திங்கள், 18 நவம்பர், 2024

புராணப் பிழைப்புக்காரர்களின் ஏமாற்றே உழைப்பும், பணமும் சுரண்டப்படுவதே கார்த்திகை தீபம்



Published November 17, 2024
விடுதலை நாளேடு

கார்த்திகை தீபம்

தந்தை பெரியார்

மதத்தின் பெயரால் ஏற்பட்ட பண்டிகைகளின் மூலமாகவே நமது நாட்டுச் செல்வங்களும், மக்களின் உழைப்பும் பெரிதும் வீணாகிக் கொண்டு வருகின்றன என்பதை பல தடவை எடுத்துக்காட்டிப் பேசியும், எழுதியும் வருகிறோம்.
எவ்வளவு பேசினாலும், எவ்வளவு எழுதினாலும் நமது மக்களுக்கு இன்னும் அப் பண்டிகைகளில் உள்ள அபி மானமும், மூட நம்பிக்கையும் ஒழிந்தபாடில்லை. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதைப் போல், அடிக்கடி அவற்றின் புரட்டுகளை வெளிப்படுத்தி வருவ தனால், நமது மக்களுக்கு அவைகளின் உண்மை விளங்கக்கூடும் என்று கருதியே நாமும் இடைவிடாமல் எழுதிக் கொண்டு வருகிறோம்.

சென்ற மாதத்தில்தான் நமது நாட்டின் செல்வத்தைக் கொள்ளை கொண்டு பாழாக்கிச் சென்ற தீபாவளிப் பண்டிகையைப் பற்றி எழுதியிருந்தோம்.

பயன் என்ன?

அப்பண்டிகையால் நமக்குக் கிடைத்த பயன் என்ன? தீபாவளியின் பெயரால் ஏறக்குறைய 20 கோடி மக்களாவது பண்டிகை கொண்டாடி இருப்பார்கள். இவர்கள் பண்டி கையால் சுமார் 10 கோடி ரூபாய்க்குக் குறையாமல் பாழ்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தப் பத்துகோடி ரூபாயும், அனாவசியமாய் துணி வாங்கிய வகையிலும், பலகாரங்கள் செய்த வகையிலும், பட்டாசு வாங்கிப் பொசுங்கிப் புகையும் கரியுமாக ஆகிய வகையிலும் செலவாகியிருக்கும் என்பது மட்டுமல்ல; பண்டிகை நாளில் வருத்தமின்றிக் களித்திருக்க வேண்டும் என்பதைக் கருதி, ஏழை மக்கள்கள், சாராயம், பிராந்தி, விஸ்கி, ஜின், ஒயின், பீர், ராமரசம் முதலிய வெறும் பானங்களைக் குடித்துக் கூத்தாடிய வகையிலும் ஏராளமான பணம் செலவழிந்திருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்தப் பண்டிகையினால் வெற்று நாளில் மறந்து போயிருந்த சாமிக்குப் படையல் போடத் தூண்டும் புராணக் கதை, மூடநம்பிக்கை மக்கள் மனத்தில் மறுபடியும் வந்து குடி புகுந்ததோடு, அவர்களுடைய செல்வமும் கொள்ளை போகும் நிலை ஏற்பட்டது.
இவ்வளவு மாத்திரம் அல்ல, தீபாவளிப் பண்டிகைக்கு விடுமுறை விட்டதன் பயனாய், தினக் கூலிக்கு வேலை செய்யும் ஏழை மக்களின் கூலியை இழந்ததோடல்லாமல், கடன் வாங்கி நஷ்மடைந்தது எவ்வளவு? வேலை நடக்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, அதனால் தடைப்பட்ட

காரியங்கள் எவ்வளவு!

தீபாவளிக்கு முன் சில நாட்களும் தீபாவளியைக் கருதி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல், விளையாட் டுகளிலும் வேடிக்கைகளிலும் கவனம் செலுத்திய காரணத் தால், அவர்களுடைய படிப்புக்கு நேர்ந்த கெடுதி எவ்வளவு! அரசியல் காரியங்கள் நடைபெறுவதில் இந்த ஓய்வால்

தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு!

இவ்வளவு தொல்லைகளையும் உண்டாக்கிச் சென்ற தீபாவளிப் பண்டிகையின் ஆர்ப்பாட்டம் மறைந்து இன்னும் ஒரு மாதம்கூட ஆகவில்லை; சரியாக 15 நாள்களுக்குள்ளாகவே மற்றொரு சனியன் தொடர்ந்து வந்துவிட்டது.

இவ்வாறு தவறாமல் ஒவ்வொரு மாதமும் நமது நாட்டுச் செல்வத்திற்குச் சனியன் பிடிப்பது வழக்கமாகவும், அவ்வழக்கம் தெய்வீகம் என்று சொல்லப்படுவதாகவும், மதத்தின் முக்கியப் பகுதி என்று சொல்லப்படுவதாகவும் இருந்து வருகின்றது.இப்பொழுது வரும் சனியனாகிய பண்டிகை கார்த் திகைத் தீபம் என்பதுதான்.

இந்தக் கார்த்திகைத் தீபப் பண்டிகையை ஒரு பெரிய தெய்வீகம் பொருந்திய சிறந்த நாளாகக் கருதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை இந்து மதத்தில் உள்ள சைவர், வைணவர், வீர சைவர், ஸ்மார்த்தர் முதலிய எல்லாப் பிரிவினரும் கொண்டாடுகின்றனர்.
சாதாரணமாக, கார்த்திகை நட்சத்திரத் தினத்தைச் சுப்பிரமணியன் என்னும் சாமிக்கு உகந்த சிறந்த நாளாகக் கருதியே பக்தர்கள் என்பவர்கள் விரதங்களும், பூசைகளும் நடத்தி வருகின்றனர். சாதாரண காலத்தில் வரும் கார்த்தி கைகளை விட, கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகையே மிகவும் சிறந்த பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

வீண் செலவு

இதன் பொருட்டுத் திருவண்ணாமலை முதலிய பல ஊர்களுக்கு யாத்திரை போய்ப் பணத்தைச் செலவு செய்துவிட்டுத் திரும்பும்போது, அங்கிருந்து வாந்தி பேதியைக் கொண்டு வருகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் கார்த்திகைக்காக, வைத்தீசுவரன் கோயில், குன்றக்குடி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை முதலிய ஊர்களுக்கு மக்கள் சென்று செலவு செய்யும் செல்வங்களே பதினாயிரக்கணக்காகவும் இலட்சக் கணக்காகவும் ஆகும்போது, பெரிய கார்த்திகை என்று பெயர் பெற்ற கார்த்திகை மாதப் பண்டிகை நாளில் செலவாகும் பொருள் கோடிக்கணக்கில் குறைவுபடுமா?
இதில் எவ்வளவு பொருள் வீணாக்கப்படுகிறது என்பதை நினைத்துப் பாருங்கள்.

தீபாவளிக்காக வரவழைத்து விற்பனையாகாமல் கடைகளில் தேங்கிக் கிடக்கும் பட்டாசுகளுக்கு செலவு வந்து இந்தப் பட்டாசுகளின் மூலம் பணம் படபடவென்று சத்தமிட்டு வீணாக்கப்படும்.

வீடுகளுக்குள்ளும், வெளிப்புறங்களிலும், காடுகளிலும், மேடுகளிலும், குப்பைகளிலும், கூளங்களிலும் எண்ணற்ற 100, 1000, 10,000, 100,000 கணக்கான விளக்குகளைக் கொளுத்தி வைப்பதன் மூலம் செலவாகும் நெய், எண்ணெய்ச் செலவு எவ்வளவு!
கோயில்கள் என்பவைகளுக்குச் சொக்கப் பனை கட்டி நெருப்பு வைப்பதற்காகச் செலவு செய்யும் நெய், எண் ணெய், விறகு முதலியவைகளுக்கு ஆகும் செலவு எவ்வளவு!கார்த்திகைப் பண்டிகைக்காகத் திருவண்ணாமலை முதலிய ஊர்களுக்குப் பிரயாணம் செய்வதன் மூலமாகும் ரொக்கப் பணச் செலவு எவ்வளவு! அங்குக் கூம்புக்கு (சொக்கப்பனை) செலவாகும் விறகு, கற்பூரம், வெண்ணெய், நெய் ஆகியவற்றிற்காகும் செலவு எவ்வளவு!

இவ்வாறு பலவகையில் செலவு செய்யப்படும் கோடிக் கணக்கான பணங்களால் நமது நாட்டிற்குக் கடுகளாவாவது பயனுண்டா என்று ஆலோசித்துப் பாருங்கள்!

இன்னும் இப்பண்டிகையினால் மக்களுக்கு உண்டாகும் மூடநம்பிக்கையையும், அதனால் உண்டாகும் மூடப் பழக்க வழக்கங்களையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!

கார்த்திகையைப் பற்றி வழங்கும் புராணக் கதை இரண்டு. அவைகளில் ஒன்று:

மூட நம்பிக்கை

ஒரு சமயம் அக்னிதேவன் (நெருப்பு) என்னும் கடவுள் சப்தரிஷிகளின் மனைவிமார்களைப் பார்த்து மோகங் கொண்டானாம். அதையறிந்த அவன் மனைவி சுவாகா தேவி என்பவள், அந்த ரிஷிகளின் மனைவிகளைத் தொந்தரவு செய்தால், அவர்களால் தன் கணவன் சபிக்கப் படுவான் என்று எண்ணினாளாம். அதனால் அவள் வசிஷ்டரின் மனைவியாகிய அருந்ததி உருவத்தை மாத்திரம் விட்டு விட்டு, மற்ற ஆறு ரிஷிகளின் மனைவி மார்களைப் போல் உருவம் கொண்டு தன் கணவன் ஆசையை நிறைவேற்றினாளாம். இவ்வாறு சுவாகாதேவி கொண்ட ஆறு உருவத்திற்கும் கார்த்திகை என்ற பெயராம். இவைதான் கார்த்திகை நட்சத்திரமாகக் காணப்படுவ தாம். இந்த நட்சத்திரப் பெண்கள்தான் சுப்பிரமணியன் என்னுஞ்சாமி, குழந்தையாக இருக்கும் போது, அதை யெடுத்து வளர்த்தார்களாம், என்பது ஒரு கதை.

இக்கதையினால்தான் கார்த்திகை நட்சத்திரத்திற்குப் பெருமை. இக்கதை நமது மக்களுக்குக் கற்பிக்கும் மூடநம்பிக்கையைப் பாருங்கள். பிறர் மனைவிமேல் ஆசைப்பட்டு விபச்சாரம் பண்ணுவது குற்றம் இல்லை என்பது ஒன்று. மனைவி தன் கணவன் எந்தத் தகாத காரியத்தை விரும்பினாலும் அதை எப்பாடுபட்டாவது பூர்த்தி செய்து கொடுக்கும் அடிமைக் கருவியாக இருக்க வேண்டுமென்பது ஒன்று. இவை மட்டும் அல்லாமல், இயற்கைக் பொருள்களின் மேல் எல்லாம் தெய்வீகம் என்னும் மூடநம்பிக்கையை உண்டாக்கும் துர்ப்போதனை ஒன்று. ஆகவே, இவற்றை ஆராயும்போது, இக்கதையும் இதன் மூலம் ஏற்பட்ட விரதம், பண்டிகை முதலியனவும் புரட்டு என்று உணரலாம்.

