பேராசிரியர் ந.வெற்றியழகன் எம்.ஏ., பி.எட்
வாழ்வியலின் பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்து, நுணுகி ஆய்ந்து தம் தனித்தன்மை வாய்ந்த கருத்துகளை உலகுக்கு எடுத்துரைத்த தனக்குவமையில்லாத சுய சிந்தனையாளர், தந்தை பெரியார் அவர்கள்.
அய்ந்தாம் வகுப்புவரைதான் படித்தவர் என்றாலும், தம் கருத்து வலுவுக்கு வேறு பேரறிவாளர்களின் கருத்துகளையும் மேற்கோள் காட்டாத மேதகு சிந்தனைச் சிகரமாக அவர் விளங்கி வந்தார்.
சமயம் சார்ந்த தத்துவ அறிஞர்களாக எல்லோரும் விளங்கிய நிலையில் சமுதாயம் சார்ந்த உண்மையான ஒப்பற்ற சமூகச் சிந்தனையாளர் ஆகத் திகழ்ந்தவர் பெரியார் அவர்கள்.
இணையற்ற சமுதாயச் சிந்தனையாளர் என்னும் நிலையில் தந்தை பெரியார் அவர்களின் கல்விச் சிந்தனைகளை ஆய்கிறபோது வியப்புக்குரிய சிறந்த கருத்துகள் வெளியாகின்றன.
கல்வியின் நோக்கு
முழுமையாக ஆய்ந்து, கல்வியின் குறிக்கோள்கள் இவை என பெரியார் அவர்கள் திட்டவட்டமாக வரையறுத்துப் பின்வருமாறு கூறியுள்ளார்.
"நம் நாட்டில் கல்வி இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டதாக இருக்க வேண்டியது அவசியம்.
ஒன்று,
கல்வியால் மக்களுக்குப் பகுத்தறிவும், சுயமரியாதை உணர்ச்சியும் ஏற்பட வேண்டும்.
மற்றொன்று,
மேன்மையான வாழ்வுக்குத் தொழில் செய்யவோ அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும்."
'குடிஅரசு' : 22.8.1937
மேலும்,
"கல்வியினுடைய குறிக்கோள் என்பது பணம் சம்பாதிப்பது மாத்திரம் என்று நினைக்கக்கூடாது. அறிவை வளர்க்க, நமது இழிவையும் முட்டாள்தனத்தையும் மூடநம்பிகையையும் ஒழிக்க என்பதாக இருக்க வேண்டும்" -
'விடுதலை' : 4.3.1959
கல்வியின் தேவை
பெரியார் அவர்கள் ஆழமாகச் சிந்தித்து ஆய்வு செய்து ஒரு தனிமனிதனுக்கு எதற்காகக் கல்வி தேவை? ஏன் கல்வி தேவை? என்பதை வெகு சிறப்பாக வெளியிட்டுள்ளார்.
"கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்பட வேண்டிய அவசியமெல்லாம், ஒருவன் தனது வாழ்நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்குத் தகுதிப்படுத்துவது என்பதே யாகும்.
அல்லது உலகில், நல்வாழ்க்கை வாழத் தகுதியுடையவனாக்குவது என்பதாகும்.
அதாவது,
ஒவ்வொரு காரியத்திற்கும், மற்றவர்களை எதிர்பார்த்தோ, மற்றவர்கள் ஆதிக்கத்திலிருந்தோ அல்லது, தனக்கு மற்றவர்கள் வழிகாட்டக்கூடிய நிலையிலோ மனிதன் இல்லாமல் சுதந்திரத்தோடும் வாழத் தகுதியுடையவர்களாக வேண்டும்." என்கிறார்.
'குடிஅரசு' : 27.9.1931
சமூகத்திற்கு கல்வி ஏன் தேவை?
தனி மனிதனுக்கு மட்டுமன்றி மக்கள் கூட்டத்திற்கு -_ மன்பதைக்கு _ அதாவது சமுதாயத்திற்குக் கல்வி ஏன் தேவை? என்கிற கண்ணோட்டத்திலும் பெரியார் ஆழமாகச் சிந்தித்துக் கருத்து வழங்கியுள்ளார்.
பெரும் சமூக மாற்றங்களே (ஷிஷீநீவீணீறீ நீலீணீஸீரீமீs) புதிய சிந்தனைகளுக்குத் தூண்டுகோலாகும்.
"ஒரு நாட்டு மக்கள் முன்னேற்றம் அடைய வேண்டுமானாலும், அவர்கள் நாகரிகம் பெற்று உயர்ந்து நல்வாழ்க்கை நடத்த வேண்டுமானாலும் அரசியல், பொருளியல், தொழிலியல் ஆகிய துறைகளில் தகுந்த ஞானம் பெற வேண்டுமானாலும் அந்நாட்டு மக்களுக்கு முதலில் கல்வி ஏற்பட வேண்டியதே முக்கியமாகும்." என்று கூறியுள்ளார்.
'குடிஅரசு' 26.12.1937
கல்வியின் பயன்
"விஞ்ஞானம், பொது அறிவு, தன்மான உணர்ச்சி, ஒழுக்கம் இவை தரும் கல்வியே முக்கியம்.
இவை அளிப்பதாய் இல்லாவிடில் (அக் கல்வியால்) பயனில்லை" என்பது பெரியாரின் உறுதியான கருத்து.
'விடுதலை' 8.6.1963
நம் நாட்டுக் கல்வியும் - மேலைநாட்டுக் கல்வியும்
"மேலைநாட்டின் கல்வி பெரிதும் பகுத்தறிவையும், விஞ்ஞானத்தையும் ஆராய்ச்சியையும் பொறுத்து உள்ளது என்பதோடு, அவைகளுக்கு அனுகூலமான கல்வியே அங்கு நடைபெறுகிறது. இந்தியாவின் கல்வி, பகுத்தறிவை இலட்சியம் செய்வதில்லை.
உலகப் பொது ஆராய்ச்சிக்கும் மதிப்பு வைப்பதில்லை.
அவைகளுக்கு ஏற்ற கல்வி இங்கு தொகுக்கப்படவே இல்லை!''
'குடிஅரசு' : 1.11.1946
"மேல் நாட்டில் சரஸ்வதியை வணங்குவதில்லை. எழுத்துகள் நிறைந்த தாளில் மலம் துடைத்த போதிலும் கல்வியில் கருத்துடையவர்களாக 100 க்கு 90 பேர் படித்து அறிவாளிகளாக இருக்கிறார்கள்.
இங்கு, காகிதத்தைக் கண்ணில் ஒத்திக் கொண்டாலும் கல்வியை அலட்சியப் படுத்தி, 100க்கு 90 பேர் தற்குறிகளாக இருக்கிறார்கள்.
இது பற்றிச் சிந்திக்க வேண்டாமா?" என்று கேட்கிறார் பெரியார்.
'விடுதலை' : 17.5.1963
கல்வி முறை
"மக்களுக்கு இன்று ஊட்ட வேண்டியது விஞ்ஞானக் கல்வியேயாகும்.
நமக்கு ஒன்றும் இன்று குறைவு இல்லை. அறிவு வளர்ச்சி இல்லாத குறை ஒன்றுதான். 10 ஆண்டுகள் சற்று ஊக்கத்துடன் உழைத்து வேலைபார்த்தால், நாமும் உலக வல்லரசுகளில் ஒருவராக ஆகிவிடுவோம்.
எனவே,
நமக்கு இன்று வேண்டுவது விஞ்ஞான அறிவுதான்!" என்று வலியுறுத்தியுள்ளார் பெரியார்.
'விடுதலை' : 22.4.1966
தேர்வுமுறை:
கல்வியில் தேர்ச்சி பெறுவதற்கும், அதற்கேற்ப மேல்நிலை வகுப்புகளுக்குச் செல்வதற்கும் பட்டங்கள், பட்டயங்கள், சான்றிதழ் பெறுவதற்கும் இன்று அளவுகோலாக இருப்பது தேர்வுமுறை.
தேர்வு பற்றி பெரியார் பின்வருமாறு கூறுகிறார்,
"பரிட்சைகள் எல்லாம் உருப்போடுகிற சக்தியை வளர்ப்பதாக இருக்கிறதே தவிர, அறிவை வளர்ப்பதாக இல்லை."
'விடுதலை' : 19.1.1958
இன்றைய பரிட்சைமுறை கிராமபோன் ரிகார்டு முறையில் உருப்போட்டு வாந்தி எடுப்பதாகவே உள்ளது.
'விடுதலை' : 6.10.1964
தேர்வு ஏன் தேவை?
தேர்வின் தேவை பற்றி பெரியார் பின்வருமாறு கூறுகிறார்:
"பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற பையன்களுக்குப் பரிட்சை எதற்கு?
ஒழுங்காகப் பள்ளிக்கு வருகின்றானா? வகுப்பில் எப்படி நடந்து கொள்கின்றான்? என்பதைத்தான் பார்க்க வேண்டுமே ஒழிய, பரிட்சை எதற்கு?"
'விடுதலை' : 8.7.1972
"பள்ளிப் படிப்பில் ஒரு மாணவன் வகுப்பில் இத்தனை நாள் கிரமப்படி ஆஜர் ஆகி, விஷயங்களைச் சரிவரக் கவனித்துக் கொண்டிருந்த காலம் (Term Course) தீர்ந்தால் போதும் என்று மேல் வகுப்புக்கு அனுப்பிட வேண்டும்.
பரிட்சை மூலம் மக்களை மேல் வகுப்புக்குச் செல்ல விடாமல் கழிக்கக் கூடாது!"
'குடிஅரசு' : 22.5.1948
கல்விக்கொள்கை:
"நல்லொழுக்கம்தான் ஒரு மனிதனைப் பிற்காலத்தில் சிறந்த பண்புடையவனாக்குகிறது. பிறகு அடுத்த படியாக உள்ளதுதான் கல்வி" என்று கூறுவதன் மூலம் கல்விக் கொள்கையில் ஒழுக்கமே முதன்மை என்கிறார்.
'விடுதலை' : 1.3.1956
கல்விக் கொள்கையாக, எவை, இருக்கக்கூடாது என்பதையும் பெரியார் சுட்டிக் காட்டுகின்றார். பெரியார் பின்வருமாறு கூறுகிறார்:-_
"கடவுள் பக்தி, மத பக்தி, ராச (அரசியல்) பக்தி ஆகிய அறிவைத் தடை செய்யும் அடிமைப் புத்தியைக் கற்பிக்கும்படியான விசயங்களைக் கல்விச் சாலைக்குள் தலை காட்டவே விடக்கூடாது!"
'விடுதலை' : 30.9.1963
வேலைவாய்ப்பு:
கல்வித் திட்டம் பற்றி பெரியார் அவர்கள் தெள்ளத் தெளிவாக வரையறை செய்து வெளியிட்டிருக்கிறார். பெரியார் கூறுகிறார்:_
"ஒரு அளவுக்கு வரை கல்வி பொதுக் கல்வியாக, எல்லாச் சமுதாய மக்களும் படிக்கும் வயது வந்த 100 க்கு 100 பேரும் படிக்கும் படியாகச் செய்துவிட்டு, உத்தியோகத்திற்கும் தொழிலுக்கும் அவசியமான அளவுக்கு கல்வியை மாத்திரம் ஜாதி வகுப்புப் பிரிவு, மக்கள் எண்ணிக்கைப்படி கொடுத்து வரலாம்.
'விடுதலை' : 13.3.1951
"டாக்டர், எஞ்சினீயர், மற்ற படிப்புகளுக்கு மட்டும் தனியாகப் படிப்பு வசதி செய்து கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு, பல்வேறுபட்ட தொழிற்கல்வி அளிக்க வேண்டும். இதன் மூலம் 100 க்கு 100 மக்களுக்கும் கல்வியும் கிடைக்கும்; வாழ்க்கைத் தொழிலும், வருவாயும் கிடைக்கும்."
'விடுதலை' : 22.9.1968
- உண்மை இதழ், 1-15.2.20
- ந.வெற்றியழகன் M.A., B.Ed.,
கற்போர் (Students)
மாணவர்களின் மாண்புமிகு கடமை:
“நாம் விஞ்ஞானத்தில் மற்ற உலக மக்களைப்போல பல அதிசய அற்புதங்களைக் காணாததற்குக் காரணம். நம் அறிவைப் பயன்படுத்தாததேயாகும்.’’
அந்த அறிவை, நம் மொழி, இலக்கியம், புராணம், கடவுள், மதம், தர்மம், சாத்திரம், சம்பிரதாயம் என்பவை வளர்ச்சிக்குப் பயன்படுத்த முடியாமல் தடை செய்துவிட்டன. இத்தடைகளை உடைத்தெறிய வேண்டியது, மாணவர்கள் கடமையாகும். (விடுதலை _ 5.8.1968)
மேலும் பெரியார் கூறுகிறார்:
“நமது மாணவர் சமுதாயம், நம் நாட்டை அந்நிய ஆதிக்கம் அந்நிய கலாச்சாரம் ஆகியவற்றிலிருந்து விடுவித்து மானமும் அறிவும் பெறச் செய்வதையே கடமையாகக் கொள்ள வேண்டும்.’’ (விடுதலை, 2.9.1972)
மாணவர்களின் குறிக்கோள்:
“ஒவ்வொரு மாணவரின் இலட்சியமும், தான் மனிதனாகப் பிறந்தது, மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றுவதற்காக என்று இருக்க வேண்டும்.’’ (விடுதலை, 20.12.1972)
மாணவர்க்கான நடத்தை நெறிமுறைகள்:
“மாணவ வாழ்க்கையில் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டியது எதையும் கற்பதிலேயே மனத்தைச் செலுத்தி, கற்றுத் தெரிந்து கொள்வதிலேயே இருக்க வேண்டும்.’’ (விடுதலை, 8.3.1956)
படிப்பும் பலனும்:
மேலும் கூறுகிறார், “மாணவர்கள் கிளர்ச்சிகளில் பங்கு கொள்ளக் கூடாது! மாணவர்கள் படிப்பிலேயே தங்கள் கவனத்தைச் செலுத்தினால் நல்ல பலனடைவர்.’’ (விடுதலை, 9.4.1962)
கட்டுப்பாடும் ஒழுங்கு முறையும்:
“முதலாவதாக, மாணவர்கள் ஆசிரியர்க்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அடுத்து, ஒழுங்கு முறை பழக வேண்டும். அதற்கு அடுத்தாற்போல் தான், பாடம் படிப்பதாகும்.’’ (விடுதலை, 15.9.1962)
மாணவர்க்கு அறிவுரை
“நமது மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். உலகைத் திருத்துவது மாணவர் வேலையல்ல; அதற்கு நாங்கள் இருக்கிறோம். கட்டுப்பாடு, ஒழுக்கம், பகுத்தறிவு இவையே மாணவர்கட்கு அவசியமாகும்.’’ (விடுதலை, 8.1.1970)
மாணவர்க்கு வேண்டுகோள்
“மாணவர்கள் படிப்பை விட்டு வேறு காரியங்களில் தங்கள் கவனத்தைத் திருப்பக் கூடாது! மாணவர்களுக்கு வேண்டியது இனப்பற்றும், பகுத்தறிவு உணர்ச்சியும்தான். நீங்கள் சமுதாயத்திற்கு என்ன செய்ய வேண்டும், சமுதாயம் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து நடக்க வேண்டும். திருமணத்தைத் தள்ளிப் போடுங்கள்! முடிந்தால் புறக்கணியுங்கள்!!’’ என்றார் தந்தை பெரியார். (விடுதலை 11.3.1972)
அதாவது, “சீவனத்திற்காக, வேலையோ, கூலியோ செய்கின்ற மக்களைப்போல வயிற்றுப் பிழைப்புக்காரர்களேயல்லாமல் உண்மையான ஆசிரியத் தன்மை உடையவர்கள் அல்லர் என்பதே என் அபிப்பிராயம்!’’ (“குடிஅரசு’’ 27.5.1928)
ஆசிரியர்க்கான தகுதிகள்
“ஆசிரியர் என்பவர் இயற்கை அறிவு பெற்றவராக அதில் மேம்பட்டவராக, உலக அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்தான், ஆசிரியத் தன்மைக்கு அருகதை உடையவராவார்.’’ (விடுதலை, 2.1.1950)
இதுபற்றி பெரியார் மேலும் பேசுகிறார், “ஆசிரியர்கள் பயன்படக் கூடியவர்களாக இருக்க வேண்டுமானால் அவர்கள் ஓரளவுக்காவது சுதந்திர புத்தியுடையவர்களாகவும் பகுத்தறிவுக்குச் சிறிதாவது மதிப்புக் கொடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.’’ (“குடிஅரசு’’ 2.8.1936)
“அப்படிப்பட்ட ஆசிரியரிடம் படிக்கும் பிள்ளைகளே பரிட்சையில் “பாஸ்’’ செய்யாவிட்டாலும் அறிவுடையவர்களாவது ஆகலாம்!’’ (“குடிஅரசு’’ 2.8.1936)
ஆசிரியரைத் தேர்ந்தெடுக்கும் அளவுகோல்
பெரியார் கூறுகிறார்:
“ஆசிரியர்கள் அறிவாளிகளாக இருந்தால் அல்லவா
மாணவர்களை அறிவாளிகளாக்குவார்கள்?
மூடநம்பிக்கைக்காரர்களை ஆசிரியர்களாக்குவதால்
அவர்களால் சொல்லிக் கொடுக்கப்படுகின்ற
மாணவர்கள் முட்டாள்களாகின்றார்கள்.
ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும்போது
பகுத்தறிவுவாதியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்’’
- “விடுதலை’’ 30.4.1971
உண்மை இதழ், 16-29.2.20