத்திரத்திற்குப் பெருமை. இக்கதை நமது மக்களுக்குக் கற்பிக்கும் மூடநம்பிக்கையைப் பாருங்கள். பிறர் மனைவிமேல் ஆசைப்பட்டு விபச்சாரம் பண்ணுவது குற்றம் இல்லை என்பது ஒன்று. மனைவி தன் கணவன் எந்தத் தகாத காரியத்தை விரும்பினாலும் அதை எப்பாடுபட்டாவது பூர்த்தி செய்து கொடுக்கும் அடிமைக் கருவியாக இருக்க வேண்டுமென்பது ஒன்று. இவை மட்டும் அல்லாமல், இயற்கைக் பொருள்களின் மேல் எல்லாம் தெய்வீகம் என்னும் மூடநம்பிக்கையை உண்டாக்கும் துர்ப்போதனை ஒன்று. ஆகவே, இவற்றை ஆராயும்போது, இக்கதையும் இதன் மூலம் ஏற்பட்ட விரதம், பண்டிகை முதலியனவும் புரட்டு என்று உணரலாம்.

இனி, இக்கார்த்திகையைப் பற்றிய இரண்டாவது கதையாவது:

புராணப் புரட்டு

ஒரு காலத்தில் பிரம்மா என்னும் கடவுளும், விஷ்ணு என்ற கடவுளும் தாம் தாமே ஆதிமூலக் கடவுளர் என்று கூறிக் கொண்டதால், இருவருக்கும் முதலில் வாய்ச் சண்டை உண்டாகிப் பிறகு அது கைச் சண்டையாக மூண்டு ஒருவரோடு ஒருவர் அடிபிடிச் சண்டை செய்தனராம். அவர்களுடைய சண்டை சீக்கிரத்தில் ஒரு முடிவுக்கு வரவில்லையாம். ஆகையால், அப்பொழுது பரமசிவன் என்னும் கடவுள் அவர்கள் மத்தியில் ஒரு பெரிய ஜோதி உருவத்தோடு வானத்திற்குப் பூமிக்குமாக நின்றாராம். சண்டைக்காரக் கடவுள்கள் இருவரும் ஒன்றும் தெரியாமல் திகைத்து நின்றார்களாம். அப்பொழுது ஜோதி உருவாக நின்ற பரமசிவக்கடவுள், ஏ, பிரம்ம விஷ்ணுக்களே! இந்த ஜோதியின் அடிமுடிகளை யார் முதலில் கண்டு வருகிறாரோ அவர்தான் உயர்ந்தவர் என்று ஒரு அனாமதேய (அசரீரி) வார்த்தை சொன்னாராம். உடனே, விஷ்ணு பன்றி உருவங்கொண்டு அடியைக் காண பூமியைத் துளைத்துக் கொண்டு வெகு தூரம் சென்றும் காண முடியாமல் திரும்பி வந்துவிட்டாராம். பிரம்மன் அன்னப்பறவை உருவம் கொண்டு ஜோதியின் முடியைக் காணப் பறந்து மேலே செல்லும் போது, வழியில் ஒரு தாழம்பூ வந்து கொண்டிருந்ததாம். அதைக் கண்ட பிரம்மன், தாழம்பூவே, எங்கேயிருந்து எவ்வளவு காலமாக வந்து கொண்டி ருக்கிறாய்? என்று கேட்க, அது, நான் பரம சிவனுடைய முடியிலிருந்து கோடிக்கணக்கான வருடங் களாக வந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லிற்றாம்.

உடனே பிரம்மன், நான் சிவனுடைய முடியைப் பார்த்துவிட்டதாக அவனிடத்தில் எனக்காகச் சாட்சி சொல் லுகிறாயா? என்று கேட்க, அதுவும் சம்மதிக்க, இருவரும் பரமசிவனிடம் வந்து, முடியைக் கண்டு வந்ததாகப் பிரம்மன் கூற, தாழம்பூ அதை ஆமோதித்ததாம்.

அதுகண்ட சிவன் கோபங்கொண்டு இருவரும் பொய் சொன்னதற்காக, பிரம்மனுக்கு இவ்வுலகில் கோயில் இல்லாமல் போகக்கடவது என்றும், தாழம்பூ இனிமேல் தனக்கு உதவாமல் போகக் கடவது என்றும் சாபம் கொடுத்தாராம். பிறகு பிரம்மாவும், விஷ்ணுவும் தங்கள் கர்வம் ஒழிந்து பரமசிவனே பெரியவர் என்றும் எண்ணி இருவரும் அவரை வணங்கி, எங்கள் வழக்கைத் தீர்த்து வைத்ததற்கு அடையாளமாக இந்த மலையின் மேல் ஒரு ஜோதி உருவாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்களாம். பரமசிவனும் அதற்குச் சம்மதித்து, ஒவ் வொரு வருடத்திலும் கார்த்திகை மாதத்தில், கார்த்திகைப் பண்டிகையன்று, நான் இந்த உச்சியில் ஜோதியாகக் காணப்படுவேன் என்று சொன்னாராம்.

இதுதான் திருவண்ணாமலை புராணமாகிய அருணாச்சலப் புராணத்தில் சொல்லப்படும் கார்த்திகைப் பண்டிகைக் கதை. இந்தக் கதையை ஆதாரமாகக் கொண்டுதான் இன்றும் சைவப் பெரியோர்கள் என்பவர்கள் சிவன் என்பவரே மற்ற கடவுள்களை விட உயர்ந்தவர் என்று சண்டை போடுகின்றனர். இந்தக் கதையைக் காட்டி, சிவனை உயர்த்தியும் மற்றவர்களைத் தாழ்த்தியும் பாடாத சைவப் புராணங்களும், தேவாரங்களும், திருவாச கங்களும், தோத்திரங்களும் இல்லை.

இதற்கு எதிராக மற்ற மதத்தினர்கள் எழுதி வைத்திருக் கும் கதைகள் பல. இவ்வாறு, மதச் சண்டையை உண்டாக் குவதற்கு இக்கதை முதற் காரணமாக இருப்பதை அறிய லாம்.

இந்தக் கதையில் தாழம்பூ பேசுவது ஒரு வேடிக்கை! கடவுள்களுக்கிடையே சண்டை வந்தது ஒரு விந்தை! இது போலவே, ஆராய்ந்தால் பரிகாசத்திற்கும், வேடிக்கைக்கும் இடமாக இக்கதையில் அநேக செய்திகள் அமைந்திருப் பதைக் காணலாம்.

இவ்வாறு, இரண்டு முரண்பட்ட வேடிக்கைக் கதைகளை ஆதாரமாகக் கொண்ட இந்தக் கார்த்திகைப் பண்டிகை யினால் நமது மக்கள் மனத்தில் குருட்டுப் பக்தியும், மூடநம்பிக்கையும், முட்டாள்தனமும் அதிகப்படும் என்பதில் சந்தேகம் உண்டா?

இது நிற்க, மேலே கூறிய கதைகளில் இரண்டாவது கதையைச் சைவர்கள்தான் சிவனுக்குப் பெருமை கற்பிக்கிறதென்று நம்பிக் கார்த்திகைப் பண்டிகை கொண்டாடுகிறார்கள் என்றால், வைணவர்களும் கொண்டாடுவதில் என்ன அர்த்தமிருக்கிறது என்பதுதான் நமக்கு விளங்க வில்லை. வைணவர்களின் கடவுளைப் பன்றியாக்கிக் கேவலப்படுத்தியிருப்பதுடன், சிவனுடைய பாதத்தைக் கூடக் காணமுடியாத அவ்வளவு சக்தியற்ற தெய்வம் என்று இழிவுபடுத்தி இருப்பதை அறிந்தால் அவர்கள் இந்தப் பண்டிகையைப் பெருமையாகக் கொண்டாட சம்மதிப் பார்களா?

குருட்டு எண்ணம்

இவர்கள் போகட்டும், ஏதாவது ஒரு கடவுளாவது இருக்கிறார் என்ற நம்பிக்கையில்லாது – தானே கடவுள் என்னும் கொள்கையுடைய ஸ்மார்த்தர்களும் இக்கதையை நம்பிப் பண்டிகை கொண்டாடுகிறார்களே! இதில்தான் என்ன அர்த்தமிருக்கிறது? இவற்றையெல்லாம் யோசிக்கும் போது, இவர்கள் முட்டாள்தனம் காரணமாகவாவது, வீண் ஆடம்பரம் காரணமாகவாவது இப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள் என்றுதான் நினைக்க வேண்டி இருக்கிறது.

அல்லது, அறிந்தோ, அறியாமலோ நமது மக்கள் மனத்தில், பண்டிகைகள் புண்ணிய நாள்கள்,அவற்றைக் கொண்டாடுவதால் புண்ணியம் உண்டு; கொண்டாடா விட்டால் பாவம் என்றும் குருட்டு எண்ணம் குடிகொண்டி ருக்கிறது என்ற முடிவுக்குத்தான் வர வேண்டியிருக்கிறது.

ஆகவே, இது போன்ற பண்டிகைகளால், நமது நாட்டில் பொருட்செலவும், வறுமையும், மூட நம்பிக்கையும், வீண் காலப்போக்கும் நிறைந்திருப்பதை எடுத்துக் கூறத் தொடங்குகின்றவர்களுக்கு, உடனே பகுத்தறிவற்ற வைதிக மூடர்கள், தேசத்துரோகி, வகுப்புவாதி, நாத்திகன் என்ற பட்டங்களைச் சூட்டி விடுகின்றனர். சிறிதேனும் பொறுமை கொண்டு, சொல்லும் விஷயத்தைப் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்க்கின்றவர்களில்லை.

இத்தகைய வீண் காரியங்களை ஒழித்து மக்களைப் பகுத்தறிவுடையவர்களாகச் செய்ய இது வரையிலும் எந்த தேசியத் தலைவர்களாவது, எந்தத் தேசியத் தொண்டர் களாவது, எந்தத் தேசியப் பத்திரிகைகளாவது முயற்சி யெடுத்துக் கொண்டார்களா?

இன்னும் இது போன்ற மூட நம்பிக்கைக்கான விஷயங் களை, சுயராச்சியம், சுதந்திரம், காங்கிரசு, பாரதமாதா, மகாத்மாகாந்தி, காந்தி ஜெயந்தி என்னும் பெயர்களால் பிரச்சாரம் செய்து மற்றும் பண்டிகைகளையும் உற்சவங் களையும் விக்கிரகங்களையும் கற்பித்து மக்களை ஏமாற்றிக் கொண்டு தானே வருகிறார்கள்! இவ்வாறு தேசியப் பிழைப்புக்காரர்கள் ஒரு புறமும், பண்டிகையில் நம்பிக்கையுள்ள வைதிக மூடர்கள் ஒரு புறமும், பணம் சேர்க்க ரயில்வே கம்பெனிக்காரர்கள் ஒரு புறமும், புராண பிழைப்புக்காரர்களும், குருக்களும், புரோகிதர்களும் மற்றொரு புறமும் பண்டிகைப் பிரச்சாரம் பண்ணினால் மக்களுக்குப் பகுத்தறிவு விளங்குவது எப்பொழுது?

“குடிஅரசு” 22-11-1931

 - விடுதலை நாளேடு,9.11.25

செவ்வாய், 4 நவம்பர், 2025

இன்றைய கேள்விகளுக்கு 7 ஆண்டுகளுக்கு முன் ஆனந்த விகடன் பதில்


 பெரியார்: இந்து மதத்தை மட்டும் எதிர்த்தாரா, தமிழர்களை காட்டுமிராண்டி என்றாரா? வதந்திகளும் உண்மைகளும் தமிழ்மறை திருக்குறளையும் திருவள்ளுவரையும் ஓரளவிற்கு ஏற்றுக்கொள்கிறார் பெரியார். ஆரிய எதிர்ப்பு என்ற புள்ளியில் அவர் திருவள்ளுவரோடு இணைகிறார். மற்றபடி சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களை அவர் பொருட்டாக கருதவில்லை.

பொதுவாக ஆண்டின் சில குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே பேசுபொருளாக இருந்த பெரியார் இன்று எச்.ராஜாவின் விரல்வித்தையில் ட்ரெண்டாகி இருக்கிறார். பெரியார் என்றும் ராமசாமி நாயக்கன் என்றும் இரு தரப்புகள் கருத்துமோதல் நடத்துகின்றன. ஒருவகையில் இது ஆரோக்கியமான விஷயம்தான். விவாதங்களின் வழி வேறுபாட்டை ஒழிக்கவேண்டும் என்று பெரியாருமே ஆசைப்பட்டிருக்கிறார்தான். ஆனால் ராமசாமி என அடையாளப்படுத்தும் இளைஞர்கள் பலரும் வெறும் வாட்ஸ் அப்பில் வரும் அரைகுறை பார்வேர்டுகளை வைத்தே போர் தொடுக்கிறார்கள். ‘அவர் நிஜமாகவே அப்படி சொன்னாரா? அப்படியென்றால் ஏன் சொன்னார்?’ என திருப்பிக் கேட்டால் அவர்களிடத்தில் பதில் இல்லை. இப்படியான புரிதல் யாருக்கும் உதவப்போவதில்லை என்பதால் பெரியார் குறித்து சொல்லப்படும் சில அடிப்படை கேள்விகளுக்கான பதில்கள் இவை. இதில் எதுவுமே புதிது கிடையாது. பல ஆண்டுகளாக… பலராலும் சொல்லப்படும் பதில்களின் டைம்லி ரீமேக்தான். கவலைப்படாதீர்கள்! வாட்ஸ் அப் பார்வேர்டுகளை வைத்து உளறிக்கொட்ட எச்.ராஜா, எஸ்.வி சேகர் ஆகியோர் அடங்கிய ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ் இருக்கிறது. தொடர்ந்து கன்டென்ட் தருவார்கள்.

இந்துமதத்தை மட்டும் எதிர்த்தாரா பெரியார்?

இந்துமதத்தை மட்டுமே பெரியார் குறிவைத்தார் என்பதில் உண்மையில்லை. ‘ஒரு மதமும் வேண்டாம்’ என்பதுதான் சரியான பேச்சும் திட்டமும் ஆகும். மதம், மக்களுக்கு விஷம். மதம், மனிதன் ஒற்றுமைப்படுவதை தவிர்க்கிறது. ஆகையால் எல்லா மதங்களும் இந்நாட்டிலிருந்து விரட்டப்பட வேண்டும். நான் எந்த மதத்திற்கும் விரோதிதான்’ என 1936இல் கொச்சியில் நடந்த கூட்டத்தில் பேசினார் பெரியார். கடவுள், மத, சாஸ்திர, புராண இதிகாச ஒழிப்பிற்கு ஒத்துழைக்கும் என்பதால் புத்தர் சொன்னவற்றை மட்டும் ஆதரித்தார். அதுவும் அது கொள்கைதான், மதமல்ல என்ற விளக்கத்தோடு. அறிவுதான் குரு என புத்தர் சொன்னதை வழிமொழிந்தார். அதேசமயம் பவுத்தர்கள் பெயரளவில்தான் அவர் கொள்கைகளை பின்பற்றுகிறார்கள் என்ற விமர்சனமும் அவருக்கு இருந்தது. அவரின் பெரும்பான்மையான கருத்துகள் ஏன் இந்து மதத்தை மட்டும் குறிவைத்து இருந்தன?

காரணம், இங்கே பெரும்பான்மையினரின் மதமாக அதுவே இருந்தது. அதில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் ஒருபெரும் கூட்டத்தையே பாதிக்கும் சங்கடங்களாக இருந்தன. அதனாலேயே அவர் தொடர்ந்து இந்து மதத்திற்கு எதிராக கடுமையாக குரலெழுப்பி வந்தார். ‘இந்துமதம் வேதமதம், வேதம், கடவுளால் சொல்லப்பட்டது’ என்கிறார்கள். ஆனால் அதை ஏன் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் படிக்கிறார்கள்? அவர்களுக்கு மட்டுமே வேதம் படைத்த கடவுள் எப்படி எல்லாருக்குமானவராக இருக்கமுடியும்? வேதங்களில் இருந்துதானே ஜாதிப் பிரிவுகள் வந்தது? அப்படி ஜாதியின் பெயரால் மக்களைப் பிரிக்கும் மதம் வேண்டாம்’ என்பதுதான் பெரியாரின் அடிப்படையான வாதம். ஆனால் தான் வளர்த்த ஆதரித்த குழந்தைகள் என்ன மதம் பயிலவேண்டும் என்பதில் அவர் குறுக்கிடவே இல்லை. ‘தங்களின் சிந்தனையால் அவர்கள் நாத்திகரானால் சரி’ என கடவுள் வாழ்த்தைக்கூட அவர் மறுக்கவில்லை.

கடவுள் சிலைகளை நொறுக்கினாரா பெரியார்?

எந்தக்கோவிலுக்குள்ளும் நுழைந்து சிலைகளை அடித்து நொறுக்கவில்லை பெரியார். 1953இல் தன் காசில் பிள்ளையார் சிலையை வாங்கி அதை உடைத்தார். காரணம், அதே பார்ப்பன – சூத்திரக் கொள்கைதான். ‘நீங்கள் கடலில் கரைக்கிறீர்கள். நான் அதையே உடைத்து மண்ணோடு மண்ணாக ஆக்குகிறேன்’ என விளக்கமும் அளித்தார். இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. ‘பிள்ளையார் உருவத்தை அவர்களே செய்து அவர்களே உடைக்கிறார்கள். இதில் தவறு ஒன்றுமில்லையே’ என வழக்கை தள்ளுபடி செய்தார் நீதிபதி ராமன் நாயர்.

தமிழர்களை காட்டுமிராண்டிகள் என வர்ணித்தாரா பெரியார்?

இது பெரும்பான்மையானவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு. ஆனால் உண்மை? ‘திராவிடத்தின் ஆதிமக்களான தமிழர்கள் தங்களின் கலாசார, பழக்க வழக்கங்களை அடியோடு மறந்துவிட்டார்கள். அவற்றை ஒருபிரிவினர் மறைத்துவிட்டார்கள். இப்போது தமிழன் கொண்டாடும் அனைத்துக் கலாச்சாரங்களும் அவனை அடிமை சமூகமாக நிறுவவே உதவி செய்கின்றன. அறுவடைத் திருநாள் தவிர்த்த பிற பண்டிகைகள் நாம் அடிமைப்பட்டுக் கிடக்கும் காட்டுமிராண்டித்தன்மைக்கே வழிவகுக்கின்றன. எனவே அடிமைதளையிலிருந்து வெளிவரவேண்டுமென்றால் ஜாதி இழிவை வளர்க்கும் கலாச்சாரங்களை பின்பற்றாதீர்கள்’ – இதுதான் 1970இல் அவர்விட்ட அறிக்கையின் சாராம்சம்.
‘நம்மில் சிலர் பணம், பதவிக்கு ஆசைப்பட்டு ஜாதி இழிவிற்கு துணைபோகிறார்கள். இந்து சட்டம், நீதிமன்றம் என அனைத்திலும் பார்ப்பனருக்கு ஒரு நீதி, சூத்திரர்களுக்கு ஒரு நீதி என்று இருக்கிறது. இதை லட்சியம் செய்யாமல் காட்டுமிராண்டிகாலத்தவர்களாகவே இருக்கிறோம். இந்தப் புராண மாயையில் இருந்து வெளிவரவேண்டும்’ என 1943-லேயே கட்டுரை எழுதியிருக்கிறார். அடிமைப்பட்டு கிடப்பது காட்டுமிராண்டித்தனம் என அவர் பல சமயங்களில் சொன்னதுதான் இப்போது வேறுவிதமாக திரிக்கப்பட்டுவிட்டது.

தமிழ்மொழி துவேஷியா பெரியார்?

தமிழ்மறை திருக்குறளையும் திருவள்ளுவரையும் ஓரளவிற்கு ஏற்றுக்கொள்கிறார் பெரியார். ஆரிய எதிர்ப்பு என்ற புள்ளியில் அவர் திருவள்ளுவரோடு இணைகிறார். மற்றபடி சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களை அவர் பொருட்டாக கருதவில்லை. தமிழை காட்டுமிராண்டி மொழி என்று அவர் கூறியதற்காக காரணம்? மொழி சீர்திருத்தம் மட்டுமே தமிழை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என அவர் தீவிரமாக நம்பினார். ஆனால், அதற்கு யாரும் செவிசாய்க்காததால் இப்படி பழைமையைக் கட்டி அழும் மொழி காட்டுமிராண்டி மொழி என்றார். மதப்பற்று, ஜாதிப்பற்று போல மொழிப்பற்றும் முரட்டுத்தனமாக இருக்கக்கூடாது. நெகிழ்வுத்தன்மை இருக்கவேண்டும் என அவர் விரும்பினார். அதேசமயம் ஹிந்தித் திணிப்பையும், சமஸ்கிருத புனிதப்படுத்தலையும் தொடர்ந்து எதிர்த்தே வந்திருக்கிறார். அப்படிப்பட்டவர் ஆங்கிலத்தை மட்டும் கற்றுக்கொள்ள சொன்னது ஏன்? அவர் தமிழை விஞ்ஞானத் துறையில் புகுத்தி புதிய உலகை படைக்கவே விரும்பினார். ஆனால், நடைமுறை சிக்கல்களால் ஆங்கிலத்தை ஆதரித்தார். ஆங்கிலம் கற்றுக்கொள்வதன் மூலம் பொருளாதாரரீதியாக, அறிவுரீதியாக அடுத்தகட்டத்திற்கு செல்லமுடியும் என அவர் நம்பினார். அவர் அன்று சொன்னதுதான் இப்போது நடக்கிறது. ஆங்கிலம் வேலைவாய்ப்பில் முக்கிய இடம் வகிப்பதை மறுப்பதற்கில்லை.

பார்ப்பனர்களுக்கு எதிராக
விஷத்தை பரப்பினாரா பெரியார்?

பார்ப்பனீயத்தை மட்டுமே பெரியார் எதிர்த்தாரே தவிர பார்ப்பனர்களை அல்ல. ‘பாம்பைக் கண்டால் விடு, பார்ப்பானைக் கண்டால் விடாதே’ என பெரியார் சொல்லியதாக எங்குமே ஆதாரமில்லை. முறையான பதிவுகளுமில்லை. ‘பிராமணர்களுக்கும் நமக்கும் பிரமாதமான பேதம் ஒன்றுமில்லை. அவர்களின் சில பழக்க வழக்கங்களைத்தான் எதிர்க்கிறோம். அவர்கள் மனதுவைத்தால் அதை எளிதில் மாற்றிக்கொள்ள முடியும். நாம் ஒருவருக்கொருவர் சமமாகவும் சகோதர உரிமையுடனும் இருக்கவேண்டும். அதில் பலாத்காரத்திற்கு இடமில்லை’ என 1953இல் ராயப்பேட்டை கூட்டத்தில் சொன்னார் பெரியார்.

‘எனக்கு எந்த சமுதாயம் மீதும் குரோதம் இல்லை. சமுதாயத்தில் பார்ப்பனர்கள் அனுபவிக்கிற உயர்வு மீதுதான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இங்கே யாவரும் ஒருதாய்ப்பிள்ளைகள் என அவர்கள் கருதுவார்களேயானால் நான் போராட தேவையே இருக்காது’ என ‘பார்ப்பனத் தோழர்களுக்கு’ அறிக்கையில்(1962) கூறுகிறார் பெரியார்.
‘பார்ப்பான் மேல்ஜாதியாக இருக்கக்கூடாது என்பதுதான் என் எண்ணமே தவிர, அவன் பணக்காரனாக இருக்கக்கூடாது, நல்வாழ்வு வாழக்கூடாது என்பது என் எண்ணமில்லை’ என இறப்பதற்கு ஓராண்டு முன்புகூட (1972) எழுதினார் பெரியார். ஆனாலும் அவரை ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த மக்களுக்கெதிராக நிலைநிறுத்துவதுதான் முரண்.

வளர்ப்பு மகளையே திருமணம் செய்த காமவெறியரா பெரியார்?

அண்ணா தேர்தல் அரசியலில் ஈடுபடப்போவதால் அவரை அடுத்த வாரிசாக அறிவிக்க முடியாத சூழ்நிலை பெரியாருக்கு. என்.அர்ஜுனன், ஈ.வெ.கி.சம்பத் ஆகியோரை வாரிசுகளாக அறிவிக்கும் முயற்சிகளும் தோல்வியில் முடிகின்றன. இயக்கத்தின் வாரிசாக அறிவிக்க சரியான ஆள் மணியம்மைதான் என முடிவு செய்கிறார் பெரியார். ஆனால் அன்று இருந்த இந்துச் சட்டத்தின்படி ஒரு பெண்ணைத் தத்தெடுக்க முடியாது. வாரிசாக அறிவிக்கவேண்டுமென்றால் திருமணம் மட்டுமே செய்யமுடியும். எனவே அவர் காலங்காலமாக எதிர்த்துவந்த அதே இந்து சட்டத்தின்படியே திருமணம் செய்யவேண்டிய நிர்பந்தம். திருமணம் நடந்தபோது பெரியாரின் வயது 69. பிரம்மதேவனின் மாண்புமிகு புதல்வனான மன்மதன் வந்து அம்புவிட்டாலும் 69 வயதுக் கிழவருக்கு உடலாசை தோன்ற வாய்ப்பு இல்லை என்பதை பகுத்தறியும் அனைவருமே அறிவார்கள். எனவே இந்தக் குற்றச்சாட்டில் கொஞ்சமும் உண்மையில்லை.

விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்?

நிச்சயமாக இல்லை. கருத்து சுதந்திரத்தை பெருமளவில் மதித்தவர் பெரியார். ம.பொ.சி.யின் நண்பரான மாலி பெரியாரை கடுமையாக விமர்சித்து நாடகம் இயற்றியபோது, ‘உன் கருத்தை நீ சொல்ற, அதுல தப்பு ஒண்ணுமில்ல’ என்றார் பெரியார். அவ்வளவு ஏன்? பெரியாரை நேருக்கு நேர் எதிர்த்த ம.பொ.சி.யே, ‘பொதுவாழ்வில் அவர் கடைப்பிடித்துவரும் நேர்மை, கொள்கையில் இருக்கும் உறுதி ஆகியவற்றால் மாற்றுக்கட்சியினராலும் போற்றிப்புகழத்தக்கவர்’ என 1962 பெரியார் பிறந்தநாள் மலரில் எழுதியுள்ளார். ‘நான் சொல்லுவதில் பிசகிருந்தால் என் அறியாமையை மன்னியுங்கள்’ எனச் சொல்லியிருக்கிறார் பெரியார். இங்கே விமர்சனங்கள் கூடாதென்பதில்லை. அவரை முழுமையாக படித்துவிட்டு, ஏன், எதற்கு, எந்த காலக்கட்டத்தில் அப்படி சொன்னார் என்பதை தெரிந்துகொண்டு விவாதிப்பது மட்டுமே சரியான விமர்சனமாக இருக்கமுடியும்.

பெரியார் மறைந்துவிட்டாரா?

பெரியார் என்பது அவரின் பெயரல்ல. அது ஒரு சித்தாந்தம். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகச் சொல்லப்படும் மனுவின் நீதியே இன்னும் உயிர்ப்போடு இருக்கும்போது நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய ஒரு சித்தாந்தம் அழிந்துவிடுமா என்ன? அவரின் சிலையை அகற்றினால் சித்தாந்தம் அழிந்துவிடும் என்பதில்லை. பின் ஏன் இந்த எதிர்ப்பு? சிலையைக்கூட இங்கே தொடமுடியாது என்ற உணர்வின் குறீயீடுதான் அது. முன்பைவிட இப்போது அதிகமாக பெரியாரிசம் பற்றி பேசவேண்டிய கட்டாயம் எல்லாருக்கும் இருக்கிறது. பேசுவோம். கருப்புச் சட்டை அதிகார வர்க்கத்தின் கண்களில் மிரட்சியைக் கொண்டுவரும் வரையில்… பெரியாரை புறக்கணித்துவிட்டு இங்கு அரசியல் செய்யமுடியாது என்ற நிலை இருக்கும்வரையில்… பேரென்ன எனக் கேட்டால் பெருமைவிடுத்து பெயரை மட்டுமே சொல்லும் வரையில்… அடையாளங்களை அறிவிக்கக் கூச்சப்படும் நிலை இருக்கும்வரையில்… ஜாதி, மத ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்வரையில்… பெரியார் இருப்பார்!
நன்றி: ‘ஆனந்த விகடன்’ – 12.3.2018

- விடுதலை ஞாயிறு மலர்,25.1.25

குழந்தை வளர்ப்பும் சுகாதாரமும்- தந்தை பெரியார்

 


மது நாட்டு மக்களில் 100க்கு 95 பேர் சுகாதாரத்தின் பயனையறியாதவர்களாயும் அதையறிந்து கொள்ள வேண்டுமென்னும் அக்கறையில்லாதவர்களாயுமிருக்கின்றார்கள். காரணம், படிப்பின்மையும் பழக்க வழக்கமுமேயாகும். இதையனுசரித்தே மேல் நாட்டார் நம்மைச் சுகாதாரமற்றவர்கள் என்றும், நாகரிகமற்றவர்கள் என்றும் நினைக்கிறார்கள். நம் நாட்டிலும் மேல் ஜாதிக்காரர்கள் என்போர், தங்களை நாகரிகஸ்தர் என்றும், சுகாதாரமுடையவர்கள் என்றும் நினைத்துக்கொண்டு, மற்றவர்களைச் சுகாதாரமற்றவர்கள் என்றும், நாகரிகமற்றவர்கள் என்றும், தாழ்ந்த ஜாதியார்கள் என்றும் குறிப்பிடுகிறார்கள். சுகாதாரமின்மையாலேயே ஒரு கூட்டத்தாரைத் தாழ்த்தப்பட்டவர்கள் என்று காரணமும் தத்துவார்த்தமும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சுகாதாரத்தைக் கைக்கொள்ளாத தாழ்த்தப்பட்ட மக்களை, சுகாதாரத்தைக் கைக்கொள்ள முடியாமல் கிணறு, குளம் நல்ல வாழ்க்கை முதலியவற்றைக் கடவுள் பேராலும், மதத்தின் பேராலும் தடைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. நம்மில் அத்தகைய இழிவும் தடையும் கற்பிக்கும் மக்களின் கெட்ட எண்ணத்தையும், அதன் பயனாய்ச் சுகாதார வசதியை அனுபவிக்க முடியாமல் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கப்பட்டிருக்கும் மக்களின் பரிதாப நிலைமையையும் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். இந்த விஷயத்தில் சுகாதாரம் என்பதற்கு ஏற்பட்டுள்ள பெரும் தடையை ஒழிக்க சுகாதார இலாகா அதிகாரிகளும், அரசாங்கமும் தக்க சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

மேல் நாட்டினர் தங்கள் வாழ்க்கையில் சுகாதாரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய வாழ்க்கையில் உடை, உணவு, வீடு, வாசல், பானம், நல்ல காற்று, சுத்தமான தேகம் ஆகியவைகளில் கண்ணுங்கருத்துமாயிருப்பார்கள். எனது அய்ரோப்பா யாத்திரையில் லண்டனிலிருந்து 270 மைல் தூரத்திலிருக்கும் ஒரு கிராமத்தில் ஒரு தொழிலாளி வீட்டில் ஒரு நாள் தங்கினேன். நான் தங்கியிருந்த வீட்டில் ஒரு சிறு பையன் இருந்தான். அவனுடைய அம்மாளும் அக்காளும் ஆக மூவரும் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று பையன் வெளியில் ஓடினான். பிறகு வெகுநேரம் வரவில்லை. பிறகு பையன் எங்கே என்று நான் கேட்டேன். உடனே அவன் அக்காள் வெளியில் சென்று அவனைத் தேடிப் பிடித்து வந்தாள். பேசிக் கொண்டிருக்க திடீரென்று வெளியில் போன காரணம் என்ன என்று கேட்டதற்கு, நான் நல்ல காற்று உட்கொள்ள வெளியில் போய் உலாவி வந்தேன் என்று பதில் சொன்னான். இது அவன் ஒரு சாக்காகச் சொல்லி இருக்கலாம் என்றாலும், 5 வயதுப் பையன் நல்ல காற்று கெட்ட காற்று என்பதை உணர்ந்திருக்கிறான் என்பது கவனிக்கத் தக்கதாகும்.

எந்த வேலையிருந்தாலும், காலாகாலங்களில் சுகாதாரத்தைக் கைக்கொள்ளுவதில் மேல்நாட்டில் சிறுவர்கள் முதல் கவலை கொண்டிருக்கிறார்கள் என்பது இதனால் தெரிகிறது. மேல்நாட்டுப் படிப்பில் சுகாதார வாசமே இல்லை. நம்நாட்டிற்கு ஆண் – பெண் அடங்கலும் அநேகர் சுகாதாரம் இன்னதென்பதையறியாமலும், கொஞ்ச நஞ்சம் கேள்விப்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாமலுமே தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். வீதிகளில் பெரும் அசுத்தம் செய்கின்றனர். கொஞ்சம் படித்த பெண்களும்கூட தங்கள் வீடு வாசல்களைச் சுகாதார முறைப்படி சுத்தமாய் வைத்துக் கொள்வதில்லை. பொதுவாகவே மேல் நாட்டினர் தங்கள் வாழ்க்கையில் சுத்தத்தையும், சுகாதாரத்தையும் அடிப்படையாகக் கொண்டு அதற்கேற்றபடி நடந்து வருவதனால் வியாதிகளின் தொல்லைக்காளாகாமலும், சுகஜீவிகளாகவும் உலகில் அதிக நாள் வாழ்கிறார்கள். நம் நாட்டு ஜனங்களோ, வியாதி ஏற்படுவதும், மரணம் சம்பவிப்பதும் தங்கள் தங்கள் தலை விதியென்றும், அவரவர் கேட்டு வந்த வரம் என்றும் நினைத்துக் கொண்டு, தங்கள் அஜாக்கிரதையினாலும், சுகாதார மின்மையினாலும் ஏற்படும் வியாதிகட்குத் தகுந்த வைத்திய சிகிச்சையும் செய்யாமல் கடவுளுக்குக் காணிக்கை எடுத்து முடிந்து வைப்பதும், விபூதி மந்திரித்துப் போடுவதும் இன்னும் பல வேண்டுதலைச் செய்து கொள்ளுவதும் கடைசியில் மரணம் ஏற்பட் டால் அவ்வளவுதான் அவனுக்கு ஆயுசு என்று முடிவு கட்டியும் விடுகிறார்கள். அஜீரணத்தினால் ஏற்படும் காலரா வியாதியை மகாமாரி என்று கொண்டாடுகிறார்கள்.

அதோடு நம் நாட்டில் பண்டிகைகளும், உற்சவங்களும் அநேகம். அதைப் பார்க்கச் செல்லும் ஜனக் கூட்டமும் ஏராளம். உற்சவம் நடக்குமிடங்களில்தான் வியாதிகள் உற்பத்தியாகின்றன. பிறகு அவை அங்கிருந்து பல ஜனங்களின் மூலம் பல ஊர்களுக்குப் பரவுகிறது. இவ்வித மூடநம்பிக்கையும் அறியாமையும் உடைய ஜனங்கள் வியாதி வராமல் தடுக்க சுகாதாரத்தைக் கைக்கொள்ள வேண்டுமென்றால் அது இம்மாதிரி ஒரு நாள் இரண்டு நாளில் நடக்கும் கொண்டாட்டத்தினால் கொஞ்சமும் பலனளிக்காது. இந்தக் கொண்டாட்டத்தோடு சுகாதாரப் பிரச்சாரம் பூர்த்தியடைந்து விட்டதெனக் கருதக் கூடாது. நகர சபையார் ஜனங்களின் மனப்பான்மைக் கொத்தபடி முக்கியமாய்ப் பெண்களுக்குப் பெண்டிர்களைக் கொண்டும், பெண் போதகர்களைக் கொண்டும், அடிக்கடி சுகாதாரப் போதனை செய்து வரவேண்டும். சாதாரண ஜனங்கள் இதுவும் ஒரு சர்க்கார் பண்டிகை என்றே நினைப்பார்கள். இந்தக் கொண்டாட்டம் தீர்ந்தவுடன் நான் எதிர்பார்க்கும் புதிய முறைச் சுகாதாரப் பிரச்சாரம் நடத்தி வரவும், பொதுவாக தெருக்களிலும் பொது ஜாகாக்களிலும், குழாய் ஸ்தலங்களிலும் எந்தவித அசுத்தமும் நேராதபடி புதிய திட்டத்தில் முனிசிபல் கமிஷனர் சுகாதாரத்தை அமலுக்குக் கொண்டு வருவார் என்று ஆசையுடன் எதிர்பார்க்கிறேன். அந்தப்படி செய்வதில் சில பணக்காரருக்கும் சுயநலக்காரருக்கும் வருத்தம் ஏற்படலாம். அவற்றை லட்சியம் செய்யாமல் ஊர் பொது நன்மையே பெரிது எனப் பாவித்து நடு நிலைமையில் நல்ல ஏற்பாடு நடைபெறும் என்று நம்பி எதிர்பார்க்கிறேன்.

குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு விஷயத்தில் நம் நாட்டு மக்களுக்குக் கொஞ்சமும் கவலை யே கிடையாது. குழந்தை வளர்ப்பு விஷயத் தில் அந்தந்தத் தாய் தகப்பன்மார்களைவிட அரசாங்கம் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். மேல்நாட்டில் ஒவ்வொரு நகரத்திலும் குழந்தை வளர்ப்புக்கென பொதுவிடங்கள் அமைத்து, அங்கு சில ஆயாமார்களை நியமித்து, சுகாதார முறைப்படி குழந்தைகள் வளர்க்கப்படுகின்றன. மற்றும் சில குடும்பத்தார்கள் தங்கள் சொந்தப் பொறுப்பிலும் ஆயாமார்களை நியமித்து குழந்தைகள் மிகவும் தேகாரோக்கியமாக வளர்க்கப்படுகின்றனர். சுருங்கக்கூறின், மேல்நாட்டில் ஏழை முதல் எல்லாப் பணக்காரர் வீட்டுக் குழந்தைகளும் ஆயாமார்கள் மூலமாகவே வளர்கின்றன.

மேல்நாட்டில் நான் பார்த்த ஒரு சாதாரண குடும்பத்தில் ஒரு குழந்தையின் தாய் தன் குழந்தையை வேறு ஓர் ஆயா வசம் வளர்க்க ஒப்புவித்துவிட்டுத்தான் வேறு ஒரு வீட்டுக் குழந்தையை வளர்க்கும் வேலையில் அமர்ந் திருந்தாள். இதற்குக் காரணம் என்னவென்று கேட்டதில், தன் குழந்தையை வளர்க்கத்தான் மாதம் 20 ரூபாய் சம்பளம் கொடுப்பதாகவும், தான் வளர்க்கும் குழந்தையின் பெற்றோர் தனக்கு மாதம் 60 ரூபாய் சம்பளம் கொடுப்பதாகவும் அந்த அம்மாள் சொன்னார். இந்தப்படி மேல் நாட்டார்கள் குழந்தைகளை ஆயாமார்கள் மூலம் வளர்ப்பதால் குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் தனித்தனியே சுகாதாரமும் தேகாரோக்கியமும் நல்ல வாழ்வும் ஏற்படுகின்றன.

நம் நாட்டிலோ அந்த வழக்கமில்லை. நம் நாட்டுப் பெண்கள் குழந்தைகள் பெறும் விஷயத்திலும் வளர்க்கும் விஷயத்திலும் இன்னும் மிருகப் பிராயத்திலேயே இருந்து வருகிறார்கள். மற்ற விஷயங்களைவிட இந்தக் குழந்தை பிரசவ விஷயமும், பின் குழந்தைகள் வளர்ப்பு விஷயமும் முக்கியமாய்க் கவனிக்க வேண்டியதாகும். அதோடு பிரசவப் பெண்கள் பிரசவத்துக்கு முன்னும் பின்னும், பிரசவ காலத்திலும் நடந்து கொள்ள வேண்டிய விஷயத்தை அவர்களுக்கு நாம் நன்கு எடுத்துரைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

(20.11.1934இல் ஈரோடு சுகாதாரக் கல்வி வாரக் கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவு)

– பகுத்தறிவு – 25.11.1934

- உண்மை இதழ், 16-31.8.25

பெரியாரின் பெருந்தன்மை

 

பெரியாரின் பெருந்தன்மை


தமிழ்த் தென்றல்

திரு.வி.க. அவர்கள், தான் இறந்தால் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன், மு.வரதராசன் இருவரையும் கொள்ளி வைக்கச் சொல்லி
யிருந்தார். சொல்லி சிறிது காலத்திற்குள் திரு.வி.க. இறந்துவிட்டார். அவர் இறந்தபிறகு சிதையில் அவர் உடல் வைக்கப்பட்டிருந்தது. சுடுகாட்டில் தந்தை பெரியார் தடியோடு நின்று கொண்டிருந்தார். அவரது தொண்டர் படை இறுதி நிகழ்வுகளைச் செய்வதற்காக சிறுசிறு பந்தங்களோடு நின்று கொண்டிருந்தனர்.

ஞானசம்பந்தன் அவர்களுக்கும், வரதராசன் அவர்களுக்கும் என்ன செய்வ தென்றே தெரியவில்லை. தயங்கியபடியே பெரியாரிடம் வந்து, ‘‘திரு.வி.க. அவர்கள் எங்களை கொள்ளி வைக்கச் சொல்லியிருக்கிறார்’’ என்று கூறியிருக்கிறார்கள். இப்பொழுது பெரியாரின் பெருமை வெளிப்பட்டது.

“அப்படியா சொன்னார்? அப்படீன்னா நீங்களே செய்யுங்க” என்று சொல்லிவிட்டு, தீப்பந்தங்களுடன் சிதையைச் சுற்றியிருந்த தோழர்களைத் தள்ளி வந்துவிடுமாறு பணித்தார்.

ஆனால், அவர்களோ வருவதாக இல்லை.

உடனே பெரியாருக்குச் சினம் வந்தது! “சொல்றனே காதுல விழல, தீப்பந்தங்களை ஓரமா வச்சுட்டு வாங்கப்பா!” என்று கர்ஜித்தார்.
என்னைப் பார்த்து, “தம்பி, நீங்க எப்படி செய்வீங்க இதை” என்று கேட்டார்.

‘‘சின்னய்யா அவர்களுக்கு மிகவும் பிடித்த திருவாசகம், சிவபுராணத்தைச் சொல்லி சிதைக்குத் தீ மூட்டுவோம்’’ என்றேன்.
“அப்படியே செய்யுங்க தம்பி “என்று சொல்லிய பெரியார் அவ்விடத்தை விட்டுப் புறப்படாமல் அங்கேயே நின்றார்.

நானும் வரதராசனும் தலைமாட்டில் அமர்ந்து சிவபுராணத்தை பாடத் தொடங்கினோம். நாங்கள் பாடுகின்றவரை நின்று கொண்டு இருந்த பெரியார் ஆகிய அப்பெரியார், தம்முடைய நண்பருக்கு இறுதியாக ஒரு கும்பிடு போட்டுவிட்டு தொண்டர் படை சூழப் புறப்பட்டார்.

தேசத்தொண்டு, தமிழ்த் தொண்டு, சைவத் தொண்டு புரிந்து வாழ்ந்த அம்மகானின் இறுதி ஊர்வலத்தில் தேசபக்தித் தொண்டர்கள்,
தமிழ்ப் புலவர்கள், சைவர்கள் யாரும் வரவில்லை. எதிர்க்கட்சியினர் என்று குறிக்கப் பெற்ற பெரியார் ஈ.வெ.ராவும் அவரது தொண்டர்களும் தான் இறுதிவரை நின்று இறுதி வணக்கம் செய்து போயினர்.

தமிழகம் தனக்கும், மொழிக்கும் இறுதிவரை

தொண்டாற்றிய திரு.வி.க. போன்ற பெருமக்களுக்கு எப்படி நன்றி பாராட்டுகிறது என்பதை அன்று காண முடிந்தது.
(அ.ச.ஞானசம்பந்தன் எழுதிய “நான் கண்ட பெரியவர்கள்” தமிழ்த்தென்றல் திரு.வி.க., பக்கம் 131-133) (ஏற்கெனவே பெரியாரிடமும் இதே போன்று திரு.வி.க. அவர்கள் கூறியிருந்தார். அதனால் தான் அய்யா இறுதி நிகழ்வை நடத்த ஆயத்தமாயிருந்தார்.)

-உண்மை இதழ், 1-15.12.24

திங்கள், 3 நவம்பர், 2025

பார்ப்பனரின் நீலிக் கண்ணீருக்கும், சூழ்ச்சிகளுக்கும் பார்ப்பனரல்லாதோர் ஆளாகாமல் இருக்க வேண்டும்



ந்நாட்டில் ஆரியர், திராவிடர் என்கின்ற பிரிவும், இப்பிரிவினருள் ஒருவருக் கொருவர் காட்டும் வேற்றுமையுணர்ச்சியும், துவேஷத்தன்மையும் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே வருகின்றன.

சுயநலக் கூட்டம்

இது எவ்வளவுதான் இன்று ஒரு சுயநலக் கூட்டத்தினரின் பிரச்சாரங்களால் மறைக்கப்பட்டாலும், எவ்வளவுதான் இப்பிரிவினைக் கூடாது என்று இதோபதேசம் செய்யப்பட்டாலும் இந்தப் பிரிவு மற்றெல்லாப் பிரிவுகளைவிட சரித்திர சம்பந்தமான தாகவும், முன்பின் பழிவாங்கித் தீரவேண்டிய உணர்ச்சி யுடையதாகவும் இருந்து வளர்ந்து கொண்டே வருகிறது.

இப்பிரிவைப்பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமா னால், இன்று மனித சமுகத்தில் உள்ள சகலவித பிரிவிலும் இந்த ஆரியர், (தமிழர் அல்லது) திராவிடர் என்கின்ற பிரிவே மிகக் கொடுமை யுள்ளதாகவும், இவ்விரு பிரிவினரும் எந்தக் காலத்திலும் ஒன்றுபடுவதற்கில்லாத வேற்றுமையுடையதாகவும் இருந்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டி யிருக்கிறது.

ஏனெனில், பல்வேறு மதங்களின் பேரால் இந்திய மனித சமுகம் பிரிக்கப்பட்டோ, பிரிவினைப்பட்டோ இருந்தாலும், அவைகளையெல்லாம்விட இந்து மதத்தினர் என்பவர்களுக்குள்ளாகவே இருந்து வரும் இந்த ஆரியர், திராவிடர் என்கின்ற பிரிவானது, எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஒன்று படுத்தப்பட முடியாத மாதிரியாய் அமைந்தும் இருந்தும் வருவதேயாகும்.