இனி, இக்கார்த்திகையைப் பற்றிய இரண்டாவது கதையாவது:

புராணப் புரட்டு

ஒரு காலத்தில் பிரம்மா என்னும் கடவுளும், விஷ்ணு என்ற கடவுளும் தாம் தாமே ஆதிமூலக் கடவுளர் என்று கூறிக் கொண்டதால், இருவருக்கும் முதலில் வாய்ச் சண்டை உண்டாகிப் பிறகு அது கைச் சண்டையாக மூண்டு ஒருவரோடு ஒருவர் அடிபிடிச் சண்டை செய்தனராம். அவர்களுடைய சண்டை சீக்கிரத்தில் ஒரு முடிவுக்கு வரவில்லையாம். ஆகையால், அப்பொழுது பரமசிவன் என்னும் கடவுள் அவர்கள் மத்தியில் ஒரு பெரிய ஜோதி உருவத்தோடு வானத்திற்குப் பூமிக்குமாக நின்றாராம். சண்டைக்காரக் கடவுள்கள் இருவரும் ஒன்றும் தெரியாமல் திகைத்து நின்றார்களாம். அப்பொழுது ஜோதி உருவாக நின்ற பரமசிவக்கடவுள், ஏ, பிரம்ம விஷ்ணுக்களே! இந்த ஜோதியின் அடிமுடிகளை யார் முதலில் கண்டு வருகிறாரோ அவர்தான் உயர்ந்தவர் என்று ஒரு அனாமதேய (அசரீரி) வார்த்தை சொன்னாராம். உடனே, விஷ்ணு பன்றி உருவங்கொண்டு அடியைக் காண பூமியைத் துளைத்துக் கொண்டு வெகு தூரம் சென்றும் காண முடியாமல் திரும்பி வந்துவிட்டாராம். பிரம்மன் அன்னப்பறவை உருவம் கொண்டு ஜோதியின் முடியைக் காணப் பறந்து மேலே செல்லும் போது, வழியில் ஒரு தாழம்பூ வந்து கொண்டிருந்ததாம். அதைக் கண்ட பிரம்மன், தாழம்பூவே, எங்கேயிருந்து எவ்வளவு காலமாக வந்து கொண்டி ருக்கிறாய்? என்று கேட்க, அது, நான் பரம சிவனுடைய முடியிலிருந்து கோடிக்கணக்கான வருடங் களாக வந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லிற்றாம்.

உடனே பிரம்மன், நான் சிவனுடைய முடியைப் பார்த்துவிட்டதாக அவனிடத்தில் எனக்காகச் சாட்சி சொல் லுகிறாயா? என்று கேட்க, அதுவும் சம்மதிக்க, இருவரும் பரமசிவனிடம் வந்து, முடியைக் கண்டு வந்ததாகப் பிரம்மன் கூற, தாழம்பூ அதை ஆமோதித்ததாம்.
அதுகண்ட சிவன் கோபங்கொண்டு இருவரும் பொய் சொன்னதற்காக, பிரம்மனுக்கு இவ்வுலகில் கோயில் இல்லாமல் போகக்கடவது என்றும், தாழம்பூ இனிமேல் தனக்கு உதவாமல் போகக் கடவது என்றும் சாபம் கொடுத்தாராம். பிறகு பிரம்மாவும், விஷ்ணுவும் தங்கள் கர்வம் ஒழிந்து பரமசிவனே பெரியவர் என்றும் எண்ணி இருவரும் அவரை வணங்கி, எங்கள் வழக்கைத் தீர்த்து வைத்ததற்கு அடையாளமாக இந்த மலையின் மேல் ஒரு ஜோதி உருவாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்களாம். பரமசிவனும் அதற்குச் சம்மதித்து, ஒவ் வொரு வருடத்திலும் கார்த்திகை மாதத்தில், கார்த்திகைப் பண்டிகையன்று, நான் இந்த உச்சியில் ஜோதியாகக் காணப்படுவேன் என்று சொன்னாராம்.
இதுதான் திருவண்ணாமலை புராணமாகிய அருணாச்சலப் புராணத்தில் சொல்லப்படும் கார்த்திகைப் பண்டிகைக் கதை. இந்தக் கதையை ஆதாரமாகக் கொண்டுதான் இன்றும் சைவப் பெரியோர்கள் என்பவர்கள் சிவன் என்பவரே மற்ற கடவுள்களை விட உயர்ந்தவர் என்று சண்டை போடுகின்றனர். இந்தக் கதையைக் காட்டி, சிவனை உயர்த்தியும் மற்றவர்களைத் தாழ்த்தியும் பாடாத சைவப் புராணங்களும், தேவாரங்களும், திருவாச கங்களும், தோத்திரங்களும் இல்லை.

இதற்கு எதிராக மற்ற மதத்தினர்கள் எழுதி வைத்திருக் கும் கதைகள் பல. இவ்வாறு, மதச் சண்டையை உண்டாக் குவதற்கு இக்கதை முதற் காரணமாக இருப்பதை அறிய லாம்.

இந்தக் கதையில் தாழம்பூ பேசுவது ஒரு வேடிக்கை! கடவுள்களுக்கிடையே சண்டை வந்தது ஒரு விந்தை! இது போலவே, ஆராய்ந்தால் பரிகாசத்திற்கும், வேடிக்கைக்கும் இடமாக இக்கதையில் அநேக செய்திகள் அமைந்திருப் பதைக் காணலாம்.

இவ்வாறு, இரண்டு முரண்பட்ட வேடிக்கைக் கதைகளை ஆதாரமாகக் கொண்ட இந்தக் கார்த்திகைப் பண்டிகை யினால் நமது மக்கள் மனத்தில் குருட்டுப் பக்தியும், மூடநம்பிக்கையும், முட்டாள்தனமும் அதிகப்படும் என்பதில் சந்தேகம் உண்டா?

இது நிற்க, மேலே கூறிய கதைகளில் இரண்டாவது கதையைச் சைவர்கள்தான் சிவனுக்குப் பெருமை கற்பிக்கிறதென்று நம்பிக் கார்த்திகைப் பண்டிகை கொண் டாடுகிறார்கள் என்றால், வைணவர்களும் கொண்டாடுவதில் என்ன அர்த்தமிருக்கிறது என்பதுதான் நமக்கு விளங்க வில்லை.

வைணவர்களின் கடவுளைப் பன்றியாக்கிக் கேவலப்படுத்தியிருப்பதுடன், சிவனுடைய பாதத்தைக் கூடக் காணமுடியாத அவ்வளவு சக்தியற்ற தெய்வம் என்று இழிவுபடுத்தி இருப்பதை அறிந்தால் அவர்கள் இந்தப் பண்டிகையைப் பெருமையாகக் கொண்டாட சம்மதிப் பார்களா?
குருட்டு எண்ணம்

இவர்கள் போகட்டும், ஏதாவது ஒரு கடவுளாவது இருக்கிறார் என்ற நம்பிக்கையில்லாது – தானே கடவுள் என்னும் கொள்கையுடைய ஸ்மார்த்தர்களும் இக்கதையை நம்பிப் பண்டிகை கொண்டாடுகிறார்களே! இதில்தான் என்ன அர்த்தமிருக்கிறது? இவற்றையெல்லாம் யோசிக்கும் போது, இவர்கள் முட்டாள்தனம் காரணமாகவாவது, வீண் ஆடம்பரம் காரணமாகவாவது இப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள் என்றுதான் நினைக்க வேண்டி இருக்கிறது.

அல்லது, அறிந்தோ, அறியாமலோ நமது மக்கள் மனத்தில், பண்டிகைகள் புண்ணிய நாள்கள்,அவற்றைக் கொண்டாடுவதால் புண்ணியம் உண்டு; கொண்டாடா விட்டால் பாவம் என்றும் குருட்டு எண்ணம் குடிகொண்டி ருக்கிறது என்ற முடிவுக்குத்தான் வர வேண்டியிருக்கிறது.
ஆகவே, இது போன்ற பண்டிகைகளால், நமது நாட்டில் பொருட்செலவும், வறுமையும், மூட நம்பிக்கையும், வீண் காலப்போக்கும் நிறைந்திருப்பதை எடுத்துக் கூறத் தொடங்குகின்றவர்களுக்கு, உடனே பகுத்தறிவற்ற வைதிக மூடர்கள், தேசத்துரோகி, வகுப்புவாதி, நாத்திகன் என்ற பட்டங்களைச் சூட்டி விடுகின்றனர். சிறிதேனும் பொறுமை கொண்டு, சொல்லும் விஷயத்தைப் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்க்கின்றவர்களில்லை.

இத்தகைய வீண் காரியங்களை ஒழித்து மக்களைப் பகுத்தறிவுடையவர்களாகச் செய்ய இது வரையிலும் எந்த தேசியத் தலைவர்களாவது, எந்தத் தேசியத் தொண்டர் களாவது, எந்தத் தேசியப் பத்திரிகைகளாவது முயற்சி யெடுத்துக் கொண்டார்களா?

இன்னும் இது போன்ற மூட நம்பிக்கைக்கான விஷயங் களை, சுயராச்சியம், சுதந்திரம், காங்கிரசு, பாரதமாதா, மகாத்மாகாந்தி, காந்தி ஜெயந்தி என்னும் பெயர்களால் பிரச்சாரம் செய்து மற்றும் பண்டிகைகளையும் உற்சவங் களையும் விக்கிரகங்களையும் கற்பித்து மக்களை ஏமாற்றிக் கொண்டு தானே வருகிறார்கள்! இவ்வாறு தேசியப் பிழைப்புக்காரர்கள் ஒரு புறமம், பண்டிகையில் நம்பிக்கையுள்ள வைதிக மூடர்கள் ஒரு புறமும், பணம் சேர்க்க ரயில்வே கம்பெனிக்காரர்கள் ஒரு புறமும், புராண பிழைப்புக்காரர்களும், குருக்களும், புரோகிதர்களும் மற்றொரு புறமும் பண்டிகைப் பிரச்சாரம் பண்ணினால் மக்களுக்குப் பகுத்தறிவு விளங்குவது எப்பொழுது?

“குடிஅரசு” 22-11-193

வெள்ளி, 8 நவம்பர், 2024

புராணப் புரட்டை புரிந்து கொள்ளுங்கள் பணச் செலவும், நேரச் செலவும் செய்யாதீர்கள்! (தீபாவளிப் பண்டிகை)

 


விடுதலை நாளேடு

தந்தை பெரியார்

படித்தவர்கள், பணக்காரர்கள், உத்தி யோகஸ்தர்களிடம் அறிவாராய்ச்சியை எதிர் பார்க்க முடியுமா? – தந்தை பெரியார்

இவ்வருஷத்திய தீபாவளிப் பண்டிகை சமீபத்தில் வரப் போகின்றது. பார்ப்பனரல்லாத மக்களே! என்ன செய்யப்போகின்றீர்கள்? அப்பண்டிகைக்கும் எங்களுக் கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று சொல்லிவிடப் போகின்றீர்களா? அல்லது அப்பண்டிகையை கொண்டா டப் போகின்றீர்களா? என்பதுதான். நீங்கள் என்ன செய் யப் போகின்றீர்கள்? என்று கேட்பதின் தத்துவமாகும்.

சுயமரியாதை உணர்ச்சி

நண்பர்களே! சிறிதும் யோசனையின்றி, யோக்கியப் பொறுப்பின்றி, உண்மைத் தத்துவமின்றி, சுயமரியாதை உணர்ச்சியின்றி சுயமரியாதை இயக்கத்தின்மீது வெறுப் புக் கொள்ளுகின்றீர்களேயல்லாமல், மற்றும் சுயநலப் பார்ப்பனர் வார்த்தைகளையும், மூடப்பண்டிதர்களின் கூக்குரலையும், புராணப் புஸ்தக வியாபாரிகளின் விஷமப் பிரச்சாரத்தையும், கண்டு மயங்கி அறிவிழந்து ஓலமிடுகின்றீர்களே அல்லாமல் மேலும் உங்கள் வீடுக ளிலும், அண்டை அயல்களிலும் உள்ள கிழங்களுடை யவும், அழுக்கு மூட்டைகளுடையவும், ஜீவனற்ற தன்மையான பழைய வழக்கம் பெரியோர் காலம் முதல் நடந்துவரும் பழக்கம் என்கின்றதான வியாதிக்கு இடங் கொடுத்துக் கொண்டு கட்டிப் போடப்பட்ட கைதிகளைப் போல் துடிக்கின்றீர்களே அல்லாமல், உங்கள் சொந்தப் பகுத்தறிவைச் சிறிதுகூட செலவழிக்கச் சம்மதிக்க முடியாத உலுத்தர்களாய் இருக்கின்றீர்கள்.

பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டு மானாலும் செலவழிக்கத் தயாராயிருக்கின்றீர்கள். சுதந்தி ரத்தையும் சமத்துவத்தையும் எவ்வளவு வேண்டு மானாலும் விட்டுக்கொடுக்கத் தயாராயிருக்கின்றீர்கள். ஆனால், உங்கள் பகுத்தறிவைச் சிறிதுகூட செலவழிக்கத் தயங்குகிறீர்கள். அதுவிஷயத்தில் மாத்திரம் ஏன் வெகு சிக்கனம் காட்டுகின்றீர்கள்?
இந்நிலையிலிருந்தால் என்றுதான் நாம் மனிதர் களாவது? பார்ப்பனரல்லாதார்களில் சில பண்டிதர்கள் மாத்திரம் வயிறு வளர்த்தால் போதுமா? புராண புஸ்தக வியாபாரிகள் சிலர் மாத்திரம் வாழ்ந்தால் போதுமா? கோடிக்கணக்கான மக்கள் ஞானமற்று, மானமற்று, கால்வயிற்றுக் கஞ்சிக்கும் வகையற்று அலைவதைப் பற்றிய கவலை வேண்டாமா? என்று கேட்கின்றோம்.

புராணப் புரட்டு

புராணக் கதைகளைப்பற்றிப் பேசினால் கோபிக் கிறீர்கள். அதன் ஊழலை எடுத்துச் சொன்னால் காது களைப் பொத்திக் கொள்ளுகின்றீர்கள். எல்லாருக்கும் தெரிந்ததுதானே; அதை ஏன் அடிக்கடி கிளறுகின்றீர்கள்? இதைவிட உங்களுக்கு வேறு வேலை இல்லையா? என்று கேட்கின்றீர்கள். ஆனால், காரியத்தில் ஒரு நாளைக் குள்ள அறுபது நாழிகை காலத்திலும் புரா ணத்திலேயே மூழ்கி மூச்சு விடுவது முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள்.

இப்படிப்பட்ட மனிதர்கள் புராணப் புரட்டை உணர்ந்தவர்களா? புராண ஆபாசத்தை வெறுத்தவர்கள் ஆவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள். பண்டித, பாமர, பணக்கார ஏழை சகோதரர்களே!
இந்த மூன்று மாத காலத்தில் எவ்வளவு பண்டிகை கொண்டாடினீர்கள். எவ்வளவு யாத்திரை செய்தீர்கள், இவற்றிற்காக எவ்வளவு பணச்செலவும், நேரச்செலவும் செய்தீர்கள், எவ்வளவு திரேக பிரயாசைப் பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால் நீங்கள் புராணப் புரட்டை உணர்ந்து புராண ஆபாசத்தை அறிந்தவர்களா வீர்களா? வீணாய் கோவிப்பதில் என்ன பிரயோசனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச் சொல்லுகின்றவர்கள்மீது ஆத்திரம் காட்டி அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றி பேசுவ தால் என்ன பயன்? நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய் என்றால் அதற்கு நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன் என்று பதில் சொல்லிவிட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா?
அன்பர்களே! சமீபத்தில் தீபாவளிப் பண்டிகை என்று ஒன்று வரப்போகின்றது. இதைப் பார்ப்பனரல்லாத மக் களில் 1000-க்கு 999 பேர்களுக்கு மேலாகவே கொண் டாடப் போகின்றீர்கள்.

வீண் செலவு

பெரிதும் எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள் என்றால், பொதுவாக எல்லோரும் அதாவது துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும், பண்டிகையை உத்தேசித்து துணி வாங்குவது என்பது ஒன்று; மக்கள், மருமக்களை மரியாதை செய்வதற்கென்று தேவைக்கும் மேலானதாகவும், சாதாரணமாக உபயோ கப்படுத்துவதற்கு ஏற்றதல்லாததானதுமான துணிகள் வாங்குவது என்பது இரண்டு; அர்த்தமற்றதும், பயனற்றது மான வெடிமருந்து சம்பந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று; பலர் இனாம் என்றும், பிச்சை என்றும் வீடுவீடாய் கூட்டங்கூட்டமாய்ச் சென்று பல்லைக்காட்டிக் கெஞ்சி பணம் வாங்கி அதைப் பெரும்பாலும் சூதிலும், குடியிலும் செலவழித்து நாடு சிரிக்க நடந்து கொள்வது நான்கு; இவற்றிற்காக பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது அய்ந்து; அன்று ஒவ்வொரு வீடுகளிலும் அபரிமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச் செய்து அவைகளில் பெரும் பாகம் கண்டவர்களுக்கும் கொடுப் பதும், வீணாக்குவதும் ஆறு; இந்தச் செலவுக்காகக் கடன்படுவது ஏழு. மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவாகின்றது என்பதும், அதற்காகக் கடன்பட வேண்டியிருக்கின்றது என்பது மான விஷயங்களொரு புறமிருந்தாலும், மற்றும் இவை களுக்கெல்லாம் வேறு ஏதாவது தத்து வார்த்தமோ, சைன்ஸ் பொருத்தமோ சொல்லுவதானாலும், தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண் டாடப்படுகிறது என்கின்றதான விஷயங்களுக்கு சிறிது கூட எந்தவிதத்திலும் சமாதானம் சொல்லமுடியாது என்றே சொல்லுவோம்.

ஏனெனில், அது எப்படிப் பார்த்தாலும் பார்ப்பனியப் புராணக்கதையை அஸ்திவாரமாகக் கொண்டதாகத்தான் முடியுமே ஒழிய மற்றபடி எந்த விதத்திலும் உண் மைக்கோ, பகுத்தறிவிற்கோ, அனுபவத்திற்கோ சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே முடியாது. பாகவதம், இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங்கள் பொய் என்பதாக சைவர்கள் எல்லாரும் ஒப்புக் கொண் டாய் விட்டது. கந்த புராணம், பெரிய புராணம் முதலி யவை பொய் என்று வைணவர்கள் எல்லோரும் ஒப்புக் கொண்டாய் விட்டது. இவ்விரு கூட்டத்திலும் பகுத்தறி வுள்ள மக்கள் பொதுவாக இவையெல்லாவற்றையும் பொய்யென்று ஒப்புக்கொண்டாய் விட்டது. அப்படி இருக்க ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பதினாயிரக்கணக்கான சம்பவங்களில் ஒன்றாகிய தீபாவளிப் பண்டிகைக்காக மாத்திரம் மக்கள் இந்த நாட்டில் இந்தக் காலத்தில் இவ்வளவு பாராட்டுதலும், செலவு செய்தலும், கொண்டாடுதலும் செய்வதென்றால் அதை என்னவென்று சொல்ல வேண்டும் என்பதை வாசகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

ஒப்புக் கொள்ள முடியுமா?

தீபாவளிப் பண்டிகையின் தத்துவத்தில் வரும் பாத்திரங்கள் 3. அதாவது நரகாசுரன், கிருஷ்ணன், அவனது இரண்டாவது பெண்சாதியாகிய சத்தியபாமை ஆகியவைகளாகும். எந்த மனிதனாவது கடுகளவு மூளையிருந்தாலும் இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்தவர்கள் என்றாவது, அல்லது இவர்கள் சம்பந்த மான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் நமக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இம்மாதிரியான ஒரு பண் டிகை தீபாவளி என்று கொண்டாட வேண்டுமென்றாவது ஒப்புக்கொள்ள முடியுமா என்று கேட்கின்றோம்.

பார்ப்பனரல்லாதார்கள் தங்களை ஒரு பெரிய சமூகவாதிகளென்றும், கலைகளிலும் ஞானங்களிலும் நாகரிகங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் தட்டிப் பேச ஆளில்லாவிடங்களில் சண்டப் பிரசண்டமாய்ப் பேசிவிட்டு எவனோ ஒரு மூடனோ அல்லது ஒரு அயோக்கியனோ காளைமாடு கண்ணு (கன்றுக்குட்டி) போட்டிருக்கின்றது என்றால் உடனே கொட்டடத்தில் கட்டிப் பால் கறந்து வா என்று பாத்திரம் எடுத்துக் கொடுக்கும் மடையர்களாகவே இருந்து வருவதைத்தான் படித்த மக்கள் என்பவர்களுக்குள்ளும், பாமர மக்கள் என்பவர்களுக்குள்ளும் பெரும்பாலும் காண்கிறோமே யொழிய காளை மாடு எப்படி கண்ணு போடும்? என்று கேட்கின்ற மக்களைக் காண்பது அரிதாகவே இருக் கின்றது. மற்றும் இம்மாதிரியான எந்த விஷயங்களிலும் கிராமாந்தரங்களில் இருப்பவர்களைவிட, பட்டணங் களில் இருப்பவர்கள் மிகுதியும் மூடத்தனமாகவும், பட்ட ணங்களில் இருப்பவர்களைவிட சென்னை முதலான பிரதான பட்டணங்களில் இருப்பவர்கள் பெரிதும் மூட சிகாமணிகளாகவும் இருந்து வருவதையும் பார்க் கின்றோம். உதாரணமாக தீபாவளி, சரஸ்வதி பூசை, தசரா, பிள்ளையார் சதுர்த்தி, பதினெட்டு, அவிட்டம் முதலிய பண்டிகைகள் எல்லாம் கிராமாந்தரங்களைவிட நகரங் களில் அதிகமாகவும். மற்ற நகரங்களைவிட சென்னை யில் அதிகமாகவும் கொண்டாடுவதைப் பார்க்கின்றோம். இப்படிக் கொண்டாடும் ஜனங்களில் பெரும்பான்மை யோர் எதற்காக, ஏன் கொண்டாடுகின்றோம் என்பதே தெரியாதவர்களாகவே யிருக்கின்றார்கள்.
கண்மூடி வழக்கங்கள்
சாதாரணமாக மூடபக்தியாலும் குருட்டுப் பழக்கத் தினாலும் கண்மூடி வழக்கங்களைப் பின்பற்றி நடக்கும் மோசமான இடம் தமிழ்நாட்டில் சென்னையைப் போல் வேறு எங்குமே இல்லை என்று சொல்லி விடலாம். ஏனெனில், இன்றைய தினம் சென்னையில் எங்கு போய்ப் பார்த்தாலும் ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலும் சரீரமில்லாத ஒரு தலைமுண்ட உருவத்தை வைத்து அதற்கு நகைகள் போட்டு பூசைகள் செய்து வருவதும், வீடுகள்தோறும் இரவு நேரங்களில் பாரத இராமாயண காலட்சேபங்களும், பெரிய புராணக் காலட்சேபங்களும், பொது ஸ்தாபனங்கள்தோறும் கதா காலட்சேபங்களும் நடைபெறுவதையும், இவற்றில் தமிழ்ப்பண்டிதர்கள் ஆங்கிலம் படித்த பட்டதாரிகள் கவுரவப் பட்டம் பெற்ற பெரிய மனிதர்கள், பிரபலப்பட்ட பெரிய உத்தியோகஸ் தர்கள் மற்றும் பிரபுக்கள், டாக்டர்கள், சைன்ஸ் நிபுணர் கள், புரபசர்கள் முதலியவர்கள் பெரும் பங்கெடுத்துக் கொண்டிருப்பதையும் பார்க்கலாம்.

பார்ப்பனரல்லாதார்களில் இந்தக் கூட்டத்தார்கள்தான் ஆரியர் வேறு, தமிழ் வேறு என்பாரும், புராணங்களுக்கும் திராவிடர்களுக்கும் சம்பந்தமில்லை என்பாரும், பார்ப் பனர் சம்பந்தம் கூடாது என்பாரும், பார்ப்பனரல்லாத சமூகத்தாருக்கு நாங்கள்தான் பிரதிநிதிகள் என்பாரும், மற்றும் திராவிடர்கள் பழைய நாகரிகத்திற்கு மக்களை அழைத்துச் செல்லவேண்டுமென்பாரும் பெருவாரியாக இருப்பார்கள். ஆகவே, இம்மாதிரியான விஷயங்களில் படித்தவர்கள், பணக்காரர்கள் உத்தியோகஸ்தர்கள் என் கின்றவர்கள் போன்ற கூட்டத்தாரிடம் அறிவு, ஆராய்ச்சி சம்பந்தமான காரியங்கள் எதிர்பார்ப்பதைவிட, பிரச் சாரம் செய்வதைவிட உலக அறிவு உடைய சாதாரண மக்களிடம் எதிர்பார்ப்பதே, பிரச்சாரம் செய்வதே பயன் தரத்தக்கதாகும்.

எப்படியானாலும் இந்த வருஷம் தீபாவளிப்பண்டிகை என்பதை உண்மையான தமிழ்மக்கள், திராவிடர்கள் என்பவர்கள் கண்டிப்பாய் அனுசரிக்கவோ, கொண் டாடவோ கூடாது என்றே ஆசைப்படுகின்றோம்.

– குடிஅரசு, 16.10.1938

தீபாவளி

தீபாவளி பண்டிகை என்று கஷ்டமும் நஷ்டமும் கொடுக்கத்தக்க பண்டிகையொன்று வரப்போகின்றது. அதிலும் ஏதாவது, அறிவுடைமை உண்டா? என்று கேட்கின்றேன் தீபாவளி பண்டிகையின் கதையும் மிக்க ஆபாசமானதும், இழிவானதும், காட்டுமிராண்டித் தனமானதுமாகும், அதாவது விஷ்ணு என்னும் கடவுள் பன்றி உருக்கொண்டு பூமியைப் புணர்ந்ததன் மூலம் பெறப்பட்டவனான நரகாசூரன் என்பவன் வருணனுடைய குடையைப்பிடுங்கிக் கொண்டதால் விஷ்ணு கடவுள் கிருஷ்ணாவ தாரத்தில் கொன்றாராம். அந்தத் தினத்தைக் கொண்டாடுவதற்கு அறிகுறியாக தீபாவளி பண்டிகை கொண்டாடுவதாம்.

சகோதரி சகோதரர்களே! இதில் ஏதாவது புத்தியோ மனிதத் தன்மையோ இருக்கின்றதா என்று பாருங்கள்! விஷ்ணு என்னும் கடவுள் பூமியை புணருவது என்றால் என்ன என்றாவது அது எப்படி என்றாவது, நரகாசூரன் என்றால் என்ன? வருணன் என்றால் என்ன? வருணன் குடை என்றால் என்ன? என்பதாவது, அப்படி ஒன்று இருக்க முடியுமா என்றாவது, இவைகள் உண்மையா என்றாவது கருதிப் பாருங்கள்! இப்படி பொய்யானதும் அர்த்தமற்றதுமான பண்டிகையினால் எவ்வளவு கஷ்டம்? எவ்வளவு ரூபா நஷ்டம்? எவ்வளவு கடன்? எவ்வளவு மனஸ்தாபம்? எவ்வளவு பிரயாணச் செலவு? என்பவைகளை ஒரு சிறிது கூட நமது மக்கள் கவனிப்பதில்லையே! அப் பண்டிகையை உத் தேசித்து ஒவ்வொருவரும் தனது யோக்கியதைக்கும் தேவைக்கும் மேற்பட்ட பணம் செலவு செய்து, துணி வாங்க ஆசைப்படுகிறான்; தன் னிடம் ரூபாய் இல்லா விட்டாலும் கடன் வாங்குகின்றான்.கடன் என்றால் வட்டி அல்லது ஒன்றுக்கு ஒன்றரை பங்கு கிரையம் ஏற்பட்டுவிடுகின்றன. இதுதவிர மாமனார் வீட்டு செலவு எவ்வளவு? தவிர சுத்த முட்டாள்தனமான பட்டாசுக்கொளுத்துவது எவ்வளவு? மற்றும், இதனால் பலவித நெருப்பு உபாதை ஏற்பட்டு வீடு வேகுதலும், துணியில் நெருப்பு பிடித்து உயிர் போதலும், பட்டாசு சுடுவதாலும் செய்வதாலும் மருந்து வெடித்து உடல் கருகி கண், மூக்கு, கை, கால், ஊமை யாவதுமான காரியங்கள் எவ்வளவு நடக்கின்றது? இவ்வளவும் அல்லாமல் இந்த பண்டிகை கொண்டாடு வதற்கு அறிகுறியாக எவ்வளவு பேர்கள் கள்ளு, சாராயம் குடித்து மயங்கி தெருவில் விழுந்து புரண்டு, மானம் கெடுவது எவ்வளவு? மேலும் இதற்காக ‘இனாம் இனாம்’ என்று எத்தனைப் பாமர மக்கள் பிச்சை எடுப்பது அல்லது தொந்தரவு கொடுத்து பணம் வசூல் செய்வது ஆகிய இந்தக் காரியங்களால் எவ்வளவு பணம், எவ்வளவு நேரம், எவ்வளவு ஊக்கம், செலவாகின்றது என்று கணக்குப்பாருங்கள்.

இவைகளை எல்லாம் எந்த இந்திய பொருளாதார தேசிய நிபுணர்களாவது கவனிக்கிறார்களா? என்று கேட்கின்றேன். துலாஸ்தானம் தவிரவும் இந்து மதத்திலேயே அய்ப்பசி துலாஸ்தானமென்று புதுத் தண்ணீர் காலத்தில் நதிகளில் போய் அழுக்குத் தண்ணீரில் தினம் தினம் காலையில் குளிப்பதும், புதுத்தண்ணீர் ஒத்துக் கொள்ளாமல் கஷ்டப் படுவதும் இதற்காக ஊரைவிட்டுவிட்டு ஊர் பணம் செலவு செய்து கொண்டு போய் கஷ்டப்படுவதும். ஒன்று இரண்டு தண்ணீர் இழுத்து கொண்டு போகப் படுவதும், குளித்து முழுகிவிட்டு நதிக்கரையில் இருக்கும் பார்ப்பனர்களுக்கு அரிசிப் பருப்பு பணம் காசு கொடுத்து அவன் காலில் விழுவதுமான காரியங்கள் செய்வதும், ஆதிமுதல் அந்தம் வரை அத்தனையும் பொய்யும் ஆபாசமுமான காவிரிப்புராணம் படிக்க கேட்பதும் அதற்காக அந்த பொய்யையும் கேட்டுவிட்டு பார்ப்பானுக்குச் சீலை, வேஷ்டி, சாமான், பணம் கொடுத்து காலில் விழுவதுமான காரியம் செய்கின்றோம். காவேரியைப் பெண் தெய்வமென்பதும் அதில் ஆண்கள் குளிப்பதுமான காரியம் ஆபாசமல்லவா?
– குடிஅரசு – சொற்பொழிவு – 20.10.1929

செவ்வாய், 29 அக்டோபர், 2024

காட்-அல்லா-பகவான் : தமிழில்? – தந்தை பெரியார்

 


அக்டோபர் 01-15

நாம் ஒரு தமிழர் என்கின்ற முறையில் கடவுள் என்பதைப்பற்றி ஆராய்ச்சி செய்வோமானால், “கடவுள்” என்கின்ற பதமே கட+உள் = (கடவுள்) என்பதான இரண்டு சொற்கள் சேர்ந்த பகுபதமாக இருக்கின்றதே தவிர, வட மொழியிலும், ஆங்கில மொழியிலும் இருப்பது போன்ற பகவான் காட் (God) அல்லா என்பது போன்ற ஒரு தனி வார்த்தையோ அல்லது அந்த விதங்களான அர்த்தத்தைக் கற்பிக்கக் கூடியதான வாக்கியமோ, தமிழில் இல்லையென்பதை உணர வேண்டும். தமிழர்களுக்கு பாஷை தோன்றிய காலத்தில் “கடவுள்” உணர்ச்சி இருந்து இருக்குமானால் அதற்கு ஒரு தனி வார்த்தை இருந்திருக்கும்.

அது மாத்திரமல்லாமல், ஆங்கிலம் முதலிய பாஷைகளில் கடவுள் இல்லை என்று சொல்லப்படுவதை உணர்த்துவதற்கு எப்படி எத்தீசம், எத்தீஸ்ட், நாஸ்திகம், நாஸ்திகன் என்கின்ற வார்த்தைகள் இருக்கின்றனவோ அவைபோலவே தமிழிலும் கடவுள் இல்லை என்று சொல்லுவதை உணர்த்துவதற்கும், கடவுள் இல்லை என்று சொல்லுபவனைக் குறிப்பிடுவதற்கும் அப்பொருள்கள் கொண்ட ஏதாவது ஒரு வார்த்தை இருந்திருக்கும். ஆகவே, அவற்றிலிருந்து தமிழர்களுக்கும் (அதாவது தமிழ்நாட்டாருக்கும்) கடவுளுக்கும் ஆதியில் எவ்வித சம்பந்தமுமிருந்ததில்லை என்பது ஒருவாறு புலப்படும்.

இறைவன் என்கின்ற பதத்தை கடவுளுக்கு உள்ள தமிழ்ப் பதம் என்று பண்டிதர்கள் சொல்லக் கூடுமானாலும் அது அரசனுக்கும், தலைவனுக்கும் ஏற்பட்டதே தவிர, கடவுளுக்காக ஏற்பட்ட தனிப் பொருளமைந்த சொல் அல்லவென்றே சொல்லுவோம். ஆனால், கடவுள் என்பது எப்பொருளுக்கும் தலைவன் என்கின்ற முறையில் வேண்டுமானால் இறைவன், பெரியவன் எனினும் பொருந்தும் என்று சப்புக் கட்டலாமேயொழிய அது அதற்கே ஏற்பட்ட தனி வார்த்தை ஆகாது.

நிற்க; தமிழ்நாட்டில் பலர் காலம்சென்ற பிதுர்க்களையும், செல்வாக்குள்ள பெரியார் களையும் அன்பினாலும், வீரர்களைக் கீர்த்தியாலும் வழிபட நினைத்து அவர்களை உருவகப்படுத்த என்று ஒரு கல் நட்டு அக்கல்லை வணங்கி வந்ததாக மாத்திரம் சொல்லப்படுவதை நான் கேட்டிருக்கிறேன். மற்றபடி இப்போதைய கடவுள்களான சிவன், விஷ்ணு, பிரமன், பிள்ளையார், சுப்பிரமணியன் முதலிய கடவுள்களையோ மற்றும் அது சம்பந்தமான குட்டிக் கடவுள்களையோ தமிழ் மக்கள் வணங்கி வந்தார்கள் அல்லது நம்பி இருந்தார்கள் என்றாவது சொல்லுவதற்குக்கூட இடமில்லை என்று கருதுகிறேன். இதற்கெனக்குத் தோன்றும் ஆதாரம் என்னவென்றால், இப்போது உள்ள கருப்பன், காத்தான் முதலிய பேர்கள் கொண்ட நீச்சக் கடவுள்கள் தவிர மற்ற கடவுள்கள் பெயர்களெல்லாம் வடமொழியிலேயே இருக்கின்றதென்பதே போதுமானதாகும்.

ஆனால், வடமொழிப் பெயருள்ள சில கடவுள்களின் பெயர்களைத் தமிழில் மொழிபெயர்த்து அந்தக் கடவுள்களைத் தமிழில் அழைப்பதைப் பார்க்கின்றோம். என்றாலும், இவை தமிழர்களுக்குள்ளும் ஆதியில் இருந்தது என்பதற்குத் தக்க சமாதானம் சொல்ல யாரும் முன் வருவதை நான் பார்க்கவில்லை.

இது மாத்திரமல்லாமல், சைவம், வைணவம் என்று சொல்லப்படும் சமயங்களாகிய தமிழ் மக்களைப் பிடித்த நோய்களான சைவ, வைணவ மதக் கடவுள்கள் எல்லாம் வடமொழிப் பெயர்கள் உடையதாகவும், அவற்றின் ஆதாரங்கள் முழுவதும் வடமொழி வேத சாஸ்திர புராண இதிகாசங்களாகவும்தானே இருக்கின்றதே அல்லாமல், தமிழ் ஆதாரத்தால் ஏற்பட்டதாகச் சொல்லக்கூடிய கடவுள் ஒன்றையுமே நான் கண்டதும் கேட்டதும் இல்லை. இவற்றுக்குச் செய்யப்படும் பூசை முதலியவையும், வடமொழி நூல்கள் ஆதாரப்படி, வடமொழிப் பெயர்கள் கொண்ட வஸ்துகளும் செய்கைகளுமாகவே இருப்பதையும் காணலாம். அதாவது அருச்சனை, அபிஷேகம், பலி, கற்பூரம், சாம்பிராணி, காணிக்கை முதலியவையாகும்.

தவிரவும், மேற்கண்ட இரண்டு சமயங்களின் பேரால் சொல்லப்படும் நாயன்மார்கள், ஆழ்வார்கள் முதலிய சமயாச்சாரியார்களும், பக்தர்மார்களும் கும்பிட்டதும், தேவாரம், திருவாசகம், திருத்தாண்டகம், பிரபந்தம் முதலியவை பாடினதும், மற்ற மக்கள் வாழ்க்கையில் உபயோகப்படுத்துவதும், ஆகிய எல்லாம் வடமொழிப் பேர் கொண்ட கடவுள்களைப் பற்றியும், அவர்களது செய்கைகளைப் பற்றிச் சொல்லப்பட்ட வடமொழிப் புராண இதிகாசங்களிலுள்ள கதைகளைப் பற்றியுமே இருக்கின்றனவே அல்லாமல் மற்றபடி அவை தமிழர்களோ அல்லது தமிழ்ப் பண்டிதர்களோ தமிழர்களுக்கு ஆதியில் இருந்தது என்று சொல்லத்தக்கதாக ஒன்றையுமே, ஒருவர் வாக்கையுமே நான் பார்த்ததும் இல்லை; பிறர் சொல்லக் கேட்டதும் இல்லை.

மற்றும், சமயக் குறிகள் என்று சொல்லப்படும் விபூதி, நாமம் முதலிய சின்னங்களின் பெயர்கள்கூட வடமொழியில் உள்ளதே தவிர, தமிழில் உள்ளவையல்ல என்பதே எனது அபிப்பிராயம். வேண்டுமானால் அதைத் தமிழில் _ விபூதியைத் திருநீறு என்றும், திருமண் என்றும் சொல்லிக் கொள்ளுகிறோம். ஆனாலும், அது சரியான மொழிபெயர்ப்பல்லவென்று சொல்வதோடு, விபூதி, நாமம் என்கின்ற பெயர்கள் எந்தக் கருத்துடன் சொல்லப்படுகின்றனவோ அந்தக் கருத்தும், பொருளும் அவற்றில் இல்லை என்றே சொல்லுவேன். விபூதி என்றும், நாமம் என்றும் சொல்லப்படும் வஸ்துகள் சாம்பலும், மண்ணுமாய் இருப்பதால் அந்தப் பெயரையே அதாவது, சாம்பலுக்குள்ள மாறு பெயராகிய நீறு என்றும், மண்ணை மண் என்றும் திரு என்பதை முன்னால் வைத்து திருநீறு, திருநாமம் என்று சொல்லப்படுகின்றதே ஒழிய வேறில்லை என்றே தோன்றுகின்றது.
ஆகவே, தமிழில் காட், அல்லா, பகவான் என்பவற்றைக் குறிப்பதற்கு ஒரே வார்த்தையாக ஒன்றுமே இல்லை என்பதும், அதன் சின்னங்களையும் குறிப்பிடுவதற்குத் தமிழில் வார்த்தைகள் இல்லை என்பதும், அனுபவத்திலுள்ள கடவுள்களும், பெயர்களும் அவற்றின் நடவடிக்கைகளும்கூட தமிழில் இல்லை என்பதும், மற்றபடி இப்போது இருப்பவை எல்லாம் வடமொழியில் இருந்து தமிழர்கள் எடுத்துக்கொண்டு தங்களுடையன வாக்கிக் கொண்ட மயக்கமே என்றும் எனக்குப் பட்டதை உங்களுக்குச் சொன்னேன்.

– கண்ணனூர் செவ்வாய் தரும சமாஜ ஆண்டு விழாவில் தந்தை பெரியார் அவர்களின் தலைமை முடிவுரையிலிருந்து (குடிஅரசு, 29.6.1930).

தீபாவளி தத்துவமும் இரகசியமும் – தந்தை பெரியார்

 

அக்டோபர் 16-31

டேவிஸ்:- டேய்! ராமானுஜம் எங்கேடா புறப்பட்டுவிட்டாய்?

ராமானுஜம்: எங்கள் சொந்த ஊருக்குப் போகிறேன்.

டே—_ஸ்: உங்கள் சொந்த ஊருக்கா? எதற்காகப் போகிறாய்?

ரா—ம்: அடடே! என்ன இப்படிக் கேட்கிறாய். தீபாவளிப் பண்டிகை வருகிறதல்லவா?- அதற்காகப் போகிறேன்.

டே—ஸ்: என்ன பண்டிகை?

ரா—ம்: தீபாவளிப் பண்டிகை.

டே—ஸ்: தீபாவளியா? அது என்ன பண்டிகையப்பா? எதற்காக அதைக் கொண்டாடுவது?

ரா–_ம்: அப்படிக் கேளு, சொல்லுகிறேன். தீபாவளி என்பது உலகத்துக்குக் கேடு விளைவித்த ஒரு அசுரன், கடவுளால் கொல்லப்பட்ட நாளை மக்கள் கொண்டாடுவதாகும். அதை நீயும் கொண்டாடலாம். இப்பொழுது வெள்ளையனை ஒழித்த நாளை நாம் சுதந்தர நாளாகக் கொண்டாடவில்லையா அதுபோல்.

டே–ஸ்: அப்படியா அந்த அசுரன் யார்? அவன் எப்படி உலகுக்குக் கேடு செய்தான்? அந்தக் காலத்தில் அணுகுண்டு இருந்திருக்காதே. இந்தக் காலத்தில் அணுகுண்டு வைத்திருப்பவனையும், இன்னும் மக்கள் சமுதாயத்துக்கு என்ன என்னமோ கேடு செய்கிறவர்களையும் பற்றி நாம் ஒன்றுமே பேசுவதில்லை. அப்படி இருக்க அந்த அசுரன் யார்? அவன் என்ன கேடு செய்தான்?

ரா—ம்: அந்த அசுரன் பெயர் நரகாசூரன். அவன் பூமியிலிருந்து பிறந்தவன். அவன் தகப்பன் மகாவிஷ்ணு. அவன் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்தான். அதனால் மகாவிஷ்ணுவும் அவர் மனைவியும் சேர்ந்து அவனைக் கொன்றுவிட்டார்கள். இனி எவரும் தேவர்களுக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்பதை மக்களுக்கு ஞாபகப்படுத்துவதற்கு ஆக அவன் செத்த நாளைக் கொண்டாடுவது, தெரிந்ததா? இதுதான் தீபாவளித் தத்துவம்.

டே-ஸ்: தெரிந்தது. ஆனால், அதை விளங்கிக்கொள்ள வேண்டும் என்று என் மனம் ஆசைப்படுகிறது. அதாவது, அவன் மகாவிஷ்ணுவுக்கும் பூமிக்கும் எப்படிப் பிறக்க முடியும்? பூமியானது மண்கல் உருவத்தில் இருந்தது. மகாவிஷ்ணுவுக்கு பூமியுடன் எப்படி கலவி செய்ய முடிந்தது? பூமி எப்படி கர்ப்பம் தரிக்கும்? அதற்கு எப்படி பிள்ளை பிறக்கும்? எனக்குப் புரியவில்லையே?

ரா—_ம்: அட பயித்தியக்காரனே! மகாவிஷ்ணு நேராகவா போய் கலவி செய்வார். அதற்கு அவருக்கு மனைவிகள் இல்லையா? ஆதலால் அவர் நேராகக் கலவி செய்யவில்லை; மகாவிஷ்ணு பன்றி உருவமெடுத்தார்.

டே-ஸ்: பொறு, பொறு. இங்கே கொஞ்சம் விளக்கம் தேவை; மகாவிஷ்ணு பன்றி உருவம் ஏன் எடுத்தார்? ரா—_ம்: அதுவா, சரி! சொல்லுகிறேன் கேள். இரண்யாட்சதன் என்று ஒரு இராட்சதன் பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலுக்குள் போய் ஒளிந்து கொண்டான்.

டே-ஸ்: பொறு. பொறு; ஓடாதே; இங்கே எனக்கு ஒரு மயக்கம்.

ரா-ம்: இதிலென்னப்பா மயக்கம்? நான்தான் தெளிவாகச் சொல்லுகிறேனே;

பூமியைப் பாயாகச் சுருட்டி எடுத்துக் கொண்டு சமுத்திரத்துக்குள் ஓடி ஒளிந்து கொண்டான் என்று.

டே-ஸ்: சரி, அது அர்த்தமாச்சுது.

ரா-ம்: பின்னே, எது அர்த்தமாகவில்லை? சும்மா தொல்லை கொடுக்கிறாயே?

டே-ஸ்: தொல்லை ஒன்றுமில்லை; உன் சங்கதிதான் என் மூளைக்குத் தொல்லை கொடுக்கிறது; தலை சுற்றுகிறது; அதாவது, ஒரு இராட்சதன் _அப்டீன்னா என்ன? அது கிடக்கட்டும். அவன் பெயர் இரண்யாட்சதன். அதுவும் போகட்டும். அவன் கதை அப்புறம் கேட்போம். அந்த இராட்சதன் பூமியை எப்படிச் சுருட்டினான்? பூமிதான் பந்து போல் இருக்கிறதே! அவன் அதைச் சுருட்டுவதானால் ஒரு சமயம் உருட்ட முடியுமே ஒழிய சுருட்ட முடியாது. அதுவும் போகட்டும்; சுருட்டினான் என்கிறாய். சுருட்டினான் என்றே வைத்துக் கொள்வோம். சுருட்டினானே அவன்; சுருட்டும்போது தான் எங்கே இருந்துகொண்டு சுருட்டினான்? சுருட்டிக் கொண்டு ஓடினானே, எதன்மேல் நடந்து ஓடினான்? ஆகாயத்தில் பறந்துகொண்டே சுருட்டி இருக்கலாம்! ஆகாயத்திலே பறந்துகொண்டே ஓடி இருக்கலாம்! கருடன் மகாவிஷ்ணுவையும் அவர் பெண்டாட்டியையும் தூக்கிக்கொண்டு பறப்பதுபோல் பறந்து இருக்கலாம்! ஆனால், அவன் சமுத்திரத்திற்குள் ஒளிந்துகொண்டான் என்றாயே; அந்த சமுத்திரம் எதன் மேல் இருந்தது? பூமியின் மேல் இல்லாமல் அதுவும் ஆகாயத்தில் தொங்கிக்கொண்டோ அல்லது பறந்துகொண்டோ இருந்தது என்றால் சமுத்திரம் தண்ணீர் ஆயிற்றே, அது ஒழுகிப்போய் இருக்காதா? அப்போது அடியில் ஒளிந்து கொண்டிருப்பவன் தொப்பென்று கீழே பூமியுடன் விழுந்திருக்க மாட்டானா? அல்லது அது வேறு உலகம், இது வேறு உலகமா? நமக்கு ஒன்றும் புரியவில்லையே? இதை எனக்குப் புரிய வைக்க வேண்டும்; நாமும் பி.ஏ., 2வது வருஷம் பூகோளம், வானநூல் சைன்ஸ் படித்தவர்கள்; ஆதலால் இந்த  சந்தேகம் வருகிறது. நாம் படிக்காத மடையர்களாய் இருந்தால் குற்றமில்லை. சற்று சொல்லு பார்ப்போம்.

