செவ்வாய், 1 ஜனவரி, 2019

பெரியாரும் தமிழும் – பாவலரேறு பெருஞ்சித்திரனார்

அபாய சங்கு 💕ஒவ்வொரு தமிழர்களின் கவனத்திற்கு...

(பெரியாரும் தமிழும் – பாவலரேறு பெருஞ்சித்திரனார்.)

தந்தைப் பெரியார் ஒரு முழுப் பகுத்தறிவாளர். குமுகாயச் சீர்சிருத்தக்காரர். பழமை உணர்வுகளையும் கொள்கைகளையும் அறிவியல் கண்ணோட்டத்தோடு ஆராய்ந்து, அவற்றைத் தவறு சரியென்று தேர்ந்து, நன்மை தீமைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் மக்கள் அறிவியலாளர். புதுமை விரும்பி.

எனவே, தமிழ் மொழியையும் அவர் அறிவியல் கண்ணோட்டத்துடன் தான் அணுகினார். அது ஒரு பழைமையான மொழி என்பதற்காகவோ, சிறந்த இலக்கண இலக்கியச் செழுமை வாய்ந்தது என்பதற்காகவோ, அவர் அதைப் பாராட்டவில்லை.

அதில் உள்ள பாட்டு இலக்கியங்களையும், கதை இலக்கியங்களையும், வேறு சில கூறுகளையும் மக்கள் மனநலன் அறிவுநலன் இவற்றுக்குப் பயன் தரும் வகையில் ஆராய்ந்தார். அவற்றிலுள்ள மூட நம்பிக்கைகளையும் மக்களுக்குதவாத பழமைக் கருத்துகளையும் அவர் ஏற்றுக் கொள்ள மறுத்தார். அவற்றைக் கடுமையாகச் சாடினார். பொதுவாக மக்கள் வாழ்க்கைக்குப் பயன் தராத எந்த மொழிக் கூறையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் தமிழ்மொழி புலவர்கள் பாங்கிலேயே அடைபட்டுக் கிடந்து, பொதுமக்கள் நிலைக்கு எளிமையாக பயன்படுத்த முடியாமல் இருப்பதை அவர் எண்ணி வருந்தினார். அதை அறிவியல் சிந்தனையுடன் முன்னேறுவதற்கு வாய்ப்பில்லாமல் சிறைபடுத்தி வைத்திருந்த பழமை விரும்பும் புலவர்களை கண்டித்தார். அவர்களுக்கு உணர்வில் உறைக்கும் படியாகத் தமிழ் மொழியை ‘ஒரு காட்டுமிராண்டி மொழி’ என்றும் கூறினார்.

பெரியார் தமிழ்மொழியைப் பற்றிக் கருத்துக் கூறும் பொழுதெல்லாம், அவர் அதைப் பற்றி ஏதும் தெரியாத வகையில் கருத்துக் கூறிவிட வில்லை. தமிழ்மொழியின் மிகப் பழைய இலக்கண நூலாகிய தொல்காப்பியம் முதல் திருக்குறள், கம்பராமாயணம், வில்லிபாரதம், திருவிளையாடல் புராணம், பெரிய புராணம், கந்தபுராணம், புறநானூறு, நாலடியார் முதலிய பாட்டு, கதை இலக்கியங்கள், அறநெறி நூல்கள்வரை அவர் ஓரளவு கற்றிருந்தார். திருக்குறளையும், கம்ப ராமாயணத்தையும் அவர் நன்கு ஆராய்ச்சி முறையில் அறிந்திருந்தார். கம்பராமாயணத்தை வடமொழி வால்மீகி இராமாயணம், துளசிதாசு இராமாயணம், பெளத்த இராமாயணம் முதலியவற்றுடன் ஒப்பிட்டு, ஆராய்ந்து படித்துப் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையே பெரியார் எழுதியிருக்கிறார்.

பெரியார் நல்ல தமிழ்ப் பற்றுக் கொண்டவர். அவர் வரலாற்றை எழுதிய சாமி சிதம்பரனார் ‘தமிழர் தலைவர்’ என்னும் தம் நூலில் தந்தை பெரியாரின் தமிழ்ப்பற்றைப் பற்றிக் குறிப்பிடுகையில், ‘பெரியார் வீட்டு மொஇ கன்னடமாயினும், தமிழையே தாய்மொழியாகக் கொண்டிருப்பவர். அளவு கடந்த தமிழ்ப் பற்றுள்ளவர். தமிழ் மொழியைப் பேண வேண்டுமென்பதில் அவருக்கிணை எவருமிலர்’ என்று எழுதுகிறார்.