பிறவியே காரணமா?

உதாரணமாக இந்து சமுகம், முஸ்லிம் சமுகம், கிறித்தவ சமுகம் என்பவைகளுக்குள் ஒன்றுக்கொன்று இருந்து வரும் பிரிவுகள் எவ்வளவு பிரதானமாகவும், பெரியதாகவும் காணப்பட்டாலும் கூட, அவை ஒரு சிறு மனமாறுதலால் அடியோடு மறைந்து, ஒழிந்து போகும்படியானதாக இருக்கின்றன. ஆனால் இந்துக்கள் என்பவர்களுக்குள்ளாகவே ஆரியர், திராவிடர் என்றோ-பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்றோ இருந்துவரும் சமூகங்களுக்குள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பிரிவினை, எப்படிப்பட்ட மனமாற்றத்தாலும் மாறுவதற்கோ, மறைவதற்கோ வழியில்லாமல் பிறவி முதல் சாவுவரை இருந்தே தீரும்படியானதாக இருந்து வருகிறது. காரணம் என்னவென்றால், மற்ற மதப் பிரிவு, மதபேதம் ஆகியவைகளுக்கு மனிதனுடைய உணர்ச்சிகள் அல்லது எண்ணங்கள் மாத்திரமே ஆதாரமாய் இருப்பதும், ஆரியர், திராவிடர் அல்லது பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்ற பிரிவுக்குப் பிறவியே காரணமாய் கற்பிக்கப்பட்டிருப்பதும்தான் முக்கிய காரணமாகும்.

மற்றும், மேல்கண்ட மத சம்பந்தமான பிரிவு களுக்கு மக்களின் வேஷத்தில் ஏதோ சில வித்தி யாசங்கள் மாத்திரம் கற்பிக்கப்பட்டிருக்கின்றதே அல்லாமல், ஒரு மதத்துக்கும் மற்றொரு மதத்துக்கும் புழங்கிக்கொள்வதில் எவ்வித வித்தியாசமும், ஆட்சேபனையும் இருப்பதில்லை. ஆனால், இந்து மதத்தில் உள்ள ஜாதி சம்பந்தமான பிரிவுகளில் பார்ப்பானுக்கும், பார்ப்பான் அல்லாதவனுக்கும் குறிப்பாக பார்ப்பானுக்கும், தீண்டப்படா தவன் என்பவனுக்கும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் – இருந்துவரும் பேதங்கள் அறிவும், ரோஷமும் உள்ள எந்த மனிதனும் சகிக்க முடியாத தன்மையில் இருந்து வருகின்றன என்பதுடன், அதை மாற்றுவது அல்லது தணிப்பது என்பது கூட மகா பாதகமானக் காரியமாய் கருதப்படுவதும் மாத்திரமல்லாமல், இப்பேதங்களுக்கும் நடப்புகளுக்கும் ‘கடவுள்’ வாக்குகளாகவே ஆதாரங்களும் இருப்பதாகவும் கற்பிக்கப்பட்டு இருக்கின்றன. எனவே, ஆரியர், திராவிடர் என்கின்ற பிரிவானது மாற முடியாததும், மாற்ற முடியாததுமாக இருந்து வருகையில் அதை எப்படி ஒருவன் மறக்கவோ, மறைக்கவோ முடியும் என்று கேட்கிறோம். இதை நன்றாய் உணர்ந்து இந்தப் பிரிவின் பயனாய் பலனை அனுபவிக்கும் கூட்டத்தாராகிய ஆரியர்களே இந்த பிரிவினைக்காகத் துக்கப்படுவதாகவும், இந்தப் பிரிவினையைப் பற்றி யாரும் இனி பேசக்கூடாதென்றும், அதைப் பற்றி பேசுவது தேச நன்மைக்கும், மனித சமுக நன்மைக்கும் கேடு என்றும் மாய அழுகை அழுது மக்களை ஏய்க்கிறார்கள்.

மனப்பூர்வமாக…

உண்மையாகவே பார்ப்போமானால், இன்று இந்த ஆரியர், திராவிடர் அல்லது பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற பிரிவினை கூடாதென்றும், அது ஒழிக்கப்பட வேண்டும் என்றும் மனப்பூர்வமாக பாடுபடுபவர்கள் திராவிட மக்கள் என்னும் பார்ப்பனர் அல்லாதாரே ஆகும். இந்தப் பிரிவினை இருந்துதான் ஆகவேண்டும் என்று பாடுபடுபவர்கள் ஆரியர் என்னும் பார்ப்பனர்களேயாகும்.

உதாரணம் வேண்டுமானால், சுலபத்தில் பார்த்துக் கொள்ளலாம். அதாவது, வருஷம்தோறும் பார்ப்பனர்கள் பிராமண மகாநாடு, ஸநாதன மகாநாடு, வருணாசிரம தர்ம மகாநாடு, ஆரியர் தர்ம பரிபாலன மகாநாடு என்பதாகப் பல மகாநாடுகளை ஆங்காங்கு கூட்டுவித்து வேதங்களையும், மனுதர்மம் முதலிய சாஸ்திரங்களையும் காப்பாற்ற வேண்டும் என்றும், மனுதர்ம சாஸ்திரப்படி, நடக்க வேண்டும் என்றும், வருணாசிரமங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் தீர்மானங்கள் செய்து வருவதுடன், மடாதிபதிகள், சங்கராச்சாரிகள், குருமார்கள் முதலியவர்களைக் கொண்டு பிரச்சாரங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

இவை மாத்திரமல்லாமல், இந்த பிரிவினைகளை அதாவது பார்ப்பனர், பார்ப்பனரல்லா தார் என்கின்ற பிரிவினையை காட்டுவதற்கு ஆகவும், காப்பாற்றுவதற்காகவும் கோவில், குளம், சத்திரம், காப்பிக்கடை, ஓட்டல் முதலிய ஜனங்கள் அவசியமாயும், அடிக்கடியும் கூடும்படியாயும் உள்ள இடங்களில் பார்ப்பனர்களுக்கு என்று வேறு இடமும், பார்ப்பனர் அல்லாதார்க்கு என்று வேறு இடமும் ஒதுக்கப்பட்டு விளம்பரப் பலகை போட்டு பாதுகாத்து வரப்படுகிறது.

நேர் விரோதமாய்…

பார்ப்பனரல்லாதார்களோ இதற்கு நேர்விரோதமாக பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற பிரிவு இருக்கக்கூடாதென்றும், அம்மாதிரி வித்தியாசமும், பிரிவும் இருப்பது நாட்டுக்கு மாத்திரம் கெடுதி அல்லாமல், மனித சமூகத்தின் சுயமரியாதைக்கே கேடானதென்றும் சொல்லி வருகிறார்கள். பார்ப்பனரல்லாதார் கிளர்ச்சியும், அவர்களது கூட்டத் தீர்மானங்களும் இதை அனுசரித்து வருகின்றன.

இந்தப்படி பார்ப்பனர் அல்லாதார் செய்து வருவதில் இந்தப் பிரிவு அடியோடு ஒழிய வேண்டும் என்று சொல்லுவதில், குறிப்பாக எந்தெந்த காரியமும், எந்த எந்த பழக்க வழக்கம் ஒழிய வேண்டும் என்று சொல்லி, அவைகளை எடுத்துக்காட்டி வருவதையே நமது பார்ப்பனர்கள், ஆரியர், திராவிடர் என்கின்ற பிரிவினை எது எதில் இருக்கிறது என்று எடுத்துக் காட்டுவதே கூடாது என்றும், அப்படிக் காட்டுவதையே ஆரியர், திராவிடர் என்று பிரிக்கிறதாக ஆகின்றது என்று அதற்கு பெயர் கொடுத்து அதை ஒரு பழியாகச் சொல்லி விஷமப் பிரசாரம் செய்தும் அம்முயற்சியையே அடக்கி ஒழிக்கப்பார்க்கிறார்கள். இன்று இத்தென்னாட்டில் ஆரியர், திராவிடர் என்கின்ற பிரச்சினையால் தென்னாட்டு மக்கள் இரண்டு துறையில் துன்பம் அனுபவிப்பதாகக் கருதி, அத்துன்பத் தில் இருந்து விடுபடவே ஆரியர்-திராவிடர் அல்லது பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்கின்ற கிளர்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஆதிக்கம் செலுத்த தேசியமா?

ஒன்று, சமுதாய வாழ்க்கையில் மதம் என்பதை ஆதாரமாய் வைத்து பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லா தார்களை இழிவும், கீழ்மையும் படுத்துதல். இரண்டு, அரசியல் வாழ்க்கையில் தேசியம் என்பதை ஆதரவாய் வைத்துக்கொண்டு பார்ப்பனர், பார்ப்பனரல்லாத மக்களை அடக்கி ஒடுக்கி ஆதிக்கம் செலுத்துதல்.

இந்த இரண்டு துறையிலும் பார்ப்பனரல்லாத மக்கள் தாழ்த்தப்பட்டு இழிவடைந்திருப்பது மாற்றப்பட்டால் ஒழிய, இந்த நாட்டில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்கின்ற பிரிவு உணர்ச்சியோ அல்லது ஆரியர், திராவிடர் என்கின்ற பிரிவு உணர்ச்சியோ ஒரு நாளும் மாறாது. மாறுவதற்கு அனுமதிப்பதும் ஒரு நாளும் நியாயமாகாது. ஏனெனில், பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற பிரிவை ஆதியில் உண்டாக்கிக் கொண்டதின் பயனாய் பார்ப்பனர்கள் (ஜன சமுகத்தில் 100-க்கு 3 பேர்களாய் உள்ளவர்கள்) தங்களைக் கடவுளுக்குச் சமமாய் மதிக்கப்படும்படியாய் செய்துகொண்டு, உலகவழக்கிலும் சாமி என்று தங்களை மற்றவர்கள் அழைக்கும்படியும் செய்து கொண்டு, பொருளாதாரத் துறையில் எல்லோருக்கும் மேலாகவே சுகபோகமாயும் இருந்துகொண்டு வருகிறார்கள். மற்ற 100க்கு 97 மக்களாய் உள்ள பார்ப்பனர் அல்லாதார் என்பவர்களோ, பெரும்பாலும் 100-க்கு 75 பேர்களுக்கு மேலாகவே சமூக வாழ்வில் இழிவான மிருகத்திலும் கடையாயும், பொருளாதாரத் துறையில் சரீரப் பிரயாசைப் படும்படியாகவும், பெரும்பான்மை மக்கள் பட்டினியினால் வாடி உலக சுக போகத்தை நினைக்கவும் அருகதை அற்றவர்களாகவும் செய்யப்பட்டிருக்கும்போது, இந்த கொடுமையும் இழிவும் ஒழிக்கப்படாமல் பேத உணர்ச்சியை மாத்திரம் மறந்திருக்கும்படி எப்படித்தான் அனுமதிக்க முடியும் என்பது நமக்கு விளங்கவில்லை.

உண்மையாகவே பார்ப்போ மானால், இன்று இந்த ஆரியர், திராவிடர் அல்லது பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற பிரிவினை கூடாதென்றும், அது ஒழிக்கப்பட வேண்டும் என்றும் மனப்பூர்வமாக பாடுபடுபவர்கள் திராவிட மக்கள் என்னும் பார்ப்பனர் அல்லாதாரே ஆகும். இந்தப் பிரிவினை இருந்து தான் ஆகவேண்டும் என்று பாடுபடுபவர்கள் ஆரியர் என்னும் பார்ப்பனர்களேயாகும். பார்ப்பனரல்லாதார்களோ இதற்கு நேர்விரோதமாக பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற பிரிவு இருக்கக்கூடாதென்றும், அம்மாதிரி வித்தியாசமும், பிரிவும் இருப்பது நாட்டுக்கு மாத்திரம் கெடுதி அல்லாமல், மனித சமூகத்தின் சுயமரியாதைக்கே கேடானதென்றும் சொல்லி வருகிறார்கள். பார்ப்பனரல்லாதார் கிளர்ச்சியும், அவர்களது கூட்டத் தீர்மானங்களும் இதை அனுசரித்து வருகின்றன.

ஆரியர்  – திராவிடர் பிரிவு வேண்டாம் என்றும், பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் என்கின்ற பேத உணர்ச்சி வேண்டாம் என்றும் இந்த 10, 20 ஆண்டு காலமாக பார்ப்பனர்கள் அதாவது சமூக இயலில் பிரதானப்பட்ட பார்ப்பனரும், அரசியலில் புகழும், தலைமையும் பெற்ற பார்ப்பனரும் கூப்பாடு போட்டு குறைகூறியும் வந்திருக்கிறார்களே ஒழிய, ஒரு பார்ப்பனராவது அப்பேத உணர்ச்சிக்கு ஆதாரமான காரியங்களில் ஒரு கடுகளவை யாவது ஒழிக்கவோ, மறைந்து போகும்படி செய்யவோ முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறார்களா? என்று கேட்கின்றோம்.

கிளர்ச்சியின் பயனாய்…

பார்ப்பனரல்லாதார் கிளர்ச்சியின் பயனாய்-அதுவும் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்கின்ற பிரிவில் கஷ்டமும், இழிவும் அடைந்து வருவதை விளக்கிக்காட்டி, கூப்பாடு போட்டு வந்ததின் பயனாய் ஏதாவது ஒரு சிறிதாவது அப்பேதக் கொடுமையில் இருந்து மீள வகை கண்டிருக்கக்கூடுமே ஒழிய, மற்றபடி எந்த விதத்திலும் வழியில்லாமலே கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

இன்னமும், இன்றும் பொதுஸ்தாபனங்களில் அதாவது ரயில்வே, கோவில், சத்திரம், குளம் முதலிய இடங்களில் கூட பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் பிரிவு பார்ப்பனர்களாலேயே ஏற்படுத்தப்பட்டு, பார்ப்பனராலேயே காப்பாற்றப்பட்டு வருகிறது. இன்னமும் – நாளையும் பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆணும், பெண்ணும் பார்ப்பனரல்லாதார்களில் இருந்து பிரித்துக் காட்டும் படியான வேஷத்தையும், வேஷச் சின்னத்தையும் அணிந்து தங்களை பிரித்துக்காட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இருந்து கொண்டு இருக்கும் பார்ப்பனர்கள், மற்றவர்களைப் பார்த்து அதுவும் கஷ்டமும், இழிவும் அடைந்து கொண்டிருக்கின்றவர்களைப் பார்த்து பேத உணர்ச்சியை விட்டுவிடுங்கள் என்று சொன்னால் அதில் நாணயமோ, யோக்கியமோ இருக்க முடியுமா? என்று கேட்கின்றோம்.

சமீப காலத்தில் பார்ப்பனர்களால் கூட்டப்பட்ட பல பிராமண மகாநாடுகளிலும், வருணாசிரம தர்ம பாதுகாப்பு மகா நாடுகளிலும் செய்யப்பட்ட தீர்மானங்களில் முக்கிய தீர்மானங்கள் என்னவென்று பார்ப்போமானால் முன் குறிப் பிட்டது போல் ‘‘ஸநாதன தர்மத்தைக் காப்பாற்ற வேண்டும்’’ என்றும், ‘‘வருணாசிரம தர்மத்தைக் காப்பாற்ற வேண்டும்” என்றும், “மனுதர்ம சாஸ்திரத் திட்டத்தை அமலுக்குக் கொண்டு வரும்படி ஒவ்வொரு பார்ப்பனரும் நடந்து கொள்ள வேண்டும்” என்றுமே தீர்மானிக்கப் பட்டிருக்கிறது.

பேத உணர்ச்சி வேண்டாம்

ஸநாதனதர்மம், வருணாசிரம தர்மம், மனுதர்மம் என்றால் என்ன என்பது தெரியாதா? என்று கேட்கின்றோம்.   இந்த மாதிரி நிலையில் பார்ப்பனர்கள் இருந்துகொண்டு ‘‘பேத உணர்ச்சி வேண்டாம்’’ என்று நமக்கு புத்தி சொல்ல வருவதென்றால் இது ‘‘நான் அப்படித்தான் அடிப்பேன் நீ அழக்கூடாது, உடலைக்கூட அசைக்கக்கூடாது’’ என்பது போன்ற நீதியாக இருக்கிறதா இல்லையா என்று கேட்கின்றோம்.

ஆகவே, வரப்போகும் அரசியல் போட்டிகளில் பார்ப்ப னரல்லாதார் ஒரு சமயம் தோல்வியடைந்து விட்டாலும்கூட, இந்த மேல் கண்ட பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்கின்ற பிரிவினையை சகல துறைகளிலும் அழிந்து, ஒழிந்து போகும்படி செய்ய வேண்டிய வேலைகளையாவது தக்கபடி கவனித்து வந்தால் அரசியல் துறை போட்டியில் வெற்றி ஏற்படுவதின் மூலம் கிடைக்கும் நன்மையைவிட கூடுதலான நன்மை கிடைக்கும் என்றே கருதுகிறோம்.

ஆகையால், பார்ப்பனரல்லாத மக்கள் பார்ப்பனரின் நீலிக் கண்ணீருக்கும், சூழ்ச்சி போதனைக்கும் ஆளாகாமல் எச்சரிக்கையாயிருக்க வேண்டுகிறோம்.

– ‘குடிஅரசு’ – தலையங்கம் – 05.04.1936

விடுதலை நாளேடு, 2.11.25

வைக்கம் விருது’ பெறும் அமெரிக்க ஜாதி ஒழிப்புப் போராளி திருமதி தேன்மொழி சவுந்தரராஜனுக்கு நமது வாழ்த்து! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நமது பாராட்டுகள்!

 


தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

வைக்கம் விருது பெறும் அமெரிக்க ஜாதி ஒழிப்பு போராளி திருமதி தேன்மொழி சவுந்தரராஜனுக்கு நமது வாழ்த்து! தக்காரைக் கண்டறிந்து, தொண்டறத்துக்கு ஊக்கம் தரும் நமது ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நமது பாராட்டுகள் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

2025 ஆம் ஆண்டிற்கான ‘வைக்கம் விருது’ அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த திருமதி தேன்மொழி சவுந்தரராஜன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதைத் திராவிடர் கழகம் பாராட்டுகிறது.

ஆசிரியர் அறிக்கை, தமிழ்நாடு

வைக்கம் போராட்ட நூற்றாண்டையொட்டி, தமிழ்நாடு அரசு இந்த விருதினைச் சென்ற ஆண்டே அறிவித்து, கருநாடகாவைச் சேர்ந்த எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான தேவனூர மஹாதேவா அவர்களுக்கு வைக்கம் நூற்றாண்டு விழாவில் வழங்கியது.

இவ்வாண்டு விருதாளராகத் தேர்வு செய்யப் பட்டுள்ளவர் திருமதி தேன்மொழி சவுந்தரராஜன் ஆவார். ஜாதி ஆதிக்க வெறித்தனத்தை எதிர்த்துக் களம் கண்ட ஒரு போராளியாக, அங்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு, நமது மக்களை அவதிக்குள்ளாக்கும் ஜாதி வெறி, ஆதிக்க வெறியை எதிர்த்து, நீதிமன்றத்தி லும், வீதிமன்றத்திலும், கருத்துக் களத்திலும் நாளும் போராடி, விழிப்புணர்வை ஏற்படுத்தி வெற்றி கண்டு வருபவர் ஆவார்.

ஆசிரியர் அறிக்கை, தமிழ்நாடு

ஜாதிக் கொடுமை குடியேறிய அமெரிக்காவில் சென்று வேலை பார்க்கும் நிலையில், பேதம் பேசி, ஆதிக்கம் செய்யும், பேத ஆணவச் சக்திகளை எதிர்த்து இப்படி ஒரு மகத்தான அறப்போரை அங்கு நடத்தி, வெற்றி கண்டுள்ளார். ஜாதி ஆதிக்கக் கொடுமைபற்றிய விழிப்புணர்வூட்டிய அவரது புத்தகத்தை, பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழாக்கம் செய்து சுற்றில் விடப்பட்டது.

ஆசிரியர் அறிக்கை, தமிழ்நாடு

தக்காரைத் தக்க நேரத்தில் கண்டறிந்து, விருதுகளால் அவர்களது தொண்டறத்துக்கு ஊக்கம் தரும் நமது ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நமது பாராட்டுகள்!

விருது பெற்ற தகுதியாளர் திருமதி தேன்மொழி சவுந்தரராஜன் அவர்களுக்கு நமது வாழ்த்துகள்! அமெரிக்காவில் ஜாதி ஒழிப்புக் களத்தைப் பலப்படுத்தி, தந்தை பெரியார், பாபா சாகேப் அம்பேத்கர் களங்களை அங்கே அமைத்து, வைக்கம் போராட்டம் வெற்றி பெற்ற வரலாற்றைத் தொடருவார் என்று நம்புகிறோம்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
23.10.2025

சனி, 1 நவம்பர், 2025

மக்களின் அறிவையும் ஆராய்ச்சியையும் தடுப்பதால்தான் சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் செய்கின்றோம்



 சகோதரிகளே!! சகோதரர்களே!!!

எங்களை வரவேற்று மரியாதை செய்து வரவேற்புப் பத்திரங்கள் வாசித்துக் கொடுத் ததற்கு நன்றி செலுத்து கிறோமாயினும் எங்கள் வரவைப்பற்றி இவ்வூரில் சிலர் அதிருப்தி அடைந்து ஏதோ கிளர்ச்சி செய் திருப்பதாகவும் அறிகிறோம். அதற்காக நீங்களும் சற்று பிரயாசைப்பட்டு இம்மகா நாட்டிற்கு அனுமதி பெற்றதாகவும் தெரி கின்றது. எந்த இயக்கமானாலும் எதிர்க் கிளர்ச்சி இருந்தால்தான் ஒழுங்காகவும், பலமான அமைப்பாகவும் விளக்கமாகவும் முன்னேற்றமடையும்.

எதிர்க் கிளர்ச்சிக்காரர்களுக்கு நன்றி!

உதாரணமாக இவ்வளவு கிளர்ச்சியா வது இங்கு நடத்திருக்கா விட்டால் அதிசய மாகத் தகுந்த இவ்வளவு பெரிய கூட்டம் இங்குக் கூடியிருக்க முடியுமா? எங்கள் வரவில் இவ்வூர் பொது ஜனங்களுக்கு இவ்வளவு கவனம் ஏற்பட முடியுமா? என்று பாருங்கள்.  அநேகமாக நாங்கள் போகின்ற ஊர்களில் எல்லாம் எதிர்க் கிளர்ச்சியே எங்கள் பிரச்சாரத்திற்கு மொத்த அனுகூலமளித்து வருகின்றது.  நாங்கள் எந்த ஊருக்குப் போனாலும் அங்கு எங்களுக்காக செய்யப்படும் மரியா தைகளில் முதலாவது அங்குள்ள கோவில் களை, அடைத்துப் போலீஸ் காவல் போடு வதும் நாஸ்திகர்கள் வருகிறார்கள் என்று ஊருக்குள் பிரச்சாரம் செய்து  எங்கள் கூட்டத்தை நடத்த விடக்கூடாதென்று அரசாங்கத்திற்கு மனுச் செய்து கொள்ளு வதுமேயாகும்.  இந்தக் காரியங்கள் செய்யப் படுவதால் நாங்கள் வரும் விஷயங்கள் தானாகவே பரவி பொது ஜனங்கள் அப்ப டிப்பட்ட ஆட்கள் அதாவது நாஸ்திகர்கள்  என்பவர்கள் எப்படியிருப்பார்கள்? அவர்கள் என்ன சொல்லுவார்கள் என்பதைப் பார்க்கலாம், கேட்கலாம் என்பதாகவே அநேகர் வந்து எங்களைப் பார்க்கவும் நாங்கள் சொல்வதைக் கேட்கவும் ஏற்பட்டு விடுகின்றது.  இந்தக் காரணங்களால் எதிர்க்கிளர்ச்சிக்காரர்களுக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளோம்.

சீதை என்றால் என்ன?

உதாரணமாக, மலேயா நாட்டுக்கு நாங்கள் எவ்வளவோ இரகசியமாகப் போயும் அங்குள்ள எதிர்க்கிளர்ச்சிக்காரர் களின் செய்கைகளின் பயனாய் மலேயாவில் இதுவரை பிரச்சாரம் செய்ய எந்த இந்தியருக்கும் ஏற்பட்டிராத பெரிய சவுகரியங்கள் எங்களுக்கு ஏற்பட்டது.  அங்கு சுமார் 150 பேர்கள் ஒரு மகஜருடன் போலீஸ் இலாகா தலைமை அதிகாரியைப் போய்ப் பார்த்து ஈரோடு இராமசாமியையும் அவர்கள் கோஷ்டியாரையும், மலாய் நாட்டுக்குள் விட்டால் பெரிய கலகங்கள் நடந்து விடுமென்று தெரிவித்தார்களாம்.  அதற்கவ்வதிகாரியானவர் அவ்வளவு பெரிய கலகங்கள் நடக்கும் படியாக அவர்கள் என்ன விதத்தில் அவ்வளவு கெட்டகாரியம் செய்வார்கள்? என்று கேட்டாராம்.  அதற்கவர்கள் எங்கள் சீதையைக் குற்றம் சொல்லுகிறார்கள் என்று சொன்னார்களாம், அதற்கவ்வதிகாரி சீதை என்றால் என்ன? என்று கேட்டாராம், அதற்கவர்கள் சீதையென்றால் எங்கள் கடவுளின் மனைவி என்று சொன்னார் களாம். அதற்கு அவ்வதிகாரி எங்களிலும் சிலர் இயேசுநாதரின் தாயாராகிய மரியம் மாளைச் குறித்துப் பேசுவதில் சிலர் பலவித சந்தேகத்தைக் கிளப்பி விடுகின்றார்கள்.  அதற்கு நாம் என்ன செய்யமுடியும்? வரு பவர்கள் சீதையைக் குற்றம் சொன்னால் நீங்கள் ஒரு கூட்டம் போட்டு அவர்கள் சொல்லுகிறபடி சீதை குற்றவாளி அல்ல வென்று சொல்லுங்கள்.  அதற்கு தைரிய மும் ஆதாரமும் இருந்தால் பயப்படத் தேவையில்லை என்று சொல்லி வருகின்ற வர்களின் சுற்றுப்பிரயாணத்தை நடத்திக் கொடுக்க வேண்டிய வேலை தங்களு டையது என்றுச் சொல்லி மகஜர்காரர்களை எச்சரிக்கை செய்தனுப்பினாராம்.  ஆகவே, அதுபோலவே இங்கும் எங்கள் பிரச் சாரத்திற்கு சில மக்கள் பயந்து விட்டது  ஆச்சரியமாக இருக்கின்றது.  நிற்க, சகோ தரர்களே, என் வார்த்தைகளையெல்லாம் நிராகரித்து விட உங்களுக்குப் பூரண சுதந்திரமுண்டு. அதை மறுத்துப் பேசவும் உங்களுக்குச் சுதந்திரமுண்டு.  ஒருவரு டைய அபிப்பிராயத்தை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்பது நியாய மாகாது.  என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் என்னுடைய அபிப்பிராயத்தை எடுத்துச் சொல்ல எனக்கு சுதந்திரமுண்டு என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.  அதைத் தடுப்பது என்பது ஒருக்காலும் மனித தர்மத்தில் சேர்ந்ததா காது.  நமது நாட்டில் சுதந்திரம் என்பதற்கு அர்த்தமே மற்றவர்கள். சுதந்திரத்தைக் கெடுப்பது என்றுதான் பலர் கருதிக் கொண்டிருக்கின்றார்கள்.  இந்த மனப் பான்மை அடிமைத் தன்மையின் வாசனையினால் ஏற்பட்டதாகுமே தவிர, ஒருக்காலும் சுயேச்சைத் தன்மை உடையதா காது.  எங்களுக்காக ஏன் ஒருவர் பயப்பட வேண்டும்? நாங்களும் மனிதர்கள்தானே? எந்த மனிதனுடைய, எந்த அரசாங்கத்தினு டைய தனிப்பட்ட காரியங்கள் எதிலும் நாங்கள் பிரவேசிப்பதில்லையே. பொதுப்பட்ட காரியங் களில், பொது ஜனங்கள், நன்மை தீமைகளில் மற்ற எல்லோருக்கும் உள்ளது போன்ற உரிமை எங்களுக்கும் உண்டு என்பதில் நாங்கள் சிறிதும் விட்டுக்கொடுக்க இசையோம்.  எங்கள் அபிப்பிராயங்களுக்கு மாறுபட்ட வர்கள் தக்கப் பதிலையும், ஆதாரத்தையும் உடையவர்களானால் நாங்கள் பேசுவதைத் தடுக்கவோ, எங்கள் மீது ஆத்திரப்படவோ சற்றும் அவசியம் ஏற்படாது.  ஆதாரமற்ற வர்கள் தந்திரத்தில் வாழ்பவர்கள். அமட்ட லிலும் மிரட்டலிலும் மக்களை ஏமாற்றி காலம் கழிப்பவர்கள் முதலானவர்களுக்குத்தான் எங்களைப்பற்றிய பயம் ஏற்படக்கூடும். கோபமும் ஆத்திரமும் வரக்கூடும். ஆனால் அதற்காக நாங்கள் என்ன செய்வது? அஸ்திவாரமற்றவைகளும் புரட்டுகளும் என்றைக்கும் இருந்தாலும் ஒரு நாளைக்குச் சாய்ந்து விழுந்துதான் தீரும்.

அன்றியும் அதைக் காப்பாற்ற முயற்சிக்கும் நாளெல்லாம் வீண் நாளாகத்தான் முடியும். வெகு நாளைப்புரட்டு என்பதாலேயே அல்லது அதிகக் கோபக்காரர்கள், முரடர்கள், தந்திர சாலிகள் ஆதரிக்கிற அபிப்பிராயங்கள் என்பதாலேயே எதுவும் நிலைத்திருக்க முடியாது.  அவையெல்லாம் இனிப் பலிக்கவும் பலிக்காது.  சுதந்திர உணர்ச்சி என்பது இந்த தேசத்தில் இல்லையானாலும் சுற்றுப் பக்க தேசங்களில் இருந்து வந்து புகுந்து விட்டது. இனி அதை வெளியில் தள்ளி விடமுடியாது.  ஆதலால் தடைப்படுத்த முயற்சிப் பதிலோ, கோபிப்பதிலோ பயனில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

எதையும் பரீட்சித்துப் பாருங்கள்

சகோதரர்களே, நாங்கள் இங்கு எந்த விதமான மதப்பிரச்சாரம் செய்யவோ, ஏதாவது ஒரு மதத்தைச் குற்றம் சொல்லவோ ஒரு தனி மதத்தை ஸ்தாபிக்கவோ வர வில்லை. அதுபோலே கடவுள் விஷயத்திலும் கடவுள் உண்டு.  இல்லை என்று சொல்லவோ அதன் குணத்தில், சக்தியில், விவகாரம் செய்யவோ, அதற்கும், மக்களுக்கும் மதக் காரர்களுக்கு முள்ள சம்பந்தத்தைப் பற்றியும் சுதந்திரத்தைப் பற்றியும் விவாதிக்கவோ நாங்கள் இங்கு வரவில்லை. மக்களுக்கு அறிவு என்பது உண்டு அல்லவா அதன் பயன் என்ன? சக்தி என்ன? வாழ்க்கையின் சம்பவங் களையும் உலகத் தோற்றங்களையும் அந்நியர் உபதேசங்களையும் பற்றி உங்கள் அனுப வமும் அறிவும் என்ன சொல்லுகின்றது? உங்கள் சொந்த பகுத்தறிவைக்கொண்டு நன்றாய் ஆராய்ந்து எதையும் பரீட்சித்துப் பாருங்கள் என்று சொல்லத்தான் வந்திருக் கின்றோம்.  இதில் என்ன பிசகு ஏற்பட்டு விடக் கூடும் என்பதும் எங்களுக்கு விளங்கவில்லை.  இதற்காக ஏன் ஒருவர் பயப்பட வேண்டும் என்பதும் விளங்கவில்லை.  உங்கள் சொந்த அறிவுக்கு மதிப்புக் கொடுக்கவும். அதற்கு சுதந்திரம் கொடுக்கவும் பயந்தால் மிருக ராசிகளை விட மனிதராசி உயர்ந்தது என்று எப்படிச் சொல்லிக் கொள்ள முடியும்? மக் களை முட்டாள்தனமும், முரட்டுப் பலமும் ஆட்சி செய்ய  வேண்டுமா? அல்லது அறிவு நியாயமும் ஆட்சி செய்ய வேண்டுமா? என்பதுதான் எங்கள் கேள்வி.

மனிதத் தன்மையாகுமா?

மனிதனின் அறிவுக்கு மேற்பட்டதொன்று உண்டு என்று ஒன்றைக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்க்க இடம் கொடுக்காமல் நம்பித் தானாக வேண்டும் என்று வலியுறுத்தி அறிவைக் கட்டிப் போட்டு நாசமாக்கி, மனித சமுகம் முழுவதையுமே அடிமைப்படுத்திவிட்டதா லேயே இன்று மனித சமுகம் இவ்வளவு தொல் லைக்கும், கவலைக்கும் ஆளாகி ஆகாரத் திற்கே திண்டாட வேண்டிய நிலைமையேற் பட்டு விட்டது.

சகோதரர்களே! அசரீரி சொல்லிற்று, அருள் சொல்லிற்று ஆகாய வாணி சொன் னாள், ஆண்டவன் சொன்னான் என்று ஏதோ ஒன்றைக் கற்பித்து எழுதி வைத்துக் கொண்டு அதன்படி நடந்தாக வேண்டும் என்று மக்களைக் கட்டாயப்படுத்திக் கொண்டு இருப்பதும் அவற்றில் ஏதாவது ஒன்றைப் பற்றியாவது சந்தேகப்பட்டு விவரம் கேட்டால் அவர் மீது கோபிப்பதும், வைவதும், பழி சுமத் துவதும், கலகமாகி விடுமென்று மிரட்டுவது மான காரியங்கள் எப்படி மனிதத் தன்மை யானதும் நியாயமானதுமானவை ஆகும்.

அறிவைப் பயன்படுத்தி…

ஆண்டவன் சொன்னதானால், அருள் சொன்ன தானால், அசரீரி சொன்னதானால். ஆகாய வாணி சொன்னதானால் அதற்குப் புஸ்தகம் எதற்கு? ஒரு வருக்கு மற்றொருவர் சொல்லுவதெதற்கு? காதில் உபதேசிப்ப தெதற்கு? தத்துவார்த்தங்கள் எதற்கு? அறி முகப்படுத்துவதெதற்கு? என்பவைகளை மக்கள் சிறிதும் யோசிப்பதில்லை.  ஏதாவது ஒன்றை ஒருவன் ஆண்டவன் சொன்னான் என்று சொல்லி விட்டால், ஆண்டவன் எப்படி சொன்னான். ஆண்டவன் சொன்னதாக யார் சொன்னார் என்று கூடக் கேட்கப்படாதென் கிறார்கள்.  தப்பித்தவறி யாராவது கேட்டு விட்டால், வசவும், பழியும், மிரட்டலும்தான் பதிலாகயிருக்கின்றனவேயொழிய சமாதான மான திருப்தியான பதிலென்பதே கிடையாது. ஆகவே மனிதர்கள் முதலாவதாக இந்த இடத்தில் தங்களது அறிவைப் பயன்படுத்த சுதந்திரம் பெற்றாலல்லது ஒரு நாளும் மனித சமுகம் முற்போக்கடைவற்கே இடமில்லாது போய்விடும். ஏனெனில் உலகத்தில் பலரைச் சிலர் ஏமாற்றஆதிக்கம் செலுத்த தங்கள் தங்கள் புரட்டுகளையும், பித்தலாட்டங்களை யும் ஆரம்பித்த இடமே இந்த இடம்தான் என்று நாம் காணுவதால் அந்தப் புரட்டை முதலில் வெளியாக்கி விட வேண்டும் என்று அபிப்பிராயப்படுகின்றோம். ஆதலால் தான் அந்த இடத்தை நன்றாய் பரீட்சிக்க வேண்டு மென்று மேலும் மேலும் வலியுறுத்துகின் றோம்.  இன்று உலகத்திலுள்ள பெரும் பான்மை மதக்காரர்கள் தங்கள் தங்களுக்குத் தனித்தனியாக பற்பல விதமான கொள்கை களையும், வாசகங்களையும் வைத்துக் கொண்டு அவர்கள் அத்தனைப் பேரும் தங்கள் தங்கள் கொள்கைகளையும், வாசகங் களையும் ஆண்டவன் சொன்னான் என்றே சொல்லி சாதித்துக்கொண்டு அவற்றை பாமர மக்களுக்குள் பலவந்தமாக செலுத்திவிட் டார்கள். அதனாலேயே மக்களுக்குள்  பற்பல பிரிவுகளும், மனப்பான்மைகளும், அபிப் பிராயங்களும் காணப்படுகின்றன. இவ்வ பிப்பிராய பேதங்கள் மக்களின் ஒற்றுமையைக் குலைப்பதோடு ஒருவரையொருவர் சந்தே கிக்கவும், வெறுக்கவும் அலட்சியமாய்க் கருதவும், எதிர்க்கவும், வஞ்சிக்கவும், அடக்கி ஆளவும் பயன்படுகின்றன.  எந்த மார்க்கமாக என்றுப் பார்த்தால் ஒவ்வொரு மதக்காரனும் தன்தன் மதத்தைச் சேர்ந்த அவதாரத்தின் மூலம், தூதனின் மூலம், ஜோதியின் மூலம் தங்கள் ஆண்டவன் சொல்லியது தான் மேலானதென்றும், சத்தியமான தென்றும் சொல்லிக்  கொண்டு அதை நிலை நிறுத்த மற்றவர்களை நம்பும்படி கட்டாயப்படுத்த முயற்சிப்பதன் மூலமேயாகும்.  இந்த உணர்ச்சியையும் செய்கையையும் உலகத்தில் செல்வாக்குப் பெற்றிருக்க இடம் கொடுத்துக் கொண்டிருக்கும் வரை மனித சமுகத்திற்குள் ஒரு வித பொதுவான  ஒற்றுமையும் ஓய்வும் ஏற்படுவதற்கு இடமே இல்லை.  ஆகையால் தான் இந்த இடத்திலேயே மனிதன் முதன் முதல் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமானது என்று சொல்ல வேண்டி இருக்கின்றது.

சந்தேகங்களுக்கு சமாதானம் உண்டா?

நாம் இப்போது எந்த மதக்காரர்களுடைய கொள்கைகளையும் உபதேச வாசகங் களையும் எடுத்துக் கொண்டு அவை சரியா? தப்பா? என்பதாகவோ ஆண்டவன் சொல்லா என்பதாகவோ வாதாட வரவில்லை. நம் முடைய வேலையும் கவலையும் அவையல்ல, மற்றென்னவெனில் எல்லா மதக்காரர்களும் பெரிதும் ஒரே ஆண்டவன்தான் உண்டென்று ஒப்புக்கொள்ளுகின்றவர்களானதால்  ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் கொள்கை களையும், உபதேச வாசகங்களையும் அந்த ஆண்டவனே சொன்னான் என்று சொல்லுவ தால் இவர்களுக்குள் எந்த மதக்காரர்கள் சொல்லுவது உண்மையென்றும், எந்த அவ தாரப் புருஷர்கள் எந்த தூதர்கள் முதலான வர்கள்  சொன்னது உண்மையாகியிருக்கக் கூடியது என்றும் கண்டுபிடிப்பது எப்படி? இதற்கு என்ன பரீட்சை என்பவையேயாகும்.

மக்களுக்கும் மதக்காரர்களுக்குமுள்ள சம்பந்தத்தைப் பற்றியும் சுதந்திரத்தைப் பற்றியும் விவாதிக்கவோ நாங்கள் இங்கு வரவில்லை. மக்களுக்கு அறிவு என்பது உண்டு அல்லவா அதன் பயன் என்ன? சக்தி என்ன? வாழ்க்கையின் சம்பவங்களையும் உலகத் தோற்றங்களையும் அந்நியர் உபதேசங்களையும் பற்றி உங்கள் அனுபவமும் அறிவும் என்ன சொல்லுகின்றது? உங்கள் சொந்த பகுத்தறிவைக்கொண்டு நன்றாய் ஆராய்ந்து எதையும் பரீட்சித்துப் பாருங்கள் என்று சொல்லத்தான் வந்திருக்கின்றோம். இதில் என்ன பிசகு ஏற்பட்டு விடக் கூடும் என்பதும் எங்களுக்கு விளங்கவில்லை. இதற்காக ஏன் ஒருவர் பயப்பட வேண்டும் என்பதும் விளங்கவில்லை. உங்கள் சொந்த அறிவுக்கு மதிப்புக் கொடுக்கவும். அதற்கு சுதந்திரம் கொடுக்கவும் பயந்தால் மிருக ராசிகளை விட மனிதராசி உயர்ந்தது என்று எப்படிச் சொல்லிக் கொள்ள முடியும்? 

மேலும் இவைகளை எல்லாம் ஆண் டவன் சொன்னான் என்று நம்பும்படி கட்டாயப் படுத்துவதால் ஆண்டவன் எந்த ரூபத்தில் எந்த நிலையில் எங்கு இருந்து கொண்டு என்ன பாஷையில் சொன்னார் என்பதில் எந்த மதக்காரர் உண்மை சொல்லுகின்றார்கள் என்று கண்டுபிடிப்ப தற்குமே யாகும்.  மேலும் ஒரு ஆண்டவன் என்பவர் தான் சொல்ல வேண்டுமென் கின்ற கொள்கையையோ, உபதேசத் தையோ மற்றும் ஏதோ ஒன்றையோ தானே ஒருவர் மூலம் சொல்லி பிறகு மற்றவர்களால் எடுத்துக் சொல்லும்படி செய்த பிறகு அவை விவாதத்திற்கும் உள்ளாயிருப் பதைப் பார்க்கும் போது உண்மையிலேயே அவை ஆண்டவனால், சொல்லப்பட்டி ருந்தால் அவைகள் ஒவ்வொரு மனித னுடைய காதிலும் விழும்படியாகவோ அல்லது மனதிலும் பதியும் படியாகவோ அல்லது இப்பொழுதாவது அவைகளை ஆண்ட வன் தான் சொன்னான் என்று கருதும் படியாகவோ அல்லது குறைந்தளவு விவாத மாவதில்லாதபடியாகவோ ஏன் அந்த ஆண்டவனால் செய்யமுடிய வில்லை? என்று இது ஆண்டவனால் முடியாத காரியமா என்றும் யோசிக்கப் புகுந்தால் அதிலிருந்தே அவைகள் எல்லாம் ஆண்டவனால் சொல்லப் பட்டது என்று சொல்லப்படுவது உண்மையா யிருக்க முடியுமா என்னும் சந்தேகங்கள் தோன்று வதற்கு என்ன சமாதானம் சொல்லுவது என்பதேயாகும். அன்றியும் இவற்றையெல்லாம் ஆண்டவன் சொன் னார் என்று கண்மூடித் தனமாய் நம்புவது அவசியமா? அல்லது ஆண்டவன் சொல்லி இருந்தால் நமக்கு ஏன் தெரிந்தி ருக்கக் கூடாது என்று எண்ணி ஆராய்ந்து பார்ப்பது அவசியமா என்பதுமாகும்.

இயற்கை ஞானத்தை…

நிற்க. இப்படிப்பட்ட ஒரு ஆண்டவன் ஏன் மனிதனின் அறிவுக்கு எட்டாதவனாகி விட்டான்? என்பதற்கு இதுவரை யார் என்ன சமாதானம் சொன்னார்கள்? சர்வசக்தியும், சர்வ வியாபகமும் உள்ள ஆண்டவன் ஒரு மனிதனின் அறிவுக்கும், மனதிற்கும், கண்ணிற்கும் தென்படாமல் ஏன் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி யார் யோசித்துப் பார்த்து சமாதானம் கூறுகிறார்கள்? ஏதோ ஒரு ஆண்டவன் இருக்கின்றான் என்று மக்களை நம்பச் செய்ய வேண்டுமென்பதற்காகவோ, ஒரு வாசகத்தை ஆண்டவன் சொன்னான் என்று நம்பச் செய்வதற்காகவோ உலகத் திலுள்ள மக்களின் அறிவையும், ஆராய்ச் சியையும், சுதந்திரத்தையும், இம்மாதிரி தடைப்படுத்தி விடுவதா? என்று கேட் கின்றோம்.  இதற்காக மனிதனின் இயற்கை ஞானத்தை தலை எடுக்க வொட்டாமல் அழுத்திவைத்து விடுவதா? என்றும் கேட்கின்றோம்.

மனிதர்கள் சுதந்திரமுடையவர்களாக வேண்டுமானால் அவரவர்களுடைய அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் முதலில் சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும்.  பிறகு அவரவர்கள் அபிப்பிராயத்தைத் தாராளமாய் வெளியிலெடுத்துச் சொல்ல இடம ளிக்க வேண்டும்.  தனக்கே விளங்காததையும், மற்றொருவனுக்கு விளங்கவைக்க முடியாத தையும் நம்பும்படியோ, ஒப்புக் கொள்ளும் படியோ எதிர்ப்பார்ப்பதும் யாரையும் நிர்ப்பந்தப்படுத்துவதும் கண்டிப் பாய் கூடவே கூடாத  காரியமாகும்.  அது போலவே உலக மனிதர்கள் ஒற்றுமைப் பட்டு சகோதரப் பாவம் அடைய வேண்டுமானால் முதலில் ஆண்டவர்கள் தொல்லையும், மதக்காரர்களின் தொல்லை யும் அவர்களின் உபதேசங்களின் தொல் லையும் ஒழிந்தாக வேண்டும் .  இதற்கு ஒரு மார்க்கம் செய்தாக வேண்டும்.  இது செய்யப்படாத வரை மனிதன் காட்டுமிராண்டித் தனத்திலிருந்து மனிதத் தன்மைக்கு ஒருக்காலமும் திரும்ப மாட்டான்.

(01.03.1931 புதுச்சேரியில் சுயமரியாதை மகாநாட்டில் ஆற்றிய சொற்பொழிவு)

குடிஅரசு – சொற்பொழிவு – 08.03.1931

- விடுதலை நாளேடு, 26.10.25