ரா_ம்: இதெல்லாம் பெரியோர்கள் சொன்ன விஷயம். சாஸ்திரங்கள் சொன்ன விஷயம். மதத் தத்துவம் ஆதலால் இவைகளை இப்படியெல்லாம் கேட்கக்கூடாது. நாஸ்திகர்கள்தான் இப்படிக் கேட்பார்கள். கருப்புச் சட்டைக்காரர்கள்தான் இப்படிக் கேட்பார்கள். இத்தனை ஆயிரம் காங்கிரஸ்காரர்கள் இருக்கிறார்களே, ஒரு ஆள் இப்படிக் கேட்பாரா? சோஷியலிஸ்டுகளில் ஒரு ஆள் இப்படிக் கேட்பாரா? நீதான் இப்படிக் கேட்கிறாய்; நீ கருப்புச்சட்டைக்காரன்தான் சந்தேகமில்லை.

டே_ஸ்: நீ என்னப்பா இப்படிப் பேசறே, பி.ஏ. படிக்கிறவனாகத் தெரியவில்லை; பூமிக்குப் பிறந்தான் என்றாய்! பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போனான் என்கிறாய்! எப்படிப் பிறந்தான்? எப்படித் தூக்கிக் கொண்டு எப்படிப் போனான்? என்றால், கோபப்படுகிறாய்! இந்தக் கதையைப் பண்டிகையாக வைத்துக் கோடிக்கணக்கான மக்கள் கொண்டாடுகிறார்கள் என்கிறாய். சர்க்கார் இதற்கு லீவு விடுகிறது. பல லட்சம் பிள்ளைகள் அன்று படிப்பதைவிட்டு தெரு சுற்றுகிறார்கள்; இவ்வளவு பெரிய சங்கதியைக் கேட்டால் என்னைக் கருப்புச்சட்டை என்கிறாய்; கருப்புச் சட்டை போடாதவனுக்குப் புத்தியே இருக்கக்கூடாதா? புத்தி கருப்புச் சட்டைக்குத்தான் சொந்தமா? சரி அதிருக்கட்டும் அப்புறம் அவன் ஓடிப்போய் சமுத்திரத்தில் ஒளிந்துகொண்டான்; அப்புறம்?

ரா_ம்: ஒளிந்துகொண்டான்; பூமியில் இருந்தவர்கள் எல்லாம் போய் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார்கள்.

டே_ஸ்: இரு, இரு, பூமியைச் சுருட்டினபோது பூமியில் இருந்தவர்கள் ஓடிவிட்டார்களோ? நோட்டீஸ் கொடுத்துவிட்டுத்தான் சுருட்டினானோ?

ரா_ம்: நீ என்னப்பா சுத்த அதிகப் பிரசங்கியாக இருக்கிறே ஓடிப்போய் முறையிட்டார்கள் என்றால், எப்படிப் போனார்கள் வெங்காயம் வீசை என்ன விலை? கருவாடும் கத்தரிக்காவும் போட்டுக் குழம்பு வெச்சால் நல்லா இருக்குமா? என்பது போன்ற அதிகப் பிரசங்கமான கேள்விகளை முட்டாள்தனமா கேட்கிறாயே?

டே_ஸ்: இல்லை இல்லை கோபித்துக் கொள்ளாதே! சரி; சொல்லித்தொலை. முறையிட்டார்கள், அப்புறம்?

ரா_ம்: முறையிட்டார்கள், அந்த முறையீட்டுக்கு இரங்கி பகவான் மகாவிஷ்ணு உடனே புறப்பட்டார். சமுத்திரத்தினிடம் வந்தார். பார்த்தார் சுற்றி; எடுத்தார் பன்றி அவதாரம்; குதித்தார் தண்ணீரில்; கண்டார் பூமியை; தன் கொம்பில் அதைக் குத்தி எடுத்துக் கொண்டு வந்து விரித்தார் புரிஞ்சுதா?

டே_ஸ்: புரியாட்டா, கோபித்துக் கொள்ளுகிறாய்; அதிகப் பிரசங்கி என்கிறாய்; சரி புரிந்தது; விரித்தார் பூமியை; பிறகு என்ன நடந்தது?

ரா_ம்: பிறகா, பூமியை விரித்தவுடன் அந்தப் பூமிக்கு ஒரு சந்தோஷம் ஏற்பட்டது. ஒரு குஷால் உண்டாயிற்று. பூமி அந்தப் பன்றியைப் பார்த்தது. அந்தப் பன்றி இந்தப் பூமியைப் பார்த்தது, அந்தச் சமயம் பார்த்து மன்மதன் இரண்டு பேரையும் கலவி புரியச் செய்துவிட்டான். அப்புறம் சொல்ல வேண்டுமா! கலந்தார்கள்; பிறந்தது பிள்ளை.

டே_ஸ்: சரி; இங்கே என் சொந்த சங்கதி கேட்கிறேன், கோவிச்சுக்காதே.

ரா_ம்: சரி கேள்.

டே_ஸ்: வராகம் என்பது பன்றி. அது ஒரு மிருக ரூபம்: சரிதானா?

ரா_ம்: சரி.

டே_ஸ்: பூமி கல்மண் உருவம்; சரிதானா?

ரா_ம்: சரி.

டே_ஸ்: இது இரண்டும் எப்படிக் கலவி புரியும்? எப்படிக் கருத்தரிக்கும்?

ரா_ம்: பாத்தியா பாத்தியா; இதுதான் போக்கிரித்தனமான கேள்வி என்பது, கடவுள் பார்த்து எப்படி வேண்டுமானாலும் செய்யலாமல்லவா?

டே_ஸ்: என்னப்பா இராமானுஜம், பாத்தியா பாத்தியா என்று சாயபு மாதிரி பாத்தியா கொடுக்கிறே. இது ஒரு பெரிய செக்ஷுவல் சையன்சு சங்கதி இதைக்கேட்டால் போக்கிரித்தனமான கேள்வி என்கிறாய்; சரி! இதைப்பற்றி பிரின்ஸ்பாலைக் கேட்கலாம். அப்புறம் அந்தப் பிள்ளை என்ன ஆச்சுது?

ரா_ம்: அந்தப் பிள்ளைதான் நரகாசூரன்.

டே_ஸ்: இந்தப் பெயர் அதற்கு யார் இட்டார்கள் தாய் தந்தையர்களா?

ரா_ம்: யாரோ அன்னக்காவடிகள்! இட்டார்கள்? அதைப் பற்றி என்ன பிரமாதமாய் கேட்கிறாய்? எனக்கு அவசரம். நான் போகவேண்டும். என்னை விடு. டே_ஸ்: சரி போகலாம், சீக்கிரம் முடி. அப்புறம்?

ரா_ம்: அந்த நரகாசூரன் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்தான். அவனை மகாவிஷ்ணு கொன்றார்.

டே_ஸ்: அடப் பாவி! கடவுளுக்குப் பிறந்தவனா, தேவர்களுக்குத் தொல்லை கொடுத்தான்? அப்படியென்றால் தேவர்கள் என்ன அவ்வளவு அயோக்கியர்களா?

ரா_ம்: இல்லேப்பா, இந்த நரகாசூரனின் பொல்லாத வேளை. தேவர்கள் கிட்டே அவன் வாலாட்டினான். அவர்கள் சும்மா விட்டுவிடுவார்களா?

டே-ஸ்: அதற்காக தகப்பன் மகனுக்குப் புத்தி சொல்லாமல் ஒரே அடியாகக் கொன்றுவிடுவதா?

ரா_ம்: அது அவர் இஷ்டம்; அதைக் கேட்க நாம் யார்? தேவரனையர் கயவர் அவரும் தாம் மேவன செய்தொழுகலான் என்று நாயனார் சொல்லி இருக்கிறார். ஆதலால் நாம், அது ஏன் இது ஏன் என்று கேள்வி கேட்கலாமா?

டே-ஸ்: சரி கொன்றார். அதற்கும் தீபாவளிக்கும் என்ன சம்பந்தம்?

ரா_ம்:  அதைக் கொண்டாட வேண்டிய அவசியம் ஏன் என்றால் இனிமேல் எவனும் தேவர்களுக்குத் தொல்லை கொடுக்கக் கூடாது என்பதற்காக, அதை ஞாபகத்தில் வைப்பதற்கு, அதை நினைவூட்டுவதற்கு நாம் அடிக்கடி கொண்டாட வேண்டியது.

டே-ஸ்: தேவர்கள் எங்கிருக்கிறார்கள்?

ரா-ம்: வான் தேவர்கள் வானத்தில் (மேல் லோகத்தில்) இருக்கிறார்கள்; பூதேவர்கள் இந்தப் பூமியில் இருக்கிறார்கள்!

டே_ஸ்: இந்தப் பூமியில் இருக்கும் தேவர்கள் யார்?

ரா-ம்:  அடமுட்டாள்! அதுகூடவா தெரியாது; அதுதான் பிராமணர்கள், பிராமணர்கள் என்றாலே பூதேவர்கள்தானே, அகராதியைப் பார்.

டே-ஸ்: பிராமணர்கள் என்பவர்கள் என்ன வகுப்பு?

ரா-ம்:  என்ன வகுப்பு? நாங்கள்தான்?

டே-ஸ்: நீங்கள் என்றால், நீ அய்யங்கார்; நீங்கள்தானா?

ரா-ம்: நாங்கள் மாத்திரம் அல்ல  அப்பா. நாங்களும், அய்யர், ஆச்சார், சாஸ்திரி, சர்மா, தீட்சதர் முதலியவர்கள்.

டே_ஸ்: அப்படி என்றால் பார்ப்பனர்கள் யாவரும் பூதேவர் என்கிறாய்.

ரா-ம்: ஆமா! ஆமா!! கல்லாட்டமா ஆமா!!!

டே-ஸ்: சரி, தொலைந்து போகட்டும். நீங்கள் தேவர்கள் என்றே வைத்துக்கொள்வோம்; உங்களுக்குத் தொல்லை கொடுக்க அசுரர், ராட்சதர் ஒருவரும் இந்த உலகத்தில் இல்லையே? இங்கிருப்பவர்களை எதற்கு ஆக பயப்படுத்த தீபாவளி கொண்டாட வேண்டும்?

ரா-ம்: இங்கேயே அசுரர் ராட்சதர் இல்லை என்கிறாய். இந்தக் கருப்புச் சட்டைக்காரர்கள் சு.மக்கள், தி.கழகத்தார்கள் இவர்கள் எல்லாம் யார்? பிராமணர்களைப் பார்த்து பொறாமைப்படுகிறவர்கள். குறை சொல்லுகிறவர்கள், அவர்களைப்போல் வாழவேண்டுமென்பவர்கள், வேதசாஸ்திர புராண இதிகாசங்களைப் பகுத்தறிவில் ஆராய்ச்சி செய்கிறவர்கள் முதலிய இவர்கள் எல்லோரும் இராக்கதப் பதர்கள், இரக்கமே இல்லாத அரக்கர்கள் தெரிந்ததா? அவர்களுக்குப் பயம் உண்டாவதற்கு ஆக தேவர்களுக்கு இடையூறு செய்தால் நாசமாய்ப் போய்விடுவாய் என்று அறிவுறுத்துவதற்கு ஆகத்தான் தீபாவளி கொண்டாடுவதாகும். இதுதான் இரகசியம், மற்றபடி கதை எப்படி இருந்தால் என்ன?

டே-ஸ்: அப்படியா? நீங்கள் 100க்கு 3 பேர், நீங்கள் அல்லாதவர்கள் 100க்கு 97 பேர், எப்படி எத்தனை நாளைக்கு இப்படி மிரட்டமுடியும்?

ரா-ம்:  அதைப் பற்றிக் கவலைப்படாதே. காங்கிரஸ் ஸ்தாபனம் இருக்கிறது. அந்தத் தொண்ணூறு பேர்களில் ஒரு பகுதி விபீஷணர்களாக, அனுமார்களாக இருந்து பிராமணத் தொண்டாற்றவும் எதிரிகளை ஒழிக்கவும் பயன்படுத்துவதற்கு மற்றும் பண்டிதர் கூட்டம், படித்துவிட்டு உத்தியோகத்துக்குக் காத்துக்கிடக்கும் கூட்டம் கோவில் மடம் தர்மஸ்தாபனத்தில் இருக்கும் கூட்டம், புத்தகக் கடைக் கூட்டம், பூசாரிக் கூட்டம், பிரபுக் கூட்டம், பாதிரிக் கூட்டம், மேற்பதவி வகிக்கும் உத்யோகஸ்தர் கூட்டம், தாசிக் கூட்டம், சினிமாக் கூட்டம், நாடகப் பிழைப்புக் கூட்டம், கலைவித்துவான்கள் கூட்டம், அரசியல் பிழைப்புக்காரர் கூட்டம், தேசபக்தர்கள் தியாகிகள் கூட்டம் இப்படியாக இடறி விழும்படி சர்வம் பிராமண அடிமையாம் என்பதுபோல் இருக்கும்போது 100க்கு 3, 100க்கு 97 என்ற கணக்கு முட்டாள்தனமான கணக்கு ஆகும்.

டே-ஸ்: ஓஹோ! அப்படியா? சரி சரி, தீபாவளி என்பதன் தத்துவமும் இரகசியமும் தெரிந்துகொண்டேன், நன்றி வணக்கம்.

ரா-ம்: சரி நமஸ்தே, ஜே ஹிந்து!

(சித்திரபுத்திரன்  என்னும் பெயரில் தந்தை பெரியார் எழுதியது. விடுதலை 28.10.1956)

கடவுள் சக்தி – தந்தை பெரியார் (குசேலர்)

 


டிசம்பர் 16-31

குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்து, குடும்பம் பெருத்துவிட்டது. அதனால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடினார் என்று புராணத்தில் சொல்லுகிறது. குசேலர் பெண்ஜாதி குறைந்தது வருஷத்திற்கு ஒரு பிள்ளையாகப் பெற்று இருந்தாலும் கைக் குழந்தைக்கு ஒரு வருஷமாயிருக்குமானால் மூத்த பிள்ளைக்கு 27 வருஷமாவது ஆகியிருக்க வேண்டும். ஆகவே 20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேராவது இருந்திருப்பார்களா? இந்த 7 பிள்ளைகளும் ஒரு காசு கூட சம்பாதிக்காத சோம்பேறிப் பிள்ளைகளாகவா இருந்திருப்பார்கள்? 20 வருஷத்திற்கு மேம்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சைக்குப் போக குசேலருக்கு வெட்கமிருந்திருக்காதா?

அல்லது இந்தப் பிள்ளைகளுக்காவது மான அவமானமிருந்திருக்காதா? அல்லது பிச்சை போட்ட கிருஷ்ண பகவானுக்காவது, என்ன? பெரிய பெரிய வயது வந்த பிள்ளைகளைத் தடிப்பயல்களாட்டமாய் வைத்துக் கொண்டு பிச்சைக்கு வந்தாயே வெட்கமில்லையா? என்று கேட்கக் கூடிய புத்தி இருந்திருக்காதா?

 

கேள்வி:- என்னடா உனக்கு கடவுள் இல்லையென்று சொல்லுகின்ற அளவு தைரியம் வந்து விட்டதா?

பதில்:- அவர்தான் மனோ வாக்குக் காயங்களுக்கு எட்டாதவரென்று சொன்னாயே! அவரை நான் உண்டு என்று சொன்னால் நீயே உனக்கு எப்படித் தெரியும்? என்று கேட்பாயே. அதனால்தான் என் புத்திக்கு எட்டாததையும், தெரியாததையும் நான் ஒப்புக் கொள்வதில்லை என்று சொல்லிவிட்டேன். இதில் என்ன தப்பு?

கேள்வி:- கடவுள் கருணாநிதி அல்லவா?

பதில்:- கடவுளே நமது மனதுக்கும், காயத்துக்கும் எட்டாதவராயிருக்கும்போது அவர் கருணாநிதி என்பது உனக்கு எப்படித் தெரிந்தது?

– பகுத்தறிவு, ஜூலை – 1935.

நமது கடவுள்கள் சக்தி மிகவும் அதிசயமானதாகும். அதாவது நமது கடவுள்கள் உலகில் மக்களை அக்கிரமங்கள் செய்யவொட்டாமல் தடுக்க முடியாதாம்.

*****

ஆனால், மக்கள் சந்து பொந்துகளிலும், மூலை முடுக்குகளிலும் யாருக்கும் தெரியாமல் செய்த குற்றங்களையும் மனதினால் நினைத்த அக்கிரமங்களைப் பார்த்தும் ஒன்று கூட விடாமல் பதிய வைத்தும், அதற்குத் தகுந்தபடி தீர்ப்புக் கூறி, தண்டனை கிண்டனை கொடுக்கவும், அதற்காக நரகத்தில் ஆழ்த்தி வைக்கவும், மற்றும் பல ஜன்மங்கள் கொடுத்து, அவற்றில் கஷ்டப்படுத்தி வைக்கவும் முடியுமாம்.

*****

நமது கடவுள்கள் சக்தி எவ்வளவு அதிசயமானது!

*****

அதிலும் மகமதியர்களுடைய கடவுளும், கிறித்தவர்களுடைய கடவுளும் மனிதன் செத்த பிறகு எல்லோர் குற்றம் குறைகளையும் ஒன்றாய் பதிய வைத்திருந்து, ஏதோ அதற்கு இஷ்டப்பட்ட நாளில் அதாவது, ஒரு குறிப்பிட்ட நாளில் எல்லா மக்களையும் அவர்கள் புதைக்கப்பட்ட புதை குழியிலிருந்து எழுப்பி கணக்குப் பார்த்து ஒரே அடியாய் தீர்ப்புச் சொல்லிவிடுமாம்.

*****

இந்துக்களுடைய கடவுள்கள் அதாவது, சைவர்கள் கடவுள்களும், வைணவர்களுடைய கடவுள்களும் ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியாகவே அவ்வப்போது அவனைச் சுட்டு எரித்த பின் கண்களுக்குத் தெரியாத அவனுடைய ஆத்மாவைப் பிடித்து வைத்து, அதற்கு ஒரு சூட்சம சரீரமும் கொடுத்து, அந்தச் சரீரத்திற்கு அதற்குத்தக்க தண்டனை கொடுக்குமாம். அது பெரிதும் அடுத்த ஜென்மத்தில் இன்னின்ன ஜந்துவாய் பிறந்து, இன்னின்ன பலன் அனுபவிக்க வேண்டும் என்று கட்டளையிடுமாம்.

*****

கிறித்து சமயத்தில் உள்ள கடவுள் சக்திப்படி எல்லா மனிதனும் பாவம் செய்தேதான் தீருவானாம்.

*****

அந்தப் பாவம் ஏசுகிறித்து மூலம்தான் மன்னிக்கப்படுமாம்.

*****

மகம்மதிய மார்க்கப்படி மகம்மது நபிகள் மூலமாகத்தான் மன்னிக்கப்படுமாம்.

*****

சைவ சமயப்படி சிவன் மூலமாகத்தான் மன்னிக்கப்படுமாம். அவருக்குத்தான் பரத்துவம் உண்டாம்.

*****

வைணவ சமயப்படி விஷ்ணு மூலமாகத்தான் முடியுமாம். விஷ்ணுவுக்குத்தான் பரத்துவம் உண்டாம்.

*****

ஆனால் சைவ, வைணவ சமயங்கள்படி மக்கள் பாவமே செய்வது மாத்திரமல்லாமல் புண்ணியமும் செய்யக்கூடுமாம்.

*****

அதற்காக சொர்க்கம், வைகுண்டம், கைலாசம் என்கின்ற பதவிகள் உண்டாம்.

*****

அப்புறம் ஒவ்வொரு மனிதனுக்கும் ஜன்மங்களும் உண்டாம்.

*****

இந்த அபிப்பிராயங்கள் எவ்வளவு குழப்பமானதாய் இருந்தாலும், பார்ப்பானுக்கு அழுதால் மேல் கண்ட மோட்சங்களோ அல்லது நல்ல ஜன்மமோ எது வேண்டுமோ அது கிடைத்துவிடுமாம்.

*****

ஆகவே, பொதுவாகக் கடவுளுடைய சக்திகள் அளவிட முடியாது என்பதோடு, அறிந்து கொள்ள முடியாது என்பது மாத்திரமல்லாமல் அதைப் பற்றியெல்லாம் நாம் சிந்திப்பதோ, சிந்திக்க முயற்சிப்பதோ மகாமகா பெரிய பெரிய பாவமாம்.
அதாவது, எந்தப் பாவத்தைச் செய்தாலும், எவ்வளவு பாவத்தைச் செய்தாலும், அவற்றுக்கெல்லாம் பிராயச்சித்தமும், மன்னிப்புமுண்டாம்.

*****

ஆனால், கடவுளைப் பற்றியோ, அவரது சக்தியைப் பற்றியோ ஏதாவது எவனாவது சந்தேகப்பட்டு விட்டானோ பிடித்தது மீளாத சனியன்.

*****

அவனுக்கு மன்னிப்பே கிடையாது. கிறித்துநாதரைப் பிடித்தாலும் சரி, மகம்மது நபி பெருமானைப் பிடித்தாலும் சரி அல்லது இவன் விஷ்ணு, மகேசன் ஆகிய எவரைப் பிடித்தாலும் சரி, ஒரு நாளும் அந்தக் குற்றம் (எந்தக் குற்றம்) கடவுளைச் சந்தேகிக்கப்பட்ட குற்றமா? மன்னிக்கப்படவே மாட்டாது.

*****

ஆனால், இந்த எல்லாக் கடவுள்களுக்கும் அவர்களால் அனுப்பப்பட்ட பெரியார்களுக்கும், அவர்களுடைய அவதாரங்களுக்கும், கடவுளைப் பற்றியும், அவர்களுடைய சக்தியின் பெருமைகளைப் பற்றியும் மக்கள் சந்தேகப்படாமல் இருக்கும்படிக்கோ அல்லது அவநம்பிக்கைப்படாமல் இருக்கும்படிக்கோ செய்விக்க முடியாதாம்.

*****

ஏனென்றால், அவ்வளவு நல்ல சாதுவான சாந்தமான கருணையுள்ள சர்வ சக்தி பொருந்திய சர்வ வியாபகமுள்ள கடவுள்களாம்.

*****

பாவம் நாம் ஏன் அவற்றைத் தொந்தரவு செய்ய வேண்டும்.

*****

எல்லாம் கடவுள் செயல் என்று சும்மா இருந்து விடுவோம்.
பகுத்தறிவு, செப்டம்பர் – 1935

கடவுள் கதை – தந்தை பெரியார் (கிருத்தவம்) -1

 


பிப்ரவரி 16-29

கதை சொல்லுகிறவன்:- ஒரே ஒரு கடவுள் இருந்தார்.

கதை கேட்கிறவன்:- ஊம், அவர் எங்கே இருந்தார்?

கதை சொல்லுகிறவன்:- ஆரம்பத்திலேயே அதிகப் பிரசங்கமாய்க் கேட்கிறாயே,

நான் சொல்லுவதை ஊம் என்று கேட்டால் தான் இந்தக் கதை சொல்ல முடியும்.

கதை கேட்கிறவன்:- சரி, சரி, சொல்லு – ஒரே ஒரு கடவுள். அப்புறம்?

கதை சொல்லுகிறவன்:- ஒரு நாள் உட்கார்ந்து கொண்டு என்ன செய்வது என்று யோசித்தார்.

கதை கேட்கிறவன்:- சரி, எப்போ?

கதை சொல்லுகிறவன்:- பாரு, மறுபடியும் இரட்டை அதிகப் பிரசங்கமாய்க் கேட்கிறாயே.

கதை கேட்கிறவன்:- சரி, சரி. தப்பு; சொல்லப்பா சொல்லு.

கதை சொல்லுகிறவன்:- உலகத்தை சிருஷ்டிக்கலாம் என்று முடிவு கொண்டார்.

கதை கேட்கிறவன்:- அதற்கு முன் உலகம் இல்லை போல் இருக்கிறது. உலகம் இல்லாமலே ஒருநாள் உட்கார்ந்து கொண்டு யோசிக்கிறார் போல் இருக்கிறது. அந்தரத்தில் உட்கார்ந்திருப்பார், பாவம்! என்று நினைத்துக் கொண்டு (கொஞ்ச நேரம் பொறுத்து) சரி  அப்புறம்? (என்று சொன்னான்.)

கதை சொல்லுகிறவன்:- என்ன இந்த மாதிரி? நான் சொல்லுவதைக் கவனமாய்க் கேட்காமல் எங்கெங்கேயோ யோசனையாய் இருக்கிறாயே.

கதை கேட்கிறவன்:- இல்லை. நீ சொல்லுகிற போதே சில சந்தேகம் தோன்றின. அதைக் கேட்டால் கோபித்துக் கொள்ளுகிறாய், அதிகப் பிரசங்கி என்று சொல்லி விடுகின்றாய். ஆதலால், மனதிலேயே நினைத்து சமாதானம் செய்து கொண்டேன்.
கதை சொல்லுகிறவன்:- அப்படியெல்லாம் சந்தேகம் கூடத் தோன்றக் கூடாது. கதை பாட்டி கதையல்ல, கடவுள் கதையாக்கும். இதை வெகு பக்தி சிரத்தையுடன் கேட்க வேண்டும். தெரியுமா? கதை கேட்கிறவன்:- சரி, அப்படியே ஆகட்டும் சொல்லு பார்ப்போம்.

கதை சொல்லுகிறவன்:- எதிலே விட்டேன்? அதுகூட ஞாபகமில்லை, உன் தொந்தரவினால்.

கதை கேட்கிறவன்:- சரி, கோபித்துக் கொள்ளாதே. நீ விட்டது எதிலே என்றா கேட்கிறாய்? இரு, யோசனை பண்ணிச் சொல்லுகிறேன்.

ஒரே ஒரு கடவுள். அவர் ஒருநாள் உட்கார்ந்து கொண்டு என்ன செய்வது என்று யோசித்தார். உலகத்தைச் சிருஷ்டிக்கலாம் என்று எண்ணினார் என்பதில் விட்டாய். அதில் தொட்டுக் கொள். என்னை அதிகப் பிரசங்கி என்கிறாய். எனக்காவது ஞாபகமிருக்கிறது; மகா பக்தனாகிய உனக்கு மறந்து போகிறது, பாவம். அப்புறம் சொல்லு.

கதை சொல்லுகிறவன்:- பாவம் என்ன எழவு, உன்னுடைய தொல்லையில் எதுதான் ஞாபகமிருக்கிறது. அப்புறம் என்ன பண்ணினார் என்பதுகூட மறந்து போய் விட்டது. யோசனை பண்ணிச் சொல்லுகிறேன். பொறு. (சற்று பொறுத்து) முதலில் வெளிச்சம் உண்டாக்கக் கடவது என்று சொன்னார்.

கதை கேட்கிறவன்:- உட்கார்ந்து கொண்டா இவ்வளவும் நினைத்தார்! பாவம் கடவுளுக்கு எவ்வளவு பிரயாசை நம்மால்? அவர் கருணாநிதி என்பதற்கு இதைவிட என்ன ருசுவு வேண்டும்!

கதை சொல்லுகிறவன்:- அதையெல்லாம் நீ தெரிந்து கொள்ளுவதற்குத் தானே இந்தக் கதை சொல்லுகிறேன். இந்த மாதிரி கவனமாய்க் கேள்.

கதை கேட்கிறவன்:- சரி, சரி சொல்லு. உடனே வெளிச்சம் உண்டாய் விட்டதாக்கும். கடவுளுக்கு ஏதோ போட்டி இருக்கும் போல் இருக்கிறது.

கதை சொல்லுகிறவன்:- என்ன போட்டி?

கதை கேட்கிறவன்:- இல்லையப்பா, வெளிச்சத்தைத் தான் கடவுள் சிருஷ்டித்தார். அதற்கு முன் இருந்த இருட்டை எவனோ அயோக்கியப் பயல் கடவுளுக்குத் தொந்தரவு கொடுக்க வேண்டுமென்று போட்டிக்காக சிருஷ்டித்து விட்டு ஓடிப் போய் விட்டான் போலிருக்கிறது. நான் அவனைக் கண்டால் என்ன செய்வேன் தெரியுமா?

கதை சொல்லுகிறவன்:- தொலைந்து போகுது, அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதே; சொல்வதைக் கேளு.

கதை கேட்கிறவன்:- சரி சொல்லு.

கதை சொல்லுகிறவன்:- அப்புறம் மேடு பள்ளம் எல்லாம் சமன் ஆக வேண்டும் என்று கருதினார்; அதுபோலவே ஆயிற்று.

கதை கேட்கிறவன்:- கடவுளுக்கு முன்னால் இருந்த மேடு பள்ளங்களையெல்லாம் சமன் ஆக வேண்டும் என்று சொன்னாராக்கும், அதெல்லாம் சமனாய் விட்டதாக்கும். கடவுள், நல்ல கடவுள்! எவ்வளவு ஞானமும், கருணையும் உடைய கடவுள்! மேடு பள்ளம் இருந்தால் நம்ம கதி என்னாவது? இன்று போல் சமுத்திரமும், மலையும், குழியும், குன்றுமாகவல்லவா ஆகி இருக்கும். ஆதலால் கடவுள் நல்ல வேலை செய்தார்!

ஆனால், அப்புறம் எவனோ புறப்பட்டு மறுபடியும் பழையபடி இருட்டும், மேடும், பள்ளமும், குழியும், குன்றும் ஏற்படும்படி செய்து விட்டான் போலிருக்கிறது! இருக்கட்டும், அதைப் பற்றிக் கவலை இல்லை. கடவுள் செய்த நன்மைகளை நினைத்து மகிழ்ந்து அவருக்கு நன்றி செலுத்துவோம்! அப்புறம் என்ன செய்தார்?

கதை சொல்லுகிறவன்:- அப்புறம் அதாவது வெளிச்சம் உண்டாகி மேடு பள்ளம் நிரவப்பட்ட பிறகு மறுபடியும் யோசித்தார்.

கதை கேட்கிறவன்:- சரி, யோசித்தார்.

கதை சொல்லுகிறவன்:- அதற்குள் ஒரு நாள் முடிந்து போய்விட்டது. அடுத்த நாள் அதாவது இரண்டாவது நாள் காற்று உண்டாகக் கடவது என்று சொன்னார், உடனே காற்று உண்டாய் விட்டது.

கதை கேட்கிறவன்:- பிறகு என்ன செய்தார்?

கதை சொல்லுகிறவன்:- அதற்கும் ஒருநாள் ஆகிவிட்டது. பிறகு மூன்றாம் நாள் பூமி உண்டாகக் கடவது என்று நினைத்தார். பூமி உண்டாயிற்று. அன்றே சமுத்திரம், செடிகள் உண்டாகக் கடவது என்று நினைத்தார். உடனே சமுத்திரம், செடிகள் உண்டாயின.

கதை கேட்கிறவன்:- பிறகு?

கதை சொல்லுகிறவன்:- இதற்குள் மூன்று நாள் முடிந்து விட்டது. நான்காம் நாள் உட்கார்ந்து கொண்டு யோசித்தார், யோசித்தார், ரொம்ப கஷ்டப்பட்டு, என்ன செய்வது என்று யோசித்தார்!

கதை கேட்கிறவன்:- அய்யோ பாவம்; கடவுள் நமக்காக எவ்வளவு பாடுபட்டார், மனிதர்களுக்கு நன்றி விசுவாசம் இருக்கிறதா? போனால் போகட்டும். அப்புறம் என்ன செய்தார்? சொல்லு, சீக்கிரம்.

கதை சொல்லுகிறவன்:- அப்புறம் நான்காம் நாள் ஒரு முடிவுக்கு வந்தார். என்ன முடிவுக்குத் தெரியுமா?  சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றை உண்டாக்க வேண்டும் என்று கருதி ஒரே அடியாய் இவ்வளவும் உண்டாகக் கடவது என்று சொன்னார். உடனே உண்டாகி விட்டன.

கதை கேட்கிறவன்:- சரி, சரி, இப்போது புரிந்தது, அந்தக் கடவுளின் பெருமை. நான் முன்பு சந்தேகப்பட்டதும், குறுக்குக் கேள்வி போட்டதும் அதிகப் பிரசங்கித்தனம் என்பதும் வெளியாயிற்று!

கதை சொல்லுகிறவன்:- பார்த்தாயா, நான் அப்பொழுதே சொல்லவில்லையா? கடைசி வரை பொறுமையாய்க் கேட்டால், எல்லாச் சந்தேகமும் விளங்கி விடும் என்று. எப்படி விளங்கிற்று? சொல்லு பார்ப்போம்.

கதை கேட்கிறவன்:- அந்தக் கடவுளின் பெருமை எனக்கு எப்படி விளங்கிற்று என்றால், பூமி உண்டாவதற்கு முன்பே மேடு பள்ளத்தையெல்லாம் சமன் செய்தது ஒன்று, மற்றும் சூரியன், பூமி ஆகியவை உண்டாவதற்கு முன்பே நாள்கள் கணக்கு எண்ணவும், முதல் நாள், இரண்டாம் நாள், மூன்றாம் நாள் கண்டுபிடிக்கவும் முடிந்தது பார்! இது எவ்வளவு அற்புதமான செய்கை! அப்புறம் மேலே சொல்லு; மிகவும் ருசிகரமாகவும், மகிமை பொருந்தியதாகவும் இருக்கிறது, இந்தக் கடவுள் கதை.

கதை சொல்லுகிறவன்:- அதற்குள் என்ன தெரிந்து கொண்டாய்? இன்னும் கேள். எவ்வளவு அதிசயமாயும், ருசியாயும் இருக்கும் பார்! அப்புறம் அய்ந்தாவது நாள் ஆயிற்று. மீன்களும், பட்சிகளும் உண்டாகக் கடவது என்றார், உடனே ஆகிவிட்டன.

கதை கேட்கிறவன்:- இத்தனை கோடி, கோடி, கோடி மீன்களும் ஒரே நாளில் ஆய்விட்டன என்றால் கடவுள் சக்தியும், பெருமையும் எப்படிப்பட்டது பார்! அப்புறம்?

தந்தை பெரியார் அவர்கள் ‘சித்திரபுத்திரன்’ என்ற
புனைபெயரில் எழுதிய கட்டுரை (‘விடுதலை’ 27.12.1953.)

– தொடரும்