தமிழ்மொழியேதான் திராவிட மொழிகளாக விளங்குகின்றது என்னும் கொள்கையுடையவர், பெரியார் அதைப் பற்றிக் கூறும் பொழுது அவர்,

“என் சிற்றறிவிற்கு, என் பட்டறிவிற்கு, ஆராய்ச்சிக்கு எட்டிய வரையில்,தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆகிய நான்கும் தனித்தனி மொழிகளன்றோ, அல்லது தமிழ் தவிர மற்ற மூன்றும் தமிழிலிருந்து பிரிந்த மொழிகளென்றோ தோன்றவில்லை. ஒரே மொழி அதாவது தமிழ்தான் நாலு இடங்களுலும் நாலுவகையாகப் பேசப்பட்டு வருகிறது என்றே நான் கருதுகிறேன்” என்று கருத்தறிவிக்கிறார்.

தமக்குள்ள தமிழ்ப் பற்றைப் பற்றி அவரே 1939 ஆம் ஆண்டில் கோவை மாணவர் மன்றத்தில் பேசிய சொற்பொழிவில் கீழ்வருமாறு விளக்கியிருக்கிறார்.

‘தாய்மொழி என்பதற்காகவோ, நாட்டுமொழி என்பதற்காகவோ எனக்குத் தமிழ்மொழியிடம் எவ்வகைப் பற்றும் இல்லை. அல்லது தனிமொழி என்பதற்காகவோ, மிகப் பழைய மொழி என்பதற்காகவோ எனக்கு அதில் பற்றில்லை. பொருளுக்காக என்று எனக்கு ஒன்றினிடத்திலும் பற்றுக் கிடையாது. அது மூடப்பற்று. குணத்தினாலும், அக்குணத்தினால் ஏற்படும் நற் பயனுக்காகவுந்தான் நான் எதனிடத்திலும் பற்று வைக்கிறேன்.

…….. என் தமிழ்ப்பற்றும் அதுபோல்தான். தமிழினடத்தில் நான் அன்பு வைத்திருக்கின்றேன் என்றால், அதன்மூலம், நான் எதிர்பார்க்கும் தன்மையும், அது மறைய நேர்ந்தால் அதனால் இழப்பேற்படும் அளவையும் எண்ணி மதிப்பிட்டே நான் தமிழ்மொழியிடம் அன்பு செலுத்துகிறேண்.

…. தமிழ், இந்நாட்டு மக்களுக்கு எல்லாத் துறைக்கும் முன்னேற்றமளிக்கக் கூடியதும், உரிமையளிக்கக் கூடியதும், மானத்துடனும் பகுத்தறிவுடனும் வாழத்தக்க வாழ்கையளிக்கக் கூடியதும் ஆகும் என்பது எனது கருத்து. ஆனால் அப்படிப்பட்டவையெல்லாம் தமிழிலேயே இருக்கின்றனவா என்று சிலர் கேட்கலாம். எல்லாம் இல்லை என்றாலும் மற்ற பல இந்திய மொழிகளைவிட அதிகமான முன்னேற்றத்தைத் தமிழ்மக்களுக்கு அளிக்கக் கூடிய கலைகள், பழக்கவழக்கங்கள், அதற்கேற்ற சொற்கள் தமிழில் இருக்கின்றன என அறிகிறேன். ஆதலால், தமிழுக்குக் கேடு உண்டாகும் என ஐயுறத்தக்க வேறு எந்த மொழியும் விரும்பத் தகாததேயாரும்”

தந்தை பெரியார் அவர்கள் சிறந்த பகுத்தறிவுச் சிந்தனையாளர் ஆகையால், எந்த கருத்தையும் ஆராயாது, அவர்க்குச் சரி என்று பட்டாலல்லாது, வெளிப்படையாகக் கூற மாட்டார். தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு -தமிழர்களுக்குத் தாய்மொழியாகிய, தமிழ் மொழியிடத்தில் பற்று வேண்டும் என்று தந்தை பெரியார் மனவியல் முறைப்படி அறிவுறுத்தியிருக்கிறார். 1924 திசம்பரில் திருவண்ணாமலையில் நடந்த பேராயக் கட்சி மாநாட்டில் அவர் பின்வருமாறு பேசினார்.

“ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுக்குள் தலையாய பற்று மொழிப்பற்றே யாகும். மொழிப்பற்று இராதவரிடத்து நாட்டுப்பற்று இராதென்பது உறுதி. நாடு என்பது மொழியை அடிப்படையாகக் கொண்டியங்குவது. தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு-தமிழர்களுக்கு தமிழ்ப்பற்று கட்டாயம் தேவை,தேவை என்று சொல்கிறேன்.

வங்காளிக்கு வங்க மொழியில் பற்றுண்டு. மராட்டிரனுக்கு மராட்டிய மொழியில் பற்றுண்டு. ஆந்திரனுக்கு ஆந்திர மொழியில் பற்றுண்டு. ஆனால் தமிழனுக்குத் தமிழ் மொழியில் பற்றில்லை. இது பொய்யா? தமிழ் நாட்டில் தமிழ்ப் புலமை மிகுந்தவர்கள் எத்தனைப் பேர்? ஆங்கிலப் புலமையுடைய தமிழர்கள் எத்தனைப் பேர்? என்று கணக்கெடுத்தால் உண்மை விளங்கிப் போகும். தாய்மொழியில் பற்றுச் செலுத்தாதிருக்கும்வரை தமிழர்கள் முன்னேற்றமடைய மாட்டார்கள்”

தந்தை பெரியாருடைய இந்தக் கருத்து எவ்வளவு ஆழமானது. அறிவு சான்றது என்று தமிழரனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

பெரியார் தமிழ்மொழியை மிகமிக எளிமையாகவும் இனிமையாகவும் பொதுமக்களிடம் கையாண்டார். அவர் நினைத்த கருத்தைப் பேசுவதற்கென்று அவர் கையாண்ட சொற்கள் படிக்காத மக்களுக்கும் நன்கு புரியக் கூடியவை. அவர் தமிழ் மொழியை மிக இயல்பான முறையில், இன்னும் சொன்னால் கொச்சையாகக் கூட கையாள்வார். ஆனால் அதில் இனிமை இருக்கும். சுவையிருக்கும். கேட்போரை ஈர்க்கக் கூடிய கவர்ச்சியிருக்கும்.

தமிழ்மொழியை இவ்வாறு இயல்பாகவும் கொச்சையாகவும், கலப்பாகவும் பெரியார் பேசினாலும் அல்லது எழுதினாலும், தமிழ் மொழி தூய்மையாகக் கலப்பில்லாமல் பேசப்பட வேண்டும் என்பதில் அவருக்கு அக்கறையிருந்தது. ஆர்வம் இருந்தது. தமிழ்மொழியைக் கலப்பில்லாமல் தூய்மையாக எழுத வேண்டும் – பேச வேண்டும் என்பதில் பெரியார் வலிமையான கருத்துக் கொண்டிருந்தார்.

1926 ஆம் ஆண்டு குடியரசு இதழிலும், 1937 ஆம் ஆண்டு பகுத்தறிவு இதழிலும் அவர் இப்படி எழுதுகினார்.

“தமிழ்ப் புத்தகங்கள் தூய தமிழில் எழுதப்பட வேண்டும். சமசுக்கிருதச் சொற்கள் தமிழில் கலந்தால் தமிழுக்குப் பெருமை குறைந்து போகாது என்றும், அப்படிக் கலப்பதுதான் மொழியின் முன்னேற்றம் என்றும் கூறி, பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்று அமைவு சொல்லுவதோடு இதிலுமா சாதி வேற்றுமை என்கிறார்கள்.

அப்படியானால் ‘தண்ணீர் கொண்டு வா’ என்பதற்கு பகரமாக(பதிலாக) நம்மால் சரியாகப் பலுக்கவும் (அதாவது உச்சரிக்கவும்), எழுதவும், பழக்கமும் வாய்ப்பும் இல்லாத சமசுக்கிருதச் சொல்லாகிய ‘ஜலம் கொண்டு வா’ என்று சொல்வது குற்றமில்லையானால், ‘வாட்டர் கொண்டு வா’ என்று ஆங்கிலச் சொல் சொல்லுவதில் தப்பென்ன? அப்புறம் தனித் தமிழ் என்ற சொல்லுக்கும், மொழிப் பற்று என்கிற சொல்லுக்கும் பொருள் தான் என்ன? இம்மாதிரி மொழி பற்றிலிருந்தே, இவர்களது நாட்டுப் பற்றின் தகுதியையும், அறிந்து கொள்ளலாம். பழையன கழிந்து, புதியன புகுவதாயிருந்தால், நமக்கும் கவலையில்லை. புதியவை வந்து வலுக்கட்டாயத்தில் புகுந்து கொண்டு, பழையவற்றையும் கழுத்தைப் பிடித்துத் தள்ளுவதானால், அதைப் பொறுத்துக் கொண்டு, அதற்குச் சார்பாகப் பேசுவதென்பது மொழிக்கு இரண்டகமும், இன வஞ்சகமும் ஆவதோடல்லாமல் தமிழ்த்தாயின் கற்பைத் தமிழ்ப் பகைவர்களுக்குத் தந்நலத்திற்காக விற்றவர்கள் என்றுதான்சொல்ல வேண்டும்”

இத்தகைய கருத்துகள் எவ்வளவு துல்லியமானவை. துணிவு உடையவை.

பெரியாரின் மொழித்துறை ஈடுபாட்டுக்கும் தமிழ்மொழி பற்றி அவர் கொண்ட தெளிவுக்கும் அவர் சிறந்த தமிழ்ப் பேரறிஞர்கள்பால் கொண்ட தொடர்புகள் தான் காரணமாக இருந்தது.

மறைமலையடிகள், திரு.வி.க, சோமசுந்தர பாரதியார், கா.சுப்பிரமணியனார், சாமி சிதம்பரனார் போன்ற பெருமக்கள் தொடர்பும் துணையும் பெரியாருக்கிருந்தது.

திருக்குறள் பொதுமக்களிடமும் அறிஞர்களிடமும் இன்று பரபலாக வழங்குவதற்கும் பெருமையுற்றதற்கும் ஒருவகையில் பெரியார்தாம் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. திருக்குறளுக்காக மாநாடுகளை நடத்திய முதல் பேரறிஞர் அவர். தமிழ் விழாவான பொங்கல் விழாவைப் பொதுமக்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடும்படி செய்தவரும் பெரியார்தாம்.

தமிழ்மொழிக்கு ஊறுநேரும்படி பிற மொழிகளைக் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்பதைத் துணிவுடன் எதிர்த்தவரும் பெரியார்தாம்.

வேறு மொழியைக் கல்வி மொழியாக்குவதால், தமிழ்மொழியின் வளர்ச்சி குன்றும், தமிழ் மக்களின் முன்னேற்றமும் தடைபடும் என்று 1926 இலேயே குடியரசு இதழில் கண்டனம் தெரிவித்தார். மொத்தத்தில், பெரியார் ஈடுபாடு கொண்ட அரசியல், பொருளியல், குமுகாயவியல் முதலிய துறைகளில் போலவே தமிழ்மொழித் துறையிலும், பலவகையான முன்னேற்றக் கருத்துக்களைக் கூறியுள்ளார்.

இன்று அரசு கொண்டுவந்துள்ள தமிழ் எழுத்துச் சீர்திருத்ததிற்கு முதன்முதல் வழிவகுத்துக் கொடுத்தவரும் அதை நடைமுறைப் படுத்தியவரும், தந்தை பெரியார்தாம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

தமிழினத்திற்காக மட்டுமல்லாமல் தமிழ்மொழிக்கும் தொண்டு செய்த பேரறிஞர் பெரியார். உலகிற்கே பயன்படுகின்ற வகையில் அரிய கருத்துக்களை வெளிப்படுத்தியவரும், மக்கள் தொண்டாற்றியவருமாகிய பெரியார், தமிழ் மொழியில்தான் பேசினார். தமிழ்நாட்டில் தான் பிறந்து வாழ்ந்தார் என்பது நமக்கெல்லாம் பெருமையன்றோ! வாழ்க பெரியார்

-தென்மொழி, சுவடி-18, ஓலை-8,1982

தொகுப்பு -கரு  தமிழ்தாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக